Author: admin

  • உளவியல் வாசிப்பு நோக்கில் ஜெயந்தி சங்கரின் திரிந்தலையும் திணைகள்

    உளவியல் வாசிப்பு நோக்கில் ஜெயந்தி சங்கரின் திரிந்தலையும் திணைகள்

    முனைவர் சு. செல்வகுமாரன்
    இணைப்பேராசிரியர்,
    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
    E. mail- mugadu.kumaran@gmail.com
    Cell – 9442365680

    ஜெயந்திசங்கர் தமிழகத்தில் மதுரையில் பிறந்து தந்தையின் பணி காரணமாக இந்தியாவின் பல பகுதிகளில் வாழ்ந்து இன்று சிங்கப்பூரில் வசித்து வருபவர். நாவல், சிறுகதை, கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என ஏராளமான படைப்புகளை தமிழுலகிற்கு தந்தவர். இவரின் படைப்புகளைப் போலவே சீனத்து இலக்கிய மொழிபெயர்ப்பான மிதந்திடும் சுய பிரதிமைகள் என்னைக் கவர்ந்த ஒரு அற்புதமான நூலாகும்.  இவரின் ஐந்தாவது நாவலான திரிந்தலையும் திணைகள் ஒரு சமூகத்திற்குள்ளாக அல்லது ஒரு குடும்பத்திற்குள்ளாக, தனிமனிதன் ஒருவன் திருமணம், பாலியல், வேலை, பண்பாடு, அயலகக் குடிபெயர்வு, காதல், மொழி, உறவு, நட்பு, ஆண், பெண், குழந்தை, முதுமை, இளமை, எனும் வேறுபாடுகளின் அடிப்படையில் சந்திக்கும் அடுக்கடுக்கான நெருக்கடிகளை எடுத்துரைக்கின்றன.

    பத்மா, பத்மாவின் அப்பா, கதிர், சரவணன், சரவணனின் தந்தை சுப்பையா, ரேணு, ரேணுவின் முதல் கணவன் ரவி, இரண்டாவது கணவன் மாதவன், ரேணுவின் மகன் நவீன், ரேவதி, ரேவதியின் அம்மா, அப்பா, செந்தில், கவிதா, கதிரின் மனைவி மீனா, மீனாவின் காதலன், கவிதா, கவிதாவின் கணவன், பாலா, கவிதாவின் அம்மா, அருள், டேவிட், அமட், அர்ச்சனா, லீலிங், தர்ஷினி, உள்ளிட்ட பாத்திரங்களின் மூலம் பிரச்சனைகளை அவர் மிக நுட்பமாக வெளிப்படுத்து கின்றார். இயல்பான கதாபாத்திரங்கள் என்பன இதில் ஒன்றிரண்டேயாகும். மற்றபடி யாவும் ஜெயந்திசங்கர் அவர்களால் தீவிரமான மனநலம் (உளவியல்) பிரச்சனைக்குரிய பாத்திரங்களாகவே திட்டமிட்டு தேர்வுசெய்து படைக்கப் பட்டிருப்பதை உணரமுடிகிறது. இது ஒருவகையில் எல்லா மனிதனும் ஏதோ ஒரு நிலையில் மனச்சிக்கலுக்கு உள்ளாகக் கூடியவன்தான் என்பதை குறிப்பாக உணர்த்துவதாகக் கூட இருக்கலாம்.

    தமிழில் தொடர்ச்சியாக குறிப்பாக ஈழத்து, புலம்பெயர் நாவல்களை அதிகம் வாசித்து வருபவன் என்ற நிலையில் ஒப்பிட்டு நோக்கும் போது, அவைகளில் கூட ஒரே நாவலில் இத்தகைய தனிநபர் மனநெருக்கடிசார் பாத்திரங்களை யாரும் படைத்த்தாகத் தெரியவில்லை. ஆக அந்த வகையில் இது உளவியல் நோக்கில் முற்றிலும் பிற நாவல்களில் இருந்து வேறுபட்ட ஒரு நாவல் என்பதை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.

    புதினத்தின் கதைக்களம் சிங்கப்பூர், புனே, மும்பை, சென்னை, தில்லி என பல பெருநகரங்களை மையமிட்டு விரிகிறது. சில கதாபாத்திரங்களின் மூலம் வாழ்வியலின் பல நெருக்கடியான புள்ளிகளைத் தொட்டுச் செல்லும் நாவலின் இறுதிப்பகுதியில் கவிதா ஏற்படுத்திய சலனத்தினால் தூண்டப்பட்ட சரவணனின் நினைவுகள், அவனிடையேயும் ஒரு பேராசைவை ஏற்படுத்தி விடுகின்றது. நாவலின் இறுதிப்பகுதியில் சரவணன் தன் மாமி மகளான கவிதா வீட்டிற்கு செல்கிறான். கவிதாவோ தன் திருமணத்திற்கு புகைப்படம் எடுத்த புகைப்படக் கலைஞன் அவனுக்கு நிகழ்ந்த ஒரு பயண விபத்தில் கேமராவை உடைத்துவிட்டதின் காரணமாக திருமண புகைப்படங்களை பார்க்க முடியாத நிலையில் அதனால் மனப் பிறழ்வுக்கு உள்ளானவள். வீட்டிற்கு சென்ற சரவணனிடம் கவிதா ஓடி வந்து,

    “பினாங் போனப்ப நாம ரெண்டு பேரு மட்டும் எடுத்துக்கிட்ட அந்தப்படம் உன்கிட்ட இருக்கா சரவணா” (திரிந்தலையும் திணைகள், ப – 269)

    என அவள் எழுப்பும் ஒரு கேள்வி அவளது மன எண்ணங்களை எவ்வளவு குழந்தமைத் தன்மைக்கு கொண்டு போய் உள்ளது என்பதை எண்ணி சரவணனை பெரிதும் வருத்தமடையச் செய்கிறது. அத்தருணத்திலேயே கவிதாவின் கணவன் பாலா, சரவணனிடம் அவளது மகள் அர்ச்சனாவை மூன்று நான்கு முறை ஒரு பையனோடு நெருக்கமாக கை கோர்த்துக் கொண்டு போனதைப் பார்த்தேன் என்று சொல்கிறான். ஆனால் தன் ஒரே மகளின் செயல் கூட அவனை பெரிதாக பாதிக்கவில்லை. காரணம் கவிதாவை அவர்கள் வீட்டு பிள்ளைகளில் ஒருவராக ஒரு காலத்தில் அவர்கள் பார்த்திருந்ததும், மட்டு மல்லாது கவிதாவைப் போலவே சரவணனும் தன் பாலிய கால நினைவுக்குள் மூழ்கிப் போவதும் இங்கு கவனப்படுத்தப்படுகிறது.

    “கவிதா வீட்டில் செலவிட்ட அந்த ஓரிரு மணி நேர ஞாபகங்கள் வேலை நேரத்திற்கிடையிலும் சரவணனுக்குள் அடிக்கடி வந்தபடியிருந்தன. பாலா அர்ச்சனாவைக் குறித்து சொன்னதெல்லாம் பொருளற்றுப் போனது போல, கவிதாவின் நிலை குறித்து வருத்தங்களே முக்கியத்துடன் மேலே வந்தன. மலேசியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றது உள்ளிட்ட சிறுவயது நினைவுகள் என்றைக்கும் இல்லாமல் மிகுந்தபடியிருந்தன.

    தனக்குப் பிறக்காத பெண்குழந்தையாகத்தான் அப்பா அவளை நினைத்திருந்தார். தொடர்ந்து அப்பாவின் நினைவுகளும் அதையடுத்து வழக்கம் போலவே முருகன் கோவில் பற்றிய எண்ணங்களுமாக மனம் கண்டபடி அலைந்தது”  (திரிந்தலையும் திணைகள், ப – 272)

    சரவணனின் தந்தை சுப்பையா வாயெடுத்தால் அப்பனே முருகா என்று அழைப்பவர். முருகனின் கோயிலே பழியென்று கிடப்பவர். ஆனால் மகன் சரவணனோ தன் தந்தையின் இறப்பிற்கு பிறகு முருகன் கோயிலுக்கு பெரிதும் செல்லாமலே இருந்துவிடுகிறான். அங்கு சென்றால் தந்தை மீதான எண்ணம் அவனை வந்து அலைக்கழிப்பதை அவன் உணர்ந்திருக்கிறான். ஆனால் கவிதாவின் இந்த கேள்விக்குப் பிறகு இன்று அவன் மனம் மீள கோயிலுக்குச் செல்ல தூண்டப்படுகின்றது. மனைவி பத்மாவிடம் இன்று தாமதமாக அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புவதாக தொலைபேசியில் அழைத்து பேசிவிட்டு யீஷீன் இண்டஸ்ட்ரியல் பார்க் அருகே புதிதாக கட்டப்பட்டிருந்த முருகன் கோவிலுக்குச் செல்வதற்கு ஏதுவாக அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்குகிறான். அங்கு அவன் பார்க்கும் காட்சியினை கோயில், திருமணமண்டபம், உயரே செம்பவாங் நோக்கிப் பயணிக்கும் விரைவு ரயில், ஹீவாட் லீ ஈடிங்ஹெனஸ், டொஸ் ஸியேன் வெஜிடேரியன்ஃபுட், தொழிற்பேட்டையிலிருந்து வேலை முடிந்து நடந்தும், பைக், கார்களிலும் போவோர்கள், கோவில் அமைப்பு என்பதாக ஜெயந்திசங்கர் அருமையாக காட்சிப்படுத்துகிறார்.

    “யீஷீன் சென்ட்ரலில் ஏராளமான பேருந்துகள் போவதும் வருவதுமாக இருக்க, சாலை விளக்கருகில் பச்சை விளக்குக்குக் காத்து நின்றிருந்த பாதசாரிகளின் கூட்டம் முன்பைவிட அதிகரித்திருந்தது. எல்லா வயதினரும் எல்லோரும் எங்கேதான் போவார்களோ ரயிலில் இறங்கி வீடுகளுக்குப் போவோரும், பேருந்தைப் பிடிக்கவென்று விரைவோரும் இருப்பார்கள். ஆனால் மனதிற்கு விருப்பமானவரைப் பார்க்கவும், சந்திக்கவும், பேசவும்தான் இளையோர் எல்லோரிலும் பரபரப்பு தொற்றியுள்ளது. நள்ளிரவுக்கு முன்னால் கூடடைவதே பெருந்தவறென்று கருதும் உல்லாசப் பறவைகள், போக்குவரத்து வசதிகள் மேம்பட்ட வாழ்வில் நிலப்பரப்புகளின் எல்லைகள் கலந்து மங்கி மறந்து விட்டதில், “ஒவ்வொரு தனிமனிதனும் தனியொரு திணையாகித் திரிவதைப் போல” உணர்ந்தான். சதா மாற்றங்கள் கண்டபடியிருந்த மனிதனுக்குள் விரிந்த அந்தப் பரப்பின் விரிவை அளந்தறிவது தான் எப்படி?” (திரிந்தலையும் திணைகள், ப– 276)

    என்பதாக மனித மனங்களின் ஆழ அகலங்கள் சார்ந்ததான ஒரு கேள்வியை முன்வைப்பதோடு, ஊடாக புதினத்தின் தலைப்பான திரிந்தலையும் திணகள் என்பதற்கான விளக்கத்தையும் தந்து விடுகின்றார்.

    மேலும் சிங்கப்பூர் வெளியுலக மக்களால் நிறைந்து காணப்படுவதையும் இது புலப்படுத்துகிறது. புதினத்தில் பல்வேறு மனச்சிக்கல் சார் பாத்திரங்களை உலவவிட்ட ஜெயந்திசங்கர் புதினம் நிறைவடையும் சூழலில் அர்ச்சனாவை மைய களத்திற்குள் கொண்டு வந்து அவள் ஒரு பையனோடு சுற்றுவதாக பாலா மூலம் சரவணனிடம் தெரிவிக்கும் அவர், அதனை ஒரு பிரச்சனையாக கருதி விரிவாக ஆராயமல், அவை தொடர்பான ஆரோக்யமான சில கருத்துக்களை மட்டும் சரணவன் மூலம் அசை போட வைப்பதோடு நிறுத்திவிடுகிறார். இது தேவையற்ற நிலையில் அர்ச்சனாவை மன உழைச்சலுக்கு உள்ளாக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் அமைகிறது. இதுவே புதினத்தின் வெற்றியாகவும், நோக்கமாகவும் பார்க்கத்தக்கதாகிறது.

    தொடர்ந்து மனநலப் பிரச்சனைசார் விசயங்களை பேசும் இந்த புதினத்தின் இன்னொரு முக்கியமான அம்சம் சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்று தொழில் சார்ந்து மக்கள் அதிகம் குடியேறும் நாடுகளில் தொழில் நிமித்தமாக மகனோ, மகளோ, முதலில் குடியேற பின்னர் அவர்களைச் சார்ந்து குழந்தைகளை பராமரிக்க தாய், தந்தை, மாமனார், மாமியார் போன்ற முதியவர்களை ஊரிலிருந்து அழைத்து உடன் வைத்துக் கொள்ள முதியவர்களின் குடியேற்றங்கள் நிகழ்கிறது. இந்த முதியவர்கள் தம் சொந்த ஊர்களில் பட்டாம்பூச்சிகளாக எங்கும் உலாவி திரிகிறவர்கள். ஆனால் மாறாக அயலக மண்ணிற்கு தம் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை பராமரிக்க வந்திருக்கும் இவ்முதியவர்களுக்கு வெளிஉலக உலாவுதல் என்பது பெரிதும் தடைபட்டுப் போகின்றன. அதுவே சிங்கப்பூரிலும் நிகழ்கின்றன. ஆக அந்த முதியவர்களின் மனங்கள் வந்த இடத்தில் தரிக்க முடியாமலும் தாயகத்தில் வேர்களை படரவிட இயலாமலும் பெரும் சலனத்துக்கு உள்ளாகின்றனர். இதனை ஒரு படைப்பாளி என்ற நிலையில் ஜெயந்தி சங்கர் அவர்கள் கண்டடைந்து ஒரிடத்தில் சரவணனின் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.

    “வயதானவர்களில் பெரும்பாலோர் கோவிலுக்குள் இருக்கும் இயல்போடு வெளியில் இல்லாதது போலப்பட்டது.  அவனுக்கு எல்லா இனத்தவரும் ஏறியிருக்கும் பேருந்துக்குள் நுழைந்ததுமே நுண்மையாகக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே உணரக்கூடிய லேசான அசௌகரியம். அவர்களில் குறிப்பாக முதியவர்களின் முக பாவனையிலும், அணுகு முறையிலும், மெய்ப்பாடுகளிலும் பார்வையிலும், ஏன் இதற்கென்ன காரணம் எத்தனையோ தடவை யோசித்தாகி விட்டது.

    பெரும்பாலான பொழுதை வீட்டின் நான்கு சுவர்களுக்குள் கடத்துவது, கோவில்களுக்கு அல்லது சிரெஸ்டன் வட்டாரத்துக்குச் செல்வது. அதிகம் போனால் தமிழர்களின் விழாக்கூட்டம் மற்றும் திருமண மையங்களுக்கு மட்டுமே சென்று பழக்கப்பட்டு வாழ்க்கையை ஓட்டி விடுவார்களோ என்றெண்ணத் தோன்றியது. ஆழ அடி மனதில் இருக்கக் கூடிய ஏதோவொன்று என்னதான் அது, இத்தனைக்கும் இந்தியாவிற்கோ வேறு நாட்டிற்கோ போயிருக்கக் கூடிய சாத்தியங்களே இல்லாத எம்மக்கள் தாம் இவர்கள். சிங்கப்பூரார்கள், கல்வியும் அதுக்கடுத்த ஓரளவு நல்ல வேலையும் தனக்கு அமைந்ததென்பதை தவிர அவர்களுக்கும் தனக்கும் யாதொரு வேறுபாடும் இல்லையே என்று சிந்தித்தான். ஒவ்வொரு முறை யோசிக்கும் போதும் அந்தக் கேள்விக்குச் சரியான விடை மட்டும் கிடைக்காமலே இருந்தது” (திரிந்தலையும் திணைகள், ப – 275)

    புதினத்தில் இடம்பெற்றுள்ள பாத்திரங்களில் பத்மா, பத்மாவின் அப்பா, சரவணனின் அப்பா, பாலா, அருள் ஆகியோர் சிறந்த குணாதிசயங்களைக் கொண்டவர்களாக மனச்சிக்கல் அற்றவர்களாக உலாவுகின்றனர். நேர்மாறாக கவிதாவின் அம்மா, அர்ச்சனாவின் வகுப்புத் தோழன் ஸீஹாவின் அம்மா பாத்திரங்கள் எப்போதும் அடுத்தவர்களை தவறாக பார்ப்பவர்களாக, அடுத்தவர்களின் மனவலியை கண்டு கொள்ளாது அவர்களுக்கு உபத்திரவம் செய்பவர்களான குணாதிசயம் கொண்டவர்களாக படைக்கப்பட்டுள்ளனர்.

    ரவியைப் பொறுத்தமட்டில் சிறு வயது முதலே மனநலம் பாதிக்கப் பட்டவனாக இருக்கின்றான். இது அவனுக்கு மனைவியாக வருகின்ற ரேணுவின் வாழ்வை பெரிதும் பாதிப்பதோடு அவளுக்குப் பிறக்கின்ற மகன் நவீனையும் பெரிதும் பாதிப்பதாக அமைகின்றது. கவிதாவோ தனது திருமணப் புகைப்படங்கள் கிடைக்காத நிலையில் கண்முன் இருக்கின்ற நிஜவாழ்வை ரசிக்கத் தெரியாது, முரணாக காட்சிசார் நினைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதையே எண்ணி மனப் பிறழ்வுக்குள்ளாகி வாழ்வைத் தொலைத்தலை பார்க்க முடிகிறது. மேலும் புதினத்தில் பாலாவால் தனக்கு துணையாக வந்த கவிதாவால் வாழ்வை முழுமையாக ரசிக்க முடியாமல் போய்விடுகிறான். இன்னொருவனை காதலித்து வந்த மீனா பெற்றோரின் அடக்கு முறைகளால் மனம் அமுக்கப்பட்டு கதிரை திருமணம் செய்வதும் ஆனால் திருமணம் முடிந்த நிலையில் முந்தைய காதலனால் அவள் நெருக்குதலுக்குள்ளாகி மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இங்கு கதிரின் வாழ்வும் சமூகத்தில் கேள்விக்குரியதாகின்றது. ஒருவரின் சிக்கல்கள் இன்னொருவரை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இந்த சிக்கல்கள் நிகழாதிருக்க நாம் பிறரை சரியாகப் புரிந்துகொள்வதும், பிரச்சனைகள் வருகின்ற போது பிறரோடு திறந்த மனதோடு பேசி யாருக்கும் அஞ்சாமல், அடிபணியாமல் தெளிவான முடிவுகள் எடுக்க வேண்டிய அவசியத்தையும் இந்த நாவல் வலியுறுத்துகிறது என்றால் மிகையல்ல.

    படைப்புகளைப் பொறுத்தமட்டில் பாத்திரங்களின் உளவியலை ஆராய வேண்டியுள்ளது. அதாவது பாத்திரங்களின் பேச்சு மற்றும் செயல் போல படைப்பில் காட்சிப்படுத்தப்படும் பாத்திரங்களின் குணாதிசயங்களுக்கும் படைப்பாளிக்கும் நேரடியான தொடர்பிருப்பதாக உளவியலாளர்கள் கருதுகின்றனர். இலக்கியமும் உளப்பகுப்பாய்வும் பற்றி பேசும் பேரா. அரங்க நலங்கிள்ளி அவர்களின் கூற்று இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

    “உளப்பகுப்பாய்வு நெறிமுறைகளைப் படைப்பாக்கத்திற்குப் பயன்படுத்தும் போது படைப்பாக்கத்தில் நமக்கு ஆய்வு மூலங்களாக விளங்குபவை பாத்திரத்தின் பேச்சு, படைப்பாளியின் பேச்சு (படைப்பிற்குள்) கதை சார்ந்த சூழல், படைப்பில் வெளிப்படும் படிமங்கள் படைப்பிற்கு அப்பாலுள்ள படைப்பாளியின் வாக்கு மூலங்கள், வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு இன்ன பிற. இதன்வழி படைப்பின் மறைபொருளைத் துப்பறியலாம். படைப்பாக்க உளவியலைக் கணடறிதலின் பயனை இரு நிலைகளில் காட்டுவார் லைனல் டிரில்லிஸ். அவை ஆழ்பொருளைக் கண்டு விளக்குதல், படைப்பாளன் ஒரு மனிதன் என்ற நிலையில் அவனது உண்மைத்துவத்தை (Reality) விளக்குதல்” (1972,ப-284) இதிலிருந்து படைப்பாளன் படைப்பிலக்கியத்தில் இருந்து எந்நிலையிலும் தனியனாகி விடமுடியாது என்கின்ற உண்மை புரிகிறது. படைப்பின் மறைபொருள் என்பது படைப்பாளனின் நனவிலி மனவேட்கையே இந்த நனவிலி மனவேட்கையே உண்மைப் பொருள் (Reality) இவ்வகையில் படைப்பின் உண்மைப் பொருளை உளப்பகுப்பாய்வு நெறிமுறைகளைப் (Psycho anlitical methods) பின்பற்றி வெளிக்கொணர முடியும்” (இலக்கியமும் உளப்பகுப்பாய்வும், பக் 11, 12) என்கிறார்.

    மேலும் இந்த அமுக்க மனநிலையே படைப்பில் வெளிப்படுகிறது என்பதை ஃபிராய்டு சுட்டும் வேளையில், அவர் வழி வந்த லக்கான் படைப்பு வழியான உரையாடலும் மீண்டும் அமுக்கப்படுவதால் உரையாடலாக விடுபடல் தன்மை கொண்டதாகவே அமைகிறது என்பதும் நாம் எண்ணிப் பார்க்கத்தக்கதாகிறது. இந்த ஃபிராய்டிய லக்கானிய சிந்தனைகளை திரிந்தலையும் திணை புதினத்தில் பொருத்தி பார்ப்போமாயின் ஜெயந்தி சங்கர் அவர்களின் மனதின் பிரதியே இந்த படைப்பு என்பதாக அர்த்தம் கொள்ளலாம். அதுவும் கூட லக்கானின் கூற்றுப்படி முழுமையான பிரதி இதுவெனக் கொள்ள முடியாது போகிறது. ஏனெனில் இந்த கதை சொல்லலிலும் அமுக்கம் நிகழ்ந்திருப்பதாக கொள்ள வேண்டியுள்ளது என்கிறார்.  இங்கு இத்தகையதான ஓர் உளவியல் ஆய்வை மேற்கொள்கிற போது ஒரு படைப்பின் அனைத்து பாத்திரங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் படைப்பாளிக்கும் நேரடியான தொடர்பு இருப்பதாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது. படைப்பாளியின் வாழ்வோடு நேரடியாக பாதிப்படைவது போக அவர் கண்டு, கேட்டு, வாசித்த, பார்த்த நிகழ்வுகளின் பாதிப்பு நினைவுகளின் வழியாகவும் படைப்பாளி ஒரு புனைவை உருவாக்கி விட முடியும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். ஆக இப்போக்கு பல படைப்புகளுக்கும் பொருந்துவதாயினும், திரிந்தலையும் திணை அடிப்படையிலேயே உளவியல் கட்டுமானத்தைக் கொண்டு கட்டப்பட்டுள்ளதால் அதற்கு முற்றிலும் ஏற்புடையதாக அமைகிறது. ஆக புதினத்தை உளவியல் நோக்கில் வாசிப்புக்கு உட்படுத்துகிற போது பாத்திரங்களின் வழி மானுடத்தின் மனச்சிக்கல்களை அறிந்து கொள்ளவும், அதனை நம் வாழ்விலும், சமூகத்திலும் நிவர்த்தி செய்யவும் திரிந்தலையும் திணை உதவியாக அமைகிறது.

    Share
  • வையக வடிவே

    வையக வடிவே

    சரஸ்வதி ராசேந்திரன்

    அன்னை   பராசக்தி   அருள்மகனே
    முன்னை வினைகளைக்  களையவா
    வல்வினை   எல்லாம்  வலுவிழந்தே
    வாடிடச்   செய்வாய்  வல்லபைநாதா
    அஞ்சிடும்  அன்பருக்  கபயமளித்திடு
    நஞ்சுள்ளம் கொண்டோரை  நசுக்கிவிடு
    அனுதினம்  பணிவோம்  உன்னை
    அடைக்கலம்  நீயே  அன்னைகுமரா
    அவலும் பொரியும் நான்படைப்பேன்
    அல்லல்   தீர்ப்பது    உன்கடனே
    சங்கரன்    புதல்வா   சக்திமகனே
    சஞ்சலம்   தீர்த்திடச்   சீக்கிரம்வா
    வையகம்  யாவும்    உன்வடிவே
    மானிடம்  வாழ்ந்திட  மனதுவையே

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 4

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 4

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    பாவலர் தமிழாளன் கவிதைகளில் படைப்பாளுமை

    முன்னுரை

    படைப்பாற்றல் எவ்வாறு தனித்துவம் மிக்கதோ அதுபோன்றதே சுவையுணர் திறனும் தனித்துவம் மிக்கது. சுவையுணர் திறனின்றித் திறனாய்வு அமையாது, காலத்துக்கும்  கதிரவனையே  மீண்டும் மீண்டும் அறிமுகம் செய்து களைத்துப் போனவர்கள் நாம். குடிசைக்குள் கண்சிமிட்டும் சில அகல்விளக்குகளை அறிமுகம் செய்தால் என்ன என்னும் என் எண்ணத்தின் மொழி வெளிப்பாடே இந்தக் கடடுரைத் தொடர். .’வல்லாரக்கும் மாட்டார்க்கும் வரமளித்து’ வாய்ப்பளிக்கும் ‘வல்லமை’ இப்பணியைச் செய்ய எனக்கும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி.  சிறு குறு இதழ்களிலும் முகநூல் பதிவுகளிலும் தனிப்பட்ட முறையிலும் தங்களது படைப்பாளுமைக்கான ஓர் அங்கீகாரத்தைத் தேடும் அந்த துடிப்பான கவியுள்ளங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்தத் தவிப்பினைப் போக்கித் தாகத்தைத் தணிப்பதற்கும் தமிழுக்கு ஏதேனும உருப்படியாகச் செய்யலாமே என்னும் இந்த முதியவனின் துடிப்புக்கும் இக்கட்டுரைத் தொடர் ஒரு வடிகால் ஆகலாம். அந்த வகையில் நிறைதமிழ் ஆய்ந்தார் — கறையில் கவிஞர், — மொழியின உணர்வாளர் — பழிதீர் பாவலர் பழ தமிழாளன் அவர்களின் கவிதைகளில் இழையும் படைப்பாளுமையை இந்தக் கட்டுரை சுருக்கமாகச் சொல்ல முயல்கிறது. .

    படைப்பாளுமை – ஒரு விளக்கம்

    படைப்பின் அனைத்துக் கூறுகளின் மேல் படைப்பாளன் செலுத்துகின்ற மேலாதிக்கத்தையே நாம் படைப்பாளுமை என்று கூறுகிறோம். உள்ளம், புலமை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாவது படைப்பு கம்பன் இராமனையும படைக்கிறான். இராவணனையும் படைக்கிறான். நீலமாலையையும் படைக்கிறான். திரிசடையையும் படைக்கின்றான் என்றால் அத்தனைப் பாத்திரங்களாகவும் ;அவன் உருவெடுக்கிறான். இதுதான் அவன் உள்ளத்தின் அளுமை. பாத்திரப் படைப்புக்களின செய்நேர்த்தி குறையாமல் எந்தப் புள்ளியிலும் முரண் ஏற்படா வண்ணம் காத்து அவர்களின் பண்பாட்டு உருவகம் சிதையாமல் பாரத்துக் கொள்வதற்குத்தான் உள்ளத்தின் ஆளுமை என்று பெயர். கலிவிருத்தம் என்னும் ஒரு சாதாரண யாப்பிலும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களிலும் அவன் செய்து காட்டியிருக்கிற சித்துவிளையாட்டுக்கள் வடிவத்தின் மீது அவன் செலுத்திய ஆளுமை எனலாம். காப்பிய நிகழ்விடச் சித்திரிப்புக்கள் இயற்கை மேல் கொண்ட அவனுடைய ஆளுமையை உணரமுடியும்.  இததகைய ஆளுமை எல்லாப் படைப்பிலக்கியக் கரத்தாக்களுக்கும் உரியனவே எனினும் கவிதைப் படைப்பாளர்களுக்குக் கூடுதல் சிறப்பாகக் கருதப்படும் கருத்து, வடிவம், உணர்ச்சி, கற்பனை என்னும் கவிதைக் கூறுகளின் மேல் கவிஞன் ஒருவன் செலுத்துகிற படைப்பாளுமையையே மேலே கம்பன் வழி நின்று கண்டோம். சுருங்கச் சொன்னால் ‘இந்தப் பாடடை இவர்தான் எழுதியிருப்பார்’ என்னும் முத்திரைக்கு மறுபெயரே’ படைப்பாளுமை. அத்தகைய படைப்பாளுமையைப் பெற்றவர்களால் படைக்கப்படும் கவிதைகளே காலத்தை வென்று நிற்கின்றன .மற்றவை காலச் சூறாவளியில் தாக்குப் பிடிக்க இயலாத பதர்களாகப் பறந்துவிடுகின்றன.

    பாவலர் தமிழாளன் ஓர் அறிமுகம்

    நத்தம் பள்ளத்தாக்கில் பிறந்து முத்தமிழ் கற்று முப்பத்தைந்து ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றிய முதுகலைத் தமிழாசிரியர். எதனையும் த்மிழாலேயே சிந்திக்கும் தனித்தன்மை பெற்றவர். மரபுவழி வந்த பண்பாட்டுக்குப் பட்டா போட்டுக் கொணடவர்.  ‘பழகுதற்கு இனியவர்’ என்னும் பாசாங்கு மொழி அறியாத இவர் உள்ளம் சிரிப்பதை உதடு ரசிக்கும். தெள்ளிய நீர்போலக் கள்ளமில்லாக் உள்ளத்துக்குக் காப்புரிமை பெற்றவர். அதனால் கவிஞரானவர்.  மெய் வருத்தம் நோக்காது கைப்பொருள் இழந்தும் மொழி, இனம், நாடு முன்னேற வேண்டும் எனக் கஞ்சத்தனம் இல்லாமல் கவலைப்படுபவர்.  தமது தனித்தமிழ்க் கவிதைகளால் முகநூல் பக்கங்களையெல்லாம் தமிழ்மணம் கமழச் செய்தவர். செய்கிறவர்.  ‘தமிழமுது’ என்னும்  கவிதைத் தொகுப்புக்கு உடைமையாளர்.  உழைப்பதற்காகவே ஓய்வு பெற்றவர்.

    தமிழாளன் கவிதைகளில் பாடுபொருள்

    அகம், புறம் என்னும் இருபெரும் பாடுபொருளை மட்டும் பாடிய சங்கச் சான்றோர்கள் கவிஞர்களாக ஒளிர, பலசரக்குக் கடையான தனிப்பாடல் திரட்டுக் கவிஞர்கள் தனிமைப்பட்டுக் கிடப்பதற்குக் காரணம் என்ன? வேறுபட்ட பாடுபொருளைப் பாடுவதனாலேயே கவிஞர் ஆகிவிட முடியாது. கவிதையில் வேடிக்கை செய்வதும் வித்தை காடடுவதும் வேறு. மக்கள் நலம் சார்ந்த எண்ணங்களைக் உணர்வுப் பூர்வமான கவிதைகளால் வெளிப்படுத்துவது வேறு. தமிழையும் தமிழ்நாட்டையும் தமிழினத்தையும் வரையறுத்த பாடுபொருளாகக் கொண்ட கவிஞருள் தமிழாளனும் ஒருவர். ஆனால் சில நேர்வுகளில் அந்த எல்லையை இவரைத் தாண்ட வைத்தது சமுதாயத்தின் அவல நிலை. எனவே சில புதுமையான பாடுபொருளைத் தேடிப் பாடியிருக்கிறார்.

    முதியோர் காதலும் முதியோர் காப்பகமும்

    பாவேந்தரின் முதியோர் காதல் தமிழ்க்கவிதை மரபு அதுவரைக் காணாதது. அவரால் கண்டெடுக்கப்பட்டது. முதியோர் காதல் என்பது ‘குடும்ப விளக்கின்’ இறுதிப்பகுதியான அதனுள் முதியோரின் பக்குவக் காதலும் பண்பாட்டு முதிர்ச்சியும் இல்லறப் பயனும், சமுதாயக் கடனும் வெல்லத் தமிழில் பாவேந்தரால் பாடப்பட்டிருந்தன.  காலச் சக்கரச் சுழற்சிக்குச் சமுதாயமும் விதிவிலக்கன்று. இன்று நிலை தலைகீழ். ‘தான் கட்டிய வீட்டுக்கு ‘அன்னை இல்லம்’ என்று பெயர்வைத்து. திறப்பு விழா செய்ய மகன், அம்மாவை அழைப்பதற்கு முதியோர் இல்லம் செல்கிற நாகரிகத்தின் உச்சத்தை நாடு பார்க்கிறது நல்லவர்கள் பார்க்கிறார்கள். தமிழாளனும் பார்க்கிறார். அதனால் குமுறுகிறார். எழுதுகிறார்.

    “பெற்றெடுத்த பிள்ளைதனைப் பேணியுமே ஊணளித்துக்
    கற்கவைத்துப் பணியேற்கக் கண்துஞ்சாப் –பெற்றவரைக்
    கண்கலங்க இல்லமதில் கையற்றே ஏங்கவைப்போன்
    மண்ணகத்து மாண்பில்லான் மன்!”

    என்னும் வெண்பாவில்  ஆஸ்திக்குப் பெற்ற மகனிருந்தும் முதியோர் இல்லத்தில் அனாதையாகிப் போன முதியோர்படும் துன்பத்தைப பாடி

    ஈன்றெடுத்தார் படுப்பதற்கும் உண்ப தற்கும்
    இழிபாயும் பழந்தட்டும் மகனே ஈந்தான்!
    வான்மதிபோல் தம் மகனை வளர்த்த பெற்றோர்
    வற்றல்மரம் சாய்ந்தாற்போல் சாய்ந்தார்! கொம்புத்
    தேன்,பேரன் பாய், தட்டைப் பாது  காத்தான்!
    திகைத்திட்ட பெற்றோரோ ‘எதற்கே?’ என்றார்!
    பான்மழலை,  “நீங்கள் உண்ண. படுக்க என்றான்!”
    பாலகனால் தெளிவுபெற்றார்!  தலைகுனிந்தார்!

    என்று உலக வழக்கில் உள்ளதொரு அங்கதச் சொல்லாடல் ஒன்றினைக் கவிதையாக்கிறார்.  இனி உலகமயப் பேராபத்தில் சிக்கியிருப்பவைகளுள் சுற்றுப்புறக் கேடும் ஒன்றாகும். உலகம் முழுவதும் கடல் மட்டம் அடுத்த சில ஆண்டுகளில் இரண்டடி உயரும் என்கிறார்கள். இமயமலை உருகிவருகிறது என்கிறார்கள். சுற்றுப்புறத் தூய்மை பெருங்கவனம் பெறவேண்டியது இன்றியமையாதது என அரசும் அறிவாளிகளும் அவசரப்படுகிறார்கள். இப்பொருண்மை பற்றிய தமிழாளன் கவிதைப் பங்களிப்பு இப்படி அமைகிறது. .

    “உடல்வளரக்கும் தூய்மையுறும் உண்பொருட்கள் தன்னில்
    உடல்நோயைப் போக்கிநலம் காக்கின்ற மருந்தில்
    திடமோடும் உடல்நிற்க அருந்துகின்ற பாலில்
    சிந்திக்கும் அறிவின்றிக் கலப்படத்தைச் செய்து
    வடமலைபோல் செல்வத்தைக் குவிக்காது நாளும்
    வற்றாது அறவழியில் தேடியநம் தேட்டைக்
    கடனென்று வறுமையிலே வாடுகின்றோர்க் கீதல்
    கற்றவர்கள் போற்றுகின்ற வாணிகத்தின் தூய்மை!”

    என்னும் பாட்டால் சமுதாயத் தூய்மையையும்

    ‘தொடர்வண்டி பேருந்து நிலையம் மற்றும்
    தொடர்கின்ற பொதுவிடங்கள் தோறும் குப்பை
    அடங்கிடவே தொட்டிகளும் அடுக்கடுக்காய்
    அமைத்து அவற்றில் போடுகின்ற எண்ணந் தன்னைக்
    கடன் எனவே மக்களுக்குக் கற்றோர் எல்லாம்
    கற்பித்தால் நகரமுதல் சிற்றூர் மட்டும்
    உடனடியாய்த் தூய்மையெனும் அழகு கொஞ்சும்
    உலகத்தார் கண்டுவக்கும் சொல்லும விஞ்சும்!

    என்னும் பாட்டால் சுற்றுப் புறத்தூய்மையையும் பாடுபோருளாக்கிய பாவலர் இறங்குமுகத்தில் இருக்கின்ற பொருளாதாரப் பாதிப்பிலிருந்து மீளவும் எதிர்காலத்தை உறுதி செய்யவுமான தனிமனிதச் சிறு சேமிப்பையும் வலியுறுத்தி எழுதியிருக்கிறார்.

    “நிலமகளும் தன்வயிற்றில் வைரம். பொன்னை
    நிலையாகப் பிறபொருளை வைத்தி ருப்பாள்!
    மலர்தேடி வண்டுகளும் நாளும் சென்று
    மதுவைத்தன் அடைதனிலே சேரத்து வைக்கும்
    அலைகடலும் தன்மடியில் பவளம் முத்து
    அரியபல செல்த்தைச் சோத்து வைக்கும்
    நிலையில்லா வாழ்வுக்குச் சொந்த மானோன்
    நீர்நிலம்போல் சேமித்து வாழ வேண்டும்!”

    என்னும் பாடலில் உவம அளவையால் சிறுசேமிப்பை வற்புறுத்துகிறார். ‘கஞ்சி குடிப்பதற்கில்லார்’ என்பதும் கவிதைதான். ‘அதன் காரணங்கள் இவையெனும் அறிவுமில்லார்’ என்பதும் கவிதைதான். வறுமைச் சித்திரிப்பு மட்டுமே கவிதையாகிவிடாது. ஒரு காலக்கட்டத்தில் வறுமையை ஒழிப்பதற்கான வழியைக் காட்டுபவரும் கவிஞரே என்பதற்குத் தமிழாளன் ஓரு சான்று.

    “வான்மழையும விரிவெளியும் எதிரும் மண்ணும்
    வளமைமிகு தம்பணியை ஆற்றும் போது
    தான்வேண்டிக் கையூட்டுக் கேட்டதுண்டா?
    தான் அரசுப் பணியமர்ந்த காலத் திற்கும்
    தான்செய்யும் பணிக்கான ஊதி யத்தை
    தவறாதே நாட்டரசு அளிக்கும் போது
    மான்போல மானத்தைக் காகக் வேண்டி
    மதிமயக்கும் கையூட்டை மறுத்தல் வேண்டும்!

    என இன்று மகப்பேறு மருத்துவமனைகளிலிருந்து இருந்து சுடுகாடு வரை புரையோடிப் போயிருக்கும் இலஞ்சத்தைக் கண்டித்துப் பாடியிருப்பதைக் காணலாம். தமிழைப் பாடியிருக்கிறார். தமிழின் இனிமையைப் பாடியிருக்கிறார். இனத்தைப் பாடியிருக்கிறார். அது இழந்த ஏற்றத்தைப் பாடியிருக்கிறார். இன்றைய இழிநிலையைப் பாடியிருக்கிறார். பெண்மையைப் பாடியிருக்கிறார். அதன் பெருமையைப் பாடியிருக்கிறார். இன்னும் என்னென்னவோ பாடியிருக்கிறார். ஆனால் பிறரால் அவ்வளவாகச் சீண்டப்படாத சமுதாயத்திற்குத் தேவையான இத்தகைய அரிய சிலவற்றையும பாடுபொருளாக்கியிருக்கிறார். அதன்வழி பாடுபொருளில் தனக்கான தனிமுத்திரையை அவர் பதிவு செய்திருக்கிறார்.

    தமிழாளன் கவிதைக் கட்டுமானத்தில் மரபு

    கட்டுமானச் சிறப்பு என்பதை உத்திச் சிறப்பு என்றும் சொல்லலாம். கவிதை உத்திகளால் சிறக்கிறது. அது கவிதையின் பாடுபொருளாலும் கவிஞனின் அப்பொழுதைய மனநிலைக்கும் ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது.‘  ‘கவிதையில். ‘வடிவம்’என்பது ‘சீர், தளைகளால் அமைந்த யாப்பை மட்டும் சுட்டாது, சொல்லாட்சி, பன்முக உத்திகள், வெளிப்பாட்டுமுறை முதலியவற்றையும் சுட்டும் ஒரு குறியீடாகவே கருதப்படும். பாவலர் தமிழாளன் கவிதைகளில் இவை அமைந்திருக்கும் பாங்கினைச் சுருக்கமாகக் காணலாம்.

    மரபு என்பது திட்டமிட்டுத் திணிப்பதன்று. படைப்புக்களில் தானாகவே வந்து அமைது. படிவது. “வீடு அமைய வேண்டும்,. மனைவி அமைய வேண்டும், மனத்துள் படிய வேண்டும் என்பனபோல. பாரதி உள்ளிட்ட தமிழ்க் கவிஞர்களில் தமிழைப்பாடாத கவிஞர்களே இல்லை. அவருள்ளும் ஒப்பாரும் மிக்காரும் இன்றித் திகழ்பவர் பாவேந்தர். அதனால்தான் மொழியை வாழ்த்துகிறபோதோ அவையடக்கம் கூறுகிறபோதோ அவருடைய தாக்கம் அல்து பாதிப்பு இல்லாத எந்தத் தமிழ்க்கவிஞரும் கவிதையைத் தொடங்க முடிவதில்லை.

    “பயிலுறு அண்ணன் தம்பி — அக்கம்
    பக்கத்து உறவின முறையார்
    தயை மிக உடையாள் அன்னை — என்னைச்
    சந்ததம் மறவாத் தந்தை
    குயில்போல் பேசிடும் மனையாள் — அன்பைக்
    கொட்டி வளர்க்கும் பிள்ளை
    அயலவர் ஆகும் வண்ணம் — தமிழ் என்
    அறிவினில் உறைவது கண்டீர்!”

    என உறவுகளை உதறித்தள்ளும் உணர்வாகத் தமிழைக் காண்கிறார் பாவேந்தர். சிந்தில் சிந்திய பாவேந்தர் உள்ளத்தை அப்படியே விருத்தத்தில் பதிவு செய்கிறார் தமிழாளன்.

    தீதில்லா மனையாளின் செங்கண் பார்வை,
    தீஞ்சுவையாய்க் கனிகின்ற செவ்வாய முத்தம்
    ஓதி கோதி முகர்கின்ற மலரின் நாற்றம்
    ஒளிமிகுந்த நிலவனைய முகத்தின் தோற்றம்
    பாதிவிழி இதழ்மூடப பருகும் கூடல்
    பருகுகையல் காற்றோடாது அணைக்கும் பார்வை
    ஓதிடினும் இன்பமென்றே உயர்ந்து வானின்
    ஒப்பில்லாத் தமிழுக்கே ஈடும் ஆமோ?

    பாரதிதாசன் அத்தனை உறவுகளையும் அயலனவாக்க இந்தப் பாட்டில் ;மனைவியை மட்டும் பிரிததுப் பாடியதும் ஓர் மரபே! எவ்வாறு எனின் பாவேந்தரே அவ்வாறு பாடியிருக்கிறார்.

    “மங்கை ஒருத்திதரும் சுகமும் – எங்கள்
    மாத்தமிழ்க்கு ஈடில்லை என்றுரைப்போம்!”

    என்று பாவேந்தர் பாடியது குறள் என்றால் தமிழாளன் பாடியது பரிமேலழகர் உரை எனலாம். ‘தருசுகம்’ என்னும் வினைத்தொகையைப் பாவலர் பொருட்தொகையாக்கியிருக்கிறார்.

    “ஒளிநிறைநத பகலவனும் இருண்ட துண்டோ?
    உலவி வரும் காற்றினுக்கே ஓய்வும் உண்டோ?
    நளிநீரின் தண்மைக்கும் மாற்றமுணடோ?
    நறுமலர்கள் மணக்காது மாய்தல் உண்டோ?
    வெளிநிலவின் குளிர்ச்சிக்கே குறைவுமுண்டோ?
    வளமளிக்கும் மாரி, கையை  மடக்கல் உண்டோ?
    களிப்போடு பிறர் வாழத் துன்பமின்றிக்
    கைகொடுக்கும்  தமிழனுக்கே தாழ்ச்சி உண்டோ?

    என்று தமிழனுக்குத் தாழ்ச்சியில்லை என்பதற்கு அவனுடைய பக்குவப் பண்பாட்டைக் காரணமாக்குகிறார். பகலவன், காற்று, நீர், மலர், நிலவு, மழை, என்னும் உவமங்களால் தன்னலமற்ற பணிக்கான தமிழ்மரபுக்கு எந்த நாளும் வீழ்ச்சியில்லை என்பது ஓர் புதிய பார்வை.

    மணிவாசகப் பெருமானும் தமிழாளனும்

    மணிவாசகப் பெருமானைத் தமிழாளனோடு  ஒப்பிடுவதாக எண்ணிவிடக் கூடாது. தலைப்புக்காக வைக்கப்பட்டது. அவையிரண்டுமே அவர்கள் எழுதிய நூலுக்கு வந்த ஆகுபெயர்கள். மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில் திருச்சாழல் என்ற பகுதியை மகளிர் இருவர் பங்கு கொள்ளும வினா விடை பாங்கில் எழுதியுள்ளார். அது ஓர் உத்தி.

    “தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச் சிற்றம்பலவன்
    நான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ?”

    “தில்லைச சிற்றம்பலத்துப பெருமான் திருவாலங்காட்டுக்குச் சென்று நடனம பயின்றது ஏன்?’ என்பது ஒருத்தியின் வினா.

    “நான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
    ஊன்புக்க வேற்காளிக் கூட்டங்காண் சாழலோ?”

    “அவ்வாறு அவன் திருவாலங்காட்டுக்குச் சென்று நடனமாடியிருக்காவிடின், இவ்வுலகத்தையே காளி விழுங்கியிருப்பாள்’  என்பது மற்றொருத்தியின் விடை இரத்தபீசன் என்னும் அரக்கனைக் கொன்ற ஆவேசத்தில் உலகத்தையே அழிக்க எண்ணும் காளியை அடக்கிய தொன்மம் இது.  பாவலர் தமிழாளன் இந்த உத்தியைத் தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தியிருக்கிறார். அல்லது இந்த உத்தி அவருடை படைப்பில் அமைந்திருக்கிறது. குணங்கள் மூன்றும் மாறி மாறி வருவதால் சொல்வார் நோக்காது சொற்பொருள் நோக்கி மெய்ப்பொருள் காண்பதே அறிவு என்பது வள்ளுவம். இநதக் கருத்தியலைத் தமிழுக்கு ஏற்றி

    “எப்பொருளே யார்யார்வாய்க கேட்டாலும் அதனின்
    மெய்ப்பொருளே அறிவென்று பகர்ந்த மொழி எதுவாம்?”

    என்று பாடுகிறார். மொழியைக் கருவியாக வள்ளுவர் பயன்படுத்த, தமிழாளனோ அதனைக் கருத்தாவாகவே கருதி,

    “இப்புலத்தார் இறைஞ்சுகின்ற நெற்றிக்கண் காட்டும்
    இறையெனினும் குற்றமென்ற நக்கீரன் தமிழே!”

    என்றும் அந்த  வினாவிற்கு விடையிறுக்கிறார். வள்ளுவர் தமிழை நக்கீரன் தமிழாகக் காணும் அழகியல் சுவைக்கலாம். தொடர்ந்து

    “செப்புகின்ற ஐம்புலத்தை அடக்குகின்ற வாழ்வே
    சீர்மிகுந்த துறவென்று செப்புமொழி  யாதாம்?”

    என உண்மையான  துறவினை அடையாளப்படுத்துகிற மொழி எது ஒருவர் வினவ,

    “இப்புவியில் சான்றோர்க்குப் பொய்யாமை விளக்கே
    ஈடில்லா அறவிளக்கென் றுரைத்ததுவும் தமிழே!”

    இலக்கியத்திற்கு வடிவங்கள். பல. ஒவ்வொரு வடிவத்திற்குள்ளும் உத்திகளும் பல. உரைநடை இலக்கியத்தில் நாவல், சிறுகதை, கடிதம், நாடகம், ஓரங்க நாடகம் என்னுமாறு அமைந்த படைப்புக்கள் பலவாயினும் அவற்றுள் ஊடிழையாக ஓழும உத்திகளில் படைப்பாளனின் ஆளுமையைக் காணலாம். கவிதையிலும் இத்தகைய உத்திகள் உண்டு. வினாவிடை  என்பதும் அவற்றுள் ஒன்று. அதனைத் தமிழாளன் தமிழின் பெருமை சேர்க்கக் கையாணடிருக்கிறார்.

    கவிதையில் வடிவத்தின் ஆளுமை

    செய்யுளிலக்கணத்தில் ‘யாப்பு’ என்பது, தற்காலத் திறனாய்வுப் பார்வையில் ‘உருவம்’ அல்லது ‘வடிவம்’ என்று அழைக்கப்படுகிறது. உணர்ச்சியின் வெளிப்பாடே கவிதையென்பது உண்மையாயினும் அழகான கற்பனையும் பொருத்தமான வடிவமும் அமையாவிடின் கவிதையின் நோக்கம் நொறுங்கும். ஆக்கம் சிறக்காது. படைப்பவனின் உணர்ச்சியனுபவத்தை நுகர்வோனுக்குக் கொண்டு சேர்க்கும் தனித்ததொரு ஊடகமாகச் செயல்படுவது வடிவமே.

    “கவிஞர்; தம் எண்ணத்தையும் உணா;ச்சியையும் சுவைஞருக்கு உணர்த்த முற்படும் ஆழ்ந்த முயற்சிகளே இலக்கிய வடிவமாகும்……..இலக்கியம் அழகு பெறுவது வடிவத்தால்”

    உணர்ச்சிக்கும் கருத்துக்கும் பொருத்தமான வடிவம் அமையாவிட்டால், அல்லது  அவை தம்முள் மாறுபட அமைந்துவிட்டால் கருச்சிதைவைப்போல ‘படைப்புச்சிதைவையும்  தடுக்க இயலாது. இலக்கியத்தின் வெற்றியும் பெருமளவுக்குப் பாதிப்புக்குள்ளாகும். ‘ஓரு இலக்கியம் சிறந்ததா? இல்லையா? என்பது  அதனுள் அமைந்த உணர்ச்சியின் விழுப்பத்தைப் பொருத்தது. ஓர்  இலக்கிய நூல் நன்கு அமைந்ததா? இல்லையா? என்பது உணர்ச்சிக்குத் தரப்பட்ட வடிவத்தைப் பொருத்தது.’

    யாப்பின் மந்தணம் ஓசை ஒழுங்கே

    யாப்பில் நுட்பமாக அமைந்துள்ள ஓசை ஒழுங்கே அதன் கொடுமுடியாகும். ‘இன்ன சீர்கள் இன்னவாறு அமைந்தால் இன்ன தளைகள் தோன்றும்., தோன்றவே இன்ன ஓசை புலப்படும்’ என்பது யாப்பறி கல்வியின் பள்ளத்தாக்கு.  குறிப்பிட்ட ஒரே யாப்பில் அமைந்த பாடல்கள் பலவற்றைப் பலகாலும் பயின்று, அவற்றுள் இழையோடும் ஓசை நுட்பத்தை மனத்தில் உள்வாங்கிக்கொண்டு, அவ்வோசை ஒழுங்கின் அடிப்படையில் பாடல்கள் படைக்கப்படின் அப்பாடல்களில் முறையான தளையும் வரவேண்டிய சீரும் தாமாகவே அமையும்’ என்பது யாப்பறி கல்வியின் கொடுமுடி.

    “யாப்பில் வந்தடங்கும் வார்த்தைகளே கவிதை யாகும்”

    என்னும் கவிஞா; சுரதாவின் வரிகள் காட்டும் கவிதை அரிச்சுவடி இதுதான். இனிப்பில் செய்யப்பட்ட தின்பண்டங்களைப் பலவகை உருவங்களில் கொடுப்பதைப் போன்றது இது. கிண்ணங்கள் மாறுபடுவதனால் தேனின் சுவை மாறுபடுவதில்லை.

    தமிழாளன் கவிதைகளில் யாப்பின் ஆளுமை

    கட்டுப்பாடுகள் மிகுந்த வெண்பாவையும் கட்டளைக் கலித்துறையையும் கட்டுப்பாடுகள் குறைந்த விருத்தத்தையும் தம் ‘கவிதைக் குழந்தைகள்’ எனக் கருதிக் கையாளும் அவருடைய கவிப்பண்பாடும் கவியாற்றலும் வியப்புடன் நோக்கப்படுகின்றன. ‘எல்லாப் பாக்களும் இதற்குள் அடக்கம்’ என்னும் சிறப்புரிமை கொண்ட ஆசிரியப்பாவையும் இவர் மிக இலாவகமாகக் கையாண்டிருக்கிறார்.

    விளையாட்டுத் திடலான விருத்தங்கள்

    கேட்காதவரே இல்லை என்று சொல்லும் படியான சில் பாடல்கள் தமிழில் உண்டு. அவற்றுள் ‘கைவீசம்மா கைவீசு! கடைக்குப் போகலாம் கைவீசு’ என்ற பாட்டும் அடங்கும். பாசமலர் திரைப்படத்தில் உரையாடல் எழுதிய ஆரூர்தாஸ் நடிகர் திலகத்தின் உரையாடலோடு சேர்க்க, அவர் பேச, திரைப்பட அரங்கத்தின் அஸ்திவாரமும் அழுத கதை நாடறியும். நடைபாதை அறியும். . உண்மையில் அந்தப் பாட்டு மரபு சார்ந்த அதாவது ஒலி சார்ந்த அறுசீர் விருத்தம்!

    “கைவீ சம்மா கைவீசு!” தேமா   தேமா தேமாங்காய்

    “கடைக்குப் போகலாம் கைவீசு!”       புளிமா கூவிளம் தேமாங்காய்!

    இந்த வாய்பாடு அடியவர்களையும் ஆற்றல் மிக்க கவிஞர்களையும் வர்ந்திருக்கிறது. மணிவாசகப் பெருமான் பாடுகிறார்

    “அன்றே  என்றன் ஆவியும்
    உடலும் உடைமை எல்லாமும்
    குன்றே அனையாய்  என்னைஆட்
    கொண்ட போதே கொண்டிலையோ?
    இன்றோர் இடையூ றெனக்குண்டோ
    எண்தோள் முக்கண் எம்மானே
    நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
    நானோ இதற்கு நாயகமே?

    ‘கைவீசம்மா’வின் பாட்டின் சந்தம் எங்கேயிருக்கிறது பார்த்தீர்களா? திருவாசகத்தில் இருக்கிறது. இந்த ஒலியில் தமிழாளன் செய்திருக்கும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இப்படி அமைந்திருக்கிறது.

    ‘இன்ப வாழ்வு ஒளிர்ந்திடவும்
    எல்லா வளமும் துலங்கிடவும்
    துன்பம் ஓடித் தொலைந்திடவும்
    தூய்மை எங்கும் துலங்கிடவும்
    மன்னும் செயல்கள் மாண்புறவும்
    மாறா அறமே மலர்ந்திடவும்
    என்றும் இயற்கை பின்செல்வோம்!
    இன்ப ஆழி நீந்திடுவோம்!

    அறுசீர் விருத்தத்தைக் கம்பன் உள்ளிட்ட விருத்த வேந்தர்கள் எழுதிய மற்றொரு வாய்பாட்டில் தமிழாளனும எழுதியிருக்கிறார்.

    மண்ணுக்கு மழையே  காதல்
    மரததிற்குப் பசுமை காதல்
    பண்ணுக்கு இசையே காதல்
    பைந்தமிழ்க்கு அறமே  காதல்
    பெண்ணுக்குத் திண்மை காதல் ;
    பெற்றோர்க்குப் பிள்ளை காதல்!
    கண்ணுக்கு  ஒளிதான காதல்!
    கற்றோர்க்கே அறிவு காதல்!

    அறுசீர் விருத்தத்தில் அரிதான இன்னொரு  வித்தையையும்   செய்து காட்டியிருக்கிறார் தமிழாளன்.

    “கண்ணை  இமைகள் காக்கா விடினே காடசியைக் காண்போமா?
    மண்ணில் வேர்கள் நில்லா தொழியின் மரங்களும் நிற்றலுண்டோ?
    விண்ணில் பறந்தே காகா என்றே விளம்புதல் காகத்தின்
    தண்ணார் தமிழைக் காக்கத் தமிழரைத் தூண்டிடும் அழைப்பன்றோ?

    முதல் ஐந்து சீர்கள் ஈரசைச்சீர்களாக நிற்க இறுதிச சீர் மட்டும் காய்ச்சீராக நின்று அமையும் இந்த அறுசீர் விருத்தம் இப்படி அமைந்திருக்கிறது என்றால்

    “வான்மழையே  வையகத்தல்
    பொய்யாதே பொய்ப்பாயேல்
    புல்லுந் தோன்றா!
    கோன் தீயன் குடியழிக்கும்
    கொடுங்கோலன் எனநாட்டார்
    குறையும் சொல்வார்
    கான்வெட்டிக் கழனிகளைக்
    கடும்உழைப்பின் உழவரெல்லாம்
    கழனி செல்லார்!
    தான்துறந்தே வாழ்துறவி
    தக்கபடி நின்றிடவே
    மழையே  வாழி!”

    என்ற இந்த அறுசீர் விருத்தம் இப்படி அமைந்திருக்கிறது. கம்பனின் யுத்தகாண்டம் அழகு பெற்றது இந்த யாப்பில்தான். இருபத்தேழு வகையான சீர்களை மாற்றியமைத்தன் மூலம் கலிவிருத்தத்தைக்  காப்பிய விருத்தமாக்கினான் கம்பன். யுத்தகாண்டத்தின் அவலக் குரலைக் கம்பன் இந்த யாப்பில்தான் பதிவு செய்திருக்கிறான். அது மட்டுமன்று. ‘விசும்பின் துளிவீழின் அல்லால் பசும்புல் தலைகாண்பதரிது ‘வானம் வறக்குமேல், தானம் தவமிரண்டும் தங்கா’  என்னும் குறட்பாக் கருத்துக்களையும் ‘மழைவளம் கரப்பின் வான்பேரச்சம்’ என்னும் சேரன் செங்குட்டுவனின் அச்சத்தையும் நினைவுபடுத்தி எழுதுகிறார்.

    எடுப்பார் கைப்பிள்ளையான எண்சீர் விருத்தம்

    ‘மரபுக்கவிஞர்’ என்று சொலலிக் கொண்டு தமிழ்க்கவிதை உலகத்தை எப்போதும் நடுங்கச் செய்து வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் கையாள்கிற யாப்பு இந்த எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். வெற்றசைகளால் வீணாகிப்போன விருத்தங்கள் குற்றிய உமியினும கோடியாம். எல்லாரும் வள்ளலார் ஆகிவிட முடியாது. பாவேந்தர் ஆகிவிட முடியாது சிந்தனையடர்த்தியே இல்லாமல் பாட்டெழுதியதன் விளைவு இது. அந்த எண்சீர்விருத்தம் பெரும்பாலும் இப்படி அமையும்

    ‘தேமாங்காய் தேமாங்காய் தேமா தேமா’

    என்னும் அரையடி இலக்கணம் பெற்று அமைந்த அந்தப் பாட்டு காலப்போக்கில் பல மாற்றங்களைக் கண்டது. இறுதியாகக் காய் காய் மா மா என்று தங்கள் வசதிக்காகப் பலர் சுருக்கிக் கொண்டனர்.

    “தமிழ்த்தாயே ‘தமிழாளன்’ என்ற என்னைத்
    தமிழ்நிலத்தே மகனாகப் பெற்றுவிட்டாள்!
    தமிழ்க்கதிராம் ஒளிவெள்ளம் துறைகள் தோறும்
    தடையின்றித் தரணியெங்கும் பாயச் செய்து
    தமிழ்மறையின் மணியோசை ஒலிமு ழக்கம்
    தக்காங்கு பரவும் வகை செய்யேனாயின்
    தமிழ்த்தாயும்  என்றனுக்கு அன்னையாகாள்

    “தமிழ்த்தாய்க்கு நானும்சேய் ஆவ துண்டோ?

    என்றெழுதிக் காட்டிய வல்லாளர் தமிழாளன் ‘ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்று’ என்ற ‘அருணகிரியின் விருத்தச்சிந்திலும்’ தன் வித்தகைத்தைக் காட்டியிருக்கிறார்.

    ‘காட்டுவளம் மலரவேண்டின் வான்மலர வேண்டும்!
    கட்டாகும் உடல்மலரக் கழனிமலர் வேண்டும்!
    நாட்டுவளம் மலரநல்ல ஆட்சிமலர் வேண்டும்!
    நட்புமலர் மலரநல்ல பண்புமலர் வேண்டும்!
    ஏட்டதனில் இலக்கியமும் மலர்ந்திடவே வேண்டின்
    ஈடில்லாப் புலமைநலம் மலர்ந்திடவே வேண்டும்!
    வாட்டுகின்ற துன்பமலர் அண்டாதே வேண்டின்!
    வையகத்தில் உழைப்புமலர் வளர்ந்தோங்க வேண்டும் !

    ‘காய் காய் காய் மா’ என்னும் இந்த யாப்பு, ‘கலையுரைத்த கற்பனையே நலையெனக் கொணடாடும்’ ‘கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த’ என்னும் வள்ளலார் பாடல்களால் பெருமை பெற்ற இப்பாட்டு பின்னாளில் ‘அன்றந்த இலங்கையினை ஆண்டமற வேந்தன்’ என்னும் பாவேநதரால் பெருமை பெற்றது. இன்றைக்குத் தமிழாளனால் பெருமை பெறுகிறது.

    கைக்குழந்தையான கட்டளைக் கலித்துறை

    ‘துறை’  என்றால் ஐந்து, அடிக்கு ஐந்து சீர்கள். எனவே நான்கு சீர் இடைவெளிகளில் வெண்டளைப் பந்தம் வேண்டும். நேரசையில் தொடங்கினால் ஒற்றெழுத்து நீங்க பதினாறு எழுத்துக்கள். நிரையசையில் தொடங்கினால் ஒற்றெழுத்துக்கள் நீங்க பதினேழு எழுத்துக்கள். அடியின் ஐந்தாவது சீர் மூவசைச்சீர்களுள் கருவிளங்காய் கூவிளங்காய் என்றே அமைதல் வேண்டும் ஓரடிக்கு இலக்கணமாகிய இந்தக் ‘கட்டளை’யை ஏற்று நான்கடியாய் எழுதினால் அது கட்டளைக் கலித்துறை. இது நான்கு வகைப்பாக்களிலோ அவற்றின் எந்தத் துறையிலுமோ சேராது இணையாது. தனித்துவமிக்கது. தரமிக்கது ஆனால் படைப்பாளர்களுக்குத் தலைச்சுற்றலை ஏற்படுததுவது. ஆனால் இதனையும் மிக மிக இலாவகமாகக் கையாண்டவர்க்ள இருக்கிறார்கள்.

    “நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
    சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
    வாயகி, மாலினி, வராகி, சூலினி, மாதங்கி, என்று
    ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே’

    என்னும் அபிராமி அந்தாதியுள் பன்னிரண்டு பெயர்ச்சொற்களை நிரலாக அடுக்கி  வந்த பாட்டில் கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் கைகட்டி ஊழியம் செய்வதைக் காணலாம். எளிமைக்குப் பெயர் போன கவிமணி மிகக் கடினமான இநத யாப்பில் எழுதிய

    நாடிப்  புலங்கள்  உழுவார்  கரமும்  நயவுரைகள்
    தேடிக்  கொழிக்குங் கவிவாணர்  நாவும் செழுங்கருணை
    ஓடிப்  பெருகும்  அறிவாளர்  நெஞ்சும்  உவந்துநடம்
    ஆடிக் களிக்கும்  மயிலே உன்பாதம்  அடைக்கலமே

    என்னும் பாடல் அவருடைய யாப்பியல் புலமைக்கும் எளிமைக்கும் கவிதைக் கட்டுமானத்திற்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

    “இஞ்சியும்  மஞ்சளும் நெல்லும் கரும்பொடு வாழையுமே
    கொஞ்சிடும் நஞ்சை  விளைச்சலைக் கண்டு குதூகளிக்கும்
    வஞசனை  இல்லாத  வண்டமிழ்ச சான்றோர் வடிவழகைப்
    பஞ்சடி வைத்துமே பார்க்கும் சுறவத்தின் பொங்கலுமே!”

    ‘இருள்களைந் தெங்கும் இயல்பாய் ஒளியும் இமிழ்ந்திடவம்
    அருள் மனம் கெர்ணடோர் அறவழி மக்கள் அடிதொழவும்
    இரும்புடை நெஞ்சம் இருநீலம் எங்கும் இரிந்திடவும்
    வருந்தமி ழாண்டின் வளமார் சுறவத்தை வாழ்த்துவமே!’

    என்னும் கட்டளைக் கலித்துறைகளை அவற்றின் குகையிலேயே சந்தித்திருக்கிறார் தமிழாளன். நேரசையில் தொடங்கியும் எழுதுகிறார். நிரையசையில் தொடங்கியும் எழுதுகிறார். இஞ்சியும்  மஞ்சளும் நெல்லும் கரும்பொடு வாழையுமே எனப் பெயர்ச்சொற்களை அடுக்கியும் எழுதுகிறார். இமிழ்ந்திடவும் அடிதொழவும், இரிந்திடவும் என்னும் வினையெச்சங்களை அடுக்கியும் கவிதைத் தொழில் செய்கிறார்.

    வெண்பா ஓரு விளையாட்டுத்திடல்

    தமிழ் யாப்பியல் மரபில் வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் புலவர் பெருமக்களுக்கு இன்றியமையாத ஒன்றாகும். சீர், தளை முதலியவற்றின் கட்டுப்பாடுகள் மிகக் கடுமையானதாக இருக்கும். ஆனால் இவற்றைத் தம் ஆளுகைக்கு உட்படுத்திய புலவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வெண்பாமாலை பாடிய ஐயனாரிதனாரும் நளவெண்பா பாடிய புகழேந்தியும் மணிமேகலை வெண்பா பாடிய பாவேந்தரும் கோவை மற்றும் அந்தாதி இலக்கியம் பாடிய சான்றோர்களும் இவற்றுக்கு எடுத்துக்காட்டாகிறார்கள்.

    ஐவகை வெண்பாக்களுள் நேரிசை வெண்பாவும் ஒன்று. பதினைந்து சீர்களைக் கொண்ட இந்த வெண்பாவில் பதினான்கு தளைகள் இடைநிற்கும் பாங்குடையது. இப்பதினான்கு சீர்களும் இயற்சீர்வெண்டளையாகவும் வெண்சீர் வெண்டளையாகவும் பெரும்பாலும் கலந்து நிற்குமேயன்றி இயற்சீர் வெண்டளையாகவோ வெண்சீர் வெண்டளையாகவோ அமையாது. அவற்றுள்ளும் வெண்சீர் வெண்டளையாகவே பதினான்கு தளைகளையும் அமைத்துப் பாடுவது அரிய திறன்.

    “யாதானும் நாடாமல் ஊராமால் என்னெருவன்
    சாந்துணையும் கல்லாத வாறு”

    என்னும் குறட்பாவில் மட்டுந்தான் ஆறு சீர்களில் இத்தளை  மட்டுமே வந்துள்ளது. எஞ்சிய 1329 குறட்பாக்களிலும் இது அமையவில்லை என்பதிலிருந்தே இதன் அருமைப்பாட்டை உணர முடியும். ஏழு சீர்களுக்கே இந்த நிலை என்றால் பதினான்கு சீர்களுக்குச் சொல்ல வேண்டுவதில்லை. பாரதிதாசனுக்குப் பின்வந்த கவிஞர்களில் நிறைவான யாப்பறி பாவலரான வைரமுத்து,

    “தத்திவரும் முத்தமொழி தத்தையென முத்தமிடும்
    சித்திரம்போல் பூஞ்சிவப்பு சிந்திநின்ற – அத்தைமகள்
    பூப்பெய்தி விட்டாளாம் பூமகளின காலடியில்
    பூப்பெய்தேன் என்ன வியப்பு?

    “தேனளந்து வைத்திருக்கும் செவ்விதழால் என்னெஞ்ச
    வானளந்த வண்ணநிலா வந்துநின்றாள் – நானழைத்து
    கிள்ளாமல் கிள்ளிமிகக் கேலிசெய்வேன் என்றிளைத்துச்
    சொல்லாமல் போகும் சுடர்”

    என்னும் இரண்டு வெண்பாக்களில் இந்த வித்தையில் இயன்றவரை வென்று காட்டியிருக்கிறார். காரணம் பதினான்கு தளைகளில்  அவரால் பதிமூன்று சீர்களில்தாம் வெண்சீர் வெண்டளையை விரவ முடிந்திருக்கிறது. தமிழாளன் எழுதியிருக்கும்

    “கட்டுகிற கந்தைக்கும் கால்வயிற்றுக் கஞ்சிக்கும்
    ஒட்டியநல் மெய்யோடும் ஓடியுமே — நட்டமரம்
    பல்லோரும் உண்டிடவே பாரெங்கும் காய்த்துநிற்கும்
    இல்லாத ஏழைக்கே தூண் ?

    “தன்னலமே ஊற்றெடுக்கத் தானேறிக் கொற்றத்தில் /
    மன்னுசெயல் அத்தனையும் தான்மறந்து– மன்னுவசை
    பூக்கவைத்து மாநிலத்தில் பூரியரை வாழவைப்போன்
    தீக்கனலாம் என்றென்றும் தேர்!“

    என்னும் வெண்பாக்களில் பதினான்கு தளைகளை வெகு இலாவகமாகக் கையாண்டுள்ளதைக் காணலாம். இதனால் கவிதைச் சுவை கூடிவிடும் என்பதல்ல கருத்து. அரியவகை யாப்பினையும் முழுமையாகக் கையாளும் ஆளுமையை எடுத்துக்காடடுவதே இங்கு நோக்கம்.

    நிறைவுரை

    நல்ல கவிஞனுக்குக் கவிதையின் அனைத்துப் பரிமாணங்களிலும் ஆளுகை செய்யும் திறன் வேண்டும். யாப்புப் பற்றிய தெளிந்த அறிவும், பொருளுக்கும் உணாச்சிக்கும் ஏற்ற பொருத்தமான வடிவத்தைத் தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கை உணர்வும் பெரிதும் தேவைப்படுகிறது. நிதானம், பொறுமை, தெளிவான சிந்தனை, தொடர் கல்வி, நிறைந்த பயிற்சி முதலியவை ஒருங்கமைந்தால் அன்றி இக்கவிதை வித்தையில் வெற்றி பெறுதல் கடினம். அந்த வெற்றியை வெகு எளிதாகப் பெற்றிருக்கிறார் தமிழாளன். அவர் எளிய உள்ளம் பெற்றவர். அதனால் கவிதைப் பேறு கைவரப்பெற்றிருக்கிறார்.  ‘உழுமகன் கைகள் சிவப்பதைப் போன்ற ஒளிரும் கதிரவனே!’ என்பது போன்ற உவமங்கள் தனி ஆய்வுக்குரியன. கவிதைப் பந்தியில் அவர் பரிமாறியனவற்றில் பதம் பார்த்துச் சுவைத்தவற்றைச் சொல்லியனவே இவை. ‘நல்லாரைக் காண்பதும் அவர் சொல் கேட்பதும் அவரோடு இணங்கியிருப்பதும் நல்லவை எனபர் சான்றோர். நெஞ்சில் கரவில்லா ஒரு கவிதை வல்லாளரை அறிமுகம் செய்வதும் நன’மையே! வெல்க தமிழாளன் விரல்கள்!

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 31

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 31

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமங்களான ஓவியங்கள்

    முன்னுரை

    ‘சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கி’ என்பார் பவணந்தி. ‘பாவையின்’ என்பதிலுள்ள இன் என்னும் வேற்றுமை உருபு ஒப்புப் பொருளில் வந்து ஓவியத்தின் அமைதியை நல்ல மாணவனுக்கு உவமமாக்கியது. ஓவம், ஓவியம் சித்திரம், பட்டம், படாம், வட்டிகைச் செய்தி என்று ஓவியத்திற்குப் பல பெயர்கள் உண்டு. ஓவியத்தை எழுதுகிறவர்கள் ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரகாரர், வித்தக வினைஞன், வித்தகர்,  வித்தகர் கிளவி, வல்லோன் என்னும் பல பெயர்களால் அழைக்கப்பட்டனர். சித்தன்ன வாசல் ஓவியங்கள் நமக்குத் தெரியும். தஞ்சை பெருவுடையார் கோயில் ஓவியங்கள் சிறப்பானவை. அஜந்தா ஓவியங்களையும் அறிவோம். இத்தகைய ஓவியங்கள் தமிழ்க்கவிதைகளில் உவமங்களாக இடம்பெற்றிருக்கின்றன. ஓவியத்தைப் பற்றிய ஆய்வு பண்பாடு மற்றும் கலையோடு தொடர்புடையதாகக் கருதப்படுவதால் இலக்கியம் பற்றிய ஆய்வில் இது அவ்வளவாக இடம்பெறாது போயிருக்கக்கூடும். இயற்கையோடு இயைந்து கலைவாழ்வு வாழ்ந்த அக்காலச் சான்றோர் எழுதிய இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் சில உவம ஓவியங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. அறிமுகம் செய்கிறது

    உவமங்களான ஓவியப் பதிவுகள்

    ‘ஓவச்செய்தி’ என்பது சங்க இலக்கியச் சிறப்பான தொடர்களில் ஒன்று. ‘ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும் கற்றுத் துறைபோகிய பொற்கொடி’ மடந்தையான மாதவியைச் சிலப்பதிகாரம் காட்டுகிறது. ‘புனையா ஓவியம்போல’ நின்று மணிமேகலை இரந்தாள்’ என்று மணிமேகலை பேசுகிறது. ‘உடுக்கும் புவனம் கடந்து நின்ற ஒருவன் திருவுளத்தில் அழகொழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியமே!’ என்று பரவசப்படுகிறார் குமரகுருபரர். ’உன்னுடைய பொருள்தான் பெரிதும் ஓவியமோ?” என்பது உலகியலில் பெருவழக்கு. இவ்வழக்கில் ஓவியம் என்பது உயர்ந்தது (ஒசத்தி) என்னும் பொருளது என்பது அறிக.

    ஓவியமான பொய்கை

    ‘புண்ணிய நறுமலர் ஆடைபோர்த்துக் கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப் புனல்யாறு அன்று இது பூம்புனல் ஆறென” சென்றதாக வைகையைப் பற்றி இளங்கோவடிகள் எழுதுகிறார். அவர் ஆற்றுக்குச் சொன்னதைப் ‘பொய்கையெனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்’ என்று பொய்கைக்குப் புனைந்துரைப்பார் புலவர் புலமைப்பித்தன். இவர்களுக்கு எல்லாம் முன்பாக,

    “நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த
    துறுநீர்க் கடம்பின் துணை ஆர்கோதை,
    ஓவத்து அன்ன உண்துறை மருங்கில்” (சிறுபாண்.68-70)

    என்று சிறுபாணாற்றுப்படையில் ஒரு ஓவியக்காட்சி இயற்கையையொத்த நீர்நிலை போல் இருந்தது என்று உவமிக்கப்பட்டுள்ளது. ‘செறிவுடைய கடம்ப மரங்கள் சூழ நிற்கும் நறுநீர்ப் பொய்கை. கடம்பினுடைய மாலை போன்ற மலர்கள் இந்திரகோபம் போன்ற தாதினை உதிர்த்ததால் ஓவியத்தை ஒத்து விளங்குகிறது’ என்று சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.

    ஓவியத்தைப் போன்ற போர்க்களம்

    பொய்கை ஒவியத்தைப்போலப் பொலிந்தது எனப் பாடியவர்களே  போர்க்களமும் ஓவியம் போல் இருந்தது என்றும் பாடியிருக்கிறார்கள்.

    “நீலத்து அன்ன பைம்பயிர் மிசை தொறும்
    வெள்ளி அன்ன ஒள்வீ உதிர்ந்து,
    சுரி முகிழ் முசுண்டையொடு முல்லை, தாஅய்,
    மணிமருள் நெய்தல், உறழ, காமர்
    துணிநீர் மெல் அவல், தொய்யிலொடு மலர
    வல்லான் தைஇய வெறிக்களம் கடுப்ப” (மதுரை.279-284)

    என்ற அடிகள் பல வண்ணக் கலவைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட துணியில் எழுதிய ஓவியம் போல வெறிக்களம் தோற்றமளித்ததாகக் கூறுகிறது. புலவர் தான் கண்ட துணி ஓவியத்தைப் போல வெறிக்களம் இருந்தது என்று தான் கண்ட காட்சிகளை ஒப்புமைப்படுத்திக் கூறியுள்ளதன் மூலம் அன்றைய கால துணி ஓவியத்தின் இயல்பினைப் பற்றி அறியமுடிகிறது.

    வீடுகளுக்கு உவமமான ஓவியம்

    ‘அரண்மனை மாதிரி வீடு’ ‘பங்களா மாதிரி வீடு’, ‘கோட்டை மாதிரி வீடு’ ‘கோயில் மாதிரி வீடு’ என்றெல்லாம் பிறர் சொல்லக் கேட்டதுண்டு. ஆனால் ‘ஓவியம் போல் வீடு’ எனக் கேட்டதுண்டா? அந்தப் பேறு நமக்கில்லை. நம் முன்னோர்களுக்கு இருந்திருக்கிறது. அவர்கள் வீட்டைச் சொல்கிறபோது அதன் அகப்புற அமைதியை ஓவியத்தோடு ஒப்புமைப்படுத்தியிருக்கிறார்கள்.

    “ஓவத்தன்ன இடனுடை வரைப்பில்
    பாவையன்ன நப்புறம் காக்கும்” (நற்.182)

    “ஓவுக் கண்டன்ன இல்வரை” (நற். 268)

    “ஓவத்தன்ன வினைபுனை நல்லில்
    பாவை அன்ன நல்லோள் கணவன்” (பதி. 61)

    “ஓவத்தன்ன வினைபுனை நல்லில்
    பாவை அன்ன பலரல் மாண்கவின்” (அகம். 98)

    “ஓவத்தன்ன உருகெழு நெடுநகர்” (பதி. 88 – 28)

    என்ற பகுதிகளில் வீடுகளுக்கு ஓவியம் உவமமாக்கப்பட்டுள்ளது, ஓவியத்தோடு சிற்பமும் உவமமாக்கப்பட்டுள்ளது, நகரத்திற்கும் உவமமாக்கப்பட்டுள்ளது. ஓவியத்தைப் போன்ற இல்லத்தில் பாவை சிற்பம் போன்ற மனைவி என்னும் சித்திரிப்பு சிந்திக்கத்தக்கதாய் உள்ளது.

    இயற்கையும் ஓவியமும்

    பழந்தமிழ் மக்கள் நாளும் துய்த்து மகிழ்ந்த கலைகளில் முன்னிற்பது ஓவியம் என்பது இலக்கியங்களால் அறியப்படும் சேதியாகும். அழகிய காட்சிகளை ஓவியமாகவும் சிற்பமாகவும் கண்டு மகிழ்ந்த மக்களை அக்காலம் பெற்றிருந்தது.  இயற்கையின் அழகை ஓவியத்தின் அழகோடு ஒப்பிடும் போக்கு இருந்திருக்கிறது. அதாவது இயற்கையைச் செயற்கையோடு ஒப்பிடும் அளவுக்குச் செயற்கை சிறப்புற்றிருந்திருக்கிறது.

    “…………………………………………………………வல்லோன்
    எழுதியன்ன காண்தகு வனப்பின்
    ஐயள் மாயோள் அணங்கிய
    மையல் நெஞ்சம் என்மொழிக் கொளினே” (நற். 146)

    நெஞ்சம் மயங்கியதாம். எதனால்? தலைவியின் அழகால். அந்த அழகுக் கூறுகள் என்னென்ன? அவளுடைய தலைமைப் பண்பு மற்றும் மாமை நிறம். இவற்றுக்கு மயங்கியதாம் இவன் நெஞ்சு. தான் மயங்கியதைத் தன் நெஞ்சு மயங்கியதாக இவன் மயங்குகிறான். இவளுடைய இந்தப் பேரழகு எதனைப் போன்று இருந்தது என்பதில்  தான் ஓவியம் உவமமாகிறது. ‘வல்லோன் எழுதியன்ன காண்தகு வனப்பு’ என்னுந் தொடரில் தலைமகளின் அழகுக்கு ஓவியம் உவமமாக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இனிப்,

    “புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின்
    வனைபுனை எழில் முலை வாங்கமை திரள் தோள்
    மலர்போல் மழைக்கண் மங்கையர் கணவன்” (மலைபடு. 56-58)

    என்னும் மலைபடுகடாஅத்துள் நன்னனின் சிறப்புக்களாகக் கூறும் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் இயற்கையாக வளர்ந்தோங்கும் மகளிர் மார்பிற்கு வல்லோன் புனைந்த செயற்கை ஓவியத்தை உவமமாக்குவதை அறியலாம்.

    பரத்தையர் மறக்காத பரங்குன்றக்  காட்சி

    பரங்குன்றத்தில் பரத்தை தன்னை மறந்து இறைவனை வாழ்த்தி நடனமாடுகிறாள். அவள் அழகு கண்டு தலைவி தன்னழகு தாழ்ந்துவிடுமோ என அஞ்சுகிறாள். மற்றொரு தலைவி ஆடியின் முன்னின்று இருக்கின்ற தன்னழகை இன்னும் திருத்திப் பெருக்க முனைகிறாள். மற்றொருத்தியோ தன் கணவன் அவள்மாட்டுச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத் தன் மார்பின் மீது மணமிக்க சந்தனத்தைத் தடவிக் கொள்கிறாள். இந்தக் காட்சி எப்படி இருந்தது என்பதுதான்,

    “பல்லூழ்  இவையிவை நினைப்பின் வல்லோன்
    ஓவியத்து எழுது எழில் போலும்” (பரி. 21)

    என்னும் இவ்வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு அந்த ஆடரங்கில் நடந்த மகளிர் செயலை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருங்கால் அவையெல்லாம் கைவல்லான் தீட்டிய ஓவியக் காட்சிபோல அகக்கண்முன்னே தோன்றுகின்றனவாம். “நெனச்சுப்பாத்தா நெஞ்சில் படம் மாதிரி ஓடுது” என்பது வழக்கியல். “உள்ளுங்காலை உயர்ந்ததன் மேற்றே யாதலின்” உவமமாகிய ஓவியம் உயர்ந்து நிற்றல் காண்க.

    கம்பனைக் கவர்ந்த ஓவியம்

    இலக்கியத்தை ஓவியமாக்கியவன் கம்பன். அவன் உண்மையில் ஓவியத்தில் மனம் பறிகொடுத்தவன் என்பதற்கு அவனுடைய பாடல்களே அகச்சான்றுகளாக நிற்கின்றன. ஓவியப் புலமையும் ஓவிய ரசனையும் உடைய அக்காலப் புலவர்கள் ஓவியத்தின் உட்பொருளையும் நுண்ணியத்தையும் உணர்ந்த வல்லாளர்களாகவே இருந்திருக்கிறார்கள். இராமன் பிறந்த  மகிழ்ச்சியைச் சித்திரிக்கும் சூழல். அவனுடைய தோற்றம் பற்றிய பாட்டு இப்படி அமைந்திருக்கிறது.

    “காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே,
    ஓவிய எழிலுடை ஒருவனை அலது, ஓர்
    ஆவியும் உடலமும் இலது’ என, அருளின்
    மேவினன் – உலகுடை வேந்தர்தம் வேந்தன்.” (கம்ப. பால. 120)

    ஒளிவீசுகிற கமலத்தைப் போல் தோன்றிய ஓவிய அழகன் இராமனே தனக்கு உயிரும் உடலுமாகக் கொண்டான் தசரதன்.   இராமன் சிவதனுசை முரிக்கிறான். அதிசயித்த தேவர்கள் எல்லாம் அசைவற்ற ஓவியம் போல நின்றனர் என்கிறார் கம்பர்.

    “வயிரியர் மதுர கீதம்
    மங்கையர் அமுத கீதம்
    செயிரியர் மகர யாழின்
    தேம்பிழி தெய்வ கீதம்
    பயிர் கிளை வேயின் கீதம்
    என்றிவை பருகி விண்ணோர்
    உயிருடை உடம்பும் எல்லாம்
    ஓவியம் ஒப்ப நின்றார்” (கம்ப.705)

    பாலகாண்டத்தில் இவ்வாறு இராமனுக்கு ஓவியத்தை உவமமாக்கிய கம்பன் சுந்தர காண்டத்திலும் மறக்காமல் அசோகவனத்துச் சீதை தன் கணவன் இராமனைப் பற்றிய சிந்தனையில் இருந்தாள். அவள் சிந்தனையில் வந்ததாகக் கம்பன் எழுதுகிறான். ‘இளவரசுப் பட்டம் சூட்டிக் கொள்க’ என்று தந்தை தசரதன் ஆசி வழங்கியபோதும் ‘பரதன் நாடாளவும் பதினான்கு ஆண்டுகள் நீ காடாளவும் வேண்டும்’ எனக் கைகேயி அதிர்ச்சியளித்தபோதும் ‘சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையினை ஒத்திருந்த இராமனுடைய முகத்தினை’ எண்ணி மறுகினாளாம்.

    “மெய்த்திருப்பதம் மேவு என்ற போதிலும்
    இத்திரு துறந்து ஏகு என்ற போதிலும்
    சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
    ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்” (கம்ப. சுந்தர. 5088)

    கம்பராமாயண நிகழ்வுகளில் சொற்பொழிவாளர்கள் பெரும்பாலும் மறக்காமல் கூறும் உவமம் இது. சீதை அசோகவனத்தில் இருந்த காட்சி ‘ஓவியம் புகையுண்டதை’ ஒத்திருந்ததையும் இராமனால் வதம் செய்யப்பட்ட வாலி ‘ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தோய்’ என்று இராமனுடைய முகத்தை ஓவியத்துள் அடக்க முடியாது வியந்து நின்ற விந்தையையும் அவர்கள் சொல்வார்கள். இப்படியெல்லாம் அயோத்தியர் இறையை ஓவியமாகப் போற்றிய கம்பன் இதே உவமத்தை அவனால் அழியப் போகும் அதாவது அனுமனால் தீக்கிரையான இலங்கைக்கும் ஒப்பிடுகிறான்.

    ‘ஓவியம் அமைந்த நகர் தீ உண, உளைந்தாய்,
    “கோ-இயல் அழிந்தது” என; வேறு ஒரு குலத்தோன்
    தேவியை நயந்து, சிறை வைத்த செயல் நன்றோ?
    பாவியர் உறும் பழி இதின் பழியும் உண்டோ?” (கம்ப. யு.கா. 6119)

    என்னும் பாட்டில் இலங்கை மாநகரத்தை ஓவியத்தோடு ஒப்பிட்டு அத்தகைய  நகரம் தீக்கு இரையாவதற்கு இராவணன் காரணமானான். அதனால் ‘உயிர்கொடுத்தும் பழிகொண்ட பித்தனானான்’ என்று பாடுகிறார். கட்டுரையின் அளவு கருதிக் கம்பராமாயணம் உட்பட்ட தமிழ்க்கவிதைகளிலிருந்து ஒருசில எடுத்துக்காட்டுக்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. உவமம் என்பது இலக்கியப் பகுதி. ஓவியக்கலை என்பது வரலாறு மற்றும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று. ஓவியம் இலக்கியச் சிந்தனைகளுக்கும் வண்ணனைகளுக்கும் உவமமாகப் பயன்பட்டுள்ளது என்பதே இந்தக் கட்டுரையின் சாரமாகும்.

    நிறைவுரை

    சிற்பம் என்பது கழித்தலின் எச்சம். ஓவியம் என்பது கூட்டலின் தொகுப்பு.  முன்னது செதுக்கப்படுவது. பின்னது வரையப்படுவது. நிற்றல், இருத்தல், கிடத்தல், நடத்தல் ஆகிய மனித இயல்புகளையும் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்னும் மெய்ப்பாடுகளையும் வண்ணம் கொண்டும் தூரிகைகொண்டும் வட்டிகை கொண்டும் செயற்கையாக வரைந்தவர்களே யாரும் வரையாத இயற்கையோடு ஒப்பிட்டு இலக்கியம் செய்கிறார்கள் என்பதை எந்தக்  கவிதைக் கோட்பாட்டு ஆய்வாளரும் சிந்தித்துப் பார்க்க முடியாத ஒன்றாகும். கற்றளியில் இறைவன் நடனமிடும் இடத்தினைச் சித்திரசபை என்றுதான் சொன்னார்கள். சிற்பச் சாலை என்றாரில்லை. படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டு வருகிற மூவேந்தர்களால் கவனிக்கப்படாத இந்தக் கலையைப் பல்லவர்கள் கவனித்தார்கள். அதனால் அவர்கள் சித்திரகாரப் புலி எனவும் போற்றப்பட்டார்கள். இவ்வாறு நோக்கி, இன்னும் நோக்கி முழுமையாக ஆராயாது, உவமத்தில் வெறும் ஒப்புமை ஒன்றினையே நோக்கி ஆராய்வதால் தமிழ்க்கவிதைகளின் உவமம் பற்றிய நுண்ணிய மிக்க இலக்கியக் கோட்பாட்டைக் காண மறுத்துவர்களாவோம்!.

    (தொடரும்…)

    Share
  • நீயும் நானும்

    நீயும் நானும்

    சரவிபி ரோசிசந்திரா

    நீயும் நானும் மழைநீரா!
    நீந்தும் விழியில் உவர்நீரா!
    உணவில் கலந்த உமிழ்நீரா!
    உணர்வில் உறைந்த செந்நீரா!

    யாரிடம் சொல்ல நம் கதையை
    யாருக்கும் ‌யாரும் இங்குமில்லை
    எங்கே செல்ல, தெரியவில்லை!
    எனினும் வாழவா வழியில்லை?

    கடந்தது எல்லாம் போகட்டும்
    கடப்பதில் மனம் மகிழட்டும்
    வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்
    வாழ்ந்திட நினைவுகள் உயிரூட்டும்

    உதவ நமக்கு யாருமில்லை
    உயர்ந்திட உதவி தேவையில்லை
    உழைப்பைப் போன்ற நண்பனில்லை
    உன்னை அறிந்தால் தோல்வியில்லை

    சிரிப்பைச் சிக்கனம் செய்யாதே!
    சிந்திக்க நீயும் மறக்காதே!
    உலகம் பெரியது மறவாதே!
    உன்னைக் குறைவாய் நினைக்காதே!

    நடந்தால் பாதை உருவாகும்
    நலமிருந்தால் வாழ்க்கை வரமாகும்
    வருந்திப் பயனில்லையெனில் வருந்தாதே!
    வருங்காலத்தை நினைத்துக் கலங்காதே!

    Share
  • ஈரம் (சிறுகதை)

    ஈரம் (சிறுகதை)

    சு. செல்வகுமாரன்

    அந்திவானம் இருள் கவிழ்ந்து மழை லேசாகத் தூவானம் போட்டுக் கொண்டிருந்தது.

    பள்ளி வகுப்பு முடிந்து மணியடித்ததும் அறையை விட்டு வெளியில் வந்த சுமிதா, நேராக ஒன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் தனது தம்பி குணாவை அழைத்துச் செல்வதற்காக அவனது வகுப்பிற்கு முன் வந்தாள்.

    மழை சாரலாகத் தூவிக் கொண்டிருந்ததால் தனது துப்பட்டாவைக் குணாவின் தலையில் எடுத்துப் போட்டு சுமிதா, தம்பியின் தலை நனையாதவாறு தம்மோடு இறுக அணைத்துக்கொண்டு விறுவிறு என வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

    காட்டில் நின்றுகொண்டிருந்த மாரியம்மாளுக்கு அந்திவானம் மப்பும் மந்தாரமுமாகக் காட்சிதரத் தொடங்கியதும் அவள் மனம் நிலை கொள்ளவில்லை. ஒடித்த விறகுகளை அவசர அவசரமாகக் கட்டி தலையில் தூக்கி வைத்தவாறு வேகமாக வீட்டுக்குப் புறப்பட்டாள்.

    வரும் வழியில் சாய்ப்பு தெருவினை மாரியம்மாள் கடக்கின்ற போது, பள்ளிவாசல் வெளிப்புறச் சுவரில் மாவரிக்கும் வட்ட வடிவ அரிப்பினைப் போல தொங்கிக்கொண்டிருந்த மணியில் சிறியமுள் நான்கினையும் பெரியமுள் பன்னிரண்டையும் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.

    வீட்டை நெருங்கையில் தூவானமும் போடத் தொடங்கியிருந்தது.

    சுமந்து வந்த விறகினை முற்றத்தில் போட்ட மாரியம்மாள், குழந்தைகள் மழையில் நனைந்துவிடக் கூடாது என்று வேகமாக வீட்டிற்குள் நுழைந்தவள், காலையில் தலை துவட்டி விட்டு, கொடிக்கயிற்றில் காயப்போட்டிருந்த துண்டுகளை எடுத்துத் தோளில் போட்டவாறு வீட்டின் வடக்குப் புறமுள்ள ஓடையைக் கடந்து எட்டி நடந்தாள்.

    ஆடிக்கச்சம் அப்போது தான் தொடங்கியிருந்ததால் ஓடையில் இன்னும் வெள்ளம் வரவில்லை.

    எதிரில் தம் குழந்தைகள் இருவரும் வருவதைக் கண்ட மாரியம்மாள் தம் கையில் கொண்டு சென்ற இரண்டு துண்டுகளையும் இருவரின் தலையிலும் போட்டுவிட்டாள்.

    சின்னவன் குணாவின் கையில் இருந்த புத்தகப்பையை வாங்கித் தோளில் மாட்ட, தானும் பள்ளிக்கூடக் குழந்தையானாள். இப்போதைக்குக் குழந்தைகளோடு புன்னகைத்தபடி மழையில் நனைந்தபடி மெல்ல நடந்தாள், மழையின் குளிர்ச்சியும் மனத்தின் ஈரமும் மாறாதபடிக்கு.

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 30

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 30

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமப் பொருளில் உற்றது உணர்தல்

    முன்னுரை

    முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என நில அடிப்படையில் வகுத்து, அவற்றுக்குப் பூக்களைக் குறியீடாக்கி, அகத்திணை வாழ்க்கையைப் பாடுபொருளாக்கிய சங்கச் சான்றோர், புறத்திணையைப் பாடுகிறபோதும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை எனப் பூக்களையே குறியீடாகக் கொண்டிருக்கிறார்கள். ‘அங்கிங்கெனாதபடி’ இயற்கையே ஊடிழையாகவே சென்ற வாழ்வியலின் எதிரொளியான இலக்கியங்களிலும் அவற்றின் கூறுகளில் ஒன்றாகிய உவமப் பயன்பாட்டிலும் இவ்வியற்கை எதிரொளிக்கிறது. ‘கால் கிளர்ந்தன்ன கதழ்பரிப் புரவி’ என்று குதிரையின் பாய்ச்சலுக்குக் காற்றினை உவமமாக்கினார்கள். ‘அரக்கத்தன்ன நுண்மணல் கோடு’ என மணல் மேட்டிற்குச் செவ்வரக்குப் பூவின் நிறத்தை உவமமாக்கினார்கள். இதன் தொடர்ச்சியாக பல உவமங்களை ஒரே தொடரியில் கோக்கவும் செய்தனர். இவை பற்றிய செய்திகளை இக்கட்டுரை ஆராய்கிறது.

    பருந்தின் சிறகும் கந்தலாடையும்

    பாடாண் திணையில் வைத்து மன்னரைப் பாடுகின்ற புலவர் பெருமக்கள் இலக்கியச் சிந்தனையோடுதான் பாடியிருக்கிறார்கள் என எண்ண வேண்டியதிருக்கிறது. புறநானூறு முதலிய தொகுப்பு நூல்களானாலும் பதிற்றுப்பத்தாகிய திட்டமிட்டுப் பாடப்பட்ட நூலானாலும் இந்தக் கருத்து பொருந்துவதாகவே தோன்றுகிறது. மன்னனை நேரில் பாடுகிறார் புலவர். அவன் தோற்றத்தைப் பாடித்தான் அவனைப் பற்றிச் செவிமடுத்த பெருமைகளைப் பாட வேண்டும். மன்னனின் திருவோலக்கம் புலவரைத் தடுமாறச் செய்ததால் கேட்டதை முதலில் பாடிக் கண்டதைத்  தொடர்ந்து பாடுகிறார்.

    “தார் அணி எருத்தின் வாரல் வள்ளுகிர்
    அரிமான் வழங்கும் சாரற், பிறமான்
    தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்தாங்கு”
    முரசு  முழங்கு நெடுநகர் அரசு துயில் ஈயாது
    மாதிரம் பனிக்கும் மறம் வீங்கும் பல்புகழ்
    கேட்டற்கு இனிது” (பதி. 2)

    என்னும் வரிகளில் அரிமா வாழும்  காட்டில் அதன் முழக்கத்தைக் கேட்டு அங்கே வாழுகின்ற பிற இன விலங்குகளின் தொகுதி அச்சத்தால் நெஞ்சு அதிர்ந்து நடுங்குவதுபோலச் சேரலாதனைக் கண்டு பகைவர்கள் நடுங்கிய சேதி கேட்டற்கு இனிதாம்.

    அவனை நாடி வந்த தனக்கும் தன்னையொத்த பாணர்களுக்கும் வறியோர்க்கும் அவருடைய வறுமை தீருமாறு உணவளித்துப், புத்தாடை அணிவித்து, அவர்களோடும் அவர்தம் சுற்றத்தோடும்  மன்னனும் அமர்ந்து காணும் காட்சி கண்ணுக்கினியதாம்.

    “வந்தவண் இறுத்த இரும்பே ரொக்கல்
    தொல்பசி உழந்த பழங்கண் வீழ
    எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங்குறை
    மையூண் பெய்த வெண்ணெல் வெண்சோறு
    நனையமை கள்ளின் தேறலொடு மாந்தி
    நீர்ப்படு பருந்தின் ஈர்ஞ்சிற கன்ன
    நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை
    நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ
    வணர் இரும் கதுப்பின் வாங்கமை மென்தோள்
    வசையில் மகளிர் வயங்கிழை அணிய
    அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு
    நுகர்தற்கு இனிது”  (பதி.2)

    என்று எழுதுகிறார் புலவர். இந்தப் பகுதியில் வறுமையுழன்று வந்தவர் அணிந்திருந்த கந்தலாடைக்கு ஈரத்தால் நனைந்த பருந்தின் சிறகை உவமித்திருப்பதுதான் வியப்பினும் வியப்பு. பாட்டுக்களம் அரண்மனை. புலவருடைய உவமச் சிநதனை பருந்தைத் தேடிப் பறக்கிறது என்பதோடு வந்திருந்த தனது சுற்றத்தாரின் வறுமைநிலையையும் எண்ணுகிறது. மண்மாசு படிந்து கிழிந்து கந்தலாகிய உடைக்கு நனைந்த பருந்தின் சிறகு உவமமாவதைக் “கூதிர்ப்பருந்தின் இருஞ்சிறகன்ன பாறிய சிதாஅரேன்” என்னும் (புறம்.150) பரணர் பாட்டாலும் அறியலாம்.

    இந்தப் பாட்டையும் விளக்கப்பட்ட உவமங்களையும் நோக்குவார்க்கு மன்னனைப் பரவுதலையும் ஒரு படைப்பிலக்கியக் களமாகவும் அவனைப் பாராட்டுவதை ஓர் இலக்கிய உத்தியாகவும் கருதியிருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

    வனத்தில் சிங்கம்! வானத்தில் கதிரவன்!

    ‘அரிமா திரியும் காட்டில் பிற மாக்களுக்கு இடமில்லை’ என்று புலவர் ஒருவர் பாட மற்றொரு புலவர் அதே உணர்வுக்கு வேறொரு உவமத்தை உள்ளங்கொள்ளுமாறு புனைந்துத் தன்னைப் புரந்த மன்னனைப் பாடுகிறார்.

    “மாயிரு விசும்பில் பன்மீன் ஒளிகெட
    ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றார்
    உறுமுரண் சிதைத்த நோன்தாள் வாழ்த்திக்
    காண்கு வந்திசின் கழல்தொடி அண்ணல்!” (பதி. 64)

    “கரிய பெரிய வானிடத்தே ஞாயிறு எழுந்துத் தோன்றிப் பலவாகிய விண்மீன்களின் ஒளியைக் கெடுத்தாற்போன்று சேரர் குடியில் தோன்றிப் பகைவரது மிக்க மாறுபாட்டைக் கெடுத்த கழலுமாறு அணிந்த தொடியினையுடைய அண்ணலே!” என விளிக்கின்றார் புலவர். ஞாயிற்றின் தோற்றமும் அதற்குரிய இடமும் கூறியதற்கேற்ப வாழியாதன் தோற்றமும் அதற்கிடனாகிய சேரர்குடியும் வருவிக்கப்பட்டன. ‘பன்மீன்’ என்றதனால் மாற்றாரது பன்மை பெறப்பட்டது. பலரும் ஒருங்கு திரண்டு இகல் செய்தமையின் “உறுமுரண்” என்கிறார் புலவர். பாட்டில் ‘ஞாயிறு தோன்றியாங்கு’ என்று இருக்கிறது. ஆனால் பொருள் ‘ஞாயிறு தோன்றி விண்மீன்களின் ஒளியை அழித்தது போல’ என்று இருக்க வேண்டும். ‘நேரடியாகக் கதிரவனைப் போல விண்மீன்களாகிய பகைவனை அழித்தவனே!’ என்று கூறாமல் ‘பகைவனை அழிக்கத் தோன்றிய கதிரவன் போல’ என வினையை முன்னிறுத்தாது தோற்றத்தை முன்னிறுத்தியது மன்னனுடைய திருவோலக்கத்தில்  அவன் பொலிவு நோக்கிய மயக்கம் என்க.

    உவம வினைகள் பொருளுக்கும் பொருந்தும்

    பொருளுக்கான வினைகளை உவமத்திற்கு ஆக்கியும் உவமத்திற்கான வினைகளைப் பொருளுக்காக்கியும் குறிப்பாகச் சொல்லுவதும் தமிழ் உவமக்கோட்பாடுகளில் ஒன்றாகும். அவ்விரண்டைத் தழுவி நிற்கும் அடைச்சொற்களுக்கும் இது பொருந்தும். ‘இனிய உளவாக இன்னாத கூறல்’ என்னும் குறட்பாவில் பொருளுக்கு அடைபுணர்த்த திருவள்ளுவர் ‘கனியிருப்பக் காய்கவர்ந்தற்று’ என்னும் உவமத்திற்கு அடை புணர்க்காமை அறிக. ‘தலையின் இழிந்த மயிர் அனையர்’ என உவமத்தின் வினையையும் விளைவையும் கூறிய வள்ளுவர், ‘நிலையின் இழிந்த மாந்தரின்’ வினையையும் விளைவையும் குறிப்பாகப் பெற வைத்தது காண்க.

    “மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
    வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
    மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
    போதருமாப் போலே நீ பூவைப்பூவண்ணா!”

    ‘எம் காரியம் ஆராய்ந்து அருள்க’ என்னும் பாசுரத்துள் (பெருமாளுக்கு) உவமமாகிய சிங்கத்தின் செயல்களைக், கிடந்து, உறங்கும், அறிவுற்று, விழித்து, பொங்க, பேர்ந்து, உதறி, நிமிர்ந்து, முழங்கி, புறப்பட்டு, போதரும்’ என்று அடுக்கிப் பொருளாகிய பெருமாளுக்கான வினைகளைக் குறிப்பாகப் பெற வைத்தமை காண்க. இவ்வுவம வினைகள் பெருமாளின் தோற்றத்திற்கேயன்றிப் பண்பாகிய அருள்நோக்கிற்குப் பொருந்தாது என்பதைப் ‘பூவைப்பூ வண்ணா!’ என்னும் மென்மலர் விளியால் உணரவைத்த நுட்பம் உணர்க.

    இந்தப் பாசுரத்தில் அவன் எழுந்திருக்கும் அழகைத், தன் பெடையொடு குகையிலே படுத்திருக்கும் சிங்கம் எழுந்து வருவதை உவமமாகச் சொல்லி ரசிக்கிறார்கள். வீரம் வெளிப்பட எழுவதை மழைக்காலம் முடிந்த நிமித்தங்கள் கண்டு, அறிவுற்று – அதுவரை அசையாமல் இருந்தது – திடீரென்று உயிர் வந்ததுபோல் அசைந்து, தீவிழித்து, – உறங்கிய பின் பார்க்கிற முதல் பார்வையாகையால் சிறிது சிவந்து, விழித்து, – வேரிமயிர் பொங்க, – மணம் கமழ, – தனது வாசனையுள்ள பிடரி மயிர்களை உதறி, நிமிர்ந்து – உடம்பில் இன்னமும் ஒட்டியிருக்கும் சோம்பலை உதறுகிறதாம். முன்னங்கால்களை நீட்டி உடம்பை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுத்துப், பின் பின்னங்கால்களை நீட்டி மறுபடியும் உடம்பை இழுத்துச் சோம்பலை உதறுகிறதாம். பிறகு முழங்கிப் புறப்பட்டு வேட்டையாடக் கிளம்பும் சிங்கத்தைப்போலே சபா மண்டபத்திற்கு வரச்சொல்லுகிறார்கள். இதுவரைப் பள்ளியெழுச்சி பாடியவர்கள் இப்போது சிங்காசனத்திற்கு வரச்சொல்லிப் பாடுகிறாராதலின் அரியணைக்கேற்பப் பெருமாளைச் சிங்கத்தோடு உவமித்தனர் என்பதாம். ஆண்டாளின் இந்த உவமக் கோட்பாடு பழந்தமிழ்க் கவிதைகளின் உவமக் கோட்பாட்டை ஒட்டியே அமைந்திருக்கிறது.

    “பகல் நீடாகாது இரவுப் பொழுது பெருகி
    மாசி நின்ற மா கூர் திங்கள்
    பனிச்சுரம் படரும் பாண்மகள் உவப்ப
    புல்லிருள் விடிய புலம்புசேண் அகலப்
    பாயிருள் நீங்கப் பல்கதிர் பரப்பி
    ஞாயிறு குணமுதல் தோன்றி யாங்கு” (பதி.59)

    என்பது சங்க இலக்கியப் பாடல்களில் ஒன்று. இங்கே காலையில் உதிக்கும் கதிரவனின் வினைகளாக அல்லது விளைவுகளாகப்  பாண்மகள் உவப்ப, புல்லிருள் விடிய, புலம்பு சேண் அகல, பாயிருள் நீங்க, பல்கதிர் பரப்பி என்னும் ஐந்து வினைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. கதிரவனைப் போல இத்தகைய சிறப்புடைய ஆடுகோட்பா ட்டுச் சேரலாதனைக் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் பாடுகிறார். குணதிசையில் கதிரவன் தோன்றியதால் உயிர்த்தொகுதிகள் புலம்பு நீங்கி இன்பம் எய்துதலும் வறுமையாகிய இருள் கழிதலும், இரவிலும் பனியிலும் அலைந்து திரிந்து வருத்தம் நீங்குதலும் சேரலாதனின் அருட்கதிர்கள் உலகெங்கும் பரவுதலும் உவமமாகிய கதிரவனின் வினையடைகளால் பெறப்படும்.

    முன் திணை முதல்வர் போல

    இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் என்னும் சான்றோர் பாடிய பத்துப்பாடல்கள் பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஒரு பாட்டு இப்படி அமைந்திருக்கிறது.

    “நிலம் நீர் வளி விசும்பு என்ற நான்கின்
    அளப்பரியையே!
    நாள் கோள் திங்கள் ஞாயிறு கனையழல்
    ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத்தனையை!
    போர் தலை மிகுத்த ஈர் ஐம் பதின்மரோடு
    துப்புத் துறை போகிய துணிவுடைமை ஆண்மை
    அக்குரன் அனைய கைவண்மையையே!
    ……………………………………………………………………………………
    இலங்குமணி மிடைந்த  பொலன்கலத் திகிரிக்
    கடலக வரைப்பின்  இப்பொழில் முழுதாண்ட நின்
    முன்திணை முதல்வர் போல! நின்று நீ
    கெடாஅ நல்லிசை நிலைஇத்
    தவா அலியரோ இவ்வுலகமொடு உடனே”  14

    ‘சேரலாதனின் முன்னோர்கள் எப்படிச் சிறப்பாக ஆண்டு இசையொடு வாழ்ந்தார்களோ அதுபோலப் பெரும்புகழ் பெற்று வாழ்வாயாக!’ என்று வாழ்த்துகிறார் புலவர். சேரலாதனுக்கு அவனுடைய முன்னோர்களையே உவமமாக்கும் கண்ணனார், அவனுடைய பேராற்றலைச் சொல்லுகிறபோது உவமங்களாலேயே காட்சிப்படுத்துகிறார்.

    அவனுடைய பெருமை அளத்தற்கரியது என்பதை ‘நிலம் நீர் வளி விசும்பு’ என்னும் அளக்க முடியாத நான்கினை உவமமாக்கியிருக்கிறார். “இரு முந்நீர்க் குட்டமும் வியன்ஞாலத்து அகலமும், வளிவழங்கு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றாங்கு அவை அளந்தறியினும் அளத்தற்கரியை” (புறம். 20) எனச் சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைக் குறுங்கோழியூர் கிழார் பாடியிருப்பதை நோக்கினால் மன்னனுடைய வியத்தகு ஆற்றலுக்குக் குறிப்பிட்ட இத்தகைய பொருட்களை உவமமாக்குவது ஓர் உவமக் கோட்பாடு என்பது பெறப்படும்.

    அவனுடைய புகழொளியை அளவிடுகிறபோது “விண்மீன், கோள்கள், கதிரவன், திங்கள், நெருப்பு ஆகிய ஐந்தின் ஒருங்கிணைப்பான ஒளி என்று உவமத்திற்காக ஓர் புதிய ஒளியைப் படைத்துக் கொள்கிறார்.

    அவனுடைய வள்ளன்மையைப் பாரதப்போரில் நூற்றுவருக்குத் துணைபுரிந்த அக்குரன் என்பவனின் வள்ளன்மையோடு ஒப்பிடுகிறார். இந்த அக்குரன் தலையெழு வள்ளல்களில் ஒருவன் என்பதாகவும் பாண்டவருள் மூத்தவனாகிய கர்ணனாகவும் இருவேறு வகையாகக் கொள்ளப்படுவான்.

    இவ்வாறு அளப்பரிய தன்மைக்கும், புகழொளிக்கும் வள்ளன்மைக்கும் புதிய புதிய உவமத் தொகுப்புக்களைப் பயன்படுத்திப் படைத்துக்காட்டும் புலவர் இறுதியாக “அவனுடைய முன்னோர் போல வாழ்க” என முன்னோரையே உவமமாக்கி முடித்துக் காட்டுகிறார்.

    உவமக் காட்சி

    ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை ஒப்புமைப்படுத்திக் கூறுவது முதல் நிலை என்றால் படைப்பாளன் தான் கண்ட அல்லது மனக்கண்ணால் உணர்ந்த காட்சியை முழுமையாகச் சித்திரிப்பதற்கும் உவமங்கள் பயன்பட்டுள்ளன.

    “மலையுறழ் யானை வான்தோய் வெல்கொடி
    வரைமிசை அருவியின் வயின்வயின் நுடங்கக்
    கடல்போல் தானை கடுங்குரல் முரசம்
    கால் உறு கடலின் கடிய உரற
    எறிந்து சிதைந்த வாள்
    இலை தெரிந்த வேல்
    பாய்ந்தாய்ந்த மா
    ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு
    படுபிணம் பிறங்க நூறி பகைவர்
    கெடுகுடிபற்றிய கொற்ற வேந்தே! ” (பதி.69)

    மன்னனைப் பாடும் முன்னிலைப் பரவல் இது. சொல்ல வந்த சேதி  இது தான். “படையொடு சென்று பகைவரை வீழ்த்திப் பகைநாட்டில் கெட்டழிந்தோரையும் புரந்த மன்னன்’ என்பதுதான். பாட்டு ஒரு தொடரில் சொல்லியிருக்க வேண்டிய செய்தியில் பகைமுடிக்கச் சென்ற மன்னனது படைச்சிறப்பை உவமங்கள் வழியாகக் காட்சிப்படுத்தியிருப்பதுதான் உவமக்காட்சி என்னும் தலைப்புக்குக் காரணமாயிற்று. பின்னிருந்து காட்சிகளை அளந்தால் பகைமுரசு கடலைப் போல் முழுங்கியது. காரணம் படை கடல் போல் இருந்தது. யானைப் படையில் தாங்கிய கொடிகள் மலையுச்சியிலிருந்து வீழும் அருவிகளைப் போன்று இருந்தன. யானை மலைபோல் இருந்தது. இந்த உவமத்தொடரியில் எள்ளின் முனையளவும் தொடர்ச்சி அறவில்லை என்பதை நோக்குதல் வேண்டும்.

    அகநானூற்றில் இந்தக் காட்சியைப் “பெருவரை இழிதரும் நெடு வெள் அருவி ஓடை யானை உயர்மிசை எடுத்த ஆடு கொடி கடுப்பத் தோன்றும்” (358) என்று உவமத்தைப் பொருளாக்கிக் கூறுதல் காண்க. யானை தாங்கிய கொடி அருவி போல் இருந்தது என்பது இந்தப் பாட்டின் உவமம் கொடி கொட்டுகிற அருவிபோல் இருந்தது என்பது அகநானூற்றின் சித்திரிப்பு. கடல்போல் தானை என்பது மரபுவழி உவமம். “உரவுக்கடல் அன்ன தாங்கரும் தானை” என்பது பதிற்றுப்பத்து (90) மன்னனைப் பாடுகிற பாடாண்திணைப் பாடலில் கற்பனையில் கொண்டு வந்த போர்க்களத்தை உவமத் தோரணங்களால் சித்திரித்துக் காட்டியிருக்கும் பாங்கு இது.

    அயிரை நெடுவரை போல

    இலக்கண நூல்களில் நல்லாசிரியருக்கு இருக்க வேண்டிய பண்புநலன்களுக்கு நிலம், மலை, மலர், துலாக்கோல் முதலியவற்றை உவமமாக்கி உரைப்பர்.

    ‘நிலம் மலை நிறைகோல் மலர்நகர் மாட்சி’ என்னும் நன்னூல் வரிகளில் இதனைக் காணலாம். இவை முறையே பொறுமை, வியத்தகு தோற்றம் மற்றும் ஆற்றல், மங்கலம் மற்றும் மென்மை, நடுவுநிலை என்னும் பண்புகளை ஆசிரியருக்கு ஏற்றி உரைப்பதாகக் கொள்ள வேண்டும். இந்த நூற்பாவின் தொடக்கத்திலேயே குலன், அருள், தெய்வம், கொள்கை எனப் பகுத்துச் சொல்லியும் உவமஅளவையால் விரித்துச் சொல்லியும் ஆசிரியரின் பண்புகளின் இன்றியமையாமையை உணர்த்தியிருப்பர். இவற்றுள் சொல்லப்பட்ட மலையை ஒரு மன்னனின் புகழுக்கு உவமமாகச் சொல்லியிருக்கிறார் புலவர் ஒருவர்.

    “மாடேர் உறையும் உலகமும் கேட்ப
    இழுமென இழிதரும் பறைக்குரல் அருவி
    முழுமுதல் கோடுதொறும்  துவன்றும்
    அயிரை நெடுவரை போல” (பதி. 70)

    ‘வரைபோல வாழ்க’ என்றால் கருத்து முடிந்தது. ஆனால் கவிதை முடியுமா? அதனால் புலவர் ஒரு சொல்லோவியம் தீட்டுகிறார். எந்த மலை போல? அயிரை என்னும் உயர்ந்த மலைபோல! அயிரை என்பது மேற்கு மலைத் தொடர்ச்சியில் உள்ளதொரு மலை. வறட்சி காரணமாக அந்த மலையருவி வறண்டாலும் அயிரை மலை அசையாது நிற்குமாம். அருவி துவன்றும் துவறாத அயிரை மலைபோல! அந்த அருவியொலி எதனை ஒத்திருக்கிறது? பறையொலியை ஒத்திருக்கிறதாம். பறைபோல ஒலிக்கும் அந்த அருவியோசை பொன்னுலகத்திலும் கேட்கிறதாம். பொன்னுலகத்தில் கேட்கிறதெனவே மண்ணுலகத்தில் கேட்பது சொல்ல வேண்டாவாயிற்று. இப்போது கூட்டிப் பொருளுரைத்தால் உவம அடைகளின் அழகும் நயமும் புரியக் கூடும்.

    “பொன்னுலகமாகிய தேவர் உலகத்திலும் கேட்கக் கூடிய பறையொலியை ஒத்திருக்கும் மலைப்பக்கங்களில் வீழும் எண்ணற்ற அருவியானது ஒழுகுவதை நிறுத்திக் கொண்டாலும் நிமிரந்து நிற்கின்ற அயிரை என்னும் உயர்ந்த மலைபோல நின்புகழ் நிலைக்கட்டும்””

    இந்த உவமத் தொகுப்பையும் சித்திரிப்பையும் நோக்கினால் அருவியின் ஒலியைக் கேட்கிறபோதே படைப்பாளன் நினைவுக்குப் பறையொலி வருகிறது. முன்னது இயற்கை. பின்னது சமுதாயம். இயற்கையையும் சமுதாயத்தையும் இணைக்கின்ற பாலமாக உவமங்கள் செயல்பட்டுள்ளன என்பதாகக் கருத வேண்டியதிருக்கிறது.

    நிறைவுரை

    உவமம் பொருள் விளக்கக் கருவி அல்லது கருத்து விளக்கக் கருவி என்பதே தமிழ்க் கவிதைகளின் உவமக் கோட்பாடு. உவமத்திற்கும் பொருளுக்குமான அடைகளை ஒன்றினைச் சொல்லி மற்றொன்றைச் சொல்லாமல் விடுவதற்கும் இதுதான் காரணம். ஒப்புமை உணர்வால் ஒன்று மற்றொன்றினுள் அடங்குதலின் கற்பார் இரண்டின் பண்புகளையும் வினைகளையும் பொருத்திக் காண வேண்டும். உவமத்திற்கே மற்றொரு உவமத்தைச் சொல்வதும் மன்னனின் திருவோலக்கத்தில் இருந்தாலும் மக்களையே எண்ணி உவமம் புணர்ப்பதும் தமிழ்க்கவிதைகளின் உவமக் கோட்பாடுகளாகவே இருந்திருக்கின்றன.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 29

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 29

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!

    முன்னுரை

    ஒன்றினை மற்றொன்றோடு ஒப்புமைப்படுத்திக் கூறுவது உவமம் என்பது உண்மையாயினும் அப்படிக் கூறுவதில் பல நெறிகள் உண்டு. இயற்கையை இயற்கையோடும் இயற்கையைச் செயற்கையோடும்  செயற்கையைச் செயற்கையோடும் செயற்கையை இயற்கையோடும் உயர்திணையை உயர்திணையோடும் உயர்திணையை  அஃறிணையோடும், அஃறிணையை அஃறிணையோடும் அஃறிணையை உயர்திணையோடும்  இருப்பதை இருப்பதோடும் இருப்பதை இல்லாததோடும் இல்லாததை இல்லாததோடும் இல்லாததை இருப்பதோடும் என ஒப்புமைப் படைப்பாளனின் சிந்தனைக்கேற்ப அமையும். வானம் இருள்கிறது. இது இயற்கை. இருட்டுக்குப் பாவேந்தர் உவமம் சொல்கிறார். ‘கேள்வி இல்லான் நெஞ்சம் போல் இருண்டு’ என்று. கல்வி, கேள்வி என்னும் இருகூறுகளால் நிரம்புவது அறிவு. செவிச்செல்வமாகிய கேள்வியறிவு இல்லாதவன் அறிவு வெறும் ஏட்டுப்படிப்பினால் நிரம்பிவிடாது. கேள்வியறிவு இன்மை என்பது முயற்சியில் தளர்ச்சி. வானத்தின் இருள் இயற்கை. அந்த இயற்கையைப் பாவேந்தர் செயற்கையோடு ஒப்பிடுவதைக் காணலாம். இதுபோன்று அமைந்திருக்கும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது.

    ஊரும் உவமமாகலாம்.

    “மதுரையில் பறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே! புதுமைகள் நிறைந்த சேரன் வில்லை உன் புருவத்தில் கண்டேனே! தஞ்சையில் பறந்த புலிக்கொடியில் வீரத்தைக் கண்டேனே! காஞ்சித் தலைவன் கோயில் சிலைதான் கண்மணியே உன் பொன்னுடலோ? குடந்தையில் பாயும் காவிரி அலைதான் காதலியே உன் பூங்குழலோ? சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையோ உன் செவ்விதழோ? தூத்துக்குடியின் முத்துக்குவியல் திருமகளே உன் புன்னகையோ? பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ? புதுவை நகரில் புரட்சிக் கவிஞன் குயிலோசை உன் வாய்மொழியோ? கோவையில் விளையும் பருத்தியில் வளரும் நூலிழைதான் உன் இடையழகோ? குமரியில் காணும் கதிரவன் உதயம் குலமகளே உன் வடிவழகோ? இவையாவும் ஒன்றாய் தோன்றும் உன்னைத் தமிழகம் என்பேனே!” என்னும் கருத்துடைய திரையிசைப் பாடலைப் பலரும் கேட்டிருக்கக் கூடும்.  இந்தப் பாட்டில் கவிஞர் வாலி உவமமாகச் சொல்லியிருக்க வேண்டிய பொருள்களை மட்டும் சொல்லாமல் அவை தொடர்பான அரசுகள், நகரங்கள் முதலியவற்றையும் நிரலாகக் கூறி இறுதியில் ஒட்டுமொத்தமாக இவையெல்லாம் இருப்பன தமிழகத்திற்குள் ஆதலின் தன் காதலியைத் தமிழகம் என்று ஒற்றைச் சொல்லால் கூறும் காதலனைக் காட்டுகிறார். ஓர் இளம்பெண்ணுக்கு நகரத்தை உவமமாகக் காட்டலாமா? மேம்போக்காக இதனைக் கேட்பவர்க்குப் புதுமை போலத் தோன்றலாம். ஆனால் உண்மையில்  தலைவனைப் பிரிந்த தலைவியின் அழகிற்குச் சிதைந்து போன நகரத்தையும், அம்பல் மற்றும் அலருக்குப் குறிப்பிட்ட போர்க்களத்து ஆரவாரவொலியையும் உவமமாக்குவது தமிழ்க்கவிதைகளின் உவமக் கோட்பாடு, உவம மரபு. ஐங்குறுநூற்றில் ஒரு பாடல்.

    “நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
    நெடுநீர்ப் பொய்கைத் துடும் என விழூஉம்
    கைவண் மத்தி கழாஅர் அன்ன
    நல்லோர் நல்லோர் நாடி
    வதுவை அயர விரும்புதி நீயே!”

    “நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்பழம் நெடுநீர்ப் பொய்கைத் துடும் என விழூஉம் கைவண் மத்தி கழாஅர்” என்னும்  உள்ளுறையால்  நகர்வளத்தைச் சுட்டுகிற இந்த நெறி, “கொக்கின் உக்கு ஒழிந்த தீம்பழம் கொக்கின் கூம்பு நிலையன்ன ஆம்பல் தூங்கு நீர் குட்டத்துத் துடும் என விழும் தண்டுறை ஊரன்” என்னும் நற்றிணையாலும் அறியலாம். பரத்தை ஒருத்தியுடன் சின்னாள் வாழ்ந்து அவளைப் பிரிந்து மற்றுமொரு பரத்தையை வதுவை அயர்ந்த தலைவன் தலைவியிடம் வந்தானாக, அவள் புலந்தாள். புலந்த அன்னாளுக்கு ‘இனி இவ்வாறு நிகழாது’ எனப் பொய்யாக வாக்களித்தான் தலைவன். அந்தப் ‘பொய்யனை’  நோக்கித் தலைவி சொன்ன பதில் இது.

    “நீ சொல்வதை நான் நம்பவேண்டும்! அதுதானே நின் விருப்பம்! உனக்குத்தான் வள்ளன்மையில் சிறந்த மத்தியின் கழாஅர் நகரைப் போன்ற நல்ல நல்ல பெண்கள் எல்லாம் கிடைப்பார்கள். நீயும் அவர்களை மணம் செய்து கொள்ள விரும்புவாயே!” (உன்னைத் தெரியாதா எனக்கு?) என்று நகையாடுகிறாள். பரத்தையர் மேனி நலமல்லது கற்பு நலம் இலராதலின்  ‘நல்லோர் நல்லோர் என்னும் அடுக்கு இழித்தற்கண் வந்தது, இந்தப் பாட்டில் கழாஅர் நகரம் தலைவன் விழையும் பரத்தையர்க்கு உவமமாக வந்தது. காவிரிக்கரையில் அமைந்திருக்கும் இவ்வூர்த்துறை கரிகால் பெருவளத்தானின் மகள் ஆதிமந்தியும் அவள் கணவன் அத்தியும்  விளையாடி வரலாற்றுப் பெருமை பெற்றது. இவ்வாறு பெண்களின் எழிலுக்கும் அலருக்கும் நகரத்தையும் போர்க்களத்தையும்  உவமமாக்குவதும்  பழந்தமிழ்க் கவிதை மரபு என்பதைப் புரிந்து கொள்ளலாம்!

    தாமரைபோல மலர்ந்த அல்லி

    மிளகும் பப்பாளி விதையும் ஒன்றுபோல் தோன்றும். நொய்யும் ரவாவும் ஒன்றுபோல் தோன்றும். கலப்பட வணிகர்கள் எதனை எதனோடு கலக்க வேண்டும் என்னும் தெளிஞானம் பெற்றிருப்பர். இலக்கியத்தில் இத்தகையதோர் ஒப்புமையைப் புலவர் ஒருவர் திணைவிளக்கத்திற்காகப் பாடியிருக்கிறார். தாமரையும் ஆம்பலும் ஒன்றுபோல் தோன்றும். சில அடிப்படை இயல்புகளும் அவற்றுக்கிடையே உண்டு. அவையிரண்டுமே நீர்த்தாவரம். தாளினாலும் நீண்டு, கிழங்கில் வேர் கொள்ளுவன. வேர், கிழங்கில் பிடிமானம் கொள்வதால் நீர்நிலைகளில் அதாவது குளங்களில் நீர் வற்றிய காலத்தும் அப்பூக்களின் மலர்ச்சி விரைவில் குறையாது.

    “கன்னி விடியற் கணைக்கால் ஆம்பல்
    தாமரை போல் மலரும் ஊர!
    பேணா ளோநின் பெண்டே?
    யான் தன் அடக்கவும் தான் அடங்கலனே! ” (ஐங். 68)

    என்று அமைகிறது அப்பாடல். மருதம் பாடுவதில் சிறந்த புலவரான ஓரம்போகியார் பாடியது. பாடலின் உரிப்பொருளைப் புரிந்து கொள்ளாத நிலையில் உவம நுட்பம் புரிவதற்கு வாய்ப்பில்லை. இங்கே உரிப்பொருள் மருதத்திணையின் ஊடல். அத்திணையுள் அடங்கிய துறைகளுள் ஒன்று ‘அவனறியும் ஆற்றல் அறிதல்’ (தொல். பொ.147). தலைவன் தன்மாட்டு மயங்கி நிற்க, பரத்தை தலைமகளை ஏசுகிறாள். ஆனால் தலைமகள், தன்னை ஏசுவதாகப் பொய் மொழிகிறாள். இதனைச் செவிமடுத்த தலைவி “தான் ஏசாது அடங்கி நிற்கவும் தான் அடங்காது நிற்கிறாள்” எனத்  தலைவனுக்குக் கூறியது.

    இது தலைவி கூற்று. தலைவி தாமரை. ஆம்பல் கன்னிவிடியலில் மலரும். கன்னிவிடியல் என்றால் இருள் களையும் அதிகாலை. ‘குமரியிருட்டு’ என்பதும் அது. தாமரை மலர வேண்டிய அந்தப் பொழுதில் ஆம்பலும் மலர்கிறதாம். தான் மலர்வதற்குரிய பொழுதில் தானும் மலர்வதாலேயே ஆம்பல் தாமரையாகிவிடாது என்பது கருத்து. கற்புச் சிறப்பு இன்மையால் அடங்கிக் கிடத்தற்குரிய பரத்தை, குலமகளிர் போலத் தருக்கித் திரிவது பொருத்தமில்லை” என்பதுமாம். குமுதம் என்னும் நீர்க்கொடி. குண்டுநீர் ஆம்பலும் கூம்பின இனியே வந்தன்று வாழிய மாலை” என்றும் ஓரம்போகியார் பாடிய பாடல் குறுந்தொகையிலும் காணக்கிடக்கின்றது.

    வேகத்தை விரைவுபடுத்திய உவமங்கள்

    வினைமுற்றிய தலைவன் மீள்கிறான். அவனுக்காகக் காத்திருக்கிறாள் தலைவி. பேயனார் பாடிய முல்லைத் திணைப் பாடல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உவமங்களை எத்தகைய உரிப்பொருள் விளக்கத்திற்கு எந்த முறையில் அதாவது உத்தியில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை எண்ணுகிறபோது வியப்பு மேலிடுகிறது. சாதாரணமாக முன்னிலையில் உவமம் சொல்லிப் பாராட்டுவது, படர்க்கையில் உவமம் சொல்வது என்பதெல்லாம் உண்டு,  இந்தப் பாட்டில்  தலைவன் பிரிந்திருந்த தலைவியைக் காண விரைந்ததற்கு உவமங்களைக் காரணிகளாக்குகிறான்.

    “நின்னே போலும் மஞ்ஞை ஆல நின்
    நன்னுதல் நாரும் முல்லை மலர
    நின்னே போல மா மருண்டு நோக்க
    நின்னே உள்ளி வந்தனென்
    நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே” (ஐங்குறு. 492)

    தலைவியைப் போலச் சாயல் உடைய மயிலும், அவள் நன்னுதல் போல மணம் வீசும் மலர்ந்த முல்லையும் அவள் கண்ணைப் போல மருண்டு நோக்கும் மானும் அவன் உள்ளத்தில் தலைவியைக் காணும் வேட்கையைத் தூண்டினவாம். எவ்வளவு விரைவாக வருகிறான் என்றால் கார்காலம் தொடங்குவதற்கு முன்பே வந்துவிட்டானாம். கார்காலம் அவன் திரும்பி வருவதற்கான கால எல்லையாயினும் மேற்கண்ட மயிலையும் முல்லையையும் மானையும் கண்டு உள்ளத்தில் காதல்பெருக கார்காலத்தின் முழு எல்லையைக் கருத்திற் கொள்ளாது அதன் தொடக்கத்திலேயே திரும்பிவிட்டானாம். கார்காலம் வருவதற்கு முன்னேயே வந்துவிட்டான் என்பது கருத்து. ‘பெய்த புலத்துப் பூத்த முல்லை பசு முகைத்தாது நாறும் நறுநுதல் அரிவை’ என்று குறுந்தொகையிலும் வருதல் காண்க. திணைக்கான முதற்பொருளும் கருப்பொருளும் செறிந்து நிற்றல் காண்க.

    மனைவிளக்கும் குடும்ப விளக்கும்

    ‘வீட்டில் வந்து விளக்கேற்றுவாள்’ என்பது பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீடு நோக்கிவரும் மகளிர்க்கான வாழ்த்துரைகளில் ஒன்று. அதனால் அவள் மனைக்கு விளக்கம் ஆனாள். பாரதிதாசன் இந்தச் சிந்தனையை இன்னும் விரிவுபடுத்தி, ஆழமாக்கி ஒரு குடும்பத்தின் கட்டுமான உறுதிக்கே மனைவிதான் காரணம் எனக் கருதி மனைவிளக்கு என்பதைக் குடும்ப விளக்காக்கினார்.

    “ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல
    மனைக்கு விளக்கம் ஆயினள் மன்ற கனைப் பெயல்
    பூப்பல அணிந்த வைப்பின்
    புறவணி நாடன் புதல்வன தாயே!” (ஐங் 409)

    எந்தப் பாட்டானாலும் உவமத்தைச் சுவைத்து அனுபவிப்பதில் சொல்லின்பம் அதாவது உவமத்திற்கான அடைகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. இந்தப் பாட்டில் ‘சுடர்போலத் தலைவி’ என்றாலே போதும். ‘செஞ்சுடர்,’ அது தீப்பந்தத்துச் சுடர் அல்ல. பாண்டில் செஞ்சுடராம். பாண்டில் என்னும் பலபொருள் ஒருசொல்லுக்கு விளக்குத் தகழி என்பது இங்கே பொருள். அது ஒண்சுடர் பாண்டில் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. ஒள்ளிய சுடர்களை ஏந்துவதற்காக வைக்கப்பட்டிருக்கும் பாண்டில் என்பது பொருள். பதினைந்து சீர்கள் சொற்கள் கொண்ட பாடலொன்றில் ‘ஒண்சுடர் பாண்டில் செஞ்சுடர்’ என்னும் ஒரு தொடர் நான்கு சீர்களைத் தமதாக்கிக் கொள்ளும் அளவிற்கு உவம அடைகள் இருக்கின்றன என்பது ஆய்வுக் கருத்து. “பாண்டில் விளக்கின் பரூஉச் சுடர் அழல” என்பது நெடுநல்வாடை.

    இன்று கூடுமோ இந்தக் காட்சி?

    சங்க இலக்கியத்தின் படைப்புக் கோட்பாடுகளில் நுண்ணியமானவை அகப்பொருள் மாந்தர்களில் பெண்பால் பாத்திரப்படைப்புக்கள். நற்றாய், செவிலி, தலைவி, தோழி என்னும் கற்பனைப் பாத்திரங்களில் இழையும் பண்பாட்டுக் கூறுகள் அக்காலத்தைய தமிழ்ச்சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகளாகவே கருதமுடியும். இயற்பெயர் சுட்டாத அப்பாத்திரங்களில் நற்றாய் தலைவியெனின் செவிலி தோழியாவாள்.  நற்றாயின் மகள் தலைவியெனின் செவிலியின் மகள் அவளுக்குத் தோழியாவாள். இருந்திருப்பாள்.  தோழி தலைவியானால் தலைவி தோழியாவாள். படைப்புக்கு உரிமையாளரான புலவரே இத்தனைப் பாத்திரங்களாகவும் உலவுகிறார் என்பது கூடுதல் வியப்புக்குக் காரணமான சேதி.

    இந்தப் பின்புலத்தில் இலக்கியச் சித்திரிப்பு பலவகைப்படும். இயற்கைக் காட்சிகளைச் சித்திரிப்பது. போர்க்களத்தைச் சித்திரிப்பது. குடும்பக் காட்சிகளைச் சித்திரிப்பது. பாவேந்தரின் குடும்பவிளக்கில் சித்திரிக்கப்பட்டுள்ள காட்சிகள் தமிழ்க் கவிதை உலகத்திற்கு முற்றிலும் புதியவை. ‘ஒரு நாள் நிகழ்ச்சி’ என்ற பெயரில் அவர் செய்திருக்கும் கவிதையோவியம் அவரை ஒரு கவிஞனாக மட்டுமன்று. ஒரு இலட்சியக் குடும்பத் தலைவராகவும் காட்டுகிறது. அதுபோன்ற ஒரு நிகழ்வினை ஐங்குறுநூறு சித்திரிக்கிறது. அந்தச் சித்திரிப்பில் தாய்மையும் இல்லறமும் உவமங்களும் சங்கமிக்கின்றன.

    தலைவி களவொழுக்கம் மேற்கொண்டு ஒழுக, அதனைத் தோழி வாயிலாக அறிந்து, தலைவியின் நாணத்தால் நேரடியாக மொழிதலின் இயலாமை கருதி நற்றாயிடம் எடுத்துச் சொல்லிக் கற்பறம் காப்பவள் செவிலியே. அதனாலேயே ‘தாயெனப்படுவோள் செவிலியாகும்’ என்பார் தொல்காப்பியர். அத்தகைய செவிலி தலைவி நடத்தும் இல்லறப் பாங்கினைக் கண்டு வந்து நற்றாய்க்கும் எடுத்து மொழியும் வகையில் பல பாடல்கள் உள்ளன. அப்பாடல்களில் இல்லறக் காட்சியின் எழில், கட்டுமானச் செப்பம் குறையாது உவமச் சிறப்போடு அமைந்திருப்பதைக் காணமுடியும்.

    “மறியிடை படுத்த மான்பிணை போலப்
    புதல்வன் நடுவணன் ஆக நன்றும்
    இனிது மன்ற அவர் கிடக்கை முனிவின்று
    நீனிற வியலகம் கவைஇய
    ஈனும் உம்பரும் பெறலருங் குரைத்தே” (ஐங். 401)

    என்ற பாடலில் தலைவனுக்கும் தலைவிக்கும் நடுவில் அவர்கள் மகன் மான் பிணைபோலப் படுத்திருக்கும் இனிமையான காட்சியை நற்றாய்க்கு எடுத்துரைக்கும் செவிலி, நீல நிறமுடைய வானத்தால் சூழப்பட்ட இந்த உலகத்து இன்பமும், உம்பருலகத்து இன்பமும் அந்தக் காட்சிக்கு ஈடாகாது என்று எடுத்துரைக்கிறாள். இங்கே உவமச் சிறப்பு எங்கே இருக்கிறது? மகன் குட்டியாம். தலைவனும் தலைவியும் மானும் பிணையுமாம். புலிக்குப் பிறந்தது பூனையாகாதது போல மான்களுக்குப் பிறந்த மான் குட்டி எனக் கொள்க.

    “புதல்வன் கவைஇய தாய் புற முயங்கி
    நசையினன் வதிந்த கிடக்கை பாணர்
    நரம்புளர் முரற்கை போல
    இனிதால் அம்ம பண்புமார் உடைத்தே!”  (ஐங். 402)

    என்ற பாடலில் கட்புலத்தின் இனிமையைச் செவிப்புல இனிமையாகக் காட்டுகிறார் புலவர். தன் புதல்வனைத் தழுவிக்கொண்டு தலைவி படுத்துறங்குகிறாள்.  அவளுடைய புறத்தைத் தழுவிக் கொண்டு தலைவன்  உறங்குகிறான். பாணருடைய நரம்புளர் முரற்கையினால் தோன்றிய இசை, கேட்டார் செவிக்கு இன்பம் பயப்பதுபோலப், பிள்ளையைத் தாய் தழுவ அவளைத் தலைவன் தழுவக் கிடக்கின்ற காட்சி கண்ணுக்கு இன்பம் பயந்ததாகக் கூறுகிறார். செவிலியின் கட்புலக் காட்சி மறைந்தொழியவும் அக்காட்சியைக் கண்ட மனம் அதனை மறவாது, பாணர் இசைத்த பண்ணை எண்ணுந்தோறும் இன்பம் பயப்பது போல இன்பம் பயந்தது என்பது கருத்து. ‘பாணர் நரம்புளர் முரற்கை போல’ என்னும் இந்த உவமத்தைப் “பாணர் நயம்படு முரற்கை யாத்த பயன்தெரிந்து இன்புறு புணர்ச்சி நுகரும்’ (407) எனத் தலைமக்களின் புணர்ச்சிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது அறிக.

    “புதல்வற் கவையினள் தந்தை மென்மொழிப்
    புதல்வன் தாயோ இருவரும் கவையினள்
    இனிது மன்ற அவர் கிடக்கை
    நளியிரும் பரப்பின் இவ்வுலகுடன் உறுமே” (409)

    என்னும் பாடலில் செவிலி கண்ட காட்சி மாற்றப்படுகிறது. முந்தைய பாடலில் மகனைத் தாய்தழுவ அவளைத் தலைவன் தழுவிக்கிடக்கிறான். இந்தக் காடசியில் “தந்தை புதல்வனைத் தழுவிக் கிடக்கின்றான். அந்தத் தலைவனையும் புதல்வனையும் தாய் தழுவிக் கிடக்கிறாள். “புதல்வன் தாயோ இருவரும் கவையினள்” இந்தப் பாடலில் உவமம் ஏதும் சுட்டப்படாவிடினும்  மனைவி, கணவன், புதல்வன் என்பதே உலகமாதலின் இதனின் வேறு உலகம் இல்லையென்பார் ‘நளியிரும் பரப்பின் இவ்வுலகுடன் உறுமே’ என்னும் அருமை புலப்படுதல் காண்க.

    நிறைவுரை

    கருத்து, உணர்ச்சி, கட்டுமானம், கற்பனை என்னும் கூறுகளுள் உவமத்தைக்  கற்பனையுள் அடக்கும் சிலர் அதனைக் கவிதையின் புற அழகாகக் கொண்டு அணியிலக்கண அமைதி காண்பர். கவிதை அழகுணர்ச்சியின் வெளிப்பாடு. அது இலக்கணப் பதிவு அல்ல. உவமத்தைக் கருத்து விளக்கத்திற்கான அகக்கருவி என்று கொண்டால் அதன் பயன்பாடு இன்னும் சிறக்கும். இரு மாறுபட்ட புலன்கள் வழி அடையக் கூடிய இன்பக் கூறுகளையும் ஒப்புமை செய்து காட்டுகிற படைப்பாளுமை  இருந்திருக்கிறது.  ‘கன்னி விடியற் கணைக்கால் ஆம்பல்’ என்றும்  ‘ஒண்சுடர் பாண்டில் செஞ்சுடர்’ என்றும் ‘நரம்புளர் முரற்கை’ என்றும் ‘கைவண் மாத்தி கழாஅர்’ என்றும் புணர்த்துக் காட்டியிருக்கும் உவம அடைகள் இலக்கண வகையால் உள்ளுறைக்குப் பயன்பட்டாலும் கவிதைப் பொருளைச் சிறக்கச் செய்யும் சிந்தனை மூலங்களாகவே தோன்றுகின்றன.

    (தொடரும்…)

    Share
  • புத்தக மதிப்புரை: Loop Quantum Gravity for everyone

    புத்தக மதிப்புரை: Loop Quantum Gravity for everyone

    முனைவர் நடராஜன் ஸ்ரீதர்
    ஆற்றல் அறிவியல் துறை
    அழகப்பா பல்கலைக்கழகம்
    காரைக்குடி
    natarajangravity@gmail.com

    கடந்த முறை நாம், வல்லமை இதழில் அஸ்றோபிசிக்ஸ் பார் பீபுள் இன் ஹர்ரி என்ற புத்தகம் குறித்த விமர்சனத்தை பார்த்திருந்தோம்[1]. அதேபோல தற்போதும் இன்னொரு சிறப்பு வாய்ந்த புத்தகமான லூப் குவாண்டம் கிராவிட்டி பார் எவரிவொன் (Loop Quantum Gravity for everyone) என்ற புத்தகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.

    லூப் குவாண்டம் கிராவிட்டி பார் எவரிவொன் என்ற இந்த புத்தகம் [2]  ஆங்கிலத்தில் ருடால்போ காம்பினி மற்றும் ஜோர்ஜ் புல்லின் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது. இப் புத்தகம் வளைத்தன்மைக்  குவாண்டம் ஈர்ப்பியல் பற்றிப் பொதுமக்கள் புரித்துகொள்ளும் வகையில் அறிவியலை அலசுகிறது.

    வளைப்பண்புக் குவாண்டம் ஈர்ப்பியல் என்ற ஒரு தத்துவம் ஈர்ப்பு விசையைக் குவாண்டமாக்கல் செயல்முறைக்கு உட்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு அறிவியல் வழிமுறை ஆகும். இதைப்பற்றி தமிழில் எமது அறிமுகக் கட்டுரைகள் கூட ஏற்கனவே வெளியாகி உள்ளது [3]. இந்த வளைப்பண்புக் குவாண்டம் ஈர்ப்பியல் குறித்த விஷயங்களை அதன் வரலாற்றுப் பின்னணியில் இருந்து இப்புத்தகம் ஆரம்பிக்கிறது.

    இந்நூலின் முதல் அத்தியாயத்தில் வளைப்பண்புக் குவாண்டம் ஈர்ப்பியல் தத்துவம் எவ்வாறு ஐன்ஸ்டைனின் தத்துவத்தைக் குவாண்டம் ஈர்ப்பியல் தத்துவத்திற்குப் புகுத்த முற்படுகிறது என்பதை விளக்க முயல்கிறது. மேலும் வளைப்பண்புக் குவாண்டம் ஈர்ப்பியல் தத்துவம் அதிர்விழைத் தத்துவத்தில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதையும் விளக்குகிறது.

    மேலும் இது ஏன் குவாண்டம் ஈர்ப்பியல் தத்துவங்களை ஆய்வுச் சோதனைகள் வாயிலாகக் கண்டறிய முடியாது என்பதையும் வரையறுக்கிறது.

    இந்நூலின் இரண்டாவது அத்தியாயத்தில் மின்காந்த அலைகளைப் பற்றி எழுத்தாளர்கள் விவரிக்கின்றனர். மேக்ஸ்வெல் அவர்களின் ஆய்வுகளைப் பற்றி விளக்கிவிட்டு பின்னர் நான்கு வகையான அடிப்படை விசைகளைப் பற்றி விவரிக்கிறது இந்நூல்.

    அடிப்படை விசைகள் யாங்-மில்ஸ் தத்துவங்களில் ஊடாக எவ்வாறு பொதுமைப்படுத்தப் படுகிறது என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டிவிட்டு, அது எவ்வாறு வளைப்பண்புக் குவாண்டம் ஈர்ப்பியல்  தத்துவத்திற்கு உட்படுத்தப்படுகிறது என்பதையும் விரித்துரைக்கிறது. 1666 இல் நியூட்டன் ஆல் கண்டறியப்பட்ட ஈர்ப்பியல் தத்துவம் பின்னாட்களில் ஐன்ஸ்டைனால் எவ்வாறு மேம்பாடு செய்யப்பட்டது குறித்தும், பொது சார்பியல் தத்துவம் ஈர்ப்பியலை எவ்வாறு தெளிவுறுத்துகிறது என்பதையும் இந்நூல் சிலாகிக்கிறது.

    குறிப்பாக பொது சார்பியல் தத்துவத்தின் வாயிலாகப் புதன் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதை ஒரு நூற்றாண்டுக்கு 40 ஆர்க் நொடி அளவில் எவ்வாறு மாறுபாடு அடைகிறது என்பதை இந்நூல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் இரு கனமான பொருட்களுக்கு இடையே செயல்படும் ஈர்ப்பு என்பது விசை என்பதாக இல்லாமல் அவை காலவெளியில் வளைவில் விளைவாக இருக்கும் என்று சார்பியல் தத்துவத்தை பற்றி எளிமையாக விளக்குகிறது. இதிலிருந்து குவாண்டம் ஈர்ப்பியல் தத்துவத்திற்கு எவ்வாறு செல்வது என்ற கேள்வியுடன் இந்த அத்தியாயம் முடிவடைகிறது.

    மூன்றாவது அத்தியாயத்தில் குவாண்டம் தத்துவம் விளக்கப்படுகிறது.  குவாண்டம் தத்துவத்தின் அடிப்படைப் பண்புகளான கதிர்வீச்சு, அணுக்களின் இயக்கம் மற்றும் அணுவின் ஆற்றல் மட்டங்களில் இருந்து ஆற்றல்கள் உமிழப்படுதல் மற்றும் உறிஞ்சப்படுதல் ஆகியவை குறித்தும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது. மேலும் இந்த அத்தியாயத்தில் குவாண்டம் இயற்பியலின் முக்கிய சோதனையான இரட்டைப் பிளவு சோதனை பற்றியும் துகள்-அலைக் கோட்பாடு பற்றியும் எளிமையாக எழுதப்பட்டுள்ளது.

    மேலும் இந்த அத்தியாயத்தில் குவாண்டம் இயற்பியலில் அடிப்படைக் கூறுகளான மாறாமை மற்றும் வகையீட்டுச் செயலொப்புமை ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.

    இப்புத்தகத்தில் மையக்கருத்தான, வளைப்பண்புக் குவாண்டம் ஈர்ப்பியல் குறித்து பேசும் ஒரு முழு அத்தியாயமாக நான்காம் அத்தியாயம் அமைகிறது. இத் தத்துவத்தின் வரலாறு பாரடே மின்னியக்க விதிகளில் ஆரம்பித்து பின்னர் யாங் மில்ஸ் தத்துவத்தின் ஊடாக 1986ல் அபய் அஷ்டேகர் எவ்வாறு பொது சார்பியல் தத்துவத்தை வரையறுத்தார் என விவரிக்கிறது.

    வளைப்பண்புக் குவாண்டம் ஈர்ப்பியல் என்னும் தொடரில் வளைப்பண்பு என்பது எவ்வாறு சேர்க்கப்பட்டுள்ளது என்பதை இயற்பியல் ரீதியாக இந்த அத்தியாயம் விளக்குகிது. மேலும் கார்லோ ரோவல்லி, லீ ஸ்மோலின் போன்ற அறிவியல் அறிஞர்கள் இந்தத் தத்துவத்திற்கு எவ்வாறு பங்களிப்பு செய்தனர் என்பதையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது. குறிப்பாக கால வெளியில் குவாண்டமாக்கல்  என்பது எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது என்பதை பாமரரும் புரியும் வண்ணம் இந்த அத்தியாயம் விளக்குகிறது.

    பின்வரும் இரண்டு அத்தியாயங்களில் இந்த தத்துவம் எவ்வாறு கருந்துளைகள் மற்றும் பிரபஞ்ச இயக்கவியலில் புகுத்தப்படுகிறது மற்றும் அதன் மூலம் எவ்வாறு தற்போதுள்ள நடைமுறை முடிவுகள் மாற்றம் பெறுகின்றன என்பதையும் மிக நீண்ட விளக்கமாக விவாதிக்கிறது.  குறிப்பாக பிரபஞ்சப் பின்புல வெப்பநிலைத் தகவல் மூலம் பெறப்படும் தரவுகள் வாயிலாக பிரபஞ்சம் அதன் ஆரம்ப நிலையில் எவ்வாறு இருந்திருக்கக்கூடும் என்பதை இத்தத்துவம் வாயிலாகத் துல்லியமாகக் கணிக்கக் கூடுமென முன்மொழியப்படுகிறது.

    ஏழாம் அத்தியாயம் இத்தத்துவத்தின் அடுத்த கட்ட முன்னேற்றங்கள் பற்றி விளக்குகிறது. குறிப்பாக, தற்சுழல் நுரை[4] பற்றி விவரித்து, அது எதிர்காலத்தில் எந்த அளவு அடிப்படை இயற்பியலில் நமது புரிதலை மாற்றக்கூடும் என்பது குறித்தும் எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர்.

    பின்வரும் அத்தியாயங்கள் இத்தத்துவத்தின் வெவவேறு முன்னேற்றங்களைப் பற்றி விவரித்து விட்டு, புத்தகத்திற்கு முடிவுரை எழுதப்பட்டுள்ளது.

    இந்தப் புத்தகம் அதிக அளவு தொழில்நுட்ப விஷயங்களை விவரிக்காமல், மிகச் சுருக்கமாக, மிகக் கச்சிதமாக பொதுமக்களும் புரியும் வண்ணம் வளைப்பண்புக் குவாண்டம் ஈர்ப்பியல்  பற்றி விளக்கியுள்ளது.

    ஏற்கெனவே நாம் அவசரத்தில் செல்வோருக்கான வான இயற்பியல் என்றும் புத்தகத்தைப் பற்றித் தெரிவித்திருந்தோம். அதேபோல இந்தப் புத்தகத் தலைப்பையும் அவசரத்தில் செல்வோருக்கான வளைப்பண்புக் குவாண்டம் ஈர்ப்பியல் என்று வைத்திருக்கலாம். அந்த அளவிற்கு புத்தகம் வெகு வேகமாகச் செல்கிறது.

    வளைப்பண்புக் குவாண்டம் ஈர்ப்பியல் என்ற தத்துவத்தை எளிய ஆங்கிலத்தில் புரிந்துகொள்ள முயல்வோருக்கு, இந்தப் புத்தகம் மிகவும் கைகொடுக்கும்.

    உசாத்துணைகள்

    [1] நடராஜன் ஸ்ரீதர், புத்தக மதிப்புரை : அஸ்றோபிசிக்ஸ் பார் பீபிள் இன் ஹர்ரி,   வல்லமை, 2021
    https://www.vallamai.com/?p=103375

    [2] Gambini, Rodolfo, and Jorge Pullin. Loop quantum gravity for everyone. World Scientific, 2020.

    [3]  நடராஜன் ஸ்ரீதர், வளைய குவாண்டம் ஈர்ப்புவிசை ஓர் அறிமுகம். முழுமை அறிவியல் உதயம் 13(1). 10411 – 10418, 2021
    https://www.researchgate.net/publication/338816881_valaiya_kuvantam_irppuvicai_or_arimukam

    [4] நடராஜன் ஸ்ரீதர், நாகேஸ்வரன் ராஜேந்திரன், பிரபஞ்சக் கட்டமைப்பில் தற்சுழல் நுரை.  முழுமை அறிவியல் உதயம் 14(4). 56 – 74, 2021
    https://www.researchgate.net/publication/351978276_pirapancak_kattamaippil_tarculal_nurai

    Share
  • (Peer Reviewed) தன் சீர் தனது ஒன்றின் தன் தளையாம்

    (Peer Reviewed) தன் சீர் தனது ஒன்றின் தன் தளையாம்

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    (தமிழ் யாப்பியல் மரபில் சீர் மற்றும் தளை பற்றிய ஓர் ஆய்வு)

    ஆய்வு அறிமுகம்

    மரபுக்கவிதை, புதுக்கவிதை எனத் தமிழ்க் கவிதைகள் இரு வகைபாட்டுக்குள் அடங்கலாம். பொதுவாக யாப்பிலக்கண அடிப்படையில் எழுதப்படும் கவிதைகளை மரபுக்கவிதைகள் என்பது பெருவழக்கு. உண்மையில் ‘மரபுக்கவிதை’ என்னும் சொல்லுக்கான பொருளடர்த்தி இன்னும் ஆழமாயினும் ‘யாப்பில்லாதவையெல்லாம்’ புதுக்கவிதையாகக் கொள்ளப்படுதலின் ‘யாப்பு உள்ளவையெல்லாம்’ மரபுக்கவிதை எனக் கருதப்பட்டிருக்கலாம். இரண்டிலும் ‘கவிதை’ என்பது தனி., எழுத்து மரபு, சொல் மரபு, பொருள் மரபு, கூற்று மரபு, வழக்கு மரபு என மரபு என்பது பல பரிமாணங்களையும் உடையது. இந்த அடிப்படையில் அமைந்த கவிதைகள் மிகச் சிலவே. யாப்பமை கவிதைகளுக்கான வடிவக் கோட்பாடு ‘யாப்பிலக்கணம்’ என்ற பொருண்மையில் அமைந்துள்ளது. இந்த யாப்பு, செய்யுள் உறுப்புக்களைத் தமது உள்ளடக்கமாகக் கொண்டது. அவ்வுள்ளடக்கம் தொல்காப்பியச் செய்யுளியலில் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தாலும் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, இனம் என்னும் எட்டு உறுப்புக்களைக் கொண்டது என்பது யாப்பருங்கலக்காரிகை என்னும் யாப்பிலக்கண நூலின் கருத்து. ‘எழுத்து, அசை, சீர், பந்தம், அடி, தொடை, பா, இனம் கூறுவன்’ என்பது காரிகை.  இவ்வெட்டு உறுப்புக்களுள் ‘தளை’ என்னும் உறுப்புப் பற்றிய ஓர் ஆய்வாக இந்தக் கட்டுரை அமைகிறது. ‘யாப்பருங்கலக் காரிகை’ என்னும் நூல், அதற்குக் குணசாகரர் என்னும் சான்றோர் எழுதிய உரை ஆகியவற்றின் அடிப்படையில் அமைகிறது.

    கட்டுரைத் தலைப்பு

    ‘தண்சீர் தனதொன்றின் தன் தளையாம்’ என்னுந் தலைப்பில் இக்கட்டுரை அமைகிறது

    ஆய்வுக் கருதுகோள்

    தமிழ் யாப்பியல் மரபில் அமைந்த எழுவகைத் தளைகளுக்கான பெயர் மற்றும் பொருளமைதியில் (‘நின்ற சீருக்கே தளை’ என்னும் கருத்தமைவில்) ஒத்திசைவு இருக்கிறதா? என்பதையே இக்கட்டுரை தனக்கான கருதுகோளாகக் கொள்கிறது. சீர் பற்றிய ஆய்வினையும் இணைத்து முன்னெடுக்கிறது.

    ஆய்வு நெறி

    இவ்வாய்வு இலக்கண வரலாற்றியல் அணுகுமுறையில் விளக்கவியல் திறனாய்வு முறையை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது.

    முதன்மை மற்றும் துணைமைச் சான்றாதாரம்

    யாப்பியல் மரபு மற்றும் இலக்கணம் பற்றிய நூல்கள் பலவாயினும் அமிதசாகரர் எழுதிய ‘யாப்பருங்கலக்காரிகை’ என்னும் நூலையே தனக்கு அடிப்படையாகக் கொள்கிறது.

    முதனிலைச் சான்று

    அந்நூலில் அமைந்துள்ள,

    “ஈரசை நாற்சீர் அகவற்குரிய! வெண்பாவினமாம்
    நேரசையால் இற்ற மூவசைச்சீர்! நிரையால் இறுப
    வாரசை மென் முலை மாதே! வகுத்த வஞ்சிக்குரிச்சீர்!
    ஓரசையே நின்றும் சீராம்! பொதுவொரு நாலசையே!”

    “தேமா புளிமா கருவிளம் கூவிளம் சீர் அகவற்கு
    ஆம்! ஆங்கு கடை காய் அடையின் வெண்பாவிற்கு! அந்தம் கனியா
    வாமாண் கலையல்குல் மாதே! வகுத்த வஞ்சிக்குரிச்சீர்!
    நாமாண்பு உரைத்த அசைச்சீர்க்கு உதாரணம் நாள்மலரே!”

    “‘தண்சீர் தனதொன்றின் தன் தளையாம்’ தணவாத வஞ்சி
    வண்சீர் விகற்பமும் வஞ்சிக்குரித்து வல்லோர் வகுத்த
    வெண்சீர் விகற்பம் கலித்தளையாய்விடும்! வெண்டளையாம்
    ஒண்சீர் அகவல் உரிச்சீர் விகற்பமும் ஒண்ணுதலே!”

    என்னும் மூன்று காரிகைகளை மட்டும் தனக்கான முதனிலைச் சான்றுகளாகக் கொண்டு அமைகிறது.

    ஆய்வுத் தேவை

    தமிழ் யாப்பியல் மரபில் தெளிவுபடுத்தப்பட வேண்டிய இலக்கணக் கூறுகள் பல.  அவற்றுள் தற்கால மரபுக்கவிதைகளில் அமைந்திருப்பதாகச் சொல்லப்படும் தளைமயக்கமும் ஒன்று. அதனைக் களைய முயல்வதையே இவ்வாய்வு தனது நோக்கமாகக் கொள்கிறது.

    ஆய்வுப் பயன்

    தளையைப் பொருத்தவரையில் விதிவிலக்குகளை அடிப்படையாகக் கொண்டே தற்கால யாப்பியல் கவிதைகள் எழுதப்படுகின்றன என்னும் உண்மையைப் படைப்பாளரும் படிப்பாளரும் உணரச் செய்வதையே இக்கட்டுரை தனது பயனாகக் கொள்கிறது.

    தளை வந்த வழி

    ‘நின்ற சீருக்குத்தான் தளை’ என்பது பலருடைய கருத்தாக நிலவுகிறது. அதாவது தளைக்குப் பெயரிடுகிறபோது நின்ற சீரின் அடிப்படையிலேயே வழங்கப்படும் என்பதாம். நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் (அது எதுவாயினும்) முதலசையும் ஒன்றுவதும் ஒன்றாததுமே தளையின் தோற்றக் காரணம். இது பொதுவான கருத்து. இந்த அடிப்படையில்,

    1. ஈரசைச்சீர் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றுவது, ஒன்றாதது.
    2. நேரீற்று மூவசைச்சீர்கள் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றுவது, ஒன்றாதது.
    3. நிரையீற்று மூவசைச்சீர்கள் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றுவது, ஒன்றாதது.

    எனத் தளை எழுவகைப்படும். நேர் ஒன்று ஆசிரியத்தளை, நிரை ஒன்று ஆசிரியத்தளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை என்னும் அதன் விரிவை அடுத்த பத்தியில் காணலாம்.

    தளைப் பெயர்கள் ஒரு குறிப்பு

    தளைகளுக்கான பெயர்களையும் அவை உருவாகும் முறையினையும் அவற்றின் பெயர்களில் நிலவும் மாறுபாடு அல்லது முரண்பாடுகளையும் ஆராய்வதாக இந்தப் பத்தி அமைகிறது.

    1. நேரொன்று ஆசிரியத்தளை: ஈரசைச்சீர்கள் நான்கனுள் தேமா, புளிமா என்னும் வாய்பாட்டில் அமையும் (நேர் ஈற்று ஈரசைச்சீர்கள்) சீர்கள் நிற்க, வரும் சீர் முதலசை நேரசையாக இருந்தால் (வரும் சீர் எதுவாகவும் அமையலாம்) அது நேர் ஒன்று ஆசிரியத்தளை எனப்படும்.
    1. நிரையொன்று ஆசிரியத்தளை: ஈரசைச்சீர்கள் நான்கனுள் கூவிளம், கருவிளம் என்னும் வாய்பாட்டில் அமையும் (நிரையீற்று ஈரசைச் சீர்கள்) சீர்கள் நிற்க வரும் சீர் முதலசை நிரையசையாக இருந்தால் (வரும் சீர் எதுவாகவும் அமையலாம்) அது நிரை  ஒன்று ஆசிரியத்தளை எனப்படும்.
    1. இயற்சீர் வெண்டளை: ஈரசைச்சீர்கள் நான்கனுள் தேமா, புளிமா நின்று வரும் சீர் முதலசையோடு (வரும் சீர் எதுவாகவும் அமையலாம்) ஒன்றாததும் ஈரசைச் சீர்கள் நான்கனுள் கூவிளம், கருவிளம் நின்று வரும் சீர் முதலசையோடு (வரும் சீர் எதுவாகவும் அமையலாம்) ஒன்றாததும் இயற்சீர் வெண்டளை எனப்படும்.
    1. வெண்சீர் வெண்டளை: நேரீற்று மூவசைச்சீர்கள் பெரும்பாலும் வெண்பாவிற்குள் பயின்று வருவதால் அவை வெண்சீர்கள் என அழைக்கப்படும். அச்சீர்கள் (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) நின்று வரும் சீர் (அது எந்தச் சீராகவும் அமையலாம்) முதலசையோடு ஒன்றுவது வெண்சீர் வெண்டளையாகக் கருதப்படும்.
    1. கலித்தளை: மேற்சொன்ன நேரீற்று மூவசைச்சீர்கள் (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) நின்று வரும் சீர் (அது எந்தச் சீராகவும் அமையலாம்) முதலசையோடு ஒன்றாதது கலித்தளையாகக் கருதப்படும்.
    1. ஒன்றிய வஞ்சித்தளை: நிரையீற்று மூவசைச்சீர்களாகிய (தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி) பெரும்பாலும் வஞ்சிப்பாக்களில் வருவதால் இவை வஞ்சியுரிச்சீர் எனப்படும். அச்சீர்கள் நின்று வரும் சீர் (அது எந்தச் சீராகவும் அமையலாம்) முதலசையோடு ஒன்றினால் அது ஒன்றிய வஞ்சித்தளை என வழங்கப்படும்.
    1. ஒன்றாத வஞ்சித்தளை: மேற்சொன்ன நிரையீற்று மூவசைச்சீர்களாகிய (தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி) நின்று வரும் சீர் (அது எந்தச் சீராகவும் அமையலாம்) முதலசையோடு ஒன்றாதது ஒன்றாத வஞ்சித்தளை எனப்படும்.

    பெயர்ச்சிக்கல் – ஒரு பார்வை

    எழுவகைத் தளைகளையும் (தற்காலத்தில் பயன்படுத்துகிற முறைமையை ஏற்றுக் கொண்ட அடிப்படையில்) அவற்றிற்கான பெயர்களை ஆராய்ந்தால் தளைப்பெயர்களில் ஒரு ஒருங்கிணைப்பு அல்லது ஒத்திசைவு  காணப்படுவதாகத் தெரியவில்லை. இதனைப் பின்வரும் பதிவுகளால் உணரமுடியும்.

    1. நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் ஒன்றுவதற்குப் பெயரிட வேண்டுமானால் அதில் ஒரு ஒழுங்கமைவு (UNIFORMITY) இருத்தல் வேண்டும். ஆனால் அவ்வாறு இருக்கிறதா என்றால் உறுதியாக இல்லை. சான்றாக இயற்சீரின் ஈற்றசை நேரசையாக இருந்து வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது ‘நேர் ஒன்று ஆசிரியத்தளை.’ இதுபோல இயற்சீரின் ஈற்றசை நிரையசையாக இருந்து வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது நிரையொன்று ஆசிரியத்தளை. இதே நெறிதான் வஞ்சித்தளைக்கும் பின்பற்றப்படுகிறது. அங்கே நிரையீற்று மூவசைச்சீர் நின்று வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது ஒன்றிய வஞ்சித்தளை. ஒன்றாதது ஒன்றாத வஞ்சித்தளை. அதாவது ஈரசைச்சீர்கள் நின்று ஒன்றுவதும் கனிச்சீர்கள் நின்று ஒன்றுவதும் ஒன்றாததும் நின்றசீரின் பெயர்களையே பெறுகின்றன. (நேர் ஒன்று ஆசிரியத்தளை, நிரையொன்று ஆசிரியத்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை)
    1. இந்த நெறி இயற்சீருக்கும் நேரீற்று மூவசைச்சீருக்கும் பின்பற்றப்படவில்லை. இயற்சீர் நின்று, வரும் சீர் முதலசையோடு ஒன்றாவிட்டால் இயற்சீர் வெண்டளை என்று அழைக்கப்படுகிறது. நேரீற்று மூவசைச்சீர் அதாவது காய்ச்சீர் நின்று வருஞ்சீர் முதலசையோடு ஒன்றினால் ‘வெண்சீர் வெண்டளை’ எனப் புதுநாமம் கொடுப்பது ஏன் என்று புரியவில்லை. சீர் வெண்சீராக இருப்பதால் ‘நேர் ஒன்று வெண்டளை’ என்றுதானே பெயர் பெற்றிருக்க வேண்டும்? ‘நேர் ஒன்று ஆசிரியத்தளை’ என்றால் ‘நேர் ஒன்று வெண்டளை’ என்பதுதானே பொருந்தும்?
    1. ‘வெண்பாவிற்கான சிறப்புச்சீர் வெண்சீராகிய காய்ச்சீர்கள். எனவேதான் அது வெண்சீர் வெண்டளை ஆயிற்று’ எனச் சிலர் கூறலாம். வாதத்திற்காக அதனை ஏற்றுக் கொண்டால் காய்ச்சீர் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றாத தளைகளை ஒன்றாத வெண்டளை என்னாது ‘கலித்தளை’ என்பானேன்? கலித்தளை என்னும் சொல் வருகின்ற காலம் வரை ‘கலி’ என்ற சொல்லையே யாப்பு அறியவில்லையே? இலக்கிய நயத்தோடு கூறவேண்டுமானால் வெண்சீருக்குப் பிறந்த மாற்றுத் திறனாளியா கலித்தளை?
    1. இனி ஒன்றாததை எடுத்துக்கொண்டால் ஈரசைச்சீர் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றாதது நேர் ஒன்றாத ஆசிரியத்தளை என்றுதான் பெயர் பெற்றிருக்க வேண்டும். மாமுன் நிரையும் விளம் முன் நேரும் இத்தகைய பெயர் பெறாது ‘இயற்சீர் வெண்டளை’ என்று பெயர் பெறுவது ஏன்? வெண்சீருக்கு உரியதுதான் வெண்டளை என்றால் இயற்சீர் முரணுக்கும் வெண்டளை என்பது எப்படிப் பெயராக அமைய முடியும்?
    1. இதனால் தளைப்பெயர்களில் ஆசிரியத்தளையிலும் வஞ்சித்தளையிலும் ஒரு நெறியும் வெண்டளையில் வேறொரு நெறியும் பின்பற்றப்பட்டுள்ளதை அறியலாம்.

    வெண்டளை விடைகாண முடியாத சிக்கல் 

    1. ஒன்றுவதும் வெண்டளை –ஒன்றாததும் வெண்டளையா? இது ஒரு நுட்பமான வினா. அதாவது வெண்டளை என்பது வெண்பாவிற்கு உரியது. இயற்சீர்களின் ஈற்றசை முரணும் வெண்பாவிற்குள் வர அனுமதி உண்டென்பதால் அவையும் வெண்டளை என்றே அழைக்கப்படுகின்றன என்பர். ஆனால் சிக்கல் என்னவென்றால் காய்ச்சீரின் ஈற்றசையோடு வருஞ்சீர் முதலசை ஒன்றுவதற்கும் ‘வெண்டளை’ என்று பெயர் வைத்து, இயற்சீரின் ஈற்றசையோடு வருஞ்சீர் முதலசை ஒன்றாததற்கும் ‘வெண்டளை’ என்று பெயர் வைத்திருப்பது சிந்திக்க வைக்கிறது. ஒன்றுவதும் வெண்டளை? ஒன்றாததும் வெண்டளையா?
    2. எழு தளைகளில் மற்றவைகளின் முன்னொட்டுக்கள் சீர்களின் பெயர்ப்பகுதியைத் தாங்கி நிற்க (ஆசிரியத்தளை, வெண்டளை, வஞ்சித்தளை) ‘கலித்தளை’ என்பது அவ்வாறு அமையவில்லை என்பதை அறியலாம். அதாவது ‘கலிச்சீர்’ என்று ஒன்று இல்லாமலேயே  தளை மட்டும் அப்பெயரால் வழங்கப்படுகிறது. அதாவது கலிச்சீர் இல்லை ஆனால் கலித்தளை இருக்கிறது! எப்படி?

    சீர்கள் மற்றும் தளைகளின் திருநாமங்கள்

    எழுவகைத் தளைகளைப் பற்றிய மேற்படி காரிகையையும் அதற்கு முன்பாக அமைந்துள்ள சீர் பற்றிய ‘தண்ணிழல் தண்பூ தந்து உறழ்ந்தால் எண்ணிரு நாலசைச்சீர் வந்து அருகும்’ என்னும் காரிகை உட்பட பிற காரிகைகளையும் அவற்றிற்குக் குணசாகரர் எழுதிய உரைப்பகுதியையும் உற்றுநோக்கினால் பின்வரும் சில உண்மைகள் புலப்படுகின்றன.

    1. நேரீற்று ஈரசைச்சீர் என்றும் நேரீற்று மூவசைச்சீர் என்றும் நிரையீற்று ஈரசைச்சீர் என்றும் நிரையீற்று மூவசைச்சீர் என்றும் சீர்கள், அவற்றின் ஈற்றசை கொண்டு பெயர் பெற்றிருக்கின்றன.
    2. அகவற்சீர், ஆசிரிய உரிச்சீர், வெண்சீர், வெண்பா உரிச்சீர், வஞ்சி உரிச்சீர் எனப் பெரும்பான்மை இடம்பெறும் பாக்களின் அடிப்படையிலும் பெயர் பெற்றிருக்கின்றன.
    3. மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர், கனிச்சீர், பூச்சீர், நிழற்சீர் என வாய்பாடுகளின் அடிப்படையிலும் பெயர்பெற்றிருக்கின்றன.
    4. தளைகளைப் பொருத்தவரையில் நேர் ஒன்று ஆசிரியத்தளை, நிரையொன்று ஆசிரியத்தளை, ஒன்றிய வஞ்சித்தளை என்னும் நேர்முக இணைப்பில் பெயர் பெற்றிருக்கின்றன.
    5. ஒன்றிய ஆசிரியத்தளை, ஒன்றிய வஞ்சித்தளை என்னும் பெயர்கள் வழங்கியிருந்த வேளையிலேயே அவ்வாறு ஒன்றும் மற்றொரு தளைக்கு வெண்சீர் வெண்டளை என்னும் திருநாமமும் வைக்கப்பெற்றிருக்கிறது. முன்னவற்றோடு ஒப்புமையாக்கம் என்ற வகையில் அமைத்திருந்தால் இவை ‘ஒன்றிய காய்த்தளை’ அல்லது ‘ஒன்றிய வெண்பாத் தளை’ என்றல்லவா பெயர் பெற்றிருக்க வேண்டும்?
    6. ஒன்றாத வஞ்சித்தளை என்கிறார்கள். ஆனால் காய்ச்சீர் நின்று வரும் சீர் முதலசை ஒன்றாததை ஒன்றாத காய்த்தளை அல்லது ஒன்றாத வெண்டளை என்னாது ‘கலித்தளை’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். (இதற்குச் சில யாப்பியல் மேதைகள் ‘கலித்து’ வருவதால் கலித்தளை எனத் தம் புலமை மீதூர பொருளுரைத்து மகிழ்வர். வெண்பா உரிச்சீரின் முரண்கள் கலிப்பாவிற்குள் பெரும்பான்மையும் வருவதால் அது கலித்தளை அதாவது கலிப்பாவிற்குரிய தளை என்பது அடிப்படை அறிவு)
    7. அதுபோலவே ஒன்றாத ஆசிரியத் தளைகளை ஒன்றாத ஆசிரியத்தளைகள் என்னாது ‘இயற்சீர் வெண்டளை’ என்கிறார்கள்.

    எனவே சீர், தளை இவற்றின் பெயர்களைப் பற்றிய மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில் சில ஆய்வு உண்மைகளை நிரல்படுத்த  முடியும்.

    1. சீர்களுக்குப் பெயர் சூட்டுவதில் அசைகளின் எண்ணிக்கை, வாய்பாடுகள், அவை இடம்பெறும் பாடல்களின் பெயர்கள் ஆகியவை கருத்திற் கொள்ளப்பட்டுள்ளன.
    2. தளைகளுக்குப் பெயர் வைப்பதில் ஒவ்வொரு தொகுப்புச் சீர்களுக்கும் ஒவ்வொரு நெறிமுறை பின்பற்றப்பட்டுள்ளது. ஓர் தெளிவான ஒழுங்கமைதி இருப்பதாகத் தெரியவில்லை. அதாவது நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் ஒன்றுவதற்கும் ஒன்றாததற்குமான நிலைப்பாட்டை ஒரு குறிப்பிட்ட குறியீட்டால் குறிக்க இயலவில்லை.

    எந்தச் சீரும் வரலாமா? இந்தச் சீர்தான் வரவேண்டுமா?

    பொதுவாகப் பாக்களில் தளைவரம்பு பின்பற்றப்படுவதில்லை. அங்கே சீர்களும் அடி வரையறையுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. காரிகைக்குப் பின்னாலே மட்டுமன்று திருக்குறள் மற்றும் பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் முதலியவற்றில் காணப்படும் வெண்பாக்களில் கூட இயற்சீர் வெண்டளை அல்லது வெண்சீர் வெண்டளை என்பது நின்ற சீருக்கு மட்டுமே பார்க்கப்பட்டுள்ளது. அதாவது நின்ற சீர் ஆசிரிய உரிச்சீராக இருந்து வரும் சீர் முதலசையோடு ஒன்றாதது இயற்சீர் வெண்டளை எனப்பட்டது. இந்தச் சூழலில் வரும் சீர் ஆசிரிய உரிச்சீராக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த ஆய்வின் உயிர்நாடியே இதுதான். நின்ற சீரும் வருஞ்சீரும் ஒரே வகைச் சீராக இருந்து அவற்றின் ஈற்றசையும் முதலசையும் ஒன்ற வேண்டும் அல்லது முரண்பட வேண்டும். இதனைத்தான் காரிகை உரையாசிரியர் குணசாகரர் தமது உரையில் விளக்குகிறார்.

    நேரொன்று ஆசிரியத்தளை

    ‘வந்தான் போனான்’ என்பன தேமா வாய்பாட்டில் அமைந்த ஈரசைச்சீர்கள்.  நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் ஒன்றுகிறது. ஒரே சீர் ஒன்றுகிறது. எனவே இதுதான் நேர் ஒன்று ஆசிரியத்தளை. இவ்வாறின்றி ‘வந்தான் போவானா?’ என்றெழுதி இதுவும் நேர் ஒன்று ஆசிரியத்தளை என்றால், நின்ற சீர் ஒன்றாகவும் வரும் சீர் பிறிதொன்றாக அதாவது காய்ச்சீராக அமைந்திருப்பதும் காண்க.  இவ்வாறு அமைவது பற்றிக் குணசாகரர் எழுதுகிறார்.

    “ஆசிரிய உரிச்சீர் நின்று, தன் வரும் சீர் முதலசையோடு நேராய் ஒன்றுவது நேரொன்று ஆசிரியத்தளை”. “தணவாத என்று மிகுத்துச் சொல்லியவதனால் தன்சீர் நின்று பிறிதாகி வரும் சீர் முதலசையோடு ஒன்றுவதும் தன்தளையே சிறப்பின்று ஆயினும் எனக் கொள்க”

    (இந்த விளக்கத்தை நேரொன்று ஆசிரியத்தளை, நிரையொன்று ஆசிரியத்தளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை ஆகிய அனைத்திற்குமாகப் பொருத்திக் கொள்ளவேண்டும்)

    நிரையொன்று ஆசிரியத்தளை

    ‘கனிதரு மரமென’ என்பன கருவிளம் வாய்பாட்டில் அமைந்த ஈரசைச்சீர்கள்.  நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் ஒன்றுகிறது. ஒரே தன்மையான சீர் ஒன்றுகிறது. எனவே இதுதான் நிரையொன்று ஆசிரியத்தளை. இவ்வாறின்றிக் ‘கனிதரு புளியமரம்’  என்றெழுதி இதுவும் நிரையொன்று ஆசிரியத்தளை என்றால் நின்ற சீர் ஒன்றாக இருக்க வரும் சீர் பிறிதொன்றாக அதாவது காய்ச்சீராக அமைந்திருப்பது காண்க.  இவ்வாறு அமைவது பற்றிக் குணசாகரர் எழுதுகிறார்.

    “ஆசிரிய உரிச்சீர் நின்று, தன் வரும் சீர் முதலசையோடு நிரையாய் ஒன்றுவது நிரையொன்று ஆசிரியத்தளை” “தணவாத என்று மிகுத்துச் சொல்லியவதனால் தன்சீர் நின்று பிறிதாகி வரும் வரும் சீர் முதலோடு ஒன்றுவதும் தன்தளையே சிறப்பின்று ஆயினும் எனக் கொள்க”

    இயற்சீர் வெண்டளை

    ‘அகர முதல’ என்பதில் இரண்டு சீர்களும் இயற்சீர்கள். நின்ற சீரும் இயற்சீர். வரும் சீரும் இயற்சீர். நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் ஒன்றாததால் இது இயற்சீர் வெண்டளை. இதுதான் இயற்சீர் வெண்டளை என்பது காரிகை கருத்து. ஆனால் ‘முதல எழுத்தெல்லாம்’ என்பதும் இயற்சீர் வெண்டளை எனக் கொள்ளப்படுகிறது. இதில் என்ன சிக்கல் என்றால் நின்ற சீர் இயற்சீர். வரும் சீரோ புளிமாங்காய் என்னும் காய்ச்சீர்! இவ்வாறு அமைவது பற்றி, ‘ஒண்சீர் அகவல் உரிச்சீர் விகற்பமும் வெண்டளையாம்’ என்னும் தொடருக்குத் தாம் எழுதும் உரைப்பகுதியில் ,

    “ஒண்சீர்’ என்று சிறப்பித்தவதனால் ஆசிரிய உரிச்சீர் நின்று பிறிதாகி வரும் வரும் சீர் முதலோடு ஒன்றாததும்  இயற்சீர் வெண்டளையே சிறப்பின்று ஆயினும் எனக் கொள்க”

    என்று அது சிறப்பற்றது என்று குறித்திருப்பதைக் காணலாம்.

    வெண்சீர் வெண்டளை

    ‘யாதானும் நாடாமால்’ என்பது தேமாங்காய், தேமாங்காய் என்னும் வாய்பாட்டில் அமைவது. நின்ற சீரும் வரும் சீரும் வெண்பா உரிச்சீர்கள். ஒரே வகை. இவ்வாறு அமைவதுதான் வெண்சீர் வெண்டளை. ஆனால் ‘வையைக்கோன் கண்டான்’ எனத் தேமாங்காய் நின்று தேமாவின் முதலசையோடு ஒன்றுவதையும் வெண்சீர் வெண்டளை என்பது நடப்பியல். இது தவறு என்பது கருத்தன்று. இவ்வாறு அமைவது சிறப்பன்று என்றுதான் குணசாகரர் கூறுகிறார்.  தன்சீர் தனது ஒன்றின் தன் தளையாம் என்பது இதுதான். இது அமிதசாகரர் கருத்தாகக் குணசாகரர் கருதுவது. தன்னுடைய சீர் நின்று தன்னுடைய சீரோடு இணைவதே தனது தளையாகும் என்பது உரை.

    “வெண்பா உரிச்சீர் நின்று தன் வரும் சீர் முதலசையோடு ஒன்றுவது  வெண்டளையாம்”

    என்று உரையெழுதுகிறார் குணசாகரர். தொடர்ந்துத்,

    “தணவாத’ என்று மிகுத்துச் சொல்லியவதனால் தன்சீர் நின்று பிறிதாகி வரும் வரும் சீர் முதலோடு ஒன்றுவதும் தன்தளையே சிறப்பின்று ஆயினும் எனக் கொள்க”

    என எழுதுகிறார். மிகத் தெளிவாக அவர் எழுதுகிறார் அது சிறப்பற்றது என்று.

    கலித்தளை

    தளைகளிலேயே மிகவும் சிக்கலான ஆய்வுக்குரியது. மற்ற தளைகளுக்குச் சீர்கள் உண்டு. இந்தக் கலித்தளைக்குச் சீர்கள் இல்லை. அதாவது ஆசிரிய உரிச்சீர், வெண்பா உரிச்சீர், வஞ்சியுரிச்சீர் என்றெல்லாம் பாடலுக்கான சீர்கள் உண்டு. ஆனால் கலிப்பாவுக்காகத் தனித்த சீர்கள் இல்லாதபோதும் ‘கலித்தளை’ என்பது ஒன்று உண்டு. இது வியப்பிற்கும் ஆய்விற்கும் உரியது, வெண்பா உரிச்சீராகிய காய்ச்சீர் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றாதது கலித்தளை எனப்படும். வெண்பா உரிச்சீர் கலித்தளைக்குக் காரணமாகுமா என்பது பற்றியே ஓர் ஆய்வு தேவைப்படும் சூழலில் மற்ற தளைகளைப் போலவே வரும் சீர் முதலசையோடு ஒன்றாதது கலித்தளை என்பது பொருந்தாது. நின்ற சீர் வெண்பா உரிச்சீராக இருக்க வரும் சீரும் வெண்பா உரிச்சீராகவே இருக்க வேண்டும். சான்றாக  ‘எல்லாரும் வருவாரோ? தேமாங்காய் நின்று புளிமாங்காய் வர, முதலசை ஒன்றாததுவே கலித்தளை.  இருப்பினும்,

    “வல்லோர் வகுத்த என்று மிகுத்துச் சொல்லியவதனால் வெண்பா உரிச்சீர் நின்று பிறிதாகி வரும் வரும் சீர் முதலோடு ஒன்றாததும் கலித்தளையே சிறப்பின்று ஆயினும் எனக் கொள்க”

    என்று குணசாகரர் தரும் விளக்கத்தால் தற்போது பயன்பட்டுவரும் கலித்தளை என்பது உண்மையான கலித்தளைக்கான விதிவிலக்கே என்பது பெறப்படும்.

    ஒன்றிய வஞ்சித்தளையும் ஒன்றாத வஞ்சித்தளையும்

    தளைகளிலேயே மிகத் தெளிவாக அமைந்திருக்கும் இரண்டு தளைகள் இவை. நின்ற சீர் வஞ்சியுரிச்சீராக இருந்து வரும் சீரும் வஞ்சியுரிச்சீராக அமைய அவற்றுள் ஒன்றுவது ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாதது ஒன்றாத வஞ்சித்தளை என்ற அளவில் குழப்பமில்லாத ஒரு நிலை இத்தளைகளுக்கு உண்டு. அதாவது ‘கனிச்சீர்’ நின்று வரும் சீர் ‘புளிமாங்கனி, கருவிளங்கனி’ என ஒன்றினால் அது ஒன்றிய வஞ்சித்தளை. கனிச்சீர் நின்று வரும் சீர் தேமாங்கனி, புளிமாங்கனி என ஒன்றாவிடின் அது ஒன்றாத வஞ்சித்தளை. இந்த உண்மையைத் தெளிவுபடுத்துவதற்காகவே, ஒன்றிய வஞ்சித்தளைக்கு, ‘வெண்சாமரை புடைபெயர்தர’ எனத் ‘தேமாங்கனி மற்றும் கருவிளங்கனி’ என்னும் வாய்பாடுகள் அடங்கிய எடுத்துக்காட்டுக்களை அமிதசாகரர் தந்திருக்கிறார்.

    ‘ஒன்றாத வஞ்சித்தளைக்குச் ‘செந்தாமரை நாண்மலர்மிசை’ எனக் கூவிளங்கனி மற்றும் கூவிளங்கனி என்னும் வாய்பாடு அடங்கிய எடுத்துக்காட்டுக்களை அமிதசாகரர் தந்திருக்கிறார்.

    இந்த உதாரண முதல் நினைப்புக்காரிகை ஆசிரியர் அமிதசாகரருடையது. அதனால்தான் அவருடைய கருத்தினை நன்கு உள்வாங்கிக் கொண்டு காரிகைக்கு உரை காண்கிறார் குணசாகரர்.

    இத்தளைகளை இவ்வாறின்றி நின்ற சீர் மட்டும் வஞ்சியுரிச்சீராக இருந்து வரும் சீர் எதுவாயினும் அவற்றின் முதலசையோடு ஒன்றுவதும் ஒன்றாததும் அவற்றிற்கான பெயர்களால் அழைக்கப்பெறலாம் என்னும் விதிவிலக்கை,

    “வண்சீர் என்று சிறப்பித்தவதனால் வஞ்சி உரிச்சீர் நின்று பிறிதாகி வரும் சீர் முதலசையோடு ஒன்றாததூஉம் வஞ்சித்தளையே சிறப்பின்றாயினும் எனக் கொள்க”

    என்று உரைழுதி விளக்குகிறார்.

    ஆய்வில் கண்டறியப்பட்ட மெய்ம்மைகள்

    மேலே பல பத்திகளில் வலிமையான தரவுகளின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட ஆய்விலிருந்து பெறப்படும் உண்மைகள் பின்வருமாறு பட்டியலிடப்படுகின்றன.

    1. ஈரசைச்சீர் நான்கு, நேரீற்று மூவசைச்சீர் நான்கு, நிரையீற்று மூவசைச்சீர் நான்கு என்னும் பன்னிரண்டு சீர்களுக்குப பெயர் சூட்டுவதில் அவ்வளவாக இசைவு இல்லை.
    1. அசைகளின் எண்ணிக்கை, ஈற்றசைகளின் இயல்பு, வாய்பாடுகள், சீர்கள் இடம் பெறும் பாடல்கள் என்னும் இவற்றின் அடிப்படையில் பலவாறு அமைந்திருப்பது சிந்தனைக்குரியது. மேலும் இவ்வெல்லாச் சீர்களும் எல்லாப் பாக்களுள்ளும் மயங்கி வருவதால் பெயரிடுவதன் நோக்கம் முழுமையான வெற்றியடைந்தது எனக் கருதுவதற்கில்லை.
    1. தளைகளைப் பொருத்தவரையில் நின்ற சீரும் வரும் சீரும் ஒரே தன்மையனவாக இருந்தாலேயொழிய தளைகளின்  பெயர்கள் பொருத்தமற்றவையாகிவிடும். இதனால் தற்காலத்தில் கவிஞர்களால் கருத்திற் கொள்ளப்படும் தளைகள் ‘சிறப்பில’ என்னும் ஒரு தொடருக்குள் அடங்கிவிடுகின்றன.
    1. யாப்பறி புலவர்கள் தாங்கள் பயன்படுத்திவரும் தளை விகற்பங்கள் எல்லாம் விதிவிலக்கே என்பதைப் புரிந்து கொள்வது இக்கட்டுரையின் பயனாகக் கருதப்படலாம்.

    நிறைவுரை

    தரவுகளிலிருந்து கருதுகோளை உருவாக்குவதும், அதனை உறுதியாக்கும் மேற்கோள்களின் அடிப்படையில் நிகழ்த்தப்படுவதும் ஒரு தற்காலிகத் தீர்வினை எட்டுவதுமே ஆய்வு என்பதாகக் கருதப்படும். தரவுகளையே சரியாகப் புரிந்து கொள்ளாமல் கருதுகோளை உருவாக்கிக் கொள்வது பெரிதும் குழப்பத்திற்கும் சிக்கலுக்கும் வழிவகுக்கும். இந்தக் கட்டுரை தரவுகளைச் சரியான நெறியில் புரிய வைக்க முயலுகிறது. சிக்கலை அடையாளம் காண்பதே ஆய்வின் முதற்படி. தொடர்ந்து அச்சிக்கலின் தன்மையை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்விரண்டையும் இவ்வாய்வுக்கட்டுரை தன்னால் இயன்ற அளவுக்கு முன்னெடுத்திருக்கிறது.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ‘தன்சீர் தனதொன்றின் தன் தளையாம்’ என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் பரிந்துரை!

    இடையீடற்ற கற்றல் இயல்பாகவும் எடுத்தியம்பும் ஆற்றல் முயற்சியினாலும் அமைந்த ஆய்வாளர்களுக்கு  ஆய்வுக்கான கருதுகோள் எளிதாகக் கிட்டிவிடும். அத்தகைய சிறப்புக்குரியது இக்கட்டுரை.

    காரிகையாசிரியர் அமிதசாகரர் கூறும் தளை பற்றிய இலக்கணம் குணசாகரர் உரையால் விரிவு பெற்று நிறைவடைகிறது. நூலாசிரியர் விதிகளைக் கூறுகிறார். உரையாசிரியர் விதப்புக்கிளவிகளையும் அடைசொற்களையும் கொண்டு சிறப்பற்ற ஆனால் நடைமுறையில் உள்ள விதிவிலக்குகளைக் கூறுகிறார். இதனையே இந்தக் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.

    ‘சிறப்பில’ என்னும் ஒற்றைச் சொல்லால் அத்தனைப் படைப்புகளையும் மதிப்பீடு செய்துவிடுகிறார் குணசாகரர். அந்த மதிப்பீட்டினை மிக வலிமையான, தெளிவான தரவுகள் மூலம் ஆய்வாளர் விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

    எழுவகைத் தளை பற்றிய இந்த ஆய்வுக் கட்டுரையில் சீர்களின் திருநாமம் பற்றியும் ஆராய்ந்திருப்பது துணைவலி சேர்க்கும் ஆய்வு நுண்ணியமாகும்.

    தளை வரையறை என்பது நின்ற சீருக்கும் வரும் சீரின் முதலசைக்குமான ஒட்டுறவன்று, ஒரே  தன்மையனவாக அமைந்த இரண்டு முழுமையான சீர்களுக்கிடையே நிலவும் நல்லுறவு மற்றும் வல்லுறவு என்பதைக் காரிகை மற்றும் உரையாசிரியரின் விளக்கம் ஆகிய அகச்சான்றுகளைக் கொண்டு நிறுவியிருக்கும் இந்தக் கட்டுரையில் ஆய்வு நெறியை முழுமையாகப் பின்பற்றியிருப்பது போற்றுதற்குரிது.

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 28

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 28

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    அன்பலையில் மிதக்கும் அழகிய  உவமங்கள்

    ஓர் இலக்கியம் அல்லது அவ்விலக்கியத்துள் அமைந்துள்ள கவிதை படைக்கப்படுவதற்குப்  பல காரணங்கள் அமைந்திருப்பதுபோலவே அவை சுவைக்கப்படுவதற்கும் காரணங்ககள் பல. அருணாகிரியாரின் திருப்புகழை யாரும் இலக்கிய நயத்திற்காகப் படிப்பது என்பது இயலாது. ஆனால் வண்ண அமைப்பில் அமைந்திருக்கும் அதன் சந்தக் குழிப்புக்கள் அந்நூலை நோக்கி நம் ஆன்மாவை இழுக்கிறது என்பதில் ஐயமில்லை. அதன் ஈர்ப்பு விசை அதன் வண்ணத்தில் இருக்கிறது. கவிதைச் சுவையுணர்வுக்குக் கற்பனை, உணர்ச்சி, வெளிப்பாட்டு  உத்தி, யாப்பியல் நுட்பம் முதலியன தனியாகவும் கூட்டாகவும் கூடக் காரணிகள் ஆகலாம். பழந்தமிழ் இலக்கியங்கள், அவற்றின் சொற்செறிவு, இயற்கை மற்றும் உலகியல் சார்ந்த உவமங்கள், எளிய ஆசிரியப்பா கட்டுமானம், பெயரடைகள் மற்றும் வினையடைகள் முதலியவற்றால் காலத்தை வென்று நிற்கின்றன. அந்த வகையில் சங்க இலக்கியத்தில் ஒன்றாகிய குறுந்தொகையில் காணப்படும் சில உவமங்கள் ‘அடங்காது நிற்கும் அவற்றின் உவமச் சிறப்பு’ நோக்கி இந்தக் கடடுரையிலும் ஆராயப்படுகின்றன.

    மலரும் முள்ளும்

    ‘முள்ளும் மலரும்’ என்னும் ஒரு திரைப்படத் தலைப்பினைப் பொதுவாக அனைவரும் எண்ணும்மையாகக் கொண்டு அவற்றை இருவேறு பாத்திரங்களின் குறியீடாகக் கொண்டு அமைதியடைந்தனர். கற்பனை வளமுடைய சிலர் ‘கால நேரம் வந்தால் முள் கூட மலரும்’ அதாவது மலர்வதற்கு வாய்ப்பில்லாத முள்ளும் ஒரு காலத்தில் மலரும் என்று (THORN ALSO BLOSSOMS) அத்தலைப்பினைத் சுவைத்து மகிழ்ந்தனர்.  இதனையொத்ததொரு  ஒரு பாடல்.

    “நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே!
    புன்புலத்து மன்ற சிறியிலை நெருஞ்சி
    கட்கின் புதுமலர் முள் பயந்தாங்கு
    இனிய செய்த காதலர்
    இன்னா செய்தல் நோமென் நெஞ்சே” (குறு. 202)

    இப்படி அமைந்திருக்கிறது. அந்தப் பாட்டுப் பன்முக அழகுப் பரிமாணங்களைத் தன்னகத்தே கொண்டது. மலர் பயந்த செடியில் முள் முளைத்த காட்சியைச் சித்திரிக்கும் பாடல். அருகிருந்து இனிய செய்தவன் தலைவன். கறைபடிந்த புறவொழுக்கம் காரணமாகப் பரத்தையரிடம் சென்று திரும்பித் தோழியிடம் குறைநயந்து நிற்கிறான். தலைவனுக்காகப் பரிந்து பேசுகிறாள் தோழி. தோழியின் வாயிலைத் தலைவி மறுக்கிறாள். பாட்டை இப்படிக் கண்ணழித்தால் தலைவியின் உள்ளம் புரியும். உவமத்தின் சிறப்பு புலப்படும்.

    “இனிய செய்த காதலர், இன்னா செய்தல்
    நோமென் நெஞ்சே! நோமென் நெஞ்சே! நோமென் நெஞ்சே!”

    ‘நெஞ்சு சுடும்’ என்பது இதுதான். மூன்று முறைக்குமேல் சொல் அடுக்கி வராது எனினும் தலைவனின் புறவொழுக்கக் குறைபாட்டின்  விளைவை அவ்வடுக்கு நன்குணர்த்துகிறது. தலைவன் செயலுக்குத்தான் ஓர் உவமத்தைச் சொல்கிறாள் தலைவி.

    “தீயவன் நல்லவன் ஆவது இயல்பு. நல்லவன் தீயவனாவது எப்படி? என் தலைவன் அத்தகையவனாக அல்லவா மாறியிருக்கிறான்?. மிகச்சிறு இலைகொண்ட நெருஞ்சியில் கண் இனிக்க பூப்பூத்தது  முன்னாள். கைவலிக்க முள் விளைந்தது இந்நாள்! அதனை எண்ணுகிற பொழுதெல்லாம் என் நெஞ்சம் வேதனைப்படுகிறதே?”

    என்கிறாள் தலைவி. தன்னால் ஆளப்படுபவனாகவே தலைவன் இருக்க வேண்டும் என்னும் தலைவியின் ஆதங்கம் கண்ணுக்கு இனிய நெருஞ்சிப்பூவின் உவமத்தால் வெளிப்படுவதை அறியலாம்.

    ஏழூர் பொதுவினையும் ஓரூர் உலையும்

    ‘கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என் வயிறு’ என்னும் அழுகணிச் சித்தர் பாடல் வரிகளில் வரும் ‘அடிவயிறு’ என்பதற்குச் சித்தாந்தத்தின் அடிப்படையில்  பலரும் பலவாறு பொருள் சொல்வர். ஆனால் ‘கொல்லன் உலைக்கு’ உரை மாற்றம் இல்லை. இங்கே ‘கொல்லன் உலை’ என்பது நெருப்புக்குவியல். இதனோடு தொடர்புடையதுதான் ‘ஊதுலைக்குருகு’. ‘ஊதுலை’ என்பது உலை. ‘குருகு’ என்பது அதன் மூக்குப் பகுதி. தற்காலத்திலும் கொல்லன் பட்டறையில் ஒருவன் வயிறுபோன்ற பகுதிக்குப் பின்னால் இருந்து இயக்க, அப்பகுதி வழியாக வெப்பத்தோடு கூடிய காற்று, கட்டி நெருப்பைக் கனலாக்கும். மூக்குப் பகுதி வழியாக வரும் காற்றின் தன்மையையும் வேகத்தையும் வெப்பத்தையும் ஏமாற்றத்திற்கும், பிரிவாற்றாமைக்கும் உவமமாக்கியிருக்கிறார்கள் புலவர் பெருமக்கள்.

    “காதலர்ப் பிரிந்த  மாதர் நோதக
    ஊதுலைக்குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி” (சிலம்பு)

    “காதலர்க் கெடுத்த நோயொடு உளங் கனன்று
    ஊதுலைக் குருகின் உயிர்த்தனள்”  (சிலம்பு)

    “காதலர் இறப்பின் கனையெரி பொத்தி
    ஊதுலைக் குருகின் உயிர்தகவு அடங்காது
    இன்னுயிர் ஈவர்” (மணி. 2-43-45)

    என்றெல்லாம் ஆற்றாமைக்கு உவமமாக ஊதுலைக்குருகு பயன்பட்டு வந்துள்ளது. உள்ளுடல் கொதித்து வெப்பத்தோடு வெளியேறும் பெருமூச்சுக்கு ஊதுலைக் குருகின் காற்று உவமம் பொதுவாகத் தலைவனையோ கணவனையோ மகளிர்க்கு உவமமாக்கப்படும் இந்த ஊதுலைக் குருகு என்பது மரபு சார்ந்தது.

    “ஏழ் ஊர்ப்பொதுவினைக்கு ஓரூர் யாத்த
    உலைவாங்கு மிதிதோல் போலத்
    தலைவரம்பறியாது  வருந்தும் என் நெஞ்சே!” (குறு. 172)

    என்பது ஒரு தலைவியின் ஆற்றாமையைச் சித்திரிக்கும் சங்க இலக்கியப் பாடல் பகுதி. இவள் என்ன சொல்கிறாள்? ஒருபடி மேலே செல்கிறாள். உவமத்தின் அடர்த்தியைக் கூடுதலாக்குகிறாள். சாதாரண உலையில் உள்ளூரைச் சார்ந்த அல்லது அதற்குத் தேவையான ஒருசில தளவாடங்கள் உருவாக்கப்படும். எனவே நெருப்பும் அதற்கான ஊதுலையின் அளவும்  வரம்புக்கு உட்பட்டு இருக்கும். ஏழு ஊர்களுக்குத் தேவையான தளவாடங்களை ஒரே ஊரில் உள்ள ஒரே ஊதுலையில் தயாரித்தால் அந்த ஊதுலையின் பரிமாணம் எப்படி இருக்கும்? அந்த ஊதுலையின் குருகிலிருந்த வெப்பக் காற்று எப்படி இருக்கும்? தலைவனைப் பிரிந்த எல்லலையற்ற ஆற்றாமையை இவ்வாறு வெளிப்படுத்துகிறாள் தலைவி. ஊதுலையின் பரிமாணத்தைத் ‘தலைவரம்பற்ற தனது வருத்தத்தின்’ மேல் வைத்துக் காட்டும் நுட்பம் ஓர்க. பின்னாளில் தனிமனிதன் காணும் வாழ்க்கைச் சிக்கலைப் இராமச்சந்திரக் கவிராயர்,

    “ஆவீன, மழைபொழிய, இல்லம் வீழ,
    அகத்தடியாள் மெய்நோக, அடிமை சாக,
    மாவீரம் போகுதென்று விதைகொண்டோட,
    வழியிலே கடன் காரர் மறித்துக் கொள்ள,
    சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற,
    தள்ளவொண்ணா விருந்துவர, சர்ப்பந் தீண்ட,
    கோவேந்தன் உழுதுண்ட கடனைக் கேட்க
    குருக்களோ தட்சணையைக் கொடுஎன் றாரே!”

    எனத் ‘துன்பக் கலம்பகம்’ பாடுதற்குச் சங்க இலக்கியத் தலைவியும் ஒரு வழிகாட்டியாக இருக்கலாமோ?

    விலகினால் சுடும்! நெருங்கினால் குளிரும் நெருப்பு!

    கவிதையில் சொல்லப்படும் கருத்தே கவிதையாகாது. அக்கருத்து சொல்லப்படும் முறையே கவிதையைத் தீர்மானிக்கிறது. இந்த முறைக்கு இலக்கிய உத்தி என்னும் பெயரும் பொருத்தமானதே. தலைவன் அருகிருந்தால் தலைவிக்கு மகிழ்ச்சி. அவன் அவளை விட்டுப் பிரியும் நேர்வுகளில் அவள் வருந்துவாள். இப்பிரிவு களவியலில் ஒரு வகையாகவும் கற்பியலில் ஒருவகையாகவும் அமையும். இருப்பினும் பிரிவுத்துன்பத்தால் வரும் ஆற்றாமையும் அதன் காரணமாக உடலில் தோன்றும் நிறவேறுபாடும் தவிர்க்க முடியாதவையே. கல்லூரி விடுமுறையால் பிரிந்தால் களவியல் பிரிவு. ஆடி மாதத்திற்குத் தாய்வீட்டுக்கு மனைவி சென்றால் கற்பியல் (இல்லறம்) பிரிவு.  அவ்வளவுதான்.

    “நீங்கின் தெரூஉம் குறுகினால் தண் என்னும்
    தீ யாண்டு பெற்றாள் இவள்”

    என்பது வள்ளுவர் கண்ட தலைவன் மயக்கநிலை கூற்று! எதனாலே இதனைத் தலைவனின் மயக்கம் என்கிறோம் எனின் தலைவனின் காமத்தீயால் அவன் தன்னையே சுட்டுக் கொள்கிறான். ஆனால் அத்தீ தலைவியால் வெளிப்படுதலின்  எங்கே பெற்றாள் என்று அவள் மீது வைத்துக் கூறுகிறான். நீங்குவதும் குறுகுவதும் இவன்தானே! இந்த நோய் தலைவனுக்குப் பசப்பு என்றால் தலைவிக்கு இது பசப்பாக மாறும்.

    “விளக்கற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன்
    முயக்கற்றம் பார்க்கும் பசப்பு” (குறள்.1186)

    என்னும் தலைவி கூற்றில் இதனை உணரலாம். விளக்கு முற்றும் அணைந்தால்தான் இருட்டு வரும் என்பதன்று. ‘விளக்கொளி’ குறையத் தொடங்கினாலே இருள் பரவத் தொடங்கும். இருள் ‘விளக்கொளி’ எப்போது குறையும் என்று காத்திருக்கும். அதுபோல முயங்கிய தலைவன் எப்போது விலகத் தொடங்குவான் என்று பசலை நோய் காத்திருக்குமாம். ‘அற்றம்’ என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் ‘மெலிவு’ என்று உரை காண்பதற்கு இதுதான் காரணம்.  இந்தப் பசலை தன்மேனியில் படர்வதற்கு அக்காலத் தலைவி ஓர் உவமம் கூறியிருக்கிறாள். அது எல்லாரும் அறிந்த உவமம். இன்றைக்கும் காணப்படுகிற காட்சி!

    “ஊருண் கேணி உண்டுறை தொக்க
    பாசி யற்றே பசலை? காதலர்
    தொடுவுழித் தொடுவுழி நீங்கி
    விடுவழி விடுவழிப் பரத்த லானே!” (குறு. 399 பரணர்)

    ஊர் மக்கள் நீரெடுத்துப் பயன்படுத்தும் கேணி மக்கள் பயன்படுத்துகிற காலத்தில் தூய்மையாகவும் பயன்படுத்தாது விடுபட்ட காலத்தில் பாசி படர்ந்தும் காணப்படுவது இன்றைக்கும் காணக்கூடியது.  தலைவனோடு கூடியிருக்கும் காலத்துத் தன் மேனியில் படரத் தயங்கிய பசப்பு அவன் பிரிந்த நொடியிலிருந்து பரவுகிறதாம். பசப்பு பாசியான கதை இதுதான். இந்தக் கதையைக் கலித்தொகை தலைவி இன்னும் ஆழமாகச் சொல்கிறாள்.

    “குடிபுறம் காத்தோம்பும் செங்கோலான் வியன்தானை
    விடுவழி விழுவழிச் சென்றாங்கு அவர்
    தொடுவழித் தொடுவழி நீங்கின்றல் பசப்பே”  (கலி. 130)

    மக்களை அன்பால் காத்து ஓம்பும் செங்கோல் மன்னனுடைய பெரிய படைகள் நாலாப் பக்கத்துப் பகைவர் மீதும் ஏவ, அப்பகைவர்கள் ஓடி மறைந்து செத்து ஒழிவதைப்போலப் பிரிந்த என் தலைவன் என்னைத் தொடத் தொட நீங்கியது என்கிறாள். மன்னன் படைகண்டு பகைவர் ஒழிந்தனர். தலைவன் தீண்டுதல் கண்டு பசலை ஒழிந்தது. அணைந்தால் குளிர்ச்சி! பிரிந்தால் கொதிப்பு! விளக்கொளி குறையும் காலம் பார்க்கும் இருட்டு!  நீரெடுத்தால் படராத பாசி எடுக்காவிட்டால் படரும்! படைகண்டு பகை நடுங்கும்! தலைவன் தொடல் அறிந்துப் பசலை நீங்கும்! பிரிவுத்துன்பத்தைத்தான் எப்படியெல்லாம் எத்தனை உவமங்கொண்டு விளக்கியிருக்கிறார்கள் பாருங்கள்?

    திண்கரை பெருமரம் போல

    பயன்படுத்தாத ஊருணியில் படர்ந்த பாசிக்கு ஒப்பானது தலைவனைப் பிரிந்த காலத்துத் தன் மேனியில் படர்ந்த பசலை என்பது ஒரு தலைவியின் இரங்கத்தக்க நிலை. தலைவன் வந்த நிலையில் அவனோடு முயங்கும் முயக்கம் எத்தகையது என்பதற்கும் அதே ஊருணிக் கரை உவமமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பயன்படுத்துவதால் விலகும் பாசி அங்கே உவமம். தலைவன் அருகிலேயே இருப்பதால் நீர்ப்பிடிப்புக் கரையில் வளர்ந்த திண்மரம் இங்கே உவமம். அந்தப் பாடல் இப்படி அமைந்திருக்கிறது.

    “மெல்லிய லோயே! மெல்லிய லோயே!
    நன்னாள் நீத்த பழிதீர் மாமை
    வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின்
    சொல்ல கிற்றா மெல்லிய லோயே!
    சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே
    நாள் இடைப்படா நளிநீர் நீத்தத்து
    திண்கரை பெருமரம் போலத்
    தீதில்நிலைமை முயங்குகம் பலவே” (குறு. 168)

    கரை நொய்தாயின் மரத்திற்கு அழிவுண்டாமாகலின் ‘திண்கரை’ என்கிறாள் தலைவி. நீத்தம் என்றால் வெள்ளம். ‘நீர்ப்பிடிப்பான் கரையில் வளர்ந்த உறுதியான மரம்’ என்ற தொடர் தலைவனின் தண்ணளியை உணர்த்தியது. அவன் அன்பென்னும் நீர் சுரக்கும் என்பது கருத்து. இனி ‘நாள் இடைப்படா நளிநீர்’ என்றதனால் இடையிடாது மக்கள் நீரைப் பயன்படுத்துவதுபோலத் தலைவனின் அன்பும் அரவணைப்பும் தொடர்ந்து தனக்குக் கிட்டும் என்பதாம். தலைவன் பிரிந்து சென்ற வருத்தத்திற்கு இரங்காது பழிதூற்றியவரும் இவ்வூரினரேயாதலின் தலைவன் அருகிருக்கும் அதாவது வரைவுமலிந்திருக்கும் காலத்தில் அவர்கள் தலைவிக்குச் ‘சிறியர்’ ஆயினர். தான் தலைவனோடு கொண்ட பேரன்பின் காரணமாக நிலம்பக வேர்பிடித்து நிற்கும் மரத்தைத் தனக்குத் தானே உவமித்துக் கொண்டாள் தலைவி.

    தலைவன் தன்னோடிருக்கும் போது தான் ஒரு திண்மரம் எனச் சொல்லுகிற தலைவியின் கூற்றில் அமைந்துள்ள உவம அடைச்சொற்கள் தலைவியின் உள்ளக் கூறுகளைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளதைக் காணலாம்.

    வேழத்தை மிரட்டிய வெள்ளரவுக் குருளை

    எளிய சிறிய செய்தி. அது மொழியாளுமை கொண்ட படைப்பாளன் ஒருவன் சிந்தனையில் கவிதையாக மலர்கிறபோது சொற்களின் எண்ணிக்கை புறந்தள்ளப்படுகிறது. குறள் வெண்பாவாகிய ஏழு சீர்கள் திருவள்ளுவருக்குப் போதுமானவையாக இருந்தன. சத்திநாதனார் என்னும் சங்கப்புலவருக்குத் தலைமகன் ஒருவனின் காதல் துயரத்தைக் கவிதையாக்கப் பதினைந்து சொற்கள் போதுமானவையாக இருந்திருக்கிறது. இந்தப் பதினைந்து சொற்களில் தலைவியின் புன்னகையால் சிதறடிக்கப்பட்ட ஆண்மை சித்திரிப்புக்கு ஆளாகிறது. காதல் விளையாட்டில் தலைமகன் எவ்வாறு எளியனாகிறான் என்பனவற்றையெல்லாம் இரத்தினச் சுருக்கமாகப் பதிவு செய்திருப்பதை அறியமுடிகிறது.

    “சிறு வெள் அரவின் அவ்வரிக் குருளை
    கான யானை அணங்கி யாங்கு
    இளையள் முளைவாள் எயிற்றள்
    வளையுடைக் கையள் எம அணங்கி யோளே!” (குறு. 119)

    இந்தப் பாடடில் பொருளின்கண் வந்துள்ள அடைகளும் உவமத்தின்கண் வந்துள்ள அடைகளும் பெரிதும் சுவைத்தற்குரியன. முதலில் பாம்புக்குட்டிக்குக் ‘குருளை’ என்னும் பெயர் வழக்கு உண்டு என்பதை அறிதல் வேண்டும். ‘கருநாகம்’ என்பதினின்று பிரித்தற்கு ‘வெள்ளரவு’ என்கிறார். அவ்வரவின் மேல் அழகான வரிகள் இருக்கும். அவள் புன்முறுவலே தன்னைத் தாக்கியது என்பதை ‘முளைவாள் எயிற்றள்’ என்னும் சொல்லால் குறிக்கிறான் தலைவன். முகைமொக்கும் நகை  மொக்கும் ஒன்றல்லவா? போர்க்களத்தில் நண்ணாரும் உட்கும் தலைவனின் பீடு இச்சிறுமுது குறைவியின் புன்னகைக்குச் சீரழிந்தது என்பது கருத்து.

    ‘சிறு வெள்ளரவு’ என்பதற்கேற்ப ‘இளையள் வாள் முளை எயிற்றள்’ என்னும் ஒப்புமை காண்க. தலைவியைத் தழுவிய போது அவன் கண்ணுக்குக் கிட்டியது அவள் கையேயாதலின் கையள் என்றான்.

    பாம்புக் குட்டி யானையை அச்சுறுத்துமா எனின் அது வழக்கியல் சார்ந்த இலக்கியப் பதிவு என்க. “அளைதாழ் அரவும் அரியும் செந்தீயும் அரசும் இளைதாயினும் கொல்லும்” என்னும் அம்பிகாபதிக்கோவை வரி பாம்புக்குட்டியும் அணங்குதற்குரியது என்பதைச் சுட்டுகிறது. இனிக் “குஞ்சரம் கோள் இழைக்கும் பாம்பு” என்னும் திருச்சிற்றம்பலக் கோவை வரி பாம்பு யானையை அணங்கும் என்பதைக் காட்டுகிறது.

    ஒரு நான்கு வரிப் பாடலில் ;காணப்படும் இந்த உவமச் செறிவு என்பது தற்கால மரபுக்கவிதை எழுதுகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்களின கவனத்தை ஈர்க்குமா?

    நிறைவுரை

    அகவுணர்வுகளை வெளிப்படுத்துகிறபோது குறிப்பாகவே வெளிப்படுத்த வேண்டும் என்பது தமிழ் அகத்திணை மரபு. இந்த மரபை நூறு விழுக்காடு பின்பற்றி அமைந்திருப்பது சங்க இலக்கியம். ஆழமும் நுட்பமும் உடைய அகமனத்து அதிர்வுகளை இயற்கை சார்ந்த உவமங்களாலும் உலகியல் சார்ந்த உவமங்களாலும்  உள்ளங்கவர் முறையில் விளக்கிக் காட்டுவது அதன் தனிச்சிறப்பு. மக்கள் நாளும் பயன்படுத்தும் ஊருணிக்கரையும் அதன் கரைவளர் மரமும் கூட உவமமாகியிருக்கிறது.  திருவள்ளுவர் பேரறிவாளன் திருவிற்கு ஊருணியை உவமமாக்கினார். சத்திநாதனார் அதன் பயன்பாட்டைத் தலைவியின் பசலை நோய்க்கு உவமமாக்கினார். குறைந்த சொற்கள்! எளிய கட்டுமானம்! அழகிய உவமம்! ஆழமான பொருள்! இவற்றின் வேதியல் கலவைதான் சங்க இலக்கியம்!

    (தொடரும்…)

    Share
  • கதையும்  மொழிதலும் – 8 பி.எஸ். ராமையாவின் ‘பணம் பிழைத்தது’

    கதையும் மொழிதலும் – 8 பி.எஸ். ராமையாவின் ‘பணம் பிழைத்தது’

    முனைவர் ம. இராமச்சந்திரன்

    சி.சு.செல்லப்பாவால் கொண்டாடப்பட்ட சிறுகதை எழுத்தாளர் பி.எஸ்.ராமையா. இவரின் சிறுகதைகளை ஆய்வு செய்து ‘பி.எஸ்.ராமையாவின் சிறுகதை பாணி’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறார். ‘மணிக்கொடி முதல்வர்கள்’ என்ற நூலிலும் பி.எஸ். ராமையாவின் சிறுகதைப் போக்குகளைப் பற்றி விரிவாக விவாதித்துள்ளார். அந்த அளவிற்கு பி.எஸ். ராமையாவின் சிறுகதைப் பங்களிப்பு வியக்கத்தக்கது. மணிக்கொடி இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றுச் சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்டவர் பி.எஸ். ராமையா. தமிழ்ச் சிறுகதையின் தொடக்கக்கால ஆளுமைகளில் மிகவும் போற்றத்தக்கவராகப் பலரால் கருதப்பட்டவர் இவர். அதே நேரத்தில் இவரின் கதைகள் காலத்தைக் கடந்து நிற்கும்  ஆற்றலோ, நவீனத்துவமோ இல்லை என்று விமர்சிக்கப்பட்டவரும் இவரே. இவ்வாறு பி.எஸ்.ராமையாவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிடைத்து வந்தன. ஆதரவாளர்களில் முக்கியமானவராகச் சி. சு. செல்லப்பாவும் எதிர்க் கருத்துக் கொண்டவர்களில்  முக்கியமானவராகக் க.நா.சு.வும் விளங்கினார்கள்.

    மணிக்கொடி இதழ் காந்தியச் சிந்தனையைப் பின்புலமாகக் கொண்டு வெளிவந்தது. அதே போல தமிழ்ச் சிறுகதை எப்படி அமையவேண்டும் என்ற கோட்பாட்டு வரையறையோடு நவீனச் சிறுகதைகளை வரவேற்றது. தமிழக மரபில் பரவலாகப் பேசப்பட்ட, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடுநிலையான வாழ்க்கைச் சூழலை மையமாகக் கொண்ட கதைகள் (மணிக்கொடி எழுத்தாளர்கள்) இவர்களால் எழுதப்பட்டன. பழமைக்கும் புதுமைக்குமான போராட்டத்தில் பழமையின் சிறப்புகளை வெளிப்படுத்தும், போற்றும் வகையில் இவர்களின் கதையமைப்பும் கதைக்கருவும் இருந்தன. இதே காலகட்டத்தில் நவீனத்துவத்தின் வரவும் நகர வாழ்க்கையின் போதாமையும் சிக்கல்களும் பரவலாகக் கதையாக்கப்பட்டன. இவ்வாறு இரண்டு

    போக்குகளுக்கும் ஆதரவும் மறுப்பும் இருந்து கொண்டே வந்தன. பி.எஸ்.ராமையா மரபான வாழ்வியல் கூறுகளையும் மக்கள் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கதைகளை எழுதினார். இவரின் கதைகள் அக்காலத்தில் பரவலாகப் படிக்கப்பட்டன. பாராட்டப்பட்டன. இவரின் முக்கியமான கதைகளில் ஒன்று ‘பணம் பிழைத்தது’.

    பிழைப்புத் தேடி சென்னைக்குச் சென்ற முதலியாரின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. முதலியார் வியாபாரத்திற்காகச் சென்னைக்கு இடம்பெயர்ந்து பெரும் பணக்காரராக மாறுகிறார். முப்பது ஆண்டு வியாபாரத்தில் பெரும் செல்வந்தராக மாறுகிறார். முதுமையின் அறிகுறிகள் அவ்வப்போது தலை காட்ட தொடங்கின. ஒரு கட்டத்தில் இவரின் உழைப்பும் சுறுசுறுப்பும் தேக்கம் அடைகின்றன. காலத்தின் கைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள எண்ணுகிறார். ஆனால் முதுமையும் நோயும் இவரை ஆட்கொள்கின்றன. தொழிலில் ஏற்படும் மன நெருக்கடிகளும் உடலின் முதுமையும் இவரை மனதளவிலும் முதுமை ஆக்குகின்றன. முப்பது ஆண்டு கால வாழ்க்கையில் இத்தகைய நெருக்கடிகளைச் சந்தித்தவர் இல்லை முதலியார்.

    ஒருகட்டத்தில் உடலும் மனமும் ஒத்துழைக்காத அளவிற்கு நோய் தீவிரமடைந்தது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொழிலிலிருந்து சற்று விலகி ஓய்வு எடுக்குமாறு கூறுகின்றனர். பலரின் ஆலோசனைகளைக் கேட்ட பிறகு வழக்கம்போல அவற்றைப் பின்பற்றாமல் தனது போக்கில் முடிவெடுக்கிறார். முப்பது ஆண்டுகால உழைப்பில் சேர்த்த சொத்துக்களைத் தனது சொந்த கிராமத்திற்குச் சென்று பராமரிக்கலாம் என்று முடிவெடுக்கிறார். ஆனால் சொந்த கிராமத்திற்குச் சென்ற சில நாட்களிலேயே அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைகிறது.

    முப்பது ஆண்டுகளாகச் சேர்த்து வைத்த நிலபுலன்களைப் பார்த்துத் தனது வளர்ச்சியின் வேகத்தை எண்ணுகிறார். இவற்றையெல்லாம் முறையாக எதிர்காலத்தில் பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் தேவையான செயல்களைச் செய்ய எண்ணுகிறார். ஆனால் இவரின் உடல் நிலை மோசமடைகிறது. மருத்துவர்களின் வருகையும் மருத்துவமும் கிராமத்திலேயே நடைபெறுகின்றன. என்றாலும் சில நாட்கள் உடல்நிலை தேறுவதாக இருந்தாலும் பிறகு மீண்டும் மோசமடைந்து விடுகிறது. ஒரு கட்டத்தில் முதலியாரின் மனமும் மரணத்தை நோக்கியே எண்ணுகிறது. அப்பொழுது தெரு நாயின் ஊளைச் சத்தம் வீட்டில் இருப்பவர்களை அச்சம் கொள்ள செய்கின்றது. உறவினர்கள் நாயைக் கல்லெறிந்து விரட்டும் ஓசை கேட்கிறது. முதலியார் படுக்கையில் படுத்தபடியே நடப்பவை எல்லாவற்றையும் உற்று நோக்குகிறார். தனக்கு மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வீட்டின் வாசலில் எமன் வந்து நிற்கிறான். எப்படியாவது அவனிடமிருந்து தப்பிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் கிடைத்தால் தனது சொத்துக்களையெல்லாம் முறைப்படுத்தி விடலாம் என்று எண்ணிக்கொண்டே இருக்கிறார். திடீரென்று அவருக்கு யோசனை தோன்றுகிறது. தனக்குப் பதிலாக யாராவது மரணத்தைத் தழுவிக் கொண்டால் அவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் தருவதாக எண்ணுகிறார்.

    இதனைச் செயல்படுத்துவதற்குத் தனது செக் புக்கை எடுத்து வருமாறு கூறுகிறார். அந்தநேரத்தில் கிராமத்தில் ஒரே கலவரமாக இருக்கிறது. வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் ஓடிச்சென்று என்ன நடக்கிறது என்பதைக் கவனித்து வந்தவர்கள் பேசிக்கொண்ட பேச்சொலி முதலியாரின் காதில் விழுகிறது. பக்கத்துத் தெருவில் இருக்கக்கூடிய ஒருவரின் வீட்டிற்குத் திருடன் வந்து, வீட்டில் உள்ள நகைகளை எல்லாம் திருடிச் சென்றுவிட்டான். அப்படி செல்லும்போது அருகில் இருப்பவர்கள் அவர்களைத் துரத்திச் சென்றனர். துரத்தி சென்ற ஒருவனுக்கும் திருடனுக்கும் ஏற்பட்ட மோதலில் திருடனால் குத்தப்பட்டு அதே இடத்தில் இறந்து விட்டான் அவனைத் துரத்தி சென்றவன் என்ற செய்தியும் இறந்தவன் மிகவும் நல்லவன் என்றும் இப்பொழுதுதான் அவனுக்குத் திருமணம் ஆகியிருக்கிறது என்றும் அவர்களின் பேச்சிலிருந்து முதலியார் அறிந்துகொள்கிறார்.

    இதனைக் கேட்ட உடனே முதலியாருக்கு உடலில் புதுத்தெம்பு கூடுகிறது. கண்களைத் திறக்க முயற்சிக்கிறார். எளிமையாகத் திறக்க முடிகிறது. கை கால்களுக்கு ஒரு வலிமை வந்தது போல் உணர்கிறார். அவரது மனம் சொல்லியது, ‘எமன் எனது வீட்டிற்கு வரவில்லை. பக்கத்து வீட்டிற்குத் தான் வந்திருக்கிறான். இப்பொழுது எனக்கு மரணமில்லை’ என்று எண்ணுகிறார். உடனே தனது உறவினரிடம் எழுதிக் கொடுத்த செக்கைக் ‘கிழித்துப் போடு’ என்று கூறுகிறார். உறவினர் ‘செக் புக்கில் எதுவுமே எழுதவில்லை, எதற்காகக் கிழித்துப் போட வேண்டும்’ என்று கூறுகிறார். இதனைக் கேட்டவுடன் முதலியாருக்கு மனதிலே தோன்றிய எண்ணமே பணம் பிழைத்தது. அதுமட்டுமல்லாமல் தனது முப்பதாண்டுக் கால வாழ்க்கையில் முதலியார் நஷ்டம் அடையும் எந்தத் தொழிலையும் செய்ததில்லை. ஆகையால் தனக்குப் பதிலாக இரண்டு லட்சம் ரூபாய் தருவதாகக் கூறியது, தன் வீட்டிற்கு எமன் வரவில்லை என்பதால் அத்தொகையை வழங்க வேண்டாம் என்ற எண்ணம் இங்கே முதலியாரின் மன ஓட்டத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.

    கதையைப் படிக்கும் வாசகர்களுக்கு முதலியார் அந்த இரண்டு லட்ச ரூபாயை இறந்தவனுக்குக் கொடுக்கப்போவதுபோல ஒரு எண்ண உணர்வைத் தோற்றுவித்து விடுகிறார் பி.எஸ்.ராமையா. இறந்தவனின் குடும்ப வாழ்க்கையும் அவனது துன்பங்களும் இவரால் துடைக்கப்பட்டுவிடும் என்ற ஒரு உணர்வைக் கதையின் ஊடாக எடுத்துச் சென்றாலும் இறுதியில் முதலியாரின் மனப்போக்குத் தனது பணத்தைப் பாதுகாப்பதில் இருப்பதைக் கதை ஆசிரியர் பதிவு செய்யும்போது வாசகனுக்கு ஒரு மிகப்பெரிய ஏமாற்ற உணர்வையும் சிந்தனைச் சிக்கலையும் ஏற்படுத்தி விடுகிறார். இங்கே கதை தொடர்ந்து சிந்திப்பதற்கான சூழலை அமைத்துத் தருகிறது. அந்தவகையில் இக்கதையின் முக்கியத்துவம் வாசகர் மனதில் சிறு பாதிப்பை ஏற்படுத்தி செல்கிறது.

    மரணத்திற்கும் வாழ்க்கைக்குமான போராட்டத்தில் மனித மனமானது தனது கடந்த கால வாழ்க்கையை எப்படி எல்லாம் அசை போடுகிறது என்பதையும் இவ்வளவு காலத்தில் கட்டமைத்த ஒரு பொருளாதார வாழ்க்கை சிதையாமல் அதைப் பாதுகாப்பதற்கான எண்ண ஓட்டங்களும் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஏற்படும் எதார்த்தமான சூழல் தான். அத்தகைய ஒரு எதார்த்த சூழலை இக்கதையில் பதிவு செய்திருக்கிறார் பி.எஸ்.ராமையா. ஆனால் கதையின் முடிவானது மனித இயல்பை லட்சியவாத போக்கிற்குக் கொண்டு செல்லாமல் எதார்த்த நிலைக்கு ஏற்றவகையில் முடித்திருப்பது சிறப்பானதாக அமைந்துள்ளது. பி.எஸ்.ராமையா இக்கதையை முடிக்கும்போது முதலியாரை ஒரு தியாகச் செம்மலாக மாற்றியிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் ஒரு வியாபாரியின் என்ன போக்கிற்கு ஏற்ப இக்கதையை நிறைவு செய்திருப்பது கதாபாத்திரங்களின் செயல்பாடுகளில் கதையாசிரியர் தலையிடக்கூடாது என்கிற செயல்பாடு இங்கே சிந்திக்கத்தக்கது.

    கதையின் கட்டமைப்பு மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. வாசகனை எந்த இடத்திலும் விலகிச் செல்லாமல் கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் சூழலோடு கதை நகர்ந்து செல்கிறது. மரபான சிந்தனைப் போக்கில் வாசகனைக் கதையோடு கட்டிப்போடும் ஆற்றல் இக்கதைக்கு இருக்கிறது. இவரின் மொழிநடையும் வாசகனுக்கு எந்த வாசிப்புத் தடையும் இல்லாமல் நீரோடையாகச் செல்வதை உணர முடிகிறது.

    பி.எஸ்.ராமையா மணிக்கொடியில்  அதிகமான கதைகளை எழுதியிருக்கிறார். ஆனால் இவரின் பல கதைகள் இன்றைய சிறுகதை வாசிப்பிற்கு ஏற்றதாக அமையவில்லை என்றாலும் சிறுகதை வளர்ச்சியின் தொடக்கக் காலத்தில் அக்கதைகளின் இருப்புக் காத்திரமான பங்களிப்பைச் செய்திருப்பதை மறுப்பதற்கில்லை. ஒரு காலகட்டத்தின் சிறுகதை வெளிப்பாட்டுப் பண்பை அறிந்து கொள்ள முயலும்போது பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப் பங்களிப்புத் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

    Share
  • இலக்கியங்களில் உயிரினங்கள்

    இலக்கியங்களில் உயிரினங்கள்

    கௌசி, ஜெர்மனி

    மனிதன் மட்டுமே அறிவார்ந்த பிறவி என்று எம்மில் பலர் நினைத்திருக்கின்றோம். விலங்குகள், பறவைகள் தமக்கென கொள்கை, அறிவார்ந்த தன்மைகள் கொண்டுள்ளன. Olympian bats என்று சொல்லப்படும் வெளவாள்கள் பிரித்தானியாவில் இருந்து ரஷ்யாவுக்கு 2018 கிலோ மீற்றர் பறந்து போயிருக்கின்றதாம். இவை காலநிலை பாரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றன என அறிவியலாளர்கள் எடுத்துரைக்கின்றார்கள். ஒரு பறவை மனிதன், விலங்குகளுடைய தலைமயிரை எடுத்து பிறக்கப் போகும்  குஞ்சுக்காக கூடு கட்டுகின்றது. பஞ்சுமெத்தை தேடிக் குஞ்சுக்குப் பஞ்சணை அமைக்கின்றது.  இதேபோல் புலி இறந்த உடலை உண்ணாது. பசித்தாலும் புல்லைத் தின்னாது. யானை பசித்தாலும் மாமிசம் உண்ணாது. சிங்கம் தன் பசிக்கு மேலதிகமாக வேட்டையாடிய மிருகத்தை உண்ணாது. மிகுதியை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடும். ஆனால், புலி வேட்டையாடி கொன்ற தன்னுடைய இரையை இழுத்துச் சென்று தன்னுடைய குகையில் வைத்திருந்து அழுகிப் புழுத்துப் போனாலும் திரும்பத் திரும்ப அதை உண்ணும்.

    “ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்
     ஈருயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய
     இருங்களி றட்ட பெருஞ்சின உழுவை
     நாம நல்லராக்  கதிர்பட உமிழ்ந்த
     மேய்மணி விளக்கின் புலர ஈர்க்கும்
     வாள்நடந் தன்ன வழக்கருங் கவலை
     உள்ளுநர் உட்கும் கல்லடர்ச் சிறுநெறி”  

    என்னும் அகநானூற்று 72 ஆவது பாடல் தெளிவுபடுத்துகின்றது.

    இவ்வாறு பண்புகள் கொண்ட உயிரினங்களை இலக்கியங்கள் மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கின்றன. புலவர்கள் தாம் எடுத்துக் கொண்ட பொருளை விளக்குவதற்கு உவமையாக பிற பொருளை எடுத்துக் காட்டுவது வழக்கம். அவற்றில் பல இரசனைகளும், அறிவியல், தகவல்களும் காணக்கிடக்கின்றன.

    சங்க காலப் புலவர்களில் ஒருவர் சத்திமுத்தப் புலவர்;. சத்திமுத்தம் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் வறுமையால் தளர்வுற்று பாண்டியமன்னனை கண்டு அவரைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெற மதுரைக்கு வந்தார். வருகின்ற வழியிலே குளத்தங்கரையில் குளிரில் வாடிக் கொண்டிருந்தபோது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டு, வறுமையிலும் தன் பிரிவாலும் வருந்திக் கொண்டிருக்கும் தன் மனைவிக்கு அதைத் தூதாக அனுப்புவது போல இப்பாடலைப் பாடுகின்றார். இப்பாடல் சங்கப்பாடல்களில புறநானூற்றுத் தொகுப்பிலே காணக்கிடக்கிறது.

    “நாராய் நாராய் செங்கால் நாராய்
    பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
    பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
    நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
    வடதிசைக்கு ஏகுவீராயின்
    எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
    நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
    பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
    எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
    ஆடையின்றி வாடையில் மெலிந்து
    கையது கொண்டு மெய்யது பொத்தி
    காலது கொண்டு மேலது தழீஇப்
    பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
    ஏழையாளனைக் கண்டனம் எனுமே”

    முதலிலே ஒரு ஏவல் செய்ய வேண்டும் என்றால், அவர்களை புகழ்ந்து தள்ள வேண்டும். அந்தப் பாணியிலேயே நாரைக் கொக்கின் வாய் பனங்கிழங்கைப் போன்று நுனிப்பகுதி கூராக இருக்கின்றதாகவும் பவளம் போன்ற நிறத்தில் இருப்பதாகவும், கால்கள் சிவந்த நிறத்தில் அழகு செய்வதாகவும் புகழ்ந்து தள்ளுகின்றார். அதன் பின் நீ போகின்ற பாதை தானே என்பது போலவும் திருத்தல யாத்திரை செல்பவர்கள் தம்முடைய மனைவியுடன் தெப்பக் குளங்களிலே நீராடிச் செல்வது வழக்கம். அதனால், நீ உன் மனைவியுடன் தென் திசையில் உள்ள கன்னியாகுமரியில் நீராடிய பின் வட திசைக்கு வந்து காசி விஸ்வநாதரையும் விசாலாட்சி அம்மையாரையும் வணங்கி தலயாத்திரை முடிக்கும் சமயத்திலே திரும்பும் போது மதுரையில் மழைநீர் வடிந்த ஓலை வீட்டுச் சுவரிலே பல்லி எப்போது நல்ல செய்தி சொல்லும் என்று காத்துக் கிடக்கின்ற என் மனைவியிடம் ஆடை இல்லாமல் வாடைக்காற்றிலே மெலிந்து கைகளால் உடம்பைப் பற்றிக் கொண்டு கால்களால் உடலைத் தழுவியபடி பெட்டிக்குள் பிடித்து வைத்திருக்கும் பாம்பை போல உயிரை பிடித்து வைத்திருக்கும் உன் ஏழைக் கணவனை கண்டோம் என்று சொல்லுங்கள். என நாரையைத் தூது அனுப்புவதாக இப்பாடல் வருகின்றது.

    பல்லி சொல்லுதல் நல்ல சகுனம் என்பது தமிழர்கள் நம்பிக்கை. இந்நம்பிக்கையையும், நாரை நீண்ட தூரப் பயணம் செய்யும் என்னும் செய்தியையும், சிறிய துளையூடாக பார்வையைச் செலுத்தக்கூடிய திறனை நாரைக் கொக்கு பெற்றிருக்கின்றது என்னும் அறிவியல் உண்மையையும் இப்பாடல் மூலம் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.  இதனாலேயே வீட்டினுள் கூரையைப் பார்த்திருக்கும் தன் மனைவியை இந்நாரை கண்டு கொள்ளும், இச்செய்தியைக் கொண்டு சொல்லும் என்று தூதாக நாரையை சத்திமுத்தப் புலவர் அனுப்புகின்றார்.

    குறிஞ்சி நிலத்திலே விலங்காக குரங்கும், பறவையாக மயிலும். முல்லைநிலத்திலே விலங்காக கரடி, முயல் போன்றனவும், பறவையாகக் கிளியும். மருத நிலத்து விலங்காக எருமை பறவையாக நாரை, நெய்தல் நிலத்து மீன், கடற்காகம், பாலை நிலத்து யானை, கழுகு போன்ற உயிரினங்களை வகைப்படுத்திய பாடல்களை நாம் காணக்கூடியதாக இருக்கின்றன. இதேபோல சிற்றிலக்கியங்களும் தனிப்பாடல்களும் உயிரினங்களை தம்மிடம் பாடற்சுவையூட்ட பாவலர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.

    நளன், தமயந்தியைக் காட்டில் விட்டுச் செல்கின்றான். அதிகாலையும் புலர, கோழிகளும் இயல்பாக கூவுகின்றன. இதைப் பாடப்புகுந்த புகழேந்தி, தமயந்தியின் தாங்கொணாத் துயர் கண்டே, கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாக தற்குறிப்பேற்ற அணியிலே கூறுகிறார்.

    “தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்
    கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை
    வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல்
    கூவினவே கோழிக் குலம்”

    மூவேந்தர் சேர,சோழ, பாண்டியனைப் பற்றி மூன்று தொள்ளாயிரம் பாடல்களைப் பாடியதாக முத்தொள்ளாயிரம் சொல்லப்படுகின்றது. இப்பாடல்கள் முழுவதும் வெண்பாக்களால் ஆனவை. அதில் ஒரு பாடல்

    “அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
    வெள்ளந் தீப்பட்டதென வெரீஇப் புள்ளினந்தம்
    கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கௌவை உடைத்தரோ!
    நச்சிலைவேற் கோக்கோதை நாடு!”

    சேர மன்னன் நாட்டிலே போரே ஏற்படுவதில்லை. ஒரு நாட்டுடன் போரிடும் வீரர்கள் அந்த நாட்டைக் கொளுத்தி அதாவது தற்போது அணுகுண்டு வீசி அழிப்பது போல் அந்நாட்டு ஊர்களை, வயல்களை அழித்து, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி ஆரவாரம் செய்ய வைப்பார். ஆனால், சேர மன்னன் ஆளுகின்ற நாட்டிலே இவ்வாறான ஆரவாரம் ஏற்படுவதில்லை. அம்மன்னன் நச்சுத் தோய்த்த இலைப்பரப்பை உடைய வேலேந்தியவன். அதனால், அவனுக்குப் பயந்த எதிரிகள், கொள்ளையர்கள் அந்நாட்டில் இல்லை. அதனால், அச்சத்தால் எந்தவித ஆரவாரமும் இருந்ததில்லை. ஆனால், அங்குள்ள வயல்நீரிலும், அதன் கரைகளிலும் வாழுகின்ற பறவைகள் அந்த வயல்களிலே பூத்திரிக்கும் ஆம்பல் மலர்களைக் கண்டு வயலிலே தீப்பிடித்து விட்டது என்று பயந்து ஆரவாரத்துடன் அலைந்தனவாம். அதுமட்டுமல்ல இதனால், தம் குஞ்சுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று அஞ்சி அவற்றைத் தம்முடைய கை போன்ற சிறகுகளால் அணைத்து மறைத்துக் கொள்ளுமாம்.

    மனித இனங்கள் மட்டுமல்ல பறவை விலங்குகள் கூட தம்முடைய பிள்ளைகளை பாதுகாத்து வளர்த்தெடுக்கின்றன. இங்கிலாந்தில் Dover என்னும் இடத்தில் கட்டப்பட்ட ஒரு புதிய தொடர்வீட்டு மாடியிலே ஒரு Gull என்னும் பறவை கூடுகட்டியிருந்தது. அந்த வீட்டை வாங்கிய மனிதர்களை வரவிடாமல் துரத்திக் கொத்தியபடி விரட்டியது. அங்குள்ள முட்டை குஞ்சி பொரித்து குஞ்சுப் பறவை பறந்த பின்தான் அங்கு செல்லக்கூடியதாக இருந்தது.

    குரங்குக்கும் மனிதர்களுக்கும் இடையிலே பல ஒற்றுமைகள் இருக்கின்றன. குரங்கில் இருந்தே மனிதன் வந்தான் என்று பரிணாமக் கோட்பாடு கூறுகின்றது. ஜெர்மனி வூப்பற்றால் நகரத்து மிருகக்காட்சிச்சாலையிலே ஒரு குரங்கு தான் இருக்கும் இடத்திற்கு ஒரு சாக்குத் துணியை எடுத்துக் கொண்டு போய் போட்டு அதன்மேலேதான் இருக்கும். குரங்கு தன் குட்டிக்கு பேன் பார்க்கும் காட்சியை நாம் இலங்கையில் அதிகமாகக் கண்டிருக்கின்றோம். இக்குரங்குகள் பற்றிய பல இலக்கியச் சுவை மிகுந்து பாடல்கள் எம்மால் அறியக்கிடக்கின்றன.

    நற்றிணை 151 ஆவது பாடலிலே

    மிளகுக் கொடி படர்ந்திருக்கும் மலையடுக்கத்தை, பெண் குரங்கும், ஆண்குரங்குக்கும் புணரும் இடமாக சங்க இலக்கியத்திலே காட்டப்பட்டுள்ளது. ஆண்குரங்கும் மந்தியும் களவியில் ஈடுபட்டுக் கொண்ட பின் குரங்குக் கூட்டங்கள் பார்த்து விடக்கூடாது என்பதற்காக, மரத்தின் மீது ஏறி அங்கே இருக்கும் ஆழமான சுனைநீரில் தன் உருவத்தைப் பார்த்துக் கலைந்து கிடக்கும் தன் தலை முடியைப் பெண்குரங்கு திருத்திக்கொள்ளுமாம். இக்காலப் பெண்கள் கண்ணாடி பார்க்கும் பழக்கத்தைப் போல் அக்காலப் பெண்குரங்குகள் சுனைநீரைக் கண்ணாடியாகப் பாவித்திருக்கின்றன.

    “கடுவன், முறியார் பெருங்கிளை அறிதல் அஞ்சிக்
    கறிவளர் அடுக்கத்து கள்வினிற் புணர்ந்த
    செம்முக மந்தி செல்குறி கருங்காற்
    பொன்னினர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர்
    குண்டுநீர் நெடுஞ்சுனை நோக்கி கவிழ்ந்து தன்
    புன்தலைப் பாறு மயிர் திருத்தும்”

    காதல் கணவன் இறந்தால் தற்கொலை செய்கின்ற மனிதர்களைக் காணுகின்றோம். ஆனால், தன் கணவன் இறந்த பின் குட்டிகளைத் தன்னுடைய சுற்றத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு மலையேறித் தற்கொலை செய்து கொண்ட ஒரு குரங்கு பற்றி குறுந்தொகை 66 ஆவது பாடலிலே காணுகின்றோம்.

    “கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்
    கைம்மை உய்யாக் காமர் மந்தி,
    கல்லா வன்புறழ் கிளைமுதற் சேர்த்தி
    ஓங்குவரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும்”

    திருக்குற்றாலக்குறவஞ்சியிலே ஒரு பாடல் குரங்குகளின் காதலை எடுத்துக்காட்டுகின்றது. ஆண் குரங்குகள் பெண்குரங்குக்கு பழங்களைப் பறித்து வந்து கொடுத்துத் தழுவுகின்றன. இச்சமயத்திலே பெண்குரங்கு சில பழங்களை கீழே சிந்துகின்றன. அச்சிந்தும் கனிகளை தேவர்கள் கேட்பார்கள் வேடர்கள் தேவர்களை கண்களால் பார்ப்பார்கள். என்று இப்பாடல் செல்கின்றது.

    “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
    மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
    கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்
    தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
    செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
    கூனல் இளம்பிறை முடித்த வேணி அலங்காரர்
    குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே”

    இவ்வாறு மனிதர்களை விட பிற உயிரியங்கள் எவ்வாறு சிறப்புடையவை என்பதனை ஒளவையார் சோழ மன்னனிடம் பாடிய பாடல் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது.

    “வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கறையான்
    தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்
    வல்லோமே என்று வலிமைசொல வேண்டாம் காண்
    எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது.”

    குருவியின் கூடு, கறையான் புற்று, தேன்கூடு, சிலந்திவலை போன்றவை யாராலும் செய்ய முடியாது. அதேபோல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. எனவே அறிவில் குறைந்தோர் என்று  எண்ணும் யாம் உயிரினங்களின் சிறப்புக்கள் பற்றி அறியப் புகுந்தால் எண்ணிலங்காத சான்றுகள் கடலிலும், வானிலும், தரையிலும் அறியக்கூடியதாக இருக்கின்றன.

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 3

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 3

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    கடவூர் மணிமாறன் கவிதைகளில் கையறுநிலை

    முன்னுரை

    மரபுசார்ந்த தமிழ்க்கவிதைகளின் பாடுபொருள் அகம், புறம் என இரண்டேயாயினும் ‘பாடுகளங்கள்’ பல. தமிழ் பொருளிலக்கணத்தில் அகத்திணை, புறத்திணை ஆகிய இரு திணைகளுக்கும் துறைகள் உண்டு. அகத்திணைப் பாடல்களைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டுமானால் துறை விளக்கம் இன்றியமையாதது. துறைகள் தம்முள் மயங்குவதோடு கற்பாருக்கும் மயக்கத்தை ஏற்படுத்தும். சில பாடல்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட துறை வகுத்திருப்பதற்கு இதுதான் காரணம். புறத்திணைப் பாடல்களைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டுமானால் பாட்டின் அடிப்பகுதியில் திணை, துறை பதிவுகளோடு கூடிய ‘கொளு’ மிகவும் இன்றியமையாத ஒன்று. வரலாற்றுக் குறிப்போடு அமைக்கப்பட்டிருக்கும் அந்தக் கொளுவே பாடுகளத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் வழிகாட்டியாகச் செயல்படும். பொருள் துறைகள் பல. அவையனைத்தும் திணைவாரியாக விளக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஒரு திணைக்குரிய துறைகள் ஏனைய திணைக்குள் அடங்குவதில்லை. திணை என்பதை ஆறாகக் கொண்டால் துறை என்பது படித்துறை என்பது புலனாகும். ‘படித்துறை’ என்றாலும் ‘நீர்த்துறை’ என்றாலும் ஒன்றே. புறத்திணைகளில் ஒன்றாகிய காஞ்சித்திணையில் அமைந்துள்ள கையறுநிலைத் துறையில் தற்காலத் தமிழ்க்கவிஞருள் ஒருவராகிய கடவூர் மணிமாறன் அவர்களால் பாடப்பெற்றுள்ள சில பாடல்களை ஆராய்வதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    இழப்பும் அதன் இலக்கிய மதிப்பீடும்

    இன்பம் முதலிய பல்வகை உணர்ச்சிகளும் இலக்கியப் படைப்பில் இடம் பெறினும் இழப்பினால் ஏற்படுகிற அவலம், இலக்கியச் சித்திரிப்பில் தலையாய இடம் பெறுகிறது. நடப்பியல் வாழ்வில் அவலம் தாங்குதற்குரியது. இலக்கியத்தில் அது சுவைத்தற்குரியது. கணவனை நிரந்தரமாகப் பிரியும் முதுபாலை, பாலைவழியில் மனைவியை இழந்த கணவன் துயர் கூறும் சுரநடை, மனைவியை இழந்த கணவனின் தபுதார நிலை, கணவனை இழந்த மனைவியின் தாபத நிலை, தாயை இழந்த பிள்ளையின் துன்பம் பாடிய தலைப்பெயல் நிலை, மாறாகப் பிள்ளையை இழந்த தாயின் துயரத்தையும் மன்னனை இழந்த மக்கள் வேதனையையும் பாடும் பூசல்மயக்கு, கணவனோடு எரிபுக நிற்கும் மகளிர் நிலைபாடும் மாலை நிலை, கணவனோடு மனைவியும் உடன்கட்டை ஏற, அதனைக் கண்டோர் கலங்கிப் புலம்பிய மூதானந்தம், விரிச்சிக்கு மாறுபட்டுத் தீய சகுனம் கண்ட மனைவிபடும் துன்பமாகிய ஆனந்தம், கணவன் இறந்த பின்னும் தான் இன்னும் உயிரோடு இருப்பதற்கு நாணி வருந்தும் ஆனந்தப் பையுள், புரந்தார் சாகவும் புரக்கப்பட்டார் வருந்தவுமான கையறு நிலை என இழப்புக்கள் பல. அவற்றைப் பதிவு செய்திருக்கும் இலக்கியங்களும் பல.

    ‘கையறு நிலை’ — ஒரு விளக்கம்

    இழப்பு ஏற்படுத்தும் துன்பத்தை வெளிப்படுத்தும் நிலையைக் ‘கையறுநிலை’என இலக்கணம் சுட்டும். ‘கலங்கிக் கையற்று’ என்பது தமிழிலக்கியத்தில் பெருவழக்கு.

    “கை விதிர்த்துக் கலங்கும் நிலை, கையறு நிலை எனப்பட்டது”

    என்பது பேராசிரியர் ச.பாலசுந்தரனார் தரும் சொற்பொருள் விளக்கம். இவ்வாறு கையற்று நிற்கும் நிலையைத் தமிழின் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் காஞ்சித்திணையில் வைத்துக் கூறுகிறது. தொல்காப்பியக் காஞ்சித்திணை, போரொழுக்கம் பற்றிக் கூறாது, வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றியது என்பது,

    “பாங்கரும் சிறப்பின் பல்லாற் றானும்
    நில்லா உலகம் புல்லிய நெறித்தே”

    என்னும் நூற்பாவால் பெறப்படும். மரணம் நிலையாமை உணர்த்தும் கருவி.  இவ்வடிப்படையில்,

    “கழிந்தோர் தேஎத்து கழிபடர் உறீஇ
    ஒழிந்தோர் புலம்பிய கையறுநிலை”

    என்னும் காஞ்சித்திணைத் துறைகள் பற்றிய நூற்பாப் பகுதியை நோக்கினால், தம் வாழ்நாள் கழிந்து மரணமடைந்த நிலையில், அவர்தம் துணையும் பாதுகாப்பும் இழந்த மற்றவர்கள் அவ்வாறு இழந்தவற்றை எண்ணிப் புலம்புவதே கையறுநிலையாகும் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த நூற்பாவில் பயின்றுவரும் ‘ஒழிந்தோர்’ என்னும் சொல், சுற்றத்தார், பெற்றோர், உடன்பிறந்தார், புரப்போர்  என யாவரையும் குறித்து நிற்கிறது.

    ‘இழந்ததற்கிரங்கல்’ என்னும் பொருண்மையை உள்ளடக்கிய இத்துறையைப் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் பொதுவியல் திணையில் அடக்கிக் காட்டுவார்.

    “செய்கழல் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர்
    கையற உரைத்துக் கைசோர்ந்தன்று”

    “கழிந்தோன் தன்புகழ் காதலித்து உரைப்பினும்
    மொழிந்தனர் புலவர் அத்துறை யன்ன”

    என்னும் இரண்டு கொளுக்களைக் கொண்டு இத்துறையை விளக்குவார் அவர். முதற்கொளு ‘மன்னன் இறந்த நிலையில் மற்றவர் புலம்பலைச்’சுட்டியும், இரண்டாவது கொளு ‘அன்பிற்குரிய எவர் இறப்பினும் அவர் புகழை எடுத்துக் கூறும் பிறர் புலம்பலையும்’சுட்டி நிற்கின்றன.

    இழப்புக்களும் புலம்பல்களும்

    இழப்புக்கள் பலவானால் புலம்பல்களின் எண்ணிக்கையும்  பலவாகும். உள்ளங்கவர் நண்பனை இழந்து புலம்புவது, ஆசைமிகு கணவனை இழந்து புலம்புவது, பாசமிகு மனைவியை இழந்து புலம்புவது, பிள்ளைகளை இழந்து பெற்றோரும் பெற்றோர்களை இழந்து பிள்ளைகளும் புலம்புவது எனப் பல்வகைப்படும்.  மனைவிக்கு முன்னால் மனைவியும், பெற்றோர்களுக்குப் பின்னால் பிள்ளையும், இளைஞர்களுக்கு முன்னால் முதியோரும் மறைவது இயற்கை. இந்த இயற்கை மரபு சில பொழுதுகளில் ஊழ்வினை காரணமாகத் தம்முள் முரண்படுகிறது. அத்தகைய நேர்வுகளில் இழப்பின் துன்ப வெளிப்பாடு இதயத்தைப் பிழிவதாக அமைந்துவிடுவதைக் காணலாம். கணவனை இழந்து மனைவி புலம்புவதைவிட மனைவியை இழந்த கணவன் புலம்புவது எண்ணிப்பார்க்க முடியாத இயற்கை முரண். இந்த முரணுக்கு ஆட்பட்ட மன்னன் ஒருவன் தன் மனைவியை இழந்து பாடிய கையறு நிலைப்பாடலைப் புறநானூறு பதிவு செய்திருக்கிறது.  ‘நண்ணாரும் உட்கும் பீடு’அவனுடையது. களத்திலே கலங்காத ஒருவன் தன் காதலிக்காகக் கலங்கித் துடிப்பது கற்பார்தம் உள்ளம் உருக்குவதாம்.

    “யாங்குப் பெரிதாயினும் நோயளவு எனைத்தே
    உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின்”

    “கள்ளி அம் போகிய களரியம் பறந்தலை
    வெள்ளிடை பொத்திய விளை விறகுஈமத்தீ
    ஒள்ளழல் பள்ளிப் பாயல் சேர்த்தி
    ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
    இன்னும் வாழ்வல்! என்னிதன் பண்பே?”

    என்று நெருப்பிலே தன் மனைவியாகிய பெருங்கோப்பெண்டு கிடத்தப்பட்டது கண்டு கதறுகிறான் சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை. ‘இருவரும் ஓருயிர்’ என்பது உண்மையானால் அவள் இறந்து தான் இன்னும் இருப்பது விந்தையாக அல்லவா இருக்கிறது? அவ்வாறு சொன்னதெல்லாம் இன்று பொய்யாகியிருக்கிறது என்பது கருத்து.

    கலைஞர் பாடிய கையறுநிலை

    தமிழ்க்கவிதை உலகில் கையறு நிலைத்துறையில் பேரறிஞர் அண்ணா மறைந்தபோது கலைஞர் பாடிய இரங்கற்பா தனிச்சிறப்புக்குரியது. அவருடைய கம்பளிக் குரலில் வானொலியில் அவர் வாசித்தபோது கலங்காதவர் இல்லை. அண்ணாவின் பெருமைகளை,

    “நாத இசை கொட்டுகின்ற
    நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?
    விரலசைத்து எழுத்துலகில்
    விந்தைகளைச் செய்தாயே? அந்த
    விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்?
    கண் மூடிக்கொண்டு நீ சிந்திக்கும்
    பேரழகைப் பார்த்துள்ளேன்! இன்று
    மண்மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்
    தடுப்பதென்ன கொடுமை?
    கொடுமைக்கு முடிவு கண்டாய்! எமைக்
    கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?”

    என நிரல்பட அடுக்கி அவர் புலம்பியது இன்றைக்கும் இணையத்தில் இருக்கிறது.

    பாவேந்தரும் பன்னீர் செல்வமும்

    இருபதாம் நூற்றாண்டில் தமிழின் எல்லாத் ‘துறை மரபுகளையும்’ கையாண்டு கவிதை படைத்தவர் பாவேந்தர். அவற்றுள் ‘கையறு நிலை’ என்னும் புறத்துறையும் ஒன்று. பாரதியார் உட்படச் சான்றோர் பலரின் மறைவுக்கு அவர் கையறுநிலை பாடியிருக்கிறார்.  எனினும் தமிழர்தம் வழிகாட்டிகளில் ஒருவராக விளங்கிய கே.டி.பன்னீர்செல்வம் மறைந்தபோது அத்துறையில் அவர் பாடிய பாட்டு அவர்தம் தனிப்பாடல்களில் தனித்து விளங்கும் சிறப்புடையது.

    “பண்கெட்டுப் போன தான
    பாட்டுப்போல் தமிழர் வாழும்
    மண்கெட்டு போமே என்னும்
    மதிகெட்டும், மானம் கெட்டும்
    எண்கெட்ட தமிழர் பல்லோர்
    பாரப்பனர்க் கேவ லாகிக்
    கண்கெட்டு வீழும் போதோ
    கடல்பட்ட தெங்கள் செல்வம்?”

    விமான விபத்தில் சிக்கிக் கடலில் வீழ்ந்து, பன்னீர் செல்வம் மறைந்தார்  என்பதனை இலக்கியமாக்கும் போது, ‘முன்பே பல்வகைச் செல்வங்களைக் கொண்ட கடல் பன்னீர் செல்வத்தின் பெருமை கண்டு அவரையும் தன்னுடைய செல்வமாகக் கொண்டதோ’எனத் தற்குறிப்பேற்றமாகக் கருதுமாறு அமைந்திருப்பதைக் காணலாம். ‘இருக்க வேண்டிய நேரத்தில் இல்லாமற் போனாரே’ என்னும் ஏக்கத்தைக், ‘கண்கெட்டு வீழும்போதோ கடல்பட்டது எங்கள் செல்வம்?’ என்னும் தொடர் எதிரொலிப்பதைக் கேட்கலாம்.

    கவிமணியும் கையறுநிலையும்

    புகழேந்திக்குப் பிறகு வெண்பாவால் விருந்து வைத்தவர் கவிமணி. யாப்பில் மிகக் கடுமையானதாகக் கருதப்படும் நேரிசை வெண்பாவை ‘எடுப்பார் கைப்பிள்ளையாக’மாற்றிக் கொண்டவர் அவர். செப்பலோசையில் அமைந்தாலும் உணர்ச்சியின் வேகம் குறையாமல் கையறுநிலைக்கு அதனைப் பயன்படுத்திக் காட்டியிருக்கும் கவிமணியின் கவிநேர்த்தி போற்றுதலுக்குரியது  ரசிகமணி டி.கே.சி. அவர்கள் மறைந்தபோது அவர் பாடிய கையறுநிலை பாடலொன்று இப்படி அமைந்திருக்கிறது.

    “என்னருமை நண்பா! இனிய கலைரசிகா!
    தன்னிகர் இல்லாத் தமிழ்ச்செல்வா! – மன்னுமுளம்
    தத்தளித்து நின்றன் சரமகவி பாடுதற்கோ
    இத்தனைநாள் வாழ்ந்திருந்தேன் யான்?”

    சரமகவி பாடுதற்கோ இத்தனைநாள் வாழ்ந்திருந்தேன் யான்?’ என்னும் வினாவில் பொங்கிவழியும் கையறுநிலை உணர்ச்சி மனத்தைப் பிழிகிறது. ‘நண்பன், ‘கலைரசிகன், ‘தமிழ்ச்செல்வன்’என முன்னிரண்டு அடிகளில் இழந்தோரின் பெருமை கூறிப், பின்னிரண்டு அடிகளில் அவ்விழப்பின் ஆழத்தைப் பதியவைக்கும் கவிமணியின் மரபியல் பார்வை  மதிக்கத்தக்கது.

    எமனுக்குக் கொள்ளி வைத்த கண்ணதாசன் 

    கவிஞர் கண்ணதாசனின் கருத்துக்களில் முரண்படுவோர்  உண்டு. அவருடைய முரண்பட்ட பார்வைகள் பற்றி முன்னெடுத்து மொழிவோர் உண்டு. ஆனால் அவர்தம் கவிதைகள் பல்வகை உணர்ச்சிகளின் பிழிவாக உள்ளன என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடில்லை. கவிதைக் கூறுகளில் உணர்ச்சிக்கு முதலிடம் கொடுத்த பெருமை கண்ணதாசனுக்கு உண்டு. அதிலும் இழப்புப் பற்றிய அவருடைய கவிதைகள் கற்பார்தம் நெஞ்சைக் கரைய வைப்பன. கையறுநிலையில் அவா படைத்த பாடல்கள் பல இருப்பினும் பதச்சோறாக ஒருசில இவண் சுட்டப்படுகின்றன.

    “சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ?
    சஞ்சலமே நீயுமொரு சஞ்சலத்தைக் காணாயோ?
    தீயே உனக்கொருநாள் தீமூட்டிப் பாரோமோ?”

    என்று பண்டித ஜவகர்லால் நேரு மறைந்தபோது அவர் உகுத்த கண்ணீர் கையறுநிலைக்கு ஓர் அழியா எடுத்துக்காட்டு.

    “தன்னுயிரைத் தருவதனால் தங்கமகன் பிழைப்பானா?
    என்னுயிரைத் தருகின்றேன், எங்கே என் மாகவிஞன்?”

    என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மறைந்தபோது அவர் வடித்த கண்ணீர் கவிஞனுக்கு மற்றொரு கவிஞன் பாடிய கையறுநிலையின் தொடர்ச்சியாகலாம்.

    மணிமாறன் கவிதைகளில் கையறுநிலை

    தமிழிலக்கியப் புறத்துறைகளில் தனித்து விளங்கும் இத்தகைய கையறுநிலைப் பாடல்கள் அவல உணர்ச்சியின் ஆழமான வெளிப்பாடுகளாகவே அமைந்திருக்கின்றன. மணிமாறனும் தமது கவிதைப்படைப்புக்களில் அத்துறைப் பாடல்கள் பலவற்றைப் படைத்துக் காட்டியிருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் தமிழிலக்கியப் ‘பொருள்மரபு’ அவர் படைப்புக்களில் ஊடுருவி நிற்கும் பாங்கை அறியலாம். உள்ளங்கவர் நண்பர்கள் இழப்பு, உரிமையான உறவுகள் இழப்பு, சமுதாய நலன் நாடும் சான்றோர்கள் இழப்பு எனக் கையறுநிலைக்கான கருப்பொருள் நிகழ்வுகள் பலவாயினும், தன் மகனையே இழந்து புலம்பிய கையறுநிலை கண்ணீர் மல்க வைப்பதாக உள்ளது.

    வெந்தழலுக்கு இரையான வீரப்பன்

    தமிழக அரசியலை முற்றிலும் தடம்மாறச் செய்த நிகழ்வு 1965இல் நடந்தேறியது. ‘மொழிப்போர்’ என்னும் சொல் உலக வரலாற்று அகராதியில் அப்பொழுதுதான் முதன்முறையாகப் பதிவுசெய்யப்பட்டது. ‘செந்தமிழுக்குத் தீமை வந்தபின்னும் இந்தத் தேகத்தினால் நமக்கென்ன பயன்?’ என்னும் சிந்தனை, உயிரைத் துரும்பென மதிக்க வைத்தது. தாய்மொழி அழிவைத் தாங்கிக் கொள்ள இயலாத இளைஞர்கள் தங்கள் உயிரைத் தாங்களே தீவைத்துக் கொண்டு இறந்தனர். அவர்களுள் ஆசிரியராகப் பணியாற்றிய வீரப்பனும் ஒருவர். அவர் கவிஞருக்குக் கெழுதகை நண்பரும் ஆவார். அன்னாருக்குப் பாடிய கையறுநிலைப் பாடல் வருமாறு,

    “என்னென்று அறைகுவன்? என்னென்று அறைகுவன்?
    அன்னைத் தமிழின் அழிவினைப் பொறாஅது
    புன்மொழி இந்தியின் போக்கறு நிலைக்கே
    தன்னுயிர் ஈந்த தறுகண் அம்மா!
    நானிலம் போற்றும் நல்லிசை நாட்டிய
    மேனிலைச் சிறப்பை என்னென்று அறைகுவன்? 
                ……………………………………..
    உரமும் திறமும் உணர்வும் மிகுந்திட
    உடலம் துகளாய் உருக்குலைந்து ஓய்ந்திடப்
    பொடிபடச் சிதைந்து பொசுங்கிய ஞான்றும்
    இடியென ஆர்த்தனன்”

    என்னும் இப்பாடல் ‘நண்பன், ஆசிரியன், மொழிகாக்கும் வீரன்’ என்னும் முத்திறம் தாங்கிய ஒருவரின் இழப்புக்கு ஆற்றாத நெஞ்சத்தின் வெளிப்பாடாகக் கருதலாம்.

    “1965இல் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டுத் தீந்தமிழ்க் காக்கத் தீக்குளித்து மாண்ட ஆசிரிய நண்பர் வீரப்பனின் அழியா ஈகத்தை வியந்து பாடியது”

    என்னும் பின்குறிப்போடு பதிக்கப்பட்டிருக்கும் இப்பாடல் பொருண்மையால் மரபு சார்ந்தும் பொருண்மைக்கான காரணம் புதுமை சார்ந்தும் அமைந்துள்ளது நோக்கத்தக்கது. இழப்புக்கான களம் போர்க்களமோ, நோயோ, விபத்தோ என்றில்லாமல் மொழிப்போர் காரணமாக அமைந்திருப்பது பொருண்மையில் புதிய போக்காகக் கருதப்படலாம்.

    தனித்தமிழ் கண்ட கனிச்சாறு கவிஞர்

    பாவேந்தருக்குப் பிறகு பாடுபொருளாகிய கவிதைக் களங்கள் அனைத்திலும் மரபு சார்ந்த தமிழ்க்கவிதைகளைப் படைத்த கவிஞர் சிலருள் பெருஞ்சித்திரனாரும் ஒருவர். தனித்தமிழ்ப் பாவலரான அன்னார் வடித்தெடுத்த பாடல்களில் பிறமொழிச் சொற்கள் ஒன்றுகூட இல்லை என்பது வியப்பிற்குரியது. தனித்தமிழில் அமைந்தாலும் கவிதைக்குரிய கற்பனை, உணர்ச்சி முதலிய கூறுகள் அவர் பாடல்களில் குறைந்ததாக அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியாது. காட்சியையும் பொருளையும் கவிதையாகவே நோக்கி அவை பற்றிய கற்பனைகளையும் சிந்தனைகளையும் கவிதையாகவே சிந்திக்கத் தெரிந்த கவிஞராக அவர் தனித்து விளங்குகிறார். அவருடைய இழப்பு ‘தென்மொழியை’மட்டுமன்றித் தமிழன்பர்கள் பலரையும் பாதித்தது. அவருள் மணிமாறனும் ஒருவர். அன்னாருடைய இழப்புக்கு மணிமாறன் பாடிய கையறுநிலைப் பாடல்களில் அவலச்சுவையின் அடர்த்தியை உணர முடிகிறது.

    “பன்னூறு முறை ‘தம்பி’என்ற ழைப்பீர்
    பாசமழை பொழிவீரே! பறந்ததெங்கே?”

    எனத் தன்னைத் ‘தம்பி’ என அழைத்த பாசமிகு அண்ணன் மறைந்துபோனதை எண்ணிப் புலம்புவதைச் சுட்டுகிறார்.

    “மூவேந்தர்அக்காலம் காத்து வந்த
                                        மூவாத சீர்த்திமிகு தமிழன் மாண்பைச்
    சாவேந்தும் வேளையிலும் நிலைக்கச் செய்தீர்
                            சான்றாண்மை எந்நாளும் காத்து வந்தீர்!
    கூவிவந்த தமிழ்க்குயிலே! விடியும் முன்பே
                            குரலொடுங்கிப் போயினையே!”

    தமிழின் மரபுசார்ந்த பெருமையை முன்னர்ச் சுட்டித், தமிழனுடைய மாண்பு காப்பதில் பெருஞ்சித்திரனார் இறுதிவரையில் உறுதியாக இருந்தார் என்னும் நிலைப்பாட்டைப் பின்னர்ச் சுட்டுகிறார். தமிழும் தழிழ்நாடும் தமிழர்களும் அடையவேண்டிய பெருமையை அடையும் முன்பே அவர் மறைந்து போனதை, ‘விடியும்’ முன்பே என்னும் தொடரால் குறிப்பாகப் பெறவைக்கின்றார்.

    “துஞ்சாமல் தோளுயர்த்திக் கிளர்ந்த  வேழம் 
    தூய்தமிழை மறந்திந்நாள் சென்ற தெங்கே?

    “……………………………………..எங்கள்
    எழுச்சிக்குப் பண்ணிசைத்த முரசே! வாழை
    குருத்தொன்று முறிந்ததுபோல் விழிகள் மூடிக்
    கும்மிருட்டில் எமைஆழ்த்திச் சென்றீர் அய்யா!”
    தூய்தமிழை மறந்திந்நாள் சென்றதெங்கே?”

    என்றும், ‘கும்மிருட்டில் எமை ஆழ்த்திச் சென்றீர் ஐயா’என்றும் பயின்று வந்துள்ள கவிதைத் தொடர்கள் பெருஞ்சித்திரனாரை இழந்து கலங்கிக் கையற்ற கவிஞர்தம் நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

    ஆசிரியருக்குக் கையறுநிலை

    மகாகவி பாரதியின் நண்பராகப் பழகத் தொடங்கி, அவரைக் குருவாக வரித்துக் கொண்டவர் பாரதிதாசன். நட்பு, குருவான கதை இது. குருவாக திகழ்ந்தவர் நண்பரான கதை மணிமாறன் வாழ்க்கையில் நிகழ்ந்தது. வெள்ளமுத்து என்பார் கவிஞர் மணிமாறனின் உயர்நிலைப்பள்ளிக் கணித ஆசிரியர். காலம், வெள்ளமுத்து கணித ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே மணிமாறனையும் தமிழாசியராகக் கொண்டு வந்து அவரோடு சேர்த்தது. தனக்கு ஆசிரியராக இருந்தவருடன் தானும் ஆசிரியராகப் பணியாற்றும் பேறு மணிமாறனுக்குக் கிட்டியது. ஆசிரியர் நண்பரானதால் மதிப்போடு உரிமையும் கூடி இழைவது தவிர்க்க இயலாதது. நண்பராகப் பழகிய ஆசிரியர் வெள்ளமுத்து மறைந்தபோது,

    “பற்றுடனே பாசமழை பொழிந்தீர் வெள்ளைப்
    பாற்சிரிப்பால் அனைவரையும் கவர்ந்தீர்! எங்கள்
    சுற்றத்தைப் புலவர்களை மறந்து சென்றீர்!
    சொல்லவொணாத் துயர்தந்தீர்! அய்யா இங்கே
    கற்றவர்கள் பாராட்டும் நல்லீர்! உங்கள்
    கற்கண்டு சொல்லமிழ்தை என்று கேட்போம்?”

    என்று பாடினார் கவிஞர். ‘பாசமழை பொழிந்தது, ‘வெள்ளைச் சிரிப்பால் அனைவரையும் கவர்ந்தது, ‘கற்றவர்களால் பாராட்டப்பட்டது’, ‘கற்கண்டு சொல்லமிழ்து’என வெள்ளமுத்தின்  சிறப்புக்களையெல்லாம் சிந்தனையில் தேக்கி, ‘என்று கேட்போம்?’ எனக் கலங்கி முடித்திருப்பது, கையறுநிலையைக் காட்சிப்படுத்துவதில் கவிஞர் பெற்ற இலக்கிய வெற்றியைக் குறிக்கிறது.

    விடியலின் பனி நீரான மகன் 

    கம்பராமாயணத்தின் எதிர்நிலைத் தலைவனாகிய இராவணன், புலம்பலையே அறியாதவன். அத்தகையவன் தன் பாசமிகு மகன் இந்திரசித்தன், இலக்குவனால் வீழ்த்தப்பட்டபோது கலங்கிக் கையற்றுப் புலம்புகிறான்.

    “சினத்தொடும் கொற்றம் முற்றி
    இந்திரன் செல்வம் மேவி,
    நினைத்ததை முடித்து நின்றேன்.
    நேரிழை ஒருத்தி நீரால்,
    எனக்கு நீ செய்யத் தக்க
    கடனெல்லாம் ஏங்கி ஏங்கி
    நினக்கு யான் செய்வ தானேன்,
    என்னின்யார் உலகத் துள்ளார்?”

    என்னும் இராவணன் புலம்பலில் ஒரு தந்தையின் பாசம் பொங்கி வழிவதைக் காணமுடிகிறது. ‘தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய கடனையெல்லாம் தந்தை தான் பெற்ற மகனுக்கே செய்ய நேர்ந்ததே?’ என்னும் இலங்கை வேந்தனின் உணர்ச்சிக் குமுறல், கவிஞர் மணிமாறன் தன் மகன் இறந்த வேளையில் பாடிய,

    “கொள்ளிக்கண் பாய்ச்சும் இந்தக்
    கொடியதோர் உலகைக் காண
    பிள்ளை நீ வெறுத்தாய் போலும்!
    பெரும்பழி நேரும் என்றோ
    கள்ளமில் மழலை நீயும்
    கையறு நிலையைத் தந்து
    வெள்ளமாய் விரைந்து போனாய்?
    விடியலின் பனிநீர் ஆனாய்?” 

    என்னும் பாடலில் எதிரொலிக்கிறது. ‘உலகத்தின் பார்வை அஞ்சி’ என்னாமல் ‘உலகத்தைக் காண வெறுத்து’ என்னும் நுண்ணோக்குக் கையறுநிலையின் பொருளடர்த்தியைக் கூடுதலாக்குகிறது.

    “இன்பத்தைப் பாடுவதைவிடத் துன்பத்தைப் பாடுவதில் புலவர்கள் முனைந்துள்ளனர். காதலைப்பாடும் புலவர்கள் காதலரின் இன்ப நிலையைப் பாடுதல் மிகக் குறைவாக உள்ளது. காதலரின் பிரிவாற்றாத் துயரத்தைப் பாடுதலே மிகுதியாக உள்ளது…………… ஏக்கத்திலும் துன்பத்திலும் துயரத்திலுமே பாட்டுக்கு உரிய உணர்ச்சி மிகுந்து நிற்கிறது. மாறுதலுக்கு இடையே நிலைபேற்றையும், அலைவுக்கு இடையே அமைதியையும், அழிவுக்கு இடையே என்றுமுள தன்மையையும் நாடி ஏங்கி உணர்தலே பாட்டின் இயல்பாக உள்ளது”

    என்பார் அறிஞர் மு.வ. மானுட உணர்ச்சிகள் அனைத்தும் வலிமை வாய்ந்தன எனினும் ‘பிரிவு’அல்லது ‘இழப்பு’என்னும் உணர்ச்சியே கவிதை ஆக்கத்தில் பெரும் செல்வாக்குடையது என்னும் அறிஞர் மு.வ. அவர்களின் கருத்து, மணிமாறனின் கையறுநிலைப் பாடல்கள் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிசெய்யப்படுகிறது எனலாம்.

    முனைவர் கடவூர் மணிமாறன்! ‘ஐயாயிரம் தமிழர் ஆம் உரிமை காக்க நான் பொய்யர்தமை எதிர்த்தபோது பொய்வழக்கால் சேர்த்த சிறை எனக்குத் தென்றல் வரும் சோலையன்றோ?’ என்று பாடிய பாவேந்தர் பட்டறையில் கூர் தீட்டப்பட்ட கவிதைப் போர்வாள்!. ‘அறம் பொருள் இன்பம் வீடு அடைதல்’ அக்கால நூற்பயன்! இனம், மொழி, நாடு ஆகியவற்றின் எழுச்சிக்காகப் பாடுவது இக்காலக் கவிஞர் கடமை! இவர் அக்காலத்தை மறக்காத இக்காலத்துக் கவிஞர். அதனால் இவர் படாத இடர் இல்லை! அந்த நாள்  அகத்திணையும் தெரியும். இவர் இந்த நாள் சமூக நிலையும் அறிவார். அறுபது நூல்களுக்கு ஆசிரியர். ஐந்தாறு நாடுகளுக்குப் பார்வையாளர். உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியராகத் தொடங்கி ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி முதல்வராக ஓய்வு பெற்றவர். பன்னிரண்டாயிரம் நூல்களைத் தன் வீட்டு மாடியில் வைத்திருக்கும்  இவர் மடியில் வைத்துக் கொஞ்சுபவை மரபுக்கவிதைகளையே!. கரந்தை புலவர் கல்லூரி கண்ட கந்தகக் கவிஞருள் ஒருவர். இவர் துறந்தது இன்பம்! துறக்காதது தமிழ்த்தொண்டு! தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர். தமிழாசிரியருக்கு இலக்கணம் வகுத்தவர் சிலர். இவர் அவருள் ஒருவர்!

    (தொடரும்…)

    Share