படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன் – 15
முனைவர் ச. சுப்பிரமணியன்
(கவிஞர் திரு தாரமங்கலம் முத்துசாமி அவர்கள் எழுதிய ‘மகரந்தம் தேடும் மலர்கள்’ என்னும் கவிதை நூல் பற்றிய மதிப்பீடு)
முன்னுரை
முகநூல் பதிவுகளை ‘மின்னணுப் பதிப்புத் துறை’ எனவும் வழங்கலாம் .எத்தகைய செலவும் இல்லாமல் ஒரு கைப்பேசியின் துணைக்கொண்டே அனைத்துப் படைப்புக்களையும் பதிவிடும் ஒர் அரிய வாய்ப்பினை இன்றைய அறிவியல் நமக்கு கொடையாக்கியிருக்கிறது. அந்தப் பதிவுகளில் ‘கவிதைகள்’ என்னைப் பெரதும் கவர்நதிருக்கின்றன. முகநூல் பதிவுகள் என்ற நிலையிலோ அப்பதிவுகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வநத பிறகோ அவற்றைப் படித்து நான் அடைந்த அனுபவத்தைப் பிறருக்கும் பந்தி வைப்பதில் எனக்கு ஒரு அடக்கமான அமைதி. பதிப்புத் துறையில் முகநூல் செய்து வருகிற பணியினைத் திறனாய்வுத் துறையில் வல்லமையின் துணைகொண்டு நான் செய்து வருகிறேன். அந்த வகையில் முகநூல் கவிஞர்களில் ஒருவரான தாரமங்கலத்தார் என அன்புடன் அழைக்கப்படும் தாரமங்கலம் முத்துசாமி அவர்கள் எழுதிய ‘மகரந்தம் தேடும் மலர்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பைப் பற்றிய மதிப்பீட்டினை இங்குப் பதிவு செய்கிறேன்.
1. உரைநடை செய்யுள் கவிதை ஒரு பார்வை
தற்காலத்தார் எழுதும் கவிதைகள் பெரும்பாலும் கருவிலேயே சிதலமடைவதற்குக் காரணம் அது கவிதையாக உருப்பெறாததுதான். கவிதை பற்றிய சொல்லாராய்ச்சி நடந்த அளவுக்கு இங்கே கவிதைப் படைப்பு வளரவில்லை. கவிதைக்கும் உரைநடைக்கும் உள்ள வேறுபாடு தெற்றெனப் ;புலப்படுவதுபோல் கவிதைக்கும் செய்யுளுக்கும் உள்ள வேறுபாடு இன்னும் உணர்ந்து கொள்ளப்படவில்லை. கவியரங்கங்களீல் இரண்டு முறை படிப்பதுதான் கவிதை என்று எழுதப்படாத இலக்கணம் இருந்து வருகிறது. இதற்குக் காரணம் அந்த வரிகளில் கவிதை இருப்பதாகவோ அந்த வரிகளில் மட்டுந்தான் கவிதையிருப்பதாகவோ அவர்களாகவே எண்ணிக் கொள்வதுதான். செய்யுள் வடிவம். கவிதை பண்பு. எந்தச் சொற்களையும் செய்யுளாக்கலாம். ஆனால் கவிதைக்குச் சொல்லாட்சி இன்றியமையாத ஒன்று. எந்தக் கருத்துக்களையும் செய்யுளாக்கலாம். அதனால்தான் பழந்தமிழில் மருத்துவம் சோதிடம் வானநூல் முதலியவை எல்லாம் செய்யுள் வடிவத்தில் இருந்தன. இன்றைய ‘மரபுப்பாவலர்கள் பலரும் அறியாத உண்மை இது. அவைகளெல்லாம் பெரும்பாலும் விருத்தங்களில் அமைந்திருப்பதாலேயே இவர்கள் அவற்றைக் கவிதை என்று ஏற்றுக் கொள்வார்களா? உரைநடையைச் செய்யுள் வடிவத்தில் எழுதிவிடலாம். கவிதை தனித்தன்மை மிக்கது. எதனையும் கவிதையாக நோக்கத் தெரிந்தவனே கவிதையாகச் சொல்லத் தெரிந்தவனே கவிதையாக்கத்தில் வெற்றி பெற முடியும். இந்த ஆற்றல் ஒரு படைப்பாளனுக்கு தினசரி 4 காட்சிகள் என்பதுபோல அமையாது. எப்போது வரும் என்று சொல்லவும். முடியாது. ‘‘தன்னை மறந்த லயம்’ என்பார் மகாகவி. தான் காணும் உலகில் தான் படைத்துக் கொண்ட உலகில் தன் சஞ்சாரத்திற்கேற்பப் படைத்துக் ;காட்டுபவனே படைப்பாளன் ஆகிறான். கவிஞன் ஆகிறான். பொங்கல் வாழ்த்து எழுதுகிறவர் எல்லாம் புரட்சிக் கவிஞர் ஆகிவிடமுடியாது. உரைநடை என்பது சொற்கோவை. செய்யுள் என்பது சொற்கோவையின் யாப்பு வடிவம். கவிதை என்பது தனித்துவமான அனுபவங்கள் சொற்களில் வெளிப்படுவது. இந்த வேறுபாடு தெரியாதவரைக்கும் செய்யுட்களைக் கவிதை என்று எண்ணுகிற மயக்கம் நிலவிக் கொண்டே இருக்கும். இதனை மாற்ற நாசா செய்யும் எந்த முயற்சியும் பலனளிக்காது.
2. முகநூல் பதிவும் முத்துசாமியும்
முகநூல் பதிவுகளை மின்னணுப்பதிப்புத்துறை எனத் தொடக்கத்தில் குறிப்பிட்டேன். அதற்கேற்ப நூலாசிரியரே தனது முகநூல் பதிவு அனுபவங்களைக் கவிதையாக்கித்தந்திருக்கிறார்.
“படிக்க சுவைக்கப் பார்த்து ரசிக்க
அறிவியல் புதுமை அற்புதல் மகிமை
ஆட்டம் பாட்டம் அனைத்தும் கொண்டாட்டடம்
மனதினை ஈர்க்கும் மருத்துவக் குறிப்பு
தினமும் வெளிவரும் தீந்தமிழ் வணக்கம்!
ஆடியோ வீடியோ அனைத்தும் கிடைக்கும்
ஓடிவா என்று உரக்கக் கூவிடும்
உண்மைச் சங்கம் இலக்கியம் பாட்டு
இன்னிசை கவிதை கலக்கும் இடமே
கற்கண்டுமுகநூல் …………..
வாழ்த்து மகிழ்ச்சி வசைபல இவையெனக்
கோத்துவிட்டே கும்மாளம் ;அடிக்கும்
மார்க்கின் முகநூல் சேர்க்கும் அறிவை!
நல்ல படைப்பாளர்களுக்கு இன்றைய நிலையில் முகநூல் பதிவு என்பது ‘அருட்கொடை’ என்பதுபோல அறிவியல் கொடை எனலாம். பல்பொருள் அங்காடியாகத் திகழும் இந்த முகநூலில் கவிஞர் தாரமங்கலத்தார் எழுதிய கவிதைகள் நூலாக்கப்பட்டு ஒரு சுவைஞன் என்ற முறையில் என் பார்வைக்கு வந்தது. இந்த நூல் கவிதைகளைப் படித்த பிறகுதான் வல்லாளர்களுக்கு மட்டுமன்று வழியின்றித் திகைத்தோர்க்கும் முகநூல் அடைக்கலப் பூங்காவாகியிருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இனிமை! எளிமை! நகைச்சுவை! நளினம்! மொழிஉணர்வு! அழகியல், மனித நேயம் இவை அத்தனைக்கும் முகநூலைக் கொள்கலமாக்கியிருக்கிறார் முத்துசாமி என்பதைப் பின்வரும் சில எடுத்துக்காட்டுக்கள் புலப்படுத்தக்கூடும்.
2.1. கை மேல் பலன்
நூற்பதிப்புக்கள் பிறர் கைக்குச் சென்று, படிக்கப்பட்டு அவர்களுக்குரிய பொழுதில் மனநிலைக்கு ஏற்ப சில கருத்துரைகளை நல்கலாம் நல்காமலும் போகலாம். முகநூல் அத்தகையதன்று. இந்த இலக்கியப் பதிவுகள் ஆண்ட்ராய்ட் தொழிற்சாலையின் உடனடி தயாரிப்பாதலின் வாசகர்களின் பின்னூட்டங்கள்; மறுநொடியே பதியப்படுகின்றன. எதிர் மறைக்கருத்துக்களும் பாராட்டுக்களும் கருத்துரைகளுமாக விரியும் அவை படைப்பாளனின் உறக்கத்தோடு ஒத்துப் போவதில்லை. .பின்னூட்டங்களில் காணப்படும் ஜால்ராக்களைவிட, திறனாய்வுக் கருத்துக்கள் பெரிதும் போற்றப்படுகின்றன.
