தொல்லை காட்சி- ரஜினி – சொல்வதெல்லாம் உண்மை – ஒரு வார்த்தை ஒரு லட்சம் சொல்வதெல்லாம் உண்மை

0

மோகன் குமார்

ஜீ – (தமிழ்) டிவி யில்

மற்றவர்களுக்கு தெரிந்த ஒரே பிரபல நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை ! இதில் பலர் வந்து பேசும் கண்ணீர் கதைகள் சற்று செட் அப் என்று ஒரு சாரார் சொன்னாலும் கூட, இதே நிகழ்ச்சியில் ஒரு பெண் தன் தந்தை கொலை செய்து புதைத்ததை சொல்ல, அவர் கைதானதும் நடந்தது நீங்கள் அறிந்திருக்கலாம்,

நிற்க. வணக்க்க்க்க்கம் புகழ் நிர்மலா பெரியசாமி இந்நிகழ்ச்சி தொகுத்து வழங்கியது நிறைவுக்கு வந்து ஆரோகணம் பட இயக்குனர் ” லட்சுமி ராமகிருஷ்ணா ” இனி தொகுத்து வழங்கப் போகிறாராம். இவர் தொகுத்து வழங்குவதால் ஓரிரு எபிசொட் எப்படி இருக்கு என பார்க்கும் ஆவல் லேசாய் வருது (பார்த்ததும் ஆவல் காற்றாய் மறையவும் வாய்ப்புண்டு !)

ஒரு வார்த்தை ஒரு லட்சம்

விஜய் டிவியில் வரும் நல்ல நிகழ்ச்சிகளில் ஒன்று ” ஒரு வார்த்தை ஒரு லட்சம்”. நீங்கள் நிச்சயம் ஒரு முறையாவது பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நடத்தும் ஜேம்ஸ் வசந்தன் பல வருடங்களாக நிகழ்ச்சி தொகுப்பாளாராக இருந்து, இப்போது இசை அமைப்பாளர் ஆன போதும், இதற்காக நேரமெடுத்து இதை நடத்துகிறார். தெளிவான உச்சரிப்பில் அழகான தமிழைப் பேசும் மிக சில தொகுப்பாளர்களில் இவரும் ஒருவர் !
முன்பு சினிமா அல்லது டிவி நட்சத்திரங்கள் இந்த கேம் ஆடினர். இப்போது பள்ளி மாணவ மாணவிகளுக்கு இதே நிகழ்ச்சி நடக்கிறது. நிச்சயம் கலந்து கொள்ளும் இருவரின் புரிந்துணர்வை பொறுத்தே வெற்றி அமைகிறது எனத் தோன்றுகிறது. உங்களுக்கு தெரிந்த பள்ளி மாணவர்கள் இருந்தால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பரிந்துரைக்கலாம் !

ரஜினிக்காக ராகவா லாரன்ஸ் ஆடிய ஸ்பெஷல் டான்ஸ்

ராகவா லாரன்ஸ் திரை உலகிற்கு வர உதவியவர் என்கிற வகையில் ராகவா லாரன்ஸ் எப்போதுமே ரஜினியை மிக உயர்வாகப் பேசுவார். இவ்வருடம் ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு ராகவா லாரன்ஸ் ஸ்பெஷல் டான்ஸ் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை சன் மியூசிக்கில் அடிக்கடி போட்டு வருகிறார்கள். ரஜினி ரசிகர்களுக்காகவும், ராகவா லாரன்சின் நடன அசைவுகளுக்காகவும் இப்பாடலை ரசிக்க முடிகிறது. நீங்க இப்பாடலை பார்த்தீர்களா நண்பர்களே ?

என் வழி தோனி வழி

சன் நியூசில் என் வழி தோனி வழி என்கிற நிகழ்ச்சி என்றைக்கெல்லாம் கிரிக்கெட் மேட்ச் இருக்கோ அன்று மாலை ஒளிபரப்பாகும். பாஸ்கி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் அவருடன் எப்போதும் வரும் மற்ற இருவர் ஞானி (எழுத்தாளர் அல்ல) மற்றும் பிரகாஷ். இதில் பிரகாஷ் என்பவர் கிரிக்கெட் பற்றி குருட்டாம்போக்கில் அடித்து விடுவார். அவர் பேசும் ஆங்கிலம் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். ( வேண்டுமென்றே தான் அப்படி பேசுறார் !) எந்த அர்த்தமும் இல்லாத வாய்க்கு வந்த வார்த்தைகளை போட்டு அந்த வாக்கியத்தை அவர் பேசுவதை கேட்பதற்காக, மற்றவர்கள் பேசும் மொக்கைகளைப் பொறுத்துக் கொள்வேன். இயலும் போது பாருங்கள் !

நீயா நானா

நீயா நானா குழு இப்போதெல்லாம் பல்வேறு அலுவலகம் வந்து நிகழ்ச்சியில் பேசத் தேவையான ஆட்களை தேர்வு செய்கிறது. அப்படி நாங்கள் வேலை செய்யும் ஆபிசுக்கு சமீபத்தில் தேர்வுக் குழு வர, பேசிய 200 பேரில் 30 பேரை வெவ்வேறு தலைப்பில் ஷூட்டிங்கில் பேச தேர்ந்தெடுத்தனர். அந்த 30-ல் அடியேனும் ஒருவர். டிசம்பர் 20, 21, 24 – 3 நாள் ஷூட்டிங் என்றனர் மூன்று நாளில் நடக்கும் ஒன்பது டாபிக்கில் முதலாவதாய் டாப்பிக் இருந்தால் மட்டுமே நான் பங்கேற்க முடியும் என்ற சூழல் !  Probability wise நிச்சயம் நமக்கு வாய்ப்பு வராது என்று தான் எண்ணிக்கொண்டிருந்தேன்.
ஆனா எதோ கொஞ்சம் அதிர்ஷ்டம் நமக்கு ஓட்டிகிட்டு இருக்கு. சரியா முதல் நாள் முதல் ஷூட்டா நம்ம பேசும் தலைப்பு வந்துடுச்சு.

நிகழ்ச்சியின் தலைப்பு, விஜய் டிவியில் என்று வெளியாகிறது போன்ற விபரங்கள் பின்னர் பகிரப்படும் !

பிளாஷ்பேக்: ஒளியும், ஒலியும்

டிவி பொட்டி ஊருக்கு வந்த காலத்தில், வெள்ளியன்று மாலை ஏழரை மணிக்கு தூர்தர்ஷனில் ஒளியும், ஒலியும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். எங்கள் எதிர் வீட்டுக்கு சரியே அந்த நேரத்துக்கு போய் அந்த நிகழ்ச்சி மட்டும் பார்ப்பது வழக்கம். பின் நம் வீட்டுக்கு டிவி வந்தபின், நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தால், ” ஒளியும், ஒலியும்” என வெள்ளி மாலை வீட்டுக்கு வருவதும் நடக்கும் ! முதல் 2 பாட்டு மட்டும் புதுப் படத்திலிருந்து போடுவார்கள். மற்றபடி சிவாஜி, எம் ஜி. ஆரின் பழைய பாடல்கள் ரஜினி கமல் பாடல்கள் என போகும்.

அந்த அரை மணி நேர ஒளியும், ஒலியும் தந்த மகிழ்வை, 24 மணி நேரமும் பாட்டு போடும் எந்த சானலாலும் செய்ய முடிய வில்லை !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *