Author: admin

  • அவமானம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    அவமானம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    தெலுங்கு மூலம்: தும்மல ராமகிருஷ்ணா.
    துணைவேந்தர்,
    திராவிடப் பல்கலைக்கழகம், ஆந்திர மாநிலம்

    தமிழ் மொழிபெயர்ப்பு: க.மாரியப்பன்
    உதவிப் பேராசிரியர்,
    தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறை,
    திராவிடப் பல்கலைக்கழகம், ஆந்திர மாநிலம்

    எங்கள் ஊரில் எந்த ஒரு திருவிழா நடத்துவதாகவிருந்தாலும், ஒரு கங்கம்மா ஜாத்ரை (ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் பெண் தெய்வ வழிபாடு – திருவிழா) செய்ய வேண்டுமென்றாலும் வலசை செல்ல வேண்டுமென்றாலும் காப்புக் கட்டுவதாக இருந்தாலும்… வெங்கடபதிராவ் முன்னிலையில்தான். அவர் இல்லாமல் எந்தச் சிறு வேலையும் நடைபெறாது. சுற்றியுள்ள கிராமங்களுக்கு அவர் வார்த்தையே வேதம். அவர் கிழித்ததே கோடு. அந்தக் கோட்டைத் தாண்டுபவர்கள் எவரும் கிடையாது. எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து அவரின் எதிர் நின்று பேசியவர்களை நான் பார்த்ததில்லை. அவர் எதிரில் வந்தால் அவரை விடப் பத்து வயது மூத்தவர்கள்கூடத் தலை குனிந்து ஓரமாகச் சென்றுவிடுவார்கள்.

    வெங்கடபதிராவ் பேரைச் சொன்னால் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளவர்கள் பயந்து சாவார்கள். பெரிய பெரிய ஆட்களே பயந்து சாவார்கள் என்று சொன்னால் சின்னஞ்சிறுசுகளின் கதையைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

    இருபத்தைந்து ஆண்டுகளாக வெங்கடபதிராவ் கர்ணமாக வேலைசெய்து வருகிறார். அப்பொழுதிலிருந்து அவர் வார்த்தைக்கு, அவருக்கு எதிராக எவரும் இல்லை. சுடுகாட்டுக்குப் போனவன்கூடக் கர்ணம் வார்த்தைக்கு மறுத்துப் பேசுவது இல்லை. மறுத்துப் பேசிவிட்டால் சுடுகாட்டுக்குக்கூடப் போகமுடியாது. கர்ணமாக இருந்தாரென்றாலும் பெரிய செல்வந்தர் இல்லை. ஆனாலும் இப்பொழுது அங்குச் சுற்றியுள்ள கிராமத்திலேயே ஓங்கியிருக்கும் பெரிய கை வெங்கடபதிராவே. அவர் எந்த நாளும் வெயிலில் கலப்பைப் பிடித்து உழுதது இல்லை. மண்வெட்டிப் பிடித்து வாய்க்காலில் இருந்து வயலுக்கு நீர்பாய்ச்சியதில்லை. இரவில் லாந்தர் விளக்கை வைத்துக்கொண்டு வயலைக் காவல் காத்ததில்லை. அவ்வளவு எதற்கு முகத்தில் வெயில்கூடப் பட்டதில்லை. மழையில் நனைந்ததில்லை. பசியால் பட்டினிக்கிடந்தது இல்லை. அதனாலேயே சிவப்பாக, குண்டாக, மென்மையாக, உயரமாக இருப்பவர். அவரின் பெரிய கண்கள், பெரிய காதுகள். நீண்ட கைகளைப் பார்த்து அரைகுறை சாஸ்திரம் தெரிந்தவர்கள் அவரிடம் ஏதோ ஒரு வேலை உள்ளவர்கள் அவர் அதிர்ஷ்ட ஜாதகக் காரர் என்று புகழ்வார்கள். புகழ்ச்சி என்றால் வெங்கடபதிராவிற்கு மிக விருப்பம். அப்படி எல்லாராலும் புகழைப் பெற்றுக் கொண்டு கஷ்டப்படாமலே வெங்கடபதிராவ் நூறு ஏக்கர் நிலம் சம்பாதித்துக் கொண்டார். ஐம்பது ஏக்கர் மாந்தோப்பு, ஐம்பது ஏக்கர் தென்னந்தோப்பு வளர்த்தெடுத்தார். நான்கு பெண்களுக்கு வெகுவிமர்சையாகத் திருமணம் செய்தார். இரண்டு மகன்களும் பத்துத் தலைமுறை உட்கார்ந்து சாப்பிடுகிற அளவிற்குச் சொத்துக்கள் சேர்த்துவைத்தார்.

    பக்கத்தில் சுற்றியுள்ள இடங்களில் ஓரிருவர் கர்ணமாக வேலை செய்து வந்தாலும் அவர்களைக் கணக்கில் வைத்துக்கொள்வதில்லை. வெங்கடபதிராவ் கர்ணம் வேலையில் பழந்தின்று கொட்டைப்போட்டவர். அவ்வப்பொழுது வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார்கள் கூட வெங்கடபதிராவை அழைத்து ஆலோசனை சொல்லுங்கள் என்று கேட்பார்கள். அந்தப் பிர்காவில் எது நன்செய் எது புன்செய் அவர் சொல்வதுதான். எது பட்டா நிலம், எது புறம்போக்கு அவர் தீர்மானித்தது தான். யார் நிலத்தில் எங்கே சர்வே கல்லு உண்டோ, எங்கே என்ன இருக்கிறதோ, எந்தப் பாகம் மேடு, எந்தப் பாகம் பள்ளம் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்வார். இருபத்தைந்து ஆண்டுகள் அனுபவம். நிலத்தை நான்கைந்து முறை சுற்றி வந்து இது இவ்வளவு ஏக்கர், இது இவ்வளவு சென்ட் இருக்கிறது என்று அவர் சொன்னால், அதை அளந்து பார்த்தால் அந்த அளவே தான் இருக்கும். சர்வேயர் சங்கிலி வைத்து அளவெடுத்தால் கொஞ்சம்கூட மாறாமல் இருக்கும்.

    அந்த நாள், கங்கம்மா கோயிலில் மரியாதை தாம்பூலம் வாங்கிக்கொண்டு மேலவீதி வழியாக வந்துபொழுது தற்செயலாக வெங்கடபதிராவ் எதிரில் சின்னராயன் வந்தார். ஐராலப்பா அவ்வளவு தூரத்தில் இருந்தபொழுதே வெங்கடபதிராவ் வழியை மாற்றிப் புளியமரத்துப் வழியில் நடந்தார். வெங்கடபதிராவ் பின்னால் நடந்துகொண்டிருந்த தலையாரி சுப்புடுக்குக் கர்ணம் எதற்கு வழி மாறி நடந்தார் என்று புரியவில்லை.

    இரண்டு வருடங்களாகக் கர்ணம் எப்பொழுது ஊருக்கு வந்தாலும் ஐராலப்பா இருக்கிற தெருப் பாதையில் போவதில்லை.

    ராமர் கோயிலுக்கு வந்திருந்தபொழுது கூட மேலத்தெரு பாதையிலோ கீழத்தெரு பாதையிலோ போனார். வெங்கடபதிராவ் போன்றவர்கள் மகுடம் இல்லாத ராஜாக்கள் ஐராலப்பா எதிர்வருவதற்கு முன்பாகவே எதற்கு இப்படி முகத்தை மறைத்துக் கொண்டு செல்கிறார் என்று புரியவில்லை.

    தோப்பில் வெங்கடபதிராவ், அவருக்குப் பின்னால் தலையாரி சுப்புடு முன்னால் போகிற வெங்கடபதிராவ் பதித்த பாதத்தடத்தில்  தன் பாதத்தை வைத்து நடந்து சென்று கொண்டிருந்தான் தலையாரி சுப்புடு மனசெல்லாம் சின்னராயனை சுற்றிக் கொண்டிருந்தது.

    மனுசன் குள்ளமாக இருக்கிறார். நீண்ட சிவப்பு அங்கவஸ்திரத்தைத் தலையில் வட்டமாகச் சுற்றியிருக்கிறார். முடி போட்ட இடத்தில் வால் போல் தொங்கிக் கொண்டிருந்தது முண்டாசு. புருவங்களுக்கு மத்தியில் மூக்குக்கு நேராகக் கோடு கிழித்தது போன்;று திருநாமம் வைத்திருந்தார். வலது தோள்பட்டையில் எப்பொழுதும் ஒரு சின்ன மூட்டைத் தொங்கிக்கொண்டிருக்கும். ஒருமுறை பார்த்தாலே போதும் எவ்வளவு தூரம் இருந்தாலும் அப்படியே அடையாளம் காணமுடியும். அவரின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. பிள்ளைகள், பெரியவர்கள் அனைவரும் அவரை “ஐராலப்பா” என்றே அழைக்கிறார்கள்.

    “இங்க நீ நில்லுடா சுப்பா” என்றார் மேட்டுக்கரைமீது நின்றுகொண்டிருந்த வெங்கடபதிராவ். அந்த நேரத்தில் தலையாரியின் சிந்தனையில் இருந்த ஐராலப்பா உருவம் மறைந்து போனது. சுப்புடு தலையைச் சொரிந்து கொண்டு நின்றான்.

    “என்ன.. சொல்லுடா… பொழுதாயிட்டு இருக்கு” மறுபடியும்

    “ஒண்ணும் இல்ல…சின்னப்ப கோனார் ஒரு வாரம் பத்து நாளா என் உயிர எடுக்குறான். மூணுரோடு பக்கத்துல ஐராலப்பா மானியம் நிலத்தை விற்கப்போறாராம். அதுக்குப் பக்கத்துல சின்னப்பனோட இரண்டு ஏக்கரு இருக்காம். ஐராலப்பா மானிய நிலம் இவனோட நிலத்துல சேர்ந்து இருக்காம். ஒட்டுணி போல யாராவது வந்து சேர்ந்து ஈட்டி மாதிரி உட்கார்ந்துருவான். அதனால சின்னப்பனே அதை வாங்கிக்கிறானாம். நீங்க இன்னொரு முறை ஐராலப்பாவைக் கூப்பிட்டு சொன்னா உங்க வார்த்தையைத் தட்ட மாட்டர்.

    ஐராலப்பா பெயர் காதில் விழுந்தவுடனேயே வெங்கடபதிராவுக்குக் கோபம் எரிச்சலாகியாது. முகம் சிவந்தது. “யாரைப் பத்தினாலும் என்ட்ட பேசு, அந்த நாசுவனைப் பத்தி என்ட்ட பேசாதடா சுப்பா” என்றார் கோபத்தோடு வெங்கடபதிராவ்.

    தலையாரி சுப்புடு வெங்கடபதிராவின் முன் வந்து வணக்கம் செலுத்தித் தன் வீட்டுத் தெருவில் நடந்தான். வெங்கடபதிராவ் சுமையோடு அடியெடுத்து வைத்து வேகமாகச் சென்றார். சுப்புடு மறுபடியும் வயல் வெளியில் நடப்பது சிரமம் என்று அரிசன காலனி வழியாக நுழைந்து வண்டித் தடத்திற்கு வந்தான். “ஜாக்கிரதையா பார்த்து வா! தலையாரி மாமா! முள்ளுகிடக்கும்! என்று கொல்லை வரப்பில் அமர்ந்து அருகம்புல்லைப் பிடுங்கி ஆட்டுக்குட்டிக்குக் கொடுத்துக்கொண்டே ஐராலப்பா சுப்பண்ணாவை அழைத்தார்.

    “ஒன் சகவாசம் ரொம்பக் கெட்டதப்பா!

    மிகைப்படுத்திச் சொன்னார் தலையாரி சுப்புடு.

    “என்ட்ட சகவாசம் வச்சுக் கெட்டுப்போனவன் இல்லை வா மாமா!”

    பேச்சைக் குறைத்தார் ஐராலப்பா.

    “சும்மா வந்து என்ன லாபம் சொல்லு” தலையாரி சுப்புடு பேச்சை இழுத்தார்.

    “நீயும் உன் கர்ணமும் லாபம் இல்லாம வேலை எப்ப செஞ்சேங்க! போட்டும்… வெத்தலை பாக்காவது போட்டுட்டு போ! வா!” ஐராலப்பா அழைத்தான்.

    “பக்கத்துல கூப்பிட்டு இன்னும் என் சட்டை பைல இருக்குறத துடைச்சு எடுக்கவா” இனி ஐராலப்பாவிடம் சுப்புடு சொன்னான்.

    “நீயும் ஒன் கர்ணமும் ஊர்ல இருக்கறவங்க சட்டைப்பையில இருக்குறத சுத்தமா தொடச்சு எடுக்குறீங்க நா ஒன் சட்டைப்பையில தொடச்சு எடுத்தா தப்பா!” ஐராலாப்பா தொடுத்த அம்பிற்குத் தலையாரி தலைகுனிந்து நின்றார்.

    ஐராலப்பாவிடம் பேசி nஐயிப்பது தன்னால் முடியாது என்று மனதில் நினைத்துக்கொண்டு, வேலையோடு வேலையாக வெங்கடபதிராவ், ஐராலப்பாவின் எதிர் நிற்காமல் முகம் மறைத்துக்கொண்டு எதற்குப் போகிறார் என்று அவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் போதும்…. “வந்துட்டு இருக்கேன், மாமா…! நீ எவ்வளவு பெரிய ஆளு! நீ கூப்பிட்டு நா வராம இருப்பனா…” என்று வேலியைத் தாண்டிக்கொண்டு வயலுக்குள் நுழைந்தான் தலையாரி சுப்புடு.

    இருவரும் வயல்மேட்டில் அமர்ந்து வெற்றிலைப் பாக்கு மென்றார்கள்.

    “மாமா! உன்ட்ட நா ஒன்னு கேப்பேன். சொல்லுவயா….? தலையாரி சுப்புடு ஐராலப்பா வார்தைக்காகக் காத்திருந்தான்.

    “தெரிஞ்சா சொல்றன்! கேளு” ஐராலப்பா தலையாரி சுப்புடுவிடம் சொன்னான்.

    “ஒன்னும் இல்ல, மாமா!… நம்ம கர்ணத்தைப் பார்த்தா எல்லாரும் மிரண்டு பார்க்குறாங்க. அவரு என்னமோ உன்ன பார்த்தா வேற பாதையில வழிய மாத்தி போறாரு எதுக்கு மாமா? தலையாரி சுப்புடு கேட்டான்.

    ஒருகணம் ஐராலப்பா மௌனமாக இருந்தான். தலையாரி சுப்புடு அந்த மௌனத்தைத் தாங்கமுடியாமல் இருந்தான். ஐராலப்பா என்ன பதில் சொல்வாரோ என்று அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

    “அதெல்லாம் இப்ப எதுக்குப்பா…!”

    “இல்ல, மாமா! உண்மை என்னன்னு தெரிஞ்சுக்கணும்”

    “தெரிஞ்சு என்ன செய்யப் போற?”

    “நா என்ன செஞ்சா உனக்கென்ன? முதல்ல நீ அந்த விசயத்தைச் சொல்லு”

    தலையாரி சுப்புடு வற்புறுத்தினான்.

    தப்ப முடியாதென்று ஐரலாப்பா சொல்லத் தொடங்கினான்.

    “நீண்ட காலம் முன்பு அப்ப நீங்கல்லாம் சின்னப் பசங்க. கர்ணம் கிட்ட உன் அப்பா தலையாரியா வேல செஞ்சாரு.  கர்ணம் வீட்டு வேலைகள எங்க தாத்தன் பாட்டன் முப்பாட்டன் காலத்துல இருந்து நாங்க செஞ்சுட்டு வந்தோம். முதல்லயிருந்தே நெல், தானியம், புளி வகையறா கொடுத்தது இல்ல. ஏதோ கர்ணம் இல்லயா அதனால எங்க ஆளுக கேட்டதும் இல்ல. கர்ணம் வீட்டுல வேல செஞ்சா போதும் எங்க ஐனங்க மத்தியில கௌரவம் கிடைக்கும்னு எங்க ஆளுகளோட நம்பிக்கை. அன்றாடம் காய்ச்சியா வாழ்றவங்களுக்கு மரியாதை என்ன இருக்கு? அவமரியாதை என்ன இருக்கு? இந்த விசயம் எங்க ஆளுகளுக்குத் தெரியாது.

    எங்க அப்பா பயண்ணா கிலக்கத்தியில் (ஊர்)   வெங்கடபதிராவ் அப்பா சிவய்யசாமியிடம் ஒருநாள் கேட்டாராம்.

    “இதுல என்ன இருக்குடா… பெரிய ஏரிக்குக் கீழ …மான்யம் பக்கத்துல எங்களோட பத்துக் குழி  விளைநிலம் இருக்கு. அதை நீ பயிர்ப்பண்ணிக்கோடா…. பத்து மூட்டை நெல்லு விளையும். நீ புள்ளக்குட்டிக்காரன். தர்மபிரபு அவர் சொன்ன சொல் தவறவில்லை. பத்து மூட்டை விளையுதோ ஐந்து மூட்டை விளையுதோ தெரியாது. அந்தப் பத்துக் குழி நிலத்தை எங்க ஆளுக தான் பயிர்பண்ணிட்டுவந்தாங்க. கிடைத்து விட்டதே என்று அவங்க வீட்டு வேலைய செய்யாம இல்ல. இப்படிப் பெரியவங்க சின்னவங்க காலத்துல இருந்து தொடர்ந்து நடந்து வந்தது. நடுவுல என்ன வந்ததோ என்னமோ….

    வெங்கடபதிராவ், அவர் அண்ணன் சங்கர்ராவ் பெரியவங்களாக ஆனதும் என் அப்பா அங்கு வேலை பார்ப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அண்ணன்தம்பி இரண்டுபேரும் சவுடேபள்ளியில் இருந்து பெயிலாகி வீட்டுக்கு வந்தாங்க. பெரியவரு வயல்வேலை செய்தாரு. சின்னவர் கர்ணம் வேலை கற்றுக்கொண்டிருந்தார். அவர்களின் அப்பா இறந்தபிறகு இவரே முழுநேர கர்ணம் ஆனாரு.

    வெங்கடபதிராவ் மென்மையாகப் பேசக்கூடியவர். உள்ளுக்குள்ள வேரையே வெட்டுறவர். பெரியவர் வழ வழன்னு கூச்சல் போடுபவர். அதுமட்டுமல்ல உள்ளுக்குள்ள எதையும் வைத்துக்கொள்ள மாட்டார். சாதிப்பவரும் இல்லை.

    என் பிள்ளைகள் இப்படி அப்படிப் படித்து ஒருவன் டீச்சர் உத்யோகம், ஒருவன் அட்டண்டர்; வேலையில் சேர்ந்து அவர்கள் வழியில் அவர்கள் போய்க்கொண்டு இருக்கிறார்கள். மிச்சமிருப்பது நான், என் மனைவி, பெண்பிள்ளைகள்…நாங்க எங்க போவது. அந்த வயல் வேலைகளைப் பார்த்துக்கொண்டு விளைச்சல் நிலத்தில் ஏதோ பயிரிட்டு விளைந்ததைச் சாப்பிட்டுக்கொண்டு ஊரில் இருக்கிறோம்.

    ஒரு நாள் இருக்கின்றபொழுது உன் அப்பாவிடம் சொல்லி என்னை அழைத்துவரச் சொன்னார் வெங்கடபதிராவ். எங்கயாவது ஊருக்குக்கீருக்கு போகிறாரோ என்னமோ என்று சவரப்பெட்டியைக் கக்கத்தில் வைத்துக் கொண்டு போனோன். வெங்கடபதிராவ் வீட்டுக்கு முன் உள்ள தாழ்வாரத்தில் நாற்காலி போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்.

    “என்னங்க சாமி, அவசரமா வரச்சொன்னீங்க!” என்று கேட்டேன்.

    “எதும் இல்லடா! ஒன்ட்ட கொஞ்சம் பேசணும். எப்படிச் சொல்றதுனு யோசிக்குறன். நீ என்னமோ புள்ளகுட்டிக்காரன்” என்று குறைபட்டுக்கொண்டார்.

    “என்னன்னு சொல்லுங்க சாமி!” என்று கட்டாயப்படுத்தினேன்.

    அவர் அமைதியாக ஒரு நிமிடம் என்னை மேலும் கீழும் பார்த்து என் அப்பா போனபிறகு நிலத்தைப் பிரிச்சுக்கிட்டோம்டா! வீட்டு வேல செஞ்சதுக்காக மானியம் நிலத்துகிட்ட என் அப்பா உனக்குக் கொடுத்த பத்துக் குழி விளை நிலம் அண்ணன் பாகத்துக்குப் போய்ட்டு. அதை அவர் பெண் பிள்ளைகளுக்குச் சீர்வரிசைக்காக எழுதிகொடுத்தாராம். இப்பொழுது உன்னை அந்தப் பத்துக் குழி நிலத்துல செய்யாதன்னு சொல்லல. பெண் பிள்ளைகள் எங்கேயோ இருக்குறாங்க.  இந்த ஊரில் வயலை வைத்துக்கொண்டு என்ன செய்ய போகிறார்கள். எதற்காகவோ அதை விற்றுப் பணத்தைத் தனக்குக் கொடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்கள். இந்த விசயத்தை உன்னிடம் சொல்லாமல் இருக்கிறார்கள். என்னைச் சொல்லச் சொன்னார்கள். என்னை நீ கெட்டவனா நினைச்சுக்காத. பத்து ரூபா கொடு கொடுக்காம போ. அந்தப் பத்துக் குழிய நீயே உன் பேர்ல எழுதிக்கோ. அந்த வேலைய நானே செஞ்சு தாரேன்… வீட்டு வேலையைத் தவிர்க்கவேண்டாம்! என்று மனதில் இருப்பதை வெளியில் கொட்டினார்.

    என் வயிறு எரிந்தது. மனுசனை எங்கன்னாலும் அடிக்கலாம் ஆனா வயித்துல அடிக்கக் கூடாது. விசுவாசம் இல்லாத மனிதர்கள். எங்க தாத்தா பாட்டன் முப்பாட்டன் காலத்துல இருந்து அவங்களுக்குச் சவரம் செஞ்சோம். அவர்கள் வளர்த்த முடியைக் கத்திரியால் வெட்டினோம். அவர்கள் காலைப் பிடித்துக் கால் நகங்களை வெட்டினோம். ஆனால் என்ன லாபம்? மனிதர்களுக்குப் பணமே முக்கியமாகிவிட்டது. பெண்களுக்கு மஞ்சள் குங்குமத்திற்காக எழுதி கொடுக்க வேண்டும் என்ற அந்தப் பத்துக் குழியைத் தான் எழுதித் தர வேண்டுமா? அவர்கள் தலையில எழுதிய நிலங்கள் அவர்களுக்கு உரியது. இந்தப் பத்துக்குழி நிலத்துக்குப் பதிலாக வேறு இடத்தில் உள்ள பத்துக் குழியை எழுதிதரக்கூடாதா? எல்லாம் மாயவார்த்தைகள். முதலைக் கண்ணீர்…

    மறுத்துப் பேசாமல்-

    “சரி சாமி…. நீங்களே சொன்ன பிறகு நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? என்று சொல்லி ஒரு கணமும் நிற்காமல் வந்தேன்.

    கோடைகாலத்தில் நம் ஊரில் கங்கம்மா ஐhத்ரைக்குப் பிள்ளைகள் இருவரும் வந்தார்கள். சாமி சொன்ன வார்த்தைகளைப் பிள்ளைகளிடம் சொன்னேன். அவர்கள் இருவரும் கொஞ்சநேரம் குசுகுசுவென்று தனியாகப் பேசி “அப்படியே செய்யலாம்பா’ என்றார்கள். அவ்வளவுதான் நல்லநாளில் வெங்கடபதிராவுடன் புங்கனூர் போய் அவர்கள் கொடுத்த மொத்த இடத்தையும் அவர்களுக்கு எழுதிக் கொடுத்து அந்தப் பத்துக் குழி விளைநிலத்தை பட்டா செய்துவிட்டு வந்தேன். புங்கனூருக்கு வந்து போன கட்டணத்தையும் என்னிடமே தலையில் கட்டினார். அப்படியான விசுவாசம் இல்லாத மனிதர்கள். உடம்பு முழுக்க விஷத்தை நிரப்பிக்கொண்ட மனிதர்களை நான் எங்கும் கண்டதில்லை. அன்றிலிருந்து அவர்களின் முகத்தைப் பார்ப்பதில்லை. தொழிலை நம்பி வாழ்வதுதான் சரி என்றும் அதற்கு மிஞ்சி எதுவும் இல்லை என்ற தெளிவு வந்தது. மூன்று நான்கு தலைமுறைகளாக எங்கள் சின்னவர்கள் பெரியவர்கள் தொழில் செய்து வாழ்ந்தார்கள். என்ன நல்லாவாயிருக்குறோம்? எதுவும் இல்லை. அதற்குத்தான் பெரிய ஏரியில் தண்ணீர் வந்தபொழுது கூலி கீலிக்குப் போய் வயல் கால்வாய் வெட்டிக்கொண்டு இருந்தேன்;. அப்படிப்பட்ட வேலை செய்து கொண்டிருந்த பொழுது ஒருநாள் வெங்கடபதிராவ் அவசரமாக வரவேண்டும் என்று சொன்னார். என்னமோ என்று சென்றேன்.

    “அதைப் பேசி இதைப் பேசி மதனப்பள்ளிக்குப் போய் வரணும் தாடியைச் சவரம்பண்ணு” என்றார்.

    “நான் அவரின் முகத்தைப் பார்த்து நின்றேன். தாடி நன்றாக வளர்ந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் சாம்பல் தாடி அருவருப்பாக இருந்தது. நான்கு தினங்களுக்கு முன்பே வழித்திருக்க வேண்டிய தாடி. நான் எதுவும் செய்யமாட்டேன்… நான் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்றிருப்பதைப் பார்த்து, “உன்னைத்தான், தாடியைச் செரை!” என்றார்.

    நான் எதுவும் பதில் சொல்லவில்லை. இப்பொழுது நான் அவர் வீட்டு வேலைக்காரன் கிடையாது. ஆவரிடம் நான் எதையும்  எதிர்பார்க்கவும் இல்லை. அதனாலேயே மிகச் சாதாரணமாக நின்றுகொண்டிருந்தேன். நாவிதர் பணி விட்டுவிட்டேன்” என்றேன். அநேகமாக என்னிடமிருந்து இப்படி ஒரு பதில் வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. மறு பேச்சில்லை. என்னைத் தலைநிமிர்ந்து பார்க்கவில்லை. பார்வை இறங்கியிருந்தது. தலைகுனிந்து ஏதோ முணு முணுத்தார்.

    அப்பொழுது வெங்கடபதிராவ் என் கண்களுக்கு அடிப்பாகம் வரை வெட்டிப்போட்ட மரம் போல காட்சியளித்தார்.

    ஐராலப்பா சொல்வதை நிறுத்தி –

    “நீயே சொல்லுடா, சுப்பா! நான் செய்தது தப்பு என்கிறாயா?” சுப்புடுவின் முகம் நோக்கிக் கேட்டார்.

    “இங்கிதமானவர்கள் எவரும் நீ செய்தது தப்பு இல்லை என்பார்கள் மாமா! என்று ஐராலப்பாவை இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக்கொண்டான் தலையாரி சுப்புடு.


    தெலுங்கில் : தும்மல ராமகிருஷ்ணா. திராவிடப் பல்கலைக்கழகத் துணைவேந்தர். தெலுங்கு எழுத்தாளர். இவரின் கதைகள் மலையாளம், கன்னடம், ஹிந்தி, தமிழ், ஆங்கிலம், துளு போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரின் மட்டிப்பொய்யி, அடப்பம் தெலுங்கின் சிறந்த கதைகளாகும். பேசபட்டக் கதைகள். விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைத் தன் படைப்புகளில் சிறப்பாக வெளிப்படுத்தியவர். ஆந்திர எழுத்தாளர்களில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்றவர்.

    தும்மல ராமகிருஷ்ணா, திராவிடப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்.

    மொழிபெயர்ப்பாளர்: க.மாரியப்பன்

    பொருநை க.மாரியப்பன், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் ஏப்ரல் 4, 1976இல் பிறந்தவர். ஆந்திரமாநிலம், திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், இலக்கிய விமர்சகர். சமீபத்தில் ஏப்ரல் 23, 2022இல் இவரின் தெலுங்கு சிறுகதைத் தொகுப்பு மொழிபெயர்ப்பு நூல் ‘மஹாவித்துவான்’ வெளிவந்தது.

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 17

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 17

    முனைவர் ச.சுப்பிரமணியன்

    பேராசிரியர் முனைவர் கு.திருமாறன் எழுதிய ‘மூன்றாவது கண்’ ஒரு நக்கீரப் பார்வை

    முன்னுரை

    செய்யுள், கட்டுரை, சிறுகதை, நாவல் என்னும் இலக்கியத்தின் பன்முகப் பரிமாணங்களில் என்னைக் கவர்ந்ததும் நான் விரும்புவதும் கவிதையாகிய செய்யுளே!. அதற்கு அடுத்தபடியாக நான் பெரிதும் விரும்புவது கட்டுரைகளே. இதற்குக் காரணம் மூவர். ஒருவர் பேரறிஞர் அண்ணா. அடுத்தவர் அறிஞர் மு.வ.. மூன்றாமவர் கலைஞர். கலைஞர் முந்தைய இருவரைப் போல மெத்தப் படித்தவர் அல்லர். ஆனால் அவர் அன்றைய முரசொலியில் எழுதிய கடிதங்கள் எல்லாம் பொருண்மையால் கருத்து வேறுபாட்டுக்கு உரியனவாயினும் கட்டுமானத்தால் தமிழ்க்கட்டுரை இலக்கியத்திற்கு முன்னோடியாகத் திகழ்கின்றன. உரைநடையில் எழுதப்படுவனவெல்லாம் எப்படிச் சிறுகதை, நாவல் ஆகாவோ, அதுபோலவே கட்டுரையும் ஆகாது. கட்டுரை உரைநடையால் ஆனது. ஆனால் அது உரைநடையினும் வேறுபட்டது. அதனை மெய்ப்பித்துக் காட்டியவர்கள் இந்த மூவரும். இது என் பார்வை. இன்றையத் தமிழுலகில் ஏதும் தெரியாதவர்களின் துறையாகக் கவிதைத் துறை இருந்து வருகிறது. ஓரளவு தெரிந்தவர்கள் கூடக் கவனிக்காத துறையாகக் கட்டுரைத்துறை தனிமைப்பட்டுள்ளது. அந்தத் தனிமையைப் போக்கவந்த வல்லாளர் சிலருள் பேராசிரியர் கு.திருமாறனும் ஒருவர். அவர் எழுதிய ‘மூன்றாவது கண்’ என்னும் கட்டுரைத் தொகுப்பினைப் பற்றிய என் பார்வை இந்தக் கட்டுரையின் உள்ளடக்கமாக அமைகிறது. இது என் பார்வை. பார்வைகள் மாறுபடலாம்., மாறுபட வேண்டும்.

    கட்டுரை இலக்கியம்

    சிறுகதை, நாவல் முதலியன தவிர்த்துத், தன்வாழ்க்கை வரலாறு, பயணக் கட்டுரைகள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், உரை நூல்கள் முதலியனவெல்லாம் உரைநடையில் அமைந்தவையாகும். ஆனால் இவைகள் கட்டுரைகளே. கட்டுரை இலக்கியங்கள் அல்ல. இலக்கியக் கட்டுரை என்பது இலக்கியத்தைப் பற்றிய கட்டுரை. பழந்தமிழ் உரையாசிரியர்களுள் ஒருவரான நச்சினார்க்கினியர் பொருளதிகாரத்தில் கூறும் முதற்பொருள் அமைதியும் கருப்பொருள் அமைதியும் அகத்திணை, புறத்திணை முரணமைதியும் மிகச் சிறந்த இலக்கியக் கட்டுரைக் கூறுகள் அடங்கியனவாகும். அறிஞர் மு.வ. அவர்களின் நெடுந்தொகை விருந்து, குறுந்தொகை விருந்து, நற்றிணைச் செல்வம் முதலியன இந்தப் பகுப்பில் வரும்.

    ஆனால் கட்டுரை இலக்கியம் என்பது இலக்கியம் சார்ந்துதான் வரவேண்டும் என்பதில்லை. இலக்கியம் சார்ந்தும் வரலாம். வேறு எந்தப் பொருள் பற்றியும் அமையலாம். ஆனால் அது ஒரு சுவையான இலக்கியத்தைப் படித்த உணர்வினைத் தரவேண்டும். பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ‘வெள்ளை மாளிகையில்’ அறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் கம்பர், இலக்கியச் சாறு, ஆய்வுக்கட்டுரைகள், மறைந்த தினமணி ஆசிரியர் திரு. ஏ.என். சிவராமன் அவர்கள் அப்போலோ விண்வெளிப் பயணம் பற்றித் தினமணியில் எழுதிய கட்டுரைத் தொடரும் ‘ஏன் இந்த வியட்நாம் போர்?’ என்னும் படைப்பும் ‘ஆனந்தவிகடன் துணை ஆசிரியர் திரு. மதன் அவர்கள் எழுதிய ‘வந்தார்கள்! வென்றார்கள்! முதலியனவும், அறிவியல் மற்றும் வரலாறு சார்ந்த பொருண்மைகளை இலக்கியமாகப் படைத்துக் காட்ட முடியும் என்பதற்குச் சான்றுகள் ஆகும். அவசரநிலைக் காலத்தில் முரசொலி நாளிதழில் கலைஞர் எழுதிய கடிதங்கள் தமிழ்க்கட்டுரை இலக்கிய வரலாற்றில் தனித்த இடம் பெறுதற்குரியன. பரந்த படிப்பும் ஆழமான சிந்தனையும் எளிவந்த மொழியாளுமையும் தனித்தன்மையும் வல்லார்க்கே கட்டுரையை இலக்கியமாக வடித்தெடுக்க இயலும். வெற்றுத் தரவுகளும் புள்ளி விவரங்களும் நீர்த்துப் போன மேற்கோள்களும் கிழிந்து போன சான்றுகளும் ஒரு நல்ல பொருண்மையை இருட்டடிப்புச் செய்துவிடும். படைப்பில் ஈடுபாடும் தொண்டு மனப்பான்மையும் கொண்ட படைப்பாளன் ஒருவன் கையில் அவை ‘தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாத’ இலக்கியமாக உருவெடுக்கும்! அத்தகைய வல்லாளர்களுள் ஒருவரான பேராசிரியர் முனைவர் கு.திருமாறன் எழுதியதே ‘மூன்றாவது கண்’ என்னும் இந்த நூலாகும்.

    மூன்றாவது கண்

    ‘மூன்றாவது கண்’ என்னும் தலைப்புடைய கட்டுரை இந்த நூலின் முதற்கட்டுரையாக அமைந்திருக்கிறது. ஐம்புலன்களில் ஒன்றான புறக்கண்ணின்றும் வேறுபடுவது அகக்கண். முன்னது புறக்கண். இது அகக்கண். இந்த அகக்கண்ணைத்தான் ‘மூன்றாவது கண்’ என்கிறார் ஆசிரியர். இது சரியே. இதற்கான விளக்கத்தையே இந்தக் கட்டுரை முன்னெடுக்கிறது.

    ஒன்றினைப் புறக்கண்ணால் காணுகிறபோது அகக்கண் மற்றொன்றினைக் காணுகிறது. ‘அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்’ என்பது திருமந்திரம். இந்த ‘மூன்றாவது கண்’ பல பரிமாணங்களை உள்ளடக்கியது. சிவபெருமானுக்கு நெற்றிக் கண் உண்டு என்பதும் அது. ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் வாழும் உயிர்க்கு கண்ணென்ப’ என்றவிடத்துக் கண் என்பது புறக்கண்ணின்றும் வேறாகி நிற்பதை உணரலாம்.

    கற்றல் என்பது தொழிற்பெயர். காட்சி என்பதும் தொழிற்பெயர் நீட்சி என்பது போல. முன்னது நூல்களைக் கண்ணால் கற்பதற்கும் பின்னது மனத்தால் உணர்வதற்கும் உரியது. திருவள்ளுவர் கற்றலைப் பொருட்பாலிலும் காட்சியை அறத்துப்பால் துறவறத்திலும் மிகக் கவனமாகப் பதிவிடுவதை நூலாசிரியர் திருமாறன் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார்.

    ‘மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்தில் ‘காட்சி’ என்னும் சொல்லை அடைமொழி தந்து பயன்படுத்தியுள்ளார். ‘புன்மையில் காட்சி’, ‘மாசறு காட்சி’, ‘கடனறி காட்சி’, ‘நடுக்கற்ற காட்சி’ முதலியன வள்ளுவத் தொடர்கள்.

    என்னும் பகுதி தரவுகளைத் தேடுவதில் ஆசிரியரின் தளரா உழைப்பைக் காட்டுகிறது. இனி உவமங்களையும் உருவகத்தையும் அகக்காட்சியாகப் பதிவு செய்யும் ஆசிரியர் அதனைக் காணும் புலமையை மூன்றாவது கண்ணாகவே கருதுகிறார். இது சரியே. முன்பே பதிவிட்ட வண்ணம் புறக்கண்கள் ஒன்றில் ஈடுபட்டிருக்கும்போது வேறொன்றினைக் காண முற்படும் பொறி மூன்றாவது கண்ணாகத்தானே இருக்க முடியும்? வானத்து விண்மீன்களைக் கோள்களாகவே புறக்கண் காண, மூன்றாவது கண்ணுடைய புலவனுக்கு அவை விண்மகள் மேனியில் எழுந்த கொப்புளங்களாகக் காட்சியளிக்கின்றன.

    “மண்மீதில் உழைப்பா ரெல்லாம்
    வறியராம் உரிமைகேட்டால்
    புண்மீதில் அம்பு பாய்ச்சும்
    புலையர் செல்வராம் இதைத்தன்
    கண்மீதில் பகலி லெல்லாம்
    கண்டு கண்டு அந்திக்குப் பின்
    விண்மீனாய்க் கொப்பளித்த
    விரிவானம் பாராய் தம்பி!”

    என்னும் பாவேந்தர் பெற்றிருந்த மூன்றாவது கண்ணைப் படம்பிடித்துக் காட்டுகிறார். ரோசாவிற்கு அவ்வண்ணம் வந்ததற்குக் காரணம் அதற்குக் களையெடுத்து நீர்பாய்ச்சி வளர்த்தெடுத்த உழைப்பாளர்களின் குருதியே என்னும் பாவேந்தரின் தற்குறிப்பேற்றத்தை மூன்றாவது கண்ணாகப் பதிவு செய்கிறார் ஆசிரியர். மூன்றாவது கண்ணும் முகத்துக்கண்களும் ஒன்றிணைந்து நோக்கினாலேயே ஒழிய எந்தக் கற்றலும் எந்தக் காட்சியும் பற்றாது, பதிவாகாது என்பதே இந்தக் கட்டுரையின் பொருட்சாரம் எனலாம்.

    உண்மையே உயர்நெறி

    ‘உண்மையே உயர்நெறி’ என்னுந் தலைப்பில் அமைந்த இரண்டாவது கட்டுரை உள்ளத்தின் தன்மையாகிய உண்மையின் இயல்பையும் சிறப்பினையும் விளக்குவதாக அமைந்திருக்கிறது. உண்மை, வாய்மை, மெய்ம்மை என்னும் சொற்களுக்கிடையே நிலவும் நுண்ணிய பொருள் வேறுபாட்டினை நன்கு விளக்கி, உலகவழக்காகிய பழமொழிகளை இணைத்துக் கதம்பமாகக் கட்டியிருக்கும் சொல்லாரம் இது. திருக்குறள், மகாகவி பாரதி முதலியோர் கவிதை வரிகளை எடுத்துக்காட்டி உண்மையின் சிறப்பினை உணர்த்தியிருக்கும் பாங்கு அரிய பொருளை எளிமையாக விளக்கும் ஆசிரியரின் கட்டுரை வன்மைக்குச் சான்றாகத் திகழ்கிறது.

    சினம் தவிர்த்தல்

    திருவள்ளுவர் இருக்க வேண்டிய பண்புகளை உடைமையாக்கியும் இருக்கக் கூடாத பண்புகளை இயல்பாக்கியும் குறள் வடிப்பார். ‘அன்புடைமை’ என்பார். ‘அழுக்காறாமை’ என்பார். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அனைத்திடங்களிலும் கேடு மட்டும் தருவது சினம். தன்னையே கொல்லும் சினம் என்னும் வள்ளுவத் தொடருக்குச்,

    “சினங்கொள்வார் தம்மைத்தாம் தீயாற் சுட்டுச்
    செத்திடுவார் ஒப்பாவார்., சினங்கொள்வார்தம்
    மனங்கொண்டு தம்கழுத்தைத் தாமே வெய்ய
    வாள்கொண்டு அறுத்திடுவார் மானு வாராம்”

    என்னும் பாரதியின் வரிகளை எடுத்துக்காட்டி விளக்கும் ஆசிரியர் இறுதியாகக் காட்டியிருக்கும் பெட்டிச் செய்தியில் அறிஞர் பொற்கோவின்,

    “ஒருவன் சினம் கொள்ளுவானானால் அந்தச் சினத்தினால் பாதிக்கப்படுபவரும் உண்டு. பாதிக்கப்படாதவரும் உண்டு. ஆனால் சினம் கொள்ளுகிற ஒருவனை அந்தச் சினம் தப்பாமல் தீமைக்கு உள்ளாக்கும்’ என்னும் விளக்கம் தெளிவோடு அமைந்திருக்கிறது.

    ‘இல்வாழ்வார்க்கு ஆயின் தமரோடு விளையாட்டு வகையால் அவரை வஞ்சித்துக் கோடற்கு இயைந்த பொருள்களை அங்ஙனம் கொள்ளினும் அமையும். துறந்தார்க்கு ஆயின் அதனைக் கருதிய வழியும் பெரியதோர் இழுக்காம் ஆதலின் இது துறவறமாயிற்று. புறத்துப் போகாது மடங்கி ஒருதலைப்பட்டு  நோக்கற்பாலதாய மனம் அது ஒழித்து, புறத்தே போந்து பல தலைப்பட்டு உடம்பின் பொருட்டுப் பொருளை நோக்குதலேயன்றி அது தன்னையும் வஞ்சித்துக் கொள்ளக் கருதுதல் அவர்க்குப் பெரியதோர் இழுக்காதல் அறிக. இவ்வாறு வாய்மை முதல் கொல்லாமை ஈறாய நான்கு அதிகாரத்திற்கும் ஒக்கும்”

    என்னும் பரிமேலழகரின் விளக்கத்தால் கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை என்னும் ஐந்து அதிகாரங்களும் துறந்தார்க்குப் பொருந்துவதுபோல் இல்லறத்தார்க்குப் பொருந்தாது. அதனாலேயே அவற்றைக் கடைப்பிடிக்காது கைவிட வேண்டும் என்பது பொருளன்று. பிறரை வஞ்சிக்கக்கூடாது என்பதும் உள்ளத் தூய்மையும், சினம் கொள்ளாமையும், பிற உயிர்களுக்குக் கேடு செய்யாமையும், உயிர்களைக் கொல்லாமையும் எல்லார்க்கும் பொது என்னும் கருத்தினை ஆசிரியர் திறம்பட விதந்தோதுவது ஏற்கத்தக்கதே.

    உயிர்களைப் பேணுதல்

    தாவரங்களுக்கும் உயிருண்டு என்பது பாஸ்கரனின் அறிவியல் கண்டுபிடிப்பாகலாம். அது அறிவுப்பூர்வமான ஆய்வு முடிவு. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியது’ வள்ளலார் உள்ளம். இது உணர்வுப் பூர்வமானது. அவர்வழி வந்த மகாகவி ‘உயிர்களிடத்தில் அன்பு வேணும்’ என்று குழந்தைகளுக்குப் பாடிக் ‘காக்கைக் குருவி எங்கள் சாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என்னும் அனைத்துயிர்களையும் ஒன்றாகக் கருதியதைக் காணலாம். தமிழிலக்கியத்தில் சடாயுவாகிய பறவையையும் அனுமன் மற்றும் ஜாம்பாவான் ஆகிய விலங்குகளையும் மனிதநேயத்துடன் அணுகினான் இராமன் என்பது இடைக்காலப் புலவர் கம்பனின் சிந்தனை. இந்த நூலின் ஆசிரியர் திருமாறன் மனிதநேயக் கோட்பாட்டையும் உயிரிரக்கத்தையும் சங்க இலக்கியக் குறிப்பிலிருந்து காட்டுவது மிக மிகச் சிறப்பு.

    ‘அன்னை கூறினள் புன்னையது நலனே’ என்னும் நற்றிணை வரிகள் உயிர்களிடத்து அன்பு மட்டுமன்றி அவற்றை உறவாக்கிக் கொள்ளும் பழந்தமிழ்ப் பண்பாட்டை அருமையாகச் சுட்டியிருக்கிறார். ‘ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு யான் மணந்த ஞான்றே’ என்னும் குறுந்தொகை வரிகள் அஃறிணை உயிர்களை உயர்திணை மாந்தர்களாக எண்ணிச் சாட்சியாக வைத்த வரலாற்றைக் காட்டுகின்றன.

    நினைக்கப்படும்

    திருக்குறள் தொடரைத் (169) தலைப்பாகக் கொண்ட இந்தக் கட்டுரை, மறைவுக்குப் பின்னும் நினைக்கப்படுகிற மனிதர்களையும் நிகழ்ந்ததற்குப் பின்னும் நினைக்கப்படும் நிகழ்வுகளையும் சுருக்கமாகச் சொல்வதாக அமைந்திருக்கிறது. இப்பிறவியில் எந்தத் தவறும் செய்யாத கோவலனின் கேடு மாடலமறையோனால் நினைக்கப்பட்டது. செவ்வியான் கேடு நினைக்கப்பட்டதைப் பரிமேலழகரும் நினைத்திருக்கிறார்.

    பொருள் வைப்புழி

    பழந்தமிழ் இலக்கியத் தொடர்கள் பலவற்றைத் தலைப்புக்களாகக் கொண்டிலங்கும் இந்த நூலில் ‘பொருள் வைப்புழி’ என்பது திருக்குறள் தொடராகும். உடம்புக்கு வருவது நோய். உயிருக்கு வருவது பிணி. ‘பிறவிப்பிணி’ என்பது காண்க. உண்மையில் பசி என்பது உடல்நோவாக இருப்பினும் விளைவு நோக்கி அதனைப் பசிப்பிணி என்றனர். செல்வத்துப் பயனே ஈதல்!. புகழுக்கு ஈதலே தலையாய காரணம். திருக்குறளில் ஈகை என்னும் அதிகாரத்தை அடுத்துப் புகழ் என்னும் அதிகாரம் இல்லறவியலின் இறுதியதிகாரமாக வைக்கப்பட்டுள்ளது. பொருளின்றி ஈதல் இல்லை. இவற்றையெல்லாம் உறழ்ந்து நோக்கின் பிறர்தம் பசிப்பிணியைப் போக்குவதே பொருள் சேர்ப்பதன் நோக்கம் என்பது புலனாம். இந்தக் கருத்துக்களையெல்லாம் உட்கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரை,

    “அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
    பெற்றான் பொருள் வைப்புழி” (226)

    என்னும் குறட்பாவை மையமிட்டு அமைந்திருக்கிறது. இனிச் ‘செவிக்குணவில்லாதபோழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்பதில் ‘ஈயப்படும்’ என்னும் சொல்லாடலின் அடிப்படையில் கல்வியளிப்பதும் அறிவுப் பசி போக்குவதே என்று எடுத்துரைக்கிறார். பவணந்தியார் கற்பித்தலை ‘‘ஈதல்’ என்பார். ‘ஈதல் இயல்பே இயம்பும் காலை’ என்பது நன்னூல். ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்பதனால் ஈதல் என்பது அழிபசி தீர்த்தல் மேலாயிற்று என்பதை நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார். எனினும் அறியாமை போக்குவதே கல்வியன்றி அறிவுப்பசிக்குத் தீனி கல்வி என்பது அவ்வளவாகப் பொருந்துமாறில்லை.

    தீதும் நன்றும் பிறர் தர வாரா

    ‘எங்கெங்கே போனாலும் நிழல் போகும் தன்னோட எனக்குள்ள சொந்தமெல்லாம் உன்னோட’ என்பார் புலமைப்பித்தன். நிழல் தன்னை உருவாக்கும் பொருளைப் பிரியாது என்பது இயற்கை. நிழல் நீளுவதற்கும் சுருங்குவதற்கும் பொருட்பரிமாணத்துள்ளேயே அடங்குவதற்கும் பொருளே காரணம். ‘வீயாது அடியுறைந்தற்று’(208) என்பார் திருவள்ளுவர். அதுபோல ஒருவனின் உயர்ச்சிக்கும் தாழ்ச்சிக்கும் அவனே காரணமன்றிப் பிறிதொருவர் காரணமாகார் என்பதை முன்னிறுத்தி அதற்காக இரண்டு வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டி இந்தக் கட்டுரையை அமைத்திருக்கிறார்.

    “நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை
    நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
    மேன்மேல் உயர்ந்து நிறுப்பானும் தன்னைத்
    தலையாகச் செய்வானும் தான்” (நாலடி. 248)

    என்னும் பாடலுக்கு உரைபோல அமைந்த கட்டுரை இது.

    உண்டால் அம்ம இவ்வுலகம்!

    வழுதியின் தொடரைத் தலைப்பாகக் கொண்ட இந்தக் கட்டுரை புவியுள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த பின்னும் வையகத்தார் மனத்துள் வாழும் மாபெரும் சான்றோர்களை நினைவுகூர்வதாக அமைந்துள்ளது. ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை’ என்னும் ஔவையின் மூதுரைக்கு விளக்கமாக அமைந்துள்ள இந்தக் கட்டுரையில்  ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதிகனையும் பகைநாடான பிரான்சுப் பகுதியில் சென்று தன்னலம் நோக்காத தொண்டு செய்த ஜெர்மனியின் ஆல்பர்ட் ஸ்வைட்சர் அவர்களையும் ஒப்பிட்டுக் காட்டுகிறது.

    யாதும் ஊரே யாவரும் கேளிர்

    பன்னாட்டு மன்றத்தில் பேசும் இந்தியத் தலைவர்களுக்காகவே பூங்குன்றனாரால் எழுதப்பட்ட வரி இது. இந்தப் பாடலின் ஏனைய வரிகள் தமிழ்ப் பேராசிரியர்கள் உட்பட பெரும்பாலோருக்குத் தெரியாது. தெரிந்து வைத்திருக்கும் விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரை முன்வைத்து வாதம் செய்வது வாதமாகவே முடியும். பல கருத்துக்களைச் சொல்கிறார் பூங்குன்றனார். அத்தனைக் கருத்துக்களுக்கும்,

    “கல்பொருது இரங்கும் மல்லல் பேரியாற்று
    நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
    முறைவழிப்படூஉம் என்பது திறவோர்
    காட்சியில் தெளிந்தனம்” (புறம். 192)

    என்னும் வாழ்வியல் உண்மையை அவர் உணர்ந்ததுதான் காரணம். இந்த வரி உட்பட பலவும் காரியமானால் ‘’திறவோர் காட்சியில் தெளிந்தமையே காரணமாகும்’. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற எண்ணம் ஏன் வரவேண்டும் என்பதற்கான விளக்கமே இந்தப் பாடல். புறநானூற்றின் இந்த வரியைத் தலைப்பாகக் கொண்டு அமைந்திருக்கும் இந்தக் கட்டுரையும் ஏனைய கட்டுரைகளைப் போலவே பல எடுத்துக்காட்டுக்களைக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது. அந்த எடுத்துக்காட்டுக்களுள் எல்லார்க்கும் தெரிந்த பழைய இலக்கிய வரிகளைவிட ஒரு சிலரே அறிந்த பாவேந்தர் வரிகள் மிக நுட்பமாகப் பொருத்தமாக எடுத்தாளப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியத்தைப் பாடுவதினின்றும் இந்தியத் தேசியத்தையும் இந்தியத் தேசியத்தைப் பாடுவதினின்று உலகத் தேசியத்தையும் பாடியவர் பாவேந்தர். பாரதியாரை ‘உலககவி’ என்பார் பாவேந்தர். அது அவருடைய கருத்து. உண்மையில் பாவேந்தரே உலககவி. இது நம் கருத்து. தனித்துவம் மிக்க இந்தக் கருத்தியல் அடிப்படையில் பாவேந்தரை இவர் அணுகியிருக்கிறார். ‘பாரதிதாசன் ஓர் உலககவி’ என்பது மிகப்பெரிய ஆய்வுக்களம்.

    “உன்வீடு உன் பக்கத்து வீட்டின்
    இடையில் வைத்த சுவரை இடித்து
    வீதிகள் இடையே திரையை விலக்கி
    நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
    ஏறு! வானை இடிக்கும் மலைமேல்
    ஏறு! விடாமல் ஏறு! மேன்மேல்
    ஏறி நின்று எங்கும் பாரடா இப்புவி மக்களை!
    பாரடா உன்றன் மானிடப் பரப்பை!
    பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
    என்குலம் என்று தன்னுடன் ஒட்டிய
    மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்!
    அறிவை விரிவு செய்! அகண்ட மாக்கு!
    விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
    அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு!
    மானிட சமுத்திரம் நானென்று கூவு!”

    இரண்டு வீட்டிற்கும் இடையில் ‘வந்த சுவர்’ இல்லை. ‘வைத்த’ சுவர்’ என்கிறார். பாரதியார் நதிகளை இணைத்து வாணிகம் பாடினார். பாவேந்தரோ நாட்டொடு நாட்டையே இணைத்து ஓருலகச் சிந்தனையை முன்னெடுக்கிறார். என்குலம் என்று தன்னுடன் ஒட்டியது மானுடச் சமுதாயம் ஆதலின் பிறப்புச் சான்றுக்கு அடுத்தபடியாக மனிதகுல ஏற்புச் சான்றை இந்தச் சமுதாயமே கொடுக்கிறது. அறிவை விரிவு செய்வதன் மூலம் பார்வையை அகலமாக்கச் சொல்கிறார். உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்! புவியை நடத்து! பொதுவில் நடத்து! என்றெல்லாம் உலகம் பாடிய கவிஞன் பாரதிதாசன். சொல்லிக் கொண்டே போகலாம். தெரிந்த பாடலாயினும் இந்தப் பாடலைக் கண்டதும் தாய்வீட்டுக்கு வந்து தாயைப் பார்த்த மகளின் பூரிப்பு எனக்கு! உலகம் தழுவிய சிந்தனைக்குப் பாவேந்தர் வரிகளை எடுத்தாண்டிருப்பது குள்ள மனிதர்க்கும் கள்ள உள்ளங்களுக்கும் புரியாதது! அருமையான கட்டுரை.

    ஏவா மக்கள் மூவா மருந்து

    ‘நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்!’ என்பது ஒரு திரையிசைப்பாடலின் பல்லவி. இது ஒரு மரபுவழிச் சிந்தனை. பிறக்கின்ற பிள்ளைகள் நல்லவர்களாக அமைவது மரபா? சூழ்நிலையா? என்பது உளவியல் அறிஞர்களிடையே இன்னும் தீராத சிக்கலாக இருந்து வருகிறது. தனக்கு முதுமை வந்த பின்னும் நரை காணாததற்கு மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்’ என்னும் பிசிராந்தையார் வரிகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை இது. கட்டுரைத் தலைப்பு கொன்றை வேந்தனுக்குச் சொந்தமாயினும் கருத்து விளக்கத்திற்காகப் பல நூல்களையும் அறிமுகம் செய்கிறார்.

    “ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது
    வைதெள்ளிச் சொல்லும் தலைமகனும் – பொய்தெள்ளி
    அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர்
    இம்மைக்கு உறுதியில் லார்” (திரிகடுகம் 49)

    என்னும் நல்லாதனார் பாட்டையும் கோப்பெருஞ்சோழன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோரையும் முன்னிறுத்திப் பாட்டை விளக்கிக் காட்டியிருக்கிறார்.

    இந்தக் கட்டுரையில் ‘மக்கள்’ என்னும் சொல்லுக்கான விளக்கமும் ‘மூ’ என்னும் ஓரெழுத்து ஒருமொழி பற்றிய விளக்கமும் கட்டுரையின் மையக்கருத்தோடு அவ்வளவாகப் பொருந்தியிருப்பதாகக் கருத இயலவில்லை. ‘சாவா மருந்து’ (82) என்னும் திருக்குறள் தொடரும் ‘மூவா மருந்து’ என்னும் இத்தொடரும் ஒப்புநோக்கத்தக்கன. ‘மூ’ என்பது மூன்றினைக் குறிக்கும் என்பதும் அது ‘மூன்றின் வேர்ச்சொல் என்பதும் எந்த அளவுக்குக் கட்டுரைப் பொருளோடு தொடர்புடையது என்பது விளங்கவில்லை. ‘மூ’ என்பது ‘மூத்தல், முதுமை அடைதல் என்னும் பொருளைத் தருகிறது’ என்பது வேர்ச்சொல் பற்றிய முந்தைய தொடருக்கு முரணாக அமைந்திருப்பது காண்க. பிந்தையதே சரியெனின் முந்தையதைத் தவிர்த்திருக்கலாம். ஒவ்வொன்று. ஈரிரண்டு. மும்மூன்று, நன்னான்கு, ஐயைந்து என்றவிடங்களில் எல்லாம் அந்தந்த எண்ணின் முதல் எழுத்தே ஓரெழுத்து ஒரு மொழியாக அமைந்திருத்தல் காண்க. அதனாலேயே அவை வேர்ச்சொல் ஆகிவிடாது. இனிச் ‘சாவா மருந்து’ என்பதற்குச் சாவாமைக்குக் காரணமாகிய மருந்து எனப் பொருள் விரிக்கும் பரிமேலழகர் ‘அமிழ்தம்’ என்னும் ஒற்றைச் சொல்லால் அதற்கு உரைகாண்பதும் நோக்கத்தக்கது.

    கேள்வியும் விந்தையும்

    ‘கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா?’ என்ற கண்ணதாசன் வினாவிற்கு இதுவரை விடையில்லை. ஒரு கருத்தினை அல்லது கற்பனையை வினாவடிவில் அமைப்பது என்பது தமிழ்க்கவிதை உலகிற்கே சிறப்பானதொரு கவிதை உத்தியாகும். ‘அளிதோ தானோ? குளித்து மணல் கொண்ட கல்லா இளமை யாண்டுண்டு கொல்லோ?’ என்று விடைகாண முடியாத கேள்வியைத் தொடித்தலை விழுத்தண்டூன்றினார் அன்றைக்கு வினவினார். ‘கனிவரும் காலத்து ஐய! பூக்கொய்யக் கருதலாமோ?’ என்று கம்பன் வினவினான். கார்பெற்ற தோகையோ கண்பெற்ற வாள்முகமோ? என்பார் புகழேந்தி! ‘பார்சிறுத்தலின் படை பெருத்ததோ? படை பெருத்தலின் பார் சிறுத்ததோ?’ என்பார் செயங்கொண்டார். ‘கண்ணிரண்டையும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?’ என்பார் பாரதி! ‘செந்தமிழுக்குத் தீமை வந்தபின்னும் இந்தத் தேகம் இருந்தொரு லாபம் உண்டோ?’ என்பார் பாவேந்தர். இந்த நெறியை விளக்குவதே கட்டுரையாசிரியர் நோக்கம் என்பது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

    உரையைக் கட்டுரையாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் தலைப்பே கேள்வியும் விந்தையும் எனச் சுவையின்றி நிற்கிறது. காமத்துப்பால் எடுத்துக்காட்டுக்கள் ‘கேள்வி’ என்பதற்கு வினா என்னும் பொருண்மையையே முன்னெடுத்தலின் வினாவும் விந்தையும் என்றே இருந்திருக்கலாம் அல்லவா?

    கட்டுரையாசிரியர் சொற்பொருள் விளக்கம் தேவைப்படாத இடங்களிலும் அதனைக் காண முற்படுவதும் அனுபவத்தின் வெளிப்பாடாகிய கவிதைகளை அகராதிப் பொருளைக் கொண்டு சுவைக்க முற்படுவதும் கட்டுரைச் சுவை இல்லாத முடவனாகிவிடுகிறது. மேலும் இலக்கியச் சுவை பயக்க வந்த விந்தையான வினா உத்தி பற்றிய இந்தக் கட்டுரையின் இறுதி, அறிவியல் உண்மைகளுக்கு அடிப்படை வினாக்களே என அறிவியல் கட்டுரையாக நிறைவு பெறுகிறது என்பது சுட்டத்தகுந்தது.

    பாப்லோ நெருதா எழுதிய Book of Questions என்னும் வினாக்களாலான கவிதைத் தொகுதியை முன்மாதிரியாகக் கொண்டு ஈரோடு தமிழன்பன் எழுதிய கனாக் காணும் வினாக்கள் (2004), இன்னும் சில வினாக்கள் (2015) எனும் வினாக்களாலான கவிதைத் தொகுதிகள் இரண்டும் இங்கே நினைக்கத்தக்கன.

    வாழ்வியற் சிந்தனைகள்

    இந்தத் தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் மூன்றும் வாழ்க்கையைப் பற்றிய வரையறை, இல்லறம், இல்லறத்தில் பொதுநலன் என்னும் பொருண்மைகளை உள்ளடக்கி நிரலாக அமைந்திருக்கின்றன.    இருப்பது (Existing) என்பது வேறு., வாழ்வது (Living) என்பது வேறு என்னும் வேறுபாட்டினைத் துல்லியமாக விளக்கும் ஆசிரியர்,

    “வாழ்க்கை என்பது புகைப்படலம் போன்றது’ என்கிறது விவிலியம். ‘வாழ்க்கை என்பது ஒரு நடமாடும் நிழல்’ என்கிறார் சேக்‌ஸ்பியர். ‘வந்ததோர் வாழ்வும் இந்திரசாலக் கோலம்’ என்கிறார் தாயுமானவர். ‘வாழ்வை குடங்கவிழ் நீரோட்டம் என்றே இரு’ என்கிறார் பட்டினத்தடிகள்”

    என ஆன்றோர் பலரின் கருத்துக்களை நினைவூட்டுகிறார். வாழ்க்கை என்பதன் பொருண்மை காலந்தோறும் வேறுபட்டு வந்திருக்கின்றன என்பதை முன்னெடுக்கும் ஆசிரியர், ‘உயிர் வாழ்தல்’, ‘வாழ்வாங்கு வாழ்தல்’, ‘இசைபட வாழ்தல்’, ‘பிறர்க்கென வாழ்தல்’ முதலிய வள்ளுவத் தொடர்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்.

    கிழக்கில் தோன்றும் கதிரவன் தன் பயணத்தை மேற்கு நோக்கி அமைத்துக் கொள்வதைப் போல வாழ்க்கை ஒரு குறிக்கோளோடு அமைதல் வேண்டும் என்பார் அப்பர் பெருமான். வாழ்க்கையையும் பாடலையும் முன்னெடுக்கிறார். படிப்பும் பதவியுமே வாழ்க்கை என்னும் போக்கில் நடக்கும் கற்பித்தல் பணியைச் சாடும் ஆசிரியர் மனிதநேயத்தின் அடிப்படையில் மனிதனை உருவாக்குவதே கல்வி என்பதை அண்ணல் காந்தியடிகள், தந்தை பெரியார், வ.உ.சி. முதலிய சான்றோர்களைக் கொண்டு தன் பார்வைக்கு வலிமை சேர்க்கிறார்.

    “ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் மூன்று படிநிலைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மழலைப் பருவம் முதல் மணமாகும்  வரையிலான தனிமனித வாழ்க்கை நிலை. திருமணம் ஏற்ற நாள் முதல் இறுதி வரையிலான இல்லற வாழ்க்கை அல்லது குடும்ப வாழ்க்கை நிலை இந்த இரண்டு நிலைகளிலும் இணைந்து வரும் குமுக வாழ்க்கை. இம்மூன்றும் தனித்தனி தீவுகள் அல்ல. ஒன்றோடொன்று தொடர்புடையன ஒன்றின் தொடர்ச்சியாக அமைவன ஒன்றைச் சார்ந்து அமைவன” என்ற முன்னுரையுடன் வாழ்வியலின் அடுத்த நிலை பற்றிய தம் கருத்துக்களை விரிவாக்குகிறார் ஆசிரியர்.

    ‘தன்னம்பிக்கை, தன்னறிவு, தன்னடக்கம் ஆகிய முப்பெரும் பண்புகளே மனித மேம்பாட்டுக்கு உரிய உயரிய பண்புகளாகும்’ என்னும் டென்னிசனின் கருத்தினைத் தனிமனிதன் உயிர்வாழ்தல் நெறியாகக் கூறுகிறார் ஆசிரியர்,

    “விட்டுக் கொடுத்தவர்கள் ஒருநாளும் கெட்டுப் போவதில்லை. கெட்டுப் போனவர்கள் ஒருநாளும் விட்டுக்கொடுத்ததில்லை’ என்னும் பேரறிஞர் அண்ணாவின் கருத்தினை இல்லறத்தின் வாழ்வியல் நெறிக்கான அறிவுரையாக நினைவூட்டுகிறார்.

    ‘பொதுவாழ்க்கை’ என்னும் சமுதாய வாழ்க்கை பெரும்பாலும் ஈதலறத்தால் ஆனது. பிறர்க்குக் கொடுத்துப் பெறுகிற இன்பத்தை அடிப்படையாகக் கொண்டது. பெறுகிறவன் பெறுகிற இன்பத்தைத் தான் அடைகிற இன்பமாகக் கருதுவதையே சமுதாய வாழ்க்கையின் இசைபட வாழ்தலின் சாரமாக எடுத்துரைக்கிறார். இல்லறத்தின் அடிப்படையாகப் பொதுநலம் அமைதல் வேண்டும் என்பதுதான் தமிழ்மரபு.

    “காமஞ்சான்ற கடைக்கோட் காலை
    ஏமஞ் சான்ற மக்களோடு துவன்றி
    அறம்புரி நெஞ்சின் கிழவன் கிழத்தியொடு
    சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”

    என்னும் நூற்பாவால் இதனை நன்கு புரிந்து கொள்ளலாம். இந்த நூற்பாவின் விளக்கவுரையே பாவேந்தர் எழுதிய குடும்ப விளக்கு. அதில் அமைந்துள்ள ஐந்து இயல்களையும் இல்லறம் தொடங்கிப் பொதுநலம் பேசும் சமுதாய இலக்கியமாகவே படைத்திருக்கிறார். அதனால்தான் இந்த நூலாசிரியர் திருமாறன் குடும்ப விளக்கில் அமைந்துள்ள,

    “அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்
    அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்பதல்லால்
    இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்?
    என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவும் இல்லை!
    ………………………………………………………………………………………………………
    தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாம்!
    தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்!
    எமதென்று சொல்லுகின்றோம் நாடோ றுந்தான்!
    எப்போது தமிழனுக்குக் கையா லான
    நமதுழைப்பை ஒருகாசு செலவு செய்தோம்?
    நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்
    அமைவாகக் குந்தி நினைத்தோமா? இல்லை.,
    அனைவரும் இவ்வாறு இருந்தால் எதுநடக்கும்?”

    என்னும் பள்ளியறைப் புரட்சிப் பாடலை எடுத்துக் காட்டித் தனிமனிதன், குடும்பம் இல்லறத்தோடு கூடிய சமுதாயத் தொண்டு ஆகியவற்றை விளக்கிக் காட்டுகிறார்.

    வரலாற்றுப் பதிவுகள்

    வாழ்வியல் பதிவுகள் என்பன வாழ்க்கையைப் பற்றிய விளக்கமன்று. வாழ்ந்தவர்களின் வரலாறுகளிலிருந்து பெறப்பட்ட படிப்பினைகளின் தொகுப்பு.  எனவே வாழ்வியலை விளக்கும் எந்தப் படைப்பானாலும் சான்றோர்களின் வரலாற்று அடிப்படையில் படைக்கப்பட வேண்டும். இந்த நூலாசிரியர் பெரும்பாலும் அனைத்துக் கட்டுரைகளிலும் சான்றோர்கள் அவர்தம் வாழ்வில் கண்ட பட்டறிவு நிகழ்ச்சிகளைப் பொருத்தமாக இணைத்திருப்பது அவர்தம் கட்டுரை வன்மையையும் பன்னூற் பயிற்சியையும் வரலாற்று அறிவையும் ஒருசேரக் காட்டுகிறது.

    மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் ஐம்புலனறிவுக்கு அப்பாற்பட்டு உணரப்படும் அறிவினை மூன்றாவது கண் என உருவகப்படுத்தும் ஆசிரியர். ரே சார்லஸ் ராபின்சன் (Ray Charless Robinson) என்னும் இசைமேதையின் வரலாற்றைச் சுட்டுகிறார். ஏழு வயதில் தன் புறக்கண் பார்வையை முற்றிலுமாக இழந்த ராபின்சன் தன் மூன்றாவது கண்ணால் முயன்று உலகப்புகழ் பெற்ற பாடகராகவும் பாடலாசிரியராகவும் திகழ்ந்தார் என்பதைப் பொருத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். இவ்வாறு பார்வையிழந்து அட்டாவதானம் செய்து புகழ்பெற்ற கோவில்பட்டி இராமையா அவர்களின் வரலாற்றையும் இணைத்துக் காட்டுகிறார்.

    தன்னைக் காண வந்தவரிடம் (இருந்து கொண்டே) தான் இல்லை என்று சொல்லச் சொன்னார் தான் பணியாற்றிய ஒரு வணிக நிறுவனத்தின் தலைவர். பணியாளாக இருந்த சிறுவன் பொய் கூறமாட்டேன் என்று சொல்லித் தன் வேலையை இழந்தான். வேலையிழந்த அந்தச் சிறுவன் பின்னால் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் புகழடைந்தான். உண்மை பேசுவதன் உயர்வை அரிச்சந்திரனை மட்டும் கொண்டு விளக்கி வந்த நீண்ட நெடிய மரபில் அறிஞர் வ.சுப. மாணிக்கம் ஐயா அவர்களின் வரலாற்றைப் பதிவு செய்து மண்வாசனை மணக்கச் செய்கிறார் கட்டுரையாசிரியர்.

    முறையான பயணச் சீட்டு இருந்தும் ஏறிய புகைவண்டியில் இருந்து இறக்கிவிடப்பட்ட மோகன் என்னும் வழக்கறிஞர் ஆயிரம் மனப்போராட்டங்களுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பாமலே  விடுதலைப் போராட்டத்திற்கான அடித்தளத்தை அங்கேயே அமைத்தார். நம்முடைய இந்திய ஒன்றியம் அந்நிய ஆட்சியிலிருந்து விடுபடத் தொடங்கப்பட்ட விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய அந்த வழக்கறிஞரே அண்ணல் காந்தியடிகள் என்னும் வரலாற்றுக் குறிப்பை மற்றொரு கட்டுரையில் பதிவிடுகிறார்.

    ‘நினைக்கப்படும்’ என்னும் கட்டுரையில் தென்னாப்பிரிக்காவில் 22 ஆண்டுகள் தங்கி அந்த நாட்டு மக்களுக்காக விடுதலைப்போர் நடத்திய அண்ணல் காந்தியடிகளின் வரலாற்றை நினைவு கூர்கிறார். தேவாலயங்களில் நிகழும் கிறிஸ்தவத் திருமணங்கள் செல்லுபடியாகாது என்னும் சட்டத்தினை எதிர்த்து இந்துவாகிய அண்ணல் காந்தி அயல்நாட்டில் நடத்திக் காட்டிய சட்டப்போராட்டம் உலக வரலாறு காணாதது. அந்தப் போராட்டத்தில் அவருக்குத் துணைநின்ற வள்ளியம்மை என்னும் தமிழ்ப் பெண்ணின் தியாகத்தையும் கட்டுரையாசிரியர் தெளிவாகப் பதிவிடுகிறார். தென்னாப்பிரிக்காவில் காந்தி பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களை ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் பதிவிட்டிருக்கிறார்.

    சான்றோர்கள் அவர்கள் வாழுகின்ற காலத்தில் அந்தச் சமுதாயத்தினரால் மதிக்கப்படுவதில்லை என்பது தமிழ்ச் சமுதாயத்தின் வரலாறு. சான்றோர்களின் தலையெழுத்து. முதுபெரும் தமிழறிஞரும் கப்பலோட்டிய தமிழனுமாகிய வ.உ.சி. அவர்கள் சிறைத்தண்டனை முடிந்து வெளியேறும்போது சுப்பிரமணிய சிவாவும் மற்றொருவர் என இருவர் மட்டும் சிறைவாசலில் வரவேற்றனர். வரலாற்றில் நினைக்கப்படுகிற காட்சி இது. ஆனால் நிகழ்ந்திருக்கக் கூடாத நிகழ்ச்சி இது.

    ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்னும் கட்டுரையில் சிலப்பதிகாரச் செம்மல் ம.பொ.சி. அவர்களின் கடும் உழைப்பையும் தன் முயற்சியையும் முன்னிறுத்திச் சாதாரண அச்சுக்கோப்பாளராகத் தொடங்கி மாபெரும் இலக்கிய வாதியாகத் திகழ்ந்த வரலாற்றைப் பதிவிடுகிறார். ம.பொ.சி.யின் வாழ்க்கை தனி வாழ்க்கை என்றால், தமிழ்ச் சமுதாயத்திற்குத் தொடர் கேடுகளைக் கொண்டு வந்த சுந்தரபாண்டியனைப் பற்றிய குறிப்பினையும் பதிவு செய்திருக்கிறார். மாலிக்காபூரை நோக்கிச் சுந்தரபாண்டியன் வடக்கு நோக்கி வைக்கப்பட்ட தலை இன்னும் தெற்கு நோக்கித் திரும்பவில்லை என்பதும் சிந்திக்கத்தக்கதே!

    ‘என்னைக் கவர்ந்த இலக்கியக் காட்சிகள்’ என்னும் கட்டுரையில் சமுதாயத் தொண்டர் சௌந்தரபாண்டியனார் மகனுடன் கொடைக்கானல் ஏரியில் பயணம் கொண்டிருந்த இரத்தினவேல் தேவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பினைப் பதிவிடுகிறார். பாண்டியனார் மகனார் ஏரியில் விழுந்து உயிர்விடப், பதறிப்போன தேவர் நடுங்கிக் கொண்டிருந்தார். செய்தி அறிந்த பாண்டியனார் மகனிழந்த வேதனையை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டுத் தேவரைப் பாதுகாத்த அந்தக் கால நிகழ்வை இந்தக் கால சமுதாயத்திற்காக எழுத்தாக்கியிருக்கிறார். இந்த நூலில் உள்ள இத்தகைய வரலாற்றுப் பதிவுகளே வரலாற்று உணர்வைத் தூண்டும் சிறப்பினையுடையன.

    நிறைவுரை

    பேராசிரியர் முனைவர் திருமாறன் பேராசிரியர் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மொழிப்புலமை பெற்ற மொழிப்பற்றாளர். ஏதும் தெரியாமலேயே எல்லா விருதுகளையும் பெற்றுவிடுவோர் இடையில் எல்லாம் தெரிந்தும் எந்த விருதும் பெறாதவர். பெற விரும்பாதவர். சொந்தக் காசைச் செலவழித்து இந்த நூலை வெளியிட்டிருக்கிறார். இன்னும் சில நூல்களையும் வெளியிட்டிருக்கிறார். பள்ளிகளில் அறநெறி வகுப்பு ஒழிக்கப்பட்ட நிலையில் இத்தகைய நூல்களைப் பள்ளித் தமிழாசிரியர்கள் வாங்கி மாணவர்களுக்குப் பரிசளிக்கலாம். சில நிமிடப் பேச்சுக்களைப் பல பக்கக் கட்டுரைகளாக உருமாற்றம் செய்கிறபோது ஏற்பட்டிருக்கும் தவிர்க்க இயலாத சில சறுக்கல்களைத் தவிர அமைப்பாலும் உள்ளடக்கத்தாலும் சிறக்கிறது இந்த நூல். ஒரு ஊரக நூலகத்துக்குள் ஊரவலம் சென்று வந்த மனநிறைவு எனக்கு. இந்த நூலை நான் படித்தேன்! சுவைத்தேன்! நீங்கள் நிறைவடைய வேண்டாமா? உங்களுக்காகப் பகிர்கிறேன்!

    (தொடரும்…)

    Share
  • (Peer Reviewed) தமிழ்க்கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள் (திருக்குறள்)

    (Peer Reviewed) தமிழ்க்கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள் (திருக்குறள்)

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தமிழ்க்கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள் (திருக்குறள்)

    முன்னுரை

    கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என இலக்கிய வடிவங்கள் பல. இவற்றுள் கவிதைக்குரிய வடிவங்கள் பா, இனம் எனப் பல்கிப் பெருகும். பாக்களுள் வெண்பா தலையாயது.  எழுவகை வெண்பாக்களில் குறள் வெண்பா என்பதும் ஒன்று.  தமிழ்க்கவிதை வடிவங்களில் மிகக் குறுகிய வடிவம் இதுதான். ‘குறுகத்தரித்த குறள்’ என்பது ஆன்றோர் வாக்கு. குறள் என்பது யாப்புக்கான குறியீடு. அது திருக்குறளைக் குறிக்கிறபோது அடையடுத்த ஆகுபெயராய் நிற்கும். நுட்பமாக நோக்கினால் ‘குறள்’ என்னும் யாப்பே அடைபெற்று அழைக்கப்படுவது தெரியவரும். அதாவது ‘குறள்’ என்பது கருவியாகுபெயராய் நூலை உணர்த்திப் பின் அடைபுணர்த்து அழைக்கப்படுகிறது என்பதாம். திருக்குறளில் திருவள்ளுவர் தமது கருத்துக்களைக் குறள் வெண்பாவில் பதிவு செய்திருந்தாலும் அத்தனைக் குறட்பாக்களையும் ஒரே நெறியில் பதிவு செய்யவில்லை. தமது மெய்யறிவால் உணர்ந்த சிந்தனைகளைப் பல உத்திகளைக் கையாண்டு பதிவு செய்திருப்பதை  அறிய முடிகிறது. ‘தமிழ்க்கவிதைகளின் வெளிப்பாட்டு உத்திகள்’ என்னும் பேராய்வுக் களத்தில் ஒரு துளியாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

    கட்டுரையின் கருதுகோள்

    ‘திருக்குறளில் வெளிப்பாட்டு உத்திகள்” என்பதையே இக்கட்டுரை தனக்குரிய கருதுகோளாகக் கொண்டு அமைகிறது.

    ஆய்வுக்களம் – எல்லை – நோக்கம் – பயன்

    முப்பால்களாக இயங்கும் திருக்குறளில் மூன்றாவது பகுப்பாகிய காமத்துப்பால் புலனெறிவழக்கப் புனைவாகத் தலைமக்கள் கூற்றுப் பகுதியென அமைந்துவிடுகிறது. ஆதலின் காமத்துப்பாலில் திருவள்ளுவர் நேரடிக் கூற்றாக எதனையும் பெற முடியாத நிலையில் ஏனைய அறம், பொருள் என்னும் இருபாலில் அமைந்துள்ள ஆயிரத்து எண்பது குறட்பாக்களே (1080) ஆய்வுக்களமாகவும் எல்லையாகவும் கொள்ளப்படுகிறது.

    வாழ்வியல் நெறிகளைப் பதிவு செய்ய திருவள்ளுவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட குறுகிய வடிவமான குறள் வெண்பாவில் அவர் கையாண்ட உத்திகளை ஆராய்வதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொள்கிறது.

    திருக்குறளில் அமைந்துள்ள வெளிப்பாட்டு உத்திகளை ஆராய்ந்து வடிவமைக்கப்படும் இக்கட்டுரையால் தமிழியல் ஆய்வுக்களப் பொருண்மை   விரிவும் ஆழமும் உடையதாகும் என்பதையும் இலக்கியச் சுவைஞர்கள் உத்திகளின் நோக்கத்தையும் திருவள்ளுவரின் படைப்பாளுமையையும் அவர்தம் பண்பாட்டுக் கூறுகளையும் ஒருசேர உணர்ந்து கொள்ள இயலும் என்பதையும் பயனாகக் கருதுகிறது.

    ஆய்வு அணுகுமுறையும் நெறிமுறையும்

    திருக்குறளில் விரவிக்கிடக்கும் பல்வகை வெளிப்பாட்டு உத்திகளை அடையாளம் கண்டு வெளிப்படுத்துவதற்கேற்ற வகையில் ‘அமைப்பியல்’ அணுகுமுறையும், திருக்குறளுக்குப் பிந்தைய பல்வகை இலக்கிய உத்திகளின் பயன்பாடு ஒப்பிட்டுக் காட்டப்படுதலின் ‘ஒப்பீட்டு முறைத் திறனாய்வு’ நெறியும் இக்கட்டுரையில் பின்பற்றப்பட்டுள்ளன.

    இலக்கியத்தில் உத்திகள்

    ஒரே பொருளை ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் வெளிப்படுத்தும் நெறிக்கு ‘உத்தி’ என்று பெயர். “இதனை வேற மாதிரிச் செய்யலாமா?” என்று கணித ஆசிரியர் கேட்பதைப் போன்றது இது. கணிதம் எல்லாருக்கும் இனிக்காது. இலக்கியம் பெரும்பாலும் இனிக்கும். இதனை எளிமையாக விளக்கலாம். தலைமக்கள் இருவருக்குமிடையில் காதல் வளர்கிறது. வளர்கின்ற காதல் ஊராருக்குத் தெரியவரும். இது உலகியல். இது இலைமறை காயாகத் தெரியும் போது அதனை ‘அம்பல்’ என்று இலக்கியங்கள் கூறும். ‘இன்னாருக்கு இன்னாரோடு தொடர்பு’ எனத் தெளிவாகத் தெரிகிறபோது அது அலர் என அடையாளப்படுத்தப்படும். இதனை ‘அலர் அறிவுறுத்தல்’ என அகத்துறையிலக்கணம் கூறும். தற்காலத் திரையிசைப்பாடலில் அலருக்கு ஆளான நான்கு உள்ளங்களை வெளிப்படுத்தும் பாடலுக்கான காட்சியைச் சித்திரிக்கும் இரண்டு பதிவுகளை இங்கே காணலாம்.

    “கண்ணா! ஜோடிக்குயில் மாலையிடுமா? இல்லை ஓடிவிடுமா? 1

    என்று தலைமகள் ஐயப்படுகிறாள்.

    ‘கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா? கங்கை வற்றி விடுமா?” 2

    என்று தலைமகன் ஆறுதல் கூறுகிறான். தன் அவசரத்திற்கான காரணத்தைத் தலைமகள் அங்கே பதற்றத்துடன் பதிவிடுகிறாள் இப்படி!

    “உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில்
    என்னென்னமோ பேச்சிருக்குது” 3

    இந்தப் பதற்றம் ஊராரின் அலர் தன்னைத் துரத்த தன்னை விரைந்து மணமுடித்துக் கொள்ள வேண்டும் எனத் தலைமகனை வற்புறுத்துவதாக அமைகிறது. “உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது!” 4 என்னும் தொடரே அலரைக் குறிப்பது. இதே அலர்தூற்றலை மற்றொரு பாடல் வேறு மாதிரியாகப் பதிவு செய்திருக்கிறது.

    “பழச  மறக்கலையே,
    பாவி மவ நெஞ்சு துடிக்குது!
    ஒன்னையும் என்னையும் வச்சு
    ஊரு சனம் கும்மியடிக்குது” 5

    “உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது’ என்னும் வெளிப்பாடு ஓர் உத்தி. ‘ஊரு சனம் கும்மியடிக்குது’ என்பது மற்றோர் உத்தி. பொருள் ஒன்றுதான். தொல்காப்பியம் தொடங்கி இன்றைய திரையிலக்கியம் வரை அலருக்கு அஞ்சுபவள் பெண்ணாகவே சித்திரிக்கப்படுகிறாள் என்பதும் நோக்கத்தக்கது. எளிய புரிதலுக்காகவே இந்தத் திரையிசைப்பாடல் எடுத்துக்காட்டாகக் கொள்ளப்பட்டது. (இத்தகைய திரைப்பதிவுகள் முழுமையான இலக்கியத் தகுதியினைப் பெறுவதற்கு உரியனவே என்பது கட்டுரையாளர் கருத்து)

    பழந்தமிழ் இலக்கியப் பொருண்மைகளும் உத்திகளும்

    குறட்பாவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உத்திகள் பற்றிய ஆய்வே இதுவாயினும் கட்டுரைப்பொருள் விளக்கம் கருதி ஒரு சில எடுத்துக்காட்டுக்கள் இந்தப் பத்தியில் தரப்படுகின்றன. பழந்தமிழ் இலக்கியத்தின் பாடுபொருள் பற்றிய கொள்கை ‘அகம் புறம்’ என வரையறுக்கப்பட்டது. இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக எழுவகைத் திணைகளாகவும் பகுக்கப்பட்டன. அதாவது அகம் என்பது பொருட்பாகுபாடு. முல்லை, குறிஞ்சி முதலியன திணைப்பாகுபாடு. புறம் என்பது பொருட்பாகுபாடு. ‘வெட்சி கரந்தை’ முதலியன திணைப்பாகுபாடு. ஒவ்வொரு பொருட்பகுதியின் உட்பிரிவுகளான திணையும் துறைகளுமே ‘பாடுதுறை’களாயின. இவற்றை மீறி எந்தப் பாடலையும் யாரும் பாடிவிட இயலாது. முடியாது. கூடாது. அகத்திணை முழுமையும் தலைமக்கள் கூற்றுப்பகுதிகளே! அதாவது தலைவன், தலைவி, தோழி, செவிலி, நற்றாய், கண்டோர் முதலியோரின் கூற்றுப் பகுதிகளே கவிதைக் களங்களாகும். எந்தப் புலவனும் காதலைப் பற்றிய தனது கருத்தினை நேரடியாகப் பதிவு செய்ததாகக் குறிப்பில்லை. காதலைப் பற்றிய எந்தக் கருத்தும் அதனை வெளிப்படுத்திய பாத்திரங்களின் கருத்தாகவே நோக்கப்படும். இந்தப் புலனெறி வழக்கம் திருக்குறள் காமத்துப்பாலிலும் தொடர்ந்தது. வரையறைக்குட்பட்ட இந்தக் குறுகிய பொருட் பகுதிகளுக்குள்ளேயே இத்தனை இலக்கியங்கள் என்றால் அவற்றைக் ‘கூறியது கூறல்’ என ஒதுக்க இயலுமா? இயலாது. காரணம் ஒரு துறையைப் பற்றிப் புலவர் பலர் பாடியிருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவகை உத்தியினால் சிறந்து நிற்கிறது. ‘ஐங்குறுநூறு’ முதலிய இலக்கியங்களில் ஒரு துறைக்குப் பத்துப்பாடல்கள் எனப் பாடப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு பாடலும் தனித்தன்மையுடையன. புறத்திணைத்துறைகளும் அத்தகையனவே மருதன் இளநாகனார் பாடிய கையறுநிலையும் மாங்குடி  மருதனார் பாடிய கையறுநிலையும் ஒன்றாகாது. உத்திகளால் சிறந்திருந்தாலேயொழிய இத்தகைய இலக்கியங்கள் இவ்வளவு காலம் நிலைபெற்றிருக்க இயலாது. ‘அரைத்த மாவையே அரைத்திருந்தாலும்’ பலகாரச் செய்முறை மாறுபட்டிருப்பதால் சுவை வேறுபடுவதைப் போல இந்தக் கவிதைகளின் உத்திகள் மாறுபட்டிருப்பதால் காலத்தை வென்று நிற்கின்றன எனலாம்.

    மறையோன் புகழும் கோவலன்

    காப்பியத்தின் பாத்திரங்கள் படைப்பாளனால் உருவாக்கப்படுகின்றன. கவிதைச் சுவையும் கதைப்போக்கும் பின்னிப் பிணைந்த நிலையில் தேவையற்ற பதிவுகளைத் தவிர்த்துவிடுவது படைப்பாளனுடைய உரிமை. அந்த வகையில் குற்றமற்ற கோவலன் பாண்டியனால் கொலைக்கு ஆளாகத் தன் கணவன் குற்றமற்றவன் என்பதை உறுதி செய்யும் பொறுப்பில் கண்ணகி. இந்தக் கதையில் கோவலன் துன்பத்திற்கு என்ன காரணம் என்பதை யாரும் அறிந்து கொள்ள முடியாது. காப்பியத்தைப் பொருத்தவரையில் அவன் காரணமின்றிக் கண்ணகியைப் பிரிந்து மாதவியிடம் சென்றுவிட்டான் என்பதைத் தவிர கொலைபடும் அளவுக்கு அவன் செய்த குற்றம் ஏதுமில்லை. தன்னைவிட்டுப் பிரிந்து இல்லறத்தில் சிக்கல் ஏற்படுத்திய கோவலனுக்காகப் பரிந்து மதுரையைக் கண்ணகி தீக்கிரையாக்குகிறாள் என்றால் அவனுடைய பிற செயல்கள் அவளைக் கவர்ந்திருக்க வேண்டும். சமுதாயத்தில் அங்கீகரிக்கப்படாத ஒருவனுக்காக ஒரு பத்தினிப்பெண் வேற்று நாட்டு அரசவையில் நீதி கேட்டு நிற்கிறாள் என்றால் அன்றைய சமுதாயம் கோவலனை நன்கு அறிந்திருக்க வேண்டும். குறைந்த அளவு புகாரில் அவனுடைய பெருமைகள் உயர்ந்த நிலையில் இருந்திருக்க வேண்டும். கோவலன், கண்ணகி மறைவு புகாரின் பேரவலத்திற்குக் காரணமானது என்பதை அறியமுடிகிறது. ஆனால் இந்தப் பெருமைக்கான செயல்களைக் காப்பியத்தில் எந்த இடத்திலும் பதிவு செய்ய இயலாது. செய்திருந்தால் காப்பியச் சுவை குன்றிவிடக் கூடும் என அடிகள் கருதியிருக்கலாம். அவன் மாதவியோடு வாழ்ந்த பதினாறு ஆண்டு காலத்தில் புகாரில் அவன் செய்த புகழுக்குரிய செயல்களை இளங்கோவடிகள் பதிவு செய்ய விரும்புகிறார். அடுத்த காதைகளில் கொலைபடும் கோவலன் மீது கற்பாருக்கு அனுதாபம் ஏற்பட வேண்டும் என அவர் உள்ளம் விரும்புகிறது. தக்கதொரு இடத்தினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அவருக்கு மாடலமறையோன்  கிடைத்துவிடுகிறான். மதுரை நோக்கிச் செல்லும் கோவலனையும் கண்ணகியையும் நோக்கி அவன் கோவலன் செய்த அறச்செயல்களையெல்லாம் பட்டியலிடுகிறான். மணிமேகலை பிறந்தநாள் விழாவில் அந்தணனைப் புடைத்தழிக்க முயன்ற மதங்கொண்ட யானையின் மீதேறி அடக்கிய செய்தியைப்

    “பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக்
    கடக்களிறு அடக்கிய கருணை மறவ!” 6

    என்று கூறிப் பாராட்டுகிறான் மாடலமறையோன். கீரிப்பிள்ளையைக் கொன்று மனைவி செய்த பாவத்துக்காக அவளைப் பிரிந்த கணவனைக் கண்டு அவன் குடும்பத்தை ஒன்று சேர்த்து வைத்த வரலாற்றைத்,

    “தானம் செய்தவள் தன் துயர் நீக்கிக்
    கானம் போன கணவனைக் கூட்டி
    ஒல்காச் செல்வத்து உறுபொருள் கொடுத்து
    நல்வழிப்படுத்த செல்லாச் செல்வ!”7

    என்னும் வரிகள் காட்டுகின்றன. வெளியூர் சென்று திரும்பி வந்த கணவனுக்கு அவன் மனைவி பற்றிய தவறான தகவலைத் தந்தவனைச் சதுக்கப்பூதம் அடித்துக் கொல்ல எத்தனிக்க, அவன் தாய் பதற, பொய்க்கரி புகன்ற அவனைக் காப்பாற்ற முயல்கிறான் கோவலன். மறுத்த பூதம் பொய்க்கரி கூறியவனைக் கொல்ல அவனுடைய தாயோடு சுற்றத்தாரையும் கோவலன் காப்பாற்றினான்.

    “பத்தினி ஒருத்தி படிற்றுரை எய்த
    மற்றவள் கணவற்கு அறியோன் ஒருவன்
    அறியாக் கரிபொய்த்து அறைந்துணும் பூதத்து
    கறைகெழு பாசத்துக் கையகப்படலும்
    பட்டோன் தவ்வை படுதுயர் கண்டு
    கட்டிய பாசத்துக் கடிது சென்றெய்தி
    என்னுயிர் கொண்டு ஈங்கு இவனுயிர் தாவென
    நன்னெடும் பூதம் நல்கா தாகி
    நரகனுயிர்க்கு நல்லுயிர் கொண்டு
    பரகதி இழக்கும் பண்பு ஈங்கில்லை
    ஒழிக நின் கருத்தென உயிர்முன் புடைப்ப
    அழிதரும் உள்ளத்து அவளொடும் போந்து அவள்
    சுற்றத்தோர்க்கும் தொடர்புறும் கிளைஞர்க்கும்
    பற்றிய கிளைஞரின் பசிப்பிணியறுத்துப்
    பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்” 8

    மறையோனின் இந்தப் பேச்சை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறாளே தவிர மறுமொழி சொன்னாள் அல்லள். மகிழ்ந்தாளும் அல்லள். வருந்தினாளும் அல்லள். ‘இத்தகைய நல்லவனா கோவலன்?” என்னும் நல்லெண்ணத்தைக் கற்பார் மனத்தில் வரவழைப்பதற்காக அடிகள் செய்திருக்கும் காப்பிய உத்தி இது.

    இராமனைக் காப்பாற்றும் கம்பன் உத்தி

    பரம்பொருளாகிய பெருமாளை மனிதனாக்கிக் காப்பியம் படைத்த கம்பன் சில நேர்வுகளில் பிழைசெய் இராமனைக் காப்பாற்றும் நிலைக்கும் வரவேண்டியிருப்பதையும் காண முடிகிறது. வேறு வகையாகச் சொன்னால் தான் படைத்த பாத்திரத்தின்வழித் தானே செல்ல வேண்டிய நிலை வருகிறபோது சற்று நிதானிக்க வேண்டியிருக்கிறது என்பதாம். சுக்ரீவன் வாலியிடையே நடந்த போருக்கும் இராமனுக்கும் எள்ளின் முனையளவும் தொடர்பில்லை. வாலிக்கும் இராமனுக்கும் நேரடிப் பகையென்பதே இல்லை. தன்னைக் கொல்ல இராமன் வந்திருக்கிறான் என்று தன் மனைவி தாரை கூறியபோது அந்த நொடிவரை,

    “உழைத்த வல் இரு வினைக்கு ஊறு காண்கிலாது
    அழைத்து அயல் உலகினுக்கு அறத்தின் ஆறெலாம்
    இழைத்தவர்க்கு இயல்பு அல இயம்பி என் செய்தாய்?
    பிழைத்தனை பாவி! நின் பெண்மையால் என்றான்” 9

    என்று நம்பி, மனைவியைக் கண்டித்தவன் வாலி. இராமன் மீது அவன் கொண்டிருந்த அளவற்ற பக்தியும் நம்பிக்கையும் இந்தப் பாடலில் வெளிப்படுவதைக் காணலாம். இராமன் வாலியை மறைந்திருந்து கொன்ற செயல் அந்த நம்பிக்கைக்குக் கேடாக முடிந்துவிடுகிறது. இராமனுடைய அம்பினால் வீழ்த்தப்பட்டுக் கிடந்த வாலி இராமனை ஏசுகிறான். இருவருக்குமிடையே நடந்த உரையாடல் முடிவில் வாலி “தன்னை மறைந்திருந்து கொல்ல வேண்டிய அவசியம் என்ன?” என விடையிறுக்க இயலாத வினாவைக் கேட்கிறான். கம்பன் இங்கே தடுமாறுகிறான். இராமனைப் பேசவைப்பதா? பேசவைத்தால் என்ன விடை கூற வைப்பது? தன் கவியுரிமையைப் பயன்படுத்திக் கொள்ளும் கவியரசர், இராமனைப் பேச வைக்காது இலக்குவனைப் பேச வைக்கிறார். ஒரு பாட்டால் ஒரு பாத்திரத்தைக் காப்பாற்றி விட்டதாகக் கம்பன் எண்ணுகிறான்.

    “………. மாண்ட
    செவ்வியோய்! அனையது ஆக! செருக்களத்து உருத்து எய்யாதே
    வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே மறைந்து வில்லால்
    எவ்வியது என்னை என்றான் இலக்குவன் இயம்பலுற்றான்”10

    ஒருவன் எழுத வேண்டிய தேர்வை வேறொருவன் எழுதினால் இன்றைய நிலையில் அது தண்டனைக்குரிய குற்றம். வகுப்பில் வினவப்பட்ட மாணவனைத் தவிர்த்து வேறொரு மாணவன் விடையிறுத்தால் இறுக்கப்படும் விடை சரியாகவே இருந்தாலும் ஆசிரியர் சினங்கொள்வாரேயன்றிச் சிரித்து ஏற்றுக் கொள்ள மாட்டார். ஆனால் இராமன் என்னும் தலைமகனின் பிம்பம் அல்லது பரிமாணம் சேதாரமடைந்து விடக்கூடாது என்பதற்காகக் கவிஞன் தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி இராமனைக் காப்பாற்றுகிறான்.

    “முன்பு நின்தம்பி வந்து சரண்புக, “முறையிலோயைத்
    தென்புலத்து உய்ப்பென் என்று செப்பினன். செருவில் நீயும்
    அன்பினை உயரிருக்கு ஆகி “அடைக்கலம் யானும் என்றி
    என்பது கருதி அண்ணல் மறைந்து நின்று எய்ததென்றான்”.11

    “கவிக்குலத்தரசும் அன்ன கட்டுரை கருத்திற்கொண்டான்” என்றெழுதும் கம்பன் இலக்குவன் சொன்னது இதயத்துச் சொற்களல்ல அவை ‘இட்டுக்கட்டியன’ என்பதைப் புரிந்து கொள்கிறான். இங்கே அறிந்து கொள்ள வேண்டியது காப்பியத் தலைமைப் பாத்திரத்தின் பெருமையைக் காப்பாற்றவே தம்பியை விடையிறுக்கும் உத்தியைக் கம்பன் கடைப்பிடித்திருக்கிறான் என்பதேயாகும்.

    மேற்கண்ட சான்றுகள் படைப்பாளன் தன் உள்ளக்கருத்தினைப் பதிவிடுவதற்குரிய வெளிப்பாட்டு முறையே உத்தி என்பதைக் காட்டுகின்றன. ‘கம்பன் கண்ட இலக்கிய உத்திகள்’ என்னும் தமது ஆய்வு நூலில் ஆராய்ச்சிப் பேரறிஞர் ச.வே.சுப்பிரமணியனார் இது பற்றி விரிவாக ஆராய்ந்திருக்கிறார் என்பது தகவலுக்காக இங்கே பதிவு செய்யப்படுகிறது.

    ஆடூஉ முன்னிலை – மகடூஉ முன்னிலை

    கீழ்க்கணக்கில் அமைந்துள்ள நீதிநூல்கள் சிலவற்றில் சில பாடல்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் முறையில் ஒரு தனித்த நெறி பின்பற்றப்பட்டு வந்துள்ளது. புலவர் தனது கருத்தினை ஆசிரியர் கூற்றாக அமைக்காமல் ஆண்மகன் ஒருவனைப் பார்த்துக் கூறுவது போலவோ பெண்மகள் ஒருத்தியைப் பார்த்துக் கூறுவது போலவோ அமைக்கப்பட்டுள்ளது. முன்னதற்கு ‘ஆடூஉ முன்னிலை’ என்றும் பின்னதற்கு ‘மகடூஉ முன்னிலை’ என்றும் பெயர். இந்த நெறி திருக்குறளில் அறவே இல்லை. அங்கே அனைத்தும் ஆசிரியர் கூற்றே. வெளிப்பாட்டு உத்தியில் நிலவும் இந்த மாற்றம் சிந்திப்பதற்குரியது. இன்னொரு நுட்பமும் இந்நூல்களில் பதிவாகியிருக்கிறது. தலைமக்கள் கூற்றுப் பகுதியாகவே பதிவு செய்யப்பட்டு வந்த அகப்பொருள் செய்திகளையும் மகடூஉ முன்னிலையில் பதிவு செய்திருக்கும் புதுமை கீழ்க்கணக்கு நூல்களில் காணக்கிடக்கின்றது.

    அகப்பொருள் பதிவு

    திருக்குறள் கீழ்க்கணக்கு நூல்களில் வைத்து எண்ணப்படினும் ஏனைய பதினேழு நூல்களுக்கும் அதற்கும் நிலவும் வேறுபாடுகள் பல. பொருண்மையிலும் வெளிப்பாட்டு உத்தியிலும் கட்டமைப்பு உட்பட ஏனைய கூறுகளிலும் திருக்குறளின் தனித்தன்மையை மற்ற நூல்களால் பெற இயலவில்லை. இதனால் ஏனைய நூல்களைக் குறைத்து மதிப்பிடுவதாக எண்ணுதல் ஆகாது. அந்தந்த நூல்களின் தரமதிப்பீடு மற்றொரு நூலின் தர மதிப்பீட்டைப் பாதித்துவிடக் கூடாது என்பதே கருத்து. இந்த நூல்களில்தாம் அவ்விரு முன்னிலை உத்திகளும் கையளாப்பட்டுள்ளன.

    “முயங்காக்கால் பாயும் பசலை மற்று ஊடி
    உயங்காக்கால் உப்பின்றாம் காமம்! – வயங்கோதம்
    நில்லாத் திரையலைக்கும் நீள் கழித் தண்சேர்ப்ப!
    புல்லாப் புலப்பதோர் ஆறு” 12

    என்பது “தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகள் புலவி நீங்கச் சொல்லியது” என்னும் துறையின் கீழ் அமைந்துள்ள நாலடியார் பாடல். துறைப்பொருளை அல்லது பொருளாகிய கூற்றினைப் பாத்திரத்தை நோக்கித்தான் கூறவேண்டுமே தவிர பாத்திரத்தோடு தொடர்பில்லாத முன்னிலை போலக் கருதி விளித்துக் கூறுதல் கீழ்க்கணக்கு நூல்களில் காணும் புதுமையாகும். இதுமாதிரியான துறைகளுக்கு அமைந்த பாடல்கள் அகத்திணை மாந்தர்களை நோக்கியே அமைந்திருக்குமேயன்றி இவ்வாறு உருவாக்கிய முன்னிலையை நோக்கி அல்லது முன்னிலைக்குரிய நபரை நோக்கி அமைந்ததற்குச் சான்றுகள் இல்லை!. “தலைமகள் பிரிவாற்றாமையைத் தோழிக்குச் சொல்லியது” என்னும் துறையில்,

    “கண்மூன்று உடையானும் காக்கையும் பையரவும்
    என் ஈன்ற தாயும் பிழைத்ததென்? – பொன்னீன்ற
    கோங்கரும்பு அன்ன முலையாய்!  பொருள்வயின்
    பாங்கனார் சென்ற நெறி” 13

    என்று அமைந்திருக்கிறது. இந்தப் பாடலில் தலைமகள் தோழியை நோக்கிச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் தோழியை மகடூஉ முன்னிலையாக்கி உரைப்பது காண்க!

    “பிறங்கருவி நல் நாட!” 14

    “இலங்கருவி நல் நாட!” 15

    “விறல் மலை நல் நாட!” 16

    என வருதல் காண்க. “இருநோக்கு இவள் உண்கண் உள்ளது” 17 என்று தலைவியை நோக்கிப் படர்க்கையில் தனக்குத்தானே பேசிக்கொள்வானேயன்றித் தலைவியை முன்னிலைப்படுத்திக் கூறமாட்டான்.

    “யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
    தானோக்கி மெல்ல நகும்” 18

    எனத் தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். “நன்னீரை வாழி அனிச்சமே!”19 என்றும் “மலர்காணின் மையாத்தி நெஞ்சே!”20 “கருமணியிற் பாவாய் நீ!”21 எனப் பாத்திரமல்லாதவற்றை முன்னிலையாக்குவாரேயன்றிக் கீழ்க்கணக்கின் ஏனைய நூல்களைப் போல முன்னிலையை உருவாக்கிக் கூறுதல் குறளில் காண இயலாத நெறியாம். இதுகாறும் எடுத்துக்காட்டிய சான்றுகள் சிலவற்றால் படைப்பாளன் தான் கருதியது முடித்தற்குத் தானே உருவாக்கிக் கொள்ளும் இலக்கிய வெளிப்பாட்டு நெறிக்கே உத்தி என்பதும் இது இலக்கணத்திற்காகக் கூறப்படும் முப்பத்திரண்டு உத்திகளின் வேறானது என்பதும் பெறப்படும். அவை இலக்கண நூற்பாக்களைப் பற்றியன. இவை இலக்கியத்தின் கருத்து வெளிப்பாடு பற்றியன.

    திருக்குறளும் உத்தியும்

    தமது கருத்துக்களை மிகக் குறுகிய கவிதைக் கட்டுமானமான குறள் வெண்பா யாப்பில் எழுதுவது என்பது திருவள்ளுவர் எடுத்த முடிவு. அந்தக் குறள் வெண்பாவில் கருத்துக்களை ஒரே மாதிரியாக அவர் வெளிப்படுத்தவில்லை என்பதுதான் இக்கட்டுரை உணர்த்த விரும்பும் கருத்து. 1330 குறட்பாக்களும் செய்திகளே! ஒவ்வொரு தத்துவங்களே! ஒவ்வெரு அனுபவங்களே! ஆனால் இவற்றைப் பல முறைகளில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். பல உத்திகளைக் கையாண்டிருக்கிறார். ஒரு கருத்தினை நிரல்படச் சொல்லுவார். ஒன்றினை வினா வடிவில் பதிவு செய்வார் வேறொன்றினை வியங்கோளால் அமைத்துக் காட்டுவார். சிலவற்றைத் தொழிற்பெயர்களால் கூட்டியுரைப்பார். வேறு சிலவற்றை முன்னிலை ஏவலால் ஆணையிடுவார். சிலவற்றைத் தன்மைப் பன்மையால் விளக்கிக் காட்டுவார். இன்னும் பல உத்திகளையும் கையாண்டு விளக்கியிருப்பார்.

    வெளிப்பாட்டில் வெளிப்படும் வினா

    கருத்துக்களை வெளிப்படுத்தும் உத்திகளில் திருவள்ளுவரைப் பெரிதும் கவர்ந்திருப்பது வினா உத்தியே!. அவ்வுத்தியில் அமைந்த குறட்பாக்களை நோக்கினால் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம். சமுதாயத்தின் மீதும் தனிமனிதன் மீதும் சலிப்பு வந்த நிலையில் அவருடைய இந்த வெளிப்பாடு அமைந்திருக்கக் கூடும். ‘என்னத்த படிச்சு என்னத்த செய்யறது?” என்னும் வழக்கு நோக்குக. “பணம் இருந்து என்னங்க செய்யறது?” என்னும் வழக்கையும் நோக்குக. இந்த வழக்கைத்தான் வள்ளுவர் உத்தியாகக் கடைப்பிடித்திருக்கிறார் எனக் கருதலாம்.

    • ஞானத்தின் வடிவமான இறைவனை வழிபடுவதே நூல்களைக் கற்பதன் பயன் என்னும் ஒரு கருத்தினைக் ‘கற்றதனால் ஆய பயன் என்?’ என வினவுவார்.22
    • அறிவின் மற்றொரு பயன் உயிர்கள் மீது அன்பு காட்டுவது. இதனை ‘அறிவினான் ஆகுவது உண்டோ’ என வினவி அதற்கான விடையினைத் தொடர்ந்து பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக்கடை’ என்று சுட்டுவார்.23
    • அந்த அன்பைக் கட்டுப்படுத்த இயலாது என்பதை ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? என வினவுவார்.24
    • எதிர்மறை விளைவு ஏற்படுகின்ற இடத்தில்தான் சினத்தை அடக்குதல் வேண்டும். இதனை ‘அல்லிடத்துக் காக்கின் என்? காவாக்கால் என்?’ எனச் சாடுவார்.25
    • கருவியால் ஆராய்ந்து காலத்தால் செய்தால் அருவினை இல்லை என்பதை ‘அருவினை என்ப உளவோ?’ என்பார். 26
    • பிறவி யொழித்தவனுக்கு உடம்பும் மிகை என்பதை ‘மற்றும் தொடர்ப்பாடு எவன் கொல்?’ என்பார். 27

    என்றெல்லாம் அறம் மற்றும் பொருள் பற்றிய கருத்துக்களை வினா உத்தியினால் வெளிப்படுத்திக் காட்டிய வள்ளுவ நாயனார் தலைமக்களின் கூற்றுப் பகுதியாகப் படைத்துக்காட்டிய காமத்துப்பாலிலும் அப்பாத்திரங்களுக்குள் நுழைந்து வினவுவதும் வியப்பாக இருக்கிறது.

    • “ஒன்று கலந்த நெஞ்சத்தாரோடு ஊடுதலே உண்மையான இன்பம்” என்னும் கருத்தினைத் தலைமகன் வாயிலாக “புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ?’ 28 என்று பதிவு செய்திருக்கிறார்.
    • ‘தன்னைப் பிரிந்து துன்புறும் தலைவியாகிய என்னை எண்ணுகிற தலைவனை நான் பெறாத போது நான் மட்டும் வருந்தி என்ன பயன்’ என்னும் தலைவியின் துயரத்தை “நோதல் எவன் மற்று?” 29 எனப் பதிவிடுகிறார்.
    • தலைவியின் துன்பம் அதுவானால் தனிமைத் துயரத்தில் தவிக்கும் தலைவன் கூற்றாகத் தலைவியை அன்றித் “துன்பத்திற்கு யாரே துணையாவார்?” 30 எனப் பதிவிடுகிறார்.
    • தன் தலைவன் வந்துவிடின் “புலப்பேன் கொல்? புல்லுவேன் கொல்லோ? கலப்பேன் கொல்?” 31 என்று தன் எதிர்கால விதும்பல்களை முன்கூட்டியே தனக்குத்தானே வினவும் தலைவியைக் காட்சிப்படுத்துகிறார்.

    இவ்வாறு தன் கருத்துக்களை வினா வடிவத்தில் பதிவு செய்திருக்கும் குறட்பாவின் தாக்கம் பின்வந்த கவிஞர் பெருமக்களை எவ்வாறு ஆட்கொண்டிருக்கிறது என்பதையும் சுருக்கமாகக் காணலாம்.

    வாழையடி வாழையென வந்த வினா உத்தி

    கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதற்குத் திருவள்ளுவரால் கையாளப்பட்ட இந்த வினாவுத்தி தொடர்ந்து தமிழ்க்கவிதைப் பரப்பில் பேரளவாக இடம் பெற்று வந்துள்ளமையை அறியலாம்.

    “கங்கை ஆடிலென்? காவிரி ஆடிலென்?
    கொங்கு தண் குமரித்துறை ஆடிலென்?
    ஓங்கு மாகடல் ஓதம் நீராடிலென்
    எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே” 32

    “புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டால் பொல்லாதோ?
    எத்தோ நின்அன்புடைமை எல்லோம் அறியோமோ?
    சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை?”33

    என்றெல்லாம் வழிவழியாக இந்த வினாமரபு, “செருப்புக்குத் தோல்வேண்டியே இங்குக் கொல்வரோ செல்வக் குழந்தையினை?” 34 என்று பரதியார் வினவுகின்ற அளவும் தொடர்ந்தது. ‘சுதந்திரப் பெருமை’35 சுதந்திரப் பயிர்’36 என்னும் இரண்டு பாடல்களயும் முற்றவும் வினாவுத்தியினாலேயே பாரதியார் வடிவமைத்திருப்பது இங்குச் சுட்டத்தகுந்தது. “காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ? கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ?” 37 என்பார் பாரதிதாசன். “இன்பந்  தருந் தமிழில் அன்பு பிறந்ததுண்டு துன்பம் இனியுமுண்டோ?” 38 என்ற வினாவும் அவருக்குரியது. “சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?”39 என்பார் கண்ணதாசன். “எரிமலை எப்படிப் பொறுக்கும்? நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?” 40 எனக் கொதிப்பார் வைரமுத்து.

    “இற்றைக் குமுகம் எழுந்திருக்க வேண்டாமோ?
    முற்றும் முடங்கியே மூழ்குவதோ? – வெற்றுரையால்
    பீடும் மறைவதோ? பேரெழுச்சி வாராதோ?
    நாடுமொழி காப்பீர் நயந்து” 41

    “ஒப்பனை வெல்லுமோ? உண்மை உறங்குமோ?
    முப்பாலுக் கீடோ பிறநூல்கள் – செப்பரிய
    தொண்டால் உழைப்பால் துணிவால் பெருவெற்றி
    உண்டாகும் என்றே உணர்! 42

    என்பன கடவூர் மணிமாறனின் வினாக்கள். இவரின் இந்த வினாக்களைத் தொடர்ந்து வேறு சிலரின் வினாக்களையும் கேட்கமுடிகிறது. உழைத்து ஓடாகிப் போன ஏழைகளின் புலம்பல்கள் வினாக்களாக வெடிக்கின்றன.

    “ஓய்வின்றி உழைப்பவர்க்கா பஞ்சம்? – நாங்கள்
    ஒன்றுபட்டால் இங்கென்ன மிஞ்சும்?
    நாய்படாத பாடெல்லாம் எமக்கா? நாட்டில்
    நல்லின்ப வாழ்வெல்லாம் உமக்கா?
    வேலையின்றி உண்பதுமோர் பிழைப்பா? – இந்த
    வேதனையை மாய்க்க வந்தால் மலைப்பா?
    சாலைகள்தான் எங்களுக்கு வீடா – இது
    சமவுடைமை உண்டாக்கும் நாடா?” 43

    என்னும் கருவூர் கன்னல் எழுப்பும் வினாக்கள் கற்பாரையும் கொதிக்க வைக்கின்றன. இயல்பான தொடரால் அமைக்கப்படுவதைவிட மேற்காட்டியவாறு  வினாக்களால் அமைக்கப்படும்போது கற்பார் உள்ளத்தில் எளிதாக பதியும் வாய்ப்பு அதிகம் என்பதே இவ்வுத்தியின் பயன் எனலாம். திருவள்ளுவர் பின்பற்றிய இந்த வினாவுத்தி தமிழ்க்கவிதையுலகில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்வதற்கே மேலே சில சான்றுகள் தரப்பட்டன.

    முன்னிலை ஏவல் ஒருமையும் வியங்கோளும்

    ‘யான்’ என்னும் அகப்பற்றையும் ‘எனது’ என்னும் புறப்பற்றையும் விட்டாலேயொழிய உயிர் வீடு பெறாது என்னும் கொள்கையுடையவர் திருவள்ளுவர். அதனால்தானோ என்னவோ அவருடைய குறட்பாவில் முன்னிலை ஏவல் ஒருமையில் அமைந்த ஒரு குறட்பாவைக்கூட காண இயலவில்லை. அந்தக் குறையைப் பாரதி இப்படி ஈடு செய்கிறார்.

    “ஓடி விளையாடு பாப்பா” 44

    “கூடி விளையாடு பாப்பா” 45

    “மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா” 46

    “திடங்கொண்டு போராடு பாப்பா” 47

    என்றெல்லாம் முன்னிலையில் பாடுகிறார் பாரதியார். தொடர்ச்சியாக வந்த பாவேந்தர்,

    “இன்பம் தருந்தமிழில் அன்பு பிறந்ததுண்டு
    துன்பம் இனியுமுண்டோ?
    சொல்! சொல்! சொல்! பகையே!” 48

    எனப் பகையை நேரடியாக விளித்தே பேசுவதைக் காணமுடிகிறது. இந்த நிலை இற்றைநாள் வரை தொடர்கிறது.

    “தாழ்வை அகற்றித் தலைநிமிர்வாய்! போற்றுமுயர்
    வாழ்வில் சிறப்பாய் வளம்காண்பாய் – ஏழ்மையை
    ஓடவே செய்வாய்! ஒரு பயனும் நல்காத
    மூடப் பழக்கம் விலக்கு!” 49

    “மூலையில் நீயும் முடங்கிக் கிடக்காமல்
    வேலையில் நாளும் விழிபதிப்பாய் – காளை நீ!
    வேழமாய் வீறுசால் வெம்புலியாய் சிங்கமாய்
    வாழ வழிவகுக்க வா” 50

    வள்ளுவர் காலத்து இல்லாத அல்லது தேவைப்படாத மொழி, இன, நாட்டுணர்வு இன்றைக்குப் பெரிதும் தேவைப்படுதலின் இந்த வாய்பாட்டிலும் மணிமாறன் கவிதை செய்தார் எனக் கருதலாம். திருக்குறளின் உத்தி பற்றிய ஆய்வில் அவர் கையாளாது பிறர் கையாண்ட முன்னிலை பற்றிய இந்தப் பகுதி எதிர்கால ஆய்வு நோக்கியதாகக் கொள்ளலாம்.

    வியங்கோள்

    ஏவலின் முதிர்ச்சியே வியங்கோள். ‘வாழ்’ என்றால் ஏவல். ‘வாழ்க’ என்றால் வியங்கோள். கட்டளைப் பொருளில் வரும் ஏவல் வினைகளைக் காட்டிலும் வியங்கோளில் வரும் வினைகள் பண்பாட்டினை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையவை. நீதியுரைத்தலிலும் பண்பாடு காக்கும் திருவள்ளுவரின் பேராளுமை அவர் பயன்படுத்தியிருக்கும் வியங்கோள்களில் விளங்கக் காண்கிறது.

    “செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
    எஃகுஅதனிற் கூரியது இல்” 51

    “மருவுக மாசற்றார் கேண்மை ஒன்றீத்தும்
    ஒருவுக ஒப்பிலார் நட்பு” 52

    “உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
    அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு” 53

    பொருளைச் ‘செய்’ என்னாது ‘செய்க’ என்று கூறியவர், ‘மருவு’, ‘கொள்’ என்றெல்லாம் ஏவலிருந்தும் வியங்கோளைப் பயன்படுத்துவார்.   எதிர்மறையிலும் ‘கொள்ளற்க’, ‘உள்ளற்க’ என்பார். இத்தகைய வெளிப்பாடுகளுக்குக் காரணம் ஞானம். அந்த வெளிப்பாடுதான் இன்றைக்கும் வள்ளுவத்தைத் தூக்கி நிறுத்துகிறது. பின்னாலே பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும் இந்த நெறி பரவலாகப் பயன்பட்டு வந்துள்ளதை அறியலாம்.

    “பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க!” 54

    “முடியும் திறத்தால் முயல்க!” 55

    “பழியின்மை மக்களால் காண்க! ஒருவன்
    கெழி யின்மை கேட்டால் அறிக – பொருளின்
    நிகழ்ச்சியான் ஆக்கம் அறிக!” 56

    என்னுமாறு அமைந்த கீழக்கணக்குப் பதிவுகள் வியங்கோள் ஆளுமையை விளக்கக் கூடும். இந்த வியங்கோள் நெறியை வள்ளற் பெருமான்,

    “கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக!
    அருள் நிறைந்த சன்மார்க்கர் ஆள்க – தெருள் நயந்த
    நல்லோர் நினைத்த நலம்பெறுக! நன்றுநினைந்து
    எல்லோரும் வாழ்க இசைந்து” 57

    என்னும் வெண்பாவில் தனது வேதனையைப் பதிவு செய்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக பாரதியாரும்,

    “ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள்!
    ஓதுமினோ வேதங்கள்! ஓங்குமினோ! ஓங்குமினோ!” 58

    என்று பாடுகிறார். அவருடைய நண்பராகிய பாவேந்தர்,

    “தமிழ்மொழியைத் தாய் என்னும்
    தமிழர் வாழ்கவே!
    தமிழ்மொழிக்குத் தாழ்வுரைக்கும்
    தக்கை வீழ்கவே!
    தமிழ்வாழத் தாம் வாழும்
    தமிழர் வாழ்கவே!
    தமிழ்வீழத் தாம் தாழும்
    சழக்கர் வீழ்கவே!”59

    மொழியினம் நாடு பாடும் நம் மணிமாறன் வெண்பாக்களில் இத்தகைய வியங்கோள் வினை உத்திகள் வேண்டிய மட்டும் பரவிக் கிடப்பதைக் காண முடிகிறது.

    “நல்லனவே எண்ணுக! நன்மை விளைத்திடுக!
    இல்லார்க் கிரங்கி உதவிடுக! – சொல்லினில்
    இன்பம் பெருக்கி இடரகற்றி எப்போதும்
    அன்பில் திளைக்க அறிந்து” 60

    “கண்ணும் கருத்துமாய் கடமையை ஆற்றுக!
    புண் மொழி பேசிப் புலம்பற்க! – மண்ணிலே
    நல்லவன் என்னும் நறும்புகழ் எய்துக!
    எல்லாம் அறிக! இசைந்து” 61

    உடன்பாடும் எதிர்மறையுமாக அமைந்த முன்னிலை வியங்கோள் வினைமுற்றுக்களால் சமுதாயத்தோடு தனக்குள்ள தொடர்பினை வெண்பா மூலம் புதுப்பித்துக் கொள்கிறார் மணிமாறன். ஒரு கருத்தினை வியங்கோளாக வெளிப்படுத்துவது என்பது மரபுசார்ந்த கவிதை வெளிப்பாடு என்பதை அறியவும்! சிலப்பதிகாரத்தின் வரந்தரு காதை காண்க.

    திருக்குறளில் தொழிற்பெயர்த் தொடரி

    திருவள்ளுவர் அறுவகைப் பெயர்ச் சொற்களையும் கையாண்டு கவிதை செய்த பெருந்தகை. அவற்றுள் தொழிற்பெயர்களைத் தொகுத்துத் தொடரியாக்கிறார். அந்தத் தொழிற்பெயர்கள் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேற்பட்டு இணைந்து காணப்படுவது கூடுதல் சிறப்பு.

    “உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற்கு உரு” 62

    “ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
    எண்ணின் தவத்தான் வரும்” 63

    “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
    வகுத்தலும் வல்லது அரசு” 64

    மேற்கண்ட குறட்பாக்களில் உள்ள தொழிற்பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வகையில் தொடர்ந்து அமைந்திருப்பதைக் காணலாம். இந்த நெறியும் பின்னாளில் தொடர்ந்து வந்திருப்பதை அறியமுடிகிறது.

    “இன்னறுங்கனி சோலைகள் செய்தல்,
    இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்,
    அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
    ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
    பின்னருள்ள தருமங்கள் யாவினும்
    பெயர்விளங்கி ஒளிற நிறுத்தல்,
    அன்ன யாவினும் புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” 65

    இவ்வாறு அனைத்தும் தொழிற்பெயர்களாக அடுக்கியுரைப்பதனை, வெற்று வாய்மொழிகளாக இருப்பதனால் பயனில்லை செயல்வடிவம் பெற வேண்டும் என்பதைக் குறிப்பால் பெற வைக்கும் உத்தியாகவும் கருதலாம்.

    “கொள்ளை யடித்தல் குறுக்குவழி நாடுதல்
    கொள்கை மறந்தே குழப்புதல் – விள்ளரிய
    கேட்டை விளைத்திடுமிக் கீழோர் செயலெல்லாம்
    நாட்டைக் கெடுத்திடும் நஞ்சு” 66

    “மானம் இழத்தல் மதுவருந்தல் மற்றவர்க்கே
    ஆனவரை தீங்கிழைத்தல் அன்றாடம் – ஊனம்செய்
    கேட்டை விளைத்தல் கெடுமதியோர் நட்பெல்லாம்
    நாட்டைக் கெடுத்திடும் நஞ்சு” 67

    என்னும் கடவூர் மணிமாறன் பாடல்களில் தொழிற்பெயர்கள் தொடர்ந்து வருவதைக் காணலாம்.

    திருக்குறளில் படர்க்கைப் பதிவுகள்

    தனிமனித நெறியுரைத்த திருவள்ளுவர் பெரும்பாலும் படர்க்கை நிலையையே தமது வெளிப்பாட்டு உத்தியாகக் கொண்டிருக்கிறார் என்பதைக் குறட்பாக்களின் கட்டமைப்பால் அறியலாம்.

    “அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு” 68

    “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப்படும்” 69

    “ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
    பொன்றும் துணையும் புகழ்” 70

    “தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத்தூறும் அறிவு” 71

    “மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
    எல்லாப் புகழும் தரும்” 72

    என்றெல்லாம் அறம் மற்றும் பொருட்பாலில் எண்பது விழுக்காடு வெண்பாக்களைப் படர்க்கையில் அமைத்துக் காட்டியவர் திருவள்ளுவர்.  படர்க்கை என்பது இலக்கணத்தில் மூன்றாவது நிலையாக இருக்கலாம். வாழ்க்கைப் பட்டறிவில் முதனிலை. அதனால்தான் தமிழின் அத்தனை நீதி நூல்களும் பெரும்பாலும் படர்க்கையைத் தேர்ந்தெடுத்தன. படர்க்கையில் பதிவு செய்யப்படும் கருத்துக்கள் இலக்கியச் சுவையோடு வெளிப்பட வேண்டும் என்பதற்காகவே ஆடூஉ முன்னலை மற்றும் மகடூஉ முன்னிலைகள் இடம்பெற்றன. இப்பொருண்மை தனி ஆய்வுக்கு உரியது. விரிந்த மனத்தால் எதனையும் எவரையும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் வாழ்த்தவும் வையவும் படர்க்கை பயன்படும். ஆசிரியர் கூற்று என்பதும் அது.

    தமிழ் மறையில் தன்மைப் பன்மை

    தம் கருத்துக்களை முன்னிலையிலும் வியங்கோளிலும் குறள் வெண்பாவில் பதிவு செய்திருக்கும் திருவள்ளுவர் மூன்று குறட்பாக்களில் மட்டும்  தன்மைப் பன்மையில் பதிவு செய்திருப்பதை அறிய முடிகிறது.

    “பெருமவற்றுள் யாம் அறிவதில்லை அறிவறிந்த
    மக்கட்பேறு அல்ல பிற” 73

    “யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
    வாய்மையின் நல்ல பிற” 74

    “மக்களே போல்வர் கயவர் அவரன்ன
    ஒப்பார் யாம்கண்ட தில்” 75

    என்பன காண்க. “யாம் அறிவதில்லை”, “யாம் கண்டவற்றுள்”, “யாம் கண்டதில்” என்பனவெல்லாம் இலக்கண அடிப்படையில் தன்மைப் பன்மைத் தொடர்கள். முதிர்ச்சியோடு கூடிய பதிவுகள். தன்மைப் பன்மையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இக்குறட்பாக்களில் இரண்டு (61,1071) அதிகாரத் தொடக்கமாகவும் ஒன்று (300) அதிகார இறுதியாகவும் அமைக்கப்பட்டிருப்பதும் சிந்தனைக்குரியது. இத்தகைய உத்திகளின் பயன்பாட்டிற்குரிய நோக்கம் தனி ஆய்வுக்கு உரியது. இந்த நெறியால் ஈர்க்கப்பட்ட அப்பர் பெருமான்,

    “நாமார்க்கும் குடியல்லோம் நமனைஅஞ்சோம்
    நரகத்தில் இடர்ப்படோம் நடலையல்லோம்!
    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
    இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை” 76

    என்று பாடியிருக்கிறார். ‘மன்னும் இமயமலை எங்கள் மலையே’77 என்பதும் “பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு”78 என்பதும் பாரதி முழக்கங்கள்.

    “நாமறிவோம் உலகத்தில் நம் பண்பாடு — தமிழா
    நாம் தமிழர்! நம் திறத்துக்கெவர் ஈடு?
    தீமை இனிப் பொறுக்காது நம் தமிழ்நாடு! – நாம்
    தீர்த்துக் கொண்டோம் அவர் கணக்கை இன்றோடு!” 79

    இது பாவேந்தர் பாரதிதாசனின் தன்மைப் பன்மை உத்தி. அவருடைய பரம்பரைக் கவிஞர் நிரலில் வரும் நாடறிந்த நற்றமிழ்ப் பாவலர் கடவூர் மணிமாறன்,

    “கன்னல் தமிழ் காப்போம்! காழ்ப்பால் துயரிழைக்கும்
    புன்மையர் வீழப் பொருதிடுவோம் – நன்னெறியால்
    சூழும் பகைவெல்வோம்! சுற்றம் தழுவியே
    வாழும் வகையறிவோம் வா!” 80

    “நன்மை விளைத்திடுவோம்! நாடுமொழி நம்மினத்தை
    என்றுமே காப்போம்! இனியன – நன்றாற்றி
    மாற்றம் விளைப்போம்! மனத்தைப் புதுக்கிடுவோம்!
    ஏற்றமே காண்போம் இனிது” 81

    உளப்பாட்டுத் தன்மைப் பன்மையால் நேரிசை வெண்பா யாப்பில் தனது உயிர்மூச்சான கொள்கைகளைப் பதிவு செய்திருக்கும் இந்தப் பேராற்றல் பெரிதும் பாராட்டுக்குரியது. “பாதகம் செய்பவரைக் கண்டால் ‘நீ’ பயங்கொள்ளலாகாது” என்னாது ‘நாம் பயங்கொள்ளலாகாது’ எனப் பாரதி குழந்தையை அரவணைத்துப் பாடியது போலச் சமுதாய முன்னேற்றத்திற்குச் சமுதாயத்தோடு ஒன்றிணைந்து பாடுபடும் மணிமாறனின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துவதாம்.

    தன்னை அடையாளம் காட்டிய திருவள்ளுவர்

    ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களில் திருவள்ளுவர் தான் சொல்லுவதாக அதாவது தன்மை ஒருமையில் வரித்துக் கொண்டு சொன்ன கருத்துப் பதிவு ஒன்றே ஒன்றுதான். அது,

    “இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
    ‘கரப்பார் இரவன்மின்’ என்று” 82

    பெரும்பாலும் அறியப்படாத இந்தப் பாட்டின் கண்ணழிப்பு (நானாகிய திருவள்ளுவன் “இரப்பாரையெல்லாம் இரப்பின் கரப்பார் (ஐ) இரவன்மின் என்று இரப்பன்). இந்தப் பாட்டுக்கு என்ன பொருள் என்றால் பொருளிருந்தும் கரந்தொழிக்கும் கயவரிடத்தில் இரக்கின்றவர்களைப் பார்த்து,

    “ஐயா! வைத்துக் கொண்டே இல்லை என்று மறுதலிக்கும் கயவர்களிடத்தில் இரக்காதீர்கள்” என்று நான் இரந்தேன்”

    என்பதாம். இந்த ஒரு திருக்குறளில்தான் திருவள்ளுவர் தன்மை ஒருமையில் பதிவிடுகிறார். இதற்குக் காரணம் இருத்தல் வேண்டும் என்பது கட்டுரையாளரின் அனுமானம். தன்மை ஒருமை பெரும்பாலும் முனைப்பின் அடையாளம். யான், எனது என்பனவற்றுள் அது ‘யான்’ என்னும் அகப்பற்று. அது எனது என்னும் புறப்பற்றினைக் காட்டிலும் கேடுதருவது என்பதை உலகிற்கு உணர்த்தியவர் அவர். எனவே அத்தகைய உத்தியினை அவர் தவிர்த்திருக்கக் கூடும். பின்னாலே வந்த கவிதை படைப்பாளர் பலரும் திருவள்ளுவர் அரிதாகப் பயன்படுத்திய உத்தியினை மிக எளிதாகவும் பேரளவிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். உருக்கும் திருவாசகத்தில்,

    “யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனக்கு என் கடவேன்?
    வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன்!
    தேனேயும் மலர்க்கொன்றை சிவனே எம் பெருமான் எம்
    மானே உன் அருள்பெறுநாள் என்றென்றே வருந்துவனே!” 83

    என்று தன்மை ஒருமையில் வைத்துப் பாடியிருக்கிறார். திருவாசகம் முற்றிலும் சன்மார்க்கத்தையொட்டி எழுந்த நூலாதலின் குருவை வழிபடுதலுக்குச் சீடனாகிய தன்னை முன்னிலைப்படுத்துவது பொருத்தம் என்று அவர் கருதியிருக்கலாம். வள்ளற்பெருமான் தனது சமரச சன்மார்க்கக் கொள்கைகளை வலியுறுத்திப் பாடும் பொழுது,

    “புனைந்துரையேன்! பொய்புகலேன்! சத்தியம் சொல்கின்றேன்!
    பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே!” 84

    என்று பன்னியுரைக்கின்றார். மகாகவி பாரதி,

    “விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
    வேண்டியபடிசெலும் உடல் கேட்டேன்!
    நசையறு மனம்கேட்டேன்! நித்தம்
    நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்!
    தசையினைத் தீச்சுடினும் – சிவ
    சக்தியைப் பாடும் நல் அகம்கேட்டேன்!” 85

    எனத் தன் வேண்டுதலைப் பதிவு செய்திருக்கிறார். அவர் காட்டிய புதுத்தடத்தில் கவிப்பயணம் தொடங்கிய பாவேந்தர்,

    “ஆன என் தமிழ் ஆட்சியை நிறுவ
    அல்லல்கள் வரின் ஏற்பேன்!
    ஊனுடன் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு
    உவப்புடன் நான் சேர்ப்பேன்!” 86

    என்று முழக்கமிடுகிறார். ஒவ்வொரு தமிழனும் மொழிக்கும் இனத்திற்கும் ஆற்ற வேண்டிய பணியினை ஆற்ற வேண்டும் என்னும் குறிப்பு இந்தத் தன்மைப் பதிவில் இருப்பதாகக் கருதலாம்.

    நிறைவுரை

    மூலப்பொருள் ஒன்றேயெனினும் கைத்திறப் பக்குவத்தால் படைப்புக்களின் தன்மைகள் மாறுபடுகின்றன. இந்த மாற்றம் ஒருவரே எழுதும் பல படைப்புக்களிலும் அமையும். பலர் எழுதும் பல படைப்புக்களிலும் அமையும். அந்தக் கையாளும் திறமைகளில் ஒன்றுதான் உத்தி என்பது. கவிதை உத்தியால் சிறக்கிறது. திருவள்ளுவர் தாம் படைத்த திருக்குறளில் தமது சிந்தனைகளைப் படர்க்கையில் கூறுகிறார். வியங்கோளில் கூறுகிறார். தன்மைப் பன்மையில் கூறுகிறார்.  தொழிற்பெயர்களை அடுக்கிக் கூறுகிறார். இவ்வளவு பொருளையும் இத்தனை உத்திகளில் கூறிய தெய்வப்புலவர் ஒரே ஒரு குறட்பாவில் மட்டும் தன்மை ஒருமையில் கூறியிருக்கிறார். வாழையடி வாழையென வந்த இத்த வெளிப்பாட்டு உத்தி ஓர் தொடர் மரபாகவே பின்பற்றப்பட்டு வந்துள்ளது எனத் தெரிகிறது. கவிதைகளின் புறக்கட்டுமானங்களை நோக்குவார்க்கு இத்தகைய உத்தி மாறுபாடுகள் கண்ணிற்படாமல் போகாது. அவ்வாறு கண்ணிற்பட்டதன் விளைவே இக்கட்டுரை. கவிதைப் பதிவுகளை உத்திகளின் அடிப்படையில் சுவைப்பதற்கும் ஆராய்வதற்குமான ஆய்வுத் தொடரியில் இக்கட்டுரையும் ஒரு கண்ணியாக அமையக்கூடும் என்னும் நம்பிக்கையோடு நிறைவுறுகிறது.

    சான்றெண் விளக்கம்

    1. கங்கை அமரன் ‘இங்கேயும் ஒரு கங்கை’       திரையிசைப்பாடல்
    2. மேலது
    3. மேலது
    4. மேலது
    5. வைரமுத்து ‘முதல்மரியாதை’              திரையிசைப்பாடல்
    6. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் அடைக்கலக்காதை      வரி. 2382-2383
    7. மேலது       வரி. 2403-2406
    8. மேலது       வரி. 2407-2430
    9. கம்பர்                 கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டம் பா.எண்.3965
    10. மேலது பா.எண் 4059
    11. மேலது பா எண்.4060.
    12. சமண முனிவர்கள் நாலடியார் காமம் நுதலியல்    பா.எண். 40-1
    13. மேலது                         பா.எண். 40.10
    14. மேலது                      கீழ்மை                 பா.எண். 35–3
    15. மேலது கீழ்மை                 பா.எண். 35– 4
    16. மேலது கீழ்மை                 பா.எண். 35 –8
    17. திருவள்ளுவர்       திருக்குறள்              கு.எண். 1091
    18. மேலது கு.எண். 1094
    19. மேலது கு.எண். 1111
    20. மேலது                              கு.எண். 1112
    21. மேலது கு.எண். 1123
    22. மேலது கு.எண். 02
    23. மேலது கு.எண். 315
    24. மேலது கு.எண். 71
    25. மேலது கு.எண். 301
    26. மேலது கு.எண். 483
    27. மேலது கு.எண். 345
    28. மேலது கு.எண். 1323
    29. மேலது கு.எண். 1308
    30. மேலது கு.எண். 1299
    31. மேலது கு.எண். 1267
    1. அப்பர் தேவாரம் 5ஆம் திருமுறை           பா.எண். 99
    2. மணிவாசகர் திருவெம்பாவை                     பா.எண். 3
    3. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்          ப 404
    4. மேலது ப 66
    5. மேலது ப 67
    6. பாரதிதாசன் பாரதிதாசன் கவிதைகள் தொகுதி 1    ப 22
    7. பாரதிதாசன் இசையமுது தொகுதி 1               ப 42
    8. கண்ணதாசன்       பாகப்பிரிவினை         திரையிசைப்பாடல்
    9. வைரமுத்து       சிவப்புமல்லி            திரையிசைப்பாடல்
    10. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை                  ப 52
    11. மேலது                                                    ப 129
    12. கன்னல் கருவூர்        புயலைத் தாக்கும பூக்கள்             ப 81
    13. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்                ப 221
    14. மேலது
    15. மேலது
    16. மேலது
    17. பாரதிதாசன் இசையமுது தொகுதி 1               ப 42
    18. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை                  ப 27
    19. மேலது                                          ப 76
    20. திருவள்ளுவர்       திருக்குறள்                          கு.எண். 759
    21. மேலது             கு.எண். 800
    22. மேலது             கு.எண். 798
    23. சமணமுனிவர் நாலடியார்                           பா.எண். 2
    24. முன்றுரையரையனார் பழமொழி                           பா.எண். 49
    25. விளம்பி நாகனார் நான்மணிக்கடிகை                    பா.எண். 61
    26. வள்ளலார்       திருவருட்பா – சமரசநிலை            பா.எண். 74-5
    27. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்                ப 36
    28. பாரதிதாசன் தமிழ் உணர்ச்சி (தொகுப்பு நூல்) ப 6
    29. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை                  ப 33
    30. மேலது       ப 50
    1. திருவள்ளுவர் திருக்குறள்              கு.எண். 261
    2. மேலது கு.எண். 264
    3. மேலது கு.எண். 385
    4. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்    ப 173
    5. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை      ப 28
    6. மேலது
    7. திருவள்ளுவர் திருக்குறள்              கு.எண். 72
    8. மேலது கு.எண். 50
    9. மேலது கு.எண். 156
    10. மேலது கு.எண். 396
    11. மேலது கு.எண். 457
    12. மேலது கு.எண். 61
    13. மேலது கு.எண். 300
    14. மேலது கு.எண். 1071
    15. அப்பர் தேவாரம் மறுமாற்றம் திருத்தாண்டகம் பா.எண். 1
    16. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள் ப 26
    17. மேலது ப 23
    18. பாரதிதாசன் பாரதிதாசன் கவிதைகள் ப 521
    19. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை      ப 27
    20. மேலது ப 32
    21. திருவள்ளுவர் திருக்குறள்              கு.எண். 1067
    22. மணிவாசகர் திருவாசகம் திருச்சதகம் பா.எண். 12
    23. வள்ளலார் திருவருட்பா – ஞானசரியை     பா.எண். 110 -1
    24. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்    ப 122
    25. பாரதிதாசன் தமிழ் உணர்ச்சி ப 5

    துணைநூற்பட்டியல்

    1. அப்பர் தேவாரம் (தலமுறை), திருப்பனந்தாள் ஆதீனம் (காசிமடம்) ஜனவரி -1966
    1. கம்பர் கம்பராமாயணம் கங்கை புத்தக நிலையம், 13, தீன தயாளன் தெரு, தி.நகர், சென்னை – 600017
    1. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள், பூம்புகார் பிரசுரம், பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை – 600 108, நான்காம் பதிப்பு – 1991
    1. திருவள்ளுவர் திருக்குறள், வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் பதிப்பு, உமா பதிப்பகம், சென்னை – 600 001, முதற்பதிப்பு – 2009
    1. மணிவாசகர் திருவாசகம், அப்பர் புத்தக நிலையம், 1621, தெற்கு ராச வீதி, தஞ்சாவூர். முதற்பதிப்பு – 1963
    1. பாரதிதாசன் தமிழ் உணர்ச்சி தொகுப்பு நூல், மணிவாசகர் நூலகம், 12 – பி, மேல சன்னதி, சிதம்பரம் – 608101, முதற்பதிப்பு – ஜுலை 1993
    1. பாரதிதாசன் இசையமுது தொகுதி 1, பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை – 600 001
    1. கடவூர் மணிமாறன் வெண்பாச் சோலை, விடியல் வெளியீட்டகம், 1—53, பெரியார் நகர், குளித்தலை, கரூர் மாவட்டம், முதற்பதிப்பு – சூலை 2020
    1. கருவூர் கன்னல் புயலைத் தாக்கும் பூக்கள், தமிழ்ப்பாசறை, 79, தெற்கு நரசிம்மபுரம், கருவூர் – 639001, முதற்பதிப்பு – டிசம்பர் 1998
    1. பதினெண்கீழ்க்கணக்கு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், (மர்ரே பதிப்பு) அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை – 600 098, இரண்டாம் பதிப்பு – 1981
    1. வள்ளலார் திருவருட்பா, சமரச சுத்த சன்மார்க்க சங்க வெளியீடு, 7—99, அம்மன் கோவில் தெரு, கிருஷ்ணாகுளம் அருகில் சென்னை, முதற்பதிப்பு – அக்டோபர் 1942

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review)

    ‘தமிழ்க் கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள்  (திருக்குறள்)  என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

    1. திருக்குறளில் உத்தி பற்றிய இந்த ஆய்வு, ஆய்வு நெறிப்ப்டி கருதுகோள், வலிமையான தரவுகள், அகச்சான்றுகள், புறச்சான்றுகள், தரவுகள் மற்றும் சான்றுகள் பற்றிய விளக்கம், மேற்கோள்கள், சான்றெண் விளக்கம், துணை நூற்பட்டியல் ஆகிய உறுப்புகளைக் கொண்டு செவ்வையாகவும் பொறுப்புணர்வுடனும் நிகழத்தப்பட்டிருக்கிறது.
    1. தமிழ்க்கவிதைகளில் உத்தி என்னும் பொதுத்தலைப்பில் திருக்குறளில் உத்தி என்னும் பொருண்மை சிறப்பாக ஆய்வு செய்யப்பட்டிருப்பினும் ஒரு பரந்து பட்ட தமிழ்க்கவிதை களத்தையே   ஆய்வாளர் தம் ஆய்வுப்பார்வையால் காட்சிப்படுத்தியிருக்கிறார். .
    1. திருக்குறளை முன்னிறுத்திய இந்த ஆய்வுக் கட்டுரையில் கம்பன் முதல் கரூர் கன்னல் வரை இடம் பெறுகிறார்கள். வள்ளலார் முதல் வைரமுத்து வரை வந்து போகிறார்கள். காப்பியம் தந்த இளங்கோ முதல் கடவூர் மணிமாறன் வரை காட்சி தருகிறார்கள்.
    1. “ஒரே பொருளை  ஒன்றுக்கும் மேற்பட்ட  முறைகளில் வெளிப்படுத்தும் நெறிக்கு உத்தி என்று பெயர்” என வரையறைத்துச் செய்திருக்கிற  தொடக்கம்  ஆய்வு நெறியில் ஆய்வாளரின் தோய்நத புலமையைக் காடடுகிறது.
    1. “திருவள்ளுவர் பல உத்திகளைக் கையாண்டிருக்கிறார். ஒரு கருத்தினை நிரல்படச் சொல்லுவார். ஒன்றினை வினா வடிவில் பதிவு செய்வார் வேறொன்றினை வியங்கோளால் அமைத்துக் காட்டுவார். சிலவற்றைத் தொழிற்பெயர்களால் கூட்டியுரைப்பார். வேறு சிலவற்றை முன்னிலை ஏவலால் ஆணையிடுவார். சிலவற்றைத் தன்மைப் பன்மையால் விளக்கிக் காட்டுவார். இன்னும் பல உத்திகளையும் கையாண்டு விளக்கியிருப்பார்”. என்னும் திருக்குறளில் விரவியுள்ள உத்தி பற்றிய பன்முக விளக்கம் ஆய்வாளரின் திருக்குறள் புலமையைக் காட்டுவதுடன் எதனையும் ஆய்வு நோக்கில் காணும் அன்னாருடைய இயல்பினையும் புலப்படுத்துவதாக உள்ளது.
    1. “யாம் அறிவதில்லை” “யாம் கண்டவற்றுள்” “யாம் கண்டதில் என்பனவெல்லாம்” என்னும் இலக்கண அடிப்படையில் தன்மைப் பன்மைத் தொடர்கள். முதிர்ச்சியோடு கூடிய பதிவுகள். தன்மைப் பன்மையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இக்குறட்பாக்களில் இரண்டு (61,1071) அதிகாரத் தொடக்கமாகவும் ஒன்று (300) அதிகார இறுதியாகவும் அமைக்கப்பட்டிருப்பதும் சிந்தனைக்குரியது.   என்னும் தன்மைப் பன்மை பற்றிய பயன்பாட்டு வரையறையும் அதனையொட்டிப் பின்வந்த சான்றோர்களின் படைப்புகளைக் காட்டி அவ்வுத்தியின் தாக்கத்தைக் காட்சிப்படுத்தும் ஆய்வாளர், திருக்குறளில் கையாளப்பட்டிருக்கும் ஒவ்வொரு உத்தியும் பின்வந்த சான்றோர்களாலும் நோக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆய்வுநெறிப்படி விளக்கியிருக்கிறார்.
    1. திருவள்ளுவர் “இரப்பன் இரப்பாரை எலலாம் இரப்பின் ‘கரப்பார் இரவன்மின்’ (1067) என்று ”ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தன்மை ஒருமையில் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது ஆய்வாளரின் உழைப்பையும் ஆய்வின துல்லியத்தையும்  காட்டுகின்றன.

    ஆய்வு நெறிப்ப்டி கடும் உழைப்புடனும் ஒரு தேடல் பார்வையுடனும் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆய்வுக் கட்டுரை பகுப்பாய்வாக இருப்பினும் ஒவ்வொரு பத்தியிலும் ஆய்வு மணம் கமழ்வதை உணர முடிகிறது. ஆய்வாளருக்கு அறிவு இயற்பொருளாகவும் ஆற்றல் துணைப்பொருளாகவும் அமைந்திருப்பதைக் கட்டுரை வெளிப்படுத்துவதாக உள்ளது.


     

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 16

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 16

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    முன்னுரை

    படைப்பாற்றல் எல்லாருக்கும் கைவரப் பெறாது. அதனுள் கவிபுனைதல் என்பது இயற்கையாற்றல். கவிபுனைவார் எல்லாருக்கும் புதியன படைக்கும் எண்ணம் வந்துவிடுவதில்லை. எண்ணம் செயலாவதற்குள் எத்தனையோ சூழல்கள்! செயல்வடிவமானாலும் பொருத்தமாக அமைந்துவிடும் என்றும் சொல்வதற்கில்லை. திருவெம்பாவை, திருப்பாவை என்றே கேட்டுப் பழகிய ‘பல தலைமுறைச் செவிகளுக்குள்’ ‘தலைமுறைப்பாவை’ என்ற புதிய தலைமுறைச் சொல் அவ்வளவு எளிதாகச் சென்றுவிடாது. பாவை இலக்கியம் என்றால் அது பக்திநெறியோடு தொடர்புடையது என்னும் கருத்தியல் அவ்வளவு எளிதில் நீர்த்துப் போகாது. மரபின் ஆழம், தாக்கம் அத்தகையது!. வடிவத்திலும் வெளிப்பாட்டு உத்தியிலும் மரபையும் பாடுபொருளில் புதுமையையும் தேக்கித் தமிழினப் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றான முன்னோர்களின் பெருமை கூறுதல் என்பதை முன்னெடுப்பதாகப் படைக்கப்பட்டிருக்கும் காப்பியமே தம்பி வசந்தராசன் படைத்துக் காட்டியிருக்கும் ‘தலைமுறைப் பாவை’ என்னும் இலக்கியமாகும். உடம்பின் உள்ளுறுப்புக்கள் பெரும்பாலானவை செயலிழந்து படுக்கையில் கிடக்கும் இந்த வேளையிலும் தம்பி வசந்தராசனின் தலைமுறைப் பாவையைப் படிக்கும் அரிய வாய்ப்பினைத் தமிழ்த்தாய் எனக்கு அருளியிருக்கிறாள்.  தாயின் திருவடி வணங்கி என் அன்புத் தம்பி வசந்தராசனின் தலைமுறைப் பாவையில் நான் சொக்கி நின்ற சுகமான நொடிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

    தொல்காப்பியமும் பாவை இலக்கியமும்

    தொல்காப்பியம் ஒரு கவிதையியல் நூல்! அதனை அறிஞர் பலரும் பழந்தமிழர்களின் வாழ்வியல் நூல் என்று கருதுவது அவர்கள் உரிமை. நுண்ணோக்கு உடையார்க்கு அரிஸ்டாட்டிலின் கவிதையியல் போன்றது அது என்பது எளிதில் புலப்படும். பொருளதிகாரத்தின் பிந்தைய ஐந்து இயல்களை முன்னாக்கிக் கற்றால் எளிதில் தெரிந்து கொள்ளலாம். தொல்காப்பியத்தின் பெருமையே வளமான மக்கள் வாழ்க்கை உணர்வுகளின் வெளிப்பாட்டை நன்கு ஆராய்ந்து செய்யப்படும் இலக்கியங்களைப் பற்றிய ஆய்வினை உலகினில் முதன் முதல் நிகழ்த்தியதுதான்! வரலாற்றுக் குறிப்புக்களைக் கூட ஆவணப்படுத்தத் தெரியாத ஒரு சமுதாயத்தில் அகப்புற வாழ்வியல் கூறுகளை ஒருவன் ஆராய்ந்திருக்கிறான் என்பது வரலாற்றுக்கும் ஆய்வு நெறிக்கும் முரணாகும். தொல்காப்பியத்தின் அமைப்பு முறையே அது ஒரு இலக்கியவியல் நூல் என்பதை நிறுவதற்குப் போதுமானதாகும். எழுத்து, சொல் என ஆராய்ந்த பிறகு அவற்றால் வடிவமைக்கப்படும் இலக்கிய ஆராய்ச்சியே பொருளதிகாரம். பொருளியலுக்கும் வாழ்வியலுக்கும் என்ன தொடர்பு? பொருளியல் என்றால் சொற்களின் ஆராய்ச்சி அல்லவா? உவம இயலுக்கும் வாழ்வியலுக்கும் என்ன நெருக்கம்? செய்யுளியலை வாழ்வியலில் எவ்வாறு பொருத்துவது? பொருளதிகாரப் பதிவுகளில் பழந்தமிழ்ச் சமுதாயக் கூறுகள் நிழல்போல் படிந்திருக்கக் கூடும். அதனாலேயே அது பழந்தமிழர் வாழ்வியல் கூறுகிறது என்பது அவ்வளவு முழுமையான கருதுகோள் ஆகிவிடாது. இத்தகைய சிறப்புடைய தொல்காப்பியத்தில் காணக் கிடைக்காத பாவை பற்றிய குறிப்புக்கள் சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே மின்னுகின்றன என்பதைப் பின்வரும் சான்றுகளால் அறியலாம்.

    சங்க இலக்கியங்களில் மார்கழி நீராடல்

    மார்கழித் திஙகள் அதிகாலைத் துயிலெழுந்து குளிர்ந்த நீரில் நீராடி இறைவனை வணங்குதல் என்பதைச் சைவமும் வைணவமும் போற்றியுரைக்கும்.  தமிழர் மரபில் இத்தகைய நீராடல் என்பது சங்ககாலம் தொடங்கியே இருந்து வந்தது என்பதனைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கும்.

    கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப்
    பனிப்படு பைதல் விதலைப் பருவத்தை” (பரிபாடல் 11)

    ‘கார்வானம் நீங்க’ என்னும் குறிப்பானது கார்த்திகை மாதத்துக் கனமழை ஓய்ந்தது என்பதனையே குறிப்பதாகும். மார்கழிப் பௌர்ணமி மதியானது முழுமதியாதலால் மறு நிறைந்து காணப்படுகிறது. இந்நிலவினோடு ஆதிரை மீனும் சேர்கிறது. அத்தகைய நன்னாளில் விழா தொடங்குகிறது. ஆதிரை நாளில் தொடங்கும் இவ்விழா முப்பது நாட்கள் நடக்கும். அத்திருநாள் மார்கழிப் பாதியில் தொடங்கித் தைப் பாதியில் நிறைவு பெற்றமையால் ‘தை நீராடல்’ என்றே அழைக்கப்பட்டது, தேவகிக்கு மகனாகப் பிறந்து யசோதைக்கு மகனாக வளர்ந்த கண்ணபிரானைப் போல மார்கழியில் தொடங்கிய நோன்பு தைந்நீராடலோடு நிறைவடையும் காரணத்தால் இரு திங்களுக்கும் பொதுவானது பாவை நோன்பு என்பது பெறப்படும். பெண்கள் அனைவரும்  தைந்நீராடும் பரந்த குளத்திற்குத் தலைவனின் பரத்தமை கொண்ட மார்பினை உவமையாக்குகிறது ஐங்குறுநூறு. .

    நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
    தைத்திங்கள் தண்கயம் போலப்
    பலர் படிந்துண்ணும் நின் பரத்தை மார்பே” (ஐங். 84)

    இவ்வாறு முதலில் ‘தை நீராடல்’ என்று குறிக்கப்பட்டதே பின்னர் ‘மார்கழி நீராடல்’ ஆயிற்று. கபிலரின் குறிஞ்சிக்கலியில் வரும் பெண் தன் சிறுவயதில் பாவையை வைத்து நோன்பு நோற்றாள். அந்த நோன்பிற்காகப் பிறர் மனையில் சென்று பிச்சையேற்றாள். அதனைச் சமைத்து ஆயத்தாருக்கும் கொடுத்துப் பாவைக்கும் ஊட்டினாள். இவ்வாறு தை நீராடிய பெண்களுள் சிலர் வையை நோக்கி மார்கழி மாதத்தில் உன்னுடைய நீர் மிகத் தெளிவாய் இருக்கும், எனவே நீ நீராடலுக்குத்  தகுதியுடையாய்! என்று கூறினர். மேலும் சிலரோ வையையிடம் காதலரைத் தழுவும் பேறு பெற வேண்டும் என வேண்டி நின்றனர். இன்னும் சிலர் பூவில் விழும் வண்டு அப்பூவினை விட்டு நீங்காததுபோல் எங்கள் தலைவர் எம்மை விட்டு நீங்காது இன்பம் தருவாராக! என வேண்டினர். வேறுசிலர் பெண்களின் ஏழாம் பருவ நிலையாகிய பேரிளம் பெண் பருவத்திலும் இளமையைத் தந்து செல்வத்தையும் தருக என வேண்டி நின்றனர் எனப் பரிபாடலின் பதினொன்றாம் பாடல் விளக்கியுரைக்கும். பாவை விளையாட்டோடு தொடங்கிய இம்மரபு பின்னர் சைவ சமயச்சார்பு பெற்று வளர்ந்ததை அகநானூற்றின் 181 ஆம் பாடல் உணர்த்தி நிற்கும்.

    ‘‘நான்மறை முதுநூல் முக்கட்செல்வன்
    ஆலுமுற்றம் கவின்பெறத் தைஇய
    பொய்கை சூழ்ந்த பொழில்மனை மகளிர்
    கைசெய் பாவை துறைக்கண் இருக்கும்
    புகார்”; ( அகம் – 181 )

    சங்க காலத்தில் கொண்டாடப்பட்ட பாவை நோன்பிற்கு மழைவளம் பெறுதலும் நல்ல கணவன் அமைதலுமே காரணமாய் அமைந்தன. ஆனால், திருப்பாவையின் பாடல்கள் இறைவனாகிய கண்ணனே கணவனாக வரவேண்டும் என வேண்டுவதாக அமைந்துள்ளது. கண்ணனையே கணவனாக அடையவேண்டும் என ஆயர்குல மகளிர் மார்கழியில் காத்யாயினி தேவியை வேண்டி நோற்பதுவே பாவை நோன்பு எனப் பாகவதம் குறிப்பிடும். அதனையே வைணவ உரையாசிரியர்களும் ஏற்பர்.

    நோன்பு எவ்வாறு நோற்கவேண்டும் என இரண்டாவது பாடலும் நோன்பு நிறைவு பெற்றமைக்குப் பின் நிகழும் செயல்களை இருபத்தேழாம் பாட்டும் குறிப்பிடுகிறது. நோன்பு மேற்கொள்ளப்படும் இடம் பாவைக் களம் எனப்படும். பாவைக்கு நீராட்டுதலை இரண்டு, மூன்றாம் பாடலும் மழை பொழிய வேண்டுவதனை மூன்று, நான்காம் பாடலும் கண்ணன் கணவனாக வரவேண்டும் என்பதனை இருபத்தைந்து, இருபத்தெட்டு, இருபத்தொன்பதாம் பாடலும் விளக்குகின்றன.

    மணிவாசகப் பெருமானும் பாவை நோன்பும்

    மணிவாசகர் திருப்பெருந்துறையில் உறைந்த காலத்து அங்குள்ள பெண்கள் அம்மானை, ஊசல், சாழல் போன்றவற்றை ஆடுதல் கண்டு அவற்றை இறைவன் புகழ்பாடும் பாடல்களுக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் தனக்குக் கிடைத்த சிவானுபவம் உலக உயிர்களுக்குக் கிடைக்கவேண்டும் என எண்ணிச் செய்ததே திருவெம்பாவை என்றும் திருவாலவுடையார் திருவிளையாடற்புராணம் குறிப்பிடுகின்றது. மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் இருந்த காலத்தில் அந்நகரில் இருந்த பெண்கள் எல்லாம் மார்கழி மாதத்தில் திருவாதிரைக்கு முந்தைய பத்து  நாட்களும் வீடுகள்தோறும் சென்று பெண்களை அழைத்து விடியற்காலத்தில் குளிர்ந்த நீருடைய தடாகத்தில் நீராடினர். அவர்களுடைய செயலைக் கண்ட மாணிக்கவாசகர் திருவெம்பாவையைப் பாடினார். திருவெம்பாவை திருப்பாவையிலிருந்து வேறுபட்டதாகும். தான் பெற்ற சிவானுபவத்தை ஏனைய உயிர்களும் பெற வேண்டும் என்பதற்காகப் பாடப்பெற்றது திருவெம்பாவை. நல்ல கணவனையும் நீங்காத மழையையும் பெறுவதற்காகப் பாடப்பெற்றது திருப்பாவை. இவையே இரண்டுக்குமான அடிப்படை வேறுபாடு. இனி நல்ல கணவனைப் பெற வேண்டிய நிலை வளர்ச்சிநிலை எய்திக் கண்ணனே கணவனாக அமையவேண்டும் என்ற நிலைக்குச் சென்றது திருப்பாவை. இதனை,

    எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
    உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
    மற்றை நம் காமங்கள் மாற்றுஏலோர் எம்பாவாய் !”

    என்னும் பாசுர வரிகளால் அறியமுடியும். ஆனால் திருவெம்பாவை இதற்கு நேர் எதிரானது. சிவனைக் கணவனாகக் கருதுதல் சைவ மரபன்மையின் சிவனடியார்களுக்கு வாழ்க்கைப்படுவதையே பெண்கள் விரும்பினர். அதற்கான நோன்பே திருவெம்பாவை.

    உன்னைப் பிரானகப் பெற்ற உன் சீரடியோம்
    உன் அடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
    அன்னவரே எம் கணவர் ஆவார்! அவர் உகந்து
    சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்!”

    என்ற வரிகள் உணர்த்தும். இவ்வாறு சங்க காலத்தில் தை நீராடலாய்த் தொடங்கிப் பின் வந்த காலத்தில் மார்கழி நீராடலாய் மாறியதே பாவை நோன்பின் வரலாறாகத் தெரிகிறது. பாடப்பெற்ற காலமும் உள்ளடக்கமும் நோக்கமும் தொடக்கநிலையிலிருந்தே மாறுபடுவது பாவை இலக்கியத்தில் வியப்பான ஒன்று அல்ல., வெகு இயல்பே என்பது இதனால் நிறுவப்படுகிறது. எனவே திறனாய்வுக்குட்படுத்தப்படும் தலைமுறைப்பாவையின் உள்ளடக்கமோ வடிவக் கட்டுமானமோ மரபு மீறியது என்ற பேச்சுக்கே இடமில்லாது போய்விடுகிறது. இது பற்றிக் கூடுதலான சில தகவல்கள் தொடர்கின்றன.

    பாவை நூல்களின் பட்டியல்

    பாவை இலக்கியத்தைப் பற்றிப் பேராராய்ச்சியை நிகழ்த்தியவர் பண்டிதமணி அவர்களே. தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் அவர்களின் உரைப்பகுதிகளின் அடிப்படையில் அவர் தமது ஆராய்ச்சியைச் செந்தமிழ் இதழில் நிகழ்த்தியிருக்கிறார். தொடக்கக் காலத்தில் பாவைப்பாடல்கள் வாய்மொழி இலக்கியங்களாகவே அமைந்துபோன காரணத்தால் எந்த ஒரு பாவைப்பாடலையும் முழுமையாகப் பெற முடியவில்லை என்னும் கருத்தினை முன்வைக்கிறார்.

    இனிப் பாவைப்பாடல்கள் கலிப்பா வகையைச் சேர்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. நான்கடி முதல் பத்து அடிகளில் இவை பாடப்பெற்றன என்பதையும் பண்டிதமணி விளக்கியிருக்கிறார். கலிவிருத்தமாகப் பாடப்பட்ட இப்பாவை இலக்கியம் பின்னாளில் அதாவது ஆண்டாள், மணிவாசகர் ஆகியோர் இவர்கள் காலத்தில் கொச்சகக் கலி அமைப்பில் எட்டு அடிகளால் நிரம்பிய நூல் வடிவத்தில் அதாவது பதிகமாகவும் பாசுரமாகவும் பாடப் பெற்றிருக்கிறது. புறக்கட்டுமானத்தைப் பொருத்தவரையிலும் திருப்பாவை முப்பது பாடல்களைக் கொண்டு விளங்க, திருவெம்பாவையோ இருபது பாடல்களை மட்டுமே கொண்டு விளங்குகிறது! கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய திருப்பாவை முப்பது பாடல்களும் ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய திருவெம்பாவை இருபது பாடல்கள் மட்டுமே கொண்டிருப்பதும் சிந்தனைக்குரியதாகும். திருப்பாவை, திருவெம்பாவை என்னும் வைணவ மற்றும் சைவ இலக்கியப் பாவைகளைத் தொடர்ந்து தமிழில் பின்வருமாறு தோன்றிய பாவைகள் கிட்டியிருக்கின்றன.

    1. 16ஆம் நூற்றாண்டில் தத்துவராய சுவாமிகள் எழுதிய இரு பாவை நூல்கள்
    2. 1920 அவிரோதநாதர் எழுதிய சமணர் திருப்பாவை
    3. 1954இல் எழுதப்பட்ட முருகன் திருப்பாவை
    4. 1957இல் ஒன்பது துறவிகளால் எழுதப்பெற்ற திருவெம்பாவை
    5. 1962இல் ஆ.மு.வேங்கட்ராமன் எழுதிய மதுரை பரிபூரண விநாயகர் திருவெம்பாவை
    6. 1963இல் கண்ணதாசன் எழுதிய தைப்பாவை
    7. 1965இல் பெருஞ்சித்திரனார் எழுதிய செந்தமிழ்ப்பாவை
    8. 1966இல் கவியோகி சுந்தானந்த பாரதியார் எழுதிய தமிழ் திருவெம்பாவை
    9. 1973இல் கா.மு.ஷெரீப் எழுதிய நோன்புத் திருப்பாவை
    10. இல் காரை இறையடியான் எழுதிய திருவருட்பாவை
    11. 2019இல் துரை வசந்தராசன் எழுதிய தேன்பாவை
    12. 2020இல் வள்ளிமுத்து எழுதிய எழிற்பாவை
    13. 2020இல் வரதராசன் எழுதிய சுறவம்பாவை

    என்று பாவை இலக்கிய நூல்களின் பட்டியல் விரிவடைகிறது. எனினும் இவை எதுவும் ஒன்று போல் மற்றொன்று இல்லை என்பதும் கருத்திற் கொள்ளத்தக்கது. ‘பாவை’ என்ற சொல்லைக் கொண்டு முடிவதினாலேயே இந்த இலக்கியம் ஒரே தன்மையுடையவாயின என்றும் கருதுவதற்கில்லை.

    பா(ர்)வை  பலவிதம்!

    ‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்வதற்காகத்’ தொடங்கப் பெற்ற திருப்பாவை நோன்பு மங்கையர் நல்ல கணவனைப் பெறுவதற்கான நோன்பாகவும் அமைந்தது. ‘எம் கொங்கை நின் அன்பர் அல்லால் தோள் சேரற்க’ என்னும் திருவெம்பாவை காண்க. கவிஞர் கண்ணதாசன் திராவிட இயக்கத்தில் இருந்த வேளையில் எழுதிய நூல் தைப்பாவை. சமயப்பற்றுள்ள குடும்பத்தில் பிறப்பு, சமய நூல்களில் ஈர்ப்பு மற்றும் ரசனை ஆகியன அவரிடம் திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய நூல்களைக் கொண்டு சேர்த்திருந்தது. அவற்றின் யாப்பழகும் ஓசைச் செப்பமும் அவர் மனத்தில் இடம் பிடித்ததன் விளைவாக எழுந்த நூல் தைப்பாவை. திருப்பாவையும் திருவெம்பாவையும் பாவை வடிவமொன்றைச் செய்து அதனை முன்னிலைப்படுத்திப் பாவாய் என அழைத்துத் தோழியர் பாடுவதாக அமைந்திருக்கும். ஆனால் தைப்பாவையில் கவியரசு கண்ணதாசன் தைமகளையே ‘தைப்பாவாய்’ என அழைத்துப் பாடியிருப்பார். தைத்திங்கள் முதல்நாளைத் தமிழர் திருநாள் என்று கொண்டாடும் தமிழர் இயல்பையும் திராவிட இயக்கக் கருதுகோளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழர் மரபு, வேளாண்மை, காதல் வாழ்வு, மூவேந்தர் மாண்பு உள்ளிட்ட பற்பல அம்சங்களைக் கொண்டு தைப்பாவை எனும் நூலை சுவைமிக்க கவிதைகளால் தொடுத்திருக்கிறார் கவியரசு கண்ணதாசன். தைமகள் வருகையால் தமிழர்களுக்குரிய எல்லா மேன்மைகளும் கிட்டவேண்டும் என்றும் கன்னியருக்குத் திருமணம் கைகூட வேண்டுமென்றும், மூவேந்தர் மாண்பு துலங்க வேண்டுமென்றும் பற்பல அம்சங்களை இந்நூல் பாடுகிறது.

    எந்தமிழர் கோட்டத்து இருப்பார் உயிர்வளர
    எந்தமிழர் உள்ளத்து இனிமைப் பொருள்மலர
    எந்தமிழர் கைவேல் இடுவெங் களம் சிவக்க
    எந்தமிழர் நாவால் இளமைத் தமிழ் செழிக்க
    முந்து தமிழ்ப்பாவாய் முன்னேற்றம் தான் தருவாய்
    தந்தருள்வாய் பாவாய் தைவடிவத் திருப்பாவாய்
    வந்தருள்வாய் கண்ணால் வாழ்த்துரைப்பாய் தைப்பாவாய்

    இப்பாடல் தமிழரின் வாழ்வியல்புகள் பலவற்றையும் சுட்டுகிறது. தைமகள் வருகையால் தமிழர் நலன் மேம்பட வேண்டும் எனும் வாழ்த்தையும் இப்பாடலில் கவியரசர் கூறுகிறார்.

    தலைமுறைப்பாவை கட்டுமானச் சிறப்பு

    எட்டடி கொண்ட கொச்சகக்கலியால் ஏனைய பாவைகள் எல்லாம் அமைந்திருக்க வசந்தராசன் எழுதியிருக்கும் இந்தப் பாவை பத்து அடிகளைக் கொண்டதாக அமைந்திருக்கிறது.

    இந்தப் பாவை முகநூலில் வெளிவந்த போது பின்னூட்டம் இட்ட பேராசிரியர் ஒருவர் ‘முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி எழுதுக’ என எட்டடிக்கு மிகாமல் எழுதவேண்டும் என்று கடடளையிட்டது என் நினைவில் இன்னும் வட்டமிடுகிறது!.

    மானுடம் வளர்ச்சி நோக்கியது. சிந்தனைகளும் சிக்கல்களும் புதியனவாகத் தோன்றும். சான்றாக நான்கடி கொண்டு தனிச்சொல் பெற்று அமைவது நேரிசை வெண்பா என்பது அனைவருக்கும் தெரியும். தனிச்சொல் இல்லாமல் நான்கடியாய் வந்தால் அது இன்னிசை வெண்பா என்பதும் தெரியும். ஆனால் தனிச்சொல் பெற்று மூன்றடியால் வந்தால் அது என்ன பா? இரண்டாம் அடிக்குப் பதிலாக மூன்றாவது அடியில் தனிச்சொல் பெற்று வந்தால் அது என்ன பா? ஒரு நேரிசை வெண்பாவில் கனிச்சீர் வந்துவிடுமானால், அதற்கு ஆயுள் தண்டனை கொடுத்துவிடலாமா? வெண்டளை தவிர்த்துப் பிற தளை வந்துவிடுமானால் அப்போது அது என்ன பா? எத்தனைப் பேருக்கு இது தெரியும்?

    ஏதோ எனக்கு மட்டுந்தான் தெரியும் என்பது போல நான் எழுதுவதாகக் கருதிவிடக்கூடாது, நாம் கவனிப்பதில்லை! அவ்வளவுதான். அதுபோலவேதான் எட்டடிதான் கொச்சகக்கலி வரவேண்டும் என்பது விதியில்லை. அது வழக்கியல் மரபு. பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபின் மாற்றம். இந்த மாற்றம் வலிந்து அமையக்கூடாது. தம்பி வசந்தராசன் தான் எழுதிய பாவை இலக்கியத்தைப் பத்தடிகளால் புனைகிறார் என்றால் சிந்தனை ஓட்டம் அப்படி! செய்திகளின் சாரம் அப்படி! இன்னும் பறையறைந்து சொல்லப் போனால் தலைமுறைப் பாவையின் பாடுபொருள் தமிழிலக்கியம் இதுவரை காணாதது! தற்கால முகநூல் கண்டது!. முற்றிலும் வேறுபட்டதொரு பாடுபொருளை மாறுபட்டதொரு வடிவத்தில் சொல்வதற்குப் படைப்பாளனுக்கு உரிமை உண்டு!

    பத்தடி பாடினாலும் பாலுணர்வு கண்டதில்லை

    கையாலாகாதவன் மரபினைப் பின்பற்ற இயலாமைக்கும் வல்லாளன் படைப்பில் அது மாற்றம் பெறுவதற்கும் வேறுபாடு உண்டு. திருவெம்பாவை உள்ளிட்ட அத்தனைப் பாவைகளும் அவற்றுள் வரும் பெண்கள் வாய்மொழியாக அமைந்தவை. தலைமுறைப் பாவைதான் படைப்பாளன் வாய்மொழியாக அமைந்தவை. ஆம்!. ஓர் ஆண் பாவை பாடியிருக்கிறான்!  கொழுநனோடு கொஞ்சிய பாவைகள் உண்டு!. இஞ்சியையும் மஞ்சளையும் ஏற்றமிகு தமிழையும் பாடிய பாவைகள் உண்டு. இறைவனைப் பாடிய பாவைகள் உண்டு! இறைவனையே கணவனாக வேண்டிய பாவைகள் உண்டு! மழைவேண்டிய பாவைகள் உண்டு! மார்கழியில் தொடங்கித் தையில் முடிந்த பாவைகளும் உண்டு. தம்பி வசந்தராசனின் பாவை தலைமுறைப்பாவை! தன் முன்னோர்களின் பெருமை பேசும் பாவை! தமிழ்ச் சான்றோர்களின் தியாகத்தை எடுத்துரைக்கும் தண்டமிழ்க் காப்பியம்! தான் வாழ வாழ்ந்த தலைமக்களையும் தமிழ் தழைக்க வாழ்ந்த தாளாளர்களையும் தானும் போற்றிப் பிறரையும் போற்றுங்கள் என வேண்டி முரசு கொட்டும் வேறுபட்ட பாவை இந்தத் தலைமுறைப் பாவை!

    வீர முனுசாமியின் வெற்றிப் பரம்பரை

    தலைமுறைப் பாவை என்னுந் தலைப்பு மட்டுமே மரபு சார்ந்தது, கட்டுமானம் கொச்சகக்கலியாக அமைந்தாலும் பத்தடிப் பாவை என்பதால் அதுவும் புதுமையே. தமிழ்க்கவிதை வரலாற்றில் யாரும் சிந்திக்காத ஒரு சமுதாயக்களம். அது ஒரு புதுமை! ஒரு தனிமனிதன் தன் குடும்பம் சார்ந்த முன்னோர்களின் சொத்துக்களுக்கு வாரிசாக வருவதுண்டு. ஆனால் அந்த முன்னோர்களை இனிய இலக்கியத்தில் பாசத்தோடு பதிவு செய்வது வேறு. பெற்றவர்களுக்கு நூலை அர்ப்பணிப்பதோடு இதுவரை முடிந்து வந்த முன்னோர் வணக்கத்தை ஒரு சிற்றிலக்கியத்தின் பாடுபொருளாக ஆக்கி ஒரு மாபெரும் உள்ளடக்கப் புரட்சியைச் செய்திருக்கிறார் வசந்தராசன். அண்ணாமலையான் ஒருவனை மட்டும் பாடுபொருளாகக் கொண்டதுதான் திருவெம்பாவை! கண்ணபிரானை மட்டும் பாடுபொருளாகக் கொண்டதுதான் திருப்பாவை!. ஆனால் தலைமுறைப்பாவையில் பாடுபொருளாக ஒருவர் அல்லர் ஒரு பட்டாளமே இருக்கிறது!.

    ஈரம்வாழ் நெஞ்சன்! இரும்பையுமே ஈர்த்துவக்கும்
    சோரமே காணாத சொற்கற்பன் ! என்றைக்கும்
    ஊரின் நடுமரம்! உண்ணக் கனிநீட்டும்!
    ஊருணித் தாய்மை! ஒழுகும் மலைமார்பு!
    ஆரத் தழுவுகின்ற அன்பின் பெருங்கடல்!
    சேரன்தன் வில்லம்பாய்ச் செஞ்சொல் மணிதீர்ப்பு!
    ஓரமே போகாத உயராண்மை! தன்நிழலைத்
    தூரம் அனுப்பாத் தொடருச்சி வெங்கதிராம்
    வீர முனுசாமி வெற்றிப் பரம்பரையின்
    தீரம் உரைக்கவந்தேன்!”

    எனத் தொடக்கம் செய்யும் வசந்தராசன் அனைத்து உறவுகளையும் இந்தப் பாவையில் பதிவு செய்திருக்கிறார். தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில்கூடப் பாட்டுடைத் தலைவனாகிய மன்னனின் தாயும் தந்தையும் மட்டுமே (இன்னாருக்கு இன்னார் வயிற்றில் தோன்றியவன் என்பது போல) கொளுவில் குறிக்கப்பட்டிருக்கின்றனர். பக்திப் பொருளைப் பாடினாலும் பாவை என்பது அகம் சார்ந்த இலக்கியம். பாட்டுடைத் தலைவர்களாகப் பலரையும் பதிவு செய்திருப்பதால் ஒருவகையில் புறம் சார்ந்த கையறுநிலையாகவும் கொள்ளலாம். கையறுநிலையில் பெருமையும் இழப்பும் குறிக்கப்படும். இதில் பெருமை மட்டும் குறிக்கப்படுகிறது. பிறப்பினால் மனிதன் என்றாலும் அவனை மனிதன் என ஏற்றுக் கொள்வது மானுடச் சமுதாயம். மானுடச் சமுதாயத்தின் முதல் அறிமுகம் பள்ளி. அந்தப் பள்ளியின் பெருமையைப் பாடுகிறார் கவிஞர்!

    கவிஞன் வரலாற்றை எழுதுவதற்கும் வரலாற்றாசிரியன் கவிதை எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு. தலைமுறைப் பாவை கவிஞனால் எழுதப்பட்ட வரலாறு. எனவே கவிமணம் தவிர்க்க இயலாதது. அதனால் வரலாறு தடம் மாறுவதில்லை. மாறாகத் தேசிய நெடுஞ்சாலைப் பூக்களாகக் கவிநயம் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதைக் காணமுடிகிறது. ‘மனிதன் இரக்கத்தோடு வாழவேண்டும்’ என்பது கருத்து. ‘ஈரம் தான் வாழ ஒரு இடத்தைத் தேடி அந்த இடமாக முனுசாமியின் நெஞ்சைத் தேடி வாழ்ந்தது’ என்கிறது கவிதை. ஊரின் நடுமரம்! உண்ணக் கனிநீட்டும்! ஊருணித் தாய்மை!’ என்பது வள்ளுவத்திற்கு வசந்தன் எழுதிய கவிதை உரை!. ஓரம் போகாத உயர் ஆண்மையாம்! அடடா! தன் தீர்ப்புக்குக் கட்டுப்படுவர் என்பதனால் கோடிவிடக்கூடாது என்பதை அழகாகப் பாடுகிறார். ‘தன்னிழலைத் தூரம் அனுப்பாத தொடருச்சி வெங்கதிராம்என்று பாட்டனின் பண்பைப் பாடுகிறார். உச்சிப்பொழுதுக்கு முன்னும் பின்னும் கதிரவனின் நிழல் சாயும். சரியும்! முனுசாமி உச்சிச் சூரியனாம்! நடுநிலைக்கு இப்படியொரு உருவகம்! உவமம்!

    பள்ளியையும் ஆசிரியர்களையும் பாடும் பாவை

    பாவையரைப் பாட்டுடைத் தலைவராகக் கண்ட காப்பியங்கள் உண்டு. மறவர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்ட காப்பியங்கள் உண்டு. தான் படித்த பள்ளியைக் களமாக்கிப் பாடம் சொன்ன ஆசிரியர்களைப் பாட்டுடைத் தலைவர்களாக்கிய புதுமையை வசந்தன் இந்தப் பாவையில் செய்திருக்கிறார். ஒரு நூலைப் படிக்கிறபோது ஏதாவது கிடைக்காதா என்ற ஆர்வம் மேலோங்க அணுக வேண்டும்! ‘இவன் என்ன பாடிவிடப் போகிறான்? இதில் என்ன கிடைத்துவிடப் போகிறது?’ என்னும் மனப்பான்மையோடு அணுகினால் பார்வை மங்கும்! படைப்பில் புகையண்டும். பொங்கலுக்கு வாய்த்த புதுத்துணி என்பது ஆண்டுதோறும் மாறி வரும் ஆசிரியர்களைக் குறித்தது! ஒவ்வொரு பொங்கலுக்கும் புதுத்துணி என்பது குறிப்பு உவமம்! இது சிறுபான்மையாக இருந்தாலும் ஆசிரியர் அனைவரையும் வணங்கி மகிழும் இளைய நெஞ்சுகளின் இளகிய வெளிப்பாடாகக் கொள்ளலாம்! இன்றைக்கு நாம்பேசுகிற மானுடம் மனிதநேயம் எல்லாம் ‘பொதுநலச் சரிகை’ போர்த்திய போலிச் சுயநலம்! தம்பி வசந்தன் எழுதுகிறான் பாருங்கள்!

    “எங்கும் உயர்த்தில் எம் பள்ளி வாரிசுகள்!”

    இவன் அங்கே படிக்கப் போனது ஒரு மாணவனாய் “எம்பள்ளியாம்!” இலக்கணத்தின் தன்மைப் பன்மையை எப்படி இலக்கியமாக்குவது என்ற வித்தை இவனுக்குத் தெரிந்திருக்கிறது! ‘எங்கும்’ என்பது சிற்றூர், மாவட்டம், மாநிலம், நாடு என்பனவற்றைத் தாண்டி உலகளாவிய நிலையில் வாழ்ந்து வரும் மங்கலங் கிழார் பள்ளியில் கற்ற மாணவர் பலரையும் குறித்தது! பள்ளியைக் கற்பித்த கல்வி நிலையமாகக் கருதாது அதனைத் தம் உடைமையாகக் கருதிக் காக்க வேண்டுமென்பார் ‘வாரிசுகள்’ என்றார். வட்டாட்சியரிடம் சென்றால் இதற்கு வாரிசுச் சான்றிதழ் தரமாட்டார் என்பது வசந்தனுக்கும் தெரியும்! செங்கதிராய் எமை மாற்ற திங்களாய்த் தேய்ந்தார்கள் என்னும் கற்பனை அறிவியல் கண் கொண்டு நோக்குவார்க்குப் புலனாகாது. திங்கள் தேய்வதும் இல்லை வளர்வதும் இல்லை என்பது அறிவியல். ஆனால் ‘வளர்பிறை’, ‘தேய்பிறை’ என்பது கதிரவனுக்கு இல்லை.  திங்கள் தேய்வது கற்பனைச் சித்திரம்!. செங்கதிரோன் தேயாது நிலைத்திருப்பதும் கற்பனைச் சித்திரம்!

    திங்கள் ஒரு புறமும் ஔிர்
    செங்கதிர் ஒரு புறமும்
    தங்கியிருந்திடினும் ஒளி
    தாவுதல் உண்டது போல்

    என்பார் பாவேந்தர்! திங்கள் தேய்வதற்கு ஒரு காரணத்தைத் தன் குறிப்பாகச் சொல்லுகிறான் கவிஞன்! அந்தக் காரணத்தின் நுண்ணியத்தில் இருக்கிறது கவிதை! ஆசிரியருக்கான இலக்கணத்தை அறிந்தவர்களுக்கு இது புரியும். நிலம்போலச் சகிப்புத்தன்மை, மலர்போல மென்மை, துலாக்கோல்போல நடுநிலை, மலைபோல அறிவுயர்ச்சி இவைகளெல்லாம் அவருக்கான இலக்கண வரையறைகள்! நாங்கள் குளிர்வது உங்கள் புகழ் ஒளி உலகெலாம் பரவவே என்னும் ஆசிரியர்களின் பரந்து பட்ட உள்ளக் குறிப்பைச் ‘செங்கதிராய்’ என்னும் சொல் உணர்த்தியது காண்க. ‘நீங்கள் நிமிரவே நாங்கள் குனிந்தோம்’ என்பது குறிப்பு. கண்டிப்பும் கரிசனமும் துணிவும் கனிவும் கொண்ட வேதியல் கலவையே ஆசிரியர் பணி என்பதைத் ‘திங்களாய்த் தேய்ந்தார்கள் தீயாய் ஒளிர்ந்தார்கள்’ என்னும் தொடரால்  உணரலாம்! இனித் தீயினின்றும் பிறப்பதே ஒளியாதலின் ஒளியைத் தீயாய் ஒளிர்ந்தார் என்றது என்னையெனின், தீ காரணம் ஒளி காரியம். வசந்தன் காரணத்தைக் காரியமாக்கி உரைத்தார்!. ‘சூரியப் பிறைகள்’ என்பார் தமிழன்பன்!. உள்ளடக்கம் சூரியனைப் போல் சுட்டெரிப்பன! அவைபற்றிய பாடல்கள் குறுகிய ஹைக்கூ வடிவம்! அது நிலவுக்குப் பிறை! இரண்டையும் இணைத்துத் தாம் எழுதிய நூலுக்குப் பெயர்வைக்கிறார் தமிழன்பன் ‘சூரியப் பிறைகள்’! தலைப்பே ஒரு கவிதை! இது தமிழன்பனுக்கு மட்டுமன்று, தலைமுறைப் பாவைக்கும் பொருந்தும்!

    ‘பொங்கு புதுப்புனலின் பேரருவிப் பாய்நதியாய்’ என்னும் அடியில் புனல், அருவி, நதி என்னும் பொருட்பெயர்களுக்குப் புணர்த்திக் காட்டியிருக்கும் அடைகள் அழகியல் படைப்பாளனின் அழகியல் உணர்வை வெளிப்படுத்துவனவாம்! இனிப் பொங்கு புனல், பாய்நதி என வினைத்தொகையாய்க் கூறியதனால் எப்பருவக் காலத்தும் வற்றாத நிலையைக் குறித்தது. ‘பேரருவி’ எனப் பண்படை புணர்த்தி நயாகராவைச் சிந்திக்க வைத்திருக்கிறார். ஆசிரியர்தம் கற்பிக்கும் நெறிமுறைக்குக் காட்டப் பட்டிருக்கும் உவமங்கள் திருக்குறளைப் போலப் பத்தினி உவமங்கள்! பொருளாகிய பள்ளி ஆசிரியர்களுக்கு அடைபுணர்க்காது உவமத்திற்கு அடைபுணர்த்த பாங்கு அவர்தம் உணர்ச்சியையும், சரளமான கற்பித்தலையும் உணர்த்துகிறது. நதியாய் என்னும் உவமத்தைப் பள்ளியோடு இணைக்க! ‘பள்ளி’ ஆகுபெயர் மாண்பு ஆசிரியர்க்கன்றிக் கட்டடத்துக்கு ஆகாமையின்! இப்போது படித்துப் பாருங்கள் பள்ளியைப் பாடும் பாங்கினை!

    “தெங்கிளமை நன்றியினைத் தேடிச் சுமக்கின்ற
    நுங்கிளமை நெஞ்சத்தார்! நூல்நிறைக்கும் ஆற்றலென
    எங்கும் உயரத்தில் எம்பள்ளி வாரிசுகள்!
    பொங்கலுக்கு வாய்த்த புதுத்துணிபோல் ஆசான்கள்
    எங்களுக்கு வாய்த்தார்!செங் கதிராய் எமைமாற்ற
    திங்களாய்த் தேய்ந்தார்கள்! தீயாய் ஒளிர்ந்தார்கள்!
    இங்கும் மலையுச்சி ஏராள மாய்ப்படைத்த
    பொங்கு புதுப்புனலின் பேரருவிப் பாய்நதியாய்த்
    தங்குதடை யின்றித் தமிழ்வளர்க்கும் எங்களூர்
    மங்கலங்கி ழார்ப்பள்ளி மாண்பினைக்காண் எம்பாவாய்!”

    பள்ளியைப் பாடுகிறார். தொடர்ந்து அது உருவாக்கிய வாரிசுகளைப் பாடுகிறார்.

    ஊரைத் தாயாகப் பாடிய ஒரே கவிஞன்

    ‘குருவராசப் பேட்டை’ என்பதன் மரூஉ குருவை! பேரிலக்கியத்தில் நாடுகாண் காதை, காடுகாண் காதை என்றெல்லாம் பாடுவார்கள். நாடு, நகர், பாடுவார்கள்! காடு, கரை பாடுவார்கள். படலங்கள் என்னும் பெயரால் பல நூறு பாடல்களைக் கம்பன் பாடியிருக்கிறான். ஆனால் பாவை என்னும் சிற்றிலக்கிய உள்ளடக்கத்தில் தான் பிறந்த மண்ணைத், தன்னை வளர்த்த மண்ணைத், தன்னை உருவாக்கிய மண்ணைப் பாடியவன் வசந்தராசனாகத்தான் இருக்க முடியும் என்பது என் பணிவான அனுமானம். அது மட்டுமன்று. அந்த ஊரின் பெருமைகளை நிரலாகச் சொல்லிக் கொண்டு வந்து உணர்ச்சி மேலிட்டால் பெண்ணாக அதாவது தாயாக உருவகம் செய்திருக்கிற படைப்பாளுமை பெரிதும் மெச்சத் தகுந்ததாகும்.

    தருமம் வளர்த்தெடுக்கும்! தன்வியர்வை ஊற்றளித்துத்
    திருவை விதைத்திருக்கும்! தென்பொதிகைச் தமிழின்
    அருமை உணர்த்திவைக்கும்!ஆர்ப்பாட்ட மேதுமின்றிப்
    பெருமைப் பயிர்வளர்க்கும்! பேராண்மை நீட்டும்!
    கருமமே கண்ணாகிக் காலத்தின் கைரேகை
    கருவில் பதித்துவைக்கும்! கண்முன்னே கன்னல்
    திருமுறைகள் நூறாய்த் திருப்பதிகம் பாடவைக்கப்
    பெறுகின்ற பேரறிஞர் பேசும் வயிறுடையாள்
    ஒருமுகத்தாள் எங்கள் உயிர்நிறைக்கும் தாய்மண்ணாள்
    குருவை இளநகர்காண்!”                                  

    இந்தப் பாட்டில் ஒவ்வொரு வினைமுற்றுக்கும் இறுதியில் குருவை என்பதை இணைக்க வேண்டும்! சான்றாகத் தருமம் வளர்த்தெடுக்கும் குருவை! திருவை விதைத்திருக்கும் குருவை! என்றவாறு இணைத்துப் பொருள் காணவேண்டும். இப்படிப் பாடிவந்தவர் பேரறிஞர் பேசும் வயிறுடையாள் என்று ஊரை உயர்திணையாக்கிவிடுகிறார். பிறந்த மண்ணைப் பெற்ற தாயாக நோக்குகிறார். பழம்பெரும் ஓர் ஊரை இளநகர் என்று பாடுவது அதன் பெருமை நோக்கி!

    ஊரின் இருபுறமும்  ஓய்ந்த இருகுளங்கள்!
    தேரின் வடமாய்த் தெருக்கள்இவைநடுவே
    சீராய்ப் பிரித்தபடிச் செல்லும் நடுச்சாலை!
    நாரின்பூக் கட்டெனவே நன்றிணைந்த வீடுகள்முன்
    பேரின்பம் பேசும் பெருந்திண்ணை! சூழ்ந்திருக்கத்
    தூரெடுத் தூட்டும்  துணைதொடக்கப் பள்ளி !ஆங்குப்
    பேரெடுத்தப் பேர்கள் பெருங்கூட்டம்!”

    முதன் முதல் எழுதிய பொதுத்தேர்வுக்கான எண் நம்மில் எத்தனைப் பேருக்கு நினைவிருக்கிறது? எண்ணிப்பாருங்கள்! வசந்தராசன் இந்தப் பாவையில் குருவை தொடக்கப்பள்ளி மாணவனாகவே இருக்கிறார். ஓய்ந்த குளமாம்! மக்களும் விலங்குகளும் வாயாடி நீராடி வந்து போகிறவரைக்கும் அது ஓயாத குளம். போனபிறகு அது ஓய்ந்த குளம். திண்ணைப்பேச்சு கேள்விப்பட்டதுண்டு! திண்ணையே பேசிக் கேள்விப்பட்டதுண்டா? குருவராசப்பேட்டை வீட்டுத் திண்ணைகளும் பேசுமாம்! வீட்டுக்கு உரிமையாளரும் விருந்தினரும் வருவாரும் போவாரும் என அனைவரும் அமர்ந்து பேசி மகிழ்கிற திண்ணை அது. ‘இடத்தின் நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது’ என்பார்கள் இலக்கண அறிஞர்கள். குளம் நிறைந்தது என்றால் குளம் நிறையாது நீர்தான் நிறையும். நீரின் தொழில் குளத்தது வினையாகச் சொல்லப்பட்டதுதான் இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது என்பது. இலக்கணம் இலக்கியத்தை இனிமையாக்குவது இப்படித்தான்!

    இளைக்காத் தமிழெடுத்த மங்கலம் கிழார்

    தன் குடும்பப் பரம்பரை பாடும் வசந்தராசன் ஊரைப் பார்க்கிறார். பாடுகிறார். ஐம்பதுகளில் தமிழகத்தில் கல்விப் புரட்சி ஏற்பட்டது. மூடப்பட்ட ஐயாயிரம் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் அவ்வட்டாரத்து ஒருவர் மட்டும் தன்னந் தனியே முயன்று முப்பத்திரண்டு பள்ளிகளைத் திறந்திருக்கிறார். ‘அன்ன யாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்பானே பாரதி அந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டவர்தான் தலைமுறைப்பாவையின் தலைப்பாத்திரம் மங்கலம் கிழார். தறிநூல் மணக்கும் அந்த வட்டாரத்தைத் தமிழ் நூல் மணக்க வைத்த தமிழ்க்கிழார்.

    யாத்த தமிழெடுத்து யாவர்க்கும் ஊட்டுதற்கே
    காத்திருந்த பல்கலைக் கல்விக் கழகமாய்
    மாத்தமிழால் மண்மணத்தை மாற்றிவைத்த கூத்தபிரான்!
    ………………………………………………………………………………………………
    சேர்த்துவைத்துப் போராடி செந்தணிகை மண்மீட்ட
    கூர்த்தமதியாளன்! கூடநின்ற போர்த்தலைவன்!
    ஆர்த்துக் குதிக்காத ஆழ நடுக்கடலான்!
    சீர்த்தமதி எங்கள் சீர்மங்கலங் கிழார்”   

    இந்தப் பாடலில் அறிமுகம் செய்யப்படும் மங்கலங் கிழார் திருத்தணிகைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய சிலம்புச் செல்வர்தம் பக்கத்துணையாய் இருந்த பண்பாளர்! கூர்த்த மதியாளன் கூடநின்ற போர்த்தலைவன்!’. ‘ஆர்த்துக் குதிக்காத ஆழ நடுக்கடலான்’ என்னும் தொடர் அன்னாருடைய அமைதியான உருவத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர். தொடர்ந்து எழுதுகிறார்.

    வித்தாய் வெடித்து விண்ணோக்கி எழுந்தபடி
    கொத்தாய் தான்காய்க்கும் கொடுமையதன் கோலத்தை
    மொத்தம் ஒழிக்கும் முனைப்புதான் கல்வியெனச்
    சித்தர் கிழாரவரின் சிந்தை குதித்ததனால்
    எத்திக்கும் உண்ண இளைக்காத் தமிழெடுத்துச்
    சத்துண வாக்கினார்! சங்கத் தமிழ்க்கடலின்
    முத்தெடுத்துத் தந்தார்! முழுத்தணிகை முற்றத்தில்
    ஒத்தையாய் உள்நுழைந்து ஊர்பதி னெட்டையும்
    தத்தெடுத்துக் கொண்டு தமிழர்நம் நாட்டுக்குப்
    புத்தாண்டாய் வந்தார்! புகழ்வணங் கெம்பாவாய்!”                                

    பிறவியினால் மனிதன்தான்! ஆனால் சமுதாயத்தில் தோற்றமே ஒருவனை மனிதனாக்கிவிடாது. கற்றவனுக்கும் கல்லாதவனுக்கும் உள்ள வேறுபாட்டினை விலங்கொடு ஒப்பிட்டுக் காட்டும் வள்ளுவம் ஓர்க! இந்த உண்மையை உணர்ந்த கிழார் பதினெட்டு ஊர்களையும் தத்தெடுத்துக் கொண்டாராம். உயர்திணையைத் தத்தெடுப்பதை அறிந்தார்க்கு ஊர்களையே தத்தெடுப்பது புதுமைதானே! அந்தப் புதுமையைத்தான் வசந்தராசன் பாடியிருக்கிறார்.

    தந்தையைப் பாடும் தனையன்

    பாவைகள் பாடும் பாவை இலக்கியத்தில் தந்தையைப் பாடும் தனையனாகக் காட்சியளிக்கிறார் வசந்தராசன்! மன்னர்களையே பாட்டுடைத் தலைவர்களாகப் பாடிவந்த தமிழ்மரபில் தந்தையையும் பாட்டுடைத் தலைவர்களில் ஒருவராக்கி மரபிலும் புரட்சி செய்திருக்கிறார் கவிஞர். கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளத்துக்குச் சொந்தக்காரர் துரைவேலர் என்பதையும் வாய்ச்சொல் வீரராக இல்லாமல் வினைமுடிக்கும் வீரராக வாழ்ந்திருக்கிறார் என்பதையும் தமிழ் சொட்டச் சொட்டப் பாடியிருக்கிறார்.

    துரைவேலர் எந்தையோ தொண்டர்க்குத் தொண்டர்!
    நிறைமனத்தன்! நெஞ்சுக்கு நேராண்மை யாளனவன்!
    திரைபோட்டுப் பேசத் தெரியாத தேன்கிண்ணம்!
    விரைந்து செயலாற்றும் வேல்வீச்சின் வேகம்!
    அரைத்துவைத்த சந்தனத்தை அள்ளித் தெளித்தாற்போல்
    உரைவீச் சிருக்கும்! தமிழ்தெலுங்கு இந்தியெலாம்
    கரைபுரளும்! காதுகளோ தேர்த்திருவி ழாகாணும்!
    குறையாத பேச்சாற்றல் கூட்டத்தைக் கட்டிவைக்கும்!
    தரைகூட மூச்சுவிடத் தத்தளிக்கும்! தாள்நெருக்கும்!
    துரைவேலர் சீர்பாடித் தூள்படுத்து எம்பாவாய்”           

    துரைவேலனார் உரைகேட்கக் கூடுவார்கள் என்பதைத் தரைகூட மூச்சுவிடத் தத்தளிக்கும்! தாள் நெருக்கும்!’ என்ற தொடரால் குறிக்கும் கற்பனைக் கொடுமுடி! ‘சந்தனத்தை அரைத்துத் தெளித்தாற் போல்’ என்னாது ‘அரைத்து வைத்த சந்தனத்தை அள்ளித் தெளித்து’ என்று பாடியது துரைவேலனாரின் புலமைத் தேக்கத்தைக் குறித்தது. கேட்பவர்தம் காதுகளுக்கு வேலனார் பேச்சு தேர்த்திருவிழாவின் ஆரவாரத்தை நினைவூட்டுமாம். ‘காதுகளோ தேர்த் திருவிழா காணும்!’ என்ன அழகிய கற்பனை? இதற்கு முன்னாலேயே,

    முந்தைத் தலைமுறையின் மூச்சுத் தொடர்ச்சிதான்
    எந்தை துரைவேலர்! இந்திமொழிப் பண்டிதர்
    சொந்த முகங்களுக்கும் சொர்க்கமாய் வந்தவர்!
    விந்தையாய்ப் பேசி விளாசும் கருத்தாளர்!
    நொந்த இதயத்தை நேரணைக்கும் தாயாளர்!
    எந்தப் பொதுத்தொண்டும் அல்வாவின் துண்டன்றே
    முந்தி பொறுப்பேற்கும் மூச்சாளர்! தொண்டரவர்
    நொந்தாலும் தன்மானம் தான்நொடிக்காப் பேராளர்
    வந்துதித்த வல்லெழுத்துவீறார்ந்த எம்குருவைச்
    சிந்தை குளிரவந்த சீர்மகன்காண் எம்பாவாய்!”                          

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்னுந் தொடர் மூன்று பொருள்களை உள்ளடக்கியதாம். இந்நால்வரும் ஒத்தவர் என்பது ஒன்று. மாதா, பிதா, குரு ஆகிய மூவரும் தெய்வத்திற்கு இணையானவர் என்பது மற்றொன்று. மாதா, குரு, தெய்வம் ஆகிய மூவரும் பிதாவுக்கு இணையானவர் என்றும் குரு என்பவர் மாதா, பிதா, தெய்வத்திற்கு இணையானவர் என்றும் கொள்ளலாம். சிந்தனைகள் இத்தொடர் பயனிலை இல்லாமல் அமைந்ததனால் இத்தகைய சிந்தனைகள் எழுவதைத் தடுக்க இயலவில்லை. இந்தப் பின்புலத்தில் ‘வீறார்ந்த எம்குருவைச் சிந்தை குளிரவந்த சீர்மகன்என்ற தொடர் அடர்த்தி கூடுவதைக் காணலாம்!

    தனித்திருந்து வாழும் தவமணி தாய் கன்னியம்மாள்

    பாவை இலக்கியத்தில் பலரையும் பாடியிருக்கிறார் இராசன். அவர்களைப் பாடவேண்டும் என்பதற்காகவே இலக்கியம் செய்திருக்கிறார். அஃறிணை, உயர்திணை எனப் பாடுபொருள் பலவானாலும் தாய் கன்னியம்மாள் ‘தனித்திருந்து வாழும் தவமணியாய்த்’ திகழ்கிறார். தாய் அல்லவா?

    “இந்தக் கவிப்போத் திருந்த குகையாளர்
    விந்தை உழைப்பாளி! வேராய்ப் படர்ந்தெம்மை
    எந்தை உயர்த்த இணையாய்த் தம்குருதி
    தந்த திருவுளம்! தணியாத காருளம்!
    எந்தாய்கன் னி(ய)ம்மாள் கவிதைக் கருவறை!”

    எனத் தாயைத் தானிருந்த குகை என அறிமுகம் செய்த கவிஞர், தமது கவிதைகளுக்கும் அவரே மூலம் என்பதை உணர்த்த கவிதைக் கருவறை என முடித்துக் காட்டுகிறார். மாளாத காதலால் மறுபடியும் பாடுகிறார்.

    “வரிநெய்த பாட்டுக்குள் வந்துவிழும் பாநயம்போல்
    தறிநெய்த தாய்வானம்! தண்ணிலவு கன்னியம்மாள்!
    அறிவாயா என்அன்னை ஆற்றலதன் ஆழுயரம்?
    எரிபசியி னூற்றை இமையிறகால் மூடிவைக்க
    உறிச்சோற்றுப் பாசத்தில் ஊட்டிகுளிர் தோற்றொடுங்க
    விரிவானம்   வெட்க விழுமழையால் விக்கிநிற்கக்
    கறிசோறாய்க் கூழ்கூட கைபட்டால் காட்சிதரும்!
    முறியாத பேருழைப்பின் மூச்சுக்காற் றானவள்தான்
    விரிசிறகின் தாய்ப்பாசம்! வெண்பாவில் நேரிசை!அத்
    திருப்பெயரைச் சொல்லிப்பார்! தித்திப்பாய் எம்பாவாய்!”

    பெருமிதத்தோடு பாடுகிறார்! ‘அறிவாயா என் அன்னை ஆற்றலதன் ஆழுயரம்? நுண்ணியம் தெரிகிறதா? அன்னையின் ஆற்றல் அந்த ஆற்றலின் ஆழம் மற்றும் உயரம்! நுண்பொருளுக்கு நீள அகலம் சொன்ன கவிஞன். இது ஒரு மரபுவழிச் சிந்தனை! காதலுக்கு அளவு சொன்னாள் சங்கத் தலைவி!  ‘நிலத்தினும் பெரிது! வானினும் உயர்ந்தன்று! நீரினும் ஆரளவின்று’ என் தலைவனோடு நான் கொண்ட நட்பு’ என்று. காதலுக்கு அளவு சொன்னாள் அவள். தாய்மைக்கு அளவு சொன்னார் தம்பி வசந்தராசன்! இதுதான் மரபுக் கவிதை! பாசம் நுண்பொருள்! குளிர்ச்சியான பொருள்! பாசம் தணிவிக்கும்! எரியாது! உதகையில் ஆண்டுமுழுதும் குளிரும். தாய்மை எப்போதும்  தண்ணென்று இருக்கும் தமிழ்க்கவிதை உலகில் தட்ப வெப்ப நிலையைத் தாய்ப்பாசத்திற்கு உவமம் கண்டதுண்டா? இயேசு தொட்டார்! பச்சைத் தண்ணீர் பழரசம் ஆனது! கன்னியம்மாள் கைதொட்டுக் கொடுப்பது கூழை! என்ன அதிசயம் அது கறிசோறு ஆகிறதாம்! பேரன் பேத்தி பிறந்த காலத்திலும் பெற்ற தாயின் பெருமை பேசும் பெருங்கவிஞன்! இவன் அன்னையர் தினத்தைப் பாடியவனல்லன்! அன்னையையே பாடியவன்!.

    உறவுகளும் சான்றோரும் ஊர்வாழ உழைத்தோரும்

    தாய், தந்தை, தங்கை, தம்பி, பாட்டன், பாட்டி என உறவுகளைப் பாடியதைத் தொடர்ந்து ஊர்வாழத் தாம்வாழ்ந்த உத்தமர்களைப் பாடுகிறார். ஆசிரியர் குப்புசாமியைப் பாடுகிறார். பாவை இலக்கியத்தில் பள்ளிக்கூட ஆசிரியர் ஒரு பாத்திரம்! தாய்மாமன் குப்புசாமி – அவர் மனைவி வள்ளியம்மாள்! வள்ளியம்மாள் வசந்தராசனின் அத்தை! அந்த அத்தை செய்த நன்றிக்கடனைக் கவித்துவத்தில் பதிவு செயதிருக்கிறார். எப்படி? இப்படி!

    ஆழ்தமிழ் ஆங்கிலம் அண்டுகிற இந்தியொடு
    சூழ்தெலுங்கு சமஸ்கிருதம் சொக்கவைக்கும் ஆற்றலினால்
    பாழறக் கற்றவர்! பன்மொழி வித்தகர்!
    ஆழ உழுதுழைத்த ஆசிரியர்! குப்புசாமி!
    வாழ்க்கைத் துணையவர்க்கு வள்ளியம்மை அத்தை!என்
    வாழ்க்கைத் துணைக்கு வாய்த்த தகப்பன்தாய்!”

    இந்தப் பாட்டில் நன்றிக் கடன் எங்கே வந்தது? எப்படி வந்தது? குருவராசப்பேட்டை, வளர்புரம், அத்திமாஞ்சேரிப்பேட்டை, மின்னல் நரசிங்கபுரம், அம்மையார்குப்பம், சத்திரவாடா, பொதட்டூர்ப் பேட்டை, மத்தேரி, வங்கனூர், புதுப்பேட்டை, நாராயணவனம், புத்தூர், இராமகிருஷ்ண ராஜுபேட்டை, திருவள்ளூர், சிந்தலப்பட்டடை, மத்தூர், திருவாலங்காடு, பாராஞ்சி  என ஊர்களைப் பாடுகிறார். கருஞ்சட்டை பெரியார் தொடங்கிப் பேராசிரியர் கங்காதரன் வரைத் தமிழ்ச்சான்றோர் ஒவ்வொருவரையும்  பாடிவருகிறவர் ஊர்களையும் தந்தையுடன் பிறந்த வள்ளியம்மாளையும் அவர் கணவர் குப்புசாமியையும் பாடியிருப்பது சரியே! ஆனால் வள்ளியம்மாளின் பெருமையைத் தன் மனைவியைத் தந்த தாய் என்று பாடுகிறார். அதாவது அத்தையை மாமியாக்கிப் பாடுகிறார். தந்தைவழி அத்தை என்பது மூல உறவு. தன் மனைவிக்குத் தாய் என்பது கிளைஉறவு!  தனக்கு மாமி என்பது சல்லி உறவு! மரபு என்பது இதுதான்! ஆணிவேர், கிளைவேர், சல்லிவேர் என்று மரபின் அத்தனை வேர்களையும் பாடுகிறார். இவருடைய மாமனார் குப்புசாமி அத்தையின் கணவர் மட்டுமன்று  தந்தையின் தாய்மாமன் மகன்! இவன் தந்தை என்னோற்றான் கொல்?’ என்பது மட்டுமன்று நன்றி. இவளைப் (என் மனைவியை) பெறுவதற்கு என்ன தவம் செய்தேனோ என்பதும் நன்றிக் கடனே! குறிப்பு மொழி, மனைவிக்குச் சொல்ல வேண்டிய நன்றியை மாமிக்குச் சொன்னதால்!

    குத்து விளக்கான குடும்ப விளக்கு

    சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் என்பார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். வசந்தராசன் இல்லாள் சாந்தகுமாரி தம் சித்தத்தைத் தம் குழந்தைகள் மேல் வைத்தாராம்.

    “சித்தமெலாம் மக்களெனும் சீரால் நிறைந்தவளை’’

    என்று பாடுகிறார். சிவன் மீது சிந்தை வைத்தாரை அவர் பாடினார். சிறார்கள் மீது அன்பு காட்டிய இவரை வசந்தராசன் பாடுகிறார். ஏனைய பெருமைகளையெல்லாம் நிரல்படுத்தி இந்த வரியைப் பாட்டின் இறுதியாக அமைத்துக் காட்டுகிறார். அத்தை மகள் என்பதால் உரிமை கொண்டாடும் வசந்தராசன் அந்த அம்மையார் செய்த இல்லறக் கடமைகளை, மாண்புகளாகக் காட்டுகிறார். திருமணத்திற்கு முதல்நாளே தனிக்குடித்தன ஏற்பாடுகளை செய்து முடித்த பிறகே திருமணம் செய்து கொள்ளும் தற்காலத்தில் தன் மாமன், மாமி, நாத்திமார் என அனைவர்தம் தேவையையும் உணர்ந்து தன் இல்லறப் பொறுப்புணர்ந்து செயல்பட்ட சாந்தகுமாரியை இலக்கியத்தின் பாடுபொருளாக்கியது மிகவும் சரியே. குடும்ப விளக்கில் பாவேந்தர் தங்கத்தை இப்படித்தான் படைத்திருக்கிறார். அது ஒரு கற்பனைப் பாத்திரம் எனத் தோன்றாத வண்ணம் பாவேந்தர் செதுக்கியிருப்பார். வசந்தராசனோடு சாந்தகுமாரி வடம் பிடித்த இல்லறத்தேர் மொத்த குடும்பத்தின் மூலஸ்தானத்தில் வந்து நிலைகொள்கிறது.

    “அத்தை மகளென் மொத்த சுக வாழ்வினையும்
    சத்துண வாக்கிய சாந்த குமாரியாள்!
    மொத்த குடும்பத்தின் மூலவர் ஆனவள்!
    தத்தெடுத்த தேபோலென் தாய்தந்தை தங்கையரை
    ஒத்த மனத்தினால் ஓங்கி  உயர்ந்தவள்!
    வித்தைகள் கற்ற வெளிச்ச நதியவள்!
    எத்தனை என்நீளம்! எத்தனை என்ஆழம்!
    அத்தனைக்கும் வித்தாய் அவளாய் இருப்பவளை
    சித்தமெலாம் மக்களெனும் சீரால் நிறைந்தவளை
    எத்திசைக்கும் சொல்ல எழுவீர்நீ ரெம்பாவாய்!”

    மனைவி பெருமையை மற்றவர் அறிதல் வேண்டும் என்று இது பாடப்பெறவில்லை என்பதை உணர்தல் வேண்டும். யாருக்கும் கிட்டாத  இல்லறத்துணை தனக்குக் கிட்டிய ஆனந்தக் களிப்பைக் கொச்சகக்கலியிலே கொண்டு வந்த பூரிப்பு!. சவலை தட்டிப் போன தனது வாழ்வைப் பாசம், பரிவு எனும் சத்துணவு தந்து சவலை போக்கிய மாதரசியாக மனைவியைச் சித்திரிக்கிறார். தற்காலப் படைப்பாளர்களில் சொந்த மனைவியைத், தன் பிள்ளைகளின் தாயை எத்தனைப் பேர் இப்படிப் பாடுகிறார்கள்? பரவசமடைகிறார்கள்? தன்னுடைய மனைவி பெருமையைத் தன் பெருமையாகக் கருதும் பரந்துபட்ட கவிதையுள்ளம் இப்படித்தான் பாடும்! பரநலம் பேணுவதுதானே பாவலர்க்கு அழகு! சத்துணவு தந்த தாயையோ மனைவியையோ நாம் சந்தித்ததுண்டு!. சக வாழ்வையே சத்துணவாக்கிய மனைவியை வசந்தன் காட்டித்தான் நாம் பார்க்கிறோம்! அருமை!

    தமிழ்போல் தழைக்கும் தலைமுறை

    தன்னுடைய தலைமுறையை இருபத்தெட்டுப் பாடல்களால் பாடிய இராசன் தனக்குப் பின்வரும் தலைமுறையை ஒரு பாட்டில் பதிவு செய்திருக்கிறார். மக்கட் செல்வத்தின் மாண்புணரும் ஒரு தமிழ்த் தந்தையின் பாட்டனின் மரபுரிமை மணம் வீசும் பாடல் அது.

    “தங்க மனச்சுரங்கத் தாய்மை இளந்தேவி!
    பொங்கு புனலன்பாய்ப் பாயும் இளங்குமரன்!
    எங்கள் நறவாய் இளம்பா ரதியென்றென்
    சிங்கப் பரம்பரைக்குச் செங்கதி ராய்மூவர்!
    சிங்கம் சிவக்குமார் சீர்நித்யா ரம்யாவாய்
    இங்கிவர்க்கு வாய்த்த இணையர் பெரும்பேறு!
    பொங்கலாய் வாய்த்த பெயர்த்திபே ரன்களெலாம்
    நங்கூரப் பேரன்பாய் தனிஷ்தா பிரசீதா
    தங்கநிறத் தீக்ஷணா தன்வந்த்சாய் இனியாளாய்
    எங்கள் தலைமுறைகாண்! வாழ்த்திடுவீ ரெம்பாவாய்!”

    என்று. மகன் வயிற்றுப் பேரப்பிள்ளைகளே வாரிசுகள் என்பது வரலாறு மற்றும் நடப்பியல் ஆயினும் சட்டத்தின் அடிப்படையில் கவியுள்ளம் என்ற அடிப்படையிலும் மகள் வயிற்றுப் பேரப்பிள்ளைகளையும் மருமகள்களையும் தலைமுறைப் பந்தத்தில் பிணைத்துக் காட்டிய சதுரப்பாடு பெரிதும் பாராட்டத்தகுந்தது. ஏகாம்பரம் வசந்தராசன் ஆனார். அவர் வாரிசுகள் இளந்தேவி, இளங்குமரன், இளம்பாரதி என்று அணிசெய்கிறார்கள். பேரர்களின் பெயர்கள் தமிழகத்துக் காலச்சூழலை ஒளிபரப்புச் செய்கின்றன. இராசன் நினைத்துத் தன் வல்லாண்மையைக் காட்டியிருந்தால் தனித்தமிழ்ப பெயர்களைப் பேரப்பிள்ளைகளுக்குச் சூட்டியிருக்கலாம். உரிமை கொண்ட தலைமுறையின் வாரிசு இவராதலின் தன் வாரிசுகளின் குடும்பங்களை உரிமைக்குழுக்களாக அனுமதித்திருக்கிறார் என்பதை மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். இந்தப் பாவை இலக்கியம் பிந்தைய தலைமுறையின் தோற்றத்திற்குப் பிறகு என்பதையும் நினைவிற் கொண்டால் இந்த வடமொழிப் பெயர்களின் பயன்பாட்டைத் தவிர்க்க முடியா நிலையை அறிந்து கொள்ளலாம். எனினும் தமிழ் மண், தமிழ் மரபு, தமிழ்ச் சான்றோர், மொழியினத் தொண்டு, இனம் வாழ தனையிழந்தோர் புகழ்பாடும் இந்தக் காப்பியத்தில் இந்தச் சொற்கள் கொஞ்சம் இடமாறு தோற்றப்பிழையாகத்தான் தோன்றுகின்றன.

    “திங்கள் கடல்வானம் தீ காற்று பூமியோடு
    செங்கண் உயிரினத்துச் செல்தடங்கள் உள்ளவரை
    பொங்கு தமிழ்மூச்சுப் பேர்பெருமை பேசுவரை
    எங்கும் அணுக்குள் எதிர்நேர் கூறிருந்து
    அங்கிங் கெனாதபடி அண்டப் பெருவெளியின்
    அங்கம் நிறைத்திருந் தார்க்கின்ற நாள்வரைக்கும்
    சிங்கநிகர்த் தன்மானம் சீர்வானைச் சின்னதாக்கும்
    வங்காத் தலைமகுடம் வாழும் நிறைகுடமாய்
    எங்கள் தலைமுறைகள் இன்னும்பல் லூழிகாலம்
    பொங்கிப் புகழ்ந்தாடப் போற்றிடுவீ ரெம்பாவாய்!”

    என்னும் இறுதிப்பாடல் தொய்வினைத் தூக்கி நிறுத்திவிடுவதை நாம் மறுப்பதற்கில்லை. கற்பனையின் உச்சத்திற்குச் செல்ல முயலும்,

    “திங்கள் கடல்வானம் தீ காற்று பூமியோடு
    செங்கண் உயிரினத்துச் செல்தடங்கள் உள்ளவரை
    பொங்கு தமிழ்மூச்சுப் பேர்பெருமை பேசுவரை
    எங்கும் அணுக்குள் எதிர்நேர் கூறிருந்து
    அங்கிங் கெனாதபடி அண்டப் பெருவெளியின்
    அங்கம் நிறைத்திருந் தார்க்கின்ற நாள்வரைக்கும்”

    என்னும் வரிகள் ஏக்கத்தையும் பெருமிதத்தையும் நம்பிக்கையையும் ஒருசேர வெளிப்படுத்துவதாய் அமைந்து பாவையின் தொடக்கத்திற்கு ஏற்ற முடிவாய் நிறைவு பெறுகிறது. முனிரத்தினத்தின் மகன் வீரராகவன். வீரராகவன் மகன் மாயாண்டி. மாயாண்டி மகன் முனுசாமி. முனுசாமி மகன் துரைவேலு எனப் பெருமித நடைபோடும் குருவராசப்பேட்டை தலைமுறையை இந்தத் தலைமுறைக் கவிஞரும் துரைவேலுவின் மகனுமான மாதவரத்தார் துரை. வசந்தராசன் பாடியிருக்கிறார். தன் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமான முன்னோர்களைப் பாடியதால் நன்றி பாராட்டுதல், மூத்தோர்களை நினைவுகூர்ந்து வணங்கும் சமுதாய நெறிகாட்டல் எனப் பாவைக்குப் புதுத்தடம் காட்டியிருக்கிறார். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிராமல் மாற்றியமைத்த பாடுபொருளால் தமிழ்க்கவிதை உள்ளடக்கத்தின் பரிமாணத்தைப் பெருக்கிக் காட்டிச் சிறந்து திகழ்கிற பாவை நம் தலைமுறைப் பாவை!

    தலைமுறைப் பாவையில் மொழியாளுமை

    கவிதை மொழி இலக்கண மொழியாகவே அமைந்துவிடக் கூடாது. முற்றிலும் கொச்சையாகவும் இருந்துவிடக் கூடாது. வட்டார வழக்குச் சொற்களாகவும் புழங்கிவிடக்கூடாது. இவை மூன்றும் ஏற்ற, பொருத்தமான அளவில் அங்கங்கே கலந்து அமைய வேண்டும். கவிஞனின் மொழியாளுமையை இப்படித்தான் அளவிட முடியும். அளவிட வேண்டும். ‘தன்காயம் தோற்றாமல் சாணகல கொல்லை கட்டி வெங்காய நாத்துவிட்டு வெகுநாளா காத்திருந்தேன்’ என்பார் அழுகணி சித்தர். ‘கண்ணன் மனநிலையைக் கண்டு வரவேணுமடி’ என்றுதான் பாரதியார் எழுதினார். இலக்கணச் சுத்தமாக ‘கண்டு வரவேண்டுமடி’ என எழுதவில்லை என்பது காண்க.

    ‘மந்தையில் மாடு திரும்பையிலே அவள்
    மாமன் வரும் அந்தி நேரத்திலே
    குந்தி இருந்தவள் வீடுசென்றாள் அவள்
    கூட இருந்தாரையும் மறந்தாள்’
    தொந்தி சரியவே வேட்டி கட்டி அவன்
    தூக்கி வந்தானொரு வெல்லக்கட்டி!”

    என்று பாரதிதாசன் குந்தி, தொந்தி என்னும் வழக்குச் சொற்களைக் கையாண்டு கவிதையைச் சிறக்கச் செய்வார். ‘அஞ்சு ரூபாய் நோட்ட கொஞ்ச முன்னே மாத்தி மிச்சமில்லே காசு மில்ல’ என்பது அந்தநாள் அந்தமான் கைதி படப்பாடல்!. ‘கையில வாங்குனேன் பையிலே போடல காசு போன இடம் தெரியலே’’ என்பது பட்டுக்கோட்டையாரின் பாமர வழக்கு. ‘எலந்த பலம்’ கண்ணதாசனின் கொச்சை வழக்கு. தம்பி வசந்தராசன் தனது தலைமுறைப்பாவையில் தலைமுறைத் தமிழைத் தவழவிட்டிருக்கிறார்.

    “காலையிலே பாவு!  கடும்பகலில் சீர்நெசவு!
    மாலை மளிகை! மடியுடன் ஊர்வலம்!
    ஆலைச்சங் கூத அடிநெருப்பைத் தானணைக்கத்
    தோலைச் செருப்பெனவே தேய்த்தபின்தான் தீமுளைக்கும்!
    நாளைய பாவடிக்கு நல்லிடம்நாட் டல்!பின்
    இளைத்த அடுப்பு இறக்கிக் கொடுக்கக்
    களைப்பைக் கழித்தல்! கவலை  உடன்கரைத்தல்!
    கிளையுடன் திண்ணைகளில் கில்லா படித்தல்!
    வேளைகள் இப்படி வேகமாய்க் கரையும்
    காளைகள் ஊரைநீர் காணீரோ எம்பாவாய்!”

    இந்தப் பாடலில் ‘பாவு’ என்பதும் ‘பாவடி’ என்பதும் ‘மடி’ என்பதும் தொழில்சார்ந்த வட்டார வழக்கு. கடும்பகலில் சீர் நெசவு என்பது தகுதி வழக்கு. ‘அடி நெருப்பை தான் அணைக்க’ என்பது கவிதை உருவகம். ‘களைப்பைக் கழித்தல்’ என்பது புதுக்கவிதை! கிளையுடன் திண்ணைகளில் ‘கில்லா படித்தல்’ என்பது வட்டார வழக்கு. குருவராசப் பேட்டையைக் குருவை எனக் குறுக்கியது மரூஉ.

    தலைமுறைப் பாவையில் உவமச் சிறப்பு

    கவிதையை மட்டுமன்று கவிஞனையும் வியப்போடு நோக்க வைப்பது அவன் பயன்படுத்தும் உவமங்களே. பொருள் புலப்பாட்டுக் கருவியாக மட்டுமல்லாது, கவிஞனின் அறிவு, புலமை, கற்பனை, முதலிய பன்முகப் பரிமாணத்தையும் படைப்பாளுமையையும் வெளிப்படுத்தும் கருவியாக உவமம் செயல்படுகிறது.   தம்பி வசந்தராசன் வழக்கம் போல் இந்தப் பாவையிலும் எளிய, அழகான, பொருத்தமான உவமங்களைத் தேவையான இடங்களில் இயல்பாக இணைத்துப் பதிவு செய்திருக்கிறார். அவை தனித்த பார்வைக்குரியவையாதலின் ஒன்றிரண்டு மட்டும் கட்டுரைக்காகச் சுட்டப்படுகின்றன.

    “சேரன்தன்  வில்லம்பாய்ச் செஞ்சொல் மணிதீர்ப்பு!”

    என்று தனது பாட்டனார் தீர்ப்புரையின் நேர்மை பற்றி ஓர் உவமத்தைச் சொல்கிறார். ‘வல்வில் ஓரி விடுத்த கணை குறி தப்புவதில்லை’ என்று சுரதா பாவேந்தர் கவிதைக்கு உவமம் சொல்வார். சேரனின் வில்லிலிருந்து புறப்படும் அம்பு கோணம் பிசகாது., குறி தவறாது செல்வதைப் போலச் சொல்லப்படும் நீதியும் நேராகச் சொல்லப்படும் என்கிறார். மற்றொரு இடத்தில் தன்னைச் சுமந்து பெற்ற தாய் வயிற்றை,

    “இந்தக் கவிப்போத் திருந்த குகையாளர்”

    என்னும் வரியில் ‘குகை’ என உவமித்துக் காட்டித் தன்னையும் கவிப்போத்து என நம்பிக்கை மொழிகிறார். ‘புலிசோர்ந்து போகிய கல்லளை போல’’ என்னும் புறநானூற்றுச் சிந்தனையும் தலைமுறைப்பாவையின் உள்ளடக்கம் போலவே பரம்பரைச் சொத்தாக வசந்தராசனுக்கு அமைந்துவிடுகிறது. ‘ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு’ என்னும் தெரு பற்றிய சங்க இலக்கிய உவமம் அங்குப் பெருவழக்கு. வசந்தராசன்,

    “தேரின் வடமாய்த் தெருக்கள்!”

    என்று பாடிக் குருவராசப்பேட்டை வரைபடத்தைப் பாவை இலக்கியத்தில் பதிவு செய்கிறார். தமிழ்நாட்டில் பெரும்பாலும் தெப்பக்குளம் இல்லாத திருக்கோயில்கள் அரிது. குருவையில் மாணிக்கவாசகர் மடாலயமாகக் கட்டப்பட்டுத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் சொற்பொழிவாற்றிய காரணத்தால் பின்னாள் திரு.வி.க. மாளிகையாக மாறி நிற்கும் கட்டடத்தைப் பாடுகிறார்.!

    “கட்டடக் கல்லும் கனித்தமிழைப் பேசிடவே
    நட்ட நடுவூரில் நங்கூரக் கப்பலெனத்
    திட்டமிட்டுச் செய்த திரு.வி.க. மாளிகை!”

    நட்ட நடுவூரில் என வழக்குமொழியைக் கையாண்ட வசந்தராசன், ‘நடுக்கடலில் நங்கூரம் பாய்ச்சிய கப்பலாகக் குருவையின் திருவிக மாளிகையை உவமிக்கிறார். மங்கலங்கிழார் உருவாக்கப்பட்டதைத் திட்டமிட்டுச் செய்த திரு.வி.க மாளிகை என மோனை அழகோடு முன்மொழிகிறார்.

    “ஆர்த்துக் குதிக்காத ஆழ நடுக்கடலான்!”

    என்று ஒரு வரி இந்தப் பாவையில் வருகிறது. மிக நுட்பமாக நான் ரசித்து மகிழ்ந்த வரி. கடலில் அலைகள் கரையில் இருக்கும் நடுக்கடலில் அலையிருக்காது. அது அமைதியாக இருக்கும். ‘ஆகுல நீர பிற’ என்பார் திருவள்ளுவர். ஆழமாகிய பக்குவம் இருந்தால் ஆரவாரம் இருக்காது! மையத்தில் நிலை கொண்டது குதிக்காது! ‘சீர்த்தமதி   சீர்மங்கலங் கிழாரு’க்குச் சொல்லப்பட்ட உவமம் இது! கடலுக்கு வந்த அடைச்சொற்களைச் ‘சீர்த்த மதி சீர் மங்கலத்தார்’ என்னும் பொருளோடு இயைபுபடுத்தி நோக்கினால் உவம ஆளுமை புரியக்கூடும்!. ஆண்டுதோறும் தேர்ச்சியடைந்து மேல் வகுப்பு மாறும் மாணவர்கள் தங்களுக்கான புதிய ஆசிரியரை எதிர்நோக்கியிருப்பதும் வந்தவரைக் கண்டு மகிழ்ச்சியடைவதும் அப்பருவப் பேரின்பம்! அழியாப் பெருநினைவு! வசந்தனுக்கும் அவர் நண்பர்களுக்கும் அந்த வாய்ப்பு கிட்டியதாம்!

    பொங்கலுக்கு வாய்த்த புதுத்துணிபோல் ஆசான்கள் 
    எங்களுக்கு வாய்த்தார்!

    என்றெழுதுகிறார். நெசவுத் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்ட குருவராசப்பேட்டையில் உழவர் திருநாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது என்பதை உவமவழிப் பதிவு செய்யும் வசந்தராசன், ஒரு பொங்கல் போனால் மறுபொங்கல் வந்தால்தான் புதுத்துணி என்னும் நடப்பியல் உண்மையையும் குறிப்பாகப் புலப்படுத்தியது காண்க.!

    நிறைவுரை

    ஈரோடு தமிழன்பன் எழுதுவார்! “உனக்கும் வாழ்க்கைக்கும் நடுவில் மரணம் இருக்கிறது. உனக்கும் மரணத்திற்கும் நடுவே வாழ்க்கை இருக்கிறது. வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் நடுவே நீ இருக்கிறாய்” என்று. நான் எழுதுகிறேன்! வசந்தராசனுக்கும் வாழ்க்கைக்கும் நடுவே கவிதை இருக்கிறது. வசந்தராசனுக்கும் கவிதைக்கும் நடுவே வாழ்க்கை இருக்கிறது. கவிதைக்கும் வாழ்க்கைக்கும் நடுவே வசந்தராசன் இருக்கிறார். வசந்தராசனுக்கும் வாழ்க்கைக்கும் நடுவே மரபு இருக்கிறது!. மரபுக்கும் வாழ்க்கைக்கும் நடுவே வசந்தராசன் இருக்கிறார். வசந்தராசனுக்கும் மரபுக்கும் நடுவே வாழ்க்கை இருக்கிறது. ‘இமயமே தோற்கும் உயர்தமிழில் சொல்லெடுத்து அமரகவி நெய்ய ஆசையுறும் இவ்வசந்தன்’ எனத் தன் கவிதை இலட்சியத்தைப் பதிவு செய்திருக்கும் வசந்தராசன் ‘மரபுக்கவிதை எது?’ என்பதற்கு மேலும் ஒரு கவிதைப் பதிவைக் கல்வெட்டாய்ப் படைத்திருக்கிறார். “சொல் புதிது! சுவை புதிது! வளம்புதிது! பொருள் புதிது! சோதிமிக்க நவகவிதை! எந்நாளும் அழியாத மா கவிதை!” ஆம்! அவர் எழுதிய அமர கவி இது! அமர கவிகளுள் ஒன்று இது!

    (தொடரும்…)

    Share
  • பொரணி

    பொரணி

    உடுமலை கி. ராம்கணேஷ்

    என்றாவது ஒருநாள்
    அதைச் செய்யத்தான் போகிறேன்
    யாருமற்ற பொழுதொன்றில்
    நிகழத்தான் போகிறது
    கெக்கலி கொட்டிச் சிரிக்கும்
    கையும் வாயும் மௌனியாகும்
    என்னவென்று சொல்லித் தொலைக்க
    காலம் காத்துக் கொண்டுதான் இருக்கிறது
    முன்னதையும் பின்னதையும் ஒன்றாக்கி
    மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்
    முடிச்சுப் போடத்தான் செய்கிறீர்கள்
    வெறும் வாயில் ஊரையே மென்று
    காறிக் காறித் துப்புகிறீர்கள்
    சாறில்லாமல் சோறு உண்டாலும்
    சண்டையில்லாமல் உண்ண மறுக்கிறீர்கள்
    ஒருநாள்
    நாவில் கூட ஈரமில்லாமல்
    சாகத்தான் போகிறீர்கள்
    அப்பொழுதுதான் புரியும் பொரணி

    Share
  • (Peer Reviewed) கழுகுமலைச் சமணப்பள்ளியில் பெண்கல்வியும் இருபாலர்  கல்விமுறையும்

    (Peer Reviewed) கழுகுமலைச் சமணப்பள்ளியில் பெண்கல்வியும் இருபாலர் கல்விமுறையும்

    முனைவர் இரா.இலக்குவன்
    உதவிப் பேராசிரியர்
    வெ..சு. தமிழியல் ஆய்வு மையம்
    .தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி.

    இந்தியாவின் பழமையான மதங்களுள் ஒன்றாகக் கருதப்படுவது சமணசமயம் ஆகும். அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் பரவியிருந்ததுஎன்பதற்குப் பல்வேறு கல்வெட்டுச்சான்றுகள் துணைநிற்கின்றன. (1983))

    மேலும் சமணம்  தமிழ்நாடு முழுமையும் குறிப்பாக  பாண்டிநாடு, தொண்டை நாடுகளில் வலுவாகப் பலநூற்றாண்டுக்காலம் கோலோச்சியிருந்ததை அறியமுடிகிறது. தமிழ்நாடு முழுமையும் பரவியிருந்த சமணஆலயங்கள் (ஜினாலயங்கள்) என்றும் பள்ளிகள் என்றும் சமணத்துறவிகள் தங்கியிருந்த இடங்கள் பள்ளி பாழி அதிட்டானம் தேவாரம் பஸ்தி என்றும் அழைக்கப்பட்டன. (2005,ப.14  )

    கல்வெட்டுகள் பெரும்பான்மையும் சமணத்துறவிகள்  இருப்பிடங்களையும் கோயில்களையும் பள்ளி என்றே குறிப்பிடுகிறது.

    ஜினகிரிபெரும்பளளி –ஆனந்தமங்கலம்
    சிறுவாக்கம் – ஸ்ரீஹரணபெரும்பள்ளி
    குன்னத்தூர் –பெரியநாட்டுப்பெரும்பள்ளி
    தொண்டூர் – வழுவாமொழிபெரும்பள்ளி
    திருநறும்கொண்டை – நாற்பத்தெண்ணாயிரம்பெரும்பள்ளி
    வீரசேகரபெரும்பள்ளி – சளுக்கி
    பெருமண்டூர் – ரவிகுலசுந்தரபெரும்பள்ளி
    பள்ளிச்சந்தல் – வாலையூர்நாட்டுப்பெரும்பள்ளி
    அன்பில் – அமுதமொழிபெரும்பள்ளி
    மருத்துவக்குடி – சேதிகுலமாணிக்கம்பெரும்பள்ளி, கங்கருளசுந்தரபெரும்பள்ளி
    இருப்பைகுடி – பெரும்பள்ளி
    பெருங்குளம் – நிகராகரப்பெரும்பள்ளி) (1954,ப.104-200)

    மதுரையில் சமணப்பள்ளிகள் இருந்ததை “அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளி என்று (15:107) சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் பள்ளி என்ற பெயரே பெருவழக்காக இருந்துள்ளது.

    பண்டைகாலத்திலே சாதிபேதம் பாராட்டாத தமிழ்நாட்டிலே, சாதிபேதம் பாராட்டாத சமணசமயம் பரவியதில் வியப்பில்லை. மேலும், உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி என்னும் நான்கு தானங்களைச் செய்வதைச் சமணர் தமது பேரறமாகக் கொண்டிருந்தார்கள்.இந்த நான்கினையும் அன்னதானம், அபயதானம், ஔடததானம், சாத்திரதானம் என்று கூறுவர். (1954,ப.41)

    சமணர்கள் மக்கள் அனைவருக்கும் பொதுக்கல்வி வழங்கிய அவர்கள் வாழும் இடமான பள்ளி என்பதால்தான் இன்று கல்விக்கூடங்களுக்குப் பள்ளிக்கூடம் என்று பெயர் வந்தது என்று மயிலை.சீனி.வேங்கடசாமி, தொ.பரமசிவன் உள்ளிட்ட அறிஞர்கள் அரிதியிட்டு உரைக்கின்றனர். சமணர்கள் சமணக்கோயிலான பள்ளிகளிலும் சமண முனிவர்கள் தங்கியிருக்கும் பள்ளிகளிலும் ஆண், பெண் இருபாலருக்கும் கல்வி கற்பித்தனர். சமண மதம் தமிழகத்திற்குப் புறத்தே இருந்து வந்த மதமெனினும் அவர்கள் தமிழ்மொழிக்கு முதலிடம் கொடுத்தனர். அவர்களது நூல்கள் அனைத்தையும் தமிழில் எழுதினர், தமிழ் இலக்கண நூலாம் தொல்காப்பியத்தைப் பழுதறக் கற்று உரை வரைந்தனர். மேலும் தமிழில் பல இலக்கண நூல்களையும் எழுதினர். அவ்விலக்கண நூல்கள் சமணப்பள்ளிகளில் கற்பிக்கப்பட்டன. மேலும் பற்பல இலக்கியங்களும் படைக்கப்பட்டு சமணப்பள்ளிகளில் கற்பிக்கப்பட்டன. எனவே சமணப்பள்ளிகள் சமணத் தத்துவநூல்களை மட்டும் கற்பிக்கும் இடமாக அல்லாமல் அடிப்படை மொழி வகுப்புகளை நடத்தும் இடமாகவும் தமிழில் புலமைபெற்று யாப்பியற்றும் பட்டறையாகவும் தமிழ் இலக்கண இலக்கியங்களை உரைகளோடு விவாதிக்கும் களனாகவும் இருந்தன என்பதை அறிய முடிகிறது. சான்றாக சமணரான இளம்பூரணது தொல்காப்பிய உரை ஆசிரியர் மாணாக்கர் ஐயங்களுக்கு விடையிறுக்கும் வகையாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பெருவழக்காக சமணசமய இடங்கள் கல்விக்கூடங்களாக இருந்ததால் பள்ளி என்ற பெயர் தற்காலப்பள்ளிக்கூடங்களுக்கும் ஆகிவந்த பெயராக வழங்குகிறது. சமணர்கள் தமிழ்நாடு முழுவதும் ஔடத தானமாகிய கல்வியை மக்களுக்கு தமது இடங்களில் வழங்கிய வழக்கம் பலநூற்றாண்டு காலம் தொடர்ந்திருப்பதால் மக்கள் பிற்கால திண்ணைப்பள்ளி முதலான பொதுக்கல்வி அளிக்கப்படும் இடங்களையும் பள்ளி என்ற சொல்லால் நினைவுகூர்ந்தனர் என அறியமுடிகிறது.

    சமணர்களிடம் சாத்திரதானம் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை.செல்வம் படைத்த சமணர்கள், தம் இல்லங்களில் நடைபெறும் திருமண நாட்களிலும் இறந்தோருக்குச்செய்யும் இறுதிக்கடன் நாட்களிலும் தம் சமயநூல்களைப் பலபிரதிகள் எழுதுவித்து அவற்றைத் தக்கவர்க்குத் தானம் செய்தார்கள். அச்சுப்புத்தகம் இல்லாத அந்தகாலத்தில் பனை ஏடுகளில் நூல்களை எழுதி வந்தார்கள். ஒரு சுவடி எழுதுவதற்குப் பலநாட்கள் செல்லும். பொருட்செலவும் (எழுத்துக்கூலி) அதிகம்..ஆகவே, பொருள் உடையவர் மட்டும் புத்தகம் பெறுவது முடியாது. ஆகவே, செல்வம் படைத்த சமணர் தமது சமயநூலைப் பல பிரதிகள் எழுதுவித்து அவற்றைத் தானம் செய்தார்கள் (1954, ப.44) என்பதையும் அறியமுடிகிறது. சமணர்கள் தமிழ்நாடு முழுமையும் சமணப்பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் நிகழ்ந்தாலும் கழுகுமலையில் பல்கலைக்கழகம் எனும் அளவில் நடந்தது என்பதை சி.சிவராமமூர்த்தி (1983) கு.அருணாசல கவுண்டர் (2005, ப.122), செ.மா.கணபதி (2007) போன்ற ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அங்கு இருபாலரும் மாணவர்களாகவும் இருபால் ஆசிரியர்களும் பேரளவில் இருந்ததாகவும் கல்வெட்டுகள் சிற்பங்கள் மூலம் தெரிய வருகிறது.

    கழுகுமலை பற்றிய கட்டுரையில் ராவ்சாகிப் கு. அருணாசலக்கவுண்டர் (2005,ப.124)

    “சமணத்துறவிகளிடையே ஆண் பெண் இருபாலர் சேர்ந்து கல்வி பயில்வது என்ற கூட்டுக்கல்விமுறை இருந்ததா? இருந்தது என்று சொல்வதற்கில்லை என்ற முடிவுக்கு வருகிறார். இக்கட்டுரை கழுகுமலையில் இருபாலர் கல்வி இருந்ததா என்பதையும் சமணப்பள்ளிகளில் பெண்கள் பங்கு பற்றியும் ஆய்வு செய்கிறது.

    இரு பாலர் ஒரே இடத்தில் அமர்ந்து ஒரு ஆசிரியரிடம் கற்கும் கல்விமுறையை இரு பாலர் கல்வி என்று அழைக்கலாம்.

    கலப்புபாலினகல்வி , இணைகல்வி அல்லது கூட்டுறவு (கோஎட் என்றும் அழைக்கப்படுகிறது, இதுஆண்களும்பெண்களும்ஒன்றாக கல்வி கற்கும்கல்விமுறையாகும். (https://mimirbook.com/ta/33cfb8b4fc2)

    இந்தியாவில் பெண் கல்வி இடைக்காலங்களில் இல்லாமல் இருந்தது. ஆனால் வேத காலத்திலும் தமிழகத்தில் சங்ககாலத்திலும் பெண் கல்வி வழக்கில் இருந்தது என்றும் பிற்காலங்களில் அது தேய்வழக்கானது என்றும் சிலர் வலியுறுத்துவார்கள்.எனினும் பெண்களும் ஆண்களும் சேர்ந்து ஒரே இடத்தில் கல்வி பயின்றதற்கு நமக்கு வலிமையான சான்றுகள் கிடைக்கவில்லை.  பிற்காலத்தில் தமிழகத்தில் இருந்த பல வைதிக மதம் சார்ந்த மடங்கள் ஆண்களுக்கு மட்டுமே கல்வி அளித்தன.  அவை பெரும்பாலும் அங்கு பெண்கள் நுழைவதற்கே அனுமதிக்கவில்லை.

    தென்தமிழகத்தில்தூத்துக்குடிமாவட்டம்கோவில்பட்டிவட்டத்தில்கோவில்பட்டி – சங்கரன்கோவில் சாலையில் கழுகுமலைஎன்ற ஊர் உள்ளது. இவ்வூரிலுள்ள குன்றுஎன்றஅளவில்உள்ளஒருசிறுமலையின் வடபகுதியில் நூற்றுக்கணக்கான சமணத் தீர்த்தங்கரர்கள், சமண தெய்வங்களின் சிலைகளும் அதன்அடிப்பகுதியில் வட்டெழுத்துக்கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இங்கு சமண முனிவர்கள் தங்கியிருந்து சமணச்சித்தாங்களைக் கற்பித்துவந்தனர். கி.பி 8,9, 10ஆம் நூற்றாண்டுகளில் சமண சமயம் இவ்வூரில் செழிப்புற்று விளங்கியது. (1961) இவ்வூர் பண்டைகாலத்தில் நெற்சுரம் என்றும் இவ்வூரின் பகுதிகள் இளநெற்சுரம், பெருநெற்சுரம், குழுவாணை நல்லூர் என்றும் வழங்கப்பட்டன. (2007,ப 107)

    புத்தமதக் கொள்கையைப் பரப்புவதற்காக வடக்கேயிருந்து தெற்கு நோக்கி வந்த கௌதமபுத்தர் இலங்கைக்குச் செல்லும் வழியில் கழுகுமலைக்கும் வந்து சென்றதாக தொல்லியல் அறிஞர் டி.ஏ.கோபிநாதராவ் குறிப்பிடுகிறார். இதேபோல இலங்கைக்குப் பௌத்த சமயததைப் பரப்பச் சென்ற வழியில் சங்கமித்திரை கழுகுமலை வந்து சென்றதாகவும் ஒரு செவிவழிச் செய்தி பேசப்பட்டுவருகிறது. (2005,ப.17)

    கழுகுமலைக் கல்வெட்டுகளில் காணப்படும் ஆசிரிய மாணாக்கர் பரம்பரை விளக்கம்

    கனகநந்திப் பட்டாரகர் மாணாக்கர் ஆதித்த படாரர் (SIIV No 341) குணசாகரப்படார் சீடன் பேரெயிற்குடிச்சாத்தன்தேவன் (SIIV No 310)
    குணசாகரப்படாரர் சட்டன் பேரெயிற்குடிச்சாத்தன்தேவன் (SIIV No 347)
    குணசாகரப்படாரர் மாணாக்கி (SIIV No 334}
    குறண்டி தீர்த்தபடார் மாணாக்கர் கனகநந்திப் பெரியார் (SIIV No.345)
    குறண்டி தீர்த்தபடாரர் மாணாக்கிகள் இளநெற்சுரத்துக் குரத்திகள்(SIIV No.369)
    குறண்டி கனகநந்திப்படாரர் மாணாக்கன் பூர்ணசந்திரன் (SIIV No.359)
    குறண்டி…. தோரிபடாரர் மாணாக்கர் சிறு படாரர் (SIIV No.323)
    நல்கூர் அலநேமிப்படார் மாணாக்கிகள் நால்கூர்க்குரத்திகள் (SIVN6356)
    பட்டினிப்படாரர் மாணாக்கிகள் திருப்பருத்திக்குரத்திகள் (SiIV No. 372)
    படிக்கமணப்படாரர் மாணாக்கர் பவணந்திப் பெரியார் (SIIV No.381)
    திருமலையர் மோனிபடாரர் மாணாக்கர் தயாபாலப் பெரியார்
    புட்பநந்திப்படாரர் மாணாக்கர் பேறாநந்திப்படாரர் (SIIV No.391)
    திருமலை அரட்ட நேமிப்படாரர் மாணாக்கர்…. படாரர் (SIIV No.397)
    வேளற்குடி மூத்த அரட்டநேமிப்படாரர் மாணாக்கர் குணநந்திப் பெரியார் (SIIV No.398)
    சேந்தன் கி… காடன் திருபடாரர் மாணாக்கர் சீமாங்கிக் குரவடிகள் (SIIV No.399)
    திருநறுங்கொண்டை பலதேவக்குரவடிகள் மாணாக்கர் கனகவீரஅடிகள்(SIIV No.317)
    திருக்கோட்டாற்று விமள சந்திரக்குரவடிகள் மாணாக்கர் சாந்திசேன அடிகள் (SIIV No.333-390)
    திருநாட்டூர் விமள சந்திரக் குரவடிகள் மாணாக்கர் குண்ணூர் யோகியார் (SIIV No.384)

    பெருங்காடி…. தேவர் குரவடிகள் மாணாக்கர்….
    ஆணனூர் சிங்கநந்திக் குரவடிகள் மாணாக்கர், நாகநந்திக் குரவடிகள்

    உத்தநந்திக்குரவிகள் மாணாக்கர் சாந்திதேசனப் பெரியார் (SIIV No.316) பழயிறைக் காணிக்குரத்தி மாணாக்கியார் சிரிகுரத்தியார் (SIIV No.320)
    மிழலூர்க் குரத்தியார் மாணாக்கியார் திருச்சாரணுத்துப்பட்டாரிகள் (SIIV No.321)
    வெண்பைக்குடி தச்சன் சங்கக்குரத்திகள் (யார்) மாணாக்கியார்
    ஸ்ரீ(சிரி) விசயக்குரத்தியார் (SiIIV No.332 )
    நால்கூர்க்குரத்திகள் மாணாக்கி நாட்டிகப்படாரர் (SIIV No.355)
    பேரூர்க்குரத்தியார் மாணாக்கியார் மிழலூர்க் குரத்திகள் (SIIV No.394)
    சித்தாந்தம் உரைக்கும் படாரர் உள்ளிட்ட பதின்மர் வயிராக்கியர் (SIVNo.405)
    சித்தாந்தம் உரைக்கும் படாரர் உள்ளிட்ட ஐவர் வயிராக்கியர் (SIV No.406)
    திருமலைக்குரத்திகள் மாணாக்கன் ஏனாதிக் கூத்தன் (SIIV No.370) மம்மைக்குரத்திகள் மாணாக்கிகள் அட்டநேமிக்குரத்திகள் (SIIV No.371) (2007,ப.170)

    இக்கல்வெட்டுகளில் ஒவ்வொரு ஆசிரியரையும் குறிக்கும்போது அவரது ஆசிரியர் பெயரையும் இணைத்துக்குறிப்பிடும் மரபு இருப்பதை அறியமுடிகிறது. இன்று அந்த மரபு வழக்கொழிந்துவிட்டது எனினும் தற்போது சிலம்பம், வளரி போன்ற போர்க்கலைகளைக் கற்போர் தமது மரபை ஆசிரியர்களுடன் தொடர்புப்படுத்தும்போக்கு காணப்படுகிறது.

    கல்வெட்டுகளில் காணப்படும் ஆண்பால் ஆசிரியர்கள்

    1. கனகநந்திப் பட்டாரகர்
    2. குணசாகரப்படார்
    3. குறண்டி தீர்த்தபடார்
    4. குறண்டி கனகநந்திப்படாரர்
    5. குறண்டி தீர்த்தபடாரர்
    6. நல்கூர் அலநேமிப்படார்
    7. பட்டினிப்படாரர்
    8. படிக்கமணப்படாரர்
    9. திருமலையர் மோனிபடாரர்
    10. புட்பநந்திப்படாரர்
    11. திருமலை அரட்ட நேமிப்படாரர்
    12. சேந்தன் கி… காடன் திருபடாரர்
    13. திருநறுங்கொண்டை பலதேவக்குரவடிகள்
    14. திருக்கோட்டாற்று விமள சந்திரக்குரவடிகள்
    15. திருநாட்டூர் விமள சந்திரக் குரவடிகள்
    16. பெருங்காடி…. தேவர் குரவடிகள்
    17. ஆணனூர் சிங்கநந்திக் குரவடிகள்
    18. வேளற்குடி மூத்த அரட்டநேமிப்படாரர்

    பெண்பால் ஆசிரியர்கள்

    குரவர் என்பது சமண சமய ஆசிரியர்களையும் குரத்தி என்பது ஆசிரியைகளையும் குறிக்கப்பயன்படுகிறது. சில கல்வெட்டுகளில் குரவி என்ற பெண்பால் பெயரும் சமண சமயத்துறவிகளைக்குறிக்க வழங்குகிறது. உழவன் என்பதற்குப் பெண்பால் பெயர் உழத்தி ஆகும். நெல்லை வட்டார வழக்கில் உழத்தி, உழவி என இருபெயர்களும் வழங்கப்படுகிறது. குறவன் என்ற சொல்லின் பெண்பாலாக குறவி என்ற சொல்லையும் தமிழ்ப்பேரகராதி குறிப்பிடுகிறது. அதுபோல குரத்தி, குரவி என இரு பெண்பால் பெயர்கள் கல்வெட்டில் வருகின்றன.

    சமண சமயப்பெண்பால் துறவிகளைச் சமணர் இயக்கியர் (யட்சி) என்றும் ஆர்யாங்கனை என்றும் கந்தியார் என்றும் கூறுவர். கந்தியார் என்பது கவுந்தி என்றும் வழங்கப்படும் என்கிறார் மயிலை. குரத்தி, பட்டாரி, பட்டாரர், சாரணி, ஆரியை ஆகிய பெயர்களும் பெண்பால் துறவிகளை அழைக்கின்றனர்

    1. உத்தநந்திக்குரவிகள்
    2. பழயிறைக் காணிக்குரத்தி
    3. மிழலூர்க் குரத்தியார்
    4. வெண்பைக்குடி தச்சன் சங்கக்குரத்திகள்
    5. ஸ்ரீ(சிரி) விசயக்குரத்தியார்
    6. நால்கூர்க்குரத்திகள்
    7. பேரூர்க்குரத்தியார்
    8. திருமலைக்குரத்திகள்
    9. மம்மைக்குரத்திகள்

    குழுவாணை நல்லூர் என்று அழைக்கப்பட்ட கழுகுமலை சமணப்பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் பதினெழுவர் பெயர்களும் பெண் ஆசிரியர்கள் ஒன்பது பேர் பெயர்களும் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகின்றன. இனி மாணவ மாணவியர் பற்றிக்காண்போம்.

    மாணவர்கள்.

    1. பேரெயிற்குடிச்சாத்தன்தேவன்
    2. ஆதித்த படாரர்
    3. கனகநந்திப் பெரியார்
    4. பூர்ணசந்திரன்
    5. சிறு படாரர்
    6. பவணந்திப் பெரியார்
    7. தயாபாலப் பெரியார்
    8. பேறாநந்திப்படாரர்
    9. குணநந்திப் பெரியார்
    10. சீமாங்கிக் குரவடிகள்
    11. கனகவீரஅடிகள்
    12. சாந்திசேன அடிகள்
    13. குண்ணூர் யோகியார்
    14. நாகநந்திக் குரவடிகள்
    15. சாந்திதேசனப் பெரியார்
    16. ஏனாதிக் கூத்தன்

    மாணவிகள்

    1. இளநெற்சுரத்துக் குரத்திகள்
    2. நால்கூர்க்குரத்திகள்
    3. திருப்பருத்திக்குரத்திகள்
    4. சிரிகுரத்தியார்
    5. திருச்சாரணுத்துப்பட்டாரிகள்
    6. ஸ்ரீ(சிரி) விசயக்குரத்தியார்
    7. மிழலூர்க் குரத்திகள்
    8. அட்டநேமிக்குரத்திகள்
    9. நாட்டிகப்படாரர்

    கழுகுமலைக்கல்வெட்டுகள் மூலமாக 16 மாணவர்கள் பெயர்களும் 9 மாணவிகளின் பெயர்களும் அறியவருகின்றன. மேலும் இதில் மாணவர்கள் பலர் பெண்பால் ஆசிரியர்களிடம் பயின்றதையும் மாணவிகள் ஆண்பால் துறவிகளிடம் பாடம் பயின்றதையும் கல்வெட்டு வழி அறியமுடிகிறது. இங்கு பல துறைகளில் வல்ல இருபால் ஆசிரியர்களிடம் மாணவர்களும் மாணவிகளும் ஒரே கூரையின் கீழ் கல்வி பயின்றுள்ளனர். வெளிப்பகுதிகளில் இருந்து வந்து பாடம் எடுத்துச் செல்லும் ஆசிரியர்களும் வெளியூர்களில் இருந்து கழுகுமலைக்கு வந்து தங்கி குறிப்பிட்ட பாடங்களைப் பயிலும் மாணவர்களும் இருந்துள்ளனர்.

    திருச்சாரணத்து மலையிலுள்ள வரகுண மன்னனது கல்வெட்டு பேரெயக்குடியை (கழுகுமலை)ச் சார்ந்த அரட்டநேமிபட்டாரகரின் சிஷ்யை குணந்தாங்கி குரத்தியைக் குறிப்பிடுகிறது. (2005,ப.116) அரட்டநேமிப்பட்டாரகர் ஆண் பால் முனிவரிடம் பெண்பால் துறவி பாடம் பயின்றிருப்பதை அறியமுடிகிறது.

    கழுகுமலைச் சமணச்சிற்பங்களில் உள்ள அச்சநந்தி பெயர் ஏர்வாடிக் கல்வெட்டிலும் இடம்பெறுகிறது. நாகர்கோவில் அருகிலுள்ள கோட்டாறு, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திருநறுங்கொன்றை,திருமலை, குமரி மாவட்டத்தில் உள்ள திருச்சாரணத்து மலை, நீலகிரி மாவட்டத்திலுள்ள குண்ணூர்  தென்பாண்டி நாட்டுப்பகுதிகளான கோட்டூர்,களக்குடி, வேளற்குடி, வெண்பைக்குடி முதுகுடி நாடு ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆசிரியர்களும் மாணவர்களும் கழுகுமலைச் சமணப்பல்க்லைக்கழகத்திற்கு வந்து கற்றல் கற்பித்தல செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன. கழுகுமலையில் உள்ள குழுவாணைநல்லூர் என்ற சமண சர்வகலாசாலையை நிறுவியவர் யாப்பருங்கலக்காரிகை என்ற இலக்கண நூலுக்கு உரை எழுதிய குணசாகரர் என்ற சமணத்துறவி ஆவார் (2007,ப.123) எனவே இங்கு சமண மத சித்தாந்தங்கள், நூல்கள் மட்டுமல்லாது தமிழ் இலக்கண இலக்கியங்களும் கற்பிக்கப்பட்டன என உய்த்துணர இயலுகிறது. இங்கு கணிதமும் வானியலும் கற்பிக்கப்பட்டன என்றும் கூறப்படுகிறது. (2007,ப172-175) குழுவாணைநல்லூர் என அழைக்கப்படும் சமணப்பள்ளிக்கு ஏரி, அணைக்கட்டு, விளைநிலங்கள் இருந்தன என்பதும் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. (2007,ப.176) கழுகுமலை சமணப்பல்கலைக்கழகம் என்ற அளவில் விளங்கிய பல் துறைகளில் வல்ல இருபால் ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்பட்ட சமணப்பள்ளியில் ஆண்களும் பெண்களும் சம அளவில் மாணாக்கர்களாக கல்வி கற்றனர் என்பதும் இத்தலம் மாணவர்களும் மாணவிகளும் தங்கியிருந்து பயிலும் உண்டு உறை கல்விக்கூடமாகவும் இருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது.

    சான்றாதாரங்கள்.

    1. வேங்கடசாமி,மயிலை.சீனி.,(1954). சமணமும் தமிழும். சென்னை:கழக வெளியீடு.
    2. Sivaramamurthy,C., (1961). Kalugumalai and Early Pandyan Rock-cut shirnes. Bombay: N.M.Tripathi Private Ltd.
    3. Sivaramamurthy,C., (1983) Panorama of Jain Art-South India. New Delhi : The Times of India
    4. காசிநாதன்,நடன.,சந்திரமூர்த்தி,மா.,(ப.ஆ). (2005) சமணத்தடயம். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
    5. கணபதி,செ.மா., (2005).கழுகுமலை வெட்டுவான்கோயில். திருநெல்வேலி : சங்கத்தமிழ்ப்பதிப்பகம்.
    6. கணபதி,செ.மா., (2007).கழுகுமலையும் சமணமும். கழுகுமலை : சங்கத்தமிழ்ப்பதிப்பகம்.

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    கட்டுரை நன்று. கட்டுரையில் வேடல் என்ற சமண பெண்டிர்க்கான பல்கலைக்கழகம் பற்றிய குறிப்பைச் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.


    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன் – 15

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன் – 15

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    (கவிஞர் திரு தாரமங்கலம் முத்துசாமி அவர்கள் எழுதிய ‘மகரந்தம் தேடும் மலர்கள்’ என்னும் கவிதை நூல் பற்றிய மதிப்பீடு)

    முன்னுரை

    முகநூல் பதிவுகளை ‘மின்னணுப் பதிப்புத் துறை’ எனவும் வழங்கலாம் .எத்தகைய செலவும் இல்லாமல் ஒரு கைப்பேசியின் துணைக்கொண்டே அனைத்துப் படைப்புக்களையும் பதிவிடும் ஒர் அரிய வாய்ப்பினை இன்றைய அறிவியல் நமக்கு கொடையாக்கியிருக்கிறது. அந்தப் பதிவுகளில் ‘கவிதைகள்’ என்னைப் பெரதும் கவர்நதிருக்கின்றன. முகநூல் பதிவுகள் என்ற நிலையிலோ அப்பதிவுகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வநத பிறகோ அவற்றைப் படித்து நான் அடைந்த அனுபவத்தைப் பிறருக்கும் பந்தி வைப்பதில் எனக்கு ஒரு அடக்கமான அமைதி. பதிப்புத் துறையில் முகநூல் செய்து வருகிற பணியினைத் திறனாய்வுத் துறையில் வல்லமையின் துணைகொண்டு நான் செய்து வருகிறேன். அந்த வகையில் முகநூல் கவிஞர்களில் ஒருவரான தாரமங்கலத்தார் என அன்புடன் அழைக்கப்படும் தாரமங்கலம் முத்துசாமி அவர்கள் எழுதிய ‘மகரந்தம் தேடும் மலர்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பைப் பற்றிய மதிப்பீட்டினை இங்குப் பதிவு செய்கிறேன்.

    1. உரைநடை செய்யுள் கவிதை ஒரு பார்வை

    தற்காலத்தார் எழுதும் கவிதைகள் பெரும்பாலும் கருவிலேயே சிதலமடைவதற்குக் காரணம் அது கவிதையாக உருப்பெறாததுதான். கவிதை பற்றிய சொல்லாராய்ச்சி நடந்த அளவுக்கு இங்கே கவிதைப் படைப்பு வளரவில்லை. கவிதைக்கும் உரைநடைக்கும் உள்ள வேறுபாடு தெற்றெனப் ;புலப்படுவதுபோல்  கவிதைக்கும் செய்யுளுக்கும் உள்ள வேறுபாடு இன்னும் உணர்ந்து கொள்ளப்படவில்லை. கவியரங்கங்களீல் இரண்டு முறை படிப்பதுதான் கவிதை என்று எழுதப்படாத இலக்கணம் இருந்து வருகிறது. இதற்குக் காரணம் அந்த வரிகளில் கவிதை இருப்பதாகவோ அந்த வரிகளில் மட்டுந்தான் கவிதையிருப்பதாகவோ அவர்களாகவே எண்ணிக் கொள்வதுதான். செய்யுள் வடிவம். கவிதை பண்பு. எந்தச் சொற்களையும் செய்யுளாக்கலாம். ஆனால் கவிதைக்குச் சொல்லாட்சி இன்றியமையாத ஒன்று. எந்தக் கருத்துக்களையும் செய்யுளாக்கலாம். அதனால்தான் பழந்தமிழில் மருத்துவம் சோதிடம் வானநூல் முதலியவை எல்லாம் செய்யுள் வடிவத்தில் இருந்தன. இன்றைய ‘மரபுப்பாவலர்கள் பலரும் அறியாத உண்மை இது.  அவைகளெல்லாம் பெரும்பாலும் விருத்தங்களில் அமைந்திருப்பதாலேயே இவர்கள் அவற்றைக் கவிதை என்று ஏற்றுக் கொள்வார்களா? உரைநடையைச் செய்யுள் வடிவத்தில் எழுதிவிடலாம். கவிதை தனித்தன்மை மிக்கது. எதனையும் கவிதையாக நோக்கத் தெரிந்தவனே கவிதையாகச் சொல்லத் தெரிந்தவனே கவிதையாக்கத்தில் வெற்றி பெற முடியும். இந்த ஆற்றல் ஒரு படைப்பாளனுக்கு தினசரி  4 காட்சிகள் என்பதுபோல அமையாது. எப்போது வரும் என்று சொல்லவும். முடியாது. ‘‘தன்னை மறந்த லயம்’ என்பார் மகாகவி. தான் காணும் உலகில் தான் படைத்துக் கொண்ட உலகில் தன் சஞ்சாரத்திற்கேற்பப் படைத்துக் ;காட்டுபவனே படைப்பாளன் ஆகிறான். கவிஞன் ஆகிறான். பொங்கல் வாழ்த்து எழுதுகிறவர் எல்லாம் புரட்சிக் கவிஞர் ஆகிவிடமுடியாது.  உரைநடை என்பது சொற்கோவை. செய்யுள் என்பது சொற்கோவையின் யாப்பு வடிவம். கவிதை என்பது தனித்துவமான அனுபவங்கள் சொற்களில் வெளிப்படுவது. இந்த வேறுபாடு தெரியாதவரைக்கும் செய்யுட்களைக் கவிதை என்று எண்ணுகிற மயக்கம் நிலவிக் கொண்டே இருக்கும்.  இதனை மாற்ற நாசா செய்யும் எந்த முயற்சியும் பலனளிக்காது.

    2. முகநூல் பதிவும் முத்துசாமியும்

    முகநூல் பதிவுகளை மின்னணுப்பதிப்புத்துறை எனத் தொடக்கத்தில் குறிப்பிட்டேன். அதற்கேற்ப நூலாசிரியரே தனது முகநூல் பதிவு அனுபவங்களைக் கவிதையாக்கித்தந்திருக்கிறார்.

    படிக்க சுவைக்கப் பார்த்து ரசிக்க
    அறிவியல் புதுமை அற்புதல் மகிமை
    ஆட்டம் பாட்டம் அனைத்தும் கொண்டாட்டடம்
    மனதினை ஈர்க்கும் மருத்துவக் குறிப்பு
    தினமும் வெளிவரும் தீந்தமிழ் வணக்கம்!
    ஆடியோ வீடியோ அனைத்தும் கிடைக்கும்
    ஓடிவா என்று உரக்கக் கூவிடும்
    உண்மைச் சங்கம் இலக்கியம் பாட்டு
    இன்னிசை கவிதை கலக்கும் இடமே
    கற்கண்டுமுகநூல் …………..
    வாழ்த்து மகிழ்ச்சி வசைபல இவையெனக்
    கோத்துவிட்டே கும்மாளம் ;அடிக்கும்
    மார்க்கின் முகநூல் சேர்க்கும் அறிவை!

    நல்ல படைப்பாளர்களுக்கு இன்றைய நிலையில் முகநூல் பதிவு என்பது ‘அருட்கொடை’ என்பதுபோல அறிவியல் கொடை எனலாம். பல்பொருள் அங்காடியாகத் திகழும் இந்த முகநூலில் கவிஞர் தாரமங்கலத்தார் எழுதிய கவிதைகள் நூலாக்கப்பட்டு ஒரு சுவைஞன் என்ற முறையில் என் பார்வைக்கு வந்தது. இந்த நூல் கவிதைகளைப் படித்த பிறகுதான் வல்லாளர்களுக்கு மட்டுமன்று வழியின்றித் திகைத்தோர்க்கும் முகநூல் அடைக்கலப் பூங்காவாகியிருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இனிமை! எளிமை! நகைச்சுவை! நளினம்! மொழிஉணர்வு! அழகியல், மனித நேயம் இவை அத்தனைக்கும் முகநூலைக் கொள்கலமாக்கியிருக்கிறார் முத்துசாமி என்பதைப் பின்வரும் சில எடுத்துக்காட்டுக்கள் புலப்படுத்தக்கூடும்.

    2.1. கை மேல் பலன்

    நூற்பதிப்புக்கள் பிறர் கைக்குச் சென்று, படிக்கப்பட்டு அவர்களுக்குரிய பொழுதில் மனநிலைக்கு ஏற்ப சில கருத்துரைகளை நல்கலாம் நல்காமலும் போகலாம். முகநூல் அத்தகையதன்று. இந்த இலக்கியப் பதிவுகள் ஆண்ட்ராய்ட் தொழிற்சாலையின் உடனடி தயாரிப்பாதலின் வாசகர்களின் பின்னூட்டங்கள்; மறுநொடியே பதியப்படுகின்றன. எதிர் மறைக்கருத்துக்களும் பாராட்டுக்களும் கருத்துரைகளுமாக விரியும் அவை படைப்பாளனின் உறக்கத்தோடு ஒத்துப் போவதில்லை. .பின்னூட்டங்களில் காணப்படும் ஜால்ராக்களைவிட, திறனாய்வுக் கருத்துக்கள் பெரிதும் போற்றப்படுகின்றன.

    3. மலர்கள் மாலையான கதை

    உதிரிப்பூக்களாகிய கவிதைகளைத் தொகுத்து மாலையாகத் தொடுத்துக் காட்சிப்படுத்துவதில் முத்துசாமி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார். மரபுக் கவிதைகள் என்ற பெயரில் வாய்பாடுகளையே கவிதையாக எழுதி வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் முகநூல் பதிவுகளுக்கு நடுவே இனிய எளிய சந்தங்களால் மக்கள் வாழ்வியல் வடிவங்களைக் கவிதைகளாக்கியிருக்கிறார்.

    பாடுபொருளைப் பொருத்தவரையில் குழந்தைகளைக் கொணடாடுகிறார்.  கூர்வாளையும் பாடுகிறார். தடம் மாறிய தமிழனையும் அவனைத் தலைநிமிர வைக்க முயன்ற பாரதியையும் பாடுகிறார். கண்ணனூர் மாரியம்மனையும் பாடுகிறார், காதலையும் பாடுகிறார். இட்டளியைப் பாடுகிறார். இயற்கையைப பாடுகிறார். இயேசுவையும் பாடுகிறார். சிறு நெல்லியைப் ;பாடுகிறார். சிட்டுக் குருவியைப் பாடுகிறார். வறுமையைப் பாடுகிறார். வண்ணக்கிளியைப் பாடுகிறார். இத்தனைப் பாடல்களையும் எளிய தமிழில் பாடுகிறார். எல்லாவற்றைப் பற்றியும் எல்லாருக்குமாகப் பாடுகிறார்.

    வாய்பாடுகளுக்காகச் சீர்களைத் தேடி, இட்டு நிரப்பும் அவலத்தை இவருடைய பாடல்களில் நான் காணவில்லை. உள்ளத்தில் தோன்றுகின்ற கருத்துக்கள், சிக்கல்கள் முதலியவற்றுக்கான வடிவங்கள் தானே அமைந்துவிடுகின்றன. நாலு வரியிலும் பாடுகிறார். நாற்பது வரிகளிலும் பாடுகிறார். நாட்டார் வழக்கைப் பல பாடல்களில் பல பொருண்மைகளில் பாடி உள்ளங் கவர்கிறார். சமுதாய அவலங்களை ஊடுருவி நோக்கும் இயல்பான கவிஞனுக்கான பார்வை இவருடைய இந்த நூலில் தொட்ட இடமெல்லாம் தட்டுப்படும் சிறப்பினைக் காணமுடிகிறது. .

    3.1. தாரமங்கலத்தாரரின் தத்துவச் சிதறல்கள்

    தத்துவப பார்வை இல்லாதவர்கள் கவிஞர்களாகப பரிணமிக்க முடியாது. இது ஒரு கவிதைக் கோட்பாடு. விதை முளைத்து இரு பிளவுக்கு இடையில் துளிர் விடுகிறது. .அந்தத் துளிர் பச்சைதான் என்றாலும் எல்லாப் பச்சைகளையும் போலன்று. தனித்தன்மை மிக்க பச்சை நிறம்.

    பச்சைக குழந்தைபோல்
    உச்சி மெலிந்த உன்னத இலையே!
    பச்சை நிறமெல்லாம்
    பயணத்தைத் தொடங்கிவைக்கும்!
    சிவப்பு நிறமெல்லாம்
    பயணத்தை முடித்துவைக்கும்

    இது ஒரு இயல்பான சிந்தனை. குண்டும் குழியுமாகச் சாலைப்பணி நடககிற இடத்தில் செங்கொடி பறப்பதைக் கண்டிருக்கலாம். இத்தகைய காட்சி ஒன்றினை ஒருமுறை கண்ட மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை சொன்னாராம் ‘எங்கே மேடுபள்ளம் இருக்கிறதோ அங்கேயெல்லாம் செங்கொடி பறந்தே தீரும்’ என்று. இதனை திரு.ஜீவபாரதி பதிவு செய்திருக்கிறார். பட்டுக்கோட்டையாரின மனநிலை பச்சைத் தளிரின் பச்சை வண்ணத்தைக் கண்ட முத்துசாமி பாவலருக்கு வந்திருக்கிறது. செம்மை தடுக்கும். பசுமை வழிவிடும்.

    ‘கள்ள உறவில் பிறந்த குழந்தையைக் குப்பைத் தொட்டியில் காண்கிறார் கவிஞர். குழந்தை குப்பையான கதை அது!

    குப்பையெல்லாம் கூட்டிக் குழிவெட்டிப் புதைத்திடுங்கள்!
    குப்பை உரமாகும் குழந்தை மரமாகும்

    என்று உருகுகிறார். குழந்தை விதை என்றால் அது விதைக்கப்பட .குப்பையில் வீசப்படக் கூடாது. ‘குழந்தை மரமாகும்’ என்பது தத்துவத்தின் கவித்துவ வெளிப்பாடு

    3.2. தாரமங்கலத்தார் பாடல்களில் கற்பனை

    ‘பண்புடையவர்கள் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருப்பதனால்தான் இந்த உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது’ என்பார் திருவள்ளுவர். நம் முத்துசாமியோ உலகம், சுற்றுவதை நிறுத்திவிட்டு ஊறுகாய்க்காக அவரிடம் வந்து அதனை இரக்குமாம்.

    பழைய சோறு போட்டுப் பசுந்தயிரை ஊற்றி
    பிசைந்து உண்ணும் போது பிரியமாய் மாவடுவைப்
    பிட்டு நாவில் வைக்கச்
    சுழலும் உலகமும் சுற்றுவதை நிறுத்தி
    விழையும் வடுவை விருப்பமாய்க் கேட்கும்!

    உயர்வு நவிற்சியாக இருந்தாலும் எளிய அழகான கற்பனை இது. உயர்திணைக்கு மட்டுந்தான் சிரிப்பு உண்டு. அஃறிணை சிரிக்காது. காரணம் தெரியாது. உயர் திணையிலும் சில அஃறிணைகளுக்குச் சிரிக்கத் தெரியாது. பாவலர் எழுதுகிறார்

    மலர்கள் சிரித்தால் பூரிப்பாம்
    மனிதர் சிரித்தால் புன்சிரிப்பாம்!
    மண்மகள் சிரித்தால் பூகம்பம்!
    விண்மகள் சிரித்தால் இடிமுழக்கம்!
    மலைமகள் சிரித்தால் எரிமலையாம்!
    மங்கையர் சிரித்தால் பனிமலையாம்!
    கடல்கள் சிரித்தால் சுனாமியாம்!
    கன்னியர் சிரித்தால் திவாஅலாம்!

    எல்லாப் பொருளின் வினைகளையும் சிரிப்பாகக் கற்பனை செய்யும் கவிஞர் இட்டளியைக் கூடக் கற்பனை செய்கிறார்.

    உளுந்தும் அரிசியும் உறவு கொண்டதில்
    மலர்நதது இட்லி மணந்தது சட்னி!”

    ஆட்டுக்கல்லில் தனித்தனியாக அரைபடும் அரிசியும் உளுந்தும்  அம்மணிக்கையால் பாத்திரத்துள் கலக்க உறவு கொள்கிறதாம். அதனால் இட்லி வந்ததாம்!

    4. மலர்கள் தேடிய மண் வாசனை

    ‘மகரந்தம் தேடும் மலர்கள்’ என்று நூலுக்குப் பெயர் வைத்திருக்கிறார். அந்த மலர்கள் நுகர்ந்த மகரந்தங்களில் மண்வாசனையும் கலந்திருக்கிறது..   மாபெரும் காப்பியக் கட்டுமானத்தில் ஆங்காங்கே வரிபபாடல்களையும் குரவைப் பாடல்களையும் இணைத்துக் கொண்டு தம் காப்பியத்தைத் தமிழர்தம் நெஞ்சுக்கு நெருக்கமாக்கினார இளங்கோவடிகள். அந்த இலக்கிய உததியைத் தாரமங்கலத்தாரும் பின்பற்றித் தாம் பாடிய கவிதை நூலில் பல பொருண்மைகளை நாட்டுப்புற பாடல் வடிவத்தில் பதிவு செய்திருக்கிறார். தமிழிலக்கிய வடிவங்களில் கவிதைக்குத் தனியிடம் உண்டு. அக்கவிதையுள்ளும் புலவர்களுக்கானவை தனி. கவிதைகளுக்கானவை தனி. வெண்பா> கட்டளைக் கலித்துறை முதலியவை புலவர்களுக்கானவை. தாலாட்டு, தெம்மாங்கு, சிந்து கும்மி இலாவணி முதலியன கவிதைகளுக்கானவை. பிந்தைய வடிவங்களில்தான் தமிழ்க்கவிதைகள் குதூகலித்துக் கும்மாளமிடுகின்றன. கவிதைகளை மகிழ்ச்சிப்படுத்துவதில் தாரமங்கலதத்தார் தனிக் கவனம் செலுத்தியிருக்கிறார்.

    4.1. விறகு சுமக்கும் விதவை

    புரட்சி என்பது சொல்லாமலேயே திட்டமிடப்படாமலேயே வெடிப்பது. கவிஞர் பலர் தாம் எழுதிய கவிதைகளில் ‘இது புரட்சிக் கருத்து’ ‘இது வரை யாரும் சொல்லாதது’ ‘பாடாதது’ என்று தமக்குத்தாமே பாராட்டுப் பத்திரம் படித்துக் கொள்வதை கண்டிருக்கிறோம்!  இது உலக இயற்கை. தம்பி முத்துசாமி இதற்கு மாறுபட்டவர். என்பது இந்தப் பதிவால் விளங்கும். கணவனை இழந்த பெண்களையே நாம் விதவை என்கிறோம். கணவனை இழப்பது என்பது ஒரு ஆணை ஒரு பெண் இழப்பது என்னும் குறுகிய பொருளுக்குரிதன்று. அவனுடைய அன்பை, அரவணைப்பை, பாதுகாப்பை, எதிர்காலக் கனவுகளை அனைத்தும் இழந்துவிடுவதாகத்தான் பொருள். இழப்பன அவையெனின் அவற்றை ஒருத்தி அவன் மறைந்த பிறகுதான் இழக்க வேண்டும் என்பதில்லை. உயிரோடு இருக்கும்போதும் இழக்கலாம். அப்போதே அவள் விதவையாகிவிடுகிறாளாம். இது பாட்டின் உள்ளடக்கத்தில் ஒனிந்து கிடக்கும் புரட்சியான சேதி  கணவன் உயிரோடு இருக்கும்போதே ஒருத்தியை விதவையாகச் சித்திரித்தது தமிழ்க்கவிதையுலகம் காணாதது.

    கட்டியவன் சரியில்லையே!
    காசு பணமும் தரவில்லையே!
    வெட்டி ஆளா அவனிருக்க
    வெறும் நிலவா நீயிருக்க உன்
    வேதனைக்கு மருந்துமுண்டா சொல்லம்மா? உன்
    விடியலுக்கு வழியுமுண்டா செல்லம்மா?

    என்று அவளையே கேட்கிறார் கவிஞர். இந்தப் புரட்சி சேதிக்குப் பின்னால் நடப்பியல் உலகத்தை மிக நுட்பமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

    கால்வயிற்றுக் கஞ்சிக்காக
    காலமெல்லாம் உழைச்சுழைச்சு
    கட்டெறும்பா தேயிறியே கண்ணம்மா! உன்
    சாதிசனம் சொந்த பந்தம்
    சல்லிக் காசு கொடுத்ததுண்டா செல்லம்மா?”

    உண்மையல்லவா? இங்கே உறவுகளெல்லாம் சடங்குகளுக்காக!. திருமணத்திற்கும்  சாவுக்கும் ;ஆள்சேர்ப்பதுதான் நடப்பியல் வாழ்க்கை.  சொந்தச் சாதிக்காரனுக்கு எவனும் அவன் துன்பத்தில் கைகொடுப்பதில்லை. மரணப் படுக்கையில் கிடந்தாலும் ‘உடம்பைப் பாரத்துக்க’ என்னும் ஒற்றை வரிகொண்டு ஆண்ட்ராய்ட் போனில் தன் அனுதாபத்தைச் சேமித்துவிடுகிறார்கள்.

    4.2. ஆசை உறவாகுமா? ஆதரவு சோறாகுமா?

    ஆசை உறவாகாது ஆதரவு சோறாகாது’. பள்ளிக்குச் செல்லவேண்டிய பருவத்தில் பாரம் சுமக்கும் குழந்தைகளின் கல்விக்கு உதவும் உறவுகள் இல்லாததை இப்படிப் பாடுகிறார் கவிஞர்.

    பெற்றவர்கள் கூட இல்லை புரிய மான உறவும் இல்ல!
    உற்றவர்கள் என்று சொல்லி உதவி செய்ய யாருமில்ல!
    கற்பதற்கு வழியுமில்ல! கண்கலங்கி நிற்பதுதான் சதியாநான்
    கைபிசைந்த நிற்பதுதான் விதியா?

    என்று சமுதாய நடப்பியலில் காணும் கசப்பான உண்மைகளை நாட்டுப்புற வடிவத்திலேயே பதிவு செய்து காட்டுவது ஒரு வடிவ நுண்ணியம்.

    4.3. கண்ணீர்ப்பால் தந்த தாய்

    நாட்டார் இலககிய வடிவங்களில் ஒப்பாரியும் தாலாட்டும் உள்ளம் உருக்குபவை. கற்பனையும் உணர்ச்சியும் கைகோத்து எக்காளமிடும் அத்தகைய கவிதைகளில் உள்ளம் பறிபோவது புதுமையன்று, தாய் தாலாட்டுப் பாடுகிறாள்

    கடைப்பால் கொடுத்தால் கால்;வயிறு ரொம்பாதுன்னு
    கண்ணீரால் பால்கொடுத்தேன் கண்மணியே நீயுறங்கு!’”

    உலகியலில் தாய் அழுதுகொண்டு பால் கொடுக்கமாட்டாள். கூடாது, ஆனால் வறுமையின் உச்சம். தாய் அழுதுகொண்டு கொடுப்பதைப் பாடுகிறார் கவிஞர்

    ஆன்றோர் சபையும் இருக்குது நா மன்றமும் கிடக்குது!
    அத்தனையும் இருந்துமென்ன அநியாயம்தானே நடக்குது?
    பசிக்கொடுமை தீர வேண்டும் வீட்டிலே  இந்தப்
    பட்டினிச் சாவு மறைய வேண்டும் நாட்டிலே

    சமுதாயச்சிக்கல்களில் வறுமையும் பசியும் தலையானவை.  அவற்றைப் பாடாத கவிஞனை வரலாறு  தன் கணக்கில் வரவு வைக்காது. முத்துசாமி வரவுவைக்கப்பட்டவர்.!

    5. மலர்கள் தேடும் மழலைகள்.

    மலர்கள் தேடும் மழலைகள் என்னுந் தொடர் தம்பி முத்துசாமி எழுதிய பாடல்களில் குழந்தைப் பாடல்களைக் குறிப்பது. குழந்தைப் பாடல்களில் தமிழிலக்கியம் இன்னும் சவலையாகவே இருக்கிறது என்பது மழலை புரியாது’ என்பதுபோல உண்மை. காரணம் குழந்தைகள் பாடுவது என்பது முழுமையும் கற்பனை. குழந்தைகளுக்கு அறிவைவிடக கற்பனை மிகுந்து நிற்கும். இந்தக் கற்பனையின் பேரளவு படைப்பாளனுக்கு வராது. அவன் தன் உயரத்திலேயே நின்று கொண்டிருப்பான். மகாகவியின் பாப்பாப் பாட்டில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் எல்லாம் அறிஞர்களின் சிந்தனைக்கே பிடிபடாதவை.  ‘தேம்பி அழுங்குழந்தை நொண்டி’ என்பது குழந்தையின் பிஞ்சு அறிவுக்குப் புலப்படுமா என்ன? குழந்தைப் பாடல்களில் மழலை தவழ வேண்டும். கன்னிமாரா நூலகம் நுழைந்து விடக்கூடாது. படைப்பாளன் தன்னை முன்னிலைப் படுத்துவது அல்ல குழந்தைப் பாடல்கள். மழலையாக மாற வேண்டும். எம்.எஸ்.இராஜேஸ்வரி பாடுவதும் பி.சுசீலா பாடுவதும் ஒன்றாகாது. கவிஞர் பலரும் ஒதுங்கிக் கொள்ளும் இந்தப் பகுதியில் தம்பி முத்துச்சாமி துணிச்சலுடன் இறங்கிச் சில பாடல்களைப் பதிவு செய்திருப்பதே பெரிதும் பாராட்டத்தக்கதாக அமைகிறது. கூடிப்பேசும் குருவிகள் என்னுந்; தலைப்பில் இவர் எழுதியிருக்கும் பாடல் குழந்தைகளுக்கும் இனிக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும்.

    கூடிப்பேசும் குருவிகளே கொஞ்சிப் பேசுங்க!
    நாடிவரும் தென்றலிடம் நலததைக் கேளுங்க!
    பாடுகின்ற குயிலினமும் உங்கள் பந்தமே!
    ஆடுகின்ற மயிலினமும் உங்கள் சொந்தமே!”

    என்னும் பாடலில் பறவைகளோடு குழந்தைகளைப் பழக வைக்கும் பாங்கும் எலலா உயிர்கள் மேலும் அன்பு காட்ட வேண்டும் என்ற உயரிய பண்பாக்க முயற்சியும் ஒரு சேர வெளிப்படுவது காண்க. பஞ்சவர்ணக்கிளி பற்றி அனைவருக்கும் தெரிந்த பாடல் பச்சைக் கிளியே பறந்துவா! பாலும் சோறும் உண்ண வா! கொச்சி மஞ்சள் பூச வா! கொஞ்சி விளையாட வா!” என்பது. இந்தப் பாடலை இசையமைப்பாளர்கள் குழநதைகளுக்கு வாயில நுழையாத மெட்டுக்களிலெல்லாம் பாடி வதம் செய்திருக்கிறார்கள்.

    பார்க்க பார்க்க அழகுஎங்கள் பக்கம் வந்து பழகு
    செக்கச் சிவந்த ;அலகு நீ சிறகடித்தால் அழகு!”

    கொட்டை உனக்குப் பிடிக்குமா அதைக்
    கொண்டு வந்து தரட்டுமா?”

    மினுமினுக்கும் கிளியக்கா உன்
    மேனியெல்லாம் ஒளியக்கா!”

    தும்பியோடு விளையாடு தம்பி! நீ
    துன்புறுத்த நினைக்காதே தம்பி!

    என்னும் வரிகளில் குழந்தைகளோடு குழந்தையாய்க் கவிஞர் ஒன்ற முயல்வதைக் காணலாம். குழந்தைப் பாடல்களில் பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல், இடைச்சொல் என்னும் இலக்கணவகைச் சொற்களைப் பெரிதும் தவிர்த்து இயற்சொல், திரிசொல் இவற்றோடு வழக்குச் சொற்களையும் கலந்து அமைத்தாலே பாடல்கள் மழலைகளின் நெஞ்சில் பதியும். நினைவில் தங்கும். வாயில் நுழையும் மழலைகள் மகிழும். அன்றிப் புலவன் தன்னுடைய புலமைக்கு வடிகால் தேடினால் பாடல்களையும் புலமையையும் அலமாரியில் அடக்கம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

    நேசம் உனது வாசம் என் நெஞ்சில் வநது வீசும்!
    வேசம் இல்லாப் பாசம் உன் வியர்வை கலந்து பேசும்!”

    என்ற வரிகளில் சகர வர்கக எதுகைகளைக் கொண்டு குழந்தைகளோடு குழந்தையை  விளையாடி மகிழ்கிறார் கவிஞர்

    6. கலையியல் கவிதைகளில் அழகியல் தொடர்கள்

    சொற்கள் கவிதைகளைச் சிறக்கச் செய்யும். தொடர்கள் நூல்களை நிலைநிறுத்தும். ‘நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம் ஆடைவாங்குவதற்காக’ என்னும் ஒரு தொடர் நா காமராசனைப் புதுக்கவிதையின் நாயகனாக்கியது காண்க. ’மந்திரம் போல் சொல் வேண்டும் என்பார் பாரதியார். அதுபோல பல சொற்களைச் சீர்களாக்கிப் பந்திவைத்திருக்கிறார் முத்துச்சாமி.

    6.1. செடிவைக்கும் மலர்கள்

    பள்ளி செல்லும் பெண்பிள்ளைகள் செடிகளை அதாவது நாற்று நடுகிறார்கள். கன்றுகளை நடுகிறார்கள். இதனைக் காணும் கவிஞர் செடிவைக்கும் மலர்கள்’ என்று வண்ணனை செய்கிறார்.

    6.2. தங்க நிற நெருப்பில் தவத்தில் இருந்தவை

    காலைச் சிற்றுண்டியாக இட்டளியும் பொங்கலும் தயாரிக்கிறார்கள். அவற்றுள் பொங்கலில் இடுவதற்கு முந்திரிப் பருப்புக்களை வாணலியில் இட்டு வதக்குகிறார்கள். இந்தக் காட்சி ‘முந்திரி நெருப்பில் தவம் செய்வதுபோல்’ தோன்றுகிறதாம். ‘தங்க நிற நெருப்பில் தவம் செய்யும் முந்திரி’! அடடா! என்ன அழகிய கற்பனை வெளிப்பாடு?

    6.3. வறுமைக்குப் பஞ்சமில்லை

    விருந்தினரைப் போற்ற இயலாத நிலையைத்தான் வறுமையின் உச்சம் என்பார் வள்ளுவர். ‘கொல்வறுமை தாளவில்லை என்பார் ஜீவா. உண்மையில் அந்த வீட்டில் பஞ்சமேயில்லையாம்! எதற்கு? வறுமைக்கு! எவ்வளவு ஆழமான அழகான கற்பனை கலந்த சொற்றொடர்? இதுதான் கவிதை!

    7. மகரந்தம் தேடும் மலர்களில் வடிவக் கோட்பாடுகள்

    முறையாகத் தமிழ் படித்தவர். பட்டங்கள் பல பெற்றவர். யாப்பிலக்கணம் தெரிந்தவர்.  பாவகைகளையும் அவற்றின் இனங்களையும் பகுத்தறிந்தவர். இருந்தாலும் இந்த நூலில் அவற்றை முற்றிலுமாகப் புறக்கணித்து மக்கள் மொழியில் கவிதை எழுதியுள்ளார் முத்துசாமி. இந்தத் துணிச்சல் பட்டுக்கோட்டைக்கு இருந்தது பாவலர் வரதராசனுக்கு இருந்தது. ஜீவாவுக்கு இருந்தது. கே.சி.எஸ..அருணாசலத்திற்கு இருந்தது கொத்தமங்கலம் சுப்பு அவர்களுக்கு இருந்தது. இன்றைக்கு இவருக்கு இருக்கிறது. மக்கள் வாழ்வியல் சிக்கல்களை வரையறுக்கப்பட்ட யாப்புக்குள் கொண்டுவர இடர்ப்படுவதைவிட மக்கள் மொழியிலேயே அவர்களுக்குத் தெரிந்த நடையிலேயே எடுத்துமொழிவதையே தனது வடிவக்கோட்பாடாகக் கொண்டிருக்கிறார் முத்துசாமி. இது இந்த நூலுக்கு மட்டும்!

    சில கருத்துரைகள்

    கவிஞனைப் பாராட்டுவதற்கான கட்டுரையன்று இது. அது என் வேலையுமல்ல. கவிதையின் சுவையனுபவத்தைப் பிறர்க்குப் பநதிவைப்பது பரிமாறுவது அவ்வளவுதான்! அவ்வாறு சுவைக்கிறபோது எல்லாமே இனிபபாகத்தான் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அந்த வகையில் நூலின் அகப்புறக் கட்டுமானம் பற்றிய சில கருத்துரைகளைப் பதிவிட நேர்கிறது. .

    1. ஆண்ட்ராய்டில் தட்டச்சுச் செய்யப்பட்டு நூல்வடிவமாக்க அச்சுக்கு அனுப்புகிறபோது எழுத்துரு சிறுபான்மை மாறுபடும். எனவே மெய்ப்பு திருத்துகிறபோது தனிக்கவனம் இருந்திருக்க வேண்டும். இந்த நூலில; ‘லி’ என்ற எழுத்தே அச்சடிக்கப்படாமல் அடிக்கோடாகக் காட்சியளிக்கிறது.
    2. வந்த பையன் என்பதுபோலப் பெயரெச்சத்திற்குப் பின்னால் வல்லினம் மிகாது என்பது மிக மிகச் சாதாரண இலக்கணம் என்பதை மெத்த படித்த நூலாசிரியர் கவனததிற் கொள்ள வேண்டும்.
    1. உள்ளடக்கத்தால் சிறக்கும் இந்த நூலின் அட்டைப்படம் அலட்சியமாகக் கையாளப்பட்டிருப்பது வருத்தத்தற்குரியது. பன்முகப் பொருண்மைகளைப் பாடுபொருளாகக் கொண்ட இந்த நூலுக்கு இந்தப் படம் பொருந்தாமல் போகிறது. ஒரு நூலுக்கு அட்டைப்படம் என்பது தாயின் முந்தானை!  தாவணியன்று!

    நிறைவுரை

    பணிக்காலததில் பாடம் நடத்தி பணி ஓய்வு பெற்றவுடன ஓய்வூதியத்தில் ஒளிந்து கொண்டு உலகமும் தெரியாமல் உலகததிற்கும் தெரியாமல் மறைந்த தமிழாசிரியர் பலர். தம்பி முத்துசாமியோ வேறுபட்டுத் திகழ்கிறார்.  தன்னை மனிதனாக ஏற்றுக் கொண்ட தன்னைச் சூழ்நதிருக்கும் சமுதாயத்தை இந்த எழுபது வயதில் அவர் ஏறெடுத்துப் பார்க்கிறார். எழுத்தில் வடிக்கிறார. இதுவே ஒரு சமுதாயப்பணி! நாமும் எதனையாவது இந்தச் சமுதாயத்திற்குச் செய்ய வேண்டும், சொல்ல வேண்டும் என்ற துடிப்பு இந்த நூலின் ஒவ்வொரு பககததிலும் எதிரொலிப்பதை என்னால் உணரமுடிகிறது. நீங்களும் அந்தத் துடிப்பை உணரவேண்டும் என்பதற்காகத்தான் படித்துச் சுவைத்ததைப பந்திவைத்துப் பகிர்ந்திருக்கிறேன். வண்டுகள்; தேட வேண்டிய மகரந்தத்தை மலர்களைத் தேடவைத்திருக்கிறார் முத்துசாமி! நாம் என்ன மலர்களைவிடத் தாழ்ந்தவர்களா?

    (தொடரும்)

    Share
  • மு. இளங்கோவனின் மணல்மேட்டு மழலைகள் – ஒலிவட்டு, நூல் வெளியீட்டு விழா

    மு. இளங்கோவனின் மணல்மேட்டு மழலைகள் – ஒலிவட்டு, நூல் வெளியீட்டு விழா

    குழந்தைகளுக்கு விருப்பமானவை பாட்டும் கதையும் ஆகும். இன்றைய விரைவு உலகத்தில் நம் குழந்தைகளுக்கு இவை கிடைப்பதில்லை. இக்குறையை உணர்ந்து, முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டுச் சுவைக்கும் வகையில் மணல்மேட்டு மழலைகள் என்ற தலைப்பில் எழுதிய பாடல்களை நூல்வடிவில் வெளியிட்டுள்ளார். புதுவை இசையறிஞர் கலைமாமணி கா. இராசமாணிக்கனார் அவர்களின் மேற்பார்வையில் இசைத்தென்றல் இராஜ்குமார் இராசமாணிக்கம் அவர்கள் இப்பாடல்களுக்கு இசையமைத்து ஒலிவட்டாக உருவம் கொடுத்துள்ளார். இந்த ஒலிவட்டினையும் நூலினையும் மாண்புமிகு புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் அரங்க. செல்வம் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி வெளியிட உள்ளார்கள். அறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில் தாங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

    அழைப்பின் மகிழ்வில்
    வயல்வெளித் திரைக்களம்
    புதுச்சேரி – 605 003

    நாள்: 25. 04. 2022 / நேரம்: மாலை 6.30 மணி
    இடம்: செயராம் உணவகம் (Hotel Jayaram), புதுச்சேரி

    நிகழ்ச்சி நிரல்

    தமிழ்த்தாய் வாழ்த்து: கலைமாமணி காஇராசமாணிக்கம் அவர்கள்

    தலைமை,
    ஒலிவட்டு மற்றும் நூல் வெளியீடு
    மாண்புமிகு பேரவைத் தலைவர் ஏம்பலம் அரங்கசெல்வம் அவர்கள்
    புதுச்சேரி சட்டப்பேரவை

    ஒலிவட்டு முதல்படி பெறுதல்
    திருகே.பிகேசெல்வராஜ் அவர்கள்
    தலைவர், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்

    நூல் முதல்படி பெறுதல்
    புரவலர் திருந. க. குணத்தொகையன் அவர்கள்புதுச்சேரி

    அருளாசியுரை
    தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள்
    இருபதாம் பட்டம், பொம்மபுர ஆதீனம்

    ஒலிவட்டுச் சிறப்புப் படிகளைப் பெறுதல்
    முனைவர் விமுத்து அவர்கள்
    தலைவர், புதுவைத் தமிழ்ச் சங்கம்

    பேராசிரியர் சு. பழனியாண்டி அவர்கள்
    தாளாளர், சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி, மோகனூர்

    மருத்துவர் ச. முத்துராமன்

    பொறியாளர் பார்த்தசாரதி, ஆசிரியர் – வலைத்தமிழ்

    சிங்கைக் கவிஞர் .  இளங்கோவன் அவர்கள்

    வாழ்த்துரை
    பேராசிரியர் ப. சிவராசி,
    இசுலாமியாக் கல்லூரி, வாணியம்பாடி

    ஒலிவட்டு அறிமுகவுரை
    பொம்மலாட்டக் கலைஞர் முகலைவாணன்

    வரவேற்புரை
    திருதூசடகோபன் அவர்கள்

    நன்றியுரை
    திருகோ. முருகன் அவர்கள்
    புதுச்சேரி இலக்கிய வட்டம்.

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! 14

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! 14

    முனைவர் ச. சுப்பிரமணியன்                                

    துரை. வசந்தராசனின் ‘தேன்பாவை’ — ஓர் அழகியல் பார்வை

    முன்னுரை

    ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை ஆக்கப்பூர்மான முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கும் சில எடுத்துக்காட்டுக்கள் இருக்கின்றன. சில நிகழ்வுகளும் நடக்கின்றன. முகநூல் குழுமங்களில் ஓர் இலக்கிய ராஜாங்கத்தையே சிலர் நடத்தி வருகின்றனர். அவருள் தம்பி மாதவரம் பண்ணைக் கவிக்கோ வசந்தராசனும் ஒருவர். வெற்று ஆரவாரங்களில் ஆர்வம் காட்டாத வினோதமான இந்தத் தம்பி தமிழ்நாட்டில் வாழுகின்ற கவிஞர்கள் எழுதும் கவிதைகளுக்குத் தலைமைதாங்கும் கவிதைகளை எழுதிக் கொண்டிருப்பவர். கவிஞர்களை ஒப்பிடுகிறவர்களுக்கு இந்த உண்மை அவ்வளவாகப் புலப்படாது. என்னைப்போல் முன்பின் அறியாதவர்களின் கவிதைகளை ஒப்பிடுகிறவர்கள்  மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அவருடைய முகநூல் பதிவுகளில் சென்ற 2021ஆம் ஆண்டு வெளிவந்த காதலென்னும் பொருண்மை பற்றிய கவிதைகள் தேன்பாவை என்னுந் தலைப்பில் நூல் வடிவாகி என் பார்வைக்கு வந்தது. அட்டையைப் பார்த்தும் மயங்கினேன் அனைத்தையும் பாரத்தும் மயங்கினேன். அந்த மயக்கம் பித்த மயக்கம் அன்று என்பதையும் பின்னர்த் தெளிந்து கொண்டேன். இருக்கிற காதலியிடம் தோன்றாத காதலை இல்லாத காதலியிடம் தோன்றியதாகக் கற்பனை செய்து கொண்டு எழுதியிருக்கும் இந்தப் பாவியம் வைணவ இலக்கியங்களைப் போல அழகியல் சார்ந்தது., அமைதியானது., ஆரவாரம் இல்லாதது. கற்பனையானது.,காதலைப் பாடுவது!. சுவைத்தனால் அறிந்தேன் நான்! சுவைப்பீர்களேயானால் நீங்களும் அறிவீர்கள்! சொந்தங்களே வாருங்கள்! கவிதைச் சுகம் காண்போம்!

    படித்தவன் எழுதுகிறேன்

    ‘பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக’ என மணிவாசகரிடம்  திருப்பெருந்துறையுடையார் வேண்டுகோள் விடுத்ததாக ஒரு தகவல் உண்டு. வசந்தராசன் இனி கோவை பாடுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நூல் முன்னுரையில் தம்பி வசந்தராசன் பாடியவன் பேசுகிறேன் என்று எழுதியிருக்கிறார். அதனால் நான் படித்தவன் எழுதுகிறேன். மணிவாசகப்பெருமான் எழுதிய ‘பாவை’ என்பது தனி நூல் அல்ல என்பதும் திருவாசகத்தின் ஒருபகுதியே என்பதும் யாவரும் அறிந்ததே. வைணவத் திருப்பாவை, அதனைத் தொடர்ந்து தோன்றிய சைவத் திருவெம்பாவை ஆகிய இரண்டுமே பாவை இலக்கிய வகைமாதிரிகளில் கோலோச்சுகின்றன. இந்தப் பின்புலத்தில் தம்பி வசந்தராசன் எழுதிய தேன்பாவையால் நான் பெற்ற சுகததை ஊரறிய கடைவிரிப்பது எல்லாருக்கும் உதவக்கூடும் என்னும் நம்பிக்கையில் இந்தக் கட்டுரை விரிகிறது.

    தேன்பாவை பாவை இலக்கியமா?

    ‘பாவை’ என்ற சொல் சங்க இலக்கியத்தைச் சார்ந்தது. ‘யவனர் இயற்றிய வினைமாண் பாவை’ என்பது நெடுநல்வாடை. ‘கொல்லிப் பாவை’ என்பது அகப்புற இலக்கியங்களில் பெருவழக்கு. பாவை மன்றம் என்பது பூம்புகார் கண்டது, நாம் காணாதது. ‘மரப்பாவை’ என்பதை மரப்பாச்சி என்பது உலகியல்.

    இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண் மா ஞாலம்
    மரப்பாவை சென்று வந்தற்று” (1058)

    நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
    நாணால் உயிர் மருட்டியற்று” (1020)

    என்பன திருக்குறள் பயன்பாடுகள். “தென்தமிழ்ப் பாவை செய்தவக் கொழுந்து” என்பது சிலப்பதிகாரம். ‘பாவை’ என்பது அறிஞர் மு.வ. எழுதிய ஒரு நாவலின் பெயர். பாவை விளக்கு என்ற பெயரில் திரு. அகிலன் எழுதிய நாவல் பெரும்புகழ் பெற்றுத் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. ‘சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கி’ என்பது பவணந்தியாரின் தொடர். அத்தொடரைச் ‘சித்திரப்பாவை’ என்று திரு. அகிலன் தன் நாவல் ஒன்றனுக்குத் தலைப்பாக்கினார். பாவை நோன்பு என்பது அக்கால உலகியலில் மகளிர் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று. மண்ணால் செய்து வைக்கப்பட்ட பாவை உருவைத் தெய்வமாகப் பாவித்து நாடும் தானும் நலிவற்று வாழ வேண்டும் என்பதற்கான வேண்டுதல் நெறிக்குப் பாவை நோன்பு என்று பெயர். இவ்வாறு பன்முகமாக விவரிக்கப்பட்ட பாவை என்ற சொல்லுக்கும் துரை. வசந்தராசனின் ‘தேன்பாவை’ என்ற நூலின் உள்ளடக்கத்திற்கும் எள்ளின் முனையளவும் இயைபில்லை. முள்ளின் முனையளவும் உறவில்லை. இது அவருக்கு மட்டுந்தானா?  இல்லை. எல்லாப் பாவை நூல்களுக்கும் இப்பொருந்தாமை பொருந்தும்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானது.

    ‘எம்பாவாய்’ என்றால் என்ன?

    பாவை இலக்கியங்களைப் படிக்கின்ற எவரும் ‘எம்பாவாய்’ என முடிவதினாலேயே அது பாவை இலக்கியம் எனக் கருதிக் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. உண்மையில் பாவை இலக்கியங்களின் தோற்றம் பாவை போன்ற பிரதிமையை வழிபடுவதில் தொடங்கியது. “நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்” என்பது திருப்பாவை. திருவெம்பாவைக்குப் பின்னாலே வந்த இலக்கியங்களில் பாவை நோன்பு என்பது மறக்கப்பட்டுப் ‘பாவாய்’ என்னும் விளியில் முடிந்தால் போதும் என்ற அளவில் வந்து நின்றது. பாட்டின் சுவைக்கும் தலைப்புப் பற்றிய காரண காரிய அறிவிற்கும் தொடர்பில்லை. இருப்பினும் இவ்வாறு முடிந்ததனால் அவ்விலக்கியங்களின் தரவரிசை ஒன்றும் குறைவுபடுவதில்லை. தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் மக்கள் வாழ்க்கைச் சூழலில் அவற்றைப் பின்னனியாகக் கொண்டு தோன்றியவை என்பது அறிஞர் கைலாசபதியின் கருத்தாகும். எனவே எந்த இலக்கியமானாலும் தனிப்பாடலானாலும் அவற்றுள் நாட்டுப்புறவியலின் தாக்கம் தவிர்க்க முடியாமல் இழைந்திருக்கும். சிலப்பதிகாரத்தின் வரிப்பாடல்களும் குரவைப் பாடல்களும் கலித்தொகையின் வள்ளைப் பாடல்களும் இக்கூற்றினை உறுதி செய்யக்கூடும். திருவாசகத்தில் மணிவாசகப் பெருமான் பயன்படுத்தியிருக்கும் திருச்சாழல், திருக்கோத்தும்பீ, திருப்பொன்னூசல் முதலிய கட்டமைப்புக்கள் எல்லாம் நாட்டுப்புற இலக்கியங்ளின் தாக்கமே என்பதில் ஐயமில்லை. இதே நிரலில் வந்ததுதான் ‘ஏலோர் எம்பாவாய்’ என்பதும். இது சொல்லாராய்ச்சிக்கு உரிய தொடர் அல்ல. தற்போதைய திரைப்பாடல்களில் வரும் ‘ஹோய்’ என்பது போல. ‘ஏலேலங்கடி! ‘ஐலசா’ போன்ற சொற்களும் இத்தகையனவே! இதற்குப் பிறகும் இது பாவை இலக்கியம் என்று சொல்லி மல்லுக்கட்டுகிறபோதுதான் நமக்குச் சங்கடமும் கண்ணீரும் சம அளவில் ததும்பி நிற்கின்றன.

    பாவைகள் பலவிதம்

    ‘பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்’ என்று கண்ணதாசன் பாடியிருக்கிறார். பாவைகளும் அப்படியே! பாவைகளின் உள்ளடக்கத்தைப் பொறுமையாகப் படிததுப் புரிந்து கொண்டால் ‘எம்பாவாய்’ என்ற சொல் ஒலி நிரப்பும் பணிசெய்யும் ஒரு வெற்றசைச் சொல் என்பது தெள்ளத் தெளிவாகிவிடும். நாடும் வீடும் செழிக்கப் பாவையை நோற்றதைப் பாடுவன திருவெம்பாவையும் திருப்பாவையும். தமிழ் ;மரபுகாக்கவும் தைத்திங்களைச் சிறப்பிக்கவும் திராவிட இயக்கச் சிந்தனையாளராக ஒளிர்ந்த கண்ணதாசன் எழுதியது தைப்பாவை. இந்தப் பாடலில்; தைத் திங்களையே பெண்ணாக உருவகம் செய்திருக்கிறார். இதனை அப்படியே பின்னாளில் திரு.வரதராசன் என்பார் ‘சுறவம் பாவை’ என்னும் ‘பாவை’ இலக்கியத்தை எழுதியிருக்கிறார்.  இதுவும் முகநூல் பதிவே. செந்தமிழுக்குக் கேடு வந்தபின்னும் அறியாது விழிமுடித் தூங்கும் மகளிரை எழுப்புவதாக அமைந்த பாவை பாவலர் பெருஞ்சித்திரனார். மார்கழித் திங்களின் காலையெழிலை திரு.வள்ளிமுத்து என்பார்; எழுதிய எழிற்பாவை கரட்சிப்படுத்துகிறது. தம்பி வசந்தராசன் எழுதிய இந்தத் தேன்பாவை கற்பனைக் காதலியை அவள் பேரழகைப் பிற பெண்களுக்கு அறிமுகம் செய்வதாய் அமைந்துள்ளது. இப்படி அமைந்த பல்வகைப பாவை இலக்கியங்களில் திருவெம்பாவை திருப்பாவை தனித்து விளங்குவதப் போலவே பாவலர் பெருஞ்சித்திரனாரின் செந்தமிழ்ப் பாவை தனிதது விளங்குகிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

    கட்டுமானச் சிறப்பு

    நாட்டுப்புறவியல் தாக்கத்தின் விளைவாகத் தோன்றியதாதலின் பாவை இலக்கியத்திற்கு அடி வரையறை இருந்ததாகத் தெரியவில்லை. நடப்பியல் மரபு பற்றி இயல் தரவிணைக் கொச்சகக்கலியால் நான்கடிகளால் (இணை) இயற்றப்படும் இந்தப் பாடல்களில் தொடைவிகற்பங்கள் பொதுவாகவே சிறப்பாக அமைந்திருக்கும். தேன்பாவை இலக்கியத்தில் அமைந்திருக்கும் இருபத்தொன்பது பாடல்கள் இரண்டடித் தரவுகளாக எட்டு வரிகள் அமைய, ‘மின்னல் வரியெடுத்து வானம் மடல் எழுதும்’ என்ற ஒரே ஒரு பாடல் ஒன்பது வரிகளைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. இந்த ஆசிரியர் எழுதிய மற்றொரு வரலாற்றுப் பாவையான தலைமுறைப்பாவை பத்து வரிகளை அதாவது இரண்டடித் தரவுகளாகப் பத்து வரிகள் கொண்டதாக அமைந்துள்ளது. பொதுவாகப் பாக்களின் அடிகளுக்கும் குறிப்பாக அளவடிகளுக்கும் இனிமை சேர்க்கின்ற பொழிப்பு விகற்பங்கள் அதாவது பொழிப்பு மோனை, பொழிப்பு எதுகை முதலியவைகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன எனினும்,

    கட்பூவில் வண்டமர்ந்து காதல் சிறகெழுதி
    உட்போகும் காற்றால் உயிரெழுதி, யானெழுதும்
    பொற்பூவின் தேனால் மகரந்தக் கூடெழுதி
    விற்பூவை வீசி விளையாடும் தேன்பாவை
    நற்பூவாம் நாசிவழி நாற்றிசையும் வாசித்தே
    எட்பூவாய் என்னை இழுத்துப் பதுக்குகிறாள்!
    எட்பூவில் வண்டமர ஏலுமோ? ஏலுமெனப்
    பொற்பூவாள் காட்டுகிறாள்! போய் காண்நீர் எம்பாவாய்!

    என்னும் பாடலில் முற்றெதுகைகள் உருவகச் சீர்வரிசைகளோடு  உலாவருவதைக் காணமுடிகிறது. சொற்பூவின் தேனாய்க் கவிதைப் பொருள் சிறக்க எழுதும் காதல் மடலில் ‘மகரந்தக் கூடெழுதி’ என்றும் புருவத்தால் பேசுகிறாள் என்பதை ‘விற்பூவை வீசி’ என்றும் செய்திருக்கும் உருவகம் கற்பனையின் எல்லை தொடுகின்றன. இது பற்றி விரிப்பின் பெருகும்.

    மரபிழையும் பாவை

    தமிழ் மரபில் ஆழங்கால்பட்ட கவிஞர்கள் சிலர் புதுக்கவிதை எழுதுவதாகப் புறப்படுவார்கள். ‘பொருள் புதிது’ என அச்சமூட்டி பாரதிக்கு நேரடி வாரிசாவார்கள். பிள்ளையார் பிடிக்க சிவபெருமான் ஆன கதையாக அவர்கள் என்ன எழுதினாலும் மரபு அவர்களையும் அறியாமல் அவர்கள் எழுத்தில் ஒளிந்து கொள்ளும். தம்பி வசந்தராசன் இந்தக் கவிக்குழுவின் புதிய உறுப்பினர். மரபின் இயல்பே அதுதான். அது அறிந்து பதிவது அன்று. அறியாமல் படிவது. திருவள்ளுவர் கண்ட தலைவன் ஊழ்வினை காரணமாகத் தலைவியைக் கண்டு,

    அணங்குகொல்? ஆய்மயில் கொல்லோ? கனங்குழை
    மாதர் கொல்? மாலும் என் நெஞ்சு

    என ஐயுறுகிறான். சேக்கிழார் பெரியபுராணத்தில் சுந்தரமூர்த்தி நாயனார்,

    கற்பகத்தின் பூம்கொம்போ?
       காமன்தன் பெருவாழ்வோ?
    பொற்புடைய புண்ணியத்தின்
       புண்ணியமோ புயல்சுமந்து
    விற்குவளை பவளமலர்
       மதிபூத்த விரைக்கொடியோ?
    அற்புதமோ? சிவனருளோ?
       அறியேனென் றதிசயித்தார்

    என்று பரவை நாச்சியாரைக் கண்டு அதிசயித்து நின்றதாகப் பாடுகிறார். ‘பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா?’ என்றும் திரைநாயகன் ஐயப்பட்டதுண்டு. ‘நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ’ என்றும் அவன் தடுமாறியதுண்டு. அது சுந்தரமூர்த்தி நாயனாரின் வரலாறு. இவை இயக்குநர் சொல்கிறபடி நடிக்கின்ற கதைநாயகனுக்கு வருகின்ற ஐயம்!  அது சுந்தரமூர்த்தித் திருப்பாவை அன்று. ஆனால் இது தம்பி வசந்தராசன் எழுதிய தேன்பாவை இலக்கியத்தில் அவர் நினைத்திருந்தால் ஐயக்கிளவியை அகற்றியிருக்கலாம். முடியாது. முடியவில்லை. காரணம் அவர் கொண்ட காதல் மரபு சார்ந்தது. தன் கற்பனைக் காதலியைக் கண்டு தானே மனக்கண்ணால் ரசித்துப் பாடுவது. தானே ஐயுறுவது. இந்த மரபின் தாக்கத்தை அவரையும் அறியாமல் இப்படிப் பதிவு செய்திருக்கிறார்.

    முன்னைத் தவப்பயனோ? மூத்தோர் வினைப்பயனோ?
    தன்னை முழுதீந்து தண்டமிழின் வேர்பாவி
    என்னைக் கவியாக்க ஏற்றும் திருவிளக்கோ?
    கன்னல் கனிமொழியைக் காலத் திருமொழியை
    மின்னும் விழிமொழியை விண்ணளக்கும் பேரெழிலைத்
    தன்னை அழகூட்டித் தானே தருகின்ற
    பொன்னின் புதுநிறத்தைப் பூக்காட்டின் ஊர்வலத்தைக்
    கண்ணில் படம்பிடித்துக் காண்கிலரோ ரெம்பாவாய்!”

    தன்னை முழுதீந்து தண்டமிழின் வேர்பாவி என்னைக் கவியாக்க ஏற்றும் திருவிளக்கோ? என்னும் திராவிட மரபில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வசந்தராசன் “முன்னைத் தவப்பயனோ? மூத்தோர் வினைப்பயனோ?  என்னும் சான்றோர் மரபில் தன்னை இழந்துவிடுவதைக் காண்க. இங்கே தண்டமிழின் வேர் பாவி என்பது திராவிட மரபு. முன்னைத் தவப்பயனோ? மூத்தோர் வினைப்பயனோ என்பது சான்றோர் மரபு. தவப்பயன், வினைப்பயன் ஆகியன இரண்டும் திராவிடவியல் அன்று.

    துள்ளலோடு விளையாடும் சிந்து

    கண்ணதாசன் எழுதிய தைப்பாவையில் எந்த அளவுக்குக் கொச்சகக்கலி மரபு பின்பற்றப்பட்டுள்ளது என்பது ஆராய்வதற்கு உரியது. ‘கலிச்சீர்’ என்று ஒன்று தமிழில் இல்லை என்பதும் காய்ச்சீரின் பிறழ்ச்சியே கலித்தளை என்பதும் அத்தளையால் பெயர் பெறுவதே கலிப்பா என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் இலக்கணம் சரியாக அமைந்துவிடுவதாலேயே குறிப்பிட்ட ஒலியும் சந்தமும் அமைந்துவிடும் என்று கருதுவது அவ்வளவு சரியானதன்று. குறிப்பிட்ட ஒலியமைதி கிட்டுவதற்கு அத்தகைய இலக்கண தளையமைதி இன்றியமையாதது என்பதுதான் கருத்து. அமைகின்ற பாட்டுக்குள் இலக்கணம் என்பதுதான் நெறி. இலக்கணத்தால் பாட்டு என்பது கவிதைக்கு முரண். இந்த அடிப்படையில்,

    வா என்றன இமைகள்; மண்நோக்கின விழிகள்
    தா என்றன இதழ்கள்; தழுவென்றது மேனி
    பார் என்றது பருவம்;படை கொண்டது நாணம்;
    நேர்கின்றது யாதோ..நிலை கொண்டது காதல்.
    தேர்கொண்டொரு தெய்வம் தெரு வந்தது போலே
    ஊர்கின்றவன் மனதில் உழல்கின்றது காமம்;
    சீர்கொண்டவன் எதிரே சிலை கொண்டவள் வந்தாள்
    யார் வென்றனர் அறிவாய்;அறிவாய் தைப்பாவாய் .

    என்னும் தைப்பாவைப் பாடலை நோக்க வேண்டியதிருக்கிறது. ‘மார்கழிக்குப் பெண்ணாகி மாசிக்குத் தாயாகிப் பேர்கொழிக்க வந்த பெட்டகமே தைப்பாவாய்! என்னும் சந்தத்திற்கும் மேலே காட்டப் பெற்றிருக்கும் பாடலின் சந்தத்திற்கும் உள்ள வேறுபாட்டினை ஓதுவார் உணர்வார்.

    எட்டின் மெலிந்தஇடை! எழுத்தில் ஒளிந்தபொருள்!
    பட்டின் குறைந்தவிழை! பாட்டில் இயைந்தநயம்!
    கொட்டுமழைத் தூறல் குறுக்கில் நடந்தகுடை!
    வெட்டும் விரிமின்னல் வானில் படருகணம்!
    மொட்டின் முதல்விரியின் மோனத்தின் ஓசையெனும்!
    வட்டத் தொடக்கமென வாழும் இடையுடையாள்
    சுட்டும் சுடர்விழியால் சொர்க்கம் திறந்துவைத்துக்
    கட்டி எனையணைப்பாள் !காண்கிலரோ ரெம்பாவாய்?”          (22)

    என்ற இந்த நூலில் காணப்படும் ஒரு பாடல் கொச்சகக்கலிக்குப் புதிய பரிமாணம் சேர்ப்பதாக அமைந்துள்ளதைக் காணலாம். ‘கருவி தொகுதி’ என்பது தொல்காப்பியம். ‘கருவி வானம்’ என்பது சங்க இலக்கியத்தில் பெருவழக்கு.! மின்னல், இடி, மழை என்னும் தொகுதியையுடைய வானம் என்பது பொருள். தொகுதிக்குக் கணம் என்பதும் பெயர். பேய்க்கணம், தேவகணம் என்பது போல. “கொட்டுமழைத் தூறல் குறுக்கில் நடந்தகுடை!  வெட்டும் விரிமின்னல் வானில் படருகணம்!” என்கிறார். காதல் மீதூறும் ஒரு படைப்பில் மரபு சார்ந்த இலக்கணப் பதிவுகளை மிக இலாவகமாகச் செருகியிருக்கிறார் தம்பி இராசன் அவர்கள். முற்றெதுகைகளால் அமைந்த கலியில் கூழை மோனைகளும் இணை மோனைகளும் பொழிப்பு மோனைகளும் கைகோத்து சந்த இசையோடு நடைப்பயணம் புறப்பட்ட அழகை என்னென்பது?

    செந்தமிழ்ப்பாவையும் தேன்பாவையும் 

    அரிமாப் பாவலர் துரை மாணிக்கம் சிறைச்சாலையில் எழுதியது செந்தமிழ்ப்பாவை. இனத்துக்கும் மொழிக்கும் உள்ள கேடு உணராது கண்ணயரும் இளமங்கையரைத் துயிலெழுப்புவதாய் அமைந்த கட்டமைப்பு.

    காக்கை கரையும்! கடிமுல்லை மொக்கலரும்!
    மேற்கில் மதிகரையும்! கீழ்க்கதிரும் மேலெழும்பும்!
    ஈர்க்குமா றோசை இரையும் தெருவெல்லாம்!
    யாக்கை வளர்ப்பார் தவிர எவர் இப்பொழுதில்
    சேக்கை புரள்வார்? சிறுதுயிலும் கொள்ளுதியே!”

    என்பது செந்தமிழ்ப் பாவையில் ஒரு பாடல். மிக நுண்ணியத்துடன் எழுதப்பட்ட பாடல். காக்கை விழித்துக் கொண்டு கரைகிறது. முல்லை மலர்ந்துவிட்டது (காலையில் முல்லை மலரும் என்பது மயக்கம்). மேற்குத் திசையில் நிலவு கரையும்! கிழக்கில் கதிரவன் கடலின் மேல் எழும்பும்! யாக்கைமேல் பற்றுக் கொண்டு வளர்ப்பாரேயன்றி மொழிப்பற்றும் இனப்பற்றும் கொண்டோர் அவற்றுக்குக் கேடுவந்துள்ள சூழல் கண்டும் உறங்குவார்களா? என்று வினவுகிறாள். இந்தப் பாட்டில் காலைப்பொழுதை ஒருசில வண்ணனைகளால் காட்சிப்படுத்துகிறார் பெருஞ்சித்திரனார். நம் வசந்தராசனோ,

    கார்மேகம் வெட்கும்! கருமை நிறங்குன்றும்!
    நீரருவி போல்நெளியும்! நின்றபடிக் கீழிறங்கும்!
    நீர்வான் ஒளிப்படகு நீந்தும் நிலவுக்குப்
    போர்வையாய் நின்று புறத்தே கரைகொடுக்கும்!
    தார்மலர்கள் வந்து தவம்செய்தால் நன்மணத்தைச்
    சீராய்க் கொடைகொடுக்கும்! சிந்தாமல் பூப்பறிக்கும்!
    நேராய் வரும்காற்றின் நெஞ்சுக்கும் சிக்கெடுக்கும்
    சீரான கருங்கூந்தல்! சீக்கிரம்காண் எம்பாவாய்!”                                  

    எனப் பாடல் முழுமையும் நிரலாக வண்ணனைகளை அடுக்கிக் காட்டுகிறார். கற்பனை கலந்த காட்சிகள் மனக்கண் முன் விரிகிறபோது அவற்றை நிரல்படக் கோப்பது அரிதான செயல் அன்று. ஆனால் முதலில் காட்சிகள் வரவேண்டும்!

    துள்ளும் சிறுமீன்கள் தோற்றும் அலைவட்டம்
    மெல்லக் கரைதொட்டு மீண்டும் குளம்போகும்!
    புல்லில் பனிசருகும்! பூவும் முகங்கழுவும்!
    கல்லும் குளிர்மேவும் காலுக்கு இதமாகும்!
    வெள்ளம் விழுந்தவளை அல்லி மலரசைக்கும்!
    அள்ளும் பேரழகை அன்பீர் மறந்தீரோ?
    வில்லடியின் கீழிரண்டு மீன்களைத் தான்புதைத்து
    மெல்ல உறங்குதியோ? மீளுமேலோர் எம்பாவாய்

    என்னும் எழிற்பாவையும்

    குயில்கூவிக் கொண்டிருக்கும் கோல மிகுந்த
    மயிலாடிக் கொண்டிருக்கும்! வாச முடையநற்
    காற்று குளர்ந்தடிக்கும்! கண்ணாடி போன்றநீர்
    ஊற்றுக்கள் உண்டு! கனிமரங்கள் மிக்க உண்டு!
    வேட்டுவப் பெண்கள் விளையாடப் போவதுண்டு!
    காட்டு மறவர்களும் காதல் மணம் செய்வதுண்டு!
    நெஞ்சில் நிறுத்துங்கள்! இந்த இடத்தைத்தான்
    சஞ்சீவி பர்வதத்தின் சாரல்; என்று சொல்லிடுவார்

    என்னும் பாரதிதாசன் பாடலும் இங்கே ஒப்பு நோக்கத்தக்கன. இயற்கையோடு வாழ்கின்ற கவிஞர்களுக்குத்தான் இது இயலும். வசந்தனுக்கு இது இயல்பு. இந்த மாதிரியான வண்ணனைக் களங்கள் ஏராளம்! ஏராளம்!

    தேனினும் இனிய தொடர்கள்

    கவிதை இலக்கியப் படைப்புக்களில் குறிப்பாக அக இலக்கியப் பதிவுகளில் காலத்துக்கும் நிற்பன தொடர்கள். இவற்றை அடுத்துக் கற்பனைகள். கற்பனைகள்கூடத் தற்காலிக இன்பத்தையே நல்கும். தொடர்கள் காலத்துக்கும் நிலைத்த இன்பத்தைத் தரும். ‘அன்னை கூறினள் புன்னையது நலனே’ நற்றிணைத்  தொடரும் நீயலது உளரோ என் நெஞ்சமர்ந்தோரே என்னும் ஐங்குறுநூற்றுத் தொடரும் காலத்துக்கும் ;மங்காது! மறையாது! தற்காலத் திரையிசையில் கூட,

    அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை
    உன் அழகைப் பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை
    உன்னைத் தேடும்போது இதயம் இங்கு சுகமாகத் தொலைந்ததே

    ‘உன்னைத் தேடும்போது இதயம் இங்கு சுகமாகத் தொலைந்ததே’ என்னும் தொடர் எண்ணற் கினிக்கும். எடுத்தியம்ப வாயினிக்கும். மனைவியிடம் கணவன் தான் அனுபவித்த இன்பத்தைக் கொஞ்சம் சொல்லலாம். ஆனால் மனைவி அவ்வாறு வெளிப்படச் சொல்ல இயலுமா? இயலாது. ஆனால் சொல்கிறாள். எப்படி?

    பரிமாறும்போது நான் பசியாறினேன்

    என்கிறாள் மனைவி. இந்தப் பக்குவப் பதிவுகள் எல்லாருக்கும் வந்துவிடாது. ஆபாசத்தை அமுதமாக்கிக் கொள்பவர்களுக்கு அது இயலாது.   வசந்தராசனுக்கு அது கைவரப் பெற்றிருக்கிறது. காதலைக் கற்பனையில் வைத்துப் பாடுவதைவிடத் தொடர்களில் வைத்துக் காட்டுகிற உத்தியில் அவர் தனித்து விளங்குகிறார். வசந்தராசன் தன்னைத்தன் காதலியிடம் தொலைத்துவிடுகிறார்.

    “தொலைந்து விட்டேன் உன்னிடம்நான்! தேடித் தாயேன்!”

    கற்பனையின் ஆழத்தைத் தொடரில் வைத்துக் காட்டும் இந்தச் சதுரப்பாட்டினை அவருடைய பல கவிதைகளில் நான் கண்டிருக்கிறேன். இந்தப் பாவையிலும்,

    நெஞ்சுக்கும் சிக்கெடுக்கும் சீரான கருங்கூந்தல்

    என்ற தொடரைக் கையாள்கிறார். சிக்கெடுக்கப்பட வேண்டியது கூந்தல். இங்கே அந்தக் கூந்தல் தன் அழகால் தலைவனின் நெஞ்சைக் சிக்கெடுக்கிறதாம். காதலியைச் ‘சேலைச் சோலையே’ என்பார்கள். வசந்தன் எழில் தவழும் தொடர்களைக் கையாள்கிறார்.

    தாகம் தணிக்க வந்த தாவணிப் பேரருவி

    உருவகம் என்ற பெயரில் எதனையும் உருவகித்துவிட முடியும். “பாலிருக்கும் கிண்ணம் மேலிருக்கும் வண்ணம் நீ செய்த கோலமில்லையா? என்று கூட உருவகம் செய்திருக்கிறார்கள். ஆனால் அதில் கற்பனை நயம் இருக்க வேண்டும். நயத்தை நாற்றுநடும் நாகரிகச் சொற்பயன்பாடு இருக்க வேண்டும். தாகம் தீர தண்ணீர் தேவை! இங்கே தண்ணீர் தலைவி! அவள் அருவி! பேரருவி! மலைகளுக்கு இடையில் விழுகிற அருவி! குற்றாலம் சென்றவர்களுக்குத் தெரியும். இந்த அருவியில் தாவணி அருவியாகிறது. இதுதான் எல்லை! இந்த எல்லைக்கோட்டுக்குள் மிகக் கவனமாகச் சொற்சிலம்பு ஆடுகிறார்.

    நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே”          

    என்று கணவன் சொல்ல,

    அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே

    என்று மனைவி சொல்ல களைகட்டிய காதல் கச்சேரியைக் கண்ணதாசன் நிகழ்த்தியிருந்த காலம் ஒன்றுண்டு. கத்திமேல் நடக்கிற விளையாட்டு! காயம் படாமல் இறங்கிய வெகுச்சிலருள் தம்பி இராசனும் ஒருவர்! ‘தாவணிப் பேரருவி’ என்ற சொல்லால் தண்டகாருண்யத்தையே மறைத்திருக்கிறார். மறைப்பதுதான் அழகு என்னும் மந்தணம் புரிந்தவர்!

    பொங்கு புனலலையாய் தொங்கு நீர் காரருவி
    தங்கும் கதிர்நிலவு தாங்கம் மலைமுகடு
    திங்கள் விழியிரண்டில் கூரம்புக் கேடயங்கள்
    பங்கமிலாப் பல்முத்து வாய்பவத் தேனிதழ்கள்
    தெங்கின்கள் தோற்றோடும் தேறல் இதழ் கன்னம்
    தங்கவைர ஆரமென வானவில் தோரணங்கள்
    நுங்கு கழுத்தொன்றே தாங்குகின்ற அதிசயத்தை
    எங்கினிதான் காண்பீர் நீர்? இயம்பலோர் எம்பாவாய்!

    என்னும்  இராசனின் உள்ளுறை வண்ணனையை

    இடையின் பின்னழகில் இரண்டு குடததைக் கொண்ட
    புதிய தம்புராவை மீட்டிச் சென்றாள்

    என்று காதலியின் பின்னழகைப் பாடுவதோடும்

    பொன்பகட்டில் வார்த்து வைத்த
    பெண்ணுடலை என்னவென்பேன்?
    மடல் வாழை தொடை இருக்க
    மச்சம் ஒன்று அதிலிருக்க
    படைத்தவனின் திறமையெல்லாம்
    முழுமை பெற்ற அழகென்பேன்

    என்று காதலியின் தொடைழகைப் பாடுவதோடும் ஒப்பிட்டுப பாரத்தால் வசந்தனின் பண்பாட்டு நுணணியமும் உயரமும் தெளியக் கூடும்.

    உவமச் செல்வர் வசந்தராசன்

    உவமம் பொருள் விளக்கக் கருவி மட்டும் அன்று. படைபபாளனின் முழுமையான ஆளுமையை வெளிப்படுத்துவதில் தலையாய பங்கு வகிக்கும் தனியாற்றல். அவனுடைய உலகியல் பார்வையையும் பரந்துபட்ட இலக்கியப் புலமையையும் ஒரே நேரத்தில் பலப்படுத்தும பேராற்றல் ஒரு கவிஞன் பயன்படுத்தும் உவமங்களுக்கு உண்டு. தம்பி வசந்தராசன் ஓர் உவமச் செல்வராகவே எனக்குக் காட்சி தருகிறார்!

    1. பெண்களுடைய கழுத்துக்குச் சங்கை மட்டுந்தான் உவமம் சொல்லி வந்தார்கள். மிகச் சிலர் ‘பாக்கு மரத்தை’ உவமித்தார்கள். தம்பி வசந்தராசன் ‘நுங்கு கழுத்து என்கிறார். உவமத்தில் கவிதை உறங்குகிற இடம் இது!
    1. கவிராஜன் கதையில் பாரதியின் உடல் இளைத்துப் போனதற்கு வைரமுத்து வெண்பாவின ;ஈற்றடியை உவமித்துக் காட்டுவார். தம்பி வசந்தராசன் காதலிக்கு முன்பாகத் தான் ஒரு ஈற்றசையாக மெலிந்து விடுவதாகப் பதிவு செய்கிறார்.
    1. உள்ளத்தில் உண்மையொளி உணடாயின் வாக்கினிலே வாய்மையுணடாகும என்பார் மகாகவி. தும்பைப்பூவை மனத்திற்குத்தான் உவமித்துப் பாரத்திருக்கிறோம். அந்தத் தூய்மை விழிகளுக்குள் வெளிப்படுகிறதாம். உவமத்திற்கு உவமம். கற்பனைக்குக் கற்பனை!. ‘தும்பை மனவிழிக்குள் தூளிகட்டு எம்பாவாய்’ என்பது தேன்பாவை!
    1. நிலவைப் பெண்ணின் முகத்திற்கு உவமம்; சொல்வது பழந்தமிழ் தொடங்கி நேற்றுவரை நிலைத்துவிட்ட மரபு. ஒட்டுமொத்த பெண்ணின் மெல்லுடலுக்கு உவமம ;சொல்கிறார் வசந்தராசன் ‘‘கிள்ளிவைத்த பால்நிலவு’ நடக்கிற விஷயமா இது?
    1. உடுக்கையை இடைக்கு உவமம் சொல்லியே ஓய்வெடுத்துக் கொண்ட கவியுலகில் எட்டை உவமமாக்கி வளைந்த எட்டை நிமிர்த்திவிடுகிறார வசந்தராசன்! அந்த எட்டுக்கு ஒரு இறுமாப்பு அவளுக்கு உவமம் ஆனதற்காக!
    1. ‘எள்ளின் மேலேறி எழுதும் கண்வினாவின் துள்ளும் தொடர் முற்றாய் தொங்கும் வினாக்குறிகள்’ என்று முகததை உவமக் களஞ்சியமாக்கியிருக்கிறார்!

    தன்னை இழக்க வைக்கும் காதல்

    கடலுக்கு ஏன் நீல நிறம் என்று ஆராய்ந்தவர்களும் வானத்திற்கு ஏன் நீல நிறம் என்று ஆராய்ந்தவர்கள் உண்டு. அவர்கள் விஞ்ஞானிகள். ‘கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ? என்று கடல் நீல வண்ணமானதற்குச் சர்.சி.வி இராமனுக்குத் தெரியாத உண்மையைக் கண்டறிந்து சொன்னவர் கண்ணதாசன். கொஞ்ச நாள் கழித்து அவரே இன்னொரு ஐயத்தையும் கிளப்புகிறார்!

    நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
    காரணம் ஏன் கண்ணே! உன் கண்ணோ ?”

    வானம் நீலம் பூத்து நிற்பதற்கும் அவள் கண்தான் காரணமாம். ஏற்கனவே தென்றலுக்குள் தேன் வைத்து வியர்த்து நின்ற வசந்தராசன், இங்கே தன் காதலியைப் பார்த்து இப்படி ஐயப்படுகிறார்.

    சந்தனக் குழம்புக்குள் தென்றலை நீந்த வைத்து
    செந்தமிழில் சொல்லெடுத்துத் தேனில் குழைத்தெடுத்து
    வந்தமரும் வண்டுக்கு வாசல் திறந்து வைக்கும்
    நந்தவனப் பூக்களுக்கும் நாணம் சிவக்க தர
    எந்த லோகத்தில் இருந்து பிறந்தவளோ?”

    என்று தன் காதலியின் பேரழகைத் தற்பெருமையாகப் பாடுகிறார். நாம் பொறாமைப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. என்ன நமக்கெல்லாம் வருத்தம்? கற்பனைக் காதலிக்கே இத்தகைய ஆலாபனை கிட்டியிருக்கிறது என்றால் உண்மைக் காதலி ஒருத்தி கிட்டியிருந்தால் எத்தகைய காதல் காப்பியம் கிடைத்திருக்கும் என்பதுதான்! ‘இந்தப் பாராட்டைக் காதலின் வெளிப்பாடாக மட்டும் கருதாமல் அவர் கவியாற்றின் ஊற்றினைத் திறந்துவிட்டதற்கான நன்றியுணர்ச்சியாகவும் வண்ணனை செய்திருக்கிறார்.

    நிறைவுரை

    உள்ளது கொண்டு உள்ளது புணர்த்தல், உள்ளது கொண்டு இல்லது புணர்த்தல், இல்லது கொண்டு இல்லது புணர்த்தல், இல்லது கொண்டு உள்ளது புணர்த்தல் என இலக்கிய உருவாக்கம் நான்கு வகைப்படும். தம்பி வசந்தராசனின் இந்தத் தேன்பாவை இல்லாத காதலியிடத்துத் தோன்றாத காதலைப் பாடியது ஆதலின் இல்லது கொண்டு இல்லது புணர்த்தலே! பொருளும் படைப்பின் உள்ளடக்கமும் இல்லதாயினும் இலக்கியம் உள்ளதே. புகழைத் தேடுகிறவன் அழிவான். புகழ் அழியாது. படைப்பாளன் மறைவான். அவன் படைப்பு அழியாது. எல்லாப் படைப்புக்கும் இது பொருந்தாது. மக்கள் உள்ளத்தில் அழியாது நிற்கும் படைப்புக்களுக்கே இது பொருந்தும். ‘மானுடக்காதல்’ என்னும் அநித்தியத்தை நித்தியமாக்கி அதனையும் ஒரு பாவையை முன்னிலைப்படுத்தி அவளையொத்த ஒருத்தியிடமே அவளை வண்ணனை செய்து காட்டியிருக்கும் தம்பி துரை. வசந்தராசனின் துணிச்சலும் படைப்பாளுமையும் உறுப்பு வண்ணனை என்னும் ஆபத்தான இலக்கியக் களத்தில் காட்டியிருக்கும் பொறுப்பும் எச்சரிக்கை உணர்வும் மெச்சத்தகுந்தன! பாராட்டும் மேன்மைக்குரியது! தேன்பாவை நூலுக்குச் சாற்றுக்கவி பாடவந்த ஆற்றல்சால் கவிஞர் திரு. ஆரூர் தமிழ்நாடன் இப்படிப் பாராட்டுகிறார்.

    நான் பார்த்த மாகவிஞன் நல்வசந்த ராசனிடம்
    நாள்கோள்கள் பார்க்காமல் நற்றமிழாள் தோள்சாய்ந்து
    தேன்முத்தும் தந்திடுவாள்

    என்னும் தம்பி இராசனுக்குரிய அந்தக் கோளறு பதிகத்தை அப்படியே வழிமொழிந்து அவருடைய அசுரத் திறமைக்கு ஓர் அணுவாக இந்தப் பாவையைக் கருதி நாமும் வாழ்த்தி மகிழ்கிறோம்! களங்களும் சொற்களும்  கவலையுடனும் ஏக்கத்துடனும் காத்திருக்கின்றன, தம்பி வசந்தராசனின் பார்வைக்கு! வாழ்த்துக்கள்!

    (தொடரும்)

    Share
  • வீட்டுக் கடனில் வங்கிகளின் உள்குத்து

    எம். எஸ். லட்சுமணன்
    காரைக்குடி 

    கடன் வாங்காதவர்கள் வங்கிச் சட்டத்தின்படி, வட்டி அதிகம் கட்ட வேண்டியவர்கள்.

    ரெபோ ரேட் படி வட்டியைக் குறைக்க மறுக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி.

    வீட்டுக் கடன் வாங்கப் போகிறீர்களா? மக்களே உஷார்! உஷார்! பகுதி 2!

    விழிப்புணர்வுப் பதிவு

    நண்பர்களே சமீபத்தில் வீட்டுக் கடன் வாங்கி  ஒரு வருடமாக மீளக்கட்டி வருகின்றேன்.  நான் வீட்டுக் கடன் வாங்கச் செல்லும்பொழுது வங்கி சார்ந்து எனக்கு எந்தவிதமான கடனுமே  இல்லை. இதனால் என்ன நன்மை இல்லாத விஷயம் நடக்கும் என்று நினைக்கின்றீர்களா?  நடந்த விஷயத்தைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும்.

    கடந்த ஓராண்டாக ரெப்போ ரேட் எனப்படும் வங்கி வட்டியானது 6.65 என்றும்,வங்கி வீட்டுக் கடன் 6.5 முதல் 6.65 வரைதான் என்று இருக்கின்றது. தேசியமயமாக்கப்பட்ட பாரத வங்கியில் தற்போது வழங்கப்படும் வீட்டுக் கடனுக்கான வட்டி 6.70 மட்டுமே. ஆனால் எனக்கான வட்டியானது 7.30 என்று நடந்துகொண்டிருக்கின்றது .இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு நாள் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டு வங்கிக்குச் சென்று, எனது வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைத்துக் கொடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். வங்கி மேலாளரிடம் இருந்தும், வீட்டுக்கடன் பிரிவு பார்ப்பவரிடம் இருந்தும் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.

    ஒரு மாதத்தில் இரண்டு மூன்று முறை நானும் நேரில் சென்று கேட்டேன். எந்தவிதமான பதிலும் இல்லை. மீண்டும் ஒருநாள் வங்கிக்கு நேரில் சென்று நான் அருகில் உள்ள தேசிய  வங்கிக்கு எனது வீட்டுக்கடனை மாற்றினால் 6.50 வட்டியில் கடன்   தருவதாகக் கூறுகின்றனர். எனவே நான் அங்கு செல்கின்றேன் என்று கூறினேன். அதனைக் கேட்டவுடன் வங்கியின் மேலாளர் ஓராண்டாக எந்தவிதமான ஜம்பும்  இல்லாமல் பணத்தைச் செலுத்தி வருகிறீர்கள். எனவே எனது மேலதிகாரிகளிடம் கேட்கிறேன் என்று மூன்று மேலதிகாரிகளிடம் இது தொடர்பான தகவலை என் முன்பே கேட்டார்கள். அவர்களும் வட்டியை 6.80 ஆக மாற்றிக் கொடுக்கலாம் என்றும், அதற்காக படிவங்களில் கையெழுத்துப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றும், அதற்கான ரூபாய் 2000 பிளஸ் ஜிஎஸ்டி 360 ரூபாய்க்கான வித்ட்ராயில் சலனும் பூர்த்தி செய்து கையெழுத்துப் பெற்று கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார்கள்.

    அன்று இரவு மற்றொரு தேசிய  வங்கியின் மேலாளர் என்னிடம் பேசும்பொழுது, நான் ஏற்கெனவே கடன் பெற்றுள்ள வங்கியிலேயே எனக்கு 6.80 வட்டி  தருவதால் நான் பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டேன் (மிகவும் பெருமையாக).

    ஆனால் நண்பர்களே மறுநாள் மாலை,  எனது வீட்டுக் கடன் வங்கி மேலாளரைச் சந்தித்தேன். அவர்கள் மிக எளிமையாக, சார் சிஸ்டம் மாற்ற விடவில்லை, எனவே உங்களுக்கான வட்டி வீதத்தை மாற்ற முடியாது என்று தெரிவித்துவிட்டார்கள். நானும் மிக வேதனையாக, மன  வருத்தத்துடன் மேலாளர் அவர்களைப் பார்த்து, ஏன் மேடம் நேற்று 3 அலுவலரிடம், உயரதிகாரிகளிடம் பேசினீர்கள். மூவரும் மாற்றிக் கொள்ளலாம் என்று கூறினார்கள். நானும் கையெழுத்திட்டு உங்களிடம் கொடுத்து விட்டுத்தான் சென்றேன். சிஸ்டம் என்பதை மனிதர்கள் தான் இயக்குகிறார்கள். எனவே மனிதர்கள் இயக்குவதை நீங்களே சிஸ்டத்தில் மாற்றி எனக்கு வட்டியை மாற்றித் தர வேண்டும் என்று கூறினேன்.

    அவர்களோ எனக்கு இது தொடர்பாக எதுவும் தெரியாது, உயரதிகாரியிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று போனைப் போட்டு எனக்குக் கொடுத்துவிட்டார்கள். நான் மீண்டும் உயர் அதிகாரியிடம் பேசினேன், அவரோ இல்லை தவறு நடந்துவிட்டது மன்னித்துக்கொள்ளுங்கள் என்று மிக எளிதாக என்னிடம் தெரிவித்தார். எனக்கோ மிகவும் மன வேதனையாகவும் வருத்தமாகவும் இருந்தது. அப்போது வங்கி மேலாளர் என்னிடம், சார் உங்களுக்கு மாற்றினால் எல்லோரும் கேட்பார்கள், எனவே மாற்ற இயலாது என்றும் கூறினார். மீண்டும் மேலாளரைப் பார்த்துக் கேட்டேன்.

    நேற்று ஒரு வங்கியில் 6.50 வட்டி தருவதாகக் கூறினார்கள். நான் அங்கு செல்கிறேன் என்று கூறினேன். அந்த மேலாளர் என்னிடம் இரவு கேட்ட பொழுது, நான் ஏற்கெனவே வீட்டுக் கடன் பெற்றுள்ள வங்கியில் இருந்துகொள்கிறேன் என்று தெளிவாகத்  தெரிவித்துவிட்டேன். இப்போது நான் எப்படி அந்த வங்கியின் மேலாளர் முகத்தில் சென்று முழித்து  மீண்டும் எனக்கு லோன் கொடுங்கள் என்று கேட்பது? நீங்களே ஒரு மேலாளர். தகவல் கூறுங்கள் என்று கேட்டேன். அவரிடம் இருந்து எனக்கு எந்தவிதமான தகவலும் வரவில்லை. மௌனமே பதிலாக வந்தது.

    மீண்டும் என்னுடைய கேள்விகளைத் தயார் செய்து  வங்கியின் சென்னை அலுவலகத்திற்கு குறைதீர் பிரிவுக்கு எழுதினேன். உடனடியாகப் பதில் ஏதும் வரவில்லை. மீண்டும் மீண்டும் மெயில் மூலம் தொடர்பு கொண்டதன் தொடர்ச்சியாக, சில நாட்கள் கழித்து அவர்களிடமிருந்து மண்டல மேலாளர், தொலைபேசியில் என்னை அழைத்து, சிஸ்டம் செயல்படவில்லை என்று என்னிடம் தெரிவித்தார்கள். நான் கேட்டேன்,  கோபித்துக் கொள்ளாதீர்கள் மேடம், தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்,  சிஸ்டத்தை இயக்குவதே மனிதர்கள் தான். அந்த சிஸ்டத்தில் தவறான ஏதோ ஒரு தகவல் வந்தால் அதனை நீங்கள் உடனடியாகச் செய்து விடுவீர்களா?  உதாரணமாக தூக்கு மாட்டிக்கொள்ளுங்கள் என்றால் உடனடியாக நீங்கள் அதனைச் செய்வீர்களா?  எனவே சிஸ்டம் செய்கிறது என்று கூறுவது தவறான தகவலாகும். அதனை இயக்குவதே மனிதர்கள் தான் என்று தெரிவித்தேன். அவரோ உண்மைதான் ஆனால் எங்களுக்கான பதில் இதுதான் என்று தெரிவித்தார்கள்.

    மீண்டும் நான் அதனை ஆர்பிஐ ஓம்புட்ஸ்மன் மெயில்  கொடுத்தேன். அவர்கள் மீண்டும் ரீபிளையில்  அப்படித்தான் தங்களுக்கு வட்டி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்கள். நான் கடன் பெறும் பொழுது எனக்கான வட்டி 7.05. ரெப்போ ரேட். நான் கடனே  வாங்காத காரணத்தினால் எனது சிபில் ஸ்கோர் குறைவாக இருந்ததால் (கடன் வாங்காதவர்களுக்கு சிபில் ஸ்கோர் குறைவு என்று இப்பொழுதுதான்  தெரிந்துகொண்டேன்), வட்டியில் எனக்கு 0.65 சதவிகிதம் சேர்த்திருக்கிறார்கள். 7.70 ஆக இருந்திருக்கின்றது. ரெபோ ரேட் வட்டி 6.65 ஆக மாறும் பொழுது 6.65+0.65=  7.30 ஆக உள்ளது.

    இதனை மாற்றிக் கொடுங்கள் என்று ஆர்பிஐ ஓம்புட்ஸ்மேனிலும் அப்ளை செய்தேன். அங்கும் எனக்குப் பழைய பதில் தான்  கிடைத்தது.  மீண்டும் சென்ட்ரல் கவர்மெண்ட் உள்ள பிஜி போர்ட்டலில்  சென்று அப்ளை  செய்தேன். அங்கும் அவர்கள் மாற்ற இயலாது என்று தெரிவித்து விட்டார்கள். மீண்டும் அப்பீல்  செய்தேன். அதிலும் எனக்கு வட்டியை மாற்ற இயலாது என்று தெரிவித்து விட்டார்கள்.

    எனது முக்கியமான கேள்வி என்னவெனில் புதிதாக வரக்கூடிய வாடிக்கையாளருக்கு 6.70 என்று கொடுக்கும் வங்கியானது, நல்ல முறையில் கடனைக் கட்டிவரும் எனக்கு சிபில் ஸ்கோர் தற்போது அதிக புள்ளிகள் இருக்கும் பொழுது, ஏன் வட்டியைக் குறைக்கக் கூடாது என்பது கேள்வி. எனது நியாயமான இந்தக் கேள்விக்கு கடைசிவரை எனக்குப் பதில் கிடைக்கவில்லை.

    மேலும் மூன்று அதிகாரிகளிடம் பேசிய பிறகு மாற்ற முடியாது என்று மேலாளர் அவர்கள் தெரிவித்துவிட்டார்கள். அதற்கான காரணத்தைக் கேட்ட பொழுது வங்கியில் இருந்தோ, ஆர்பியை ஓம்புட்ஸ்மேனிலிருந்தோ, பிஜி போர்ட்டலில் இருந்தோ எனக்குச் சரியான தகவல் கிடைக்கப்பெறவில்லை. இதை அவர்கள் ஒரு விஷயமாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்பது தான் வேதனையான தகவல். வங்கி அதிகாரிகள் வாய்க்கு வந்தபடி  எதை வேண்டுமானாலும் சொல்கிறார்கள். ஆனால் செயலில் காண்பிக்க மாட்டேன் என்று தெரிவித்து விடுகிறார்கள். எனவே இந்த வங்கியின் வட்டியைக் குறைப்பதற்கு ஏதேனும் வழிமுறைகள் இருந்தால் தாங்களும் தெரிவிக்கவும். இதனைப் படிப்பவர்களும் ஏதேனும் யோசனைகள் இருந்தால் எனக்குத் தெரிவிக்கவும். வங்கியில் புகார் அளிக்கும் உச்சம் வரை போராடியும் வங்கி தொடர்பான ஓம்புட்ஸ்மன் கம்ப்ளைன்ட் செய்தும் எனக்கு எந்தவிதமான நீதியும் கிடைக்கவில்லை என்பதை இங்கே பதிவு செய்கின்றேன்.

    முடிந்தவரை முயற்சி செய்தேன், போராடினேன். பதிலனுப்பினேன். பலமுறை டோல் பிரீ எண்ணில் தொடர்பு கொண்டேன். மெயில் அனுப்பினேன். அதன் பிறகுதான் எனக்கு இந்தப் பதில்  கிடைக்கப்பெற்றது.  எனவே புதிதாக வருபவர்களுக்கு வழங்குவது போல் எங்களுக்கும், சரியாகக் கடனைக் கட்டி வருபவர்களுக்கும் ரெபோ ரேட் படி, வட்டியைக் குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    Share
  • வீட்டுக் கடனுக்குக் காப்பீடு எடுக்கிறீர்களா? உஷார்! உஷார்!

    வீட்டுக் கடனுக்குக் காப்பீடு எடுக்கிறீர்களா? உஷார்! உஷார்!

    எம் எஸ் லட்சுமணன்,
    காரைக்குடி

    வீட்டுக் கடன் வங்கியில் வாங்கப் போகிறீர்களா? மக்களே உஷார் ! உஷார்!

    பிராப்பர்டி இன்சூரன்ஸ் எடுக்கப் போகும் முன் கவனமாக இருங்கள் மக்களே !

    10 வருஷ லோனுக்கு 20 வருடம் பிரீமியம் கட்டும் அவலம் !

    விழிப்புணர்வுப் பதிவு

    நண்பர்களே சமீபத்தில் தேசிய மயமாக்கப்பட்ட மிகப் பெரிய  வங்கியில் வீட்டுக் கடன் பெற்றுள்ளேன். வீட்டுக்கடன் எனக்கு வட்டி அதிகமாக வருகிறது என்கிற காரணத்தினால் மற்றொரு தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கியில் லோன் மாற்றலாம் என்று முயற்சி செய்தேன். அங்குள்ள மேலாளர் என்னிடம் வீட்டுக் கடனுக்கான லோனை மாற்றும் பொழுது பிராப்பர்டி இன்சூரன்சையும் மாற்றித் தர வேண்டும் என்று கூறினார்.  பிராப்பர்டி இன்ஷூரன்ஸ் தொடர்பான தகவல்களை  எஸ்பிஐ வங்கியில் சென்று கேட்டேன்.

    முன்பே உங்களின் வீட்டிற்கு நகல் வந்திருக்கும் என்று தெரிவித்தார்கள். ஆனால் எனக்கு நகல் வரவில்லை என்று கூறினேன். ஒரு வாரம் என்னை அலைய விட்டு இரண்டு பக்க  நகல்கள் தந்தனர். அதனில் இன்சூரன்ஸ் அலுவலக இடத்தில் முகவரி மட்டுமே இருந்தது. தொடர்பு எண் எதுவுமே இல்லை. மீண்டும் இரண்டு பக்கங்களையும் நன்றாகப் படித்துவிட்டு அதில் உள்ள டோல் பிரீ எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன். இன்சூரன்ஸில் உள்ள, எனது முன்பு குடியிருந்த வீட்டின் முகவரியை  மாற்றுவதற்கு முயற்சி செய்தேன்.

    கஸ்டமர் கேரில் 30 நிமிடங்கள் கழித்துத் தான் தொடர்பு கிடைத்தது. அவர்களுக்கு என்னுடைய மெயில் ஐடி மெயில் பண்ணச் சொன்னார்கள். தகவலை ஏன் எனக்குக் காப்பி அனுப்பவில்லை என்று கேட்டேன். அதற்கு உங்களுடைய மெயில் ஐடி அப்டேட் செய்யப்படவில்லை,  மெயில் ஐடி அப்டேட்  செய்திருந்தால் அனுப்பி இருப்போம். கொரோனா காரணமாகத் தபாலில் அனுப்பவில்லை என்றும் தெரிவித்தார்கள் .அதன் தொடர்ச்சியாக பல மெயில்கள் அனுப்பிய பிறகு எனது முகவரி மாற்றப்பட்டது. மீண்டும் எனது பிராப்பர்ட்டி முகவரியும் தவறாக இருந்தது. அதனையும் மாற்ற, பல மெயில்கள் கொடுத்தோம். டோல் பிரீயில் 10 முறை தொடர்பு கொண்டு, விடா முயற்சி செய்து முகவரி மாற்றம் செய்துகொண்டேன்.

    இதற்காக எனக்கு எஸ்பிஐ கடன் பெற்ற வங்கியிலிருந்து எந்த விதமான உதவியும் இல்லாமல் இருந்தது. ஆனால் பிராப்பர்டி  இன்சுரன்ஸ் முழுவதுமே அந்த வங்கியின் வழியாகத்தான் செய்யப்பட்டிருந்தது. எனக்கு இன்சூரன்ஸ் தொடர்பான எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மீண்டும் நான் அறிந்துகொள்ள முயற்சி செய்தபோது வங்கியிலிருந்து எனக்குச் சரியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. மிகப்பெரிய எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகவரி மட்டுமே உள்ளது. தொடர்பு எண்கள் (டோல் பிரீ எண்கள் தவிர) எதுவுமே இல்லாதது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வங்கியைத்  தொடர்பு கொண்டால் மேலாளர் அவர்களோ, இன்சூரன்ஸ் நிறுவனத்தினரை டோல் பிரீ எண் வழியாகத்தான் தொடர்பு கொள்வோம்  என்று தெரிவிக்கிறார்கள். என்ன செய்வது மக்களை ஏமாற்றுவதற்குப் பல்வேறு வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். எனது இன்ஷூரன்ஸ் எடுத்துப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சி. நான் 10 ஆண்டுகள் மட்டுமே லோன் போட்டு உள்ளேன். ஆனால் 20 ஆண்டுகளுக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளார்கள். இதுகுறித்து மேலாளரிடம் கேட்ட போது, மீண்டும் சரியான தகவல் இல்லை.

    இது தொடர்பாக கடந்த ஒரு மாதமாக கஸ்டமர் கேருக்கு மெயில்  வழியாகவும், டோல் பிரீ எண் வழியாகவும் பலமுறை பேசிவிட்டேன். மெயில், டோல் பிரீ எனப் பல  போராட்டங்களுக்கு பிறகு வங்கியில் ஒருவர் இதற்கெனத் தனியாக ஏஜென்ட் போல் செயல்படுகிறார் என்ற தகவல் தெரிந்தது. அவர்களுக்கு குழு மேலாளர்  இருப்பதாகவும் அறிந்தேன். அவர்களுக்கு நோடல்  மேலாளர் திருச்சியில் இருப்பதாகவும் அறிந்தேன். இவர்கள் அனைவருக்கும் பலமுறை நான் மெயில்  போட்டு, என்னுடைய தகவலை  நானே பலமுறை டோல் பிரீ எண்ணில் கேட்ட பிறகுதான் தொடர்பிலேயே வருகிறார்கள். அதன் பிறகும் எனக்குச் சரியான தகவல் வழங்கப்படவில்லை.

    10 வருடம் லோன் போட்டு உள்ள எனக்கு 20 ஆண்டுகளுக்கு அவர்களது இன்சூரன்ஸ் செய்துள்ளார்கள். இது தவறு. 20 ஆண்டுகள் உள்ளதைப் பத்தாண்டுகளாக மாற்றிக் கொடுங்கள் என்றால், இல்லை அது முடியாது. நீங்கள் போட்ட பொழுது ஒரு ஸ்கீம் இருந்தது. இப்பொழுது ஒரு ஸ்கீம் இருக்கின்றது. எனவே மாற்ற முடியாது என்று தெரிவித்தார்கள். உங்கள் செயல்பாடு தவறானது, மாற்றிக் கொடுங்கள் என்று கேட்டேன். அப்பொழுது நீங்கள் இந்த பாலிசியை குளோஸ் செய்து கொள்ளுங்கள். மீண்டும் புதிதாக ஒரு பாலிசி எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்கள்.

    நானும் இது உங்களின் தவறு. நீங்கள் மாற்றிக்  கொடுங்கள் என்று கேட்டேன். இதற்காக என்னிடம் பலமுறை நான் ஈ மெயில் வழியாகவும், தொலைபேசி வழியாகவும் தொடர்பு கொண்ட பிறகு தோராயமாக ஒரு பதில் தருகிறார்கள். நீங்கள் தற்போது குளோஸ் செய்தால் 11,000 மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கிறார்கள். நான் அப்படி கேட்கவில்லை. 20 ஆண்டுகளை 10 ஆண்டுகளாக மாற்றிக்கொடுங்கள் என்றுதான். ஆனால் இதுவரை அவர்களிடமிருந்து முறையான பதில் இல்லை.

    எனவே நான்  தற்போது 20 ஆண்டுகள் போட்டுள்ளதால், 23 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி உள்ளேன். இது 10 ஆண்டுகள் என்றால் எனக்கு   11,000 அல்லது  12,000 தான்  வரும். ஆனால் அவர்கள் இதனை அதிகப்படியாக அவர்களாகவே முடிவு செய்து போட்டுள்ளார்கள். இது குறித்துப் பலமுறை கஸ்டமர் கேரில் தொடர்பு கொண்டோம். எனக்கு இதுவரை சரியான தகவல் கிடைக்கப் பெறவில்லை. எனவே வீட்டுக் கடனுக்கு இன்சூரன்ஸ் செலுத்தும் போது மிக கவனமாக இருங்கள். வீட்டுக் கடன் பெறும் பொழுது பணம் கொடுக்கும் நிலையில் அவர்களை –  மேலாளர்களை நாம் கடவுளாக நினைக்கின்றோம். எனவே அவர்கள் அதனை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு இஷ்டப்பட்ட இடத்தில் நம்மிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு அவர்களாக முடிவுகளை எடுத்துக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் நமது தலையில் மிளகாய் அரைப்பதற்குத் தயாராக இருக்கின்றனர்.

    எனவே நண்பர்களே, டோல் ப்ரீ என்னை நான் தொடர்பு கொள்ளும்பொழுது 30 நிமிடத்திற்கு மேலாக ஆகின்றது. ஆனால் அவர்களோ ஒரு நிமிடத்தில் நம்மைத் தொடர்பு கொண்டு விடுகிறார்கள். இதுவும் வருத்தமான விஷயம்தான். எனவே நண்பர்களே வீட்டுக் கடன் வாங்கும்போது பிராப்பர்டி இன்சூரன்ஸ் தொடர்பாகத் தெளிவான தகவல்களைக் கேட்டு கொள்ளுங்கள். எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் அவர்கள் உங்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துத் தர உள்ளார்கள்? அது எத்தனை ஆண்டுகளுக்கு எடுக்கின்றார்கள்? எவ்வளவு பிரீமியம்?

    ஏனென்றால் எனது நண்பர்கள் இருவர் இதே எஸ்பிஐயில் லோன் வாங்கி, கட்டி முடிக்கும் பொழுது பிராப்பர்டி இன்சூரன்ஸ்க்குப் பல ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டார்கள் என்று தெரிவித்தார்கள். எனவே உங்களது பணம் உங்களது கையில்தான் இருக்க வேண்டும்.  இதில் கொஞ்சம் ஆர்வம் எடுத்து உங்களைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். இதுவரை நீங்கள் இன்சூரன்ஸ் என்ன போடப்பட்டு இருக்கிறது என்று தெரிந்துகொள்ளவில்லை என்றால்  வங்கிக்குச் சென்று உங்களது இன்சூரன்சுக்கான சரியான நகலைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது தொடர்பான தகவலைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

    இந்தப் பதிவை நான் தரும் நிலையிலும் எனக்கு இதுவரை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து முழுமையான பதில் இல்லை. நான் அடுத்த கட்டத்துக்கு இதனைக் கொண்டு சென்று முழுமையான பதில் பெறுவேன் என்பதில் உறுதியாக உள்ளேன். இந்தப் பதிவு முழுவதுமாக விழிப்புணர்வுக்கான பதிவு.

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 13

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 13

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    கவிஞர் திரு. விக்டர் தாஸ் அவர்கள் தன் பாசத்தந்தை மறைந்தபொழுது தாளின்மேல் கோல்கொண்டு எழுதாது தரையின் மேல் விழுந்து வாய்விட்டு அரற்றிய வெண்பாக்களைப் பற்றிய ஒரு கண்ணீர்ப் பார்வை

    ‘தந்தைக்கு அழுத தமிழ்’

    முன்னுரை

    திறனாய்வுகளால் அல்லது உரைகளால் சிறக்கும் மூலங்கள் உண்டு. மூலங்களைத் திறனாய்வு செய்யும் பேறு அல்லது உரையெழுதும் பேறு சில உரைகளுக்கு அமைவதும் உண்டு. முன்னதற்கு வியாக்கியான சக்கரவர்த்தி பெரியவாச்சான்பிள்ளையின் பாசுர உரையால் சிறப்படைந்த நாலாயிர திவ்வியப் பிரபந்தமும் பின்னதற்குத் திருக்குறளுக்குப் பரிமேலழகர் செய்த உரையும் எடுத்துக்காட்டுக்களாகும். தம்பி விக்டர் தாஸ் அவர்களின் கண்ணீர் வெண்பாக்களைத் திறனாய்வு செய்ய இயலாத நிலையில் அவை கொட்டப்பட்ட சூழலையும் கொட்டிய முறையையும் கருத்திற்கொண்டு கொட்டப்பட்டவைகளில் கிடக்கும் கண்ணீர் முத்துக்களைக் கைகளில் அள்ளிக் காட்சிப்படுத்தும் எண்ணத்தின் விளைவே இந்தக் கட்டுரை. செத்துப் போன கவிதைகளுக்குப் பரிசுகளையும் விருதுகளையும் அளித்துத் தாமும் தவணை முறையில் செத்துக் கொண்டு மரத்துப்போன சில அமைப்புக்கள் நிறைந்த இந்தத் தமிழகத்தில் உயிரிழந்த தன் பாசத் தந்தைக்கு உயிர்ப்போடு வைத்த ஒப்பாரியின் மூலம் தமிழ்க்கவிதை உலகிற்குப் புதிய தடம் காட்டியிருக்கிறார் விக்டர். அதனை அதன் உச்சத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியில் தனிப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். மரபுக்கவிதை பற்றிக் குழப்பத்துக்குள் குடும்பம் நடத்திக் கொண்டு  வேகாத சொற்களையெல்லாம் வெண்பா என்று எழுதி வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுகிறவர்கள் பலரும் நின்று நிதானித்து விக்டரை ஆசிரியராகக் கொள்வது நேரிசை வெண்பாவின் ஆயுளை நீட்டிக்கச் செய்யும் அவசர கால வழியாகலாம்.

    அவலமே அணியாக்கிய விக்டர்

    ‘தனிமனிதச் சோகத்தையே தனியொரு கவிதைப் பொருளாக்க  முடியும்’ என்ற வியப்பான இலக்கிய உள்ளடக்கக் கோட்பாட்டைக் கண்ணதாசனிடமிருந்து நான் கற்றேன். அவலத்தை இலக்கியச் சுவைகளில் ஒன்றாக நான் படித்திருக்கிறேன். ஆனால் அவலத்தையே இலக்கியமாக்கிய வித்தையை நாட்டுப்புறப்பாடல்களில், நல்லதங்காள் கதைப் பகுதிகளில் அண்ணன்மார் கதையில், நான் உணர்ந்தது உண்டு. அவற்றின் தொடர்ச்சியாகச் சோகத்தைச் சுகமாக அருந்தியது கண்ணதாசன் பாடல்களில்தாம். எந்தப் பொருளைப் பற்றிப் பாடியிருக்கிறார் என்ற தெளிவில்லாதவர் கூட அவர் பாடாத பொருளில்லையோ என்னும் மயக்கத்திற்காளாவது இயல்பு. கள்ளம் கபடமற்ற அவருடைய மனம், இழுத்த இழுவைக்கு அவரோடு ஊடாது ஒட்டிக் கொள்ளும் தமிழ் இந்த இரண்டுமே அவருடைய இமாலய வெற்றிக்குக் காரணம். அத்தகைய கண்ணதாசனின் ஒட்டுமொத்த கவிதைச் சோகத்தைப் பாவலர் விக்டர்தாஸ் அவர்கள் கொட்டிய இந்த எழுபத்தாறு முகநூல் வெண்பா முத்துக்களைக் கண்ணுற நேர்ந்தபோது நான் முழுமையாக உணர்ந்து கொண்டேன். அந்த அனுபவத்தை என் மொழியில் நான் இங்கே பதிவு செய்ய முயல்கிறேன்!

    ‘நேர்ந்தது’ ஒரு சொல்லாய்வு

    சென்ற பத்தியில் வெண்பா முத்துக்களைக் கண்ணுற நேர்ந்தது என நான் எழுதியது இலக்கண நெறிப்படி தவறு. அரியவற்றைக் காணும் பேறு பெற்றேன் என்று எழுத வேண்டும். தாஸ் அவர்களின் வெண்பாக்களைப் பற்றிய இலக்கிய மதிப்பீட்டை நான் பதிவுசெய்கிறபோது ‘காணும் வாய்ப்பினைப் பெற்றேன்’ என்றுதான் எழுத வேண்டும். ‘நேர்தல்’ என்பது தவிர்க்கப்பட வேண்டியது. ‘வாய்ப்பு’ என்பது பெறப்பட வேண்டியது. நான் தந்தை பெரியாரைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன் என்று எழுத வேண்டுமே தவிர நான் தந்தை பெரியாரைக் கண்ணுற நேர்ந்தது என்று எழுதக்கூடாது. அது நெறியன்று. ‘காண’ என்னும் எச்சம் கண்ணுக்கானது. கண்ணுற என்னும் எச்சம் பொருளுக்கானது. காணக்கூடாதது கண்ணில் பட்டால் கண்ணுறுதல்! காணக்கிட்டாதது கண்ணில் படுமானால் அது காணும் வாய்ப்பு! இவ்வளவும் தெரிந்த நான் தாஸ் அவர்களின் வெண்பாக்களைக் ‘காண நேர்ந்தது’ என்று எழுதுவானேன்? ஒன்றுமில்லை. அவற்றை நான் படித்த பிறகு சில நாள்கள் தூங்கவில்லை என்பதுதான் சத்தியம். என் உறக்கத்தைக் கெடுத்த வெண்பாக்கள் அவை. என் நிம்மதியைக் கெடுத்த வெண்பாக்கள் அவை! அண்மையில் ஒரு திங்கள் திருச்சிராப்பள்ளி அப்பல்லோ மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டிருந்த போது என் மனைவி, பிள்ளைகள், மருமகள்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோர் என்னை அருகிருந்து கவனித்துக் கொண்டனர். அந்த மருத்துவமனைச் சூழலில் மனரீதியாக நான் வாழ்ந்திருந்தது இந்த வெண்பாக்களோடுதான்!  எனவேதான் இறக்கக்கூடாதவர் இறந்து போனால் என்ன சோகமோ அதனையே இந்த வெண்பாக்களைப் படித்த போது நான் உணர்ந்தேன்! கவிதையின் காரியம் கண்ணீர் என்பது இலக்கியத்தின் உச்சம்! அந்த உச்சத்தைத் தாள் இல்லாமல், தூவல் இல்லாமல் எழுதியிருக்கிறார் இல்லை கொட்டியிருக்கிறார் விக்டர் தாஸ் அவர்கள்! தந்தையை இழந்த அவருடைய துன்பத்தில் பங்கு கொள்வதுதான் இந்த வெண்பாக்களுக்கு நான் செலுத்தும் நன்றி என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

    வெண்பா உரிச்சீர் காய்ச்சீரா? கண்ணீரா?

    இப்படியொரு வெண்பா இலக்கியத்தைத் தமிழிலக்கிய உலகமோ கவிதை உலகமோ கண்டதும் இல்லை. கேட்டதும் இல்லை. தந்தையும் தாயும் கொரானா மரணப்படுக்கையில் அச்சமின்றிப் பெற்றோருக்கான கடனை மகன் செய்கிறான். தந்தையை எப்படியும் காப்பாற்றிவிடலாம் என்று நம்பிக்கையுடன் மரணத்தோடு மல்லுக்கட்டுகிறான். சாவோடு சண்டையிடுகிறான். வெல்ல முடியாத பகை மரணம் என்பது அவனுக்குத் தெரியும். இருந்தும் தந்தைக்காக, அவர் காட்டிய பாசத்துக்காக, ஊட்டிய அறிவுக்காக அவரைக் காக்கப் போராடுகிறான். போராடியவன் வீரன் என்பதால் வெற்றிகரமாகத் தோற்கிறான்.

    இலக்கணம் இல்லாமல் பெண்கள் வைக்கும் ஒப்பாரியில் இலக்கியம் குடியமர்ந்து கொள்ளும். இலக்கணப் புலவர்கள் சொல்லும் கவிதையில் இலக்கியம் வாழாவெட்டியாகிவிடும். தந்தையை இழந்த விக்டர் தாஸ் தன் மனக்குமுறலை மொழியில் இறக்கி வைக்கிறார். இதயத்துக் கண்ணீரை எழுத்தாக்கிவிடும்போது எந்தப் பாரமும் குறைந்துவிடும் என்பது அவர் அறிந்த தத்துவம்! ஆனால் இறக்கி வைத்த சுமைதாங்கிக் கல் வெண்பா! அதுவும் நேரிசை வெண்பா. பதினான்கு இடங்களில் தளைகள் சரியாக அமைதல் வேண்டும். யாப்புச் சர்வாதிகாரிக்குப் பிறந்த பேரழகி வெண்பா! விக்டர் தாஸின் தந்தையைப் போலவே வெண்பாவும் கண்டிப்பானது!. அதனால்தான் தன் கண்ணீரை வெண்பாவில் சேர்த்து வைத்திருக்கிறார்.

    சீர்களை இறவாணத்தில் தேடுகிற எவனும் இலக்கிய ஆக்கத்தில் வெற்றி பெற முடியாது. ஏற்கனவே இதயத்தில் இருந்த சீர்களைக் கண்ணீரில் இறக்கிவைத்தவர் விக்டர் தாஸ். தமிழ்க்கவிதையின் பெருமை கூடியிருக்கிறது. தாளோடு கோலோடு எழுதப்படுகிற வெண்பாக்களில் ஓராயிரம் ஓட்டைகள். கண்ணதாசனைப் போலக் கொட்டிய பாடல்களில் யாப்பு கோலோச்சுகிறது. உருவகங்கள் என்ன? உவமங்கள் என்ன? வழக்குச் சொற்கள் என்ன? வாழ்க்கைத் தத்துவங்கள் என்ன? அவலச் சுவை என்ன? அழுகையின் ஆலாபனை என்ன? உணர்வுகளும் உணர்ச்சிகளும் கைகோத்துக் கொண்டு செல்லும் ஊர்வல நேர்த்தி என்ன? அடடா!

    விக்டர்தாஸின் வெற்றி

    படைப்போடு கலந்து விடுகிற எவனும் படைப்பாளனை மறந்துவிடுகிறான். அது சரியே. ஆனால் விக்டர்தாஸின் இந்தப் புலம்பலைப் படிக்கிறபோது அவரை ஒதுக்கிவைத்துவிட்டுப் படிக்க இயலவில்லை. ‘வெண்பாவிற் புகழேந்தி’ என்பது ஒரு கல்வெட்டுச் செய்தியாக மாறிக் காலம் பல ஆகிவிட்டது. புகழேந்தியைப் புறங்கொண்ட வெண்பாக்களும் வெண்பாக்களால் ஆக்கப்பட்ட நுல்களும் தமிழில் எண்ணற்றன. புறப்பொருள் வெண்பாமாலையின் வெண்பாக்களோடு போராடுவதற்கு நளவெண்பாக்கள் தனிப்பயிற்சி எடுக்க வேண்டும். இந்த உண்மை ‘வெண்பாவிற் புகழேந்தி’ என்னும் பாடற்குறிப்புப் பேர்வழிகளுக்குத் தெரியாது. காளமேகம் உட்படப் பெரும்புலவர்கள் எழுதிய தனியன்கள் நேரிசை வெண்பாக்களைப் பெண்கள் விளையாடும் கூழாங்கற்களாக்கியிருக்கின்றன. சோமேசர் முதுமொழி வெண்பா திருக்குறள் விளக்கக் கதைகளையும் கருத்துக்களையும் விளங்குகிறது என்றால் பாவேந்தரின் மணிமேகலை வெண்பா இன்னொரு புரட்சி செய்திருக்கிறது. கரூர் புலவர் குழந்தையும் கடவூர் மணிமாறனும் வெண்பா நானூறு என்பதுபோலத் தனி நூல்களையே வெளியிட்டு இருக்கிறார்கள். வலங்கை வேல்முருகனுக்குக் காலைக் குளியலே வெண்பாக் குளத்தில்தான்!. இவற்றை விட இன்னொன்றும் சொல்ல வேண்டும். மாதவரம் பால் பண்ணையில் பால்கோவா தயாரிக்கிறார்கள். பக்கத்தில் இருக்கும் கவிக்கோவின் பண்ணைவீட்டில் பால்கோவாவைப் ‘பா’கோவாக மாற்றி நாளும் பரிமாறிக் கொண்டிருக்கிறான் தம்பி வசந்தராசன்! இரண்டுமே பண்ணையில் தயாரிப்பதால் இனிப்பில் விஞ்சி நிற்பது எது? என அடிக்கடி பட்டிமன்றம் நடப்பதாகவும் தகவல். ஆனால் இத்தனையும் உட்கார்ந்து எழுதியவை என்பதை மறக்கக்கூடாது. மாமுன் நிரையா? காய்முன் நேரா? விளம் முன் நேரா? என்று ஒவ்வொரு சீராகப் பதம்பார்த்துச் செய்யப்பட்ட கட்டடப் பணியாகத்தான் நடந்திருக்கிறது. காரணம் இவற்றுள் எதுவும் வாய்மொழியாகச் சொல்லப்பட்டதில்லை. தம்பி விக்டர்தாஸ் கொட்டியிருக்கிறார், குமுறியிருக்கிறார். அவர் கொட்டியதை அன்பர் ஒருவர் அள்ளியிருக்கிறார். வெண்பாக்களாக அவர் கைகளில் வந்திருக்கின்றன. கண்ணீர் கவிதையாக மாறிய விந்தையான தருணம் அது! புகழேந்தி பூரித்துத் தன் தோல்வியை ஒத்துக் கொண்டு தன் தனையனை உச்சி மோந்தத் தருணமும் அதுதான்!

    நேரிசை வெண்பாவின் நதிமூலம்

    பொதுவாக நான் எழுதும் இலக்கியம் (பெரும்பாலும் கவிதை) பற்றிய திறனாய்வுகளில் கவிதைகளின் வடிவம் பற்றிய தெளிவினை இயன்றவரைச் சுருக்கமாகப் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். காரணம் முகநூல் அன்பர்கள் பலரும் தவறாக யாப்பிலக்கணம் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அவர்கள் பதிவிலிருந்தும் பின்னூட்டங்களுக்குத் தரும் புலமை குறைவான பொறுப்பற்ற பதிலுரைகளிலிருந்தும் தெரிந்து கொள்ள முடிந்தது. தம்பி விக்டர் தாஸ் அவர்களின் புலம்பலை அசைபிரித்து ஆராய்வதற்கு முன்னால் நேரிசை வெண்பா பற்றிய ஒரு தெளிவினைத் தருவது எனது கடமையாகிறது. வடிவம் பற்றிய தெளிவு இல்லாவிடின் திறனாய்வு முழுமை பெறாது என்பது என் பணிவான கருத்து.

    என்னுடைய யாப்பறி புலமை, ஆராய்ச்சி எல்லாம் அமிதசாகரர் என்னும் பெருமகனார் எழுதிய யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கண நூலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. அவரே எழுதிய யாப்பருங்கலமோ தொல்காப்பியச் செய்யுளியலோ எனக்குத் தெரியாது. காரிகையில் நேரிசை வெண்பா என்ற சொல்லே இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ் யாப்பிலக்கணத்தில் பாக்களைப் பற்றிய கட்டுமானத்தைப் பற்றிய புலமை பெறுவது மிகவும் எளியது. குறள் வெண்பா என்ற ஒரு பாட்டுக்குத்தான் இலக்கணம் இருக்கிறது. மற்றவையெல்லாம் அதனுடைய விரிவே! சாயலே!

    நேரிசை வெண்பா என்பது 24 டயர்கள் கொண்ட டிரெய்லர் வண்டி போன்றதாகவே காரிகை கருதுகிறது. அதற்கு நேரிசை வெண்பா எனப் பெயரிடாது இருகுறள் நேரிசை வெண்பா என்றுதான் பெயரிட்டிருக்கிறது. இரண்டு குறட்பாக்களின் அர்த்தநாரீஸ்வரர் வடிவந்தான் ஒரு நேரிசை வெண்பா என்பது அமிதசாகரர் கருத்து. இரண்டு குறள்வெண்பாக்களை இணைக்கிறபோது முதல் வெண்பாவின் ஈற்றுச்சீரினைத் தொடர்ந்து தனிச்சொல் ஒன்று வரவேண்டும். ஈற்றுச் சீருக்கும் தனிச்சொல்லுக்கும் தளை இசைவு இருக்க வேண்டும். அதுபோலவே தனிச்சொல்லுக்கும் மூன்றாவது அடியின் முதற்சீருக்கும் தளை இசைவு இருக்க வேண்டும்.

    குறட்பா இரண்டாய், ஆயிடைக்கண்
    சீரியவான் தனிச்சொல் அடி மூய்ச் செப்பலோசை குன்றாது
    ஓரிரண்டாயும் ஒரு விகற்பாயும் வருவதுண்டேல்
    நேரிசையாகும்

    என்பது காரிகைப் பகுதி. சுருங்கச் சொன்னால் கட்டடத்துக்குக் கான்கிரீட் போடுகிற நாளில் வரும் கலவை இயந்திரமாகவே அந்நாளில் நேரிசை வெண்பா கருதப்பட்டிருக்கிறது. ஆனால் வரலாறு வேறாக இருக்கிறது.

    இரண்டு குறள் வெண்பாக்களை இணைக்கும் வேலை இல்லாமலேயே சங்க இலக்கியங்களின் பிற்பகுதியில் நேரிசை வெண்பாக்கள் அமைந்துள்ளன. இவை தனிச்சொல் என்ற அளவில் இல்லாமல் முழுமையான வெண்பாவின் ஒரு சீராகவே அமைந்திருக்கிறது. இது ஆய்வுக்குரியது. அதாவது இரண்டு குறள் வெண்பாக்களை இணைக்கிறபோதுதான் தனிச்சொல் முதலடியின் முதற்சீருக்கு ஏற்ப அமைய வேண்டும் என்பது. இவ்வாறு ஈரலகாக  அன்றி ஒரே அலகாக அமைகிறபோது ‘தனிச்சொல்’ என்னும் சொற் பயன்பாடு வலுவிழக்கிறது. நேரிசை வெண்பாவின் இரண்டாவது அளவடியாகவே அது கருதப்பட வேண்டும். இன்னும் நுட்பமாக நோக்கினால் வெண்பாவைப் பற்றிய இலக்கணத் தெளிவு இல்லாத காலத்திலேயே முழுமையான நேரிசை வெண்பாக்கள் எழுதப்பட்டுள்ளன.

    திருமுருகாற்றுப்படையில் நேரிசை வெண்பா

    பத்துப்பாட்டின் தலைப்பாட்டான திருமுருகாற்றுப்படையின் இறுதியில் நேரிசை வெண்பாக்களால் அமைக்கப்பட்ட முருகன் துதி பத்துப்பாடல்களால் அமைந்துள்ளன. ஆய்வாளர்களில் பிற்காலத்தில் இது சேர்க்கப்பட்டிருக்கலாம் என்னும் கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். அவற்றுள் ஒரு வெண்பா இப்படி அமைந்திருக்கிறது.

    உன்னை யொழிய ஒருவரையும் நம்புகிலேன்
    பின்னை யொருவரையான் பின்செல்லேன்பன்னிருகை
    கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
    வேலப்பா செந்தில் வாழ்வே

    பாட்டை ஒரு முறை நோக்குவார்க்கும் இது ஓரலகாகப் பாடப்பட்டுள்ளது என்பதை உணர்வர். ‘பன்னிருகை’ என்பது ஈரடிகளை ஒட்ட வந்த பசையாகிய தனிச்சொல் அல்ல. அது கோலப்பனின் அழகடை!. நம் விவாதம் இருகுறள் இணைப்பே நேரிசை வெண்பா என்னும் கருத்தியல் ஒழிந்து விட்டது என்பதுதான். அது தொடக்கநிலை யாப்பறிக் கல்வியாக இருந்திருக்கலாம். தற்காலம் உட்பட எந்தக் காலத்திலும் அதாவது வெண்பா கோலோச்சிய தனிப்பாடல் காலம் வரை இணைப்பு என்பதே இல்லை என்பதுதான். இது இப்படியிருக்க ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் ஒவ்வொரு காதையின் இறுதியிலும் ஒரு நேரிசை வெண்பா இடம் பெற்றுள்ளது. அவற்றையும் பின்னால் வந்தவர்கள் சேர்த்திருக்கலாம். ஆனால் அப்படிச் சேர்த்தவர்கள் காரிகைக்கு முன்போ பின்போ இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் தனிச்சொல் பயன்பாட்டைப் புறக்கணித்து ஓரலகாகவே எழுதியுள்ளனர் என்பது தெளிவாவது போல அந்த வெண்பாக்கள் அமைந்துள்ளன.

    மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
    கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்வையைக்கோன்
    கண்டளவே தோற்றான் அக்காரிகைதன் சொற்செவியில்
    உண்டளவே தோற்றான் உயிர்

    என்று அமைந்துள்ள நேரிசை வெண்பா காரிகை இலக்கணத்தின் இணைப்புப் பணிக்கு ஆட்படாது தனித்தன்மையுடைய அரிய நேரிசை வெண்பாவாக அமைந்துள்ளதைக் காணலாம். ‘வையைக்கோன்’ என்பது தனிச்சொல்லா? காண்டலின் வினைமுதலா?

    மேற்கண்ட தரவுகளிலிருந்து ‘இரண்டு குறள் வெண்பாக்களைப் தட்டான் பாணியில் பழுது பார்த்து பற்ற வைத்து இணைத்து ஒரு நேரிசை வெண்பாவை அமைக்கின்ற காலக்கட்டத்திலிருந்து தமிழியல் யாப்புலகம் விலகிப் பல நூற்றாண்டுக் காலம் ஆகிவிட்டது என்பதுதான். இந்த நெறியைத்தான் தம்பி விக்டர்தாஸ் பின்பற்றிக் கண்ணீரோடு கலந்து வெண்பாக்களைக் கொட்டியிருக்கிறார்.  தந்தை மாண்டு சவப்பெட்டியில் துயில்கிறபோது தளை பார்த்து எழுதுகிறவன் மகனும் அல்லன் அவன் கவிஞனும் அல்லன். உணர்ச்சியின் கொந்தளிப்பில் கொட்டப்படுகிற பாட்டில் யாப்பு தானாக வந்து அமையும் என்னும் தமிழியல் யாப்பிலக்கணக் கோட்பாடு தம்பி விகடர்தாஸ் அவர்களின் கண்ணீர் வெண்பாக்களால் மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கண்ணீரில் மிதக்கும் கற்பனை

    தங்குதடையின்றி நுங்கும் நுரையுமாகப் பொங்கிவருவதே கவிதை என்பார்கள். அதற்கு ஓர் இலக்கிய எடுத்துக்காட்டு தேவை என்றால் தம்பி விக்டர்தாஸின் இந்த வெண்பாக்களுக்கு இணையாக வேறு இலக்கியம் இருக்குமென்று என்னால் நம்ப முடியவில்லை. இழந்து அரற்றியவள் கண்ணகி. இருந்தும் அரற்றியவள் சீதை. ஐந்து பேர் இருந்தும் அரற்றியவள் பாஞ்சாலி! அந்த அரற்றல்களையெல்லாம் அமைதியாக்கிச் சுனாமியாய்க் கொந்தளித்துக் கொட்டும் தாஸின் வெண்பாக்களில் கற்பனை தானாக வந்து அமர்ந்து கொள்கிறது.

    உடம்பு தாழ்வாகவும் உயிர் உயர்வாகவும் பேசப்படுவதே தமிழ்க்கவிதை மரபு. உடம்பை ‘ஒன்பது வாய்த்தோல்பை’ என்பார் பட்டினத்தடிகள். ஆனால் விக்டர்தாஸின் புலம்பலில் இது மாபெரும் புரட்சிக்கு ஆளாகிறது. தமிழில் உடம்பின் பெருமையை உணர்ந்து பாடிய முதல் கவிஞர் திருமூலர்.

    உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே

    என்று பாடுகிறார். உடம்பின்றி ஞானம் பெற இயலாது என்பது அவர் கருத்தாதலின் உடம்பின் இன்றியமையாமையை நுட்பமாகப் பாடிப் பதிவுசெய்திருக்கிறார். உயிருக்கும் உடம்புக்கும் ஒரே அளவான மதிப்பினைத்தான் திருமூலர் தந்திருக்கிறார் என்பதை மிக எளிதில் புரிந்து கொள்ளலாம். அதாவது தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்த உடம்பினைத் திருமூலர் இரண்டாவது வரிசைக்குக் கொண்டு வந்திருக்கிறார். தம்பி விக்டர் தாஸ் தன்னுடைய புலம்பலில் உடம்பு உயிரினும் மேலானது என்ற தர்க்கத்தை முன்னெடுக்கிறார். என்னைப் பொருத்தவரையில் இது தமிழ்க்கவிதை உலகின் சிந்தனைப் புரட்சி என்பதில் ஐயமில்லை.

    கூடுவிட்டு நன்றியற்று கூண்டோடு கொன்று விட்டு
    கேடுகெட்ட ஆவி போச்சே கீறிவிட்டுப்!பாடுபட்ட
    மெய்யோ அனாதையாய் வெந்த பராரியாய்!
    அய்யோ உயிரே! வந்(து) ஆற்று.

    சட்டை கழற்றுதல் போல் சட்டென்று அவிழ்த்ததேன்
    முட்டாள் உயிர்ப் பறவை? மொத்தமாய்க்கட்டையை
    விட்டுவிட்(டு) ஏன் போச்சோ? விறகென்(று) உடல் ஆச்சோ?
    கெட்ட உயிர்தான் எங் கே.

    பாடாய்ப் படுத்திவிட்டே பாழாய்க் கிடத்திவிட்டே
    ஓடாய் உடைத்துவிட்டே ஓடியதேகேடான
    நன்றிகெட்ட ஆவியது நச்சுவகைச் சாதியது
    மண் இரையாய் மெய் போச்சே மாய்ந்து!”

    வம்பாய் வலிபட்டு வாழ்ந்த உடல் கெட்டு
    தெம்பு திறன் அற்று சீவனிற்(று)-அம்பலத்தில்
    மெய் கிடக்க, ஆவி எங்கே? மேய்ந்த உயிர்ப் பாவி எங்கே?
    கைவிட்டுப் போனதே காற்று.!”

    ‘உடலுக்கு உயிர் காவல்’ என்று எழுதினார் கண்ணதாசன். நம்முடைய தாஸ் உயிருக்கு உடல் காவல் என்று கற்பனை செய்கிறார். இந்தக் கற்பனை சுவையானது என்பதைவிடத் தத்துவச் சாரம் கொண்டது. உண்மையில் கவிஞர் உயிரைத் தாழ்வாக எண்ணவில்லை. உயர்வாகத்தான் எண்ணியிருக்கிறார் ‘உடம்பை வாழவிடாமல் உயிர் சென்றது நியாயமா?’ என்பதுதான் அவர் ஆதங்கம். இயக்குவது உயிர் என்பதும் இயங்குவது உடல் என்பதும் தாஸ் அறியாததா? இயக்கிய உயிர் போனதற்கான தமது ஏமாற்றத்தை உடலைக் கைவிட்டு உயிர் போனதாகக் கற்பனை செய்கிறார். காரணம் அழியக் கூடிய தந்தை உடம்பு கிடக்கிறது. அழியாத உயிர் ஓடிவிடுகிறது. கிடக்கிற உடம்புக்கு அழுகை எதற்காக? இங்கேதான் மணிமேகலை சொன்ன தத்துவம் நினைவுக்கு வருகிறது. எதற்கு மானுடம் அழுகிறது? உடலுக்கா? உயிருக்கா? இந்த வினாவுக்கு மணிமேகலை சொன்னதைத்தான் தனக்கே உரிய உத்திச்சிறப்பினால் கற்பனையாக்குகிறார் தாஸ்.

    உடற்கு அழுதனையோ உயிர்க்கு அழுதனையோ
    உடற்கு அழுதனையேல் உன்மகன் தன்னை
    எடுத்துப் புறங்காட்டில் இட்டனர் யாரே?
    உயிர்க்கு அழுதனையேல் உயிர்புகும் புக்கில்
    செயப்பாட்டு வினையால் தெரிந்துணர்வு அரியது
    அவ்வுயிர்க்கு அன்பினை யாயின்

    நாவலர் நாட்டார் அவர்களின் உரைகண்டு இப்பகுதிக்கு உரை தெளியலாம். எங்கிருந்தாலும் தனக்கு அழிவில்லை என்று தெரிந்தும், தான் பிரிந்துவிட்டால் உடல் நாற்றமெடுத்து அழியும் என்பது அறிந்தும் இந்நாள் வரை இருந்த பழக்கத்தை மறந்து உடம்பை அனாதையாய் விட்டுப் போன உயிர்கண்டு புலம்பிய கற்பனை புதியது! சிறந்தது!

    உறவாடி கெடுத்த உயிர்

    தாஸின் புலம்பல் பாக்கள் அனைத்தும் கண்ணீர் மூலம். உயிரைக் கட்டிவைக்க முடியாமற் போனதே! கைதிபோலக் கால்விலங்கு பூட்ட முடியாமல் போயிற்றே! சில நொடிவரை இந்த உடம்போடு அது ஆடிய ஆட்டத்தை அப்படியே மறந்ததே! பறந்ததே!

    கட்டிவைக்க மாட்டாமல் கால் விலங்கு பூட்டாமல்
    கொட்டமிட்ட ஆவி போச்சே கூறாமல் திட்டமிட்டே
    மெய்க்கூட்டைக் கேளாமல்மேல் பறந்தாய் வாழாமல்
    பொய் உயிர்மெய் என்றுணர்ந்தேன் போ.

    மிக இலாவகமாகச் சொற்கள் விழுந்திருக்கின்றன. உடம்பு ‘மெய்க்கூடாம்’ நாம் இதுவரை உடம்பைப் ‘பொய்க்கூடு’ என்றும் ‘ஒன்பது வாய் மலக்கூடு’ என்றுமே அறிந்திருக்கிறோம். ‘மெய்க்கூடு’ என்றால் இரட்டுற மொழிதலால் மெய்யாகிய கூடு என்பதுமாம். உயிரும் உடம்பும் சம மதிப்புடையன எனினும் உடல் அழியும் தன்மையது. உயிர் அழியாதது. உடம்பின்றி உயிர் இயங்க முடியுமா என்றால் அது உறுதியாக முடியாது. நன்றி கொன்ற பாவத்தைச் செய்த உயிரைப் பொய் என்று உணர்ந்தாராம். கிடக்கின்ற உடம்பை மெய் என்று அறிந்தாராம். ‘படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரையா’ என்று கண்ணதாசன் சொல்லியது இதுதான்! சொல் புதிது சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை என்பதும் இதுதான்! எப்படி? அழியாத உயிரை மெய் என்றும் அழிகின்ற உடம்பை மெய்யென்றும் உணர்வதுதான் ஞானம். ‘காயமே இது பொய்யடா’ என்பது மரபு. அந்த மரபு தானாகத் தன் சட்டையைக் கழற்றிக் கொள்கிறது. உயிரைப் பொய் என்று உணர்வதும் உடம்பை மெய் என்று உணர்வதும் தாஸின் அரிய ஞானம். இது என்னுடைய பார்வை!

    சாவு செய்த தவம்

    ‘விடியும் விடியும் என்றிருந்தேன் அது முடியும் பொழுதாய் விடிந்ததடா’ என்பார் கண்ணதாசன். தந்தை எப்படியும் பிழைத்துக் கொள்வார் என்று தனையன் எதிர்பார்க்க அவனை ஏமாற்றித் தான் செய்த தவத்திற்கான வரமாய் அந்தத் தந்தையைச் சாவு காவு கொண்டதோ என்பதே தாஸின் வேதனை.

    விடியும் என்றேதான் விழிபார்த் திருந்தேன்
    முடியும் என்றா நான் முயன்றேன் ஒடிந்ததேன்
    வானளந்த காலமரம்? வாழ்வுதந்த ஞானவரம்?
    தானமாய் வாங்கியதேன் சாவு?”

    “வானளந்த காலமரம் ஒடிந்ததாம்” எவ்வளவு ஆழமான கற்பனை? சாவு தவம் செய்ததாம்! எந்த வரத்தைப் பெறுவதற்காக? தாஸ் அவர்களுக்கு ஞானவரமாக இருந்த அவருடைய தந்தையைத் தானமாகப் பெறுவதற்காக!. சாவு தவம் செய்த கதை தாஸ் சொல்லித்தான் நமக்குத் தெரிய வருகிறது. சாவுக்குச் சாபம் கொடுத்த கண்ணதாசனைத்தான் தமிழ்க்கவிதை உலகம் இதுவரை அறிந்திருக்கிறது. தேர்ந்தெடுத்த மரணங்களுக்காகச் சாவு தவம் செய்வதை இப்போதுதான் பார்க்கிறது. சாவும் தவம் செய்யும் என்னும் கற்பனை கற்பனையின் உச்சம்!

    உணர்ச்சிக் கொந்தளிப்பு

    ‘அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயன்’ என்பது தமிழிலக்கியக் கொள்கையாதலின் கவிதைக்கும் அதுவே கொள்கையாயிற்று.  இக்கொள்கை வெற்றிபெற வேண்டுமாயின் படைப்பின் உள்ளடக்கம் கருத்துக்களோடு பரிணமிக்க வேண்டும். கவிதை உட்பட அனைத்துப் படைப்புக்களுக்கும் கருத்துக்களாகிய உள்ளடக்கமே தலை. இது தமிழ்க்கவிதைக் கொள்கை. ஆனால் இலக்கியத் திறனாய்வு என்னவோ கி.பி. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தமிழுக்கு அறிமுகமானதுபோல்  எண்ணிக் கொள்ளும் அறிஞர் சிலர் உணர்ச்சியே கவிதைக்குப் தலைமை எனச் சொன்னர்கள். POETRY IS THE SPANTNEOUS OVERFLOW OF POWER FEELINGS’ என்பதை எடுத்துக்காட்டாக்கிக் கொண்டார்கள். தம்பி விக்டர் கொட்டியிருக்கும் இந்த முத்துக்களில் அருவப் பொருளாகிய சோகம் பாடுபொருளாகியிருக்கிறது. இழப்பின் உச்சம் உணர்ச்சியாகியிருக்கிறது.

    ஏன்யா அழுற? இடிஞ்சு விழுற?நீ
    தான்யாநம் பிக்கைத்தருற! ஆங்வீணா
    கவலைப் படாத! ஓங்கண்ணீர் விடாத!
    செவியிலின்னும் அப்பா குரல்!”

    எல்லாவற்றையும் விட இந்தப் பாட்டில் இறைந்துகிடக்கும் வழக்குச் சொற்கள் உணர்ச்சிக்குத் திரைபோடாமல் அப்படியே காட்டுகின்றன. ‘ஏன்யா அழுற? இடிஞ்சு விழுற? கவலைப்படாத! கண்ணீர் விடாத! என்ன அருமையான சொல்லடக்கம்!. இந்தச் சொல்லடக்கத்துக்குள்ளேயல்லவா அவர் தந்தை நல்லடக்கமாகியிருக்கிறார்!

    ஏதோ உளறுகின்றேன்! என்னை உதறுகிறேன்!
    சேதாரம் ஆகிச் சிதறுகிறேன்ஆதாரம்
    வீழ்ந்ததால் விம்முகிறேன்! வேதனையைச் சிந்துகிறேன்!
    வாழ்வோம் மறுபடிவாப் பா!”

    ‘என்னை உதறுகிறேன்’ அடடா! என்ன அருமையான தொடர்? தன்னை உதறிக் கொள்வதால் உதிர்ந்து போகிறானாம் தனையன். அதனால் அவனே அவனுக்குச் சேதாரமாகிறானாம். “சேதாரம் ஆகிச் சிதறுகின்றேன்” இன்னொரு பாட்டில் உணர்ச்சி இப்படிச் சிதறியிருக்கிறது.

    ஆறாப் பெருஞ்சோகம் ஆறான தென் ஓலம்
    தேறா நிலை நான் தெருக்கோலம்மாறாதா
    இந்தக்கொடுங்காலம் ஈனத் துயர்க்கோலம்?”

    உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லிவிட்டார் என்ற அமைதியை நாம் கேட்டிருக்கிறோம் அது எதிர்மறை. தம்பி விக்டர் உணர்ச்சிக் கொந்தளிப்பில் கொட்டிய சொற்கள் சீராய் மாறியிருக்கின்றன. அவருடைய உணர்ச்சி அவருடைய படைப்பைச் சிகரத்திற்குக் கொண்டு சென்றிருக்கின்றன.

    தோரணமான தொடை விகற்பங்கள்

    எதுகை, மோனை என்பதைக் கூடச் சகித்துக்கொள்ள முடியாத இசைத்தமிழன் எகனை, மொகனை என்றான். மக்கள் வழக்கின் வீரியம் அது. உண்மையான தொடைவிகற்பங்களுக்கும் இது பொருந்தும். தம்பி விக்டரின் அழுகையில் ஆங்காங்கே கிடக்கும் இந்த விகற்பங்கள் இட்டுக் கட்டியவை அல்ல. எடுத்துக் கோத்தவை அல்ல. குமுறிக் கொட்டியவை. கொட்டி அழுதவை!

    முழுப்பானை சோற்றுக்கு ஒரு மோனை போதாதா?

    “தாழ்வுகள் தாங்கியெமை தக்க வைத்தாய்!” மோனை இணையாகும். “கண்ணில் மிரட்சியில்லை கைகால் பதட்டமில்லை”, “என்றிருந்தார் அந்தமலை இன்றவரோ எங்குமிலை” பொழிப்பில் புன்னகை செய்யும். “கட்டலாகாக் காற்றவரை கட்டிலே பார்த்ததில்லை” என்ற வரியில் ஏழையாகாத மோனை கூழையாகும். “சாவின் அலையடித்து சாய்ந்துவிட்டேன் பாவிமகன்” என்று ஒரூஉவில் ஒப்பாரி வைக்கும். “நாவின் நதி வறண்டேன் நாடி நரம்புருண்டேன் அப்பா அரூபமாய் அங்கிருந்தார்  அப்பாவின்” புன்னகைக்கும் பூவனம் நீ! பொய்யறியா புத்தகம் நீ! என்றெல்லாம் முற்றாகும்.

    ‘வருவார்’, ‘தருவார்’, ‘விடியும்’, ‘முடியும்’, ‘புகழ் பூத்த’, ‘நிகழ் பூத்து’ என்றெல்லாம் அமைந்தன முற்றெதுகைகள். ‘என்றிருந்தார் அந்த மலை இன்றவரே எங்குமிலை’, ‘சிந்திவிடும் என்றெவர்க்கும் சிந்தை வரா மயக்கம்’ என்றெல்லாம் இறைந்துகிடக்கும் பொழிப்பெதுகைகள், ‘தந்தைமேல் நம்பிக்கை தான் எனக்கும் அந்த உயிர் என்றவாறு அமையும் ஒரூஉ எதுகை என அங்கிங்கெனாதபடி எங்கும் சிதறிக்கிடக்கும் தொடைவிகற்பங்களைக் கோப்பதே ஓர் ஆய்வுப் பணி.

    வினா உத்தி

    கருத்துக்களை வினா வடிவில் வெளிப்படுத்துவது தமிழ்க்கவிதைகளின் வெளிப்பாட்டுக் கொள்கைகளில் ஒன்று. இந்நெறி சங்கக்காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாம் தொல்காப்பியத்தை ஒரு கவிதையியல் நூல் என்று தொடர்ந்து சொல்லி வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.  அதாவது பண்பாடு சிறந்து பக்குவப்பட்ட ஒரு சமுதாயத்தில் இலக்கியப் படைப்பும் ஆராய்ச்சியும் ஒரே காலத்தில் நிகழ்ந்திருக்கிறது. இதனைச் சரியான புள்ளியில் நிறுத்தி ஆராய்ந்தால் இன்றைய மேனாட்டுத் திறனாய்வுக் கொள்கைகளை வைத்துக் கொண்டு அடிக்கும் பெருங்கூத்தும் வெற்று ஆரவாரமும் குறையக் கூடும்.

    1. ‘குளித்து மணல் கொண்ட கல்லா இளமை அளிதோ தானோ யாண்டுண்டு கொல்லோ?’ என்று வினவியவர் தொடித்ததலை விழுத்தண்டினார்.
    1. ‘சான்றோரும் உண்டு கொல் சான்றோரும் உண்டுகொல்?’ என்று வினவியவள் கண்ணகி.
    1. ‘கனிவரும் காலத்து ஐய! பூக்கொய்யக் கருதலாமோ?’ என்று கேட்டவன் கம்பன்.
    1. ‘கண்ணிரண்டையும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?’ என்று வினவியவன் மகாகவி.
    1. ‘காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டா? கறைச் சேற்றால் தாமரையின் வாசம் போமா?’ என்று வினவியவர் பாவேந்தர்.
    1. ‘கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா?’ என்னும் கண்ணதாசன் கேட்ட வினாவிற்கு இன்னும் பதில் இல்லை.
    2. ‘மீனில்லாமலே நீரிருக்கலாம்! நீரில்லாமலே மீனிருக்குமோ?’ என்னும் வாலியின் வினா அப்படியே இருக்கிறது.
    1. ‘நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறே வழியுமுண்டோ?’ என்னும் ஆலங்குடியாரின் வினாவுக்கு யார் பதில் சொல்வது?
    1. ‘தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்?’ இராஜேந்தரின் கண்ணீரை அறிந்தார் இலர்.
    1. ‘எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?’ என்று வைரமுத்து கேட்ட வினா பலருக்கும் சென்று சேர்ந்ததாகத் தகவல் இல்லை.

    தமிழ்க்கவிதைகளைத் திறனாய்வு செய்யும் ஆய்வாளர்கள் இவற்றை  அதாவது இந்த வினாவுத்தி போன்றவற்றைக் கருத்திற் கொள்ள வேண்டும். இத்தகைய வகைமாதிரிகள் தமிழ்க்கவிதைகளிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுத் தொகுக்கப்படல் வேண்டும். தம்பி விக்டர் தாஸ் கொட்டிய பாக்களில் இத்தகைய வினாக்கள் சரளமாக மிகச் சரளமாக வந்து விழுந்திருக்கின்றன. மரபை விழாமல் தாங்கியிருக்கின்றன.

    பார்க்கஇனி ஏலாதா? பால் குரல் கேளாதா?
    நீர் பொழியும் பாசமழை நீளாதா? – வேர்வனம் நீ
    எங்கும் கிடையாதா?”யெப்போஇனி இராதா?
    சங்கறுத்து விட்டதே சாவு!”

    இந்த வலி தீராதா? எந்தை மொழி வாராதா?
    சிந்தையெல்லாம் நிம்மதியும் சேராதா? தந்தை முகம்
    காண முடியாதா? கண்ணீர் ஒடியாதா?
    போனதினி மீளாதா? போ!”

    நோயென்ன கள்வனா? நூதனமாய்க் கொல்வானா?
    தீயென உள்நுழைந்து தின்பானா? – மாயமாய்த்
    தந்தையைக் கொய்தானா? தள்ளாடச் செய்தானா?
    வெந்து போய்விட்டதே வேர்!”

    ஈவிரக்கம் இல்லையா? இந்த உடல் தொல்லையா?
    காவு கொண்ட சீவனே! நீகல்லாய்யா?—  நோவு வழி
    போனசெயல் தப்பைய்யா புத்திகெட்டக் குப்பைய்யா
    கேணை நடத்தை இது கேள்.”

    ‘காவு கொண்ட சீவனே நீ கல்லாய்யா?’ என்ற ஒற்றை வரியில் வழக்குக்கு வாழ்வு கொடுக்கிறார். சீவனோடு சேர்த்து வெண்பாவையும் தெறிக்கவிடுகிறார். சிவனோடு போர் தொடுத்தவர் உண்டு. சீவனோடு போர்தொடுத்து இலக்கிய நயத்தின் உச்சம் தொடுகிறார் விக்டர் தாஸ். ‘நோவு வழி சீவன் போன செயல் தப்பையா?’ என்று கற்பனையின் கொடிமுடிக்குச் செல்கிறார். உயிரைக் கேணையன் என்று எள்ளி நகையாடி அவனுக்கான நடத்தைச் சான்றிதழில் கை வைக்கிறார். மை வைக்கிறார். இத்தனை நுண்ணியங்களையும் வினா உத்தியில் வைத்துக் கொட்டியிருக்கிறார் தம்பி விக்டர்!

    காலத்தால் அழியாக் கவிதைத் தொடர்கள்

    கவிதைகள் உத்திகளால் சிறக்கின்றன. நூல்கள் தொடர்களால் சிறக்கின்றன. தொகையாகவும் பாட்டாகவும் பரிணமிக்கும் சங்க இலக்கியக் களத்திற்கே ஓர் அடையாளமாக நிற்கும் தொடர் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதை மறுப்பாரும் உளரா? ஒரு கால இலக்கியத்தையே தன்னுள் செறித்துக் கொள்ளும் ஆற்றல் அந்த ஒரு தொடருக்கு இருந்திருக்கிறதென்றால், ஒரு நூலைத் தனதாக்கிக் கொள்வது ஒன்றும் அவ்வளவு இடர்ப்பாடானதன்று.

    1. ‘நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்’ என்றால் சிலப்பதிகாரம் நினைவுக்கு வரும்.
    2. ‘உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே’ என்றால் மணிமேகலை நினைவுக்கு வராதா?
    3. ‘பார் பெருத்ததோ படை சிறுத்ததோ’ என்றால் கலிங்கத்துப் பரணி.
    4. ‘தொடுக்கும் கடவுட் பழம்பாடல்’ என்றவுடன் மீனாட்சி வந்து நிற்கமாட்டாளா?
    5. ‘வாராதிருக்க வழக்குண்டோ’ என்றால் பகழிக்கூத்தர் பக்கத்தில் நிற்பாரே!
    6. ‘ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்’ கேட்டவுடன் பெரியபுராணம் அல்லவா விரியும்?
    7. ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ என்று செவியில் விழுந்தவுடன் சிவதனுசல்லவா முரியும்?
    8. ‘கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?’ பாசுர வாசனை நம் வீட்டுப் படிக்கட்டில் வீசாதா?
    9. ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்றவுடன் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்துத் திருநாவுக்கரசராய் முன் நிற்காதா?
    10. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றால் வள்ளலார் திருவருட்பாவோடு திருக்காட்சி தருவாரே!
    11. ‘வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு’ என்ற அடைகொடுத்து இனம் பாடிய பாரதியின் தொடர் அவன் கவிதைக் கொள்கை அல்லவா?
    12. ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற ஒற்றைத் தொடர் பாவேந்தரின் ஒரு நூறு நூல்களுக்கும் ஒற்றைத் தலைப்பல்லவா?
    13. ‘வாழைத்தண்டுக்கா தடுக்கின்ற கணுக்கள் உண்டு?’ என்ற உவமம் போதாதா சுரதாவை உவமைக் கவிஞர் என்று அடையாளப்படுத்துவதற்கு?
    14. ‘மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்! மணல் கூடச் சில நாளில் பொன்னாகலாம்’ என்ற ஒரே பல்லவி சாதாரண முத்தையாவைக் கவியரசு ஆக்கிய விந்தையை நாம் அறிவோமே!
    1. ‘உனைநிரப்ப என்பசியை நானே உண்டேன்’ என்றால் மனவாசலில் வந்து நிற்பவர் வசந்தராசன் அல்லவா?

    கவிதை பற்றிய பன்முக ஆராய்ச்சிகளில் சொல்லாக்க உத்திகள் அவ்வளவாகக் கவனிக்கப்படுவதில்லை. கற்பனை, உணர்ச்சி, வடிவம், கருத்து என்ற அளவிலேயே ஆய்வுகள் நின்றுபோவதால் அவற்றுக்கு மேலான கவிதைக் கூறுகள் திறனாய்வுலகில் போதிய இடம் பெறுவதில்லை. மேற்கண்ட நான்கும் கவிதைக்கு அதன் கட்டுமானப் பொலிவிற்கு அடிப்படையேயாயினும் படைப்பாளனாகிய கவிஞனின் உள்ளம் கடலினும் ஆழமுடையது என்பதையும் ‘விரிவானப்’ பரப்பையுடையது என்பதையும் மறந்துவிடலாகாது. குறிப்பிட்ட திறனாய்வுக் கொள்கைகளை ஆய்வு நெறியாக வைத்துக் கொண்டு பல்வகை உள்ளத்து வண்ணங்களைத் தரமதிப்பீடு செய்வது ஏற்புடையதாகாது. எனவே ஒவ்வொரு படைப்பும் தனக்கான தரமதிப்பீட்டுக் கருவியைத் தானே படைத்துக் கொள்கிறது. படைத்துக் கொள்ள வேண்டும். தம்பி விக்டர் தாஸின் புலம்பலில் காணப்படும்,

    1. கந்தலாகிப் போச்சே கடல்
    2. கண்ணீர் ஒடியாதா?
    3. சத்தமின்றிக் கொத்தியதே சாவு
    4. மல்லிகைச் செண்டுக்குள் குண்டுமழை
    5. பூச்சரமேல் சாவின் புயல்
    6. அவஸ்தை நெடி
    7. அவிழ்க்காத பாசம்
    8. அந்த உயிர் சிந்திவிடும்
    9. ஆன்மா பிளவு கொண்டேன்
    10. உயிரு சேறாச்சே
    11. என்னை உதறுகின்றேன்
    12. தண்டுவடம் எங்கும் தகராறு
    13. நீர்வழிந்து கீறலாச்சு! நெஞ்சில் தீத் தூறலாச்சு!
    14. உன் வாசத்தை நீட்டினாய்
    15. வருத்தங்கள் யாவும் வழிமறிக்கும்

    என்பன போன்ற சொல்லாட்சிகளெல்லாம் எந்தத் திறனாய்வுக் கொள்கைக்கும் பிடிகொடுக்காமல் தனித்தியங்கும் ஆற்றல் கொண்டவை என்பதைத் தெளிவாகச் சுட்டுகிறேன். கவிதை ஆராய்ச்சி என்பது வடிவ ஆராய்ச்சி அல்ல. கருத்துக்களின் ஆராய்ச்சி அல்ல. கற்பனை ஆராய்ச்சி அல்ல. கவிஞனின் உள்ளத்தை ஆராய முயல்வது. இத்தகைய சொல்லாக்கங்கள் எல்லாம் கவிதைக்கு நிலைப்பேற்றைக் கொடுப்பதில் ஏனைய கூறுகளைவிட முதன்மை பெறுகின்றன என்பதைக் கருத்திருத்துதல் வேண்டும். ஒட்டுமாங்கனியைப் போன்ற சொல்லாக்கங்கள் தற்காலக் கவிஞர்களில் தம்பி வசந்தராசனின் படைப்புக்களில் இயல்பாக அமைந்து கிடக்கின்றன என்பது ஒப்பீட்டுக்காக இங்கே சுட்டப்படுகிறது.

    அகத்திலும் இனிக்கும் ‘ஐயோ’

    கவிதை வல்லாளர்களுக்குச் சொற்கள் அடிமைகள். தமிழின் நால்வகை இலக்கணச் சொற்களில் பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தும் ஆற்றலுடையார் இருக்கலாம். ஆனால் இடைச்சொல்லைச் சீராகப் பயன்படுத்திக் கவிதைத் தொழில் செய்வார் அரியர். திருவள்ளுவர் இதில் தலைமையிடம் பெறுகிறார்.

    ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
    நண்ணாரும் உட்கும் என் பீடு” (1088)

    என்பது தலைவியிடம் மனம் பறிகொடுத்த தலைவனின் கூற்று. தன்னை எதிர்த்துக் களத்திற்கு வராதவர் கூட எண்ணி அச்சப்படும் தன் பீடு ஒளி நெற்றி உள்ளவளுக்கு உடைந்ததே என்று அவன் கைபிசைகிறான். களத்திலே காட்டிய வீரம் காரிகையின் முன் தோற்றது என்பது கருத்து. இந்தப் பாட்டில் இரண்டாவது சீரில் நெடில் குறிலாக அமைந்திருக்கும் ஓகார ஒகரங்கள் விட்டிசைத்துத் தனித்தனி நேரசையாக நின்று தேமா என்னும் வாய்பாட்டில் கவிதைப் பணி செய்வதைக் காணலாம். ‘ஓ’ என்பது ஒண்ணுதற்கோ என்னும் தலைவனின் வியப்பு கலந்த சொல்லோடு இணைந்து வியப்பை மிகுவிக்கிறது. அடுத்து நின்ற மற்றொரு ஒகரம் வியப்பினை இன்னும் கூடுதலாக்குகிறது. ஓகாரம் ஒரு இடைச்சொல். அந்த ஓகாரத்திற்கு ஒலித்துணையாக இருப்பது ஒகரம். பொருள் தராத அந்த இடைச்சொற்களைப் பிணைத்து வியப்பு என்னும் உணர்ச்சிக்குக் குறியீடாக்கித் தலைவனின் காதல் உணர்வை மிகுவிக்கிறது. இடைச்சொல் சீராகிறது. அளபெடைக்குத் துணையாகிறது. தளை காக்கிறது. தலைவனின் தவிப்பையும் உணர்த்துகிறது.

    ஏவவும் செய்கலாம் தான் தேரான் அவ்வுயிர்
    போஒ மளவுமோர் நோய்” (848)

    என்னும் பாட்டில் சொல் புத்தியும் இல்லாது சுயபுத்தியும் இல்லாதவன் இவ்வுலகைவிட்டுப் போகிற காலம் வரைச் சமுதாயத்திற்கு ஒரு நோயாகவே இருப்பான் என்று பொருள் தரும் குறட்பாவில் ‘அவன் விரைவில் போகமாட்டான், இருந்து உயிரை வாங்குவான்’ என்னும் கருத்தினை இடைச்சொற்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட அளபெடையால் குறிப்பாக உணர்த்துவது காண்க. இத்தகைய வல்லாண்மையைக் கம்பன் பல இடங்களில் பயன்படுத்துகிறான். அதில் ஒரு இடம். இராமன் வனவாசம் புறப்படுகிறான்.

    வெய்யோன் ஒளி தன் மேனியின்
    விரி சோதியின் மறைய,
    பொய்யோ எனும் இடையாளொடும்,
    இளையானொடும் போனான்
    மையோ?, மரகதமோ, மறி
    கடலோ? மழை முகிலோ?
    ஐயோ!, இவன் வடிவென்பதோர்
    அழியா அழகுடையான்

    படைப்பாளன் தோற்கிற இடமும் இதுதான் வெல்கிற இடமும் இதுதான். இராமனின் தோற்றப் பொலிவுக்குக் கருப்பு, மரகதம், கடல், மேகம் என்றெல்லாம் சொல்லியும் மாளாத கம்பன் சொல்லில்லாமல் திண்டாடுகிறான் என்பது படைப்புத் தோல்வி. பாடுபொருள் பரம்பொருள் ஆதலின் சொல்லுக்குள் அடங்காதவனைக் கண்டு வியப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் ‘ஐயோ’ என்னும் இடைச்சொல்லால் வியந்து நோக்குவது படைப்பின் மாபெரும் வெற்றி. ஏனைய பொருளுடைய சொற்களை விட இந்த ஐயோ என்னும் இடைச்சொல் உணர்ச்சியின் உச்சத்தைத் தொடுவதைச் சொல்வார் உணரலாம். இந்த ‘ஐயோ’ என்னும் இடைச்சொல்லை,

    வேகுதே தீயதனில் வெந்துபொடி சாம்பல்
    ஆகுதே பாவியேன் ஐயகோ! – மாகக்
    குருவி பறவாமல் கோதாட்டி என்னை
    கருதி வளர்த்தெடுத்த கை

    என்னும் நேரிசை வெண்பாவில் பட்டினத்தடிகள் பதிவு செய்திருக்கிறார்.  இந்தப் பாடலை அவர் உட்கார்ந்து சீர், தளை பார்த்து எழுதியிருக்க இயலாது. காரணம் அவருடய தாயாரின் உடல் தீயில் எரிகிற போது செய்யப்பட்ட களக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு!  இந்த ஐயோ என்ற சொல்லைக் கவிஞர் கண்ணதாசன் அவலத்தின் உச்சத்தில் வைத்துப் பாடுவதையும் பார்க்க முடிகிறது. பண்டித சவகர்லால் நேரு அவர்கள் மறைந்தபோது,

    நீரோடும் கண்களுக்கு நிம்மதியை யார்தருவார்?
    நேரில்லாத பாரதத்தை நினைவினில்யார் வைத்திருப்பார்?
    ஐயையோ! காலமே! ஆண்டவனே! எங்கள் துயர்
    ஆறாதே! ஆறாதே! அழுதாலும் தீராதே!”

    என்று முந்தைய வரிகளுக்கும் பிந்தைய வரிகளுக்கும் எந்தப் பொருள்  தொடர்பும் இல்லாத நிலையில் சொற்களால் எழுத முடியவில்லை என்பதை ‘ஐயையோ’ என்னும் இடைச்சொல்லால் குமுறியிருப்பதைக் காண்க. இந்த நெறியைத்தான் அதாவது இந்த மரபைத்தான் விக்டர்தாஸ் தம்மையும் அறியாமல் தன் தந்தை இழந்த தருணத்திலும் அழுது கொட்டியிருக்கிறார்! எதனையோ எழுதி வைத்துக் கொண்டு மரபுக் கவிதை என்பார் கவனத்திற்கு நான் பல எடுத்துக்காட்டுக்களை என் கட்டுரைகளில் பதிவிட்டு வருகிறேன். கொள்வாரில்லை. அவர்கள் தேமாங்காய், புளிமாங்காய் தவிர வேறு மரபு எதனையும் தெரிந்து கொள்ளாமல் இருப்பதில் எச்சரிக்கையுணர்வுடன் செயல்படுகிறார்கள். இப்படிப் பயன்பட்ட அந்த ஐயோவை மிக அருமையான இடங்களில் அவலத்தின் உச்சந்தொடும் நோக்கில் விக்டர் அவர்கள் பாட்டில் விழுந்திருக்கிறது.

    கூடுவிட்டு நன்றியற்று கூண்டோடு கொன்று விட்டு
    கேடுகெட்ட ஆவி போச்சே கீறிவிட்டுப்!பாடுபட்ட
    மெய்யோ அனாதையாய் வெந்த பராரியாய்!
    அய்யோ உயிரே! வந்(து) ஆற்று.”

    வானம் உதிரவிட்டேன் மண்ணில் சிதறவிட்டேன்
    காணும்போ தாவி காடுவிட்டேன் மோனவுடல்
    ஐயோ புதைத்துவிட்டேன் அப்பா தொலைத்துவிட்டேன்!
    பொய்யாச்சே தந்தையெனும் பொன்

    இருப்பாய்நீ நூறாண்டென்றிருந்தேன்! நோயின்
    நெருப்பெரிக்க அய்யையோ! நீர்த்தேன் அருந்தவமே
    மூச்சுடைய பார்த்திருந்தேன்! மொத்தமாய் வேருடைத்தேன்!
    பூச்சரம் மேல் சாவின் புயல்

    மேற்கண்ட புலம்பலில் ‘அய்யோ’ அல்லது ‘அய்யையோ’ என்னும் சொல் இருவினைகளுக்கு இடையில் செயல்பட முடியாத இயலாமையைச் சுட்டுகிறபோது பயன்பட்டிருப்பது காண்க. ‘நெருப்பெரிக்க’ என்னும் வினையெச்சத்திற்கும் நீர்த்தேன் என்னும் வினைமுற்றுக்கும் இடையில் விக்டரின் தவிப்பைத், துடிப்பை இந்த அய்யோ என்னும் இடைச்சொல் வெளிப்படுத்துவது உணர்க. ‘இடிகளை அனுப்பியா பூக்களை நலம் விசாரிப்பது?’ என்று எழுதுவார் வைரமுத்து. ‘வீணை தடவக் கோடரி கொண்டு வந்தவர்களை’ வைரமுத்து காட்டியிருக்கிறார். ‘பூவுக்குள் பூகம்பம்’ என்ற சொல்லை யாவரும் கேட்டிருக்கக்கூடும். விக்டர் தாஸ் ‘பூச்சரம் மேல் சாவின் புயல்’ என்று சொல்கிறார். இதற்கு எப்படி நயம் சொல்வது? எப்படி உள் வாங்குவது? திறனாய்வு நாணுகின்ற இடங்களில் இதுவும் ஒன்று. திறனாய்வு தொடமுடியாத உச்சிக்குப் படைப்புச் சென்றுவிடுமானால் இதுதான் நிலை. ‘சாவின் புயல்’ என்பது உருவகம் என்று உரையெழுதலாம். அது 16 வயது குமரிக்குப் பள்ளிக்கூட ஆண்டுவிழாவில் மூதாட்டி வேடம் போட்ட கதையாகிவிடும்.

    நிறைவுரை

    காய்ச்சீர்களால் அமைந்த ‘வெண்பா’ உலகில் கண்ணீரால் கொட்டப்பட்ட கவிதைகள் இவை. எதுகைக்கும் மோனைக்கும் இலக்கியச் சொற்களை இற்றுப்போன இறவாணத்தில் தேடுகின்ற படைப்புலகில், வாயிலிருந்து விழுந்த வழக்குச் சொற்களால் வழுவாமல் அமைந்தவை. காது மடல்களைக் கூடத் தொட முடியாத வரிகளை எழுதிவைத்துக் கொண்டு ஐந்தாறுபேர் கூடித் தங்களுக்குத் தாங்களே பாராட்டித் தட்டிக் கொடுத்துவரும் போலி உலகில் விழியில் வழிந்து உயிரில் நனைந்து ஆன்மாவின் அந்தரங்கத்தை அசைத்துப் பார்க்கும் உண்மையான பாசத்தின் வெளிப்பாடு! வாழ்வியலில் இலக்கியத்திற்குத் தலையாய இடம் உண்டு. ஆனால் வாழ்வியலே இலக்கியமாகும் என்னும் மாபெரும் புதிய உண்மையை உணர்த்தியிருக்கிறார் விக்டர்தாஸ்!  எழுதிவைத்துக் கொள்ளப்பட்ட ஒரே மாதிரியான திறனாய்வுக் கொள்கைகளைக் கொண்டு பன்முகத் திறன்களின் வெளிப்பாடான படைப்புக்களை ஆராய்வது நெறியன்று. படைப்பின் சூழலும் காரணிகளும் மாறுபடுகிறபோது திறனாய்வுக் கொள்கைகளும் மாற்றப்பட வேண்டும். வெண்பாக்களை விளையாட்டுப் பொம்மைகளாக்கிக் கொண்ட விக்டர்தாஸ் தமிழ்க்கவிதை உருவாக்கத்திற்கான புதிய மூலத்தைக் கண்டறிந்த கவிதை கொலம்பஸ் என்பதில் எனக்கு எத்தகைய ஐயமும் இல்லை! திறனாய்வுக் கொள்கைகளால் அளக்கமுடியாத அரிய வெளிப்பாட்டினைப் ‘படித்தேன் சுவைத்தேன் பகிர்ந்தேன்’ என்பது பொருந்துமா? படித்தேன்! பதறினேன்! கலங்கினேன்! கண்ணீர் விட்டேன்! காய்ந்து போன ஈரத்தைக் கட்டுரையாக்கியிருக்கிறேன். தந்தையை இழந்து வாடும் அவர் மனம் அமைதி பெறட்டும்!. இந்தத் திறனாய்வை அவருடைய தந்தையாகிய நம் தந்தைக்கான அஞ்சலியாகவே அர்ப்பணிக்கிறேன்!

    (தொடரும்…)

    Share