கல்யாணமோ கார்த்திகையோ!

விசாலம்

“நீலா! நீலா! என்ன செய்யறே! எப்போ பாத்தாலும்  செல் தானா கையில.  இங்க வா!  இந்த அகல் விளக்கெல்லாம்  அலம்பி  துடைச்சு வை. கொஞ்சமாவது எனக்கு உதவப்படாதா என்ன?'”

“இதோ வரேம்மா… எதுக்கு இப்ப  இத்தனை அகல் விளக்கு வாங்கியிருக்கே!”

“நீயே யோசிச்சு பதில் சொல்லு. தீபாவளிக்கப்பறம்  விசேஷமா என்ன பண்டிகை வரும்? “

“தெரியலேயே அம்மா”

“இதெல்லாம் எங்க இந்தக்கால பெண்ணுக்கு தெரியறது? வேலண்டின் டேன்னா மட்டும் ஒரு மாசம் முன்னாடியே ஆட ஆரம்பிசுடறதுகள்.”

“அதுல என்ன தப்பு இருக்கு?”

“அதுல ஒண்னும் தப்பில்ல.  ஆனா அத்தோட நம்ம கலாசாரமும்  தெரிஞ்சிருக்க வேண்டாமா? அந்தந்த பண்டிகையை கொண்டாடவும் தெரிஞ்சுக்கணும். அந்த நல்ல நாள் வந்த காரணமும் தெரிஞ்சிருக்கணும். நீயோ பி எட்   படிக்கப்போறேன்னு சொல்றே. அப்ப ஸ்கூல்  குழந்தைகளுக்கு எல்லாம் சொல்லித்தர உனக்கு முதல்ல தெரிஞ்சிருக்கணும் இல்லையா?”

“ஆமாம்மா நீ சொல்றது சரிதான். இப்ப சொல்லு ஏன் இவ்வளவு விளக்கு எடுத்திருக்கே. பித்தளை விளக்கும் பளபளன்னு தேச்சுருக்கே”

“இப்பவும் ஞாபகம் வல்லையா. கிழிஞ்சுது போ. அடப்பொண்ணே! கார்த்திகை  தீபம்  வரது  தெரியலையா? போன வருஷம் எல்லா இடத்திலும் விளக்கெல்லாம் ஏத்தினோமே!”

“ஆமாம் ஆமாம் பொரி உருண்டை, கடலை உருண்டை, அப்பம் எல்லாம் கூட நைவேத்தியம்  செய்தாயே. ஞாபகம் வந்துடுத்து.”

“ஆமாம் திங்கறதெல்லாம் மறக்காமல் ஞாபகம் வந்துடும்.”

“ஹூம் போம்மா! எப்ப பாத்தாலும் என்னை கிண்டல் பண்ணிண்டு.

அது சரிம்மா! நான் இந்த வேலையெல்லாம் செய்யறேன். நீ எதுக்கு கார்த்திகை தீப திருநாள் வந்ததுன்னு சொல்லு. எனக்கும் வேலை செய்ய போர் அடிக்காது”

“அப்படி வா வழிக்கு. சரி கேளு கதையை!

கார்த்திகைத் திருநாள் ரொம்ப சிறப்பு வாய்ந்தத் திருநாள். கல்யாணமோ கார்த்திகையோன்னு சொல்லுவா. கல்யாணம் எத்தனை முக்கியமோ அத விட முக்கியம் இந்த நாள்.  இதில முருகப்பெருமான்   சிவன்  பார்வதி  துர்கையும்  சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

ஒருசமயம் பிரும்மா, “நான் தானே எல்லாவற்றையும் சிருஷ்டி செய்கிறேன்  நான்  சிருஷ்டி செய்யாட்டா  இந்த  பிரும்மாண்டமான உலகமே இருக்காது  அதனால் நான் தான் பெரியவன்  ” என்று  கர்வம் பிடிச்சு, எதற்கும்  மஹாவிஷ்ணுவிடம்  இத பத்தி கேட்கலாம்னுட்டு விஷ்ணுவிடம் சென்றார்.

விஷ்ணு   பாற்கடலில்   பள்ளிக்கொண்டிருந்தார். பிரும்மாவைப்

பார்த்து வந்த விஷயத்தைப்  பத்திக் கேட்டார். பிரும்மா  விஷயத்தைச் சொல்லி “இப்போது சொல்! நான் தானே படைக்கிறேன்; நான் தானே உயர்ந்தவன்” னு  சொன்னார்.

அதுக்கு விஷ்ணு பகவான், “ஓ பிரும்மா!   படைத்தால் மட்டும் போதாது, காக்கவும்  வேண்டும். நான் எல்லோரையும் காக்கிறேன். அதனால் நான் தான் பெரியவன். “

வாக்குவாதம்  அதிகமாக ரெண்டு பேரும் சிவன்ட  கேட்கலாம்னு  முடிவு செஞ்சு சிவபெருமானிடம் போய் சேர்ந்தனர். அப்போ சிவன் பெரிய நெருப்புப் பிழம்பாய்  லிங்க வடிவில் தோன்றினார். இரு தரப்பிலேந்து  எல்லாம் கேட்டப்பறம் அவர் ஒரு பரீட்சை வைச்சார். “யார் என்னுடைய   முடியையும் அடியையும்  கண்டு வந்து  என்னிடம் சொல்லுகிறாரோ  அவர்தான் பெரியவர், உயர்ந்தவர்” ன்னார். இதைப் பற்றி அறிய  இருவருமே ஆவலாக இருந்தனர். ரொம்ப எளிதான  காரியம்ன்னு எண்ணி  ரெண்டு பேர்களும் ஒத்துக் கொண்டனர். பிரும்மா அன்னப்பறவையாக மாறினார். விஷ்ணு வராக அதாவது

பன்றி உருவம் எடுத்துக் கொண்டார். அன்னப் பறவையான
பிரும்மா  ஆகாசத்துல உயர பறந்து பறந்து  முடியைத் தேடித் தேடி அலைஞ்சார். பார்க்க முடியவில்லை. அலுத்து சலித்து களைச்சு போனார்.

சலித்தப்போது அங்க ஒரு தாழம்பூவைப் பார்த்தார்.

“தாழம்பூவே! எனக்கு ஒரு உபகாரம் செய்யணும். நான்  சிவனது முடியைப்  பார்த்ததாக ஒரு சின்னப் பொய் சொல்லணும்” ன்னார். தாழம்பூவும்  சரின்னு

ஒத்துக் கொண்டது.

விஷ்ணுவோ பன்றி ரூபத்தில பூமியைக் குடைஞ்சு மிகவும் ஆழமாப்போய், ஆழமாப்போய் அடியைத் தேடினார். அவருக்கும் அடி தென்படவில்லை. இனி தேட முடியாதுன்னு களைச்சு அவரும் திரும்பி வந்துட்டார். இருவரும் வருத்தத்தோடு  சிவனட்ட  திரும்பி வந்தா.

தங்கள்  தோல்வியை ஒப்புத்துண்டு  மன்னிப்பும் கேட்டா. அப்போது சிவன் தன் உண்மையான ரூபத்தைக்  சூரிய  சந்தரனுடன்  மூன்று   கண்களுடன்  அதாவது நெற்றியில் ஒரு கண்ணுடன் திருசூலம் ஏந்தி தரிசனம் தந்தார். “நாம் மூவரும்  படைத்தல், காத்தல், அழித்தல்  என்ற மூன்று காரியங்களுக்காக உண்டாக்கப்பட்டோம். நாம் மூவரும் உலகத்திற்கு  முக்கியமானவர்கள் தான்”ன்னார்.

பின்னர் பொய் சொன்னதால் பிரும்மாவுக்கு  ஒரு கோவிலும்  இருக்கக்கூடாதுன்னு கோபத்துல சொன்னார். தாழம்பூவையும் சிவபூஜைக்கு  சேர்ப்பதில்லை.”

“அம்மா  அடுத்ததா நீ என்ன கேட்கப்போறேன்னு எனக்குத் தெரியும்.”

“என்ன?”

“இந்தக் கதைலேந்து என்ன தெரியறதுன்னு கேப்ப. இல்லையா?’

“ஆமாம் சொல்லேன்.”

“இந்தக் கதையிலிருந்து  கர்வம்  கொள்ளாதே. பணிவாக இரு.  பொய் சொல்லாதே. உயர்ந்தவர் தாழ்ந்தவர்  என்ற எண்ணம் கொள்ளாதே  என்ற பாடம் கற்றுக்கொண்டோம் இல்லையா? ன்னு ஸ்கூல் குழந்தைகளுக்குச் சொல்ல நல்ல கதை அம்மா”

“நன்னா ஞாபகம் வச்சுக்கோ.  ஸ்கூல்ல  பாடம் எடுத்தா நிறைய கதை சொல்லி எடுத்தாக்க  கிளாஸ் ரொம்ப இன்டெரெஸ்டிங்கா இருக்கும். இல்லாட்டா போர் அடிக்கும்.”‘

“அது சரி அம்மா. கமலா வீட்டிலே கார்த்திகை நமக்கு அடுத்த நாள் வரதாமே  அது ஏன்? ஒரே பண்டிகையை ஏன் ரெண்டு ரெண்டு நாள் செய்யணும்?”

 “அவாள்ளாம்  வைஷ்ணவா. சிவ பூஜை செய்வதில்லை. அவளோட  கார்த்திகை லட்சுமி தேவி சம்பந்தப்பட்டது.”

“அதுக்கும் ஒரு கதை இருக்குமே!”

“உம்… இருக்கு இருக்கு கேளு!

கார்த்திகைத் தீபம் எப்போதும் சைவர்களுக்கு முதல் நாளும் அதன் மறு நாள்  வைஷ்ணவர்களுக்கும் வரும். இதே போல் ஜன்மாஷ்டமியும் இரண்டு நாட்கள். முதல் நாள் சைவர்கள் கொண்டாட  மறுநாள் வைஷ்ணவர்கள் கொண்டாடறா. ஐயங்கார்  கார்த்திகையை  “பாஞ்சராத்ரதீபம்” என
கொண்டாடுகிறார்கள். அதாவது விஷ்ணு  கோயில்ல  பக்தர்கள் கோயிலுக்கு முன்னாடி கூடுவார்கள். அப்பறம் பனையோலைகளைக் கூடுகள்  போல  குமிச்சு  அதைச்சொக்கப்பனாக நினைத்து எரிக்கிறா.”

” ஆஹா இன்னொரு கதை வந்துடுத்து”

“ஒரு தடவை மஹாலட்சுமியை ஒரு அசுரன்  துரத்த திருமகள் காட்டு  நடுவில  போய் ஒளிஞ்சுண்டா. அசுரன் இத   தெரிஞ்சுண்டு  காட்டிற்குள்ளும்  வந்துவிட்டான். அவள் அங்குதான் எங்கேயோ இருக்கணும்னு   எண்ணி அவளை அழிக்க காட்டிற்குத் தீ  வச்சான். ஆனால் மஹாலட்சுமி அந்த இடத்திலிருந்து மறைந்துப்போனாள். இதன் காரணமாகத்தான் விஷ்ணு கோயில்களில் இது போல் எரிப்பது வழக்கம்.

வேறொரு கதை… ஒரு தடவை பிரும்மா ஒரு யாகம் செய்தார்.  ஆனால்  சரஸ்வதிக்கு இது தெரியாது. யாகம் நடக்கும் போது இந்த விஷயம் அவளுக்குத் தெரிஞ்சுது, அதனால் கோச்சுண்டு யாகத்திற்குத் தடங்கல் செய்ய ஒரு அரக்கனை உண்டாக்கினாள். அரக்கன் யாகத்தைத்தடுக்க உலகம் முழுவதையும் இருட்டாக்கினான். எங்க பாத்தாலும் ஒரே இருட்டு.

பிரம்மா மனம் கலங்கி ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் தியானித்தார்.
மஹவிஷ்ணுவும் மனம் கனிஞ்சு  உலகம் முழுவதும் பிரகாசமாக
ஆக்க ஒளி கொடுத்தார்.,அதில உலகமே பிரகாசமானது.
இந்தச் சம்பவம் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில்
தான் நடந்தது. இதனாலும் வைஷ்ணவர்கள் கார்த்திகைத் திருநாளைக் கொண்டாடுகின்றனர்.”

“போதும்மா  நான் அப்பறம் எல்லாம் மறந்து போய்டுவேன்.”

“அது எப்படி மறப்பே! ஹாரி பாட்டர்  நாலு  பாகமும் நன்னா ஞாபகம் இருக்கே! எல்லாத்துக்கும் ஒரு ஆர்வம் வேணும்! அப்ப மறக்காது.”

“சரிம்மா! என் செல்ல அம்மா!  நான் வரேன்  நீ நல்ல டீச்சர் தான்.”

“போதும்டி ஐஸ் வைக்காதே!  இந்த தடவை கார்த்திகைக்கு பட்டு பாவாடை  கட்டிண்டு விளக்கு நீதான் ஏத்தணும்.”

“ஓகே டன் {done}”

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க