நிர்மலா ராகவன்

அழுமூஞ்சியும் சிரித்த முகமும்

நலம்

புதிது புதிதாக எதையாவது செய்ய முற்படும்போது ஆர்வமும் பயமும் ஒருங்கே எழலாம். எதையும் புரிந்துகொண்டால் பயம் போய்விடும். எளிதான காரியம் ஒன்றை எவர் வேண்டுமானாலும் செய்யலாம்.

பிறர் செய்யத் தயங்கும் காரியத்தில் துணிச்சலுடன், ஆனால் தகுந்த பாதுகாப்புடன், இறங்குவதுதான் மகிழ்ச்சியைத் தரும். தன்னம்பிக்கையையும் வளர்க்கும்.

யாரோ துணிச்சலாக எதையோ செய்வதைப் பார்த்து, `எனக்கு எதற்கும் பயம் கிடையாது!’ என்று அபாயகரமான ஒரு காரியத்தில் ஈடுபடுவது மடத்தனம்.

நான்தான் தெனாலி — எல்லாவற்றிற்கும் பயம்

“நான் பெரிய பயந்தாங்கொள்ளி! கல்லூரியில் கடலுக்கு அடியில் நீச்சலடிக்கும் பாடத்தை (Ocean Archaeology) எடுத்துக்கொண்டேன். அதற்கு முன்னர் சுமாராக நீச்சல் தெரியும். அவ்வளவுதான். இரண்டு பயிற்சியாளர்களுடன் நள்ளிரவில் பயிற்சி எடுக்க வேண்டும். முதலில் நடுக்கமாக இருந்தாலும், போகப் போக பயம் போய்விட்டது. உற்சாகமாக அப்பயிற்சியை எதிர்நோக்க ஆரம்பித்தேன்!”

இப்போது, குடும்பத்துடன் படகில் போகும்போது, கடலில் குதிக்கிறாள் இப்பெண். பிறருக்கு மூச்சு நின்றுவிடுவது போலிருந்தாலும், இவள் முகத்தில் என்னவோ பூரிப்புதான்.

மேலே இருக்கும் கதையில், `இரண்டு பயிற்சியாளர்கள்’ என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். தனியாகப் போயிருந்தால், இன்று தன் வெற்றிக்கதையைச் சொல்லிச் சிரிக்க அவள் இருக்கமாட்டாள்.

எப்போதும் சிரித்த முகம்

`நீ நிறையப்பேரை பகைத்துக்கொள்கிறாய்!’

ஒரு முறை இப்படிக் கண்டனம் செய்யப்பட்டவர்கள் மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டு, பிறரை மகிழ்விக்க முயலுவார்கள். அப்படிச் செய்வதால் அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதோ, இல்லையோ, எப்போதும் சிரித்த முகத்துடனே வளைய வருவார்கள்.

பிறருக்காக ஒருவர் நடிக்கும்போது, தன் இயல்பான குணங்களை விட்டுக்கொடுக்கிறார். அதனால்தான் அவருக்கே புரியாத ஏதோ வெறுமை.

மற்றவர்கள் எப்படியோ போகட்டும். வெளிப்படையாகப் பகைத்துக்கொள்ள வேண்டாம். ஆனால், அவர்கள் சொல்வதில் உண்மை இருக்குமோ என்ற குழப்பம் அநாவசியம். அவர்களை மாற்ற முயல்வதும் வீண் முயற்சி. நம்மை நல்ல விதத்தில் மாற்றிக் கொண்டாலாவது நன்மை பிறக்கும்.

போடு பழியை, பிறர்மேல்

பலருக்கும் மாற்றம் என்றால் பயம். `நம்மை அறியாமலேயே ஏதேதோ நிகழ்கிறதே, நாம் வேறு வாழ்க்கையை இன்னும் குழப்பிக்கொள்ள வேண்டுமா?’ என்று ஒரே நிலையில் இருப்பார்கள்.

`விதி!’ `ஜோசியர் சொல்லி இருக்கிறார், எனக்கு இப்போது போதாத காலமாம்!’ என்று எவர் மேலாவது பழி போட்டு, தம் வாழ்வில் நடப்பது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், உற்சாகம் என்னவோ கிடையாது.

நம் வாழ்க்கையில் எதிர்ப்படும் சம்பவங்களால் நாம் மாறலாம். ஆனால் அவை நம்மைத் தாழ்த்த விடக்கூடாது.

நண்பர்கள்போல் நடித்துக் குழி பறிப்பவர்களிடமிருந்து பயந்து ஓடினால், ஓடிக்கொண்டேதான் இருக்க வேண்டும். அவர்களைச் சொல்லாலோ, செயலாலோ அடிப்பதால் நம் பலம் பெருகிவிடப் போவதுமில்லை.

தனிமை எப்போதும் இனிமையா?

எப்போதும் பிறருடன் சேர்ந்தே இருந்தால், ஒருவர் மற்றொருவரைக் கட்டுப்படுத்துவதைத் தவிர்க்க முடியாது. நாளடைவில் எரிச்சல்தான் உண்டாகும். அவ்வப்போது பிரிந்திருப்பதே நல்லது. (மனைவி அவ்வப்போது தன் பிறந்தகத்துக்குப் போய்விட்டுத் திரும்பும்போது, கணவனின் அன்பு கூடியிருக்கும்போலத் தோன்றுவது இதனால்தான்!)

தனியாக, ஆனால் ஆக்ககரமான சிந்தனைகளுடன் இருப்பவர்களே சாதிக்க முடியும்.

`நான் எப்போதும் தனிமையை விரும்புகிறவன்!’ என்று தன் நேரத்தை குருட்டுத்தனமான யோசனைகளிலும், எதிர்காலத்தைப்பற்றிய கனவுகளிலும் நிறைத்துக்கொள்பவர்கள் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறார்கள். இவர்களது அன்றாட வாழ்க்கையில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் மனமுடைந்து போய்விடுவார்கள். ஒன்றுமில்லாத விஷயத்துக்காக ஒரேயடியாகப் பூரித்து, அதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். பின், வாழ்க்கையில் சாதிப்பது எப்படி?

“வேகமாகச் செல்ல தனியாகப் போ. நெடுந்தொலைவு செல்ல பிறருடன் சேர்ந்துகொள்!” (ஆப்பிரிக்கப் பழமொழி)

அக்கண்டத்தில் கொடிய மிருகங்கள் உண்டு. பாலைவனங்களில் தண்ணீர் கிடைப்பது அரிது. அதனால், பிறருடன் சேர்ந்து போவது அபாயங்களைத் தவிர்க்க உதவலாம்.

அதற்காக, மாராதான் (Marathon) ஓட்டப்பந்தயத்தில் பிறருடன் இணைந்து செல்லவா முடியும்?

நீதி: சிலருக்குச் சரியென்று படுவது எல்லாருக்கும் ஏற்றதாகாது.

அழுமூஞ்சிகள்

கதை

“நான் பட்டப் படிப்பு படித்துத்தான் தீர்வேன் என்று வீட்டில் சண்டைபோட்டு, கல்லூரியில் சேர்ந்தேன். இப்போது ஏன்தான் இவ்வளவு படிக்க வேண்டுமோ என்று எரிச்சலாக இருக்கிறது. எப்படி பாஸ் பண்ணப்போகிறோம் என்று பயமாக இருக்கிறது!” என்று ஓயாமல் அரற்றுவாள் என்னுடன் படித்த ஒருத்தி.

எட்டாம் வகுப்புவரை பாடங்கள் தமிழில் இருந்தபோது, எல்லாவற்றிலும் பரிசுகள் வாங்கியவளுக்கு அதற்கடுத்த ஆண்டிலிருந்து ஆங்கிலத்தில் படிக்க நேரிட்டபோது சிறப்பான தேர்ச்சி அடைய முடியவில்லை.

கடுமையாக உழைப்பதைவிட புலம்புவது எளிது. இத்தகையவர்களின் `அழுகை’யைக் காதில் வாங்காமல் இருந்தால் பிழைத்தோம். இல்லாவிட்டால், நமக்கும் `இவள் சொல்வது சரிதான்!’ என்று தோன்ற, தளர்ச்சி அடைந்துவிடுவோம்.

இத்தகையவர்கள் சுமாரான வெற்றி அடைந்துவிட்டு, அதன்பின் தோல்வி அடைபவர்களாக இருக்கக்கூடும். தம்மைப்போல் இல்லாது, வெற்றிமேல் வெற்றி பெறுபவர்களை வீழ்த்த நினைப்பார்கள், தம்மையும் அறியாது.

சவாலா? ஹையா!

நமக்காகவே யார் நம்மை ஏற்கிறார்களோ, அவர்கள்தாம் உண்மையான நண்பர்கள். இவர்களே நம் திறமைகளை வெளிக்கொணர உதவுபவர்கள்.

`எல்லாவற்றையும் யார் யாரோ செய்துவிட்டார்களே! இனி என்ன இருக்கிறது!’ என்ற நம்பிக்கையின்மையை ஒழித்துக் கட்டிவிட்டு, இப்போது இருக்கும் சவால்களை, சந்தர்ப்பங்களை, நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டால் புதிய விஷயங்களில் நம் கவனம் செல்லும். விடாமுயற்சியால் எதையாவது செய்யலாம்.

நான் இணையத்தில் இணைந்த கதை

சில வருடங்களுக்குமுன் பெட்டி பெட்டியாக இருந்த எனது கதைகளையும், புதினங்களையும் பார்த்தபோது, வருத்தமாக இருந்தது. எல்லாமே ஒருமுறை பிரசுரம் கண்டவை. தோள் வலிக்க, இரவு பகலாக பேனாவால் காகிதத்தில் எழுதியவை. அடித்துத் திருத்தியதால், பல தடவை எழுத வேண்டியிருந்தது. ஆதாயம் இல்லாவிட்டாலும், எழுதும்போதே புத்துணர்வு எழ, விடாது எழுதினேன். ஆனால் எனக்குப்பின் அனைத்துமே உபயோகமற்றுப்போய்விடுமே!

அப்போது N. கண்ணன் என்ற அன்பர் நல்லதொரு வழியைக் காட்டினார்: `இணையதளத்தில் எழுதுங்களேன்!’

ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் மிரண்டு போனேன்.

ஓருங்குறியா? அப்படியென்றால்?

தட்டச்சு என்றால் டைப் செய்வதா!

பலர் உதவிக்கரம் நீட்டினார்கள். குறிப்பாக, தேமொழி. வெவ்வேறு தளங்களையும் அறிமுகப்படுத்தியவர்.

கணினி அரிச்சுவடிகூட அறியாதிருந்த நான் இப்போது, “இண்டர்நெட்டில் எழுதுகிறேன்!” என்று சொல்லிக்கொள்ள முடிகிறது. பெருமையாக, எல்லாரிடமும் அல்ல — `உங்கள் எழுத்துக்களை பத்திரிகைகளில் பார்க்கவே முடிவதில்லையே!” என்பவர்களிடம் மட்டும்.

இப்போது உலகெங்கும் வாழும் தமிழர்களில் 13,500 வாசகர்கள் “பள்ளியினூடே ஒரு பயணம்” என்ற என் ஒரு நாவலைப் பதிவிறக்கம் செய்துள்ளார்கள், நகைச்சுவை புதினமாகிய “பெண்களோ பெண்கள்” பத்தாயிரம் வாசகர்களுக்குமேல் எட்டியுள்ளது என்றெல்லாம் அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும், நமக்கு அறிமுகம் ஆகும் எல்லாருமே பொறாமை பிடித்து, நம்மை வீழ்த்தும் எண்ணம் கொண்டவர்களாக இல்லை என்ற உண்மை பெருமகிழ்ச்சியுடன் நிறைவையும் அளிக்கிறது.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *