Blog

  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! (31)

    31. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! மூஸியோ டி செரா(2), மட்ரிட், ஸ்பெயின்

    சுபாஷிணி ட்ரெம்மல்

    ​மெழுகுச் சிலைகளில் பிரபலமான அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோரின் உருவத்தை வடித்து வைத்து ​இதனைக் காட்சிக்கு வைப்பதே இத்தகைய அருங்காட்சியகங்களின் முக்கிய நோக்கம். ஒவ்வொரு நாட்டின் சூழலிலும் அங்கே பிரபலமாகக் கருதப்படுவோர் இந்த உருவச் சிலை வடிவங்களில் இடம்பெறுகின்றனர். உலகப் பிரசித்தி பெற்ற மனிதர்களின் சிலைகளை உருவாக்கும் அதேவேளை உள்ளூர் அரசியல், சினிமா, சமூக, வரலாற்று நிகழ்வுகளில் முக்கியப் பங்கெடுத்தோர் இத்தகைய மெழுகு உருவச் சிலைகளாக இவ்வகை அருங்காட்சியகக் கூடங்களில் காட்சிக்கு நிற்பர். அர்சியல் தலைவர்களில் ஒபாமா, தற்போது இத்தகைய அனேக மெழுகு அருங்காட்சியகங்களில் காட்சி தருகின்றார். நடிகர்களில் ஆஞ்சலினா ஜூலி அவர் கணவர் நடிகர் ப்ராட் பிட் இருவரும் இதே வகையில் நான் பார்த்த வேறு மெழுகு அருங்காட்சியகங்களிலும் காட்சியில் இருக்கின்றனர். இதே போல காந்தியும். இரண்டு வெவேறு அருங்காட்சியகங்களில் காந்தியின் மெழுகுச் சிலையப் பார்த்திருக்கின்றேன்.

    மூஸியோ டி செரா, காதலர் தினமாகக் கொண்டாடப்படும் பெப்ரவரி 14ம் தேதி 1972ம் ஆண்டு பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. 2000 சதுர அடி விரிவான கட்டிடத்தில் இரண்டு மாடித்தளங்களில் இந்த அருங்காட்சியகக் கட்டிடம் அமைந்துளளது. எந்த அளவிற்கு வரலாற்று பிரபலங்களின் சிலைகள் இந்த அருங்காட்சியகத்தை அலங்கரிக்கின்றனவோ அதே அளவு பொழுது போக்கு அம்சங்களான காற்பந்து, சினிமா துறையைச் சார்ந்த பிரபலங்களின் சிலைகளும் இங்கு நிறைந்திருக்கின்றன.

    mc8
    பைரட் ஆஃப் கரீபியன் ​(ஜூலை 2013)

    பல பெண்களின் கனவு நாயகரான ஜோர்ஜ் க்ளூனி, ப்ராட் பிட் ஆகியோரும் இளைஞர்களின் கனவு தேவதைகளான ஆஞ்சலினா ஜூலி, பெனலோப் க்ரூஸ் போன்றோரும் இங்கு காட்சியளிக்கின்றனர். ஸ்பெயினில் இரண்டு உலகத் தரம் வாய்ந்த காற்பந்து குழுக்களான ரியால் மட்ரிட் குழுவின் பிரபலங்களும் எஃப்ஸி பார்ஸலோனா குழுவின் பிரபலங்களும் கூட இந்த அருங்காட்சியகத்தில் மெழுகு வடிவத்தில் உருவச் சிலைகளாக காட்சியளிக்கின்றனர்.

    சில பிரபலங்கள் தங்கள் உருவச் சிலைகள் தயாராகி இங்கு காட்சிக்கு வைக்கப்படும் நிகழ்வு நடைபெறும்போது நேரில் மூஸியோ டி செரா வந்து சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் நடக்கின்றது. உதாரணமாக ரியால் மட்ரிட் காற்பந்து குழுவில் பிரபலமான போர்த்துக்கீஸியரான ரொனால்டோ, தனது உருவச் சிலை இந்த அருஙகட்சியகத்தில் இடம் பெறத் தயாரான வேளையில் அந்த நிகழ்வுக்கு நேரடியாக வந்து இவ்விழாவைச் சிறப்பு செய்தார் என்ற செய்தியையும் இணையத்தில் காணலாம்.

     mc6

    அமெரிக்க ஜனாதிபதிகள் ​(ஜூலை 2013)


    ​​
    மெழுகுச் சிலைகள்​ (Wax sculptures) என நாம் அறிந்திருக்கும் இவ்வகை உருவச் சிலைகள் ஐரோப்பாவில் பண்டைய காலத்தில் அரச குடும்பத்தினரில் யாரேனும் இறக்கும் போது அவர்களை ஒத்த வடிவில் உருவம் அமைத்து மரியாதைச் செலுத்தும் நோக்கில் ஆரம்பகாலத்தில் உருவாகியது. மிகப் பழமையான இவ்வகை உருவச் சிலை எனத் தேடினால் இப்போது நமக்குக் கிடைப்பது இங்கிலாந்தின் லண்டன் நகரில் வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் இருக்கும் British royal wax effigies சேகரிப்புக்களைக் குறிப்பிடலாம். இதில் குறிப்பாக மன்னர் 3ம் எட்வர்ட் (1377) அவர்களின் மெழுகு உருவத்திலான உருவச் சிலையும் உள்ளது.

    ​19ம் நூர்றாண்டில் மேடம் தூஸோ ​(Madame Tussauds) இத்துறையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டவர். அவரது உருவாக்கங்களை காட்சிக்கு வைக்கும் வகையில் ஒரு அருங்காட்சியகத்தை அவர் நிறுவினார். அதுவே லண்டன் பேக்கர் ஸ்ட்ரீட்டில் இருக்கும் மேடம் தூஸோ மெழுகுச் சிலைஅருங்காட்சியகம். இங்கு நடப்பதற்குக் கூட இடம் கூட குறைவு. அந்த அளவிற்கு எல்லா பகௌதிகளையும் நிறைத்துக் கொண்டு இவ்வகை சிலைகள் நிறைந்திருக்கின்றன. மேடம் தூஸோ அவர்களின் பெயரிலேயே இங்கிலாந்து தவிர்த்த பல இடங்களில் மெழுகுச் சிலை அருங்காட்சியகங்கள் உருவாகின. சில தனியார், அல்லது அரசாங்க முயற்சிகளினால் உருவான இவ்வகை அருங்காட்சியகங்களும் உலகின் பல நாடுகளில் காணக்கிடைக்கின்றன.

    mc7
    தி லாச்ட் சப்பர் ​(ஜூலை 2013)

    நாம் விரும்பும் பிரபலங்களை நேரில் சந்திக்க வேண்டும், அவர்கள் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்து அது சாத்தியமல்ல என நினைக்கும் பலருக்கு இவ்வகை அருங்காட்சியகங்கள் மகிழ்ச்சி தருபவை. நேரில் இவ்வகை அருங்காட்சியகங்கள் செல்லும் போது மக்கள் ஆங்காங்கே தமக்குப் பிடித்தோரின் சிலைகளின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாகச் செல்வதைக் கண்டு ரசிக்க முடியும். ஒரு வகையில் மக்களின் மகிழ்ச்சிக்காகத்தானே இவ்வகையிலான அருங்காட்சியகங்களும் அமைக்கப்படுகின்றன!

    இத்தகைய அருங்காட்சியகங்கள் சென்று வரும் போது பலரை ஒரே இடத்தில் பார்த்த ஒரு திருப்தியும் ஏற்படும் 🙂 அடுத்த பதிவில் உங்களை மற்றுமொரு நாட்டில் வேறொரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கின்றேன்.

    Share
  • மனோன்மணீயம் காட்டும் சிவகாமி சரிதை – பகுதி 2

    -முனைவர் இராம. இராமமூர்த்தி

    sundaranar

    பேரா. பெ. சுந்தரம்பிள்ளை

    பாண்டிய மன்னன் சீவகவழுதிக்கும் சேரவேந்தன் புருடோத்தமனுக்கும் போர் மூளும் சமயம் ஊரெங்கும் ஒரே பேராரவாரம். இதனைக் கேட்ட மனோன்மணி இதுபற்றித் தன் தோழி வாணியிடம், ”ஊரில் என்ன ஆரவாரம்!” எனக் கேட்கின்றாள். அவள் கவனத்தைத் திருப்ப எண்ணிய வாணி, பிற செய்திகளைப் பேசுகின்றாள். அப்போது மனோன்மணி வாணியை நோக்கி, “நின் இசைவிளங்கு குரலால் பாடுக!” எனச் சொல்லுகிறாள். அப்பாடலே இந்நூலில் இடம்பெற்றுள்ள ’சிவகாமி சரிதை’யாகும். இக்கதை, மனோன்மணீய நாடகத்திற்கு நேரடித் தொடர்பில்லாமல் இடம்பெற்றுள்ள கிளைக் கதையாகும்.

    Oliver Goldsmith

    கவிஞர் ஆலிவர் கோல்ட்ஸ்மித்

    இச்சிவகாமி சரிதை மனோமணீய நூலின் முதற்பதிப்பில் இடம்பெறவில்லை. இரண்டாம் பதிப்பிலேயே இடம்பெற்றதென்பர். இக்கதையும் ஆங்கிலக் கதையின் தழுவலே என்று கூறுவாருமுளர். இதன் மூலக்கதை ஆங்கிலக் கவிஞர் ’Oliver Goldsmith’ எழுதிய ‘The Vicar of Wakefield’ என்னும் நூலில் கிளைக் கதையாக இடம்பெற்றுள்ள “Edwin and Angelina, a ballad” என்பதைத் தழுவி அமைந்துள்ளது. Edwin சிதம்பரமாகவும், Angelina சிவகாமியாகவும் சுந்தரம்பிள்ளையால் படைக்கப்பெற்றுள்ளனர். சிவகாமி சரிதை மனோன்மணீய நாடகத்தின் மூன்றாம் அங்கம், மூன்றாம் களத்தில் வாணியின் கூற்றாக அமைந்துள்ளது.

    சிவகாமி சரிதையையும், Edwin and Angelina, a ballad கதையையும் ஒருங்குவைத்துக் கற்பார், சிவகாமி சரிதை இந்த ஆங்கிலக் கதையின் தழுவலே என்பதை நன்கறிவர். தொடக்கமுதல் இறுதிவரை இத்தழுவலின் சாயல் நன்கு புலப்படுகின்றது.

    எனினும், ஈண்டும் சுந்தரம்பிள்ளை தமிழ் மரபையும், தமிழ் நாகரிகத்தையும் மிக நன்றாகப் போற்றியுள்ளார். கதை நிகழுமிடம் பூம்புகார். கதைத் தலைவியான சிவகாமியின் தாய்வழிப் பாட்டிக்கு மக்கள் மூவர்; இருவர் பெண்டிர்; ஒருவர் ஆண். பெண்களுள் ஒருத்தியின் மகள் சிவகாமி; மற்றொருத்தி மகப்பேறில்லாதவள். ஆனால் பெரும் செல்வமுடையவள். அச்செல்வம் முழுவதையும் அவள் சிவகாமிக்கே தந்தாள். ஆண் மகனுக்குச் சிதம்பரம் என்ற ஒரே மகன். சிவகாமியும், சிதம்பரனும் உடன்பிரியா நிழல்போல் ஒன்றாக வளர்ந்தனர். ஒருவரை ஒருவர் காதலித்தனர்.

    “ஆனாலும், யான் பெற்ற பொருட்செல்வத்தால் தலை மயங்கினேன்; செருக்குற்றேன். தலைவர் என்ற அவரது நிலையை மறந்தேன். இதனால் அவர் என்னைவிட்டுச் சென்றார். பொருள்கருதி மணம் பேச வந்தனர் பலர். பின்னரே எனக்கு உண்மை புலனாயிற்று. எனவே அவரைத் தேடிப் பலவிடங்களிலும் அலைந்தேன்; அவரைக் காணவில்லை. இறுதியாக இக்காட்டிற்கு வந்தேன்” என்று சிவகாமி ஓர் முனிவரிடம் கூறுவதாக இக்கதை நடைபோடுகின்றது.

    சிவகாமி ஆண் வேடத்தில் முனிவரிடம் தன் துயரக் கதையினைக் கூறுகின்றாள். அவள் வேடம் கலைகின்றது. ஆற்றொணாது கண்ணீர் பெருக்குகின்றாள் சிவகாமி. மனம் வெறுத்து வெளியேறிய சிதம்பரனே ஆண்டு முனிவர் வேடத்தில் உள்ளான். அவனிடம் தன் கதையைக் கூறிவந்த சிவகாமி, முனிவர் குளிர்காய மூட்டிய தீயில் வீழ முற்படவும் ”சிவகாமி! யானுனது சிதம்பரனே!” எனச் செப்பினான் முனிவர் வேடத்தில் இருந்த சிதம்பரன். இருவரும் ஓருருவமாய் இணைந்தனர். இதுவே சிவகாமி சரிதை. ‘உண்மைக் காதல் வெல்லும்!” என்ற கோட்பாட்டை, வாணி இச்சரிதை வாயிலாக மனோன்மணிக்கு உணர்த்துகின்றாள். எனவே, மனோன்மணி சேரவேந்தன்பால் கொண்ட காதலும் வெல்லும் என்பதை வாசகர்கட்குக் குறிப்பால் உணர்த்துகின்றார் நூலாசிரியர்.

    மேலும் நாயகியாகிய உயிர் – பசு – சீவான்மா, மாயையின் வயப்பட்டு அல்லலுற்று இறுதியில் தலைவனை – பதியை – பரமான்மாவை அடைவதை உணர்த்துவது சிவகாமி சரிதை. இவ்வண்ணம் நுண்பொருளாகிய தத்துவக் கருத்தையும் தன்னுள் கொண்டிலங்குவது இக்கதை.

    சிவகாமியைச் சிதம்பரன் தீயில் விழாது தழுவிக் கொண்டாற்போல, எட்வினும் ஏஞ்சலினாவும் இணைந்தனர். அதனை,

    “Forbid it, Heaven!” the Hermit cried,
    And clasp’d her to his breast:
    The wond’ring fair one turn’d to chide—
    ’Twas Edwin’s self that prest.

    என்ற செய்யுள் வரிகள் நமக்குணர்த்தும். மேலும் அடுத்த பாடல்,

    “Turn, Angelina, ever dear!
    My charmer, turn to see
    Thy own, thy long lost Edwin here,
    Restor’d to love and thee.

    என்பதாகும்.

    ’Thy own, thy long lost Edwin here’ என்ற அடியின் தழுவலே ’சிவகாமி யானுனது சிதம்பரனே!’ என்னும் செய்யுளடி. உண்மைக் காதலும், காதலரும் உலகெங்கிலும் ஒன்றுபோலவே உள்ளனர் என்பதனை ஆலிவர் கோல்ட்ஸ்மித்தும், நம் பேராசிரியர் சுந்தரம்பிள்ளையும் ஒன்றுபோலச் சுட்டியுள்ளனர். இதனை எண்ணுங்கால் ’சான்றோர் சான்றோர் பாலராப’ என்ற புறநானுற்றுப் புலவனின் கருத்தும், ‘Great minds think alike’ என்ற ஆங்கிலப் பழமொழியும் நம்முன் தோன்றுகின்றன.

    இங்ஙனம் மனோன்மணீய நூலும் அதன்கண் இடம்பெற்றுள்ள சிவகாமி சரிதையும் கற்பார்க்குக் கழிபேருவகை ஊட்டுவதுடன் அமையாது, அவர்தம் அலைபாயும் மனங்களையும் பக்குவப்படுத்தும் பான்மையது என்றால் அவ்வுரை வெறும் புகழுரையன்று! முற்றிலும் உண்மையேயாம்.

    இறுதியாக ஓருரை. மணிவாசகரின் திருக்கோவையாரைப் பற்றி அறிஞர்கள் கூறும் கருத்துரை நம் மனோமணீயக் காப்பியத்திற்கும் முற்றிலும் பொருந்தும். திருக்கோவையார், “இலக்கிய நயங் காண்பார்க்கு ஓரினிய இலக்கிய நூல்; சமயக் கருத்துக்களைத் தேடுவார்க்கு அஃதொரு சமயநூல்; தத்துவ ஆய்வாளருக்குத் தத்துவ நூல்; இறைநிலை காண விழைவார்க்கு அஃதொரு வழிகாட்டி; பேரின்ப வீட்டிற்கு அஃதொரு திறவுகோல் என்பர் அறிஞர்பெருமக்கள். இப்பாராட்டுரைகள் அனைத்தும் மனோன்மணீயத்திற்கும் நன்கு பொருந்துவதைக் காணலாம்.

    எனவே, தமிழ்நலங்காண விரும்புவாரும், தமிழ் மாணாக்கர்களும் இவ்வினிய நாடக இலக்கியத்தைக் கற்று இன்புறுக!

    (முற்றும்)

     

    Share
  • படுகொலை செய்யப்பட்ட கவிதை!

    செல்வி. டிமாஷா கயனகி

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

     

    dimasha

    செல்வி. டிமாஷா கயனகி

      (சம்பவம்: இலங்கை, எல்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி செல்வி. டிமாஷா கயனகி, தனது கல்வி நடவடிக்கைகளுக்காகக் கொழும்பு செல்வதற்காக 24.05.2014 அன்று விடிகாலை 3.30 மணிக்கு, எல்பிடிய பஸ் நிலையத்துக்கு வந்தவேளை, அங்கு நின்றிருந்த இராணுவ வீரனொருவனால் அருகிலிருந்த பாழடைந்த கட்டிடமொன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். மாணவி அங்கிருந்து தப்பிக்க முற்பட்ட வேளையில் இராணுவ வீரனால் கத்தியால் பல தடவை குத்தப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். மோப்பநாயின் உதவி கொண்டு, தப்பித்துச் சென்ற குற்றவாளியைக் கைது செய்துள்ள போதிலும், குற்றவாளி இராணுவத்தினன் என்பதால் ‘இராணுவ வீரனது காதலை மறுத்ததால் அவனுக்கு ஏற்பட்ட சடுதியான கோபத்தின் காரணமாகவே கொலை நிகழ்ந்துள்ளது. திட்டமிட்டுச் செய்ததல்ல’ என இராணுவத் தரப்பும், இலங்கைக் காவல்துறையும் சம்பவத்தை மூடி மறைக்கவும், குற்றவாளியைத் தப்பிக்கச் செய்யவும் முயற்சிக்கிறது.)

    கடந்த 24.05.2014 அன்று ஒரு இராணுவ வீரனால் படுகொலை செய்யப்பட்ட 21 வயதான பல்கலைக்கழக மாணவி செல்வி. டிமாஷா கயனகி மரணிக்கும் முன்பு இறுதியாக எழுதிய கவிதை இது.

    எப்போதேனுமொரு நாள் இவையெல்லாவற்றையும்
    விட்டுச் செல்லவேண்டியிருக்கும்!
    எவரும் மகிழ்ச்சியாகச் செல்லும் பயணமல்ல அது                 dimasha0
    எனினும் அதைத்
    துயரமின்றிச் செல்லமுடிந்தால்
    எவ்வளவு நன்றாகவிருக்கும்!

    அந்நாளில்
    நினைவில் வராதோர் அனேகர்
    எனினும்
    நினைவில் வரக்கூடிய சிலரில்
    நீங்கள் இருப்பீர்களென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது

    நான் மரிக்கும் நாளில் வாருங்கள்!
    என்னைப் பார்க்கவென்றே வந்துசெல்லுங்கள்!
    ஒருபோதும் சிந்தியிராத கண்ணீரில்
    ஒரு துளியை விட்டுச் செல்லுங்கள்!

    இரு விழிகளும் இறுக்கமாக மூடப்பட்டிருந்த போதிலும்                          dimasha2
    குளிர்ந்த சரீரத்துடனிருந்த போதிலும்
    முன்பு பழகியதையெண்ணி                                                                           
    நெற்றியிலொரு முத்தமிடுங்கள்!                                                                           

    ஆயிரம் கண்கள் பார்த்திருக்கும்                                               
    எனது நற்குணங்களை விமர்சிக்கும்
    பதிலாக எதுவும் பேசாது
    ஒரு பிடி மண்ணிட்டுச் செல்லுங்கள்!                                                 

    கல்லறையிலிருந்து நீங்கள்
    நீங்கிச் செல்கையில்
    மாபெரும் தனிமையை நான் உணரக்கூடும் – எனவே
    ஒரு பூவை மட்டும் வைத்துவிட்டு
    நீங்கள் செல்லுங்கள் திரும்பிப் பாராது!

     

    Share
  • பகல் நீ!

    -பிச்சினிக்காடு இளங்கோ   

    அறுபதைத் தொடும்போதுதான்                                                          Bhagat-Singh
    உன்னைத் தொட்டேன்
    மன்னிக்கவும்!

    செவிவழியாய்ச் சேர்த்தவை
    ஏராளம் எனினும்
    கண்வழியாய் நீ
    என்மனம் புகக்

    கவிஞர் மலர்மகனே காரணம்!

    பொருளே வாழ்க்கையென
    வாழுவோர்க்கிடையில்
    பொருளுடையதாக வாழ்க்கையை
    ஆக்கப் பார்க்கிறேன்…

    அறுபதை நெருங்கியும்கூட
    ஆகவில்லை அந்தக்கனவு!

    அகவை இருபத்துநான்குக்குள்
    அகப்பட்டுவிட்டது உனக்கு!
    பொருளுடையதாய் மட்டுமல்ல
    புரட்சியுடையதாய்…
    புகழுடையதாய்!

    அழுக்கும்
    இழுக்கும் சேராப்
    புரட்சி நெருப்பாய்
    நூறுவிழுக்காடு
    வாழ்ந்த சூரியன் நீ!

    நீ
    மரித்ததற்குப்பின்
    இன்னும்
    பிறக்கவில்லையே ஏன்?

    சூரியன்
    மரிப்பதுமில்லை!
    பிறப்பதுமில்லை!

    உன்னைப் பேசுகிறவர்களாக
    வாழ்கிறோம்
    உன்னைப்போல்
    வாழ்கிறவர்களாக இல்லை!

    புரட்சியைக்
    கொச்சைப்படுத்தலைத் தவிர
    புரட்சியின் எச்சம்
    எதுவுமே இல்லை

    புரட்சி
    அடைமொழியாய்ச்
    சுவர்மொழியாய் வாழ்கிறது!

    பயம்
    உன்னைக்கண்டுதான்
    பயந்திருக்கிறது!
    மரணம்

    உனக்காகத்தான்
    அழுதிருக்கிறது!

    நகலெடுக்க முடியாத
    அசல் நீ!
    நிழலே இல்லாத
    நிஜம் நீ!
    சிறையைத் திருத்திய
    சீர்திருத்தம் நீ!
    பயணத்திற்குக் கிடைத்த
    பகல் நீ!

    உன் நாத்திக விளக்கம்
    ஆறுபடை வீடிருந்தும்
    அந்நிய மண்ணில்
    அடிபடும் தமிழர்க்குப் பாடம்!

    காந்திக்கு
    நீ வைத்த கேள்விகள்
    அறிவின் சூடு!

    விடம் குடித்தும்
    நேரம் நெருங்கியும்
    படித்துக்கொண்டிருந்தான்
    சாக்ரடீஸ்!

    நீயும்
    மரணம் வரையிலும்
    படித்துக்கொண்டிருந்தாய்
    மாவீரனை!

    நீ படித்தவன்!
    அநீதி கண்டு துடித்தவன்!
    உண்மையை வெடித்தவன்!

    இந்திய மண்ணில்
    நீதான் மாவீரன்!

    (14.12.2011 மலர்மகன் எழுதிய
    பஞ்சாப் சிங்கம் பகத்சிங் நூலைப்படித்ததும் எழுதியது)

     

    Share
  • மறக்க முடியாத மதுரை – 3

    இசைக்கவி ரமணன்

    மதுரையில் கோரிபாளையம் மிகவும் சுவாரசியமான இடம். கே.கே. நகரிலிருந்து சைக்கிளில், சினிப்ரியா தியேட்டரைத் தாண்டி, வலதுபுறம் திரும்பி, வாய்க்கால் வழியாக அமைதியும், மரங்களும் கப்பிக் கிடக்கும் காந்தி நினைவாலயத்தைத் தாண்டி, வலது பக்கம், சந்தடியும், புழுதியும் மிகுந்த தமுக்கம் மைதானம் பக்கம் செல்லாமல், இடதுபுறம் திரும்பினால் கோரிபாளையம்தான். வைகை ஆற்றுக்கு அந்தப் புறம் இருப்பதால், இதை வடகரை என்றும் சொல்வார்கள்.

    நாம் சாலையைக் கடந்து எதிர்ப்பக்கம் செல்கிறோம். இரவு 12 மணிக்குமேல் இருக்கும். மதுரையில் நள்ளிரவு, நடுப்பகல் இவற்றுக்கு அதிகம் வேறுபாடு கிடையாது! பகலில் கொளுத்தும்; இரவில் பிழியப் பிழியப் புழுங்கும், அவ்வளவுதான்! ராஜ மாதங்கி அரசோச்சும் மதுரை ஒருபோதும் தூங்காது. ராத்திரியின் வசியப் போர்வையில் கட்டிடங்களும் களைத்திருக்கும் காட்சியை நான் உலகெங்கும் கண்டிருக்கிறேன், மதுரையைத் தவிர! மாடுகள் வாலசைத்தபடி, அசைபோட்டபடிப் படுத்திருக்கும். கண்கள், சாலை மற்றும் வாகன விளக்கொளியில், நெருப்புக் கங்குகள் போல் ஜொலிக்கும். கட்டை வண்டியில், ஒருவன் தூங்கிக் கொண்டிருக்கிறான். அசந்திருக்கிறான் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த அசதியிலும் ஒரு கூச்சம் இழையோடுகிறது! மதுரை, மறவரின் வீரமண். இன்றைக்கும், கால்வைத்தாலே ஜிவ்வென்று ஏறுகிறது எனக்கு.

    நடு ராத்திரியில், கோரிப்பாளையத்தில் எனக்கென்ன வேலை? வேலைக்கு நடுவே ஓர் இடைவேளை! ஆம், அப்போது இந்து பத்திரிகையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அலுவலகத்திற்கு மிகவருகே வீடு. வெற்றிலை துப்ப (புகையிலை என்று படிக்கவும்!) வெளியே வந்தால் வீட்டுக்காரி பார்த்து விடுவாள்! இன்றும் உற்ற நண்பர்களாகத் தொடரும் சக ஊழியர்கள், ஜன்னல் வழியே சைகையிலேயே சமையல் என்ன என்பதைக் கேட்டுக்கொண்டு விடுவார்கள். அலுவலகத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் இனிப்பை அள்ளிக் கொண்டு வந்து விடுவார்கள்! அருகாமை, அணுக்கம் இரண்டும் சேர்ந்தே இருந்தன எங்கள் மதுரை வாழ்க்கையில்.

    எல்லோரும் தூங்கிவிட்ட பிறகு, படு சுறுசுறுப்பாய் இயங்குவதே பத்திரிகை அலுவலகம். இரவில்தான் அச்சுவேலை. இயந்திரம், மளமளவென்று அச்சிட, அந்தக் காதுபிளக்கும் ஓசைக்கு நடுவே ஊழியர்கள், பரபரப்பாகவும், உற்சாகமாகவும் வேலை செய்வதைப் பார்க்கும்போதே நமக்கும் புத்துணர்ச்சி ஏற்படும். ஆறு பிரிவுகளாக இருக்கும் இயந்திரம்; அடிக்கடி மாநில சுயாட்சி கேட்டு முரண்டு பிடிக்கும்; அதைக் கவனிப்பதோடு மட்டுமல்லாமல் உடனே சரிசெய்ய வேண்டும். பேச முடியாது. சீழ்க்கைதான் அச்சாலய மொழி. மைதோய்ந்த விரலை வாயில் வைத்துச் சீட்டியடித்தால் மறுநாள் தர்மாஸ்பத்திரிதான்! நாலு பேர் அடிக்கக் கூடிய சீழ்க்கையை ஒருவரே விரல்போடாமல் அடிப்பதைப் பத்திரிகை அச்சிடும் இடத்தில்தான் பார்க்கலாம். இந்தச் சைகைகளால்தான் தவறுகளை உடனே சரிசெய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், பல நூறு பிரதிகள் வீணாகிவிடும். மறுநாள் தலைமை அலுவலகத்து சோடாபுட்டிக் கண்ணாடிக் கணக்கர்களுக்குப் பதில் சொல்வதற்குள் உயிரே போய்விடும். பழுதுபட்ட பிரதி ஏதேனும் வெளியே போய்விட்டால் இன்னோர் ஆபத்து; எங்கோ சத்திரப்பட்டி கிராமத்திலிருந்து எப்போதோ ஓய்வுபெற்ற ஒருவர் ஒரு தபால் கார்டில், ‘இதுதானா இந்து?’ என்ற தலைப்பில் சிற்றெறும்புக் கையெழுத்தில் கம்பராமாயணத்தை எழுதி அனுப்பிவிடுவார். பலமைல் தூரம் சைக்கிள் மிதித்து, வயக்காட்டில் அதைத்தள்ளிக் கொண்டுபோய் அவரது என்றைக்கும் கட்டி முடியாத வீட்டுக்குச் சென்று அவர் காலில் விழவேண்டும். இந்த மரியாதையை மிகவும் ரசித்த பிறகே அவர், ‘அடடா! நான் ஒண்ணுமே பெரிசா எழுதலீங்களே! இதுக்குப் போயா இத்தன தொலவு வருவீங்க?’ என்பார் அப்பாவிபோல! ‘இது எங்க கடமை’ என்று நாங்களும் சிவாஜி மாதிரிக் கனிவாகச் சொல்வோம். கூடவந்த ஏஜெண்டோ எரிச்சலோடு, ‘சார், இவுரு மூணு மாசமா சந்தாவே கொடுக்காம..பேச்சப் பாரு..’ என்று சில ‘பிரத்யேக’ அடைமொழிகளை முணுமுணுத்துவிட்டு நான் பக்கத்தில் இருப்பதைத் திடீரென்று உணர்ந்து வெட்கப்பட்டுத் தலையைச் சொறிந்து கொள்வார்! உள்ளே எங்களுக்குக் காப்பி கொடுக்க முடியுமா என்று பார்க்கப் போன வாசகர், தன் முயற்சியில் (நல்ல காலமாய்த்) தோற்றுத் திரும்புவார். அதை மறைத்துக் கொள்ள ஓர் ஏவு கணையை நம் மீது வீசுவார். ‘இன்டுல வரவர நீசஸ் (நியூஸ் என்பதற்கு இவரே பன்மை பாவித்து அதை நியூஸஸ் ஆக்கி அதை வக்கணையாக நீசஸ் என்கிறார்!) எல்லாம் ஒண்ணும் சரியா இல்ல. கொஞ்சம் பாத்துக்கிடணும்.’ அவர் எழுதிய அந்தக் கார்டோடு அவரையும் அப்படியே கிழித்துப் போடலாம் போலத் தோன்றும். ‘ஆகட்டுங்க, அவசியம்,’ என்று சொல்லி விட்டு வருவோம். ‘ஒங்களுக்கும் வேல இல்ல ஒங்க ஆபீசுக்கும் வேற வேல இல்ல,’ என்று சலித்துக் கொண்டே வருவார் சத்திரப்பட்டி சண்முகவேல்.

     ram1

    குடிசைகளால் நெருக்கப்பட்ட ஒரு சந்தில் சைக்கிளை ஒருமாதிரியாகத் தள்ளிக் கொண்டு வரும்போது, எதிரே கருப்பு மின்னலாய், அப்போதுதான் பிறந்திருந்த பன்றிக் குட்டி ஒன்றை நெஞ்சோடு அணைத்துக் கொஞ்சிக் கொண்டு துள்ளி வந்தாள் ஒருத்தி! அதுபோல் அழகான இளம்பெண்ணை இதுவரை நான் காணவில்லை! எனக்கென்னமோ பராசக்திதான் அந்தச் சேரிப்பெண்ணாக வந்து என் சித்தத்தை நிரந்தரமாகச் சீண்டிவிட்டுப் போனதாகவே தோன்றுகிறது. நிக்கல் போன்ற ஓர் உலோகத்தில் அவள் மூக்குப்பொட்டு அணிந்திருந்தாள். அது, மொத்தக் கருப்பையும் தூக்கலாய்க் காட்டியது. அந்தக் கருமையின் பளபளப்பும், மின்னற் பற்களும், சோழி குலுங்கும் சிரிப்பும், பேரழகின் ராஜாங்கத்திலிருந்து நான் பேதைபோல் அவளுக்குத் தென்பட்டதும் என்னால் என்றும் மறக்க முடியாது. தரிசனம் என்பது எங்கோ தியானத்திலோ, மலையுச்சிக் கோவிலிலோதான் நேரவேண்டியது என்பதில்லை. நெருக்கடியான சந்தில், நேருக்கு நேர் நேர்வதே தரிசனம்! நமது நிலையை மாற்றுவதில்லை தரிசனத்தின் நோக்கம். என்றும் மறக்க முடியாதபடி, நம் நிலையை நமக்குச் சொல்லிவிடுவதுதான் தரிசனத்தின் குசும்பு!

     unnamed

    அவள் கையில்பட்டு நெஞ்சில் குலவியதாலோ என்னமோ, பன்றிக் குட்டியைப் போல் அழகான ஜீவன் வேறெதுவுமே இருக்க முடியாது என்று தோன்றியது எனக்கு. இதை என்னோடு வைத்துக் கொண்டிருந்திருக்கலாம். கனமுடையாய் என் தந்தையாரிடம் இதைப்போய்ச் சொன்னேன். அவர், ‘ஆமாண்டா, குட்டியில எல்லாம் அழகாத்தான் இருக்கும். அட நீ கூடத்தான் கொழந்தயா இருக்கும்போது கொஞ்சம் பாக்கும்படியா இருந்தே!’ என்றாரே பார்க்கலாம்!

    அட, உங்களைக் கோரிப்பாளையத்தில் நிற்கவைத்துவிட்டு நான் பாட்டுக்குச் சத்திரப்பட்டிக்குப் போய்விட்டேனா? இதோ, ஒரே நிமிடம், வந்து விட்டேன்!

    புகைப்படங்கள் : ரமணன்

    Share
  • முகுந்தா, எனக்கு அருள்தா!

     

    — விசாலம்

    2012-03-04-YoganandawithAYமகா அவதார புருஷர் பாபாஜியை அறியாதவர் யார்? அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அவர்களின் குரு என்றால் கேட்கவும் வேண்டுமா? தவிர விஜய் டிவியில் சூப்பர் ஸ்டார் ரஜனி அவர்கள் இமாலய பகுதியில் இருக்கும் குகைக்குள் செல்லும் காட்சியும் அங்கு அவரது அனுபவங்களும், அவர் தவத்தில் அமர்ந்திருக்கும் காட்சியும் கண்டு பலர் அந்த பாபாவை குருவாக நினைத்து கிரியா யோகத்தைக் கற்றுக்கொண்டனர். மகாஞானியும் மகா அவதார புருஷரும் ,பல நூற்றாண்டுகள் கழிந்தும் இன்றைக்கும் உயிருடன் இருந்தபடி அருள் புரிவதாகவும் கருதப்படும் ஸ்ரீ பாபாஜியின் சீடர் ஸ்ரீ லஹரி மகாசாயா அவர்கள். இவரின் அன்புச்சீடர் ஸ்ரீ யுக்தேஷ்வர்கிரி ஜி.

    ஒரு நாள் இவர் முன் பதினெட்டு வயதான முகுந்தன் என்பவன் வந்து நின்றான். குரு யுக்தேஷ்வர்ஜியும் தன் கண்களால் அவனை உற்று நோக்கினார்.அவருடைய அருள் பார்வை கிடைக்க முகுந்தனின் தேகம் சிலிர்த்தது. அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து எல்லாவற்றையும் சமர்ப்பணம் செய்தான். “இறைவனைத் தரிசித்தவர் இந்த மகான். அவரது நற்பாதங்களைப்பிடித்து கொண்டால் நமக்கு நல்வழி காட்டுவார் “என நினைத்தபடி தன் இரு கண்களையும் மூடிக்கொண்டு வணக்கம் செலுத்தினான்.

    “வா முகுந்தா. நீ வருவாய் என எனக்குத்தெரியும். உன்னை நானே ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு இது எப்படி தெரியும் என யோசிக்கிறாயா? எனக்கு அந்த பாபாவே உன்னை என்னிடம் அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார்,” எனக்கூறி அவனை அன்புடன் அழைத்து ஆசீர்வதித்தார். யார் இந்த முகுந்தன்? உத்திரப்பிரதேசத்தில் கோரக்பூரில் ஒரு வங்காள குடும்பத்தில் க்ஷத்ரியனாக பிறந்தான் முகுந்தன். சிறு வயதிலேயே அவனுக்குள் ஒரு தேடல் இருந்தது. இறைபக்தியுடன் வளர்க்கபட்டான் அவன். தனக்கென்று ஒரு குருவைத்தேடி மடம் மடமாக, பல ஆஸ்ரமங்களாகத் தேடி அலைந்து பின் பதினேழாவது வயதில்தான் பாபாஜியின் சீடர் வழி வந்த யுக்தேஷ்வரர்ஜியை தனது குருவாக ஏற்றுக்கொண்டான். சிறு வயதிலிருந்தே அவனுக்கு கடவுள் பக்தி அதிகம். தினமும் ஒரு கோயில் செல்லுவான். அத்துடன் இல்லாமல் பல வேத வித்தகர்கள், சன்யாசிகளையும் பார்த்து வணங்குவான்.

    “அண்ணா உன்னைப்பார்க்க ஆவலாக இந்த ஆக்ராவுக்கு வந்து விட்டேன். இங்கிருந்து எனக்கு மதுரா,பிருந்தாவன் எல்லாம் போக வேண்டும் “

    “என்ன முகுந்தா. உனக்கு இதே வேலையா போச்சு. எப்பொழுது பார்த்தாலும் கோயில், குளம் என சுற்றுகிறாய்..நன்கு படித்து ஆக வேண்டிய காரியத்தைப்பார்”

    “இல்லை அண்ணா. என்னை மன்னித்துக்கொள். எனக்கு அந்தக்கோயில் போக வேண்டும். கண்ணன் என்னை அழைக்கிறார்.”

    “நீ இப்படிக்கோயில் கோயிலென்று ஊர் சுற்ற அப்பாவின் சொத்தில் ஒரு நயா பைசா கூட உனக்குக் கிடைக்காமல் போய்விடும். தெரியுமா உனக்கு?”

    “அண்ணா, கடவுள் எனக்குத் தேவையானதை தருவார். “

    “ஹாஹாஹா அப்படியா? சரி உனக்கும் உன் நண்பனுக்கும் மதுரா போக மட்டும் டிக்கட் எடுத்து தருகிறேன், மற்றபடி ஒரு செல்லிக்காசு கூட தரப்போவதில்லை . நீங்கள் மதுரா போங்கள். பிருந்தாவனம் போங்கள். வயிறார சாபிடுங்கள். அங்கும் இங்கும் சுற்றிப்பாருங்கள். ஆக்ரவுக்கு திரும்பி வாருங்கள். ஆனால் ஒருவரிடமும் பணம் கேட்காமல் என்னிடம் திரும்பி வாருங்கள். திருடவும் கூடாது . இது போல் நடந்து விட்டால் நான் என்ன செய்வேன் தெரியுமா?”

    “அண்ணா என்ன செய்யப்போகிறீர்கள்?”

    “தம்பி நானே உனக்குச் சீடனாகி விடுவேன்.”

    “சரி அண்ணா, என்னை வாழ்த்தி அனுப்பி வை’

    முகுந்தன் அந்தச்சவாலை ஏற்றான். தனது நண்பன் ஜிதேந்திராவுடன் கிளம்பினான். ரயில் ஓடிக்கொண்டிருக்க மதுராவின் ஒரு ஸ்டேஷன் முன்பாக நின்றது. அங்கு இரு பெண்மணிகள் ஏறினர் . முகுந்தனுக்கு எதிரில் அமர்ந்தனர். பின் மதுரா ஸ்டேஷன் வந்தது. இருவரும் இறங்கினர். அந்த இடத்தில் முகுந்தனும் தன் நண்பனுடன் இறங்கினான். அந்தப்பெண்மணிகள் இவர்கள் இருவரையும் அழைத்து ஒரு குதிரை வண்டியில் அமரச்சொன்னார்கள். பின் அவர்களை ஒரு ஆஸ்ரமத்திற்கு அழைத்துச்சென்றனர்.

    உள்ளிருந்து ஒரு குரல் வந்தது.

    “என்ன ,கௌரிம்மா, வந்துட்டயா ? போன காரியம் என்ன ஆச்சு?’

    அதற்கு அந்தப்பெண்மணி ,”அம்மா அந்த இளவரசியால் வர முடியவில்லை. ஆகையால் நாம் செய்த விருந்து ஏற்பாடுகள் வீணாகி விடக்கூடாதே என்று இரண்டு இறை பக்தர்களை அழைத்து வந்து விட்டோம்.”

    “நல்ல காரியம் செய்தாய் கௌரிம்மா. அவர்களுக்கு எல்லா உபசாரங்களும் நடக்கட்டும்.”

    அவ்வளவு தான் கடவுள் கிருபையினால் அவர்களுக்கு பல வகை பண்டங்களுடன் விருந்து படைக்கப்பட்டது. பின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தபடி மேலே நடந்து நடந்து ஒரு மரத்தடியின் கீழ் இளைப்பாறினர். அப்போது ஒருவன் அவர்களை நோக்கி ஓடி வந்தான். நேராக முகுந்தனைக்கண்டு வணங்கினான்.

    “நான் தான் பிரதாப். நான் நேற்று இரவில் கண் மூடிய போது கனவில் கண்ணன் தோன்றினார். உங்கள் இருவரையும் காட்டி உங்களுக்கு பிருந்தாவனத்தைச் சுற்றிக்காட்டும்படி கட்டளையிட்டார்..இது என் கிருஷ்ணன் இட்ட கட்டளை. ஆகையால் தயவு செய்து என்னுடன் வாருங்கள்” என்றபடி அவர்கள் இருவர் கைகளை தன் கையில் இழுத்துக்கொண்டான் .

    “இங்கு என்னதான் நடக்கிறது” என்று பிரமித்துப்போய் அவனுடன் நடந்தான் முகுந்தன். பின் என்ன! பிருந்தாவனத்தில் ஓடும் நதி. கண்ணன் விளையாடிய இடம் , என்று பல பார்த்து ரசித்து தன்னையே மறந்தான். பின் இரவு ஆனதும் அவர்களை அழைத்துப்போன பிரதாப் திரும்பி ஆக்ராவுக்கு ரயில் டிக்கெட்டும் வாங்கிக்கொடுத்து அவர்களை வண்டி ஏற்றிவிட்டான் . ஆக்ராவும் வந்தது தன் வீடு திரும்பிய முகுந்தனையும் அவனது தோழன் ஜிதேந்தராவையும் கண்ட அவனது அண்ணா கேலியாக “என்ன ! எல்லா தரிசனமும் கிடைத்ததா?’ என்று கேட்க ஜிதேந்திரா கடவுளின் கிருபையை நினைத்து அழுதேவிட்டான். பின் நடந்த எல்லாவற்றையும் அண்ணனுக்கு விளக்க அண்ணன் தம்பி முகுந்தனின் தெய்வ கடாக்ஷம் கண்டு அவனது சீடரானார்.

    இந்த முகுந்தன் தான் இன்று எல்லோராலும் போற்றப்படும் ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் அவர்கள். நம்பிக்கை கடவுளைவிட மேலான சக்தி என்பதை நிரூபித்த மகான். இவரது தாய் இட்ட பெயர் முகுந்தலால் கோஷ். இவர் தனது இருபத்திரண்டாவது வயதில் சன்யாசியாக ஆனார். அன்றையதினத்திலிருந்து முகுந்தன் என்ற பெயர் போய் யோகானந்தகிரி என்று ஆனது. அவரது குருவும் அவரது வருங்காலத்தை ஓரளவு அறிந்துக்கொண்டதால் அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருப்பது அவசியம் என்பதை உணர்ந்தார். இதனால் அவர் கொல்கத்தா காலேஜில் ஆங்கிலம் எடுத்து படித்து வெற்றி பெற்று பட்டமும் பெற்றார். ஒவ்வொரு அவதாரபுருஷரும் அவரது கடமையை ஆற்ற கடவுளால் அனுப்பப்படுகிறார். இவருக்கும் அந்தக்காலம் வந்தது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உலக சமய மகாநாடு நடக்க இருந்தது. அதற்கு இந்தியப்பிரதிநிதியாக ஸ்ரீயோகானந்தகிரி தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஸ்டன் நகரில் அவர் இந்திய கலாச்சாரம், யோகக்கலை, தியானம் இந்து சமயம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

    அந்நாட்டு மக்கள் அப்படியே அசையாமல் அமர்ந்து தங்களை மறந்து யோகியின் மேதாவிலாசத்தைக்கண்டு வியந்துப்போயினர். அந்த நாட்டிலேயே அவர் ‘கிரியா யோகம் என்கிற அற்புத யோகக்கலையை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். இது மனித உடலின் இயக்கமும் உள்ளத்தின் ஓட்டமும் இணைந்து ‘மனிதனென்பவன் தெய்வமாகலாம் ‘என்ற கவியரசர் திரு கண்ணதாசன் பாடலுக்கேற்ப உண்மையாகவே தெய்வ நிலைக்கு வரமுடியும் .

    இந்த சூட்சுமகலையினால் மனிதன் மிகவும் உயர்ந்த ஸ்தானத்தை அடைய முடியும். இந்த யோகப்பயிற்சி மகாவதார் பாபாவிடமிருந்து சீடருக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். இந்தக்கலையை அவர் பலருக்கு படிப்பிக்க ‘தன்னிலை உணருவோர் சங்கம்’ என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.வெளி நாட்டவர்கள் வாழும் விதத்தில் டென்சன் நிறைய உண்டு. இயந்திரமே உலகம் என்று அவர்கள் வாழ்க்கை இருக்கும். அதனால் தான் வாரக்கடைசியில் ‘வீக் என்டு’என்று வெளியில் சுற்ற போய்விடுவார்கள். ஆனாலும் அதில் கேளிக்கைகளும் உடல் சுகமும் முக்கிய இடத்தைப்பிடிப்பதால் அங்கு மன நிறைவு சில மணி நேரம் தான் கிடைக்கிறது. நிரந்திர நிம்மதியோ, மன அமைதியோ, ஆத்ம திருப்தியோ கிடைப்பதில்லை . ‘மெடீரியல் ஹேப்பினஸ்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். வெளிப்பொருட்களால் அடையும் சிற்றின்பம் நிலைக்காதது, அழியக்கூடியது. பேராசை ஒரு பேய் போல் நம்மையே அழிக்க வல்லது. மானிடப்பிறவியுடன் அஹங்காரமும் கூடவே வந்துவிடுகிறது. மனிதனின் துன்பங்களுக்குக் காரணம் அவன் பொறாமை. ஆசை, வெறுப்பு , தன்முனைப்பு என்று பல தன்னுள் கொண்டிருப்பதால் தான்.

    அவன் ஏற்ற உடல் ஒரு நாள் அழியக்கூடியது என்று அவன் உணருவதில்லை. பல தவறுகள் செய்கிறான். நிம்மதியை இழக்கிறான், இதிலிருந்து விடுபட இறையுணர்வு மிகவும் இன்றியமையாதது. ‘காயிலே புளிப்பதென்ன கண்ணப்பெருமானே, கனியிலே இனிப்பதென்ன கண்ணப்பெருமானே’ என்று மகாகவி பாரதி இறையுணர்வை வெளிபடுத்துகிறார். இறையுணர்வால் பலர் பலவிதமான வியப்பான அனுபவங்களைப் பெற்றிருக்கின்றனர்.

    இறைவன் அமைத்த நாடக மேடையில் நாமெல்லாம் நமக்கு கொடுத்த பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கிறோம். நாடகம் முடிந்து திரை விழுந்ததும் நம் பாத்திரமும் முடிந்துவிடும். ஆனால் பலரும் அந்தப்பாத்திரம் நிலையானது என்று எண்ணி அந்தப்பாத்திரத்துடன் ஒன்றிப்போய்விடுகின்றனர். வாழ்க்கை ஒரு நாடக மேடை. இறைவனே அதன் சூத்ரதாரி. அவன் தாள் பணிந்தால் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு தெரியும். அந்த இறைவனை அணுகும் எளிய வழி மஹாவதார் பாபா ஆசிகளுடன் வந்த “கிரியா யோகம்.” இந்தக்கிரியா யோகத்தை தியானம் தீக்ஷை மூலம் கற்றுக்கொள்ள பல அமெரிக்கர்கள் வந்தனர். பாஸ்டன் மகா நகர மக்கள் யோகானந்தகிரியின் போதனைகளாலும், கிரியா யோகப்பயிற்சியினாலும் மிகுந்த பலனை அடைந்தனர்.

    சுமார் பதினைந்து வருடங்களுக்குப்பிறகு அவர் தனது குருவைப்பார்க்க இந்தியாவுக்கு வந்தார். மேலும் தனது இந்தப்பணியை இந்தியாவிலும் பரப்ப ஆசை கொண்டார். தனது குருஜி ஸ்ரீ யுக்தேஷ்வர்ஜியை சந்தித்தார். குருஜி அவரைப்பார்த்து மிகவும் பெருமிதத்துடன் அவரை அணைத்துக்கொண்டார்.

    “யோகானந்தா, உன் ஆன்மீக வளர்ச்சி என்னைப்பெருமைக்கொள்ளச்செய்தது. இன்றைய தினத்திலிருந்து உனக்கு “பரமஹம்ஸ” என்னும் பட்டத்தையும் அளிக்கிறேன். இனி நீ “பரமஹம்ஸ யோகானந்தர்” என்று அழைக்கப்படுவாய்.”

    இதுவே அவர்களது கடைசி சந்திப்பாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். பின் சில நாளில் ஸ்ரீ முக்தேஷ்வர்ஜி முக்தியடைந்தார். அதன் பின்னர் பரமஹம்ஸ யோகானந்தர் திரும்பவும் அமெரிக்கா சென்றார். தன்னுடைய ஆன்மீக அனுபவம் பற்றி ” ஆட்டோபயாகிரபி ஆப் யோகி ” அதாவது ‘ஒரு யோகியின் சுயசரிதம்’ என்ற புத்தகத்தை எழுதினார். இன்று உலகத்திலேயே மிக அதிகமாக விற்பனையான புத்தக வரிசையில் இது இடம் பெற்றுவிட்டது. தவிர பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிறப்பென்றான்றால் இறப்பும் உண்டே ! அந்த நாளும் வந்தது, 1952ம் வருடம் மார்ச் மாதம் ஏழாம் தேதி லாஸ் ஏஞ்சலீஸில் நடக்கப்போகும் ஒரு விருந்துக்கு அவரும் அழைக்கப்பட்டார். அதில் அமேரிக்காவின் இந்திய தூதரும் அவரது மனைவியும் கலந்துக்கொண்டனர். அந்த விருந்தில் பரமஹம்ஸ் யோகாநந்தருக்கு உடல் நிலை ஒரு மாதிரி ஆனது . அவரது முடிவு அவருக்குத்தெரிந்தது.

    “கங்கை நீர் இமயமலைக்குகைகள் இறைவனைத் தொழுது வாழும் மக்கள் எனக்கொண்ட பாரத புனித மண்ணை ஸ்பரிசித்ததே பெரும் பேறு” என்று சொல்லியபடி அப்படியே சரிந்தார். இறைஜோதியுடன் கலந்து ஐக்கியமானார். இறந்தப்பின் ஸ்ரீ அரவிந்த மஹரிஷிக்கு ஏற்பட்ட நிலை இவருக்கும் ஏற்பட்டது. ஸ்ரீ அரவிந்த மகரிஷியின் உடல் தங்க மயமாக அப்படியே உயிருடன் இருப்பது போலவே இருந்தது. ஒரு விதமான துர்நாற்றம் வீசவில்லை. உடல் நல்ல நிலையில் இருந்ததை பலர் வந்து தரிசித்தனர். அதேபோல் பரமஹம்ஸ் யோகானந்தரின் திருமேனி இறந்து இருபது நாட்கள் ஆன பின்பும் கெடவில்லை . உடல் கட்டைப்போல் ஆகவில்லை. இந்த மிரகிளைப்பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் வந்தனராம். இந்த அதிசயத்தைக்கண்டு வியந்தனர். பின்னர் அவரது திருமேனியை கலிபோர்னியாவில் அடக்கம் செய்தனர். இதை நான் எழுதிக்கொண்டிருந்த போது நான் கேட்ட பாடல் “முகுந்தா முகுந்தா ,வரம் தா வரம் தா” என்ன பொருத்தமான பாடல். வியந்துப்போய் அதையே தலைப்பாக வைத்தேன் .

    குருவுஜிக்கு என் பணிவான வணக்கங்கள்.

    Share
  • புகழோடு நிற்குமையா!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

    கண்ணதாசன் கவிதைக்குக்                                           kannadasan - jayarama sarma
    கற்கண்டே தோற்றுவிடும்
    அவ்வளவு சுவையினையும்
    அவன்தந்து நின்றானே!

    காதலினைப் பாடிவிடின்
    காமனுமே வந்திடுவான்
    தேமதுரத் தமிழாலே
    திசைநுகரக் கவிதைதந்தான்!

    பாவாணர் மத்தியிலே
    பக்குவமாய்க் கவிதைதந்தான்
    பாரதிரக் கவிதந்த
    பாரதிக்கு மகனானான்!

    ஓவியமாய்க் கவிதைதந்தான்
    உயிர்ப்புடனும் கவிதைதந்தான்
    சேமமுற வாழ்வதற்கும்
    சீராகக் கவிதைதந்தான்!

    நாத்திகம் பேசிநின்ற
    நாட்களை நாமொதுக்கிவிடின்
    ஆத்திகம் தானவனை
    அனைவர்க்கும் காட்டியது!

    சிறுகூடல் பட்டியிலே
    சிரித்து விளையாடியவன்
    சிந்தனைக்குக் கவிதைதரும்
    சிறப்பினையே பெற்றுவிட்டான்!

    வேதக் கருத்தையெல்லாம்
    விளக்கியே கவிதைதந்தான்
    சாதலுக்கும் விளக்கம்தந்து
    தத்துவக் கவியும்சொன்னான்!

    நோதலுக்கும் ஒத்தடமாய்
    நுட்பமாய்க் கவிதைதந்தான்
    போதிக்கும் அவன்கவிதை
    புதுக்கருத்தைத் தந்தனவே!

    சொத்துக் குவிப்பதனைச்
    சுகமாகக் கொள்ளாமல்
    வித்தகனாய் இருப்பதையே
    விருப்பமாய்க் கொண்டானே!

    வர்த்தகச் சினிமாவில்
    மாட்டாமல் இருந்திருப்பின்
    வையகத்தை வாழ்விக்க
    வந்திருப்பான் கம்பனைப்போல்!

    அரசியலை எறிந்துவிட்டு
    ஆன்மீகம் நாடியதால்
    அவனின்று சமூகத்தின்
    அரவணைப்பில் நிற்கின்றான்!

    அர்த்தமுள்ள இந்துமதம்
    அவன்தந்த மருந்தாகும்
    அத்தனையும் எங்களுக்கு
    அருளுள்ள விருந்தாகும்!

    கவியரசு கண்ணதாச…
    காலமெலாம் நீவாழ்க!
    புவிமுழுதும் உன்கவிதை
    புகழோடு நிற்குமையா!

    செவிநுகரக் கவிதந்த
    கவியரசன் நீயன்றோ!
    புவிமுழுதும் உன்கவிதை
    பூக்களாய்க் கிடக்குதையா!!

     

    Share
  • நேசிக்க முடியவில்லை உன்னை…

    ​-பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன்

    அழகாக இருக்கின்றாய்                                                                                                       நேசிக்க முடியவில்லை - கவிதை
    எப்போதும்!
    இனிமையாகவே வெளிப்படுகின்றாய்                                 
    எளிதாகவும் இருக்கின்றாய்
    எங்கேயும் தென்படுகின்றாய்
    அலங்கரித்துக் கொள்வதில்
    அதிகப் பெருமையும் உனக்குத்தான்!

    உள்ளத்தில் உறுத்தியபடி
    நீண்ட காலம்
    நினைவில் தங்கிவிடும்
    உன்னைப் பின்தொடர்வதோ
    எளிதாயில்லை யாருக்கும்!

    போரிலும் காதலிலும்
    பெரும்பங்கு வகிக்கும்
    உன்னைப் பயன்படுத்திக் கொள்ளாதவர்
    யாருமில்லை!

    நிறையவே சிறப்பிருந்தும் உன்னை
    நேசிக்க முடிவதில்லை பொய்யே…!

     

    Share
  • நாதமெனும் கோவிலிலே – கண்ணதாசனின் தத்துவ தரிசனம்

    நாதமெனும் கோவிலிலே

     

    கவிஞர் காவிரி மைந்தன்

     

    மெல்லிசை மன்னர் வழங்கியிருக்கும் இசைக்கட்டோடு கண்ணதாசனின் தத்துவ தரிசனத்தில் திரைப்பாடல் கூட திருக்கோயில் போல காட்சியளிக்கிறது பாருங்கள்! பாலச்சந்தரின் மன்மதலீலையில் வாணிஜெயராம் அவர்களின் குரலில் வெளிப்படும் ஞானரதத் தேரோட்டம்!!

    ஒவ்வொரு வரியிலும் ஓராயிரம் பிரகாசங்கள்.. ஒளி உமிழ.. நம் உள்ளங்களில் அந்தப் பிரதிபலிப்பு கிடைத்திடும் உணருங்கள்!

    நொடிக்கு 72 முறை இதயம் துடிதுடிக்க..
    படபடப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லை!
    இன்பதுன்பங்களின் கூட்டுக்கலவை வாழ்க்கை!
    என்கிற பட்சத்தில் மனதுக்கு தூக்கமில்லை!
    அடுத்த காட்சி என்னவென்று தெரியாத
    அதிசய நாடகம் இந்த வாழ்க்கை!
    அதில்தான் ரசமிருக்கிறது! சுவையிருக்கிறது.. தேடலிருக்கிறது!
    எடுத்த காரியம் நடந்து முடிவதற்குள் என்னவாகுமோ என்கிற
    கவலையை மனிதனை கரைத்துவிடுகிறது!

    சற்றே அமைதியுற கண்களை மூடுகிறான்.. தூக்கம் மட்டும் வந்துவிட்டால் பராவாயில்லை! கனவிலும் துரத்திவரும் கவலைகள் எத்தனை? அத்தனைக்கும் ஆண்டவனின் சன்னிதானம் நிம்மதி தருகிறது என்கிற நம்பிக்கையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும் ஆலயங்கள்! அங்கே ஒற்றைத் திசைநோக்கி ஆயிரமாயிரம் விளக்குகள் பிரகாசிக்கின்றன! அந்த வெளிச்சத்தில்தான் மனிதனின் மனதிற்குள் ஞானதீபம் ஏற்றப்படுகிறது! அந்த ஞானவிளக்கிற்கு சாட்சி சொல்ல வரும் பாடல்.. நாதமெனும் கோவிலிலே..

    நாதமெனும் கோவிலிலே
    ஞான விளக்கேற்றி வைத்தேன்
    ஏற்றி வைத்த விளக்கினிலே
    எண்ணை விட நீ கிடைத்தாய்…..
    நாதமெனும் கோவிலிலே ……..

    இசையும் எனக்கிசையும் தினம்
    என் மனம் தான் அதில் அசையும்
    கரமும் உந்தன் சிரமும் – நீ
    அசைத்தாய் நான் இசைத்தேன்
    [நாதமெனும்…]

    விலையே எனக்கிலையே தினம்
    வெறும் கதையானது கலையே
    நிலையே சொல்லி உனையே – நான்
    அழைத்தேன் உயிர் பிழைத்தேன்

    [நாதமெனும்…]

    இறைவன் என ஒருவன் எனது
    இசையில் மயங்கிட வருவான்
    ரசிகன் என்ற பெயரில் – இன்று
    அவன் தான் உன்னைக் கொடுத்தான்

    [நாதமெனும்…]

    படம்: மன்மதலீலை
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்கள்: வாணி ஜெயராம்
    பாடல்: கவிஞர் கண்ணதாசன்

    Share
  • திருமால் திருப்புகழ் (96)

    கிரேசி மோகன்

    Goverdhan Krishna. Detail from the Srimadbhagavatham painting. #Krishnafortoday Keshav
    Goverdhan Krishna. Detail from the Srimadbhagavatham painting. #Krishnafortoday Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    —————————————————-
    ’’கண்ணன் அந்தாதி’’
    ———————————–

    Grace to Yashoda. Detail from Srimadbhagavatham. #Krishnafortoday Keshav
    Grace to Yashoda. Detail from Srimadbhagavatham. #Krishnafortoday Keshav

    பகல்பத்து ராப்பத்து, புண்ணிய நாளில்,
    அகில்மணக்கும் சன்னிதியில் ஆழ்வார், -முகில்நிறத்தன்,
    மீதுகந்த பாசுரத்தைக், காதுகந்து கேட்போர்க்குப்,
    பூதலத்தில் ஏது பிறப்பு….(86)

    பிறப்பால் அரசன், விருப்பால் இடையன்,
    திருப்பாற் கடலிலவன் தேவன், -பொறுப்பாய்,
    இருப்போரைப் பேண, மறுப்போர்கள் நாண,
    அறப்போர் புரிந்தஅவன் ஆண்….(87)

    ஆணானாய், பெண்ணானாய், மீனானாய், ஏனமானாய்,
    தூண்தோறும் சிங்கத் துருவானாய், -கூனானாய்,
    வானானாய், ராமனாய் மூணானாய், கண்ணனானாய்,
    நானாவாய் நாராய ணா….(88)

    நாத்தழும்பு கொள்ளஅப், பூத்திரு மார்பனை,
    தோத்தரிப்போர்(கு) இல்லை துயர்மனமே, -ஆத்திரம்,
    காமம், அகங்காரம் ,கோபம், பொறாமையை,
    நாமம் துலக்கிடும் நீறு….(89)

    நீராய், நெருப்பாய், நிலம்காற்று, நீள்விசும்பாய்,
    பாராய், பரந்தாமன் பார்வையாய், -மாறா(து),
    இருந்தென்றும் வாழ்வை, இருண்டாலும் கண்ணன்,
    கருந்தேகம் என்றதனைக் கொள்….(90)

    ———————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி

    http://kamadenu.blogspot.in/2013_11_01_archive.html

     

    Share
  • வெண்பாவும், ஓவியமும்!

     

    கிரேசி மோகன்

    ஊதா நிறத்தவன் ஊதிக் களைத்தனன்
    ராதை கழுத்தென்னும் சங்கை – போதை
    தலைக்கேற கண்ணனவன் தோளைத் தழுவி
    வளைக்கரத்தால் வீசினாள் வாள்

    crazycrazy1crazy2

     

     

    Share
  • வெண்பாவும், ஓவியமும்!

     

    சு. ரவி
    நீலவண்ணக் கண்ணன் நிலாவண்ணன் ஆக இங்கே
    கோலவண்ணம் காட்டிக் குலாவுகின்றான்- பாலமுதம்
    நனைத்த நதிக்கரையில் ராதையிவள் காதல்
    நனைத்த நிலவாயினாள்

     

    s.Ravi

     

     

    Share
  • நிறைவே சாதனை

    இசைக்கவி ரமணன்

    டிசம்பர் 31. பொதுவாகவே குளுகுளுவென்றிருக்கும் கோவை, மார்கழி நள்ளிரவென்றால் எப்படி இருக்கும்? நடைபாதையில், தாயின் கர்ப்பத்தில் இருந்ததுபோல் உடம்பு ஒடுங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார் அந்தப் பிச்சைக்காரர். திடீரென்று ஒரு கதகதப்பை உணருகின்றார். குளிரில்லை. கண்ணைத் திறந்து பார்த்தால், யாரோ அவர்மீது கம்பளியைப் போர்த்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள்! முகம் தெரியாத அன்பு மனத்திற்குத் தன் தளர்ந்த கரங்களைக் கூப்பியபடி நன்றிசொல்லி நெகிழ்கிறார் நடைபாதைவாசி.

    அமாவாசை. அந்தப் பெரிய வீட்டின் பரந்த வாசற்பகுதி முழுவதும் ஏறாத்தாழ நூறு அந்தணர்கள், பெரும்பாலும் ஏழைகள், கூடியிருக்கிறார்கள். எங்கும், ஒரு தர்ப்பணம் செய்வதற்கு நூறுபேர் வருவதில்லை. பின்பு எதற்கு இத்தனை கூட்டம்? ஒரு கணவனும் மனைவியும் வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் வாரிவாரி அரிசி, வாழைக்காய், பணம் எல்லாம் அன்போடு வழங்குகிறார்கள். ஒவ்வொருவருக்கும் பாலூற்றிய கஞ்சி, புழுக்கிய நேந்திரம்பழம் கொடுக்கிறார்கள். வயிறும் மனதும் நிறைந்து வீடு திரும்புகிறார்கள் அந்த ஏழைகள்.

    எல்லோரும் தாய்தந்தையர்க்குத்தான் பிறக்கிறோம். சிலர், இருப்பது தெரியாமல் இருந்து இறந்து சுமையாகிவிடுகிறார்கள். எங்கே எரிப்பது? எப்படிச் சடங்குகள் செய்வது? பணத்துக்கு எங்கே போவது? யாரோ ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுக்கிறார்கள். மணி அடிக்கிறது. முக்கியமான அலுவலில் இருந்தாலும் உடனே நடவடிக்கை எடுக்கிறார் அழைக்கப்பட்டவர். மிகவும் சுகாதாரமான முறையில் தகனம் நடக்கிறது. முதல்நாள் சடங்குகள் வசதியாகச் செய்யப்படுகின்றன. ஒரு காசும் செலவில்லாமல்!

    krishnaநாம் இதுவரை பார்த்தது கங்கையிலிருந்து ஒரு கையளவுதான். இதுபோன்ற பற்பல புண்ணிய நிகழ்வுகளின் நாயகன்தான் கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபரான டாக்டர் திரு. எம். கிருஷ்ணன் அவர்கள். நினைத்தாலே நாவூறி நெஞ்சினிக்கும் ‘மைசூர்பா’ என்னும் மோகினியை உருவாக்கியவர்! ஊரெங்கும் கிளைகள். ஒவ்வொன்றிலும் கணக்கிலடங்காக் கூட்டம். அதுவும் அவரது தந்தையாரின் நினைவுநாளான நிறுவனர் தினத்தன்று, எந்தவிதமான அறிவிப்புமின்றிக் கடைகளின் வாசலில் நூற்றுக் கணக்கில் மக்கள் காத்திருப்பார்கள். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்பது, ஓர் இனிப்புக்கடை என்பதைத் தாண்டி, பல்லாயிரக் கணக்கான குடும்பங்களில் இன்றியமையாத உறுப்பினர் என்றால் அது மிகையில்லை.

    ஒரு நண்பர் கேட்டார். ‘இவர்கள் எப்படி வியாபாரம் நடத்துகிறார்கள்?’ என்று. ஏனென்றால், இந்த நிறுவனத்தின் ஏற்பாட்டில், ஏறத்தாழ ஒவ்வொரு நாளுமே ஏதாவதொரு நல்ல நிகழ்ச்சி நடந்துகொண்டே இருக்கிறது. கலை, இலக்கியம், சமயம், ஆன்மிகம், பயிலரங்கம், நூல் வெளியீடு என்று வகைவகையான நிகழ்ச்சிகள். ’ஞாயிறு தோறும் சந்திப்போம், நல்லதையே சிந்திப்போம்,’ ‘குறையொன்றுமில்லை’ ‘எப்போ வருவாரோ?’ ‘வண்ணத்தமிழ்’ போன்று பலப்பல நிகழ்வுகள். பெரும்பெரும் பேச்சாளர்கள், கவிஞர்கள், இலக்கிய அறிஞர்கள், விஞ்ஞானிகள், இசைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். பெரிய அரங்கம். அரங்கம் நிறையக் கூட்டம். கீழே, படிக்கட்டில், ஏன், மேடைவரை கூட மக்கள் உட்கார்ந்து ரசிக்கிறார்கள்! பல நேரங்களில், அரங்கைத் தாண்டி அருகிருக்கும் பகுதிகளிலும் நாற்காலிகள் போடப்பட்டு, பெரிய திரையும் வைக்கப்படுகிறது.

    இதே கலைஞர்கள், பேச்சாளர்களுக்கு வேறு இடங்களில் இத்தனை கூட்டம் வருவதில்லை என்று அவர்களே சொல்கிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிகழ்ச்சி என்றால் என்ன தனித்துவம்? இதெல்லாம் எப்படித் துவங்கியது? எதற்கு? கிருஷ்ணனிடமே கேட்போமே!

    ”நாம் எல்லோரும் குடும்பத்தில்தான் பிறக்கிறோம், வளர்கிறோம். விவரம் தெரிந்து வளரும்போது, அந்தக் குடும்பத்தில் நிலவுகின்ற சூழ்நிலைகள்தான் நம்மை வளர்க்கின்றன. அவற்றின் பாதிப்புதான் நாம்! அவற்றின் தாக்கம்தான் நமது குணசித்திரத்தை நிர்ணயிக்கிறது.”

    அப்படி உங்களை பாதித்தது எது? உருவாக்கியது எது?

    ”ஒருபக்கம் அப்பாவின் நேர்மை, கட்டுப்பாடு. இன்னொரு பக்க, கூட இருந்தவர்களின் தீய எண்ணங்கள். ஆம், நெருங்கியிருந்த சிலரின் தீய எண்ணங்கள் அந்த இளம்வயதில் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. அப்பாவின் உறுதி, நான் நிலைகுலையாமல் இருக்க உதவியது. அப்பாவின் ஓய்வுக்குப் பிறகு, இந்தச் சூழ்நிலையிலிருந்து எப்படி வெளியே வருவது என்பதே சவாலாக இருந்தது.”

    என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

    ”நடவடிக்கையா? நடத்தைதான் நடவடிக்கை! நான் சிந்தித்தேன்; மனிதர்களில் சிலர் நல்ல எண்ணங்களோடு வாழ்கிறார்கள்; ஆனால், அவர்கள் ஒதுங்கி இருக்கிறார்கள். சிலர் தீய எண்ணங்களோடு வாழ்கிறார்கள்; அவர்கள், அதை வளர்க்கிறார்கள்; மற்றவர்களிடமும் பரப்புகிறார்கள். இடையில் இன்னும் சிலர், நல்ல எண்ணங்களைப் பேணவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், வலுவில்லாமல் குழம்புகிறார்கள்.”

    “தீய எண்ணங்கள் உடையவர்களை எதிர்ப்பதால் பயனில்லை, அது சரியான உத்தியுமில்லை. நல்ல எண்ணங்களை நாமும் வளர்த்துக்கொண்டு, மற்றவர்களும் அவற்றின் மீது நம்பிக்கை கொள்ளும் விதமான செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.”

    ஆனால், இன்றைய உலகில், தீய எண்ணங்கள் உடைவர்களின் கைதான் ஓங்கியிருப்பதுபோல் தோன்றுகிறதல்லவா?
    ”இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை. நீங்கள் சொல்வதுபோல் தீய எண்ணங்களுக்கும் ஒரு வலிமை இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். நான் கேட்கிறேன், தீய எண்ணங்களுக்கே வலிமை இருக்கிறதென்றால், நல்ல எண்ணங்களுக்கு? அவை இன்னும் வலிமையானதல்லவா? சத்தியமே வெல்லும், அறம்தான் வாழவைக்கும் என்பது நம் சான்றோர்களின் சாசனமல்லவா? எந்த நல்ல உத்தேசத்திற்கும் ஒரு பிரத்யேகமான சக்தி உண்டென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை என் அனுபவத்திலும் கண்டு வருகிறேன். எனவே, தர்ம சிந்தனையை மக்கள் மத்தியில் வளர்க்கும்படியான செயல்களில் ஈடுபடுவது என்று தீர்மானித்தேன்.”

    இருந்தாலும், இந்த முயற்சிகள், இரைச்சல் நடுவே சங்கீதம்போல், விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகிவிடக்கூடுமல்லவா? அது உங்களைச் சோர்வடைய வைக்காதா?

    ”என்னுடைய நோக்கமே உடன்பாட்டுச் சிந்தனையை (Positive Attitude) வளர்க்கவேண்டும் என்பதே! அப்புறம் நான் எப்படிச் சோர்வடைவேன்?! ஏதோ நாம் நடத்தும் ஒரு நிகழ்ச்சியினால் மக்கள் மனத்தில் பெருத்த மாற்றம் ஏற்பட்டுவிடப் போகிறது என்று என்னை நானே ஏமாற்றிக் கொள்பவனில்லை நான். வாழ்க்கைச் சூழல்களால் அலைக்கழிக்கப்பட்டு, பலவித மன அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ள நம் மக்களுக்கு ஓர் உபசாந்தி, ஒரு சிறிய நிவாரணம் ஏற்படுத்த முயற்சிப்போமே, அவர்கள் சிந்திக்கும் போக்கில் கொஞ்சம் தெளிவு ஏற்படுவதற்கு உதவுவோமே, என்றுதான் நினைத்தேன், நினைக்கிறேன். நம் பணி என்பது, ஒரு விதையை ஒழுங்காய் நடுவதோடு ஆரம்பித்து, அத்தோடே முடிந்தும் விடுகிறது! விளைவுகளை நிர்ணயிப்பது இறைவன்தான். இதில் நான் உறுதியாய் இருப்பதால் எனக்கு எந்தவிதமான மனச்சோர்வும் இல்லை.”

    இதை உங்கள் சமூகக் கடமையாகக் கருதுகிறீர்களா?

    ”அப்படியெல்லாம் இல்லை. இயல்பாகவே எனக்கு இதில் ருசி இருக்கிறது. இந்தப் பணிகளைச் செய்வதில் எனக்கு ஆனந்தம் இருக்கிறது. சமூகப் பொறுப்பும் உண்டு என்று சொல்லலாம். பூஜ்யஸ்ரீ தயானந்த ஸ்வாமி அவர்கள் சொல்வார்கள், ‘இந்த வாழ்க்கையில் நாம் கொடுப்பதைக் காட்டிலும் எடுப்பதே அதிகம்,’ என்று. (We consume much more than we contribute) அவருடைய இந்த வாசகம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. நாம் எல்லோருமே இந்த சமுதாயத்திற்குக் கடன்பட்டிருக்கிறோம். ஸ்வாமிஜியின் வாசகத்தை ஆழ்ந்து சிந்தித்தால், இந்தக் கடனை அடைப்பது சாத்தியமே இல்லை என்றே தோன்றும். ஏனெனில், நாம் எடுத்துக்கொண்டே இருக்கிறோம். ஆனாலும், நாம் கடன்பட்டிருக்கிறோம் என்ற நினைப்பு நமக்குப் பணிவைத்தரும். நல்ல பார்வையைத் தரும். நம்மால் இயன்ற எல்லா வழிகளிலும், சமுதாயத்தின் மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபட வைக்கும்.”

    ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்க வேண்டிய வழி இதுதான். ஆனால் நீங்கள் சொல்வதைக் கேட்டால், இதில் சமூகப் பொறுப்புக்கும் மேலே ஏதோ ஒன்று தொனிக்கிறதே!

    ”அது சரிதான். எடுத்துக்கொண்டே இருப்பதால் கடன்பட்டுள்ளோம். இயன்ற விதங்களில் கொடுத்துக்கொண்டே இருக்கப் பழகவேண்டும். நம்முடைய ஆன்மிக விடுதலைக்கான சாவியும் இதுதான். கடனை அடைக்காமல் கடவுளைக் காண முடியாது!”

    சரியாகச் சொன்னீர்கள்! ’ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாம் செயல்,’ என்கிறார் வள்ளுவர்….
    ”எனக்கு அதெல்லாம் தெரியாது. யாராயிருந்தாலும் நல்லதைச் சிந்திக்கலாமே! அதற்குப் பணம் வேண்டாமே! எவராயிருந்தாலும், இயன்ற அளவு உடம்பால் உழைக்கலாமே! சாப்பிடுகிற வரை உழைக்கத்தானே வேண்டும்? கொடுக்காமல் விடுதலை இல்லை. இது இறைவனின் நீதி. இயற்கையின் நியதி. யோகிகள் கூட இதை உணர்ந்து இதற்கேற்பத்தான் வாழ்ந்தார்கள். ஊரில் வாழ்ந்தால் உழைத்தே ஆகவேண்டும்! ஊர் நன்மைக்காகக் கொடுத்தே ஆகவேண்டும்!”

    அது சரி, இது வியாபார உலகம். நீங்களும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறீர்கள். தர்மம் – வியாபாரம், இவற்றை எப்படி நிர்வகிக்கிறீர்கள்?

    ”இதோ பாருங்கள், கொடுப்பதில் கொடுப்பவனும் பயனடைகிறான். புண்ணியம், நல்வாழ்த்துக்கள் என்று. ஏன், விரும்பாவிட்டாலும், நம்முடைய எண்ணம் அதுவல்ல என்றாலும், இது தொழிலுக்கும் விளம்பரமாகி விடுகிறது. கொடுக்கக் கொடுக்கப் பிரகாசிக்கிறார்கள்!”

    “இன்னொன்று. நான் கொடுப்பதாக நினைக்கவில்லை. பகிர்ந்து கொள்கிறேன், அவ்வளவுதான். என்னுள் ஒரு நன்மை நுழையுமானால், அது என் மூலம் எப்படி வெளிப்பட வேண்டும் என்பதை புத்தியைச் சரியான விதத்தில் உபயோகித்து முடிவு செய்கிறேன். மக்களுடைய நல்லாசிகளைப் பெறுகிறேன். நீரிலிருக்கும் மீன் அழுக்கைத் தின்கிறது. மீனுக்கும் வாழ்வு; தண்ணீருக்கும் நன்மை. சரிதானே?”

    இது ஒரு வியாபாரியின் பேச்சாகத் தெரியவில்லை. வள்ளுவரின் பேரறிவாளன் பேசுவதுபோல்தான் இருக்கிறது. கற்பகம் பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதும், மலேசியாவில் இவருக்கு ‘சடையப்ப வள்ளல்’ விருது வழங்கப்பட்டதும் ஆச்சரியமாகவே இல்லை. தரமுள்ளவனே தரத்தை மதிக்கிறான். தர்மசிந்தனை உள்ளவனையே தாரணி கொண்டாடுகிறது.

    ஒரு மனிதன், நேர்மையாக இருந்து, தொழிலிலும் வெற்றி பெறமுடியும் என்பதை, கொடுப்பது என்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை, கொடுப்பதன் மூலமே நாம் பொருளையும், புகழையும், அருளையும் பெறமுடியும் என்பதை, அறம் செய்வதே ஆன்மிக விடுதலைக்கு வழிகோலும் என்பதை இந்த அவசர உலகத்தின் இன்றைய தலைமுறையினர் எளிதில் நம்புவதில்லை. ஆனால், கிருஷ்ணனைப் போன்றவர்களின் வாழ்க்கை, இந்தப் பாரம்பரியமான பண்பாட்டு வாழ்க்கை நெறிக்கு நிமிர்ந்த சான்றாக விளங்குகின்றது.

    ஆளை விழுங்கும் அதிரடி நகைச்சுவைக்குப் பெயர்போனவர், சிவனைப் போன்ற சீற்றமும் கொள்ளக்கூடிய கிருஷ்ணன், மிகவும் கூச்ச சுபாவமுள்ளவர் என்றால் நம்ப முடிகிறதா? எத்தனையோ பேருக்கு நாள்தோறும் மேடை அமைத்துக் கொடுக்கும் இவருக்கு மேடை என்றாலே அலர்ஜி. டிது மேடைக்கூச்சம் அல்ல! அடையாளம் காணப்படாமல் அறம்செய்யவேண்டும் என்பதே இவர் அவா. இது எல்லோராலும் இயலும் என்று அடித்துச் சொல்கிறார்:

    ”நாம் ஒவ்வொருவரும் புறக்கணிக்கக் கூடாத, முக்கியமான விஷயங்கள் மூன்று: காலம், சக்தி, காசு! ஒன்றிருந்து ஒன்றில்லை என்றாலும், ஒன்றைக் கவனித்து இன்னொன்றை நிர்வகிக்கவில்லை என்றாலும் பயனில்லை. இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இதைப் புரிந்துகொண்டால் நாம் முழுநிறைவை அடையலாம். வாழ்வில், நிறைவைவிடப் பெரிய சாதனை ஏதுமில்லை.”

    நிறைவான மனிதரின் நிறைவான வாக்கியம். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வாசலில் மக்கள் இனிப்பு வாங்குவதற்காக நிற்கவில்லை, தரத்தைப் பெற்றுக்கொண்டு செல்லவே காத்திருக்கிறார்கள். கிருஷ்ணன் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு, பொழுதுபோக்குவதற்காக மக்கள் வரவில்லை; தங்கள் சிந்தனையை மெருகேற்றிக்கொள்ளவே வருகிறார்கள்.
    ஒரு நல்ல மனிதரைச் சந்தித்த நிறைவோடு திரும்புகிறோம்!

    நன்றி : அமுத சுரபி

    Share
  • தமிழால் இணைவோம் – சுட்ட பண்ணியரமும், பிஞ்ச பீசாவும்

    — சொ.வினைதீர்த்தான்

    நண்பர்களுக்கு வணக்கம்.
    ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப் பள்ளி சீரோடும் சிறப்போடும் நடைபெற்று நம் பிள்ளைகளுக்குத் தமிழ்க்கல்வி நல்கி வருவது பாரட்டுக்கும் பெருமைக்கும் உரியது. அப்பள்ளியில் எங்கள் புதல்வி தன்னார்வப் பணியாக இணைந்து தமிழ் கற்பித்து இயன்ற பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. பள்ளி ஆண்டுவிழா 25.04.2014 நடைபெற்றது. விழாவில் என் மகள் திருமிகு இராசேசுவரி முத்துராமன் எழுதி இயக்கி பேத்திகள் சோலை முத்துராமன், மீனாள் முத்துராமன் மற்ற குழந்தைச் செல்வங்களுடன் நடித்த மேடை நாடகத்தை தங்கள் பார்வைக்கும், மேலான கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் பகிர்ந்துள்ளேன். அயலகத்தில் வாழும் தாயாக செல்வி சோலை, திருக்குறள் சொல்லும் பெண்ணாக மீனாள் நடித்துள்ளார்கள்.

    மகளுக்கு நாடகத்தை எழுதுவதிலும் அரங்கேற்றுவதிலும் ஊக்கம் நல்கி உதவி யுட்யூப் சுட்டியையும் நாடகக் குறிப்பையும் எனக்கு அனுப்பி வைத்த மாப்பிள்ளை திரு முத்துராமன் அவர்களுக்கு நன்றி.
    அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்.

    சுட்ட பண்ணியரமும், பிஞ்ச PIZZA வும்
    தமிழால் இணைவோம் – உறவை வளர்ப்போம்!

    ஹூஸ்டன் தமிழ்ப் பள்ளி நாடகம்.
    (ஆக்கம்: இராசேசுவரி முத்துராமன், ஹூஸ்டன்)

    sd default

    முகவுரை:

    வணக்கம். Pearland தமிழ் பள்ளி மாணவர்களின் சார்பாக இந்த குறு நாடகத்தை உங்களுக்கு வழங்குகிறோம். நாங்கள் பெரிய நடிகர்கள் இல்லை. எங்களை இயக்கியவர்கள் பெரிய இயக்குனர்கள் இல்லை. ஆனாலும் முயற்சி செய்து இருக்கிறோம். இது சிரிக்க வைக்கும் முயற்சி. யாரையும் எதையும் குறிப்பிடவில்லை. தயவு செய்து அமைதியாக கண்டுகளியுங்கள். இங்க இருக்கிறவர்கள் இந்தியா போகும் போது சில வீடுகளில் என்ன நடக்கிறது என்பதே கதை.

