ஏறன் சிவா

மனமே மனமே மயங்காதே — ஒரு
மழலை போலே கலங்காதே!
தனியே தனியே புலம்பாதே — விழித்
தண்ணீ ரில்நீ தளும்பாதே!

உளமே உளமே ஒடுங்காதே — வரும்
உயிர்த்துன் பத்தால் நடுங்காதே!
குளமாய்க் கண்கள் நீர்பெருக — உன்
கோலம் நொந்து குறுகாதே!

நெஞ்சே நெஞ்சே விசும்பாதே — வரும்
நினைவுத் துயரால் பொசுங்காதே!
அஞ்சி யஞ்சி நடவாதே — நீ
அழுகைக் கல்பட் டிடறாதே!

துன்பம் நிழலாய்த் தொடர்ந்துவரும் — அது
துயரம் கோடி தூக்கிவரும்!
கண்ணே அதனைக் எண்ணாதே — இனி
கவலைத் தீயை உண்ணாதே!

தோளின் மீதோர் அணிகலனாய் — நீ
தூக்கி நடப்பாய் துணிவினையே!
காலம் மெல்லக் கனிந்துவரும் — உன்
கைக்குள் உலகம் பணிந்துவிழும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *