படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 17

முனைவர் ச.சுப்பிரமணியன்

பேராசிரியர் முனைவர் கு.திருமாறன் எழுதிய ‘மூன்றாவது கண்’ ஒரு நக்கீரப் பார்வை

முன்னுரை

செய்யுள், கட்டுரை, சிறுகதை, நாவல் என்னும் இலக்கியத்தின் பன்முகப் பரிமாணங்களில் என்னைக் கவர்ந்ததும் நான் விரும்புவதும் கவிதையாகிய செய்யுளே!. அதற்கு அடுத்தபடியாக நான் பெரிதும் விரும்புவது கட்டுரைகளே. இதற்குக் காரணம் மூவர். ஒருவர் பேரறிஞர் அண்ணா. அடுத்தவர் அறிஞர் மு.வ.. மூன்றாமவர் கலைஞர். கலைஞர் முந்தைய இருவரைப் போல மெத்தப் படித்தவர் அல்லர். ஆனால் அவர் அன்றைய முரசொலியில் எழுதிய கடிதங்கள் எல்லாம் பொருண்மையால் கருத்து வேறுபாட்டுக்கு உரியனவாயினும் கட்டுமானத்தால் தமிழ்க்கட்டுரை இலக்கியத்திற்கு முன்னோடியாகத் திகழ்கின்றன. உரைநடையில் எழுதப்படுவனவெல்லாம் எப்படிச் சிறுகதை, நாவல் ஆகாவோ, அதுபோலவே கட்டுரையும் ஆகாது. கட்டுரை உரைநடையால் ஆனது. ஆனால் அது உரைநடையினும் வேறுபட்டது. அதனை மெய்ப்பித்துக் காட்டியவர்கள் இந்த மூவரும். இது என் பார்வை. இன்றையத் தமிழுலகில் ஏதும் தெரியாதவர்களின் துறையாகக் கவிதைத் துறை இருந்து வருகிறது. ஓரளவு தெரிந்தவர்கள் கூடக் கவனிக்காத துறையாகக் கட்டுரைத்துறை தனிமைப்பட்டுள்ளது. அந்தத் தனிமையைப் போக்கவந்த வல்லாளர் சிலருள் பேராசிரியர் கு.திருமாறனும் ஒருவர். அவர் எழுதிய ‘மூன்றாவது கண்’ என்னும் கட்டுரைத் தொகுப்பினைப் பற்றிய என் பார்வை இந்தக் கட்டுரையின் உள்ளடக்கமாக அமைகிறது. இது என் பார்வை. பார்வைகள் மாறுபடலாம்., மாறுபட வேண்டும்.

கட்டுரை இலக்கியம்

சிறுகதை, நாவல் முதலியன தவிர்த்துத், தன்வாழ்க்கை வரலாறு, பயணக் கட்டுரைகள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், உரை நூல்கள் முதலியனவெல்லாம் உரைநடையில் அமைந்தவையாகும். ஆனால் இவைகள் கட்டுரைகளே. கட்டுரை இலக்கியங்கள் அல்ல. இலக்கியக் கட்டுரை என்பது இலக்கியத்தைப் பற்றிய கட்டுரை. பழந்தமிழ் உரையாசிரியர்களுள் ஒருவரான நச்சினார்க்கினியர் பொருளதிகாரத்தில் கூறும் முதற்பொருள் அமைதியும் கருப்பொருள் அமைதியும் அகத்திணை, புறத்திணை முரணமைதியும் மிகச் சிறந்த இலக்கியக் கட்டுரைக் கூறுகள் அடங்கியனவாகும். அறிஞர் மு.வ. அவர்களின் நெடுந்தொகை விருந்து, குறுந்தொகை விருந்து, நற்றிணைச் செல்வம் முதலியன இந்தப் பகுப்பில் வரும்.

ஆனால் கட்டுரை இலக்கியம் என்பது இலக்கியம் சார்ந்துதான் வரவேண்டும் என்பதில்லை. இலக்கியம் சார்ந்தும் வரலாம். வேறு எந்தப் பொருள் பற்றியும் அமையலாம். ஆனால் அது ஒரு சுவையான இலக்கியத்தைப் படித்த உணர்வினைத் தரவேண்டும். பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ‘வெள்ளை மாளிகையில்’ அறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் கம்பர், இலக்கியச் சாறு, ஆய்வுக்கட்டுரைகள், மறைந்த தினமணி ஆசிரியர் திரு. ஏ.என். சிவராமன் அவர்கள் அப்போலோ விண்வெளிப் பயணம் பற்றித் தினமணியில் எழுதிய கட்டுரைத் தொடரும் ‘ஏன் இந்த வியட்நாம் போர்?’ என்னும் படைப்பும் ‘ஆனந்தவிகடன் துணை ஆசிரியர் திரு. மதன் அவர்கள் எழுதிய ‘வந்தார்கள்! வென்றார்கள்! முதலியனவும், அறிவியல் மற்றும் வரலாறு சார்ந்த பொருண்மைகளை இலக்கியமாகப் படைத்துக் காட்ட முடியும் என்பதற்குச் சான்றுகள் ஆகும். அவசரநிலைக் காலத்தில் முரசொலி நாளிதழில் கலைஞர் எழுதிய கடிதங்கள் தமிழ்க்கட்டுரை இலக்கிய வரலாற்றில் தனித்த இடம் பெறுதற்குரியன. பரந்த படிப்பும் ஆழமான சிந்தனையும் எளிவந்த மொழியாளுமையும் தனித்தன்மையும் வல்லார்க்கே கட்டுரையை இலக்கியமாக வடித்தெடுக்க இயலும். வெற்றுத் தரவுகளும் புள்ளி விவரங்களும் நீர்த்துப் போன மேற்கோள்களும் கிழிந்து போன சான்றுகளும் ஒரு நல்ல பொருண்மையை இருட்டடிப்புச் செய்துவிடும். படைப்பில் ஈடுபாடும் தொண்டு மனப்பான்மையும் கொண்ட படைப்பாளன் ஒருவன் கையில் அவை ‘தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாத’ இலக்கியமாக உருவெடுக்கும்! அத்தகைய வல்லாளர்களுள் ஒருவரான பேராசிரியர் முனைவர் கு.திருமாறன் எழுதியதே ‘மூன்றாவது கண்’ என்னும் இந்த நூலாகும்.

மூன்றாவது கண்

‘மூன்றாவது கண்’ என்னும் தலைப்புடைய கட்டுரை இந்த நூலின் முதற்கட்டுரையாக அமைந்திருக்கிறது. ஐம்புலன்களில் ஒன்றான புறக்கண்ணின்றும் வேறுபடுவது அகக்கண். முன்னது புறக்கண். இது அகக்கண். இந்த அகக்கண்ணைத்தான் ‘மூன்றாவது கண்’ என்கிறார் ஆசிரியர். இது சரியே. இதற்கான விளக்கத்தையே இந்தக் கட்டுரை முன்னெடுக்கிறது.

ஒன்றினைப் புறக்கண்ணால் காணுகிறபோது அகக்கண் மற்றொன்றினைக் காணுகிறது. ‘அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்’ என்பது திருமந்திரம். இந்த ‘மூன்றாவது கண்’ பல பரிமாணங்களை உள்ளடக்கியது. சிவபெருமானுக்கு நெற்றிக் கண் உண்டு என்பதும் அது. ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் வாழும் உயிர்க்கு கண்ணென்ப’ என்றவிடத்துக் கண் என்பது புறக்கண்ணின்றும் வேறாகி நிற்பதை உணரலாம்.

கற்றல் என்பது தொழிற்பெயர். காட்சி என்பதும் தொழிற்பெயர் நீட்சி என்பது போல. முன்னது நூல்களைக் கண்ணால் கற்பதற்கும் பின்னது மனத்தால் உணர்வதற்கும் உரியது. திருவள்ளுவர் கற்றலைப் பொருட்பாலிலும் காட்சியை அறத்துப்பால் துறவறத்திலும் மிகக் கவனமாகப் பதிவிடுவதை நூலாசிரியர் திருமாறன் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார்.

‘மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்தில் ‘காட்சி’ என்னும் சொல்லை அடைமொழி தந்து பயன்படுத்தியுள்ளார். ‘புன்மையில் காட்சி’, ‘மாசறு காட்சி’, ‘கடனறி காட்சி’, ‘நடுக்கற்ற காட்சி’ முதலியன வள்ளுவத் தொடர்கள்.

என்னும் பகுதி தரவுகளைத் தேடுவதில் ஆசிரியரின் தளரா உழைப்பைக் காட்டுகிறது. இனி உவமங்களையும் உருவகத்தையும் அகக்காட்சியாகப் பதிவு செய்யும் ஆசிரியர் அதனைக் காணும் புலமையை மூன்றாவது கண்ணாகவே கருதுகிறார். இது சரியே. முன்பே பதிவிட்ட வண்ணம் புறக்கண்கள் ஒன்றில் ஈடுபட்டிருக்கும்போது வேறொன்றினைக் காண முற்படும் பொறி மூன்றாவது கண்ணாகத்தானே இருக்க முடியும்? வானத்து விண்மீன்களைக் கோள்களாகவே புறக்கண் காண, மூன்றாவது கண்ணுடைய புலவனுக்கு அவை விண்மகள் மேனியில் எழுந்த கொப்புளங்களாகக் காட்சியளிக்கின்றன.

“மண்மீதில் உழைப்பா ரெல்லாம்
வறியராம் உரிமைகேட்டால்
புண்மீதில் அம்பு பாய்ச்சும்
புலையர் செல்வராம் இதைத்தன்
கண்மீதில் பகலி லெல்லாம்
கண்டு கண்டு அந்திக்குப் பின்
விண்மீனாய்க் கொப்பளித்த
விரிவானம் பாராய் தம்பி!”

என்னும் பாவேந்தர் பெற்றிருந்த மூன்றாவது கண்ணைப் படம்பிடித்துக் காட்டுகிறார். ரோசாவிற்கு அவ்வண்ணம் வந்ததற்குக் காரணம் அதற்குக் களையெடுத்து நீர்பாய்ச்சி வளர்த்தெடுத்த உழைப்பாளர்களின் குருதியே என்னும் பாவேந்தரின் தற்குறிப்பேற்றத்தை மூன்றாவது கண்ணாகப் பதிவு செய்கிறார் ஆசிரியர். மூன்றாவது கண்ணும் முகத்துக்கண்களும் ஒன்றிணைந்து நோக்கினாலேயே ஒழிய எந்தக் கற்றலும் எந்தக் காட்சியும் பற்றாது, பதிவாகாது என்பதே இந்தக் கட்டுரையின் பொருட்சாரம் எனலாம்.

உண்மையே உயர்நெறி

‘உண்மையே உயர்நெறி’ என்னுந் தலைப்பில் அமைந்த இரண்டாவது கட்டுரை உள்ளத்தின் தன்மையாகிய உண்மையின் இயல்பையும் சிறப்பினையும் விளக்குவதாக அமைந்திருக்கிறது. உண்மை, வாய்மை, மெய்ம்மை என்னும் சொற்களுக்கிடையே நிலவும் நுண்ணிய பொருள் வேறுபாட்டினை நன்கு விளக்கி, உலகவழக்காகிய பழமொழிகளை இணைத்துக் கதம்பமாகக் கட்டியிருக்கும் சொல்லாரம் இது. திருக்குறள், மகாகவி பாரதி முதலியோர் கவிதை வரிகளை எடுத்துக்காட்டி உண்மையின் சிறப்பினை உணர்த்தியிருக்கும் பாங்கு அரிய பொருளை எளிமையாக விளக்கும் ஆசிரியரின் கட்டுரை வன்மைக்குச் சான்றாகத் திகழ்கிறது.

