Blog

  • குறளின் கதிர்களாய்…(9)


    செண்பக ஜெகதீசன்waterimages

    புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை

    வாய்மையாற் காணப் படும்.

    -திருக்குறள்- 298 (வாய்மை)

     

    புதுக் கவிதையில்…

     

    தண்ணீரில் கழுவினாலே

    மாசகன்று,

    மேனியது மேலே

    தூய்மையாகும்..

     

    உள்ளத் தூய்மை

    உருவாகும், பேசும்

    உண்மையால் தானே…!

     

    குறும்பாவில் (லிமரைக்கூ)…

     

    தண்ணீரால் உடல்பெறும் தூய்மை,

    உடலினுள்ளே பேணிடு

    உள்ளத் தூய்மைக்கு வாய்மை…!

     

     மரபுக் கவிதையில்…

     

    வியர்வை சொட்ட உழைப்பதிலும்,

    விழுந்து தரையில் புரள்வதுடன்

    செயற்கைக் காரணம் பலவற்றால்

    சேர்ந்திடும் உடலின் அழுக்கெல்லாம்

    இயற்கைச் செல்வம் தண்ணீரால்

    இல்லை யென்றே தூய்மையாகும்,

    உயர்ந்ததாம் உள்ளத் தூய்மையதும்

    உண்மை யதனால் வந்திடுமே…!

     

    லிமரிக்…

     

    உடலைச் சுத்தமாக்கிடும் நீர்..

    உள்ளே துடைப்பது யார்,

    உண்மையே பேசி

    உலகினை நேசி,

    உள்ளமே தூய்மைதான் பார்…!

     

    கிராமியப் பாணியில்…

     

    ஆத்தங்கர கொளத்தங்கர

    அலயவேண்டாம்,

    அடுப்படியில் எடுத்துவச்ச

    அண்டாத்தண்ணி அதுவேபோதொம்..

     

    எடுத்துவச்சிக் கழுவுனாலே

    எந்த அழுக்கொம் போவுமில்லா,

    ஒடம்பு

    எல்லாமே சுத்தமாவும் நல்லாத்தானே..

     

    ஒடம்பு சுத்தம் ஆயிடவே

    தண்ணி போதொம்- ஒன்

    மனசு சுத்தம் ஆவிடத்தான்

    உண்ம வேணும்,

    பொய்பொரட்டு கலக்காத

    உண்ம வேணும்..

    ஒணந்துக்கோ-

    உண்ம வேணும்…!

    http://gogreenscene.wordpress.com/2011/03/23/world-water-day/ 


    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம். (1)

    சுபாஷிணி ட்ரெம்மல்

    1. அறிமுகம்

    photo (1)கற்றல் என்பது இளம் பிராயத்தோடு நின்றுவிடக் கூடிய ஒன்றல்ல. எந்த ஒரு சமூகம் கற்றலுக்கும் புதிய விஷயங்களின் தேடுதல்களுக்கும் தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளதோ அச்சமூகமே விரைந்த சமூக வளர்ச்சியை அடையக்கூடிய வலிமையைப் பெறும். ஒரு தனி மனித கற்றல் என்பது பள்ளிக் கூட, பல்கலைக்கழக கல்வி என்ற நிலையோடு நின்று விடாமல் தினம் தினம் புதிய விஷயங்களைக் கற்பதாக அமையும் போது அறிவும் அனுபவமும் விசாலமடைகின்றது. அதே சமயம் உலகம், அதன் தன்மை இவ்வுலகில் தனி மனிதராகிய நமது அங்கத்துவம் ஆகியவற்றிற்கும் மேலும் புதிய பொருள் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.

    புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கு எவ்வாறு செய்தி ஊடகங்களும், கணினி தொழில்நுட்பங்களும் உதவுகின்றனவோ அதே போல அருங்காட்சியகங்களும் அமைந்திருக்கின்றன. எனது சொந்த அனுபவத்தில், எனது கற்றல், அதன் விசாலம் என்பதற்கு ஆதாரமாக அமைகின்ற விஷயங்களில் அருங்காட்சியகங்களும் இடம் பெறுகின்றன.

    அருங்காட்சியகங்கள் என்றாலே பள்ளிச் சிறுவர்கள் சென்று வரும் இடம் எனவும், பள்ளி விடுமுறை காலங்களில் மாணவர் செல்லக்கூடியதோர் இடம் எனவும் பரவலாக நம் சமூகத்தில் சிந்தனை இருக்கின்றது. இது முற்றிலும் தவறான ஒன்றே. ஒரு குறிப்பிட்ட இனத்தின் வரலாறு, அதன் சான்றுகள், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வரலாறு, அதற்கானச் சான்றுகள், கருவிகள் பற்றிய குறிப்புகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், தொழில் நுட்ப வளர்ச்சி அதன் ஆதாரங்கள், மருத்துவம் – புதிய கண்டுபிடிப்புகள், மனித இனத்தோற்றம் பற்றிய செய்திகள், வணிகம், கடல் பயணங்கள், மனித நாகரிகத்தின் வளர்ச்சி, போர்கள், கலை படைப்புகள், சித்திரங்கள், சிற்பங்கள், அற்புதப் படைப்புகள், வாழ்வியல் ஆதாரங்கள், வானியல் ஆய்வு என, பல விஷயங்களைத் தக்க ஆதாரங்களோடு தேடிக் கண்டெடுத்து, சேகரித்து, அதனைப் பாதுகாத்து வரும் முக்கிய இடமே அருங்காட்சியகங்கள்.

    எனது எல்லா பயணங்களிலும் நான் செல்லும் நகர்களில் உள்ள, என் ஆர்வத்தோடு இணைந்த அருங்காட்சியகங்களுக்குச் செல்வதை நான் பல ஆண்டுகளாகக் கடமையாகக் கொண்டிருக்கிறேன். பட்டியலிட்டால் ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களைப் பார்த்திருக்கிறேன் எனக் குறிப்பிடலாம். இவை அனைத்துமே எனக்கு ஏதாவது ஒரு புதிய செய்தியை வழங்கிக் கொண்டே இருப்பதால் அருங்காட்சியகங்கள் மேல் நான் கொண்டிருக்கும் ஆர்வம் மென்மேலும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது.

    வரலாற்று விஷயங்களைச் சேகரித்து வைத்திருக்கும் அருங்காட்சியகங்கள் நம்மை காலத்தைக் கடந்து செல்ல வைக்கக் கூடியவை. இன்றைக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலையில் நம்மை வைத்துப் பார்த்து அக்காலச் சூழ்நிலையைப் பற்றிய அனுபவத்தைத் தரக்கூடியவை இவை. பல வேளைகளில் மூவாயிரம் ஆண்டுகால வளர்ச்சியில் கூட பல விஷயங்கள் இன்னமும் அதன் அடிப்படை மாறாமல் இருப்பதைப் பார்க்கும் போது மனித மனதின் வளர்ச்சியைப் பற்றிய பல விஷயங்கள் தெளிவாகின்றன. பல நாடுகளின் கலை, கலாச்சார பண்பாட்டு விஷயங்களை வெளிப்படுத்தும் அருங்காட்சியகங்களுக்குச் சென்று அங்குள்ள விஷயங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் போது மனித சமூகம் அது எந்த நாடாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும் எந்த மொழி பேசுவதாக இருந்தாலும் அடிப்படையில் பல விஷயங்களில் ஒற்றுமை கொண்டிருப்பதை கண்டு நான் மலைத்து நின்றதுண்டு. மனிதர்களுக்குள் வெவ்வேறு விஷயங்களுக்காகப் பிரிவினைகளும் வித்தியாசங்களும் இருந்தாலும் பல விஷயங்களில் இருக்கின்ற ஒற்றுமை மனிதர்கள், மனித இனம் என்பது அடிப்படையில் ஒன்றுதான் என்ற எளிமையான ஒரு சிந்தனைக்கு மீண்டும் நம்மை கொண்டு வந்து விடுகின்றது.

    ஒரு வட்டத்திற்குள்ளேயே வாழும் போது அந்த வட்டத்திற்குள் நாம் அமைத்துக்கொண்டுள்ள விஷயங்கள் மட்டுமே முக்கியத்துவம் பெறுவதும் அவை கூறுகின்ற முடிவுகளே முடிந்த முடிவுகளாகக் கொள்ளப்படுவதும் நிகழக் கூடியதே. அறிவில் விசாலமும் தெளிவும் பெற விரும்பும் மனம் ஒரு வட்டத்திற்குள் சிறைபட்டுக் கிடக்க எண்ணாது. மாறாக புதிய விஷயங்களைத்தேடித் திரிந்து அதனால் கிடைக்கின்ற புதுத்தெளிவுகள் தருகின்ற விளக்கங்கள் பரந்த சிந்தனைப் போக்கை மட்டும் தருவதோடு நின்றுவிடுவதில்லை. புதிய வாய்ப்புகள் தினம் தினம், நொடிக்கு நொடி ஜனித்து வரும் இந்த புதிய உலகத்தில் ஒரு தகுதி வாய்ந்த அங்கத்துவம் வகிக்கும் மனநிலையை ஒரு தனி மனிதருக்கு இது வழங்குகிறது என நான் நம்புகிறேன்.

    உலகின் பல நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களுக்குச் சென்றிருக்கும் அனுபவத்தால் இந்த அருங்காட்சியகங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குகின்ற வாய்ப்புகள் பற்றிய அனுபவங்கள் எனக்கு ஓரளவு அமைந்திருக்கிறது. பல அருங்காட்சியகங்கள் வெறும் பொருட்காட்சி மையமாக அருங்காட்சியகங்களை நிர்மாணிப்பதில்லை. உலகின் பல அருங்காட்சியகங்கள் ஆய்வுக்கூடங்களாகவே அமைந்திருக்கின்றன .

    இவ்வகை அருங்காட்சியகங்கள் பல மொழிகளிலான ஒலிப்பதிவுக் கருவிகளைப் பார்வையாளர்களுக்கு வழங்குகின்றன. ஒவ்வொரு காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ள பொருளின், விரிவான விளக்கங்களைப் பார்வையாளர்கள் அவ்வொலிப்பதிவுக் கருவியின் மூலம் கேட்டு விரிவான விளக்கம் பெற உதவுகிறது. எழுத்தில் விளக்கம் என்பதோடு இந்த ஒலிப்பதிவாக அமைந்திருக்கும் விளக்கங்கள் அக்காட்சிப்பொருள் பற்றிய ஆழமான, அடிப்படையான விஷயங்களை வழங்குவதாக அமைகிறது. பல அருங்காட்சியகங்கள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் விழியப் பதிவுகளாக சில குறிப்பிட்ட துறையிலான குறும்படங்களைத் திரையிடுகின்றன. இவ்விதமான விழியப் பதிவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களைப் பற்றிய விளக்கங்களை விரிவான பார்வையில் விளக்கும் வண்ணம் அமைந்து பார்வையாளர்களுக்குக் கூடுதல் தகவல்களை வழங்குவதாக அமைகின்றன.

    அருங்காட்சியகங்களுக்குச் சென்று வரும் போது அங்கே அமைந்துள்ள நூலகத்திலும் பார்வையாளர்கள் அக்குறிப்பிட்ட அருங்காட்சியகம் பற்றியும் அதன் சேகரிப்புக்கள் பற்றியும் அங்கு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் பற்றியும் குறிப்பிடும் நூல்களையும் பெற்றுக் கொள்ள பல அருங்காட்சியகங்கள் ஏற்பாடுகள் செய்திருக்கின்றன. ஒரு முறை சென்று பார்த்து வந்தோம் என்பதல்லாமல் வீட்டிற்கு வந்த பின்னரும் நாம் கற்று வந்த அவ்விஷயங்களைப் பற்றி மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள இவ்வகை நூல்கள் நமக்கு உதவுவதில் பெறும் பங்களிக்கின்றன. அருங்காட்சியகங்களின் அளவையும் அவை சேகரித்து வைத்திருக்கும் காட்சிப் பொருட்கள், ஆய்வுத்தகவல்கள் ஆகியனவற்றிற்கு ஏற்ற வகையிலும் ஒரு அருங்காட்சியகத்திற்காக நேரத்தை ஒதுக்க வேண்டியது அவசியமாகிறது. ஆய்வுத்துறையில் உள்ளோர் பலர் சில குறிப்பிட்ட அருங்காட்சியகங்களில் பல மணி நேரங்களையும் பல நாட்களையும் செலவிடுகின்றனர் என்பதும் உண்மை.

    அருங்காட்சியகங்களுக்குத் தொடர்ந்து சென்று வரும் நான் எனது அனுபவங்களை, நான் பார்த்து பதிந்து வந்த விஷயங்களை வாசகர்களாகிய தங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது எல்லா அருங்காட்சியக அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள எத்தனை பதிவுகள் தேவைப்படுமோ என நினைக்கும் போது மனதில் ஐயம் வருகிறது. எத்தனை பதிவுகளாக இது அமையக் கூடும் என்றும் தெரியவில்லை. எனினும் முடிந்த வரையில் கிடைக்கின்ற நேரத்தில் அவ்வப்போது என் தகவல் அனுபவச் சேகரிப்புகளை இத்தொடரில் பகிர்ந்து வர முயற்சிக்கிறேன் இத்தொடர் இதுவரை அருங்காட்சியகங்கள் மேல் ஆர்வம் இல்லாதிருப்போருக்கு புதிய பார்வையையும் ஆர்வத்தையும் வழங்கினால் அதுவே இத்தொடரின் நோக்கத்தை அடைந்த திருப்தியை எனக்கு அளிக்கும்.

