குறளின் கதிர்களாய்…(398)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(398)
அறங்கூறா னல்ல செயினு மொருவன்
புறங்கூறா னென்ற லினிது.
-திருக்குறள் -181 (புறங்கூறாமை)
புதுக் கவிதையில்…
அறத்தின் சிறப்பினை
ஒருவன்
அறிந்தும் கூறாமல்
அறம் அல்லாதவற்றை
அளவின்றிச் செய்தாலும்,
அவன்
அடுத்தவரைக் கெடுத்துப்
புறங்கூறாதவன் என்னும்
புகழ்ச் சொல்லே
என்றும்
இனிமை பயக்கும்…!
குறும்பாவில்…
அறத்தின் சிறப்பைக் கூறாமல்
அறமிலாதவற்றைச் செய்தாலும் ஒருவன் அடுத்தவரிடம்
புறங்கூறாதவன் எனும்பெயர் பெருமையுடையதே…!
மரபுக் கவிதையில்…
அறத்தின் சிறப்பை நன்றாக
அறிந்தே ஒருவன் கூறாமல்
அறமே யில்லா செயல்களையே
அடுக்காய்ச் செய்து வந்தாலும்,
பிறரைப் பற்றிக் கெடுதலாகப்
பிடிக்கா வகையில் புண்படவே
புறங்கூ றாதோன் எனும்பெயரே
புகழைச் சேர்க்கும் இனிமையதே…!
லிமரைக்கூ…
வாழ்வி லுயர்ந்தது அறமே,
வாய்மையிதைக் கூறாமல் அல்லவை செய்வோனுக்கும்
புகழ்தரும் புறங்கூறாத் திறமே…!
கிராமிய பாணியில்…
பேசாத பேசாத
பொறஞ்சொல்லு பேசாத,
பொளப்பக் கெடுக்கிற
பொறஞ்சொல்லு பேசாத..
அறத்தோட
செறப்பச் சொல்லாம
ஓருத்தன்
அறமில்லாத செயல்களச்
செய்து வந்தாலும்,
அவன்
பொறஞ்சொல்லு பேசாதவனுண்ணு
பேரு வாங்குனா அது
பெரிய செறப்பாகுமே..
அதால
பேசாத பேசாத
பொறஞ்சொல்லு பேசாத,
பொளப்பக் கெடுக்கிற
பொறஞ்சொல்லு பேசாத…!