முகில் தினகரன்

 

“டெய்லர் ப்ளவுஸ் தைச்சிருப்பான்…ஈவினிங் வரும் போது மறக்காம வாங்கிட்டு வந்திடுங்க!”  டிபன் காரியரை நீட்டியபடியே சொன்னாள் சுசீலா.

 

“ஏண்டி இதையெல்லாம் என்கிட்ட சொல்றே!…ஆபீஸ் டென்ஷன்ல மறந்தாலும் மறந்துடுவேன்..” சலித்துக் கொண்டான் ஜெயபால்.

 

“அதெப்படி பொண்டாட்டி சொன்னது மட்டும் மறந்து போகுமா?..அப்ப யார் சொன்னா மறக்காது?” இடக்காய் கேள்வி கேட்டாள்.

 

“அய்யோ காலங் காத்தால எனக்கு இது தேவையா? சரி..வாங்கிட்டு வந்துடறேன்..ஆளை விடு!”

 

ஜெயபால் திரும்பி நடக்க, “டேய் கொஞ்சம் இருடா!” தாயின் குரல் கேட்டது.

 

நின்றான்.

 

தள்ளாட்டமாய் நடந்து வந்த அவனுடைய தாய், “டேய்..மூணு நாளா முதுகு வலி விட மாட்டேங்குதுடா..சாயந்திரம் வரும் போது ஒரு அயோடெக்ஸ் பாட்டில் வாங்கிட்டு வாடா!”

 

“ம்..ம்..” என்று சொல்லி விட்டு தன் பைக்கில் ஏறிப் பறந்தான்.

 

இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பினான் ஜெயபால்.

 

“ஹய்யா..அப்பா வந்தாச்சு” என்று கத்தியபடி வந்து கால்களைக் கட்டிக் கொண்ட ஆறு வயது மகன் பாபுவை, “ச்சூ..போடா அந்தப்பக்கம்” என விரட்டினான்.

 

ஒன்பது மணி வாக்கில் சாப்பிட்டு முடித்தவன் ஏதோவொரு புத்தகத்தை எடுத்து அதில் மூழ்கினான்.

 

“ப்ளவுஸ் வாங்கினீங்களா?” அருகில் வந்து சுசீலா மெல்லக் கேட்டாள்.

 

“ஓ…வாங்கிட்டு வந்திட்டேனே!” வேகமாய் ஒடிச் சென்று தன் பைக்கின் பாக்ஸிலிருந்து அதை எடுத்து வந்து கொடுத்தான்.

 

அப்போதுதான் சடாரென்று அம்மா கேட்ட அயோடெக்ஸ் ஞாபகம் வந்தது. “அடாடா..அம்மா கேட்ட அயோடெக்ஸ் மறந்திட்டேனே” தலையில் குட்டிக் கொண்டான்.

 

“அதுக்கென்ன பண்றது…மனுஷன் டென்ஷன்ல மறக்கறது சகஜம்தானே?… “மறந்துட்டேன்”ன்னு போய்ச் சொல்லுங்க!” சுசீலா ‘வெடுக்’கென்று சொன்னாள்.

 

“உஷ்…மெதுவாப் பேசுடி..அம்மா காதுல விழுந்திடப் போவுது!”

 

அப்போது அறை வாசலில் நிழலாட திரும்பிப் பார்த்தான் ஜெயபால்.

 

பாபு நின்றிருந்தான். அவன் கையில் அயோடெக்ஸ் பாட்டில்.

 

“அட..ஏதுடா இது?” சுசீலா ஆச்சரியமாகக் கேட்க,

 

“நாந்தான் ஸ்கூல் பக்கத்துல இருக்கற கடைல வாங்கினேன்…காலைல அப்பாகிட்ட நீ ப்ளவுஸ் வாங்கிட்டு வரச் சொன்னே…பாட்டி அயொடெக்ஸ் கேட்டாங்க!…அப்பவே எனக்குத் தெரியும்…அப்பா அயொடெக்ஸை மட்டும் மறந்திட்டு வந்திடுவாங்கன்னு…அதான் நான் சேர்த்து வெச்சிருந்த காசுல இதை வாங்கிட்டு வந்தேன்…அப்பா..இதை நீ வாங்கிட்டு வந்ததா சொல்லி பாட்டிகிட்டே குடுத்திடு…இல்லைன்னா பாட்டி ரொம்ப வருத்தப்படும்” என்றான் அந்த ஆறு வயது சிறுவன்.

 

உச்சந்தலை மயிரை யாரோ கொத்தாகப் பற்றி, முகத்தில் “பளார்..பளார்” என்று அறை விட்ட மாதிரி இருந்தது ஜெயபாலுக்கு.

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.