    சரி, அறிமுகம் போதும் என நினைக்கிறேன். இனி அருங்காட்சியகங்களுக்குச் செல்வோம். இத்தொடரின் அடுத்த பகுதியில் உங்களை ஒரு அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் செல்கிறேன்.

    தொடரும்..

    Share
  • புத்தகத்தின் கண்ணீர் தேடல்

     

    பொன். இராம்

     

    அங்காடித் தெருவில்

    அங்குலமாய் என்னை

    அணைக்க விழிக்கதவின்

    உப்புநீர் மட்டுமே

    உன்னிடம் இருந்ததை

     நான் அறிந்தேன்!

    பாதம் நோக

    காத தூரம்

    நீ நடக்க

    கல்விச்சோலையாய்

    என் உறவுகளின்

    நூலக அணிவகுப்பு

    நூலகத்தில் கறையான்கள்

    மட்டுமே குடியிருக்க

    உரமாய் நானிருக்க

    உன்னுள் அறிவுமல்லிகையாய்

    நான் மலர்ந்தேன்!

    நெருஞ்சி முள்ளாய்

    உறவுகள் உரச

    உப்புநீரால் என்

    தேகத்திற்கு

    அன்றுதான் குளியல்!

    கண்ணிமை ஈரம்

    துடைக்க நானே

    அறிவு மருந்தானேன்!

    பல்லாண்டு கடந்தாலும்

    தொலைந்து போன

     மதலைமுகம்

     தேடி அலைகின்றேன்!

    பட்டம் பல பெற்று

    வரதட்சணை வீதியில்

     தொலைந்தாயோ?

    மாதந்தோறும்

     வரதட்சணை அமுதசுரபியாய்

    மாறினாயோ?

    காலச்சக்கரத் தேரோட்டத்தில்

    தும்பைப்பூ தேகம்

    துகளாய் மாறி

    உதிர்ந்து விடும்

    வேதனையில் நான்!

    அறிவுத் தேடலை

    அகண்டமாக்கிய

    இனிய உறவே!

    என்னை அழிவில்லாமல்

    செய்திட வருவாயோ?


    —————————————————————————————————————————————————————-

     

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    நம் செந்தமிழை நினைத்து நினைத்து நாம் வியக்காத நாள் இருக்கமுடியாது. காரணம் அத்தனை புதியதாக ஒவ்வொரு நாளும் தோன்றும் அதிசயம் இம்மொழியுள் உள்ளது. அதே சமயத்தில் ‘ஆதிசிவன் பெற்றான்’ என்று பாரதியால் புகழப்பட்ட இறைமொழி அல்லவா நம் மொழி.. அப்படிப்பட்ட இறைமொழி பழையதும் புதியதும் தன்னுள் அடக்கிக் கொண்டு இருப்பதில் என்ன விசேஷம் இருக்கமுடியும்.. என்ற வேதாந்தக் கருத்தில் மனம் போய்விட்டு சமாதானமும் செய்து கொள்வதையும் தடுக்கமுடியவில்லை.

    photoதமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யர் நமக்குத் தேடி எடுத்துப் பரிசளித்த சங்கப்பாடல்களின் மூலம் எத்தனையோ நவீன கருத்துகளையும் அறிவியல்பூர்வமாகவும் எடுத்துரைத்துவருகிறார்கள் நம்மவர்கள். இப்படித்தான் இந்த வாரத்தில் சங்க இலக்கியத்தில் அறிவியல் கோட்பாடு என்று ஒரு கட்டுரையை ஆரம்பித்துள்ளார் சிங்கையைச் சேர்ந்த திரு கிருஷ்ணன். இதோ அவர்தம் கட்டுரையின் ஒரு சில பகுதிகள்:

    ”இன்றைய மேனாட்டு அறிவியல் சிந்தைனையின் சுவடுகூடப் படாத சங்க காலத் தமிழர் சமுதாயத்தில் இருந்த அறிவியல் அறிவும் உணர்வும், அதிலும் குறிப்பாக வானவில் பற்றிக்கொண்டிருக்கும் கருத்தும் சிந்தனையும் சில நம்மை வியக்க வைக்கிறது.”! இன்றைய நிலையில் அறிவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல்,மருத்துவ இயல் என்று பல்துறைகளாகப் பல்கி பெருகியுள்ளன. இவ்வறிவியல் சிந்தனைகளை நோக்கும் முன்பு அறிவியல் பார்வை தமிழ் சமுதாய இலக்கியத்தில்பெற்ற நிலையினை உணர்தல் இன்றியமையாததாகும்.

    அண்மைக்கால அறிவியல் வரலாற்றில் அற்புதமான வளர்ச்சி பெற்று இருப்பது அணுவியலாகும். முதலில் அணுவைப் பிளக்க இயலாது என்றகொள்கை தோன்றியது. பின்னர் ஒளவையார் அணுவைப் பிளக்க இயலும் என்ற புதிய கருத்தை வெளியிட்டார்.அணுவைப் பிளப்பதின் மூலம் அதிக ஆற்றலை உருவாக்க முடியும் என்பதை அறிந்தார்கள். அணுவைச் சிதைத்து மின் உற்பத்தி செய்யவும், காற்றாலைகள் மூலம் அணுக்களைச் சிதைத்து மின் உற்பத்தி செய்யவும், ஹைட்ரஜன் அணுக்களை அதிவேகத்தில் சேர்ப்பதின் மூலம் ஆற்றல் பெறமுடியும் என்பதையும் ஹைட்ரஜன் அணுகுண்டுகளையும் தயாரிக்க முடியும் என்றும் அறிய நேரிட்டது. இக்கொள்கையுடைய தமிழ்ச் சான்றோர்கள் சிலர் இருந்தமை பண்டைய நமது சமுதாயத்தில் நாம் காணலாம்.

    ” அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் ” என்று அணுவாகிய துகளைப் பிளக்க இயலும் என்ற சிந்தனையை நம்முன் வைத்துள்ளார்.கம்பரும் இக்கருத்தினை இரணி வதைப் படலத்தின் மூலம் உணர்த்துகிறார் இரணியன்,

    ” இறைவன் எங்கு உள்ளான் ” என்று பிரகலாதனிடம் வினவினான். அப்போது பிரகலாதன் ஓர் எளிய அணுவை நூறு பங்காகச் செய்தால் அந்தச் சிறு பகுப்பில் அமைத்து உள்ளான் என விடை கூறுகிறான்.” சாணினு முளனோர் தன்மை அணுவினைச் சத கூறிட்ட கோணினு முளன்….. ” [கம்பராமாயணம்.253] — என்றபாடலில் அணுவைப் பற்றி கம்பரின் கருத்து மிளிர்கிறது.

    தமிழ் இலக்கியத்தில் ” ஒப்புநோக்குக் கொள்கை” உடையவராய், தமிழர்களும் இச் சிந்தனை உடைய சமுதாயமாக விளங்கினர் என்பதற்குத் தொல்காப்பியரைச் சான்றாகக் காட்டலாம். முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று மூன்று பிரிவுகளுள், முதற்பொருள் என்பதனை ” முதல் எனப் படுவது நிலம்பொழுது இரண்டின் இயல்பென மொழி இயல்புணர்ந்தோரே ” என்ற நிலமும் காலமும் என இரு வகையாகப் பிரித்துள்ளன

    நீர்ப்பொருளுக்குச் சுருங்கும் தன்மை இல்லை. நீர்ப்ப இருளின் இச் சுருங்கா இயல்பை அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்துக் கூறியவர் ‘ பாஸ்கல் ‘ என்னும் அறிஞர்.இப் பாஸ்கல் விதிக்குச் சான்றாக, ” ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது ” என்று ஒளவையின் பாடல் கூறுகிறது. ஆழத்தைப் பொறுத்து அழுத்தம் மிகுகின்றது என்ற மற்றொரு அறிவியல் உண்மையும் எடுத்துரைக்கின்றார்.

    சூரிய ஒளியினால்தான் தாவரங்கள் ஆற்றலைப் பெறுகின்றன. தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்குச் சூரிய ஒளி பெரிதும் உதவுகிறது. இக்கருத்தை உணர்ந்தவர் இளங்கோ அடிகள். ஆதலின், ஞாயிறு போற்றும் ஞாயிறு போற்றும் ,– – ஞாயிறு போற்றும் ஞாயிறு போற்றும்..,- காவிரி நாடான் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலந்தரின்…” — என்று ஞாயிறைப் போற்றினார்

    உயிரியல் துறை பற்றிய சிந்தைனையும் தமிழ் இலக்கியத்தில் சிறப்புற அமைந்துள்ளதைத் தொல்காப்பியம் மூலம் உணரலாம். ஒரு செல்லானது, செல் பிரிதலின் மூலம் பல்கிப் பெருகி பல உயிர்கள் உருவாகின்றன. பல செல் உயிர்களில் ஒரு செல்லே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு வேலையும் ஒரு குறிப்பிட்ட செல் தொகுப்புகளால் செய்யப் பெறுகின்றது என்பது உயிரியல் கொள்கை. இக் கொள்கையை ஓரளவு விளக்குவதாய்,

    ”ஒன்று அறிவதுவே உற்ற அறிவதுவே
    இரண்டு அறிவதுவே அதனோடு நாவே
    மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
    நான்கு அறிதுவே அவற்றொடு கண்ணே
    ஐந்து அறிதுவே அவற்றொடு செவியே
    ஆறு அறிதுவே அவற்றொடு மனனே
    நேரிதில் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே …’ { ..தொல் பொருள் மரபியியல்:29.]

    உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாட்டை விளக்குவதாய்த் திருமாலின் 10 அவதாரங்கள் அமைந்துள்ளன. நீரில் வாழும் உயிராக மச்சாவதாரம், நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மையுடைய உயிராக கூர்மவதாரம், நிலத்திலே மட்டுமே வாழுகின்ற தன்மையுடைய விலங்காக வராக அவதாரம், பிறகு விலங்கும் மனிதனுமாக நரசிம்ம அவதாரம், அதன் பின்னரே வளர்ச்சி அடைந்த முழு மனிதனாக கிருஷ்ணன், இராமன் அவதாரங்கள்.

    நல்லதொரு கட்டுரையை அளித்து தீந்தமிழுக்கு பெருமைத் தேடித் தரும் திரு சிங்கை கிருஷ்ணன் அவர்கள் இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர்தம் பணி செம்மையாகத் தொடர வாழ்த்துகள்..

    கடைசி பாரா: இன்னம்பூராரின் கனம் கோர்ட்டார் அவர்களே – வல்லமை கட்டுரையிலிருந்து..

    எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். ‘சல சல’ வென்று கோர்ட்டாடை, மடிசாரு மாமியின் பட்டுப்புடவையைப் போல, சர சரக்க, ஐயா வருகிறார்கள்; அமர்கிறார்கள். எல்லாரும் ‘சர் புர்’ அமைதியுடன் (கோர்ட்டு நாற்காலிகள் கலோனிய காலத்தவை; முதுகு வலிக்கும்.) அமர்கிறார்கள். சற்றே மெளனம். கோர்ட்டார் தலையசைக்க, அன்றைய நீதி தேவதை அரூபமாகக் காட்சியளிக்கிறாள்.

    Share
  • ‘ஆசையே அலைப்போல’

    விசாலம்

     

    ‘ஆசையே அலைபோல நாமெல்லாம் அதன் மேல ஓடம் போல வாழ்ந்திடுவோமே வாழ்நாளிலே’ ஆஹா என்ன அருமையான வரிகள் இது போல் வாழ ஆசைதான். ஆனால் இது சுலபமாகவா இருக்கிறது. சம்சார சாகரத்தில்  ஆசை என்ற அலைகள் அதன் மேல் வாழ்க்கை என்ற ஓடம் அதை நாம் ஓட்டவேண்டும். கடல் அலைகள் மெதுவாக மனதுக்கு இதமாகவா வருகின்றன! இல்லையே! அவை தன் இஷ்டப்படி வந்து  கரையில் வந்து மோதிவிட்டு செல்கின்றன அதில் வாழ்க்கை ஓடம் ஓட்டவேண்டுமென்றால்? நானும் பல ஆசைகளை மனதில் சுமந்தபடி என் வாழ்க்கை ஒடத்தை ஓட்டியபடி ஐம்பதாவது வருடத்தில் நுழைந்து விட்டேன் என்னையும்  பல ஆசை அலைகள் வந்து மோதின, சிறு வயதில் என் பெற்றோர்கள் அதை ஓட்ட பல ஆசைகள் எனக்கு நிறைவேறின. ஆனால் என் திருமணம் பின் என் பல ஆசைகளை எனக்கு தியாகம் செய்ய வேண்டி வந்தது.

