பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

19883860_1372213716166157_806318205_n
அனிதா சத்யம் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (15.07.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி (119)

 1. இலக்குகள்…

  போகுமிடம்
  மதுக்கடை மட்டும்
  தெரிந்தவன்
  போய்ச் சேர்ந்தான்,
  பெண்டாட்டி பிள்ளைகளைத்
  தெருவில்
  திண்டாட விட்டு..

  புறப்பட்டுவிட்டார்கள்
  இவர்கள் இப்போது,
  பிழைப்பு தேடி-
  போகுமிடம் எதுவென்ற
  இலக்கு தெரியாமலே…!

  -செண்பக ஜெகதீசன்…

 2. சுமை தலையில் ஒரு சுமை!
  இடையில் ஒரு சுமை!
  இருந்தும் உன் மனதில் இல்லை என்றும் குறை!
  பெண்ணாக பிறந்ததினால் சில வருடம்
  பெற்றார், உற்றாரின் வசவுகளை நீ சுமந்தாய்!
  அண்ணன், தம்பி மகிழ்ந்து விளையாட பெற்றோர்
  அனுமதிக்க! நீ விளையாட அவர் மறுத்துரைக்க
  ஏக்கத்தை நீ சுமந்தாய்!
  படிக்கும் வயதில் தாலியைத் தான் சுமந்தாய்!
  பிள்ளைகளை வயிற்றில் சுமந்தாய்!
  குடும்ப நலத்தை மனதில் சுமந்தாய்!
  உன் கனவுகளை நீ தொலைத்து குடும்பத்தை
  வாழ வைத்தாய்!
  சுமப்பதினால் இது வரை என்ன சுகம் கண்டாய்! ;
  உன்னை சுமக்க வைக்க மற்றவர்கள் சொல்லும்
  பொய்களை நம்பியது போதும் பெண்ணே!
  மற்றவர்களுக்காய் நீ சுமந்தது போதும் பெண்ணே!
  உன் இரக்கத்தை ஏணியாக்கி ஆண்கள்
  ஏறிச் சென்றது போதும் பெண்ணே!
  இனியாவது புதுமைப் பெண்ணே !
  உன் எண்ணச் சிறகுகளை விரித்து பறந்திடு !
  இனிய வாழ்க்கையை என்றும் வாழ்ந்திடு !

 3. உழைப்பே எங்கள் உடன்பிறப்பு
  ============================

  அன்றாடம் உழைத்தால்தான் அரைவயிறு நிறையும்
  ….ஆரும்நன்றாய்ப் படித்து பெரிதாய்ப் ஈட்டுவோரில்லை.!
  சென்றுபோகும் இடமெல்லாம் நடந்துதான் செல்லவேண்டும்
  ….அன்று சம்பாதிப்பது அன்றுமட்டுமே போதாதென்றாலும்.!
  நன்றாகத்தான் வாழ்கிறோம் எம் கைக்கொண்டுழைத்தே
  ….நல்லவேலை செய்வதற்கே நாங்களும் பிறப்பெடுத்தோம்.!
  குன்றுபோல் செழித்திருக்கும் குடியிருப்பு இல்லமொன்றில்
  ….கூட்டுக் குடும்பமாய்வாழ கூலிக்கென்றுமே பஞ்சமில்லை.!

  கருப்புக் குமரிகள்தான் நாங்களாயினு மெங்களைக்
  ….காதலித்து ஏமாற்றும் கயவர்பயம் எங்களுக்கில்லை.!
  ஆருமில்லை ஆதரிப்போரெனும் ஆதங்கமும் இல்லை
  ….அன்பாலே ஏனையொரை ஈர்க்குமாற்றல் எமக்குண்டு.!
  விருப்பமுடன் வீடுதேடி வேலைகேட்பின் இல்லையென
  ….மறுக்கமாட்டார் எடுத்தெறிந்து பேசமாட்டார் எவரும்.!
  கரும்புபோல பேசிவிட்டு முகம்சுளிப்போர் நடுவே
  ….அரும்புச் சிரிப்புடன் ஆறுதலாய் பேசுவோருண்டு.!

  இடையூறு இன்னல்கள் எதுவரினும் எதிர்கொள்ள..
  ….இறையருளும் எங்களுக்கு எப்போதும் உடனிருக்கும்.!
  தடையில்லா வாழ்வு வாழ எங்களுக்கும் ஆசைதான்
  ….தருவாயா இறைவாநீ உடலுறத்தை உயிருள்ளவரை.!
  நடைபோடும் தளிர்நம்பிக்கை யெனும் கொழுகொம்பைப்
  ….பிடித்துவாழும் பிடிமானமேயெங்கள் நிரந்தர வருமானம்.!
  படையோடு பலருடன் மகிழ்ந்தெதையும் கொண்டாடுவோம்
  ….பக்குவமாய் உழைத்து வாழவோர் உதாரணமாவோம்.!

 4. நிழல்!

  தலை நிறைய மூட்டை,
  சின்னஞ்சிறு மழலைகளின் சிரிப்பு,
  நடக்க நல்ல ஒரு மணல் பரப்பு!
  வெயிலின் பிரதிபலிப்பால்
  அவர்களை விட்டு பிரியாது தொடரும்
  நிழல்!

  முடி நரைத்தாலும் மூட்டை தூக்குவதில்
  சலிப்பில்லாத முதுமை!

  பள்ளிகூடங்களில் மட்டும் சமத்துவம் என்பது,
  இல்லாதிருந்தால் நாம் மறந்திருப்போம்,
  ரிப்பன் கட்டும் பழக்கத்தை!
  பெண்களின் அழகை
  சீர்தூக்கி நிறுத்தும் ரிப்பன் இப்போது,
  பல கொடிகளின் வண்ணங்களாய்
  மிளிர்கிறது!
  பள்ளிக்கூடங்கள் திணறுகின்றன,
  எந்த வண்ணத்தை தீர்மானிக்க என்று!

  இரட்டைச் சடையும்,
  ஒற்றைச் சடையுமாய் வளர்ந்து
  முதுமையடைகிறாள் பெண்!

  முதுமை என்றதும் நினைவுக்கு வருவது
  மீன் குழம்பும், கத்தரிக்காய் கூட்டும்!
  அப்போது!
  இப்போது!
  முதுமை என்றதும் நினைவுக்கு வருகிறது
  முதியோர் இல்லம்!

  கூன் விழாத முதுகுத்தண்டு சொல்லும்
  அவள் உழைப்பை!
  நரைத்த முடிகள் சொல்லும்
  அவள் கஷ்டத்தை!
  தன் மகனும், மகளும் படிக்க,
  வயல் தோட்டங்கள், தொழில் கூடங்கள் என
  உழைப்பிற்காக நடந்த நடையைச் சொல்லும்
  அவளின் செருப்பில்லாத பாதங்கள்!
  குழந்தைகளை நிழல் போல் காக்கிறாள்!
  நிலத்தில் விழுந்து விடக்கூடாதென்று!

  எல்லாவற்றையும் கடந்து உழைக்கிறாள்!
  என் மகன், மகள் கஷ்டப்படக்கூடாதென்பதற்காக!

  ஆனால், அவர்களோ!
  முதுமையின் முதுமையாய் முதிர்ந்தவர்களை,
  விடுகின்றனர் முதியோர் இல்லத்தில்!

  இந்த உலகத்தில் முதுமைக்கு
  விலையில்லாத விலைமதிக்கத்தக்க ஒன்று,
  ஒரு வேளை சோற்றை விடவும் உயர்ந்தது!
  மொழி கடந்து, சொல் கடந்து,
  அந்த மௌனச்சிரிப்பினால்,
  முதுமையின் கன்னத்தை வருடும்
  பேரன் பேத்திகளின் ஸ்பரிசம் ஒன்றுதான்!
  அது கிடைக்காதா! என்று
  ஏங்குகிறாள் முதியோர் இல்லத்தில்!

  முதுமை நினைத்துப்பார்க்கிறது!
  என்றும் உங்களின் நிழலாக இருக்கிறேனே
  நான்!

  உங்களைப் படிக்க வைத்தேன்
  படித்தும் புரியவில்லையே!
  நிழலைப் பிரிக்கமுடியாது என்று!
  என் குழந்தைகளுக்கு!

  கடவுளே என் மகனும் மகளும்
  நன்றாக இருக்க வேண்டும்!
  நான் மறைந்தாலும் அவர்களுக்கு
  நிழலாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.