படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! 14
முனைவர் ச. சுப்பிரமணியன்
துரை. வசந்தராசனின் ‘தேன்பாவை’ — ஓர் அழகியல் பார்வை
முன்னுரை
ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை ஆக்கப்பூர்மான முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கும் சில எடுத்துக்காட்டுக்கள் இருக்கின்றன. சில நிகழ்வுகளும் நடக்கின்றன. முகநூல் குழுமங்களில் ஓர் இலக்கிய ராஜாங்கத்தையே சிலர் நடத்தி வருகின்றனர். அவருள் தம்பி மாதவரம் பண்ணைக் கவிக்கோ வசந்தராசனும் ஒருவர். வெற்று ஆரவாரங்களில் ஆர்வம் காட்டாத வினோதமான இந்தத் தம்பி தமிழ்நாட்டில் வாழுகின்ற கவிஞர்கள் எழுதும் கவிதைகளுக்குத் தலைமைதாங்கும் கவிதைகளை எழுதிக் கொண்டிருப்பவர். கவிஞர்களை ஒப்பிடுகிறவர்களுக்கு இந்த உண்மை அவ்வளவாகப் புலப்படாது. என்னைப்போல் முன்பின் அறியாதவர்களின் கவிதைகளை ஒப்பிடுகிறவர்கள் மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அவருடைய முகநூல் பதிவுகளில் சென்ற 2021ஆம் ஆண்டு வெளிவந்த காதலென்னும் பொருண்மை பற்றிய கவிதைகள் தேன்பாவை என்னுந் தலைப்பில் நூல் வடிவாகி என் பார்வைக்கு வந்தது. அட்டையைப் பார்த்தும் மயங்கினேன் அனைத்தையும் பாரத்தும் மயங்கினேன். அந்த மயக்கம் பித்த மயக்கம் அன்று என்பதையும் பின்னர்த் தெளிந்து கொண்டேன். இருக்கிற காதலியிடம் தோன்றாத காதலை இல்லாத காதலியிடம் தோன்றியதாகக் கற்பனை செய்து கொண்டு எழுதியிருக்கும் இந்தப் பாவியம் வைணவ இலக்கியங்களைப் போல அழகியல் சார்ந்தது., அமைதியானது., ஆரவாரம் இல்லாதது. கற்பனையானது.,காதலைப் பாடுவது!. சுவைத்தனால் அறிந்தேன் நான்! சுவைப்பீர்களேயானால் நீங்களும் அறிவீர்கள்! சொந்தங்களே வாருங்கள்! கவிதைச் சுகம் காண்போம்!
படித்தவன் எழுதுகிறேன்
‘பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக’ என மணிவாசகரிடம் திருப்பெருந்துறையுடையார் வேண்டுகோள் விடுத்ததாக ஒரு தகவல் உண்டு. வசந்தராசன் இனி கோவை பாடுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நூல் முன்னுரையில் தம்பி வசந்தராசன் பாடியவன் பேசுகிறேன் என்று எழுதியிருக்கிறார். அதனால் நான் படித்தவன் எழுதுகிறேன். மணிவாசகப்பெருமான் எழுதிய ‘பாவை’ என்பது தனி நூல் அல்ல என்பதும் திருவாசகத்தின் ஒருபகுதியே என்பதும் யாவரும் அறிந்ததே. வைணவத் திருப்பாவை, அதனைத் தொடர்ந்து தோன்றிய சைவத் திருவெம்பாவை ஆகிய இரண்டுமே பாவை இலக்கிய வகைமாதிரிகளில் கோலோச்சுகின்றன. இந்தப் பின்புலத்தில் தம்பி வசந்தராசன் எழுதிய தேன்பாவையால் நான் பெற்ற சுகததை ஊரறிய கடைவிரிப்பது எல்லாருக்கும் உதவக்கூடும் என்னும் நம்பிக்கையில் இந்தக் கட்டுரை விரிகிறது.
தேன்பாவை பாவை இலக்கியமா?
‘பாவை’ என்ற சொல் சங்க இலக்கியத்தைச் சார்ந்தது. ‘யவனர் இயற்றிய வினைமாண் பாவை’ என்பது நெடுநல்வாடை. ‘கொல்லிப் பாவை’ என்பது அகப்புற இலக்கியங்களில் பெருவழக்கு. பாவை மன்றம் என்பது பூம்புகார் கண்டது, நாம் காணாதது. ‘மரப்பாவை’ என்பதை மரப்பாச்சி என்பது உலகியல்.
“இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண் மா ஞாலம்
மரப்பாவை சென்று வந்தற்று” (1058)
“நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர் மருட்டியற்று” (1020)
என்பன திருக்குறள் பயன்பாடுகள். “தென்தமிழ்ப் பாவை செய்தவக் கொழுந்து” என்பது சிலப்பதிகாரம். ‘பாவை’ என்பது அறிஞர் மு.வ. எழுதிய ஒரு நாவலின் பெயர். பாவை விளக்கு என்ற பெயரில் திரு. அகிலன் எழுதிய நாவல் பெரும்புகழ் பெற்றுத் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. ‘சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கி’ என்பது பவணந்தியாரின் தொடர். அத்தொடரைச் ‘சித்திரப்பாவை’ என்று திரு. அகிலன் தன் நாவல் ஒன்றனுக்குத் தலைப்பாக்கினார். பாவை நோன்பு என்பது அக்கால உலகியலில் மகளிர் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று. மண்ணால் செய்து வைக்கப்பட்ட பாவை உருவைத் தெய்வமாகப் பாவித்து நாடும் தானும் நலிவற்று வாழ வேண்டும் என்பதற்கான வேண்டுதல் நெறிக்குப் பாவை நோன்பு என்று பெயர். இவ்வாறு பன்முகமாக விவரிக்கப்பட்ட பாவை என்ற சொல்லுக்கும் துரை. வசந்தராசனின் ‘தேன்பாவை’ என்ற நூலின் உள்ளடக்கத்திற்கும் எள்ளின் முனையளவும் இயைபில்லை. முள்ளின் முனையளவும் உறவில்லை. இது அவருக்கு மட்டுந்தானா? இல்லை. எல்லாப் பாவை நூல்களுக்கும் இப்பொருந்தாமை பொருந்தும்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானது.
‘எம்பாவாய்’ என்றால் என்ன?
பாவை இலக்கியங்களைப் படிக்கின்ற எவரும் ‘எம்பாவாய்’ என முடிவதினாலேயே அது பாவை இலக்கியம் எனக் கருதிக் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. உண்மையில் பாவை இலக்கியங்களின் தோற்றம் பாவை போன்ற பிரதிமையை வழிபடுவதில் தொடங்கியது. “நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்” என்பது திருப்பாவை. திருவெம்பாவைக்குப் பின்னாலே வந்த இலக்கியங்களில் பாவை நோன்பு என்பது மறக்கப்பட்டுப் ‘பாவாய்’ என்னும் விளியில் முடிந்தால் போதும் என்ற அளவில் வந்து நின்றது. பாட்டின் சுவைக்கும் தலைப்புப் பற்றிய காரண காரிய அறிவிற்கும் தொடர்பில்லை. இருப்பினும் இவ்வாறு முடிந்ததனால் அவ்விலக்கியங்களின் தரவரிசை ஒன்றும் குறைவுபடுவதில்லை. தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் மக்கள் வாழ்க்கைச் சூழலில் அவற்றைப் பின்னனியாகக் கொண்டு தோன்றியவை என்பது அறிஞர் கைலாசபதியின் கருத்தாகும். எனவே எந்த இலக்கியமானாலும் தனிப்பாடலானாலும் அவற்றுள் நாட்டுப்புறவியலின் தாக்கம் தவிர்க்க முடியாமல் இழைந்திருக்கும். சிலப்பதிகாரத்தின் வரிப்பாடல்களும் குரவைப் பாடல்களும் கலித்தொகையின் வள்ளைப் பாடல்களும் இக்கூற்றினை உறுதி செய்யக்கூடும். திருவாசகத்தில் மணிவாசகப் பெருமான் பயன்படுத்தியிருக்கும் திருச்சாழல், திருக்கோத்தும்பீ, திருப்பொன்னூசல் முதலிய கட்டமைப்புக்கள் எல்லாம் நாட்டுப்புற இலக்கியங்ளின் தாக்கமே என்பதில் ஐயமில்லை. இதே நிரலில் வந்ததுதான் ‘ஏலோர் எம்பாவாய்’ என்பதும். இது சொல்லாராய்ச்சிக்கு உரிய தொடர் அல்ல. தற்போதைய திரைப்பாடல்களில் வரும் ‘ஹோய்’ என்பது போல. ‘ஏலேலங்கடி! ‘ஐலசா’ போன்ற சொற்களும் இத்தகையனவே! இதற்குப் பிறகும் இது பாவை இலக்கியம் என்று சொல்லி மல்லுக்கட்டுகிறபோதுதான் நமக்குச் சங்கடமும் கண்ணீரும் சம அளவில் ததும்பி நிற்கின்றன.
பாவைகள் பலவிதம்
‘பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்’ என்று கண்ணதாசன் பாடியிருக்கிறார். பாவைகளும் அப்படியே! பாவைகளின் உள்ளடக்கத்தைப் பொறுமையாகப் படிததுப் புரிந்து கொண்டால் ‘எம்பாவாய்’ என்ற சொல் ஒலி நிரப்பும் பணிசெய்யும் ஒரு வெற்றசைச் சொல் என்பது தெள்ளத் தெளிவாகிவிடும். நாடும் வீடும் செழிக்கப் பாவையை நோற்றதைப் பாடுவன திருவெம்பாவையும் திருப்பாவையும். தமிழ் ;மரபுகாக்கவும் தைத்திங்களைச் சிறப்பிக்கவும் திராவிட இயக்கச் சிந்தனையாளராக ஒளிர்ந்த கண்ணதாசன் எழுதியது தைப்பாவை. இந்தப் பாடலில்; தைத் திங்களையே பெண்ணாக உருவகம் செய்திருக்கிறார். இதனை அப்படியே பின்னாளில் திரு.வரதராசன் என்பார் ‘சுறவம் பாவை’ என்னும் ‘பாவை’ இலக்கியத்தை எழுதியிருக்கிறார். இதுவும் முகநூல் பதிவே. செந்தமிழுக்குக் கேடு வந்தபின்னும் அறியாது விழிமுடித் தூங்கும் மகளிரை எழுப்புவதாக அமைந்த பாவை பாவலர் பெருஞ்சித்திரனார். மார்கழித் திங்களின் காலையெழிலை திரு.வள்ளிமுத்து என்பார்; எழுதிய எழிற்பாவை கரட்சிப்படுத்துகிறது. தம்பி வசந்தராசன் எழுதிய இந்தத் தேன்பாவை கற்பனைக் காதலியை அவள் பேரழகைப் பிற பெண்களுக்கு அறிமுகம் செய்வதாய் அமைந்துள்ளது. இப்படி அமைந்த பல்வகைப பாவை இலக்கியங்களில் திருவெம்பாவை திருப்பாவை தனித்து விளங்குவதப் போலவே பாவலர் பெருஞ்சித்திரனாரின் செந்தமிழ்ப் பாவை தனிதது விளங்குகிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
கட்டுமானச் சிறப்பு
நாட்டுப்புறவியல் தாக்கத்தின் விளைவாகத் தோன்றியதாதலின் பாவை இலக்கியத்திற்கு அடி வரையறை இருந்ததாகத் தெரியவில்லை. நடப்பியல் மரபு பற்றி இயல் தரவிணைக் கொச்சகக்கலியால் நான்கடிகளால் (இணை) இயற்றப்படும் இந்தப் பாடல்களில் தொடைவிகற்பங்கள் பொதுவாகவே சிறப்பாக அமைந்திருக்கும். தேன்பாவை இலக்கியத்தில் அமைந்திருக்கும் இருபத்தொன்பது பாடல்கள் இரண்டடித் தரவுகளாக எட்டு வரிகள் அமைய, ‘மின்னல் வரியெடுத்து வானம் மடல் எழுதும்’ என்ற ஒரே ஒரு பாடல் ஒன்பது வரிகளைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. இந்த ஆசிரியர் எழுதிய மற்றொரு வரலாற்றுப் பாவையான தலைமுறைப்பாவை பத்து வரிகளை அதாவது இரண்டடித் தரவுகளாகப் பத்து வரிகள் கொண்டதாக அமைந்துள்ளது. பொதுவாகப் பாக்களின் அடிகளுக்கும் குறிப்பாக அளவடிகளுக்கும் இனிமை சேர்க்கின்ற பொழிப்பு விகற்பங்கள் அதாவது பொழிப்பு மோனை, பொழிப்பு எதுகை முதலியவைகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன எனினும்,
“கட்பூவில் வண்டமர்ந்து காதல் சிறகெழுதி
உட்போகும் காற்றால் உயிரெழுதி, யானெழுதும்
பொற்பூவின் தேனால் மகரந்தக் கூடெழுதி
விற்பூவை வீசி விளையாடும் தேன்பாவை
நற்பூவாம் நாசிவழி நாற்றிசையும் வாசித்தே
எட்பூவாய் என்னை இழுத்துப் பதுக்குகிறாள்!
எட்பூவில் வண்டமர ஏலுமோ? ஏலுமெனப்
பொற்பூவாள் காட்டுகிறாள்! போய் காண்நீர் எம்பாவாய்!
என்னும் பாடலில் முற்றெதுகைகள் உருவகச் சீர்வரிசைகளோடு உலாவருவதைக் காணமுடிகிறது. சொற்பூவின் தேனாய்க் கவிதைப் பொருள் சிறக்க எழுதும் காதல் மடலில் ‘மகரந்தக் கூடெழுதி’ என்றும் புருவத்தால் பேசுகிறாள் என்பதை ‘விற்பூவை வீசி’ என்றும் செய்திருக்கும் உருவகம் கற்பனையின் எல்லை தொடுகின்றன. இது பற்றி விரிப்பின் பெருகும்.
மரபிழையும் பாவை
தமிழ் மரபில் ஆழங்கால்பட்ட கவிஞர்கள் சிலர் புதுக்கவிதை எழுதுவதாகப் புறப்படுவார்கள். ‘பொருள் புதிது’ என அச்சமூட்டி பாரதிக்கு நேரடி வாரிசாவார்கள். பிள்ளையார் பிடிக்க சிவபெருமான் ஆன கதையாக அவர்கள் என்ன எழுதினாலும் மரபு அவர்களையும் அறியாமல் அவர்கள் எழுத்தில் ஒளிந்து கொள்ளும். தம்பி வசந்தராசன் இந்தக் கவிக்குழுவின் புதிய உறுப்பினர். மரபின் இயல்பே அதுதான். அது அறிந்து பதிவது அன்று. அறியாமல் படிவது. திருவள்ளுவர் கண்ட தலைவன் ஊழ்வினை காரணமாகத் தலைவியைக் கண்டு,
“அணங்குகொல்? ஆய்மயில் கொல்லோ? கனங்குழை
மாதர் கொல்? மாலும் என் நெஞ்சு”
என ஐயுறுகிறான். சேக்கிழார் பெரியபுராணத்தில் சுந்தரமூர்த்தி நாயனார்,
“கற்பகத்தின் பூம்கொம்போ?
காமன்தன் பெருவாழ்வோ?
பொற்புடைய புண்ணியத்தின்
புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர்
மதிபூத்த விரைக்கொடியோ?
அற்புதமோ? சிவனருளோ?
அறியேனென் றதிசயித்தார்”
என்று பரவை நாச்சியாரைக் கண்டு அதிசயித்து நின்றதாகப் பாடுகிறார். ‘பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா?’ என்றும் திரைநாயகன் ஐயப்பட்டதுண்டு. ‘நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ’ என்றும் அவன் தடுமாறியதுண்டு. அது சுந்தரமூர்த்தி நாயனாரின் வரலாறு. இவை இயக்குநர் சொல்கிறபடி நடிக்கின்ற கதைநாயகனுக்கு வருகின்ற ஐயம்! அது சுந்தரமூர்த்தித் திருப்பாவை அன்று. ஆனால் இது தம்பி வசந்தராசன் எழுதிய தேன்பாவை இலக்கியத்தில் அவர் நினைத்திருந்தால் ஐயக்கிளவியை அகற்றியிருக்கலாம். முடியாது. முடியவில்லை. காரணம் அவர் கொண்ட காதல் மரபு சார்ந்தது. தன் கற்பனைக் காதலியைக் கண்டு தானே மனக்கண்ணால் ரசித்துப் பாடுவது. தானே ஐயுறுவது. இந்த மரபின் தாக்கத்தை அவரையும் அறியாமல் இப்படிப் பதிவு செய்திருக்கிறார்.
“முன்னைத் தவப்பயனோ? மூத்தோர் வினைப்பயனோ?
தன்னை முழுதீந்து தண்டமிழின் வேர்பாவி
என்னைக் கவியாக்க ஏற்றும் திருவிளக்கோ?
கன்னல் கனிமொழியைக் காலத் திருமொழியை
மின்னும் விழிமொழியை விண்ணளக்கும் பேரெழிலைத்
தன்னை அழகூட்டித் தானே தருகின்ற
பொன்னின் புதுநிறத்தைப் பூக்காட்டின் ஊர்வலத்தைக்
கண்ணில் படம்பிடித்துக் காண்கிலரோ ரெம்பாவாய்!”
தன்னை முழுதீந்து தண்டமிழின் வேர்பாவி என்னைக் கவியாக்க ஏற்றும் திருவிளக்கோ? என்னும் திராவிட மரபில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வசந்தராசன் “முன்னைத் தவப்பயனோ? மூத்தோர் வினைப்பயனோ? என்னும் சான்றோர் மரபில் தன்னை இழந்துவிடுவதைக் காண்க. இங்கே தண்டமிழின் வேர் பாவி என்பது திராவிட மரபு. முன்னைத் தவப்பயனோ? மூத்தோர் வினைப்பயனோ என்பது சான்றோர் மரபு. தவப்பயன், வினைப்பயன் ஆகியன இரண்டும் திராவிடவியல் அன்று.
துள்ளலோடு விளையாடும் சிந்து
கண்ணதாசன் எழுதிய தைப்பாவையில் எந்த அளவுக்குக் கொச்சகக்கலி மரபு பின்பற்றப்பட்டுள்ளது என்பது ஆராய்வதற்கு உரியது. ‘கலிச்சீர்’ என்று ஒன்று தமிழில் இல்லை என்பதும் காய்ச்சீரின் பிறழ்ச்சியே கலித்தளை என்பதும் அத்தளையால் பெயர் பெறுவதே கலிப்பா என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் இலக்கணம் சரியாக அமைந்துவிடுவதாலேயே குறிப்பிட்ட ஒலியும் சந்தமும் அமைந்துவிடும் என்று கருதுவது அவ்வளவு சரியானதன்று. குறிப்பிட்ட ஒலியமைதி கிட்டுவதற்கு அத்தகைய இலக்கண தளையமைதி இன்றியமையாதது என்பதுதான் கருத்து. அமைகின்ற பாட்டுக்குள் இலக்கணம் என்பதுதான் நெறி. இலக்கணத்தால் பாட்டு என்பது கவிதைக்கு முரண். இந்த அடிப்படையில்,
“வா என்றன இமைகள்; மண்நோக்கின விழிகள்
தா என்றன இதழ்கள்; தழுவென்றது மேனி
பார் என்றது பருவம்;படை கொண்டது நாணம்;
நேர்கின்றது யாதோ..நிலை கொண்டது காதல்.
தேர்கொண்டொரு தெய்வம் தெரு வந்தது போலே
ஊர்கின்றவன் மனதில் உழல்கின்றது காமம்;
சீர்கொண்டவன் எதிரே சிலை கொண்டவள் வந்தாள்
யார் வென்றனர் அறிவாய்;அறிவாய் தைப்பாவாய்” .
என்னும் தைப்பாவைப் பாடலை நோக்க வேண்டியதிருக்கிறது. ‘மார்கழிக்குப் பெண்ணாகி மாசிக்குத் தாயாகிப் பேர்கொழிக்க வந்த பெட்டகமே தைப்பாவாய்! என்னும் சந்தத்திற்கும் மேலே காட்டப் பெற்றிருக்கும் பாடலின் சந்தத்திற்கும் உள்ள வேறுபாட்டினை ஓதுவார் உணர்வார்.
‘எட்டின் மெலிந்தஇடை! எழுத்தில் ஒளிந்தபொருள்!
பட்டின் குறைந்தவிழை! பாட்டில் இயைந்தநயம்!
கொட்டுமழைத் தூறல் குறுக்கில் நடந்தகுடை!
வெட்டும் விரிமின்னல் வானில் படருகணம்!
மொட்டின் முதல்விரியின் மோனத்தின் ஓசையெனும்!
வட்டத் தொடக்கமென வாழும் இடையுடையாள்
சுட்டும் சுடர்விழியால் சொர்க்கம் திறந்துவைத்துக்
கட்டி எனையணைப்பாள் !காண்கிலரோ ரெம்பாவாய்?” (22)
என்ற இந்த நூலில் காணப்படும் ஒரு பாடல் கொச்சகக்கலிக்குப் புதிய பரிமாணம் சேர்ப்பதாக அமைந்துள்ளதைக் காணலாம். ‘கருவி தொகுதி’ என்பது தொல்காப்பியம். ‘கருவி வானம்’ என்பது சங்க இலக்கியத்தில் பெருவழக்கு.! மின்னல், இடி, மழை என்னும் தொகுதியையுடைய வானம் என்பது பொருள். தொகுதிக்குக் கணம் என்பதும் பெயர். பேய்க்கணம், தேவகணம் என்பது போல. “கொட்டுமழைத் தூறல் குறுக்கில் நடந்தகுடை! வெட்டும் விரிமின்னல் வானில் படருகணம்!” என்கிறார். காதல் மீதூறும் ஒரு படைப்பில் மரபு சார்ந்த இலக்கணப் பதிவுகளை மிக இலாவகமாகச் செருகியிருக்கிறார் தம்பி இராசன் அவர்கள். முற்றெதுகைகளால் அமைந்த கலியில் கூழை மோனைகளும் இணை மோனைகளும் பொழிப்பு மோனைகளும் கைகோத்து சந்த இசையோடு நடைப்பயணம் புறப்பட்ட அழகை என்னென்பது?
செந்தமிழ்ப்பாவையும் தேன்பாவையும்
அரிமாப் பாவலர் துரை மாணிக்கம் சிறைச்சாலையில் எழுதியது செந்தமிழ்ப்பாவை. இனத்துக்கும் மொழிக்கும் உள்ள கேடு உணராது கண்ணயரும் இளமங்கையரைத் துயிலெழுப்புவதாய் அமைந்த கட்டமைப்பு.
“காக்கை கரையும்! கடிமுல்லை மொக்கலரும்!
மேற்கில் மதிகரையும்! கீழ்க்கதிரும் மேலெழும்பும்!
ஈர்க்குமா றோசை இரையும் தெருவெல்லாம்!
யாக்கை வளர்ப்பார் தவிர எவர் இப்பொழுதில்
சேக்கை புரள்வார்? சிறுதுயிலும் கொள்ளுதியே!”
என்பது செந்தமிழ்ப் பாவையில் ஒரு பாடல். மிக நுண்ணியத்துடன் எழுதப்பட்ட பாடல். காக்கை விழித்துக் கொண்டு கரைகிறது. முல்லை மலர்ந்துவிட்டது (காலையில் முல்லை மலரும் என்பது மயக்கம்). மேற்குத் திசையில் நிலவு கரையும்! கிழக்கில் கதிரவன் கடலின் மேல் எழும்பும்! யாக்கைமேல் பற்றுக் கொண்டு வளர்ப்பாரேயன்றி மொழிப்பற்றும் இனப்பற்றும் கொண்டோர் அவற்றுக்குக் கேடுவந்துள்ள சூழல் கண்டும் உறங்குவார்களா? என்று வினவுகிறாள். இந்தப் பாட்டில் காலைப்பொழுதை ஒருசில வண்ணனைகளால் காட்சிப்படுத்துகிறார் பெருஞ்சித்திரனார். நம் வசந்தராசனோ,
“கார்மேகம் வெட்கும்! கருமை நிறங்குன்றும்!
நீரருவி போல்நெளியும்! நின்றபடிக் கீழிறங்கும்!
நீர்வான் ஒளிப்படகு நீந்தும் நிலவுக்குப்
போர்வையாய் நின்று புறத்தே கரைகொடுக்கும்!
தார்மலர்கள் வந்து தவம்செய்தால் நன்மணத்தைச்
சீராய்க் கொடைகொடுக்கும்! சிந்தாமல் பூப்பறிக்கும்!
நேராய் வரும்காற்றின் நெஞ்சுக்கும் சிக்கெடுக்கும்
சீரான கருங்கூந்தல்! சீக்கிரம்காண் எம்பாவாய்!”
எனப் பாடல் முழுமையும் நிரலாக வண்ணனைகளை அடுக்கிக் காட்டுகிறார். கற்பனை கலந்த காட்சிகள் மனக்கண் முன் விரிகிறபோது அவற்றை நிரல்படக் கோப்பது அரிதான செயல் அன்று. ஆனால் முதலில் காட்சிகள் வரவேண்டும்!
துள்ளும் சிறுமீன்கள் தோற்றும் அலைவட்டம்
மெல்லக் கரைதொட்டு மீண்டும் குளம்போகும்!
புல்லில் பனிசருகும்! பூவும் முகங்கழுவும்!
கல்லும் குளிர்மேவும் காலுக்கு இதமாகும்!
வெள்ளம் விழுந்தவளை அல்லி மலரசைக்கும்!
அள்ளும் பேரழகை அன்பீர் மறந்தீரோ?
வில்லடியின் கீழிரண்டு மீன்களைத் தான்புதைத்து
மெல்ல உறங்குதியோ? மீளுமேலோர் எம்பாவாய்
என்னும் எழிற்பாவையும்
குயில்கூவிக் கொண்டிருக்கும் கோல மிகுந்த
மயிலாடிக் கொண்டிருக்கும்! வாச முடையநற்
காற்று குளர்ந்தடிக்கும்! கண்ணாடி போன்றநீர்
ஊற்றுக்கள் உண்டு! கனிமரங்கள் மிக்க உண்டு!
வேட்டுவப் பெண்கள் விளையாடப் போவதுண்டு!
காட்டு மறவர்களும் காதல் மணம் செய்வதுண்டு!
நெஞ்சில் நிறுத்துங்கள்! இந்த இடத்தைத்தான்
சஞ்சீவி பர்வதத்தின் சாரல்; என்று சொல்லிடுவார்”
என்னும் பாரதிதாசன் பாடலும் இங்கே ஒப்பு நோக்கத்தக்கன. இயற்கையோடு வாழ்கின்ற கவிஞர்களுக்குத்தான் இது இயலும். வசந்தனுக்கு இது இயல்பு. இந்த மாதிரியான வண்ணனைக் களங்கள் ஏராளம்! ஏராளம்!
தேனினும் இனிய தொடர்கள்
கவிதை இலக்கியப் படைப்புக்களில் குறிப்பாக அக இலக்கியப் பதிவுகளில் காலத்துக்கும் நிற்பன தொடர்கள். இவற்றை அடுத்துக் கற்பனைகள். கற்பனைகள்கூடத் தற்காலிக இன்பத்தையே நல்கும். தொடர்கள் காலத்துக்கும் நிலைத்த இன்பத்தைத் தரும். ‘அன்னை கூறினள் புன்னையது நலனே’ நற்றிணைத் தொடரும் நீயலது உளரோ என் நெஞ்சமர்ந்தோரே என்னும் ஐங்குறுநூற்றுத் தொடரும் காலத்துக்கும் ;மங்காது! மறையாது! தற்காலத் திரையிசையில் கூட,
“அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை
உன் அழகைப் பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை
உன்னைத் தேடும்போது இதயம் இங்கு சுகமாகத் தொலைந்ததே”
‘உன்னைத் தேடும்போது இதயம் இங்கு சுகமாகத் தொலைந்ததே’ என்னும் தொடர் எண்ணற் கினிக்கும். எடுத்தியம்ப வாயினிக்கும். மனைவியிடம் கணவன் தான் அனுபவித்த இன்பத்தைக் கொஞ்சம் சொல்லலாம். ஆனால் மனைவி அவ்வாறு வெளிப்படச் சொல்ல இயலுமா? இயலாது. ஆனால் சொல்கிறாள். எப்படி?
‘பரிமாறும்போது நான் பசியாறினேன்’
என்கிறாள் மனைவி. இந்தப் பக்குவப் பதிவுகள் எல்லாருக்கும் வந்துவிடாது. ஆபாசத்தை அமுதமாக்கிக் கொள்பவர்களுக்கு அது இயலாது. வசந்தராசனுக்கு அது கைவரப் பெற்றிருக்கிறது. காதலைக் கற்பனையில் வைத்துப் பாடுவதைவிடத் தொடர்களில் வைத்துக் காட்டுகிற உத்தியில் அவர் தனித்து விளங்குகிறார். வசந்தராசன் தன்னைத்தன் காதலியிடம் தொலைத்துவிடுகிறார்.
“தொலைந்து விட்டேன் உன்னிடம்நான்! தேடித் தாயேன்!”
கற்பனையின் ஆழத்தைத் தொடரில் வைத்துக் காட்டும் இந்தச் சதுரப்பாட்டினை அவருடைய பல கவிதைகளில் நான் கண்டிருக்கிறேன். இந்தப் பாவையிலும்,
“நெஞ்சுக்கும் சிக்கெடுக்கும் சீரான கருங்கூந்தல்”
என்ற தொடரைக் கையாள்கிறார். சிக்கெடுக்கப்பட வேண்டியது கூந்தல். இங்கே அந்தக் கூந்தல் தன் அழகால் தலைவனின் நெஞ்சைக் சிக்கெடுக்கிறதாம். காதலியைச் ‘சேலைச் சோலையே’ என்பார்கள். வசந்தன் எழில் தவழும் தொடர்களைக் கையாள்கிறார்.
‘தாகம் தணிக்க வந்த தாவணிப் பேரருவி’
உருவகம் என்ற பெயரில் எதனையும் உருவகித்துவிட முடியும். “பாலிருக்கும் கிண்ணம் மேலிருக்கும் வண்ணம் நீ செய்த கோலமில்லையா? என்று கூட உருவகம் செய்திருக்கிறார்கள். ஆனால் அதில் கற்பனை நயம் இருக்க வேண்டும். நயத்தை நாற்றுநடும் நாகரிகச் சொற்பயன்பாடு இருக்க வேண்டும். தாகம் தீர தண்ணீர் தேவை! இங்கே தண்ணீர் தலைவி! அவள் அருவி! பேரருவி! மலைகளுக்கு இடையில் விழுகிற அருவி! குற்றாலம் சென்றவர்களுக்குத் தெரியும். இந்த அருவியில் தாவணி அருவியாகிறது. இதுதான் எல்லை! இந்த எல்லைக்கோட்டுக்குள் மிகக் கவனமாகச் சொற்சிலம்பு ஆடுகிறார்.
“நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே”
என்று கணவன் சொல்ல,
“அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே”
என்று மனைவி சொல்ல களைகட்டிய காதல் கச்சேரியைக் கண்ணதாசன் நிகழ்த்தியிருந்த காலம் ஒன்றுண்டு. கத்திமேல் நடக்கிற விளையாட்டு! காயம் படாமல் இறங்கிய வெகுச்சிலருள் தம்பி இராசனும் ஒருவர்! ‘தாவணிப் பேரருவி’ என்ற சொல்லால் தண்டகாருண்யத்தையே மறைத்திருக்கிறார். மறைப்பதுதான் அழகு என்னும் மந்தணம் புரிந்தவர்!
பொங்கு புனலலையாய் தொங்கு நீர் காரருவி
தங்கும் கதிர்நிலவு தாங்கம் மலைமுகடு
திங்கள் விழியிரண்டில் கூரம்புக் கேடயங்கள்
பங்கமிலாப் பல்முத்து வாய்பவத் தேனிதழ்கள்
தெங்கின்கள் தோற்றோடும் தேறல் இதழ் கன்னம்
தங்கவைர ஆரமென வானவில் தோரணங்கள்
நுங்கு கழுத்தொன்றே தாங்குகின்ற அதிசயத்தை
எங்கினிதான் காண்பீர் நீர்? இயம்பலோர் எம்பாவாய்!
என்னும் இராசனின் உள்ளுறை வண்ணனையை
“இடையின் பின்னழகில் இரண்டு குடததைக் கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச் சென்றாள்”
என்று காதலியின் பின்னழகைப் பாடுவதோடும்
“பொன்பகட்டில் வார்த்து வைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்?
மடல் வாழை தொடை இருக்க
மச்சம் ஒன்று அதிலிருக்க
படைத்தவனின் திறமையெல்லாம்
முழுமை பெற்ற அழகென்பேன்”
என்று காதலியின் தொடைழகைப் பாடுவதோடும் ஒப்பிட்டுப பாரத்தால் வசந்தனின் பண்பாட்டு நுணணியமும் உயரமும் தெளியக் கூடும்.
உவமச் செல்வர் வசந்தராசன்
உவமம் பொருள் விளக்கக் கருவி மட்டும் அன்று. படைபபாளனின் முழுமையான ஆளுமையை வெளிப்படுத்துவதில் தலையாய பங்கு வகிக்கும் தனியாற்றல். அவனுடைய உலகியல் பார்வையையும் பரந்துபட்ட இலக்கியப் புலமையையும் ஒரே நேரத்தில் பலப்படுத்தும பேராற்றல் ஒரு கவிஞன் பயன்படுத்தும் உவமங்களுக்கு உண்டு. தம்பி வசந்தராசன் ஓர் உவமச் செல்வராகவே எனக்குக் காட்சி தருகிறார்!
- பெண்களுடைய கழுத்துக்குச் சங்கை மட்டுந்தான் உவமம் சொல்லி வந்தார்கள். மிகச் சிலர் ‘பாக்கு மரத்தை’ உவமித்தார்கள். தம்பி வசந்தராசன் ‘நுங்கு கழுத்து என்கிறார். உவமத்தில் கவிதை உறங்குகிற இடம் இது!
- கவிராஜன் கதையில் பாரதியின் உடல் இளைத்துப் போனதற்கு வைரமுத்து வெண்பாவின ;ஈற்றடியை உவமித்துக் காட்டுவார். தம்பி வசந்தராசன் காதலிக்கு முன்பாகத் தான் ஒரு ஈற்றசையாக மெலிந்து விடுவதாகப் பதிவு செய்கிறார்.
- உள்ளத்தில் உண்மையொளி உணடாயின் வாக்கினிலே வாய்மையுணடாகும என்பார் மகாகவி. தும்பைப்பூவை மனத்திற்குத்தான் உவமித்துப் பாரத்திருக்கிறோம். அந்தத் தூய்மை விழிகளுக்குள் வெளிப்படுகிறதாம். உவமத்திற்கு உவமம். கற்பனைக்குக் கற்பனை!. ‘தும்பை மனவிழிக்குள் தூளிகட்டு எம்பாவாய்’ என்பது தேன்பாவை!
- நிலவைப் பெண்ணின் முகத்திற்கு உவமம்; சொல்வது பழந்தமிழ் தொடங்கி நேற்றுவரை நிலைத்துவிட்ட மரபு. ஒட்டுமொத்த பெண்ணின் மெல்லுடலுக்கு உவமம ;சொல்கிறார் வசந்தராசன் ‘‘கிள்ளிவைத்த பால்நிலவு’ நடக்கிற விஷயமா இது?
- உடுக்கையை இடைக்கு உவமம் சொல்லியே ஓய்வெடுத்துக் கொண்ட கவியுலகில் எட்டை உவமமாக்கி வளைந்த எட்டை நிமிர்த்திவிடுகிறார வசந்தராசன்! அந்த எட்டுக்கு ஒரு இறுமாப்பு அவளுக்கு உவமம் ஆனதற்காக!
- ‘எள்ளின் மேலேறி எழுதும் கண்வினாவின் துள்ளும் தொடர் முற்றாய் தொங்கும் வினாக்குறிகள்’ என்று முகததை உவமக் களஞ்சியமாக்கியிருக்கிறார்!
தன்னை இழக்க வைக்கும் காதல்
கடலுக்கு ஏன் நீல நிறம் என்று ஆராய்ந்தவர்களும் வானத்திற்கு ஏன் நீல நிறம் என்று ஆராய்ந்தவர்கள் உண்டு. அவர்கள் விஞ்ஞானிகள். ‘கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ? என்று கடல் நீல வண்ணமானதற்குச் சர்.சி.வி இராமனுக்குத் தெரியாத உண்மையைக் கண்டறிந்து சொன்னவர் கண்ணதாசன். கொஞ்ச நாள் கழித்து அவரே இன்னொரு ஐயத்தையும் கிளப்புகிறார்!
“நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே! உன் கண்ணோ ?”
வானம் நீலம் பூத்து நிற்பதற்கும் அவள் கண்தான் காரணமாம். ஏற்கனவே தென்றலுக்குள் தேன் வைத்து வியர்த்து நின்ற வசந்தராசன், இங்கே தன் காதலியைப் பார்த்து இப்படி ஐயப்படுகிறார்.
“சந்தனக் குழம்புக்குள் தென்றலை நீந்த வைத்து
செந்தமிழில் சொல்லெடுத்துத் தேனில் குழைத்தெடுத்து
வந்தமரும் வண்டுக்கு வாசல் திறந்து வைக்கும்
நந்தவனப் பூக்களுக்கும் நாணம் சிவக்க தர
எந்த லோகத்தில் இருந்து பிறந்தவளோ?”
என்று தன் காதலியின் பேரழகைத் தற்பெருமையாகப் பாடுகிறார். நாம் பொறாமைப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. என்ன நமக்கெல்லாம் வருத்தம்? கற்பனைக் காதலிக்கே இத்தகைய ஆலாபனை கிட்டியிருக்கிறது என்றால் உண்மைக் காதலி ஒருத்தி கிட்டியிருந்தால் எத்தகைய காதல் காப்பியம் கிடைத்திருக்கும் என்பதுதான்! ‘இந்தப் பாராட்டைக் காதலின் வெளிப்பாடாக மட்டும் கருதாமல் அவர் கவியாற்றின் ஊற்றினைத் திறந்துவிட்டதற்கான நன்றியுணர்ச்சியாகவும் வண்ணனை செய்திருக்கிறார்.
நிறைவுரை
உள்ளது கொண்டு உள்ளது புணர்த்தல், உள்ளது கொண்டு இல்லது புணர்த்தல், இல்லது கொண்டு இல்லது புணர்த்தல், இல்லது கொண்டு உள்ளது புணர்த்தல் என இலக்கிய உருவாக்கம் நான்கு வகைப்படும். தம்பி வசந்தராசனின் இந்தத் தேன்பாவை இல்லாத காதலியிடத்துத் தோன்றாத காதலைப் பாடியது ஆதலின் இல்லது கொண்டு இல்லது புணர்த்தலே! பொருளும் படைப்பின் உள்ளடக்கமும் இல்லதாயினும் இலக்கியம் உள்ளதே. புகழைத் தேடுகிறவன் அழிவான். புகழ் அழியாது. படைப்பாளன் மறைவான். அவன் படைப்பு அழியாது. எல்லாப் படைப்புக்கும் இது பொருந்தாது. மக்கள் உள்ளத்தில் அழியாது நிற்கும் படைப்புக்களுக்கே இது பொருந்தும். ‘மானுடக்காதல்’ என்னும் அநித்தியத்தை நித்தியமாக்கி அதனையும் ஒரு பாவையை முன்னிலைப்படுத்தி அவளையொத்த ஒருத்தியிடமே அவளை வண்ணனை செய்து காட்டியிருக்கும் தம்பி துரை. வசந்தராசனின் துணிச்சலும் படைப்பாளுமையும் உறுப்பு வண்ணனை என்னும் ஆபத்தான இலக்கியக் களத்தில் காட்டியிருக்கும் பொறுப்பும் எச்சரிக்கை உணர்வும் மெச்சத்தகுந்தன! பாராட்டும் மேன்மைக்குரியது! தேன்பாவை நூலுக்குச் சாற்றுக்கவி பாடவந்த ஆற்றல்சால் கவிஞர் திரு. ஆரூர் தமிழ்நாடன் இப்படிப் பாராட்டுகிறார்.
“நான் பார்த்த மாகவிஞன் நல்வசந்த ராசனிடம்
நாள்கோள்கள் பார்க்காமல் நற்றமிழாள் தோள்சாய்ந்து
தேன்முத்தும் தந்திடுவாள்”
என்னும் தம்பி இராசனுக்குரிய அந்தக் கோளறு பதிகத்தை அப்படியே வழிமொழிந்து அவருடைய அசுரத் திறமைக்கு ஓர் அணுவாக இந்தப் பாவையைக் கருதி நாமும் வாழ்த்தி மகிழ்கிறோம்! களங்களும் சொற்களும் கவலையுடனும் ஏக்கத்துடனும் காத்திருக்கின்றன, தம்பி வசந்தராசனின் பார்வைக்கு! வாழ்த்துக்கள்!
(தொடரும்)