    எனக்கு சிறு வயதிலிருந்தே மழை  பெய்யும் போது நனைய பிடிக்கும் வீட்டிலும் ஷவரில் தலையைக்காட்டி பூத்தூவல் போல் நீர் விழுவதை மிகவும் ரசிப்பேன்.என் வீட்டில் பெரியம்மா அத்தை போன்றவர்களின் ஷஷ்டியப்தபூர்த்தியின் போது  அவர்கள் தலையில் குடத்தில் பூஜை செய்த நீரை சல்லடையைப்பிடித்தபடி கணவர்மார்கள் விடுவார்கள். சில்லென்று அவர்கள் தலையில் அதுவிழ அவர்கள் உடலைச்சிலிர்த்துக்கொண்டு மிகப்பெருமையுடன், ஒரு புனித சடங்காக அதைப்பெற்றுக்கொள்வார்கள். எனக்கு அதைப்பார்க்க மிக ஆசை. அந்தக்காட்சியைப்பார்த்த பின்னர் எனக்கும் இது போல் என் கணவர் என் தலையில் தண்ணீர் விடும் நாளை நினைத்து மகிழ்வேன். இந்தச்சிறுவயது ஆசை என்னைத் தொடர்ந்தது. திருமணமும் நடந்தது. எனக்கு எல்லோருடைய பிறந்த நாட்கள். திருமண நாட்களைக்கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சி ஏற்படும் என்னுடையதையும் சேர்த்துத்தான். என் சகோதர, சகோதரிகள் நெருங்கிய உறவினர்கள். பாசம் கொட்டும் நணபர்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துகளைத்தெரிவிப்பதில் என் மனதுக்கு அப்படி ஒரு ஆனந்தம் ஏற்படும். ஆனால் என் கணவரோ அதற்கு நேர் எதிர்விரோதம். என்ன! பிறந்த நாள் வரும் போகும் இதை எதற்கு கொண்டாட வேண்டும்?  என்பார். திருமண நாளைக்கொண்டாட நினைத்தால், நான் தான் மாட்டிக்கொண்டுவிட்டேனே என்றும், அந்த பயங்கர நாளை ஞாபகப்படுத்தாதே என்றும் ஜோக் அடித்தபடி நகர்ந்துவிடுவார். என்ன இவர்! ஒரு பெண்ணின் உணர்ச்சிகளைப்புரிந்துக்கொள்ளாமால்,என்று நினைத்தபடி என் ஆசைகளுக்கு ஒரு கடிவாளம் போட்டுக்கொள்வேன். என் மேல் பாசம் அதிகம் இருந்தும் அவர் அதை ஒரு பொழுதும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார். கோபம் அடிக்கடி வந்து விடும் .ஆனால் கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமும் இருக்கும் என்பது போல்  பல நல்ல குணங்களும் இருக்கும். நான் என் பிறந்த நாளிலோ அல்லது திருமண நாளிலோ அவரிடமிருந்து அன்பான வாழ்த்துகளை எதிர்ப்பார்ப்பேன். ஆனால் எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும் .அதற்காக நானும் விடுவதில்லை. காலையில் ஒரு கோயிலுக்குச்சென்று ஈசனிடம் பிரார்த்தித்து ஈசனின் வாழ்த்துகளை வேண்டுவேன். இது வரை அவர் எனக்கு ஏதேனும் வகையில் என்னை வாழ்த்தி அவரது தரிசனம் தந்துவிடுவார். சில சமயம் அந்தச்சிலையிலிருந்து பூக்கள் விழும் .சில நேரம் பூஜை செய்யும் சாஸ்திரிகள் நான் கேட்காமலே மல்லிகைச்சரம் ஒன்றை அளிப்பார். சில நேரங்களில் பாண்டிச்சேரி அன்னையிடமிருந்து பிளெஸ்ஸிங் பேக்கட் வரும். எப்படியோ இதில்  என் மனம் நிறைந்து மகிழ்ச்சி அடையும்.

    முதன் முதலாக நான் தாய்மை அடைந்த போது எனக்கு மிகவும் சந்தோஷம் ஏற்பட்டது எதனால் என்று சொல்லட்டுமா?  ஆம் எனக்கும் சீமந்தம் வரும்.அந்த நிகழ்ச்சியில் என் கணவர்  என் தலையில் பூஜை செய்து வைத்திருக்கும் குடம்  நீரை என் தலையில்  விடும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமே என்றுதான். நீ சரியான குழந்தைதான்” என்று என் அம்மா சிரித்ததும் ஞாபகம் வருகிறது .என் கணவர் முதலில் மறுத்து விட்டார். பின்னர்  பிறக்கப்போகும் குழந்தையின் நலனைக்குறித்து பல பெரியவர்கள் எடுத்துரைக்க ஒப்புத்துக்கொண்டார்  அன்று நடந்த இந்த நிகழ்வு என் மனதில்  இன்றும் பசுமையாக இருக்கிறது. ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு இன்று வரை அது போல் வேறு ஒன்றும் நடக்கவில்லை பொறுமையாக சஷ்டியப்த பூர்த்திக்கு காத்திருந்தேன். அறுபது வயதில் சாந்தி செய்துக்கொள்ள வேண்டும் என்று பல உறவினர்கள் எடுத்துரைத்தும் மறுத்துவிட்டார். அந்த சான்ஸும் போச்சு. திருமணம் முன் பல நாடகங்களில் நடித்தும்  வயலின் .வாய்ப்பாட்டு என்றும் பல நிகழ்ச்சிகள் கொடுத்து வந்த நான் தில்லிக்கு புதுமணப்பெண்ணாக நுழைந்தேன். மிகவும் வித்தியாசமான வாழ்க்கை   என் கலைகளெல்லாம் மூட்டைக்கட்டி வைக்கும் நிலை.என் ஆசைகளுக்கும் ஒரு நங்கூரம். என்ன செய்வது வாழ்க்கை என்ற ஓடம் அமைதியாகப்போக வேண்டுமென்றால் புகுந்தவள் பல தியாகங்கள் செய்ய வேண்டும். 1950 வரை பிறந்தவர்கள் நிலை இப்படித்தான் அநேகமாக இருந்திருக்கும். கணவன் முன்னே செல்ல நாலடி பின்னே நடக்கும் மனைவி என்ற நிலை. இதற்கு ஓரிண்டு விதிவிலக்கு இருக்கலாம் .விட்டுக்கொடுக்கும் தன்மை. பொறுமை, மன்னிப்பு என்ற குணங்கள் இருந்தால் தான் கடைசிவரை  சம்சாரம் என்ற வண்டியை  ஓட்ட முடியும். நடுநடுவே வண்டிச்சக்கரம் மக்கர் செய்து ஓட மறுத்தாலும் அதை எப்படியாவது ரிப்பேர் செய்து வண்டியைத் தொடர்ந்து ஓட்ட வேண்டும் என்ற நிலை அந்தக்காலத்திலிருந்து என் ஜெனரேஷன் வரை தொடருகிறது    ஆனால் இப்போது இருக்கும்  சூழ்நிலையை [generationgap] பார்த்தால் மனதில் ஜீரணிக்கமுடியவில்லை.

    போன வருடம் என் ரேய்க்கி ஹீலிங்கில் ஒரு தம்பதி வந்தனர். அவர்கள் திருமணம்ஆகி ஒரு வருடம் தான் ஆகிறது ஆனால் இருவரும் பிரிய வேண்டும் என்ற எண்ணம் வலுத்து என்னிடம் வந்தனர். இதன் காரணத்தைத் தனித்தனியே நான் அவர்களைக்கேட்டேன். அவர்கள் சொன்ன  காரணத்தைக்கேட்டால் எல்லோருக்குமே சிரிப்புத்தான் வரும் . அவர்கள் காதலிக்கும் போது காதலன் முட்டை ஆம்லேட் தின்னமாட்டேன் என்று அவளிடம் சத்தியம் செய்தானாம். ஆனால் ஒரு ஆறுமாதம் கழித்து சத்தியத்தை மீறி வீட்டில் ஆம்லெட் செய்தானாம். இது தான் காரணம் இந்தச்சின்ன சண்டை வலுத்து டைவர்ஸ் வரை போய் நின்றது. இந்தக்கால நிலை இப்படி இருக்கிறது. இந்தச்சின்ன விஷயத்திற்கே பொய் சொன்ன கணவரை நான் எப்படி நம்புவது?” என்று வாதாடினாள் அந்தப்பெண் என் பாட்டி காலத்தில் தன் கணவன் எதிரே அமர்ந்து கூட பேசாமல் கணவரது பெயரைக்கூட சொல்லாமல்  கணவனே கண்கண்ட தெய்வம் என்பதை மனதிலே கொண்டு அவர் சேவைக்கே முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கை நடத்தினர். அங்கு ஆண் பெண் உறவு மிகப்புனிதமாகக்கருதப்பட்டது.   அதற்கு அடுத்த கட்டத்தில் கணவரின் கருத்துக்களைகேட்டு நடுநடுவே தன் கருத்துக்களையும் சொல்லும் தைரியம் வந்திருந்தாலும் கடைசியில் கணவரின் கருத்தே செல்லுபடியானது. வீட்டுக்குத்தலைவர் ஆன அவரைக்கண்டு அவர் குழந்தைகளும் நடுங்கும் .மூன்றாவது கட்டத்தில் பெண்ணும் நன்கு படித்து ஆணுக்கு சமமாக வெளியில் வேலை செய்ய ஆரம்பித்தாலும், தன் கணவர் மீது மதிப்பும் ,மரியாதையும் கொண்டு வீட்டு வேலைக்கும் முதலிடம் கொடுத்து வந்தாலும் நடுநடுவே தனது கருத்துக்களைச்சொல்லி அவருக்கு புரிய வைத்து அவர் பெயரையும் தயக்கமில்லாமல் சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் வந்தது. நாலாவது கட்டத்தில் இருவரும் சரிக்க்கு சமம் என்று வீட்டு வேலைகளிலும் பங்கு  போட்டுக்கொண்டு செய்ய அங்கு  ஒரு விதமான தன்முனை பிரச்சனை தலைத்தூக்கி எடுத்தது  ஐந்தாவது கட்டம் தற்போது பார்க்கும் கட்டம் கணவர் கணவனாகி   பின் அவனது பெயர் வந்து “ஏண்டா லேட், எங்கேடா போயிருந்தே” என்று கேட்கும் அளவுக்கு முன்னேறிவிட்டது. இந்தக்கட்டத்தில் விட்டுக்கொடுக்கும் தன்மை மிகக்குறைந்து ஈகோ அதிகமாகி இரண்டு வருடங்கள் ஆவதற்குள் டைவர்ஸில் வந்து முடிகிறது .இன்னும் சொல்லப்போனால்  திருமண பந்தமே இல்லாமல் ஒரு துணை தேவை என்ற நிலை வர தலைப்பட்டிருக்கிறது. இது போல் பல விளம்பரங்கள் பார்த்தேன்.

    சரி என் கதைக்கு வருகிறேன் .வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி என் ஐம்பதாவது வருட திருமண நாள் வருகிறது {golden jubiilee}. இதற்காவது என் கணவர் கொண்டாட ஒப்புத்துக்கொள்ள வேண்டுமே, செய்வாரா தெரியவில்லை ஆனால் குழுவில் இருக்கும் சகோதர சகோதரிகள். மகன், மகள்கள் எல்லோரும் என்னை வாழ்த்தி குஷிப்படுத்தி விடுவீர்கள் என்ற நம்பிக்கை. தேய்ப்பிறை சந்திரன், வளர்ப்பிறை சந்திரன் போல் உடல் நலமும்  ஒரு நிலையில் இல்லை. ஆகையால் நீங்கள் வாழ்த்தி அனுப்பும் நற்றலைகள் எனக்கு நல்ல பாசிடிவ் எனர்ஜியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

    Share
  • பயணத்தில் ஒரு பயணம்

    பிச்சினிக்காடு இளங்கோbag-images

    எல்லோரும் இருக்கிறார்கள்
    இங்கே
    இங்கேயே அவர்கள்
    எங்கேயோ இருக்கிறார்கள்

    எதிரில் இருக்கிறார்கள்
    எனினும்
    எதிரிலும் இல்லை
    எதிரியாகவும் இல்லை

    இது
    இன்றைக்கு
    எல்லைகள் கடந்த நிலை

    எல்லா நாட்டிலும்
    இதுதான் நிலை

    கைப்பேசி
    கையடக்கக்கணினி
    பண்பலை வானொலி
    காரணங்கள்

    தோற்றமாயையோடுதான்
    தொடர்கிறது வாழ்க்கை

    சுருக்கமாய்ச்சொன்னால்
    இசைபடவாழ்கிறார்கள்

    பயணத்தில் இருக்கிறார்கள்
    எனினும்
    அவர்கள்
    இன்னொரு பயணத்தில் இருகிறார்கள்

    பேருந்தில்
    ஏறும்போதும்
    இறங்கும்போதும்
    பயண அட்டையைத்
    தேடுவதைவைத்துத்தான்
    தெளிவானது முடிவு

    ( சிங்கப்பூர் பேருந்தில் ஏறும்போதும் இறங்கும்போது  பயணஅட்டையை கையில்வைத்துக்கொள்ளாமல் அதுவரை எதையோ கேட்டுவிட்டு அவசர அவசரமாக தேடுவதைப்பார்த்து எழுதியது. 17.07.2013)

    படத்துக்கு நன்றி

    http://www.photoanswers.co.uk/Gear/Search-Results/Photo-Accessories/Hama-Daytour-230/

    Share
  • வார ராசி பலன்!…26-08-13 – 31-08-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

     

    மேஷம்: இந்த வாரம் பணத் தட்டுப்பாடால், உறவுகளிடையே அவ்வப்போது பூசல்கள் உருவாகலாம். எனவே பெண்கள் தேவையில்லாமல் எவரிடமும் பகைமை பாராட்ட வேண்டாம். மாணவர்கள்  நினைத்த வாறு காரியங்களை சாதித்துக் கொள்ள, பொறுமையைக் கடை பிடியுங்கள். வியாபாரிகள் விரிவாக்கத்திற்காக திட்டமிடும் போது நிறை குறைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்பட்டால் முழு பலனை அடையலாம். பலரும் பயனடையும் திட்டங்களுக்காக பொது வாழ்வில் உள்ளவர்கள் சில தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும்.கலைஞர்கள் வீண் கவலை உங்கள் வேகத்தைக் குறைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    ரிஷபம்: வெளி நாடு செல்ல வேண்டும் என்று விரும்பியவர்களின் எண்ணம் பலிக்கும். மாணவர்கள் கவனச் சிதறலுக்கு ஆட்படாமல், படிப்பில் அக்கறை காட்ட, எதிர்காலம் நன்றாக இருக்கும். நழுவிச் சென்ற வாய்ப்புகளைக் கலைஞர்கள் தங்கள் திறமையால் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்வர். பொது வாழ்வில் இருப்பவர்கள் சமயோசி தமாகச் செயல்பட்டால், எதிரிகளின் கரம் மேலோங்காதிருக்கும். முதியவர்கள் எளிய உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால், உறுதியான உடலைப் பெறலாம். பணி சுமை கூடுவதால்,பெண்களுக்கு எரிச்சலும், அசதியும் அவ்வப்போது வந்து போகும் வாய்ப்பிருக்கிறது.

    மிதுனம்: பொது சேவை ஆற்றுபவர்கள் அலட்சியப் போக்கைத் தவிர்த்தால், வெற்றிப் படியில் எளிதாக ஏறுலாம். மாணவர்கள், கல்விக்கான செய் முறைப் பயிற்சிகளில் தகுந்த விதிகளைக் கடைபிடிப்பது அவசியம். இந்த வாரம் கடன் தொல்லையால் சில நிகழ்ச்சிகள் தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது. பெண்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட வேலையில் கண்ணும் கருத்தாக இருந்தால், நல்ல பெயரைப் பெற இயலும்.. கூட்டுத்தொழில் செய்பவர்கள் எதிலும் கவனமாக இருந்தால், வருகின்ற லாபம் குறையாமல் இருக்கும். கலைஞர்கள் சின்ன விஷயங்களுக்கு சுள்ளென்று கோபப்படுவதைத் தவிர்த்தல் அவசியம்.

    கடகம்: வெளிடங்களில் வேலைக்காகவும் படிப்பிற்காகவும் தங்கியிருப்பவர்கள் அதிகமாக ஆசைப்படுதலையும், வீண் செலவுகளையும் சுருக்கிக் கொண்டால், பற்றாக் குறையை ஓரளவு சமாளித்துவிட முடியும். யாரையும் குற்றம் சாட்டிப் பேசாமலிருந்தால், கலைஞர்களின் குடும்பத்திலும், தொழிலிலும் குழப்பம் இராது. பணியில் இருப்பவர்கள் கடனில் வண்டி வாங்குவதை சற்று ஆறப் போடவும். மாணவர்கள் திறமையோடு பொறுமையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நினைத்த காரியத்தை சாதிக்கலாம். வீடு, மனை ஆகியவற்றை வாங்கி விற்பவர்கள் அதிக லாபத் திற்கு ஆசைப்படாமலிருந்தால், தங்கள் பெயரை நிலை நிறுத்துக் கொள்ளலாம்.

    சிம்மம்: பணியில் இருப்பவர்கள் பிறருக்கு வழங்கும் பணம், ஆலோசனை இரண்டிலும் கவனமாய் இருப்பது அவசியம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களுக்கென்று ஒரு வரையறை வைத்துக் கொண்டு செயல்படுவது புத்திசாலித்தனமாகும். உறவுகளின் வருகையால் பெண்கள் இல்லத்தில் சில இடையூறுகளை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியிருக்கும். தொழிலாளர்கள் தங்களின் சலுகை களை முறையாகப் பயன்படுத்துவது நல்லது. முதியவர்கள் எலும்பு சம்பந்தமான உபாதைகளை உடனுக்குடன் கவனி த்து விடுவது நலம். இந்த வாரம் வியாபாரிகள் எதிர்பார்த்த வரவுகள் சற்றே தாமதமாகலாம். பிள்ளைகளின் நட்பு வட்டத்தின் மீது பெற்றோரின் கவனம் தேவை.

    கன்னி: பெண்கள் சொல்லும் வார்த்தை, செலவழிக்கும் பணம் இரண்டிலும் நிதானமாக இருங்கள். உறவுகள் கசக்காமலிருக்கும். வியாபாரிகள் புதியவரை நம்பி பொறுப்புக்களைத் தருவதைக் காட்டிலும் நேரடியாக நீங்களே கவனம் செலுத்தி வர, லாபம் தடையின்றி வரும். வேலை செய்யும் இடங்களில் தோன்றும் சிறு பிரச்னைகளை பொறுமையாகக் கையாண்டால், பணியில் இருப்பவர்கள் உயரதிகாரிகளின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது சுலபமாகும். சுய தொழில் புரிபவர்கள். தொழிலில் இருந்த பின்னடைவு, நெருக்கடி ஆகியவை நீங்கி, புதுத் தெம்புடன் செயல் படுவார்கள். கலைஞர்களுக்கு , எளிதில் முடியக் கூடிய வேலைகள் சில சமயம் வளர்ந்து கொண்டே போகும்.

    துலாம்: வாகனங்களை புதிதாக ஓட்டுபவர்கள், அதிக வேகத்தில் செல்வதை இயன்ற வரைத் தவிர்ப்பது நலம். விளையாட்டுப் போட்டிகளை மாணவர்கள் நேர் வழியில் எதிர்கொண்டால் வெற்றி உறுதி! வியாபாரிகள் பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்கள் சக ஊழியர்களினால் உருவாகும் பிரச் னைகளை சமாளிக்க நேரிடும் . வயதான நோயாளிகள் தேவையான பரிசோதனைகளை தள்ளிப் போட வேண்டாம். கலைஞர்கள் தவறான வழிக்கு மாறாமலிருந்தால், உங்கள் பெயர், புகழ் இரண்டும் குறையாமலிருக்கும். பங்குத்துறையில் உள்ளவர்கள் அளவான முதலீடு என்பதில் உறுதியாக இருப்பது நலம்.

    விருச்சிகம்: கலைஞர்கள் தன்னுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், புதிய கதைகளைத் திரிப்பவர்களின் வாயைக் கட்டி விடலாம். பெண்கள் உறவுகளின் போக்கறிந்து பக்குவமாக நடந்தால், இல்லத்தில் அமைதி நிலவும். சுய தொழில் புரிபவர்கள் தொழில் வகையில் எந்த ஒரு முயற்சியையும் தக்க ஆலோசனையின் பேரில் செயல்படுத்தினால், நினைத்தவாறு லாபம் பெறலாம். கவலைகள் முன்னேற்றத்தின் வேகத்தைக் குறைக்காதவாறு மாணவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். பணியில் இருப்பவர்கள் நிர்வாகம் மற்றும் உயர் அதிகாரிகளின் செயல் பாடுகள் பற்றிய அலசல்கள். விமர்சனங்கள் ஆகியவற்றில் ஈடுபடாமலிருப்பதே நலம்.

    தனுசு: நெருங்கிப் பழகிய பங்குதாராரர்கள் கருத்து வேறுபாடால் உங்க ளை விட்டுப் பிரியலாம். எனவே வியாபாரிகள் எதிலும் நிதானமாய் இருப்பது நல்லது. பணி புரிபவர்கள் எந்த விஷயத்திலும் விடாப்பிடியாய் இருப்பதைக் குறைத்துக் கொண்டால் வாக்குவாதங்களும், வேதனைகளும் இராமல் வேலைகளை செய்ய முடியும். மாணவர்கள் விரும்பிய உணவு வகைகளை உண்பதிலும் ஒரு வரையறை வைத்துக் கொண்டால், ஆரோக்கியம் குன்றாம லிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் செல்வாக்கை சிதறச் செய்யும் காரியங் களுக்கு ஆதரவு தருவதை அறவே தவிர்ப்பது புத்திசாலித்தனமாகும். முதலீடுகள் தொடர் பான விஷயங்களில் கலைஞர்கள் எச்சரிக்கையாய் செயல்படுவது அவசியம்.

    மகரம்: பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் செல்லும் நிலை நிலவினாலும், பெண்கள் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு,பிரச்னைகளைத் தீர்த்தால் உறவுகள் இதமாகத் திகழும். இந்த வாரம் பங்குதாரர்கள் இடையே வீண் சர்ச்சை, வேண்டாத சந்தேகம் ஆகியவை நுழைந்து மன அமைதி யைக் கெடுக்கலாம். மாணவர்கள் படிப்பில் உள்ள கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களுக்கு தலையசைக்காமலிருப்பது அவசியம் . முயன்றால் முடியாத து இல்லை என்பதை உணர்ந்து, கலைஞர்கள் முழு மூச்சாக செயல்பட்டால் எடுத்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள். பணி புரிபவர்கள் வாக்கில் நிதானம், செயல்களில் பணிஆகிய இரண்டையும் கடைபிடித்தால், சங்கடம் ஏதும் வரமல் சமாளித்து விடலாம்.

    கும்பம்: வியாபாரிகள் புதியவர்களை நம்பி பணம் கொடுக்காமலிருந்தால், நஷ்டங்களும், கஷ்டங்களும் உங்கள் அருகே வராது. பொது வாழ்வில் உள்ளவர்கள் மன உளைச்சல், சந்தே கம், குழப்பம் ஆகியவை வராதவாறு, பொறுமையுடனும், திறமையுடனும் செயல்பட்டு வந் தால், உங்கள் திறமைக்குரிய திறமைக்குரிய பாராட்டு கிடைக்கும். வேண்டாத தொல்லை களால் சுறுசுறுப்பாக நடந்த சில பணிகளில் தேக்க நிலை உருவாகும். பொறுப்பான பதவி வகிப்பவர் கள் பணியாளர்களிடம் நயமாக நடந்து கொள்ளுங்கள். உங்களிடம் விசுவாசமாய் இருப்பார்கள். பெண்கள் உடல்நலம் பாதிப்பு ஏற்படாதவாறு, பணியில் தகுந்த மாற்றங்களை மேற்கொள்ளுங்கள். எல்லா வேலைகளும் சீராக நடக்கும்.

    மீனம்: முதியோர்களுக்கு , உடலில் சில அசௌகரியங்கள் தோன்றி மறையலாம். தகுந்த மருந்துகளை உட்கொண்டால், ஆரோக்கியம் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். பெண்கள் கோப தாபங்களைக் குறைத்து பொறுமையாய் இருங்கள். குடும்பத்தில் பல பிரச்னைகள் தீர்ந்து விடும். இந்த வாரம் கவனத் தடுமாற்றம், மறதி ஆகியவை பொது வாழ்வில் உள்ளவர்களை அலைக்கழிக்கும். மாணவர்கள் இனிய அனுபவங்களை பெற்று மகிழ்வதோடு நெருக்கமானவர்கள் காட்டும் பாசமும் உங்களை உற்சாகப்படுத்தும். நம்பிக்கை வைத்தவர்களில் சிலர் ஏமாற்றங்களைத் தருவார்கள். எனவே பொறுப்பில் இருப்பவர்கள் முக்கியமான ஆவணங்கள் , சாவிகள் ஆகியவற்றை பத்திரமாக வைப்பது அவசியம்.

    Share
  • உத்தமன் அலெக்சாண்டர்!…(பகுதி-5)

    ராமஸ்வாமி ஸம்பத்

     

    epi5

     

     

     

     

     

     

    மாசிடோனிய மன்னன் புருஷோத்தமனை ஒரு கணம் நோக்கினான். ’விலங்குகளால் பிணைக்கப்பட்டபோதும் முகத்தின் பொலிவு சிறிதளவேனும் குறையவில்லையே! நீண்ட கைகள், பலம் பொருந்திய புஜங்கள், நிமிர்ந்த மேனி, வீறுகொண்ட பார்வை…அப்பப்பா… எல்லா விதத்திலும் இவன் உயர்ந்தவனே! ஏனைய நாட்டு அரசர்கள் எல்லாம் குனிந்த தலையோடு மண்டியிட்டு என் கருணைக்காக ஏங்கி இருப்பரே! போரஸ் உண்மையிலேயே ஒரு வித்யாசமான வீரன்தான்’ எனக் கருதினான் அலெக்சாண்டர்.

    தன் வியப்பை மிக்க சிரமத்துடன் மறைத்துக்கொண்டு அவன் கேட்டான்: ”போரஸ், நீ போர்க்கைதியானாலும் வணங்காமுடியாக இருக்கிறாய். உனக்கு ஏதேனும் கூற விருப்பமா?”

    “சிகந்தர் அவர்களே! ஒரு போர்க்கைதிக்கு என்ன சொல்ல இருக்கிறது?” என்றான் புருஷோத்தமன்.

    இச்சமயத்தில் யவன மன்னனின் படைத்தலைவன் குறுக்கிட்டான்: “மன்னர் மன்னரே!, உங்களிடம் தோற்றுப் போன இவனுக்கு என்ன ஆணவம் பாருங்கள். தங்களை பேர்சொல்லி விளிப்பதோடல்லாமல் மாவீரன் என்றும் சொல்லவும் மறுக்கிறான். இவனை சும்மா விடக்கூடாது.”

    ”ஆம்! இவனைத் தண்டிக்கத்தான் வேண்டும். முதலில் அந்த விலங்குச் சங்கிலிகளை நீக்கு.”

    epi66மெய்க்காப்பாளனுக்கு ஏதும் விளங்கவில்லை. இருந்தாலும் வேண்டா வெறுப்பாக புருஷோத்தமனின் தளைகளை கழட்டினான்.

    “போரஸ், இப்போது சொல். என்னை ஏன் மாவீரன் என அழைக்க மறுக்கிறாய்?”

    “சிகந்தரே! ரொக்ஸானாவின் விருத்தாந்தத்தைக் கேட்டபின் தந்திரத்தால்தான் என்னை வென்றிருக்கிறீர் என்பது தெளிவாகிவிட்டது. இந்நிலையில் நான் எப்படி உங்களை மாவீரன் என்று கூறமுடியும்?”

    ”போரஸ், நீ சொல்வது சரியல்ல. போர் என்பது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுப் புரியும் போட்டியைப் போன்றதல்ல. போர் தொடுக்கும் ஒரு அரசன் எவ்வாறாகிலும் வெல்லுவதற்குத்தான் முயல்வான். அதைத்தானே நானும் செய்தேன். உங்கள் பரத கண்ட்த்தில் யுத்த தந்திரஙகள் என்பவையே இல்லையோ?”

    “உண்டு யவன மன்னரே! அதர்மம் தலை தூக்கி தர்மம் நிலைகுலையும்போது அதர்மத்திற்கு எதிராக யுத்த தந்திரங்களைப் பயன்படுத்தலாம். மற்றபடி, ’வில்லுக்கு வில், வாளுக்கு வாள், தோளுக்குத் தோள்’ என்பதுதான் நியதி.”

    புருஷோத்தமனின் பதில் அலெக்சாண்டருக்குப் பிடித்தது.

    “போரஸ், உன்னை நான் எவ்வாறு நடத்த வேண்டும் என நினைக்கிறாய்?”

    “சிகந்தரே, என்னை ஒரு நாட்டின் மன்னனாக நடத்துங்கள்.”

    அலெக்சாண்டரின் வியப்பு பன்மடங்கு கூடியது. ”இதுவரை என்னிடம் தோல்வியைத் தழுவிய எந்த அரசனும் இவ்வாறு பேசியதில்லை. அவ்வாறு எவனாவது கூறியிருந்தால் அவனது தலை கொய்யப்பட்டிருக்கும். உனக்கும் அதே கதி நேர்ந்திருக்கும். ஏனெனில், தோற்றுப் போனவர்கள் எல்லாம் என் அடிமைகள். ஆனால் உனக்கு அப்படிப்பட்ட தண்டனையை விதிக்க என் மனம் ஒப்பவில்லை. ரொக்ஸானாவால் எனக்கு மிக நெருங்கியவன் ஆகிவிட்டாய். நீ பலவகையிலும் வித்தியாசமானவனாகத் திகழ்கிறாய். இப்படிப்பட்ட நிலையில், அதாவது அடிமைப்படுத்தப் பட்டாலும், எப்படி உன்னால் பயமில்லாமல் இருக்க முடிகிறது? உன் வலிமைதான் என்ன?” என்றான் அவன்.

    “சிகந்தரே! இருப்பது ஒரு உயிர்தானே! என்றைக்காவது ஒரு நாள் அது நீங்கத்தான் போகிறது. பயந்து பயந்து உயிர் வாழ்பவன் ஒரு கோழை. நான் அப்படிப் பட்டவன் அல்ல. போரில் வெற்றியோ தோல்வியோ சகஜம். எங்கள் அரசகுல ஆசாரப்படி, வென்றவர் தோற்றவர் நாட்டை ஆள்வர். தோற்றவர் போரில் மாண்டு போனால் வீர சுவர்க்கம் எய்துவர். ஆக, இதில் அச்சப்படுவதற்கு என்ன இருக்கிறது?”

    “என் ஆசான் அரிஸ்டாடில் சொன்னதுபோல் பரத கண்டத்தவர்கள் ஆன்மீக பலம் பொருந்தியவர்கள்தான். இதைப் பற்றி கொஞ்சம் விவரமாகச் சொல்வாயா?”

    “சிகந்தரே! பரத கண்ட அரசர்களுக்கு அரண்யத்தில் வாசம் செய்துகொண்டு தவமியற்றும் முனிவர்களும் யோகிகளும் ஆசான்களாகத் திகழ்பவர்கள். அரியணை ஏறும் முன் அரசகுமாரர்கள் அவர்களிடம் பாடம் கற்பார்கள். அந்தத் தபஸ்விகள் அடிப்படைக் கல்விiயை இளவரசர்களுக்குப் புகட்டுவதோடு ஆன்மீக போதனையும் ஊட்டுவார்கள். இதனால் அவர்களுக்கு மரண பயம் என்பதே போய்விடும். இதுதான் எங்கள் வலிமை.”

    “அப்படியானால், எனக்கும் அப்படிப்பட்ட ஆன்மீக பலம் பெறவேண்டும் எனும் ஆவல் இப்போது ஏற்பட்டுள்ளது. அதற்கு நான் என்ன செய்யவேண்டும் சொல் போரஸ்.”

    ”இங்கிருந்து ஒரு காத தூரத்தில் ஒரு அடர்ந்த காடு உள்ளது. அங்கு ஆசுதோஷர் எனும் ஒரு முனிவர் தன் ஆசிரமத்தில் தவம் இயற்றிய வண்ணம் இருப்பார். அவரிடம் நீங்கள் சரணடையுங்கள். கட்டாயம் ஆன்மீக பலம் பெறுவீர்கள்” என்றான் புருஷோத்தமன்.

    “ரொக்ஸானா, போரஸ் சொல்லியவாறு நான் இப்போதே அந்த அடவிக்குச் செல்லப் போகிறேன். உன் உடன்பிறவா சகோதரன் இப்போது நம் விருந்தினன். அவனை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள். நான் திரும்பி வருவதற்கு இரண்டு மூன்று நாட்களாகலாம்” என்றான் அலெக்சாண்டர்.

    அந்த அடாத மழையிலும் புரவியேறி தனியே புறப்பட்ட அவனை நோக்கிய புருஷோத்தமன் “மாசிடோனிய மன்னரே! தாங்கள் தனியே செல்ல வேண்டாம். அந்தக் காட்டுப்பாதை கரடுமுரடானது. அத்தோடு மழையும் அதிகமாக உள்ளதால் நீங்கள் வழி தப்பிப்போக வாய்ப்புகள் அதிகம். ஆகவே, நாளை வரை பொறுத்திருந்தால் என் மெய்க்காப்பாளன் உங்களுக்கு வழி காட்டுவான். நீங்கள் ஆசுதோஷர் ஆசிரமத்தில் முனிவரிடம் பேசி முடியும் வரை இவன் வெளியே காத்திருந்து பின்னர் தங்களை பத்திரமாக அழைத்து வருவான்” என்றான்.

    அந்த யோசனையை ஏற்று, மறுநாள் காலை புருஷோத்தமனின் மெய்க்காப்பாளனோடு அலெக்சாண்டர் புறப்பட்டான்..

    (தொடரும்)

    Share
  • வலையில் சிக்கிய வளநாடு

     

    சச்சிதானந்தம்

     

    அரசாளும் வல்லமை இல்லாத அரசு,

    விரசமாய் ஊழலை எங்கெங்கும் விதைத்து,

    உரசல்கள் நாடெங்கும் உண்டான போதும்,

    விரிசல்கள் உண்டாகி இரண்டாகும் போதும்,

    தரிசாகித் தாய்மண்ணின் தரம்தாழும் போதும்,

    பரிசாக மௌனத்தை மட்டுமே தருமோ?

     

    அண்டை நாடுகள் எல்லாம் துணிந்து,

    சண்டை நாடுகள் ஆகின்ற போதும்,

    இண்டைபோல் இதழ் இளித்துக் காட்டிப்பூச்,

    செண்டைக் கொடுத்துக் கைகுலுக் குவதேன்?

     

    ஊக்கம் தொலைக்கும் வேகத்துடன், பண

    வீக்கம் தொடர்ந்து ஏறும் போதும்,

    தேக்கம் அடைந்து பொருளா தாரம்,

    தூக்கம் அழிக்கும் போதும், ஆளும்

    நோக்கம் மறந்து நொண்டிச் சாக்குகள்,

    பூக்கும் அரசின் பொல்லா வாயில்!

    ஆக்கம் நிறைந்த அறிவிப் புகளை,

    வாக்காய்க் கொடுத்து வாக்குகள் பெற்று,

    ஏக்கம் மட்டும் கொடுக்கிறதே நம்மரசு!

    Share
  • அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை

    சாகர் பொன்னியின்செல்வன்  

    9. ரயில் போய் கப்பல் வந்தது.

     

    எங்கள் ரயில் எட்டு மணிக்கு வரவேண்டியது ஒரு வழியாக எட்டரை மணிக்கு வந்து சேர்ந்தது. கூட்டம் ஒரே கூட்டம் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் !  எங்கள் பெட்டியை கண்டுபிடித்து அதை நோக்கி எங்களையும் மற்றும் சில அமெரிக்க பயணிகளையும் மஹ்மூத் ஒரு வழியாக அழைத்துகொண்டு சென்றார்.

    “இந்த இரவு சொகுசு ரயில் வண்டிகள் அயல்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே, எகிப்தியர்கள் அதில் பயணிக்க முடியாது. தேவைக்கு ஏற்றவாறு வண்டிகளின் எண்ணிக்கை கூடுவதும் குறைவதும் உண்டு” என்றும் எடுத்துரைத்தார்.

    அனைவரும் ஒரு வழியாக உள்ளே ஏறி எங்கள் இடங்களை கண்டுபிடித்து அமர்ந்தோம். இரண்டு படுக்கை கொண்ட அறைகளாக இருக்கைகள் அமைக்க பட்டிருந்தன; இரண்டு அறைகளுக்கு இடையே ஒரு சிறிய கதவும் இருந்தது. எனவே அந்த கதவை திறந்ததும் நாங்கள் நால்வரும் ஒரு அறையில் இருப்பது போல் அமைந்தது வசதியாக இருந்தது. அடக்கமாக அந்த அறைக்குள்ளேயே ஒரு சிறிய கைகழுவும் இடம் மற்றும் அலமாரியும் இருந்தது. குளிர்ச்சாதன வசதியும் சொகுசு கம்பளங்களும் இருந்தன.

    பிள்ளைகள் இரண்டும்  உடனே படுக்கும் வசதிகளை(Berth) சோதிக்க ஆரம்பித்தனர் எவ்வளவு முயன்றும் அதை திறக்க முடியவில்லை இந்த சமயத்தில் நடத்துனர் வந்து ஒரு சாவி போட்டு அதை திறந்து சரி செய்தார். இருட்டில் வெளியே என்ன இருக்கின்றது என்று ஒன்றும் தெரியவில்லை.

    oneஅரைமணிநேரம் சென்றதும் உணவு கொண்டு வந்தார். உணவு பயணசீட்டு கட்டணத்தில் அடக்கம் ஆனால் தண்ணீர் வேண்டும் என்றால் அதற்கு  தனி காசு ! விமானத்தில் தருவது போல அழகாக தட்டில் வந்தது உணவு என்ன ஒரே பிரச்சனை சைவ உணவு இல்லை. நல்ல வேலையாக சாதம் தனியாக குழம்பு வகைகள் தனி தயிர் தனியாக இருந்ததால் என் மனைவி சாப்பிட முடிந்தது. குழந்தைகள் மேல் படுக்கையில் படுக்க ஒரு வழியாக தூங்கினோம்.

    ஐந்தரை மணிக்கு கதவு தட்டும் சப்தம் கேட்டு விழித்தேன்.  நடத்துனர் இன்னும் கால மணிநேரத்தில் உணவு அளிக்கப்படும், லக்சர் சுமார் ஆறரை ஏழு மணியளவில்போய் சேருவோம் என்றார்.

    வெளியே பார்த்தால் அழகிய நீர்பாசன கால்வாய் ரயில் தடத்தை ஒட்டி ஓடியது. அதனை அடுத்து தாமரை மலர்களும் அழகாக கண்ணை கவர்ந்தன! அதனை தாண்டியதும் தென்னை மற்றும் பருத்தி தோட்டங்கள் சிறிது தூரம் தென்பட்டன அதை தாண்டியதும் எங்கும் மணல், பாலைவனத்தில் சோலை உருவாக்குவது எப்படி என்பதை அழகாக காட்டியது எகிப்து. ஆனால் இவற்றையெல்லாம் மறக்க செய்தது காலையில் உதித்த சூரியன், பாலைவனத்தில்  உதிக்கும் சூரியன் தென்னைமரங்களின் நடுவே கண்ணாமூச்சி ஆட்டம் கட்டுவது என்ன அழகு.

    காலை உணவு முடித்து பக்கத்தில் தெரியும் காட்சிகளை பார்த்தவாறு ரசித்தோம். ஊர் என்பது நைல் நதி மற்றும் அதன் கிளை கால்வாய்யை ஒட்டியே அமைந்திருந்தது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று. பாலைவனத்தை எப்படி இந்த பழம்பெரும் நதி சோலையாகியிருக்கிறது என்று பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது.

    ஒருவழியாக எங்கள் சொகுசு துரித ரயில்வண்டி லக்சர் வந்து சேர்ந்தது. நாங்கள் இறங்கியதும் எங்களை எதிர்கொள்ள ஒரு இளைஞர் மெம்பிஸ் டூர்ஸ் என்ற அட்டையுடன் நின்றுகொண்டிருந்தார். ஐந்து குடும்பங்கள் மெம்பிஸ் டூர்ஸ் அமைத்த சுற்றுலா நிரலில் பயணிப்பது தெரிந்தது.மெல்ல ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த எங்களை அந்த காலை நேரத்திலேயே ஷாருக், அமிதாப்பச்சன் , கரீணா கபூர் என்ற அழைப்புகள் எதிர்கொண்டன.

    நாங்கள் வெளியே வரும் நேரத்துக்கு மேலும் நான்கு மெம்பிஸ் டூர்ஸ் வழிகாட்டிகள் அங்கு வந்து சேர்ந்தனர். ஒவ்வருவரும் ஆளுக்கொரு வேனோடு வந்தனர். ஒவ்வொரு குடும்பமும் ஒருவழியாக வண்டிகளில் ஏறியவுடன் வண்டி எங்கள் சொகுசு படகு நோக்கி சென்றது. ஊர் பெரிதாக சொல்லிகொள்கிற மாதிரி இல்லை. சாலையோர குப்பைகள், தெருவுங்கும் சுவரொட்டிகள் மூளைக்கு மூளை கடையில் சாய் அருந்தும் மக்கள் என்று ஒரு சராசரி இந்திய சிற்றூர் கணக்காக இருந்தது லக்சர்.

    ஒரு வழியாக நைல் நதிக்கரையை அடைந்தோம். வருசையாக அங்கே சொகுசு படகுகள் அணிவகுத்திருந்தன. எங்களை ஒரு படகு துறைக்கு அருகில் நிறுத்தினார்கள். படகு பெயர் வித்தியாசமாக இருந்தது.

    “இது எங்கள் படகு இல்லையே நாங்கள் மொவேன்பிக் ராயல் லோடஸில் தங்குவதாக தானே ஏற்பாடு?” என்றேன்.

    “ ஆமாம் அது மூன்றாவதாக நிறுத்தப்பட்டுள்ளது. நாம் இந்த இரண்டு படகுகளைத் தாண்டி அதை போய் அடைவோம்” என்றவாறு எங்களை அழைத்துக்கொண்டு படகு துறையை நோக்கி நடந்தார். நாங்கள் அவரை தொடர்ந்து சில படிகளில் கீழிறங்கி சென்றோம்.Untitled

    சிறிய மரப்பாலம் படகுத்துறையிலிருந்து படகினையும் இணைத்து கிடந்தது. அதில் ஒருவர் பின் ஒருவராக நடந்து இல்லே சென்றோம். நாங்கள் நுழைந்தது முதல் படகின் வரவேற்பறை. எங்களை நேரே நடத்தி அழைத்து சென்றார் எங்கள் வழிகாட்டி.படகின் மறுபக்கத்தில் உள்ள கதவின் வழி நாங்கள் அடுத்த  படகினை அடைந்தோம். அதையும் இதுபோல தாண்டியதும் எங்கள் சொகுசு படகு ராயல் லோடஸ் எங்களை எதிர்கொண்டு அழைத்து.

    மற்றைய இரண்டு கப்பல்களை விட எங்கள் கப்பல் மிகவும் கம்பீரமாகவும் சொகுசாகவும் காட்சியளித்தது. நான்கு அடுக்குகள், ஐந்து நட்சத்திர வசதிகொண்ட அறைகள் நீச்சல் குளம் என்று எல்லாவசதிகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கப்பலில் பதிவு செய்தபோது எங்கள் அறைகள் பதினொன்று மணிக்கு தான் தயாராகும் என்றார். மணியோ ஒன்பதரை தான் ஆனது. குழந்தைகளை வைத்து கொண்டு என்ன செய்வது என்று அவரிடம் கேட்கவே, சிறிது நேர யோசனைக்கு பிறகு உங்கள் இரு அறைகளில் ஒன்றை இப்போது தயார் செய்து கொடுக்கிறோம், மற்றது பதினொன்று மணிக்கு தயாராகும் என்றார்.

    எங்கள் வழிகாட்டி நீங்கள் உங்கள் அறைக்கு சென்று ஓய்வெடுங்கள் நான் விடை பெற்றுகொள்கிறேன். உங்கள் புது வழிகாட்டி உங்களை பகல் உணவுக்கு பின்னர் சந்தித்து அறிமுகம் செய்துகொள்வார் என்று கூறி சென்றார். அடுத்த சில நாட்கள் எங்களது வாத்சலம் இந்த கப்பல் தான், உள்ளே எப்படி இருக்கிறது என்றறியும் ஆவலோடு எங்கள் அறை நோக்கி சென்றோம்.

    படங்கள்: சாகர் பொன்னியின்செல்வன்

    (தொடரும்)

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 86 (26.08.13)

    மலர் சபாbaby under tree

    புகார்க்காண்டம் – 09. கனாத்திறம் உரைத்த காதை

     

    அங்ஙனம் தெய்வங்களை எல்லாம் வேண்டியவள்
    பாசண்டச் சாத்தன் கோயிலை இறுதியில் அடைந்தனள் .
    குழந்தை உயிர் மீண்டும் பெற வேண்டி நின்றனள்.
    அப்போது,
    பிறருடன் ஒப்பிட முடியாத அளவுக்கு
    அழகான ஒரு பெண்ணாய்
    அவள் முன் தோன்றினள்
    சுடுகாட்டுப் பிணங்களை உண்ணும்
    இடாகினிப் பேய்.

    மாலதியிடம் இடாகினிப்பேய் பேசினள்;

    குற்றமற்றவளே!
    தவம் செய்தவர்க்கே தேவர்
    நேரில் வந்து வரம் கொடுப்பர்.
    உன் போன்றோர் முன்
    ஒருபோதும் வரமாட்டார்.
    இது பொய்யான வார்த்தை இல்லை;
    உண்மையே!
    உன் கையிலுள்ள இளங்குழந்தையைப்
    பார்த்துவிட்டுத் தருகிறேன்.
    என்றே கூறி அக்குழந்தையை வாங்கிக் கொண்டு
    கரிய இருள் சூழ்ந்த சுடுகாட்டினுள் சென்று
    அப்பிணத்தைத் தன் வாயில் போட்டுக் கொண்டனள் இடாகினிப்பேய்.

    சாத்தன் மகவாய் வருதல்

    துயருற்ற மாலதி
    இடியோசை கேட்டுப் பதறி அகவும்
    மயில் போலவே அழுதனள்.

    அழுத அவள்மேல் இரக்கம்கொண்ட
    பாசண்டச் சாத்தன்,

    அம்மையே! அழவேண்டாம்.
    நீ திரும்பிச் செல்லும் வழியில்
    ஒரு மரத்தின் நிழலில்
    இறந்த அக்குழந்தையை
    உயிருடன் காண்பாய் எனகூறித்
    தானே அக்குழந்தையாய் மாறி
    குயில் பாடும் சோலையில்
    ஒரு மரத்தடியில் கிடந்தான்.
    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 15 – 28

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram25.html
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram26.html

     

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே! – 20

    இன்னம்பூரான்

    page1

    நானோ! ஒரு அப்பாவி!

    மகா கனம் பொருந்திய கோர்ட்டார் சமூகத்தின் முன்னிலையில் நடை பெற்றதாக ஒரு கற்பனை உரையாடலை செவி சாய்த்து கேட்பீர்களாக. இரட்டை ஜீயும், நிலத்தடி எண்ணை வளமும் உங்களது கற்பனையில் மேய்ந்தால், யான் அதற்குப் பொறுப்பல்ல. ‘நானோ! ஒரு அப்பாவி!’ அது கூட இரவல்.

    இனி உரையாடல்.

    சாக்ஷி (சா), கோர்ட்டார் (கோ), அரசு வழக்கறிஞர். (அ.வ.) கோர்ட்டு குமாஸ்தா (கோ.கு.), டவாலி (ட).

    ட: பராக்! பராக்!! பராக்!!! கோர்ட்டார் வருகிறார்! வந்துகொண்டே இருக்கிறார்! டட்! டட்! டட்!

    எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். ‘சல சல’ வென்று கோர்ட்டாடை, மடிசாரு மாமியின் பட்டுப்புடவையைப் போல, சர சரக்க, ஐயா வருகிறார்கள்; அமர்கிறார்கள். எல்லாரும் ‘சர் புர்’ அமைதியுடன் (கோர்ட்டு நாற்காலிகள் கலோனிய காலத்தவை; முதுகு வலிக்கும்.) அமர்கிறார்கள். சற்றே மெளனம். கோர்ட்டார் தலையசைக்க, அன்றைய நீதி தேவதை அரூபமாகக் காட்சியளிக்கிறாள்.

    சாவதானமாக, அலம்பல் யாதும் செய்யாமல், குறித்த நேரத்துக்கு முன்பே, ‘கூஜாக்கள்’ உடனில்லாமல், சமத்தாக வந்து கூண்டேறினார், சாக்ஷி பெருமகனார்.

    கோ.கு: உமது பெயர் என்ன?

    சா: ரிஷ்ய சிருங்கர், மாமுனி மைந்தன், மாமுனி (ஜூனியர்) தம்பி.

    கோ.கு: ‘யான் பேசுவது உண்மையே. பேசுவது முற்றிலும் உண்மையே. உள்ளுறையாகக்கூட பொய் பேசமாட்டேன். இது சத்யம். சத்யம். சத்யம் என்று அடித்துக்கூறும். கடவுளைக்கூப்பிடுவீர்களா? அல்லது உம் நாணயத்தை நம்புவீர்களா?. உடனே பதில் சொல்லும். ஹூம்!

    சா: கடவுளே என் சாக்ஷி. (தனிமொழி: அவர் குரலெடுக்கமாட்டார்.)

    (கோ.கு. பகவத் கீதை நூலை சாக்ஷியின் கையில் கொடுத்தார். அவரும் அதை பவ்யமாக வாங்கி, அதன் மேல் ஒரு ஷொட்டு கொடுத்து, நடுநடுங்கும் குரலில் சத்தியப்பிரமாணம் செய்தார்.)

    கோ:உமக்கு அன்னலக்ஷ்மியை தெரியுமா?

    சா: என் பெயரே ரிஷ்ய சிருங்கர், வணக்குத்துக்கு உரிய என் தந்தையோ மாமுனி. மரியாதைக்கு உரிய என் மூத்த உடன்பிறப்போ மாமுனி (ஜூனியர்). எனக்கு பெண்பால் பரிச்சயமில்லை. In fact…

    அ.வ.: கனம் கோர்ட்டார் அவர்களே! சாக்ஷி வினவிய வினாவுக்கு விடை அளித்தால் போதும். அவர் கேட்டக்கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. I object…

    கோ: Objection sustained. உமக்கு அன்னலக்ஷ்மியை தெரியுமா? கேட்ட கேள்விக்கு பதில்.

    ( ஒரு விசிட்டர்: ‘என்ன இது பெர்ரி மேஸன் கதை போல் போகிறது!’ டெல்லா ஸ்ட் ரீட் வருவாளா அல்லது ‘தரகு’ மாமியா?) நல்ல வேளை அவர் முணுமுணுத்ததால் அது யார் காதிலும் விழவில்லை.)

    சா: யான் அன்னலக்ஷ்மியை அறியேன். அறிந்ததுமில்லை, அறியப்போவதுமில்லை.

    கோ: உமக்கு அன்னலக்ஷ்மியை தெரியுமா? கேட்ட கேள்விக்கு பதில்.

    சா: (சுளித்த முகத்துடன்) அறியேன். அறியேன். அறியேன்.

    கோ: உமக்கு எத்தனை தடவை சொல்வது? ஒரு வினா.ஒரு விடை. போதும்.

    சா: என்னுடைய வக்கீல் ஐயா பாரீஸ்டராக்கும். லண்டனில் படித்தவர் அவர் சொன்னபடி கக்குவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டுகிறேன், கனம் கோர்ட்டார் அவர்களே. சத்தியம் ஜெயிக்க வேண்டுமல்லவா, பாரதநாட்டின் இலச்சினையில் கூறிய மாதிரி.

    (அரசு வக்கீல் ஏதோ சொல்ல வாயெடுக்கிறார். சாக்ஷியின் வக்கீல் கோர்ட்டார் பார்க்கும் மாதிரி தன் கைகளை விரித்து, முணுமுணுக்கிறார்.

    கோ: அரசு வக்கீலைப் பார்த்து: Go ahead.

    அ.வ.: சரி. விருந்தாந்தத்தை சொல்லவும்.

    சா: அன்னலக்ஷ்மியை லவலேசமும் அறியேன். ‘நம்பிக்கை -1’ கம்பெனி ‘நம்பிக்கை -2’ கம்பெனியில் அடக்கம். நான் ‘நம்பிக்கை -2‘கம்பெனியின் நிர்வாகப்பொறுப்பேற்காதத் தலைவன். ‘நம்பிக்கை -1’ கம்பெனியின் தலைமைக்குழுவில் இருந்தேன். எப்போது? என்ன? என்பதை மறந்து விட்டேன். வெகுதான்ய ௵ அந்த பதவியில் இருந்தேனா என்று சொல்ல இயலாது.

    (இதெல்லாம் ஆவணங்களிலிருக்கும். அந்த கதையை அவிழ்த்து விட்டால், இந்த கதை எங்கெல்லாம் செல்லுமோ!)

    (அரசு வக்கீல் அவரிடம் ஒரு தஸ்தாவேஜை காண்பித்தார். அன்னலக்ஷ்மி பெயரில் ஒரு வங்கிக்கணக்கைத் துவக்க, சாக்ஷியும், சாக்ஷிணியும் (ஆஹா! அவர் பெண்பால் அறிந்தவர் என்பது தெளிவாயிற்று. அது ஒரு புறமிருக்க…அந்த தஸ்தாவேஜில் சாக்ஷியும், சாக்ஷிணியும் கையொப்பமிட்டு இருந்தனர். அன்னலக்ஷ்மியின் சித்திரம் வேறே பதிவாகி இருந்தது.)

    சா: அவை எங்கள் கையொப்பம் என்று உறுதி செய்கிறேன். எங்கள் இருவரின் வருமான வரி ஆவணங்கள் அங்கு பதிவு ஆகியுள்ளன. ஸத்யமேவ ஜயதே! ஸத்ய ஸத்யமேவ ஜயதே! மேவ ஜயதே!

