Blog

  • மீண்டும் போப் பிரான்சிஸின் பெருமை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இந்து மதத்தில் பிறந்ததால் மட்டுமே (இந்து மதச் சம்பிரதாயங்கள் எதையும் நான் பின்பற்றுவதில்லை) இந்து என்று கணிக்கப்படும் நான் ஏன் போப் பிரான்சிஸ் பற்றி ஒரு புத்தகம் எழுதினேன் என்று பலர் வியக்கிறார்கள். நான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டேனோ என்றும் பலர் நினைக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஒரு விளக்கம் தரக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் போப் பிரான்சிஸ் பற்றி எழுதியது, நான் இதுவரை அறிந்திராத ஒரு மதத் தலைவர் அவர் என்பதால்.

    நான் இதுவரை அறிந்திருந்த மதத் தலைவர்கள் (நான் யாரையும் நேரில் சந்தித்ததில்லை) யாரும் இவரைப் போல் பரந்த மனப்பான்மையோடு இருப்பவர்களாகவோ, ஏழைகள், வறியவர்கள், சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்கள் மீது அன்பும் பரிவும் காட்டுபவர்களாகவோ, குற்றம் புரிந்தவர்களையும் மன்னித்துச் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களாகவோ, தன் மதம்தான் பெரியது என்று கூறாதவர்களாகவோ, எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எல்லோரும் கடவுளின் குழந்தைகள் என்று எண்ணுபவர்களாகவோ, மதத்திற்கு அப்பாற்பட்டு உலக அமைதியிலும் பூமியின் சுற்றுச் சூழலிலும் அக்கறை செலுத்தி அடிக்கடி அறிவுரை கூறுபவர்களாகவோ இருக்கவில்லை. அவர்பால் நான் ஈர்க்கப்பட்டதற்கு இவருடைய இந்தக் குணங்களே முக்கிய காரணங்கள்.

    ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றாகிய அபுதாபிக்கு விஜயம் செய்திருக்கும் முதல் போப், போப் பிரான்சிஸ். 2016-இல் இவரை வாடிகனில் சந்தித்த அபு தாபியின் இளவரசர் அபு தாபிக்கு வரும்படி இவரை அழைத்திருக்கிறார். அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரான்சிஸும் இதுவரை எந்தப் போப்பும் விஜயம் செய்திராத, இஸ்லாம் மதத்தின் பிறப்பிடமான அரேபிய தீபகற்பகத்திற்கு வந்திருக்கிறார். அபு தாபி அரசில் சகிப்புத்தன்மைக்கு ஒரு துறை இருக்கிறதாம்! இந்த நாட்டின் இளவரசர் போப்பை தங்கள் நாட்டிற்கு வரும்படி அழைத்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. உலகில் வன்முறை ஒழிந்து அமைதி நிலவ வேண்டும் என்று விரும்பும் போப் பிரான்சிஸ், அவருடைய அழைப்பை ஏற்று அங்கு போவதற்கு ஒத்துக்கொண்டதிலும் எந்த ஆச்சரியமும் இல்லை.

    கிளம்புவதற்கு முன்னால் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் இருந்தவர்களிடம் போப், “ஏமனில் நிலவும் நிலைமை என்னை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாக்குகிறது. அங்கு குழந்தைகள் உணவின்றிக் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுடைய கூக்குரல் கடவுளுக்குக் கேட்கிறது. சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரும் ஏமன் மக்களின் துயரத்தைப் போக்கப் பாடுபட வேண்டும்” என்று கூறினார்.

    ஐக்கிய அரபு நாடுகள் உருவாவதற்கு முன்பே 1965-இல் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் அபு தாபியில் கட்டப்பட்டது. அதன் பிறகு வேறு எந்தத் தேவாலயமும் கட்டப்பட்டதாகத் தெரியவில்லை. ஏமனில் ஹௌதி போராளிகளை அழிப்பதற்கு சௌதி அரேபியா உதவுவதோடு அபு தாபியும் சௌதி அரேபியாவின் கூட்டாளியாக இருக்கிறது. வாடிகனைச் சேர்ந்தவர்கள் போப் ஏற்கனவே விஜயம் செய்துள்ள ஆறு முஸ்லீம் நாடுகளில் மிகவும் ராஜ தந்திரமாக நடந்துகொண்டார் என்றும் இப்போது அபு தாபியிலும் பொது இடங்களிலாவது வெளிப்படையாக எதையும் கூற மாட்டார் என்றும் கூறினர்.

    ஆனால் போப் பிரான்சிஸோ, அபு தாபியில் நடந்த முதல் கூட்டத்தில், பல மதத் தலைவர்கள் கூடியிருந்த கூட்டத்தில், தன்னுடைய ராஜ தந்திரத்திலிருந்து கொஞ்சம் விலகி ஆணித்தரமாக அங்கு மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளைக் கண்டித்துப் பேசினார். சாதாரணமாக போப், அவர் விஜயம் செய்யும் நாடுகளின் அரசுகளை அங்கிருக்கும்போதே கண்டித்துப் பேசுவதில்லை. ஆனால் அபு தாபியில் சிறுபான்மையராக இருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னால் பிரான்சிஸும் எகிப்தைச் சேர்ந்த ஒரு பெரிய மசூதியின் இமாமும் “மனித நேய ஆவணத்தில்” (Document of Human Fraternity) கையெழுத்திட்டனர்.

    பல நூற்றாண்டுகளாக விரோதிகளாக இருந்த முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் மதத்தின் பெயரால் வன்முறை, தீவிரவாதம், மதவெறி ஆகியவற்றை மக்களிடையே பரப்பி கடவுளின் பெயரால் அதை நியாயப்படுத்துவதை நிறுத்தும்படி கேட்டுக்கொள்ளும் ஒரு கொள்கை விளக்க அறிவிப்பைப் போல் இந்த ஆவணம் இருக்கிறது. பிற மதத்தவரின் வழிபாட்டுத் தலங்களை அழிப்பது, மதங்கள் போதிக்கும் அறிவுரைக்குப் புறம்பானது என்று பிரான்சிஸ் கூறினார். அகதிகளாக வருபவர்கள் எங்கிருந்து வந்தாலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது ஒவ்வொரு நாட்டின் கடமையென்றும் அகதிகள் வருவதைத் தடுக்கத் தடைகள் அமைப்பதையும் சுவர் கட்டுவதையும் கண்டிக்கும்படி எல்லா மதத் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

    அபு தாபி மன்னரின் மாளிகைத் தோட்டத்தினூடே போப்பை அழைத்துச் சென்றபோது அவரைச் சுற்றிப் பெரிய பெரிய விலையுயர்ந்த கார்கள் வந்துகொண்டிருக்க, போப் பிரான்சிஸ் தன்னுடைய சாதாரண சிறிய காரில் பயணம் செய்தார். இவருடைய எளிமைக்கு இது ஓர் உதாரணம். போப் எந்த நாட்டிற்கு விஜயம் செய்தாலும் விலையுயர்ந்த கார்களைத் தவிர்த்துவிட்டுத் தன்னுடைய சிறிய காரில்தான் பயணிப்பார்.

    இறுதியாக மதங்கள் தோன்றிய நாளிலிருந்தே மதத்தலைவர்களைச் சர்ச்சைக்குள்ளாக்கி வரும் ஒரு கேள்வியை பிரான்சிஸ் கேட்டார்: மதங்கள் மனித இனங்களைப் பிரிப்பதற்குப் பதில், மனிதர்களிடையே சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கு எப்படிப் பாடுபடலாம்?

    அவருடைய பதில்: சகிப்புத் தன்மையோடு எல்லோரும் ஒரே மாதிரியாக மதிக்கப்பட வேண்டும், யாரும் யாருக்கும் மாஸ்டரும் இல்லை, அடிமையும் இல்லை என்னும் புரிதல் எல்லோருக்கும் வேண்டும். மேலும் இந்தப் புரிதல் இருந்தாலொழிய மனித இனத்திற்கு எதிர்காலம் இல்லை என்கிறார் போப் பிரான்சிஸ்.

    இவரைப் போன்ற ஒரு மதத் தலைவரை யாரால் போற்றாமல் இருக்க முடியும்?

    Share
  • சேக்கிழார் பா நயம் – 23

    -திருச்சி புலவர் இரா,இராமமூர்த்தி

    சடையனார் மாதினியர் மைந்தராகத் தோன்றி, நரசிங்க முனையரையர் வளர்ப்பு மகனாகத் திகழ்ந்த சுந்தரர் மணப்பருவம் அடைந்தார். அவர்தம் பெற்றோர் விருப்பத்தின் வண்ணம் புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார் திருமகளை மணம் பேசினர். அவ்வாறே திருமண ஏற்பாடுகளை அரசரும் செய்தார்!

    முன்பே திருக்கயிலையில் சுந்தரர் இறைவனுக்கு மலர்கள் பறிக்க நந்தவனம் வந்தபோது, அங்கு வந்த அம்மையின் தோழியர் இருவர்பால் மனம்போக்கினார்! அதனால் அவர்களை இறைவன் தென்திசையில் பிறந்து, இல்லற இன்பம் துய்த்து, பின்னர் கைலை வந்தடையுமாறு அருள் புரிந்தார்! திருக்கயிலை மலை வாழ்வை இழந்து , மானுடராகி , மையல் வலைப்பட்டு மயங்காமல் தடுத்தாட் கொள்ள வேண்டும் என்று சுந்தரர் இறைவனை வேண்டினார்! அப்போது அங்கே இறைவன் ‘’அவ்வாறே தடுத்தாள்வோம்!’’ என்று திருவாய் மலர்ந்தார்! வேதங்கள் ஒலிக்கின்ற கயிலைமலையில் செப்பியருளிய வாக்குறுதியைக் காக்க சுந்தரரரைத் தடுத்து வழிவழியாக அடிமைகொண்டு வாழ்விப்பதற்காக சிவபிரான் சுந்தரர் திருமணம் நிகழ்ந்த ஊருக்கு வந்தருளினார்! அவ்வாறு அவர் மணம்வந்த புத்தூருக்கு எழுந்தருளிய தண்மையைச் சேக்கிழார் பெருமான் பாடுகிறார்.

    எப்போதும் வேதத்தின் ஓசையே ஒலித்துக் கொண்டிருக்கும் சூழலை உடையது திருக்கயிலைமலை! இதனைத் திருஞானசம்பந்தர் ,

    தாதார் கொன்றை தயங்கும் முடியர் முயங்கு மடவாளை
    போதார் பாகம் ஆக வைத்த புனிதர் பனி மல்கும்
    மூதார் உலகில் முனிவர் உடனாய் அறம்நான்கு அருள்செய்த
    காதார் குழையர் வேதத் திரளர் கயிலை மலையாரே!

    என்றும் ,

    ‘’சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய்
    கற்றவர்கள் சொல் தொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாய மலையே!’’

    என்றும்,

    ‘’ஏதம் இல பூதமொடு கோதை துணை ஆதி முதல் வேத விகிர்தன்
    கீதமொடு நீதிபல ஓதிமற வாதுபயில் நாதன் நகர்தான்
    தாதுபொதி போதுவிட ஊதுசிறை மீதுதுளி கூந்தல் நலிய
    காதல்மிகு சோதிகிளர் மாதுமயில் கோதுகயி லாயமலையே!’’

    என்றும்,

    ‘’நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என்செய்தாய்
    கலைகள் ஆயவல் லான்கயி லாயநல்
    மலையன் மாமயி லாடுது றையரன்
    தலையின் மேலும் மனத்துளும் தங்கவே!’’

    என்றும் திருமுறைகள் பாடுகின்றன! இத்தகைய வேதவொலி எப்போதும், எங்கும் கயிலை மலையில் கேட்கின்றது! இதனைக் கேட்டுக்கொண்டே இருக்கும் சிவபிரான் அதனையே மீண்டும் கூறுகிறார்! அதனைத் தென்திசைத் தமிழ் மொழியில் ஈசன் வழங்கி மகிழவே, தம் கண்ணாடிப் பிரதிபலிப்பாகிய ஆலால சுந்தரரை அனுப்பினார்! அவரைத் தடுத்தாட்கொண்ட போது,

    ‘’அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச்
    சொற்றமிழ் பாடுக என்கிறார், தூமறை பாடும் வாயார்!’’

    என்று பணித்தார். இதனையே இங்கு சேக்கிழார் ,

    ‘’ஆலுமறை சூழ்க்கயிலை யின்கண்அருள் செய்த
    சாலுமொழி யால்வழி தடுத்தடிமை கொள்வான்!’’

    என்று பாடுகிறார்! அன்று கையிலை மலையின்கண் சுந்தரரைத் தடுத்து ஆட்கொள்வதாக அருள்செய்த மொழியே சாலும் மொழி! அவ்வாறே சுந்தரர் மையல் மானுடமாய் மயங்கி , இறைநெறி நீங்கித் திருமணம் செய்துகொள்ள முயன்றபோது அவரைத்தடுத்து வழி வழியாய் அடிமை கொண்டார்! இதனைத் ‘’தடுத்து வழியடிமை அடிமை கொள்வான்!’’ எனப் பாடினார்! கொள்வான் என்பது கொள்ளும்பொருட்டு, என்ற வான் ஈற்று வினையெச்சமாகவும், கொள்பவனாகிய சிவபெருமான் என்ற வினையால் அணையும் பெயராகவும் விளங்குகிறது! வினைகருதி அணைபவன் தானே சிவபெருமான்?

    அத்தகைய வாக்குத் தவறாத சிவபிரானை அடுத்த அடிகளில் உலகிற்கே அறிமுகம் செய்கிறார்! சிவபிரானை நாம் கண்டு அளந்தறிவோம் என்று திருமாலும் , பிரமனும் முன்வந்தனர்! அப்போது சிவபெருமான் அக்கினி வடிவில் அண்ணாமலையாராக மேலும் கீழும் வளர்ந்தார்! திருமால் சிவபெருமான் திருவடியைக் காணக் கீழ் நோக்கிப் பன்றி வடிவில் தோண்டித்தோண்டிச் சென்றார்; பிரமனோ அவர் முடியைக் காண, அன்னப் பறவை வடிவில் மேலே மேலே பறந்து சென்றார்! ‘’மாலறியா நான்முகனும் காணாமலை ‘’ என்று மாணிக்க வாசகர் பாடினார்! அவரை நம் சேக்கிழார் ,

    ‘’மேலுற எழுந்து மிகு கீழுற அகழ்ந்து
    மாலும் இருவர்க்கும் அரியார் , ஒருவர் வந்தார்!’’

    என்று பாடுகிறார்! படைப்புக் கடவுளான பிரமனும், காக்கும் கடவுளான திருமாலும் இறைவனின் அடி,முடி தேடி மயங்கினர்! இதனை, ‘’மாலும் இருவர்க்கு ‘’ என்கிறார் சேக்கிழார்! மாலும் என்பதற்கு மயக்கம் கொள்ளும் என்பது பொருள்! அவர்களாலேயே அறிந்துகொள்ளுதற்கு அரியவரான ஒருவர்! என்று சேக்கிழார் கூறியதன் நுட்பம் உணர்ந்து மகிழ்தற்கு உரியது! அவர் உருவத்தாலும் பெரியவர் மட்டுமல்ல; காலத்தாலும் முதியவர்! எந்தக் காலத்திலும் இறுதி இல்லாத சிவபெருமானின் காலத்தை மிக எளிதாக அப்பர் சுவாமிகள்,

    ‘’நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
    ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
    ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
    ஈறு இல்லாதவன் ஈசன் ஒருவனே !’’

    என்று பாடித் தலைக்கட்டுவார்! அத்தகைய நீளாயுளும் பேருருவமும் படைத்த ஈசனை யாவராலும் அளக்கவியலாது.இதனைத் திருமூலர்,

    ‘’ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
    ஆர் அறிவார் இந்த அகலமும் நீளமும்
    பேர் அறியாத பெரும் சுடர் ஒன்றதின்
    வேர் அறியாமை விளம்புகின்றேனே!’’

    என்று வியந்து போற்றுகிறார்! இவ்வாறெல்லாம் அளவிட இயலாத பெருமை உடையவன் ஈசன் என்று சேக்கிழார் கூறுவதன் காரணம் அடுத்த நிகழ்வுகளில் புலப்படும்! ஆம், யாருக்கும் அவர் பெருமை புலப்படாத நிலையில், ஓர் ஓலையைக் காட்டிச் சுந்தரர் திருமணத்தைத் தடுத்த செயலால் சிவபெரு மானின் ‘அகடித கடனா’ சாமர்த்தியத்தையும் புரிந்து கொள்ள வியலாமல் புத்தூர் அந்தணர்களே திகைக்கின்றனர்! இவர்களைத் திகைக்க வைத்த ஈசனின் அருள் விளையாடலை அடுத்து நாம் காணப் போகிறோம். இப்போது சேக்கிழாரின் பெரிய புராணப் பாடலை முழுமையாகக் கற்றறிவோம்!

    ஆலுமறை சூழ்க்கயிலை யின்கணருள் செய்த
    சாலுமொழி யால்வழி தடுத்தடிமை கொள்வான்
    மேலுற வெழுந்துமிகு கீழுற வகழ்ந்து
    மாலுமிரு வர்க்குமரி யாரொருவர் வந்தார்!

    இப்பாடலில் ஒருவர் என்ற சொல், ஒப்பற்றவர் என்ற பொருளில் அமைந்து இறைவனின் நிகரற்ற சிறப்பை எடுத்துக் காட்டுகிறது!

    Share
  • படக்கவிதைப் போட்டி 198-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    குடும்பத்துக்கு உணவூட்ட கொல்லைப்புறம் அடுப்புமூட்டிச் சமையல் செய்யும் இப்பெண்மணி நாம் மறந்துபோன பழைய சமையல்முறையை நமக்கு நினைவூட்டுகின்றார்.

    எரிவாயுச் சமையல்முறை வந்தபின்னே காண்பதற்கு அரிதாகிவிட்ட இக்காட்சியைத் தன் புகைப்படத்தில் பதிவுசெய்து வந்திருக்கும் திரு. வெங்கட் சிவாவுக்கும் அவரின் புகைப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 198க்குத் தெரிவுசெய்து தந்த திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.

    சமைப்பதற்கு நேரம் பிடித்தாலும் கோட்டை அடுப்பிலும் குமுட்டி அடுப்பிலும் தயாராகும் உணவுகளின் சுவையே தனிதான்!

    ”தேர்ந்த தமிழ்ச்சொற்களால் கவி பாடுக!” என்று ஆர்வத்தோடு காத்திருக்கும் கவிஞர்களை அழைக்கிறேன் இனி!

    *****

    கோட்டையும் குடிசையும் அருகருகே இருக்கும் தெருவில் குடிசைவீட்டில் குடியிருக்கும் இப்பெண்மணி, ”குடிசையே தன் கோயில்” என்று நிறைவோடு வாழ்வதைத்  தம் கவிதைவழி நமக்குச் சுட்டிக்காட்டுகின்றார் திரு.  சி. ஜெயபாரதன்.

    குடியிருப்பு

    செங்கல்
    கோட்டையும், கீற்றுக்
    குடிசையும்
    எங்க தெருவிலே ஒன்றாய்க்
    குடியிருப்பு!
    செங்கல் வீட்டுக்கு
    அத்திவாரம் ஆழத்தில்!
    குடிசைக்குப் புயலடித்தால்
    இறக்கை முளைத்து விடும்!
    வீட்டு
    வேலைக்காரி நான்!
    மாத வாடகை
    குடிசை இடத்துக்கு
    ஆயிரம் ரூபாய்!
    தென்னங் கீற்று
    என்னது!
    மாதச் சம்பளத்தில்
    பத்து ரூபாய் கொடுப்பேன்!
    என் வாரக் கூலியோ
    நூறு ரூபாய்!
    ஆறு வாய்களுக்கு அதிலே
    சோறு போடணும்!
    இந்தக் கூரை வீடு
    என் கோயில்!
    இது போதும் எனக்கு!

    *****

    ”நாட்டுப்புறத்து நயமிகு வாழ்க்கை ஆட்டம் காட்டிடும் நாகரிகத்தால் அசைக்க முடியாதது” என்று தெம்பாகப் பாட்டிசைக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நிறைவு…

    காட்டில் பொறுக்கிய சுள்ளியுடன்
    கட்டாந் தரையில் அடுப்புவைத்த
    நாட்டுப் புறத்து சமையலிலே
    நிறைந்திடும் வயிறும் மனமும்தான்,
    வாட்டம் வாழ்வில் வந்தாலும்
    வெளியே காட்டிடா நிறைவிதுவே,
    ஆட்டம் காட்டிடும் நாகரிகம்
    அசைக்க முடியா வாழ்விதுவே…!

    *****

    ”குழந்தைப்பேறு வேண்டி வெள்ளிக்கிழமை விடிகாலையில் குலமகள் வைக்கும் பொங்கலிது” என்று இக்காட்சிக்குச் சுவையான விளக்கமளிக்கிறார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

    பொங்கல்!

    குடிசைக் கோவில் கட்டி
    குழந்தை வேண்டி என் வழிபாடு
    கும்பிடுவோம் வாருங்கள்
    குலசாமி நாகத்தை – என்
    ஓட்டு வீட்டுக்கு முன்னே
    ஓரமாய் பாம்புப் புற்று
    வெள்ளிக்கிழமை தோறும்
    விடிகாலைப் பொங்கலிட்டு
    மணக்கும் பொங்கச்சோற்றை
    மண்தரையில் இட்டு உண்டால்
    மழலைச் செல்வம் வந்து
    மடியில் தவழுமென்று
    சாமியாடி சொன்ன குறியை
    சரிவர நான் செய்கின்றேன்.
    வயல்காட்டை அடுத்த
    வாய்க்கால் அருகே என் வீடு
    வந்துவிட்டுப் போங்களேன்
    வாழை இலையில் விருந்துண்ண
    வாசனைப் பொங்கலுடன்
    வடை சாம்பார் சட்டினியும்
    அவியல் பொறியலுடன்
    அவித்துவைத்த இட்லியையும்
    உண்டு மகிழ்ந்து தமிழச்சி என்னை
    உளமார வாழ்த்துங்கள்
    வெயில் ஏறுமுன்னே
    வேகமாய் வாருங்கள்!

    *****

    ”தென்னங்கீற்றை நேர்த்தியாகப் பின்னி, தானே உருவாக்கிய அருமைக் குடிசையில் வாழ்வதில் கிடைக்கும் நிறைவும் இன்பமும் மாடிவீட்டில் தேடினாலும் கிடைக்காது” என்று உளம் பூரிக்கும் பாவையைக் காண்கிறோம் திரு. ஆ. செந்தில் குமாரின் பாடலில்.  

    நிறைமனம்…

    நல்லநல்லத் தென்னங்கீத்த.. நேத்தியாக நான்பின்னி..
    சீட்டுக்கட்டு அதுமாதிரி.. சேத்துசேத்து அடுக்கிக்கட்டி..
    எனக்காக நான் கட்டுன குடிசயிது..!!

    கழனிக்கு நான்போயி.. கஷ்டப்பட்டு நாள்முழுக்க..
    களையெடுத்து நாத்துநட்டு.. களப்போட வரும்போது..
    ஓஞ்சி சித்த ஒக்கார.. ஒதவிசெய்யும் எங்குடிச..!!

    சுட்டெரிக்கும் வெயிலடிச்சா.. சடசடன்னு மழபெஞ்சா..
    எட்டநின்னு பாதுகாப்பா.. எப்பவுமே எனக்குநல்லா..
    அண்டிக்கிட வசதிதரும்.. அருமையான எங்குடிச..!!

    வசதியாஒரு வாசலுந்தான்.. கடலாட்டம் கெடக்குதுங்க..
    வேணும்போது வெறகுவச்சி.. தீமூட்டிச் சமச்சித்திங்க..
    அம்சமா ஒருஅடுப்பு.. அந்தப்பக்கம் இருக்குதுங்க..!!

    படுத்துத்தூங்க கயித்துக்கட்டில்.. இல்லாட்டி கோரப்பாயி..
    மாடிமேல மாடிகட்டி.. கட்டில்மேல மெத்தபோட்டு..
    படுத்தாகூட கெடைக்காதுங்க இந்த சுகம்..!!

    *****

    குடிசை வீடும், கோட்டை அடுப்பும் நம் கவிஞர்களின் கற்பனைக்கு நல்ல தீனி போட்டிருப்பதை இக்கவிதைகள்வழி உணர்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞர்களே!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது…

    பழமை மறந்த பாரதம் 

    இருக்க ஓர் இடம் வேண்டும் என்று எண்ணிக் 
    கட்டிடங்கள் கட்டி வைத்தோம் 
    பாதுகாப்பு என்று எண்ணி கதவுகளைப் பூட்டி வைத்தோம்
    அக்கம் பக்கம் எது நடந்தாலும் தட்டிக் கேட்க மறந்தோம் 
    காந்தி சொன்னதைப் போல்  அத்தனையும் மூடியே வளர்ந்தோம்!  
    உடுத்தும் உடையில் காதி மறந்தோம் 
    சமைக்க மறந்து உண்ணும் உணவில் கிடைக்கும் பலனை மறந்தோம் 
    அடுப்பில் எரிவாயு தீர்ந்து போக
    பின்னங்கதவு திறந்து பார்க்கையில்
    கடந்து வந்த பாதை கனவாய்த் தெரிந்ததே 
    மழையோ வெயிலோ ஒதுங்க ஓர் இடமாய் இருந்த குடிசை 
    கால் கடுக்கத் தண்ணீர் கொண்டுவந்த நெகிழிக் குடம்
    சமையல் செய்த மண்சட்டியும் கரண்டியும் 
    உலை கொதிக்க  உதவிய விறகுகளும் மண்அடுப்பும் 
    என் வீட்டுத் தோட்டத்தில் 
    கடற்கரையில் விட்டுச்சென்ற காலடிச் சுவடுகளாய்
    மாற்றம் என்ற பெயரில்…
    மறந்துதான் போனோமே! 

    கடற்கரையில் விட்டுச்சென்ற காலடிச் சுவடுகளாய்க் கடந்துவந்த பாதையை, அதை அலங்கரித்த இனிய எளிய விஷயங்களை அசைபோட்டுப் பார்க்கும் வகையில் நனவோடை உத்தியில் (flashback) கவிதை புனைந்திருக்கும் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர் (298) – ஜார்ஜ் பெர்னாண்டஸ்

     

    ஜார்ஜ் பெர்னாண்டஸ் (George Fernandes (ஜூன் 3, 1930 – ஜனவரி 29, 2019), ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும் இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் ஆவார். அவரை இவ்வார வல்லமையாளர் என அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது.

    ஜார்ஜ் பெர்னாண்டஸ், 1967 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற நான்காவது மக்களவைத் தேர்தலில் முதன் முறையாகத் தேர்வானார். அதன் பிறகு, 1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் வென்று மொத்தம் ஒன்பது முறை இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகப் பணியாற்றி உள்ளார்

    வாஜ்பாயி மந்திரிசபையில் இந்தியா அணுகுண்டு செய்யவும், அதன் மிஸைல்ஸ் புரோகிராமுக்கு அப்துல் கலாம் தலைவராக இருக்கும்போதும் வேண்டிய தலைமையை நல்கியவர். 1998-ல் பாரத அணுசோதனை வெற்றி – வாஜ்பாயி, ஜார்ஜ், கலாம், சிதம்பரம் (இந்திய அணுவியல் துறை தலைவர்), காஷ்மீர் பரூக் அப்துல்லா.

    எமெர்ஜென்சி பிரகடனம் இந்திரா காந்தி அறிவித்தபின்னர் இந்தியாவின் பிரதமருக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர். என்றும் ஈழ நாடு அமையத் தமிழர்கள் பக்கம் இருந்தவர்

    1976 ஜூன் 10-ம் தேதி கொல்கத்தாவில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கைது செய்யப்பட்டார். அவரது கைகளிலும், கால்களிலும் விலங்கு மாட்டி போலீஸார் கொடுமைப்படுத்தினர். நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது விலங்கிடப்பட்ட கைகளை உயர்த்தி, “சர்வாதிகார ஆட்சி ஒழிக” என்று துணிச்சலாக முழக்கமிட்டார். இந்த நிலையில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிஹார் மாநிலத்தின் முசாபூர் தொகுதியில் போட்டியிட சிறையில் இருந்தே விண்ணப்பித்தார். தொகுதிக்கே செல்ல வாய்ப்பில்லை. ஆனாலும் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜார்ஜ் வெற்றிபெற்றார்.

    இந்திரா காந்தி தோல்வியைத் தழுவினார். மொரார்ஜி தேசாய் பிரதமரானார். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவி ஜார்ஜை தேடி வந்தது. வழக்கம்போல எளிய பைஜாமா குர்த்தாவில் ரயில்வே அமைச்சராக ரயில் பவனில் நுழைந்தபோது, அங்கிருந்த வாயிற்காவலர், “யார் நீங்கள்? உள்ளே செல்ல அனுமதிச் சீட்டு இருக்கிறதா?” என்று கெடுபிடி காட்டினார். அப்போது, “நான்தான் ரயில்வே அமைச்சர்” என்று சாதாரணமாகப் பதில் சொன்னார்.

    பாஜகவுக்கு அவர் வழங்கிவந்த நிபந்தனையற்ற ஆதரவைப் பார்த்தவர்கள் மதச்சார்பின்மை குறித்து உங்களது நிலைப்பாடு என்னவென்று கேட்டபோது “இந்தியர்களை மதச்சார்பற்றவர்கள், சாதாரணமானவர்கள் என இரண்டாகப் பிரிக்கலாம். நான் சாதாரணமானவர்களின் பிரிவைச் சேர்ந்தவன்” என்றார்.

    Obituary in BBC. இந்திய பிரதமர் மோதியின் ட்வீட்கள் வாசிக்கலாம்,
    https://www.bbc.com/news/world-asia-india-47039190

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 4

    -மேகலா இராமமூர்த்தி

    பரத்தைமை எனும் கூடாவொழுக்கத்தின் பரவலுக்கு நாகரிக மையங்களாக விளங்கிய நகரங்களும் அவற்றை உள்ளடக்கிய மருத நிலமுமே காரணம் என்பதாலேயே நம் தமிழ்ப் புலவர்கள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை எனும் ஐந்திணையில் மருதத்துக்கு பரத்தைமை ஒழுக்கத்தால் தலைவன் தலைவியரிடையே நிகழும் ஊடலை உரிப்பொருளாக்கினர்.

    பரத்தையரில் தலைவனுக்கே துணையாகி வாழ்ந்த காமக் கிழத்தியரும் உண்டு. ’கிழத்தி’ என்ற சொல்லே அவள் இல்லக்கிழத்திக்கு நிகரான உரிமையைத் தலைவனிடம் பெற்றிருந்தாள் என்பதை உணர்த்துகின்றது. எனினும் காமக் கிழத்தி மனையோள் ஆகாள் என்பது தெளிவு.

    எப்படியாயினும் ஏற்கனவே ஒரு பெண்ணை மணந்து இல்வாழ்வில் ஈடுபட்டுவிட்ட ஓர் ஆடவனை இன்னொரு பெண் நயப்பதும் அவனோடு உடனுறைவதும் தமிழ்ச் சமூகத்துக்கும், இல்வாழ்வானாகிய தலைவனுக்கும் பீடும் பெருமையும்தரா இழிசெயல்களே என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

    தமிழ் மரபுக்கு இழுக்குத் தேடித் தரும் பரத்தைமையைச் சங்கப் புலவர்கள் எவரும் கடியாது விட்டுவிட, இதற்கு எதிரான கண்டனக் குரலை, கலகக் குரலை முதன்முதலில் எழுப்பியவர் வள்ளுவப் பெருந்தகையே ஆவார்.

    தனிமனித ஒழுக்கமும், நிறையுமின்றிப் பொருளுக்காக உடலை விற்கும் பெண்ணையும் அவளைத் துய்க்க விழையும் ஒழுக்கமற்ற ஆணையும் சேர்த்தே சாடுகின்றார் அவர்.

    பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
    ஏதில் பிணந்தழீஇ யற்று.
    (வரைவின் மகளிர் – 913)

    பொருளுக்காக அன்பு பாராட்டும் பொருட்பெண்டிரை முயங்குவது இருட்டறையில் பிணத்தைத் தழுவுவதற்கு ஒப்பாகும் என்று கடியும் பேராசான், பொருளைப் பெறுவதன்பொருட்டு அனைத்து ஆடவருக்கும் பொதுவான துய்ப்புப்பொருளாக இருக்கும் இப்பெண்டிரை மாட்சிமைப்பட்ட அறிவுடையவர் எவரும் விரும்பமாட்டார் எனவும் தெளிவுறுத்துகின்றார்.

    பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
    மாண்ட அறிவி னவர்.
    (வரைவின் மகளிர் – 915)

    வரைவின் மகளிரையும் அவர்களை நாடும் ஆடவரையும் சாடுவதுபோலவே பிறனில் (பிறன் மனையாள்) விழையும் காமுகரையும் வள்ளுவர் கடுமையாய்ச் சாடுகின்றார்.

    ”அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
    நின்றாரிற் பேதையார் இல்”
    (பிறனில் விழையாமை – 142) என்பது பொய்யில் புலவரின் வாய்மொழியாகும்.

    இவ்வாறு வரைவிலாப் பொருட்பெண்டிரை நயவாதீர் என்றும், பிறனில் விழையாதீர் என்றும் தமிழ் ஆடவருக்குத் தெளிவுறுத்திய ஐயன் இன்னும் ஒருபடி மேலேபோய், ”ஒருதார மணத்தை ஓம்புமின்! இல்லற இன்பத்துக்குச் சேதாரம் விளை(வி)க்கும் பலதார மணத்தைக் கடிமின்!!” என்றும் கூறியிருப்பரேல் அவருக்கு நிகர் அவரே! ஏனோ அதை அவர் செய்யவில்லை.

    சங்க காலத்தை அடுத்துவந்தது களப்பிரர்கள் காலம். கி.பி. 250 முதல் 575க்கு இடைப்பட்ட காலத்தைப் பொதுவாக இவர்கள் காலமாகக் குறிப்பது வழக்கம். இவர்கள் யார் என்பது குறித்து ஆய்வாளர்களிடையே பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

    அவற்றில் ஒருசில…

    தமிழகத்தின் வட எல்லையான வேங்கடத்தையும், அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்து வந்த கள்வர் அல்லது களவர் இனத்தவரே களப்பிரர் என்பர் வரலாற்று ஆசிரியர்கள் சிலர்.

    முற்காலப் பாண்டியருள் ஒருவனாகிய நெடுஞ்சடையன் பராந்தகன் என்பவனுடைய ஆட்சிக் காலத்தில் (கி.பி. 765 – 790இல்) வெளியிடப்பட்ட வேள்விக்குடிச் செப்பேடு, பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசனுக்குப் பின்வந்த அளவற்ற பாண்டிய அரசர்களைக் களப்ரன் எனும் கலியரசன் போரில் வென்று பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறுகிறது.

    ”அளவரிய அதிராசரை நீக்கி அகலிடத்தைக்
    களப்ரன் எனும் கலியரசன் கைக்கொண்டான்”

     பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய களப்பிர அரசன் தமிழனல்லன் என்பதாலும் அவன் சமண சமயத்தைச் சேர்ந்தவன் ஆதலானும் அவனைக் கலி அரசன் (கொடிய அரசன்) என வேள்விக்குடிச் செப்பேடு விளம்புகிறது போலும்.

    ’அச்சுதக் களப்பாளன்’ எனும் களப்பிர அரசன் ஒருவனைப் பற்றித் ’தமிழ் நாவலர் சரிதை’ எனும் நூல் பேசுகின்றது. முடியுடை மூவேந்தரையும் சிறைப்படுத்திய இவனைப் பற்றிய குறிப்புகள் யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கல விருத்தி முதலிய இலக்கண நூல்களில் காணக்கிடைக்கின்றன. இவ்விரு நூல்களும் சமணத் துறவியரால் இயற்றப்பட்டவை.

    களப்பிரர் குறித்த மற்றொரு கருத்தை கர்நாடக மாநிலத்தின் பேலுர்க் கல்வெட்டு பின்வருமாறு தெரிவிக்கின்றது.

    ”களபோரா எனும் பெயருள்ள குலமொன்று சாதவாகனரின் வீழ்ச்சிக்குப் பின்னர் எழுச்சியுற்றது. அக்குலத்தினரால் தெற்கே தொண்டை மண்டலத்தை ஆண்டு கொண்டிருந்த பல்லவர்களை வெற்றிகொள்ள இயலவில்லை. ஆகவே அவர்கள் அக்காலத்தில் வலிமை குன்றியிருந்த சோழர்களையும், பாண்டியர்களையும் வென்று அவர்களுடைய நாடுகளைக் கைப்பற்றி ஆண்டனர். இந்தக் களபோரா இனத்தவரே களப்பிரர் என்கிறது.

    களப்பிரர் குறித்த ஆய்வாளர்களின் கருத்துக்களை ஒட்டுமொத்தமாக வைத்துப் பார்க்கும்போது களப்பிரர் தமிழர் அல்லர்; தமிழகத்துக்கு வெளியிலிருந்து வந்தவர்கள். சமண மதத்துக்குப் பேராதரவு தந்தவர்கள் என்பது புலப்படுகின்றது. அச்சுதக் களப்பாளன் என்ற களப்பிர அரசன் பௌத்தத்தையும் ஆதரித்திருக்கின்றான் என்று அறிகின்றோம்.

    களப்பிரர் கால இலக்கிய வளர்ச்சி யாது; அதில் பெண்களின் பங்களிப்பு என்னவென்று ஆராய்வோம்.

    சமணப் பற்றாளர்களான களப்பிரர் காலத்தில் சமண நெறிக்குப் புறம்பான தமிழரின் அகத்திணை பேசும் நூல்கள் அரிதாகவே கிட்டுகின்றன. இக்காலகட்டத்தில் எழுந்தவையாகச் சுட்டப்படுபவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சீவக சிந்தாமணி,பெருங்கதை எனுமிரு சமணக் காப்பியங்கள் (சிந்தாமணியைப் பத்தாம் நூற்றாண்டுக் காப்பியம் என்பார் அறிஞர் அ.ச.ஞா. அவர்கள்) மற்றும் சில இலக்கண நூல்கள்.  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை நோக்கினால் அவற்றில் பதினொரு நூல்கள் அறநூல்கள்; ஆறு நூல்கள் அகம் சார்ந்தவை. ஒன்று போர் பற்றியது. இவற்றில் சில, களப்பிரர் காலத்துக்கு முன்பு வாழ்ந்த புலவர்களால் இயற்றப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அகநூல்கள் சில களப்பிரர் ஆட்சிக்கு உட்படாத பகுதிகளைச் சார்ந்த புலவர்களால் எழுதப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு.

    தமிழென்றாலே அஃது அகத்திணையைக் குறிக்கும் என்றெண்ணிச் செம்மாந்திருந்த தமிழ்க்குடியினருக்கு, களப்பிரர் காலம் கருத்துச் செழுமையிலும், சொல் மிடுக்கிலும், கற்பனை நயத்திலும் சங்க நூல்களுக்கு நிகராகா நீதிநூல்களால் நிறைக்கப்பட்டதும், உலகியல் வாழ்வுக்கு ஆதாரமான காதலின்பம் வெறுக்கப்பட்டுத் துறவுநெறி வலியுறுத்தப்பட்டதும் ஏமாற்றத்தைத் தந்திருக்கலாம். ஆதலால் அவர்கள் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் (Dark Age) என்றழைத்திருக்கக் கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது.

    இதனினும் பெரிய ஏமாற்றத்தை நமக்களிப்பது இக்காலத்தில் பெண்களின் இலக்கியப் பங்களிப்பு என்று குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு ஒன்றுமே இல்லாமற் போனது.  சங்க காலப் பெண்பாற் புலவர்களாக ஏறக்குறைய 40 பேரைச் சுட்டமுடிந்த நம்மால் அதற்கடுத்துவந்த காலங்களில் அவ்வாறு பெருமையாகச் சொல்லமுடியாமற் போய்விட்டது!

    நல்லவேளையாக பெண்புலவர் ஒருவருமே இல்லை எனும் பழிச்சொல் பெண்குலத்துக்கு நேராமல் காத்தவராக, கி.பி. 5/6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, சோணாட்டுக் காரைக்காலைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் புனிதவதி எனும் இயற்பெயர் கொண்டவருமான காரைக்காலம்மையார் திகழ்கின்றார்.

    [தொடரும்]

    *****

    துணைநின்றவை:

    1. திருக்குறள் தெளிவுரை – டாக்டர் மு. வரதராசனார்
    2. தொல்காப்பியம் பொருளதிகாரம் – இளம்பூரணம்
    3. http://www.tamilvu.org/ta/courses-degree-a031-a0312-html-a0312110-7048

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 7

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 7 – மக்கட் பேறு

    குறள் 61:

    பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
    மக்கட்பே றல்ல பிற

    பெத்து வளக்குத புத்திசாலி பிள்ளைங்களத் தவித்து மத்தபடி ஒருத்தன் பெறுத வேற எந்த நன்மையையும் நான் நல்லதா ஒத்துக்கிட மாட்டேன்.

    குறள் 62:

    எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
    பண்புடை மக்கட் பெறின்

    குறை இல்லாத நல்ல குணத்தோட உள்ள பிள்ளைய பெத்தவனுக்கு அவனோட ஏழேழு தலைமுறைங்குத காலத்துக்கு தீமை ங்குத தொயரம் அண்டாது.

    குறள் 63:

    தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
    தந்தம் வினையான் வரும்

    தங்கிட்ட இருக்குத செல்வம் னு சொல்லுதது பெத்த பிள்ளைங்க மட்டும் தான். அவங்க செய்யுத நல்லதுக்கு ஏத்தாப்போல அவங்க கிட்ட செல்வம் (பொருள்) வந்து சேந்துக்கிடும்.

    குறள் 64:

    அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
    சிறுகை அளாவிய கூழ்

    தாம்பெத்த பச்ச பிள்ளைங்க பிஞ்சு வெரலால அளையுத சாப்பாட்டத் தான் பெத்தவங்க அமிழ்தம் னு சொல்லுவாங்க.

    குறள் 65:

    மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
    சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

    பச்ச பிள்ளைங்கள தொட்டு கொஞ்சுதது ஒடம்புக்கு இன்பம். அவங்களோட மழலப் பேச்சு கேக்குதது காதுக்கு இன்பம்.

    குறள் 66:

    குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்

    தாம் பெத்த பச்ச பிள்ளைங்களோட மழல பேச்சு கேக்காதவங்க புல்லாங்குழலோட இசையையும் , யாழோட இசையையும் நல்லா இருக்குதுன்னு நெனைச்சிக்கிடுவாங்க. .

    குறள் 67:

    தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்

    தான் பெத்த பிள்ளைக்கு உதவி செய்யணும்னு ஒரு அப்பன் நெனைச்சாம்னா அவன நல்லா படிக்க வச்சி படிப்பாளிங்க மத்தியில நல்ல பெயர் வாங்க வைக்கிதது தான்.

    குறள் 68:

    தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க் கெல்லாம் இனிது

    தன்னைய விட தாம்பெத்த பிள்ளைங்க புத்திசாலியா இருக்குதது தனக்கு மட்டிமில்லாம ஒலகத்துல இருக்க மத்த எல்லாருக்கும் நல்லத கொடுக்கும். .

    குறள் 69:

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்

    உம் மவன் நல்லவன் னு ஊர் உலகம் சொல்லும்போது அவன பெத்த காலத்துல கொண்ட மகிழ்ச்சிய விட அதிகமா மகிழ்ச்சி அடையுவா அவன் ஆத்தா.

    குறள் 70:

    மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்லெனும் சொல்

    இவன பெறுததுக்கு இவனோட அய்யன் என்ன நோன்பு நோத்தானோ என பிறத்தியார் சொல்லுத புகழ்ச்சி தான் அந்த மவன் தன்னோட அய்யனுக்கு செய்யுத கைம்மாறு.

    Share
  • பசியின் வலி

    – ஏறன் சிவா
    பசிக்குப் படையல் படைத்திங்குப்
           பண்பைக் காத்தார் நம்முன்னோர்
    புசிக்கும் சோறும் பொய்யாகப்
           புவியில் மாறிப் போனதன்றோ?
    பசுவும் நெகிழிப் பை..தின்னல்
           பார்க்க நெஞ்சம் பதைக்கிறதே!
    இசையும் மனமும் இருக்கிறதே
          இனியும் பொறுக்க மறுக்கிறதே!
    02/04/2018
    Share
  • குறளின் கதிர்களாய்…(243)

    –செண்பக ஜெகதீசன்

     

    பகையென்னும் பண்பி லதனை யொருவ
    னகையேயும் வேண்டற்பாற் றன்று.

    -திருக்குறள் -871(பகைத்திறம் தெரிதல்)

     

    புதுக் கவிதையில்…

    சிரித்து மகிழ்ந்து
    விளையாட்டாகக் கூட
    விரும்பிடவேண்டாம் வாழ்வில்,
    பகையாகிய
    பண்பற்ற ஒன்றை…!

    குறும்பாவில்…

    பகையென்கிற பண்பற்ற ஒன்றை,
    சிரித்து மகிழ்ந்திடும் விளையாட்டாய்க்கூட
    விரும்பிட வேண்டாம்…!

    மரபுக் கவிதையில்…

    அகில வாழ்வில் ஆபத்தாம்
    அடுத்தவ ருடனே பகையென்னும்
    வகைக்கே உதவா ஒன்றாலே
    வருவ தில்லை நற்பயனே,
    அகத்தில் தோன்றி வாழ்வழிக்கும்
    ஆற்றல் மிகுந்த பண்பிலாத
    பகையினை மகிழும் விளையாட்டெனப்
    பார்த்தும் விரும்பிட வேண்டாமே…!

    லிமரைக்கூ..

    பகையென்பது பண்பற்ற ஒன்று,
    அழிக்குமதனை மகிழும் விளையாட்டாய்க்கூட
    விரும்பாமல் தவிர்ப்பதே நன்று…!

    கிராமிய பாணியில்…

    வேண்டாம் வேண்டாம் பகவேண்டாம்
    வெறுத்தே ஒதுக்கும் பகவேண்டாம்,
    வாழ்க்கயில யாரோடும் பகவேண்டாம்..

    பண்பேயில்லாத பகயதால
    கேடுதான்வரும் வாழ்க்கயில,
    அதுனால
    சந்தோசமான வெளயாட்டாக்கூட
    விரும்பிடாத பகயதயே..

    எப்பவும்
    வேண்டாம் வேண்டாம் பகவேண்டாம்
    வெறுத்தே ஒதுக்கும் பகவேண்டாம்,
    வாழ்க்கயில யாரோடும் பகவேண்டாம்…!

     

    Share
  • ஏக்கங்கள்

    –விஜய் ப்ரகாஷ்

    பெரியகுளம் பேருந்து நிலையம்…

    மணி ஒன்பது அடித்து நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆனது.

    கைப்பையுடன் சேகரும், இரண்டரை வயது குழந்தையுடன் அவன் மனைவி காயத்ரியும் நின்றிருந்தார்கள்.

    “அழாத செல்லம், அப்பா ஊருக்கு போய்ட்டு சீக்கிரம் வந்துடுறேன்” என்று அழும் குழந்தையைத் தேற்றிக் கொண்டிருந்தான் சேகர்.

    “ஏம்பா போற?” என்று மழலை அழுது கொண்டே ததும்பும் குரலில் இந்து குட்டி கேட்டாள்.

    “இண்டெர்வியூவுக்கு மா”

    “அப்டீன்னா?”

    “அப்டீன்னா என் இந்து குட்டி டெடி பியர்,சாக்லேட் லாம் கேட்டால்ல, அத வாங்குறதுக்கு டா செல்லம்”

    “அப்பொ சீக்கிரமே வாங்கிட்டு வந்துடணும் சரியாப்பா?”

    “சரி செல்லம்”

    அருகிலிருந்த கடையில் இரண்டு கேட்பெரி டைரிமில்க்கை வாங்கிக் கொடுத்து,

    “இத சாப்டு! அப்ப வர்றப்ப ஒனக்கு நெறைய வாங்கிட்டு வர்றேன்” என்றான்.

    இந்து சோகத்துடன் வாங்கிக் கொண்டாள்.

    காயத்ரியிடம், “நான் கெளம்புறேன்! கொழந்தைய பத்திரமா பாத்துக்க! சேட்ட பண்ணா அடிக்காத! சாக்லேட் கேட்டா வாங்கித்தா! அழ வெக்காத! நீயும் பத்திரமா இரு!” என்றான்.

    அவளும், “சரிங்க! நீங்க பத்திரமா போய்ட்டு வாங்க” என்றாள். அதற்குமேல் அவளால் பேச முடியவில்லை. அவன் பிரிவு அவளைப் பேச முடியாமல் தான் செய்திருக்கிறது. கண்களின் கண்ணீர் தேங்கியது.

    “பஸ் கெளம்பப் போது! செல்லம் அப்பாக்கு முத்தா குடு” என்று கேட்ட சேகருக்கு சாக்லேட் அப்பிய உதடுகளீன் ஈர முத்தம் கிடைத்தது.

    “நீ வீட்டுக்குப் போ. பனி பொழிய ஆரம்பிக்குது. கொழந்தைக்குச் சளி புடிக்கப்போது” என்று காயத்ரியைக் கிளப்பினான்.

    அவளும், “அப்பாவுக்கு டாட்டா காட்டு” என்று இந்து குட்டியை டாட்டா காட்டச் செய்தாள். சின்ன சாக்லேட் கைகள் டாட்டா காட்ட பஸ் புறப்பட்டது.

