குறளின் கதிர்களாய்…(9)
புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்.
-திருக்குறள்- 298 (வாய்மை)
புதுக் கவிதையில்…
தண்ணீரில் கழுவினாலே
மாசகன்று,
மேனியது மேலே
தூய்மையாகும்..
உள்ளத் தூய்மை
உருவாகும், பேசும்
உண்மையால் தானே…!
குறும்பாவில் (லிமரைக்கூ)…
தண்ணீரால் உடல்பெறும் தூய்மை,
உடலினுள்ளே பேணிடு
உள்ளத் தூய்மைக்கு வாய்மை…!
மரபுக் கவிதையில்…
வியர்வை சொட்ட உழைப்பதிலும்,
விழுந்து தரையில் புரள்வதுடன்
செயற்கைக் காரணம் பலவற்றால்
சேர்ந்திடும் உடலின் அழுக்கெல்லாம்
இயற்கைச் செல்வம் தண்ணீரால்
இல்லை யென்றே தூய்மையாகும்,
உயர்ந்ததாம் உள்ளத் தூய்மையதும்
உண்மை யதனால் வந்திடுமே…!
லிமரிக்…
உடலைச் சுத்தமாக்கிடும் நீர்..
உள்ளே துடைப்பது யார்,
உண்மையே பேசி
உலகினை நேசி,
உள்ளமே தூய்மைதான் பார்…!
கிராமியப் பாணியில்…
ஆத்தங்கர கொளத்தங்கர
அலயவேண்டாம்,
அடுப்படியில் எடுத்துவச்ச
அண்டாத்தண்ணி அதுவேபோதொம்..
எடுத்துவச்சிக் கழுவுனாலே
எந்த அழுக்கொம் போவுமில்லா,
ஒடம்பு
எல்லாமே சுத்தமாவும் நல்லாத்தானே..
ஒடம்பு சுத்தம் ஆயிடவே
தண்ணி போதொம்- ஒன்
மனசு சுத்தம் ஆவிடத்தான்
உண்ம வேணும்,
பொய்பொரட்டு கலக்காத
உண்ம வேணும்..
ஒணந்துக்கோ-
உண்ம வேணும்…!
http://gogreenscene.wordpress.com/2011/03/23/world-water-day/
வழக்கம்போல் பன்முகங்காட்டி அசத்தி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
எதிர் பார்த்து படிக்கும் குறளின் கதிரில் இன்றும் அத்தனையும் அருமை.
குறளின் கதிர்கள் ஒளி வீசிப் பிரகாசிக்கின்றன. அத்தனை கவிதைகளும் முத்துக்களாய்..
கருத்துரைகள் வழங்கி வாழ்த்திய திருவாளர்கள்,
சச்சிதானந்தம். தனுசு, பார்வதி இராமச்சந்திரன் ஆகியோருக்கு
மிக்க நன்றி…!