சினம் தவிர்த்தல்

திருவள்ளுவர் இருக்க வேண்டிய பண்புகளை உடைமையாக்கியும் இருக்கக் கூடாத பண்புகளை இயல்பாக்கியும் குறள் வடிப்பார். ‘அன்புடைமை’ என்பார். ‘அழுக்காறாமை’ என்பார். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அனைத்திடங்களிலும் கேடு மட்டும் தருவது சினம். தன்னையே கொல்லும் சினம் என்னும் வள்ளுவத் தொடருக்குச்,

“சினங்கொள்வார் தம்மைத்தாம் தீயாற் சுட்டுச்
செத்திடுவார் ஒப்பாவார்., சினங்கொள்வார்தம்
மனங்கொண்டு தம்கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு அறுத்திடுவார் மானு வாராம்”

என்னும் பாரதியின் வரிகளை எடுத்துக்காட்டி விளக்கும் ஆசிரியர் இறுதியாகக் காட்டியிருக்கும் பெட்டிச் செய்தியில் அறிஞர் பொற்கோவின்,

“ஒருவன் சினம் கொள்ளுவானானால் அந்தச் சினத்தினால் பாதிக்கப்படுபவரும் உண்டு. பாதிக்கப்படாதவரும் உண்டு. ஆனால் சினம் கொள்ளுகிற ஒருவனை அந்தச் சினம் தப்பாமல் தீமைக்கு உள்ளாக்கும்’ என்னும் விளக்கம் தெளிவோடு அமைந்திருக்கிறது.

‘இல்வாழ்வார்க்கு ஆயின் தமரோடு விளையாட்டு வகையால் அவரை வஞ்சித்துக் கோடற்கு இயைந்த பொருள்களை அங்ஙனம் கொள்ளினும் அமையும். துறந்தார்க்கு ஆயின் அதனைக் கருதிய வழியும் பெரியதோர் இழுக்காம் ஆதலின் இது துறவறமாயிற்று. புறத்துப் போகாது மடங்கி ஒருதலைப்பட்டு  நோக்கற்பாலதாய மனம் அது ஒழித்து, புறத்தே போந்து பல தலைப்பட்டு உடம்பின் பொருட்டுப் பொருளை நோக்குதலேயன்றி அது தன்னையும் வஞ்சித்துக் கொள்ளக் கருதுதல் அவர்க்குப் பெரியதோர் இழுக்காதல் அறிக. இவ்வாறு வாய்மை முதல் கொல்லாமை ஈறாய நான்கு அதிகாரத்திற்கும் ஒக்கும்”

என்னும் பரிமேலழகரின் விளக்கத்தால் கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை என்னும் ஐந்து அதிகாரங்களும் துறந்தார்க்குப் பொருந்துவதுபோல் இல்லறத்தார்க்குப் பொருந்தாது. அதனாலேயே அவற்றைக் கடைப்பிடிக்காது கைவிட வேண்டும் என்பது பொருளன்று. பிறரை வஞ்சிக்கக்கூடாது என்பதும் உள்ளத் தூய்மையும், சினம் கொள்ளாமையும், பிற உயிர்களுக்குக் கேடு செய்யாமையும், உயிர்களைக் கொல்லாமையும் எல்லார்க்கும் பொது என்னும் கருத்தினை ஆசிரியர் திறம்பட விதந்தோதுவது ஏற்கத்தக்கதே.

உயிர்களைப் பேணுதல்

தாவரங்களுக்கும் உயிருண்டு என்பது பாஸ்கரனின் அறிவியல் கண்டுபிடிப்பாகலாம். அது அறிவுப்பூர்வமான ஆய்வு முடிவு. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியது’ வள்ளலார் உள்ளம். இது உணர்வுப் பூர்வமானது. அவர்வழி வந்த மகாகவி ‘உயிர்களிடத்தில் அன்பு வேணும்’ என்று குழந்தைகளுக்குப் பாடிக் ‘காக்கைக் குருவி எங்கள் சாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என்னும் அனைத்துயிர்களையும் ஒன்றாகக் கருதியதைக் காணலாம். தமிழிலக்கியத்தில் சடாயுவாகிய பறவையையும் அனுமன் மற்றும் ஜாம்பாவான் ஆகிய விலங்குகளையும் மனிதநேயத்துடன் அணுகினான் இராமன் என்பது இடைக்காலப் புலவர் கம்பனின் சிந்தனை. இந்த நூலின் ஆசிரியர் திருமாறன் மனிதநேயக் கோட்பாட்டையும் உயிரிரக்கத்தையும் சங்க இலக்கியக் குறிப்பிலிருந்து காட்டுவது மிக மிகச் சிறப்பு.

‘அன்னை கூறினள் புன்னையது நலனே’ என்னும் நற்றிணை வரிகள் உயிர்களிடத்து அன்பு மட்டுமன்றி அவற்றை உறவாக்கிக் கொள்ளும் பழந்தமிழ்ப் பண்பாட்டை அருமையாகச் சுட்டியிருக்கிறார். ‘ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு யான் மணந்த ஞான்றே’ என்னும் குறுந்தொகை வரிகள் அஃறிணை உயிர்களை உயர்திணை மாந்தர்களாக எண்ணிச் சாட்சியாக வைத்த வரலாற்றைக் காட்டுகின்றன.

நினைக்கப்படும்

திருக்குறள் தொடரைத் (169) தலைப்பாகக் கொண்ட இந்தக் கட்டுரை, மறைவுக்குப் பின்னும் நினைக்கப்படுகிற மனிதர்களையும் நிகழ்ந்ததற்குப் பின்னும் நினைக்கப்படும் நிகழ்வுகளையும் சுருக்கமாகச் சொல்வதாக அமைந்திருக்கிறது. இப்பிறவியில் எந்தத் தவறும் செய்யாத கோவலனின் கேடு மாடலமறையோனால் நினைக்கப்பட்டது. செவ்வியான் கேடு நினைக்கப்பட்டதைப் பரிமேலழகரும் நினைத்திருக்கிறார்.

பொருள் வைப்புழி

பழந்தமிழ் இலக்கியத் தொடர்கள் பலவற்றைத் தலைப்புக்களாகக் கொண்டிலங்கும் இந்த நூலில் ‘பொருள் வைப்புழி’ என்பது திருக்குறள் தொடராகும். உடம்புக்கு வருவது நோய். உயிருக்கு வருவது பிணி. ‘பிறவிப்பிணி’ என்பது காண்க. உண்மையில் பசி என்பது உடல்நோவாக இருப்பினும் விளைவு நோக்கி அதனைப் பசிப்பிணி என்றனர். செல்வத்துப் பயனே ஈதல்!. புகழுக்கு ஈதலே தலையாய காரணம். திருக்குறளில் ஈகை என்னும் அதிகாரத்தை அடுத்துப் புகழ் என்னும் அதிகாரம் இல்லறவியலின் இறுதியதிகாரமாக வைக்கப்பட்டுள்ளது. பொருளின்றி ஈதல் இல்லை. இவற்றையெல்லாம் உறழ்ந்து நோக்கின் பிறர்தம் பசிப்பிணியைப் போக்குவதே பொருள் சேர்ப்பதன் நோக்கம் என்பது புலனாம். இந்தக் கருத்துக்களையெல்லாம் உட்கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரை,

“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி” (226)

என்னும் குறட்பாவை மையமிட்டு அமைந்திருக்கிறது. இனிச் ‘செவிக்குணவில்லாதபோழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்பதில் ‘ஈயப்படும்’ என்னும் சொல்லாடலின் அடிப்படையில் கல்வியளிப்பதும் அறிவுப் பசி போக்குவதே என்று எடுத்துரைக்கிறார். பவணந்தியார் கற்பித்தலை ‘‘ஈதல்’ என்பார். ‘ஈதல் இயல்பே இயம்பும் காலை’ என்பது நன்னூல். ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்பதனால் ஈதல் என்பது அழிபசி தீர்த்தல் மேலாயிற்று என்பதை நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார். எனினும் அறியாமை போக்குவதே கல்வியன்றி அறிவுப்பசிக்குத் தீனி கல்வி என்பது அவ்வளவாகப் பொருந்துமாறில்லை.

தீதும் நன்றும் பிறர் தர வாரா

‘எங்கெங்கே போனாலும் நிழல் போகும் தன்னோட எனக்குள்ள சொந்தமெல்லாம் உன்னோட’ என்பார் புலமைப்பித்தன். நிழல் தன்னை உருவாக்கும் பொருளைப் பிரியாது என்பது இயற்கை. நிழல் நீளுவதற்கும் சுருங்குவதற்கும் பொருட்பரிமாணத்துள்ளேயே அடங்குவதற்கும் பொருளே காரணம். ‘வீயாது அடியுறைந்தற்று’(208) என்பார் திருவள்ளுவர். அதுபோல ஒருவனின் உயர்ச்சிக்கும் தாழ்ச்சிக்கும் அவனே காரணமன்றிப் பிறிதொருவர் காரணமாகார் என்பதை முன்னிறுத்தி அதற்காக இரண்டு வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டி இந்தக் கட்டுரையை அமைத்திருக்கிறார்.

“நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மேல் உயர்ந்து நிறுப்பானும் தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்” (நாலடி. 248)

என்னும் பாடலுக்கு உரைபோல அமைந்த கட்டுரை இது.

உண்டால் அம்ம இவ்வுலகம்!

வழுதியின் தொடரைத் தலைப்பாகக் கொண்ட இந்தக் கட்டுரை புவியுள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த பின்னும் வையகத்தார் மனத்துள் வாழும் மாபெரும் சான்றோர்களை நினைவுகூர்வதாக அமைந்துள்ளது. ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை’ என்னும் ஔவையின் மூதுரைக்கு விளக்கமாக அமைந்துள்ள இந்தக் கட்டுரையில்  ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதிகனையும் பகைநாடான பிரான்சுப் பகுதியில் சென்று தன்னலம் நோக்காத தொண்டு செய்த ஜெர்மனியின் ஆல்பர்ட் ஸ்வைட்சர் அவர்களையும் ஒப்பிட்டுக் காட்டுகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

பன்னாட்டு மன்றத்தில் பேசும் இந்தியத் தலைவர்களுக்காகவே பூங்குன்றனாரால் எழுதப்பட்ட வரி இது. இந்தப் பாடலின் ஏனைய வரிகள் தமிழ்ப் பேராசிரியர்கள் உட்பட பெரும்பாலோருக்குத் தெரியாது. தெரிந்து வைத்திருக்கும் விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரை முன்வைத்து வாதம் செய்வது வாதமாகவே முடியும். பல கருத்துக்களைச் சொல்கிறார் பூங்குன்றனார். அத்தனைக் கருத்துக்களுக்கும்,

“கல்பொருது இரங்கும் மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப்படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம்” (புறம். 192)

என்னும் வாழ்வியல் உண்மையை அவர் உணர்ந்ததுதான் காரணம். இந்த வரி உட்பட பலவும் காரியமானால் ‘’திறவோர் காட்சியில் தெளிந்தமையே காரணமாகும்’. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற எண்ணம் ஏன் வரவேண்டும் என்பதற்கான விளக்கமே இந்தப் பாடல். புறநானூற்றின் இந்த வரியைத் தலைப்பாகக் கொண்டு அமைந்திருக்கும் இந்தக் கட்டுரையும் ஏனைய கட்டுரைகளைப் போலவே பல எடுத்துக்காட்டுக்களைக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது. அந்த எடுத்துக்காட்டுக்களுள் எல்லார்க்கும் தெரிந்த பழைய இலக்கிய வரிகளைவிட ஒரு சிலரே அறிந்த பாவேந்தர் வரிகள் மிக நுட்பமாகப் பொருத்தமாக எடுத்தாளப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியத்தைப் பாடுவதினின்றும் இந்தியத் தேசியத்தையும் இந்தியத் தேசியத்தைப் பாடுவதினின்று உலகத் தேசியத்தையும் பாடியவர் பாவேந்தர். பாரதியாரை ‘உலககவி’ என்பார் பாவேந்தர். அது அவருடைய கருத்து. உண்மையில் பாவேந்தரே உலககவி. இது நம் கருத்து. தனித்துவம் மிக்க இந்தக் கருத்தியல் அடிப்படையில் பாவேந்தரை இவர் அணுகியிருக்கிறார். ‘பாரதிதாசன் ஓர் உலககவி’ என்பது மிகப்பெரிய ஆய்வுக்களம்.

“உன்வீடு உன் பக்கத்து வீட்டின்
இடையில் வைத்த சுவரை இடித்து
வீதிகள் இடையே திரையை விலக்கி
நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு! வானை இடிக்கும் மலைமேல்
ஏறு! விடாமல் ஏறு! மேன்மேல்
ஏறி நின்று எங்கும் பாரடா இப்புவி மக்களை!
பாரடா உன்றன் மானிடப் பரப்பை!
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
என்குலம் என்று தன்னுடன் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்!
அறிவை விரிவு செய்! அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!”

இரண்டு வீட்டிற்கும் இடையில் ‘வந்த சுவர்’ இல்லை. ‘வைத்த’ சுவர்’ என்கிறார். பாரதியார் நதிகளை இணைத்து வாணிகம் பாடினார். பாவேந்தரோ நாட்டொடு நாட்டையே இணைத்து ஓருலகச் சிந்தனையை முன்னெடுக்கிறார். என்குலம் என்று தன்னுடன் ஒட்டியது மானுடச் சமுதாயம் ஆதலின் பிறப்புச் சான்றுக்கு அடுத்தபடியாக மனிதகுல ஏற்புச் சான்றை இந்தச் சமுதாயமே கொடுக்கிறது. அறிவை விரிவு செய்வதன் மூலம் பார்வையை அகலமாக்கச் சொல்கிறார். உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்! புவியை நடத்து! பொதுவில் நடத்து! என்றெல்லாம் உலகம் பாடிய கவிஞன் பாரதிதாசன். சொல்லிக் கொண்டே போகலாம். தெரிந்த பாடலாயினும் இந்தப் பாடலைக் கண்டதும் தாய்வீட்டுக்கு வந்து தாயைப் பார்த்த மகளின் பூரிப்பு எனக்கு! உலகம் தழுவிய சிந்தனைக்குப் பாவேந்தர் வரிகளை எடுத்தாண்டிருப்பது குள்ள மனிதர்க்கும் கள்ள உள்ளங்களுக்கும் புரியாதது! அருமையான கட்டுரை.

ஏவா மக்கள் மூவா மருந்து

‘நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்!’ என்பது ஒரு திரையிசைப்பாடலின் பல்லவி. இது ஒரு மரபுவழிச் சிந்தனை. பிறக்கின்ற பிள்ளைகள் நல்லவர்களாக அமைவது மரபா? சூழ்நிலையா? என்பது உளவியல் அறிஞர்களிடையே இன்னும் தீராத சிக்கலாக இருந்து வருகிறது. தனக்கு முதுமை வந்த பின்னும் நரை காணாததற்கு மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்’ என்னும் பிசிராந்தையார் வரிகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை இது. கட்டுரைத் தலைப்பு கொன்றை வேந்தனுக்குச் சொந்தமாயினும் கருத்து விளக்கத்திற்காகப் பல நூல்களையும் அறிமுகம் செய்கிறார்.

“ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது
வைதெள்ளிச் சொல்லும் தலைமகனும் – பொய்தெள்ளி
அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர்
இம்மைக்கு உறுதியில் லார்” (திரிகடுகம் 49)

என்னும் நல்லாதனார் பாட்டையும் கோப்பெருஞ்சோழன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோரையும் முன்னிறுத்திப் பாட்டை விளக்கிக் காட்டியிருக்கிறார்.

இந்தக் கட்டுரையில் ‘மக்கள்’ என்னும் சொல்லுக்கான விளக்கமும் ‘மூ’ என்னும் ஓரெழுத்து ஒருமொழி பற்றிய விளக்கமும் கட்டுரையின் மையக்கருத்தோடு அவ்வளவாகப் பொருந்தியிருப்பதாகக் கருத இயலவில்லை. ‘சாவா மருந்து’ (82) என்னும் திருக்குறள் தொடரும் ‘மூவா மருந்து’ என்னும் இத்தொடரும் ஒப்புநோக்கத்தக்கன. ‘மூ’ என்பது மூன்றினைக் குறிக்கும் என்பதும் அது ‘மூன்றின் வேர்ச்சொல் என்பதும் எந்த அளவுக்குக் கட்டுரைப் பொருளோடு தொடர்புடையது என்பது விளங்கவில்லை. ‘மூ’ என்பது ‘மூத்தல், முதுமை அடைதல் என்னும் பொருளைத் தருகிறது’ என்பது வேர்ச்சொல் பற்றிய முந்தைய தொடருக்கு முரணாக அமைந்திருப்பது காண்க. பிந்தையதே சரியெனின் முந்தையதைத் தவிர்த்திருக்கலாம். ஒவ்வொன்று. ஈரிரண்டு. மும்மூன்று, நன்னான்கு, ஐயைந்து என்றவிடங்களில் எல்லாம் அந்தந்த எண்ணின் முதல் எழுத்தே ஓரெழுத்து ஒரு மொழியாக அமைந்திருத்தல் காண்க. அதனாலேயே அவை வேர்ச்சொல் ஆகிவிடாது. இனிச் ‘சாவா மருந்து’ என்பதற்குச் சாவாமைக்குக் காரணமாகிய மருந்து எனப் பொருள் விரிக்கும் பரிமேலழகர் ‘அமிழ்தம்’ என்னும் ஒற்றைச் சொல்லால் அதற்கு உரைகாண்பதும் நோக்கத்தக்கது.

கேள்வியும் விந்தையும்

‘கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா?’ என்ற கண்ணதாசன் வினாவிற்கு இதுவரை விடையில்லை. ஒரு கருத்தினை அல்லது கற்பனையை வினாவடிவில் அமைப்பது என்பது தமிழ்க்கவிதை உலகிற்கே சிறப்பானதொரு கவிதை உத்தியாகும். ‘அளிதோ தானோ? குளித்து மணல் கொண்ட கல்லா இளமை யாண்டுண்டு கொல்லோ?’ என்று விடைகாண முடியாத கேள்வியைத் தொடித்தலை விழுத்தண்டூன்றினார் அன்றைக்கு வினவினார். ‘கனிவரும் காலத்து ஐய! பூக்கொய்யக் கருதலாமோ?’ என்று கம்பன் வினவினான். கார்பெற்ற தோகையோ கண்பெற்ற வாள்முகமோ? என்பார் புகழேந்தி! ‘பார்சிறுத்தலின் படை பெருத்ததோ? படை பெருத்தலின் பார் சிறுத்ததோ?’ என்பார் செயங்கொண்டார். ‘கண்ணிரண்டையும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?’ என்பார் பாரதி! ‘செந்தமிழுக்குத் தீமை வந்தபின்னும் இந்தத் தேகம் இருந்தொரு லாபம் உண்டோ?’ என்பார் பாவேந்தர். இந்த நெறியை விளக்குவதே கட்டுரையாசிரியர் நோக்கம் என்பது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

உரையைக் கட்டுரையாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் தலைப்பே கேள்வியும் விந்தையும் எனச் சுவையின்றி நிற்கிறது. காமத்துப்பால் எடுத்துக்காட்டுக்கள் ‘கேள்வி’ என்பதற்கு வினா என்னும் பொருண்மையையே முன்னெடுத்தலின் வினாவும் விந்தையும் என்றே இருந்திருக்கலாம் அல்லவா?

கட்டுரையாசிரியர் சொற்பொருள் விளக்கம் தேவைப்படாத இடங்களிலும் அதனைக் காண முற்படுவதும் அனுபவத்தின் வெளிப்பாடாகிய கவிதைகளை அகராதிப் பொருளைக் கொண்டு சுவைக்க முற்படுவதும் கட்டுரைச் சுவை இல்லாத முடவனாகிவிடுகிறது. மேலும் இலக்கியச் சுவை பயக்க வந்த விந்தையான வினா உத்தி பற்றிய இந்தக் கட்டுரையின் இறுதி, அறிவியல் உண்மைகளுக்கு அடிப்படை வினாக்களே என அறிவியல் கட்டுரையாக நிறைவு பெறுகிறது என்பது சுட்டத்தகுந்தது.

பாப்லோ நெருதா எழுதிய Book of Questions என்னும் வினாக்களாலான கவிதைத் தொகுதியை முன்மாதிரியாகக் கொண்டு ஈரோடு தமிழன்பன் எழுதிய கனாக் காணும் வினாக்கள் (2004), இன்னும் சில வினாக்கள் (2015) எனும் வினாக்களாலான கவிதைத் தொகுதிகள் இரண்டும் இங்கே நினைக்கத்தக்கன.

வாழ்வியற் சிந்தனைகள்

இந்தத் தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் மூன்றும் வாழ்க்கையைப் பற்றிய வரையறை, இல்லறம், இல்லறத்தில் பொதுநலன் என்னும் பொருண்மைகளை உள்ளடக்கி நிரலாக அமைந்திருக்கின்றன.    இருப்பது (Existing) என்பது வேறு., வாழ்வது (Living) என்பது வேறு என்னும் வேறுபாட்டினைத் துல்லியமாக விளக்கும் ஆசிரியர்,

“வாழ்க்கை என்பது புகைப்படலம் போன்றது’ என்கிறது விவிலியம். ‘வாழ்க்கை என்பது ஒரு நடமாடும் நிழல்’ என்கிறார் சேக்‌ஸ்பியர். ‘வந்ததோர் வாழ்வும் இந்திரசாலக் கோலம்’ என்கிறார் தாயுமானவர். ‘வாழ்வை குடங்கவிழ் நீரோட்டம் என்றே இரு’ என்கிறார் பட்டினத்தடிகள்”

என ஆன்றோர் பலரின் கருத்துக்களை நினைவூட்டுகிறார். வாழ்க்கை என்பதன் பொருண்மை காலந்தோறும் வேறுபட்டு வந்திருக்கின்றன என்பதை முன்னெடுக்கும் ஆசிரியர், ‘உயிர் வாழ்தல்’, ‘வாழ்வாங்கு வாழ்தல்’, ‘இசைபட வாழ்தல்’, ‘பிறர்க்கென வாழ்தல்’ முதலிய வள்ளுவத் தொடர்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்.

கிழக்கில் தோன்றும் கதிரவன் தன் பயணத்தை மேற்கு நோக்கி அமைத்துக் கொள்வதைப் போல வாழ்க்கை ஒரு குறிக்கோளோடு அமைதல் வேண்டும் என்பார் அப்பர் பெருமான். வாழ்க்கையையும் பாடலையும் முன்னெடுக்கிறார். படிப்பும் பதவியுமே வாழ்க்கை என்னும் போக்கில் நடக்கும் கற்பித்தல் பணியைச் சாடும் ஆசிரியர் மனிதநேயத்தின் அடிப்படையில் மனிதனை உருவாக்குவதே கல்வி என்பதை அண்ணல் காந்தியடிகள், தந்தை பெரியார், வ.உ.சி. முதலிய சான்றோர்களைக் கொண்டு தன் பார்வைக்கு வலிமை சேர்க்கிறார்.

“ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் மூன்று படிநிலைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மழலைப் பருவம் முதல் மணமாகும்  வரையிலான தனிமனித வாழ்க்கை நிலை. திருமணம் ஏற்ற நாள் முதல் இறுதி வரையிலான இல்லற வாழ்க்கை அல்லது குடும்ப வாழ்க்கை நிலை இந்த இரண்டு நிலைகளிலும் இணைந்து வரும் குமுக வாழ்க்கை. இம்மூன்றும் தனித்தனி தீவுகள் அல்ல. ஒன்றோடொன்று தொடர்புடையன ஒன்றின் தொடர்ச்சியாக அமைவன ஒன்றைச் சார்ந்து அமைவன” என்ற முன்னுரையுடன் வாழ்வியலின் அடுத்த நிலை பற்றிய தம் கருத்துக்களை விரிவாக்குகிறார் ஆசிரியர்.

‘தன்னம்பிக்கை, தன்னறிவு, தன்னடக்கம் ஆகிய முப்பெரும் பண்புகளே மனித மேம்பாட்டுக்கு உரிய உயரிய பண்புகளாகும்’ என்னும் டென்னிசனின் கருத்தினைத் தனிமனிதன் உயிர்வாழ்தல் நெறியாகக் கூறுகிறார் ஆசிரியர்,

“விட்டுக் கொடுத்தவர்கள் ஒருநாளும் கெட்டுப் போவதில்லை. கெட்டுப் போனவர்கள் ஒருநாளும் விட்டுக்கொடுத்ததில்லை’ என்னும் பேரறிஞர் அண்ணாவின் கருத்தினை இல்லறத்தின் வாழ்வியல் நெறிக்கான அறிவுரையாக நினைவூட்டுகிறார்.

‘பொதுவாழ்க்கை’ என்னும் சமுதாய வாழ்க்கை பெரும்பாலும் ஈதலறத்தால் ஆனது. பிறர்க்குக் கொடுத்துப் பெறுகிற இன்பத்தை அடிப்படையாகக் கொண்டது. பெறுகிறவன் பெறுகிற இன்பத்தைத் தான் அடைகிற இன்பமாகக் கருதுவதையே சமுதாய வாழ்க்கையின் இசைபட வாழ்தலின் சாரமாக எடுத்துரைக்கிறார். இல்லறத்தின் அடிப்படையாகப் பொதுநலம் அமைதல் வேண்டும் என்பதுதான் தமிழ்மரபு.

“காமஞ்சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களோடு துவன்றி
அறம்புரி நெஞ்சின் கிழவன் கிழத்தியொடு
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”

என்னும் நூற்பாவால் இதனை நன்கு புரிந்து கொள்ளலாம். இந்த நூற்பாவின் விளக்கவுரையே பாவேந்தர் எழுதிய குடும்ப விளக்கு. அதில் அமைந்துள்ள ஐந்து இயல்களையும் இல்லறம் தொடங்கிப் பொதுநலம் பேசும் சமுதாய இலக்கியமாகவே படைத்திருக்கிறார். அதனால்தான் இந்த நூலாசிரியர் திருமாறன் குடும்ப விளக்கில் அமைந்துள்ள,

“அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்பதல்லால்
இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்?
என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவும் இல்லை!
………………………………………………………………………………………………………
தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாம்!
தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்!
எமதென்று சொல்லுகின்றோம் நாடோ றுந்தான்!
எப்போது தமிழனுக்குக் கையா லான
நமதுழைப்பை ஒருகாசு செலவு செய்தோம்?
நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்
அமைவாகக் குந்தி நினைத்தோமா? இல்லை.,
அனைவரும் இவ்வாறு இருந்தால் எதுநடக்கும்?”

என்னும் பள்ளியறைப் புரட்சிப் பாடலை எடுத்துக் காட்டித் தனிமனிதன், குடும்பம் இல்லறத்தோடு கூடிய சமுதாயத் தொண்டு ஆகியவற்றை விளக்கிக் காட்டுகிறார்.

வரலாற்றுப் பதிவுகள்

வாழ்வியல் பதிவுகள் என்பன வாழ்க்கையைப் பற்றிய விளக்கமன்று. வாழ்ந்தவர்களின் வரலாறுகளிலிருந்து பெறப்பட்ட படிப்பினைகளின் தொகுப்பு.  எனவே வாழ்வியலை விளக்கும் எந்தப் படைப்பானாலும் சான்றோர்களின் வரலாற்று அடிப்படையில் படைக்கப்பட வேண்டும். இந்த நூலாசிரியர் பெரும்பாலும் அனைத்துக் கட்டுரைகளிலும் சான்றோர்கள் அவர்தம் வாழ்வில் கண்ட பட்டறிவு நிகழ்ச்சிகளைப் பொருத்தமாக இணைத்திருப்பது அவர்தம் கட்டுரை வன்மையையும் பன்னூற் பயிற்சியையும் வரலாற்று அறிவையும் ஒருசேரக் காட்டுகிறது.

மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் ஐம்புலனறிவுக்கு அப்பாற்பட்டு உணரப்படும் அறிவினை மூன்றாவது கண் என உருவகப்படுத்தும் ஆசிரியர். ரே சார்லஸ் ராபின்சன் (Ray Charless Robinson) என்னும் இசைமேதையின் வரலாற்றைச் சுட்டுகிறார். ஏழு வயதில் தன் புறக்கண் பார்வையை முற்றிலுமாக இழந்த ராபின்சன் தன் மூன்றாவது கண்ணால் முயன்று உலகப்புகழ் பெற்ற பாடகராகவும் பாடலாசிரியராகவும் திகழ்ந்தார் என்பதைப் பொருத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். இவ்வாறு பார்வையிழந்து அட்டாவதானம் செய்து புகழ்பெற்ற கோவில்பட்டி இராமையா அவர்களின் வரலாற்றையும் இணைத்துக் காட்டுகிறார்.

தன்னைக் காண வந்தவரிடம் (இருந்து கொண்டே) தான் இல்லை என்று சொல்லச் சொன்னார் தான் பணியாற்றிய ஒரு வணிக நிறுவனத்தின் தலைவர். பணியாளாக இருந்த சிறுவன் பொய் கூறமாட்டேன் என்று சொல்லித் தன் வேலையை இழந்தான். வேலையிழந்த அந்தச் சிறுவன் பின்னால் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் புகழடைந்தான். உண்மை பேசுவதன் உயர்வை அரிச்சந்திரனை மட்டும் கொண்டு விளக்கி வந்த நீண்ட நெடிய மரபில் அறிஞர் வ.சுப. மாணிக்கம் ஐயா அவர்களின் வரலாற்றைப் பதிவு செய்து மண்வாசனை மணக்கச் செய்கிறார் கட்டுரையாசிரியர்.

முறையான பயணச் சீட்டு இருந்தும் ஏறிய புகைவண்டியில் இருந்து இறக்கிவிடப்பட்ட மோகன் என்னும் வழக்கறிஞர் ஆயிரம் மனப்போராட்டங்களுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பாமலே  விடுதலைப் போராட்டத்திற்கான அடித்தளத்தை அங்கேயே அமைத்தார். நம்முடைய இந்திய ஒன்றியம் அந்நிய ஆட்சியிலிருந்து விடுபடத் தொடங்கப்பட்ட விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய அந்த வழக்கறிஞரே அண்ணல் காந்தியடிகள் என்னும் வரலாற்றுக் குறிப்பை மற்றொரு கட்டுரையில் பதிவிடுகிறார்.

‘நினைக்கப்படும்’ என்னும் கட்டுரையில் தென்னாப்பிரிக்காவில் 22 ஆண்டுகள் தங்கி அந்த நாட்டு மக்களுக்காக விடுதலைப்போர் நடத்திய அண்ணல் காந்தியடிகளின் வரலாற்றை நினைவு கூர்கிறார். தேவாலயங்களில் நிகழும் கிறிஸ்தவத் திருமணங்கள் செல்லுபடியாகாது என்னும் சட்டத்தினை எதிர்த்து இந்துவாகிய அண்ணல் காந்தி அயல்நாட்டில் நடத்திக் காட்டிய சட்டப்போராட்டம் உலக வரலாறு காணாதது. அந்தப் போராட்டத்தில் அவருக்குத் துணைநின்ற வள்ளியம்மை என்னும் தமிழ்ப் பெண்ணின் தியாகத்தையும் கட்டுரையாசிரியர் தெளிவாகப் பதிவிடுகிறார். தென்னாப்பிரிக்காவில் காந்தி பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களை ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் பதிவிட்டிருக்கிறார்.

சான்றோர்கள் அவர்கள் வாழுகின்ற காலத்தில் அந்தச் சமுதாயத்தினரால் மதிக்கப்படுவதில்லை என்பது தமிழ்ச் சமுதாயத்தின் வரலாறு. சான்றோர்களின் தலையெழுத்து. முதுபெரும் தமிழறிஞரும் கப்பலோட்டிய தமிழனுமாகிய வ.உ.சி. அவர்கள் சிறைத்தண்டனை முடிந்து வெளியேறும்போது சுப்பிரமணிய சிவாவும் மற்றொருவர் என இருவர் மட்டும் சிறைவாசலில் வரவேற்றனர். வரலாற்றில் நினைக்கப்படுகிற காட்சி இது. ஆனால் நிகழ்ந்திருக்கக் கூடாத நிகழ்ச்சி இது.

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்னும் கட்டுரையில் சிலப்பதிகாரச் செம்மல் ம.பொ.சி. அவர்களின் கடும் உழைப்பையும் தன் முயற்சியையும் முன்னிறுத்திச் சாதாரண அச்சுக்கோப்பாளராகத் தொடங்கி மாபெரும் இலக்கிய வாதியாகத் திகழ்ந்த வரலாற்றைப் பதிவிடுகிறார். ம.பொ.சி.யின் வாழ்க்கை தனி வாழ்க்கை என்றால், தமிழ்ச் சமுதாயத்திற்குத் தொடர் கேடுகளைக் கொண்டு வந்த சுந்தரபாண்டியனைப் பற்றிய குறிப்பினையும் பதிவு செய்திருக்கிறார். மாலிக்காபூரை நோக்கிச் சுந்தரபாண்டியன் வடக்கு நோக்கி வைக்கப்பட்ட தலை இன்னும் தெற்கு நோக்கித் திரும்பவில்லை என்பதும் சிந்திக்கத்தக்கதே!

‘என்னைக் கவர்ந்த இலக்கியக் காட்சிகள்’ என்னும் கட்டுரையில் சமுதாயத் தொண்டர் சௌந்தரபாண்டியனார் மகனுடன் கொடைக்கானல் ஏரியில் பயணம் கொண்டிருந்த இரத்தினவேல் தேவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பினைப் பதிவிடுகிறார். பாண்டியனார் மகனார் ஏரியில் விழுந்து உயிர்விடப், பதறிப்போன தேவர் நடுங்கிக் கொண்டிருந்தார். செய்தி அறிந்த பாண்டியனார் மகனிழந்த வேதனையை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டுத் தேவரைப் பாதுகாத்த அந்தக் கால நிகழ்வை இந்தக் கால சமுதாயத்திற்காக எழுத்தாக்கியிருக்கிறார். இந்த நூலில் உள்ள இத்தகைய வரலாற்றுப் பதிவுகளே வரலாற்று உணர்வைத் தூண்டும் சிறப்பினையுடையன.

நிறைவுரை

பேராசிரியர் முனைவர் திருமாறன் பேராசிரியர் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மொழிப்புலமை பெற்ற மொழிப்பற்றாளர். ஏதும் தெரியாமலேயே எல்லா விருதுகளையும் பெற்றுவிடுவோர் இடையில் எல்லாம் தெரிந்தும் எந்த விருதும் பெறாதவர். பெற விரும்பாதவர். சொந்தக் காசைச் செலவழித்து இந்த நூலை வெளியிட்டிருக்கிறார். இன்னும் சில நூல்களையும் வெளியிட்டிருக்கிறார். பள்ளிகளில் அறநெறி வகுப்பு ஒழிக்கப்பட்ட நிலையில் இத்தகைய நூல்களைப் பள்ளித் தமிழாசிரியர்கள் வாங்கி மாணவர்களுக்குப் பரிசளிக்கலாம். சில நிமிடப் பேச்சுக்களைப் பல பக்கக் கட்டுரைகளாக உருமாற்றம் செய்கிறபோது ஏற்பட்டிருக்கும் தவிர்க்க இயலாத சில சறுக்கல்களைத் தவிர அமைப்பாலும் உள்ளடக்கத்தாலும் சிறக்கிறது இந்த நூல். ஒரு ஊரக நூலகத்துக்குள் ஊரவலம் சென்று வந்த மனநிறைவு எனக்கு. இந்த நூலை நான் படித்தேன்! சுவைத்தேன்! நீங்கள் நிறைவடைய வேண்டாமா? உங்களுக்காகப் பகிர்கிறேன்!

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *