சி. ஜெயபாரதன், கனடா



உடலை மெழுகாக்கி உன்னை
ஓவியமாய் உருவாக்கிச்
சிற்பமாய்ச் செதுக்கி,
ஒப்பனை செய்து
உலகுக்குக் காட்டி,
விற்பனை செய்பவன்
கற்பனைக் கலைஞன் !
உள்ளத்தின் மேல் படையெடுத்து,
வெள்ளைப் புறாவைத் தூதுவிட்டு,
இதயத்தைத் துணைக்கோள்
ஈர்ப்பில் சுற்றுபவன்
ஈசல் காதலன் !

 

உரிமைச் சிறையி லிட்டு, உன்னை
உயிருள்ள மட்டும் மூடி,
உள்ளமற்ற உடலாய்,
உடமைப் பண்டமாய்,
உரிமைப் பிண்டமாய்,
பம்பரமாய்,
பசும் பொன்னாய்ப் பேணுவோன்
அசுரக் கணவன் !
காதலனுக்கு வேட்கை
உன் துடிப்பு !
கலைஞனுக்கு தேவை
உன் நடிப்பு !
கணவனுக்கு வேண்டும்
உன் முடிப்பு !
கலைஞன், காதலன், கணவன் என்னும்
முப்பெரும் அவதாரம்
ஒப்புடன் நிற்குமா
ஓருடலில் ?

 

ஒருநாள் விருந்து நீ
ஓவியக் கலைத் தூரிகைக்கு !
சிலநாள் கனவு நீ
சிந்தை நுழை காதலனுக்கு !
பலநாள் அமுத சுரபி நீ
பசும்பொன் பெறும் பதிக்கு !
வீணையாய் உனை மீட்டுவோன்
கலைஞன் !
தேனிசை நாதமாய்த் தீட்டுவோன்,
கலைஞன் !
கலைமானாய் உனைக் காட்டுவோன்,
கலைஞன் !
நடன மயிலாய், நடிகைச் சுடராய்ப்
படமெடுத் துன்னை
மதுவாய் மாற்றுவோன் கலைஞன் !
ஊதியம் தந்து
நாடக மாடும் கலைஞன்
வாடகை வர்த்தகன் !

 

கள்வெறிக் கவிதையில் புரட்டிக்
காவியக் கருவாக்கி
கனவிலே தேடி ஏங்குபவன்
உன்னாசைக் காதலன் !
பொன்னுடல் மீது
போக மது ஊற்றுவோன் !
வலையிட்டுத் தலையிட்டுப்
பூவாக்கி, தேனாக்கி
தேவ மாதாக்கித்
தினமும் பூசிப்பவன்
உன் காதலன் !
உள்ளத்தைக் கொள்ளை இட்டு
உடலை மென்று விட்டு
ஓடி மறைபவன்
உன்னிச்சைக் காதலன் !

 

உன் காதலன் ஒரு
கணவ னில்லை !
உன் கணவன் ஒரு
காதல னில்லை !
உன் காதலன் ஒரு
கலைஞ னில்லை !
உன் கலைஞன் ஒரு
கணவ னில்லை !
உன் கணவனும் ஒரு
கலைஞ னில்லை !
உன் கலைஞனும்
ஒரு காதல னில்லை !

 

காதலன் கணவ னானதும்
காதல் தேய்பிறை
ஆகுது !
கணவன் காதல னாகின்
காதல் மதிலைத்
தாண்டுது !
கலைஞன் கணவ னானதும்
கலைக்கண் பிறரை
நாடுது !
கணவன் கலைஞ னாகின்
கவர்ச்சி வேறிடம்
தேடுது !

 

கலைஞன் ஒரு கருடன் !
காதலன் ஒரு திருடன் !
கணவன் ஒரு குருடன் !

 

கவர்ச்சிப் பெண்ணே ! உன்
காந்த உடல் கணவனுக்கு !
அலைமோதும் உள்ளம்
காதலனுக்கு !
ஆணிவே ரான ஆத்மா
கலைஞனுக்கு !
முப்பெரும் பொறிகளை இறைவன்
ஒருவனுக்கு அளித்திடான் !
மும்மூர்த்திகள்
வேண்டும் உனக்கு !

 

 

+++++++++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com)  December 20, 2012 [R-3]

http://jayabarathan.wordpress.com/

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கலைஞன் ! காதலன் ! கணவன்

  1. கலைஞன் இரசிப்பது அவள் அழகு

    காதலன் காண்பது அவள் மனம்

    கணவன் காண்பது அவள் உடல்

    மூன்று விதத்தில் அவள் மிளிர்கின்றாள்

    இதுதான் பெண்ணின் பெருமையோ?

    பெண்ணைப் படைத்த ஆண்டவர்

    அவள் அழகில் தானே மயங்கி போனாரோ?…..அருமையான கவிதை வரிகள் திரு. ஜெயபாரதன் அவர்களே! உங்களுக்கு எனது இனிய பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!….டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.