அன்பே அழகானது – 2
ராஜப்ரியன்
டாடி ….
டாடி ……….
என்னடா ?
பைக் ஓட்டனா காது கேட்காதா டாடி?
எத்தனை முறை சொல்லியிருக்கன் அப்பான்னு கூப்டுன்னு.
ஸாரி.
சரி எதுக்கு கூப்ட்ட.
எங்க போறோம் ?
என்னடா கேள்வியிது. ஆறாவது சேர்ந்துயிருக்க புது ஸ்கூல் அதனால உனக்கு யூனிபார்ம் எடுக்கப் போறோம்.
அது தெரியும். கிளம்பும்போது என்ன சொன்னிங்க.
என்ன சொன்னன்?
ஐஸ்கிரிம் சாப்பிட்டுட்டு அப்பறம்மா டிரஸ் எடுக்கலாம்ன்னு சொன்னிங்கயில்ல.
ஆமாம் அதுக்குயென்ன இப்போ.
முதல்ல ஐஸ்கிரிம் பார்லர் அதுக்கப்பறம் டிரஸ்.
நீ ஓழுங்கா ஐஸ்கிரிம் சாப்பிடமாட்ட. டிரஸ் மேலப்படும். அப்படியே துணிக்கடைக்குப் போனா அசிங்கமா இருக்கும். அதனால போகும் போது வாங்கித்தர்றன் வீட்ல வந்து சாப்பிடு.
வீட்ல வந்து சாப்பிடறன். ஆனா இப்ப வாங்கித்தா.
டிரஸ் எடுக்கப் போறப்ப அத வேற கைல எடுத்துக்கிட்டு போகனும்டா.
டிரஸ் எடுத்ததுக்கப்பறம் காசுயில்ல, சளி புடிக்கும்ன்னு சொல்லுவீங்க.
அதெல்லாம் சொல்லமாட்டன்டா.
உங்களப்பத்தி எனக்கு தெரியும்.
கேடிடா நீ.
நான் உன் பையன்ப்பா என்றவனிடம் வேறு எதுவும் பேசாமல் பைக்கை ஐஸ்கிரிம் பார்லர் முன் நிறுத்தியதும் நீ வெளியில இருப்பா நான் வாங்கி வந்துடறன் என 200 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓடிய ரஞ்சித் நான்கு ஐஸ்கிரிம் கப்புகளை வாங்கிக்கொண்டு மீதி சில்லறையை தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வருவதை மதன் பார்த்தான்.
அருகே வந்த ரஞ்சித்திடம் மீதி பணத்த எங்கிட்ட தாடா.
உங்கிட்ட காசுயில்லாதப்ப தர்றன் என்றபடியே வண்டியில் ஏறி உட்கார்ந்தான்.
உனக்கு வர்ற வர்ற கொழுப்பு அதிகமாயிடுச்சிடா.
அதுக்குத்தான் சாப்பாட்டுல ஆயில் குறைக்கச்சொல்றன்.
அவன் நக்கலடிப்பதைக் கேட்டு டேய் பேசாம வா என்றதுக்கு ‘ம்’ என்றான்.
குழந்தை ஏசு மெட்ரிக்குலேஷன் பள்ளியின் அலுவலகத்தில் சொன்னபடி அவர்கள் குறிப்பிட்ட துணிக்கடைக்கு சென்று மூன்று செட் யூனிபார்ம், டை, ஷீ எல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர இரவு 8 மணியானது. கதவை திறந்து கொண்டு உள்ளே வந்ததும் டேய் தோசை சுடறன் சாப்பிட்டுட்டு அதுக்கப்பறம் ஓரே ஒரு ஐஸ்கிரிம் சாப்பிடு. மீதிய நாளைக்கு சாப்பிடுவ.
நோ டாடி. இப்ப டூ, டுமாரோ டூ.
நைட்ல சாப்பிட்டா சளி பிடிக்கும் காலையில சாப்பிடுடா.
காலையில சாப்ட்டா கோல்டாகாதா?.
ஆகாது.
ஏன்?.
கேள்வி கேட்காம அதக் கொண்டு வந்து பிரிட்ஜ்ல வை.
பிரிட்ஜ்ஜைத் திறந்து அதை வைத்தபடியே நான் தூங்கனதுக்கப்பறம் நீ எடுத்து சாப்பிடமாட்டயில்ல.
நீ அதிகமா என்னை நக்கல் அடிக்கறடா எனச்சொன்னதை அலட்சியவன்.
தோசைக்கு சக்கரை வச்சி தாப்பா.
ம் என்றதும் ஹாலுக்கு சென்று டிவியை போட்டுக்கொண்டு உட்கார்ந்துவிட்டான். ஆதித்யா, போகோ, நிக் என மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு இருந்தவன் முன்னால் தோசை தட்டை வைத்ததும் ரிமோட்டை தொடைக்கு கீழே வைத்துவிட்டு சாப்பிட தொடங்கினான். நானும் அவன் அருகில் உட்கார்ந்து சாப்பிட தொடங்கினேன். எதையும் கண்டுக்கொள்ளாமல் சாப்பிட்டு முடித்துவிட்டு தட்டை தந்தான். நான் பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு வரும்வரை டிவி முன்பே உட்கார்ந்து இருந்தவனிடம் டைம்மாகிடுச்சி ரஞ்சித் படுக்கலாம்.
இன்னும் கொஞ்ச நேரம்ப்பா.
ரிப்பீட்டட் புரோகிராம்டா நாளைக்கும் போடுவான் வா என்றதும் டிவியை ஆப் செய்துவிட்டு பெட்ரூமுக்குள் நுழைந்தான். நான் கதவை லாக் செய்துவிட்டு பெட்ரூமுக்கு வர அவன் கட்டிலில் படுத்திருந்தான். அவனுக்கு பெட்ஷீட் போர்த்திவிட்டு பக்கத்தில் அமர்ந்தேன்.
ஸ்கூல் எப்பப்பா ஓப்பன்.
இன்னும் இரண்டு நாள் இருக்கு.
தினமும் நீ அழைச்சிம்போய் விடுவியாப்பா.
காலையில ஆட்டோவுல போய்டு. ஈவ்னிங் நான் வந்து உன்னை அழைச்சி வர்றன்.
காலையில உன்னோட பைக்லயே வர்றன்ப்பா.
எனக்கு ஆபிஸ் பத்து மணிக்குடா. உனக்கு ஸ்கூல் 8:30 மணிக்கு ஸ்டார்ட்டாகிடும். அதனால நீ காலையில ஆட்டோவுல போய்டு. மதியம் லஞ்ச்ச பாக்ஸ்ல எடுத்தும் போய்டு. தாத்தா பாட்டி ஊர்லயிருந்து வந்ததுக்கப்பறம் பாட்டி தினமும் மதியம் லஞ்ச் எடுத்து வருவாங்க.
போப்பா தாத்தாவும் – பாட்டியும் வந்துடுவாங்கன்னு நீயும் தான் சொல்ற. அவுங்க வரவே மாட்டேன்கிறாங்க.
வருவாங்கடா செல்லம் இப்ப நீ தூங்கு என்றதும் அவன் சோகமாக கண்ணை மூடிக்கொண்டான். அவன் தூங்குவது உறுதியானதும் கட்டில் டிராயரை சத்தம் வராமல் திறந்தேன். அதில் லேமினேஷன் செய்யப்பட்ட போட்டோவில் ஜோடியாக நானும் என் மனைவியும் சிரித்துக்கொண்டு இருந்ததைப் பார்த்ததும் மனம் பாரமானது.
தொடரும்