    “வேலகெடச்சுடனும் கடவுளே! வாங்குற சம்பளத்த வெச்சு இந்து குட்டிக்கு நான் ஆசப்படுற மாதிரி நல்ல வாழ்க்கைய தரணும்” என்று மனப்பிரார்த்தனை செய்துகொண்டே தூங்கப் போனான்.

    வேகமாக சென்றுகொண்டிருந்த பேருந்து ஏதோ ஒரு வேகத்தடை ஏற்றத்தில் ஏறி இறங்கி அசுரனாய்க் குலுங்கியது.

    தூங்கிக் கொண்டிருந்தவர்கள், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் என அனைவரும் பாரபட்சமின்றி முன் கம்பியில் முட்டிக் கொண்டனர்.

    சிலர் இடித்த இடத்தில் வீங்கிவிடாமல் இருக்கத் தடவிக் கொண்டிருக்க, சிலர் கடவுளைத் துணைக்கழைக்க, சிலரது தகாத வார்த்தைக் கசையடிகள் ஓட்டுநரைப் பாய்ந்தன.

    சேகருக்கும் தூக்கம் கலைந்தது. பல நிமிட முயற்சிக்குப் பின் தூக்கம் வராமல் உட்கார்ந்தான். சுற்றிலும் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அவன் எழுந்து முன்னே சென்றான். ஓட்டுநரும் நடத்துநரும் பேசிக்கொண்டிருந்தனர்.

    “என்னாச்சு தம்பி? என்றார் நடத்துநர்.

    “ஒன்னும் இல்லைங்க! தூக்கம் வரல அதான்! முன்னாடி வந்து ஒட்காரலாமா?”

    “ஒக்காருங்க தம்பி! எம்பேரு முருகன். இவரு கந்தசாமி.”

    “நா சேகர் ணே! சென்னைக்கு வேல விஷயமா போறேன்”

    ஓ… அப்டியா! நல்லது”

    “எத்தன வருஷமா ணே நீங்க வண்டி ஓட்றீங்க?”

    “நாங்க பத்து வர்ஷமா இந்த ரூட்டு தான் தம்பி. நீங்க சென்னைல எங்க வேல பாக்குறீங்க?”

    “இல்ல, வேலைக்கு இண்டர்வியூவைக்கிறாங்க! அதுக்கு போறேன்!”

    “ஓ! இப்ப என்ன பண்ணிட்டிருந்தீங்க?”

    “அப்பாவோட சேர்ந்து வெவசாயம் பார்த்துட்டு இருந்தேன்! வெளச்சல் பெருசா இல்ல, கடன் தான் அதிகமாச்சு, கல்யாணம் ஆகி குழந்த வேற இருக்கு. அவளுக்கு நான் ஆசப்பட்ட மாதிரி நல்ல வாழ்க்கைய அமச்சு தரணும், அதுக்கு நெறைய சம்பாதிக்கணும். அதான் சென்னைக்கு போறேன் ணே”

    நம்மூர்லையே நெறைய வேல இருக்கே தம்பி! நீங்க ஏன் சென்னைக்குப் போகணும்?”

    வேல கெடச்சுது ணே! ஆனா வந்த சம்பளம் குடும்ப செலவுக்கே போய்டுச்சு! கைல பத்து காசு நிக்கல. அதான் சென்னைக்கு போறேன்”

    “அப்ப, வேல கெடச்சா குடும்பத்த சென்னைக்கு கூப்ட்டு போய்டுவீங்க போல?”

    “அவங்களுக்கு வர ஆச தான் ணே! ஆனா அப்பா அம்மாவுக்கு நான் போறதே புடிக்கல. அவங்கள அனுப்ப மாட்டாங்க. வேல கெடச்சா மாசம் ஒருவாட்டி வந்து பாத்துட்டு போக வேண்டியது தான். எல்லாம் எம்பொன்னுக்காக ணே!”

    “பொன்னு மேல ரொம்ப அன்பா இருக்கீங்க”

    “எம் பொன்னுதாங்க எனக்கு எல்லாம். அவன்னா எனக்கு உசுரு”

    பேச்சு சுவாரஸ்யத்தில் நொடிகளை விட நிமிடங்கள் வேகமாகக் கரைந்தன.

    சில மணி நேரங்களுக்குப் பின் பஸ் ஒரு உணவகத்திற்கு முன் நின்றது.

    “பஸ்ஸு பத்தி நிமிஷம் நிக்கும்.. டீ, காஃபி, டிஃபன் சாப்டுறவங்க சாப்ட்டுக்கோங்க. வேற எங்கெயும் இனி நிக்காது” என்று நடத்துநர் அனைவரையும் எழுப்பிவிடக் கத்தினார்.

    “வாங்க தம்பி டீ சாப்டலாம்” என்று சேகரை ஓட்டுநர் அழைத்தார்.

    இளையராஜா பாட்டு கேட்டுக்கொண்டே,டீ அருந்திக்கொண்டு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தான் சேகர். சில பேருந்துகள் வந்து நின்றன, சில கிளம்பின. உணவகம் நிறைந்து வழிந்துகொண்டே இருந்தது. குழந்தைகளில் சிலர் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அருந்திய டீக்கு காசு கொடுத்துவிட்டு சேகரும் ஓட்டுநரும் பேருந்தில் ஏறிக் கொண்டார்கள்.

    நடத்துநர் அதன்பின் வந்து ஏறி, “எல்லாரும் பக்கத்து சீட்டுல இருந்த ஆளு இருந்தாங்களான்னு பாத்துக்கங்க” என்றார். “இருக்காங்க, இருக்காங்க” என்று ஆங்காங்கே பதில்களும் தலையாடல்களும் நிகழ்ந்தன.

    “நாளைக்கு காலைல இண்டர்வியூ இருக்கு! நா கொஞ்ச நேரம் தூங்குறேன் ணே” என்று நடத்துநரிடம் விடைபெற்றுச் சென்றான் சேகர். இந்தமுறை எந்தத் தொந்தரவும் இன்றி கொஞ்ச நேரம் நிம்மதியாகக் கண்ணயர்ந்தான்.

    “தம்பி கோயம்பேடு வந்திருச்சுப்பா” என்று சற்றைக்கெல்லாம் நடத்துநர் சேகரை உசுப்பினார். சேகர் பையை எடுத்துக்கொண்டு இறங்க முற்பட்டபோது, “தம்பி ஒரு நிமிஷம் நில்லுங்க!” என்று ஓட்டுநரின் குரல் அவனை நிறுத்தியது.

    “என்ன ணே”

    “சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க. ராத்திரி நீங்க சென்னைக்கு வேல தேடி வந்ததே அதிக சம்பளங் கெடைக்கும். அதவெச்சு ஒங்க பொன்னுக்கு நல்ல வாழ்க்க தரணும்னு சொன்னீங்க. வேல கெடச்சா நீங்க இங்க இருப்பீங்க! ஒங்க குடும்பம் ஊர்ல இருக்கும். இப்ப தான் ஒங்க பொன்னு வளர ஆரம்பிச்சிருக்கா! இப்ப தான் நீங்க அவளோட இருக்க முடியும். இருக்கணும். ஒங்களோட அன்பு அவளுக்குத் தேவ. இப்ப தான் அவ ஒலக்த்த புரிஞ்சிக்க ஆரம்பிச்சிருப்பா. அவள வழி நடத்த நீங்க அவ கூட தான் தம்பி இருக்கணும். இத நான் ஏன் சொல்றேன்னா, எனக்கும் பதினேழு வயசுல ஒரு பொன்னு இருக்கா. அவள நான் நல்லா பாத்துக்கணும்னு ராப்பகலா வேல செய்யுறேன். நான் வீட்டுக்குப் போறப்ப அவ தூங்கிருப்பா! தீபாவளி, பொங்கலப்பலாம் கூட அவ கூட கொண்டாடுனது கம்மி தான். அவளுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டேன். ஆனா அவகிட்ட இருந்து அவளோட சந்தோஷத்தப் பகிர்ந்துக்கவும், துக்கத்துல ஆறுதல் சொல்லவும் என்னால முடியல. என்ன மாதிரி நீங்களும் கஷ்ட்டப்படக் கூடாதுன்னு தான் சொல்றேன் தம்பி! தப்பா நெனச்சுக்காதீங்க” என்று வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி சென்றார் ஓட்டுநர்.

    அவன் நெஞ்சை ஊசிகள் தைத்தன. கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெளியே வந்தான். பொம்மைக் கடையைத் தேடினான்.

    அவனது இந்து குட்டிக்கு “டெடி பியர்” வாங்குவதற்கு….

    Share
  • (Peer Reviewed) ஆகமம்

    முனைவர் ஹெப்ஸி ரோஸ் மேரி, அ.
    உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை
    கேரளப் பல்கலைக்கழகம்
    திருவனந்தபுரம்

    ஆகமம்

             எழுத்துக்கள் தம்முள் புணர்வதைத் தமிழில் புணர்ச்சி என்றும் வடமொழியில் சந்தி என்றும் அழைப்பர்.  சந்தியை அகச்சந்தி (Internal Sandhi) என்றும் புறச்சந்தி (External Sandhi) என்றும் இருவகைப்படுத்துவர்.  ஒரு சொல்லின் இரு கூறுகளுக்கிடையே நிகழும் சந்தியை அகச்சந்தி என்றும் (வந்தான், அங்கு), இரண்டு சொற்களுக்கிடையே நிகழும் சந்தியைப் புறச்சந்தி என்றும் கூறுவர்.  இவ்வகைப் புணர்ச்சியில் தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் மூன்று விகாரங்கள் நிகழும். தோன்றல் விகாரத்தை வடமொழியில் ஆகமம் என்பர்.  இக்கட்டுரை தொல்காப்பியம் லீலாதிலகம் கூறும் தோன்றல் விகாரத்தை விளக்க முயல்கிறது.

    புணர்ச்சி விதிகள் தோன்றக் காரணம்

          தமிழ் எழுத்திலக்கணத்தின் உயிர்ப்பகுதி புணரியல் தான்.  அதனாலேயே எழுத்ததிகாரத்தின் பெரும்பகுதியையும் புணரியல் பற்றிக்கொண்டு இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் தமிழ் வரலாற்றிலக்கண ஆசிரியர் ஆ. வேலுப்பிள்ளை. புலமையும் வித்துவத் தன்மையும் காட்டுவதே முக்கியம் என்ற கருத்து நிலவிய காலத்தில் தோன்றிய உரைநடையிலும் செய்யுளிலும் கடின சந்தி விகாரங்களை அமைத்துக் கடின நடையில் தமிழறிஞர் எழுதிவந்தனர்.  கருத்துத் தெளிவே முக்கியம் கருத்தைப் புலப்படுத்த மொழி ஒரு கருவியே என்ற கருத்து இன்று நிலவுவதால் இன்றைய தமிழ் நடையில் சந்தி விகாரங்கள் பெரும்பாலும் அவசியமான இடங்களிலேயே இடம்பெறுகின்றன என்று கூறுகின்றார்.  இன்றைய நிலையில் விரிவான அளவில் புணர்ச்சி முறைகள் நமது மொழிக்கு வேண்டியதில்லை என்னும் கருத்தினை அவர் வலியுறுத்துகிறார்.  ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் விரிவான முறையில் புணர்ச்சி விதிகள் பற்றித் தமிழ் இலக்கண நூலால் கூறவேண்டிய தேவையிருந்தது.  சொற்களுக்கு இடையே இடைவெளியிட்டு எழுதும் வழக்கம் அச்சு இயந்திர வரவாலும் ஆங்கிலமொழிச் செல்வாக்காலும் ஏற்பட்டது அதற்கு முன்னர் எழுதுகருவிகள்  காரணமாக எவ்வளவு தூரம் எல்லாச் சொற்களையும் தொடுத்து எழுத முடியுமோ அவ்வளவுக்கு எழுது முயற்சியும் சிக்கனப்படுத்தப்பட்டன. இத்தகைய சிக்கன முயற்சிக்குப் புணர்ச்சி விதிகள் பெருமளவும் உதவின என்று சண்முகதாஸ் குறிப்பிடுகிறார்(2008:82).

              அன்றைய வழக்கில் இருந்த செய்யுள் வடிவமும் பெரும்பாலான புணர்ச்சி விதிகள் செய்யுள் நோக்கில்  அமைக்கக் காரணமாயின.  இக்கருத்தினைச் சொல்லிலக்கணத்தில் யாப்பின் செல்வாக்குப் பற்றி எழுதிய பண்டிதர் க.வீரகக்தியின் கருத்துக்கள் இதற்கு வலுசேர்க்கும்.  அவர் வெவ்வேறு ஓசையின் ஒழுங்கான வரையறைகளே யாப்பிலக்கணமாகி இலக்கணத் துறைகளில் ஒன்றாக விரிவும் தெளிவும் பெற்றுள்ளது.   நேர்சீராயில்லாத சீரமைப்பும் தளைப்பிணிப்பும் பாவின் நீரோசையைச் சிதைத்து அதனை உரைநடைக்குள் தள்ளிவைக்கும்.  “எழுத்திற்கு மாத்திரை கோடலும் அசைத்தலும் சீர்செய்தலும் தளையறுத்தலும் ஓசை பற்றி அல்லது எழுத்துப் பற்றியன்று” என்று கூறும் சிவஞான முனிவரின் விளக்கம் ஓசைக்குள் செல்வாக்கைத் தெளிவாகத் தெரிய வைக்கின்றது.  ஓசை மாசுபடாதிருப்பதற்காக எழுத்தும் சொல்லும் சொற்றொடரும் வேண்டிய இடங்களில் யாப்புக் கட்டுக்கோப்புக் கருதித் தம் இயல்பான அமைதி நிலையிழந்து ஓசை ஓட்டத்திற்குப் பாதை திறந்துவிடுதல் வேண்டும்.  அன்றி ஓசை இவற்றிற்கு விலகிக் கொடுக்காது. விலகின் யாப்பு யாப்பற்றதாய் விடும்.  யாப்பின் செல்வாக்கு இன்றேல் எழுத்திலக்கணம் இத்துணை விரிவடைய இடமில்லை.  சார்பெழுத்துக்களின் விரிவு பல்வகைப்பட்ட விகாரங்கள் எல்லாம் யாப்பின் தாக்கமே(2008:116) என்ற பண்டிதர் க.வீரகத்தியின் கருத்து இங்கு எண்ணத்தக்கது. இதிலிருந்து தமிழ் இலக்கணங்களில் ஏன் பெருந்தொகையான புணர்ச்சி விதிகள் அமைக்கப்பட்டன என்பதற்குரிய காரணத்தினை ஓரளவு ஊகிக்கலாம்.

    தொல்காப்பியமும் புணர்ச்சி விதிகளும்

              தொல்காப்பிய எழுத்ததிகாரம் ஆறு இயல்களில் புணர்ச்சி பற்றிக் கூறுகிறது.  புணர்ச்சி பற்றிய பொதுவான கருத்துக்களெல்லாம் புணரியல் என்னும் இயலிலேயே வகைப்படுத்துகிறார்.  முதல் நூற்பாவில் புணர்ச்சி நடைபெறக்கூடிய இடமும் அதனுடன் தொடர்புடைய எழுத்துக்களும் கூறப்படுகின்றன. மொழிக்கு முதலாக வருமென்று கூறிய எழுத்துக்கள் முதனிலையிலும் மொழிக்கு ஈறாக வருமென்று முன்னர் கூறிய எழுத்துக்கள் ஈற்று நிலையிலும் வரும் என்பதை,

                 “எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்

                   மெய்யெ யுயிரென்று ஆயிரியல” ( தொல். 104)

    என்று குறிப்பிடுகிறார்.

    புணர்ச்சிக்குரிய மொழிகளினியல்பு அடுத்து கூறப்படுகின்றது. இரண்டு சொற்களினெல்லைகளில் புணர்ச்சி நடைபெறும். அவ்வாறான சொற்களில் புணர்ச்சிக்குரிய ஈற்றினை  நிறுத்தச்சொல் (நிலைமொழி) என்றும் முதனிலையுடையதைக் குறித்தசொல் (வருமொழி) என்றும் கூறுவார். அவ்விருசொற்களின் ஈறும்முதலும் வரும்மாற்றினை,

          “உயிரிறு சொல்முன் உயிவரு வழியும்

            உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும்”

    தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். அவ்விருவகைப்பட்ட சொற்களும் எத்தகைய மாற்றங்கள் நிகழும் என்பதைத் தொல்காப்பியர் பின்வருமாறு வகைப்படுத்துகிறார். பெயர் + பெயர், பெயர் + தொழில் (வினை), தொழில் + பெயர், தொழில் + தொழில் என்பனவாகும்.  புணர்ச்சி காரணமாக ஏற்படும் மாற்றங்கள் மூன்று வகைப்படும். அவை,

              “மெய்பிறிதாதல் மிகுதல் குன்றலென்று

             இவ்வெனமொழிப திரியுமாறே”  ( தொல். 110)

    மெய்வேறுபடுதல் (திரிதல்) மிகுதல், குன்றல் என்பனவாகும்.   திரிதல் பண்பு மெய்யெழுத்துக்கு மட்டும் உரியது.  மிகுதலும் குன்றுதலும் உயிருக்கும் மெய்யுக்கும் பொதுவானவை. இவ்வாறு நடைபெறும் புணர்ச்சியினைத் தொல்காப்பியர் வேற்றுமைப்  புணர்ச்சி என்றும் அல்வழிப்புணர்ச்சி என்றும் இருவகையாகப் பாகுபாடு செய்வர்.  உருபுகள், சாரியைகள் புணர்ச்சியிலே எவ்வாறு இடம்பெறுகின்றன என்றும்  புணர்ச்சி காரணமாகப் பொருள் வேறுபடுதலையும் புணரியலில் எடுத்துரைக்கிறார்.

    ஆனால் லீலாதிலகம் புணர்ச்சி விதிகளை விரிவாகவும் விளக்கமாகவும் கூறவில்லை.  தமிழ்ப்புணர்ச்சி விதிகளையே பின்பற்றியுள்ளதாகக் கே. என். எழுத்தச்சன் குறிப்பிடுகிறார்.  லீலா திலகம் புணர்ச்சிக்கு 28 விதிகள் தான் கூறியுள்ளது.  அவர் கூறும் விதிகள் உயிர்முன் உயிர், உயிர்முன் மெய், மெய்முன் மெய் என்ற மூன்று அமைப்பில் காணப்படுகிறது.  மெய்முன் உயிர் என்ற அமைப்பில் இடம்பெறவில்லை.  பெரும்பாலும் பெயர் + பெயர் அமைப்பிற்கே விதிகள் கூறுகின்றது..

    ஆகமம்

    புணர்ச்சி நடைபெறுமிடத்து மூன்று வகையான மாற்றங்கள் நிகழுமெனத் தமிழ் இலக்கண நூலார் குறிப்பிடுகின்றனர்.   அம்மாற்றங்களாவன தோன்றல், திரிதல், கெடுதலாகும். தோன்றல் புனர்ச்சியை வடமொழியாளர் ஆகம சந்தி என்பர். தோன்றல் புணர்ச்சி காரணமாகச் சில இடங்களில் எழுத்துக்களோ சாரியைகளோ தோன்றுவது பற்றித் தொல்காப்பியர் விதியமைத்துள்ளார். பொதுவாக இரண்டு உயிரெழுத்துக்கள் புணரும்போது அவற்றை ஒன்று சேர்ப்பதற்கு அல்லது அவ்விடத்து விட்டிசைத்தலைத் தடுக்க யகர வகரம் உடம்படு மெய்யாக வரும்.  தொல்காப்பியர் உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார் (தொல். எழுத்து. 141) எனப் பொதுவாகக் கூறுகிறாரே ஒழிய  இன்னின்ன மெய்கள் உடம்படுமெய்களாக வரும் என்றும் இன்ன உயிர்முன் இன்ன உயிர் வருமென்று குறிப்பிடவில்லை.   லீலாதிலகம் இரண்டு உயிர்களுக்கு இடையில் யகரம் தோன்றும் என்றும் தனித்து நிற்கும் அ, இ ஆகியவற்றின் முன் உயிர் வரின் வகரம் தோன்றும்.  சிலயிடத்து இரட்டித்து வரும் என்று குறிப்பிடுகிறது.

    எ.டு

            ஆன + அது                  =             ஆனயது

            காண்மூ + அது          =             காண்மூவது

           அ + அழகு                     =             அவழகு

           இ  + அழகு                    =             இவழகு

    லீலாதிலகம்  நன்னூலைப்  பின்பற்றவில்லை என்பது இங்கு தெளிவாகிறது.  நன்னூலார் “இ ஈ ஐ வழி யவ்வும் ஏனைய உயிர்வரின் வவ்வும்” என்று குறிப்பிடுகிறார். ‘இ’ யின் முன் உயிர் வரின் வகரம் வரும் என்று கூறுவதிலிருந்து இதனை அறியலாம். “ய வ முன் வரினே வகர ஒற்றும்’’ (தொல்.உயிர்மயங். 4) இந்த தொல்காப்பிய நூற்பாவை ஒட்டியே “தஸ்ய  தித்வம் வ சிலயிடத்து இரட்டும்” என்று லீலாதிலகம் குறிப்பிடுகிது.

    எ.டு

            அ + அழகு     =             அவ்வழகு

           இ + அழகு     =             இவ்வழகு

    பொதுவாகத் திராவிட மொழிகள் எல்லாவற்றிலும் இரண்டு உயிர்களுக்கிடையே உண்டாகும் இடைவெளி ‘வ’கர அல்லது ‘ய’கர உடம்படுமெய் நுழைவால் தடுக்கப்பெறும் என்று கால்டுவெல் கூறுவார்.  திராவிட மொழிக் குடும்பத்தின் அடிப்படை என்று இதனைக் கூறலாம்.

             “சுட்டின் முன்னர் ஞ ந மத் தோன்றின்

            ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும்” ( தொல். எழுத்து. 206)

    இதனை அடியொற்றி லீலாதிலகம் “கேவலாஞ்ஞானமவா நாம் ச”  வினாப்பொருளில் வருகின்ற எகரத் தனிச் சொல்லின்முன் வரும் ஞ ந ம வ ஆகிய எழுத்துக்கள் இரட்டும் என்று குறிப்பிடுகிறது.

    எ.டு

           எ + ஞாண்  = எஞ்ஞாண், எந்நூல், எம்மரம்

    தொகைச் சொற்களிலும் ஒ, ந, ம வக்கள் அல்லாத மெய்கள் இரட்டும்.

    எ.டு

          ஆன  + காடு = ஆனக்காடு ( யானைகள் வாழும் இடம்)

    ய ர ல ழ ள ஆகியவற்றின் முன்வரும் கசதபக்கள் இரட்டும் (லீ.தி. 56) என்ற லீலாதிலகம் கூறுவது ‘ரகார இறுதி யகார இயற்றே’ (தொல். 363) என்ற தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றியாகும்.

    எ.டு

           பொய் + குதிர =        பொய்க்குதிர

           நீ + கோழி      =   நீர்க்கோழி

    ‘அளவும் நிறையும் வேற்றுமையியல ( தொல். 32) என்ற நூற்பாவைப் பின்பற்றி மகர ஈற்றுப் பெயரின்  முன் வல்லினம் வரின் இரட்டும் என்று லீலாதிலகம் குறிப்பிடுகிறது.

    எ.டு

           வட்டம்   +  பலக      = வட்டப்பலக

          சதுரம்  + கிணறு  = சதுரக்கிணறு

    ‘யரழளப்ய : கசதபனம த்வித்வம்’(லீ.தி. 388)  ய, ர, ல, ழ, ள ஆகியவற்றின் முன்வரும் கசதபக்கள் இரட்டும்.

    எ.டு

           வால் + கிண்டி          = வால்க்கிண்டி

           முள்   + கொம்பு       = முள்க்கொம்பு

    இவ்வாறு சொற்கள் இரண்டினை இணைத்து ஒரு சொற்றொடராக மாற்றுவதற்குப் புணர்ச்சியில் தோன்றல் விகாரம் பயன்படுகிறது.  உச்சரிப்பினை இலகுவாக்குவதற்கு மொழியில் பல இடங்களில் தோன்றல் விகாரம் நடைபெறுகின்றது.  பிற்கால மலையாள இலக்கண ஆசிரியர்கள் லீலாதிலகம் அமைத்த ஆகம சந்தி மலையாளத்துக்குரியது என்று கூறுவர். ஆனால் லீலாதிலகம் ஆகமசந்திக்குக் கூறும் விதிகள் அனைத்தும் தொல்காப்பியத்தைப் பின்பற்றி அமைந்தவையாகும்.

    பயன்பட்ட நூல்கள்

    1. இளையபெருமாள், மா., லீலாதிலகம், கேரளப் பல்கலைக்கழக வெளியீடு.
    2. இளம்பூரணர், தொல்காப்பியம், கழக வெளியீடு, சென்னை.
    3. சண்முகதாஸ், தமிழ் மொழி இயல்பு, பாவை வெளியீடு, 2008.

     ========================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review)

    லீலா திலகம், மணிப்பிரவாள மொழிநடையை விளக்குவதற்காக எழுந்த இலக்கணம். இக்கட்டுரையில் தொல்காப்பியம் கூறும் தோன்றல் புணர்ச்சி விதியை லீலா திலகத்தின் ஆகம சந்தி என்னும் புணர்ச்சி விதியோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார் கட்டுரையாளர். அதன் விளைவாகத் தொல்காப்பியத்தின் தோன்றல் புணர்ச்சி விதி தான் லீலா திலகத்தில் கூறப்பட்டிருக்கும் ஆகம சந்தி என்னும் புணர்ச்சி விதி என்று இக்கட்டுரையின் மூலம் நிறுவுகிறார். கட்டுரையில் பயன்படுத்திய நூல்களின் விவரங்கள், அவற்றின் பதிப்பு ஆண்டுகள் ஆகியவற்றை ஆய்வாளர் கட்டாயம்  பதிவு செய்ய வேண்டும்.

    ========================================

    Share
  • நலம்…. நலமறிய ஆவல் (145)

    -நிர்மலா ராகவன்

    எதிர்மறைச் சிந்தனைகள்

    ஒருவர் பல துறைகளிலும் வெற்றி பெற்றிருந்தால், `அவருக்குத்தான் தன்னைப்பற்றிய விழிப்புணர்வு எவ்வளவு துல்லியமாக இருக்கிறது!’ என்று வியந்து பாராட்டத் தோன்றுகிறது.

    அவரைப் போன்றவர்கள் சிறு வயதிலேயே, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் தமக்கு ஏன் ஓர் அசாதாரணமான உணர்வு ஏற்படுகிறது என்று அலசியிருப்பர்.

    மூன்று, நான்கு வயதுக் குழந்தைகள் தாயிடம் பொய்யுரைக்கும்போது கவனித்துப் பாருங்கள். முகம் சுருங்கியிருக்கும். `தர்மசங்கடம்’ என்ற அவர்கள் நினைப்பு புரியும்.

    அப்படி ஒரு முறை, என் மகள் கேட்டாள், “நான் ஏன் மூஞ்சியை இப்படி வெச்சுக்கறேன்?”

    நான் லேசாகச் சிரித்தபடி, “அம்மாகிட்ட பொய் சொல்றோமேன்னு!” என்றேன். எந்த வயதானாலும், குற்ற உணர்ச்சி ஒருவரைப் பாடுபடுத்தும். (குழந்தைகள் பொய் சொல்வது தண்டனையைத் தடுக்கும் வழி. அதைப் பெரிதுபடுத்தாது விட்டுவிட்டால், தானே மாறிவிடுவார்கள்).

    சுயமாகச் சிந்திக்கும் வயதில், எல்லா விஷயங்களிலும் பிறர் எதிர்பார்ப்பின்படி நடப்பது நமக்கே நாம் விலங்கிட்டுக்கொள்வதுபோல்தான். நாம் நினைத்ததை வெளிப்படையாகச் சொல்லவும் முடியாமல் போய்விடும். அப்புறம் சுதந்திரமான எண்ணமும் செயலும் ஏது!

    பிறரிடமிருந்து மாறுபட்டிருக்கிறோமே என்றுதான் பலரும் குழம்புவார்கள்.

    அதிலும், உடற்குறையுடன் இருப்பவர்களோ!

    கதை

    பதின்ம வயதான என் உறவினர் மகள் லல்லியை வெளியில் அழைத்துப் போயிருந்தோம்.

    “எல்லாரும் என்னையே பார்க்கிறார்கள்!” என்றாள் மனத்தாங்கலுடன். பிறவி ஊனத்தால், ஒரு வித கைத்தடியின் உதவியுடன்தான் அவளால் நடக்கமுடியும்.

    “நாமும் அவர்களைப் பார்க்கிறோமே! பிறரைப் பார்ப்பதற்குத்தானே வெளியில் வருகிறோம்!” என்று ஏதோ சமாதானம் சொன்னேன்.

    “இல்லை, எனக்குத் தெரியும். அவர்கள் என்னைத்தான் உற்று உற்றுப் பார்க்கிறார்கள்!” என்றாள். இப்படிப்பட்ட எதிர்மறையான சிந்தனைகளே ஒருவரை மேலும் பலகீனமாக ஆக்குகிறது.

    என்னைப் பார்க்காதீர்கள்!

    நீச்சல் குளத்தில் ஒரு தமிழ் மாது நீச்சலுடை அணிந்து வந்திருந்தாள். `இதென்ன, கால், தொடை, முதுகு எல்லாம் தெரிகிறதே!’ என்று அவளுக்குத் தோன்றிப்போயிருக்க வேண்டும். இல்லை, குடும்பத்தில் யாராவது முகத்தைச் சுளித்திருப்பார்கள். ஆடையை தொடைப்பகுதியிலும், பின்புறத்திலும் அடிக்கடி இழுத்து விட்டுக்கொண்டாள்.

    `இழுத்து இழுத்து விட்டுக்குமே..!’ என்று அவளைக்குறித்துப் பிறர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். சில நாட்களுக்குப்பின் அவள் வருவது நின்றுபோயிற்று.

    தாம் பருமனாகவோ, வழுக்கையாக இருப்பதையோ கேலி செய்துகொள்பவர்கள், `பிறர் சொல்வதற்குமுன் தாமே சொல்லிவிட்டால், அதன் பாதிப்பு குறையும்!’ என்று நினைப்பவர்களாக இருப்பார்கள்.

    `என்ன நினைப்பார்களோ!’ என்று எந்த சந்தர்ப்பத்திலும் பயந்துகொண்டே இருந்தால், முழுமையான மகிழ்ச்சி கிட்டுவதில்லை. `நான் இப்படித்தான்! உங்களுக்கென்ன!’ என்று தன்னையே ஏற்றுக்கொள்பவருக்கு மனக்குறை இருக்காது.

    `ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறாய்?’ என்று ஒரு பெண் தன் நண்பனிடம் கேட்க, `ஆமாம்!’ என்று நொடித்தான் அவன். `இப்போ இதுக்குப்போய் கவலைப்படச் சொல்றியா?’

    எல்லாருக்கும் அவரவர்பற்றிய சிந்தனைதான். நாம் அஞ்சுவதுபோல்தானே அவர்களும் நாம் அவர்களைப்பற்றி என்ன நினைக்கிறோமோ என்று யோசிப்பார்கள்! இது புரிந்தால், அநாவசியமாக குழம்பத் தேவையில்லை.

    தம்மை ஒருவர் வார்த்தைகளால் தாக்குமுன் தாம் முந்திக்கொள்ளலாம் என்று சிலர் பிறரிடம் குற்றம் காண்பார்கள். இவர்கள் தம்மைப்பற்றிச் சிந்திக்க அஞ்சுகிறவர்களாக இருப்பார்கள். அலசினால் மேலே எழும் குறைகளை, அவை உண்டாகக் காரணமாக இருந்த சம்பவங்களை மீண்டும் நினைவுகோர நேருமே! இப்போக்கினால் பலகீனம் அடைவது என்னவோ அவர்கள்தாம்.

    சிறு வயதில் நமக்குப் பிடிக்காதவைகளை நிறைய அனுபவித்திருப்போம். அப்பிராயத்தில் தவறு செய்வதும் இயற்கை. அவைகளையே எண்ணி, எண்ணி மறுகியபடி வாழ்க்கையைக் கழித்தால் நரகம்தான்.

    கதை

    சிவநேசனைப் பொறுத்தவரை, ஆண்குழந்தைகளை அடித்தால்தான் ஒழுங்காக வளர்வார்கள். இந்த நம்பிக்கையுடன், அவரது பிள்ளைகள் வீட்டுக்குள் நடமாடும்போதுகூட, கையில் பிரம்புடன் அவர்களைப் பின்தொடர்வார்.

    இப்படி வளர்ந்த நடராஜனுடன் பயமும் ஆத்திரமும் ஒருங்கே வளர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. வீட்டில் இருக்கவே பிடிக்காத நிலையில், நண்பர்கள் ஆறுதலாக இருந்தார்கள். `என் நண்பர்களுக்காக உயிரைக்கூடக் கொடுப்பேன்!’ என்பார், அடிக்கடி. அவர்கள் கேட்ட, கேட்காத உதவியைக்கூட வலியப்போய் செய்தார்.

