படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 13

0

முனைவர் ச. சுப்பிரமணியன்

கவிஞர் திரு. விக்டர் தாஸ் அவர்கள் தன் பாசத்தந்தை மறைந்தபொழுது தாளின்மேல் கோல்கொண்டு எழுதாது தரையின் மேல் விழுந்து வாய்விட்டு அரற்றிய வெண்பாக்களைப் பற்றிய ஒரு கண்ணீர்ப் பார்வை

‘தந்தைக்கு அழுத தமிழ்’

முன்னுரை

திறனாய்வுகளால் அல்லது உரைகளால் சிறக்கும் மூலங்கள் உண்டு. மூலங்களைத் திறனாய்வு செய்யும் பேறு அல்லது உரையெழுதும் பேறு சில உரைகளுக்கு அமைவதும் உண்டு. முன்னதற்கு வியாக்கியான சக்கரவர்த்தி பெரியவாச்சான்பிள்ளையின் பாசுர உரையால் சிறப்படைந்த நாலாயிர திவ்வியப் பிரபந்தமும் பின்னதற்குத் திருக்குறளுக்குப் பரிமேலழகர் செய்த உரையும் எடுத்துக்காட்டுக்களாகும். தம்பி விக்டர் தாஸ் அவர்களின் கண்ணீர் வெண்பாக்களைத் திறனாய்வு செய்ய இயலாத நிலையில் அவை கொட்டப்பட்ட சூழலையும் கொட்டிய முறையையும் கருத்திற்கொண்டு கொட்டப்பட்டவைகளில் கிடக்கும் கண்ணீர் முத்துக்களைக் கைகளில் அள்ளிக் காட்சிப்படுத்தும் எண்ணத்தின் விளைவே இந்தக் கட்டுரை. செத்துப் போன கவிதைகளுக்குப் பரிசுகளையும் விருதுகளையும் அளித்துத் தாமும் தவணை முறையில் செத்துக் கொண்டு மரத்துப்போன சில அமைப்புக்கள் நிறைந்த இந்தத் தமிழகத்தில் உயிரிழந்த தன் பாசத் தந்தைக்கு உயிர்ப்போடு வைத்த ஒப்பாரியின் மூலம் தமிழ்க்கவிதை உலகிற்குப் புதிய தடம் காட்டியிருக்கிறார் விக்டர். அதனை அதன் உச்சத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியில் தனிப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். மரபுக்கவிதை பற்றிக் குழப்பத்துக்குள் குடும்பம் நடத்திக் கொண்டு  வேகாத சொற்களையெல்லாம் வெண்பா என்று எழுதி வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுகிறவர்கள் பலரும் நின்று நிதானித்து விக்டரை ஆசிரியராகக் கொள்வது நேரிசை வெண்பாவின் ஆயுளை நீட்டிக்கச் செய்யும் அவசர கால வழியாகலாம்.

அவலமே அணியாக்கிய விக்டர்

‘தனிமனிதச் சோகத்தையே தனியொரு கவிதைப் பொருளாக்க  முடியும்’ என்ற வியப்பான இலக்கிய உள்ளடக்கக் கோட்பாட்டைக் கண்ணதாசனிடமிருந்து நான் கற்றேன். அவலத்தை இலக்கியச் சுவைகளில் ஒன்றாக நான் படித்திருக்கிறேன். ஆனால் அவலத்தையே இலக்கியமாக்கிய வித்தையை நாட்டுப்புறப்பாடல்களில், நல்லதங்காள் கதைப் பகுதிகளில் அண்ணன்மார் கதையில், நான் உணர்ந்தது உண்டு. அவற்றின் தொடர்ச்சியாகச் சோகத்தைச் சுகமாக அருந்தியது கண்ணதாசன் பாடல்களில்தாம். எந்தப் பொருளைப் பற்றிப் பாடியிருக்கிறார் என்ற தெளிவில்லாதவர் கூட அவர் பாடாத பொருளில்லையோ என்னும் மயக்கத்திற்காளாவது இயல்பு. கள்ளம் கபடமற்ற அவருடைய மனம், இழுத்த இழுவைக்கு அவரோடு ஊடாது ஒட்டிக் கொள்ளும் தமிழ் இந்த இரண்டுமே அவருடைய இமாலய வெற்றிக்குக் காரணம். அத்தகைய கண்ணதாசனின் ஒட்டுமொத்த கவிதைச் சோகத்தைப் பாவலர் விக்டர்தாஸ் அவர்கள் கொட்டிய இந்த எழுபத்தாறு முகநூல் வெண்பா முத்துக்களைக் கண்ணுற நேர்ந்தபோது நான் முழுமையாக உணர்ந்து கொண்டேன். அந்த அனுபவத்தை என் மொழியில் நான் இங்கே பதிவு செய்ய முயல்கிறேன்!

‘நேர்ந்தது’ ஒரு சொல்லாய்வு

சென்ற பத்தியில் வெண்பா முத்துக்களைக் கண்ணுற நேர்ந்தது என நான் எழுதியது இலக்கண நெறிப்படி தவறு. அரியவற்றைக் காணும் பேறு பெற்றேன் என்று எழுத வேண்டும். தாஸ் அவர்களின் வெண்பாக்களைப் பற்றிய இலக்கிய மதிப்பீட்டை நான் பதிவுசெய்கிறபோது ‘காணும் வாய்ப்பினைப் பெற்றேன்’ என்றுதான் எழுத வேண்டும். ‘நேர்தல்’ என்பது தவிர்க்கப்பட வேண்டியது. ‘வாய்ப்பு’ என்பது பெறப்பட வேண்டியது. நான் தந்தை பெரியாரைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன் என்று எழுத வேண்டுமே தவிர நான் தந்தை பெரியாரைக் கண்ணுற நேர்ந்தது என்று எழுதக்கூடாது. அது நெறியன்று. ‘காண’ என்னும் எச்சம் கண்ணுக்கானது. கண்ணுற என்னும் எச்சம் பொருளுக்கானது. காணக்கூடாதது கண்ணில் பட்டால் கண்ணுறுதல்! காணக்கிட்டாதது கண்ணில் படுமானால் அது காணும் வாய்ப்பு! இவ்வளவும் தெரிந்த நான் தாஸ் அவர்களின் வெண்பாக்களைக் ‘காண நேர்ந்தது’ என்று எழுதுவானேன்? ஒன்றுமில்லை. அவற்றை நான் படித்த பிறகு சில நாள்கள் தூங்கவில்லை என்பதுதான் சத்தியம். என் உறக்கத்தைக் கெடுத்த வெண்பாக்கள் அவை. என் நிம்மதியைக் கெடுத்த வெண்பாக்கள் அவை! அண்மையில் ஒரு திங்கள் திருச்சிராப்பள்ளி அப்பல்லோ மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டிருந்த போது என் மனைவி, பிள்ளைகள், மருமகள்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோர் என்னை அருகிருந்து கவனித்துக் கொண்டனர். அந்த மருத்துவமனைச் சூழலில் மனரீதியாக நான் வாழ்ந்திருந்தது இந்த வெண்பாக்களோடுதான்!  எனவேதான் இறக்கக்கூடாதவர் இறந்து போனால் என்ன சோகமோ அதனையே இந்த வெண்பாக்களைப் படித்த போது நான் உணர்ந்தேன்! கவிதையின் காரியம் கண்ணீர் என்பது இலக்கியத்தின் உச்சம்! அந்த உச்சத்தைத் தாள் இல்லாமல், தூவல் இல்லாமல் எழுதியிருக்கிறார் இல்லை கொட்டியிருக்கிறார் விக்டர் தாஸ் அவர்கள்! தந்தையை இழந்த அவருடைய துன்பத்தில் பங்கு கொள்வதுதான் இந்த வெண்பாக்களுக்கு நான் செலுத்தும் நன்றி என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

வெண்பா உரிச்சீர் காய்ச்சீரா? கண்ணீரா?

இப்படியொரு வெண்பா இலக்கியத்தைத் தமிழிலக்கிய உலகமோ கவிதை உலகமோ கண்டதும் இல்லை. கேட்டதும் இல்லை. தந்தையும் தாயும் கொரானா மரணப்படுக்கையில் அச்சமின்றிப் பெற்றோருக்கான கடனை மகன் செய்கிறான். தந்தையை எப்படியும் காப்பாற்றிவிடலாம் என்று நம்பிக்கையுடன் மரணத்தோடு மல்லுக்கட்டுகிறான். சாவோடு சண்டையிடுகிறான். வெல்ல முடியாத பகை மரணம் என்பது அவனுக்குத் தெரியும். இருந்தும் தந்தைக்காக, அவர் காட்டிய பாசத்துக்காக, ஊட்டிய அறிவுக்காக அவரைக் காக்கப் போராடுகிறான். போராடியவன் வீரன் என்பதால் வெற்றிகரமாகத் தோற்கிறான்.

இலக்கணம் இல்லாமல் பெண்கள் வைக்கும் ஒப்பாரியில் இலக்கியம் குடியமர்ந்து கொள்ளும். இலக்கணப் புலவர்கள் சொல்லும் கவிதையில் இலக்கியம் வாழாவெட்டியாகிவிடும். தந்தையை இழந்த விக்டர் தாஸ் தன் மனக்குமுறலை மொழியில் இறக்கி வைக்கிறார். இதயத்துக் கண்ணீரை எழுத்தாக்கிவிடும்போது எந்தப் பாரமும் குறைந்துவிடும் என்பது அவர் அறிந்த தத்துவம்! ஆனால் இறக்கி வைத்த சுமைதாங்கிக் கல் வெண்பா! அதுவும் நேரிசை வெண்பா. பதினான்கு இடங்களில் தளைகள் சரியாக அமைதல் வேண்டும். யாப்புச் சர்வாதிகாரிக்குப் பிறந்த பேரழகி வெண்பா! விக்டர் தாஸின் தந்தையைப் போலவே வெண்பாவும் கண்டிப்பானது!. அதனால்தான் தன் கண்ணீரை வெண்பாவில் சேர்த்து வைத்திருக்கிறார்.

சீர்களை இறவாணத்தில் தேடுகிற எவனும் இலக்கிய ஆக்கத்தில் வெற்றி பெற முடியாது. ஏற்கனவே இதயத்தில் இருந்த சீர்களைக் கண்ணீரில் இறக்கிவைத்தவர் விக்டர் தாஸ். தமிழ்க்கவிதையின் பெருமை கூடியிருக்கிறது. தாளோடு கோலோடு எழுதப்படுகிற வெண்பாக்களில் ஓராயிரம் ஓட்டைகள். கண்ணதாசனைப் போலக் கொட்டிய பாடல்களில் யாப்பு கோலோச்சுகிறது. உருவகங்கள் என்ன? உவமங்கள் என்ன? வழக்குச் சொற்கள் என்ன? வாழ்க்கைத் தத்துவங்கள் என்ன? அவலச் சுவை என்ன? அழுகையின் ஆலாபனை என்ன? உணர்வுகளும் உணர்ச்சிகளும் கைகோத்துக் கொண்டு செல்லும் ஊர்வல நேர்த்தி என்ன? அடடா!

விக்டர்தாஸின் வெற்றி

படைப்போடு கலந்து விடுகிற எவனும் படைப்பாளனை மறந்துவிடுகிறான். அது சரியே. ஆனால் விக்டர்தாஸின் இந்தப் புலம்பலைப் படிக்கிறபோது அவரை ஒதுக்கிவைத்துவிட்டுப் படிக்க இயலவில்லை. ‘வெண்பாவிற் புகழேந்தி’ என்பது ஒரு கல்வெட்டுச் செய்தியாக மாறிக் காலம் பல ஆகிவிட்டது. புகழேந்தியைப் புறங்கொண்ட வெண்பாக்களும் வெண்பாக்களால் ஆக்கப்பட்ட நுல்களும் தமிழில் எண்ணற்றன. புறப்பொருள் வெண்பாமாலையின் வெண்பாக்களோடு போராடுவதற்கு நளவெண்பாக்கள் தனிப்பயிற்சி எடுக்க வேண்டும். இந்த உண்மை ‘வெண்பாவிற் புகழேந்தி’ என்னும் பாடற்குறிப்புப் பேர்வழிகளுக்குத் தெரியாது. காளமேகம் உட்படப் பெரும்புலவர்கள் எழுதிய தனியன்கள் நேரிசை வெண்பாக்களைப் பெண்கள் விளையாடும் கூழாங்கற்களாக்கியிருக்கின்றன. சோமேசர் முதுமொழி வெண்பா திருக்குறள் விளக்கக் கதைகளையும் கருத்துக்களையும் விளங்குகிறது என்றால் பாவேந்தரின் மணிமேகலை வெண்பா இன்னொரு புரட்சி செய்திருக்கிறது. கரூர் புலவர் குழந்தையும் கடவூர் மணிமாறனும் வெண்பா நானூறு என்பதுபோலத் தனி நூல்களையே வெளியிட்டு இருக்கிறார்கள். வலங்கை வேல்முருகனுக்குக் காலைக் குளியலே வெண்பாக் குளத்தில்தான்!. இவற்றை விட இன்னொன்றும் சொல்ல வேண்டும். மாதவரம் பால் பண்ணையில் பால்கோவா தயாரிக்கிறார்கள். பக்கத்தில் இருக்கும் கவிக்கோவின் பண்ணைவீட்டில் பால்கோவாவைப் ‘பா’கோவாக மாற்றி நாளும் பரிமாறிக் கொண்டிருக்கிறான் தம்பி வசந்தராசன்! இரண்டுமே பண்ணையில் தயாரிப்பதால் இனிப்பில் விஞ்சி நிற்பது எது? என அடிக்கடி பட்டிமன்றம் நடப்பதாகவும் தகவல். ஆனால் இத்தனையும் உட்கார்ந்து எழுதியவை என்பதை மறக்கக்கூடாது. மாமுன் நிரையா? காய்முன் நேரா? விளம் முன் நேரா? என்று ஒவ்வொரு சீராகப் பதம்பார்த்துச் செய்யப்பட்ட கட்டடப் பணியாகத்தான் நடந்திருக்கிறது. காரணம் இவற்றுள் எதுவும் வாய்மொழியாகச் சொல்லப்பட்டதில்லை. தம்பி விக்டர்தாஸ் கொட்டியிருக்கிறார், குமுறியிருக்கிறார். அவர் கொட்டியதை அன்பர் ஒருவர் அள்ளியிருக்கிறார். வெண்பாக்களாக அவர் கைகளில் வந்திருக்கின்றன. கண்ணீர் கவிதையாக மாறிய விந்தையான தருணம் அது! புகழேந்தி பூரித்துத் தன் தோல்வியை ஒத்துக் கொண்டு தன் தனையனை உச்சி மோந்தத் தருணமும் அதுதான்!

நேரிசை வெண்பாவின் நதிமூலம்

பொதுவாக நான் எழுதும் இலக்கியம் (பெரும்பாலும் கவிதை) பற்றிய திறனாய்வுகளில் கவிதைகளின் வடிவம் பற்றிய தெளிவினை இயன்றவரைச் சுருக்கமாகப் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். காரணம் முகநூல் அன்பர்கள் பலரும் தவறாக யாப்பிலக்கணம் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அவர்கள் பதிவிலிருந்தும் பின்னூட்டங்களுக்குத் தரும் புலமை குறைவான பொறுப்பற்ற பதிலுரைகளிலிருந்தும் தெரிந்து கொள்ள முடிந்தது. தம்பி விக்டர் தாஸ் அவர்களின் புலம்பலை அசைபிரித்து ஆராய்வதற்கு முன்னால் நேரிசை வெண்பா பற்றிய ஒரு தெளிவினைத் தருவது எனது கடமையாகிறது. வடிவம் பற்றிய தெளிவு இல்லாவிடின் திறனாய்வு முழுமை பெறாது என்பது என் பணிவான கருத்து.

என்னுடைய யாப்பறி புலமை, ஆராய்ச்சி எல்லாம் அமிதசாகரர் என்னும் பெருமகனார் எழுதிய யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கண நூலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. அவரே எழுதிய யாப்பருங்கலமோ தொல்காப்பியச் செய்யுளியலோ எனக்குத் தெரியாது. காரிகையில் நேரிசை வெண்பா என்ற சொல்லே இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ் யாப்பிலக்கணத்தில் பாக்களைப் பற்றிய கட்டுமானத்தைப் பற்றிய புலமை பெறுவது மிகவும் எளியது. குறள் வெண்பா என்ற ஒரு பாட்டுக்குத்தான் இலக்கணம் இருக்கிறது. மற்றவையெல்லாம் அதனுடைய விரிவே! சாயலே!

நேரிசை வெண்பா என்பது 24 டயர்கள் கொண்ட டிரெய்லர் வண்டி போன்றதாகவே காரிகை கருதுகிறது. அதற்கு நேரிசை வெண்பா எனப் பெயரிடாது இருகுறள் நேரிசை வெண்பா என்றுதான் பெயரிட்டிருக்கிறது. இரண்டு குறட்பாக்களின் அர்த்தநாரீஸ்வரர் வடிவந்தான் ஒரு நேரிசை வெண்பா என்பது அமிதசாகரர் கருத்து. இரண்டு குறள்வெண்பாக்களை இணைக்கிறபோது முதல் வெண்பாவின் ஈற்றுச்சீரினைத் தொடர்ந்து தனிச்சொல் ஒன்று வரவேண்டும். ஈற்றுச் சீருக்கும் தனிச்சொல்லுக்கும் தளை இசைவு இருக்க வேண்டும். அதுபோலவே தனிச்சொல்லுக்கும் மூன்றாவது அடியின் முதற்சீருக்கும் தளை இசைவு இருக்க வேண்டும்.

குறட்பா இரண்டாய், ஆயிடைக்கண்
சீரியவான் தனிச்சொல் அடி மூய்ச் செப்பலோசை குன்றாது
ஓரிரண்டாயும் ஒரு விகற்பாயும் வருவதுண்டேல்
நேரிசையாகும்

என்பது காரிகைப் பகுதி. சுருங்கச் சொன்னால் கட்டடத்துக்குக் கான்கிரீட் போடுகிற நாளில் வரும் கலவை இயந்திரமாகவே அந்நாளில் நேரிசை வெண்பா கருதப்பட்டிருக்கிறது. ஆனால் வரலாறு வேறாக இருக்கிறது.

இரண்டு குறள் வெண்பாக்களை இணைக்கும் வேலை இல்லாமலேயே சங்க இலக்கியங்களின் பிற்பகுதியில் நேரிசை வெண்பாக்கள் அமைந்துள்ளன. இவை தனிச்சொல் என்ற அளவில் இல்லாமல் முழுமையான வெண்பாவின் ஒரு சீராகவே அமைந்திருக்கிறது. இது ஆய்வுக்குரியது. அதாவது இரண்டு குறள் வெண்பாக்களை இணைக்கிறபோதுதான் தனிச்சொல் முதலடியின் முதற்சீருக்கு ஏற்ப அமைய வேண்டும் என்பது. இவ்வாறு ஈரலகாக  அன்றி ஒரே அலகாக அமைகிறபோது ‘தனிச்சொல்’ என்னும் சொற் பயன்பாடு வலுவிழக்கிறது. நேரிசை வெண்பாவின் இரண்டாவது அளவடியாகவே அது கருதப்பட வேண்டும். இன்னும் நுட்பமாக நோக்கினால் வெண்பாவைப் பற்றிய இலக்கணத் தெளிவு இல்லாத காலத்திலேயே முழுமையான நேரிசை வெண்பாக்கள் எழுதப்பட்டுள்ளன.

திருமுருகாற்றுப்படையில் நேரிசை வெண்பா

பத்துப்பாட்டின் தலைப்பாட்டான திருமுருகாற்றுப்படையின் இறுதியில் நேரிசை வெண்பாக்களால் அமைக்கப்பட்ட முருகன் துதி பத்துப்பாடல்களால் அமைந்துள்ளன. ஆய்வாளர்களில் பிற்காலத்தில் இது சேர்க்கப்பட்டிருக்கலாம் என்னும் கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். அவற்றுள் ஒரு வெண்பா இப்படி அமைந்திருக்கிறது.

உன்னை யொழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை யொருவரையான் பின்செல்லேன்பன்னிருகை
கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்தில் வாழ்வே

பாட்டை ஒரு முறை நோக்குவார்க்கும் இது ஓரலகாகப் பாடப்பட்டுள்ளது என்பதை உணர்வர். ‘பன்னிருகை’ என்பது ஈரடிகளை ஒட்ட வந்த பசையாகிய தனிச்சொல் அல்ல. அது கோலப்பனின் அழகடை!. நம் விவாதம் இருகுறள் இணைப்பே நேரிசை வெண்பா என்னும் கருத்தியல் ஒழிந்து விட்டது என்பதுதான். அது தொடக்கநிலை யாப்பறிக் கல்வியாக இருந்திருக்கலாம். தற்காலம் உட்பட எந்தக் காலத்திலும் அதாவது வெண்பா கோலோச்சிய தனிப்பாடல் காலம் வரை இணைப்பு என்பதே இல்லை என்பதுதான். இது இப்படியிருக்க ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் ஒவ்வொரு காதையின் இறுதியிலும் ஒரு நேரிசை வெண்பா இடம் பெற்றுள்ளது. அவற்றையும் பின்னால் வந்தவர்கள் சேர்த்திருக்கலாம். ஆனால் அப்படிச் சேர்த்தவர்கள் காரிகைக்கு முன்போ பின்போ இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் தனிச்சொல் பயன்பாட்டைப் புறக்கணித்து ஓரலகாகவே எழுதியுள்ளனர் என்பது தெளிவாவது போல அந்த வெண்பாக்கள் அமைந்துள்ளன.

மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்வையைக்கோன்
கண்டளவே தோற்றான் அக்காரிகைதன் சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்

என்று அமைந்துள்ள நேரிசை வெண்பா காரிகை இலக்கணத்தின் இணைப்புப் பணிக்கு ஆட்படாது தனித்தன்மையுடைய அரிய நேரிசை வெண்பாவாக அமைந்துள்ளதைக் காணலாம். ‘வையைக்கோன்’ என்பது தனிச்சொல்லா? காண்டலின் வினைமுதலா?

மேற்கண்ட தரவுகளிலிருந்து ‘இரண்டு குறள் வெண்பாக்களைப் தட்டான் பாணியில் பழுது பார்த்து பற்ற வைத்து இணைத்து ஒரு நேரிசை வெண்பாவை அமைக்கின்ற காலக்கட்டத்திலிருந்து தமிழியல் யாப்புலகம் விலகிப் பல நூற்றாண்டுக் காலம் ஆகிவிட்டது என்பதுதான். இந்த நெறியைத்தான் தம்பி விக்டர்தாஸ் பின்பற்றிக் கண்ணீரோடு கலந்து வெண்பாக்களைக் கொட்டியிருக்கிறார்.  தந்தை மாண்டு சவப்பெட்டியில் துயில்கிறபோது தளை பார்த்து எழுதுகிறவன் மகனும் அல்லன் அவன் கவிஞனும் அல்லன். உணர்ச்சியின் கொந்தளிப்பில் கொட்டப்படுகிற பாட்டில் யாப்பு தானாக வந்து அமையும் என்னும் தமிழியல் யாப்பிலக்கணக் கோட்பாடு தம்பி விகடர்தாஸ் அவர்களின் கண்ணீர் வெண்பாக்களால் மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கண்ணீரில் மிதக்கும் கற்பனை

தங்குதடையின்றி நுங்கும் நுரையுமாகப் பொங்கிவருவதே கவிதை என்பார்கள். அதற்கு ஓர் இலக்கிய எடுத்துக்காட்டு தேவை என்றால் தம்பி விக்டர்தாஸின் இந்த வெண்பாக்களுக்கு இணையாக வேறு இலக்கியம் இருக்குமென்று என்னால் நம்ப முடியவில்லை. இழந்து அரற்றியவள் கண்ணகி. இருந்தும் அரற்றியவள் சீதை. ஐந்து பேர் இருந்தும் அரற்றியவள் பாஞ்சாலி! அந்த அரற்றல்களையெல்லாம் அமைதியாக்கிச் சுனாமியாய்க் கொந்தளித்துக் கொட்டும் தாஸின் வெண்பாக்களில் கற்பனை தானாக வந்து அமர்ந்து கொள்கிறது.

உடம்பு தாழ்வாகவும் உயிர் உயர்வாகவும் பேசப்படுவதே தமிழ்க்கவிதை மரபு. உடம்பை ‘ஒன்பது வாய்த்தோல்பை’ என்பார் பட்டினத்தடிகள். ஆனால் விக்டர்தாஸின் புலம்பலில் இது மாபெரும் புரட்சிக்கு ஆளாகிறது. தமிழில் உடம்பின் பெருமையை உணர்ந்து பாடிய முதல் கவிஞர் திருமூலர்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே

என்று பாடுகிறார். உடம்பின்றி ஞானம் பெற இயலாது என்பது அவர் கருத்தாதலின் உடம்பின் இன்றியமையாமையை நுட்பமாகப் பாடிப் பதிவுசெய்திருக்கிறார். உயிருக்கும் உடம்புக்கும் ஒரே அளவான மதிப்பினைத்தான் திருமூலர் தந்திருக்கிறார் என்பதை மிக எளிதில் புரிந்து கொள்ளலாம். அதாவது தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்த உடம்பினைத் திருமூலர் இரண்டாவது வரிசைக்குக் கொண்டு வந்திருக்கிறார். தம்பி விக்டர் தாஸ் தன்னுடைய புலம்பலில் உடம்பு உயிரினும் மேலானது என்ற தர்க்கத்தை முன்னெடுக்கிறார். என்னைப் பொருத்தவரையில் இது தமிழ்க்கவிதை உலகின் சிந்தனைப் புரட்சி என்பதில் ஐயமில்லை.

கூடுவிட்டு நன்றியற்று கூண்டோடு கொன்று விட்டு
கேடுகெட்ட ஆவி போச்சே கீறிவிட்டுப்!பாடுபட்ட
மெய்யோ அனாதையாய் வெந்த பராரியாய்!
அய்யோ உயிரே! வந்(து) ஆற்று.

சட்டை கழற்றுதல் போல் சட்டென்று அவிழ்த்ததேன்
முட்டாள் உயிர்ப் பறவை? மொத்தமாய்க்கட்டையை
விட்டுவிட்(டு) ஏன் போச்சோ? விறகென்(று) உடல் ஆச்சோ?
கெட்ட உயிர்தான் எங் கே.

பாடாய்ப் படுத்திவிட்டே பாழாய்க் கிடத்திவிட்டே
ஓடாய் உடைத்துவிட்டே ஓடியதேகேடான
நன்றிகெட்ட ஆவியது நச்சுவகைச் சாதியது
மண் இரையாய் மெய் போச்சே மாய்ந்து!”

வம்பாய் வலிபட்டு வாழ்ந்த உடல் கெட்டு
தெம்பு திறன் அற்று சீவனிற்(று)-அம்பலத்தில்
மெய் கிடக்க, ஆவி எங்கே? மேய்ந்த உயிர்ப் பாவி எங்கே?
கைவிட்டுப் போனதே காற்று.!”

‘உடலுக்கு உயிர் காவல்’ என்று எழுதினார் கண்ணதாசன். நம்முடைய தாஸ் உயிருக்கு உடல் காவல் என்று கற்பனை செய்கிறார். இந்தக் கற்பனை சுவையானது என்பதைவிடத் தத்துவச் சாரம் கொண்டது. உண்மையில் கவிஞர் உயிரைத் தாழ்வாக எண்ணவில்லை. உயர்வாகத்தான் எண்ணியிருக்கிறார் ‘உடம்பை வாழவிடாமல் உயிர் சென்றது நியாயமா?’ என்பதுதான் அவர் ஆதங்கம். இயக்குவது உயிர் என்பதும் இயங்குவது உடல் என்பதும் தாஸ் அறியாததா? இயக்கிய உயிர் போனதற்கான தமது ஏமாற்றத்தை உடலைக் கைவிட்டு உயிர் போனதாகக் கற்பனை செய்கிறார். காரணம் அழியக் கூடிய தந்தை உடம்பு கிடக்கிறது. அழியாத உயிர் ஓடிவிடுகிறது. கிடக்கிற உடம்புக்கு அழுகை எதற்காக? இங்கேதான் மணிமேகலை சொன்ன தத்துவம் நினைவுக்கு வருகிறது. எதற்கு மானுடம் அழுகிறது? உடலுக்கா? உயிருக்கா? இந்த வினாவுக்கு மணிமேகலை சொன்னதைத்தான் தனக்கே உரிய உத்திச்சிறப்பினால் கற்பனையாக்குகிறார் தாஸ்.

உடற்கு அழுதனையோ உயிர்க்கு அழுதனையோ
உடற்கு அழுதனையேல் உன்மகன் தன்னை
எடுத்துப் புறங்காட்டில் இட்டனர் யாரே?
உயிர்க்கு அழுதனையேல் உயிர்புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்துணர்வு அரியது
அவ்வுயிர்க்கு அன்பினை யாயின்

நாவலர் நாட்டார் அவர்களின் உரைகண்டு இப்பகுதிக்கு உரை தெளியலாம். எங்கிருந்தாலும் தனக்கு அழிவில்லை என்று தெரிந்தும், தான் பிரிந்துவிட்டால் உடல் நாற்றமெடுத்து அழியும் என்பது அறிந்தும் இந்நாள் வரை இருந்த பழக்கத்தை மறந்து உடம்பை அனாதையாய் விட்டுப் போன உயிர்கண்டு புலம்பிய கற்பனை புதியது! சிறந்தது!

உறவாடி கெடுத்த உயிர்

தாஸின் புலம்பல் பாக்கள் அனைத்தும் கண்ணீர் மூலம். உயிரைக் கட்டிவைக்க முடியாமற் போனதே! கைதிபோலக் கால்விலங்கு பூட்ட முடியாமல் போயிற்றே! சில நொடிவரை இந்த உடம்போடு அது ஆடிய ஆட்டத்தை அப்படியே மறந்ததே! பறந்ததே!

கட்டிவைக்க மாட்டாமல் கால் விலங்கு பூட்டாமல்
கொட்டமிட்ட ஆவி போச்சே கூறாமல் திட்டமிட்டே
மெய்க்கூட்டைக் கேளாமல்மேல் பறந்தாய் வாழாமல்
பொய் உயிர்மெய் என்றுணர்ந்தேன் போ.

மிக இலாவகமாகச் சொற்கள் விழுந்திருக்கின்றன. உடம்பு ‘மெய்க்கூடாம்’ நாம் இதுவரை உடம்பைப் ‘பொய்க்கூடு’ என்றும் ‘ஒன்பது வாய் மலக்கூடு’ என்றுமே அறிந்திருக்கிறோம். ‘மெய்க்கூடு’ என்றால் இரட்டுற மொழிதலால் மெய்யாகிய கூடு என்பதுமாம். உயிரும் உடம்பும் சம மதிப்புடையன எனினும் உடல் அழியும் தன்மையது. உயிர் அழியாதது. உடம்பின்றி உயிர் இயங்க முடியுமா என்றால் அது உறுதியாக முடியாது. நன்றி கொன்ற பாவத்தைச் செய்த உயிரைப் பொய் என்று உணர்ந்தாராம். கிடக்கின்ற உடம்பை மெய் என்று அறிந்தாராம். ‘படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரையா’ என்று கண்ணதாசன் சொல்லியது இதுதான்! சொல் புதிது சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை என்பதும் இதுதான்! எப்படி? அழியாத உயிரை மெய் என்றும் அழிகின்ற உடம்பை மெய்யென்றும் உணர்வதுதான் ஞானம். ‘காயமே இது பொய்யடா’ என்பது மரபு. அந்த மரபு தானாகத் தன் சட்டையைக் கழற்றிக் கொள்கிறது. உயிரைப் பொய் என்று உணர்வதும் உடம்பை மெய் என்று உணர்வதும் தாஸின் அரிய ஞானம். இது என்னுடைய பார்வை!

சாவு செய்த தவம்

‘விடியும் விடியும் என்றிருந்தேன் அது முடியும் பொழுதாய் விடிந்ததடா’ என்பார் கண்ணதாசன். தந்தை எப்படியும் பிழைத்துக் கொள்வார் என்று தனையன் எதிர்பார்க்க அவனை ஏமாற்றித் தான் செய்த தவத்திற்கான வரமாய் அந்தத் தந்தையைச் சாவு காவு கொண்டதோ என்பதே தாஸின் வேதனை.

விடியும் என்றேதான் விழிபார்த் திருந்தேன்
முடியும் என்றா நான் முயன்றேன் ஒடிந்ததேன்
வானளந்த காலமரம்? வாழ்வுதந்த ஞானவரம்?
தானமாய் வாங்கியதேன் சாவு?”

“வானளந்த காலமரம் ஒடிந்ததாம்” எவ்வளவு ஆழமான கற்பனை? சாவு தவம் செய்ததாம்! எந்த வரத்தைப் பெறுவதற்காக? தாஸ் அவர்களுக்கு ஞானவரமாக இருந்த அவருடைய தந்தையைத் தானமாகப் பெறுவதற்காக!. சாவு தவம் செய்த கதை தாஸ் சொல்லித்தான் நமக்குத் தெரிய வருகிறது. சாவுக்குச் சாபம் கொடுத்த கண்ணதாசனைத்தான் தமிழ்க்கவிதை உலகம் இதுவரை அறிந்திருக்கிறது. தேர்ந்தெடுத்த மரணங்களுக்காகச் சாவு தவம் செய்வதை இப்போதுதான் பார்க்கிறது. சாவும் தவம் செய்யும் என்னும் கற்பனை கற்பனையின் உச்சம்!

உணர்ச்சிக் கொந்தளிப்பு

‘அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயன்’ என்பது தமிழிலக்கியக் கொள்கையாதலின் கவிதைக்கும் அதுவே கொள்கையாயிற்று.  இக்கொள்கை வெற்றிபெற வேண்டுமாயின் படைப்பின் உள்ளடக்கம் கருத்துக்களோடு பரிணமிக்க வேண்டும். கவிதை உட்பட அனைத்துப் படைப்புக்களுக்கும் கருத்துக்களாகிய உள்ளடக்கமே தலை. இது தமிழ்க்கவிதைக் கொள்கை. ஆனால் இலக்கியத் திறனாய்வு என்னவோ கி.பி. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தமிழுக்கு அறிமுகமானதுபோல்  எண்ணிக் கொள்ளும் அறிஞர் சிலர் உணர்ச்சியே கவிதைக்குப் தலைமை எனச் சொன்னர்கள். POETRY IS THE SPANTNEOUS OVERFLOW OF POWER FEELINGS’ என்பதை எடுத்துக்காட்டாக்கிக் கொண்டார்கள். தம்பி விக்டர் கொட்டியிருக்கும் இந்த முத்துக்களில் அருவப் பொருளாகிய சோகம் பாடுபொருளாகியிருக்கிறது. இழப்பின் உச்சம் உணர்ச்சியாகியிருக்கிறது.

ஏன்யா அழுற? இடிஞ்சு விழுற?நீ
தான்யாநம் பிக்கைத்தருற! ஆங்வீணா
கவலைப் படாத! ஓங்கண்ணீர் விடாத!
செவியிலின்னும் அப்பா குரல்!”

எல்லாவற்றையும் விட இந்தப் பாட்டில் இறைந்துகிடக்கும் வழக்குச் சொற்கள் உணர்ச்சிக்குத் திரைபோடாமல் அப்படியே காட்டுகின்றன. ‘ஏன்யா அழுற? இடிஞ்சு விழுற? கவலைப்படாத! கண்ணீர் விடாத! என்ன அருமையான சொல்லடக்கம்!. இந்தச் சொல்லடக்கத்துக்குள்ளேயல்லவா அவர் தந்தை நல்லடக்கமாகியிருக்கிறார்!

ஏதோ உளறுகின்றேன்! என்னை உதறுகிறேன்!
சேதாரம் ஆகிச் சிதறுகிறேன்ஆதாரம்
வீழ்ந்ததால் விம்முகிறேன்! வேதனையைச் சிந்துகிறேன்!
வாழ்வோம் மறுபடிவாப் பா!”

‘என்னை உதறுகிறேன்’ அடடா! என்ன அருமையான தொடர்? தன்னை உதறிக் கொள்வதால் உதிர்ந்து போகிறானாம் தனையன். அதனால் அவனே அவனுக்குச் சேதாரமாகிறானாம். “சேதாரம் ஆகிச் சிதறுகின்றேன்” இன்னொரு பாட்டில் உணர்ச்சி இப்படிச் சிதறியிருக்கிறது.

ஆறாப் பெருஞ்சோகம் ஆறான தென் ஓலம்
தேறா நிலை நான் தெருக்கோலம்மாறாதா
இந்தக்கொடுங்காலம் ஈனத் துயர்க்கோலம்?”

உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லிவிட்டார் என்ற அமைதியை நாம் கேட்டிருக்கிறோம் அது எதிர்மறை. தம்பி விக்டர் உணர்ச்சிக் கொந்தளிப்பில் கொட்டிய சொற்கள் சீராய் மாறியிருக்கின்றன. அவருடைய உணர்ச்சி அவருடைய படைப்பைச் சிகரத்திற்குக் கொண்டு சென்றிருக்கின்றன.

தோரணமான தொடை விகற்பங்கள்

எதுகை, மோனை என்பதைக் கூடச் சகித்துக்கொள்ள முடியாத இசைத்தமிழன் எகனை, மொகனை என்றான். மக்கள் வழக்கின் வீரியம் அது. உண்மையான தொடைவிகற்பங்களுக்கும் இது பொருந்தும். தம்பி விக்டரின் அழுகையில் ஆங்காங்கே கிடக்கும் இந்த விகற்பங்கள் இட்டுக் கட்டியவை அல்ல. எடுத்துக் கோத்தவை அல்ல. குமுறிக் கொட்டியவை. கொட்டி அழுதவை!

முழுப்பானை சோற்றுக்கு ஒரு மோனை போதாதா?

“தாழ்வுகள் தாங்கியெமை தக்க வைத்தாய்!” மோனை இணையாகும். “கண்ணில் மிரட்சியில்லை கைகால் பதட்டமில்லை”, “என்றிருந்தார் அந்தமலை இன்றவரோ எங்குமிலை” பொழிப்பில் புன்னகை செய்யும். “கட்டலாகாக் காற்றவரை கட்டிலே பார்த்ததில்லை” என்ற வரியில் ஏழையாகாத மோனை கூழையாகும். “சாவின் அலையடித்து சாய்ந்துவிட்டேன் பாவிமகன்” என்று ஒரூஉவில் ஒப்பாரி வைக்கும். “நாவின் நதி வறண்டேன் நாடி நரம்புருண்டேன் அப்பா அரூபமாய் அங்கிருந்தார்  அப்பாவின்” புன்னகைக்கும் பூவனம் நீ! பொய்யறியா புத்தகம் நீ! என்றெல்லாம் முற்றாகும்.

‘வருவார்’, ‘தருவார்’, ‘விடியும்’, ‘முடியும்’, ‘புகழ் பூத்த’, ‘நிகழ் பூத்து’ என்றெல்லாம் அமைந்தன முற்றெதுகைகள். ‘என்றிருந்தார் அந்த மலை இன்றவரே எங்குமிலை’, ‘சிந்திவிடும் என்றெவர்க்கும் சிந்தை வரா மயக்கம்’ என்றெல்லாம் இறைந்துகிடக்கும் பொழிப்பெதுகைகள், ‘தந்தைமேல் நம்பிக்கை தான் எனக்கும் அந்த உயிர் என்றவாறு அமையும் ஒரூஉ எதுகை என அங்கிங்கெனாதபடி எங்கும் சிதறிக்கிடக்கும் தொடைவிகற்பங்களைக் கோப்பதே ஓர் ஆய்வுப் பணி.

