Blog

  • அரவணைப்பாய் ஆண்டவனே !

             ( எம் .ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

    பாயிலே படுத்தாலும் பாடிடுவேன் ஆண்டவனே

    நோயென்னை வதைத்தாலும் உனைமறவேன் ஆண்டவனே

    நாள்முழுக்க வேதனையில் நரகமதைக் கண்டாலும்

    வாழ்நாளில் உன்நாமம் மறக்காமல் செபித்திடுவேன் !

     

    பரிசு பலபெற்றாலும் பட்டமெலாம் கிடைத்தாலும்

    உரிமையுடன் உன்நாமம் உரைத்துநிற்க நான்மறவேன்

    அருமருந்து உண்டாலும் அருகில்பலர் இருந்தாலும்

    ஆண்டவனே உன்துணையே அமிர்தமாய் அமையுமன்றோ !

     

    இன்பம்பல நான்கண்டேன் இனிமையுடன் வாழ்ந்திருந்தேன்

    இப்போது அவையாவும் எட்டியே நிற்கிறதே

    இல்லறமும் கசக்கிறது இனிமையெலாம் உறைக்கிறது

    என்றாலும் ஆண்டவனே நீமட்டும் இனிக்கின்றாய் !

     

    சுகமுடனே இருக்கையிலே சுற்றமெலாம் சூழ்ந்திருந்தார்

    சுகம்குறைந்து போகையிலே தூரரவர் நிற்கின்றார்

    சுகமனைத்தும் பெற்றுநின்றார் சுமையென்றே எண்ணுகிறார்

    சுமைதாங்கி ஆண்டவனே சுமையென நீயெண்ணாதே !

     

    பழம்பழுத்த மரமாகப் பயன்கொடுத்து நின்றிருந்தேன்

    பலபேரும் பயன்பெற்று பழமரத்தை நாடிநின்றார்

    பழம்கொடுத்த மரமிப்போ உரமிழந்து போனதனால்

    பறித்துண்ட பலபேரும் பாராமலே செல்லுகிறார் !

     

    ஆண்டவனே இவ்வுலகின் அதிசயத்தைப் பாராயோ

    அன்புபாச நேசமெல்லாம் ஆரிடம்நான் தேடுவதோ

    அரைக்கணமும் மறவாமல் உனைநினைக்கும் அடியேனை

    அல்லல்பட விட்டிடாமல் அரவணைப்பாய் ஆண்டவனே !

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் – 16

    க. பாலசுப்பிரமணியன்

    பற்றற்ற நிலை 

    திருமூலர்

    ஐம்புலன்களையும் அதன் தேடல்களால் ஏற்படும் ஆசைகளையும், இவை அத்தனையையும் ஆட்டுவிக்கும்  “நான்” என்ற அகந்தையையும் அடக்கி அவற்றிலிருந்து நாம் விடுபட்டால்தான் இறைவனின் அருளை பூரணமாகப் பெறத் தகுதி உள்ளவர்களாக இருப்போம். ஆனால் இது அவ்வளவு சுலபத்தில் நடக்கக் கூடிய காரியமா? எண்ணம் ஒரு பக்கம், சிந்தனை ஒரு பக்கம், செயல் ஒரு பக்கம் என நம்முடைய வாழ்க்கைப் பயணம் நடந்து கொண்டு இருக்கும் பொழுது இந்த இலக்கை நோக்கி எவ்வாறு செல்ல முடியும்?

    இந்த நிலையை விளக்கும் வண்ணம் பட்டினத்தார் மிக அழகாகச் சொல்லுகின்றார் :

    கை ஒன்று செய்ய விழி ஒன்று நாடக்

    கருத்தொன்று எண்ணப்

    பொய் ஒன்று வஞ்சக நாஒன்று பேசப்

    புலால் கமழும்

    மெய்யொன்று சாரச் செவியொன்று

    கேட்க  விரும்புமியான்

    செய்கின்ற பூசை எவ்வாறு  கொள்

    வாய்வினை தீர்த்தவனே.

    இந்தத் துயரம் நல்ல அறிவு உள்ளவர்களுக்கும் சான்றோர்களுக்கும் கூட இருக்கின்றது. என்னதான் கல்வி அறிவு பெற்றிருந்தாலும் சரி, வேதங்களை நல்ல முறையில் கற்று அறிந்திருந்தாலும் சரி, மனம் பற்றற்ற நிலையை அடையும் வரை இறைதத்துவத்தின் உண்மை விளங்காது. இதை வலியுறுத்தும் வகையில் திருமூலர் எழுத்திய பாடல் இதோ:

    வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்

    வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்

    வேதாந்தமாவது வேட்கை ஒழிந்திடம்

    வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே

    வேட்கையை விடுதல் என்பது மிகக் கடினமான காரியம். ஏதோ ஒரு மந்திரக் கோலை ஆட்டுவதால் அது நம்மிடமிருந்து விலகிவிடும் என்பது இல்லை. இதற்க்கு தொடர்ந்த ஒருமித்த மனத்துடன் கூடிய பயிற்சி தேவை.

    மண்ணாசை பட்டனே  மண்ணுண்டு போட்டதடா

    பொன்னாசை பெண்ணாசை போகேனே யென்குதே

    என பட்டினத்தார் தனது உள்ள நிலையை வெளிப்படுத்துகிறார்.

    மாணிக்க வாசகரோ மக்க்களிடம் இந்த உலகப் பற்றை நீக்கி பற்றில்லான் பாதத்தில் பற்று வைக்க அழைக்கின்றார் :

    “பற்றங்கலை  அற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி

    நற்றாங்கதி  அடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின் “

     

    மாணிக்க வாசகரின் பற்றற்ற நிலையை திருமூலர் தனக்கே உரிய பாணியில் எடுத்து விளக்குகின்றார்

    பற்றற்  றவர்பற்றி நின்ற பரம்பொருள்

    கற்றற்  றவரகற்றுக் கருதிய கண்ணுதல்

    கற்றற்  றவர்சுற்றி நின்ற என் சோதியைப்

    பெற்றற்  றவர்கள்  பிதற்றொழிந்  தாரே.  

     

     

    இதையே வள்ளுவரோ  இரண்டே அடிகளில் சுருக்கமாகவும் தெளிவாகவும் முன்வைத்துள்ளார்

    வேண்டுதல் வேண்டாமை இலான் தாள்சேர்ந்தார்க்கு

    யாண்டும் இடும்பை இல. 

    (தொடரும் )

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170704 - Godhuli -lores

    சிந்தை வெளிகடந்து மந்தை வெளிபுகுந்து
    கந்தல் உடையணிந்து கன்றுகளை -தந்தையாய்,
    அன்னையாய்க், காத்து அறுகம்(புல்) அளித்திடும்
    கண்ணனை நெஞ்சே கருது….!

    பொன்னிற வண்ணப் புழுதி எழுந்துயர்
    விண்ணவர் கண்ணில் விழுந்திட -செந்நிற
    சாயங்கா லத்தில் சகாக்களுடன் வீடேகும்
    காயாம்பூ வண்ணனே காப்பு….கிரேசி மோகன்…..!

    Share
  • ’பகவான் ஸ்ரீ ரமணர்’’….

     
    ——————————————————–

    ’’ஆம்புள ஆலவாய் சிங்கம்
    அருணாசலத்தை அடைந்ஜாராம்
    பாம்புகள், பல்லி ,பூரான் வாழ்
    பாதாள லிங்கம் போனாராம்
    பொம்பள உண்ணா மலையம்மன்
    பாகர் பாகம் சேர்ந்தாராம்
    காம்புல கனிஞ்ச வெள்ளரி போல்
    கைவல்யம் கண்டாராம்’’….!கிரேசி மோகன்….!

    Share
  • இவ்வார வல்லமையாளர்

    நம் இந்திய அரசாங்கத்திடம் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள கிம் யாங் – ஷிக் கொரிய நாட்டில் சியோல் நகரில் 1931 ஆம் ஆண்டில் பிறந்தவர். ஆங்கில இலக்கியம் ஈஹா பல்கலைக்கழகத்தில் பயின்று, தமது இந்தியத் தத்துவங்கள் முதுநிலை பட்டப்படிப்பை சியோல் டோங்க்குக் (Dongkuk) பல்கலைக்கழகத்தில் பயின்றவர். 1998இல் Academy of International Congress of Poets மூலமாக H.Phd. Lit, என்ற உயரிய பட்டமும் பெற்றவர்.

    unnamed (1)

    கிம் யாங் – ஷிக் கொரிய மொழியில் பல இலக்கியப் படைப்புகளை வெளியிட்டுள்ள மிகச்சிறந்த கொரிய கவிஞரும், தற்போதைய, கொரியாவின் தாகூர் சங்கத் தலைவரும், இந்தியக் கலை அருங்காட்சியக இயக்குநர், சியோல், சர்வதேச கொரிய எழுத்து மையம் (The International Pen-Korean Centre) உறுப்பினர், ஈஹா இலக்கிய எழுத்தாளர்கள் கூட்டமைப்பு ஆலோசகர், கொரிய பெண் எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகர் போன்ற பல சமூக, இலக்கிய அமைப்புகளில் உற்சாகமான பங்கேற்பாளர்.

    இவர் பெற்றுள்ள விருதுகள் : The current Literature of korea ’69/’Mse’ of World Poetry – 2nd World Congress of Poets in Taipei, ‘Diploma Aureun Honoris Causa’ – 3rd World Congress of Poets in Baltimore, USA, பத்மஸ்ரீ விருது, ‘PEN Literary Award’ போன்ற பல விருதுகள் பெற்றுள்ளவர் இவர். இவர்தம் அற்புதமான கவிதைகளை தமிழில் மொழிபெயர்ப்பதில் பெருமிதம் கொள்கிறேன். அம்மையார் யாங் ஷிக் அன்புகூர்ந்து தாம் கையொப்பமிட்ட தமது கவிதை நூலை தென் கொரியாவிலிருந்து எனக்கு அனுப்பியிருப்பதையும் நன்றியுடன் பகிர்ந்துகொள்வதோடு எமக்களித்த கௌரவமாகவும் கருதுகிறேன்.

    பவள சங்கரி (மொழிபெயர்ப்பு)

    ஓ, எமது குருவே தாகூர் – கிம் யாங் ஷிக்

    ஆங்கிலத்தில் – கிம் ஜின் – சுப்

    உங்களுக்காகப் பாடுகிறேன் நான்
    அன்பின் பாடல், வேதனையின் பாடலும்
    சிலவேளைகளில் விரக்தியின் பாடலும்
    நீங்கள் இசைக்கும் அதே இன்கீதமதை
    உங்களுக்காகப் பாடுகிறேன் நானும்.

    வெகுகாலம் முன்பு
    எம் பத்தாம் அகவையில் அடியெடுத்தபோது
    எம் மென்னிதயமதை நிறைத்திருந்த
    வெகு தொலைவிலிருந்து வளி சுமந்து வந்த
    உங்கள் புதிரான பாடலின் ஓசையைக் கேட்டேன்.

    உங்கள் தாய் மண்ணிலிருந்து வீசிக்கொண்டிருக்கும்
    அந்த வெதுவெதுப்பான வசந்த வளி எமது சாளரத்தையும் சீண்டியது
    பிரகாசத்துடன் ஒளிர்கின்ற கதிரோனையும் நறுமணத்தையும் தழுவுகிறேன் நான்.

    “நீங்கள் யார்?
    நரைமுடிகளுடனும் வளைந்த முதுகுடனும் வந்த நீங்கள்
    கதிரொளியும் நறுமணமும் உடன் கொண்டுவந்துள்ளீர்கள்!”
    “இளம் பெண்ணே,
    எம் பாடல்களின் சுருள்களினூடே தேடியவாறோர் நாள்
    அந்த மர்ம தேசத்திற்கு நானும் வருவேன்
    மணமிகு மாங்கனிகள் பூத்துக்குலுங்கும் அக்களத்தில்
    தங்கமான இன்கனிகள் இலையுதிர்காலத்தில் கனியும்
    அங்கே பசுந்தென்னை மட்டைகள் குளிர் கடற்காற்றில்
    மென்மையாக அசைகிறது!”

    ஆயினும் நான்
    பிறந்து வளர்ந்த அத்தேசம் 
    காட்டுமிராண்டிகளின் ஆக்கிரமிப்பால்
    பேரழிவிற்கு உட்பட்டிருந்தது
    எங்கள் தேசம் அடக்குமுறையினாலும்
    அதிபயங்கரமான பேரழிவுகளினாலும் 
    இழிந்துபட்டுக் கிடந்தது.
    அன்றிலிருந்து எங்கள் தாய்மண் ஆழ்இருளில் மூழ்கிக்கிடந்தது
    தாங்கொணாப் பேரலைகளும் வீசியடித்தது 
    எரிச்சலையும் வேதனைத் துடிப்பையுமே விட்டுவைத்ததது.
    இருபத்தியெட்டு, மார்ச் 1929இல், யோகாஹாமா, ஜப்பானிலிருந்து நீங்கள் திரும்பியிருந்த அந்நொடியில் வேதனையில் வாடும் கொரிய தேசத்திற்காகத் தாங்கள் ஒரு சிறிய நான்கு வரிக்கவிதையை வடித்திருந்தீர்கள். 
    உங்கள் குரல் மெலிந்தும், மென்மையாகவும் இருந்தாலும் நீதிக்காக உங்கள் இதயத்திலிருந்து வெடித்துச்சிதறிய இரைச்சல், வெகுதொலைவில் இல்லாத கொரியாவின் விடுதலைக்கும், சுதந்திரத்திற்கான வெகுகாலக் காத்திருப்பின் தீர்க்கதரிசனமாகவே இருந்தது. 
    உங்களுடைய அசைக்கமுடியாத ஆழ்ந்த நம்பிக்கையும், அக்கறையும் ஒரு வாழ்க்கையைக்காத்து பிரகாசிக்கச் செய்தது.
    ‘கிழக்கே ஒரு விளக்கு’ என்ற உங்கள் பாடல், எங்கள் அடக்குமுறைப்புலம்பலினூடே எங்கள் செவிகளை நெருங்கி நெருங்கி வந்தது.

    பாடல் இதோ :

    கிழக்கே ஒரு விளக்கு – ஆர். தாகூர்

    ஆசியாவின் பொற்காலங்களில்
    விளக்கேந்தி ஒளியூட்டியவர்களினூடே
    கொரியாவும் ஒன்றே எனினும்
    கிழக்கு பட்டொளியாய் மின்னுதற்பொருட்டு
    அவ்விளக்கு மீண்டுமொருமுறை
    ஒளியூட்டக் காத்திருக்கும் தருணமிது!

    யோகாஹாமா, மார்ச் 1929

    imagesநீங்கள் சொன்னது சரி. 
    உங்கள் நற்கருணையின் உண்மை வெளிப்பாடே இந்த தீர்க்கதரிசனப் பாடல்.
    உங்கள் அறையில், நீங்கள் வழமையாக ஆழ்மன தியானத்தின்போது அமரும் சாய்வு நாற்காலியான, அந்த என் விருப்பமான நாற்காலியின் அருகில் நின்றிருக்கும்போது, நுண்ணிய, எளிய, மெல்லிய ஊதாவாக வளர்ந்துவரும்  புருவம் போன்ற பிறைநிலவையோ அல்லது வானின் துருவ நட்சத்திரத்தையோ அண்ணாந்து பார்ப்பது வழக்கம்.

    ஏதோவொரு தருணத்தில்
    உங்கள் அன்பெனும் நீரூற்றிலிருந்து நீர் இறைத்து,

    எம் மென்மையான இதயத்தின் வலிமிக்க தாகத்தைப்போக்கி,

    அதை ஒரு சாந்தமான கானகத்துக் குளிர்க்காற்றாக புனிதமாக்குகிறேன்.
    இப்படியாக உங்கள் இடைவிடா ஆழ்ந்த அன்பு

    என் ஆன்மாவை சாந்தமாக்கி, செறிவூட்டி,

    என் வாழ்வையும் வளமாக்கியுள்ளது.

    இன்று வளர்ந்துவிட்ட அப்பெண்
    அமைதியாகத் தன் வீணையை வாசிப்பாள்
    அன்பிற்காகவும் அமைதிக்காகவும்
    உங்கள் நித்திய சத்தியத்தை இசைக்கிறாள்..

    இந்த புதிய நூற்றாண்டிலும்
    அனைத்து மக்களின் அன்பிற்காகவும் பாடுவேன்
    நீங்கள் விரும்பியபடி,
    நீங்கள் பாடியவாறு மென்குரலில் பாடுகிறேன்.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391,  இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம்!

    வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில்

    கயானா பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து வெளியிட்டார்!!

    unnamed (4)

    அமெரிக்காவின், மினசோட்டா மாநிலம், மினியாபோலிஸ் நகரில் 01.07.2017 இல் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில்

    unnamed (5)

    புதுவைப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் இயக்கிய விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தினை, கயானா பிரதம மந்திரி மோசஸ் வீராசாமி நாகமுத்து வெளியிட்டார். ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவனுக்கு நூல் ஒன்றினை அன்பளிப்பாக வழங்கிப் பாராட்டினார்.

    unnamed (6)

    புதுவையில் பணியாற்றும் மு.இளங்கோவன் இலங்கைப் பேரறிஞரும் யாழ்நூல் ஆசிரியருமான விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றையும் சமூகப் பணிகளையும், இலக்கியப் பணிகளையும் ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார். இதற்காக விபுலாநந்த அடிகளார் வாழ்ந்த இலங்கையின் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தமிழகத்தில் தஞ்சாவூர், சென்னை, புதுக்கோட்டை, மதுரை, திருக்கொள்ளம்பூதூர், கொப்பனாப்பட்டு ஊர்களிலும் படப்பிடிப்பு நடந்தது. இலங்கையிலும் இந்தியாவிலும் வாழ்ந்துவரும் மூத்த பேராசிரியர்கள், துறவிகள் பலரை நேர்காணல் செய்து விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.

    unnamed (7)

    2017, சூலை முதல்நாள்(சனிக்கிழமை) அமெரிக்காவில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை(பெட்னா) விழாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. கயானா நாட்டிலிருந்து விழாவுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினரும், பிரதம மந்திரியுமான மோசஸ் வீராசாமி நாகமுத்து விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தினை வெளியிட்டார். வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி. விஸ்வநாதன் ஆவணப்படத்தின் முதல்படியைப் பெற்றுக்கொண்டார்.  மறைந்த அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் வி. பொன்ராஜ், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே. செல்வராஜ், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவைத் தலைவர் செந்தாமரை பிரபாகர், பேராசிரியர் தண்டபாணி குப்புசாமி, சிவம் வேலுப்பிள்ளை, வலைத்தமிழ் ஆசிரியர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் ஆவணப்படத்தின் படியினைப் பெற்றுக்கொண்டனர். பின்னர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் முக்கிய பகுதிகள் பார்வையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டன. அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பேராளர்கள் ஆயிரக்கணக்கில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    Share
  • படக்கவிதைப் போட்டி (118)

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    19756280_1366924990028363_1292024265_n

    சிவராஜன் தண்டபாணி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (08.07.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்  சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 117-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கூண்டுக்குள் சிறைப்பட்டிருக்கும் அழகுப் புறாக்களைத் தன் புகைப்படக் கருவிக்குள் சிறைப்படுத்தி வந்திருக்கிறார்   வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கு இப்படத்தைத் தேர்வுசெய்து தந்திருப்பவரும் அவரே. அவருக்கு என் நன்றி!

    doves in cage

    தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் தூதுவர்களாக முற்காலத்தில் திகழ்ந்தவை புறாக்கள். ’புறாவிடு தூது’ காதலுக்கும் பயன்பட்டது. மனிதக் காதலுக்குத் தூதுபோன புறாக்களை நன்றியின்றிக் கம்பிகளுக்குள் சிறைவைப்பது முறையோ?

    புறாக்களைக் கண்ட நம் கவிஞர்கள், வழக்கம்போலவே, கற்பனைச் சிறகுகளோடு பறந்துதிரிந்து பொற்புடை கருத்துக்களைக் கவிதையாய்க் குவித்திருக்கிறார்கள். அவற்றைப் படித்து இரசிப்போம்!

    *****

    சிறைப்பட்ட இந்த ஆண்புறா இனி அஞ்சவேண்டாம் கழுகுக்கு; பஞ்சமில்லை அதன் உணவுக்கு; கூடுகட்டவேண்டாம்; புயல் மழையால் கேடுறவேண்டாம். ஆனால் வெளியில் சுதந்தரமாய்த் திரிந்துவரும் பெண்புறாவுக்கோ துன்பங்களும் சவால்களும் நித்தமும் உண்டு! அதனால் கூட்டு வாழ்க்கையை விரும்புகின்றது பெண்புறா! கூட்டைவிட்டு வெளியேறித் திரியும் காட்டு வாழ்க்கையை விரும்புகின்றது ஆண்புறா என்று இயல்பாய் வாழ்வியலை விளக்குகின்றார் திரு. சி. ஜெயபாரதன். எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சைதானே?

    எது சிறைப் புறா ?
    நான்கு வேலிக்குள் அடைபட்ட

    ஆண் புறாவுக்கு
    கழுகுப் பகையில்லை !
    உணவுப் பஞ்சம்
    எப்போதும் கிடையாது !
    குடி இருக்க
    கூடு தேவை யில்லை !
    புயல், பேய் மழை,
    இடி மின்னல்
    அடிப்பு எதுவு மில்லை !
    தனிமையில் நொந்து துடிப்பது
    ஆண் புறா !
    விடுதலையாய்
    வெளியில் சுற்றும் பெண் புறா வந்து
    வாசலில் நின்றது.
    கடுமையான வாழ்வு எனக்கு !
    கூடு கட்ட மரமில்லை !
    குஞ்சு பொரிக்க
    அஞ்சுகிறேன் தனித்து !
    உறவு கொள்ள
    ஆண் துணை இல்லை !
    ஊர்ப் பஞ்சத்தில்
    உணவில்லை !
    கழுகுக் கிரை ஆவேனோ ?
    இல்லை புயல் காற்றில்
    மரிப்பேனோ ?
    கூட்டில் அடை பட்டாய் நீ !
    நாட்டில் அடைபட்டேன் நான் !
    இப்பிறப்பில் நாமினி
    இணையோம் !
    கூட்டுக்குள் நுழையத்
    துடிப்பது நான் !
    விடுதலைப் பெற
    விழித்தி ருப்பது, நீ காத்திருப்பது நீ.
    எது நடக்கும் ?
    வெளியே நீ வருவாயா ?
    இல்லை
    உள்ளே நான்
    அடைபடு வேனா ?
    நம்முறவில்
    விதி என்ன
    விளையாடுகிறதா ?

    *****

    ”புத்தகத்திலும் திரைப்படத்திலும் காதலை வெகுவாய் இரசிக்கும் மாந்த இனம் நிசவாழ்வில் அதனை மருந்தளவும் விரும்புவதில்லை. கவுரக்கொலை செய்தேனும் சாதியை வாழவைப்பாரே தவிரச் சொந்தப்பிள்ளைகளை வாழவிடாத இந்த உத்தமர், நம் காதலை எப்படி அனுமதிப்பர்? எனினும் எப்படியேனும் உன்னைச் சேர்வேன்” என்று பெண் புறாவுக்கு உறுதிசொல்லும் ஆண் புறாவைக் காண்கிறோம் திரு. பழ. செல்வமாணிக்கத்தின் கவிதையில்.

    உண்மைக்காதல் :
    மனிதக் காதலுக்கு தூது சென்றோம் பெண் புறாவே !

    மனித குலம் ,நம்மை பிரித்து வைத்து பார்ப்பதென்ன
    பெண் புறாவே!
    காதலெனும் வானத்தில் பெண் புறாவே!
    சிறகடித்துப் பறந்திருந்தோம் பெண் புறாவே!
    உன்னைக் கூண்டில் அடைத்தது ஏன்
    பெண் புறாவே!
    உயிரும், உடலும் ஒன்றிணைந்து வாழ்வது போல்
    பெண் புறாவே!
    மகிழ்வோடு வாழ்ந்திருந்தோம் பெண் புறாவே
    உயிரையும், உடலையும் பிரித்ததென்ன
    பெண் புறாவே!
    காதலெனும் அமுதைப் பருகி மீண்டும்
    உயிர்த்தெழுவேன் பெண் புறாவே!
    காதல் கதை என்றால் பெண் புறாவே!
    பல தடவை படித்திடுவார் பெண் புறாவே!
    பிள்ளைகள் காதல் செய்து விட்டால் பெண் புறாவே!
    வெகுண்டெழுந்திடுவார் பெண் புறாவே!
    திரைப்படத்தில் காதல் என்றால் பெண் புறாவே!
    கண் இமைக்காமல் பார்த்திடுவார் பெண் புறாவே!
    பிள்ளைகள் காதல் திருமணம் செய்து கொண்டால்
    பெண் புறாவே!
    கௌரவ கொலை செய்து சாதியை வாழ வைப்பார்
    பெண் புறாவே!
    மனிதர்கள் போல் நாம் இல்லை பெண் புறாவே!
    இறைவனைப் போல் பறவைக்கும்
    சாதி இல்லை பெண் புறாவே!
    தடைகள் உடைத்து பெண் புறாவே!
    உன்னைச் சேர்ந்திடுவேன் பெண் புறாவே!

    *****

    சிறைப்பட்ட நிலையிலும் அளவற்ற காதலுடன் அன்புமொழி பேசும் ஆசைப் பறவைகளைத் தன் கவிதையில் படம்பிடித்துக் காட்டி நம் மனங்கவர்கின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.

    ஆண்-
    அன்பே! ஏனடி எட்டத்தில் நிற்கிறாய்
    அருகில் வா உனைக் கோதி விடுகிறேன்
    உன் பயிர்ப்பினைத் தூர எறியடி
    உரசி இன்புற உள்ளம் துடிக்குது

    அண்டை வந்தெனதாருயிர் உன்னெழிற்
    சொண்டை நீட்டடி சொர்க்கத்தைக் காணுவோம்
    தண்டியாதெனைத் தத்தியருகில்வா
    தாபம் தீர்க்கலாம் கோபமெதற்கடி

    பேடு-
    போங்களிந்தப் பொல்லாத சிறையினில்
    ஏங்கும் போதிலும் உங்களுக் கெப்பவும்
    தாங்கொணாதொரு தாபமும் கேடதோ
    தனித்த வாழ்வு முடியட்டும் பார்க்கலாம்.

    இருவரும்-
    அன்பிலாதவர் எம்மைப் பிரித்தனர்
    அடைபட்டிங்கு சிறையில் தவிக்கிறோம்
    இன்ப வாழ்வை இழந்து தவிக்கினும்
    இணைந்த எங்களின் காதலழியுமா

    எம்மைப் போன்று பல் மாந்தரும் தங்களின்
    இனிய காதலை, வாழ்வை இழந்தொரு
    பொய்மையான திரைத் தொடர்போடு தம்
    போலி வாழ்வைக் கடத்துகின்றாரதால்
    எம்மையும் பிரித்துச் சிறை தன்னிலே
    இடுவதால் வரும் துன்பமறிகிலார்
    அம்ம! இந்த நிலையினில் எங்களை
    அடைத்தனர் அதை என்னென்று சொல்லுவோம்.

    *****

    சிறைவிட்டு விடுதலை வேண்டிநிற்கும் சுதந்தர மனம் ஒருபுறம்; கட்டுண்டு கிடப்பதிலேயே மட்டற்ற மகிழ்வுகாணும் அடிமை மனம் மறுபுறம். பொதுநலம் நாடும் தூய தாய்மனம் ஒருதினம்; தன்னலம் பேணியே தாழ்ந்திடும் பேய்மனம் மறுதினம் என மனித மனத்தின் அலைபாயும் நிலைகளை இந்தப் புறாக்களோடு பொருத்திக் காட்டி இரசிக்கவைக்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    மங்காத்தா

    விட்டு விடுதலையாகி
    தடைகளை உடைத்து
    கட்டுக்கள் நீக்கி
    பறந்திட நினைக்கும் ஒருகணம்
    மறுகணம்…
    சாவுவீட்டு வைராக்கியம் போல்
    உலகவாழ்வில்
    கட்டுண்டு வீழ்ந்து
    காண்பதெலாம் விரும்பி
    சிக்கலில் சேர்ந்து
    உழன்றிங்கு நிற்கும் மனம்.

    பெண்ணே தாய்
    அவளேத் தெய்வம்
    பெண்ணுரிமை பெண்ணியம் – என
    பெரும் பெரும் வார்த்தைகள்
    சொல்லி நிற்கும் ஒரு புறம்.
    மறுபுறம்….
    பெண்ணடிமைச் செயல் புரிந்து
    மாதர்தம்மை இழித்துரைக்கும்
    மடமைகள் பலசெய்து
    ஆணாதிக்க அதிகார
    அழிச்சாட்டியம் தலைத்தூக்கும்

    ஒருபொழுது
    பிறர் நலம் விரும்பி
    நன்மை பல நாடிச்
    செயும் செயல்கள் நூறு
    மறுபொழுது…
    சுயநலம் தலைத்தூக்கி
    சுற்றத்தின் நலம் மறந்து
    அழுக்காறுற்று அவ்வியம் பேசி
    பிறர் நலம் கெடுக்கச்
    செய்திடும் பல்லாயிரம்.

    உள்ளொன்று வைத்துப்
    புறமொன்று பேசி
    உள்ளே வெளியே என்று
    மனம் காத்தில் ஆடி
    நிலைமாறி அலைபாயும் – நான்
    நிதமிங்கு வாழும் இவ்வாழ்க்கை.

    *****

    ”உணவுதேடி வெளியேவந்த ஒற்றைப் புறாவை உள்ளே அடைத்தான் பிரித்தாளும் கலையில் மாமணிப் பட்டம் வென்ற மனிதன்! இணையைப் பிரிந்தேங்கும் துணைப்புறாவின் துன்பத்தை இவன் எங்ஙனம் அறிவான்?” என்று வேதனையுறுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.  

    நடக்குமா நல்லது…?

    இணையைப் பிரிப்பது இவன்வேலை
    ஈவு இரக்கம் இலாமனிதன்,
    துணையா யிருக்கும் உறவுகளைத்
    துண்டாய் ஆக்குதல் இவன்குணமே,
    உணவு தேடி வெளிவந்த
    ஒற்றைப் புறாவைப் பிடித்தடைத்தான்,
    துணைப்புறா தேடிக் கண்டதிங்கே
    தீர்வு நல்லதாய்க் கிடைத்திடுமோ…!

    *****

    ’உயிரிரக்கம் மிகுந்த’ மனிதன், கோயில் மாடப் புறாவைக் கூண்டுக்குள் அடைத்துவைத்தான்; காதலனிடமிருந்து அதனை பிரித்துவைத்தான்” எனக் கழிவிரக்கம் கொள்கின்றார் திரு. ரா. பார்த்தசாரதி.

    கோயில் மாட புறாவாய் சுற்றிய என்னை சிறையில் அடைத்தாய்
    எனது காதலனை பிரித்து என்னை தவிக்க வைக்கிறாய்
    காதலனின் அழைப்பு என் மனதை அலைக்கழிக்கிறது
    எங்களைச் சேர விடாமல் தடுப்புகள் இருக்கின்றதே
    தூர இருந்தாலும் , எனது மனம், இரு மனம் கொண்ட ஒரு மனம்!
    மனமிறங்கி என் காதலனுடன் சேர விடை கொடுப்பாயா மனிதா.!

    *****

    காதல் புறாக்கள் இணைய வேண்டும்; அவற்றின் அடிமை வாழ்வு முடியவேண்டும் என்று பரிவோடு உரிமைக்குரல் எழுப்பியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    *****

    சிறந்த கவிதையாய் இவ்வாரம் தேர்வாகியிருக்கும் கவிதை இனி…

    பறவைகளின் பிரார்த்தனை..!

    சுதந்திரமென்ப தனைவருக்கும் பொதுவானால்
    —-சுதந்திரமாய்த் திரியும் பறவையின மதில்சேராதோ.?
    அகத்தில் மனிதனை அடைத்தாலது பாவமெனில்
    —-ஜகத்தில் பறவைக்கது பரவலாய்ப் பொருந்தாதோ.?

    பகையின்றி வாழ்ந்தோம் பகட்டாகப் பறந்தோம்.!
    —-பூவெழில் வனப்புடன் வட்டமாய்த் திரிந்தோம்.!
    வகையாயெமைக் கூண்டிற்குள் அடைத்து விட்டான்.!
    —-பகையானான் பரந்த மனம்கொண்ட பறவைக்கே.!

    அனைத் துயிருக்குமொரே நீதியெனில் பறவையை
    —-அடைத்து வைக்கும் செயலுக்கெனத் தனிநீதியா.!
    அநியாயமாய்க் கூண்டுளடைத்தது? ஏனெனக் கேட்டால்
    —-அன்பு பாசமென்பார் அனைத்துமே பொய்யாகும்.!

    கனியைப்பறித்தீர் காடுகளைக் கருணையின்றி அழித்தீர்.!
    —-கட்டுக்கடங்கா யெம்சுதந்திர மதைநீர் தட்டிப்பறித்தீர்.!
    குற்றம்கண்டா? கூண்டிலே அடைத்தீர்? எனக்கேட்டால்
    —-பற்றுக்கொண்டே அடைத்து வளர்க்கிறே னென்பார்..!

    பறவைகள் பூமிக்குக் கிடைத்ததோர் புண்ணியஜீவன்.!
    —-இயற்கையைக் காக்குமுயருளம் கொண்ட உயிரினம்.!
    எம்மைச் சொந்தமாக்கக் கூண்டுக்குள் அடைத்தசெயலை..
    —-எந்தமன்றத்தில் வழக்காடியாம் விடுதலை பெறுவோம்.!?

    யாரிடம் கேட்பது பாவத்துக்கு மோட்சமுண்டாவென
    —-ஆரூடம் சொல்லென கூண்டுக்கிளியிடம் கேட்டேன்?
    பந்தயம் வைத்து ஆரூடம் சொல்லி நம்மால் பிழைக்கும்
    —-பாவமனிதரும் பிழைக்கட்டுமெ யென்றான் சகோதரன்.!

    வளமுடன் வாழ்கவென்பான் ஆரைப் பார்த்தாலும்.!
    —-வானிலே பறந்த எங்களை வலைவைத்துப் பிடிக்க..
    அனுதினமும் வருவான் அருமையாய்ப் பேசுவானவன்.!
    —-அடிமை வாழ்வு கொடிதெனச் சற்றும் உணராதவன்.!

    சிறுஅறையைச் சுத்தம்செய்ய நித்தமவன் வருவான்.!
    —-கறுப்புள்ளக் கயவனைக் கண்டுகொள்ள மாட்டோம்!
    மிரண்டகண்ணுடன் மீளாத்துயரோடு வானை நோக்கிய
    —-இருண்ட வாழ்வெனும் பறக்கமுடியா பரிதாபநிலையுடன்.!

    இறகோடுபிறந்து இரும்புச் சிறையில் வாழுமெமக்கு..
    —-சிறகையேன் படைத்தாய்?சிந்திக்கிறோம் பலநாளும்!
    கூண்டுக்குள் குடும்பம்செய்தே குறையிலா வாழ்வுபெற..
    —-குஞ்சொன்று வேண்டும் சிறகில்லாமல் அருள்வாயா.!இறைவா…

    ’சுதந்தரம் எனது பிறப்புரிமை’ என முழக்கமிடும் மனிதன் அதனைப் பறவையினத்துக்கு மறுப்பது ஏன்? குற்றவாளிகளை மட்டுமே கூண்டிலடைப்பது வழக்கமாயிருக்க, குற்றமேதும் செய்யாத அப்பாவிப் பறவைகளைப் பாவி மனிதன் கூண்டிலடைப்பது எதனால்? சிறைப்பட்டிருக்கும் பறவைகள் எமக்குச் சிறகுகள் எதற்காக? என்று  புறாக்களின் கேள்விகளால் தன் கவிதையில் வேள்வி  செய்திருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதி இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் சிறப்பைப் பெறுகின்றார். அவருக்கு என் பாராட்டு!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     
    தூங்க வருகவே
    ——————————–

    170703 - Tvameva - lores
    170703 – Tvameva – lores

    ”மாணிக்கக் குறளன் மாவலி ஈன்ற
    காணிக்கை ஏற்றுக் கால்களை நீட்டி
    வானுக்குத் தாவி களைத்தவன் எந்தன்
    ஊனுக்குள் கலந்து தூங்க வருகவே”….கிரேசி மோகன்….!

    ”மாட்டுக்கு முன்னாடி(பாதம்), மந்திக்கு பின்னாடி(முதுகு)
    கோட்டுக்குள்(கேசவ் வரைந்த கோடு) குந்திய கேசவர் -காட்டுக்குள்(வனவிஹாரி)-
    வானரம் ஏந்துகிறார்(ராமாவதாரத்தில் மாருதி வாகனர்) வாத்ஸல் யமுதுகால்
    ஆ!நரனாய் வந்தவரின் அன்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • பறவையியலும் சங்க இலக்கியமும்!

    சற்குணா பாக்கிய ராஜ்

     அன்றில் (கருப்பு ஐபிஸ்/கருப்பு அரிவாள் மூக்கன்)

    Black Ibis or Rednaped Ibis (Pseudibis papillosa )

     

    கருப்பு ஐபிஸ்

    “நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்”

    unnamed (7)

    கன்னியாகுமரி மாவட்டம், நன்றி, படம்: S. S. Davidson                                                             

                    அன்றில் பறவையென்றால் “இணை பிரியாத பறவைகள்” அல்லது “ஒன்று இல்லையெனின் துணைப்பறவை உயிர் வாழாது” என்று ஒருவருடைய மனதில் தோன்றும். அன்றில் பறவைகள், தமிழர்களுக்கு, இன்று, நேற்று அல்ல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சங்க காலப் புலவர்களால், குறுந்தொகை, நற்றிணை, கலித்தொகை, அகநானூறு போன்ற அக நூல்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவை. தற்காலத்தில் தமிழகத்தில், அன்றில் என்ற பெயர் வழக்கிலிருந்து மறைந்து விட்டதால், அன்றில் பறவையென்றால் “அது எந்தப் பறவை?” என்று கேட்போர் அதிகம்.

    அன்று புலவர்கள் வர்ணித்துள்ள அன்றில்தான், இன்று நாம் காணும் கருப்பு ஐபிஸ் பறவையென்பதைப் பறவையியல் மூலமாகவும், ராஜஸ்தான் மாகாணத்தில், கருப்பு ஐபிஸைப்பற்றி நடத்தியுள்ள பல ஆராய்ச்சிகளாலும் அறிய முடிகிறது.

     திரு.பி.எல். சாமி எழுதியுள்ள “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” (1976,  p,.52), என்ற நூலில், “வக்கா” (Night Heron)  என்ற பறவையை “அன்றில்” என்று வர்ணித்திருப்பது சரியான தகவல் அல்ல. ஏனெனில் இரண்டு பறவைகளும் நீரில் நடமாடும் பறவைகளான போதிலும், இவை இனத்திலும், தோற்றத்திலும் வேறுபட்டவை. வக்கா, கொக்கு (Heron) இனத்தையும்,  கருப்பு ஐபிஸ், அரிவாள் மூக்கன்( Ibis) இனத்தையும் சார்ந்தவை. வக்கா, இரவில் இரை தேடும். கருப்பு ஐபிஸ், பகலில் நடமாடும் பறவை.

    வக்கா (Black Crowned Night Heron), வேடந்தாங்கல்

    unnamed (9)

    unnamed (8)

                                          படம்: சற்குணா பாக்கிய ராஜ்

    மேலும் சங்ககாலப்பாடல்களை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள சிலர், அன்றில் பறவையைக் கருப்பு ஐபிஸ் அல்லது கிளாசி ஐபிஸ் (Glossy Ibis) என்று  குறிப்பிடுகின்றனர். இரண்டு பறவைகளும் ஒன்றல்ல. கிளாசி ஐபிஸு க்குத் தலையில் சிவப்பு நிறத்தோல் வளர்ச்சியும், தோளில் வெண்ணிறப்பட்டையும் கிடையாது. இந்தப் பறவை, கருப்பு ஐபிஸை விட உருவத்தில் சிறியது. இனப்பெருக்கக் காலத்தில், நாரை, கொக்கு போன்ற பறவைகளோடு ஒரே மரத்தில் கூடு கட்டும். இதை நாம் வேடந்தாங்கல் போன்ற சரணாலயங்களில் காணலாம். கருப்பு ஐபிஸ், பிற பறவைகளோடு கூடு கட்டுவதில்லை.

    பறவையியலும் கருப்பு ஐபிஸூம்:

    கி. பி. பத்தொன்பதாம் நூற்றாண்டு, இந்தியாவிற்குப் பணிபுரிய வந்த ஆங்கிலேயர்களில் சிலர், அவர்கள் கண்டு மகிழ்ந்த இயற்கைக் காட்சிகளையும், தாவரங்கள், பறவைகள், விலங்கினங்களையும் பல நூல்களில் பதிவு செய்துள்ளனர். இவர்களில், முக்கியமாக ஆங்கிலேய மருத்துவர்  T.C. ஜெர்டான் ( Dr. T. C. Jerdon), இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த பொழுது எழுதிய “இந்தியாவிலுள்ள பறவைகள்” (The Birds of India, 1864) என்ற நூலில், “கறுப்பு ஐபிஸ்” (Black Ibis) பற்றிய தகவல்களையும், இந்தப் பறவையின் சில இந்திய மொழிப் பெயர்களையும் கொடுத்துள்ளார்.  கருப்பு ஐபிஸின் தமிழ்ப் பெயர் கொடுக்கப்படவில்லை.

    இந்தியாவில், மிகவும் பிரபலமான பறவையியல் முனைவர் சலீம் அலி, கருப்பு ஐபிஸ், இந்தியில் “பாஸா”, (Baza) “கலா பாஸா” (Kala baza), வங்காளத்தில்  Kala dochara, “தெலுங்கு மொழியில் “நீல கண்கணம்” (Nella kankanam) என்றும் அழைக்கப்படுவதாகத் தனது இந்தியப் பறவைகளின் நூலில் பதித்துள்ளார் (The Books of Indian birds, Salim, Ali,  1996). இவருடைய நூலிலும், கருப்பு ஐபிஸின் தமிழ்ப் பெயர் பதிக்கப்படவில்லை,

    முனைவர் ராபர்ட் கிரப், “தமிழகத்தின் நீர்ப்புல பறவைகள்” ( Grubh : Wetland Birds of Tamil Nadu,  2012), என்ற நூலில் கருப்பு ஐபிஸை- “அன்றில்” என்று தமிழ்ப் பெயராகக் குறிப்பிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

    ராஜஸ்தானைச் சேர்ந்த விலங்கியல் முனைவர் கீம் சந்த் சோனி, 2008 -ம் ஆண்டு, ராஜஸ்தானின் வறண்ட பகுதிகளில் வாழும் (arid land) கருப்பு ஐபிஸைப் பற்றி வெளியிட்டுள்ள விரிவான ஆய்வு அறிக்கையின் (thesis) மூலம், இந்தப் பறவையின் தோற்றம், குரல், உணவு, கூடு கட்டத் தேர்ந்தெடுக்கும் மரங்கள், இனப்பெருக்கம் போன்ற செய்திகளை அறிவியல் கண்ணோட்டத்தில் காண முடிகிறது (Dr. Khem Chand Soni and others, 2008),

    கருப்பு ஐபிஸ்- காணப்படும் இடங்கள்:

     கருப்பு ஐபிஸ், வெப்ப நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களா தேசம், நேபாளம் போன்ற இடங்களில் காணப்படுகிறது.  இந்தியாவில், அறுபது சதவீதம் குஜராத் மாநிலத்தில் காணப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் தழிழ் நாடு, கன்னடம், தெலுங்கு மாநிலங்களில் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகிறது கருப்பு ஐபிஸ், ஏரி, சதுப்பு நிலங்கள், வயல்களில் காணப்படும். இது நீரில் நடமாடும் பறவைகளைச் (wading birds) சார்ந்ததாக இருந்தபோதிலும், நிலப் பகுதிகளில்தான் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தப் பறவை வலசை போவதில்லை.

    பறவையின் தோற்றம்:

      “நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்

    இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு”

               குறுந்தொகை, 160: 1-2, மதுரை மருதன் இளநாகனார்

    இந்தப் பாடலில், மதுரை மருதன் இளநாகனார், அன்றில் பறவையின் தலையில் காணப்படும் செந்நிறத் தோல் வளர்ச்சியை, நெருப்புக்கும், வளைந்த அலகை, இறாவுக்கும் ஒப்பிடுகிறர்.

    unnamed (10)

    பறவையியலில் “கருப்பு ஐபிஸ் பறவையின் அலகு நீண்டு, முன்நோக்கி அரிவாள் போன்று வளைந்திருக்கும், வளர்ச்சியடைந்த பறவையின் தலையில் இறகுகளற்ற பகுதியில், முக்கோண வடிவில், கருஞ் சிவப்பு நிறத்தில், பருக்கள் (wart like) போன்ற தோல் வளர்ச்சி காணப்படும்” எனப் பறவையின் தோற்றத்தை விவரிக்கிறது. புலவர் மதுரை மருதன் இளநாகன் வர்ணித்துள்ள அன்றில் பறவையின் தோற்றத்தைப் பறவையியலில் விளக்கப்பட்டுள்ள கருப்பு ஐபிஸ் பறவையோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது, இரண்டும் ஒரே பறவைகள்தான் எனத் தெளிவாகிறது.

    மேலும், பறவையியலில், “கருப்பு ஐபிஸ், உருவத்தில், நாட்டுக் கோழியை விடச் சற்றுப் பெரியது . ஆண், பெண் பறவைகள் தோற்றத்தில் ஒன்று போலிருக்கின்றன.  ஆண் பறவை சற்று பெரியதாக இருக்கும். கருப்பு ஐபிஸ் பறவையின் உடல், பழுப்பு நிறத்தில் இருக்கும். இரண்டு தோள்பட்டைகளிலுள்ள வெண்பட்டைநிறம், பறக்கும் போது மாத்திரம் புலப்படும். சிறகுகளில் அழகிய மினுமினுப்பானப் பச்சை நிறமும், வால் பகுதியில் நீல நிறமும் காணப்படுகிறது. தலைப் பகுதியில் இறகுகள் கிடையாது. வளர்ச்சியடைந்த பறவையின் தலையில், முக்கோண வடிவில், கருஞ் சிவப்பு நிறத்தில், பருக்கள் (wart like) போன்ற தோல் வளர்ச்சிகாணப்படும். இனப்பெருக்கக் காலத்தில்,கண்களும், கால்களும் பிரகாசமான மஞசள் நிறத்திலிருக்கும், இளம் ஐபிஸ் பறவையின் இறகுகள், மினுமினுப்பின்றி மந்தமான பழுப்பு நிறத்திலும், தலையில் சிவப்புப்தோல் வளர்ச்சி இல்லாமல் குட்டையான அலகுடன் காணப்படும்” என்று விவரிக்கப்பட்டுள்ளது,

             

    உணவு:

    சங்க இலக்கியத்தில் அன்றில் பறவையின் உணவைப்பற்றிய தகவல்கள் காணப்படவிலை. முனைவர் சோனியின் ஆராய்ச்சியில், “கருப்பு ஐபிஸ், சிறு கூட்டமாகவோ, இணையாகவோ இரை தேடும். ஆழமற்ற நீர்பகுதிகளிலும், வயல்களிலும் காணப்படும் வெட்டுக்கிளி, வண்டுகள், புழு, பூச்சிகள், தானியங்களை உண்ணும். ராஜஸ்தானில், இந்தப் பறவையை, உழவனின் தோழன் என்றழைக்கின்றனர்” என்றும், வறட்சியான காலத்தில், ராஜஸ்தான் பகுதிகளிலுள்ள மணற் குன்றுகளில் காணப்படும் உலரும் கால் நடைகளின் சாணத்தில் வளரும் வண்டுகளை உட்கொள்ளும். மேலும் குப்பைத் தொட்டிகளிலும், அழுகும் பொருள்கள், பிணங்களில் வளரும் ஈயின் புழுக்களையும்(maggots) உண்கிறது” என்றும் கூறுகிறார்.

    பறவையின் குரல்:

    சங்க இலக்கியத்தில் அன்றிலின் குரலை, “நரல்” “உயங்கும்”, “புலம்பல்”, “அகவும்” போன்ற சொற்களால் புலவர்கள், வர்ணிக்கின்றனர். உதாரணமாக,

     “மை இரும் பனைமிசைப் பைதல உயவும்

    அன்றிலும் என்புற நரலும்”;  நற்றிணை, 335: 7-8

     “ஒன்று இல் காலை அன்றில் போலப்

    புலம்பு கொண்டு உறையும்” நற்றிணை, 124:1-2

     “வடந்தை துவலை தூவ, குடம்பைப்

    பெடை புணர் அன்றில் உயங்கு குரல்” நற்றிணை, 152:6-7, “

    பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை

    அன்றில் அகவும்” அகநானூறு, 120:14 -15,

    போன்ற பாடல்களில் காணலாம்.

     

    பறவையியலாளர்கள் (ornithologists), “கருப்பு ஐபிஸ், இரை தேடும் நேரங்களில் குரல் எழுப்புவதில்லை. மாலை நேரங்களில் மரங்களில் அடையும் முன்னும், காலை பறந்து செல்லும் போதும் குரல் எழுப்பும். இந்த நேரங்களில் ஒரு பறவை குரல் கொடுக்கும் போது, மறு பறவை பதில்  குரல் எழுப்புவதில்லை (interact). இனப்பெருக்கக் காலங்களில் துணை தேடும் நேரம், கூடு கட்டும் சமயம், மற்றும் அடை காக்கும் நேரங்களில் ஒன்றிற்கொன்று பதில் குரல் எழுப்புகின்றன”  என்கின்றனர். அன்றில் பறவையின் குரல் இனிமையற்றது. “பிளிறல்” போன்று கேட்கும். ஆங்கிலப் பறவையியலாளர், Dr. ஜெர்டான், இந்தப் பறவையின் குரலை ”melancholy scream” என்று குறிப்ட்டுள்ளார்.   உதயப்பூரில் 2013-ஆம் ஆண்டு, மே மாதம் ஒரு நாள்  நள்ளிரவில் (midnight), வேப்ப மரத்தின் உயர்ந்த இடத்தில் சிறு குச்சிகளால் கட்டப்பட்ட  மேடை போன்ற கூட்டிலிருந்து, ஒரு சோடி கறுப்பு ஐபிஸ் பறவைகள் எழுப்பிய கடுமையான குரல்களைப், பதின்மூன்று நாட்கள் தொடர்ந்து, இரண்டு அறிவியலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.   According to them, This call was very harsh and loud and was possibly an ‘alarm’ signalto drive away predators. ( A Nocturnal call of the Black Ibis, Udaipur, Rajasthan, 2013) . மேலும் இந்தப் பறவைகள் எழுப்பும் குரல்களை, ibisring.com என்ற மின்வலைத் தளத்தில் கேட்கலாம்.

    கூடு கட்டும் காலமும், இடமும்:

     

     unnamed (4)

     

                        கன்னியாகுமரி, நன்றி, படம்: S. S. Davidson                                                             

          

           சங்க இலக்கியத்தில், அன்றில் பறவை குளிர் காலத்தில் கூடு கட்டும், ஊர் மன்றத்திலுள்ள பனை மரம் அல்லது மனை அருகேயுள்ள பனை மரம், மணல் குன்றங்களில் இருக்கும் பனை மரம், கருமையான பனை மரங்களில் கூடு கட்டும், சிறு குச்சிகள் கொண்டு கூடு கட்டும் போன்ற தகவல்களை, பல சங்கப் பாடல்களில் காணலாம். இவை, பெண் பனை மரங்களைத் தெரிந்தெடுப்பதை “ பெண்ணை” என்ற சொல் மூலம் அறியலாம்.

    வடந்தை துவலை தூவ, குடம்பைப்

    பெடை புணர் அன்றில் உயங்கு குரல்” நற்றிணை, 152:6-7, “

       “மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் “

    அகநானுறு, 50:11

    “பெண்ணை ஒங்கிய வெண்மணல் படப்பை அன்றில்”

                                        ”,(நற்றிணை,120),

    அன்றில் பறவை, சிறு குச்சிகள் கொண்டு கூடு கட்டுவதை,

    ” சிறு கோல் குடம்பை” யென்று கீழ் கண்ட சங்கப் பாடல் விவரிக்கிறது.

    “முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக்
    கொழு மடல் இழைத்த சிறு கோல் குடம்பைக்
    கருங்கால்  அன்றில் காமர் கடுஞ்சூல்
    வயவுப் பெடை அகவும்”

                                      குறுந்தொகை 301: 1-4

    பறவையியலில், “கருப்பு ஐபிஸ் பறவைகள், பருவ மழை துவங்கும் முன், குளிர் காலத்தில் ( தமிழகத்தில், நவம்பர் முதல் ஏப்ரல் வரை) பனை மரம் போன்ற உயரமான மரங்களைக் கூடு கட்டுவதற்குத் தேர்ந்தெடுத்து,  சிறுகுச்சிகள் கொண்டு கூடுகள் கட்டுகின்றன. கூடு கட்டும் இடங்கள், பொதுவாக, நீர்ப் பகுதியிலிருந்து, வெகு தூரத்திலும், மனித நடமாட்டமுள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. கருப்பு ஐபிஸ், பிற பறவையினத்தோடு சேர்ந்து கூடு கட்டுவதில்லை.

    மேலும், சில நேரங்களில், பழைய கூடுகளையும் அல்லது காகம், பருந்து போன்ற பறவைகள் விட்டுச் சென்ற கூடுகளையும் பயன்படுத்துகின்றன. ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில், கீஜரி, வேப்ப மரம், அரச மரங்களிலும் ( khejri, Neem and peepal trees) கூடுகள் கட்டுகின்றன. குஜராத்தில் பனை மரங்களில் கருப்பு ஐபிஸின் கூடுகள் காணப்படுகின்றன. இந்தப் பறவைகள், கூடுகளில் இணைசேர்நது, இரண்டு முதல் நான்கு இள நீல நிற முட்டைகளிடுகினறன சுமார் முப்பத்திமூன்று நாட்களில் குஞ்சுகள் பொரிக்கும். ஆண், பெண் பறவைகள் இரண்டும் அடைகாத்து, குஞ்சுகளை வளர்க்கின்றன.

    குஜராத் மாநிலத்தில் 2010 ம் ஆண்டு, மின்சாரம் கடத்தும் உயர்ந்த கோபுரங்களில் (power transmission line pylons) கறுப்பு ஐபிஸ் கூடுகள், குஞ்சுகளுடன் காணப்பட்டதாக அறிவியலாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், மரங்கள் வெட்டப்படுதல் போன்ற காரணங்களினால் கூடுகட்டும் இடங்களும் வேறுபடுகின்றன.

    முனைவர் திரு. சோனியின் ஆராய்ச்சியில் (2009), கருப்பு ஐபிஸ் பறவையின் “உறனவினர் ஆதரவுக் கொள்கை” யைப் பற்றி (Nepotistic behavior ) விவரித்துள்ளார். அவருடைய ஆராய்ச்சிப்படி, மிகுந்த வறட்சியான காலத்தில், சில இளம் ஐபிஸ்பறவைகள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்வதில்லை. பதிலாகத் தங்கள் பெற்றோர் பறவைகள் இனப்பெருக்கம் செய்யும்போது, முக்கியமாகக் கருவுற்ற  பறவைக்கும், குஞ்சுகளுக்கும் உணவு கொடுப்பதும், அபயக் குரல் கொடுத்து எதிரிகளிடமிருந்து கூட்டைக்காக்கும் பணிகளையும் மேற்கொள்கின்றன. ஆனால் அடை காப்பதில்லை. இனப்பெருக்கம் செய்யச் சாதகமான சூழ்நிலை இல்லாதபோது, இனவிருத்திக்கு வேண்டிய ஹார்மோன்கள் குறைந்து விடுவதால்தான், இளம் கருப்பு ஐபிஸ் பறவைகள் இனப்பெருக்கம் செய்வதில்லை என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த நடத்தை(behavior) வேறு சில பறவை இனங்களிலும் காணப்படுகிறது.

     

    பறவையியலும்/ சங்க இலக்கியமும் – கருப்பு ஐபிஸ்/அன்றில்

    சங்க இலக்கியத்தில் வர்ணிக்கப்பட்டுள்ள அன்றில் பறவையின் தோற்றம் (சிவந்த தலை, வளைந்த அலகு) கூடுகட்டத் தெரிந்தெடுக்கும் உயர்ந்த பனை மரங்கள், மனித நடமாட்டமுள்ள இடங்களான மன்றம், மனை போன்ற இடங்கள், பருவ மழை துவங்கும் காலத்தில் வடகிழக்கிலிருந்து வீசும் கடுமையான குளிர் காற்று (“பெருந் தண் வாடையும்”, ““வடந்தை துவலை” )சிறு குச்சிகளைக் கொண்டு கூடு கட்டுதல், பறவை நள்ளிரவில் கூட்டிலிருந்து எழுப்பும் இனிமையற்ற குரலை,” நரல், புலம்பல், உயங்குதல்” போன்ற தகவல்களை,  பறவையியலில், காணப்படும் கருப்பு ஐபிஸ பறவையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த இரண்டு பறவைகளும் ஓன்றே என்பது தெளிவாகிறது.

    சங்க இலக்கியத்தில், காலை நேரத்தில், துணைப் பறவை இல்லாத போது , மற்றப் பறவை, மிகவும் துயரம் கொண்டு குரல்  எழுப்பும் என்று ஒரு புலவர் பாடியுள்ளார்.

    “ஒன்று இல் காலை அன்றில் போலப்

    புலம்பு கொண்டு உறையும்” நற்றிணை, 124:1-2

     ஆனால், கருப்பு ஐபிஸ் பறவைகள், இணை பிரியாதவை என்று பறவையியலில் நிரூபிக்கப்படவில்லை.

     சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சங்க நூற் புலவர்கள்,. தங்கள் அன்றாட வாழ்வில், ஐம்புலன்களினால் இயற்கையைக் கூர்ந்து கவனித்து மனதில் பதித்து, தலை சிறந்த பறவையியலாளர்களுக்கு இணையாக அன்றில் பறவையை வர்ணித்திருப்பது பாராட்டுதற்குரியது.

    Dr. T. C Jerdon: The Birds of India, 1864

    The Book of Indian Birds (Ornithologist, Dr. Salim Ali, Twelfth Revised and Enlarged Centenary Revised Edition, 1997)

    A Nocturnal call of the Black Ibis, Udaipur, Rajasthan, 2014

    K.C.Soni, A.N.Sharma and V.C.Soni(2008). Study on nepotistic behaviour in Black ibis(Pseudibis papillosa) inhabiting the arid zone of Rajasthan, India. Published in Our Anture journal published fron Nepal. http://www.nepjol.info/index.php/ON/article/viewFile/1654/1543
    K.C. Soni, A.N. Sharma, V.C. Soni(2009) Seasonal Variation in the Population of Indian Black Ibis Pseudibis papillosa, Inhabiting the Arid Zone of Rajasthan, India.Our Nature: 7(1)2009:193-202 http://www.nepjol.info/index.php/ON/article/view/2571/2295
    Share
  • INDIA /II – பொழுது புலர்கிறது!

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்

    ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் – சுப்

    தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

     

    INDIA /II
    The day breaks

    பொழுது புலர்கிறது

    kanyakumari-banner-04

    பொழுது புலர்கிறது,
    என் செவிகளினூடே மத்தளமிட்டவாறு.

    நறுமணமிக்க மலர்கள்
     நித்திய ஒழுங்கு முறையில்
    களங்கமின்றி மலர்கின்றன.

    ஒளிரும் கதிரவனுடன்,
    வழமையாய் மனிதருக்கு ஊட்டமளிக்க
    வகைவகையாய் கனியும் அற்புதக்கனிகள்

    இசைக்கருவிகள்,
    மேசைவிரிப்புகளும் ஆடைகளும்.

    இப்படியொரு அதியற்புத நாட்டை
    என்றேனும் நான் கனவிலும் கண்டிருப்பேனா?

     

    Share
  • கந்தப்பெருமானே !

     

     

    எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

     

     

    கலியுகத்தின் தெய்வமே – கந்தப்பெருமானே
    நிலைபெறவே வேண்டுறேன் – கந்தப்பெருமானே

    பவவினைகள் போக்கிடுவாய் – கந்தப்பெருமானே
    பாவிகளைக் காத்திடுவாய் – கந்தப்பெருமானே

    முத்தமிழாய் முகிழ்த்தவனே – கந்தப்பெருமானே
    சொத்தெனவே நிறைந்தவனே – கந்தப்பெருமானே
    சத்தியமாய் உள்ளவனே – கந்தப்பெருமானே
    சகலசெல்வம் ஆகியுள்ளாய் – கந்தப்பெருமானே

    நித்தமுனைப் பாடிநிற்க – கந்தப்பெருமானே
    நினதருளைத் தந்திடுவாய் – கந்தப்பெருமானே
    அத்தனையும் உன்னிடத்தில் – கந்தப்பெருமானே
    அடைக்கலமாய் அளித்திடுவேன் – கந்தப்பெருமானே !

    Share
  • நலம் நலமறிய ஆவல் .. (62)

    நிர்மலா ராகவன்

    இனி இல்லை தோல்வி

    நலம்

    வெகு சிலரே வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள். அவர்களுக்கு மட்டும்தான் அறிவோ, திறமையோ இருக்கிறதென்று அர்த்தமில்லை. எல்லாம் இருந்தும், வெற்றி பெறுவதை எண்ணிக்கூடப் பார்க்க முடியாதபடி ஒருவித பயம் பலருக்கும்.

    யார் யாருக்கு இந்தப் பயம்?

    1 தந்தை, `எதையும் ஒழுங்காச் செய்யத் தெரியாது! நீ உருப்பட மாட்டே!’ என்று மகனைப் பழிப்பதைக் கேட்டிருப்பீர்கள். இப்படி மட்டம்தட்டிப் பேசுவதுதான் ஊக்குவிப்பது என்று தவறாக நினைத்துக் கொண்டிருந்தார்கள், கடந்த தலைமுறையில். இன்றும் சில பழமைவாதிகள் இதே முறையைத்தான் கையாள்கிறார்கள்.

    சிறுவயதில் பழிக்கப்பட்டவர்கள் முன்னுக்கு வரமுடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பெரியவர்கள் சொல்வதை அப்படியே நம்பிவிடுவார்கள். தாழ்வு மனப்பான்மையும் அதனால் விளையும் அச்சமும் மட்டும் நிரந்தரமாக அவர்களுடன் தங்கிவிடுகிறது என்பதுதான் பரிதாபம். அப்புறம் முன்னுக்கு வருவது ஏது!

    2 இயற்கையாகவே கூச்ச சுபாவம் உடைய குழந்தைகள்.

    கதை

    சிறுவயதில் கிராமத்தில் பாட்டி, தாத்தாவுடன் மிகவும் அருமையாக வளர்ந்தவன் சோமு. பள்ளிப்படிப்புக்கு பெரிய நகரத்தில் பெற்றோர் வீட்டுக்கே வந்துவிட, தந்தையின் முரட்டுத்தனமான கண்டிப்பு அவனை மிரளச் செய்தது. தமிழ்ப்படங்களில் வருவதுபோல், தாய் மகனுக்குப் பரிய, தந்தை இன்னும் மூர்க்கமாக வாயாலேயே அவனை வதைத்தார். பரீட்சையில் தோல்வி அடைந்தால் அடி.

    ஆண் பிள்ளைக்கோ தந்தைதான் முன்னோடி. அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று சோமு தன் தந்தை பழித்ததுபோலவே நடக்கத் தொடங்கினான்.

    வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்க்கப்பட்டதால் உண்டான கூச்ச சுபாவம், தோல்வி அடைந்தால் இன்னும் பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டுமே என்ற பயம் எல்லாம் சேர்ந்து கொண்டன. பிறருடன் கலகலப்பாகப் பேசக்கூடப் பயந்து, புதிதாக எக்காரியத்தைச் செய்யவும் தைரியமின்றி, எதிலும் தோல்வி காண்பவனாக ஆகிப்போனான் சோமு.

    சில பெற்றோர்கள் தம் பெண் குழந்தைகளுக்கு நல்லது செய்கிறோம் என்றெண்ணி, `நீ கடுமையாக உழைத்து, சிறந்த தேர்ச்சி பெற வேண்டும் என்கிற அவசியமில்லை. எப்படியும் கல்யாணம் செய்துகொள்ளத்தானே போகிறாய்! இளமைக்காலம் ஒருமுறைதான் வரும். இப்போதே நன்றாக அனுபவித்துவிடு!’ என்று சொல்வார்கள்.

    இதை அப்படியே ஏற்று நடக்கும் பெண்களில் சிலர் `அப்பா மிக நல்ல அறிவுரை கூறினார்! அதற்குப்பின் அப்படி மகிழ்ச்சியாகவே இல்லை!’ என்பார்கள்.

    வேறு சிலர், `நான் நிறையப் படித்து, நாலுபேர் மெச்ச வாழவேண்டும்!’ என்றெல்லாம் ஆசைப்பட்டாலும், அப்பாவுக்கு எதிராக நடப்பது சரிதானா என்ற குழப்பம் உண்டாக, வெற்றியைக்கண்டு அஞ்சுபவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

    அளவுக்கு மீறிய பொறுமை

    பிடிக்காத உத்தியோகத்திலிருந்து மாறப் பயந்து, அதைப்பற்றிப் புலம்பிக்கொண்டு, அதிலேயே நிலைத்திருப்பவர்கள் பொறுமைசாலிகள்தானா? வேறு வேலை கிடைக்கும் என்றாலும், புதிய ஒன்று எப்படி இருக்குமோ என்ற பயமே அவர்களை அப்படி இருக்கச் செய்கிறது.

    அதேபோல்தான் கணவன் என்ன வதைத்தாலும் அதைத் தாங்கிப்போகும் பெண்களும். `பிறர் என்ன சொல்வார்களோ?’ என்ற அச்சம் எழ, பொறுக்க முடியாத வாழ்க்கையையும் எப்படியோ சமாளித்து வாழ்ந்தார்கள் இவர்கள், அண்மைக்காலம்வரை.

    பெண்களுக்கு கல்வியும், சொந்தக்காலில் நிற்கும் திறனும் இருப்பதால், இப்போது நிலைமை சற்றே மாறியிருக்கிறது.

    வெற்றியே பாரம்

    ஏன் வெற்றி பெறுவதை ஒரு பாரமாக நினைக்கிறார்கள்?

    கதை

    `இவளைப்போன்ற அறிவாளியை நான் இதுவரை பார்த்ததே கிடையாது. வகுப்பில் முதலாவதாக ஏன் வருவதில்லை?’ என்று பூர்ணிமாவின் ஆசிரியை குழப்பத்துடன் அவள் தாயைக் கேட்டாள்.

    தாய்க்கு என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடிந்தது. வீட்டுக்குப் போனதும், மகளைக் கோபிக்காது, `நான் பாடம் சொல்லிக் கொடுத்தபோது, எல்லாவற்றிற்கும் சரியாகப் பதில் சொன்னாயே! வேண்டும் என்றே தப்பும் தவறுமாக எழுதியிருக்கிறாய். இல்லையா?’ என்று கேட்டாள் புன்சிரிப்புடன்.

    அந்தப் பத்துவயதுச் சிறுமி ஒப்புக்கொண்டாள். முதலாவதாக வரும் பெண்ணைப்போல் கர்வியாக, தான் எது சொன்னாலும், செய்தாலும் சரிதான் என்று அடம்பிடிப்பவளாக ஆகப் பிடிக்கவில்லை என்று. அதனாலேயே அப்பெண்ணுக்கு நெருங்கிய தோழிகளே கிடையாது, தானும் அப்படித் தனித்து இருக்க விரும்பவில்லை என்றாள்!

    `எனக்கு எவருடனும் ஒத்துப்போக முடியும்,’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்பவர் தன் முழுத்திறமையை வெளிப்படையாகக் காட்டமாட்டார். வெற்றி, அதனால் கிடைக்கும் பதவி என்றால் பொறுப்புகளும் அதிகரித்துவிடும் என்பது ஒருபுறமிருக்க, பலருக்கும் தன்னைப் பிடிக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று, ஒரே நிலையில் இருப்பார்கள்.

    ஆனால், இவர்களைப் போன்றவர்கள் நிம்மதியாகவோ, மகிழ்ச்சியாகவோ இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. வெற்றியை நினைத்துப்பார்க்கவும் அஞ்சுபவர்களுக்கு இலக்கே கிடையாது. மாற்றமில்லாத வாழ்க்கையே பாரமாகி விடுகிறது.

    தம்மையும் தம் குறைகளையும் மறக்க சிலர் தம்மைத் தாமே குலைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். மது, மாது, போதைப்பழக்கம் என்று ஏற்படுத்திக்கொள்வார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தம் திறமைக்கு மீறிய காரியங்களில் ஈடுபட்டு (உதாரணம்: வியாபாரம்) தோல்வி அடைவார்கள்.

    எப்படி இந்த நிலையை மாற்றுவது?

    தன் குறை என்ன என்று புரிந்து, அதை நிவர்த்தி செய்துகொள்ள முயலுவது.

    பூர்ணிமாவுக்குச் சற்று விவரம் புரிந்ததும், அவள் தாய் கூறியது: `கடவுள் உனக்கு நல்ல அறிவைக் கொடுத்திருக்கிறார். அதை முழுமையாகப் பயன்படுத்தாது விடலாமா?’

    அதன்பின் அப்பெண் தன் புத்திசாலித்தனத்தை மறைத்துக்கொள்ள முயலவில்லை. அவளைப்போலவே இருந்த சிலருடன் நட்புடன் பழக, வாழ்க்கையில் பிடிப்பும், மகிழ்ச்சியும் உண்டாயின.

    சிறு பிராயத்தில் கேட்ட வசவுகளால் தான் குறைபாடு உள்ளவனாக ஆகிவிடமாட்டோம் என்ற உறுதியுடன் செயல்படுவது.

    தன்னைத் தாழ்த்த முயல்கிறவர்களின் தொடர்பைக் குறைத்துக்கொண்டு, அவர்கள் முயற்சியைத் தோற்கடிப்பது. வெற்றி பெற்றால், பலருடைய வாய்க்கு அவலாக ஆகிவிடுவோம், அதனால் பாதிப்படையக்கூடாது என்று தெளிவடைவது.

    பிறர் நம்மைத் தாழ்த்தவோ, காயப்படுத்தவோ முயன்றால், அதனால் நாம் இழிந்தவர்களாக ஆகிவிடப்போவதில்லை. அவர்கள் சொல்வதில் உண்மை இருக்குமோ என்று நினைத்துக் குழம்புவது அநாவசியம். அவர்கள் எப்படியோ போகட்டும், விடுங்கள்!

    உடலாலோ, மனதாலோ, உணர்ச்சிகளாலோ நாம் அவர்களை எதிர்க்காது இருப்பதே சிறந்தது.

    இதைப் புரிந்துகொண்டால், தோல்வியைப் புறந்தள்ளலாம். வெற்றிக்கு அஞ்ச வேண்டியதில்லை.

    தொடருவோம்

    Share
  • கல்யாணமோ கார்த்திகையோ!

    விசாலம்

    “நீலா! நீலா! என்ன செய்யறே! எப்போ பாத்தாலும்  செல் தானா கையில.  இங்க வா!  இந்த அகல் விளக்கெல்லாம்  அலம்பி  துடைச்சு வை. கொஞ்சமாவது எனக்கு உதவப்படாதா என்ன?’”

    “இதோ வரேம்மா… எதுக்கு இப்ப  இத்தனை அகல் விளக்கு வாங்கியிருக்கே!”

    “நீயே யோசிச்சு பதில் சொல்லு. தீபாவளிக்கப்பறம்  விசேஷமா என்ன பண்டிகை வரும்? “

    “தெரியலேயே அம்மா”

    “இதெல்லாம் எங்க இந்தக்கால பெண்ணுக்கு தெரியறது? வேலண்டின் டேன்னா மட்டும் ஒரு மாசம் முன்னாடியே ஆட ஆரம்பிசுடறதுகள்.”

    “அதுல என்ன தப்பு இருக்கு?”

    “அதுல ஒண்னும் தப்பில்ல.  ஆனா அத்தோட நம்ம கலாசாரமும்  தெரிஞ்சிருக்க வேண்டாமா? அந்தந்த பண்டிகையை கொண்டாடவும் தெரிஞ்சுக்கணும். அந்த நல்ல நாள் வந்த காரணமும் தெரிஞ்சிருக்கணும். நீயோ பி எட்   படிக்கப்போறேன்னு சொல்றே. அப்ப ஸ்கூல்  குழந்தைகளுக்கு எல்லாம் சொல்லித்தர உனக்கு முதல்ல தெரிஞ்சிருக்கணும் இல்லையா?”

    “ஆமாம்மா நீ சொல்றது சரிதான். இப்ப சொல்லு ஏன் இவ்வளவு விளக்கு எடுத்திருக்கே. பித்தளை விளக்கும் பளபளன்னு தேச்சுருக்கே”

    “இப்பவும் ஞாபகம் வல்லையா. கிழிஞ்சுது போ. அடப்பொண்ணே! கார்த்திகை  தீபம்  வரது  தெரியலையா? போன வருஷம் எல்லா இடத்திலும் விளக்கெல்லாம் ஏத்தினோமே!”

    “ஆமாம் ஆமாம் பொரி உருண்டை, கடலை உருண்டை, அப்பம் எல்லாம் கூட நைவேத்தியம்  செய்தாயே. ஞாபகம் வந்துடுத்து.”

    “ஆமாம் திங்கறதெல்லாம் மறக்காமல் ஞாபகம் வந்துடும்.”

    “ஹூம் போம்மா! எப்ப பாத்தாலும் என்னை கிண்டல் பண்ணிண்டு.

    அது சரிம்மா! நான் இந்த வேலையெல்லாம் செய்யறேன். நீ எதுக்கு கார்த்திகை தீப திருநாள் வந்ததுன்னு சொல்லு. எனக்கும் வேலை செய்ய போர் அடிக்காது”

    “அப்படி வா வழிக்கு. சரி கேளு கதையை!

    கார்த்திகைத் திருநாள் ரொம்ப சிறப்பு வாய்ந்தத் திருநாள். கல்யாணமோ கார்த்திகையோன்னு சொல்லுவா. கல்யாணம் எத்தனை முக்கியமோ அத விட முக்கியம் இந்த நாள்.  இதில முருகப்பெருமான்   சிவன்  பார்வதி  துர்கையும்  சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

    ஒருசமயம் பிரும்மா, “நான் தானே எல்லாவற்றையும் சிருஷ்டி செய்கிறேன்  நான்  சிருஷ்டி செய்யாட்டா  இந்த  பிரும்மாண்டமான உலகமே இருக்காது  அதனால் நான் தான் பெரியவன்  ” என்று  கர்வம் பிடிச்சு, எதற்கும்  மஹாவிஷ்ணுவிடம்  இத பத்தி கேட்கலாம்னுட்டு விஷ்ணுவிடம் சென்றார்.

    விஷ்ணு   பாற்கடலில்   பள்ளிக்கொண்டிருந்தார். பிரும்மாவைப்

    பார்த்து வந்த விஷயத்தைப்  பத்திக் கேட்டார். பிரும்மா  விஷயத்தைச் சொல்லி “இப்போது சொல்! நான் தானே படைக்கிறேன்; நான் தானே உயர்ந்தவன்” னு  சொன்னார்.

    அதுக்கு விஷ்ணு பகவான், “ஓ பிரும்மா!   படைத்தால் மட்டும் போதாது, காக்கவும்  வேண்டும். நான் எல்லோரையும் காக்கிறேன். அதனால் நான் தான் பெரியவன். “

    வாக்குவாதம்  அதிகமாக ரெண்டு பேரும் சிவன்ட  கேட்கலாம்னு  முடிவு செஞ்சு சிவபெருமானிடம் போய் சேர்ந்தனர். அப்போ சிவன் பெரிய நெருப்புப் பிழம்பாய்  லிங்க வடிவில் தோன்றினார். இரு தரப்பிலேந்து  எல்லாம் கேட்டப்பறம் அவர் ஒரு பரீட்சை வைச்சார். “யார் என்னுடைய   முடியையும் அடியையும்  கண்டு வந்து  என்னிடம் சொல்லுகிறாரோ  அவர்தான் பெரியவர், உயர்ந்தவர்” ன்னார். இதைப் பற்றி அறிய  இருவருமே ஆவலாக இருந்தனர். ரொம்ப எளிதான  காரியம்ன்னு எண்ணி  ரெண்டு பேர்களும் ஒத்துக் கொண்டனர். பிரும்மா அன்னப்பறவையாக மாறினார். விஷ்ணு வராக அதாவது

    பன்றி உருவம் எடுத்துக் கொண்டார். அன்னப் பறவையான
    பிரும்மா  ஆகாசத்துல உயர பறந்து பறந்து  முடியைத் தேடித் தேடி அலைஞ்சார். பார்க்க முடியவில்லை. அலுத்து சலித்து களைச்சு போனார்.

    சலித்தப்போது அங்க ஒரு தாழம்பூவைப் பார்த்தார்.

    “தாழம்பூவே! எனக்கு ஒரு உபகாரம் செய்யணும். நான்  சிவனது முடியைப்  பார்த்ததாக ஒரு சின்னப் பொய் சொல்லணும்” ன்னார். தாழம்பூவும்  சரின்னு

    ஒத்துக் கொண்டது.

    விஷ்ணுவோ பன்றி ரூபத்தில பூமியைக் குடைஞ்சு மிகவும் ஆழமாப்போய், ஆழமாப்போய் அடியைத் தேடினார். அவருக்கும் அடி தென்படவில்லை. இனி தேட முடியாதுன்னு களைச்சு அவரும் திரும்பி வந்துட்டார். இருவரும் வருத்தத்தோடு  சிவனட்ட  திரும்பி வந்தா.

    தங்கள்  தோல்வியை ஒப்புத்துண்டு  மன்னிப்பும் கேட்டா. அப்போது சிவன் தன் உண்மையான ரூபத்தைக்  சூரிய  சந்தரனுடன்  மூன்று   கண்களுடன்  அதாவது நெற்றியில் ஒரு கண்ணுடன் திருசூலம் ஏந்தி தரிசனம் தந்தார். “நாம் மூவரும்  படைத்தல், காத்தல், அழித்தல்  என்ற மூன்று காரியங்களுக்காக உண்டாக்கப்பட்டோம். நாம் மூவரும் உலகத்திற்கு  முக்கியமானவர்கள் தான்”ன்னார்.

    பின்னர் பொய் சொன்னதால் பிரும்மாவுக்கு  ஒரு கோவிலும்  இருக்கக்கூடாதுன்னு கோபத்துல சொன்னார். தாழம்பூவையும் சிவபூஜைக்கு  சேர்ப்பதில்லை.”

    “அம்மா  அடுத்ததா நீ என்ன கேட்கப்போறேன்னு எனக்குத் தெரியும்.”

    “என்ன?”

    “இந்தக் கதைலேந்து என்ன தெரியறதுன்னு கேப்ப. இல்லையா?’

    “ஆமாம் சொல்லேன்.”

    “இந்தக் கதையிலிருந்து  கர்வம்  கொள்ளாதே. பணிவாக இரு.  பொய் சொல்லாதே. உயர்ந்தவர் தாழ்ந்தவர்  என்ற எண்ணம் கொள்ளாதே  என்ற பாடம் கற்றுக்கொண்டோம் இல்லையா? ன்னு ஸ்கூல் குழந்தைகளுக்குச் சொல்ல நல்ல கதை அம்மா”

    “நன்னா ஞாபகம் வச்சுக்கோ.  ஸ்கூல்ல  பாடம் எடுத்தா நிறைய கதை சொல்லி எடுத்தாக்க  கிளாஸ் ரொம்ப இன்டெரெஸ்டிங்கா இருக்கும். இல்லாட்டா போர் அடிக்கும்.”‘

    “அது சரி அம்மா. கமலா வீட்டிலே கார்த்திகை நமக்கு அடுத்த நாள் வரதாமே  அது ஏன்? ஒரே பண்டிகையை ஏன் ரெண்டு ரெண்டு நாள் செய்யணும்?”

     “அவாள்ளாம்  வைஷ்ணவா. சிவ பூஜை செய்வதில்லை. அவளோட  கார்த்திகை லட்சுமி தேவி சம்பந்தப்பட்டது.”

    “அதுக்கும் ஒரு கதை இருக்குமே!”

    “உம்… இருக்கு இருக்கு கேளு!

    கார்த்திகைத் தீபம் எப்போதும் சைவர்களுக்கு முதல் நாளும் அதன் மறு நாள்  வைஷ்ணவர்களுக்கும் வரும். இதே போல் ஜன்மாஷ்டமியும் இரண்டு நாட்கள். முதல் நாள் சைவர்கள் கொண்டாட  மறுநாள் வைஷ்ணவர்கள் கொண்டாடறா. ஐயங்கார்  கார்த்திகையை  “பாஞ்சராத்ரதீபம்” என
    கொண்டாடுகிறார்கள். அதாவது விஷ்ணு  கோயில்ல  பக்தர்கள் கோயிலுக்கு முன்னாடி கூடுவார்கள். அப்பறம் பனையோலைகளைக் கூடுகள்  போல  குமிச்சு  அதைச்சொக்கப்பனாக நினைத்து எரிக்கிறா.”

    ” ஆஹா இன்னொரு கதை வந்துடுத்து”

    “ஒரு தடவை மஹாலட்சுமியை ஒரு அசுரன்  துரத்த திருமகள் காட்டு  நடுவில  போய் ஒளிஞ்சுண்டா. அசுரன் இத   தெரிஞ்சுண்டு  காட்டிற்குள்ளும்  வந்துவிட்டான். அவள் அங்குதான் எங்கேயோ இருக்கணும்னு   எண்ணி அவளை அழிக்க காட்டிற்குத் தீ  வச்சான். ஆனால் மஹாலட்சுமி அந்த இடத்திலிருந்து மறைந்துப்போனாள். இதன் காரணமாகத்தான் விஷ்ணு கோயில்களில் இது போல் எரிப்பது வழக்கம்.

    வேறொரு கதை… ஒரு தடவை பிரும்மா ஒரு யாகம் செய்தார்.  ஆனால்  சரஸ்வதிக்கு இது தெரியாது. யாகம் நடக்கும் போது இந்த விஷயம் அவளுக்குத் தெரிஞ்சுது, அதனால் கோச்சுண்டு யாகத்திற்குத் தடங்கல் செய்ய ஒரு அரக்கனை உண்டாக்கினாள். அரக்கன் யாகத்தைத்தடுக்க உலகம் முழுவதையும் இருட்டாக்கினான். எங்க பாத்தாலும் ஒரே இருட்டு.

    பிரம்மா மனம் கலங்கி ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் தியானித்தார்.
    மஹவிஷ்ணுவும் மனம் கனிஞ்சு  உலகம் முழுவதும் பிரகாசமாக
    ஆக்க ஒளி கொடுத்தார்.,அதில உலகமே பிரகாசமானது.
    இந்தச் சம்பவம் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில்
    தான் நடந்தது. இதனாலும் வைஷ்ணவர்கள் கார்த்திகைத் திருநாளைக் கொண்டாடுகின்றனர்.”

    “போதும்மா  நான் அப்பறம் எல்லாம் மறந்து போய்டுவேன்.”

    “அது எப்படி மறப்பே! ஹாரி பாட்டர்  நாலு  பாகமும் நன்னா ஞாபகம் இருக்கே! எல்லாத்துக்கும் ஒரு ஆர்வம் வேணும்! அப்ப மறக்காது.”

    “சரிம்மா! என் செல்ல அம்மா!  நான் வரேன்  நீ நல்ல டீச்சர் தான்.”

    “போதும்டி ஐஸ் வைக்காதே!  இந்த தடவை கார்த்திகைக்கு பட்டு பாவாடை  கட்டிண்டு விளக்கு நீதான் ஏத்தணும்.”

    “ஓகே டன் {done}”

    Share
  • கா… கா….

    க. பாலசுப்பிரமணியன்

    “க் …க் .. ஆ ” அந்தக் காகம் “கா..கா.. ” என்று கத்த முயற்சித்துக் கொண்டிருந்தது. காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எனக்கோ ஒரே வியப்பாக இருந்தது.. ஏன் அதனால் சரியாகக் கத்த முடியவில்லை?

    “க் … க் ….” அதன் தொண்டையிலிருந்து குரல் எழும்பவே இல்லை.

    ஒருவேளை அதற்குத் தொண்டை கட்டிக்கொண்டிருக்குமோ ?

    “அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க… அது பக்கத்திலே எங்கையாவது எலும்புத் துண்டை பதம் பார்த்திருக்கும். அதிலுள்ள முள் ஏதாவது தொண்டையில் குத்தி குரல் போயிருக்கலாம்” இது அருகில் நின்ற என் மனைவி.

    “எந்த எலும்புத்துண்டிலே முள் இருக்கு என்பதும் உனக்குத் தெரிந்திருக்குமே!”  என் பதிலை கேட்டு தன் முகத்தைச் சுளித்துக் கொண்டு சென்று விட்டாள்.

    தன்னுடைய ஒன்றரைக்கண்ணால் அந்தக் காகம் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தது.

    “க் ..க.. ” மீண்டும் தன் குரலை இழுத்தது. அதன் குரலில் ஏதோ ஒரு வேதனை தெரிந்தது.,

    இரண்டு காகங்கள் அதன் அருகில் வந்து உட்கார்ந்தன ” என்ன ஆச்சு உனக்கு?.” என்று தன் கழுத்தை திருப்பிக் கேட்டுக்கொண்டிருந்தன.

    “க.. க ..” குரல் எழும்பவில்லை… “எங்கேயாவது கண்ட சாப்பாட்டை பார்த்து ஆசை பட்டிருப்பான்..” என்று ஏளனமாகச் சொன்னது.முதல் காகம்.

    “வேறே ஒன்னும் இருக்காது. யாரவது ஐஸ் கிரீம் சாப்பிட்டுவிட்டு அந்த டப்பாவைக் கீழே போட்டிருப்பாங்க.. இது ஐஸ் கிரீம் ஆசையில் அதை சாப்பிட்டிருக்கும். காலங்கெட்ட நேரத்திலே ஐஸ் கிரீம் சாப்பிட்டால் இப்படித்தான் வரும்..” இது இன்னொரு காகத்தின் எண்ணம்.

    பதில் சொல்லமுடியாமல் அந்தக் காகம் தன் கழுத்தை சொரிந்து விட்டுக்கொண்டது.

    “க்க்க்க் ..” ஏப்பம் விடுவது போல் இன்னொரு இழுப்பு… இரண்டு காகங்களும் கேலி செய்வதுபோல் சிரித்துக்கொண்டே அந்த இடத்தைக் காலி செய்தன.

    தனக்கு நேர்ந்த இந்த விபரீதத்தை நினைத்து தாழ்வு மனப்பான்மையுடன் முகத்தை மறைத்துக்கொள்ள அந்த காகம் இலைகள் நிறைந்த இன்னொரு கிளையில் சென்று அமர்ந்தது.

    “ஹாய்…” ஒரு பெண்காகம் இதனருகில் வந்து அமர்ந்தது.

    “இவ ..எங்கே.. இந்த நேரங்கெட்ட நேரத்திலே…”

    “என்ன.. ஒரு ஹாய் கூட சொல்லமாட்டியா. “

    “க்க.. “

    “என்ன ஆச்சு இந்த தொண்டைக்கு…யாரையாவது கிண்டலடித்துப் பாடி வாங்கி கட்டிக்கொண்டாயா.? தொண்டையைப் பார்த்து அடிச்சுட்டாங்களா?..”

    தன்னுடைய கோபத்தை காட்டுவதற்குத் தன் சிறகை வேகமாகப் பல முறை அடித்துக்கொண்டது.

    “உன்னை எங்க அப்பாவுக்கு அறிமுகம் பண்ணலாமென்று நினைத்து இங்கே வந்தேன்..  கேவலமான குரலோடு உன்னை அழைத்துக் கொண்டுபோனால்  .. அய்யய்யோ.. நினைத்தே பார்க்க முடியவில்லை…

    சீக்கிரம் சரி செய்து கொண்டு என்னை வந்து பாரு…” பறந்து சென்றது.

    தன் அழகான காதலியை நினைத்து ஏங்கி நின்ற காகத்தால் அவளைக் கூப்பிடத் திராணி இல்லை.

    “க்க ..” வலித்தது..

    வருத்தத்துடன் சிறிதே தன்  திருப்பியதும் அதற்குக் கண்ணில் பட்டதோ பக்கதது வீட்டு சன்னல். உள்ளே அந்த வீட்டு பெரிய மனிதர் ஒரு கரும்பலகையில் எழுதி வைத்திருந்தார்: “முயற்சி திருவினையாக்கும்.”

    இது எங்கிருந்தோ வந்த நம்பிக்கை ஒளி…

    “க் க ….க்  க ..” மீண்டும் மீண்டும் முயற்சி செய்தது.

    “தம்பி…” இது ஒரு புதிய வருகை…

    “என் பெயர் சின்ன கருப்பன்.. வைத்தியம் பார்க்கிறேன்.. கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு  பொண்ணு வந்து உனக்கு ஏதோ தொண்டையில் பிரச்சினை.. கொஞ்சம் உதவி செய்யுங்க..” என்று சொல்லிவிட்டுப் போனாள் .

    பெரியவர் கிளையில் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.

    “கொஞ்சம் தொண்டையக்  காட்டு பார்க்கலாம்.”

    பரிசோதனை தொடங்கியது.. :”என்ன பண்றே.. கொஞ்சம் வேப்ப மரத்துக்குப் போய் நாலு பழுத்த வேப்பம் பழத்தை சாப்பிடு..சீக்கிரம் சரியாகிவிடும்.. “

    “என்ன பெரிய தலைவலி! ..தொண்டையில் வந்து சனி பகவான் உட்கார்ந்து விட்டானா.?..எல்லோரிடமும் இப்படி அவமானப் பட வேண்டியிருக்கே..

    “இவனுக்கென்ன ஆண்பிள்ளைக் குரலா?.. இல்லை பெண்பிள்ளைக குரலா?  அருகில் பரந்த இரு காகங்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து  கொண்டன.

    “அங்கே பாருடா…. காக்காய்.. எப்படிக் கத்துதுன்னு.. நீயும் அது மாதிரி “கா.கா.” ன்னு சொல்லு…. தன் பேரனை இடுப்பில் ஏந்திக்கொண்டு வந்த பாட்டிக்கு இந்தக் குரலை கேட்டு ஒரே குஷி.

    குழந்தையும் அந்த காகத்தைப் பார்த்து ..”க்…க் .. ” என்று கேலி செய்தது.

    கோபத்தில் கண் சிவந்த காகம் பாட்டியையும் பேரனையும் சுற்றி வந்தது. பயந்துபோன பாட்டி அருகில் இருந்த கம்பினால் ஓங்கி ஒரு தட்டு தட்டிவிட.. அது இதன் சிறகில் பட..

    அது பறந்து போய் பக்கத்து மைதானத்தில் உள்ள ஒரு மரக்கிளையில் அமர்ந்தது…

    “மயில் அகவும் .. காகம் கரையும் ”  பக்கத்தில்  உள்ள பள்ளியின் வகுப்பறையில் ஆசிரியை மாணவர்களுக்கு பாடம் சொல்லிகொடுத்துக் கொண்டு இருந்தாள் …

    “பசங்களா… சொல்லுங்க.. காகம் எப்படி கரையும்?”

    உடனே எல்லா மாணவர்களும் “கா.. கா. ” என்று கத்த  ஆரம்பித்துவிட்டனர்.

    “ஆண்டவா.. இது என்ன சோதனை. எனக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறாங்களா..”

    “க் … க் … என்று ஒருமுறை இழுத்தது..

    “மிஸ்.. மிஸ்.. அந்தக் காகத்தைப் பாருங்கள் .. அது  “கா.. கா.. ” என்று கத்தவில்லை.. “க்… க் .. ” என்று கரைகிறது..

    “டேய் .. அவங்க கூட்டத்துக்கு அது ஒரு மியூசிக் டைரக்டர்டா..  ட்யூன் போட்டுக்கொண்டு இருக்கின்றது.. “

    “போதும்.. போதும்.. பாடத்தைக் கவனியுங்கள்.. இல்லைனா .. நீங்களும் அந்த காக்கா மாதிரி தெருத்தெருவா அலையவேண்டியது தான்.

    “பாவம்டா  அந்த காக்கா. . “

    “பரவாயில்லையே .. ”  மனித ஜாதியில் இன்னும் சில நல்ல உள்ளங்கள் இருக்கின்றனவே.. மற்றவர்களுடைய துன்பத்தைக் கண்டு சிரிக்காமல்..பரிதாபப்படும் உள்ளங்கள்…

    திடீரென்று ஒரு கல்..  கீழேயிருந்து …ஒரு சிறுவன் அந்த மாமரத்தில் உள்ள மாங்காயை நோக்கி அடிக்க.. அது குறி தவறி இந்த காகத்தின் மேல் விழ…

    “கா .. “வலி தாங்க முடியாமல் ஒரே அலறல் ,,  அடுத்த கல் விழுவதற்கு முன்னால்

    “கா.. கா.. ” அது கரைந்து கொண்டே பறந்தது. சில நேரங்களில் ஆண்டவன் நமக்கு எதற்கு துன்பங்களைத் தருகிறான் என்பது நமக்கே தெரியாது.

    “கா.. கா.. ” தன் சுய மரியாதை மீண்டும் கிடைத்ததை நினைத்து பெருமையுடன் பறந்து கொண்டிருந்தது.

    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    Share