துணைவியின் இறுதிப் பயணம் – 11
சி. ஜெயபாரதன், கனடா
என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !
[Miss me, But let me go]
++++++++++++++
[36] என் கதை
எழுதி, எழுதி
எழுதிக் கொண்டே எழுதி,
எழுதிய பின்னும்
எழுதி,
இன்னும் உருகி எழுதி
என்றும் எழுதி
இப்பிறவி பூராவும் எழுதி
உருகி வந்தாலும்,
என் எழுத்தாணி அழுதாலும்
என் துயர் தீராது !
என்னிதயக் காயம் ஆறாது !
என் பிணைப்புப்
பாசம், பாலம் மாறாது !
என் காயம் இதுபோல்
உங்கள் காயம் ஆகலாம் !
என் அதிர்ச்சி
உங்கள் அதிர்ச்சி ஆகலாம் !
என் கதை
உங்கள் கதை ஆகலாம் !
அப்போது,
உங்கள் கண்ணீர்
என் கண்ணீர் ஆகிவிடும் !
++++++++++++++++++++
[37] இரவில் ஓர் அலறல் !
“அம்மா வுக்கு என்ன
ஆனது ?”
இப்படி ஓர் அலறல்
நள்ளிரவில் கேட்டு மேல்
மாடியில் தூங்கும்
என் மூத்த மகள்
துள்ளி எழுந்து விட்டாள்.
என் பேத்தியும்
விழித்துக் கொண்டாள் !
என் வாயில் எழுந்த
அக்குரல்
கீழ் அறையில் தூங்கும்
என் காதில்
எனக்கு மட்டும்
ஏன் கேட்க வில்லை !
+++++++++
பிரார்த்தனை தொடர்கிறது.
சி. ஜெயபாரதன்