அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம். (1)

5

சுபாஷிணி ட்ரெம்மல்

1. அறிமுகம்

photo (1)கற்றல் என்பது இளம் பிராயத்தோடு நின்றுவிடக் கூடிய ஒன்றல்ல. எந்த ஒரு சமூகம் கற்றலுக்கும் புதிய விஷயங்களின் தேடுதல்களுக்கும் தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளதோ அச்சமூகமே விரைந்த சமூக வளர்ச்சியை அடையக்கூடிய வலிமையைப் பெறும். ஒரு தனி மனித கற்றல் என்பது பள்ளிக் கூட, பல்கலைக்கழக கல்வி என்ற நிலையோடு நின்று விடாமல் தினம் தினம் புதிய விஷயங்களைக் கற்பதாக அமையும் போது அறிவும் அனுபவமும் விசாலமடைகின்றது. அதே சமயம் உலகம், அதன் தன்மை இவ்வுலகில் தனி மனிதராகிய நமது அங்கத்துவம் ஆகியவற்றிற்கும் மேலும் புதிய பொருள் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.

புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கு எவ்வாறு செய்தி ஊடகங்களும், கணினி தொழில்நுட்பங்களும் உதவுகின்றனவோ அதே போல அருங்காட்சியகங்களும் அமைந்திருக்கின்றன. எனது சொந்த அனுபவத்தில், எனது கற்றல், அதன் விசாலம் என்பதற்கு ஆதாரமாக அமைகின்ற விஷயங்களில் அருங்காட்சியகங்களும் இடம் பெறுகின்றன.

அருங்காட்சியகங்கள் என்றாலே பள்ளிச் சிறுவர்கள் சென்று வரும் இடம் எனவும், பள்ளி விடுமுறை காலங்களில் மாணவர் செல்லக்கூடியதோர் இடம் எனவும் பரவலாக நம் சமூகத்தில் சிந்தனை இருக்கின்றது. இது முற்றிலும் தவறான ஒன்றே. ஒரு குறிப்பிட்ட இனத்தின் வரலாறு, அதன் சான்றுகள், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வரலாறு, அதற்கானச் சான்றுகள், கருவிகள் பற்றிய குறிப்புகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், தொழில் நுட்ப வளர்ச்சி அதன் ஆதாரங்கள், மருத்துவம் – புதிய கண்டுபிடிப்புகள், மனித இனத்தோற்றம் பற்றிய செய்திகள், வணிகம், கடல் பயணங்கள், மனித நாகரிகத்தின் வளர்ச்சி, போர்கள், கலை படைப்புகள், சித்திரங்கள், சிற்பங்கள், அற்புதப் படைப்புகள், வாழ்வியல் ஆதாரங்கள், வானியல் ஆய்வு என, பல விஷயங்களைத் தக்க ஆதாரங்களோடு தேடிக் கண்டெடுத்து, சேகரித்து, அதனைப் பாதுகாத்து வரும் முக்கிய இடமே அருங்காட்சியகங்கள்.

எனது எல்லா பயணங்களிலும் நான் செல்லும் நகர்களில் உள்ள, என் ஆர்வத்தோடு இணைந்த அருங்காட்சியகங்களுக்குச் செல்வதை நான் பல ஆண்டுகளாகக் கடமையாகக் கொண்டிருக்கிறேன். பட்டியலிட்டால் ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களைப் பார்த்திருக்கிறேன் எனக் குறிப்பிடலாம். இவை அனைத்துமே எனக்கு ஏதாவது ஒரு புதிய செய்தியை வழங்கிக் கொண்டே இருப்பதால் அருங்காட்சியகங்கள் மேல் நான் கொண்டிருக்கும் ஆர்வம் மென்மேலும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது.

வரலாற்று விஷயங்களைச் சேகரித்து வைத்திருக்கும் அருங்காட்சியகங்கள் நம்மை காலத்தைக் கடந்து செல்ல வைக்கக் கூடியவை. இன்றைக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலையில் நம்மை வைத்துப் பார்த்து அக்காலச் சூழ்நிலையைப் பற்றிய அனுபவத்தைத் தரக்கூடியவை இவை. பல வேளைகளில் மூவாயிரம் ஆண்டுகால வளர்ச்சியில் கூட பல விஷயங்கள் இன்னமும் அதன் அடிப்படை மாறாமல் இருப்பதைப் பார்க்கும் போது மனித மனதின் வளர்ச்சியைப் பற்றிய பல விஷயங்கள் தெளிவாகின்றன. பல நாடுகளின் கலை, கலாச்சார பண்பாட்டு விஷயங்களை வெளிப்படுத்தும் அருங்காட்சியகங்களுக்குச் சென்று அங்குள்ள விஷயங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் போது மனித சமூகம் அது எந்த நாடாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும் எந்த மொழி பேசுவதாக இருந்தாலும் அடிப்படையில் பல விஷயங்களில் ஒற்றுமை கொண்டிருப்பதை கண்டு நான் மலைத்து நின்றதுண்டு. மனிதர்களுக்குள் வெவ்வேறு விஷயங்களுக்காகப் பிரிவினைகளும் வித்தியாசங்களும் இருந்தாலும் பல விஷயங்களில் இருக்கின்ற ஒற்றுமை மனிதர்கள், மனித இனம் என்பது அடிப்படையில் ஒன்றுதான் என்ற எளிமையான ஒரு சிந்தனைக்கு மீண்டும் நம்மை கொண்டு வந்து விடுகின்றது.

ஒரு வட்டத்திற்குள்ளேயே வாழும் போது அந்த வட்டத்திற்குள் நாம் அமைத்துக்கொண்டுள்ள விஷயங்கள் மட்டுமே முக்கியத்துவம் பெறுவதும் அவை கூறுகின்ற முடிவுகளே முடிந்த முடிவுகளாகக் கொள்ளப்படுவதும் நிகழக் கூடியதே. அறிவில் விசாலமும் தெளிவும் பெற விரும்பும் மனம் ஒரு வட்டத்திற்குள் சிறைபட்டுக் கிடக்க எண்ணாது. மாறாக புதிய விஷயங்களைத்தேடித் திரிந்து அதனால் கிடைக்கின்ற புதுத்தெளிவுகள் தருகின்ற விளக்கங்கள் பரந்த சிந்தனைப் போக்கை மட்டும் தருவதோடு நின்றுவிடுவதில்லை. புதிய வாய்ப்புகள் தினம் தினம், நொடிக்கு நொடி ஜனித்து வரும் இந்த புதிய உலகத்தில் ஒரு தகுதி வாய்ந்த அங்கத்துவம் வகிக்கும் மனநிலையை ஒரு தனி மனிதருக்கு இது வழங்குகிறது என நான் நம்புகிறேன்.

உலகின் பல நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களுக்குச் சென்றிருக்கும் அனுபவத்தால் இந்த அருங்காட்சியகங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குகின்ற வாய்ப்புகள் பற்றிய அனுபவங்கள் எனக்கு ஓரளவு அமைந்திருக்கிறது. பல அருங்காட்சியகங்கள் வெறும் பொருட்காட்சி மையமாக அருங்காட்சியகங்களை நிர்மாணிப்பதில்லை. உலகின் பல அருங்காட்சியகங்கள் ஆய்வுக்கூடங்களாகவே அமைந்திருக்கின்றன .

இவ்வகை அருங்காட்சியகங்கள் பல மொழிகளிலான ஒலிப்பதிவுக் கருவிகளைப் பார்வையாளர்களுக்கு வழங்குகின்றன. ஒவ்வொரு காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ள பொருளின், விரிவான விளக்கங்களைப் பார்வையாளர்கள் அவ்வொலிப்பதிவுக் கருவியின் மூலம் கேட்டு விரிவான விளக்கம் பெற உதவுகிறது. எழுத்தில் விளக்கம் என்பதோடு இந்த ஒலிப்பதிவாக அமைந்திருக்கும் விளக்கங்கள் அக்காட்சிப்பொருள் பற்றிய ஆழமான, அடிப்படையான விஷயங்களை வழங்குவதாக அமைகிறது. பல அருங்காட்சியகங்கள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் விழியப் பதிவுகளாக சில குறிப்பிட்ட துறையிலான குறும்படங்களைத் திரையிடுகின்றன. இவ்விதமான விழியப் பதிவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களைப் பற்றிய விளக்கங்களை விரிவான பார்வையில் விளக்கும் வண்ணம் அமைந்து பார்வையாளர்களுக்குக் கூடுதல் தகவல்களை வழங்குவதாக அமைகின்றன.

அருங்காட்சியகங்களுக்குச் சென்று வரும் போது அங்கே அமைந்துள்ள நூலகத்திலும் பார்வையாளர்கள் அக்குறிப்பிட்ட அருங்காட்சியகம் பற்றியும் அதன் சேகரிப்புக்கள் பற்றியும் அங்கு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் பற்றியும் குறிப்பிடும் நூல்களையும் பெற்றுக் கொள்ள பல அருங்காட்சியகங்கள் ஏற்பாடுகள் செய்திருக்கின்றன. ஒரு முறை சென்று பார்த்து வந்தோம் என்பதல்லாமல் வீட்டிற்கு வந்த பின்னரும் நாம் கற்று வந்த அவ்விஷயங்களைப் பற்றி மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள இவ்வகை நூல்கள் நமக்கு உதவுவதில் பெறும் பங்களிக்கின்றன. அருங்காட்சியகங்களின் அளவையும் அவை சேகரித்து வைத்திருக்கும் காட்சிப் பொருட்கள், ஆய்வுத்தகவல்கள் ஆகியனவற்றிற்கு ஏற்ற வகையிலும் ஒரு அருங்காட்சியகத்திற்காக நேரத்தை ஒதுக்க வேண்டியது அவசியமாகிறது. ஆய்வுத்துறையில் உள்ளோர் பலர் சில குறிப்பிட்ட அருங்காட்சியகங்களில் பல மணி நேரங்களையும் பல நாட்களையும் செலவிடுகின்றனர் என்பதும் உண்மை.

அருங்காட்சியகங்களுக்குத் தொடர்ந்து சென்று வரும் நான் எனது அனுபவங்களை, நான் பார்த்து பதிந்து வந்த விஷயங்களை வாசகர்களாகிய தங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது எல்லா அருங்காட்சியக அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள எத்தனை பதிவுகள் தேவைப்படுமோ என நினைக்கும் போது மனதில் ஐயம் வருகிறது. எத்தனை பதிவுகளாக இது அமையக் கூடும் என்றும் தெரியவில்லை. எனினும் முடிந்த வரையில் கிடைக்கின்ற நேரத்தில் அவ்வப்போது என் தகவல் அனுபவச் சேகரிப்புகளை இத்தொடரில் பகிர்ந்து வர முயற்சிக்கிறேன் இத்தொடர் இதுவரை அருங்காட்சியகங்கள் மேல் ஆர்வம் இல்லாதிருப்போருக்கு புதிய பார்வையையும் ஆர்வத்தையும் வழங்கினால் அதுவே இத்தொடரின் நோக்கத்தை அடைந்த திருப்தியை எனக்கு அளிக்கும்.

சரி, அறிமுகம் போதும் என நினைக்கிறேன். இனி அருங்காட்சியகங்களுக்குச் செல்வோம். இத்தொடரின் அடுத்த பகுதியில் உங்களை ஒரு அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் செல்கிறேன்.

தொடரும்..

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம். (1)

  1. இளைய சமுதாயத்திற்கும், குறிப்பாக மாணவர்களுக்கும் மிகவும் பயன்படக்கூடிய ஒரு தொடரை மதிப்பிற்குறிய சுபாஷிணி அவர்கள் ஆரம்பித்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அருங்காட்சியகம் என்றாலே காணுதற்கறிய பொருட்களையெல்லாம் அங்கே காணமுடியும். புத்தகத்தில் படித்ததைக் கண்ணால் காணமுடியும். இருவாரம் முன்பு தஷிணேஷ்வர் சென்ற போது பேலூர் மடத்தில்  இயங்கும் அருங்காட்சியத்தில் வரலாற்றுச் சுவடுகளையும், நமது நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் காணும் வாய்ப்பு கிட்டியது. அங்கே சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்ஸர், சுவாமி விவேகானந்தர் மற்றும் அவரது சீடர்கள் இவர்கள் உபயோகப்படுத்திய அனைத்துப் பொருட்களும், ஆவணங்களும், உலகின் தலைசிறந்த தலைவர்களோடு தொடர்பு கொண்ட கையெழுத்திட்ட பிரதிகளும் இன்றும் சிறுதுளி மாசில்லாமல் பாதுகாக்கப் பட்டு வருவதைப் பார்த்து வியந்தேன். உலக மக்கள் அனைவரையும் வரைபடத்தில் (World Map) இந்தியாவை அடையாளம் காணச்செய்த சுவாமிஜியின் தலைப்பாகையும், நீண்ட சிவப்பு அங்கியும் இன்றும் பத்திரமாக இருக்கிறது.

    18-03-2013 (Monday) அன்று, ‘The Hindu’ நாளிதழில் ‘Tamil classics on the Net’ என்ற தலைப்பில், தங்களைப் பற்றி வெளியான கட்டுரையைப் படித்து இருக்கிறேன். தங்ககளது தொடர் வல்லமைக்கு மேலும் வல்லமை சேர்க்கும் என எதிர்பார்க்கிறேன். அகம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்.

  2. அறிமுகமே அருமை. உலக வரலாறுகளை, மனித சமுதாயத்தின் பயணத்தில் மைல் கல்லாக அமைந்த நிகழ்வுகளை ஒரு புதிய கோணத்தில் அறிந்து கொள்ளும் ஆவலுடன் அருங்காட்சியகங்கள் பற்றி அறியக் காத்திருக்கிறேன். நன்றி.

  3. பல வேறுபட்ட தகவல்கள் இக்கட்டுரையில் வெளிவரும் வகையில் தொடரை எழுத நினைத்திருக்கின்றேன் திரு.சச்சிதானந்தம்.  

  4. ‘ஒளிபடைத்தக் கண்ணினாய் வா! வா!வா!’

    தங்களின் கருத்து அர்த்தம் உள்ளது!
    அத்தனை இடங்களுக்கும் எங்களை அழைத்துச் செல்லவிருப்பது இன்பம் அளிக்கிறது.

    மிக்க நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *