தலையான பாடம்
பாஸ்கர்
படபடவென இருக்கும் மூளை அமைப்பில் நிதானம் இல்லாமல் இருப்பதன் பலன் ஒன்றைச் சென்ற வாரம் அனுபவித்தேன். தலைமுடி இப்படி வெள்ளையாக இருக்கிறதே என்று ரொம்ப நாளாக யோசித்துக் கொண்டிருந்தேன்.
தொலைக்காட்சியில் பார்த்த விளம்பரம் நினைவுக்கு வர, பக்கத்தில் உள்ள சிகை அலங்காரக் கடைக்குச் சென்று கலரிங் பற்றிச் சொல்ல, அந்த இந்திக்காரப் பையன் என்ன புரிந்துகொண்டான் எனத் தெரியவில்லை. ஒரு அரை மணிக்குப் பொம்மையைத் திருகுவது போல எனது தலையைத் திருப்பி, கருப்பு வண்ணத்தைத் தலை முடியில் கொண்டு வந்தான்.
கண்ணாடியில் பார்த்த போது எனக்கு அது பிடிக்காமல் போக, எனது அவசரத்தை நினைத்து வருத்தப்பட்டேன். இளமை முகத்தை மீண்டும் கொண்டு வர நினைக்கும் இந்தப் புத்தி, ஒரு அங்கீகாரப் பரபரப்பு. நானும் மற்றவர்களுக்கு ஈடு எனச் சொல்ல நினைக்கும் மனம், மஹா பைத்தியக்காரப் புத்தியின் உச்சம்.
கிட்டத்தட்ட ஒரு மூன்று வாரம் கழித்து இப்போது பார்த்தால், முடியெல்லாம் கொட்டி முன்னை விட மோசமாகப் போய்விட்டது . இனி ஒன்றும் செய்வதற்கு இல்லை எனத் தீர்மானம் செய்தேன். இனி இது போல ஒரு அவசரத் தன்மை கலந்த செய்கையைச் செய்யக் கூடாது எனப் புரிந்து கொண்டேன். இந்த விஷயம் புத்திக்கு உறைக்க இவ்வளவு வருடங்கள் தேவைப்பட்டு இருக்கின்றன என்பதை நினைத்துப் பெரும் வருத்தம் வேறு.
பேருக்கும் புகழுக்கும், ஒரு பிம்பத்திற்கு அலையும் புத்தி இப்படித்தான் இட்டுக்கொண்டு செல்லும். அந்தக் கடைக்காரப் பையன் கருப்பு மசியை என் தலையில் கொட்டினாலும் அது என் முகத்தில் கொட்டியதாக இப்போது உணர்கிறேன்.
வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் ஒரு பாடம் இருக்கிறது. அதை உள்சென்று உணர்வதில் ஒரு பயம் இரூக்கிறது. பொய் பிம்பம் அப்படியே வேடம் கலையாமல் இருக்க என்ன ஒரு முஸ்தீபான வாழ்க்கை இது. இந்தத் தலையான பாடத்தைக் கற்றுக்கொண்ட பின், முகக்கண்ணாடியைக் கொஞ்ச நாட்களாக பார்ப்பது இல்லை. இப்போது வாழ்வில் வேஷம் போடுவது பற்றிக் கவலை இல்லை. அது கலையாமல் இருக்க வேண்டுமே என்பது தான் பெரும் கவலை.