Featuredஇசைக்கவியின் இதயம்இலக்கியம்கட்டுரைகள்

நிறைவே சாதனை

இசைக்கவி ரமணன்

டிசம்பர் 31. பொதுவாகவே குளுகுளுவென்றிருக்கும் கோவை, மார்கழி நள்ளிரவென்றால் எப்படி இருக்கும்? நடைபாதையில், தாயின் கர்ப்பத்தில் இருந்ததுபோல் உடம்பு ஒடுங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார் அந்தப் பிச்சைக்காரர். திடீரென்று ஒரு கதகதப்பை உணருகின்றார். குளிரில்லை. கண்ணைத் திறந்து பார்த்தால், யாரோ அவர்மீது கம்பளியைப் போர்த்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள்! முகம் தெரியாத அன்பு மனத்திற்குத் தன் தளர்ந்த கரங்களைக் கூப்பியபடி நன்றிசொல்லி நெகிழ்கிறார் நடைபாதைவாசி.

அமாவாசை. அந்தப் பெரிய வீட்டின் பரந்த வாசற்பகுதி முழுவதும் ஏறாத்தாழ நூறு அந்தணர்கள், பெரும்பாலும் ஏழைகள், கூடியிருக்கிறார்கள். எங்கும், ஒரு தர்ப்பணம் செய்வதற்கு நூறுபேர் வருவதில்லை. பின்பு எதற்கு இத்தனை கூட்டம்? ஒரு கணவனும் மனைவியும் வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் வாரிவாரி அரிசி, வாழைக்காய், பணம் எல்லாம் அன்போடு வழங்குகிறார்கள். ஒவ்வொருவருக்கும் பாலூற்றிய கஞ்சி, புழுக்கிய நேந்திரம்பழம் கொடுக்கிறார்கள். வயிறும் மனதும் நிறைந்து வீடு திரும்புகிறார்கள் அந்த ஏழைகள்.

எல்லோரும் தாய்தந்தையர்க்குத்தான் பிறக்கிறோம். சிலர், இருப்பது தெரியாமல் இருந்து இறந்து சுமையாகிவிடுகிறார்கள். எங்கே எரிப்பது? எப்படிச் சடங்குகள் செய்வது? பணத்துக்கு எங்கே போவது? யாரோ ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுக்கிறார்கள். மணி அடிக்கிறது. முக்கியமான அலுவலில் இருந்தாலும் உடனே நடவடிக்கை எடுக்கிறார் அழைக்கப்பட்டவர். மிகவும் சுகாதாரமான முறையில் தகனம் நடக்கிறது. முதல்நாள் சடங்குகள் வசதியாகச் செய்யப்படுகின்றன. ஒரு காசும் செலவில்லாமல்!

krishnaநாம் இதுவரை பார்த்தது கங்கையிலிருந்து ஒரு கையளவுதான். இதுபோன்ற பற்பல புண்ணிய நிகழ்வுகளின் நாயகன்தான் கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபரான டாக்டர் திரு. எம். கிருஷ்ணன் அவர்கள். நினைத்தாலே நாவூறி நெஞ்சினிக்கும் ‘மைசூர்பா’ என்னும் மோகினியை உருவாக்கியவர்! ஊரெங்கும் கிளைகள். ஒவ்வொன்றிலும் கணக்கிலடங்காக் கூட்டம். அதுவும் அவரது தந்தையாரின் நினைவுநாளான நிறுவனர் தினத்தன்று, எந்தவிதமான அறிவிப்புமின்றிக் கடைகளின் வாசலில் நூற்றுக் கணக்கில் மக்கள் காத்திருப்பார்கள். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்பது, ஓர் இனிப்புக்கடை என்பதைத் தாண்டி, பல்லாயிரக் கணக்கான குடும்பங்களில் இன்றியமையாத உறுப்பினர் என்றால் அது மிகையில்லை.

ஒரு நண்பர் கேட்டார். ‘இவர்கள் எப்படி வியாபாரம் நடத்துகிறார்கள்?’ என்று. ஏனென்றால், இந்த நிறுவனத்தின் ஏற்பாட்டில், ஏறத்தாழ ஒவ்வொரு நாளுமே ஏதாவதொரு நல்ல நிகழ்ச்சி நடந்துகொண்டே இருக்கிறது. கலை, இலக்கியம், சமயம், ஆன்மிகம், பயிலரங்கம், நூல் வெளியீடு என்று வகைவகையான நிகழ்ச்சிகள். ’ஞாயிறு தோறும் சந்திப்போம், நல்லதையே சிந்திப்போம்,’ ‘குறையொன்றுமில்லை’ ‘எப்போ வருவாரோ?’ ‘வண்ணத்தமிழ்’ போன்று பலப்பல நிகழ்வுகள். பெரும்பெரும் பேச்சாளர்கள், கவிஞர்கள், இலக்கிய அறிஞர்கள், விஞ்ஞானிகள், இசைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். பெரிய அரங்கம். அரங்கம் நிறையக் கூட்டம். கீழே, படிக்கட்டில், ஏன், மேடைவரை கூட மக்கள் உட்கார்ந்து ரசிக்கிறார்கள்! பல நேரங்களில், அரங்கைத் தாண்டி அருகிருக்கும் பகுதிகளிலும் நாற்காலிகள் போடப்பட்டு, பெரிய திரையும் வைக்கப்படுகிறது.

இதே கலைஞர்கள், பேச்சாளர்களுக்கு வேறு இடங்களில் இத்தனை கூட்டம் வருவதில்லை என்று அவர்களே சொல்கிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிகழ்ச்சி என்றால் என்ன தனித்துவம்? இதெல்லாம் எப்படித் துவங்கியது? எதற்கு? கிருஷ்ணனிடமே கேட்போமே!

”நாம் எல்லோரும் குடும்பத்தில்தான் பிறக்கிறோம், வளர்கிறோம். விவரம் தெரிந்து வளரும்போது, அந்தக் குடும்பத்தில் நிலவுகின்ற சூழ்நிலைகள்தான் நம்மை வளர்க்கின்றன. அவற்றின் பாதிப்புதான் நாம்! அவற்றின் தாக்கம்தான் நமது குணசித்திரத்தை நிர்ணயிக்கிறது.”

அப்படி உங்களை பாதித்தது எது? உருவாக்கியது எது?

”ஒருபக்கம் அப்பாவின் நேர்மை, கட்டுப்பாடு. இன்னொரு பக்க, கூட இருந்தவர்களின் தீய எண்ணங்கள். ஆம், நெருங்கியிருந்த சிலரின் தீய எண்ணங்கள் அந்த இளம்வயதில் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. அப்பாவின் உறுதி, நான் நிலைகுலையாமல் இருக்க உதவியது. அப்பாவின் ஓய்வுக்குப் பிறகு, இந்தச் சூழ்நிலையிலிருந்து எப்படி வெளியே வருவது என்பதே சவாலாக இருந்தது.”

என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

”நடவடிக்கையா? நடத்தைதான் நடவடிக்கை! நான் சிந்தித்தேன்; மனிதர்களில் சிலர் நல்ல எண்ணங்களோடு வாழ்கிறார்கள்; ஆனால், அவர்கள் ஒதுங்கி இருக்கிறார்கள். சிலர் தீய எண்ணங்களோடு வாழ்கிறார்கள்; அவர்கள், அதை வளர்க்கிறார்கள்; மற்றவர்களிடமும் பரப்புகிறார்கள். இடையில் இன்னும் சிலர், நல்ல எண்ணங்களைப் பேணவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், வலுவில்லாமல் குழம்புகிறார்கள்.”

“தீய எண்ணங்கள் உடையவர்களை எதிர்ப்பதால் பயனில்லை, அது சரியான உத்தியுமில்லை. நல்ல எண்ணங்களை நாமும் வளர்த்துக்கொண்டு, மற்றவர்களும் அவற்றின் மீது நம்பிக்கை கொள்ளும் விதமான செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.”

ஆனால், இன்றைய உலகில், தீய எண்ணங்கள் உடைவர்களின் கைதான் ஓங்கியிருப்பதுபோல் தோன்றுகிறதல்லவா?
”இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை. நீங்கள் சொல்வதுபோல் தீய எண்ணங்களுக்கும் ஒரு வலிமை இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். நான் கேட்கிறேன், தீய எண்ணங்களுக்கே வலிமை இருக்கிறதென்றால், நல்ல எண்ணங்களுக்கு? அவை இன்னும் வலிமையானதல்லவா? சத்தியமே வெல்லும், அறம்தான் வாழவைக்கும் என்பது நம் சான்றோர்களின் சாசனமல்லவா? எந்த நல்ல உத்தேசத்திற்கும் ஒரு பிரத்யேகமான சக்தி உண்டென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை என் அனுபவத்திலும் கண்டு வருகிறேன். எனவே, தர்ம சிந்தனையை மக்கள் மத்தியில் வளர்க்கும்படியான செயல்களில் ஈடுபடுவது என்று தீர்மானித்தேன்.”

இருந்தாலும், இந்த முயற்சிகள், இரைச்சல் நடுவே சங்கீதம்போல், விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகிவிடக்கூடுமல்லவா? அது உங்களைச் சோர்வடைய வைக்காதா?

”என்னுடைய நோக்கமே உடன்பாட்டுச் சிந்தனையை (Positive Attitude) வளர்க்கவேண்டும் என்பதே! அப்புறம் நான் எப்படிச் சோர்வடைவேன்?! ஏதோ நாம் நடத்தும் ஒரு நிகழ்ச்சியினால் மக்கள் மனத்தில் பெருத்த மாற்றம் ஏற்பட்டுவிடப் போகிறது என்று என்னை நானே ஏமாற்றிக் கொள்பவனில்லை நான். வாழ்க்கைச் சூழல்களால் அலைக்கழிக்கப்பட்டு, பலவித மன அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ள நம் மக்களுக்கு ஓர் உபசாந்தி, ஒரு சிறிய நிவாரணம் ஏற்படுத்த முயற்சிப்போமே, அவர்கள் சிந்திக்கும் போக்கில் கொஞ்சம் தெளிவு ஏற்படுவதற்கு உதவுவோமே, என்றுதான் நினைத்தேன், நினைக்கிறேன். நம் பணி என்பது, ஒரு விதையை ஒழுங்காய் நடுவதோடு ஆரம்பித்து, அத்தோடே முடிந்தும் விடுகிறது! விளைவுகளை நிர்ணயிப்பது இறைவன்தான். இதில் நான் உறுதியாய் இருப்பதால் எனக்கு எந்தவிதமான மனச்சோர்வும் இல்லை.”

இதை உங்கள் சமூகக் கடமையாகக் கருதுகிறீர்களா?

”அப்படியெல்லாம் இல்லை. இயல்பாகவே எனக்கு இதில் ருசி இருக்கிறது. இந்தப் பணிகளைச் செய்வதில் எனக்கு ஆனந்தம் இருக்கிறது. சமூகப் பொறுப்பும் உண்டு என்று சொல்லலாம். பூஜ்யஸ்ரீ தயானந்த ஸ்வாமி அவர்கள் சொல்வார்கள், ‘இந்த வாழ்க்கையில் நாம் கொடுப்பதைக் காட்டிலும் எடுப்பதே அதிகம்,’ என்று. (We consume much more than we contribute) அவருடைய இந்த வாசகம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. நாம் எல்லோருமே இந்த சமுதாயத்திற்குக் கடன்பட்டிருக்கிறோம். ஸ்வாமிஜியின் வாசகத்தை ஆழ்ந்து சிந்தித்தால், இந்தக் கடனை அடைப்பது சாத்தியமே இல்லை என்றே தோன்றும். ஏனெனில், நாம் எடுத்துக்கொண்டே இருக்கிறோம். ஆனாலும், நாம் கடன்பட்டிருக்கிறோம் என்ற நினைப்பு நமக்குப் பணிவைத்தரும். நல்ல பார்வையைத் தரும். நம்மால் இயன்ற எல்லா வழிகளிலும், சமுதாயத்தின் மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபட வைக்கும்.”

ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்க வேண்டிய வழி இதுதான். ஆனால் நீங்கள் சொல்வதைக் கேட்டால், இதில் சமூகப் பொறுப்புக்கும் மேலே ஏதோ ஒன்று தொனிக்கிறதே!

”அது சரிதான். எடுத்துக்கொண்டே இருப்பதால் கடன்பட்டுள்ளோம். இயன்ற விதங்களில் கொடுத்துக்கொண்டே இருக்கப் பழகவேண்டும். நம்முடைய ஆன்மிக விடுதலைக்கான சாவியும் இதுதான். கடனை அடைக்காமல் கடவுளைக் காண முடியாது!”

சரியாகச் சொன்னீர்கள்! ’ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாம் செயல்,’ என்கிறார் வள்ளுவர்….
”எனக்கு அதெல்லாம் தெரியாது. யாராயிருந்தாலும் நல்லதைச் சிந்திக்கலாமே! அதற்குப் பணம் வேண்டாமே! எவராயிருந்தாலும், இயன்ற அளவு உடம்பால் உழைக்கலாமே! சாப்பிடுகிற வரை உழைக்கத்தானே வேண்டும்? கொடுக்காமல் விடுதலை இல்லை. இது இறைவனின் நீதி. இயற்கையின் நியதி. யோகிகள் கூட இதை உணர்ந்து இதற்கேற்பத்தான் வாழ்ந்தார்கள். ஊரில் வாழ்ந்தால் உழைத்தே ஆகவேண்டும்! ஊர் நன்மைக்காகக் கொடுத்தே ஆகவேண்டும்!”

அது சரி, இது வியாபார உலகம். நீங்களும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறீர்கள். தர்மம் – வியாபாரம், இவற்றை எப்படி நிர்வகிக்கிறீர்கள்?

”இதோ பாருங்கள், கொடுப்பதில் கொடுப்பவனும் பயனடைகிறான். புண்ணியம், நல்வாழ்த்துக்கள் என்று. ஏன், விரும்பாவிட்டாலும், நம்முடைய எண்ணம் அதுவல்ல என்றாலும், இது தொழிலுக்கும் விளம்பரமாகி விடுகிறது. கொடுக்கக் கொடுக்கப் பிரகாசிக்கிறார்கள்!”

“இன்னொன்று. நான் கொடுப்பதாக நினைக்கவில்லை. பகிர்ந்து கொள்கிறேன், அவ்வளவுதான். என்னுள் ஒரு நன்மை நுழையுமானால், அது என் மூலம் எப்படி வெளிப்பட வேண்டும் என்பதை புத்தியைச் சரியான விதத்தில் உபயோகித்து முடிவு செய்கிறேன். மக்களுடைய நல்லாசிகளைப் பெறுகிறேன். நீரிலிருக்கும் மீன் அழுக்கைத் தின்கிறது. மீனுக்கும் வாழ்வு; தண்ணீருக்கும் நன்மை. சரிதானே?”

இது ஒரு வியாபாரியின் பேச்சாகத் தெரியவில்லை. வள்ளுவரின் பேரறிவாளன் பேசுவதுபோல்தான் இருக்கிறது. கற்பகம் பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதும், மலேசியாவில் இவருக்கு ‘சடையப்ப வள்ளல்’ விருது வழங்கப்பட்டதும் ஆச்சரியமாகவே இல்லை. தரமுள்ளவனே தரத்தை மதிக்கிறான். தர்மசிந்தனை உள்ளவனையே தாரணி கொண்டாடுகிறது.

ஒரு மனிதன், நேர்மையாக இருந்து, தொழிலிலும் வெற்றி பெறமுடியும் என்பதை, கொடுப்பது என்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை, கொடுப்பதன் மூலமே நாம் பொருளையும், புகழையும், அருளையும் பெறமுடியும் என்பதை, அறம் செய்வதே ஆன்மிக விடுதலைக்கு வழிகோலும் என்பதை இந்த அவசர உலகத்தின் இன்றைய தலைமுறையினர் எளிதில் நம்புவதில்லை. ஆனால், கிருஷ்ணனைப் போன்றவர்களின் வாழ்க்கை, இந்தப் பாரம்பரியமான பண்பாட்டு வாழ்க்கை நெறிக்கு நிமிர்ந்த சான்றாக விளங்குகின்றது.

ஆளை விழுங்கும் அதிரடி நகைச்சுவைக்குப் பெயர்போனவர், சிவனைப் போன்ற சீற்றமும் கொள்ளக்கூடிய கிருஷ்ணன், மிகவும் கூச்ச சுபாவமுள்ளவர் என்றால் நம்ப முடிகிறதா? எத்தனையோ பேருக்கு நாள்தோறும் மேடை அமைத்துக் கொடுக்கும் இவருக்கு மேடை என்றாலே அலர்ஜி. டிது மேடைக்கூச்சம் அல்ல! அடையாளம் காணப்படாமல் அறம்செய்யவேண்டும் என்பதே இவர் அவா. இது எல்லோராலும் இயலும் என்று அடித்துச் சொல்கிறார்:

”நாம் ஒவ்வொருவரும் புறக்கணிக்கக் கூடாத, முக்கியமான விஷயங்கள் மூன்று: காலம், சக்தி, காசு! ஒன்றிருந்து ஒன்றில்லை என்றாலும், ஒன்றைக் கவனித்து இன்னொன்றை நிர்வகிக்கவில்லை என்றாலும் பயனில்லை. இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இதைப் புரிந்துகொண்டால் நாம் முழுநிறைவை அடையலாம். வாழ்வில், நிறைவைவிடப் பெரிய சாதனை ஏதுமில்லை.”

நிறைவான மனிதரின் நிறைவான வாக்கியம். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வாசலில் மக்கள் இனிப்பு வாங்குவதற்காக நிற்கவில்லை, தரத்தைப் பெற்றுக்கொண்டு செல்லவே காத்திருக்கிறார்கள். கிருஷ்ணன் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு, பொழுதுபோக்குவதற்காக மக்கள் வரவில்லை; தங்கள் சிந்தனையை மெருகேற்றிக்கொள்ளவே வருகிறார்கள்.
ஒரு நல்ல மனிதரைச் சந்தித்த நிறைவோடு திரும்புகிறோம்!

நன்றி : அமுத சுரபி

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க