    காட்சி 1. நம் U.S.A. மாநகரில் உள்ள ஒரு குடும்பத்தில் நடக்கும் காட்சி. என்ன நடக்குதுன்னு வாங்க பார்க்கலாம்.

    http://youtu.be/BgPVQyCcX5k
    காணொளி சுட்டி: http://youtu.be/BgPVQyCcX5k

    காட்சி: 1 (U.S.A)

    அம்மா: ஏங்க இந்தியாவுக்கு போறதுக்கு டிக்கெட் வாங்கி முழுசா ரெண்டு நாளாச்சு. கொஞ்சமாவது கவலை இருக்கா. உட்கார்ந்து N B A பார்க்கிறீங்க.
    அப்பா: என்னமோ சொல்லரா கண்டுக்க கூடாது. என்னன்னு கேட்டோமனா problem தான் (mind voice). சந்திரா Your voice is so sweet. I love you.
    அம்மா: திட்டினா வெக்கமே இல்லாம குரல் sweet -ன்னு சொல்லுங்க .
    அம்மா: நம்ம குட்டிஸ் என்ன பண்ணுதுகள் சித்ரா, லஷ்மண்.
    பிள்ளை 1: I did not kottu-fy anything in bathroom. you did it.
    பிள்ளை 2: Not me. you did it.
    பிள்ளை 1: No I didn’t. you did it.
    பிள்ளை 2: You did it.
    அம்மா: ஐயோ! கடவுளே சக்தி கொடு……. டிவி பார்த்துக்கிட்டு. சை.
    அப்பா: ரைட், கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க.
    பிள்ளைகள்: அப்பா, அப்பா ராக்கெட் லீடிங்-ஆ.
    அம்மா: பிள்ளைகளா, அப்பா சொன்னங்களா நாம இந்தியா போகப் போறோம்.
    பிள்ளை 1: ஹே … ஜாலி.
    பிள்ளை 2: Oh my god. Last week periappa சொன்னாங்க there are lot of black outs in India.
    அப்பா: கவலைப்படாதே! அங்கே இப்ப இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் எல்லாம் வைச்சிருக்காங்கலாம்.
    அம்மா: கிட்ஸ் அங்க போகும் போது 2 பேரும் வாலை சுருட்டி வைச்சுக்கணும். அப்போதான் எல்லோரும் என்னை சமத்தா வளர்த்து இருக்கான்னு சொல்லுவாங்க.
    அப்பா: எங்க அண்ணன் ரொம்ப orthodox. so நீங்க இந்தியாவுல தமிழ்ல தான் பேசணும். ஒழுங்கா டிரஸ் பண்ணிக்கணும்.
    பிள்ளைகள்: சரி அப்பா. மாமாவும் வர்றாங்களா?
    மாமா: நான் இல்லாமலா? நானும் தான் வரேன்.
    அம்மா: அப்படியே மாமாவுடைய கல்யாணம் வந்தா நல்லா இருக்கும்.
    அம்மா: தம்பி. இந்தியாவுக்கு போறதுக்கு purchase பண்ணனும். எங்க sales இருக்குன்னு பார்த்துகிட்டே இரு.
    மாமா: சரி அக்கா. இப்ப கூட macy’s ல buy one வாங்குனா get one free. போய்கிட்டு இருக்கு.
    மாமா: Khols ல கூட sale இருக்கு .

    காட்சி 2 (இந்தியா)

    அப்பா: என் தம்பி அடுத்த வாரம் வர்றான்.
    அம்மா: உங்க தம்பி பொண்டாட்டி வேற இப்ப வேலைக்கு போறாளாம். ஒரே ஆட்டமா இருக்க போகுது. அவங்களுக்கு நாம குறைச்சல் இல்லைன்னு காட்டணும் .
    அப்பா: என்ன பண்ணப் போற?
    அம்மா: வந்து சொல்றேன் (வெளியே செல்லுதல்)
    பிள்ளை 1: அப்பா அப்பா! அம்மா எங்க?
    அப்பா: தெரியலை. இப்ப வந்துருவா (அம்மா உள்ளே வருதல்)
    பிள்ளை 2: அப்பா, நம்ம சித்தப்பா வீடு வரங்களா அப்பா.
    அம்மா: உங்களை எல்லாம் இங்கிலீஷ் மீடியத்திலே படிக்கச் வைத்தோம்ன்னு தான் பேரு. ஒரு வார்த்தை ஆச்சும் enlish-ல பேசுதுங்களா ? உங்க சித்தப்பா வீடு வந்து போறவரைக்கும் இங்கிலீஷ்-ல தான் பேசணும். இந்த டிரஸ்களை தான் போட்டுக்கணும்.
    அப்பா: என்ன இது அங்க அங்க Pants கிழிஞ்சு போயிருக்கு. பார்க்காம வாங்கிகிட்டு வந்துட்டியா?
    அத்தை: ஐயோ மாமா. இதுதான் fashion. இல்லயா அக்கா.
    பிள்ளை 1: அம்மா அப்ப எனக்கு அதே மாதிரி பண்ட்ஸ் வாங்கிகிட்டு வந்து இருக்கிங்களா? ஜாலி தான்.
    பிள்ளை 2: அம்மா இந்த ஸ்கர்ட் ரொம்ப குட்டியா இருக்கு.
    அம்மா: அவங்க இருக்க 2 வாரமும் அப்படிதான். அப்புறம் எல்லாம் அமெரிக்க சாப்பாடுதான். நோ இட்லி, நோ சாம்பார்.
    அத்தை: பார்த்தீங்களா மாமா எங்க அக்கா இங்கிலீஷ் எல்லாம் பேசுறாங்க.

    காட்சி 3 (இந்தியா)

    பங்கு பெறுவோர்:
    அம்மா 1, அப்பா 1—-U.S.A
    பிள்ளை 1, பிள்ளை 2——-U.S.A
    &
    அம்மா 2, அப்பா 2—– இந்தியா
    பிள்ளை 3, பிள்ளை 4——–இந்தியா
    &
    அத்தை , மாமா

    அம்மா 2, அப்பா 2: வாங்க, வாங்க, Journey எல்லாம் எப்படி இருந்துச்சு.
    அம்மா 1, அப்பா 1 : ஆமா, நல்லா இருந்துச்சு.
    அம்மா 1: எப்படி இருக்கீங்க?
    அமமா 2: we are fine எங்களுக்கென்ன நல்லா இருக்கோம். நீங்க எப்படி இருக்கீங்க?
    அம்மா 1: நல்லா இருக்கோம் அக்கா.
    பிள்ளைகள் 1&2: பெரியம்மா, பெரியப்பா எப்படி இருக்கீங்க?
    அப்பா 2: நல்லா இருக்கோம். நல்லா வளர்ந்துட்டிங்க.
    பிள்ளைகள்3&4: ஹாய் அங்கிள்,ஹாய் ஆன்ட் ஹொவ் ஆர் யு?
    அம்மா 1: நல்லா இருக்கோம். இவங்களும் வளர்ந்துட்டாங்க.
    பிள்ளை1: டிரஸ் நல்லா இருக்கு. பட் கொஞ்சம் குட்டியா இருக்கு.
    அப்பா 2: பிள்ளைகளா கொஞ்சம் என் கூட பேசிகிட்டு இருங்க. உங்களுக்கு தமிழ் தெரியுமா?
    பிள்ளைகள் 1&2: நல்லா தெரியுமே. எங்க தமிழ் school ல திருக்குறள் போட்டி எல்லாம் வைத்தார்கள்.
    அப்பா 2: சொல்லுங்க பார்க்கலாம்.
    பிள்ளை 1: திருக்குறள் சொல்லுதல்.
    பிள்ளை 2: திருக்குறள் சொல்லுதல்.
    பிள்ளை 1: பிள்ளை 3ஐ பார்த்து, நீயும் சொல்லு.
    பிள்ளை 3&4: நாங்க பாட்டு பாடரோம். (Twinkle, ஆத்திசூடி சினி சாங்)
    பிள்ளை 1: ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு?
    பிள்ளை 4: அப்படின்னா என்ன? we don’t have that?
    பிள்ளை 2: என்னது rest room இல்லையா? mommy I need to go to potty.
    அம்மா 2: பாட்டி எல்லாம் இங்க இல்லை.
    அம்மா 1: நோ,நோ,அவ bathroom ஐ தான் கேக்குறா. அங்க எல்லாம் opposite தான்.
    அம்மா 2: என்ன எல்லோரும் மூக்கால சாப்பிடுவாங்களா?
    அம்மா 1: இல்லை அக்கா. example க்கு lift – elevator, km – miles, kg – lb. switch on -switch off .
    அத்தை : இங்க day அங்க night.
    அம்மா 2: சரி, சரி, எங்களுக்கும் அதெல்லாம் தெரியும்.
    அம்மா 2: வாங்க சாப்பிடலாம்.
    பிள்ளைகள் 1&2: என்னது காலையிலே pizza வா.
    அம்மா 1: ஸ்….. சாப்பிடுங்க.
    பிள்ளை 1: எங்க அம்மா சொன்னாங்க நீங்க பணியாரம் நல்லா பண்ணுவீங்க அப்படின்னு.
    அம்மா 2: ஓ! உங்களுக்கு பணியாரம் ரொம்ப பிடிக்குமா? நான் நல்லா செய்து தரேன் செல்லங்களா.
    பிள்ளைகள் 1&2: அம்மா இங்க வாங்களேன். எவ்வளவு trophy வாங்கி இருக்காங்க பாருங்கள்.
    அப்பா 1: தமிழ், science, ஸ்போர்ட்ஸ் ன்னு எவ்வளவு trophy கலா? good job.
    அப்பா 2: உன் பிள்ளைகளும் நல்லா தமிழ் பேசுறாங்க.
    பிள்ளைகள் 2: அங்க நாங்க pearland தமிழ் பள்ளிக்கு போறோம். அப்புறம் வீட்லயும் அம்மா அப்பா தமிழ் ல தான் பேசுவாங்க. அதனாலதான்.
    அம்மா 2: ரொம்ப நல்லது.

    காட்சி 4 (விமான நிலையம் )

    பிள்ளைகள் 1&2: எல்லோருக்கும் போயிட்டு வர்றோம்.
    அம்மா,அப்பா 1: போயிட்டு வர்றோம்.
    அம்மா,அப்பா 2: போயிட்டு போன் பண்ணுங்க.

    அவர்கள் சென்றவுடன்.
    அம்மா 2: என்னங்க நான் நினைச்ச மாதிரி இல்லை உங்க தம்பி குடும்பம். அவங்க வந்தது நல்லா இருந்தது.
    அப்பா 2: ஆமா, அவங்க அயல் நாட்டிற்கு சென்றாலும் எதையும் மறக்கலை, பிள்ளைகளையும் நல்லா வளர்த்து இருக்காங்க.
    பிள்ளைகள் 3&4: நாமளும் ஒரு தடவை அங்க போயிட்டு வருவோம்.
    எல்லோரும் சேர்ந்து: தமிழால் இணைவோம். உறவை வளர்ப்போம்!

     

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (95)

    கிரேசி மோகன்

    Govinda Pattabhishekam. Oil on canvas. #krishnafortoday - Keshav
    Govinda Pattabhishekam. Oil on canvas. #krishnafortoday – Keshav

    ———————————————-
    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————–
    ’’கண்ணன் அந்தாதி’’
    ————————————

    Mukunda- watercolor #Krishnafortoday - Keshav
    Mukunda- watercolor #Krishnafortoday – Keshav

    அதுஆதி அந்தம், அதற்கில்லை பந்தம்,
    அதனால், ‘இது’அது ஆகும், -அதுதான்,
    அரியென்(று) அறிவால், அறிய அனைத்தும்,
    சரியாகச் சேரும் சுகம்….(81)

    சுகமுனி சாட்சி, இகபர ஆட்சி,
    பகவான் கதைபடிப் போர்க்கு, -முகுந்தன்,
    அறிமுகம் கொள்வீர், அரிமுகம் கூட்டும்,
    அறம்பொருள் இன்பம் அகம்….(82)

    அகந்தை இறக்குமங்(கு), ஆன்மா பிறக்கும்,
    புகழ்ந்திகழ்ந்த வாசனை போகும், -மகிழ்ந்திருப்போம்,
    ஆரா அமுதத்தில், ஆனந்த சாகரத்தில்,
    நாரா யணஓம் நம….(83)

    நமநம என்றவனை, நச்சரிப்பாய் நாமம்,
    கமகமக்கும் நாவால் கணமும், -எமனெதிர்,
    வந்தாலும் அச்சமின்றி, நந்தமகன் அச்சுதன்,
    சொந்தம் நமக்கென்று, சொல்….(84)

    சொல்லிப் புரிவதில்லை, சீதரன்தன் ஆதரவு,
    நெல்லிக் கனியாவான் நம்கையில், -அல்லும்,
    பகலும் அவனிரு, பாதம் சரணாய்ப்,
    புகுந்தவர்க்(கு) அல்லும், பகல்….(85)

    —————————————————————————————————————

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/2013_12_01_archive.html

    Share