-வெ.விஜய்

மூன்று அரசியல்வாதிகள் பேசுகிறார்கள்
——————————————————————-

நாட்டினை ஆள்கின்ற நாம்தானே எப்போதும்
ஓட்டுக்குப் பணம்தந்(து) உயர்வானோம் அம்மானை!
ஓட்டுக்குப் பணம்தந்(து) உயர்வானோம் யாமாகில்
வீடில்லா மக்களெல்லாம் வெம்புவரே அம்மானை?
வீதியிலே அவர்கிடந்து வேகட்டும் அம்மானை(1)

சாலையெல்லாம் பழுதாகச் சாக்கடையே நீராக
வேலையேதும் நடத்தாமல் வீற்றிருந்தோம் அம்மானை!
வேலையேதும் நடத்தாமல் வீற்றிருந்தோம் யாமாகில்
காலினைப் பிடித்தவர்கள் கத்துவரோ அம்மானை?
கடைசிவரை அவரெல்லாம் கருவாடே அம்மானை!(2)

பயணச் சீட்டுகளில் பாதிவிலை ஏற்றிவிட்(டு)
அயர்ந்து தூங்கிடுவோம் அப்பொழுதே அம்மானை
அயர்ந்து தூங்குவ(து) அப்பொழுதே யாமாகில்
துயரம் பிடித்தவர்கள் தொல்லையராய் அம்மானை?
துப்பாக்கிக் கொண்டவரைத் துளைத்தெடுப்போம் அம்மானை(3)

கையூட்டு வாங்கியே காலத்தை ஓட்டினோம்!நாம்
பொய்களைப் பேசாத பொழுதில்லை அம்மானை
பொய்களைப் பேசாத பொழுதில்லை ஆமாகில்
மெய்களை எவ்விடத்தில் விற்றுவிட்டோம் அம்மானை?
விற்பதற்கு நம்மிடத்தில் மெய்யுண்டோ அம்மானை!(4)

படிப்பில்லை என்றாலும் பதவியில் நாமிருந்து
நடிப்பதையே கொண்டிருந்தோம் நாளெல்லாம் அம்மானை
நடிப்பதையே கொண்டிருந்தோர் நாளெல்லாம் ஆமாகில்
குடிமக்கள் நிலையெல்லாம் கோவணமோ அம்மானை!
குற்றுயிராய் அவர்கிடந்தால் நமக்கென்ன அம்மானை(5)

-தொடரும்….

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க