    (அரசு வக்கீல் அவரிடம் மற்றொரு தஸ்தாவேஜை காண்பித்தார். அன்னலக்ஷ்மி பெயரில் இவரது கம்பேனி ‘அன்னதானம்’ செய்வதை பற்றியது, அது.)

    சா: அது பற்றி யான் ஒன்றும் அறியேன் பராபரமே. (ஒரு கூஜா ஓடி வந்து கொடுத்த திருநீரை அணிந்துகொள்கிறார்.)

    சா: (தென்பு திரும்ப) அந்த தஸ்தாவேஜில் என் பெயரும், சாக்ஷிணியின் பெயரும் இருந்தாலும், அது வங்கியின் தஸ்தாவேஜு. அதை பற்றியும், அதன் பொருளடக்கத்தைப் பற்றியும் யான் லவலேசமும் அறியேன் என்பது கண்கூடு, வெட்ட வெளிச்சம், உள்ளங்கை நெல்லிக்கனி, வெள்ளிடை மலை.

    (கோ: சாக்ஷியின் வக்கீலிடம் ‘உமது கட்சிக்காரர் சொல்லாட்டம் ஆடுகிறார். அதை கட்டுப்படுத்தி வைக்கவும். இது என் ஆணை.)

    (அரசு வக்கீல் சாக்ஷியிடம் அன்னலக்ஷ்மியின் ஊழியர்களான, சித்தார்த், இந்திரன், விஷ்ணு என்ற மூவரின் சித்திரங்களை காண்பித்தார்.)

    சா: ஓ! இவர்களை தெரியுமே. இவர்கள் குழுவினர் ஆச்சே. ஆனால் அவர்களின் பதவி, கையொப்பம் பற்றி யாதும் அறியேன்.

    அ.வ.: கனம் கோர்ட்டார் அவர்களே! சாக்ஷியை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோருகிறேன்

    கோ: Granted.

    குறுக்கு விசாரணையின் போது, தான் வேவுத்துறை அதிபதியிடம், இவ்வழக்கு சம்பந்தமாக போனதை ஒப்புக்கொண்ட சாக்ஷி, தான் எழுத்தில் கொடுத்து மாட்டிக்கொள்ளவில்லை என்று கம்பீரமாக பதிலினார். கோர்ட்டார் கேட்ட வினாவுக்கு பதில் அளிக்கும்போது தனக்கு அச்சுறுத்தல், இற்செறிப்பு ஒன்றும் வரவில்லை என்று திண்ணமாகக் கூறினார். பொய் சொன்னால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அறிவேன் என்று அடித்துக்கூறினார்.

    (இதெல்லாம் ஆவணங்களிலிருக்கும். அந்த கதையை அவிழ்த்து விட்டால், இந்த கதை எங்கெல்லாம் செல்லுமோ!)

    மறுபடியும் குறுக்கு விசாரணை:

    சா: அன்னலக்ஷ்மியை எங்களுடன் உறவாட யாம் அழைக்கவில்லை. அவளது வானள்ளும் சாகசங்களை பற்றி கொஞ்சம் கூட எனக்குத் தெரியாது. அவளுக்கு ‘நம்பிக்கை -1’ கம்பெனி எக்கச்சக்கமாகக் கொடுத்த பொன் மோஹராக்கள் பற்றி எனக்கு எப்படித்தெரியும்?நீங்களே சொல்லுங்கள். நானோ! ஒரு அப்பாவி!

    அன்றைய கோர்ட்டுக் கலைந்தது.

    மறுநாள் சாக்ஷிணியும் கிருகலக்ஷ்மி என்ற பீடத்திலமர்ந்து, கம்பெனிகளுக்கு தான் கம்பெனி கொடுக்கவில்லை என்ற தோரணையில் விடையளித்தார். (கம்பெனி ஆவணங்கள் சொலவு வேறானால் என்பது வேறு ஒரு கேள்வியோ என்ற ஐயம்.

    ஹூம்!

     

    சித்திரத்துக்கு நன்றி
    மெட்ராஸ் (சென்னை) ஹை கோர்ட்+வ.உ.சி.+வாலேஸ்வரன்
    POSTED ON 5:39 PM BY SANKARA RAMASAMY WITH NO COMMENTS

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • குறவன் பாட்டு – 7

    
    சச்சிதானந்தம்
    
    
    முள்ளம்பன்றி வேட்டை ஆடுதல்

     

    முள்ளம் பன்றிகள் இரண்டு கண்டு,

    உள்ளம் துள்ளிக் குதித்துக் குறவன்,

    துரத்திப் புலிபோல் பின்னே தொடர,

    பன்றிகள் பயந்து வங்கில் மறைந்தன!                                                                                       52

     

    கங்குல் படரும் மங்கிய பொழுதில்தீக்,

    கங்கின் துணையுடன் பொங்கிய புகையை,

    வங்கின் உள்ளே செலுத்திக் குறவன்,

    அங்கம் தாழ்த்திக் காத்திருந் தானே!                                 53
    
    

    சீரான தம்சுவாசம் புகையாலே தடுமாற,

    கூரான முள்கொண்ட பன்றிகளும் தடுமாறி,

    நேராக வெளிவந்து குறவனெனும் கூற்றுவனோடு

    போராடிப் பயனின்று இன்னுயிரைத் துறந்தனவே!                     54

     

    மயிரை வேருடன் களையும் சமணத்,

    துறவியைப் போல முட்களைப் பிடுங்கிச்சிறு,

    மூட்டை சுமக்கும் மனிதனைப் போல,

    முதுகில் பன்றியைச் சுமந்து நடந்தான்!                                                              55

     

    பாம்புக் கறி உண்ணுதல்
    
    

    அரவம் ஒன்று அருகில் வந்து,

    குறவன் காலைத் தீண்டத் துணிந்து

    வருமுன் வருமோர் ஒசை செய்து

    பரவும் படமெடுத் தருகில் வந்தது!                               56

     

    இரவின் வரவை எதிர்பார்த் திருந்த,

    குறவன் பாம்பின் வரவைக் கண்டு,

    ஒருகண் கொண்டு தலையைப் பார்க்க,

    மறுகண் கொண்டு வாலைப் பார்த்தான்!                                                                       57

     

    நொடியில் நகர்ந்து கடியைத் தவிர்த்துக்கா

    லடியில் கிடந்த பாம்பின் வாலைப்,

    பிடித்துக் கையில் சுருட்டிப் பிடித்து,

    அடித்துத் தரையில் உயிரை எடுத்தான்!                                                                        58

     

    உரித்துத் தோலை எடுத்துப் பிரித்து,

    விரித்து உடலின் கொழுப்பை எடுத்து,

    மரித்த பாம்பை நறுத்துத் தறித்து,

    வறுத்துத் தின்று குறவன் கொழுத்தான்!                                                                     59

    Share
  • பணப்பொருத்தம்!…

    எஸ். கோதண்டராமன்

     

    1 டிர்ரிங்.. டிர்ரிங்..

    “ஹலோ”

    “மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம். ”

    “சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார்? எங்கே வேலை பார்க்கிறார்?”

    “அவன் எம்.எஸ்சி படிச்சுட்டு காலேஜிலே லெக்சர………….. ”

    “சாரி. நாங்க ப்ரொபஷனல் மாப்பிள்ளையாப் பார்க்கிறோம். ”

    “இதுவும் ப்ரொபஷன் தானே. ”

    “சாரி, டாக்டர், எஞ்ஜினீயர்னா பேசுங்க. இல்லாட்டி போனை வெச்சுடுங்க.”

    2 டிர்ரிங்.. டிர்ரிங்

    “ஹலோ”

    “…………மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம். ”

    “சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார்? எங்கே வேலை பார்க்கிறார்?”

    “அவன் பி.டெக். படிச்சுட்டு மெட்ராஸ்லே டைடல் பார்க்லே ஒரு கம்பெனிலே சாப்ட்வேர் இஞ்ஜினீயரா வேலை பார்க்கிறான். ”

    “பி.டெக். எந்த காலேஜ்? ”

    “சேலம். ”

    “சாரி. அண்ணா யுனிவர்சிட்டி, ஐ.ஐ.டி அல்லது பிலானிலே படிச்ச பையனா இருக்கணும். என் பெண்ணும் பி.ஈ. அதை விட அதிகம் படிச்சவரா, பாரின்லே எம். எஸ். முடிச்சு பாரின்லே வேலை பார்க்கிற பையன் தான் வேணும். ”

     

    3 டிர்ரிங்.. டிர்ரிங்

    “ஹலோ”

    “…………மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம். ”

    “சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார்? எங்கே வேலை பார்க்கிறார்?”

    “அவன் சென்னை ஐ.ஐ.டி.லே பி.டெக். படிச்சுட்டு யு. எஸ்லே எம். எஸ் பண்ணினான். இப்போ பாஸ்டன்லே வேலை பார்க்கிறான். எங்களுக்கு இங்கே அடையாறிலே ஒரு பங்களா இருக்கு. நீலாங்கரையிலே பையன் பேரிலே ஒண்ணு வாங்கி இருக்கோம். அப்புறம் கொடைக்கானல்லே ஒரு பங்களாவும் எஸ்டேட்டும் இருக்கு. ”

    “வெரி குட். நீங்க பெண் பார்க்க எப்ப வரீங்க? ”

    “பையன் அடுத்த மாசம் தான் வருவான். நானும் என் வீட்டுக்காரரும் வர ஞாயிற்றுக்கிழமை உங்க வீட்டுக்கு வரோம். உங்க விலாசத்தைக் குடுங்க. ”

     

    4 டிர்ரிங்.. டிர்ரிங்..

    “ஹலோ”

    “ஆண்ட்டி, நான் பாஸ்டன்லேருந்து பாஸ்கர் பேசறேன். பானு போன் வேலை செய்யல்லியா? ”

    “ஒரு நிமிஷம். ”

    “பானு, மாப்பிள்ளே கூப்பிடறார்டி. ஏன் உன் போன் என்னாச்சு? ஏன் லேண்ட் லைன்லே கூப்பிடறார்? ”

    “பாட்டரி லோ. ஆப்ஃ ஆயிடுத்தும்மா. சார்ஜ் பண்ணலாம்னா கரண்ட் இப்பத் தானே வந்திருக்கு. ”

    “என்ன பொண்ணும்மா நீ. அவர் தான் தினமும் இந்த நேரத்துக்குக் கூப்பிடறார்னு தெரிஞ்சிருக்கே. முன்னுக்கு முன்னதா சார்ஜ் பண்ணி வெச்சுக்க வேண்டாமா? ”

     

    5 டிர்ரிங்.. டிர்ரிங்..

    “ஹலோ”

    “நான் பானு பேசறேம்மா. நான் நாளைக்குப் புறப்பட்டு சென்னைக்கு வரேம்மா.”

    “என்னடி இப்ப திடுதிப்புன்னு. இனிமே அடுத்த வருஷம் தான் லீவு எடுக்க முடியும்னு மாப்பிள்ளே சொன்னாரே. மாப்பிள்ளையும் வராரா? ”

    “அவன் வரல்லேம்மா. நான் மட்டும் தான் வரேன். ”

    “என்னடி இது? மாப்பிள்ளையைப் போய் அவன் இவன்னு பேசறே. ”

    “அவன் எனக்குப் புருஷனும் இல்லே. உனக்கு மாப்பிள்ளையும் இல்லே. ”

    “என்னடி சொல்றே நீ? ”

    “ஆமாம்மா நான் ஒரேயடியா வந்திடறேன். லக்கேஜ் ஹெவியா இருக்கு. ஏர்போர்ட்டுக்கு யாராவது வாங்க. ”

    “ஏண்டி? என்னடி ஆச்சு? ”

    “பின்னே என்னம்மா. தேடித் தேடி அமெரிக்க மாப்பிள்ளையைப் புடிச்சியே. சுத்த பழய பஞ்சாங்கம்மா. ”

    “என்னடி சொல்றே? ”

    “கொஞ்சம் கூட நாகரிகமா நடந்துக்கத் தெரியல்லே, அம்மா, அவனுக்கு. எப்போ பார்த்தாலும் பூஜை புனஸ்காரம். ரூமுக்கு ரூம் ராமகிருஷ்ணர், ரமணர், சாயிபாபான்னு சாமியார் படம் தான். அலமாரி பூரா விவேகானந்தர் புஸ்தகங்கள் தான். ஒரு க்ளப்புக்குப் போனோம், ஒரு டிஸ்கொதேயிலே கலந்துகிட்டோம் ஒண்ணு கிடையாது. ஒரு பீர் கூட குடிச்சதில்லையாம். வெளியிலே கூட்டிகிட்டுப் போனா, கோவில் இல்லாட்டா பஜனை, இந்த மாதிரித் தான். அமெரிக்காவிலே இருக்கிறவன் கொஞ்சம் நாகரிகமா இருப்பான்னு நெனச்சேன். இந்தக் கொட்டாம்பட்டியோட காலம் தள்ள முடியாது என்னாலே. ”

    “ஏண்டி, நிச்சயம் பண்ணி கல்யாணம் நடக்கிற வரைக்கும் ஆறு மாசம் நாள் தவறாமே போன்லே மணிக்கணக்காப் பேசினியே. என்னடி தெரிஞ்சுகிட்டே அவரைப் பத்தி?