வினா உத்தி

கருத்துக்களை வினா வடிவில் வெளிப்படுத்துவது தமிழ்க்கவிதைகளின் வெளிப்பாட்டுக் கொள்கைகளில் ஒன்று. இந்நெறி சங்கக்காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாம் தொல்காப்பியத்தை ஒரு கவிதையியல் நூல் என்று தொடர்ந்து சொல்லி வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.  அதாவது பண்பாடு சிறந்து பக்குவப்பட்ட ஒரு சமுதாயத்தில் இலக்கியப் படைப்பும் ஆராய்ச்சியும் ஒரே காலத்தில் நிகழ்ந்திருக்கிறது. இதனைச் சரியான புள்ளியில் நிறுத்தி ஆராய்ந்தால் இன்றைய மேனாட்டுத் திறனாய்வுக் கொள்கைகளை வைத்துக் கொண்டு அடிக்கும் பெருங்கூத்தும் வெற்று ஆரவாரமும் குறையக் கூடும்.

 1. ‘குளித்து மணல் கொண்ட கல்லா இளமை அளிதோ தானோ யாண்டுண்டு கொல்லோ?’ என்று வினவியவர் தொடித்ததலை விழுத்தண்டினார்.
 1. ‘சான்றோரும் உண்டு கொல் சான்றோரும் உண்டுகொல்?’ என்று வினவியவள் கண்ணகி.
 1. ‘கனிவரும் காலத்து ஐய! பூக்கொய்யக் கருதலாமோ?’ என்று கேட்டவன் கம்பன்.
 1. ‘கண்ணிரண்டையும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?’ என்று வினவியவன் மகாகவி.
 1. ‘காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டா? கறைச் சேற்றால் தாமரையின் வாசம் போமா?’ என்று வினவியவர் பாவேந்தர்.
 1. ‘கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா?’ என்னும் கண்ணதாசன் கேட்ட வினாவிற்கு இன்னும் பதில் இல்லை.
 2. ‘மீனில்லாமலே நீரிருக்கலாம்! நீரில்லாமலே மீனிருக்குமோ?’ என்னும் வாலியின் வினா அப்படியே இருக்கிறது.
 1. ‘நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறே வழியுமுண்டோ?’ என்னும் ஆலங்குடியாரின் வினாவுக்கு யார் பதில் சொல்வது?
 1. ‘தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்?’ இராஜேந்தரின் கண்ணீரை அறிந்தார் இலர்.
 1. ‘எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?’ என்று வைரமுத்து கேட்ட வினா பலருக்கும் சென்று சேர்ந்ததாகத் தகவல் இல்லை.

தமிழ்க்கவிதைகளைத் திறனாய்வு செய்யும் ஆய்வாளர்கள் இவற்றை  அதாவது இந்த வினாவுத்தி போன்றவற்றைக் கருத்திற் கொள்ள வேண்டும். இத்தகைய வகைமாதிரிகள் தமிழ்க்கவிதைகளிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுத் தொகுக்கப்படல் வேண்டும். தம்பி விக்டர் தாஸ் கொட்டிய பாக்களில் இத்தகைய வினாக்கள் சரளமாக மிகச் சரளமாக வந்து விழுந்திருக்கின்றன. மரபை விழாமல் தாங்கியிருக்கின்றன.

பார்க்கஇனி ஏலாதா? பால் குரல் கேளாதா?
நீர் பொழியும் பாசமழை நீளாதா? – வேர்வனம் நீ
எங்கும் கிடையாதா?”யெப்போஇனி இராதா?
சங்கறுத்து விட்டதே சாவு!”

இந்த வலி தீராதா? எந்தை மொழி வாராதா?
சிந்தையெல்லாம் நிம்மதியும் சேராதா? தந்தை முகம்
காண முடியாதா? கண்ணீர் ஒடியாதா?
போனதினி மீளாதா? போ!”

நோயென்ன கள்வனா? நூதனமாய்க் கொல்வானா?
தீயென உள்நுழைந்து தின்பானா? – மாயமாய்த்
தந்தையைக் கொய்தானா? தள்ளாடச் செய்தானா?
வெந்து போய்விட்டதே வேர்!”

ஈவிரக்கம் இல்லையா? இந்த உடல் தொல்லையா?
காவு கொண்ட சீவனே! நீகல்லாய்யா?—  நோவு வழி
போனசெயல் தப்பைய்யா புத்திகெட்டக் குப்பைய்யா
கேணை நடத்தை இது கேள்.”

‘காவு கொண்ட சீவனே நீ கல்லாய்யா?’ என்ற ஒற்றை வரியில் வழக்குக்கு வாழ்வு கொடுக்கிறார். சீவனோடு சேர்த்து வெண்பாவையும் தெறிக்கவிடுகிறார். சிவனோடு போர் தொடுத்தவர் உண்டு. சீவனோடு போர்தொடுத்து இலக்கிய நயத்தின் உச்சம் தொடுகிறார் விக்டர் தாஸ். ‘நோவு வழி சீவன் போன செயல் தப்பையா?’ என்று கற்பனையின் கொடிமுடிக்குச் செல்கிறார். உயிரைக் கேணையன் என்று எள்ளி நகையாடி அவனுக்கான நடத்தைச் சான்றிதழில் கை வைக்கிறார். மை வைக்கிறார். இத்தனை நுண்ணியங்களையும் வினா உத்தியில் வைத்துக் கொட்டியிருக்கிறார் தம்பி விக்டர்!

காலத்தால் அழியாக் கவிதைத் தொடர்கள்

கவிதைகள் உத்திகளால் சிறக்கின்றன. நூல்கள் தொடர்களால் சிறக்கின்றன. தொகையாகவும் பாட்டாகவும் பரிணமிக்கும் சங்க இலக்கியக் களத்திற்கே ஓர் அடையாளமாக நிற்கும் தொடர் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதை மறுப்பாரும் உளரா? ஒரு கால இலக்கியத்தையே தன்னுள் செறித்துக் கொள்ளும் ஆற்றல் அந்த ஒரு தொடருக்கு இருந்திருக்கிறதென்றால், ஒரு நூலைத் தனதாக்கிக் கொள்வது ஒன்றும் அவ்வளவு இடர்ப்பாடானதன்று.

 1. ‘நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்’ என்றால் சிலப்பதிகாரம் நினைவுக்கு வரும்.
 2. ‘உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே’ என்றால் மணிமேகலை நினைவுக்கு வராதா?
 3. ‘பார் பெருத்ததோ படை சிறுத்ததோ’ என்றால் கலிங்கத்துப் பரணி.
 4. ‘தொடுக்கும் கடவுட் பழம்பாடல்’ என்றவுடன் மீனாட்சி வந்து நிற்கமாட்டாளா?
 5. ‘வாராதிருக்க வழக்குண்டோ’ என்றால் பகழிக்கூத்தர் பக்கத்தில் நிற்பாரே!
 6. ‘ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்’ கேட்டவுடன் பெரியபுராணம் அல்லவா விரியும்?
 7. ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ என்று செவியில் விழுந்தவுடன் சிவதனுசல்லவா முரியும்?
 8. ‘கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?’ பாசுர வாசனை நம் வீட்டுப் படிக்கட்டில் வீசாதா?
 9. ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்றவுடன் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்துத் திருநாவுக்கரசராய் முன் நிற்காதா?
 10. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றால் வள்ளலார் திருவருட்பாவோடு திருக்காட்சி தருவாரே!
 11. ‘வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு’ என்ற அடைகொடுத்து இனம் பாடிய பாரதியின் தொடர் அவன் கவிதைக் கொள்கை அல்லவா?
 12. ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற ஒற்றைத் தொடர் பாவேந்தரின் ஒரு நூறு நூல்களுக்கும் ஒற்றைத் தலைப்பல்லவா?
 13. ‘வாழைத்தண்டுக்கா தடுக்கின்ற கணுக்கள் உண்டு?’ என்ற உவமம் போதாதா சுரதாவை உவமைக் கவிஞர் என்று அடையாளப்படுத்துவதற்கு?
 14. ‘மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்! மணல் கூடச் சில நாளில் பொன்னாகலாம்’ என்ற ஒரே பல்லவி சாதாரண முத்தையாவைக் கவியரசு ஆக்கிய விந்தையை நாம் அறிவோமே!
 1. ‘உனைநிரப்ப என்பசியை நானே உண்டேன்’ என்றால் மனவாசலில் வந்து நிற்பவர் வசந்தராசன் அல்லவா?

கவிதை பற்றிய பன்முக ஆராய்ச்சிகளில் சொல்லாக்க உத்திகள் அவ்வளவாகக் கவனிக்கப்படுவதில்லை. கற்பனை, உணர்ச்சி, வடிவம், கருத்து என்ற அளவிலேயே ஆய்வுகள் நின்றுபோவதால் அவற்றுக்கு மேலான கவிதைக் கூறுகள் திறனாய்வுலகில் போதிய இடம் பெறுவதில்லை. மேற்கண்ட நான்கும் கவிதைக்கு அதன் கட்டுமானப் பொலிவிற்கு அடிப்படையேயாயினும் படைப்பாளனாகிய கவிஞனின் உள்ளம் கடலினும் ஆழமுடையது என்பதையும் ‘விரிவானப்’ பரப்பையுடையது என்பதையும் மறந்துவிடலாகாது. குறிப்பிட்ட திறனாய்வுக் கொள்கைகளை ஆய்வு நெறியாக வைத்துக் கொண்டு பல்வகை உள்ளத்து வண்ணங்களைத் தரமதிப்பீடு செய்வது ஏற்புடையதாகாது. எனவே ஒவ்வொரு படைப்பும் தனக்கான தரமதிப்பீட்டுக் கருவியைத் தானே படைத்துக் கொள்கிறது. படைத்துக் கொள்ள வேண்டும். தம்பி விக்டர் தாஸின் புலம்பலில் காணப்படும்,

 1. கந்தலாகிப் போச்சே கடல்
 2. கண்ணீர் ஒடியாதா?
 3. சத்தமின்றிக் கொத்தியதே சாவு
 4. மல்லிகைச் செண்டுக்குள் குண்டுமழை
 5. பூச்சரமேல் சாவின் புயல்
 6. அவஸ்தை நெடி
 7. அவிழ்க்காத பாசம்
 8. அந்த உயிர் சிந்திவிடும்
 9. ஆன்மா பிளவு கொண்டேன்
 10. உயிரு சேறாச்சே
 11. என்னை உதறுகின்றேன்
 12. தண்டுவடம் எங்கும் தகராறு
 13. நீர்வழிந்து கீறலாச்சு! நெஞ்சில் தீத் தூறலாச்சு!
 14. உன் வாசத்தை நீட்டினாய்
 15. வருத்தங்கள் யாவும் வழிமறிக்கும்

என்பன போன்ற சொல்லாட்சிகளெல்லாம் எந்தத் திறனாய்வுக் கொள்கைக்கும் பிடிகொடுக்காமல் தனித்தியங்கும் ஆற்றல் கொண்டவை என்பதைத் தெளிவாகச் சுட்டுகிறேன். கவிதை ஆராய்ச்சி என்பது வடிவ ஆராய்ச்சி அல்ல. கருத்துக்களின் ஆராய்ச்சி அல்ல. கற்பனை ஆராய்ச்சி அல்ல. கவிஞனின் உள்ளத்தை ஆராய முயல்வது. இத்தகைய சொல்லாக்கங்கள் எல்லாம் கவிதைக்கு நிலைப்பேற்றைக் கொடுப்பதில் ஏனைய கூறுகளைவிட முதன்மை பெறுகின்றன என்பதைக் கருத்திருத்துதல் வேண்டும். ஒட்டுமாங்கனியைப் போன்ற சொல்லாக்கங்கள் தற்காலக் கவிஞர்களில் தம்பி வசந்தராசனின் படைப்புக்களில் இயல்பாக அமைந்து கிடக்கின்றன என்பது ஒப்பீட்டுக்காக இங்கே சுட்டப்படுகிறது.

அகத்திலும் இனிக்கும் ‘ஐயோ’

கவிதை வல்லாளர்களுக்குச் சொற்கள் அடிமைகள். தமிழின் நால்வகை இலக்கணச் சொற்களில் பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தும் ஆற்றலுடையார் இருக்கலாம். ஆனால் இடைச்சொல்லைச் சீராகப் பயன்படுத்திக் கவிதைத் தொழில் செய்வார் அரியர். திருவள்ளுவர் இதில் தலைமையிடம் பெறுகிறார்.

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும் என் பீடு” (1088)

என்பது தலைவியிடம் மனம் பறிகொடுத்த தலைவனின் கூற்று. தன்னை எதிர்த்துக் களத்திற்கு வராதவர் கூட எண்ணி அச்சப்படும் தன் பீடு ஒளி நெற்றி உள்ளவளுக்கு உடைந்ததே என்று அவன் கைபிசைகிறான். களத்திலே காட்டிய வீரம் காரிகையின் முன் தோற்றது என்பது கருத்து. இந்தப் பாட்டில் இரண்டாவது சீரில் நெடில் குறிலாக அமைந்திருக்கும் ஓகார ஒகரங்கள் விட்டிசைத்துத் தனித்தனி நேரசையாக நின்று தேமா என்னும் வாய்பாட்டில் கவிதைப் பணி செய்வதைக் காணலாம். ‘ஓ’ என்பது ஒண்ணுதற்கோ என்னும் தலைவனின் வியப்பு கலந்த சொல்லோடு இணைந்து வியப்பை மிகுவிக்கிறது. அடுத்து நின்ற மற்றொரு ஒகரம் வியப்பினை இன்னும் கூடுதலாக்குகிறது. ஓகாரம் ஒரு இடைச்சொல். அந்த ஓகாரத்திற்கு ஒலித்துணையாக இருப்பது ஒகரம். பொருள் தராத அந்த இடைச்சொற்களைப் பிணைத்து வியப்பு என்னும் உணர்ச்சிக்குக் குறியீடாக்கித் தலைவனின் காதல் உணர்வை மிகுவிக்கிறது. இடைச்சொல் சீராகிறது. அளபெடைக்குத் துணையாகிறது. தளை காக்கிறது. தலைவனின் தவிப்பையும் உணர்த்துகிறது.

ஏவவும் செய்கலாம் தான் தேரான் அவ்வுயிர்
போஒ மளவுமோர் நோய்” (848)

என்னும் பாட்டில் சொல் புத்தியும் இல்லாது சுயபுத்தியும் இல்லாதவன் இவ்வுலகைவிட்டுப் போகிற காலம் வரைச் சமுதாயத்திற்கு ஒரு நோயாகவே இருப்பான் என்று பொருள் தரும் குறட்பாவில் ‘அவன் விரைவில் போகமாட்டான், இருந்து உயிரை வாங்குவான்’ என்னும் கருத்தினை இடைச்சொற்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட அளபெடையால் குறிப்பாக உணர்த்துவது காண்க. இத்தகைய வல்லாண்மையைக் கம்பன் பல இடங்களில் பயன்படுத்துகிறான். அதில் ஒரு இடம். இராமன் வனவாசம் புறப்படுகிறான்.

வெய்யோன் ஒளி தன் மேனியின்
விரி சோதியின் மறைய,
பொய்யோ எனும் இடையாளொடும்,
இளையானொடும் போனான்
மையோ?, மரகதமோ, மறி
கடலோ? மழை முகிலோ?
ஐயோ!, இவன் வடிவென்பதோர்
அழியா அழகுடையான்

படைப்பாளன் தோற்கிற இடமும் இதுதான் வெல்கிற இடமும் இதுதான். இராமனின் தோற்றப் பொலிவுக்குக் கருப்பு, மரகதம், கடல், மேகம் என்றெல்லாம் சொல்லியும் மாளாத கம்பன் சொல்லில்லாமல் திண்டாடுகிறான் என்பது படைப்புத் தோல்வி. பாடுபொருள் பரம்பொருள் ஆதலின் சொல்லுக்குள் அடங்காதவனைக் கண்டு வியப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் ‘ஐயோ’ என்னும் இடைச்சொல்லால் வியந்து நோக்குவது படைப்பின் மாபெரும் வெற்றி. ஏனைய பொருளுடைய சொற்களை விட இந்த ஐயோ என்னும் இடைச்சொல் உணர்ச்சியின் உச்சத்தைத் தொடுவதைச் சொல்வார் உணரலாம். இந்த ‘ஐயோ’ என்னும் இடைச்சொல்லை,

வேகுதே தீயதனில் வெந்துபொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ! – மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னை
கருதி வளர்த்தெடுத்த கை

என்னும் நேரிசை வெண்பாவில் பட்டினத்தடிகள் பதிவு செய்திருக்கிறார்.  இந்தப் பாடலை அவர் உட்கார்ந்து சீர், தளை பார்த்து எழுதியிருக்க இயலாது. காரணம் அவருடய தாயாரின் உடல் தீயில் எரிகிற போது செய்யப்பட்ட களக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு!  இந்த ஐயோ என்ற சொல்லைக் கவிஞர் கண்ணதாசன் அவலத்தின் உச்சத்தில் வைத்துப் பாடுவதையும் பார்க்க முடிகிறது. பண்டித சவகர்லால் நேரு அவர்கள் மறைந்தபோது,

நீரோடும் கண்களுக்கு நிம்மதியை யார்தருவார்?
நேரில்லாத பாரதத்தை நினைவினில்யார் வைத்திருப்பார்?
ஐயையோ! காலமே! ஆண்டவனே! எங்கள் துயர்
ஆறாதே! ஆறாதே! அழுதாலும் தீராதே!”

என்று முந்தைய வரிகளுக்கும் பிந்தைய வரிகளுக்கும் எந்தப் பொருள்  தொடர்பும் இல்லாத நிலையில் சொற்களால் எழுத முடியவில்லை என்பதை ‘ஐயையோ’ என்னும் இடைச்சொல்லால் குமுறியிருப்பதைக் காண்க. இந்த நெறியைத்தான் அதாவது இந்த மரபைத்தான் விக்டர்தாஸ் தம்மையும் அறியாமல் தன் தந்தை இழந்த தருணத்திலும் அழுது கொட்டியிருக்கிறார்! எதனையோ எழுதி வைத்துக் கொண்டு மரபுக் கவிதை என்பார் கவனத்திற்கு நான் பல எடுத்துக்காட்டுக்களை என் கட்டுரைகளில் பதிவிட்டு வருகிறேன். கொள்வாரில்லை. அவர்கள் தேமாங்காய், புளிமாங்காய் தவிர வேறு மரபு எதனையும் தெரிந்து கொள்ளாமல் இருப்பதில் எச்சரிக்கையுணர்வுடன் செயல்படுகிறார்கள். இப்படிப் பயன்பட்ட அந்த ஐயோவை மிக அருமையான இடங்களில் அவலத்தின் உச்சந்தொடும் நோக்கில் விக்டர் அவர்கள் பாட்டில் விழுந்திருக்கிறது.

கூடுவிட்டு நன்றியற்று கூண்டோடு கொன்று விட்டு
கேடுகெட்ட ஆவி போச்சே கீறிவிட்டுப்!பாடுபட்ட
மெய்யோ அனாதையாய் வெந்த பராரியாய்!
அய்யோ உயிரே! வந்(து) ஆற்று.”

வானம் உதிரவிட்டேன் மண்ணில் சிதறவிட்டேன்
காணும்போ தாவி காடுவிட்டேன் மோனவுடல்
ஐயோ புதைத்துவிட்டேன் அப்பா தொலைத்துவிட்டேன்!
பொய்யாச்சே தந்தையெனும் பொன்

இருப்பாய்நீ நூறாண்டென்றிருந்தேன்! நோயின்
நெருப்பெரிக்க அய்யையோ! நீர்த்தேன் அருந்தவமே
மூச்சுடைய பார்த்திருந்தேன்! மொத்தமாய் வேருடைத்தேன்!
பூச்சரம் மேல் சாவின் புயல்

மேற்கண்ட புலம்பலில் ‘அய்யோ’ அல்லது ‘அய்யையோ’ என்னும் சொல் இருவினைகளுக்கு இடையில் செயல்பட முடியாத இயலாமையைச் சுட்டுகிறபோது பயன்பட்டிருப்பது காண்க. ‘நெருப்பெரிக்க’ என்னும் வினையெச்சத்திற்கும் நீர்த்தேன் என்னும் வினைமுற்றுக்கும் இடையில் விக்டரின் தவிப்பைத், துடிப்பை இந்த அய்யோ என்னும் இடைச்சொல் வெளிப்படுத்துவது உணர்க. ‘இடிகளை அனுப்பியா பூக்களை நலம் விசாரிப்பது?’ என்று எழுதுவார் வைரமுத்து. ‘வீணை தடவக் கோடரி கொண்டு வந்தவர்களை’ வைரமுத்து காட்டியிருக்கிறார். ‘பூவுக்குள் பூகம்பம்’ என்ற சொல்லை யாவரும் கேட்டிருக்கக்கூடும். விக்டர் தாஸ் ‘பூச்சரம் மேல் சாவின் புயல்’ என்று சொல்கிறார். இதற்கு எப்படி நயம் சொல்வது? எப்படி உள் வாங்குவது? திறனாய்வு நாணுகின்ற இடங்களில் இதுவும் ஒன்று. திறனாய்வு தொடமுடியாத உச்சிக்குப் படைப்புச் சென்றுவிடுமானால் இதுதான் நிலை. ‘சாவின் புயல்’ என்பது உருவகம் என்று உரையெழுதலாம். அது 16 வயது குமரிக்குப் பள்ளிக்கூட ஆண்டுவிழாவில் மூதாட்டி வேடம் போட்ட கதையாகிவிடும்.

நிறைவுரை

காய்ச்சீர்களால் அமைந்த ‘வெண்பா’ உலகில் கண்ணீரால் கொட்டப்பட்ட கவிதைகள் இவை. எதுகைக்கும் மோனைக்கும் இலக்கியச் சொற்களை இற்றுப்போன இறவாணத்தில் தேடுகின்ற படைப்புலகில், வாயிலிருந்து விழுந்த வழக்குச் சொற்களால் வழுவாமல் அமைந்தவை. காது மடல்களைக் கூடத் தொட முடியாத வரிகளை எழுதிவைத்துக் கொண்டு ஐந்தாறுபேர் கூடித் தங்களுக்குத் தாங்களே பாராட்டித் தட்டிக் கொடுத்துவரும் போலி உலகில் விழியில் வழிந்து உயிரில் நனைந்து ஆன்மாவின் அந்தரங்கத்தை அசைத்துப் பார்க்கும் உண்மையான பாசத்தின் வெளிப்பாடு! வாழ்வியலில் இலக்கியத்திற்குத் தலையாய இடம் உண்டு. ஆனால் வாழ்வியலே இலக்கியமாகும் என்னும் மாபெரும் புதிய உண்மையை உணர்த்தியிருக்கிறார் விக்டர்தாஸ்!  எழுதிவைத்துக் கொள்ளப்பட்ட ஒரே மாதிரியான திறனாய்வுக் கொள்கைகளைக் கொண்டு பன்முகத் திறன்களின் வெளிப்பாடான படைப்புக்களை ஆராய்வது நெறியன்று. படைப்பின் சூழலும் காரணிகளும் மாறுபடுகிறபோது திறனாய்வுக் கொள்கைகளும் மாற்றப்பட வேண்டும். வெண்பாக்களை விளையாட்டுப் பொம்மைகளாக்கிக் கொண்ட விக்டர்தாஸ் தமிழ்க்கவிதை உருவாக்கத்திற்கான புதிய மூலத்தைக் கண்டறிந்த கவிதை கொலம்பஸ் என்பதில் எனக்கு எத்தகைய ஐயமும் இல்லை! திறனாய்வுக் கொள்கைகளால் அளக்கமுடியாத அரிய வெளிப்பாட்டினைப் ‘படித்தேன் சுவைத்தேன் பகிர்ந்தேன்’ என்பது பொருந்துமா? படித்தேன்! பதறினேன்! கலங்கினேன்! கண்ணீர் விட்டேன்! காய்ந்து போன ஈரத்தைக் கட்டுரையாக்கியிருக்கிறேன். தந்தையை இழந்து வாடும் அவர் மனம் அமைதி பெறட்டும்!. இந்தத் திறனாய்வை அவருடைய தந்தையாகிய நம் தந்தைக்கான அஞ்சலியாகவே அர்ப்பணிக்கிறேன்!

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *