படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 16

0

முனைவர் ச. சுப்பிரமணியன்

முன்னுரை

படைப்பாற்றல் எல்லாருக்கும் கைவரப் பெறாது. அதனுள் கவிபுனைதல் என்பது இயற்கையாற்றல். கவிபுனைவார் எல்லாருக்கும் புதியன படைக்கும் எண்ணம் வந்துவிடுவதில்லை. எண்ணம் செயலாவதற்குள் எத்தனையோ சூழல்கள்! செயல்வடிவமானாலும் பொருத்தமாக அமைந்துவிடும் என்றும் சொல்வதற்கில்லை. திருவெம்பாவை, திருப்பாவை என்றே கேட்டுப் பழகிய ‘பல தலைமுறைச் செவிகளுக்குள்’ ‘தலைமுறைப்பாவை’ என்ற புதிய தலைமுறைச் சொல் அவ்வளவு எளிதாகச் சென்றுவிடாது. பாவை இலக்கியம் என்றால் அது பக்திநெறியோடு தொடர்புடையது என்னும் கருத்தியல் அவ்வளவு எளிதில் நீர்த்துப் போகாது. மரபின் ஆழம், தாக்கம் அத்தகையது!. வடிவத்திலும் வெளிப்பாட்டு உத்தியிலும் மரபையும் பாடுபொருளில் புதுமையையும் தேக்கித் தமிழினப் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றான முன்னோர்களின் பெருமை கூறுதல் என்பதை முன்னெடுப்பதாகப் படைக்கப்பட்டிருக்கும் காப்பியமே தம்பி வசந்தராசன் படைத்துக் காட்டியிருக்கும் ‘தலைமுறைப் பாவை’ என்னும் இலக்கியமாகும். உடம்பின் உள்ளுறுப்புக்கள் பெரும்பாலானவை செயலிழந்து படுக்கையில் கிடக்கும் இந்த வேளையிலும் தம்பி வசந்தராசனின் தலைமுறைப் பாவையைப் படிக்கும் அரிய வாய்ப்பினைத் தமிழ்த்தாய் எனக்கு அருளியிருக்கிறாள்.  தாயின் திருவடி வணங்கி என் அன்புத் தம்பி வசந்தராசனின் தலைமுறைப் பாவையில் நான் சொக்கி நின்ற சுகமான நொடிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

தொல்காப்பியமும் பாவை இலக்கியமும்

தொல்காப்பியம் ஒரு கவிதையியல் நூல்! அதனை அறிஞர் பலரும் பழந்தமிழர்களின் வாழ்வியல் நூல் என்று கருதுவது அவர்கள் உரிமை. நுண்ணோக்கு உடையார்க்கு அரிஸ்டாட்டிலின் கவிதையியல் போன்றது அது என்பது எளிதில் புலப்படும். பொருளதிகாரத்தின் பிந்தைய ஐந்து இயல்களை முன்னாக்கிக் கற்றால் எளிதில் தெரிந்து கொள்ளலாம். தொல்காப்பியத்தின் பெருமையே வளமான மக்கள் வாழ்க்கை உணர்வுகளின் வெளிப்பாட்டை நன்கு ஆராய்ந்து செய்யப்படும் இலக்கியங்களைப் பற்றிய ஆய்வினை உலகினில் முதன் முதல் நிகழ்த்தியதுதான்! வரலாற்றுக் குறிப்புக்களைக் கூட ஆவணப்படுத்தத் தெரியாத ஒரு சமுதாயத்தில் அகப்புற வாழ்வியல் கூறுகளை ஒருவன் ஆராய்ந்திருக்கிறான் என்பது வரலாற்றுக்கும் ஆய்வு நெறிக்கும் முரணாகும். தொல்காப்பியத்தின் அமைப்பு முறையே அது ஒரு இலக்கியவியல் நூல் என்பதை நிறுவதற்குப் போதுமானதாகும். எழுத்து, சொல் என ஆராய்ந்த பிறகு அவற்றால் வடிவமைக்கப்படும் இலக்கிய ஆராய்ச்சியே பொருளதிகாரம். பொருளியலுக்கும் வாழ்வியலுக்கும் என்ன தொடர்பு? பொருளியல் என்றால் சொற்களின் ஆராய்ச்சி அல்லவா? உவம இயலுக்கும் வாழ்வியலுக்கும் என்ன நெருக்கம்? செய்யுளியலை வாழ்வியலில் எவ்வாறு பொருத்துவது? பொருளதிகாரப் பதிவுகளில் பழந்தமிழ்ச் சமுதாயக் கூறுகள் நிழல்போல் படிந்திருக்கக் கூடும். அதனாலேயே அது பழந்தமிழர் வாழ்வியல் கூறுகிறது என்பது அவ்வளவு முழுமையான கருதுகோள் ஆகிவிடாது. இத்தகைய சிறப்புடைய தொல்காப்பியத்தில் காணக் கிடைக்காத பாவை பற்றிய குறிப்புக்கள் சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே மின்னுகின்றன என்பதைப் பின்வரும் சான்றுகளால் அறியலாம்.

சங்க இலக்கியங்களில் மார்கழி நீராடல்

மார்கழித் திஙகள் அதிகாலைத் துயிலெழுந்து குளிர்ந்த நீரில் நீராடி இறைவனை வணங்குதல் என்பதைச் சைவமும் வைணவமும் போற்றியுரைக்கும்.  தமிழர் மரபில் இத்தகைய நீராடல் என்பது சங்ககாலம் தொடங்கியே இருந்து வந்தது என்பதனைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கும்.

கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப்
பனிப்படு பைதல் விதலைப் பருவத்தை” (பரிபாடல் 11)

‘கார்வானம் நீங்க’ என்னும் குறிப்பானது கார்த்திகை மாதத்துக் கனமழை ஓய்ந்தது என்பதனையே குறிப்பதாகும். மார்கழிப் பௌர்ணமி மதியானது முழுமதியாதலால் மறு நிறைந்து காணப்படுகிறது. இந்நிலவினோடு ஆதிரை மீனும் சேர்கிறது. அத்தகைய நன்னாளில் விழா தொடங்குகிறது. ஆதிரை நாளில் தொடங்கும் இவ்விழா முப்பது நாட்கள் நடக்கும். அத்திருநாள் மார்கழிப் பாதியில் தொடங்கித் தைப் பாதியில் நிறைவு பெற்றமையால் ‘தை நீராடல்’ என்றே அழைக்கப்பட்டது, தேவகிக்கு மகனாகப் பிறந்து யசோதைக்கு மகனாக வளர்ந்த கண்ணபிரானைப் போல மார்கழியில் தொடங்கிய நோன்பு தைந்நீராடலோடு நிறைவடையும் காரணத்தால் இரு திங்களுக்கும் பொதுவானது பாவை நோன்பு என்பது பெறப்படும். பெண்கள் அனைவரும்  தைந்நீராடும் பரந்த குளத்திற்குத் தலைவனின் பரத்தமை கொண்ட மார்பினை உவமையாக்குகிறது ஐங்குறுநூறு. .

நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைத்திங்கள் தண்கயம் போலப்
பலர் படிந்துண்ணும் நின் பரத்தை மார்பே” (ஐங். 84)

இவ்வாறு முதலில் ‘தை நீராடல்’ என்று குறிக்கப்பட்டதே பின்னர் ‘மார்கழி நீராடல்’ ஆயிற்று. கபிலரின் குறிஞ்சிக்கலியில் வரும் பெண் தன் சிறுவயதில் பாவையை வைத்து நோன்பு நோற்றாள். அந்த நோன்பிற்காகப் பிறர் மனையில் சென்று பிச்சையேற்றாள். அதனைச் சமைத்து ஆயத்தாருக்கும் கொடுத்துப் பாவைக்கும் ஊட்டினாள். இவ்வாறு தை நீராடிய பெண்களுள் சிலர் வையை நோக்கி மார்கழி மாதத்தில் உன்னுடைய நீர் மிகத் தெளிவாய் இருக்கும், எனவே நீ நீராடலுக்குத்  தகுதியுடையாய்! என்று கூறினர். மேலும் சிலரோ வையையிடம் காதலரைத் தழுவும் பேறு பெற வேண்டும் என வேண்டி நின்றனர். இன்னும் சிலர் பூவில் விழும் வண்டு அப்பூவினை விட்டு நீங்காததுபோல் எங்கள் தலைவர் எம்மை விட்டு நீங்காது இன்பம் தருவாராக! என வேண்டினர். வேறுசிலர் பெண்களின் ஏழாம் பருவ நிலையாகிய பேரிளம் பெண் பருவத்திலும் இளமையைத் தந்து செல்வத்தையும் தருக என வேண்டி நின்றனர் எனப் பரிபாடலின் பதினொன்றாம் பாடல் விளக்கியுரைக்கும். பாவை விளையாட்டோடு தொடங்கிய இம்மரபு பின்னர் சைவ சமயச்சார்பு பெற்று வளர்ந்ததை அகநானூற்றின் 181 ஆம் பாடல் உணர்த்தி நிற்கும்.

‘‘நான்மறை முதுநூல் முக்கட்செல்வன்
ஆலுமுற்றம் கவின்பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில்மனை மகளிர்
கைசெய் பாவை துறைக்கண் இருக்கும்
புகார்”; ( அகம் – 181 )

சங்க காலத்தில் கொண்டாடப்பட்ட பாவை நோன்பிற்கு மழைவளம் பெறுதலும் நல்ல கணவன் அமைதலுமே காரணமாய் அமைந்தன. ஆனால், திருப்பாவையின் பாடல்கள் இறைவனாகிய கண்ணனே கணவனாக வரவேண்டும் என வேண்டுவதாக அமைந்துள்ளது. கண்ணனையே கணவனாக அடையவேண்டும் என ஆயர்குல மகளிர் மார்கழியில் காத்யாயினி தேவியை வேண்டி நோற்பதுவே பாவை நோன்பு எனப் பாகவதம் குறிப்பிடும். அதனையே வைணவ உரையாசிரியர்களும் ஏற்பர்.

நோன்பு எவ்வாறு நோற்கவேண்டும் என இரண்டாவது பாடலும் நோன்பு நிறைவு பெற்றமைக்குப் பின் நிகழும் செயல்களை இருபத்தேழாம் பாட்டும் குறிப்பிடுகிறது. நோன்பு மேற்கொள்ளப்படும் இடம் பாவைக் களம் எனப்படும். பாவைக்கு நீராட்டுதலை இரண்டு, மூன்றாம் பாடலும் மழை பொழிய வேண்டுவதனை மூன்று, நான்காம் பாடலும் கண்ணன் கணவனாக வரவேண்டும் என்பதனை இருபத்தைந்து, இருபத்தெட்டு, இருபத்தொன்பதாம் பாடலும் விளக்குகின்றன.

மணிவாசகப் பெருமானும் பாவை நோன்பும்

மணிவாசகர் திருப்பெருந்துறையில் உறைந்த காலத்து அங்குள்ள பெண்கள் அம்மானை, ஊசல், சாழல் போன்றவற்றை ஆடுதல் கண்டு அவற்றை இறைவன் புகழ்பாடும் பாடல்களுக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் தனக்குக் கிடைத்த சிவானுபவம் உலக உயிர்களுக்குக் கிடைக்கவேண்டும் என எண்ணிச் செய்ததே திருவெம்பாவை என்றும் திருவாலவுடையார் திருவிளையாடற்புராணம் குறிப்பிடுகின்றது. மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் இருந்த காலத்தில் அந்நகரில் இருந்த பெண்கள் எல்லாம் மார்கழி மாதத்தில் திருவாதிரைக்கு முந்தைய பத்து  நாட்களும் வீடுகள்தோறும் சென்று பெண்களை அழைத்து விடியற்காலத்தில் குளிர்ந்த நீருடைய தடாகத்தில் நீராடினர். அவர்களுடைய செயலைக் கண்ட மாணிக்கவாசகர் திருவெம்பாவையைப் பாடினார். திருவெம்பாவை திருப்பாவையிலிருந்து வேறுபட்டதாகும். தான் பெற்ற சிவானுபவத்தை ஏனைய உயிர்களும் பெற வேண்டும் என்பதற்காகப் பாடப்பெற்றது திருவெம்பாவை. நல்ல கணவனையும் நீங்காத மழையையும் பெறுவதற்காகப் பாடப்பெற்றது திருப்பாவை. இவையே இரண்டுக்குமான அடிப்படை வேறுபாடு. இனி நல்ல கணவனைப் பெற வேண்டிய நிலை வளர்ச்சிநிலை எய்திக் கண்ணனே கணவனாக அமையவேண்டும் என்ற நிலைக்குச் சென்றது திருப்பாவை. இதனை,

எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றுஏலோர் எம்பாவாய் !”

என்னும் பாசுர வரிகளால் அறியமுடியும். ஆனால் திருவெம்பாவை இதற்கு நேர் எதிரானது. சிவனைக் கணவனாகக் கருதுதல் சைவ மரபன்மையின் சிவனடியார்களுக்கு வாழ்க்கைப்படுவதையே பெண்கள் விரும்பினர். அதற்கான நோன்பே திருவெம்பாவை.

உன்னைப் பிரானகப் பெற்ற உன் சீரடியோம்
உன் அடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்! அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்!”

என்ற வரிகள் உணர்த்தும். இவ்வாறு சங்க காலத்தில் தை நீராடலாய்த் தொடங்கிப் பின் வந்த காலத்தில் மார்கழி நீராடலாய் மாறியதே பாவை நோன்பின் வரலாறாகத் தெரிகிறது. பாடப்பெற்ற காலமும் உள்ளடக்கமும் நோக்கமும் தொடக்கநிலையிலிருந்தே மாறுபடுவது பாவை இலக்கியத்தில் வியப்பான ஒன்று அல்ல., வெகு இயல்பே என்பது இதனால் நிறுவப்படுகிறது. எனவே திறனாய்வுக்குட்படுத்தப்படும் தலைமுறைப்பாவையின் உள்ளடக்கமோ வடிவக் கட்டுமானமோ மரபு மீறியது என்ற பேச்சுக்கே இடமில்லாது போய்விடுகிறது. இது பற்றிக் கூடுதலான சில தகவல்கள் தொடர்கின்றன.

பாவை நூல்களின் பட்டியல்

பாவை இலக்கியத்தைப் பற்றிப் பேராராய்ச்சியை நிகழ்த்தியவர் பண்டிதமணி அவர்களே. தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் அவர்களின் உரைப்பகுதிகளின் அடிப்படையில் அவர் தமது ஆராய்ச்சியைச் செந்தமிழ் இதழில் நிகழ்த்தியிருக்கிறார். தொடக்கக் காலத்தில் பாவைப்பாடல்கள் வாய்மொழி இலக்கியங்களாகவே அமைந்துபோன காரணத்தால் எந்த ஒரு பாவைப்பாடலையும் முழுமையாகப் பெற முடியவில்லை என்னும் கருத்தினை முன்வைக்கிறார்.

இனிப் பாவைப்பாடல்கள் கலிப்பா வகையைச் சேர்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. நான்கடி முதல் பத்து அடிகளில் இவை பாடப்பெற்றன என்பதையும் பண்டிதமணி விளக்கியிருக்கிறார். கலிவிருத்தமாகப் பாடப்பட்ட இப்பாவை இலக்கியம் பின்னாளில் அதாவது ஆண்டாள், மணிவாசகர் ஆகியோர் இவர்கள் காலத்தில் கொச்சகக் கலி அமைப்பில் எட்டு அடிகளால் நிரம்பிய நூல் வடிவத்தில் அதாவது பதிகமாகவும் பாசுரமாகவும் பாடப் பெற்றிருக்கிறது. புறக்கட்டுமானத்தைப் பொருத்தவரையிலும் திருப்பாவை முப்பது பாடல்களைக் கொண்டு விளங்க, திருவெம்பாவையோ இருபது பாடல்களை மட்டுமே கொண்டு விளங்குகிறது! கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய திருப்பாவை முப்பது பாடல்களும் ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய திருவெம்பாவை இருபது பாடல்கள் மட்டுமே கொண்டிருப்பதும் சிந்தனைக்குரியதாகும். திருப்பாவை, திருவெம்பாவை என்னும் வைணவ மற்றும் சைவ இலக்கியப் பாவைகளைத் தொடர்ந்து தமிழில் பின்வருமாறு தோன்றிய பாவைகள் கிட்டியிருக்கின்றன.

 1. 16ஆம் நூற்றாண்டில் தத்துவராய சுவாமிகள் எழுதிய இரு பாவை நூல்கள்
 2. 1920 அவிரோதநாதர் எழுதிய சமணர் திருப்பாவை
 3. 1954இல் எழுதப்பட்ட முருகன் திருப்பாவை
 4. 1957இல் ஒன்பது துறவிகளால் எழுதப்பெற்ற திருவெம்பாவை
 5. 1962இல் ஆ.மு.வேங்கட்ராமன் எழுதிய மதுரை பரிபூரண விநாயகர் திருவெம்பாவை
 6. 1963இல் கண்ணதாசன் எழுதிய தைப்பாவை
 7. 1965இல் பெருஞ்சித்திரனார் எழுதிய செந்தமிழ்ப்பாவை
 8. 1966இல் கவியோகி சுந்தானந்த பாரதியார் எழுதிய தமிழ் திருவெம்பாவை
 9. 1973இல் கா.மு.ஷெரீப் எழுதிய நோன்புத் திருப்பாவை
 10. இல் காரை இறையடியான் எழுதிய திருவருட்பாவை
 11. 2019இல் துரை வசந்தராசன் எழுதிய தேன்பாவை
 12. 2020இல் வள்ளிமுத்து எழுதிய எழிற்பாவை
 13. 2020இல் வரதராசன் எழுதிய சுறவம்பாவை

என்று பாவை இலக்கிய நூல்களின் பட்டியல் விரிவடைகிறது. எனினும் இவை எதுவும் ஒன்று போல் மற்றொன்று இல்லை என்பதும் கருத்திற் கொள்ளத்தக்கது. ‘பாவை’ என்ற சொல்லைக் கொண்டு முடிவதினாலேயே இந்த இலக்கியம் ஒரே தன்மையுடையவாயின என்றும் கருதுவதற்கில்லை.

பா(ர்)வை  பலவிதம்!

‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்வதற்காகத்’ தொடங்கப் பெற்ற திருப்பாவை நோன்பு மங்கையர் நல்ல கணவனைப் பெறுவதற்கான நோன்பாகவும் அமைந்தது. ‘எம் கொங்கை நின் அன்பர் அல்லால் தோள் சேரற்க’ என்னும் திருவெம்பாவை காண்க. கவிஞர் கண்ணதாசன் திராவிட இயக்கத்தில் இருந்த வேளையில் எழுதிய நூல் தைப்பாவை. சமயப்பற்றுள்ள குடும்பத்தில் பிறப்பு, சமய நூல்களில் ஈர்ப்பு மற்றும் ரசனை ஆகியன அவரிடம் திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய நூல்களைக் கொண்டு சேர்த்திருந்தது. அவற்றின் யாப்பழகும் ஓசைச் செப்பமும் அவர் மனத்தில் இடம் பிடித்ததன் விளைவாக எழுந்த நூல் தைப்பாவை. திருப்பாவையும் திருவெம்பாவையும் பாவை வடிவமொன்றைச் செய்து அதனை முன்னிலைப்படுத்திப் பாவாய் என அழைத்துத் தோழியர் பாடுவதாக அமைந்திருக்கும். ஆனால் தைப்பாவையில் கவியரசு கண்ணதாசன் தைமகளையே ‘தைப்பாவாய்’ என அழைத்துப் பாடியிருப்பார். தைத்திங்கள் முதல்நாளைத் தமிழர் திருநாள் என்று கொண்டாடும் தமிழர் இயல்பையும் திராவிட இயக்கக் கருதுகோளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழர் மரபு, வேளாண்மை, காதல் வாழ்வு, மூவேந்தர் மாண்பு உள்ளிட்ட பற்பல அம்சங்களைக் கொண்டு தைப்பாவை எனும் நூலை சுவைமிக்க கவிதைகளால் தொடுத்திருக்கிறார் கவியரசு கண்ணதாசன். தைமகள் வருகையால் தமிழர்களுக்குரிய எல்லா மேன்மைகளும் கிட்டவேண்டும் என்றும் கன்னியருக்குத் திருமணம் கைகூட வேண்டுமென்றும், மூவேந்தர் மாண்பு துலங்க வேண்டுமென்றும் பற்பல அம்சங்களை இந்நூல் பாடுகிறது.

எந்தமிழர் கோட்டத்து இருப்பார் உயிர்வளர
எந்தமிழர் உள்ளத்து இனிமைப் பொருள்மலர
எந்தமிழர் கைவேல் இடுவெங் களம் சிவக்க
எந்தமிழர் நாவால் இளமைத் தமிழ் செழிக்க
முந்து தமிழ்ப்பாவாய் முன்னேற்றம் தான் தருவாய்
தந்தருள்வாய் பாவாய் தைவடிவத் திருப்பாவாய்
வந்தருள்வாய் கண்ணால் வாழ்த்துரைப்பாய் தைப்பாவாய்

இப்பாடல் தமிழரின் வாழ்வியல்புகள் பலவற்றையும் சுட்டுகிறது. தைமகள் வருகையால் தமிழர் நலன் மேம்பட வேண்டும் எனும் வாழ்த்தையும் இப்பாடலில் கவியரசர் கூறுகிறார்.

தலைமுறைப்பாவை கட்டுமானச் சிறப்பு

எட்டடி கொண்ட கொச்சகக்கலியால் ஏனைய பாவைகள் எல்லாம் அமைந்திருக்க வசந்தராசன் எழுதியிருக்கும் இந்தப் பாவை பத்து அடிகளைக் கொண்டதாக அமைந்திருக்கிறது.

இந்தப் பாவை முகநூலில் வெளிவந்த போது பின்னூட்டம் இட்ட பேராசிரியர் ஒருவர் ‘முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி எழுதுக’ என எட்டடிக்கு மிகாமல் எழுதவேண்டும் என்று கடடளையிட்டது என் நினைவில் இன்னும் வட்டமிடுகிறது!.

மானுடம் வளர்ச்சி நோக்கியது. சிந்தனைகளும் சிக்கல்களும் புதியனவாகத் தோன்றும். சான்றாக நான்கடி கொண்டு தனிச்சொல் பெற்று அமைவது நேரிசை வெண்பா என்பது அனைவருக்கும் தெரியும். தனிச்சொல் இல்லாமல் நான்கடியாய் வந்தால் அது இன்னிசை வெண்பா என்பதும் தெரியும். ஆனால் தனிச்சொல் பெற்று மூன்றடியால் வந்தால் அது என்ன பா? இரண்டாம் அடிக்குப் பதிலாக மூன்றாவது அடியில் தனிச்சொல் பெற்று வந்தால் அது என்ன பா? ஒரு நேரிசை வெண்பாவில் கனிச்சீர் வந்துவிடுமானால், அதற்கு ஆயுள் தண்டனை கொடுத்துவிடலாமா? வெண்டளை தவிர்த்துப் பிற தளை வந்துவிடுமானால் அப்போது அது என்ன பா? எத்தனைப் பேருக்கு இது தெரியும்?

ஏதோ எனக்கு மட்டுந்தான் தெரியும் என்பது போல நான் எழுதுவதாகக் கருதிவிடக்கூடாது, நாம் கவனிப்பதில்லை! அவ்வளவுதான். அதுபோலவேதான் எட்டடிதான் கொச்சகக்கலி வரவேண்டும் என்பது விதியில்லை. அது வழக்கியல் மரபு. பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபின் மாற்றம். இந்த மாற்றம் வலிந்து அமையக்கூடாது. தம்பி வசந்தராசன் தான் எழுதிய பாவை இலக்கியத்தைப் பத்தடிகளால் புனைகிறார் என்றால் சிந்தனை ஓட்டம் அப்படி! செய்திகளின் சாரம் அப்படி! இன்னும் பறையறைந்து சொல்லப் போனால் தலைமுறைப் பாவையின் பாடுபொருள் தமிழிலக்கியம் இதுவரை காணாதது! தற்கால முகநூல் கண்டது!. முற்றிலும் வேறுபட்டதொரு பாடுபொருளை மாறுபட்டதொரு வடிவத்தில் சொல்வதற்குப் படைப்பாளனுக்கு உரிமை உண்டு!

பத்தடி பாடினாலும் பாலுணர்வு கண்டதில்லை

கையாலாகாதவன் மரபினைப் பின்பற்ற இயலாமைக்கும் வல்லாளன் படைப்பில் அது மாற்றம் பெறுவதற்கும் வேறுபாடு உண்டு. திருவெம்பாவை உள்ளிட்ட அத்தனைப் பாவைகளும் அவற்றுள் வரும் பெண்கள் வாய்மொழியாக அமைந்தவை. தலைமுறைப் பாவைதான் படைப்பாளன் வாய்மொழியாக அமைந்தவை. ஆம்!. ஓர் ஆண் பாவை பாடியிருக்கிறான்!  கொழுநனோடு கொஞ்சிய பாவைகள் உண்டு!. இஞ்சியையும் மஞ்சளையும் ஏற்றமிகு தமிழையும் பாடிய பாவைகள் உண்டு. இறைவனைப் பாடிய பாவைகள் உண்டு! இறைவனையே கணவனாக வேண்டிய பாவைகள் உண்டு! மழைவேண்டிய பாவைகள் உண்டு! மார்கழியில் தொடங்கித் தையில் முடிந்த பாவைகளும் உண்டு. தம்பி வசந்தராசனின் பாவை தலைமுறைப்பாவை! தன் முன்னோர்களின் பெருமை பேசும் பாவை! தமிழ்ச் சான்றோர்களின் தியாகத்தை எடுத்துரைக்கும் தண்டமிழ்க் காப்பியம்! தான் வாழ வாழ்ந்த தலைமக்களையும் தமிழ் தழைக்க வாழ்ந்த தாளாளர்களையும் தானும் போற்றிப் பிறரையும் போற்றுங்கள் என வேண்டி முரசு கொட்டும் வேறுபட்ட பாவை இந்தத் தலைமுறைப் பாவை!

வீர முனுசாமியின் வெற்றிப் பரம்பரை

தலைமுறைப் பாவை என்னுந் தலைப்பு மட்டுமே மரபு சார்ந்தது, கட்டுமானம் கொச்சகக்கலியாக அமைந்தாலும் பத்தடிப் பாவை என்பதால் அதுவும் புதுமையே. தமிழ்க்கவிதை வரலாற்றில் யாரும் சிந்திக்காத ஒரு சமுதாயக்களம். அது ஒரு புதுமை! ஒரு தனிமனிதன் தன் குடும்பம் சார்ந்த முன்னோர்களின் சொத்துக்களுக்கு வாரிசாக வருவதுண்டு. ஆனால் அந்த முன்னோர்களை இனிய இலக்கியத்தில் பாசத்தோடு பதிவு செய்வது வேறு. பெற்றவர்களுக்கு நூலை அர்ப்பணிப்பதோடு இதுவரை முடிந்து வந்த முன்னோர் வணக்கத்தை ஒரு சிற்றிலக்கியத்தின் பாடுபொருளாக ஆக்கி ஒரு மாபெரும் உள்ளடக்கப் புரட்சியைச் செய்திருக்கிறார் வசந்தராசன். அண்ணாமலையான் ஒருவனை மட்டும் பாடுபொருளாகக் கொண்டதுதான் திருவெம்பாவை! கண்ணபிரானை மட்டும் பாடுபொருளாகக் கொண்டதுதான் திருப்பாவை!. ஆனால் தலைமுறைப்பாவையில் பாடுபொருளாக ஒருவர் அல்லர் ஒரு பட்டாளமே இருக்கிறது!.

ஈரம்வாழ் நெஞ்சன்! இரும்பையுமே ஈர்த்துவக்கும்
சோரமே காணாத சொற்கற்பன் ! என்றைக்கும்
ஊரின் நடுமரம்! உண்ணக் கனிநீட்டும்!
ஊருணித் தாய்மை! ஒழுகும் மலைமார்பு!
ஆரத் தழுவுகின்ற அன்பின் பெருங்கடல்!
சேரன்தன் வில்லம்பாய்ச் செஞ்சொல் மணிதீர்ப்பு!
ஓரமே போகாத உயராண்மை! தன்நிழலைத்
தூரம் அனுப்பாத் தொடருச்சி வெங்கதிராம்
வீர முனுசாமி வெற்றிப் பரம்பரையின்
தீரம் உரைக்கவந்தேன்!”

எனத் தொடக்கம் செய்யும் வசந்தராசன் அனைத்து உறவுகளையும் இந்தப் பாவையில் பதிவு செய்திருக்கிறார். தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில்கூடப் பாட்டுடைத் தலைவனாகிய மன்னனின் தாயும் தந்தையும் மட்டுமே (இன்னாருக்கு இன்னார் வயிற்றில் தோன்றியவன் என்பது போல) கொளுவில் குறிக்கப்பட்டிருக்கின்றனர். பக்திப் பொருளைப் பாடினாலும் பாவை என்பது அகம் சார்ந்த இலக்கியம். பாட்டுடைத் தலைவர்களாகப் பலரையும் பதிவு செய்திருப்பதால் ஒருவகையில் புறம் சார்ந்த கையறுநிலையாகவும் கொள்ளலாம். கையறுநிலையில் பெருமையும் இழப்பும் குறிக்கப்படும். இதில் பெருமை மட்டும் குறிக்கப்படுகிறது. பிறப்பினால் மனிதன் என்றாலும் அவனை மனிதன் என ஏற்றுக் கொள்வது மானுடச் சமுதாயம். மானுடச் சமுதாயத்தின் முதல் அறிமுகம் பள்ளி. அந்தப் பள்ளியின் பெருமையைப் பாடுகிறார் கவிஞர்!

கவிஞன் வரலாற்றை எழுதுவதற்கும் வரலாற்றாசிரியன் கவிதை எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு. தலைமுறைப் பாவை கவிஞனால் எழுதப்பட்ட வரலாறு. எனவே கவிமணம் தவிர்க்க இயலாதது. அதனால் வரலாறு தடம் மாறுவதில்லை. மாறாகத் தேசிய நெடுஞ்சாலைப் பூக்களாகக் கவிநயம் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதைக் காணமுடிகிறது. ‘மனிதன் இரக்கத்தோடு வாழவேண்டும்’ என்பது கருத்து. ‘ஈரம் தான் வாழ ஒரு இடத்தைத் தேடி அந்த இடமாக முனுசாமியின் நெஞ்சைத் தேடி வாழ்ந்தது’ என்கிறது கவிதை. ஊரின் நடுமரம்! உண்ணக் கனிநீட்டும்! ஊருணித் தாய்மை!’ என்பது வள்ளுவத்திற்கு வசந்தன் எழுதிய கவிதை உரை!. ஓரம் போகாத உயர் ஆண்மையாம்! அடடா! தன் தீர்ப்புக்குக் கட்டுப்படுவர் என்பதனால் கோடிவிடக்கூடாது என்பதை அழகாகப் பாடுகிறார். ‘தன்னிழலைத் தூரம் அனுப்பாத தொடருச்சி வெங்கதிராம்என்று பாட்டனின் பண்பைப் பாடுகிறார். உச்சிப்பொழுதுக்கு முன்னும் பின்னும் கதிரவனின் நிழல் சாயும். சரியும்! முனுசாமி உச்சிச் சூரியனாம்! நடுநிலைக்கு இப்படியொரு உருவகம்! உவமம்!

பள்ளியையும் ஆசிரியர்களையும் பாடும் பாவை

பாவையரைப் பாட்டுடைத் தலைவராகக் கண்ட காப்பியங்கள் உண்டு. மறவர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்ட காப்பியங்கள் உண்டு. தான் படித்த பள்ளியைக் களமாக்கிப் பாடம் சொன்ன ஆசிரியர்களைப் பாட்டுடைத் தலைவர்களாக்கிய புதுமையை வசந்தன் இந்தப் பாவையில் செய்திருக்கிறார். ஒரு நூலைப் படிக்கிறபோது ஏதாவது கிடைக்காதா என்ற ஆர்வம் மேலோங்க அணுக வேண்டும்! ‘இவன் என்ன பாடிவிடப் போகிறான்? இதில் என்ன கிடைத்துவிடப் போகிறது?’ என்னும் மனப்பான்மையோடு அணுகினால் பார்வை மங்கும்! படைப்பில் புகையண்டும். பொங்கலுக்கு வாய்த்த புதுத்துணி என்பது ஆண்டுதோறும் மாறி வரும் ஆசிரியர்களைக் குறித்தது! ஒவ்வொரு பொங்கலுக்கும் புதுத்துணி என்பது குறிப்பு உவமம்! இது சிறுபான்மையாக இருந்தாலும் ஆசிரியர் அனைவரையும் வணங்கி மகிழும் இளைய நெஞ்சுகளின் இளகிய வெளிப்பாடாகக் கொள்ளலாம்! இன்றைக்கு நாம்பேசுகிற மானுடம் மனிதநேயம் எல்லாம் ‘பொதுநலச் சரிகை’ போர்த்திய போலிச் சுயநலம்! தம்பி வசந்தன் எழுதுகிறான் பாருங்கள்!

“எங்கும் உயர்த்தில் எம் பள்ளி வாரிசுகள்!”

இவன் அங்கே படிக்கப் போனது ஒரு மாணவனாய் “எம்பள்ளியாம்!” இலக்கணத்தின் தன்மைப் பன்மையை எப்படி இலக்கியமாக்குவது என்ற வித்தை இவனுக்குத் தெரிந்திருக்கிறது! ‘எங்கும்’ என்பது சிற்றூர், மாவட்டம், மாநிலம், நாடு என்பனவற்றைத் தாண்டி உலகளாவிய நிலையில் வாழ்ந்து வரும் மங்கலங் கிழார் பள்ளியில் கற்ற மாணவர் பலரையும் குறித்தது! பள்ளியைக் கற்பித்த கல்வி நிலையமாகக் கருதாது அதனைத் தம் உடைமையாகக் கருதிக் காக்க வேண்டுமென்பார் ‘வாரிசுகள்’ என்றார். வட்டாட்சியரிடம் சென்றால் இதற்கு வாரிசுச் சான்றிதழ் தரமாட்டார் என்பது வசந்தனுக்கும் தெரியும்! செங்கதிராய் எமை மாற்ற திங்களாய்த் தேய்ந்தார்கள் என்னும் கற்பனை அறிவியல் கண் கொண்டு நோக்குவார்க்குப் புலனாகாது. திங்கள் தேய்வதும் இல்லை வளர்வதும் இல்லை என்பது அறிவியல். ஆனால் ‘வளர்பிறை’, ‘தேய்பிறை’ என்பது கதிரவனுக்கு இல்லை.  திங்கள் தேய்வது கற்பனைச் சித்திரம்!. செங்கதிரோன் தேயாது நிலைத்திருப்பதும் கற்பனைச் சித்திரம்!

திங்கள் ஒரு புறமும் ஔிர்
செங்கதிர் ஒரு புறமும்
தங்கியிருந்திடினும் ஒளி
தாவுதல் உண்டது போல்

என்பார் பாவேந்தர்! திங்கள் தேய்வதற்கு ஒரு காரணத்தைத் தன் குறிப்பாகச் சொல்லுகிறான் கவிஞன்! அந்தக் காரணத்தின் நுண்ணியத்தில் இருக்கிறது கவிதை! ஆசிரியருக்கான இலக்கணத்தை அறிந்தவர்களுக்கு இது புரியும். நிலம்போலச் சகிப்புத்தன்மை, மலர்போல மென்மை, துலாக்கோல்போல நடுநிலை, மலைபோல அறிவுயர்ச்சி இவைகளெல்லாம் அவருக்கான இலக்கண வரையறைகள்! நாங்கள் குளிர்வது உங்கள் புகழ் ஒளி உலகெலாம் பரவவே என்னும் ஆசிரியர்களின் பரந்து பட்ட உள்ளக் குறிப்பைச் ‘செங்கதிராய்’ என்னும் சொல் உணர்த்தியது காண்க. ‘நீங்கள் நிமிரவே நாங்கள் குனிந்தோம்’ என்பது குறிப்பு. கண்டிப்பும் கரிசனமும் துணிவும் கனிவும் கொண்ட வேதியல் கலவையே ஆசிரியர் பணி என்பதைத் ‘திங்களாய்த் தேய்ந்தார்கள் தீயாய் ஒளிர்ந்தார்கள்’ என்னும் தொடரால்  உணரலாம்! இனித் தீயினின்றும் பிறப்பதே ஒளியாதலின் ஒளியைத் தீயாய் ஒளிர்ந்தார் என்றது என்னையெனின், தீ காரணம் ஒளி காரியம். வசந்தன் காரணத்தைக் காரியமாக்கி உரைத்தார்!. ‘சூரியப் பிறைகள்’ என்பார் தமிழன்பன்!. உள்ளடக்கம் சூரியனைப் போல் சுட்டெரிப்பன! அவைபற்றிய பாடல்கள் குறுகிய ஹைக்கூ வடிவம்! அது நிலவுக்குப் பிறை! இரண்டையும் இணைத்துத் தாம் எழுதிய நூலுக்குப் பெயர்வைக்கிறார் தமிழன்பன் ‘சூரியப் பிறைகள்’! தலைப்பே ஒரு கவிதை! இது தமிழன்பனுக்கு மட்டுமன்று, தலைமுறைப் பாவைக்கும் பொருந்தும்!

‘பொங்கு புதுப்புனலின் பேரருவிப் பாய்நதியாய்’ என்னும் அடியில் புனல், அருவி, நதி என்னும் பொருட்பெயர்களுக்குப் புணர்த்திக் காட்டியிருக்கும் அடைகள் அழகியல் படைப்பாளனின் அழகியல் உணர்வை வெளிப்படுத்துவனவாம்! இனிப் பொங்கு புனல், பாய்நதி என வினைத்தொகையாய்க் கூறியதனால் எப்பருவக் காலத்தும் வற்றாத நிலையைக் குறித்தது. ‘பேரருவி’ எனப் பண்படை புணர்த்தி நயாகராவைச் சிந்திக்க வைத்திருக்கிறார். ஆசிரியர்தம் கற்பிக்கும் நெறிமுறைக்குக் காட்டப் பட்டிருக்கும் உவமங்கள் திருக்குறளைப் போலப் பத்தினி உவமங்கள்! பொருளாகிய பள்ளி ஆசிரியர்களுக்கு அடைபுணர்க்காது உவமத்திற்கு அடைபுணர்த்த பாங்கு அவர்தம் உணர்ச்சியையும், சரளமான கற்பித்தலையும் உணர்த்துகிறது. நதியாய் என்னும் உவமத்தைப் பள்ளியோடு இணைக்க! ‘பள்ளி’ ஆகுபெயர் மாண்பு ஆசிரியர்க்கன்றிக் கட்டடத்துக்கு ஆகாமையின்! இப்போது படித்துப் பாருங்கள் பள்ளியைப் பாடும் பாங்கினை!

“தெங்கிளமை நன்றியினைத் தேடிச் சுமக்கின்ற
நுங்கிளமை நெஞ்சத்தார்! நூல்நிறைக்கும் ஆற்றலென
எங்கும் உயரத்தில் எம்பள்ளி வாரிசுகள்!
பொங்கலுக்கு வாய்த்த புதுத்துணிபோல் ஆசான்கள்
எங்களுக்கு வாய்த்தார்!செங் கதிராய் எமைமாற்ற
திங்களாய்த் தேய்ந்தார்கள்! தீயாய் ஒளிர்ந்தார்கள்!
இங்கும் மலையுச்சி ஏராள மாய்ப்படைத்த
பொங்கு புதுப்புனலின் பேரருவிப் பாய்நதியாய்த்
தங்குதடை யின்றித் தமிழ்வளர்க்கும் எங்களூர்
மங்கலங்கி ழார்ப்பள்ளி மாண்பினைக்காண் எம்பாவாய்!”

பள்ளியைப் பாடுகிறார். தொடர்ந்து அது உருவாக்கிய வாரிசுகளைப் பாடுகிறார்.

ஊரைத் தாயாகப் பாடிய ஒரே கவிஞன்

‘குருவராசப் பேட்டை’ என்பதன் மரூஉ குருவை! பேரிலக்கியத்தில் நாடுகாண் காதை, காடுகாண் காதை என்றெல்லாம் பாடுவார்கள். நாடு, நகர், பாடுவார்கள்! காடு, கரை பாடுவார்கள். படலங்கள் என்னும் பெயரால் பல நூறு பாடல்களைக் கம்பன் பாடியிருக்கிறான். ஆனால் பாவை என்னும் சிற்றிலக்கிய உள்ளடக்கத்தில் தான் பிறந்த மண்ணைத், தன்னை வளர்த்த மண்ணைத், தன்னை உருவாக்கிய மண்ணைப் பாடியவன் வசந்தராசனாகத்தான் இருக்க முடியும் என்பது என் பணிவான அனுமானம். அது மட்டுமன்று. அந்த ஊரின் பெருமைகளை நிரலாகச் சொல்லிக் கொண்டு வந்து உணர்ச்சி மேலிட்டால் பெண்ணாக அதாவது தாயாக உருவகம் செய்திருக்கிற படைப்பாளுமை பெரிதும் மெச்சத் தகுந்ததாகும்.

தருமம் வளர்த்தெடுக்கும்! தன்வியர்வை ஊற்றளித்துத்
திருவை விதைத்திருக்கும்! தென்பொதிகைச் தமிழின்
அருமை உணர்த்திவைக்கும்!ஆர்ப்பாட்ட மேதுமின்றிப்
பெருமைப் பயிர்வளர்க்கும்! பேராண்மை நீட்டும்!
கருமமே கண்ணாகிக் காலத்தின் கைரேகை
கருவில் பதித்துவைக்கும்! கண்முன்னே கன்னல்
திருமுறைகள் நூறாய்த் திருப்பதிகம் பாடவைக்கப்
பெறுகின்ற பேரறிஞர் பேசும் வயிறுடையாள்
ஒருமுகத்தாள் எங்கள் உயிர்நிறைக்கும் தாய்மண்ணாள்
குருவை இளநகர்காண்!”                                  

இந்தப் பாட்டில் ஒவ்வொரு வினைமுற்றுக்கும் இறுதியில் குருவை என்பதை இணைக்க வேண்டும்! சான்றாகத் தருமம் வளர்த்தெடுக்கும் குருவை! திருவை விதைத்திருக்கும் குருவை! என்றவாறு இணைத்துப் பொருள் காணவேண்டும். இப்படிப் பாடிவந்தவர் பேரறிஞர் பேசும் வயிறுடையாள் என்று ஊரை உயர்திணையாக்கிவிடுகிறார். பிறந்த மண்ணைப் பெற்ற தாயாக நோக்குகிறார். பழம்பெரும் ஓர் ஊரை இளநகர் என்று பாடுவது அதன் பெருமை நோக்கி!

ஊரின் இருபுறமும்  ஓய்ந்த இருகுளங்கள்!
தேரின் வடமாய்த் தெருக்கள்இவைநடுவே
சீராய்ப் பிரித்தபடிச் செல்லும் நடுச்சாலை!
நாரின்பூக் கட்டெனவே நன்றிணைந்த வீடுகள்முன்
பேரின்பம் பேசும் பெருந்திண்ணை! சூழ்ந்திருக்கத்
தூரெடுத் தூட்டும்  துணைதொடக்கப் பள்ளி !ஆங்குப்
பேரெடுத்தப் பேர்கள் பெருங்கூட்டம்!”

முதன் முதல் எழுதிய பொதுத்தேர்வுக்கான எண் நம்மில் எத்தனைப் பேருக்கு நினைவிருக்கிறது? எண்ணிப்பாருங்கள்! வசந்தராசன் இந்தப் பாவையில் குருவை தொடக்கப்பள்ளி மாணவனாகவே இருக்கிறார். ஓய்ந்த குளமாம்! மக்களும் விலங்குகளும் வாயாடி நீராடி வந்து போகிறவரைக்கும் அது ஓயாத குளம். போனபிறகு அது ஓய்ந்த குளம். திண்ணைப்பேச்சு கேள்விப்பட்டதுண்டு! திண்ணையே பேசிக் கேள்விப்பட்டதுண்டா? குருவராசப்பேட்டை வீட்டுத் திண்ணைகளும் பேசுமாம்! வீட்டுக்கு உரிமையாளரும் விருந்தினரும் வருவாரும் போவாரும் என அனைவரும் அமர்ந்து பேசி மகிழ்கிற திண்ணை அது. ‘இடத்தின் நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது’ என்பார்கள் இலக்கண அறிஞர்கள். குளம் நிறைந்தது என்றால் குளம் நிறையாது நீர்தான் நிறையும். நீரின் தொழில் குளத்தது வினையாகச் சொல்லப்பட்டதுதான் இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது என்பது. இலக்கணம் இலக்கியத்தை இனிமையாக்குவது இப்படித்தான்!

இளைக்காத் தமிழெடுத்த மங்கலம் கிழார்

தன் குடும்பப் பரம்பரை பாடும் வசந்தராசன் ஊரைப் பார்க்கிறார். பாடுகிறார். ஐம்பதுகளில் தமிழகத்தில் கல்விப் புரட்சி ஏற்பட்டது. மூடப்பட்ட ஐயாயிரம் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் அவ்வட்டாரத்து ஒருவர் மட்டும் தன்னந் தனியே முயன்று முப்பத்திரண்டு பள்ளிகளைத் திறந்திருக்கிறார். ‘அன்ன யாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்பானே பாரதி அந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டவர்தான் தலைமுறைப்பாவையின் தலைப்பாத்திரம் மங்கலம் கிழார். தறிநூல் மணக்கும் அந்த வட்டாரத்தைத் தமிழ் நூல் மணக்க வைத்த தமிழ்க்கிழார்.

யாத்த தமிழெடுத்து யாவர்க்கும் ஊட்டுதற்கே
காத்திருந்த பல்கலைக் கல்விக் கழகமாய்
மாத்தமிழால் மண்மணத்தை மாற்றிவைத்த கூத்தபிரான்!
………………………………………………………………………………………………
சேர்த்துவைத்துப் போராடி செந்தணிகை மண்மீட்ட
கூர்த்தமதியாளன்! கூடநின்ற போர்த்தலைவன்!
ஆர்த்துக் குதிக்காத ஆழ நடுக்கடலான்!
சீர்த்தமதி எங்கள் சீர்மங்கலங் கிழார்”   

இந்தப் பாடலில் அறிமுகம் செய்யப்படும் மங்கலங் கிழார் திருத்தணிகைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய சிலம்புச் செல்வர்தம் பக்கத்துணையாய் இருந்த பண்பாளர்! கூர்த்த மதியாளன் கூடநின்ற போர்த்தலைவன்!’. ‘ஆர்த்துக் குதிக்காத ஆழ நடுக்கடலான்’ என்னும் தொடர் அன்னாருடைய அமைதியான உருவத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர். தொடர்ந்து எழுதுகிறார்.

வித்தாய் வெடித்து விண்ணோக்கி எழுந்தபடி
கொத்தாய் தான்காய்க்கும் கொடுமையதன் கோலத்தை
மொத்தம் ஒழிக்கும் முனைப்புதான் கல்வியெனச்
சித்தர் கிழாரவரின் சிந்தை குதித்ததனால்
எத்திக்கும் உண்ண இளைக்காத் தமிழெடுத்துச்
சத்துண வாக்கினார்! சங்கத் தமிழ்க்கடலின்
முத்தெடுத்துத் தந்தார்! முழுத்தணிகை முற்றத்தில்
ஒத்தையாய் உள்நுழைந்து ஊர்பதி னெட்டையும்
தத்தெடுத்துக் கொண்டு தமிழர்நம் நாட்டுக்குப்
புத்தாண்டாய் வந்தார்! புகழ்வணங் கெம்பாவாய்!”                                

பிறவியினால் மனிதன்தான்! ஆனால் சமுதாயத்தில் தோற்றமே ஒருவனை மனிதனாக்கிவிடாது. கற்றவனுக்கும் கல்லாதவனுக்கும் உள்ள வேறுபாட்டினை விலங்கொடு ஒப்பிட்டுக் காட்டும் வள்ளுவம் ஓர்க! இந்த உண்மையை உணர்ந்த கிழார் பதினெட்டு ஊர்களையும் தத்தெடுத்துக் கொண்டாராம். உயர்திணையைத் தத்தெடுப்பதை அறிந்தார்க்கு ஊர்களையே தத்தெடுப்பது புதுமைதானே! அந்தப் புதுமையைத்தான் வசந்தராசன் பாடியிருக்கிறார்.

தந்தையைப் பாடும் தனையன்

பாவைகள் பாடும் பாவை இலக்கியத்தில் தந்தையைப் பாடும் தனையனாகக் காட்சியளிக்கிறார் வசந்தராசன்! மன்னர்களையே பாட்டுடைத் தலைவர்களாகப் பாடிவந்த தமிழ்மரபில் தந்தையையும் பாட்டுடைத் தலைவர்களில் ஒருவராக்கி மரபிலும் புரட்சி செய்திருக்கிறார் கவிஞர். கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளத்துக்குச் சொந்தக்காரர் துரைவேலர் என்பதையும் வாய்ச்சொல் வீரராக இல்லாமல் வினைமுடிக்கும் வீரராக வாழ்ந்திருக்கிறார் என்பதையும் தமிழ் சொட்டச் சொட்டப் பாடியிருக்கிறார்.

துரைவேலர் எந்தையோ தொண்டர்க்குத் தொண்டர்!
நிறைமனத்தன்! நெஞ்சுக்கு நேராண்மை யாளனவன்!
திரைபோட்டுப் பேசத் தெரியாத தேன்கிண்ணம்!
விரைந்து செயலாற்றும் வேல்வீச்சின் வேகம்!
அரைத்துவைத்த சந்தனத்தை அள்ளித் தெளித்தாற்போல்
உரைவீச் சிருக்கும்! தமிழ்தெலுங்கு இந்தியெலாம்
கரைபுரளும்! காதுகளோ தேர்த்திருவி ழாகாணும்!
குறையாத பேச்சாற்றல் கூட்டத்தைக் கட்டிவைக்கும்!
தரைகூட மூச்சுவிடத் தத்தளிக்கும்! தாள்நெருக்கும்!
துரைவேலர் சீர்பாடித் தூள்படுத்து எம்பாவாய்”           

துரைவேலனார் உரைகேட்கக் கூடுவார்கள் என்பதைத் தரைகூட மூச்சுவிடத் தத்தளிக்கும்! தாள் நெருக்கும்!’ என்ற தொடரால் குறிக்கும் கற்பனைக் கொடுமுடி! ‘சந்தனத்தை அரைத்துத் தெளித்தாற் போல்’ என்னாது ‘அரைத்து வைத்த சந்தனத்தை அள்ளித் தெளித்து’ என்று பாடியது துரைவேலனாரின் புலமைத் தேக்கத்தைக் குறித்தது. கேட்பவர்தம் காதுகளுக்கு வேலனார் பேச்சு தேர்த்திருவிழாவின் ஆரவாரத்தை நினைவூட்டுமாம். ‘காதுகளோ தேர்த் திருவிழா காணும்!’ என்ன அழகிய கற்பனை? இதற்கு முன்னாலேயே,

முந்தைத் தலைமுறையின் மூச்சுத் தொடர்ச்சிதான்
எந்தை துரைவேலர்! இந்திமொழிப் பண்டிதர்
சொந்த முகங்களுக்கும் சொர்க்கமாய் வந்தவர்!
விந்தையாய்ப் பேசி விளாசும் கருத்தாளர்!
நொந்த இதயத்தை நேரணைக்கும் தாயாளர்!
எந்தப் பொதுத்தொண்டும் அல்வாவின் துண்டன்றே
முந்தி பொறுப்பேற்கும் மூச்சாளர்! தொண்டரவர்
நொந்தாலும் தன்மானம் தான்நொடிக்காப் பேராளர்
வந்துதித்த வல்லெழுத்துவீறார்ந்த எம்குருவைச்
சிந்தை குளிரவந்த சீர்மகன்காண் எம்பாவாய்!”                          

மாதா, பிதா, குரு, தெய்வம் என்னுந் தொடர் மூன்று பொருள்களை உள்ளடக்கியதாம். இந்நால்வரும் ஒத்தவர் என்பது ஒன்று. மாதா, பிதா, குரு ஆகிய மூவரும் தெய்வத்திற்கு இணையானவர் என்பது மற்றொன்று. மாதா, குரு, தெய்வம் ஆகிய மூவரும் பிதாவுக்கு இணையானவர் என்றும் குரு என்பவர் மாதா, பிதா, தெய்வத்திற்கு இணையானவர் என்றும் கொள்ளலாம். சிந்தனைகள் இத்தொடர் பயனிலை இல்லாமல் அமைந்ததனால் இத்தகைய சிந்தனைகள் எழுவதைத் தடுக்க இயலவில்லை. இந்தப் பின்புலத்தில் ‘வீறார்ந்த எம்குருவைச் சிந்தை குளிரவந்த சீர்மகன்என்ற தொடர் அடர்த்தி கூடுவதைக் காணலாம்!

தனித்திருந்து வாழும் தவமணி தாய் கன்னியம்மாள்

பாவை இலக்கியத்தில் பலரையும் பாடியிருக்கிறார் இராசன். அவர்களைப் பாடவேண்டும் என்பதற்காகவே இலக்கியம் செய்திருக்கிறார். அஃறிணை, உயர்திணை எனப் பாடுபொருள் பலவானாலும் தாய் கன்னியம்மாள் ‘தனித்திருந்து வாழும் தவமணியாய்த்’ திகழ்கிறார். தாய் அல்லவா?

“இந்தக் கவிப்போத் திருந்த குகையாளர்
விந்தை உழைப்பாளி! வேராய்ப் படர்ந்தெம்மை
எந்தை உயர்த்த இணையாய்த் தம்குருதி
தந்த திருவுளம்! தணியாத காருளம்!
எந்தாய்கன் னி(ய)ம்மாள் கவிதைக் கருவறை!”

எனத் தாயைத் தானிருந்த குகை என அறிமுகம் செய்த கவிஞர், தமது கவிதைகளுக்கும் அவரே மூலம் என்பதை உணர்த்த கவிதைக் கருவறை என முடித்துக் காட்டுகிறார். மாளாத காதலால் மறுபடியும் பாடுகிறார்.

“வரிநெய்த பாட்டுக்குள் வந்துவிழும் பாநயம்போல்
தறிநெய்த தாய்வானம்! தண்ணிலவு கன்னியம்மாள்!
அறிவாயா என்அன்னை ஆற்றலதன் ஆழுயரம்?
எரிபசியி னூற்றை இமையிறகால் மூடிவைக்க
உறிச்சோற்றுப் பாசத்தில் ஊட்டிகுளிர் தோற்றொடுங்க
விரிவானம்   வெட்க விழுமழையால் விக்கிநிற்கக்
கறிசோறாய்க் கூழ்கூட கைபட்டால் காட்சிதரும்!
முறியாத பேருழைப்பின் மூச்சுக்காற் றானவள்தான்
விரிசிறகின் தாய்ப்பாசம்! வெண்பாவில் நேரிசை!அத்
திருப்பெயரைச் சொல்லிப்பார்! தித்திப்பாய் எம்பாவாய்!”

பெருமிதத்தோடு பாடுகிறார்! ‘அறிவாயா என் அன்னை ஆற்றலதன் ஆழுயரம்? நுண்ணியம் தெரிகிறதா? அன்னையின் ஆற்றல் அந்த ஆற்றலின் ஆழம் மற்றும் உயரம்! நுண்பொருளுக்கு நீள அகலம் சொன்ன கவிஞன். இது ஒரு மரபுவழிச் சிந்தனை! காதலுக்கு அளவு சொன்னாள் சங்கத் தலைவி!  ‘நிலத்தினும் பெரிது! வானினும் உயர்ந்தன்று! நீரினும் ஆரளவின்று’ என் தலைவனோடு நான் கொண்ட நட்பு’ என்று. காதலுக்கு அளவு சொன்னாள் அவள். தாய்மைக்கு அளவு சொன்னார் தம்பி வசந்தராசன்! இதுதான் மரபுக் கவிதை! பாசம் நுண்பொருள்! குளிர்ச்சியான பொருள்! பாசம் தணிவிக்கும்! எரியாது! உதகையில் ஆண்டுமுழுதும் குளிரும். தாய்மை எப்போதும்  தண்ணென்று இருக்கும் தமிழ்க்கவிதை உலகில் தட்ப வெப்ப நிலையைத் தாய்ப்பாசத்திற்கு உவமம் கண்டதுண்டா? இயேசு தொட்டார்! பச்சைத் தண்ணீர் பழரசம் ஆனது! கன்னியம்மாள் கைதொட்டுக் கொடுப்பது கூழை! என்ன அதிசயம் அது கறிசோறு ஆகிறதாம்! பேரன் பேத்தி பிறந்த காலத்திலும் பெற்ற தாயின் பெருமை பேசும் பெருங்கவிஞன்! இவன் அன்னையர் தினத்தைப் பாடியவனல்லன்! அன்னையையே பாடியவன்!.

உறவுகளும் சான்றோரும் ஊர்வாழ உழைத்தோரும்

தாய், தந்தை, தங்கை, தம்பி, பாட்டன், பாட்டி என உறவுகளைப் பாடியதைத் தொடர்ந்து ஊர்வாழத் தாம்வாழ்ந்த உத்தமர்களைப் பாடுகிறார். ஆசிரியர் குப்புசாமியைப் பாடுகிறார். பாவை இலக்கியத்தில் பள்ளிக்கூட ஆசிரியர் ஒரு பாத்திரம்! தாய்மாமன் குப்புசாமி – அவர் மனைவி வள்ளியம்மாள்! வள்ளியம்மாள் வசந்தராசனின் அத்தை! அந்த அத்தை செய்த நன்றிக்கடனைக் கவித்துவத்தில் பதிவு செயதிருக்கிறார். எப்படி? இப்படி!

ஆழ்தமிழ் ஆங்கிலம் அண்டுகிற இந்தியொடு
சூழ்தெலுங்கு சமஸ்கிருதம் சொக்கவைக்கும் ஆற்றலினால்
பாழறக் கற்றவர்! பன்மொழி வித்தகர்!
ஆழ உழுதுழைத்த ஆசிரியர்! குப்புசாமி!
வாழ்க்கைத் துணையவர்க்கு வள்ளியம்மை அத்தை!என்
வாழ்க்கைத் துணைக்கு வாய்த்த தகப்பன்தாய்!”

இந்தப் பாட்டில் நன்றிக் கடன் எங்கே வந்தது? எப்படி வந்தது? குருவராசப்பேட்டை, வளர்புரம், அத்திமாஞ்சேரிப்பேட்டை, மின்னல் நரசிங்கபுரம், அம்மையார்குப்பம், சத்திரவாடா, பொதட்டூர்ப் பேட்டை, மத்தேரி, வங்கனூர், புதுப்பேட்டை, நாராயணவனம், புத்தூர், இராமகிருஷ்ண ராஜுபேட்டை, திருவள்ளூர், சிந்தலப்பட்டடை, மத்தூர், திருவாலங்காடு, பாராஞ்சி  என ஊர்களைப் பாடுகிறார். கருஞ்சட்டை பெரியார் தொடங்கிப் பேராசிரியர் கங்காதரன் வரைத் தமிழ்ச்சான்றோர் ஒவ்வொருவரையும்  பாடிவருகிறவர் ஊர்களையும் தந்தையுடன் பிறந்த வள்ளியம்மாளையும் அவர் கணவர் குப்புசாமியையும் பாடியிருப்பது சரியே! ஆனால் வள்ளியம்மாளின் பெருமையைத் தன் மனைவியைத் தந்த தாய் என்று பாடுகிறார். அதாவது அத்தையை மாமியாக்கிப் பாடுகிறார். தந்தைவழி அத்தை என்பது மூல உறவு. தன் மனைவிக்குத் தாய் என்பது கிளைஉறவு!  தனக்கு மாமி என்பது சல்லி உறவு! மரபு என்பது இதுதான்! ஆணிவேர், கிளைவேர், சல்லிவேர் என்று மரபின் அத்தனை வேர்களையும் பாடுகிறார். இவருடைய மாமனார் குப்புசாமி அத்தையின் கணவர் மட்டுமன்று  தந்தையின் தாய்மாமன் மகன்! இவன் தந்தை என்னோற்றான் கொல்?’ என்பது மட்டுமன்று நன்றி. இவளைப் (என் மனைவியை) பெறுவதற்கு என்ன தவம் செய்தேனோ என்பதும் நன்றிக் கடனே! குறிப்பு மொழி, மனைவிக்குச் சொல்ல வேண்டிய நன்றியை மாமிக்குச் சொன்னதால்!

குத்து விளக்கான குடும்ப விளக்கு

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் என்பார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். வசந்தராசன் இல்லாள் சாந்தகுமாரி தம் சித்தத்தைத் தம் குழந்தைகள் மேல் வைத்தாராம்.

“சித்தமெலாம் மக்களெனும் சீரால் நிறைந்தவளை’’

என்று பாடுகிறார். சிவன் மீது சிந்தை வைத்தாரை அவர் பாடினார். சிறார்கள் மீது அன்பு காட்டிய இவரை வசந்தராசன் பாடுகிறார். ஏனைய பெருமைகளையெல்லாம் நிரல்படுத்தி இந்த வரியைப் பாட்டின் இறுதியாக அமைத்துக் காட்டுகிறார். அத்தை மகள் என்பதால் உரிமை கொண்டாடும் வசந்தராசன் அந்த அம்மையார் செய்த இல்லறக் கடமைகளை, மாண்புகளாகக் காட்டுகிறார். திருமணத்திற்கு முதல்நாளே தனிக்குடித்தன ஏற்பாடுகளை செய்து முடித்த பிறகே திருமணம் செய்து கொள்ளும் தற்காலத்தில் தன் மாமன், மாமி, நாத்திமார் என அனைவர்தம் தேவையையும் உணர்ந்து தன் இல்லறப் பொறுப்புணர்ந்து செயல்பட்ட சாந்தகுமாரியை இலக்கியத்தின் பாடுபொருளாக்கியது மிகவும் சரியே. குடும்ப விளக்கில் பாவேந்தர் தங்கத்தை இப்படித்தான் படைத்திருக்கிறார். அது ஒரு கற்பனைப் பாத்திரம் எனத் தோன்றாத வண்ணம் பாவேந்தர் செதுக்கியிருப்பார். வசந்தராசனோடு சாந்தகுமாரி வடம் பிடித்த இல்லறத்தேர் மொத்த குடும்பத்தின் மூலஸ்தானத்தில் வந்து நிலைகொள்கிறது.

