Blog
-
Gho Lakshmi Thirukalyanam Panthakkal Muhurtham
ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில் கோலக்ஷ்மிக்கும் ரிஷபராஜாவிற்கும் 21.07.2017ல் நடைபெறவுள்ள திருமணத்திற்காக
ஜீலை 16ல் குலதேவதா கிராமதேவதா பூஜையுடன்
பந்தக்கால் முகூர்த்தம்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலக அமைதி வேண்டியும் உலக நலனுக்காகவும் மழை வேண்டியும் இயற்கை வளம் பெறவும் சகல விதமான ஜீவராசிகளும் உஜ்விக்கவும் விவசாய பெருமக்களின் நலனுக்காகவும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வருகிற ஆடி மாதம் 5ம் தேதி 21.07.2017 வெள்ளிக் கிழமை காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் கடக லக்னத்தில் வீட்டிற்கு பயன்தரும் கோமாதா என்ற பசுவிற்கும் நாட்டிற்கு பயன் தரும் ரிஷபராஜா என்ற காளைக்கும்நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு எவ்வாறு திருமணம் நாம் செய்து வைப்போமோ அவ்வகையில் பசு என்றழைக்கும் கோ லஷ்மிக்கும் காளை என்று அழைக்கும் ரிஷபராஜாவிற்கும் திருமணத்தை தன்வந்திரி குடும்பத்தினர் முறையாகவும் வைபவமாகவும் நிகழ்த்த உள்ளார்..
மேற்கண்ட வைபவத்திற்காக வருகிற 16.07.2017 ஞாயிற்று கிழமை காலை 7.00 மணிக்கு பந்தக்கால் முகூர்த்மும் 8.00 மணிக்கு ஸ்ரீ முனீஸ்வரருக்கும், நவகனியருக்கும்,விஷேச அபிஷேகத்துடன் பொங்கல்வைத்து குல தெய்வ கிராம தெய்வ வழிபாடும் 9.30 மணியளவில் சுமங்கலி பூஜையும் 10.00 மணிக்கு கந்தர்வராஜ பூஜையும் நடைபெற்று மாலை 3.00 மணியளவில் பட்டுப் புடவை, பட்டு வேட்டி, திருமாங்கல்யம் மற்றும் சௌபாக்ய பொருட்கள் வாங்கி வருதலும் மாலை 6.00 மணிக்கு தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் கோடி தீபம், கோடி அர்ச்சனையில் சௌபாக்ய பொருட்களுடன் மாங்கல்யம் வைத்து மாங்கல்ய பூஜையும் நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து வருகிற 20.07.2017 மாலை 6.30 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் 108 வகையான பொருட்களுடன் 7.30 மணிக்கு சீர்வரிசையுடன் மாப்பிள்ளை அழைப்பும் இரவு 8.00 மணிக்கு சிறப்பு விருந்தும் நடைபெற்று மாங்கல்யதாரணம் மறுநாள் 21.07.2017 ஆடி முதல் வெள்ளிக் கிழமை சிறப்பு ஹோமங்களுடன் காலை 9.15 முதல் 10.15 மணிக்குள் கோ லஷ்மிக்கும் ரிஷபராஜா என்கிற நந்திகேசனுக்கும் நடைபெற்று 10.30 மணிமுதல் 12.00 மணிவரை 150 மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்கும் நாத சங்கமம் நிகழ்ச்சியும் சிறப்பு திருமண பிரசாதமும் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. .இந்த வைபவத்தில் ஏராளமான மடாதிபதிகளும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு முப்பத்து முக்கோடி தேவர்கள் 48 ஆயிரம் ரிஷிகள் அஷ்டவசுக்கள், மற்றும் நவகிரகங்களின் ஆசிகளுடன் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் எழுந்தருளியுள்ள தெய்வங்களின் ஆசிகளையும் பெற உள்ளனர்.இந்த வைபவத்தில் அனைவரும் பங்கேற்று ஆசிபெற ஆரோக்ய பீடம் அன்புடன் அழைக்கிறது.
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
சேடன் படுத்திருந்தாய் கிருஷ்ணா! கிருஷ்ணா!
மாடுகள் மேய்க்கவந்தாய் கிருஷ்ணா! கிருஷ்ணா!
கூடா குரங்குக்கும்(மனக்குரங்கு -கூடாரை வெல்லும் கோவிந்தன்) கிருஷ்ணா! கிருஷ்ணா!
நாடகம் நவனீதம் கிருஷ்ணா! கிருஷ்ணா!….கிரேசி மோகன்….! -
” பெருமாளே சரிதானே ”
கிரேசி மோகன்
—————————–
பால் குடத்தை நோக்கிப் படையெடுக்கும் எறும்புகளாய்
தோல் குடத்தைத் தொத்த வரும் தீவீர வியாதியெலாம்
மால் படுத்த அரங்கன் மணிவண்ணன் பேர் சொல்ல
வால் சுருட்டிக் கொள்ளுமாமே ,பெருமாளே சரிதானே….(1)நாய் வால் நிமிர்த்தலுக்கு இணையான நாற்பதிலே
நோய்வாய் கிடந்து வளைந்த நேரத்தில்
தாய்போல் தேற்றி தூக்கி நிறுத்த வல்ல
மாயா ஜால மருந்தாமே பெருமாளே சரிதானே….(2)கானல்நீர் இளமைக் காலம் கண்சிமிட்டும் நேரம்
கூனல் முதுகில் முதுமை மூப்பு மூட்டை பாரம்
நாணல் யமுனா நதி நாதன் திருநாமம்
பூணல் பொலிவாமே பெருமாளே சரிதானே….(3)முயலாமை கதையாக முடிகின்ற வாழ்க்கையின்
இயலாமை தன்னை இளமையிலே உணர்ந்து
செயலாவையும் ஸ்ரீரங்கனுக் களித்தால்
பயமில்லையாமே பெருமாளே சரிதானே….(4)கள் ஒழுகு மலர் தேடி கருவண்டு மொய்ப்பது போல்
உள் ஒழுகும் உணர்வுக்கு ஓடிவரும் ஒப்பில்லா
கள்ளழகன் கார்வண்ணன் காகுத்தன் கண்ணனென்று
தெள்ளமுதப் பிரபந்தம் சொல் பெருமாளே சரிதானே….(5)சிலந்திதன் வலையில் சிக்கிடும் பூச்சியாய்
புலன்கள் ஐம்பொறி புகுந்து புலம்பாமல்
நலம்தரும் நாராயணன் நாமம் சொன்னால்
பலன் பரம் பதமாமே பெருமாளே சரிதானே….(6)பத்தியம் இல்லாத பகாசுர வாழ்க்கையை
சத்தியம் என்றெண்ணி சஞ்சலம் அடைவோர்
நித்திய கல்யாண வைபவன் அருளால்
முத்தி அடைவாராமே பெருமாளே சரிதானே….(7)இல்லாததை இருப்பதென்று எண்ணிக் குவித்து
செல்லாத இவ்வாழ்வை செலவழிக்க முயலாமல்
மல்லாண்ட மணிவண்ணன் மலர்பதம் பற்றினால்
எல்லாமும் தெளிவாமே பெருமாளே சரிதானே….(8)….கிரேசி மோகன்….! -
ஹஸ்தாமலக கீதம்….
——————————————————————————–
நொச்சூர் ஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகளின் ஆங்கில உரையைப்
படித்த பாதிப்பில், தமிழில் வெண்பாக்களாகச் செய்துள்ளேன்….
முன்கதையாக….மொழிபெயர்ப்பில் மூலமும் என்மூலம் வந்த கற்பனையும் இணைந்துள்ளது(ஸ்ரீ பகவான் ரமண உபயம்)….
————————————————————————————-
(காப்பு)
———
‘’அருணா சலர்க்குப்பின், ஆதிசங் கரர்பின்
கருணா கரர்காம கோடி -உருவாய்
அரனா கவந்து அரணா கநின்றோய்
வரனாய்யென் வெண்பாவில் வா’’….கிரேசி மோகன்….
—————————————————————————————–
‘’ஆத்திலொரு கால்வைத்து ஆன்மப்போ ராட்டமாய்
சேத்திலொரு கால்வைத்த ஜீவனவன் -காத்திருக்கான்
காணா(து) ஒளிந்திடும், காணும் அனைத்திலும்
நானார் உணர்வை நினைத்து’’….கிரேசி மோகன்….
—————————————————————————————
முன்கதை சுருக்கம்
————————–“பித்தான, பேசாத பிள்ளைமுன் அத்வைத
சொத்தான சங்கரர்வி சாரிக்க , -அத்தா
மலகனவன் வாக்கில் மலர்ந்தது கீதம்;
உலககுரு கொண்டார் உவப்பு”…..கிரேசி மோகன்….ஆதிசங்கரர் கேள்வி….
————————–“யார்நீ!, உனக்கிங்(கு) எவர்சொந்தம்!, போவதெங்கே!
பேரென்ன பிள்ளாய் பதிலெனக்கு, -கூறென்று
வித்தை வினவ , விருட்ஷமாய் எழுந்தது
அத்தா மலக அமுது”…..(1)அத்தாமலகர் பதில்…..
—————————-
“பால்வடியும் பிள்ளை பதிலாதி புங்கவர்க்கு,
“நால்வர்ணம், யக்ஷசுர மேல்வர்ணம், -போல்எவரும்
நானல்ல, இல்லறமோ நைஷ்டிகமோ ஞானியோ
நானல்ல, நானுணர்வே நான்”….(2)….“காரியமாய் பூமியைக் காத்திடும் காரண
சூரியன்போல், ஐம்பொறிக்கு சுத்தாத்ம-வீரியமே,
அன்னவரே நானதற்கு ஆகாயம் தானுவமை,
எண்ணவரு வோர்க்கு இருப்பு (OR ) எழுத்து”….
(OR)
எண்ணவரு வோர்க்கது ஏய்ப்பு”….
எண்ணவரும் ஏகாந்த மே”….(3)….“கனலும் கொதிப்புமாய் கட்டிக் கலந்தாற்போல்,
உணர்வுடன் ஆத்துமா ஒன்றி;-புணர்ந்திடும்,
சேதஅ சேதனங்கள் சார்ந்திருக்கும் அவ்வான்ம
நாதனே, என்றுமுள நான்”….(4)….“ஆடியில் பிம்பமது ஆளுள்ள மட்டுமே
ஜோடியாய் சேர்ந்தாலும் ஜீவனவன், -நாடிக்
கிடப்ப(து) உணர்வின் கிளரொளியை நம்பி,
தொடர்ந்தொளிர்அவ் வான்மாநான் தான்”….(5)….“முன்னாடி பார்த்த முகம்மட் டுமிருக்கும் –
கண்ணாடி பிம்பங்கள் காட்சிப்பொய் -உன்னாடை –
மேனி ,தனித்தன்மை ,மாயை அதுபோல –
ஞானி உணர்வான்மன் ஞான் “….(6)….“எண்ணும் மனதை இயக்கும் மனம்யார் ! –
கண்ணுக்குப் பின்னிருந்து காண்கின்ற -கண்ணன்யார் !-
கண்மனம் காணாத கம்பீ ரவுணர்வாம்,
நன்மையா னந்தமே நான்’’ ….(7)….“கணக்கற்ற பிம்பம் குடநீரில், ஆனால்,
உனக்குற்ற சூரியனோ ஒன்று; -மனக்குற்றம்,
ஒன்றைப் பலவாய் உடைத்தல், உணர்விலே,
நின்றென்றும் நீங்காதோன் நான்”….(8)….’’அருக்கன் இருக்க அனைத்தும் தெரியும்,
கருக்கல் வருங்கால் காணா(து) -இருக்கும்காண்,
சூரியர்க்கும், கண்ணுக்கும் ஜோதி கொடுக்கும்நான்,
பேரியக்க ஆன்மவொளி பார்’’….(9)….’’காட்சியொரே காலத்தில் காண்போர் அனைவர்க்கும்,
தீட்ஷண்ய மாக்கும் திவாகரனின் -மாட்சிமைபோல்,
பட்டுப் பலர்புத்தி பேரொளி வீசிடும்
நிட்டைப் பரபிருமம் நான்’’….(10)….”ஏகபிம்ப பானு எழுச்சியிலாத் தண்ணீரில்,
ஏகமாய் பிம்பங்கள் ஏற்றிடும் -வேகநீர்,
ஆசையின் வேகத்தில் அவ்வான்மா ஜீவன்கள்,
வாசனை நீங்கவொளி வீச்சு’’….(11)….”மார்த்தாண்டன் சூரியனை மேக அறியாமை
போர்த்தாண்டு கொள்ளும் படுபாவி, -தீர்த்தாண்ட
வர்க்கு ஒளியாய் வெளிவரும் ஆன்மனாய்
நிற்கும் நிரந்தரம் நான்’’….(12)….’’யாதுமாய் நின்றாலும், ஏதும் அதைத்தொடாது,
ஆதவனே ஒட்டாத ஆகாசமாய், -ஈதுணர்ந்து,
எப்போதும் ஆன்மனாய் எங்கும் நிலைத்தபடி
நிற்போனே நிர்மல நான்’’….(13)….“செய்யும் முறையால் ஸ்படிக நிறம்மாறும்,
அய்யவுன் புத்தியும் அஃதேபோல், -பெய்யும்,
மதிபிம்பம் ஆடும் நதிநீரில், ஆன்மப்
ப்ரதிம்பம் உன்னாட்டம் போல்”….(14)….
(சுபம்)
(முடிவு)
(மங்களம்)
—————————————————————————————————————— -
INDIA/ V – Stone, water, birds and beasts
கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
ஆங்கில மூலம் : பங்கஜ் என்.மோகன்
தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி
கல், நீர், பறவைகள், மிருகங்கள்கல், நீர், பறவைகள், மிருகங்கள்
மற்றும் மக்களும் கூட
இம்மண்ணில் தகிக்கும் கோடை வெப்பத்தில் வாடுகிறார்கள்.இருப்பினும் தீவிர பதட்டம், தேவையற்ற கவலைகள்
மற்றும் சீற்றமும் கூட
அனைத்தும் வெகுகாலம் முன்பே ஆழங்காணவியலாத
இம்மண்ணின் ஆழத்தில் புதையுண்டிருக்கிறது.மரங்கள் வண்ணவண்ண மலர்களையும் தீஞ்சுவைக் கனிகளையும்
விளைவித்து பசுமையான இலைகளால் ஆடைசூடி உயர் வானையும் முத்தமிடுகின்றன.கனிகள் கனிந்தும் மொட்டுகள் மலர்ந்தும்
பறவைகள் பறந்தும் மிருகங்கள் ஓடியாடியும்
மற்றும் இதே எளிமையுடனும் தன்னிச்சையுடனும்
மக்கள் இம்மண்ணிலேயே வாழ்ந்து மரிக்கிறார்கள். -
படக்கவிதைப் போட்டி 118-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
திரு. சிவராஜன் தண்டபாணியின் கைவண்ணத்தில் இயற்கை அழகின் சிரிப்பைப் புகைப்படத்தில் காண்கின்றோம். படக்கவிதைப் போட்டிக்கு இப்படத்தைத் தேர்வு செய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி உரித்தாகின்றது.
”விரிந்த வானே வெளியே – எங்கும்
-விளைந்த பொருளின் முதலே
திரிந்த காற்றும் புனலும் – மண்ணும்
-செந்தீ யாவும் தந்தோய்
தெரிந்த கதிரும் நிலவும் – பலவாச்
-செறிந்த உலகின் வித்தே
புரிந்த உன்றன் செயல்கள் – எல்லாம்
-புதுமை புதுமை புதுமை!” என்று இயற்கையை வியப்பார் புதுவைப் புயலான பாவேந்தர்.கைபுனைந்தியற்றா இந்தக் கவின்பெறு வனப்பைக் காணுந்தொறும் காணுந்தொறும் பாமரனும் பண்டிதனாவான்; கல்லாதவனும் சொல்மாலை தொடுக்கும் அருங்கவியாவான். இயற்கை செய்யும் செப்படிவித்தை அப்படி!
இனி, இவ்வாரப் போட்டிக்குக் கவிஞர்கள் அனுப்பியிருக்கும் பாமாலைகளைப் படித்தின்புறுவோம் வாருங்கள்!
***
தொடுவானம் கடந்து புத்துலகம் கண்ட கொலம்பஸின் சாதனையைப் போற்றியிருப்பதோடு, அச்சத்தைத் துச்சமெனத் தூக்கியெறிந்து புதுமைகள் புரிவதே அறிவியல் நெறி என்று தன் கவிதையை முத்தாய்ப்பாய்த் முடித்திருக்கின்றார் அறிவியல் கவிஞர் திரு. சி. ஜெயபாரதன்.
தொடுவானம்
தொடுவானைத் தாண்டினால்
தொப்பென வீழ்வோம்
என்று சொப்பனம் கண்டோம்!
செல்லாதே என்று
சிவப்புக் கொடி காட்டும்
செங்கதிரோன்!
தங்கப் பேராசை கொண்டு
இந்தியாவுக்கு
புதிய கடல் மார்க்கம் தேடி
அஞ்சாமல் மீறிச் சென்றவர்
கொலம்பஸ்!
புத்துலகு, பொன்னுலகு
அமெரிக்கா கண்டு பிடிக்க
வழி வகுத்தார்!
தொடுவானம் தாண்டிப் பயணித்து
துவங்கிய இடம் வந்தார்!
உலகம் தட்டை இல்லை
உருண்டை எனக் கண்டார்!
அச்ச மின்றி, அயர்வு மின்றி
உச்சி மீது வான் இடிந்தும்
முன் வைத்த காலைப்
பின்வாங்காது,
முன்னேறு வதுதான்
முதிர்ச்சி நெறி !
புதியவை கண்டுபிடிக்க
மனித இனத்துக்கு
உறுதி விதி!***
”சோம்பலைச் சாம்பலாக்கு! உறக்கத்தை இறக்கச்செய்! பகலவன் காட்டும் பாதையில் பயணத்தைத் தொடர்! செல்வத்திருநகரில் சேர்வாய் இன்றே!” எனும் தன்னம்பிக்கை வரிகளால் தன் கவிதையை வளப்படுத்தியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
இன்றே நன்று…
கதிரவன் எழுந்து
காட்டுகிறது வழி-
உறங்கிக் கிடக்காதே
உழைத்திடு உழைத்திடு,
உனைத்தொடும் வெற்றி!வெளிச்சத்தில் பார்த்திடு
வையத்தின் வனப்பை,
வேறு சிந்தனைகள்
வேண்டாம் மனத்தில்!பயண வழித்தடத்தில்
பலதும் பார்க்கலாம்-
இன்பப் பூக்களாய்,
இன்னல் தடைகளாய்…பார்த்துக்கொண்டே
பயணத்தைத் தொடர்,
சேர்த்துவிடும் உன்னை
வெற்றியாம்
செல்வத் திருநகரில்..இன்றே நன்று,
இனிதாய்த் தொடர்ந்திடு பயணத்தை…!***
‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர். செக்கர் வானத்தில் மின்னும் செங்கதிரோனை விளித்து, ‘நீயின்றி அமையாது உலகு’ என்று வியக்கும் கவிஞர் பெருவை திரு. பார்த்தசாரதி, ”காலமாற்றத்தின் காவல் தலைவா! உன் சிவப்புக்குக் காரணம் வெட்கமா இல்லை கோபமா” என்று வினாத் தொடுக்கிறார்.
செக்கர் கதிரவன்!
நீயின்றி அமையாது உலகு..!
நீவாராது இவ்வையகம் எழாது.!விண்ணிலே விந்தையாய்த் தோன்றி
மண்ணுயிரை உன்கதிரால் வாழவைப்பாய்.!மேலைக்கடல் நடுவில் மறையும்
காலமாற்றத்தின் காவல் தலைவா..!உன்விழி மூடினால் உலகமிருளும்.!
உனக்கும் நித்திரை தேவைதானே.!சிலநிமிட வாழ்க்கையில் பூக்கள்
சிரித்துக் கொண்டே வழியனுப்பத்தலைக்கன மில்லாச் செடிகளெலாம்
தன்தலை வணங்கி வாழ்த்த..சற்றுமுன் சாந்தமாகத் தோன்றினாய்..
வெறுப்பில் இப்போது செக்கரானாயோ..?யாருனைத் திட்டியது!. நீ
விலகிப் போகும் பாதை
உலகில் விரிவாய்த் தெரிகிறதுகாலைமுதல் மாலை வரைக்
கண்ணில் கண்டவரைச் சுட்டெரித்தாய்..யாருனைச் சாந்தப்படுத்தியது!..
அந்தி சாயுமுன் காதலி
சந்திரனைக் கண்டவுடன்கோபமா?..அல்லது வெட்கமா..?
உன்னுதடு மட்டுமல்ல…முகம்
முழுதும் முழுச் சிவப்பானதோ!..***
இயற்கை எழிலில் ஈடுபட்டு மனங்கவர் கவிமாலை தொடுத்திருக்கும் புலவர் தோழர்களுக்கு என் பாராட்டுக்கள் உரித்தாகுக!
***
புகைப்படங் காட்டும் தடத்தில் பயணித்துச் சில்லெனுங் கற்பனைகளோடு, சுள்ளெனச் சுடும் நிசங்களையும் இணைத்தே பிணைத்திருக்கும் கவிதை ஒன்று!
இது போல ஒரு சாலை கிடைக்குமா நடக்க!
நீண்ட சாலை,
நெடுந்தூர நடைபயணம்,
இரு புறமும் மலர்கள்,
அதன் அழகான தென்றல் காற்று!
கால் வலித்தாலும் நடக்க தூண்டும் மனம்,
சாலையின் முடிவில் கடல்,
அந்த காலை கதிரவனின் ஒளிபட்டு எங்கும்
சிதறிக் கடல் நீரே பட்டாடை போல மிளிரும் அழகு!
அதனிடையில் நான்!இது போல் ஒரு தருணம் இனி கிடைக்குமா!
இல்லை
இது போல் ஒரு சாலைதான் இனி கிடைக்குமா!இரு புறமும் பச்சைப் புல்வெளிகள், நடுவினில்
வயல் பாடங்களில் நடக்கும் சுகம்தான் கிடைக்குமா
இனி!
வலம்புரி, இடம்புரிச் சங்கு போல
வலப்பக்கம் சாய்வோமா
இடப்பக்கம் சாய்வோமா, அந்த
வயல்களின் காற்றுப் பட்டு!
ஊகிக்க முடியாத அனுபவம்
நெற்கதிர்கள் ஒன்றையொன்று உரசும்
ஓசைதான் இனிக் கிடைக்குமா!
காலைக்கதிரவனின் ஒளிபட்டு
மின்னும் தங்க நிற,
சோளக் கதிர்களைத்தான் காண முடியுமா இனி!
வயல்களின் முடிவில் உள்ள,
குளக்கரையைத்தான் பார்க்க முடியுமா இனி!
அதன் நடுவில் நின்று
அத்தனையும் ரசிக்கும் காட்சி இனி கிடைக்குமா!
நமக்கு!கிடைக்கும் நமக்கு.
கிடைக்கும் நமக்குநடுவில் தார்ச்சாலைகள்
இருபுறமும் கட்டிடங்கள்
காணக் கிடைக்கும்!
இங்கும் அது போல ஒரு வாய்ப்பு உண்டு
வலப்பக்கம் சாய்வோமா
இடப்பக்கம் சாய்வோமா என்று – சாக்கடைக் கழிவுகள்!
சாலையின் முடிவில் நீரோட்டங்கள்
தண்ணீர்க் குழாய் சண்டை!
தெருவெங்கும் மின்னுகிறது
தங்கமும் வெள்ளியுமாய், அதன் எதிர்ப்புறம்
பிச்சை எடுக்கிறான் என் சக மனிதன்!நான் நடுவில் நிற்கின்றேன்
பார்த்துக் கொண்டல்ல
அது போல ஒரு சாலை கிடைக்குமா!
இனி என்று!வயல் பாடங்கள்,
நெற்கதிர்கள்,
பச்சைப் புல்வெளிகள்,
பாடப்புத்தகத்தில்.குளக்கரைச் சோறு,
மர நிழல்
ஹோட்டலில்.மலர்களை வருடும் தென்றலையும், சோளக்கதிர்களைச் சொலிக்க வைக்கும் கதிரவனையும், பாதையின் முடிவில் பரந்துவிரிந்திருக்கும் நீர்நிலையையும் படத்திலும் பாடப்புத்தகத்திலுமே இனி நாம் காணமுடியும். இயற்கை வனப்பை அழித்துச் செயற்கை இன்பங்களில் மனிதன் இன்று சுகங்காணத் தொடங்கிவிட்டான். இதேநிலை நீடித்தால் அழகின் சிரிப்பை நாம் அகங்குளிரக் காணவியலாது. அழிவுலகின் வாயிலே ஆனந்தப் புன்னகையோடு நம்மை வரவேற்கும்!
இயற்கையை நாம் பேணிக்காக்கத் தவறிவருவதைத் தன் கவிதையில் சிறப்பாய்ச் சுட்டியிருக்கும் திரு. கா. முருகேசன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகின்றார். அவருக்கு என் பாராட்டு!
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
Lakshmi blesses Sudama….!
———————————————————————————–
”கனகதாரா லஷ்மி குசேலருக்கு செல்வம்
தனையுகந்து கட்டித் தழுவி -தன(து)ஆதார
கேள்வனின்(கணவர் -கண்ணன்) சார்பாய் குசேலரைச் சூழ்ந்துள்ள
கோள்வினை(கிரகதோஷம்) நீக்குகிறாள் காண்’’….கிரேசி மோகன்….!
குசேலர் -சுதாமர்….!
-
இந்த வார வல்லமையாளர்! (230)
செல்வன்
இவ்வார வல்லமையாளர் – சஹா நாதன்
சஹா நாதன் அமெரிக்காவில் உள்ள சியாட்டில் மாநகரில் வசிக்கும் புலம் பெயர் தமிழர். ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். விண் டிவி, தூர்தர்ஷன், மெரினா ரேடியோ, தமிழ்குஷி டாட்காம் ரேடியோ ஆகியவற்றில் அறிவிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இவரது விருப்பத்துறைகள் ஆன்மிகம் மற்றும் சுயமுன்னேற்றம் ஆகியவை ஆகும். ரேடியோவில் “இன்று முதல் சக்ஸஸ்” மற்றும் “உன்னை அறிந்தால்” போன்ற சுயமுன்னேற்ற ஒலிபரப்பு தொடர்களை வழங்கி வந்தார்.
இந்த சூழலில் சென்னையில் “பிரைவேட் ஜாப்ஸ்” எனும் உள்ளூர் செய்தித்தாளில் கட்டுரைத்தொடர் ஒன்று எழுதிவந்தார். அதைப்படித்த கல்கண்டு இதழ் ஆசிரியர் திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் அதை நூலாக வெளியிட இவரை ஊக்குவித்தார். அவரை தன் குருவாக ஏற்ற சஹாநாதன் அதை நூலாக வெளியிட்டார். நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட எஸ்.ஆர்.எம் பல்கலைகழக நிறுவனர் பச்சைமுத்து அந்த நூலின் பிரதிகள் அனைத்தையும் வாங்கி தன் பள்ளி, கல்லூரி நூலகங்கள், மாணவர்களுக்கு வழங்கினார்.
இந்த சூழலில் அமெரிக்காவுக்கு புலம்பெயரும் வாய்ப்பு கிட்டியது. அதன்பின்னும் தமிழ் மண்ணுடன் தனக்குள்ள தொடர்புகளை யுடியூப் சானல் ஒன்றை துவக்கி அங்கே தன் சுயமுன்னேற்ற மற்றும் ஆன்மிக கருத்துக்களை விடியோ பதிவுகளாக வழங்கி வருகிறார்.
இதுவரை இவரது ஏழு நூல்கள் வெளிவந்துள்ளன. லக்ச்மண் ஸ்ருதியிடம் தன் மனிதாபிமான சேவைக்காக விருதுகளும் பெற்றுள்ளார்.
இந்த வாரம் இவரது “The Golden key for wellness” எனும் நூல் மணிமேகலை பிரசுரம் சார்பில் வெளியாகிறது. சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன சி.டி.ஓ கல் இராமன் தலைமை தாங்கி இந்நூலை வெளியிடுகிறார். மணிமேகலை பிரசுரம் எம்.டி ரவி தமிழ்வாணன் கலந்து கொள்கிறார்.

இந்த நூலின் வெற்றிக்கு நடிகை ரோகிணி உள்ளிட்ட பலரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ள நிலையில், தமிழக மக்களின் சுயமுன்னேற்றத்துக்கு பாடுபடும் ஆசிரியர் சஹாநாதனை வாழ்த்தி அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.
இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179
-
படக்கவிதைப் போட்டி (119)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

அனிதா சத்யம் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (15.07.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
-
இயங்கிநிற்கும் பிரம்மா !
( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )
படைக்கின்ற பிரம்மாவை நாம்பார்த்த தில்லை
படைப்பதனை பார்த்துவிட்டு வியப்படைந்து நிற்போம்
படைக்கின்ற பிரம்மாவும் அவர்படைப்பும் கண்முன்
பார்க்கின்ற பாக்கியத்தைப் பார்மீது காண்போம் !
எழுத்தாளர் இவ்வுலகின் இயங்கிநிற்கும் பிரம்மா
எழுத்தாலே இவ்வுலகை அவர் ஆளுகின்றார்
எழுத்தாலே எத்தனையோ எமக்களித்து நிற்கும்
எழுத்தாளர் எல்லாமே இறைவனது வரமே !
கல்லுக்குள் கலைநயத்தைக் காட்டுகிறான் சிற்பி
சொல்லுக்குள் ஆயிரத்தைத் தீட்டுகிறான் எழுத்தன்
நல்லவற்றைத் தீயவற்றை நாட்டுக்கு உரைக்கும்
வல்லமையை எழுத்தாளன் வாங்கிவந்து உள்ளான் !
வாழ்க்கையினை மாற்றுகின்ற எழுத்தாளர் தம்மை
வானவரும் போற்றிடுவார் மனமார நாளும்
வாழ்வினுக்கு ஏற்காமல் எழுதிநிற்பார் ஆகின்
வாழ்க்கையிலே நரகமதை அடைந்திடுவார் விரைவில் !
கம்பனெனும் எழுத்தாளன் கைபட்ட தமிழும்
கவிகாள மேகமது கைபட்ட தமிழும்
நம்ஐயன் வள்ளுவனார் நமக்களித்த தமிழும்
நாளுமே எம்வாழ்வில் நல்லதுணை அன்றோ !
சங்கத்தமிழ் எழுத்தாளர் சபையேறி நின்று
இங்கிதமாய் எமக்களித்த இலக்கியதைப் பார்க்கின்
எங்களது எழுத்தாளர் இவ்வுலகில் என்றும்
இறவாத வரம்பெற்று வாழ்கிறார் என்போம் !
வாழுகின்ற வாழ்நாளை வசந்தமுள தாக்கி
வருங்காலம் எம்வாழ்வில் விடிவு வருமென்று
கூறுகின்ற துணிவுதரும் எழுத்தாலே எம்மை
குதூகலத்தில் குளிக்கவைப்பர் எழுத்தாளர் அன்றோ !
வறுமைதனில் இருந்தாலும் பொறுமையுடன் எழுதி
வையகத்தார் மனங்களிலே மலர்ச்சிவர உதவி
தலைநிமிர்ந்து நிற்கின்ற தன்மையினை உடைய
தகவுடைய எழுத்தாளர் தமைப்போற்றி நிற்போம் !
-
நலம் .. நலமறிய ஆவல் (63)
நிர்மலா ராகவன்
அழுமூஞ்சியும் சிரித்த முகமும்
புதிது புதிதாக எதையாவது செய்ய முற்படும்போது ஆர்வமும் பயமும் ஒருங்கே எழலாம். எதையும் புரிந்துகொண்டால் பயம் போய்விடும். எளிதான காரியம் ஒன்றை எவர் வேண்டுமானாலும் செய்யலாம்.
பிறர் செய்யத் தயங்கும் காரியத்தில் துணிச்சலுடன், ஆனால் தகுந்த பாதுகாப்புடன், இறங்குவதுதான் மகிழ்ச்சியைத் தரும். தன்னம்பிக்கையையும் வளர்க்கும்.
யாரோ துணிச்சலாக எதையோ செய்வதைப் பார்த்து, `எனக்கு எதற்கும் பயம் கிடையாது!’ என்று அபாயகரமான ஒரு காரியத்தில் ஈடுபடுவது மடத்தனம்.
நான்தான் தெனாலி — எல்லாவற்றிற்கும் பயம்
“நான் பெரிய பயந்தாங்கொள்ளி! கல்லூரியில் கடலுக்கு அடியில் நீச்சலடிக்கும் பாடத்தை (Ocean Archaeology) எடுத்துக்கொண்டேன். அதற்கு முன்னர் சுமாராக நீச்சல் தெரியும். அவ்வளவுதான். இரண்டு பயிற்சியாளர்களுடன் நள்ளிரவில் பயிற்சி எடுக்க வேண்டும். முதலில் நடுக்கமாக இருந்தாலும், போகப் போக பயம் போய்விட்டது. உற்சாகமாக அப்பயிற்சியை எதிர்நோக்க ஆரம்பித்தேன்!”
இப்போது, குடும்பத்துடன் படகில் போகும்போது, கடலில் குதிக்கிறாள் இப்பெண். பிறருக்கு மூச்சு நின்றுவிடுவது போலிருந்தாலும், இவள் முகத்தில் என்னவோ பூரிப்புதான்.
மேலே இருக்கும் கதையில், `இரண்டு பயிற்சியாளர்கள்’ என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். தனியாகப் போயிருந்தால், இன்று தன் வெற்றிக்கதையைச் சொல்லிச் சிரிக்க அவள் இருக்கமாட்டாள்.
எப்போதும் சிரித்த முகம்
`நீ நிறையப்பேரை பகைத்துக்கொள்கிறாய்!’
ஒரு முறை இப்படிக் கண்டனம் செய்யப்பட்டவர்கள் மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டு, பிறரை மகிழ்விக்க முயலுவார்கள். அப்படிச் செய்வதால் அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதோ, இல்லையோ, எப்போதும் சிரித்த முகத்துடனே வளைய வருவார்கள்.
பிறருக்காக ஒருவர் நடிக்கும்போது, தன் இயல்பான குணங்களை விட்டுக்கொடுக்கிறார். அதனால்தான் அவருக்கே புரியாத ஏதோ வெறுமை.
மற்றவர்கள் எப்படியோ போகட்டும். வெளிப்படையாகப் பகைத்துக்கொள்ள வேண்டாம். ஆனால், அவர்கள் சொல்வதில் உண்மை இருக்குமோ என்ற குழப்பம் அநாவசியம். அவர்களை மாற்ற முயல்வதும் வீண் முயற்சி. நம்மை நல்ல விதத்தில் மாற்றிக் கொண்டாலாவது நன்மை பிறக்கும்.
போடு பழியை, பிறர்மேல்
பலருக்கும் மாற்றம் என்றால் பயம். `நம்மை அறியாமலேயே ஏதேதோ நிகழ்கிறதே, நாம் வேறு வாழ்க்கையை இன்னும் குழப்பிக்கொள்ள வேண்டுமா?’ என்று ஒரே நிலையில் இருப்பார்கள்.
`விதி!’ `ஜோசியர் சொல்லி இருக்கிறார், எனக்கு இப்போது போதாத காலமாம்!’ என்று எவர் மேலாவது பழி போட்டு, தம் வாழ்வில் நடப்பது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், உற்சாகம் என்னவோ கிடையாது.
நம் வாழ்க்கையில் எதிர்ப்படும் சம்பவங்களால் நாம் மாறலாம். ஆனால் அவை நம்மைத் தாழ்த்த விடக்கூடாது.
நண்பர்கள்போல் நடித்துக் குழி பறிப்பவர்களிடமிருந்து பயந்து ஓடினால், ஓடிக்கொண்டேதான் இருக்க வேண்டும். அவர்களைச் சொல்லாலோ, செயலாலோ அடிப்பதால் நம் பலம் பெருகிவிடப் போவதுமில்லை.
தனிமை எப்போதும் இனிமையா?
எப்போதும் பிறருடன் சேர்ந்தே இருந்தால், ஒருவர் மற்றொருவரைக் கட்டுப்படுத்துவதைத் தவிர்க்க முடியாது. நாளடைவில் எரிச்சல்தான் உண்டாகும். அவ்வப்போது பிரிந்திருப்பதே நல்லது. (மனைவி அவ்வப்போது தன் பிறந்தகத்துக்குப் போய்விட்டுத் திரும்பும்போது, கணவனின் அன்பு கூடியிருக்கும்போலத் தோன்றுவது இதனால்தான்!)
தனியாக, ஆனால் ஆக்ககரமான சிந்தனைகளுடன் இருப்பவர்களே சாதிக்க முடியும்.
`நான் எப்போதும் தனிமையை விரும்புகிறவன்!’ என்று தன் நேரத்தை குருட்டுத்தனமான யோசனைகளிலும், எதிர்காலத்தைப்பற்றிய கனவுகளிலும் நிறைத்துக்கொள்பவர்கள் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறார்கள். இவர்களது அன்றாட வாழ்க்கையில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் மனமுடைந்து போய்விடுவார்கள். ஒன்றுமில்லாத விஷயத்துக்காக ஒரேயடியாகப் பூரித்து, அதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். பின், வாழ்க்கையில் சாதிப்பது எப்படி?
“வேகமாகச் செல்ல தனியாகப் போ. நெடுந்தொலைவு செல்ல பிறருடன் சேர்ந்துகொள்!” (ஆப்பிரிக்கப் பழமொழி)
அக்கண்டத்தில் கொடிய மிருகங்கள் உண்டு. பாலைவனங்களில் தண்ணீர் கிடைப்பது அரிது. அதனால், பிறருடன் சேர்ந்து போவது அபாயங்களைத் தவிர்க்க உதவலாம்.
அதற்காக, மாராதான் (Marathon) ஓட்டப்பந்தயத்தில் பிறருடன் இணைந்து செல்லவா முடியும்?
நீதி: சிலருக்குச் சரியென்று படுவது எல்லாருக்கும் ஏற்றதாகாது.
அழுமூஞ்சிகள்
கதை
“நான் பட்டப் படிப்பு படித்துத்தான் தீர்வேன் என்று வீட்டில் சண்டைபோட்டு, கல்லூரியில் சேர்ந்தேன். இப்போது ஏன்தான் இவ்வளவு படிக்க வேண்டுமோ என்று எரிச்சலாக இருக்கிறது. எப்படி பாஸ் பண்ணப்போகிறோம் என்று பயமாக இருக்கிறது!” என்று ஓயாமல் அரற்றுவாள் என்னுடன் படித்த ஒருத்தி.
எட்டாம் வகுப்புவரை பாடங்கள் தமிழில் இருந்தபோது, எல்லாவற்றிலும் பரிசுகள் வாங்கியவளுக்கு அதற்கடுத்த ஆண்டிலிருந்து ஆங்கிலத்தில் படிக்க நேரிட்டபோது சிறப்பான தேர்ச்சி அடைய முடியவில்லை.
கடுமையாக உழைப்பதைவிட புலம்புவது எளிது. இத்தகையவர்களின் `அழுகை’யைக் காதில் வாங்காமல் இருந்தால் பிழைத்தோம். இல்லாவிட்டால், நமக்கும் `இவள் சொல்வது சரிதான்!’ என்று தோன்ற, தளர்ச்சி அடைந்துவிடுவோம்.
இத்தகையவர்கள் சுமாரான வெற்றி அடைந்துவிட்டு, அதன்பின் தோல்வி அடைபவர்களாக இருக்கக்கூடும். தம்மைப்போல் இல்லாது, வெற்றிமேல் வெற்றி பெறுபவர்களை வீழ்த்த நினைப்பார்கள், தம்மையும் அறியாது.
சவாலா? ஹையா!
நமக்காகவே யார் நம்மை ஏற்கிறார்களோ, அவர்கள்தாம் உண்மையான நண்பர்கள். இவர்களே நம் திறமைகளை வெளிக்கொணர உதவுபவர்கள்.
`எல்லாவற்றையும் யார் யாரோ செய்துவிட்டார்களே! இனி என்ன இருக்கிறது!’ என்ற நம்பிக்கையின்மையை ஒழித்துக் கட்டிவிட்டு, இப்போது இருக்கும் சவால்களை, சந்தர்ப்பங்களை, நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டால் புதிய விஷயங்களில் நம் கவனம் செல்லும். விடாமுயற்சியால் எதையாவது செய்யலாம்.
நான் இணையத்தில் இணைந்த கதை
சில வருடங்களுக்குமுன் பெட்டி பெட்டியாக இருந்த எனது கதைகளையும், புதினங்களையும் பார்த்தபோது, வருத்தமாக இருந்தது. எல்லாமே ஒருமுறை பிரசுரம் கண்டவை. தோள் வலிக்க, இரவு பகலாக பேனாவால் காகிதத்தில் எழுதியவை. அடித்துத் திருத்தியதால், பல தடவை எழுத வேண்டியிருந்தது. ஆதாயம் இல்லாவிட்டாலும், எழுதும்போதே புத்துணர்வு எழ, விடாது எழுதினேன். ஆனால் எனக்குப்பின் அனைத்துமே உபயோகமற்றுப்போய்விடுமே!
அப்போது N. கண்ணன் என்ற அன்பர் நல்லதொரு வழியைக் காட்டினார்: `இணையதளத்தில் எழுதுங்களேன்!’
ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் மிரண்டு போனேன்.
ஓருங்குறியா? அப்படியென்றால்?
தட்டச்சு என்றால் டைப் செய்வதா!
பலர் உதவிக்கரம் நீட்டினார்கள். குறிப்பாக, தேமொழி. வெவ்வேறு தளங்களையும் அறிமுகப்படுத்தியவர்.
கணினி அரிச்சுவடிகூட அறியாதிருந்த நான் இப்போது, “இண்டர்நெட்டில் எழுதுகிறேன்!” என்று சொல்லிக்கொள்ள முடிகிறது. பெருமையாக, எல்லாரிடமும் அல்ல — `உங்கள் எழுத்துக்களை பத்திரிகைகளில் பார்க்கவே முடிவதில்லையே!” என்பவர்களிடம் மட்டும்.
இப்போது உலகெங்கும் வாழும் தமிழர்களில் 13,500 வாசகர்கள் “பள்ளியினூடே ஒரு பயணம்” என்ற என் ஒரு நாவலைப் பதிவிறக்கம் செய்துள்ளார்கள், நகைச்சுவை புதினமாகிய “பெண்களோ பெண்கள்” பத்தாயிரம் வாசகர்களுக்குமேல் எட்டியுள்ளது என்றெல்லாம் அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
வாழ்க்கையில் நாம் சந்திக்கும், நமக்கு அறிமுகம் ஆகும் எல்லாருமே பொறாமை பிடித்து, நம்மை வீழ்த்தும் எண்ணம் கொண்டவர்களாக இல்லை என்ற உண்மை பெருமகிழ்ச்சியுடன் நிறைவையும் அளிக்கிறது.
தொடருவோம்
-
கற்றல் ஒரு ஆற்றல் (85)
க. பாலசுப்பிரமணியன்
கற்றலைக் காட்டும் வரைபடங்கள் (Learning Curves)
கற்றலைப் பற்றிய ஆராய்ச்சிகள் மூலம் நமக்குத் தெரிவது என்னவென்றால் “கற்றல் தொடர்ச்சியாக நிகழும் செயல்.” பல நேரங்களில் அது நமக்கு வெளிப்படையாகத் தெரியும் வகையில் நடக்கின்றது. பல நேரங்களில் நமக்கு அறியாமலேயே அது நடந்து கொண்டிருக்கின்றது. இதன் தாக்கங்கள் நமக்கு சில நேரங்களில் புலப்படுகின்றன.சில நேரங்களில் அதன் தாக்கங்கள் மறைந்து உள்நிற்பதால் அது நமக்குப் புலப்படுவதில்லை ஆகவே இவ்வாறு வெளிப்படையாக நமக்குப் புலப்படாத தாக்கங்களை அறிந்துகொள்ள முயற்சி அதிகம் தேவைப் படுகின்றது .
கற்றலை ஒரு தனி நபரின் விருப்பு வெறுப்புக்கள், வாழ்க்கை குறிக்கோள்கள். குடும்பச் சூழ்நிலைகள். பொருளாதார நிலைகள் போன்ற பல தாக்கங்கள் பாதிப்பதால் அது செழுமைப்பட்டோ அல்லது வளமையின்றியோ இருப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் வாழ்க்கையின் எந்த ஒரு நிலையிலும் சூழ்நிலைகளையும் அல்லது தாக்கங்களையும் மாற்றி கற்றலை வளப்படுத்த, மேம்படுத்த, செம்மைப்படுத்த முடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட காரணங்களால் ஒரு மாணவனின் கற்றலின் வேகம், (speed of learning) ஆழம்.(depth of learning) ஈடுபாடு,((commitment) வளமை (richness) மற்றும் மேன்மை இன்னொரு மாணவனிடமிருந்து மாறுபட்டிருக்கும். இந்த நிலை ஒரு குடும்பத்தைச் சார்ந்த இரு குழந்தைகளுக்கும் மாறுபட்டிருக்க வாய்ப்புக்கள் உண்டு. ஆகவே இரு மாணவ மாணவிகளின் கற்கும் திறனையும், கற்றலின் ஈடுபாடுகளையும், கற்றல் வளத்தையும் ஒப்பிடுதல் விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே, ஒவ்வொரு தனி மாணவனின் கற்றலின் போக்கைக் காட்டும் வரைபடங்கள் (Learning Curve) தனித்தனியாக கவனிக்கப்பட்டு அதற்கான சரியான உத்திகளை முன்வைத்தல் அவசியமாகின்றது
ஒரு தனி மாணவனின் கற்றலை வெளிப்படுத்தும் வரைபடம் அந்த மாணவனின் உடல், உள்ள வளர்ச்சி, மன நலம், சுற்றுச்சூழல் ஆகிய பல காரணங்களால் சில நேரங்களில் குறுகிய காலத்தில் பாதிப்புக்களுக்கு உட்பட்டு கற்றலில் ஒரு வறுமையான போக்கைக் (Inadequacy of Learning) காட்டலாம். ஆனால் சூழ்நிலைகள் மாறும்பொழுது இந்தக் குறைபாடுகள் நீங்கி வளர்ச்சியையும் செழுமையும் காட்டும். அது மட்டுமல்ல, இப்படிப்பட்ட கற்றல் வரைபடங்கள் ஒவ்வொரு தனி பாடத்திட்டத்திருக்கும் மாறுபட்டிருக்க வாய்ப்புக்கள் உண்டு. எனவே ஒரு சில பாடங்களில் ஒரு மாணவனின் கற்றல் திறனின் மேம்பாட்டையும் ஒரு சில பாடங்களில் பிற்போக்கான நிலையையும் வெளிப்படுத்த வாய்ப்புக்கள் உண்டு. எனவே, ஒரு மாணவனின் கற்றல் திறனையும் கற்றலில் வல்லமையையும் ஏதாவது ஒரு வரைப்படத்தை (learning curve) முன்னிறுத்தி கணித்தல் தவறான கணிப்புக்களைக் கொடுக்கும். எனவே ஒரு மாணவனின் கற்றல் திறன்களை ஆராயும் பொழுது பொது கணிப்புக்களைத் தவிர்த்து குறிப்பிட்ட துறையிலும் குறிப்பிட்ட திறனிலும் அவனது ஈடுபாடுகள், முயற்சிகள், முன்னேற்றங்கள் ஆகியவற்றை பரிசீலித்தல் அவசியமாகத் தென்படுகின்றது.
சில நேரங்களில் சிறப்பான கற்றல் திறன்களை வெளிப்படுத்தும் மாணவர்கள் வீடுகளில் ஏற்படும் துயரச் சம்பவங்கள் மற்றும் மன நலத்தை பாதிக்கும் சண்டை சச்சரவுகள், விரும்பத்தகாத நிகழ்வுகள் காரணமாக கவனச் சிதறல் (noncentral loss) மற்றும் மன அழுத்தங்கள் (Stress) ஏற்பட்டு தங்கள் கற்றலில் உள்ள ஈடுபாடுகள் மற்றும் ஆர்வங்களை இழந்து அதன் பலன்களை எதிர்நோக்கவும் வாய்ப்புக்கள் ஏற்படலாம். இந்த நிலைகளில் அவர்கள் மன நலத்தை சரிப்படுத்த தேவையான முயற்ச்சிகள் வீடுகளிலும் மற்றும் மனநல வல்லுநர்கள் துணையுடனும் எடுத்தல் அவசியம். இந்த பாதுப்புக்களை கவனிக்காமல் ஒதுக்கிவிட்டால் அவை நிலைப்பட்டு காலப்போக்கில் கற்றலின் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி ஒரு தாழ்வு மனப்பான்மைக்கும் வழிவகுக்கலாம் .
\பொதுவாக ஒரு தனி மனிதனின் கற்றலைக் குறிக்கும் வறைபாடுகள் (individual learning curves) காலப்போக்கில் மாற்றங்களைக் காண்பது நிதர்சனம். இந்த மாற்றங்களின் அடிப்படிக் காரங்களை அறைந்து அதற்குத் தகுந்த முயற்சிகள் எடுத்தால் அவர்களின் கற்றலின் தலையெழுத்தை மாற்றி எழுத முடியம். எனக்குத் தெரிந்த வரியில் பள்ளிக்கு காலங்களில் மிகச் சாதாரணமான வெற்றிப்படிகளிக்கூடாத தொடமுடியாத பல மாணவர்கள் பிற காலத்தில் கல்வியில் சான்றோர்களாக வளர்ந்ததையும். பள்ளிக்காலத்தில் மிகச் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்வடைந்தவர்கள் வாழ்க்கைப் பாதையில் தடுமாறியதையும் காண முடிந்திருக்கின்றது.
பல நேரங்களில் பள்ளிக்காலத்தில் கல்வி கற்கும் பொழுது ஏற்பட்டிருக்கும் தடங்கல்கள்,(Roadblocks) போராட்டங்கள் (challenges) ஆகியவற்றை தங்கள் வாழ்க்கைக்கு ஒரு முதலீடாக மாற்றி வெற்றியையும் சாதனைகளையும் படைத்தவர்களைக் கொண்டிருக்கின்றோம். அவர்களுடைய கற்றல் வெறும் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் கருத்துக்களை மட்டும் மூலதனமாகக் கொள்ளாமல் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களையும் மூலதனமாகக் கொண்டு முன்னேற்றத்திற்கு வழிவகுத்திருக்கின்றது. ஆகவே கல்வியாளர்கள் பாடத்திட்டத்தின் வரைமுறைகளை வகுக்கும்பொழுது வெளிப்படையான பாடத்திட்டம் (visible curriculum) என்றும் மறைமுகமான பாடத்திட்டம் (Hidden curriculum) என்றும் வகுத்து அதற்கான வரைமுறைகளையும் உள்ளீட்டுக்களையும் பதிவு செய்கின்றனர்.
இதை தொடர்ந்து அறியலாம்
(தொடரும் ).
-
குறளின் கதிர்களாய்…(174)
செண்பக ஜெகதீசன்
அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து
நல்விருந் தோம்புவா னில்.
–திருக்குறள் –84(விருந்தோம்பல்)
புதுக் கவிதையில்…
இன்முகம் காட்டி
நன்முறையில் உபசரித்தால்
விருந்தினரை,
அவன் வீட்டில்
பொன்முகம் காட்டி
திருமகள் வந்துறைவாள்-
பொருள் தரவே…!
குறும்பாவில்…
வருவிருந்தை உபசரித்தால் உவகையுடன்,
விரும்பி வந்துறைவாள் திருமகள்-
விருந்தாக அவன் வீட்டில்…!
மரபுக் கவிதையில்…
இனிய முகத்துடன் விருந்தினரை
இன்சொல் பேசியே உபசரிக்கும்
கனிந்த உள்ளம் கொண்டவன்தான்
குடிசை வீட்டில் வாழ்ந்தாலும்,
மனதில் ஆர்வம் பொங்கிடவே
மண்ணைப் பொன்னாய் மாற்றிவிடும்
தனத்துக் கரசி திருமகளும்
தானய் வருவாள் அங்குறையவே…!
லிமரைக்கூ..
விருந்தினரை உபசரித்தால் இன்முகத்துடன்,
விருப்பமொடு வந்துறைவாள் அவன்வீட்டில்
வளந்தரும் திருமகளும் நன்முகத்துடன்…!
கிராமிய பாணியில்…
ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்
விருந்தினர ஒபசரிக்கணும்,
வீடுவந்த விருந்தினர
விருப்பத்தோட ஒபசரிக்கணும்..
நாலுவார்த்த நல்லதாப்பேசி
நல்ல மொகத்தோட ஒபசரிக்கணும்..
நல்லபடியா ஒபசரிக்கிற
நல்லமனுசன் வீட்டுலதான்
எல்லா செல்வமும் தருகிறவ,
எங்களம்மா திருமகதான்
நல்ல மனசோட குடிவருவா..
அதால
ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்
விருந்தினர ஒபசரிக்கணும்,
வீடுவந்த விருந்தினர
விருப்பத்தோட ஒபசரிக்கணும்…!
-
குரு பஞ்சகம்
ஒருநோயும் அணுகாத உடல் ஆரோக்கியம்
ஓகோ எனப்புகழ் , ஒரு மேரு திரவியம்
குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(1)திருவொத்த மனையாள் திடமான பிள்ளைகள்
தங்கவோ மாளிகை தாயாதி உறவினர்
குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(2)மறை சாத்திரங்கள் முறையோடு பயின்றாய்
உரைநடை பாட்டதில் கரைகண்டு வென்றாய்
குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(3)அருகாமை அண்டை அசலூர் அனைத்திலும்
மருவிலா மதிப்புடன் மாசற்றிருப்பினும்
குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(4)ஈற்றடியில் ஈரேழு உலகாளும் மன்னர்கள்
போற்றிடப் புலமையில் ஆற்றல் இருப்பினும்
குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(5)….கிரேசி மோகன்….!
————————————————————————————