    ஆனால், தன் சக்திக்குமீறி பிறருக்காக உழைத்ததில், வீட்டில் தன் மனைவி மக்களிடம் சிடுசிடுப்பாகத்தான் இருக்க முடிந்தது. சிறுவயதில் அடைந்த இனம்புரியாத அச்சம், தனிமை, வருத்தம் எல்லாம் ஆட்டுவிக்க, தன்னைப்போல் துன்பமும் துயரமும் அனுபவிக்காதவர்களிடம் ஆத்திரப்பட்டார்.

    இவரது போக்கைக் கண்டு வீட்டிலும் அலுவலகத்திலும் உள்ளவர்கள் பயந்து ஒதுங்க, `நான் யாருக்குமே ஒரு பொருட்டில்லை!’ என்று தோன்றிப்போயிற்று. ஒரு சிறு பிழை செய்தாலும், தடுமாற்றம், அவமானம்.

    பிறருக்கு ஓயாது உதவுகிறவர்கள் ஏமாளிகளா?!

    பிறர் தன்னைப்பற்றி அப்படி ஓர் எண்ணம் கொண்டிருப்பது நடராஜனுக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது. அதன்பின், `இப்போது முடியாது!’ என்று பணிவுடன் சொல்லக் கற்றுக்கொண்டார். ஆத்திரம் அவ்வப்போது தலைகாட்டினாலும், வெகுவாகக் குறைந்தது.

    `நான் தவறு செய்தால், இனி யாரும் பரிகசிக்கவோ, தண்டிக்கவோ போவதில்லை. பிறருக்கு உதவி செய்தால் எனக்கு மகிழ்ச்சி என்றாலும், தக்கவர்களுக்கு மட்டும்தான் உதவ வேண்டும்,’ என்று தீர்மானித்து, சிறிது சிறிதாக அதை நடைமுறையில் கொண்டுவந்தால், ஒருவரது ஆத்திரம் மட்டுப்பட வழியிருக்கிறது.

    உணர் திறன் வளர

    தினமும் நம்மைப் பாதித்தவைகளைக் குறித்துவைத்தால், நாளடைவில் நம் உணர்வுகள் புரியவரும். எதையெல்லாம் அடைய விருப்பம் என்பதையும் எழுதலாம். காலப்போக்கில், அப்பட்டியல் மாறிக்கொண்டே போகும்!

    நம்மையே ஆராய்ந்து நமக்குப் பிடித்தபடி மாற்றிக்கொண்டாலோ, அல்லது பிறர் சொல்வதைக் கேட்டாலோ, நன்மை விளையும். எப்படி என்கிறீர்களா? நம் பலம், பலவீனம் ஆகியவைகள் புரிந்துபோக, பலத்தைப் பெருக்கிக்கொள்ள முயற்சிகள் எடுக்கமுடியும்.

    நம்முடன் நன்கு பழகி, புரிந்தவர்களிடம் நம்மை எடைபோடும்படி கேட்கலாம். ஆனால், அவர்கள் சொல்வதையெல்லாம் அப்படியே ஏற்க வேண்டியதில்லை. பிறருக்குத் தவறு என்று படுவது நமக்கு ஏற்புடையதாக இருக்கலாமே! `பிறர் இருக்கிறபடி இருக்கட்டும்!’ என்று விட்டால் இரு தரப்பினருக்கும் நிம்மதி.

    நம்மை நாமே புரிந்துகொள்வது நம் தனித்தன்மையை நமக்கு உணர்த்துவதுடன், பிறரையும் புரிந்துகொள்ள வழி வகுக்கிறது. அவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்றும் புரியும். அதனால் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி நடக்கலாம்.

    பிறர் நம்மை ஆட்டுவிக்க இடம் கொடுப்பானேன்! நாம் என்ன, பொம்மையா?

    Share
  • பிரபஞ்சத்தின் மர்மமான நூறு புதிர்கள்

    -சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    பிரபஞ்சத்தின் மர்மமான நூறு புதிர்கள்
    பூமியில் அடுத்து வரும் காந்தத் துருவத் திசை மாற்றத்தில் என்ன நிகழலாம் ?

    1. https://youtu.be/HFT7ATLQQx8
    2. https://youtu.be/Ou1BiorYRNU
    3. What will happen when Earth’s north and south poles flip
    4. https://youtu.be/lc93IPEkWWc

     

    8_17_Solar wind normal polarity

     

    பூகோளக் காந்த துருவங்கள்
    புதிராய்த் திசைமாறும் !
    ஆமை வேகத்தில் வட துருவம்
    தென் துருவம் இடம்மாறிக் கொள்ளும் !
    பூமியின் சுழற்சி அப்போது
    எதிர்த்  திசையில் ஓடுமா ?
    பரிதியின்  உதயம்  அப்போது
    கிழக்கா ? மேற்கா ?
    உயிரினம்,  மானிடம்  என்ன வாகும் ?
    பூமி சுழலும் வேகத்தில்
    மானிடர் எறியப் படுவாரா ?
    சூழ்வெளி  மாறி வாயுக்குடை
    பாழ்வெளி ஆகுமா ?
    நீர் மண்டலம் ஆவியாகி
    நிலம் பாலை ஆகுமா ? சூடேறி
    உயிரினங்கள் மரிக்குமா ?
    பயிரினங்கள்
    பசுமை இழக்குமா ?
    அரை மில்லியன் ஆண்டுகட்கு
    ஒருமுறை நேர்ந்திடும்
    துருவத் திருப்பம்,
    பிறகு மீளுமா ?
    இயற்கை  முறை புரியும்
    திருவிளை யாடல் !
    பருவ காலம் தாறுமாறாகி
    வருடப் போக்கு வேறாகுமா ?
    துருவ மாற்றம்
    பிரளய நர்த்தனப் பயிற்சியை
    அரங்கேற்றுமா ?

    +++++++++++++

    துருவம் நகர்வது என்பது புதிய செய்தியில்லை.  1580 ஆண்டு முதல்  லண்டன் நீண்ட காலக் குறிப்பேடுகள், பூகாந்த வட துருவம் தாறுமாறாய் நகர்வதை ஒருசில நூற்றாண்டுகள் பதிவு செய்துள்ளனர்.

    சியாரன் பெக்கான் [Ciaran  Beggan, Geologist, British Geological Survey, WMM UPDATE TEAM]  [1981 STUDY ROYAL SOCIETY REPORT] 

    +++++++++++++

    பூமியின் காந்த துருவங்கள் விரைவில் திசைமாறப் போகின்றனவா ?

    பூமியின் வடதுருவம் இப்போது [ஜனவரி 30, 2019] இடம் தவறி மாறியுள்ளது என்றும்  நான்கு ஆண்டுக்கு அறிவித்த பழைய  பூகோளக் காந்தவெளி மாடலைப் [Geomagnetic Model] புதுப்பிக்க வேண்டும் என்றும் சமீபத்தில் நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட் டுள்ளார்கள்.  புதியதாய்த்  திருத்தப்பட்ட மாடல் பூகோள காந்தவெளி மாடல்  [World Magnetic Model (WMM)]  என்று பெயரிடப்  பட்டுள்ளது.  அம்மாடல் விரைவில் “இயற்கை”  இதழில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    Image result for brunhes-matuyama reversal

    பூகோளக் காந்த வெளி தாறுமாறாக கனடா ஆர்க்டிக் பகுதியி லிருந்து, ரஷ்யா – சைபீரியா நோக்கி எதிர்பாராதவாறு நகர்ந்து கொண்டிருப்பது, விஞ்ஞானிகளைப் பெரு வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  நிச்சயம்  வட துருவம் நகர்ந்து கொண்டுள்ளது.

    இப்பதிவுகளில் மெய்யாகக் கவனத்தைக் கவரும் தகவல் என்னவெனில் வட துருவ நகர்ச்சியில் தொடர் வளர்ச்சி [Acceleration in Movement]. 1990 மைய ஆண்டுகளில் வட துருவ நகர்ச்சியில் ஒரு வேகம் மாறியது.  அதாவது வட துருவம் ஆண்டுக்கு 9 மைல் நகர்ச்சியிலிருந்து, 34 மைலாய் [15 கி.மீ –>> 55 கி.மீ] அதிகரித்தது.  விந்தையாக வட துருவம் மேற்கு அரைக்கோளத்திலிருந்து, கிழக்கு அரைக்கோளத்துக்குத் [Eastern Hemisphere] தாவியுள்ளது.

     

    துருவ நகர்ச்சிக்கு நேரும் காரணங்கள் என்ன ?          

    முக்கியக் காரணம் பூமியின் உள்ளே இருக்கும் திரவ இரும்பு வெளிக்கரு [Liquid Iron Outer Core].  அது உட்கருப் போர்வை  [Core Field]  என்று அழைக்கப் படுகிறது.  சிறிய பகுதிகள் சில காந்த ஆற்றல்  தாதுக்கள் உடைய அடிக் கோள் & மேல் கோள் தட்டுகள்  [Magnetic Minerals in the Crust &* Upper Mantle] & கடல்நீர் காந்த தளத்தைச் சுற்றி [Electrical Currents, created by seawater movements through ambient magnetic field]   நகர்ச்சியைப் பாதிக்கும். குறிப்பாக பூமியின் உட்கருப் போர்வை நலிந்து கொண்டு [Core Field is Weakening] வருகிறது.  உட்கருப் போர்வை நலிவது, காந்த துருவம் திசை மாறப் போவதைக் காட்டுகிறது.

    கடந்த பூகோளத் துருவ மாற்றம் 780,000 ஆண்டுக்கு முன்னர் நேர்ந்ததாக அறியப் படுகிறது.  41,000 ஆண்டுக்கு முன்பு, துருவங்கள் தற்காலியமாக விரைவில் வலுவிழந்து, திசை மாறாது இருந்துள்ளதை சியாரன் பெக்கான் எடுத்துக் காட்டுகிறார்.  2018 ஆய்வுப் பார்வைகளில், பூகோளக் காந்த வலு மிகவும் குன்றியுள்ளதாக தெரிகிறது.

    துருவ மாற்றத்தால் நேரக் கூடிய பெரும் சேதங்கள், கேடுகள்

    மெதுவான துருவ மாற்றங்களால் குறிப்பாகப் பல எரிமலை வெடிப்புகள், பூகம்பங்கள்,  கடலில் விந்தை ஒலிகள் நேரலாம் என்றும், திடீரென மாறினால் உலகமெங்கும் பிரளயம் நேரும் என்றும் ஒரு சில விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்.  விஞ்ஞானிகள் அவ்விதக் கோர நிகழ்வுகள் 74  [எழுபத்தி நான்கு] நேர்ந்திருப்ப தாகக் கணித்துள்ளார்.  அதற்காக ஆயிரக் கணக்கான மாதிரிப் பனித் துண்டுகளைப் பல்லாயிரம் அடி துருவ ஆழத்தில் எடுத்து ஆய்வுகள் செய்துள்ளார்.

    ஒருதிடீர் துருவ மாற்றம் பூமியின் நிலைப்பாட்டுச் சமன்பாடைத் தகர்த்து விடும். அது பெரும் பூகம்பக் கொல்லிகளை [ Large Lethal Earthquakes], அசுரச் சுனாமிகளை, எரிமலைப் பொழிவுகளை உண்டாக்கலாம். அதனால் புகைத் தூசி மண்டலம் உலகம் எங்கும் பரவி, சூரிய ஒளி மறைக்கப்பட்டு திடீர்ப் பனியுகம் [Ice Age] பிரளயம் போன்ற அழிவு யுகம் தூண்டப்படலாம்.

    Earth's Pole Reversal

    [youtube https://www.youtube.com/watch?v=oYHPVGuQAVw?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    பூமியின் கடந்த காலக் காந்தத் துருவ மாற்றம் எப்போது நேர்ந்தது ?

    புவியின் தொடர்ந்த பூகாந்த மாற்றம் கோளைச் சுற்றிக் கண்ணுக்குப் புலப்படாத விசையாய், சூரியத் தீக்கதிர்த் தாக்குதலைத் தணித்து மனிதரைப் பாதுகாத்து வருகிறது. துருவத் திசை மாற்றம் ஓர் இயற்கை நியதி. கடந்த 20 மில்லியன் ஆண்டுகளாய், துருவத் திசை மாற்றம் 200,000 முதல் 300,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு சீரிய நெறிப்படி நிகழ்ந்து வருகிறது. ஆயினும் கடந்து சென்ற பூகாந்தத் திசைமாற்றம் [Brunhes-Matuyama Reversal] 780,000 ஆண்டுக்கு முன்பு நேர்ந்துள்ளது. இடையே தற்காலியமாக 41,000 ஆண்டுகளுக்கு முன்பு [Laschamp Event] ஒரு திசைமாற்றம் நிகழ்ந்துள்ளது. அந்தத் திசை மாற்றம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் நீடித்து, மெய்யாகத் துருவங்கள் 250 ஆண்டுகளாய் நிலைத்து வந்துள்ளன.

    Earth magnetic field

    வடதுருவம், தென்துருவம் இடம் மாறிப் பன்னூறு முறைகள் திசை மாற்றங்கள் நமது பூகோள வரலாற்றில் நிகழ்ந்துள்ளன.  அப்போது பூகாந்த விசை  குறைந்து, மிகச் சிக்கல் வடிவம் அடைந்து, துருவங்கள், புவி மையக் கோட்டுப் [Equator] பகுதியில் புலம் பெயர்ந்து, தற்போதைய பூகாந்த விசை வலுவில் 10% தணிந்து விட்டது.  அல்லது, ஒரே தருணத்தில் பன்முக வடதுருவ, தென் துருவ அமைப்புகள் [Multiple Poles] பூகோளத்தில் தோன்றியுள்ளன.

    இம்மாதிரிப் பூகோளத் திசைமாற்றங்கள் [Geomagnetic Reversals]ஒவ்வோர் மில்லியன் ஆண்டுகளில் ஒருசில முறைகள் சராசரியாக நேர்துள்ளன. அப்படி நேர்ந்தாலும்,  திசைமாற்ற இடைவெளிகள் ஒழுங்கற்ற முறையில் தான் நிகழ்ந்திருக்கின்றன.  இடைவெளி பல மில்லியன் ஆண்டுகளாகவும் ஏற்பட்டிருக்கலாம்.  முழுமை பெறாமல் அரைகுறைத் திசைமாற்றங்கள், தற்காலிய நிலைபெறாத, திசைமாற்றங்கள் கூட நேர்திருக்கலாம்.  அந்தச் சமயங்களில் பூகாந்த துருவங்கள் [Magnetic Poles] பூகோளத் துருவ முனை களை [Geographic Poles] விட்டுப் புலம் பெயர்ந்து, புவி மையக் கோட்டைக் [Equator] கடந்து, மீண்டும் பழைய இடங்களுக்கே திரும்பலாம்.

    Image result for brunhes-matuyama reversal

    பிரளயக் கேடுகளை முன்கூறும் வேதியர் [Doomsday Theorists]இந்தப் பூகோளத் திசைமாற்ற நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டு, இது உலகை அழிக்கப் போகிறது என்று அச்சம் ஊட்டுவார்.  ஆனால் அவ்விதம் பேரழிவுச் சீர்கேடுகள் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு நேருமா ? பயிரினங்களுக்கு நேருமா ?  இவ்வினாக்களுக்கு நாசா கூறும் பதில் என்ன?  பூதளவியல், பூர்வ புதைபடிவப் பதிவுகளிலிருந்து, [Geologic & Fossil Records] கடந்த நூற்றுக் கணக்கான பூகாந்த திசைமாற்ற விளைவுகளை ஆராய்ந்த போது, “சீர்கேடுகள்  இல்லை”  என்பதே தெரிகிறது. பூமியில் பூகாந்தத் திசை மாற்றம் மெதுவாக மாறும் போது,  பூகோளத்தின் சுழற்சி வேகம் [சுமார் : மணிக்கு 1000 மைல்] தளர்ந்து சுழற்சியின் திசை மாறுமா ? அப்போது பூமியில் உயிரினங்களுக்கு என்ன நேரிடும் ?  கிழக்கை விட்டுச் சூரியன் மேற்கே உதிக்குமா ?  இவை போன்ற குதர்க்க வினாக்களுக்குப் பதில் இதுவரைக் கிடைக்கவில்லை !

    இப்போது மெய்யாகத் [2017] துருவம் வடதிசை நோக்கி ஆண்டுக்கு 40 மைல் வேகத்தில் புலம் பெயர்வதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகிறார். போன 20 ஆம் நூற்றாண்டின் துவக்க சமயத்தில் ஆண்டுக்கு 10 மைல் வேகத்தில் துருவ வடப் பெயர்ச்சி நேர்ந்திருக்கிறது.  இந்தப் பூகாந்தத் துருவங்கள் திசைமாற்றம் ஜப்பானிய விஞ்ஞானிகள் பெயரில் ” புருனெஸ் -மட்டுயமா திசைமாற்றம் ”  [Brunhes- Matuyama Reversal] என்று குறிப்பிடப் படுகிறது.   இத்திசை மாற்றத்தால் எந்த வித மாறுதல்கள், தீங்குகள் பயிரின- உயிரினப் பிறப்புகளுக்குத் தீவிரமாய் இல்லை என்று பூர்வப் புதைப்படிவப் பதிவுகள் [Fossil Records] மூலம் அறியப்படுகின்றன.

    இந்த ஆண்டுகளில் [2000 – 2016] ஆண்டுகளில் எடுத்துச் சோதித்த ஆழ்கடற் படிவுகள் உள்ளே [Sediments Cores], ஆக்சிஜென் ஏகமூலங்களில் [Oxygen Isotopes ] எந்த வித மாறுதலும் இல்லை.  பூகாந்தத் திசைமாற்றத்தால், புவிச் சுழற்சி அச்சுக்குப் [Earth’s Rotation Axis] பாதிப்பு இல்லை. காரணம் புவி அச்சுச் சரிவு காலப் பருவ நிலை, பனித்திரட்சிக்குப் [Climate & Glaciation] பாதிப்பை உண்டாக்குகிறது.  அவ்விதம் திசை மாற்றத்தால் பனித்திரட்சி பாதிக்கப் பட்டிருந்தால், பதிவுகளில் பதிவாகி யிருக்கும்.

    [youtube https://www.youtube.com/watch?v=B-X-a4sUURM?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    ஆயிரக்கணக்கான ஆண்டு காலத்தில் மெதுவாகப் பூமியில் பூகாந்தத் திசைமாற்றம் நேர்வதால், துருவ இடமாற்றம் ஒரு தாவலில் நேர்வ தில்லை.  கடந்த 3 பில்லியன் ஆண்டுகளில், குறைந்தது நூறு முறை பூகாந்தத் திசைமாற்றம்  நேர்திருப்பதைத் தெரிய வருகிறது.  பூகாந்தத் திசைமாற்றம் ஆழ்கடலடிப் புழுதிப் படிவுகளில் [Sediments] பதிவாகிறது. அவற்றை விஞ்ஞானிகள் தொடர்ந்து சோதனை செய்து வருகிறார்.

    [youtube https://www.youtube.com/watch?v=nHew0n0BUhw?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    [youtube https://www.youtube.com/watch?v=U3Mva2a-52k?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    ++++++++++

    “பூர்வ எரிமலைப் பாறை மாதிரிகளைப் புதிதாக ஆராய்ந்த போது இரண்டாவது காந்த மூலச் சேமிப்பு (Secondary Magnetic Source) பிரதம காந்த முனைத் திருப்பம் ஏற்படுத்துமா அல்லது எப்படி நிகழ்த்துகிறது என்று கண்டுபிடிக்க உதவி செய்யும்.  வடதென் துருவங்களை நோக்கும் பிரதமக் காந்தத் தளம் தளர்ச்சியுறும் போது, பூமியின் ஆழமற்ற உட்கருவில் அடித்தட்டுப் பாறைக்குக் கீழாகத் தோன்றிவரும் இரண்டாவது காந்தத் தளம் முக்கியத்துவம் அடைகிறது !”

    பிராடு ஸிங்கர், பூதளவியல் பேராசிரியர் விஸ்கான்சின்-மாடிஸன் பல்கலைக் கழகம்

    Image result for brunhes-matuyama reversal

    பூகாந்த தளம் திருப்பிக் கொள்ள [Earth’s Magnetic Pole Reversal] 1000 முதல் 10,000 ஆண்டுகள் எடுக்கலாம்.  அந்த திருப்ப இயக்கத்தில் நேரிணைப்பாகும் [Realignment] முன்பு,  காந்த சக்தி மிகவும் தளர்ச்சி அடைகிறது.  அது திடீர்த் திருப்பம் ஆகினும், மெதுவாகவே [Sudden Flip; but a Slow Process] அது நிகழ்கிறது.  அத்தருணத்தில் பூகாந்த சக்தியின் ஆற்றல் பலவீனம் அடைகிறது.   காந்த தளம் சிக்கலாகிச் சில சமயம் இரு துருவங்களுக்கு மேலாகவும் காணப் பட்டு, மீண்டும் காந்த சக்தி வலுவேற்றிக் கொள்கிறது.   அந்த நிலையில் துருவங்கள் எதிராக மாற்றமாகி நேரிணைப்பு [Realigns in the Opposite Direction] செய்து கொள்ளும்.

    மோனிகா கோர்ட்டே  [Scientific Director, Niemegk Geomagnetic Observatory, Germany]

    Iside the Earth

    கடந்த வரலாற்றுப் பதிவுகள் பூமியின் அடுத்த துருவத் திருப்பம் வரப் போவதை வழிமொழிகின்றன.  சராசரியாக 400,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூதளக் காந்த துருவ மாற்றம் நிகழ்கிறது.  அந்தக் கால எண்ணிக்கைத் தாறுமாறாகவும் வேறுபடுகின்றது.  பூமியின் சென்ற துருவத் திருப்பம் சுமார் 800,000 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்திருப்ப தாகப் பூதளவியல் வரலாற்றுப் பதிப்புகள் கூறுகின்றன.  துருவத் திருப்பங்கள் எதிர்பாராத கால வேறுபாடுகளில் தோன்றுபவை.  அந்தத் துருவ மாற்றம் இன்னும் சில நூற்றாண்டுகளில் வரலாம்.  அல்லது சில மில்லியன் ஆண்டுகள் கழிந்தும் ஆகலாம்.”

    ஆன்ரு பிக்கின், நெதர்லாந்து உட்ரெக் (Utrecht) பல்கலைக் கழகம்

    பூமி அடுத்து எப்போது துருவங்களை மாற்றிக் கொள்ளும் ?

    நமது பூகோளத்தின் ஆயுட் காலத்திற்குள் பன்முறைத் துருவ மாற்றங்கள் நேர்ந்துள்ளதாகப் பூதள விஞ்ஞானிகள் கருதுகிறார்.   அப்படிக் கூறுவதற்கு எரிமலை அடுக்குப் பாறைப் பதிவுகளே  தக்க நிரூபணம் தருகின்றன.   முந்தைய பூகாந்த மாற்றம் சுமார் 780,000 ஆண்டுகட்கு முன்பு நிகழ்ந்த தாகப் பாறைப் பதிவுகள் மூலம் அறியப் படுகின்றது.   அப்போது தான் கற்கால மனிதன் சிக்கி முக்கிக் கற்களைத் தட்டி  அக்கினி உண்டாக்கும் “கனல் சக்தி” [Fire Power] திறன் கண்டுபிடிக்கப் பட்டது.

    Earth's Coreஅமெரிக்காவின் மேரிலாண்டு பல்கலைக் கழகத்தில் பூகோள உள்ளமைப்பைக் காட்டும்,  உலகிலேயே பெரிய சுழற்சி கோளம் அமைக்கப் பட்டுள்ளது.  துருப்பிடிக்கா இரும்பில் 10 அடி விட்டத்தில் வடிக்கப் பட்டிருக்கிறது.   அதற்குள் சிறு கோளம் ஒன்றும் உள்ளது.  இரு கோளங்களுக்கும் இடையில் 250 டிகிரி F உஷ்ணத்தில் சூடாக்கப் பட்ட , 12 டன் திரவ சோடியம் நிரப்பப் பட்டுள்ளது.  அதுவே திரவ உலோகமுள்ள பூமியின் உள்ளே இருக்கும் மேல் உட்கருவாகக் [Liquid Iron Outer Core] கருதப் படுகிறது.  மிக வேகமாய்ச் சுழலக் கூடிய அந்தக் கோளத்தில் பல்வேறு பூதளப் பௌதிகச் சோதனைகள் செய்து காட்ட முடியும்.   அச்சோதனை களில் ஒன்றுதான் பூதளப் பௌதிக விஞ்ஞானி, டானியல் லாத்திரப் [Geophysicist Daniel Lathrop] முன்னறி விக்க முயலும், அடுத்து எப்போது பூகோளத் துருவமாற்றம்  நிகழப் போகிறது எனப்படுவது.  இந்த முன்னறிப்பை வெளியிட்டது ரஷ்யக் குரல் எனப்படும் “வாய்ஸ் ஆஃப்  ரஷ்யா” [Voice of Russia].   அறிவித்த நாள் :  ஏப்ரல் 29, 2014.

    பூகோளத் துருவ மாற்றத்தால் என்ன கேடுகள் விளையும் என்பது யாருக்கும் தெரியாது.   அடுத்த துருவ மாற்றத்தில் மனித இனத்துக்கு தீங்கு எதுவும் நேராது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்.  சென்ற துருவ மாற்றம் 780,000 ஆண்டுக்கு முன்னர் நேர்ந்திருக்கிறது.   துருவ மாற்றம் மிகவும் மெதுவாக நிகழ்கிறது.  அது முடிய ஆயிரக் கணக்கான ஆண்டுகள் [1000 முதல் 10,000 வரை] ஆகலாம்.  துருவ மாற்றம் நிகழ்ந்தால் பூமியின் சுழற்சி நின்று எதிர்ப்புறம் சுற்றுமா ?  பரிதி உதயமாகும் கிழக்குத் திசை வேறுபடுமா ?  எதிர்பாராத இந்த மாறுபாட்டுகளால் பருவ மாற்றங்கள் நேருமா ?  இவை போன்ற கேள்விகள் எழுகின்றன ! ஆனால் இவற்றுக்குச் செம்மையான பதில் இதுவரை கிடைக்க வில்லை.  அடுத்த பூகோளத் துருவ மாற்றம் 400,000 வருடங்கள் கடந்து நிகழும் என்று அனுமானிக்கப் படுகிறது.

    Fig 1 Polat Shift in Earth

    “பூமியின் காந்தத் தளம் நமக்கும், நமது சூழ்வெளிக்கும் பரிதியின் தீவிரப் புயலிலிருந்து (Solar Wind) கேடுகள் விளையாதபடிக் கவசமாய்ப் பாதுகாப்பாக இருக்கும் ஓர் இயற்கை ஆற்றல்.  பறவை இனத்துக்கும், மனித இனத்துக்கும் கடற் பயண முறைக்குத் திசைகாட்டும் (Navigational Direction) ஓர் அரிய ஆற்றல் அது !  பரிதிப் புயல்கள் தீவிரமாய் அடிக்கும் போது மின்சாரப் பரிமாற்றமும், தொலைத் தொடர்புச் சாதனங்களும் பழுதடைந்து போகும்.”

    ஆன்ரு பிக்கின், நெதர்லாந்து உட்ரெக் (Utrecht) பல்கலைக் கழகம்

    “கடந்த ஆண்டுகளில் சில பறவை இனங்கள் துருவத் திருப்பக் காலங்களில் கடற் பயணம் புரிந்த போது திசை தடுமாறிப் போயுள்ளன !  ஒற்றைச் செல் உயிர் ஜந்துகள் (Single-celled Organisms) சில மேல், கீழ் நிலை அறிய முடியாதபடி அழிந்து போயிருக் கின்றன !  கடந்த காந்த முனை மாற்ற காலங்களில் மனித இனம் பிழைத்து எழுந்திருப்பதாகத் தெரிகிறது.  ஆகவே அடுத்து வரப் போகும் புதியத் துருவத் திருப்பத்தில் மனித இனம் பாதகம் அடையாமல் மீட்சி பெறலாம் !”

    டேவிட் குப்பின்ஸ், லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து.

    Fig 1B Magnetic Pole Shift

    “பூமியின் காந்த தளத்தின் மீது எரிமலைக் குழம்பு குளிர்ந்து படிந்ததும் அப்போதுள்ள புதிய காந்த தளத்தின் பதிவு நினைவு பற்றிக் கொள்கிறது.  அவ்விதம் உண்டான எரிமலைக் குழம்பின் நினைவை அழிப்பது மிகக் கடினம்.  அதுவே பூகாந்தத்தின் பூர்வத் திசை அமைப்பின் (Paleomagnetic Direction) பதிவாகி விடுகிறது.”

    பேராசிரியர் பிராடு ஸிங்கர்.

    பூகோள வரலாற்றில் நேர்ந்துள்ள வடதென் துருவ மாற்றங்கள் !

    பூமியின் வடதென் காந்தத் துருவங்கள் எப்போதும் ஒரே திசை நோக்கி இருப்பவை அல்ல !  அவை சிறுகச் சிறுக கோணம் மாறி பல்லாயிரம் [1000 – 10,000] ஆண்டுகள் படிப்படியாக நகர்ந்து பிறகு வடதுருவம் தென் துருவமாகவும், தென் துருவம் வடதுருவமா கவும் மாறிவிடுகின்றன !  பூகோளத்தின் துருவங்கள் கடந்த 65 மில்லியன் ஆண்டுகளாக 130 தடவைகள் மாறி வந்துள்ளன என்று பூதளவியல் விஞ்ஞானிகள் (Geologists) கணித்துள்ளார்கள் !  அதாவது சராசரி அரை மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுத் துருவ மாற்றம் நேர்ந்திருக் கிறது !  பூமியில் முதன்முதல் பாறைகள் உருவான போது அவை யாவும் வியப்பூட்டும் வண்ணம் அப்போதையப் பூகாந்தத் திசை அமைப்பைப் (Orientation of Earth’s Magnetic Field) பதிவு செய்துள்ளன !

    Fig 1C Structure of Earth

    பூதளவியல் விஞ்ஞானிகள் பல்வேறு யுகத்தில் பல்வேறு இடங்களில் உண்டான பாறை மாதிரிகளைச் சேகரித்து அவ்விதத் துருவ மாற்றங்கள் நிகழ்ந்திருப் பதைக் காட்டியிருப்பது ஆச்சரியமாக உள்ளது !  பூமியில் இப்போதிருக்கும் வடதென் துருவத் திசை அமைப்பு “நேர் அமைப்பு” (Normal Direction) என்றும் அதற்கு எதிரான திசை அமைப்பு “திருப்ப அமைப்பு” (Reversal Direction) என்றும் விஞ்ஞானிகளால் குறிப்பிடப் படுகின்றன !  கடந்த 150 ஆண்டுகளாக (1985 Factual) பூகாந்தத் திசைக் கோணம் ஒரே மட்டக் கோட்டில் (Latitude) (79 டிகிரி) இருந்திருக்கிறது !  அதே சமயத்தில் அதன் நேரியல் கோடு (Longitude) ஆண்டுக்கு 0. 042 டிகிரி கோண வீதத்தில் மாறி வந்துள்ளது !  மேலும் இதற்கு முன்பு பூகாந்தத் துருவத் திசை நீடிப்புக் குறைந்தது 2.6 பில்லியன் ஆண்டுகள் கூட இருந்துள்ளது என்று அறிப் படுகின்றது !

     

    Fig 1E Relative Size of Sunspots

    2004 டிசம்பர் 26 ஆம் தேதி தென்னாசியக் கடற்கரையில் படையெடுத்த அசுரச் சுனாமியை எழச் செய்த கடற் பூகம்பம் எவ்விதம் உண்டானது என்பதற்குப் பூமி அடித்தட்டின் (Earth’s Tectonic Plate Crust) நிலையற்ற தன்மையே என்று ஊகிக்கப் படுகிறது.  அத்தகைய நிலையற்ற கொந்தளிப்புக்குப் பூகாந்தத் திசை மாற்ற நகர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.  சூரியன் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறைத் தவறாது அதன் “பரிதித் தழும்பு மீட்சி” உச்சத்தில் (Peak Sunspot Cycle) தனது துருவத் திசையை மாற்றுகிறது !  அவ்விதப் “பரிதித் துருவத் திருப்பம்” அடுத்து 2012 ஆம் ஆண்டில் நேரப் போகிறது !  தென்திசை நோக்கிய காந்தத் திரட்சி (Magnetic Flux) மைய ரேகையில் (Solar Equator) செழித்த பரிதித் தழும்புகளி லிருந்து நகர்ந்து வடப்புறம் திரும்புகிறது.  ஆனால் பூமியின் துருவ மாற்றம் பரிதியில் நேர்வது போல் ஒரு சில குறுகிய ஆண்டுகளில் நிகழ்வதில்லை !

    Fig 1 Polat Shift in Earth

    பூமியின் துருவ மாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன ?

    பூகோளத்தின் துருவ மாற்றங்கள் தாறுமாறான கால இடைவெளிகளில் இதுவரை நேர்ந்துள்ளன.  சமீபத்தில் உண்டான துருவ மாற்றம் 780,000 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்திருக்கிறது.  ஆயினும் ஏன் அவ்விதம் நேர்கிறது என்று விஞ்ஞானிகள் வியப்புறுகிறார்கள்.  வெப்பக்கனல் திரவ இரும்புள்ள உட்கருவில் கொந்தளிக்கும் மின்னோட்டம் (Electric Current) உண்டாக்கும் பூமியின் பிரதமக் காந்தத் தளம் துருவ முனைத் திசையைத் திருப்புகிறது !  அப்போது ஒரு காந்தத் திசைகாட்டி முள் (Needle of the Magnetic Compass) வட திசைக்குப் பதிலாகத் தென் திசையைக் காட்டும் !  பூமியின் வரலாற்றில் முரணான கால இடை வெளிகளில் அவ்விதத் துருவத் திருப்பம் 100 மேலான தடவைகளில் நிகழ்ந்துள்ளன. “பூர்வ எரிமலைப் பாறை மாதிரிகளைப் புதிதாக ஆராய்ந்த போது இரண்டாவது காந்த மூலச் சேமிப்பு (Secondary Magnetic Source) பிரதம காந்த முனைத் திருப்பம் ஏற்படுத்துமா அல்லது எப்படி நிகழ்த்துகிறது என்று கண்டுபிடிக்க உதவி செய்யும்.  வடதென் துருவங்களை நோக்கும் பிரதமக் காந்தத் தளம் தளர்ச்சியுறும் போது, பூமியின் ஆழமற்ற உட்கருவில் அடித்தட்டுப் பாறைக்குக் கீழாகத் தோன்றி வரும் இரண்டாவது காந்தத் தளம் முக்கியத்துவம் அடைகிறது !” என்று விஸ்கான்சின்-மாடிஸன் பல்கலைக் கழகப் பூதளவியல் பேராசிரியர், பிராடு ஸிங்கர் கூறுகிறார்.

    Earth magnetic field -2

    பிராடு ஸிங்கரும் மேற்கு ஜெர்மனியில் ஆய்வு செய்யும் கென்னத் ஹா·ப்மனும் (Kenneth Hoffman) சேர்ந்து ஹவாயிக்கு அருகில் தாஹிதியின் (Tahiti) பூர்வீக எரிமலைக் குழம்பை 30 ஆண்டுகளாகச் சோதனை செய்து பூமியின் காந்த முனைத் திருப்பின் வழிமுறை களைக் (Patterns) கண்டறிந்தனர்.  வெப்பக் கனலில் திரவமான இரும்பு செழிப்பான உலோகங்களின் காந்த சக்தி திரவம் குளிர்ந்து திடமாகிக் கடினமானதும் உட்கருவில் அடைபட்டு விடுகிறது ! “பூமியின் காந்த தளத்தின் மீது எரிமலைக் குழம்பு குளிர்ந்து படிந்ததும் அப்போதுள்ள புதிய காந்த தளத்தின் பதிவு நினைவு பற்றிக் கொள்கிறது.  அவ்விதம் உண்டான எரிமலைக் குழம்பின் நினைவை அழிப்பது மிகக் கடினம்.  அதுவே பூகாந்தத்தின் பூர்வத் திசை அமைப்பின் (Paleomagnetic Direction) பதிவாகி விடுகிறது.” என்று பிராடு ஸிங்கர் கூறுகிறார்.

    Fig 4 Power of Geodynamo

    பரிதிக் காந்த முனைத் திருப்பத்தால் ஏற்படும் இயற்கைக் கேடுகள்

    2012 டிசம்பர் 21 ஆம் தேதியை ஒரு பயங்கர தினமாக விஞ்ஞானிகள் மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறார் ! சூரியனில் 11 ஆண்டுகள் கடந்து மீண்டும் வரும் துருவ முனை மாற்றுச் சுற்றியக்கத்தில் வடதென் துருவங்கள் மாற்றம் அடையப் போகின்றன !  பரிதியில் இப்படித் திடீரென்று துருவ நகர்ச்சியும், மாற்றமும் ஏற்படுவது இயற்கை !  அவ்விதத் துருவ மாற்றங்கள் பரிதியின் காந்தத் தளங்களில் நேரிடும் “சீரமைப்பு மீளியக்கங்கள்” (Harmonic Cycles).  துருவ முனைத் திருப்பங்கள் “சூரிய வடுக்கள் அல்லது தழும்புகள்” (Sun Spots or Sun Acnes) காரணமாக இருப்பதால் நிகழ்கின்றன.  அல்லது பரிதியின் காந்த சக்தியால் நேரிடுகின்றன.

    11,500 ஆண்டுகளில் மீண்டும் வரப் போகும் பயங்கரப் பனியுகக் காலத்தின் மையத்தில் புவி மாந்தர் இருப்பதாகப் பூதளவியல் விஞ்ஞானிகள் நினைவூட்டி வருகிறார்.  அந்தச் சுழல் நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது துருவத் திருப்பமும், பூத எரிமலை வெடிப்புகளும், அசுரப் பூகம்பங்களும், சுனாமிகளும், தீவிர ஹர்ரிக்கேன்களும் மக்களைப் பாடுபடுத்திக் கொந்தளிப்பில் தவிக்க வைக்கலாம் !  2008 ஆம் ஆண்டில் மட்டும் கடந்த 200 ஆண்டுகளில் நேராத மூன்று அசுரப் பூகம்பங்கள் ஏற்பட்டு மக்களைப் பாதித்துள்ளன !  அவற்றைத் தூண்டும் மூல காரணங்களில் ஒன்றாகப் பூகாந்த முனை நகர்ச்சிகள் பங்கு பெறுமா என்பதைப் பூதள விஞ்ஞானிகள்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

    +++++++++++++++++++

    [youtube https://www.youtube.com/watch?v=oYHPVGuQAVw?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    [youtube https://www.youtube.com/watch?v=B-X-a4sUURM?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    [youtube https://www.youtube.com/watch?v=nHew0n0BUhw?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    [youtube https://www.youtube.com/watch?v=U3Mva2a-52k?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    [தொடரும்]

    +++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    11 Universe By : Roger Freedman & William Kaufmann III (2002)
    11 (a) Earth Science & The Environment By : Graham Thompson & Jonathan Turk (1993)
    11 Hutchison The Encyclopedia of Earth : Magnetism, Gravity & Heat (1985)
    12 Science Daily : Magnetic Field Reversals Illuminated By Lava Flows Study [September 26, 2008]
    13 Pure Energy System News: Earth’s Magnetic Field Reversal By : Mary-Sue Haliburton

    14 Magnetic Storm Home Page What Drives Earth’s Magnetic Field (Oct 2003)
    15 BBC News : Is The Earth Preparing to Flip ? By : David Whitehouse (March 27, 2003)
    16 Scientific American Magazine – Our Ever Changing Earth – Probing the Geodynamo By : Gary Glatzmaier & Peter Olson (September 26, 2005)
    17 Solar Pole Shift & Pole Reversal in 2012 -2013 (http://newsvote.bbc.co.uk/mpapps/pagetools ) By : Patrich Geryl (May 19, 2009)

    18.http://worldlywise.pbworks.com/w/page/26834992/The%20causes%20and%20effects%20of%20earthquakes%20and%20how%20people%20respond%20to%20them
    19. http://www.livescience.com/18426-earth-magnetic-poles-flip.html [February 10, 2012]
    20. http://en.wikipedia.org/wiki/Geomagnetic_reversal [June 21, 2015]

    21.http://www.spacedaily.com/reports/When_next_Earths_magnetic_field_reverse_begins_and_what_consequences_for_mankind_will_it_have_999.html  [April 29, 2014]

    22. http://www.sciencedaily.com/releases/2015/07/150707101952.htm  [July 7, 2015]

    23. http://www.spacedaily.com/reports/Improved_age_for_Earths_latest_magnetic_field_reversal_using_radiometric_dating_999.html  [July 8, 2015]

    24.  https://www.ngdc.noaa.gov/geomag/faqgeom.shtml  [Frequently Asked Questions]

    24[a]  http://image.gsfc.nasa.gov/poetry/venus/RevScience.html  [NASA 2003]

    25. https://en.wikipedia.org/wiki/Brunhes%E2%80%93Matuyama_reversal  [December 25, 2016]

    26.  http://www.wow.com/wiki/Brunhes-Matuyama  [December 16, 2016]

    27.  https://en.wikipedia.org/wiki/Geomagnetic_reversal  [January 30, 2017]

    28.  http://www.dailygalaxy.com/my_weblog/2017/02/nasa-earths-last-full-magnetic-pole-reversal-occured-700000-years-ago-are-we-due-the-earths-continuously-changing-ma.html  [February 1, 2017]

    29. https://www.scientificamerican.com/article/earth-s-magnetic-field-flip-could-happen-sooner-than-expected/  [July 9, 2014]

    30.  https://www.livescience.com/48333-magnetic-field-flip-within-100-years.html [October 17, 2014]

    31. https://news.nationalgeographic.com/2018/01/earth-magnetic-field-flip-north-south-poles-science/   [January 31, 2018]

    32.https://en.wikipedia.org/wiki/Geomagnetic_reversal  [January 19, 2019]

    33.   https://www.space.com/43173-earth-magnetic-field-flips-when.html [January 30, 2019]

    34.  ivescience.com/64625-earth-magnetic-field-nearly-disappeared.html  [January 30, 2019]

    35. https://newspunch.com/new-shocking-evidence-points-to-pole-shift/  [February 27, 2016]

    36.  https://phys.org/news/2011-11-magnetic-pole-reversal-geologic.html#nRlv

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]   February 2,  2019  [R-2]

    https://jayabarathan.wordpress.com/

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 6

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 6 – வாழ்க்கைத் துணைநலம்

    குறள் 51:

    மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
    வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

    குடும்பத்துக்கு ஏத்த நல்ல குணவதியா புருசன் சம்பாத்தியத்துக்கு ஏத்தமாறி குடித்தனம் நடத்துதவ தான் நல்ல பொஞ்சாதி. (மனைவி).

    குறள் 52:

    மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
    எனைமாட்சித் தாயினும் இல்

    குடும்பத்துல நல்ல குணவதியா பொஞ்சாதி இல்லன்னா வாழ்க்கை எவ்வளவு சிறப்பா இருந்துச்சுன்னாலும் பிரயோசனம் இல்ல.

    குறள் 53:

    இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
    இல்லவள் மாணாக் கடை

    நல்ல குணவதியான பொஞ்சாதி அமைஞ்சா வாழ்க்கையில எல்லாம் இருக்கும். அப்டி அமையலன்னா எதுவுமே இருக்காது.

    குறள் 54:

    பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
    திண்மைஉண் டாகப் பெறின்

    பொஞ்சாதி கிட்ட கற்பு ங்குத மன திடம் இருந்துச்சுன்னா அவள விட ஒசந்தது வேற என்ன இருக்க முடியும்.

    குறள் 55:

    தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை

    மத்த எந்த கடவுளையும் கும்பிடாம புருசன மட்டுமே கடவுளா நெனக்க பொஞ்சாதி மழைய பெய் அப்டின்னு சொன்னா பெய்யும்.

    குறள் 56:

    தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
    சொற்காத்துச் சோர்விலாள் பெண்

    தன்னைய நல்லபடியா பாத்துக்கிட்டு புருசன நல்ல அக்கறையோட கவனிச்சி குடும்பத்தோட புகழையும் காப்பாத்ததுல திண்ணமா இருக்குதவ தான் பொம்பள. (பெண்)

    குறள் 57:

    சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
    நிறைகாக்கும் காப்பே தலை

    பொம்பள பிள்ளைங்கள இப்படித்தான்இருக்கணும் னு காவல் காக்குததுல ஒரு பிரயோசனமுமில்ல. அவங்க தங்கள தாங்களே மனசார அடக்க ஒடுக்கமா காத்துக்கிடதது தான் ஒசத்தி.

    குறள் 58:

    பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
    புத்தேளிர் வாழும் உலகு

    பொம்பளப் பிள்ளைங்களுக்கு நல்ல குணத்தோட புருசன் அமைஞ்சா, குடும்ப வாழ்க்கைல கெடைக்குத சந்தோசம் மேலுலக வாழ்க்கையப் போல சிறப்பா இருக்கும்.

    குறள் 59:

    புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
    ஏறுபோல் பீடு நடை

    குடும்பத்தோட புகழக் காக்குத பொஞ்சாதி இல்லாத ஆம்பிளைக்கு தன்னைய இளக்காரம் செய்யுதவங்க முன்ன ஆம்பிள சிங்கம் போல நடக்க ஏலாது.

    குறள் 60:

    மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு

    குடும்ப வாழ்க்கையில மங்கலம் னு சொல்லுதது பொஞ்சாதியோட நல்ல குணத்த. நல்ல பிள்ளைகள பெத்து வளக்குதது அதுக்கு பூட்டுத நக நட்டுபோல.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • துணைவியின் இறுதிப் பயணம் – 11

    சி. ஜெயபாரதன், கனடா


    என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !
    [Miss me, But let me go]
    ++++++++++++++

    [36] என் கதை

    எழுதி, எழுதி
    எழுதிக் கொண்டே எழுதி,
    எழுதிய பின்னும்
    எழுதி,
    இன்னும் உருகி எழுதி
    என்றும் எழுதி
    இப்பிறவி பூராவும் எழுதி
    உருகி வந்தாலும்,
    என் எழுத்தாணி அழுதாலும்
    என் துயர் தீராது !
    என்னிதயக் காயம் ஆறாது !
    என் பிணைப்புப்
    பாசம், பாலம் மாறாது !
    என் காயம் இதுபோல்
    உங்கள் காயம் ஆகலாம் !
    என் அதிர்ச்சி
    உங்கள் அதிர்ச்சி ஆகலாம் !
    என் கதை
    உங்கள் கதை ஆகலாம் !

    அப்போது,
    உங்கள் கண்ணீர்
    என் கண்ணீர் ஆகிவிடும் !
    ++++++++++++++++++++

    [37] இரவில் ஓர் அலறல் !

    “அம்மா வுக்கு என்ன
    ஆனது ?”
    இப்படி ஓர் அலறல்
    நள்ளிரவில் கேட்டு மேல்
    மாடியில் தூங்கும்
    என் மூத்த மகள்
    துள்ளி எழுந்து விட்டாள்.
    என் பேத்தியும்
    விழித்துக் கொண்டாள் !
    என் வாயில் எழுந்த
    அக்குரல்
    கீழ் அறையில் தூங்கும்
    என் காதில்
    எனக்கு மட்டும்
    ஏன் கேட்க வில்லை !
    +++++++++

    பிரார்த்தனை தொடர்கிறது.
    சி. ஜெயபாரதன்

    Share
  • அரசியல் அம்மானை – 1

    -வெ.விஜய்

    மூன்று அரசியல்வாதிகள் பேசுகிறார்கள்
    ——————————————————————-

    நாட்டினை ஆள்கின்ற நாம்தானே எப்போதும்
    ஓட்டுக்குப் பணம்தந்(து) உயர்வானோம் அம்மானை!
    ஓட்டுக்குப் பணம்தந்(து) உயர்வானோம் யாமாகில்
    வீடில்லா மக்களெல்லாம் வெம்புவரே அம்மானை?
    வீதியிலே அவர்கிடந்து வேகட்டும் அம்மானை(1)

    சாலையெல்லாம் பழுதாகச் சாக்கடையே நீராக
    வேலையேதும் நடத்தாமல் வீற்றிருந்தோம் அம்மானை!
    வேலையேதும் நடத்தாமல் வீற்றிருந்தோம் யாமாகில்
    காலினைப் பிடித்தவர்கள் கத்துவரோ அம்மானை?
    கடைசிவரை அவரெல்லாம் கருவாடே அம்மானை!(2)

    பயணச் சீட்டுகளில் பாதிவிலை ஏற்றிவிட்(டு)
    அயர்ந்து தூங்கிடுவோம் அப்பொழுதே அம்மானை
    அயர்ந்து தூங்குவ(து) அப்பொழுதே யாமாகில்
    துயரம் பிடித்தவர்கள் தொல்லையராய் அம்மானை?
    துப்பாக்கிக் கொண்டவரைத் துளைத்தெடுப்போம் அம்மானை(3)

    கையூட்டு வாங்கியே காலத்தை ஓட்டினோம்!நாம்
    பொய்களைப் பேசாத பொழுதில்லை அம்மானை
    பொய்களைப் பேசாத பொழுதில்லை ஆமாகில்
    மெய்களை எவ்விடத்தில் விற்றுவிட்டோம் அம்மானை?
    விற்பதற்கு நம்மிடத்தில் மெய்யுண்டோ அம்மானை!(4)

    படிப்பில்லை என்றாலும் பதவியில் நாமிருந்து
    நடிப்பதையே கொண்டிருந்தோம் நாளெல்லாம் அம்மானை
    நடிப்பதையே கொண்டிருந்தோர் நாளெல்லாம் ஆமாகில்
    குடிமக்கள் நிலையெல்லாம் கோவணமோ அம்மானை!
    குற்றுயிராய் அவர்கிடந்தால் நமக்கென்ன அம்மானை(5)

    -தொடரும்….

    Share