    “அப்பல்லாம் நிறைய ஜோக் சொல்லிச் சிரிக்க வெச்சுக்கிட்டே தான் இருந்தான்.  நான் இந்த மாதிரித்தான் இருப்பேன்னு அவன் சொன்னப்போ, அமெரிக்காவிலே இருந்துகிட்டு இந்த மாதிரி யாராவது இருப்பாங்களா, விளையாட்டுக்குச் சொல்றான்னு தான் நான் நெனைச்சேன். கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் நாம மாத்திடலாம்னு நெனச்சேன். அது முடியாதுன்னு தீர்ந்து போச்சு. நான் நாளை ராத்திரி பதினோரு மணிக்கு வருவேன். ஏர்போர்ட்டுக்கு யாராவது வாங்க”

     

     

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (24)

    பவள சங்கரி

    அனைத்து முக்கியமான தொழில்களைப்போலவே வெற்றியைப் பெறுவதற்குத் தடைகள் அவசியமாகிறது. வெற்றி என்பது பல்வேறு போராட்டங்கள் மற்றும் எண்ணிலடங்கா தோல்விகளின் பிறகே கிடைக்கக்கூடியது.

    இருண்ட பொழுதுகளில், ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கிய அடுத்த படி, போலி எது என கண்டறியப்படும் ஒவ்வொன்றும் உண்மையை நோக்கி வழிநடத்துகிறது, எந்த ஒரு தடையும் ஒரு நாள் மறைந்தேவிடும் அதே வேளையில் அமைதியும் நிறைவுமான பாதைக்கு வழிநடத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
    ஓக் மேண்டினோ

     ogmandino164003

    ‘ரிஸ்க் எடுக்குறதுன்னா எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி’

    மேலே இருக்கும் வசனம் திரைப்படங்களில் நகைச்சுவையாக சொல்லப்பட்டாலும், வாழ்க்கையின் வெற்றிக்கு இந்த ‘ரிஸ்க்’ என்கிற ‘அபாயம் உண்டாக்கும் நிலை’ பெரும் பங்காற்றுகிறது என்பதே உளவியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. சுருங்கச் சொன்னால் நம்முன் நிற்கும் இமாலயப் பணியும் துணிவுடன் எதிர்கொள்ளும்போது சிறு கல்லாகிவிடும் என்பதே நிதர்சனம். அபாயத்தை எதிர்கொள்வது என்பது, நடக்கும்போது இடறி விழுவதில் ஆரம்பித்து, கட்டுப்பாடிழக்கும் இரு சக்கர வாகனம் அல்லது விபத்து ஏற்படுத்தும் உல்லாச உந்து வரை அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதால் அதையெல்லாம் அச்சத்தினால் நிறுத்தி வைக்க முடியுமா? நிறுத்தி வைத்தால் வாழ்க்கைச் சக்கரம்தான் தொய்வில்லாமல் ஓட முடியுமா?

    ஒருவர் எந்த அளவிற்கு ஒரு கடினமான காரியத்தில் துணிந்து இறங்குகிறாரோ, அந்த அளவிற்கு அது அவர்களுடைய மன திருப்தியிலும், மகிழ்ச்சியிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதே வல்லுநர்களின் கருத்து. பெரும்பேறு (அதிர்ஷ்டம்) ஒருவரை வழிநடத்துவதில்லையா என்ற கேள்வி எழத்தான் செய்யும். பெரும்பேறு பெற்றவர்களே தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை, அது எத்தகைய அபாயமான சூழலாக இருந்தாலும் அதைத் துணிவுடன் எதிர்கொள்வார்கள். மிகப்பெரும் காரியங்களைச் சாதிப்பவர்கள் இது போன்ற அபாயமான சூழலை துணிவுடன் எதிர் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அப்படிப்பட்ட துணிச்சல் பெரும் மன நிறைவை அளிக்கக்கூடியது என்பதும் கண்கூடு.

    துணிவுடன் ஒரு அபாயமான காரியத்தை எதிர்கொள்ளும்போது அதை புத்திசாலித்தனமாகக் கையாள்வது மிக முக்கியமானது. இதில் எந்த அளவிற்கு பயிற்சி எடுக்கிறோமோ அந்த அளவிற்கு அது நமக்கு இயற்கையான குணமாகிவிட வாய்ப்பு அதிகம். இதற்கு நல்ல உதாரணம் குழந்தைகள். நடை பழகுவதற்குமுன் தவழ்ந்து செல்ல முயற்சிக்கிறது. ஓடுவதற்கு முன் நடக்கவும், இரு சக்கர வாகனத்திற்கு முன் சைக்கிள் ஓட்டுவது, பின் கார் ஓட்டுவது என்று ஒவ்வொன்றிலும் துணிவையே துணையாகக் கொண்டே பழகுகின்றது. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் கடந்து வரவேண்டிய அச்சத்தை முன்னெச்சரிக்கையுடன் கையாள்கிற அந்த வல்லமையே அக்குழந்தையை சாதிக்க வைக்கிறது. அடுத்து வரும் அதைக்காட்டிலும் பெரிதான காரியங்களுக்கு படிப்பினையாகவும் அது அமைந்துவிடுகிறது. இதன் காரணமாக அச்சம் முற்றிலும் விலகிவிடுகிறது.

    எந்த ஒரு காரியத்தையும் அது பற்றிய தெளிவான விழிப்புணர்வுடன் அணுகும் போது அச்சம் என்ற ஒன்று ஒரு அடி தள்ளியே நிற்கும். ஒரு புதிய பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் அபாயமான காரியத்தில் இறங்கும்போது, தேவையான தகுதிகள் அனைத்தும் இருந்தும் தான் நிராகரிக்கப்படும்போது அதற்கான காரணம் புரியாத சூழலில் திரும்பவும் முயற்சி செய்ய தைரியம் வராது. புத்திசாலித்தனமாக நன்கு சிந்தித்து ஒரு காரியத்தில் ஈடுபடவில்லையென்றால் நல்ல முடிவை எதிர்பார்க்க முடியாததோடு, அடுத்த முயற்சிக்கான துணிவையும் பெறுவதில் சிரமமாகிவிடும். அதனால் படிப்படியாகக் கடந்து உயரத்தை அடையும் கலையைக் கற்க வேண்டியது அவசியம். நாளடைவில் அதுவே வழக்கமாகிவிடும். அதாவது, முதலில் ஆய்வு மேற்கொண்டு, திட்டமிட்டு, சோதித்து, மதிப்பீடு செய்து காரியத்தைத் தொடங்கினால், அதன்பின் தொட்டதெல்லாம் பொன்னாகும் வாய்ப்பும் பெருகும். பொதுவாகவே நம் ஒவ்வொருவருக்கும் முன்னேறிச்செல்ல ஒரு உந்து சக்தி தேவையாக இருக்கிறது. அச்சம் என்ற அந்த ஒன்றை விட்டு விலகினால் மட்டுமே துணிவு என்ற ஒன்று நெருங்கி வரும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் அறியாமையின் காரணமாக போராடும் ஒரு விசயத்தில் நாம் சரியான பாதையில் சென்று அதன் மூலம் சிறந்து விளங்குவதை உணரும்போது அதுவே நமக்கு நல்லதொரு ஊக்கமாக அமையக்கூடும்.

    துணிந்து ஒரு அபாயமான காரியத்தில் ஈடுபடுவது என்பது முன்னேற்றத்தின் ஒரு முக்கியமான அம்சம். ஆர்வம், குறிக்கோள் மற்றும் விருப்பம் போன்றவைகளைத் தக்க வைப்பதற்கு இது மிகவும் அத்தியாவசியமாகிறது. எப்படியிருந்தாலும், எப்பொழுதும் தம் செயல்களின் பலாபலன்கள் குறித்த விழிப்புணர்வுடன் புத்திசாலித்தனமான சிந்தைகளைக் கொண்டாடவும் கற்றுக்கொள்ள வேண்டும்!

    அனைத்துமாக இருக்க முடியும் நம்மால்!

    ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், நாம் எவ்வளவுதான் தயார் நிலையில் இருந்தாலும், மிகச் சிறந்த மற்றும் மிக மோசமான காரியங்கள் என இரண்டும் நடக்கக்கூடும். இதற்கு, பெரும்பேறு, நேரம், கர்மபலன் என எதை வேண்டுமானாலும் காரணம் காட்டலாம். இதில் எவரும் விதிவிலக்கல்ல என்பதே நிதர்சனம். அதே சமயம் செயலூக்கம் கொண்ட ஒரு வாழ்க்கையை வாழ முற்படுவதால் நம் வாழ்க்கையை நாமே தேர்ந்தெடுப்பவர்களாகிறோம். நம் சொந்த முடிவுகளை நாமே எடுக்கும் வகையில், ஏதோ சில நேரங்களில் சூழ்நிலை கைதிகளானாலும், நம் படகை நாமே வழிநடத்தி செலுத்துபவர்களாகிறோம். இதனாலேயே நம் வருத்தங்களும் குறைவாகவே இருக்கிறது. நம் வாழ்க்கை நாளை முடிவிற்கு வரப்போகிறது என்று தெரிந்தால்கூட, நாம் விரும்பியபடி நம் வாழ்க்கையை வாழ்ந்தோம் என்ற மன நிறைவு நம்மிடம் இருக்கும்.

    இப்படி ஒரு பயனுள்ள வாழ்க்கையை வாழ முற்படுபவர்கள், தம்முடைய முடிவுகளை எடுக்கும்போது பொறுமையைக் கடைபிடிப்பதோடு, முதன்மையாகச் செய்ய வேண்டிய காரியங்களிலும் முழு கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். கடினமான உழைப்பும், நேர்மையும் கடைபிடித்தாலும், அதன் முக்கியத்துவம் உணர்ந்து சில விட்டுக்கொடுத்தல்களும் செய்யத்தான் வேண்டியிருக்கும். எந்த அளவிற்கு பயனுள்ள ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு, தொழில் சம்பந்தமாகவோ, குடும்ப உறவுகள் அல்லது நிதி நிலை குறித்ததாகவோ, ஆரோக்கியம் அல்லது எதிர்பாராத திடீர் திருப்பங்கள் என, இடையில் இடறுகிற பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் கணிப்பது உள்ளிட்ட அனைத்து பலாபலன்களையும் பெற முடியும்.

    வாழ்க்கையை அதன் போக்கிலேயே சென்று வாழ நினைப்பவர்கள் பெரும்பாலும் சூழ்நிலைக் கைதிகளாகவே வாழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெரும்பாலும் இடறுகிற தடைகளை நீக்குவது மட்டுமே வேலையாக இருக்க வேண்டியிருக்கும். பயனுள்ள வாழ்க்கையை வாழ முற்படாதவர்கள், திட்டமிடல், முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படல், தன் முழு திறமையை வெளிப்படுத்துதல் போன்ற அனைத்தையும் இழப்பதன் மூலமாக தன் வாழ்க்கைக்குத் தான் பொறுப்பாளி அல்ல என்ற தீர்மானத்தினால் வேதனைக்கு ஆளாகிறார்கள். அதைவிடுத்து, நம் வாழ்க்கையை சற்றே பயனுள்ள வகையில் மாற்றியமைத்துக்கொண்டு வாழ ஆரம்பித்தால் நாம் கால விரயம் செய்வது, தள்ளிப்போடும் பழக்கம் என அனைத்திலிருந்தும் விடுபடலாம். கடுமையாக உழைப்பதைக் காட்டிலும், புத்திசாலித்தனமாக திட்டமிட்டு உழைப்பதின் பலன் மிகவும் அதிகம் அல்லவா.

    இத்தகைய பெருமைமிகு பயனுள்ள வாழ்க்கையை வாழ்வது எங்கனம்? அதற்கான திறவுகோல் எது?

    முதலாவதாக அன்றாடம் தெளிவாகச் சிந்திக்கும் மனம் தேவை. அடுத்து இரண்டாவதாக இந்த தெளிவான மனதிற்கான முதன்மையான பணிகளை ஒழுங்குபடுத்தி, நம் கவனத்தை திசை திருப்பக்கூடிய நூற்றுக்கணக்கான தடைகளை விலக்கி வைக்க வேண்டும். மூன்றாவதாக, அதனினும் மிக முக்கியமானதைத் தேர்ந்தெடுத்துத் தொடர வேண்டும். இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதாக இருப்பினும் மிக எளிமையானதும், சகதி வாய்ந்ததுமான வழிமுறைகள் என்பதில் ஐயமில்லை. இடையில் அவசரமான பணி போன்ற போர்வையில் வந்து மிரட்டும் சிலவற்றை கண்டறிந்து ஒதுக்காவிட்டால் அவைகள் எளிதாக நம் நேரத்தை உண்டு ஏப்பம் விட்டுவிடும். மிக முன்னெச்சரிக்கையாக செயல்பட்டால்தான் கால விரயத்திலிருந்து தப்பிக்க இயலும். அவசரமான மற்றும் குழப்பமான மன நிலையில் திட்டமிடுதலைத் தவிர்த்தல் மிக முக்கியமானது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வித்தியாசமான பொறுப்புகளும், முன்னுரிமைகளும் மற்றும் குறிக்கோளும் இருக்கும். அன்றைய முக்கியமானத் தேவைகளை பொறுமையுடன் பட்டியலிட்டு, முதன்மை பெற வேண்டியதை மறக்காமல் குறித்து வைத்துக்கொண்டு திட்டமிட்டால் வெற்றி நிச்சயம்தானே!

    பயனுள்ள வகையில் நம் பொழுதைத் திட்டமிடல் என்பது ஒரு கலை. அதனை இரசித்து, ருசித்துச் செயல்பட்டால் வாழ்க்கையின் சுவையும் கூடும், வெற்றியும் நம்மை நாடி வரும்!

    படத்திற்கு நன்றி:

    http://www.brainyquote.com/quotes/quotes/o/ogmandino164003.html

    Share