நடுங்கும் நடுத்தரங்கள்
சச்சிதானந்தம்
வறுமையில் வாடுபவன் கூட,
வெறுமையின் எல்லைக்குச் சென்றாவது
வெற்றியின் மடியை அடைகிறான்,
பொருளாதாரச் சிக்கல்கள் இல்லாதவன்
சிந்தனையிலும் சிக்கல்கள் இருப்பதில்லை!
சிகரங்கள் அவனைச் சரணடைகின்றன!
ஆனால்,
நடுத்தரக் குடும்பங்கள், என்றும்
நடுங்கும் தரத்துடனேயே இருக்கின்றன!
அன்றாடத் தேவைகளுக்காக
மன்றாடித் திரிந்து,
இலட்சியக் கனவுகளைப் பணயம் வைத்து,
வாழ்க்கைப் பயணத்தைத்
தொடர்ந்திடும் பரிதாப நிலை!
உணவுத் தேவைகளே அவன்
உழைப்பின் எல்லையாய்
அமைந்துவிடும் பாவக்கோலம்!
உணர்வுத் தேவைகளான
இலட்சியங்களும்,கனவுகளும்
நடைமுறைத் தேவைகளின்
நச்சுச் சூட்டில் உலர்ந்துபோகின்றன!
உலர்ந்து போன கனவுகளுடனும்
உறைந்துபோன உற்சாகங்களுடனும்
அவன் இன்னும் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றான்!
தன் பிள்ளையாவது சாதிப்பான் என்று!