திவாகர்

நம் செந்தமிழை நினைத்து நினைத்து நாம் வியக்காத நாள் இருக்கமுடியாது. காரணம் அத்தனை புதியதாக ஒவ்வொரு நாளும் தோன்றும் அதிசயம் இம்மொழியுள் உள்ளது. அதே சமயத்தில் ‘ஆதிசிவன் பெற்றான்’ என்று பாரதியால் புகழப்பட்ட இறைமொழி அல்லவா நம் மொழி.. அப்படிப்பட்ட இறைமொழி பழையதும் புதியதும் தன்னுள் அடக்கிக் கொண்டு இருப்பதில் என்ன விசேஷம் இருக்கமுடியும்.. என்ற வேதாந்தக் கருத்தில் மனம் போய்விட்டு சமாதானமும் செய்து கொள்வதையும் தடுக்கமுடியவில்லை.

photoதமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யர் நமக்குத் தேடி எடுத்துப் பரிசளித்த சங்கப்பாடல்களின் மூலம் எத்தனையோ நவீன கருத்துகளையும் அறிவியல்பூர்வமாகவும் எடுத்துரைத்துவருகிறார்கள் நம்மவர்கள். இப்படித்தான் இந்த வாரத்தில் சங்க இலக்கியத்தில் அறிவியல் கோட்பாடு என்று ஒரு கட்டுரையை ஆரம்பித்துள்ளார் சிங்கையைச் சேர்ந்த திரு கிருஷ்ணன். இதோ அவர்தம் கட்டுரையின் ஒரு சில பகுதிகள்:

”இன்றைய மேனாட்டு அறிவியல் சிந்தைனையின் சுவடுகூடப் படாத சங்க காலத் தமிழர் சமுதாயத்தில் இருந்த அறிவியல் அறிவும் உணர்வும், அதிலும் குறிப்பாக வானவில் பற்றிக்கொண்டிருக்கும் கருத்தும் சிந்தனையும் சில நம்மை வியக்க வைக்கிறது.”! இன்றைய நிலையில் அறிவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல்,மருத்துவ இயல் என்று பல்துறைகளாகப் பல்கி பெருகியுள்ளன. இவ்வறிவியல் சிந்தனைகளை நோக்கும் முன்பு அறிவியல் பார்வை தமிழ் சமுதாய இலக்கியத்தில்பெற்ற நிலையினை உணர்தல் இன்றியமையாததாகும்.

அண்மைக்கால அறிவியல் வரலாற்றில் அற்புதமான வளர்ச்சி பெற்று இருப்பது அணுவியலாகும். முதலில் அணுவைப் பிளக்க இயலாது என்றகொள்கை தோன்றியது. பின்னர் ஒளவையார் அணுவைப் பிளக்க இயலும் என்ற புதிய கருத்தை வெளியிட்டார்.அணுவைப் பிளப்பதின் மூலம் அதிக ஆற்றலை உருவாக்க முடியும் என்பதை அறிந்தார்கள். அணுவைச் சிதைத்து மின் உற்பத்தி செய்யவும், காற்றாலைகள் மூலம் அணுக்களைச் சிதைத்து மின் உற்பத்தி செய்யவும், ஹைட்ரஜன் அணுக்களை அதிவேகத்தில் சேர்ப்பதின் மூலம் ஆற்றல் பெறமுடியும் என்பதையும் ஹைட்ரஜன் அணுகுண்டுகளையும் தயாரிக்க முடியும் என்றும் அறிய நேரிட்டது. இக்கொள்கையுடைய தமிழ்ச் சான்றோர்கள் சிலர் இருந்தமை பண்டைய நமது சமுதாயத்தில் நாம் காணலாம்.

” அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் ” என்று அணுவாகிய துகளைப் பிளக்க இயலும் என்ற சிந்தனையை நம்முன் வைத்துள்ளார்.கம்பரும் இக்கருத்தினை இரணி வதைப் படலத்தின் மூலம் உணர்த்துகிறார் இரணியன்,

” இறைவன் எங்கு உள்ளான் ” என்று பிரகலாதனிடம் வினவினான். அப்போது பிரகலாதன் ஓர் எளிய அணுவை நூறு பங்காகச் செய்தால் அந்தச் சிறு பகுப்பில் அமைத்து உள்ளான் என விடை கூறுகிறான்.” சாணினு முளனோர் தன்மை அணுவினைச் சத கூறிட்ட கோணினு முளன்….. ” [கம்பராமாயணம்.253] — என்றபாடலில் அணுவைப் பற்றி கம்பரின் கருத்து மிளிர்கிறது.

தமிழ் இலக்கியத்தில் ” ஒப்புநோக்குக் கொள்கை” உடையவராய், தமிழர்களும் இச் சிந்தனை உடைய சமுதாயமாக விளங்கினர் என்பதற்குத் தொல்காப்பியரைச் சான்றாகக் காட்டலாம். முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று மூன்று பிரிவுகளுள், முதற்பொருள் என்பதனை ” முதல் எனப் படுவது நிலம்பொழுது இரண்டின் இயல்பென மொழி இயல்புணர்ந்தோரே ” என்ற நிலமும் காலமும் என இரு வகையாகப் பிரித்துள்ளன

நீர்ப்பொருளுக்குச் சுருங்கும் தன்மை இல்லை. நீர்ப்ப இருளின் இச் சுருங்கா இயல்பை அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்துக் கூறியவர் ‘ பாஸ்கல் ‘ என்னும் அறிஞர்.இப் பாஸ்கல் விதிக்குச் சான்றாக, ” ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது ” என்று ஒளவையின் பாடல் கூறுகிறது. ஆழத்தைப் பொறுத்து அழுத்தம் மிகுகின்றது என்ற மற்றொரு அறிவியல் உண்மையும் எடுத்துரைக்கின்றார்.

சூரிய ஒளியினால்தான் தாவரங்கள் ஆற்றலைப் பெறுகின்றன. தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்குச் சூரிய ஒளி பெரிதும் உதவுகிறது. இக்கருத்தை உணர்ந்தவர் இளங்கோ அடிகள். ஆதலின், ஞாயிறு போற்றும் ஞாயிறு போற்றும் ,– – ஞாயிறு போற்றும் ஞாயிறு போற்றும்..,- காவிரி நாடான் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலந்தரின்…” — என்று ஞாயிறைப் போற்றினார்

உயிரியல் துறை பற்றிய சிந்தைனையும் தமிழ் இலக்கியத்தில் சிறப்புற அமைந்துள்ளதைத் தொல்காப்பியம் மூலம் உணரலாம். ஒரு செல்லானது, செல் பிரிதலின் மூலம் பல்கிப் பெருகி பல உயிர்கள் உருவாகின்றன. பல செல் உயிர்களில் ஒரு செல்லே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு வேலையும் ஒரு குறிப்பிட்ட செல் தொகுப்புகளால் செய்யப் பெறுகின்றது என்பது உயிரியல் கொள்கை. இக் கொள்கையை ஓரளவு விளக்குவதாய்,

”ஒன்று அறிவதுவே உற்ற அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனோடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிதுவே அவற்றொடு மனனே
நேரிதில் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே …’ { ..தொல் பொருள் மரபியியல்:29.]

உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாட்டை விளக்குவதாய்த் திருமாலின் 10 அவதாரங்கள் அமைந்துள்ளன. நீரில் வாழும் உயிராக மச்சாவதாரம், நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மையுடைய உயிராக கூர்மவதாரம், நிலத்திலே மட்டுமே வாழுகின்ற தன்மையுடைய விலங்காக வராக அவதாரம், பிறகு விலங்கும் மனிதனுமாக நரசிம்ம அவதாரம், அதன் பின்னரே வளர்ச்சி அடைந்த முழு மனிதனாக கிருஷ்ணன், இராமன் அவதாரங்கள்.

நல்லதொரு கட்டுரையை அளித்து தீந்தமிழுக்கு பெருமைத் தேடித் தரும் திரு சிங்கை கிருஷ்ணன் அவர்கள் இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர்தம் பணி செம்மையாகத் தொடர வாழ்த்துகள்..

கடைசி பாரா: இன்னம்பூராரின் கனம் கோர்ட்டார் அவர்களே – வல்லமை கட்டுரையிலிருந்து..

எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். ‘சல சல’ வென்று கோர்ட்டாடை, மடிசாரு மாமியின் பட்டுப்புடவையைப் போல, சர சரக்க, ஐயா வருகிறார்கள்; அமர்கிறார்கள். எல்லாரும் ‘சர் புர்’ அமைதியுடன் (கோர்ட்டு நாற்காலிகள் கலோனிய காலத்தவை; முதுகு வலிக்கும்.) அமர்கிறார்கள். சற்றே மெளனம். கோர்ட்டார் தலையசைக்க, அன்றைய நீதி தேவதை அரூபமாகக் காட்சியளிக்கிறாள்.

