குறளின் கதிர்களாய்…(243)
–செண்பக ஜெகதீசன்
பகையென்னும் பண்பி லதனை யொருவ
னகையேயும் வேண்டற்பாற் றன்று.
-திருக்குறள் -871(பகைத்திறம் தெரிதல்)
புதுக் கவிதையில்…
சிரித்து மகிழ்ந்து
விளையாட்டாகக் கூட
விரும்பிடவேண்டாம் வாழ்வில்,
பகையாகிய
பண்பற்ற ஒன்றை…!
குறும்பாவில்…
பகையென்கிற பண்பற்ற ஒன்றை,
சிரித்து மகிழ்ந்திடும் விளையாட்டாய்க்கூட
விரும்பிட வேண்டாம்…!
மரபுக் கவிதையில்…
அகில வாழ்வில் ஆபத்தாம்
அடுத்தவ ருடனே பகையென்னும்
வகைக்கே உதவா ஒன்றாலே
வருவ தில்லை நற்பயனே,
அகத்தில் தோன்றி வாழ்வழிக்கும்
ஆற்றல் மிகுந்த பண்பிலாத
பகையினை மகிழும் விளையாட்டெனப்
பார்த்தும் விரும்பிட வேண்டாமே…!
லிமரைக்கூ..
பகையென்பது பண்பற்ற ஒன்று,
அழிக்குமதனை மகிழும் விளையாட்டாய்க்கூட
விரும்பாமல் தவிர்ப்பதே நன்று…!
கிராமிய பாணியில்…
வேண்டாம் வேண்டாம் பகவேண்டாம்
வெறுத்தே ஒதுக்கும் பகவேண்டாம்,
வாழ்க்கயில யாரோடும் பகவேண்டாம்..
பண்பேயில்லாத பகயதால
கேடுதான்வரும் வாழ்க்கயில,
அதுனால
சந்தோசமான வெளயாட்டாக்கூட
விரும்பிடாத பகயதயே..
எப்பவும்
வேண்டாம் வேண்டாம் பகவேண்டாம்
வெறுத்தே ஒதுக்கும் பகவேண்டாம்,
வாழ்க்கயில யாரோடும் பகவேண்டாம்…!