இலக்கியம்கவிதைகள்

என்னோடு ஒரு பொய்

-தனுசு-

 

“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில்”
இந்த பழமொழி
எனக்கு
உண்மையாகிவிடுமோ?

பொய்
இந்த ஈரெழுத்து வார்த்தை
சில நேரங்களில் பலமாகவும்
பல நேரங்களில் பக்க பலமாவும்
என்னோடு….

பள்ளிக்காலத்தில்
விடுமுறைக் கேட்டு
எழுதிய கடிதத்தில்
செத்தவர்களையே சாகடித்தது
எத்தனை முறை!

வாலிபத்தில்
காதலை கைக்கொள்ள
காதலியிடம் அளந்துவிட்டது
எத்தனை முறை!

ஊர் சுற்ற தாயிடம்
சொன்னது எத்தனை முறை!
காசு பறிக்க தந்தையிடம்
எத்தனை முறை!

எல்லாம் முடிந்து
ஒரு வாழ்க்கை
அமைந்த பின்னும்
இந்த பொய்
இன்னும் சில நேரங்களில்
என்னோடு….

கடிதத்தில்
காதலில்
தாயிடம்
தந்தையிடம் கட்டுருண்ட பொய்
இன்று
கைப்பேசியில்!

தவிர்க்க வேண்டிய நேரத்தில் வரும்
தவிர்க்க முடியா ஒரு அழைப்பு!
அதனை துண்டிப்பதற்கு
தவிர்க்க முடியாமல்
ஒரு
பொய்யையும் கொண்டுவந்து சேர்க்கிறது
என்னோடு…

முக்கிய சந்திப்பில் இருக்கிறேன்
வாகனத்தை ஓட்டுகிறேன்
தொடர்பு இல்லை
பேட்டரி இல்லை
இப்படியாக…..

இங்கு
பொய்யின் உருவம் மாறவில்லை
ஆனால்
உருவகம் மாறி
என்னோடு…..

“பொய்மையும் வாய்மை இடத்தே”
எனும் வாக்கு
குற்றமின்றி கரை சேர்க்க
கை கோர்க்கிறதோ
என்னோடு….

பொய்
புலவனுக்கும்
கவிஞனுக்கும்
தொழில் முறையில் உறவு!
இந்த யுவனுக்கு
இது எந்த முறையில் உறவு?

அசர வைக்கும் உலகில்
அதன்
அசுர வேக ஓட்டத்தில்
ஒரு
அவசர பொய் எனும் புனை
இல்லாமல் இருக்காதா கைபேசி உலகம்!

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க