இந்த வார வல்லமையாளர்! (230)
செல்வன்
இவ்வார வல்லமையாளர் – சஹா நாதன்
சஹா நாதன் அமெரிக்காவில் உள்ள சியாட்டில் மாநகரில் வசிக்கும் புலம் பெயர் தமிழர். ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். விண் டிவி, தூர்தர்ஷன், மெரினா ரேடியோ, தமிழ்குஷி டாட்காம் ரேடியோ ஆகியவற்றில் அறிவிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இவரது விருப்பத்துறைகள் ஆன்மிகம் மற்றும் சுயமுன்னேற்றம் ஆகியவை ஆகும். ரேடியோவில் “இன்று முதல் சக்ஸஸ்” மற்றும் “உன்னை அறிந்தால்” போன்ற சுயமுன்னேற்ற ஒலிபரப்பு தொடர்களை வழங்கி வந்தார்.
இந்த சூழலில் சென்னையில் “பிரைவேட் ஜாப்ஸ்” எனும் உள்ளூர் செய்தித்தாளில் கட்டுரைத்தொடர் ஒன்று எழுதிவந்தார். அதைப்படித்த கல்கண்டு இதழ் ஆசிரியர் திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் அதை நூலாக வெளியிட இவரை ஊக்குவித்தார். அவரை தன் குருவாக ஏற்ற சஹாநாதன் அதை நூலாக வெளியிட்டார். நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட எஸ்.ஆர்.எம் பல்கலைகழக நிறுவனர் பச்சைமுத்து அந்த நூலின் பிரதிகள் அனைத்தையும் வாங்கி தன் பள்ளி, கல்லூரி நூலகங்கள், மாணவர்களுக்கு வழங்கினார்.
இந்த சூழலில் அமெரிக்காவுக்கு புலம்பெயரும் வாய்ப்பு கிட்டியது. அதன்பின்னும் தமிழ் மண்ணுடன் தனக்குள்ள தொடர்புகளை யுடியூப் சானல் ஒன்றை துவக்கி அங்கே தன் சுயமுன்னேற்ற மற்றும் ஆன்மிக கருத்துக்களை விடியோ பதிவுகளாக வழங்கி வருகிறார்.
இதுவரை இவரது ஏழு நூல்கள் வெளிவந்துள்ளன. லக்ச்மண் ஸ்ருதியிடம் தன் மனிதாபிமான சேவைக்காக விருதுகளும் பெற்றுள்ளார்.
இந்த வாரம் இவரது “The Golden key for wellness” எனும் நூல் மணிமேகலை பிரசுரம் சார்பில் வெளியாகிறது. சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன சி.டி.ஓ கல் இராமன் தலைமை தாங்கி இந்நூலை வெளியிடுகிறார். மணிமேகலை பிரசுரம் எம்.டி ரவி தமிழ்வாணன் கலந்து கொள்கிறார்.
இந்த நூலின் வெற்றிக்கு நடிகை ரோகிணி உள்ளிட்ட பலரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ள நிலையில், தமிழக மக்களின் சுயமுன்னேற்றத்துக்கு பாடுபடும் ஆசிரியர் சஹாநாதனை வாழ்த்தி அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.
இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179
தனது 11ஆவது நூலை இந்த வாரம் வெளியிடும் வல்லமையாளர் சஹா நாதன் அவர்களுக்கு வாழ்த்துகள். தமிழ் ஊடகத் துறையிலிருந்து இன்னொரு நம்பிக்கை நட்சத்திரம்.