“அத்தை மகளென் மொத்த சுக வாழ்வினையும்
சத்துண வாக்கிய சாந்த குமாரியாள்!
மொத்த குடும்பத்தின் மூலவர் ஆனவள்!
தத்தெடுத்த தேபோலென் தாய்தந்தை தங்கையரை
ஒத்த மனத்தினால் ஓங்கி  உயர்ந்தவள்!
வித்தைகள் கற்ற வெளிச்ச நதியவள்!
எத்தனை என்நீளம்! எத்தனை என்ஆழம்!
அத்தனைக்கும் வித்தாய் அவளாய் இருப்பவளை
சித்தமெலாம் மக்களெனும் சீரால் நிறைந்தவளை
எத்திசைக்கும் சொல்ல எழுவீர்நீ ரெம்பாவாய்!”

மனைவி பெருமையை மற்றவர் அறிதல் வேண்டும் என்று இது பாடப்பெறவில்லை என்பதை உணர்தல் வேண்டும். யாருக்கும் கிட்டாத  இல்லறத்துணை தனக்குக் கிட்டிய ஆனந்தக் களிப்பைக் கொச்சகக்கலியிலே கொண்டு வந்த பூரிப்பு!. சவலை தட்டிப் போன தனது வாழ்வைப் பாசம், பரிவு எனும் சத்துணவு தந்து சவலை போக்கிய மாதரசியாக மனைவியைச் சித்திரிக்கிறார். தற்காலப் படைப்பாளர்களில் சொந்த மனைவியைத், தன் பிள்ளைகளின் தாயை எத்தனைப் பேர் இப்படிப் பாடுகிறார்கள்? பரவசமடைகிறார்கள்? தன்னுடைய மனைவி பெருமையைத் தன் பெருமையாகக் கருதும் பரந்துபட்ட கவிதையுள்ளம் இப்படித்தான் பாடும்! பரநலம் பேணுவதுதானே பாவலர்க்கு அழகு! சத்துணவு தந்த தாயையோ மனைவியையோ நாம் சந்தித்ததுண்டு!. சக வாழ்வையே சத்துணவாக்கிய மனைவியை வசந்தன் காட்டித்தான் நாம் பார்க்கிறோம்! அருமை!

தமிழ்போல் தழைக்கும் தலைமுறை

தன்னுடைய தலைமுறையை இருபத்தெட்டுப் பாடல்களால் பாடிய இராசன் தனக்குப் பின்வரும் தலைமுறையை ஒரு பாட்டில் பதிவு செய்திருக்கிறார். மக்கட் செல்வத்தின் மாண்புணரும் ஒரு தமிழ்த் தந்தையின் பாட்டனின் மரபுரிமை மணம் வீசும் பாடல் அது.

“தங்க மனச்சுரங்கத் தாய்மை இளந்தேவி!
பொங்கு புனலன்பாய்ப் பாயும் இளங்குமரன்!
எங்கள் நறவாய் இளம்பா ரதியென்றென்
சிங்கப் பரம்பரைக்குச் செங்கதி ராய்மூவர்!
சிங்கம் சிவக்குமார் சீர்நித்யா ரம்யாவாய்
இங்கிவர்க்கு வாய்த்த இணையர் பெரும்பேறு!
பொங்கலாய் வாய்த்த பெயர்த்திபே ரன்களெலாம்
நங்கூரப் பேரன்பாய் தனிஷ்தா பிரசீதா
தங்கநிறத் தீக்ஷணா தன்வந்த்சாய் இனியாளாய்
எங்கள் தலைமுறைகாண்! வாழ்த்திடுவீ ரெம்பாவாய்!”

என்று. மகன் வயிற்றுப் பேரப்பிள்ளைகளே வாரிசுகள் என்பது வரலாறு மற்றும் நடப்பியல் ஆயினும் சட்டத்தின் அடிப்படையில் கவியுள்ளம் என்ற அடிப்படையிலும் மகள் வயிற்றுப் பேரப்பிள்ளைகளையும் மருமகள்களையும் தலைமுறைப் பந்தத்தில் பிணைத்துக் காட்டிய சதுரப்பாடு பெரிதும் பாராட்டத்தகுந்தது. ஏகாம்பரம் வசந்தராசன் ஆனார். அவர் வாரிசுகள் இளந்தேவி, இளங்குமரன், இளம்பாரதி என்று அணிசெய்கிறார்கள். பேரர்களின் பெயர்கள் தமிழகத்துக் காலச்சூழலை ஒளிபரப்புச் செய்கின்றன. இராசன் நினைத்துத் தன் வல்லாண்மையைக் காட்டியிருந்தால் தனித்தமிழ்ப பெயர்களைப் பேரப்பிள்ளைகளுக்குச் சூட்டியிருக்கலாம். உரிமை கொண்ட தலைமுறையின் வாரிசு இவராதலின் தன் வாரிசுகளின் குடும்பங்களை உரிமைக்குழுக்களாக அனுமதித்திருக்கிறார் என்பதை மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். இந்தப் பாவை இலக்கியம் பிந்தைய தலைமுறையின் தோற்றத்திற்குப் பிறகு என்பதையும் நினைவிற் கொண்டால் இந்த வடமொழிப் பெயர்களின் பயன்பாட்டைத் தவிர்க்க முடியா நிலையை அறிந்து கொள்ளலாம். எனினும் தமிழ் மண், தமிழ் மரபு, தமிழ்ச் சான்றோர், மொழியினத் தொண்டு, இனம் வாழ தனையிழந்தோர் புகழ்பாடும் இந்தக் காப்பியத்தில் இந்தச் சொற்கள் கொஞ்சம் இடமாறு தோற்றப்பிழையாகத்தான் தோன்றுகின்றன.

“திங்கள் கடல்வானம் தீ காற்று பூமியோடு
செங்கண் உயிரினத்துச் செல்தடங்கள் உள்ளவரை
பொங்கு தமிழ்மூச்சுப் பேர்பெருமை பேசுவரை
எங்கும் அணுக்குள் எதிர்நேர் கூறிருந்து
அங்கிங் கெனாதபடி அண்டப் பெருவெளியின்
அங்கம் நிறைத்திருந் தார்க்கின்ற நாள்வரைக்கும்
சிங்கநிகர்த் தன்மானம் சீர்வானைச் சின்னதாக்கும்
வங்காத் தலைமகுடம் வாழும் நிறைகுடமாய்
எங்கள் தலைமுறைகள் இன்னும்பல் லூழிகாலம்
பொங்கிப் புகழ்ந்தாடப் போற்றிடுவீ ரெம்பாவாய்!”

என்னும் இறுதிப்பாடல் தொய்வினைத் தூக்கி நிறுத்திவிடுவதை நாம் மறுப்பதற்கில்லை. கற்பனையின் உச்சத்திற்குச் செல்ல முயலும்,

“திங்கள் கடல்வானம் தீ காற்று பூமியோடு
செங்கண் உயிரினத்துச் செல்தடங்கள் உள்ளவரை
பொங்கு தமிழ்மூச்சுப் பேர்பெருமை பேசுவரை
எங்கும் அணுக்குள் எதிர்நேர் கூறிருந்து
அங்கிங் கெனாதபடி அண்டப் பெருவெளியின்
அங்கம் நிறைத்திருந் தார்க்கின்ற நாள்வரைக்கும்”

என்னும் வரிகள் ஏக்கத்தையும் பெருமிதத்தையும் நம்பிக்கையையும் ஒருசேர வெளிப்படுத்துவதாய் அமைந்து பாவையின் தொடக்கத்திற்கு ஏற்ற முடிவாய் நிறைவு பெறுகிறது. முனிரத்தினத்தின் மகன் வீரராகவன். வீரராகவன் மகன் மாயாண்டி. மாயாண்டி மகன் முனுசாமி. முனுசாமி மகன் துரைவேலு எனப் பெருமித நடைபோடும் குருவராசப்பேட்டை தலைமுறையை இந்தத் தலைமுறைக் கவிஞரும் துரைவேலுவின் மகனுமான மாதவரத்தார் துரை. வசந்தராசன் பாடியிருக்கிறார். தன் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமான முன்னோர்களைப் பாடியதால் நன்றி பாராட்டுதல், மூத்தோர்களை நினைவுகூர்ந்து வணங்கும் சமுதாய நெறிகாட்டல் எனப் பாவைக்குப் புதுத்தடம் காட்டியிருக்கிறார். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிராமல் மாற்றியமைத்த பாடுபொருளால் தமிழ்க்கவிதை உள்ளடக்கத்தின் பரிமாணத்தைப் பெருக்கிக் காட்டிச் சிறந்து திகழ்கிற பாவை நம் தலைமுறைப் பாவை!

தலைமுறைப் பாவையில் மொழியாளுமை

கவிதை மொழி இலக்கண மொழியாகவே அமைந்துவிடக் கூடாது. முற்றிலும் கொச்சையாகவும் இருந்துவிடக் கூடாது. வட்டார வழக்குச் சொற்களாகவும் புழங்கிவிடக்கூடாது. இவை மூன்றும் ஏற்ற, பொருத்தமான அளவில் அங்கங்கே கலந்து அமைய வேண்டும். கவிஞனின் மொழியாளுமையை இப்படித்தான் அளவிட முடியும். அளவிட வேண்டும். ‘தன்காயம் தோற்றாமல் சாணகல கொல்லை கட்டி வெங்காய நாத்துவிட்டு வெகுநாளா காத்திருந்தேன்’ என்பார் அழுகணி சித்தர். ‘கண்ணன் மனநிலையைக் கண்டு வரவேணுமடி’ என்றுதான் பாரதியார் எழுதினார். இலக்கணச் சுத்தமாக ‘கண்டு வரவேண்டுமடி’ என எழுதவில்லை என்பது காண்க.

‘மந்தையில் மாடு திரும்பையிலே அவள்
மாமன் வரும் அந்தி நேரத்திலே
குந்தி இருந்தவள் வீடுசென்றாள் அவள்
கூட இருந்தாரையும் மறந்தாள்’
தொந்தி சரியவே வேட்டி கட்டி அவன்
தூக்கி வந்தானொரு வெல்லக்கட்டி!”

என்று பாரதிதாசன் குந்தி, தொந்தி என்னும் வழக்குச் சொற்களைக் கையாண்டு கவிதையைச் சிறக்கச் செய்வார். ‘அஞ்சு ரூபாய் நோட்ட கொஞ்ச முன்னே மாத்தி மிச்சமில்லே காசு மில்ல’ என்பது அந்தநாள் அந்தமான் கைதி படப்பாடல்!. ‘கையில வாங்குனேன் பையிலே போடல காசு போன இடம் தெரியலே’’ என்பது பட்டுக்கோட்டையாரின் பாமர வழக்கு. ‘எலந்த பலம்’ கண்ணதாசனின் கொச்சை வழக்கு. தம்பி வசந்தராசன் தனது தலைமுறைப்பாவையில் தலைமுறைத் தமிழைத் தவழவிட்டிருக்கிறார்.

“காலையிலே பாவு!  கடும்பகலில் சீர்நெசவு!
மாலை மளிகை! மடியுடன் ஊர்வலம்!
ஆலைச்சங் கூத அடிநெருப்பைத் தானணைக்கத்
தோலைச் செருப்பெனவே தேய்த்தபின்தான் தீமுளைக்கும்!
நாளைய பாவடிக்கு நல்லிடம்நாட் டல்!பின்
இளைத்த அடுப்பு இறக்கிக் கொடுக்கக்
களைப்பைக் கழித்தல்! கவலை  உடன்கரைத்தல்!
கிளையுடன் திண்ணைகளில் கில்லா படித்தல்!
வேளைகள் இப்படி வேகமாய்க் கரையும்
காளைகள் ஊரைநீர் காணீரோ எம்பாவாய்!”

இந்தப் பாடலில் ‘பாவு’ என்பதும் ‘பாவடி’ என்பதும் ‘மடி’ என்பதும் தொழில்சார்ந்த வட்டார வழக்கு. கடும்பகலில் சீர் நெசவு என்பது தகுதி வழக்கு. ‘அடி நெருப்பை தான் அணைக்க’ என்பது கவிதை உருவகம். ‘களைப்பைக் கழித்தல்’ என்பது புதுக்கவிதை! கிளையுடன் திண்ணைகளில் ‘கில்லா படித்தல்’ என்பது வட்டார வழக்கு. குருவராசப் பேட்டையைக் குருவை எனக் குறுக்கியது மரூஉ.

தலைமுறைப் பாவையில் உவமச் சிறப்பு

கவிதையை மட்டுமன்று கவிஞனையும் வியப்போடு நோக்க வைப்பது அவன் பயன்படுத்தும் உவமங்களே. பொருள் புலப்பாட்டுக் கருவியாக மட்டுமல்லாது, கவிஞனின் அறிவு, புலமை, கற்பனை, முதலிய பன்முகப் பரிமாணத்தையும் படைப்பாளுமையையும் வெளிப்படுத்தும் கருவியாக உவமம் செயல்படுகிறது.   தம்பி வசந்தராசன் வழக்கம் போல் இந்தப் பாவையிலும் எளிய, அழகான, பொருத்தமான உவமங்களைத் தேவையான இடங்களில் இயல்பாக இணைத்துப் பதிவு செய்திருக்கிறார். அவை தனித்த பார்வைக்குரியவையாதலின் ஒன்றிரண்டு மட்டும் கட்டுரைக்காகச் சுட்டப்படுகின்றன.

“சேரன்தன்  வில்லம்பாய்ச் செஞ்சொல் மணிதீர்ப்பு!”

என்று தனது பாட்டனார் தீர்ப்புரையின் நேர்மை பற்றி ஓர் உவமத்தைச் சொல்கிறார். ‘வல்வில் ஓரி விடுத்த கணை குறி தப்புவதில்லை’ என்று சுரதா பாவேந்தர் கவிதைக்கு உவமம் சொல்வார். சேரனின் வில்லிலிருந்து புறப்படும் அம்பு கோணம் பிசகாது., குறி தவறாது செல்வதைப் போலச் சொல்லப்படும் நீதியும் நேராகச் சொல்லப்படும் என்கிறார். மற்றொரு இடத்தில் தன்னைச் சுமந்து பெற்ற தாய் வயிற்றை,

“இந்தக் கவிப்போத் திருந்த குகையாளர்”

என்னும் வரியில் ‘குகை’ என உவமித்துக் காட்டித் தன்னையும் கவிப்போத்து என நம்பிக்கை மொழிகிறார். ‘புலிசோர்ந்து போகிய கல்லளை போல’’ என்னும் புறநானூற்றுச் சிந்தனையும் தலைமுறைப்பாவையின் உள்ளடக்கம் போலவே பரம்பரைச் சொத்தாக வசந்தராசனுக்கு அமைந்துவிடுகிறது. ‘ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு’ என்னும் தெரு பற்றிய சங்க இலக்கிய உவமம் அங்குப் பெருவழக்கு. வசந்தராசன்,

“தேரின் வடமாய்த் தெருக்கள்!”

என்று பாடிக் குருவராசப்பேட்டை வரைபடத்தைப் பாவை இலக்கியத்தில் பதிவு செய்கிறார். தமிழ்நாட்டில் பெரும்பாலும் தெப்பக்குளம் இல்லாத திருக்கோயில்கள் அரிது. குருவையில் மாணிக்கவாசகர் மடாலயமாகக் கட்டப்பட்டுத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் சொற்பொழிவாற்றிய காரணத்தால் பின்னாள் திரு.வி.க. மாளிகையாக மாறி நிற்கும் கட்டடத்தைப் பாடுகிறார்.!

“கட்டடக் கல்லும் கனித்தமிழைப் பேசிடவே
நட்ட நடுவூரில் நங்கூரக் கப்பலெனத்
திட்டமிட்டுச் செய்த திரு.வி.க. மாளிகை!”

நட்ட நடுவூரில் என வழக்குமொழியைக் கையாண்ட வசந்தராசன், ‘நடுக்கடலில் நங்கூரம் பாய்ச்சிய கப்பலாகக் குருவையின் திருவிக மாளிகையை உவமிக்கிறார். மங்கலங்கிழார் உருவாக்கப்பட்டதைத் திட்டமிட்டுச் செய்த திரு.வி.க மாளிகை என மோனை அழகோடு முன்மொழிகிறார்.

“ஆர்த்துக் குதிக்காத ஆழ நடுக்கடலான்!”

என்று ஒரு வரி இந்தப் பாவையில் வருகிறது. மிக நுட்பமாக நான் ரசித்து மகிழ்ந்த வரி. கடலில் அலைகள் கரையில் இருக்கும் நடுக்கடலில் அலையிருக்காது. அது அமைதியாக இருக்கும். ‘ஆகுல நீர பிற’ என்பார் திருவள்ளுவர். ஆழமாகிய பக்குவம் இருந்தால் ஆரவாரம் இருக்காது! மையத்தில் நிலை கொண்டது குதிக்காது! ‘சீர்த்தமதி   சீர்மங்கலங் கிழாரு’க்குச் சொல்லப்பட்ட உவமம் இது! கடலுக்கு வந்த அடைச்சொற்களைச் ‘சீர்த்த மதி சீர் மங்கலத்தார்’ என்னும் பொருளோடு இயைபுபடுத்தி நோக்கினால் உவம ஆளுமை புரியக்கூடும்!. ஆண்டுதோறும் தேர்ச்சியடைந்து மேல் வகுப்பு மாறும் மாணவர்கள் தங்களுக்கான புதிய ஆசிரியரை எதிர்நோக்கியிருப்பதும் வந்தவரைக் கண்டு மகிழ்ச்சியடைவதும் அப்பருவப் பேரின்பம்! அழியாப் பெருநினைவு! வசந்தனுக்கும் அவர் நண்பர்களுக்கும் அந்த வாய்ப்பு கிட்டியதாம்!

பொங்கலுக்கு வாய்த்த புதுத்துணிபோல் ஆசான்கள் 
எங்களுக்கு வாய்த்தார்!

என்றெழுதுகிறார். நெசவுத் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்ட குருவராசப்பேட்டையில் உழவர் திருநாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது என்பதை உவமவழிப் பதிவு செய்யும் வசந்தராசன், ஒரு பொங்கல் போனால் மறுபொங்கல் வந்தால்தான் புதுத்துணி என்னும் நடப்பியல் உண்மையையும் குறிப்பாகப் புலப்படுத்தியது காண்க.!

நிறைவுரை

ஈரோடு தமிழன்பன் எழுதுவார்! “உனக்கும் வாழ்க்கைக்கும் நடுவில் மரணம் இருக்கிறது. உனக்கும் மரணத்திற்கும் நடுவே வாழ்க்கை இருக்கிறது. வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் நடுவே நீ இருக்கிறாய்” என்று. நான் எழுதுகிறேன்! வசந்தராசனுக்கும் வாழ்க்கைக்கும் நடுவே கவிதை இருக்கிறது. வசந்தராசனுக்கும் கவிதைக்கும் நடுவே வாழ்க்கை இருக்கிறது. கவிதைக்கும் வாழ்க்கைக்கும் நடுவே வசந்தராசன் இருக்கிறார். வசந்தராசனுக்கும் வாழ்க்கைக்கும் நடுவே மரபு இருக்கிறது!. மரபுக்கும் வாழ்க்கைக்கும் நடுவே வசந்தராசன் இருக்கிறார். வசந்தராசனுக்கும் மரபுக்கும் நடுவே வாழ்க்கை இருக்கிறது. ‘இமயமே தோற்கும் உயர்தமிழில் சொல்லெடுத்து அமரகவி நெய்ய ஆசையுறும் இவ்வசந்தன்’ எனத் தன் கவிதை இலட்சியத்தைப் பதிவு செய்திருக்கும் வசந்தராசன் ‘மரபுக்கவிதை எது?’ என்பதற்கு மேலும் ஒரு கவிதைப் பதிவைக் கல்வெட்டாய்ப் படைத்திருக்கிறார். “சொல் புதிது! சுவை புதிது! வளம்புதிது! பொருள் புதிது! சோதிமிக்க நவகவிதை! எந்நாளும் அழியாத மா கவிதை!” ஆம்! அவர் எழுதிய அமர கவி இது! அமர கவிகளுள் ஒன்று இது!

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *