Blog

  • வார ராசி பலன் (24.12.2012-31-12.2012 வரை)

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம்: பெண்களுக்கு கடினமான முயற்சிக்குப்பின் சில காரியங்கள் பலிதமாகும். எனவே வாக்குறுதிகளை கொடுக்கும் முன் யோசனை செய்யுங்கள். கலைஞர்கள் மேற்கொள்ளும் வெளி நாட்டு பயணம் அவர்களின் தகுதிக்கான பரிசாய் இருக்கும்.மாணவர்கள் வீண் புரளிகளை நம்பி செயல்பட வேண்டாம். கலைஞர்கள் அக்கறை கொண்டவர்களின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் இறங்கலாம். வியாபாரிகள் அரசு வகையில் முயற்சிக்கும் காரியங்கள் அனுகூலமாகும் வரை பொறுமையாய் இருப்பது நல்லது. சில நேரம் பங்குதாரர்கள் ஏறுமாறாக நடந்து கொள்ள முயற்சி செய்வார்கள். கொடுக்கல் வாங்கலில் அவசரப் போக்கிற்கு இடம் தராமல் இருந்தால், புதிய சிக்கல்கள் உருவாகாது.

    ரிஷபம்: இந்த வாரம் பெண்களுக்கு பழைய நட்புகளை மீண்டும் சந்தித்து மகிழும் வாய்ப்பு உருவாகும். பெற்றோர்கள் அவ்வப்பொழுது பிள்ளைகளின் போக்கை கவனித்து வருவது நல்லது. மாணவர்கள் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுங்கள் சுய தொழில் புரிபவர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கக் கூடிய வாரம் இது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்ப்புகள் வலுக்கும் வாய்ப்பு உள்ளதால், எதிலும் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் தெளிவான முடிவு எடுத்து உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்று மகிழ்வீர்கள். .

    மிதுனம்: அவ்வப்போது சிறிது ஆரோக்கிய நலிவு ஏற்பட்டாலும், பெண்கள் நினைத்த காரியத்தை முடித்து மகிழ்வார்கள். சிறந்த பணியாளர்கள் உங்கள் வசம் இருக்க, வியாபாரிகள் அவர்களுக்கு வேண்டிய சலுகைகளை வழங்குதல் அவசியம். பணியில் இருப்பவர்கள் திறமையோடு பொறுமையையும் சேர்த்துக் கொண்டால் வேலைகள் எளிதில் முடியும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு உதவிகள் கிடைத்தாலும் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை நிலவும். எதிர்பாராமல் கிடைக்கும் நல்ல அறிமுகங்கள் கலைஞர்களின் மன சந்தோஷத்தை அதிகரிக்கும். . மாணவர்கள் தீய நட்பைப் புறக்கணித்தால், வாழ்க்கை செம்மையாகத் திகழும்.

    கடகம்: . கலைஞர்கள் எதிலும் அளவாக இருந்தால், வெளி வட்டார தொடர்பு லாபகரமாக இருக்கும். வியாபாரிகள் மேற்கொள்ளும் பிரயாணங்களில் சற்று கவனமாய் இருத்தல் நலம். வீண் செலவைக் குறைத்தால், கலைஞர்கள் வேண்டிய காரியங்களுக்கு பணம் ஒதுக்கலாம். ஆர்வத்துடன் பாடம் பயிலும் மனோபாவம் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெற உதவியாய் திகழும். மேலும் வாகனப் பயணத்தில் வேகம் வேண்டாம். பெற்றோர்கள் பிள்ளைகளின் குறைகளை இதமாகச் சுட்டிக்காட்டினால், தவறுகளை அவர்களே திருத்திக் கொள்வார்கள். பெண்கள் உறவுகளால், சில அசௌகரியங்களை சகித்துக் கொள்ளும் நிலைக்கு உள்ளாகலாம்

    சிம்மம்: பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அதிக பணம் தருவதைக் குறைத்துக் கொண்டால், அவர்கள் வழி தவறாமல் இருப்பார்கள். மாணவர்கள் உங்கள் சக்தியை அதிகரிக்க சத்தான உணவு வகைகளை உண்டு வாருங்கள். சோர்வின்றி கல்வி பயில முடியும். பணியில் இருக்கும்  பெண்கள் குடும்ப விஷயங்களை வெளிப்படையாக பேசாமலிருந்தால், பிரச்சனைகள் மேலும் பெரிதாகாமலிருக்கும் கலைஞர்கள் பூர்வீகச் சொத்தையும், குடியிருக்கும் வீட்டையும் மாற்றியமைப்பதற்காக அதிக தொகை செலவு செய்ய வேண்டியிருக்கும். வியாபாரிகள் குடும்பத்தினரின் ஆலோசனைக்குப் பின் புதிய முயற்சிகளில் இறங்குவது நல்லது.

    கன்னி:. பெண்கள் உங்கள் பிரச்சனைகளை நம்பிக்கையானவர்களுடன் ஆலோசனை செய்து தீர்வு காண்பது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் மற்றவருடன் வாக்கு வாதங்களில் ஈடுபடாமலிருந்தால், கருத்து வேற்றுமைகள் தானே மறைந்துவிடும். கலைஞர்கள் ஆடம்பரச் செலவுகளை சுருக்கிக் கொண்டால், பணப்பற்றாக் குறையை சமாளித்துவிட முடியும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் கை ஓங்கும் நிலை இருப்பதால், வியாபாரிகள் எதிலும் கவனமாக இருப்பது அவசியமாகும்.மாணவர்கள் பல் மற்றும் கண் சம்பந்தமான நோய்களை உடனுக்குடன் கவனித்து வந்தால், ஆரோக்கியம் சீராக இருக்கும் .

    துலாம்: . பொது வாழ்வில் இருப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தால், உடல்நலம் நன்றாகத் திகழும். அலுவலகத்தில் நிலவும் போட்டியை சமாளிக்க அதிக உழைப்பும், நேரமும் தேவைப்படும்.வியாபாரிகள் சலுகைகளையும், வாய்ப்புகளையும் எளிதில் தக்க வைத்துக் கொள்ள, பொறுமையைக் கடைபிடியுங்கள்.வழக்கு விவகாரங்களில், நேரடி கவனம் செலுத்தினால், அவை சாதகமாய் மாறும் வாய்ப்புக்கள் கூடுதலாகும். மாணவர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளில், விதிமுறைகளின்படி நடத்தல் அவசியம். இல்லற இனிமை குலையாமல் இருக்க, பெண்கள் குடும்ப உறுப்பினரிடம் அனுசரித்து நடப்பது நல்லது

    விருச்சிகம்: இயந்திரங்களை இயக்குபவர்கள், தகுந்த பாதுகாப்புடன் பணியில் ஈடுபடுவது நலம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் , குடும்ப அமைதிக்கு பங்கம் நேராதவாறு திட்டமிட்டு பணிகளை முடித்துக் கொள்வதில் உறுதியாக இருங்கள்.அமைதியான சூழலில் அநேக பணிகளை முடிக்க முடியும். பெருந்தொகையைக் கையாளுபவர்கள் கவனமாக நடந்துகொண்டால், உங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏதும் நேராது. பங்குதாரரிடையே சிறு சலசலப்பு தோன்றி மறையும். பெண்கள் சிலருக்கு வாக்கு கொடுத்துவிட்டு, சங்கடப்படுவதைத் தவிர்க்க எதிலும் நிதானமாக செயல்படுவது அவசியம்.

    தனுசு: கலைஞர்கள் திறமையுடன் செயல்பட்டுவந்தால், திறமைக்குரிய பாராட்டு கிடைக்கும். பெண்கள் அண்டை அயலாரிடம், அளவாகப் பழகி வந்தால், அநாவசியத் தொந்தரவுகள் அருகே வராது. வியாபாரிகள் வாகனங்களுக்குரிய காப்பீடு முதலியவைகளை உரிய கெடுவுக்குள் செலுத்தி விட்டால், தண்டம் கட்ட வேண்டியதிலிருந்து தப்பிவிடலாம். பெண்கள் மின்சாதனப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள். உயர் பதவியில் இருப்போர்கள் அதிக மரியாதை காண்பிப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. சுய தொழிலில் மனதுக்கு பிடித்த மாற்றங்களை செய்ய சிறிது காலம் காத்திருக்கும் நிலை நிலவும்.

    மகரம்: பூர்வீகச் சொத்தில் சில தொல்லைகள் வந்து போகும் நிலை இருப்பதால், பெண்கள் ஆவணங்களை பத்திரமாக வைப்பது அவசியம். வியாபாரிகள் வேண்டிய நன்மைகளையும், சலுகைகளையும் பெற நேர் வழியில் முயற்சி செய்வது நல்லது. மேலும் உங்களின் சரக்குகளுக்குத் தேவையான பாதுகாப்பைப் பலப்படுத்துவது அவசியம்..  மாணவர்கள் அவசரப்பட்டு அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் பொறுப்புடனும், பொறுமையுடனும் செயல்பட்டு வந்தால், நல்ல பெயரைப் பெறுவது எளிதாகும். கலைஞர்கள் தேடி வரும் சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால், உங்கள் அந்தஸ்து உயர்ந்து விடும்.

    கும்பம்: வியாபாரிகள் வேண்டிய காரியங்களுக்கு தேவையான பணத்தை ஒதுக்கிவிட்டால், கடைசி நேர அலைச்சலைத் தவிர்த்து விடலாம்.பெண்கள் சின்ன விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படுவதைக் குறைத்துக் கொள்வது நல்லது.அதிகாரிகளால் ஏற்பட்ட கெடுபிடிகள் தளர்ந்து விட்டாலும், பணியில் இருப்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பில் கவனமாக இருந்தால், வேண்டிய சலுகைகள் பெறலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்ளும் முன், அதில் உள்ள நிறைகுறைகளை உணர்ந்து கொண்டால், நஷ்டப்படுவதைத் தவிர்த்து விடலாம். பங்குச் சந்தையில் அதிக பணம் முடக்க வேண்டாம்.

    மீனம்: பொதுவாழ்வில் உள்ளவர்கள் தங்கள் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட முயல்பவர்களின் சகவாசத்தைத் தவிர்த்தால், நல்ல நிலையை அடையலாம்.பொறுப்பில் இருப்பவர்கள் எந்த இடத்திலும் பணிவாகப் பேசுவது நல்லது. கலைஞர்கள் எந்த சூழலிலும், உறுதியான மனத்துடன் செயல்பட்டு வந்தால், எல்லாம் நலமாகவே முடியும். மாணவர்கள்  வீண் விரயத்திற்கு வழி கோலும் செலவுகளை சுருக்கிக் கொள்ளுங்கள். பணத் தட்டுப்பாடு என்பது இராது. கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உடல்நலத்தைக் கவனிப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டிய வாரமிது. சுய தொழில் புரிபவர்கள் எதிலும் அகலக் கால் வைக்காதிருப்பது நல்லது.

    Share
  • விழுதுக்குள் வேர்

    முகில் தினகரன்

     

    “டெய்லர் ப்ளவுஸ் தைச்சிருப்பான்…ஈவினிங் வரும் போது மறக்காம வாங்கிட்டு வந்திடுங்க!”  டிபன் காரியரை நீட்டியபடியே சொன்னாள் சுசீலா.

     

    “ஏண்டி இதையெல்லாம் என்கிட்ட சொல்றே!…ஆபீஸ் டென்ஷன்ல மறந்தாலும் மறந்துடுவேன்..” சலித்துக் கொண்டான் ஜெயபால்.

     

    “அதெப்படி பொண்டாட்டி சொன்னது மட்டும் மறந்து போகுமா?..அப்ப யார் சொன்னா மறக்காது?” இடக்காய் கேள்வி கேட்டாள்.

     

    “அய்யோ காலங் காத்தால எனக்கு இது தேவையா? சரி..வாங்கிட்டு வந்துடறேன்..ஆளை விடு!”

     

    ஜெயபால் திரும்பி நடக்க, “டேய் கொஞ்சம் இருடா!” தாயின் குரல் கேட்டது.

     

    நின்றான்.

     

    தள்ளாட்டமாய் நடந்து வந்த அவனுடைய தாய், “டேய்..மூணு நாளா முதுகு வலி விட மாட்டேங்குதுடா..சாயந்திரம் வரும் போது ஒரு அயோடெக்ஸ் பாட்டில் வாங்கிட்டு வாடா!”

     

    “ம்..ம்..” என்று சொல்லி விட்டு தன் பைக்கில் ஏறிப் பறந்தான்.

     

    இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பினான் ஜெயபால்.

     

    “ஹய்யா..அப்பா வந்தாச்சு” என்று கத்தியபடி வந்து கால்களைக் கட்டிக் கொண்ட ஆறு வயது மகன் பாபுவை, “ச்சூ..போடா அந்தப்பக்கம்” என விரட்டினான்.

     

    ஒன்பது மணி வாக்கில் சாப்பிட்டு முடித்தவன் ஏதோவொரு புத்தகத்தை எடுத்து அதில் மூழ்கினான்.

     

    “ப்ளவுஸ் வாங்கினீங்களா?” அருகில் வந்து சுசீலா மெல்லக் கேட்டாள்.

     

    “ஓ…வாங்கிட்டு வந்திட்டேனே!” வேகமாய் ஒடிச் சென்று தன் பைக்கின் பாக்ஸிலிருந்து அதை எடுத்து வந்து கொடுத்தான்.

     

    அப்போதுதான் சடாரென்று அம்மா கேட்ட அயோடெக்ஸ் ஞாபகம் வந்தது. “அடாடா..அம்மா கேட்ட அயோடெக்ஸ் மறந்திட்டேனே” தலையில் குட்டிக் கொண்டான்.

     

    “அதுக்கென்ன பண்றது…மனுஷன் டென்ஷன்ல மறக்கறது சகஜம்தானே?… “மறந்துட்டேன்”ன்னு போய்ச் சொல்லுங்க!” சுசீலா ‘வெடுக்’கென்று சொன்னாள்.

     

    “உஷ்…மெதுவாப் பேசுடி..அம்மா காதுல விழுந்திடப் போவுது!”

     

    அப்போது அறை வாசலில் நிழலாட திரும்பிப் பார்த்தான் ஜெயபால்.

     

    பாபு நின்றிருந்தான். அவன் கையில் அயோடெக்ஸ் பாட்டில்.

     

    “அட..ஏதுடா இது?” சுசீலா ஆச்சரியமாகக் கேட்க,

     

    “நாந்தான் ஸ்கூல் பக்கத்துல இருக்கற கடைல வாங்கினேன்…காலைல அப்பாகிட்ட நீ ப்ளவுஸ் வாங்கிட்டு வரச் சொன்னே…பாட்டி அயொடெக்ஸ் கேட்டாங்க!…அப்பவே எனக்குத் தெரியும்…அப்பா அயொடெக்ஸை மட்டும் மறந்திட்டு வந்திடுவாங்கன்னு…அதான் நான் சேர்த்து வெச்சிருந்த காசுல இதை வாங்கிட்டு வந்தேன்…அப்பா..இதை நீ வாங்கிட்டு வந்ததா சொல்லி பாட்டிகிட்டே குடுத்திடு…இல்லைன்னா பாட்டி ரொம்ப வருத்தப்படும்” என்றான் அந்த ஆறு வயது சிறுவன்.

     

    உச்சந்தலை மயிரை யாரோ கொத்தாகப் பற்றி, முகத்தில் “பளார்..பளார்” என்று அறை விட்ட மாதிரி இருந்தது ஜெயபாலுக்கு.

     

     

     

     

     

    Share
  • சங்கீத சீசன் (நகைச்சுவை)

    கோமதி நடராஜன்

    தேங்காமூடி பாகவதர்ன்னு சொல்றதெல்லாம் அந்தக்காலம் இப்போ எப்படி?
    சட்னியாவே அரைச்சு கைலே கொடுத்து அனுப்பிடுறா…

    என்னது! பாகவதர் பாடும் போது எம்பிராய்டரி எல்லாம் போடுவாரா? எப்படி…?!
    அவர் ,தனியா தனியாவர்த்தனம் பண்றப்போ ,அவர் கையிலே ,துணியும் ஊசி நூலும் கொடுத்துப் பாருங்க , கைவேகத்திலே ,எம்பிராய்டரி அழகா போட்டு கொடுத்திடுவார்

    எப்படிடா உங்க அப்பா எது கேட்டாலும் சரி சரின்னு சொல்ல வைக்கிறே..?
    எது கேட்கணும்னாலும் எங்க அவர் ஸ்வரம் சொல்லிட்டு இருக்கும் போது கேட்பேன் ,ஒரே சரி சரி சரிதான்…..எப்படிடா நம்ம ஐடியா…?

    புது பாகவதர்களையெல்லாம்  உற்சாகப் படுத்த புது டெக்னிக் பண்றீங்களாமே எப்படி ?
    நிறைய , அப்ளாஸ் ஆஹா பேஷ் பேஷ் கைதட்டல் ஒலிகளை ,ரெக்கார்ட் பண்ணி இடையிடையே ஓடவிட்டுடுவோம் …இதைவிட வேற எப்படி பண்றது சொல்லுங்க…?

    அம்மா ! அப்பா சாதகம் பண்ண ஆரம்பிச்சுட்டார்மா..
    சீக்கிரமா இந்த சப்பாத்தி மாவை அவர் தாளம் போடுற தொடையில் வச்சுட்டு வா அவர் அடிக்கிற அடியில் இன்னைக்கு சப்பாத்தி சூப்பரா வரும் பாரு

    இன்னைக்கு என் கச்சேரிக்கு கிடைச்ச கைதட்டலை நீங்க கேக்கலியே
    நீங்க வேற …..! ஹால்ல கொசுக்கடி தாங்காம அடிச்ச அடி உங்களுக்கு அப்ளாஸா விழுந்துச்சு ஓய்

    கரகரப் பிரியா  ராகத்துக்குப் பிறகு பாகவதர் என்ன ராகத்திலே பாடுவார்..?
    இது தெரியாதா காபி ராகம்தான்…!

    இன்னைக்குத்தான் நீங்க ,நான் போட்ட காபியை கம கமன்னு ரசிச்சீங்க ரொம்ப சந்தோஷமா இருக்குங்க..!
    இது வேறையா உனக்கு …? நான் ஸ்வரம் பாடிட்டு இருந்தேண்டி…

    பாகவதர் பதனி கேக்கறாரே நாங்க பதனிக்கு எங்கே போறது
    சரியா போச்சு அவர் ஸ்வரம் பாடிட்டு இருக்கார்

    அம்மா ! மாஸ்டர் பாட்டு சொல்லிக்கொடுக்காம ,பதனி கமகம சரி சரின்னு பதனியை பாராட்டிட்டே இருக்காரே ?
    சரிகமபதனி சொல்லிக் கொடுத்துட்டு இருக்கார்டி

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 51 (24.12.12)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 07. கானல் வரி

    முகம் உடைவரி – ஆற்று வரி
    காவிரியை நோக்கிப் பாடியன
                        (2)
    காவிரியே!
    மாலை அணிந்தவன்;
    நிறைமதி போலும்
    வெண்கொற்றக்குடை உடையவன்
    உன் கணவன் சோழமன்னன்.
    அவன் தானும்
    செங்கோல் அதனைச் செலுத்திக்
    கங்கையைக் கூடியிருந்தாலும்,
    நீ அவனை வெறுப்பதில்லை.
    ஆதலினால் நீ வாழ்க!
    கங்கை என்னும் வேறொரு
    வேறொரு பெண்ணைச் சேர்ந்து
    உன் கணவன் வாழ்ந்தபோதும்
    நீ அவனை வெறுக்காமல்
    வாழக் காரணம்
    உன் போன்ற காதல் மாந்தரின்
    உயர் கற்புநெறி என்பதை
    நான் அறிந்து கொண்டேன்.
    நீ வாழ்க!
                      (3)
    காவிரியே!
    பெருமை பொருந்திய
    நின் கணவன் சோழமன்னன்
    வளையாத செங்கோலினைச்
    செலுத்துபவன்.
    அவன் தானும்
    வேறொரு குமரியுடன் கூடியிருந்தாலும்
    நீ அவனை வெறுப்பதில்லை.
    ஆதலினால் நீ வாழ்க!
    கயற்கண்ணாளே!
    உன் கணவன் சோழமன்னன்
    உன்னைத்தானும் பிரிந்து
    வேறொரு கன்னியுடன் கூடினான்
    என்பதை அறிந்தாலும்,
    நீ அவனை வெறுக்காமல் இருப்பது
    மாந்தரின் பெருமைமிக்க
    கற்புநெறியால்தான் என்பதை
    நான் அறிந்து கொண்டேன்.
    நீ வாழ்க!
    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 1- 20
    படத்துக்கு நன்றி
    Share
  • சிதாரில் விளையாடிய விரல்கள்

     

    விசாலம்

    அந்தக்காலத்தில் வந்த  அனுராதா என்ற ஹிந்தி சினிமாவும் அதற்கு இசை அமைப்பாளராக இருந்து முத்துக்களொப்ப பாடல்களை நமக்கு அளித்த  சிதார் மேதை பண்டிட் ரவிசங்கரை எப்படி மறக்க  முடியும்?கதாநாயகியாக லீலாநாயிடு நடிக்க திருமதி ஆஷா போஸ்லே பாட  அந்தப்படத்தில் வந்த எல்லா பாடல்களுமே ஹிட் ஆயின “ஜானே கைஸே ஸ்பனேமே கோகயே அக்கியான் “”பியா ஜானென ” என்ற பாடலும் இன்றும் பசுமையாக இருக்கிறது .

    நல்ல தீர்க்கமான நாசி, அகண்ட நெற்றி  நல்ல சிவப்பு  பெரிய காதுகளுடன் சுந்தரபுருஷராக இருந்த  பண்டிட் ரவிசங்கர் தான் கற்றுக்கொண்ட சிதாரில் தான் என்னென்ன ஸ்வரங்கள் பேச வைத்தார் ! எல்லா ஸ்வரங்களும் இனிய லயத்துடன்  அப்படியே தென்றலில்  கலந்து நம்மிடம் வந்து சேரும் போது அவை அப்படியே நம் இதயங்களைத்தொட்டன .ஒரு மீட்டிலிலேயே  பல ஸ்வரங்கள் இழைந்து வெளிப்படும்  அவர் வாசிக்கும்  “யமன் ” என்ற நம் கல்யாணி ராகம்  .பெஹாக் சிந்து பைரவி . தேஷ்  எல்லாமே நாள் முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கலாம் .தவிர அவர் நல்ல நடன கலைஞர்  நாட்டிய கோரியோகிராபர் ,தேர்ந்த ஆசிரியர் .நாட்டுப்பாடல்கள்  மேனாட்டு இசை . கர்நாடக இசை  சினிமா இசை ,மெல்லிசைப்பாடல்கள்  என்று பல கிளைகளில் புகழ்ப்பெற்று பாரத ரத்னா என்ற பட்டத்தையும் பெறறவர்.எப்போதுமே  ஒருவர்  கலைக்குடும்பத்தில் பிறக்க   அவர் பெரிய மேதையாக வளர அவர் வீட்டுச்சூழ்நிலையும்  மிகவும் உதவுகிறது என்பதை இவர் குடும்ப மூலமாகவும் தெரிய வருகிறது .பெங்காலி பிராமணக்குடும்பத்தில்  இவர் பிறந்தார் . இவரது சகோதரர் திரு உதயசங்கர் சிறந்த நடனகலைஞர்  பண்டிட் ரவிசங்கர் தன்னுடைய பத்தாவது வயதிலேயே  தன் சகோதரரின் நாடகக்குழுவிலும் பங்குப்பெற்று அத்துடன் தில்ரூபா .சிதார் என்ற பல வாத்தியங்களையும்  தன் முயற்சியாலேயே  வாசிக்க ஆரம்பித்து விட்டார். பாபா அல்லாவுத்தீன் கான் இவருக்கு சிதார் கற்றுக்கொடுக்க  ஆரம்பித்தார்.அவர் மல்ஹார் கரானாவைச்சேர்ந்தவர்   ஆனால் அப்போது ரவிசங்கர் மனம் ஒரு நிலையில் இல்லாமல் பாரிஸ் நகரின்  நாகரீகம் எல்லாம் மனதுக்குப்பிடிக்காமல் தன் கிராமத்திற்கு திரும்பவும் வந்துவிட்டார். இதனால் அவரது  சகோதரருக்குக்கோபம் ஏற்பட்டும் இவர் கவலைப்படவில்லை நேராக சிதார் கற்றுக்கொள்ள குரு இருந்த  கிராமத்திற்குச்சென்று குருகுலம் ஏற்று சிதார் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்   கடும்  பயிற்சி ஆரம்பமானது ஒரு நாளுக்கு பதினெட்டு மணி நேரம் பயிற்சி  பின்  குருவின் மகள் அன்னபூர்ணாதேவியைத்  திருமணம் செய்துக்கொண்டார் ஆனால்  அபிமான் படம்
    போல் இவருடைய வாழ்க்கை இருந்திருக்கும் என நினைக்கிறேன்  இவரது மனைவி இவரைவிட இசையில் மிஞ்சுபவளாக இருந்ததால் அங்கு இவருக்கு ஒரு “காம்ப்ளெக்ஸ் ” ஏற்பட்டு மனைவியுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு  விவாகரத்தும் ஆனது

    நான் இவரை இரண்டு முறை நேரில் பார்த்து பேசி இருக்கிறேன்  என் சகோதரர் திரு வெங்கட் திரு ரவிசங்கர் ஜியின் சிஷ்யரிடம்
    சிதார் படித்தார் அப்போது ஒரு முறை இவரை நேரில் காண போனபோது நானும் போயிருந்தேன் தன்னுடைய சிதாரில் மால்கோஸ் ராகம் வாசித்து எங்களை ஆனந்தப்படுத்தினார் .இவரது வாத்யவிருந்தம்  என்றவாத்ய குழுவின் இசை தில்லி ரேடியோவில் தவறாமல் வந்துக்கொண்டிருந்தது . கேட்க  மனரஞ்சகமாக இருக்கும்  .இவர் பல நாடுகளுக்குப்போயிருந்தாலும் முழு இந்தியனாகவே இருந்திருக்கிறார் .அதே போல்    இவரது இசையும் இந்திய இசையாகவே  இருந்திருக்கிறது இந்திய இசையை
    வெளி நாடுகளில் பரப்பிய பெருமை இவரையே சேரும்  இவரது இசைக்குழுவில் மிருதங்கம் ,தபலா கஞ்சிரா ,மோர்சிங்  கடம்  போன்ற எல்லா தாள வாத்தியங்களும்  சேர்ந்து அழகான போட்டியுடன் தனித்தனியாகவும் பின் கடைசியில் சேர்ந்தும் ரிதம் கொடுக்க நாம் நம்மையே மறந்துவிடுவோம்  நாட்டுப்பாடல் என்றால் அதற்கேற்ப வாத்தியங்கள் டோல் ,உடுக்கு போன்றவைகளும் சேரும்

    அமெரிக்காவில் பலதடவைகள்  நம் நாட்டு இசையைப்பற்றி சொற்பொழிவு ஆற்றி  பல அமெரிக்கர்களைக்கவர்ந்து      இதனால் பல வெளிநாட்டவர்கள் நம் நாட்டு சங்கீதத்தைக்கற்றுக்கொள்ளவும் அனுபவிக்கவும்  ஆரம்பித்தனர்  இவருடன் இசையில் சம்பந்தப்பட்டவர்கள்  பீட;ல்ஸ் ஜுபின் மேஹ்தா,   யஹூதிமெஹினின் ,ஜீன்பியர்   லூயிஸ் ராம்பல் போன்ற மேற்கத்து இசை மேதைகள் இவர் கச்சேரி செய்யும் போது கேட்க வந்திருக்கும்   ரசிகர்களிடம்  தான் வாசிக்கப்போகும் பாட்டைப்பற்றி அதன் ராகம்  தாளம் எல்லாம் விவரமாக எடுத்துரைத்து  பின் வாசிப்பார் .இதனால்  இசை புரியாதவர்களும் தலை ஆட்டி நன்கு அனுபவிப்பார்கள் இசைத்தெரிந்தவர்கள் தன்னையே  மறந்து அதில் லயித்துவிடுவார்கள் .இந்தியாவின் ஐம்பதாவது ஆண்டு சுதந்திர தினம் போது நியூயார்கில் ஒரு பெரிய புகழ் பெற்ற ஹாலில் இவர்  ” ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா   “என்ற பாடலை வாசித்து இந்தியாவுக்குப்பெருமை சேர்த்தார்.

    இவர்  கர்நாடக  இசை படிக்க காரணமாயிருந்தது வீணை தனம்மா அவர்களின் குடும்பம் இதனால் சாருகேசி  ராகமும் வாசஸ்பதி ராகமும் வட இந்தியாவில் இவர் மூலம் பிரபலமாயிற்று  வெளிநாடுகளிலும் மிகவும் புகழ் பெற்ற யஹுதிமெனுஹின் , ஜீன் பியேர், லூயிஸ் ராம்பல் ,போன்றவர்களுடன்   சேர்ந்து அவரது இசை இருந்தாலும் கொஞ்சமும் மேல்நாட்டு இசையைக்கலக்காமல் இந்திய இசையையே பிரதானமாகக்கொண்டு வாசித்ததாக இவர் அளித்த பேட்டி மூலம் தெரிய வருகிறது .

    இவரது இசை இத்தனை புகழ் இவருக்குத் தந்திருந்தும்  மணவாழ்க்கை இவருக்கு நிம்மதியைத்தரவில்லை என்றும்  அதனால்
    மனம் ஒடிந்து தற்கொலை எண்ணமும் வந்தது என்றும்  ஆனால் கடைசி  காலத்தில் சுகன்யா என்பவளை மணந்தப்பின் நிம்மதி கிடைத்ததாகவும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்  முதல் மனைவிக்குப்பின் இவரது குருவும் இவரை விட்டு விலகிக்  கொண்டாராம்
    பின் ஒரு நடனக்கலைஞர் கமலா சாஸ்த்ரி என்பவரை மணந்துக்கொண்டார் .பின் நோரோஜோன்ஸ் என்பவருடன் தொடர்ப்பு ஏற்பட்டு ஸுஜோன்ஸ் என்ற பெண்குழந்தைக்குத்தந்தை ஆனார் .பின் கடைசியில் இவர்  மணந்த சுகன்யாவுக்கு அனுஷ்கா சங்கர்  என்ற பெண் பிறந்து அவளும் இசையில் பல அவார்டு வாங்கி இருக்கிறாள். ஸுஜோன்ஸும் இசையில்   பல கிரானி அவார்டுகள் பெற்றிருக்கிறாள். “என் மனம் ஒருநிலையில் இல்லாமல் நான் என் வாழ்க்கையில் பல வருடங்கள் சஞ்சலத்திலேயே  இருந்து  நல்வாழ்க்கையைத்தவற விட்டேனோ என்று எனக்குத்தோன்றுகிறது” என்று அவர் முன்பு பேட்டியும் அளித்திருக்கிறார் .

    ஏசியன் கேம்ஸ் 1982ல் இவர் தயாரித்த ஸ்வாகதம் சுஸ்வாகதம் என்ற பாடல் இன்றும்  என் நினைவில் பசுமையாக இருக்கிறது
    இவர் வாசிக்கும்  “துன்” என்ற நாட்டுப்பாடல்களில் ஆடுமேய்ப்பவன் வருவான் படகோட்டியும் வருவான் . விவசாயியும் வருவான்
    நாமும் அவர்களுடன்  சேர்ந்து  அந்த இசைக்கலவையில் லயித்துவிடுவோம் . ரிச்சன் அட்டின் பரோ தயாரித்த மஹாத்மா காந்தியில் வரும்  இவரது வரும் இசை ஆஸ்கர் பரிசுக்குத்தேந்தெடுக்கப்பட்டது என்பது இந்தியாவுக்கே மிகவும் பெருமை அளிக்கும் விஷயம் தான்.. இந்த இசையில் பெரிய இசைக்கலைஞர் ஸுபென் மேஹ்தாவும் கூட இருந்தார்

    இத்தனைப்புகழ்ப் பெற்ற  .இசை மேதை  பாரதரத்னா பண்டிட் ரவிசங்கர்ஜி  இன்று நம்மிடம்  இல்லாதது இசையுலகத்தில் ஒரு பெரிய இழப்பேயாகும் . அவரது மகன் இவரைப்போல் மேலே வந்துவிடுவார் என நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    படத்துக்கு நன்றி

    http://post.jagran.com/legendary-musician-pandit-ravi-shankar-passes-away-1355285097

    Share
  • கலைஞன் ! காதலன் ! கணவன்

     

                                                                                                   சி. ஜெயபாரதன், கனடா



    உடலை மெழுகாக்கி உன்னை
    ஓவியமாய் உருவாக்கிச்
    சிற்பமாய்ச் செதுக்கி,
    ஒப்பனை செய்து
    உலகுக்குக் காட்டி,
    விற்பனை செய்பவன்
    கற்பனைக் கலைஞன் !
    உள்ளத்தின் மேல் படையெடுத்து,
    வெள்ளைப் புறாவைத் தூதுவிட்டு,
    இதயத்தைத் துணைக்கோள்
    ஈர்ப்பில் சுற்றுபவன்
    ஈசல் காதலன் !

     

    உரிமைச் சிறையி லிட்டு, உன்னை
    உயிருள்ள மட்டும் மூடி,
    உள்ளமற்ற உடலாய்,
    உடமைப் பண்டமாய்,
    உரிமைப் பிண்டமாய்,
    பம்பரமாய்,
    பசும் பொன்னாய்ப் பேணுவோன்
    அசுரக் கணவன் !
    காதலனுக்கு வேட்கை
    உன் துடிப்பு !
    கலைஞனுக்கு தேவை
    உன் நடிப்பு !
    கணவனுக்கு வேண்டும்
    உன் முடிப்பு !
    கலைஞன், காதலன், கணவன் என்னும்
    முப்பெரும் அவதாரம்
    ஒப்புடன் நிற்குமா
    ஓருடலில் ?

     

    ஒருநாள் விருந்து நீ
    ஓவியக் கலைத் தூரிகைக்கு !
    சிலநாள் கனவு நீ
    சிந்தை நுழை காதலனுக்கு !
    பலநாள் அமுத சுரபி நீ
    பசும்பொன் பெறும் பதிக்கு !
    வீணையாய் உனை மீட்டுவோன்
    கலைஞன் !
    தேனிசை நாதமாய்த் தீட்டுவோன்,
    கலைஞன் !
    கலைமானாய் உனைக் காட்டுவோன்,
    கலைஞன் !
    நடன மயிலாய், நடிகைச் சுடராய்ப்
    படமெடுத் துன்னை
    மதுவாய் மாற்றுவோன் கலைஞன் !
    ஊதியம் தந்து
    நாடக மாடும் கலைஞன்
    வாடகை வர்த்தகன் !

     

    கள்வெறிக் கவிதையில் புரட்டிக்
    காவியக் கருவாக்கி
    கனவிலே தேடி ஏங்குபவன்
    உன்னாசைக் காதலன் !
    பொன்னுடல் மீது
    போக மது ஊற்றுவோன் !
    வலையிட்டுத் தலையிட்டுப்
    பூவாக்கி, தேனாக்கி
    தேவ மாதாக்கித்
    தினமும் பூசிப்பவன்
    உன் காதலன் !
    உள்ளத்தைக் கொள்ளை இட்டு
    உடலை மென்று விட்டு
    ஓடி மறைபவன்
    உன்னிச்சைக் காதலன் !

     

    உன் காதலன் ஒரு
    கணவ னில்லை !
    உன் கணவன் ஒரு
    காதல னில்லை !
    உன் காதலன் ஒரு
    கலைஞ னில்லை !
    உன் கலைஞன் ஒரு
    கணவ னில்லை !
    உன் கணவனும் ஒரு
    கலைஞ னில்லை !
    உன் கலைஞனும்
    ஒரு காதல னில்லை !

     

    காதலன் கணவ னானதும்
    காதல் தேய்பிறை
    ஆகுது !
    கணவன் காதல னாகின்
    காதல் மதிலைத்
    தாண்டுது !
    கலைஞன் கணவ னானதும்
    கலைக்கண் பிறரை
    நாடுது !
    கணவன் கலைஞ னாகின்
    கவர்ச்சி வேறிடம்
    தேடுது !

     

    கலைஞன் ஒரு கருடன் !
    காதலன் ஒரு திருடன் !
    கணவன் ஒரு குருடன் !

     

    கவர்ச்சிப் பெண்ணே ! உன்
    காந்த உடல் கணவனுக்கு !
    அலைமோதும் உள்ளம்
    காதலனுக்கு !
    ஆணிவே ரான ஆத்மா
    கலைஞனுக்கு !
    முப்பெரும் பொறிகளை இறைவன்
    ஒருவனுக்கு அளித்திடான் !
    மும்மூர்த்திகள்
    வேண்டும் உனக்கு !

     

     

    +++++++++++++++++++

    S. Jayabarathan (jayabarat@tnt21.com)  December 20, 2012 [R-3]

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • ரத்ததானம்

    தனுசு

    நண்பா
    உனக்கொரு வாய்ப்பு
    நீ
    தர்மத்தின் தலைவனாக.”தானத்தில் சிறந்த தானம்’
    இன்னதென்று
    ஆளுக்கொன்று சொல்கிறார்கள்.
    இன்றைய அதி வேக உலகம்
    சொல்வது
    ரத்ததானமடா!உன்னுள் ஊறும்
    அந்த ரத்தம்
    நீ
    உரமிட்டு வளர்க்கவில்லை
    விலை கொடுத்து வாங்கவில்லை
    அதை இறைக்க இறைக்க
    அது ஊற்றெடுத்து பெருகுமடா!

    இயற்கை கொடுத்த சீர் அது
    அதைக் கொஞ்சம்
    நீ
    பகிர்ந்து கொண்டால்
    உன்
    உடல் ஒன்றும் கோபத்தில் சீறாது!

    காயம் இது பொய்யடா
    அதற்குள் ஓடும்
    இந்த ரத்தம் அது மெய்யடா!
    அது தானாய் சேரும் திரவமடா
    அதை
    கொடையாக்க
    உனக்கொரு வாய்ப்படா!

    தெருவெங்கும் திரியும்
    இந்த விளம்பரம் பாரடா
    இவருக்கு நாம் என்ன குறைச்சலாடா?
    நாமும் கொடுப்போம்
    குருதியடா
    வள்ளல் எனும் பெயர் வாங்க

    இது
    சந்தர்ப்பமடா!
    படத்துக்கு நன்றி தினமலர் செய்தித் தாள்
    Share
  • என்னுடைய போன்சாய்!

     

    பாகம்பிரியாள்
    நான் வளர, வளர என் நினவுகளும்
    நெடுநெடுவென்று வளர்ந்தன.
    என்னோடு போட்டிப்போட்டுக்கொண்டு

    வளரும் வேகத்திலோ அவை
    வேண்டாத இடத்தில் எட்டிப்பார்த்ததால்,
    வந்து விழுந்த வம்பு சண்டைகள் ஏராளம்.

    அதைத் தீர்ப்பதற்கே நேரம் போதவில்லை
    என்ற அங்கலாய்ப்பும், எரிச்சலும் குடும்பத்தை
    அவ்வப்போது  பிரட்டிப்போட்டது.

    சற்றே வலித்தது என்றாலும்
    தொல்லை தரும் நினவுகளை
    குட்டையாய் வெட்டிக் கொண்டேன்.

    வீண் தொல்லைகள் ஏதுமில்லை.
    விழும் சருகுகள் என் தொட்டியிலேயே
    வேருக்கான உரமாகிப்போனது.

    வேலை வட்டாரத்தில், பழகப்பழக
    புரிந்தது, என்னைப்போல் பலரும்
    போன்சாய் வைத்திருக்கிறார்கள் என்று!

    அதைப்பற்றி நல விசாரிப்புகளும்,
    அவசியமான குறிப்புக்களும்
    அவ்வப்போது வந்து சேருகின்ற போதில்,

    மரமெங்கும் பூக்குவியல் கொத்துக்கொத்தாய்,
    மணம் வீசியதால், மகிழ்ந்தவர் சிலரே, பலருக்கோ
    மனனதைப் பிராண்டும் கேள்விகள் பல.

    ஆனால் அவர்களிடம் எப்படி சொல்வேன்?
    மரமாய்  நின்ற  என் மீது காதலி(யி)ன்
    அழகிய பாதம்  பட்டதால் நிகழ்ந்த விந்தை இதுவென்று!

     

    படத்துக்கு நன்றி

    http://www.masterfile.com/stock-photography/image/400-05878811/Pink-Azalea-Bonsai-Tree-of-Satzuki-type.

    Share
  • என்னோடு ஒரு பொய்

    -தனுசு-

     

    “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில்”
    இந்த பழமொழி
    எனக்கு
    உண்மையாகிவிடுமோ?

    பொய்
    இந்த ஈரெழுத்து வார்த்தை
    சில நேரங்களில் பலமாகவும்
    பல நேரங்களில் பக்க பலமாவும்
    என்னோடு….

    பள்ளிக்காலத்தில்
    விடுமுறைக் கேட்டு
    எழுதிய கடிதத்தில்
    செத்தவர்களையே சாகடித்தது
    எத்தனை முறை!

    வாலிபத்தில்
    காதலை கைக்கொள்ள
    காதலியிடம் அளந்துவிட்டது
    எத்தனை முறை!

    ஊர் சுற்ற தாயிடம்
    சொன்னது எத்தனை முறை!
    காசு பறிக்க தந்தையிடம்
    எத்தனை முறை!

    எல்லாம் முடிந்து
    ஒரு வாழ்க்கை
    அமைந்த பின்னும்
    இந்த பொய்
    இன்னும் சில நேரங்களில்
    என்னோடு….

    கடிதத்தில்
    காதலில்
    தாயிடம்
    தந்தையிடம் கட்டுருண்ட பொய்
    இன்று
    கைப்பேசியில்!

    தவிர்க்க வேண்டிய நேரத்தில் வரும்
    தவிர்க்க முடியா ஒரு அழைப்பு!
    அதனை துண்டிப்பதற்கு
    தவிர்க்க முடியாமல்
    ஒரு
    பொய்யையும் கொண்டுவந்து சேர்க்கிறது
    என்னோடு…

    முக்கிய சந்திப்பில் இருக்கிறேன்
    வாகனத்தை ஓட்டுகிறேன்
    தொடர்பு இல்லை
    பேட்டரி இல்லை
    இப்படியாக…..

    இங்கு
    பொய்யின் உருவம் மாறவில்லை
    ஆனால்
    உருவகம் மாறி
    என்னோடு…..

    “பொய்மையும் வாய்மை இடத்தே”
    எனும் வாக்கு
    குற்றமின்றி கரை சேர்க்க
    கை கோர்க்கிறதோ
    என்னோடு….

    பொய்
    புலவனுக்கும்
    கவிஞனுக்கும்
    தொழில் முறையில் உறவு!
    இந்த யுவனுக்கு
    இது எந்த முறையில் உறவு?

    அசர வைக்கும் உலகில்
    அதன்
    அசுர வேக ஓட்டத்தில்
    ஒரு
    அவசர பொய் எனும் புனை
    இல்லாமல் இருக்காதா கைபேசி உலகம்!

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (37)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    ஒரு குழந்தையின் மீது பெற்றோர்கள் கொண்டிருக்கும் அன்பிற்கு இணையாக எதையுமே காட்டிவிட முடியாது. ஒரு தந்தையாகட்டும் அன்றித் தாயாகட்டும் குழந்தையின் நலனே அவர்களின் மனதில் மேலோங்கி நிற்கும் என்பதே பெரும்பான்மையாக நாம் காணக்கூடியதாக இருக்கும் உண்மையாகும்.

    பத்துமாதம் தன் வயிற்றிலே சுமந்து பிரசவ வேதனையை இன்பவலியாய்த் தாங்கி ஈன்றெடுத்த தன் இனிய மகவை கண்ணின் மணியாய்க் காத்து வளர்ப்பதே ஒரு தாயின் முக்கிய கடமையாக இருக்கும். அது போல மனையாளின் கருவிலே உருவாகும் குழந்தைக்கு உயிர்கொடுத்த நாள் முதல் அக்குழந்தையை இப்பூமித்தாயின் மடியிலே தவழவிடும் நாள்வரை காத்திருந்து அக்குழந்தையின் நல்வளர்ப்பு ஒன்றே தனது முன்னைய கடமையாகக் கொள்வதே தந்தையின் பண்பாகும்.

    இத்தகைய ஒரு சூழலிலே !

    அக்குழந்தையின் நலத்திற்கு தந்தையின் அதிகாரமா? அன்றித் தாயாரின் அதிகாரமா துணை போகப் போகிறது எனும் ஒரு கேள்வி எழுந்து தாயும், தந்தையும் சட்டத்தின் முன்னால் மோத வேண்டிய ஒரு நிலை ஏற்படுவது உலகத்தில் யாருக்குமே வரக்கூடாத ஒன்று என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருப்பதற்கு இடமில்லை.

    ஒரு ஆடவனுக்கு மனைவியையோ அன்றி ஒரு மங்கைக்கு மணாளனையோக் கொடுப்பதில் காலத்திற்கு பங்கு இருப்பினும் அதில் சம்பந்தப்பட்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏதாவது ஒரு வித பங்கு இருப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் எப்படிப்பட்ட ஒரு குழந்தை எவருக்குப் பிள்ளையாகப் பிறக்கப் போகிறது என்பதிலோ அன்றி அக்குழந்தை எத்தகைய நலம் வாய்ந்ததாக இருக்கப் போகிறதோ என்பதை நிச்சயிப்பதில் பெற்றவரின் பங்கோ அன்றி அக்குழந்தையின் பங்கோ பூஜ்ஜியம் தான்.

    அப்படி இவ்வார மடலிலே சக்தி என்னதான் கூறப்போகிறான் ? என்று எண்ணத் தலைப்பட்டு விட்டீர்கள் போல் தெரிகிறது. இதோ விடயத்திற்கு வருகிறேன்.

    7 வயதே நிறைந்த ஒரு சிறுவனை கடத்திச் சென்று மறைத்து வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு தேடிக் கண்டு பிடிக்கப்பட்ட தாயும் அந்தச் சிறுவனும் பற்றிய ஒரு மனதைத் தொடும் குறிப்பே இம்மடலாகும்.

    எதற்காக ஒரு தாய் தனது மகனைக் கடத்தி மறைத்து வைக்க வேண்டும் ? கேள்வி எழுவது சகஜமே !

    “சலி(Sally)” எனும் நியூசிலாந்து நாட்டிலே பிறந்த பெண் 1999ம் ஆண்டு  “ஒலிப் பொறியியல் (Sound Engineering)” கற்பதற்காக இங்கிலாந்து வந்தார். அவரின் இங்கிலாந்து வாழ்க்கையில் அடுத்த வருடமே “பென் ரொபேட்ஸ்(Ben Roberts)” என்பவரிடம் மனதைப் பறிகொடுத்தார்.

    மேற்கத்திய வாழ்வில் சகஜமாக நடக்கும் நிகழ்வாக காதலர்கள் ஒன்றாக வாழும் முறைக்கேற்ப ஒன்றாக வாழ்க்கை நடத்திய இவர்களுக்கு ” நியொன்(Neon) ” எனும் ஆண்குழந்தையும் “எலக்ட்ரா (Elektra)” எனும் பெண் குழந்தையுமாக இரட்டைக் குழந்தைகள் 2005ம் ஆண்டு பிறந்தன.

    அதைத்தொடர்ந்து இவர்கள் 2009ம் ஆண்டு மணமுடித்தவர்கள் அதே மேற்கத்திய வாழ்வின் சகஜ நிகழ்வான மண்முறிவுக்கு 2011ம் ஆண்டு உட்பட்டார்கள்.

    அவர்களின் ஆண் குழந்தையான நியோன் இவ்வருட சமகாலப் பகுதியில் தொடர் தலையிடிக்குள்ளாகியதாலும், கழுத்துப் பகுதி வீங்கியதாலும் பல பரிசோதனைகளுக்குள்ளாக்கப்பட்டு க்ழுத்துப் பகுதியில் ஒரு புற்று நோய்க்கட்டி இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டு அதை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சைக்குளாக்கப்பட்டு அக்கட்டி முற்றாக அகற்றப்பட்டது.

    ஆனால் அதன் பின்புதான் பிரச்சனையே ஆரம்பமானது.

    அச்சத்திர சிகிச்சையைத் தொடர்ந்து மேலும் அப்புற்று நோய் திரும்பாமலிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக “ரேடியோ கதிர்வீச்சு சிகிச்சை ( Raditherapy)” எனும் சிகிச்சைமுறைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று புற்று நோயில் முன்னனி வகிக்கும் வைத்தியத்துறை டாக்டர்களினால் தீர்மானிக்கப்பட்டது.

    சட்டரீதியான காரணங்களுக்காக பெயர் குறிப்பிட முடியாத டாக்டர் ஒருவர் இச்சிகிச்சையைப் பற்றி இத்தாய்க்குப் புரிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது “உனது மகனின் மூளை இக்கதிர்வீச்சினால் எரிக்கப்படப் போகிறது (Your son`s brain is going to be fried)  என்று கூறியதைச் செவிமடுத்த அத்தாய் தன் மகனை இத்தகைய ஒரு சிகிச்சைக்குள்ளாக்க முடியாத மனோநிலைக்குத் தள்ளப்பட்டார்.

    பிரிந்துவாழும் கணவனோ வைத்தியர்களின் ஆலோசனைக்குட்பட்டு தன் மகனின் நல்வாழ்க்கைக்கு இச்சிகிச்சை அவசியமானது என்பதை ஏற்றுக் கொண்டு அவர் இச்சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டார்.

    டாக்டர்களின் கருத்துப்படி இச்சிறுவனின் உயிருக்கு 80 வீதமான உத்தரவாதத்தை இந்தச் சிகிச்சையே அளிக்கும் என்று கூறப்படுகிறது.

    தன் மகனை இந்த அதீத சிகிச்சையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவரை அழைத்துக் கொண்டு தலைமறைவான இடத்திற்குச் சென்று விட்டார் அந்தத்தாய்.

    சரி இச்சிறுவனுக்கு இச்சிகிச்சையை அளிக்காவிட்டால் அவரின் உயிருக்கு உத்தர்வாதம் இல்லை என்று கூறப்படுகிறதே அதை எப்படி அந்தத்தாய் ஏற்றுக் கொண்டாள் எனும் கேள்வி உங்களுக்கு எழுவது சகஜமே

    தன்னுடைய மகனின் புற்றுநோய்க் கட்டிதான் அகற்றப்பட்டு விட்டதே “கதிர்வீச்சு” சிகிச்சையைத் தவிர்ந்த மாற்றுச் சிகிச்சைகளின் மூலம் மகனின் உயிரைப் பாதுகாக்கலாம் என்று வேறு சில டாக்டர்கள் தனக்குக் கொடுத்த ஆலோசனையின் படி தான் நடந்து தனது மகனின் உயிரைக் காத்துக் கொள்வேன் என்பதுவே அந்தத்தாயின் வாதமாக இருந்தது.

    ஆனால் தந்தையின் சம்மதத்தோடு இச்சிறுவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை அத்தியவசியமானது என்பதன் அடிப்படையில் கோர்ட்டு மூலமாக உத்தரவு வாங்கிக் கொண்டு அந்தச் சிறுவனையும் தாயையும் கண்டுபிடித்து தம்மிடம் ஒப்படைக்கும் படி சம்பந்தப்பட்ட வைத்தியசாலை போலிஸின் உதவியை நாடியது.

    விளைவு !

    “ஈஸ்ட் கிறீன்ஸ்டட்” எனும் இடத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் தலைமறைவாக இருந்த அந்தத் தாயும் , மகனும் போலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டார்கள்.

    நீதிமன்றத்தில் அந்தத்தாய் ஆஜாராகும் போது தந்தையுடன் ஹாஸ்பிட்டலில் அந்தச் சிறுவன் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டான். தந்தையிடம் இருந்து அனுப்பப்பட்ட குறுஞ் செய்தி நீதிமன்றத்தில் படிக்கப்பட்டது.

    “எனது மனைவியைப் போல எனக்கும் எனது மகனுக்கு அளிக்கப்படவிருக்கும் கதிர்வீச்சைப் பற்றிய ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது. இத்தகைய சிகிச்சை இல்லாமலே எனது மகனின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய சான்றுகளை எனது மனையாய் எனக்கு காட்டி நிரூபிக்க முடியுமானால் நான் அவளது வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். இல்லையானல் வைத்தியர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொள்வதை விட வேறு வழி இல்லை ” என்பதுவே அது.

    இவ்வழக்கை இருவாரங்களுக்கு ஒத்தி வைத்த நீதிபதி தனது உரையில்,

    “எந்தப் பெற்றோராலும் எண்ணிப்பார்க்க குடியாத, எந்தப் பெற்றோரும் எதிர்கொள்ளக்கூடாத ஒரு நிலையில் நீங்கள் இருப்பதை நானறிவேன் . இந்தத் தாயோ அன்றித் தந்தையோ தமது மகனின் வாழ்வை முன்னிருத்தியே தமது தீர்மாங்களை எடுத்திருக்கிறார்கள் என்பதில் எதுவித ஜயமுமில்லை. தாய்க்கும், தந்தைக்கும் குறிப்பாக இருவருக்கும் இடையில் தத்தளிக்கும் அந்த 7 வயதுச் சிறுவனுக்கும் மனதில் எழும் உணர்வலைகளை எப்படி விபரிப்பது என்றே தெரியவில்லை. இந்த்க் குடும்பத்தின் மீது திணிக்கப்பட்ட இக்கட்டாய அழுத்தத்தை நன்கு உணர்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

    தந்தை, தாய், மகன் இந்த உறவில் அல்லாடும் உள்ளங்களில் அலையாடும் கருத்துக்களில் பாகுபாடு இருக்கலாம் ஆனால் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பிலும், அக்கறையிலும் பாகுபாடு இருக்க முடியுமா?

    அச்சிறுவனின் நல்வாழ்வை மனதில் கொண்டு தம் எண்ணங்களில் தாம் கொண்டுள்ள நம்பிக்கையை இறுகப் பற்றியிருக்கும் இந்தப் பெற்றோர்கள் இருவரில் யாரையாவது குற்றம் கூறிவிட முடியுமா?

    பாசத்தின் வலுவைச் சட்டத்தினால் நிர்ணயித்து விட முடியுமா?

    சிலவேளைகள் , சில நேரங்கள் தோள்களின் சுமையை விட உள்ளத்தின் சுமைகள் கனக்கும் என்பதன் அர்த்தம் கொஞ்சம் புரியத்தான் செய்கிறது.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    (படம் – நன்றி “டெய்லி டெலிகிராப்”)

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • சுவரொட்டிகள்

    இன்னம்பூரான்

    1905ல் பிரசுரம் ஆன நூல் ஒன்று படிக்க நேர்ந்தது. சுவரொட்டியின் பாமரகீர்த்தியை அருமையாகச் செப்பியது. அதில் இருந்த படம் ஒன்று என்னை கவர்ந்தது. மயிலேறி வெளிச்சம் பாய்ச்சுகிறானொருவன். அது ஆதவனின் சூட்டை பிடித்து எரிக்கும் பூதக்கண்ணாடியல்ல போலும்! அவனது பிரகாசத்தைப் பிரிதிபலிக்கும் பாதரசம் தடவிய கண்ணாடி. சுவரொட்டிகள் அந்த மாதிரி தான். அவை கையொப்பத்தைப் போல தனித்துவம் வாய்த்தவை. ஒன்றை போல் மற்றொன்று இல்லை, விளம்பர சுவரொட்டிகளாக இருந்தாலும். எஸ்.கே. கூக்கா என்ற படைப்பாளர் சிகரம் ஒருவர் இருந்தார். ஏர் இந்தியா/அமுல் நிறுவனங்களுக்காக, அவர் எழுதிய ‘ஒரு வரியும் ஒரு படமும்’ ஆன சுவரொட்டிகள் அபாரம். தினந்தோறும் மும்பையில் மலபார் ஹில்ஸ் பிரதேசத்தில் நடை பயிலுபவர்கள் நின்று பார்த்து, நாள் முழுதும் அதே சிந்தனையில் ஆழ்ந்திருப்பார்கள்.

    புதுக்கோட்டையில் எமது இல்லத்தில் ஒரு அருமையான ராமர் பட்டாபிஷேக சுவரொட்டி, வரையப்பட்டிருந்தது. காலாகாலத்தில் அதைக் காப்பாற்ற முயன்றதெல்லாம் விழலுக்கு இறைத்த நீராயிற்று. அந்த மாதிரி கோயில் சிற்பங்கள், ஓவியங்கள், ஏட்டுச்சுவடிகள் எல்லாம் சுவரொட்டிகள் தாம். சந்தேகம் வேண்டாம். திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் கோயில் நுழைவாயிலில் சுவாமி விவேகானந்தர் சிஷ்யகோடி அழகியசிங்கருக்கு எழுதிய கடிதம் ஒரு கல்வெட்டாக இருக்கிறது. அதைப் படிக்காமல் உள்ளே போனால், பெருமாள் உம்மை கவனிக்க மாட்டார்.

    இரண்டாம் யுத்தகாலகட்டத்தில் காகித பஞ்சம். பிரசுரங்கள் பாதிக்கப்பட்டன. கோட்டா, கீட்டா எல்லாம் சுதந்திர வாஞ்சையை கட்டிப்போட நினைத்தன. எமது படைப்பாற்றலை அரசு புரிந்து கொண்டு தடியெடுக்கும் முன் சுவரொட்டிகள் ஒட்டினோம். ஆகஸ்டு 6. 1944 அன்று விபரீதத்துக்கு பயந்து அண்ணல் காந்தி விடுதலை செய்யப்பட்டதைப் பற்றி சுவரொட்டி இயக்கம் நடத்தினோம் என்பது மங்கலாக நினைவில் இருக்கிறது. சில வேடிக்கைகள். பிரிட்டீஷ் சாம்ராஜ்ய அபிமானிகள் ரகசியமாக செலவை ஏற்றுக்கொண்டனர். எங்கள் ஆஸ்தான பாடகரான ஒச்சத்தேவன் அருமையாக சித்திரமும் வரைவான். பிரமலை கள்ளர் ஹாஸ்டல் தான் எங்கள் பாசறை. அக்காலம், உசிலம்பட்டி சின்ன ஊர். ஊரெங்கும் எங்கள் சுவரொட்டிகள் பளீரென ஜால் அடிக்கும். ஒரு வாசகம் மறக்கவில்லை.

    “ தண்டலெடுத்து எம்மை அடக்க நினைக்காதே, பரங்கி துரையே!

    கண்டபடி விரட்டாதே, கலைக்டர் ஐயா!

    ராஜாவை மீட்டு விட்டாய், அரண்மனையிலிருந்து.

    கூஜா தூக்க உனக்கு ஆளில்லை, பரங்கி துரையே.”

    தப்பு இருக்கலாம். ஆனால், திருத்திக்கொடுத்தது இன்ஸ்பெக்டர் ராமய்யர். அது ஒரு காலம்.

    சுவரொட்டிகள் மேலும், மேலும் ஒட்டப்படும், வாசகர்கள் வேண்டாம் என்றால் ஒழிய.

    இன்னம்பூரான்

    20 12 2012

    படித்த நூல்:

    KATE SANBORN (1905) OLD TIME WALL PAPERS:AN ACCOUNT OF THE PICTORIAL PAPERS ON OUR FOREFATHERS’ WALL WITH A STUDY OF THE HISTORICAL DEVELOPMENT OF WALL PAPER MAKING AND DECORATION: NEW YORK: THE LITERARY COLLECTOR PRESS

    சித்திரத்துக்கு நன்றி: http://www.gutenberg.org/files/41664/41664-h/images/i_011.png

    Share
  • வால்ட் விட்மன் வசன கவிதை -3

                                                                                    வரலாற்று ஆசான் ஒருவனுக்கு

                                                                                                             (To a Historian)

                                                                                            Walt Whitman

                                                                                                 (1819-1892)
                                                                                   (புல்லின்இலைகள் -1)

                                                                           வரலாற்று ஆசான் ஒருவனுக்கு

                                                                                 மூலம் : வால்ட் விட்மன்

                                                                       தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

     

     

    இறந்த காலத்தைக் கொண்டாடுவாய் நீ !

    புற உலகை ஆராயச் சென்று,

    மனித இனத்தின் வாழ்வுக் களத்தை,

    தன்னைக் காட்டிக் கொள்ளும் வாழ்வைத்

    தேடிப் போனாய் நீ !

    மதாதிபதி களையும்,

    மன்னரையும் ஒருமைப் படுத்தி

    மானிடனை அரசியல் பிறவியாய்ப்

    காண்பவன் நீ !

    நான் அல்லிகனி* மலைவாசி !

    தானெனும் சுயநல உரிமையில் இருப்பதாய்

    நானவனை நடத்துவேன்.

    தன்னை அபூர்வமாய் வெளிப்படுத்தும்

    வாழ்வுத் துடிப்பை அழுத்தும்

    தன்மீதுள்ள மனிதச் சுயமதிப்பு

    உன்னதம் உடைத்து !

    வெளிப்புறத் தோற்றத்தைப் பெருமையாய்

    வேண்டுபவன் !

    வருங்கால வரலாற்றைத் திரையிடுவேன்

    பழங்காலக் காரணத் துக்கு !

    +++++++++++++

    அல்லிகனி மலைவாசி*  Alleghenies Inhabitant.

    Alleghenies — is part of the vast Appalachian Mountain Range of the Eastern United States and Canada. It has a northeast-southwest orientation and runs for about 400 miles (640 km) from north-central Pennsylvania, through western Maryland and eastern West Virginia, to southwestern Virginia.

    +++++++++++++

    தகவல்:

    1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

    2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]

    3. Britannica Concise Encyclopedia [2003]

    4. Encyclopedia Britannica [1978]

    5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman[November 19, 2012]

    6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

    ********************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan (December 19, 2012)

    http://jayabarathan.wordpress.com/

     

     

    Share
  • தொல்லை காட்சி- ரஜினி – சொல்வதெல்லாம் உண்மை – ஒரு வார்த்தை ஒரு லட்சம் சொல்வதெல்லாம் உண்மை

    மோகன் குமார்

    ஜீ – (தமிழ்) டிவி யில்

    மற்றவர்களுக்கு தெரிந்த ஒரே பிரபல நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை ! இதில் பலர் வந்து பேசும் கண்ணீர் கதைகள் சற்று செட் அப் என்று ஒரு சாரார் சொன்னாலும் கூட, இதே நிகழ்ச்சியில் ஒரு பெண் தன் தந்தை கொலை செய்து புதைத்ததை சொல்ல, அவர் கைதானதும் நடந்தது நீங்கள் அறிந்திருக்கலாம்,

    நிற்க. வணக்க்க்க்க்கம் புகழ் நிர்மலா பெரியசாமி இந்நிகழ்ச்சி தொகுத்து வழங்கியது நிறைவுக்கு வந்து ஆரோகணம் பட இயக்குனர் ” லட்சுமி ராமகிருஷ்ணா ” இனி தொகுத்து வழங்கப் போகிறாராம். இவர் தொகுத்து வழங்குவதால் ஓரிரு எபிசொட் எப்படி இருக்கு என பார்க்கும் ஆவல் லேசாய் வருது (பார்த்ததும் ஆவல் காற்றாய் மறையவும் வாய்ப்புண்டு !)

    ஒரு வார்த்தை ஒரு லட்சம்

    விஜய் டிவியில் வரும் நல்ல நிகழ்ச்சிகளில் ஒன்று ” ஒரு வார்த்தை ஒரு லட்சம்”. நீங்கள் நிச்சயம் ஒரு முறையாவது பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நடத்தும் ஜேம்ஸ் வசந்தன் பல வருடங்களாக நிகழ்ச்சி தொகுப்பாளாராக இருந்து, இப்போது இசை அமைப்பாளர் ஆன போதும், இதற்காக நேரமெடுத்து இதை நடத்துகிறார். தெளிவான உச்சரிப்பில் அழகான தமிழைப் பேசும் மிக சில தொகுப்பாளர்களில் இவரும் ஒருவர் !
    முன்பு சினிமா அல்லது டிவி நட்சத்திரங்கள் இந்த கேம் ஆடினர். இப்போது பள்ளி மாணவ மாணவிகளுக்கு இதே நிகழ்ச்சி நடக்கிறது. நிச்சயம் கலந்து கொள்ளும் இருவரின் புரிந்துணர்வை பொறுத்தே வெற்றி அமைகிறது எனத் தோன்றுகிறது. உங்களுக்கு தெரிந்த பள்ளி மாணவர்கள் இருந்தால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பரிந்துரைக்கலாம் !

    ரஜினிக்காக ராகவா லாரன்ஸ் ஆடிய ஸ்பெஷல் டான்ஸ்

    ராகவா லாரன்ஸ் திரை உலகிற்கு வர உதவியவர் என்கிற வகையில் ராகவா லாரன்ஸ் எப்போதுமே ரஜினியை மிக உயர்வாகப் பேசுவார். இவ்வருடம் ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு ராகவா லாரன்ஸ் ஸ்பெஷல் டான்ஸ் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை சன் மியூசிக்கில் அடிக்கடி போட்டு வருகிறார்கள். ரஜினி ரசிகர்களுக்காகவும், ராகவா லாரன்சின் நடன அசைவுகளுக்காகவும் இப்பாடலை ரசிக்க முடிகிறது. நீங்க இப்பாடலை பார்த்தீர்களா நண்பர்களே ?

    என் வழி தோனி வழி

    சன் நியூசில் என் வழி தோனி வழி என்கிற நிகழ்ச்சி என்றைக்கெல்லாம் கிரிக்கெட் மேட்ச் இருக்கோ அன்று மாலை ஒளிபரப்பாகும். பாஸ்கி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் அவருடன் எப்போதும் வரும் மற்ற இருவர் ஞானி (எழுத்தாளர் அல்ல) மற்றும் பிரகாஷ். இதில் பிரகாஷ் என்பவர் கிரிக்கெட் பற்றி குருட்டாம்போக்கில் அடித்து விடுவார். அவர் பேசும் ஆங்கிலம் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். ( வேண்டுமென்றே தான் அப்படி பேசுறார் !) எந்த அர்த்தமும் இல்லாத வாய்க்கு வந்த வார்த்தைகளை போட்டு அந்த வாக்கியத்தை அவர் பேசுவதை கேட்பதற்காக, மற்றவர்கள் பேசும் மொக்கைகளைப் பொறுத்துக் கொள்வேன். இயலும் போது பாருங்கள் !

    நீயா நானா

    நீயா நானா குழு இப்போதெல்லாம் பல்வேறு அலுவலகம் வந்து நிகழ்ச்சியில் பேசத் தேவையான ஆட்களை தேர்வு செய்கிறது. அப்படி நாங்கள் வேலை செய்யும் ஆபிசுக்கு சமீபத்தில் தேர்வுக் குழு வர, பேசிய 200 பேரில் 30 பேரை வெவ்வேறு தலைப்பில் ஷூட்டிங்கில் பேச தேர்ந்தெடுத்தனர். அந்த 30-ல் அடியேனும் ஒருவர். டிசம்பர் 20, 21, 24 – 3 நாள் ஷூட்டிங் என்றனர் மூன்று நாளில் நடக்கும் ஒன்பது டாபிக்கில் முதலாவதாய் டாப்பிக் இருந்தால் மட்டுமே நான் பங்கேற்க முடியும் என்ற சூழல் !  Probability wise நிச்சயம் நமக்கு வாய்ப்பு வராது என்று தான் எண்ணிக்கொண்டிருந்தேன்.
    ஆனா எதோ கொஞ்சம் அதிர்ஷ்டம் நமக்கு ஓட்டிகிட்டு இருக்கு. சரியா முதல் நாள் முதல் ஷூட்டா நம்ம பேசும் தலைப்பு வந்துடுச்சு.

    நிகழ்ச்சியின் தலைப்பு, விஜய் டிவியில் என்று வெளியாகிறது போன்ற விபரங்கள் பின்னர் பகிரப்படும் !

    பிளாஷ்பேக்: ஒளியும், ஒலியும்

    டிவி பொட்டி ஊருக்கு வந்த காலத்தில், வெள்ளியன்று மாலை ஏழரை மணிக்கு தூர்தர்ஷனில் ஒளியும், ஒலியும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். எங்கள் எதிர் வீட்டுக்கு சரியே அந்த நேரத்துக்கு போய் அந்த நிகழ்ச்சி மட்டும் பார்ப்பது வழக்கம். பின் நம் வீட்டுக்கு டிவி வந்தபின், நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தால், ” ஒளியும், ஒலியும்” என வெள்ளி மாலை வீட்டுக்கு வருவதும் நடக்கும் ! முதல் 2 பாட்டு மட்டும் புதுப் படத்திலிருந்து போடுவார்கள். மற்றபடி சிவாஜி, எம் ஜி. ஆரின் பழைய பாடல்கள் ரஜினி கமல் பாடல்கள் என போகும்.

    அந்த அரை மணி நேர ஒளியும், ஒலியும் தந்த மகிழ்வை, 24 மணி நேரமும் பாட்டு போடும் எந்த சானலாலும் செய்ய முடிய வில்லை !

    Share
  • வேற்றுமையில் ஒற்றுமை

    சுலோச்சனா

    மனிதன் பிறப்பால் அங்க அமைப்புகளினால் அவைகளின் செயல் பாடுகளினால் ஒன்றுபட்டவனாக இருக்கின்றான்.ஆனால் சிந்தனைகளில் அதன் விளைவான செயல்களில் பழக்க வழக்கங்களில் வேறு பட்டவனாக இருக்கின்றான்.

    நல்லவன்,தீயவன் செல்வந்தன் ஏழை என இரு பிரிவாகப் பொதுவாகப் பிரித்தாலும் மதம் முதல் மனப்போக்கு வரை உட்பிரிவுகள் கொள்கைப் பிரிவுகளெனவும் பல உட்பிரிவுகள்.ஆனால் அனைவருக்கும் பொதுவானவை பின்பற்ற வேண்டியவை என சில குண நலன்கள் சான்றோர்களால் குறிப்பிடபட்டுள்ளன.

    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்.(குறள் : 341)

    மற்றவர் உடமைக்கு ஆசை படாதிருத்தல் ஆசைப்படுவதோடு நில்லாமல் வலிய அதைஅடைய முயலுதல் போன்றவைகளால் ச்மூக நலனுக்கு ஊறு நேர்கின்றது.இது வன்றி இறை நம்பிக்கை உடையவர்கள் உள்ளனர்.அது இல்லாமல் அப்படி ஒரு சக்தி  உண்டு என்பதில் மறுப்பு உணர்வு உள்ளவர்களும் உள்ளனர். மனித இனத்தில் இதுவும் ஒரு பிரிவே எனக் கூறலாம்.ஆத்திகம் பேசுபவர்கள் நாத்திகம் பேசுபவர்கள் இரு பிரிவாக இருப்பினும் , ந்ற்செயல்கள் நல்லொழுக்கம் ச்மூக நலனுக்காக் பாடுபடுதல் என செயல்படும்பொழுது “மனித நேயம் “ எனும் மாண்பில் ஒன்றாகவே மதிக்கப்படுகின்றார்.

    இதுவும்-அதுவும் கலப்படமாக “பகுத்தறிவுவாதிகள்” எனும் பண்பாளர்களும் மூட பழக்கவழக்கங்களுக்கு எதிராக பேசியும் செயல்பட்டும் அவறறை முறியடிக்க முயற்சிக்கின்றனர்.

                              “பகுத்தறிவு இல்லாத பக்தி மூடத்தனம்

                              பக்தி இல்லாத பகுத்தறிவு அரக்கத்தனம்”

    என்பது திரு.வி.க அவர்களின் பொன் போன்ற திருவாக்கு.ஆனால் எத்தனையோ வேற்றுமைகளில் ஊடே ஓர் ஒற்றுமை ஊடாக ஊடுருவி நிற்கின்றது.ஒரே மருந்து அருமருந்து

    சுய நலம் இன்மை – அள்வோடு ஆசைகொளல்

    பொதுவாக எதன் மீதும் அதீத பற்றின்றி வாழ்தல் அடுத்து உலகத்தையே ஒரு குடை கீழ் கொண்டுவரும் ஓர் மாபெரும் சக்தி அதை வேதம் முதலிய  நூல்கள் பிரம்மம் என்கின்றனர்.பலர் உண்மை என்கின்றனர். சிலர் சத்யம் என்கின்றனர்.

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு. (குறள் : 350)

    என்பது ஐயன் வாக்கு.

    எப்படி அழைக்கப்பட்டாலும் ஆத்திகன் நாத்திகன் பகுத்தறிவு வாதி அனைவரும் வணங்கி நின்று ஒன்று பட வேண்டிய ஒரே சக்தி “சத்தியம் என்ற உண்மையே ஆகும்.”

    தட்டச்சு உதவி :  உமா சண்முகம்     

    Share
  • அமெரிக்காவின் வெட்கக்கேடு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    டிசம்பர் ஏழாம் தேதி வெள்ளிக்கிழமை  அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாநிலத்தில் உள்ள நியுடவுன்  என்னும் ஊரில் உள்ள சேண்டி ஹுக் பள்ளிக்கு அன்று சோக  தினமாக விடிந்தது.  அன்று  இருபது வயதுப் பையன் ஒருவன் பள்ளி ஆரம்பித்து, கதவுகள் எல்லாம் மூடப்பட்ட பின் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் இருபது பேரையும் பள்ளித் தலைமை ஆசிரியையும் பள்ளிச் சிறுவர்களுடைய மனநல ஆலோசகரையும் மற்றும் நான்கு பேரையும் சுட்டுக் கொன்ற சம்பவம் அமெரிக்காவை மட்டுமல்ல உலகையே உலுக்கியிருக்கிறது; சிந்திக்க வைத்திருக்கிறது.


    கடந்த வெள்ளியன்று  நடந்த இந்தச் சம்பவம் பற்றித்தான் இன்னும் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் வானொலியும் பேசிக்கொண்டிருக்கின்றன.  இந்த நிகழ்ச்சி பற்றிப் பள்ளியில் நிகழ்த்திய இரங்கல் உரையில் ஜனாதிபதி ஒபாமா தன்னுடைய பதவிக் காலத்தில் ஐந்து முறை இம்மாதிரி வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் இதை இனியும் இப்படியே விடக் கூடாது என்றும் எல்லாத் தரப்பினரும் ஒன்று கூடி இதற்குத் தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.  அமெரிக்காவில் யாரும் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம் என்னும் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்பதைப் பூடகமாகக் கூறினார்.  (பல முறை கண்ணில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டார்.)

    மிகச் சக்தி வாய்ந்த (assault weapons)  துப்பாக்கிகளை – ராணுவத்தினர் உபயோகப்படுத்தும் துப்பாக்கிகள் – குடிமக்கள் வைத்திருப்பதற்கு தடைச் சட்டம் ஜனாதிபதி கிளிண்டன் காலத்தில் 1994-இல் கொண்டுவரப்பட்டது.  ஆனால் அதன் ஆயுள் பத்து வருடங்கள்தான்.  (அமெரிக்காவில் இப்படித்தான் பல சட்டங்களுக்கு நிரந்தர ஆயுள் கிடையாது.  சில வருடங்கள் அது அமுலில் இருக்கும்.  அதன் பிறகு மறுபடி அதன் தலைவிதியை நிர்ணயிப்பார்கள்.)  மறுபடி 2004-இல் பரிசீலனைக்கு வர வேண்டியிருந்த தருணத்தில் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை.  அது அப்படியே கிடப்பில் போடப்பட்டது.  இப்போது இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கலிபோர்னியாவைச் சேர்ந்த காங்கிரஸ் பிரதிநிதி ஒருவர் இதை மறுபடி சட்டமாக்க முயலப் போவதாகக் கூறியிருக்கிறார்.

    இப்போதைக்கு இந்த வகைத்  துப்பாக்கிகளை வாங்குவதற்கு சில மாநிலங்களில் தவிர யாரும் வாங்க எந்தத் தடையும் இல்லை. சில மாநிலங்களில் மட்டும் வாங்குபவரின் பின்னணியைப் பரிசோதித்தப் பிறகு வாங்குவதற்கு அரசு உரிமம் வழங்கும்.  இந்த வகைத் துப்பாக்கியையும் இன்னும் இரண்டு கைத்துப்பாக்கிகளையும் சுட்டவன் பள்ளிக்கு எடுத்து வந்திருக்கிறான்.  அவை எல்லாம் அவன் தாய் தகுந்த உரிமம் பெற்று வாங்கியிருக்கிறாள்.  தன் கணவனை மூன்று ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்துகொண்ட இந்தப் பெண் (விவாகரத்திற்கு யார் அல்லது எது காரணம் என்று தெரியவில்லை.) பல வகைத் துப்பாக்கிகள் வைத்திருந்திருக்கிறார்.  துப்பாக்கி வைத்துச் சுடும் விளையாட்டைப் பல முறை இவர் விளையாடியிருக்கிறார்.  தன் மகனையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.  புத்திசாலி என்று கருதப்பட்டாலும் இந்தப் பையன் சிறு வயதிலிருந்தே மற்றச் சிறுவர்களிடமிருந்து மாறுபட்டவனாக இருந்திருக்கிறான்.  பள்ளியில் பலரோடு பழகுவதில்லையாம்.  வகுப்பு ஆல்பத்தில் இவனுடைய போட்டோ இல்லை.  கேமராவுக்கு முன் நிற்க இவன் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இடையிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டான்.  இப்படியெல்லாம் மாறுபட்ட குணங்கள் கொண்ட இவனை இவன் தாய் ஏன் இன்னும் சற்று நன்றாகக் கவனிக்கவில்லை, மனநோய் மருத்துவரிடம் அழைத்துச் செல்லவில்லை என்பது கேள்விக் குறியாக இருக்கிறது.  இந்தப் பையனுக்கு யார் மேல் கோபம், எதனால் சுட்டான் என்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

    பலர் – இதுவரை எல்லோருக்கும் துப்பாக்கி வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தவர்கள் உட்பட – இப்போது தங்கள் கொள்கையிலிருந்து மாறி இது பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.  ஆயினும் எல்லோரும் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்று கூறுபவர்களும் அமெரிக்காவில் இன்னும் – இந்தச் சம்பவத்திற்குப் பிறகும் – இருக்கிறார்கள்.  நாலாயிரம் பேர் வசிக்கும் நியுடவுனில் துப்பாக்கிக் குண்டு வெடிக்கும் சத்தம் (துப்பாக்கி சுடும் பயிற்சியை விளையாடுபவர்கள் எழுப்பும் ஒலி) வெடிப்பவர்களைச் சந்தோஷப்படுத்துமாம்!  அமெரிக்கக் கலாச்சாரத்தில் வன்முறை முக்கிய பங்கு வகிக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

    இந்தச் சம்பவத்திற்குப்  பிறகு இப்படிப்பட்ட துப்பாக்கிகள் வைத்துக்கொள்வதற்கு உரிமம் எல்லாக் குடிமக்களுக்கும் கொடுத்துத்தான் ஆக வேண்டுமா என்ற விவாதம் அமெரிக்கா முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது.  பள்ளித் தலைமை ஆசிரியையிடம் துப்பாக்கி இருந்திருந்தால் சுட்டவனை உடனடியாக நிறுத்தியிருக்கலாம் என்று துப்பாக்கி வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூறியிருக்கிறார்.  பலரைச் சுடப் போகும் ஒருவன் வருவான் என்று தலைமை ஆசிரியை எதிர்பார்த்துக்கொண்டிருக்க முடியாது.  அவர்  தன் துப்பாக்கியை எடுப்பதற்குள் எத்தனையோ பேரை அவன் சுட்டிருக்கலாம்.  மக்கள் கையில் துப்பாக்கியைக் குறைக்க வேண்டும் என்னும் தருணத்தில் அதைக் கூட்ட வேண்டும் என்கிறது இந்த வாதம். இன்னொருவர் அத்தனை பேரையும் கொன்றது துப்பாக்கி அல்ல, அதை வைத்திருந்த, மனம் பேதலித்த ஒருவன் என்கிறார்.  அவன் கையில் துப்பாக்கிக்குப் பதில் வேறு ஏதாவது ஆயுதம் இருந்தால் இத்தனை பேரை இத்தனை குறுகிய காலத்தில் கொன்றிருக்க முடியாது என்று அவர் எண்ணிப்பார்த்ததாகத் தெரியவில்லை.  சீனாவில் இதே போல் இருபது பேரைக் குறிவைத்தவன் கத்தியை உபயோகித்ததால் அனைவரும் காயத்தோடு பிழைத்துக்கொண்டனர், ஆனால் இங்கோ பயன்படுத்திய ஆயுதம் துப்பாக்கி என்பதால் அனைவருமே மாண்டுவிட்டனர் என்கிறார் எல்லோர் கையிலும் துப்பாக்கி இருக்கக் கூடாது என்னும் கட்சியைச் சேர்ந்தவர்.

    அமெரிக்க அரசியல் சாசனத்தை அடுத்து வந்த உரிமைச் சாசனத்தின் இரண்டாவது ஷரத்தில் எல்லோருக்கும் தங்களைக் காத்துக்கொள்ள ஆயுதங்கள் வைத்துக்கொள்ள உரிமை தரப்பட்டிருக்கிறது..  அந்தக் காலத்தில் அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்துவந்த பழங்குடிகளின் நிலங்களைக் குடியேறிகள் பறித்துக்கொண்ட பிறகு அவர்களால் இவர்களுக்கு ஆபத்து இருந்ததென்னவோ உண்மைதான்.  (பழங்குடிகளால் குடியேறிகளுக்கு ஆபத்து இருந்தது என்பது பழங்குடிகளைப் பொறுத்த வரை நியாயமானதே என்றாலும்.)  காலம் இப்போது மாறிவிட்டது.  எப்போதோ ஆபத்து இருக்கலாம் என்று கொண்டுவந்த சட்டத்தை இன்னும் பின்பற்ற வேண்டுமா?

    துப்பாக்கி வைத்துக்கொள்ள  வேண்டும் என்னும் உரிமைகளைக் காப்பதற்கு அமெரிக்காவில்  ஒரு சங்கமே (National Rifle Association) இருக்கிறது.  இந்தத் தேசிய துப்பாக்கிக் கழகத்தில் லட்சக் கணக்கான உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.  இந்தச் சங்கம் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையைத் தடுக்கும் எந்தச் சட்டமும் வராமல் பார்த்துக்கொள்ளும்.  இதற்காகத் தேர்தலில் நிற்கும் மத்திய, மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்கள் பக்கம் இருக்க நிறையப் பணம் செலவழிக்கும்.  இதை எதிர்த்து காங்கிரஸ் சட்டம் இயற்றுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    விவாதத்தின் இன்னொரு அம்சம் மனநோய் உள்ளவர்களுக்குத் தகுந்த வைத்தியம் செய்யப்  போதிய மனநல மருத்துவர்கள்  இல்லையென்பது.  அமெரிக்காவில்  எத்தனை நோயாளிகளுக்கு எத்தனை மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்ற புள்ளிவிபரம் என்னிடம் இல்லை.  இருப்பினும் ஐம்பதாயிரம்  பேர்களுக்கு ஒரு மன நோய் மருத்துவர் இருக்கும் இந்தியாவில் இந்தத் துப்பாக்கிக் கொலைகள் நடப்பதாகத் தெரியவில்லை.  அங்கும் மனநோயாளிகள் பிறரைத் தாக்கலாம்.  ஆனால் அவர்கள் கைகளில் துப்பாக்கிகள் இருப்பதில்லை.

    அமெரிக்கா உடனடியாகச் செய்ய  வேண்டியது துப்பாக்கி வைத்துக்கொள்ள  எல்லோருக்கும் உள்ள உரிமையை நீக்க வேண்டும். முப்பத்தொரு கோடிப் பேர் வசிக்கும் அமெரிக்காவில் இப்போது முப்பது கோடித் துப்பாக்கிகள் இருக்கின்றனவாம். அதாவது சராசரியாக ஒருவருக்கு ஒன்று.  இங்கு ஆண்டுக்கு 9960 பேர் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகிறார்கள். முப்பத்தொன்பது கோடிப் பேர் வசிக்கும் கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி என்று ஒன்பது நாடுகளிலும் சேர்ந்து துப்பாக்கியால் இறப்பவர்கள் 906 பேர்.

    அடுத்ததாக சமூகத்தின் தூண்களில்  ஒன்றான குடும்பம் என்ற அமைப்பைப்  பலப்படுத்த வேண்டும்.  எந்தக் குடும்பத்தை எடுத்தாலும்  மாற்றாந்தாய், மாற்றாந்தகப்பன், ஒரே தாயின் மற்றொரு கணவனுக்குப் பிறந்த தூரத்துச் சகோதரி (half- sister), ஒரே தந்தையின் மற்றொரு மனைவிக்குப் பிறந்த தூரத்துச் சகோதரன் (half-brother) என்ற உறவுகளைப் பார்க்காமல் இருக்க முடியாது.  தனிமனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப் போய் இப்போது குடும்பம் என்ற அமைப்பே குலைந்துவிட்டது அமெரிக்கா.  இதனால் சிறு குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.  பெரியவர்கள் ஆனதும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.  குழந்தை வளர்ப்பது எப்படி என்று கற்றுக் கொடுக்க அத்தனை பத்திரிக்கைகள் இருக்கின்றன.  ஆனால், விவாகரத்து செய்து குழந்தைகளின் மனம் பாதிக்கப்பட வைக்காதீர்கள் என்று எந்தப் பத்திரிக்கையும் சொல்வதில்லை.  உலகிலேயே செல்வம் அதிகம் உள்ள அமெரிக்கா தன்னுடைய சமூகத்தைத் திருத்திக்கொள்ளப் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

    படத்திற்கு நன்றி:

    http://www.telegraph.co.uk/news/worldnews/northamerica/usa/9748932/Connecticut-school-shooting-Heartbreaking-details-emerge-of-how-parents-learned-children-were-dead.html

    Share