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “இந்த வார வல்லமையாளர்

  1. வல்லமையாளர் திரு சிங்கை கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், அவரது தமிழ்ப் பணி தொடர்ந்து தமிழுலகம் நன்மை பல பெறட்டும்.

    நீதிமன்றக் காட்சியை சிறப்புற கண் முன் கொணர்ந்து கடைசி பத்தி சிறப்புப் பெற்ற இன்னம்பூர் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்.

    வல்லமையில் தனது நூறாவது பதிவினை வெளியிட்டுள்ள திவாகர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    …..தேமொழி

  2. திரு சிங்கை கிருஷ்ணன், இன்னம்பூர் ஐயாவிற்கு வாழ்த்துகள்!!

  3. வல்லமையாளர் கிருஷ்னனுக்கும் இன்னம் பூரான் ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  4. திரு சிங்கை கிருஷ்ணன், இன்னம்பூர் ஐயாவிற்கு மனமார்ந்த‌ வாழ்த்துகள்!!

  5. இந்த வார வல்லமையாளர் திரு. சிங்கை கிருஷ்ணன் அவர்களுக்கும், இன்னம்பூரான் ஐயா அவர்களுக்கும் என் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

  6. சுரக்குடுவையில் பிறந்தான் அகத்திய மாமுனி….
    பத்ம வியூகத்தை துளைத்து நுழையும் வழியை அர்ச்சுனன் மகன் தாயின் வயிற்றிளிருந்துக் கேட்டான்….
    கம்பனின் தரும் காட்சிகளில் எல்லாம் அறிவியல் புதைந்து இருப்பதையும் காணலாம்… 

    ஆக, தமிழும் தமிழ் மக்களும் விஞ்ஞான மெஞ்ஞான ஆழ்கடலில் முத்துக் குளித்து நமக்கு அளித்த சொத்துக்கள் ஏராளம் என்றுரைக்கின் அது மிகையாகா!
    இன்னும் சொன்னால்… நம்ம மஹாகவி பாரதி கூட இப்படிக் கூறுவான்…
    காசியில் புலவர் ஆற்றும் உரையை காஞ்சில் இருப்பவர் கேட்பதற்கு ஒரு கருவி செய்வோம் என்று…

    இரண்டாயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்பே எழுத்து, சொல் இலக்கணம் மட்டும் அன்றி உலகில் வேறொரு மொழியிலும் இல்லாத வாழ்வியல் முறைக்கும் பொருள் இலக்கணம் கண்ட இனம், மொழி என்பர்…

    அப்பேர்ப் பட்ட இந்த மொழியை ஆய்ந்தால், அதன் ஆக்கங்களை ஆய்ந்தால் புதிய புதிய கருத்துக்கள், சிந்தனைகள், அறிவியல் கூறுகள் வெளிப்படுவதைக் காணலாம் என்பதையும் உறுதிப் பட கூறலாம்…  என்ற எனது கருத்தையும் இங்கே கூற விளைகிறேன்.

    அருமையான கருத்துக்களை கட்டுரையினில் ஒளிரச் செய்த திருவாளர் சிங்கை கிருஷ்ணன் அவர்களுக்கும், பெரியவர் இன்னம்பூரானார் அவர்களுக்கும் வாழ்த்துக்களும் வணக்கமும்.

  7. தந்தை மொழியோடு வந்துதித்த தாய்மொழியோ!
    எந்தை உடுக்கை ஒலியில் இடம் வலமென பிறந்ததே!

    சமஸ்கிருதமும் தமிழும் இரட்டை மொழி என்பார்கள் அதனால் சில நேரங்களில் அவைகள் இரண்டும் இந்திய மண்ணிற்கு கொண்டு வந்த விந்தைமிகு அறிவைப் பற்றி பேசும் போது பிரிந்துரைக்காத பிறழ்ச்சி வந்து வலை வீசி வசப் படுத்துவிடுகிறது. அதானாலே எனது முந்தய பின்னூட்டத்தில் பாரதமும் வந்து கலந்தது தனித் தமிழ் பற்றி பேசுகையிலே… 🙂
    நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.