3. மலர்கள் மாலையான கதை
உதிரிப்பூக்களாகிய கவிதைகளைத் தொகுத்து மாலையாகத் தொடுத்துக் காட்சிப்படுத்துவதில் முத்துசாமி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார். மரபுக் கவிதைகள் என்ற பெயரில் வாய்பாடுகளையே கவிதையாக எழுதி வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் முகநூல் பதிவுகளுக்கு நடுவே இனிய எளிய சந்தங்களால் மக்கள் வாழ்வியல் வடிவங்களைக் கவிதைகளாக்கியிருக்கிறார்.
பாடுபொருளைப் பொருத்தவரையில் குழந்தைகளைக் கொணடாடுகிறார். கூர்வாளையும் பாடுகிறார். தடம் மாறிய தமிழனையும் அவனைத் தலைநிமிர வைக்க முயன்ற பாரதியையும் பாடுகிறார். கண்ணனூர் மாரியம்மனையும் பாடுகிறார், காதலையும் பாடுகிறார். இட்டளியைப் பாடுகிறார். இயற்கையைப பாடுகிறார். இயேசுவையும் பாடுகிறார். சிறு நெல்லியைப் ;பாடுகிறார். சிட்டுக் குருவியைப் பாடுகிறார். வறுமையைப் பாடுகிறார். வண்ணக்கிளியைப் பாடுகிறார். இத்தனைப் பாடல்களையும் எளிய தமிழில் பாடுகிறார். எல்லாவற்றைப் பற்றியும் எல்லாருக்குமாகப் பாடுகிறார்.
வாய்பாடுகளுக்காகச் சீர்களைத் தேடி, இட்டு நிரப்பும் அவலத்தை இவருடைய பாடல்களில் நான் காணவில்லை. உள்ளத்தில் தோன்றுகின்ற கருத்துக்கள், சிக்கல்கள் முதலியவற்றுக்கான வடிவங்கள் தானே அமைந்துவிடுகின்றன. நாலு வரியிலும் பாடுகிறார். நாற்பது வரிகளிலும் பாடுகிறார். நாட்டார் வழக்கைப் பல பாடல்களில் பல பொருண்மைகளில் பாடி உள்ளங் கவர்கிறார். சமுதாய அவலங்களை ஊடுருவி நோக்கும் இயல்பான கவிஞனுக்கான பார்வை இவருடைய இந்த நூலில் தொட்ட இடமெல்லாம் தட்டுப்படும் சிறப்பினைக் காணமுடிகிறது. .
3.1. தாரமங்கலத்தாரரின் தத்துவச் சிதறல்கள்
தத்துவப பார்வை இல்லாதவர்கள் கவிஞர்களாகப பரிணமிக்க முடியாது. இது ஒரு கவிதைக் கோட்பாடு. விதை முளைத்து இரு பிளவுக்கு இடையில் துளிர் விடுகிறது. .அந்தத் துளிர் பச்சைதான் என்றாலும் எல்லாப் பச்சைகளையும் போலன்று. தனித்தன்மை மிக்க பச்சை நிறம்.
“பச்சைக குழந்தைபோல்
உச்சி மெலிந்த உன்னத இலையே!
பச்சை நிறமெல்லாம்
பயணத்தைத் தொடங்கிவைக்கும்!
சிவப்பு நிறமெல்லாம்
பயணத்தை முடித்துவைக்கும்’
இது ஒரு இயல்பான சிந்தனை. குண்டும் குழியுமாகச் சாலைப்பணி நடககிற இடத்தில் செங்கொடி பறப்பதைக் கண்டிருக்கலாம். இத்தகைய காட்சி ஒன்றினை ஒருமுறை கண்ட மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை சொன்னாராம் ‘எங்கே மேடுபள்ளம் இருக்கிறதோ அங்கேயெல்லாம் செங்கொடி பறந்தே தீரும்’ என்று. இதனை திரு.ஜீவபாரதி பதிவு செய்திருக்கிறார். பட்டுக்கோட்டையாரின மனநிலை பச்சைத் தளிரின் பச்சை வண்ணத்தைக் கண்ட முத்துசாமி பாவலருக்கு வந்திருக்கிறது. செம்மை தடுக்கும். பசுமை வழிவிடும்.
‘கள்ள உறவில் பிறந்த குழந்தையைக் குப்பைத் தொட்டியில் காண்கிறார் கவிஞர். குழந்தை குப்பையான கதை அது!
“குப்பையெல்லாம் கூட்டிக் குழிவெட்டிப் புதைத்திடுங்கள்!
குப்பை உரமாகும் குழந்தை மரமாகும்”
என்று உருகுகிறார். குழந்தை விதை என்றால் அது விதைக்கப்பட .குப்பையில் வீசப்படக் கூடாது. ‘குழந்தை மரமாகும்’ என்பது தத்துவத்தின் கவித்துவ வெளிப்பாடு
3.2. தாரமங்கலத்தார் பாடல்களில் கற்பனை
‘பண்புடையவர்கள் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருப்பதனால்தான் இந்த உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது’ என்பார் திருவள்ளுவர். நம் முத்துசாமியோ உலகம், சுற்றுவதை நிறுத்திவிட்டு ஊறுகாய்க்காக அவரிடம் வந்து அதனை இரக்குமாம்.
பழைய சோறு போட்டுப் பசுந்தயிரை ஊற்றி
பிசைந்து உண்ணும் போது பிரியமாய் மாவடுவைப்
பிட்டு நாவில் வைக்கச்
சுழலும் உலகமும் சுற்றுவதை நிறுத்தி
விழையும் வடுவை விருப்பமாய்க் கேட்கும்!
உயர்வு நவிற்சியாக இருந்தாலும் எளிய அழகான கற்பனை இது. உயர்திணைக்கு மட்டுந்தான் சிரிப்பு உண்டு. அஃறிணை சிரிக்காது. காரணம் தெரியாது. உயர் திணையிலும் சில அஃறிணைகளுக்குச் சிரிக்கத் தெரியாது. பாவலர் எழுதுகிறார்
மலர்கள் சிரித்தால் பூரிப்பாம்
மனிதர் சிரித்தால் புன்சிரிப்பாம்!
மண்மகள் சிரித்தால் பூகம்பம்!
விண்மகள் சிரித்தால் இடிமுழக்கம்!
மலைமகள் சிரித்தால் எரிமலையாம்!
மங்கையர் சிரித்தால் பனிமலையாம்!
கடல்கள் சிரித்தால் சுனாமியாம்!
கன்னியர் சிரித்தால் திவாஅலாம்!
எல்லாப் பொருளின் வினைகளையும் சிரிப்பாகக் கற்பனை செய்யும் கவிஞர் இட்டளியைக் கூடக் கற்பனை செய்கிறார்.
“உளுந்தும் அரிசியும் உறவு கொண்டதில்
மலர்நதது இட்லி மணந்தது சட்னி!”
ஆட்டுக்கல்லில் தனித்தனியாக அரைபடும் அரிசியும் உளுந்தும் அம்மணிக்கையால் பாத்திரத்துள் கலக்க உறவு கொள்கிறதாம். அதனால் இட்லி வந்ததாம்!
4. மலர்கள் தேடிய மண் வாசனை
‘மகரந்தம் தேடும் மலர்கள்’ என்று நூலுக்குப் பெயர் வைத்திருக்கிறார். அந்த மலர்கள் நுகர்ந்த மகரந்தங்களில் மண்வாசனையும் கலந்திருக்கிறது.. மாபெரும் காப்பியக் கட்டுமானத்தில் ஆங்காங்கே வரிபபாடல்களையும் குரவைப் பாடல்களையும் இணைத்துக் கொண்டு தம் காப்பியத்தைத் தமிழர்தம் நெஞ்சுக்கு நெருக்கமாக்கினார இளங்கோவடிகள். அந்த இலக்கிய உததியைத் தாரமங்கலத்தாரும் பின்பற்றித் தாம் பாடிய கவிதை நூலில் பல பொருண்மைகளை நாட்டுப்புற பாடல் வடிவத்தில் பதிவு செய்திருக்கிறார். தமிழிலக்கிய வடிவங்களில் கவிதைக்குத் தனியிடம் உண்டு. அக்கவிதையுள்ளும் புலவர்களுக்கானவை தனி. கவிதைகளுக்கானவை தனி. வெண்பா> கட்டளைக் கலித்துறை முதலியவை புலவர்களுக்கானவை. தாலாட்டு, தெம்மாங்கு, சிந்து கும்மி இலாவணி முதலியன கவிதைகளுக்கானவை. பிந்தைய வடிவங்களில்தான் தமிழ்க்கவிதைகள் குதூகலித்துக் கும்மாளமிடுகின்றன. கவிதைகளை மகிழ்ச்சிப்படுத்துவதில் தாரமங்கலதத்தார் தனிக் கவனம் செலுத்தியிருக்கிறார்.
4.1. விறகு சுமக்கும் விதவை
புரட்சி என்பது சொல்லாமலேயே திட்டமிடப்படாமலேயே வெடிப்பது. கவிஞர் பலர் தாம் எழுதிய கவிதைகளில் ‘இது புரட்சிக் கருத்து’ ‘இது வரை யாரும் சொல்லாதது’ ‘பாடாதது’ என்று தமக்குத்தாமே பாராட்டுப் பத்திரம் படித்துக் கொள்வதை கண்டிருக்கிறோம்! இது உலக இயற்கை. தம்பி முத்துசாமி இதற்கு மாறுபட்டவர். என்பது இந்தப் பதிவால் விளங்கும். கணவனை இழந்த பெண்களையே நாம் விதவை என்கிறோம். கணவனை இழப்பது என்பது ஒரு ஆணை ஒரு பெண் இழப்பது என்னும் குறுகிய பொருளுக்குரிதன்று. அவனுடைய அன்பை, அரவணைப்பை, பாதுகாப்பை, எதிர்காலக் கனவுகளை அனைத்தும் இழந்துவிடுவதாகத்தான் பொருள். இழப்பன அவையெனின் அவற்றை ஒருத்தி அவன் மறைந்த பிறகுதான் இழக்க வேண்டும் என்பதில்லை. உயிரோடு இருக்கும்போதும் இழக்கலாம். அப்போதே அவள் விதவையாகிவிடுகிறாளாம். இது பாட்டின் உள்ளடக்கத்தில் ஒனிந்து கிடக்கும் புரட்சியான சேதி கணவன் உயிரோடு இருக்கும்போதே ஒருத்தியை விதவையாகச் சித்திரித்தது தமிழ்க்கவிதையுலகம் காணாதது.
“கட்டியவன் சரியில்லையே!
காசு பணமும் தரவில்லையே!
வெட்டி ஆளா அவனிருக்க
வெறும் நிலவா நீயிருக்க உன்
வேதனைக்கு மருந்துமுண்டா சொல்லம்மா? உன்
விடியலுக்கு வழியுமுண்டா செல்லம்மா?
என்று அவளையே கேட்கிறார் கவிஞர். இந்தப் புரட்சி சேதிக்குப் பின்னால் நடப்பியல் உலகத்தை மிக நுட்பமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
“கால்வயிற்றுக் கஞ்சிக்காக
காலமெல்லாம் உழைச்சுழைச்சு
கட்டெறும்பா தேயிறியே கண்ணம்மா! உன்
சாதிசனம் சொந்த பந்தம்
சல்லிக் காசு கொடுத்ததுண்டா செல்லம்மா?”
உண்மையல்லவா? இங்கே உறவுகளெல்லாம் சடங்குகளுக்காக!. திருமணத்திற்கும் சாவுக்கும் ;ஆள்சேர்ப்பதுதான் நடப்பியல் வாழ்க்கை. சொந்தச் சாதிக்காரனுக்கு எவனும் அவன் துன்பத்தில் கைகொடுப்பதில்லை. மரணப் படுக்கையில் கிடந்தாலும் ‘உடம்பைப் பாரத்துக்க’ என்னும் ஒற்றை வரிகொண்டு ஆண்ட்ராய்ட் போனில் தன் அனுதாபத்தைச் சேமித்துவிடுகிறார்கள்.
4.2. ஆசை உறவாகுமா? ஆதரவு சோறாகுமா?
ஆசை உறவாகாது ஆதரவு சோறாகாது’. பள்ளிக்குச் செல்லவேண்டிய பருவத்தில் பாரம் சுமக்கும் குழந்தைகளின் கல்விக்கு உதவும் உறவுகள் இல்லாததை இப்படிப் பாடுகிறார் கவிஞர்.
“பெற்றவர்கள் கூட இல்லை புரிய மான உறவும் இல்ல!
உற்றவர்கள் என்று சொல்லி உதவி செய்ய யாருமில்ல!
கற்பதற்கு வழியுமில்ல! கண்கலங்கி நிற்பதுதான் சதியா? நான்
கைபிசைந்த நிற்பதுதான் விதியா?
என்று சமுதாய நடப்பியலில் காணும் கசப்பான உண்மைகளை நாட்டுப்புற வடிவத்திலேயே பதிவு செய்து காட்டுவது ஒரு வடிவ நுண்ணியம்.
4.3. கண்ணீர்ப்பால் தந்த தாய்
நாட்டார் இலககிய வடிவங்களில் ஒப்பாரியும் தாலாட்டும் உள்ளம் உருக்குபவை. கற்பனையும் உணர்ச்சியும் கைகோத்து எக்காளமிடும் அத்தகைய கவிதைகளில் உள்ளம் பறிபோவது புதுமையன்று, தாய் தாலாட்டுப் பாடுகிறாள்
“கடைப்பால் கொடுத்தால் கால்;வயிறு ரொம்பாதுன்னு
கண்ணீரால் பால்கொடுத்தேன் கண்மணியே நீயுறங்கு!’”
உலகியலில் தாய் அழுதுகொண்டு பால் கொடுக்கமாட்டாள். கூடாது, ஆனால் வறுமையின் உச்சம். தாய் அழுதுகொண்டு கொடுப்பதைப் பாடுகிறார் கவிஞர்
“ஆன்றோர் சபையும் இருக்குது ஐ நா மன்றமும் கிடக்குது!
அத்தனையும் இருந்துமென்ன அநியாயம்தானே நடக்குது?
பசிக்கொடுமை தீர வேண்டும் வீட்டிலே இந்தப்
பட்டினிச் சாவு மறைய வேண்டும் நாட்டிலே”
சமுதாயச்சிக்கல்களில் வறுமையும் பசியும் தலையானவை. அவற்றைப் பாடாத கவிஞனை வரலாறு தன் கணக்கில் வரவு வைக்காது. முத்துசாமி வரவுவைக்கப்பட்டவர்.!
5. மலர்கள் தேடும் மழலைகள்.
மலர்கள் தேடும் மழலைகள் என்னுந் தொடர் தம்பி முத்துசாமி எழுதிய பாடல்களில் குழந்தைப் பாடல்களைக் குறிப்பது. குழந்தைப் பாடல்களில் தமிழிலக்கியம் இன்னும் சவலையாகவே இருக்கிறது என்பது மழலை புரியாது’ என்பதுபோல உண்மை. காரணம் குழந்தைகள் பாடுவது என்பது முழுமையும் கற்பனை. குழந்தைகளுக்கு அறிவைவிடக கற்பனை மிகுந்து நிற்கும். இந்தக் கற்பனையின் பேரளவு படைப்பாளனுக்கு வராது. அவன் தன் உயரத்திலேயே நின்று கொண்டிருப்பான். மகாகவியின் பாப்பாப் பாட்டில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் எல்லாம் அறிஞர்களின் சிந்தனைக்கே பிடிபடாதவை. ‘தேம்பி அழுங்குழந்தை நொண்டி’ என்பது குழந்தையின் பிஞ்சு அறிவுக்குப் புலப்படுமா என்ன? குழந்தைப் பாடல்களில் மழலை தவழ வேண்டும். கன்னிமாரா நூலகம் நுழைந்து விடக்கூடாது. படைப்பாளன் தன்னை முன்னிலைப் படுத்துவது அல்ல குழந்தைப் பாடல்கள். மழலையாக மாற வேண்டும். எம்.எஸ்.இராஜேஸ்வரி பாடுவதும் பி.சுசீலா பாடுவதும் ஒன்றாகாது. கவிஞர் பலரும் ஒதுங்கிக் கொள்ளும் இந்தப் பகுதியில் தம்பி முத்துச்சாமி துணிச்சலுடன் இறங்கிச் சில பாடல்களைப் பதிவு செய்திருப்பதே பெரிதும் பாராட்டத்தக்கதாக அமைகிறது. கூடிப்பேசும் குருவிகள் என்னுந்; தலைப்பில் இவர் எழுதியிருக்கும் பாடல் குழந்தைகளுக்கும் இனிக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும்.
“கூடிப்பேசும் குருவிகளே கொஞ்சிப் பேசுங்க!
நாடிவரும் தென்றலிடம் நலததைக் கேளுங்க!
பாடுகின்ற குயிலினமும் உங்கள் பந்தமே!
ஆடுகின்ற மயிலினமும் உங்கள் சொந்தமே!”
என்னும் பாடலில் பறவைகளோடு குழந்தைகளைப் பழக வைக்கும் பாங்கும் எலலா உயிர்கள் மேலும் அன்பு காட்ட வேண்டும் என்ற உயரிய பண்பாக்க முயற்சியும் ஒரு சேர வெளிப்படுவது காண்க. பஞ்சவர்ணக்கிளி பற்றி அனைவருக்கும் தெரிந்த பாடல் பச்சைக் கிளியே பறந்துவா! பாலும் சோறும் உண்ண வா! கொச்சி மஞ்சள் பூச வா! கொஞ்சி விளையாட வா!” என்பது. இந்தப் பாடலை இசையமைப்பாளர்கள் குழநதைகளுக்கு வாயில நுழையாத மெட்டுக்களிலெல்லாம் பாடி வதம் செய்திருக்கிறார்கள்.
“பார்க்க பார்க்க அழகு — எங்கள் பக்கம் வந்து பழகு
செக்கச் சிவந்த ;அலகு நீ சிறகடித்தால் அழகு!”
“கொட்டை உனக்குப் பிடிக்குமா அதைக்
கொண்டு வந்து தரட்டுமா?”
“மினுமினுக்கும் கிளியக்கா உன்
மேனியெல்லாம் ஒளியக்கா!”
தும்பியோடு விளையாடு தம்பி! நீ
துன்புறுத்த நினைக்காதே தம்பி!
என்னும் வரிகளில் குழந்தைகளோடு குழந்தையாய்க் கவிஞர் ஒன்ற முயல்வதைக் காணலாம். குழந்தைப் பாடல்களில் பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல், இடைச்சொல் என்னும் இலக்கணவகைச் சொற்களைப் பெரிதும் தவிர்த்து இயற்சொல், திரிசொல் இவற்றோடு வழக்குச் சொற்களையும் கலந்து அமைத்தாலே பாடல்கள் மழலைகளின் நெஞ்சில் பதியும். நினைவில் தங்கும். வாயில் நுழையும் மழலைகள் மகிழும். அன்றிப் புலவன் தன்னுடைய புலமைக்கு வடிகால் தேடினால் பாடல்களையும் புலமையையும் அலமாரியில் அடக்கம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
“நேசம் உனது வாசம் என் நெஞ்சில் வநது வீசும்!
வேசம் இல்லாப் பாசம் உன் வியர்வை கலந்து பேசும்!”
என்ற வரிகளில் சகர வர்கக எதுகைகளைக் கொண்டு குழந்தைகளோடு குழந்தையை விளையாடி மகிழ்கிறார் கவிஞர்
6. கலையியல் கவிதைகளில் அழகியல் தொடர்கள்
சொற்கள் கவிதைகளைச் சிறக்கச் செய்யும். தொடர்கள் நூல்களை நிலைநிறுத்தும். ‘நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம் ஆடைவாங்குவதற்காக’ என்னும் ஒரு தொடர் நா காமராசனைப் புதுக்கவிதையின் நாயகனாக்கியது காண்க. ’மந்திரம் போல் சொல் வேண்டும் என்பார் பாரதியார். அதுபோல பல சொற்களைச் சீர்களாக்கிப் பந்திவைத்திருக்கிறார் முத்துச்சாமி.
6.1. செடிவைக்கும் மலர்கள்
பள்ளி செல்லும் பெண்பிள்ளைகள் செடிகளை அதாவது நாற்று நடுகிறார்கள். கன்றுகளை நடுகிறார்கள். இதனைக் காணும் கவிஞர் செடிவைக்கும் மலர்கள்’ என்று வண்ணனை செய்கிறார்.
6.2. தங்க நிற நெருப்பில் தவத்தில் இருந்தவை
காலைச் சிற்றுண்டியாக இட்டளியும் பொங்கலும் தயாரிக்கிறார்கள். அவற்றுள் பொங்கலில் இடுவதற்கு முந்திரிப் பருப்புக்களை வாணலியில் இட்டு வதக்குகிறார்கள். இந்தக் காட்சி ‘முந்திரி நெருப்பில் தவம் செய்வதுபோல்’ தோன்றுகிறதாம். ‘தங்க நிற நெருப்பில் தவம் செய்யும் முந்திரி’! அடடா! என்ன அழகிய கற்பனை வெளிப்பாடு?
6.3. வறுமைக்குப் பஞ்சமில்லை
விருந்தினரைப் போற்ற இயலாத நிலையைத்தான் வறுமையின் உச்சம் என்பார் வள்ளுவர். ‘கொல்வறுமை தாளவில்லை என்பார் ஜீவா. உண்மையில் அந்த வீட்டில் பஞ்சமேயில்லையாம்! எதற்கு? வறுமைக்கு! எவ்வளவு ஆழமான அழகான கற்பனை கலந்த சொற்றொடர்? இதுதான் கவிதை!
7. மகரந்தம் தேடும் மலர்களில் வடிவக் கோட்பாடுகள்
முறையாகத் தமிழ் படித்தவர். பட்டங்கள் பல பெற்றவர். யாப்பிலக்கணம் தெரிந்தவர். பாவகைகளையும் அவற்றின் இனங்களையும் பகுத்தறிந்தவர். இருந்தாலும் இந்த நூலில் அவற்றை முற்றிலுமாகப் புறக்கணித்து மக்கள் மொழியில் கவிதை எழுதியுள்ளார் முத்துசாமி. இந்தத் துணிச்சல் பட்டுக்கோட்டைக்கு இருந்தது பாவலர் வரதராசனுக்கு இருந்தது. ஜீவாவுக்கு இருந்தது. கே.சி.எஸ..அருணாசலத்திற்கு இருந்தது கொத்தமங்கலம் சுப்பு அவர்களுக்கு இருந்தது. இன்றைக்கு இவருக்கு இருக்கிறது. மக்கள் வாழ்வியல் சிக்கல்களை வரையறுக்கப்பட்ட யாப்புக்குள் கொண்டுவர இடர்ப்படுவதைவிட மக்கள் மொழியிலேயே அவர்களுக்குத் தெரிந்த நடையிலேயே எடுத்துமொழிவதையே தனது வடிவக்கோட்பாடாகக் கொண்டிருக்கிறார் முத்துசாமி. இது இந்த நூலுக்கு மட்டும்!
சில கருத்துரைகள்
கவிஞனைப் பாராட்டுவதற்கான கட்டுரையன்று இது. அது என் வேலையுமல்ல. கவிதையின் சுவையனுபவத்தைப் பிறர்க்குப் பநதிவைப்பது பரிமாறுவது அவ்வளவுதான்! அவ்வாறு சுவைக்கிறபோது எல்லாமே இனிபபாகத்தான் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அந்த வகையில் நூலின் அகப்புறக் கட்டுமானம் பற்றிய சில கருத்துரைகளைப் பதிவிட நேர்கிறது. .
- ஆண்ட்ராய்டில் தட்டச்சுச் செய்யப்பட்டு நூல்வடிவமாக்க அச்சுக்கு அனுப்புகிறபோது எழுத்துரு சிறுபான்மை மாறுபடும். எனவே மெய்ப்பு திருத்துகிறபோது தனிக்கவனம் இருந்திருக்க வேண்டும். இந்த நூலில; ‘லி’ என்ற எழுத்தே அச்சடிக்கப்படாமல் அடிக்கோடாகக் காட்சியளிக்கிறது.
- வந்த பையன் என்பதுபோலப் பெயரெச்சத்திற்குப் பின்னால் வல்லினம் மிகாது என்பது மிக மிகச் சாதாரண இலக்கணம் என்பதை மெத்த படித்த நூலாசிரியர் கவனததிற் கொள்ள வேண்டும்.
- உள்ளடக்கத்தால் சிறக்கும் இந்த நூலின் அட்டைப்படம் அலட்சியமாகக் கையாளப்பட்டிருப்பது வருத்தத்தற்குரியது. பன்முகப் பொருண்மைகளைப் பாடுபொருளாகக் கொண்ட இந்த நூலுக்கு இந்தப் படம் பொருந்தாமல் போகிறது. ஒரு நூலுக்கு அட்டைப்படம் என்பது தாயின் முந்தானை! தாவணியன்று!
நிறைவுரை
பணிக்காலததில் பாடம் நடத்தி பணி ஓய்வு பெற்றவுடன ஓய்வூதியத்தில் ஒளிந்து கொண்டு உலகமும் தெரியாமல் உலகததிற்கும் தெரியாமல் மறைந்த தமிழாசிரியர் பலர். தம்பி முத்துசாமியோ வேறுபட்டுத் திகழ்கிறார். தன்னை மனிதனாக ஏற்றுக் கொண்ட தன்னைச் சூழ்நதிருக்கும் சமுதாயத்தை இந்த எழுபது வயதில் அவர் ஏறெடுத்துப் பார்க்கிறார். எழுத்தில் வடிக்கிறார. இதுவே ஒரு சமுதாயப்பணி! நாமும் எதனையாவது இந்தச் சமுதாயத்திற்குச் செய்ய வேண்டும், சொல்ல வேண்டும் என்ற துடிப்பு இந்த நூலின் ஒவ்வொரு பககததிலும் எதிரொலிப்பதை என்னால் உணரமுடிகிறது. நீங்களும் அந்தத் துடிப்பை உணரவேண்டும் என்பதற்காகத்தான் படித்துச் சுவைத்ததைப பந்திவைத்துப் பகிர்ந்திருக்கிறேன். வண்டுகள்; தேட வேண்டிய மகரந்தத்தை மலர்களைத் தேடவைத்திருக்கிறார் முத்துசாமி! நாம் என்ன மலர்களைவிடத் தாழ்ந்தவர்களா?
(தொடரும்)