சங்கீத சீசன் (நகைச்சுவை)
கோமதி நடராஜன்
தேங்காமூடி பாகவதர்ன்னு சொல்றதெல்லாம் அந்தக்காலம் இப்போ எப்படி?
சட்னியாவே அரைச்சு கைலே கொடுத்து அனுப்பிடுறா…
என்னது! பாகவதர் பாடும் போது எம்பிராய்டரி எல்லாம் போடுவாரா? எப்படி…?!
அவர் ,தனியா தனியாவர்த்தனம் பண்றப்போ ,அவர் கையிலே ,துணியும் ஊசி நூலும் கொடுத்துப் பாருங்க , கைவேகத்திலே ,எம்பிராய்டரி அழகா போட்டு கொடுத்திடுவார்
எப்படிடா உங்க அப்பா எது கேட்டாலும் சரி சரின்னு சொல்ல வைக்கிறே..?
எது கேட்கணும்னாலும் எங்க அவர் ஸ்வரம் சொல்லிட்டு இருக்கும் போது கேட்பேன் ,ஒரே சரி சரி சரிதான்…..எப்படிடா நம்ம ஐடியா…?
புது பாகவதர்களையெல்லாம் உற்சாகப் படுத்த புது டெக்னிக் பண்றீங்களாமே எப்படி ?
நிறைய , அப்ளாஸ் ஆஹா பேஷ் பேஷ் கைதட்டல் ஒலிகளை ,ரெக்கார்ட் பண்ணி இடையிடையே ஓடவிட்டுடுவோம் …இதைவிட வேற எப்படி பண்றது சொல்லுங்க…?
அம்மா ! அப்பா சாதகம் பண்ண ஆரம்பிச்சுட்டார்மா..
சீக்கிரமா இந்த சப்பாத்தி மாவை அவர் தாளம் போடுற தொடையில் வச்சுட்டு வா அவர் அடிக்கிற அடியில் இன்னைக்கு சப்பாத்தி சூப்பரா வரும் பாரு
இன்னைக்கு என் கச்சேரிக்கு கிடைச்ச கைதட்டலை நீங்க கேக்கலியே
நீங்க வேற …..! ஹால்ல கொசுக்கடி தாங்காம அடிச்ச அடி உங்களுக்கு அப்ளாஸா விழுந்துச்சு ஓய்
கரகரப் பிரியா ராகத்துக்குப் பிறகு பாகவதர் என்ன ராகத்திலே பாடுவார்..?
இது தெரியாதா காபி ராகம்தான்…!
இன்னைக்குத்தான் நீங்க ,நான் போட்ட காபியை கம கமன்னு ரசிச்சீங்க ரொம்ப சந்தோஷமா இருக்குங்க..!
இது வேறையா உனக்கு …? நான் ஸ்வரம் பாடிட்டு இருந்தேண்டி…
பாகவதர் பதனி கேக்கறாரே நாங்க பதனிக்கு எங்கே போறது
சரியா போச்சு அவர் ஸ்வரம் பாடிட்டு இருக்கார்
அம்மா ! மாஸ்டர் பாட்டு சொல்லிக்கொடுக்காம ,பதனி கமகம சரி சரின்னு பதனியை பாராட்டிட்டே இருக்காரே ?
சரிகமபதனி சொல்லிக் கொடுத்துட்டு இருக்கார்டி