தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 28

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
அன்பலையில் மிதக்கும் அழகிய உவமங்கள்
ஓர் இலக்கியம் அல்லது அவ்விலக்கியத்துள் அமைந்துள்ள கவிதை படைக்கப்படுவதற்குப் பல காரணங்கள் அமைந்திருப்பதுபோலவே அவை சுவைக்கப்படுவதற்கும் காரணங்ககள் பல. அருணாகிரியாரின் திருப்புகழை யாரும் இலக்கிய நயத்திற்காகப் படிப்பது என்பது இயலாது. ஆனால் வண்ண அமைப்பில் அமைந்திருக்கும் அதன் சந்தக் குழிப்புக்கள் அந்நூலை நோக்கி நம் ஆன்மாவை இழுக்கிறது என்பதில் ஐயமில்லை. அதன் ஈர்ப்பு விசை அதன் வண்ணத்தில் இருக்கிறது. கவிதைச் சுவையுணர்வுக்குக் கற்பனை, உணர்ச்சி, வெளிப்பாட்டு உத்தி, யாப்பியல் நுட்பம் முதலியன தனியாகவும் கூட்டாகவும் கூடக் காரணிகள் ஆகலாம். பழந்தமிழ் இலக்கியங்கள், அவற்றின் சொற்செறிவு, இயற்கை மற்றும் உலகியல் சார்ந்த உவமங்கள், எளிய ஆசிரியப்பா கட்டுமானம், பெயரடைகள் மற்றும் வினையடைகள் முதலியவற்றால் காலத்தை வென்று நிற்கின்றன. அந்த வகையில் சங்க இலக்கியத்தில் ஒன்றாகிய குறுந்தொகையில் காணப்படும் சில உவமங்கள் ‘அடங்காது நிற்கும் அவற்றின் உவமச் சிறப்பு’ நோக்கி இந்தக் கடடுரையிலும் ஆராயப்படுகின்றன.
மலரும் முள்ளும்
‘முள்ளும் மலரும்’ என்னும் ஒரு திரைப்படத் தலைப்பினைப் பொதுவாக அனைவரும் எண்ணும்மையாகக் கொண்டு அவற்றை இருவேறு பாத்திரங்களின் குறியீடாகக் கொண்டு அமைதியடைந்தனர். கற்பனை வளமுடைய சிலர் ‘கால நேரம் வந்தால் முள் கூட மலரும்’ அதாவது மலர்வதற்கு வாய்ப்பில்லாத முள்ளும் ஒரு காலத்தில் மலரும் என்று (THORN ALSO BLOSSOMS) அத்தலைப்பினைத் சுவைத்து மகிழ்ந்தனர். இதனையொத்ததொரு ஒரு பாடல்.
“நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே!
புன்புலத்து மன்ற சிறியிலை நெருஞ்சி
கட்கின் புதுமலர் முள் பயந்தாங்கு
இனிய செய்த காதலர்
இன்னா செய்தல் நோமென் நெஞ்சே” (குறு. 202)
இப்படி அமைந்திருக்கிறது. அந்தப் பாட்டுப் பன்முக அழகுப் பரிமாணங்களைத் தன்னகத்தே கொண்டது. மலர் பயந்த செடியில் முள் முளைத்த காட்சியைச் சித்திரிக்கும் பாடல். அருகிருந்து இனிய செய்தவன் தலைவன். கறைபடிந்த புறவொழுக்கம் காரணமாகப் பரத்தையரிடம் சென்று திரும்பித் தோழியிடம் குறைநயந்து நிற்கிறான். தலைவனுக்காகப் பரிந்து பேசுகிறாள் தோழி. தோழியின் வாயிலைத் தலைவி மறுக்கிறாள். பாட்டை இப்படிக் கண்ணழித்தால் தலைவியின் உள்ளம் புரியும். உவமத்தின் சிறப்பு புலப்படும்.
“இனிய செய்த காதலர், இன்னா செய்தல்
நோமென் நெஞ்சே! நோமென் நெஞ்சே! நோமென் நெஞ்சே!”
‘நெஞ்சு சுடும்’ என்பது இதுதான். மூன்று முறைக்குமேல் சொல் அடுக்கி வராது எனினும் தலைவனின் புறவொழுக்கக் குறைபாட்டின் விளைவை அவ்வடுக்கு நன்குணர்த்துகிறது. தலைவன் செயலுக்குத்தான் ஓர் உவமத்தைச் சொல்கிறாள் தலைவி.
“தீயவன் நல்லவன் ஆவது இயல்பு. நல்லவன் தீயவனாவது எப்படி? என் தலைவன் அத்தகையவனாக அல்லவா மாறியிருக்கிறான்?. மிகச்சிறு இலைகொண்ட நெருஞ்சியில் கண் இனிக்க பூப்பூத்தது முன்னாள். கைவலிக்க முள் விளைந்தது இந்நாள்! அதனை எண்ணுகிற பொழுதெல்லாம் என் நெஞ்சம் வேதனைப்படுகிறதே?”
என்கிறாள் தலைவி. தன்னால் ஆளப்படுபவனாகவே தலைவன் இருக்க வேண்டும் என்னும் தலைவியின் ஆதங்கம் கண்ணுக்கு இனிய நெருஞ்சிப்பூவின் உவமத்தால் வெளிப்படுவதை அறியலாம்.
ஏழூர் பொதுவினையும் ஓரூர் உலையும்
‘கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என் வயிறு’ என்னும் அழுகணிச் சித்தர் பாடல் வரிகளில் வரும் ‘அடிவயிறு’ என்பதற்குச் சித்தாந்தத்தின் அடிப்படையில் பலரும் பலவாறு பொருள் சொல்வர். ஆனால் ‘கொல்லன் உலைக்கு’ உரை மாற்றம் இல்லை. இங்கே ‘கொல்லன் உலை’ என்பது நெருப்புக்குவியல். இதனோடு தொடர்புடையதுதான் ‘ஊதுலைக்குருகு’. ‘ஊதுலை’ என்பது உலை. ‘குருகு’ என்பது அதன் மூக்குப் பகுதி. தற்காலத்திலும் கொல்லன் பட்டறையில் ஒருவன் வயிறுபோன்ற பகுதிக்குப் பின்னால் இருந்து இயக்க, அப்பகுதி வழியாக வெப்பத்தோடு கூடிய காற்று, கட்டி நெருப்பைக் கனலாக்கும். மூக்குப் பகுதி வழியாக வரும் காற்றின் தன்மையையும் வேகத்தையும் வெப்பத்தையும் ஏமாற்றத்திற்கும், பிரிவாற்றாமைக்கும் உவமமாக்கியிருக்கிறார்கள் புலவர் பெருமக்கள்.
“காதலர்ப் பிரிந்த மாதர் நோதக
ஊதுலைக்குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி” (சிலம்பு)
“காதலர்க் கெடுத்த நோயொடு உளங் கனன்று
ஊதுலைக் குருகின் உயிர்த்தனள்” (சிலம்பு)
“காதலர் இறப்பின் கனையெரி பொத்தி
ஊதுலைக் குருகின் உயிர்தகவு அடங்காது
இன்னுயிர் ஈவர்” (மணி. 2-43-45)
என்றெல்லாம் ஆற்றாமைக்கு உவமமாக ஊதுலைக்குருகு பயன்பட்டு வந்துள்ளது. உள்ளுடல் கொதித்து வெப்பத்தோடு வெளியேறும் பெருமூச்சுக்கு ஊதுலைக் குருகின் காற்று உவமம் பொதுவாகத் தலைவனையோ கணவனையோ மகளிர்க்கு உவமமாக்கப்படும் இந்த ஊதுலைக் குருகு என்பது மரபு சார்ந்தது.
“ஏழ் ஊர்ப்பொதுவினைக்கு ஓரூர் யாத்த
உலைவாங்கு மிதிதோல் போலத்
தலைவரம்பறியாது வருந்தும் என் நெஞ்சே!” (குறு. 172)
என்பது ஒரு தலைவியின் ஆற்றாமையைச் சித்திரிக்கும் சங்க இலக்கியப் பாடல் பகுதி. இவள் என்ன சொல்கிறாள்? ஒருபடி மேலே செல்கிறாள். உவமத்தின் அடர்த்தியைக் கூடுதலாக்குகிறாள். சாதாரண உலையில் உள்ளூரைச் சார்ந்த அல்லது அதற்குத் தேவையான ஒருசில தளவாடங்கள் உருவாக்கப்படும். எனவே நெருப்பும் அதற்கான ஊதுலையின் அளவும் வரம்புக்கு உட்பட்டு இருக்கும். ஏழு ஊர்களுக்குத் தேவையான தளவாடங்களை ஒரே ஊரில் உள்ள ஒரே ஊதுலையில் தயாரித்தால் அந்த ஊதுலையின் பரிமாணம் எப்படி இருக்கும்? அந்த ஊதுலையின் குருகிலிருந்த வெப்பக் காற்று எப்படி இருக்கும்? தலைவனைப் பிரிந்த எல்லலையற்ற ஆற்றாமையை இவ்வாறு வெளிப்படுத்துகிறாள் தலைவி. ஊதுலையின் பரிமாணத்தைத் ‘தலைவரம்பற்ற தனது வருத்தத்தின்’ மேல் வைத்துக் காட்டும் நுட்பம் ஓர்க. பின்னாளில் தனிமனிதன் காணும் வாழ்க்கைச் சிக்கலைப் இராமச்சந்திரக் கவிராயர்,
“ஆவீன, மழைபொழிய, இல்லம் வீழ,
அகத்தடியாள் மெய்நோக, அடிமை சாக,
மாவீரம் போகுதென்று விதைகொண்டோட,
வழியிலே கடன் காரர் மறித்துக் கொள்ள,
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற,
தள்ளவொண்ணா விருந்துவர, சர்ப்பந் தீண்ட,
கோவேந்தன் உழுதுண்ட கடனைக் கேட்க
குருக்களோ தட்சணையைக் கொடுஎன் றாரே!”
எனத் ‘துன்பக் கலம்பகம்’ பாடுதற்குச் சங்க இலக்கியத் தலைவியும் ஒரு வழிகாட்டியாக இருக்கலாமோ?
விலகினால் சுடும்! நெருங்கினால் குளிரும் நெருப்பு!
கவிதையில் சொல்லப்படும் கருத்தே கவிதையாகாது. அக்கருத்து சொல்லப்படும் முறையே கவிதையைத் தீர்மானிக்கிறது. இந்த முறைக்கு இலக்கிய உத்தி என்னும் பெயரும் பொருத்தமானதே. தலைவன் அருகிருந்தால் தலைவிக்கு மகிழ்ச்சி. அவன் அவளை விட்டுப் பிரியும் நேர்வுகளில் அவள் வருந்துவாள். இப்பிரிவு களவியலில் ஒரு வகையாகவும் கற்பியலில் ஒருவகையாகவும் அமையும். இருப்பினும் பிரிவுத்துன்பத்தால் வரும் ஆற்றாமையும் அதன் காரணமாக உடலில் தோன்றும் நிறவேறுபாடும் தவிர்க்க முடியாதவையே. கல்லூரி விடுமுறையால் பிரிந்தால் களவியல் பிரிவு. ஆடி மாதத்திற்குத் தாய்வீட்டுக்கு மனைவி சென்றால் கற்பியல் (இல்லறம்) பிரிவு. அவ்வளவுதான்.
“நீங்கின் தெரூஉம் குறுகினால் தண் என்னும்
தீ யாண்டு பெற்றாள் இவள்”
என்பது வள்ளுவர் கண்ட தலைவன் மயக்கநிலை கூற்று! எதனாலே இதனைத் தலைவனின் மயக்கம் என்கிறோம் எனின் தலைவனின் காமத்தீயால் அவன் தன்னையே சுட்டுக் கொள்கிறான். ஆனால் அத்தீ தலைவியால் வெளிப்படுதலின் எங்கே பெற்றாள் என்று அவள் மீது வைத்துக் கூறுகிறான். நீங்குவதும் குறுகுவதும் இவன்தானே! இந்த நோய் தலைவனுக்குப் பசப்பு என்றால் தலைவிக்கு இது பசப்பாக மாறும்.
“விளக்கற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு” (குறள்.1186)
என்னும் தலைவி கூற்றில் இதனை உணரலாம். விளக்கு முற்றும் அணைந்தால்தான் இருட்டு வரும் என்பதன்று. ‘விளக்கொளி’ குறையத் தொடங்கினாலே இருள் பரவத் தொடங்கும். இருள் ‘விளக்கொளி’ எப்போது குறையும் என்று காத்திருக்கும். அதுபோல முயங்கிய தலைவன் எப்போது விலகத் தொடங்குவான் என்று பசலை நோய் காத்திருக்குமாம். ‘அற்றம்’ என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் ‘மெலிவு’ என்று உரை காண்பதற்கு இதுதான் காரணம். இந்தப் பசலை தன்மேனியில் படர்வதற்கு அக்காலத் தலைவி ஓர் உவமம் கூறியிருக்கிறாள். அது எல்லாரும் அறிந்த உவமம். இன்றைக்கும் காணப்படுகிற காட்சி!
“ஊருண் கேணி உண்டுறை தொக்க
பாசி யற்றே பசலை? காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவழி விடுவழிப் பரத்த லானே!” (குறு. 399 பரணர்)
ஊர் மக்கள் நீரெடுத்துப் பயன்படுத்தும் கேணி மக்கள் பயன்படுத்துகிற காலத்தில் தூய்மையாகவும் பயன்படுத்தாது விடுபட்ட காலத்தில் பாசி படர்ந்தும் காணப்படுவது இன்றைக்கும் காணக்கூடியது. தலைவனோடு கூடியிருக்கும் காலத்துத் தன் மேனியில் படரத் தயங்கிய பசப்பு அவன் பிரிந்த நொடியிலிருந்து பரவுகிறதாம். பசப்பு பாசியான கதை இதுதான். இந்தக் கதையைக் கலித்தொகை தலைவி இன்னும் ஆழமாகச் சொல்கிறாள்.
“குடிபுறம் காத்தோம்பும் செங்கோலான் வியன்தானை
விடுவழி விழுவழிச் சென்றாங்கு அவர்
தொடுவழித் தொடுவழி நீங்கின்றல் பசப்பே” (கலி. 130)
மக்களை அன்பால் காத்து ஓம்பும் செங்கோல் மன்னனுடைய பெரிய படைகள் நாலாப் பக்கத்துப் பகைவர் மீதும் ஏவ, அப்பகைவர்கள் ஓடி மறைந்து செத்து ஒழிவதைப்போலப் பிரிந்த என் தலைவன் என்னைத் தொடத் தொட நீங்கியது என்கிறாள். மன்னன் படைகண்டு பகைவர் ஒழிந்தனர். தலைவன் தீண்டுதல் கண்டு பசலை ஒழிந்தது. அணைந்தால் குளிர்ச்சி! பிரிந்தால் கொதிப்பு! விளக்கொளி குறையும் காலம் பார்க்கும் இருட்டு! நீரெடுத்தால் படராத பாசி எடுக்காவிட்டால் படரும்! படைகண்டு பகை நடுங்கும்! தலைவன் தொடல் அறிந்துப் பசலை நீங்கும்! பிரிவுத்துன்பத்தைத்தான் எப்படியெல்லாம் எத்தனை உவமங்கொண்டு விளக்கியிருக்கிறார்கள் பாருங்கள்?
திண்கரை பெருமரம் போல
பயன்படுத்தாத ஊருணியில் படர்ந்த பாசிக்கு ஒப்பானது தலைவனைப் பிரிந்த காலத்துத் தன் மேனியில் படர்ந்த பசலை என்பது ஒரு தலைவியின் இரங்கத்தக்க நிலை. தலைவன் வந்த நிலையில் அவனோடு முயங்கும் முயக்கம் எத்தகையது என்பதற்கும் அதே ஊருணிக் கரை உவமமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பயன்படுத்துவதால் விலகும் பாசி அங்கே உவமம். தலைவன் அருகிலேயே இருப்பதால் நீர்ப்பிடிப்புக் கரையில் வளர்ந்த திண்மரம் இங்கே உவமம். அந்தப் பாடல் இப்படி அமைந்திருக்கிறது.
“மெல்லிய லோயே! மெல்லிய லோயே!
நன்னாள் நீத்த பழிதீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின்
சொல்ல கிற்றா மெல்லிய லோயே!
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே
நாள் இடைப்படா நளிநீர் நீத்தத்து
திண்கரை பெருமரம் போலத்
தீதில்நிலைமை முயங்குகம் பலவே” (குறு. 168)
கரை நொய்தாயின் மரத்திற்கு அழிவுண்டாமாகலின் ‘திண்கரை’ என்கிறாள் தலைவி. நீத்தம் என்றால் வெள்ளம். ‘நீர்ப்பிடிப்பான் கரையில் வளர்ந்த உறுதியான மரம்’ என்ற தொடர் தலைவனின் தண்ணளியை உணர்த்தியது. அவன் அன்பென்னும் நீர் சுரக்கும் என்பது கருத்து. இனி ‘நாள் இடைப்படா நளிநீர்’ என்றதனால் இடையிடாது மக்கள் நீரைப் பயன்படுத்துவதுபோலத் தலைவனின் அன்பும் அரவணைப்பும் தொடர்ந்து தனக்குக் கிட்டும் என்பதாம். தலைவன் பிரிந்து சென்ற வருத்தத்திற்கு இரங்காது பழிதூற்றியவரும் இவ்வூரினரேயாதலின் தலைவன் அருகிருக்கும் அதாவது வரைவுமலிந்திருக்கும் காலத்தில் அவர்கள் தலைவிக்குச் ‘சிறியர்’ ஆயினர். தான் தலைவனோடு கொண்ட பேரன்பின் காரணமாக நிலம்பக வேர்பிடித்து நிற்கும் மரத்தைத் தனக்குத் தானே உவமித்துக் கொண்டாள் தலைவி.
தலைவன் தன்னோடிருக்கும் போது தான் ஒரு திண்மரம் எனச் சொல்லுகிற தலைவியின் கூற்றில் அமைந்துள்ள உவம அடைச்சொற்கள் தலைவியின் உள்ளக் கூறுகளைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளதைக் காணலாம்.
வேழத்தை மிரட்டிய வெள்ளரவுக் குருளை
எளிய சிறிய செய்தி. அது மொழியாளுமை கொண்ட படைப்பாளன் ஒருவன் சிந்தனையில் கவிதையாக மலர்கிறபோது சொற்களின் எண்ணிக்கை புறந்தள்ளப்படுகிறது. குறள் வெண்பாவாகிய ஏழு சீர்கள் திருவள்ளுவருக்குப் போதுமானவையாக இருந்தன. சத்திநாதனார் என்னும் சங்கப்புலவருக்குத் தலைமகன் ஒருவனின் காதல் துயரத்தைக் கவிதையாக்கப் பதினைந்து சொற்கள் போதுமானவையாக இருந்திருக்கிறது. இந்தப் பதினைந்து சொற்களில் தலைவியின் புன்னகையால் சிதறடிக்கப்பட்ட ஆண்மை சித்திரிப்புக்கு ஆளாகிறது. காதல் விளையாட்டில் தலைமகன் எவ்வாறு எளியனாகிறான் என்பனவற்றையெல்லாம் இரத்தினச் சுருக்கமாகப் பதிவு செய்திருப்பதை அறியமுடிகிறது.
“சிறு வெள் அரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கி யாங்கு
இளையள் முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள் எம அணங்கி யோளே!” (குறு. 119)
இந்தப் பாடடில் பொருளின்கண் வந்துள்ள அடைகளும் உவமத்தின்கண் வந்துள்ள அடைகளும் பெரிதும் சுவைத்தற்குரியன. முதலில் பாம்புக்குட்டிக்குக் ‘குருளை’ என்னும் பெயர் வழக்கு உண்டு என்பதை அறிதல் வேண்டும். ‘கருநாகம்’ என்பதினின்று பிரித்தற்கு ‘வெள்ளரவு’ என்கிறார். அவ்வரவின் மேல் அழகான வரிகள் இருக்கும். அவள் புன்முறுவலே தன்னைத் தாக்கியது என்பதை ‘முளைவாள் எயிற்றள்’ என்னும் சொல்லால் குறிக்கிறான் தலைவன். முகைமொக்கும் நகை மொக்கும் ஒன்றல்லவா? போர்க்களத்தில் நண்ணாரும் உட்கும் தலைவனின் பீடு இச்சிறுமுது குறைவியின் புன்னகைக்குச் சீரழிந்தது என்பது கருத்து.
‘சிறு வெள்ளரவு’ என்பதற்கேற்ப ‘இளையள் வாள் முளை எயிற்றள்’ என்னும் ஒப்புமை காண்க. தலைவியைத் தழுவிய போது அவன் கண்ணுக்குக் கிட்டியது அவள் கையேயாதலின் கையள் என்றான்.
பாம்புக் குட்டி யானையை அச்சுறுத்துமா எனின் அது வழக்கியல் சார்ந்த இலக்கியப் பதிவு என்க. “அளைதாழ் அரவும் அரியும் செந்தீயும் அரசும் இளைதாயினும் கொல்லும்” என்னும் அம்பிகாபதிக்கோவை வரி பாம்புக்குட்டியும் அணங்குதற்குரியது என்பதைச் சுட்டுகிறது. இனிக் “குஞ்சரம் கோள் இழைக்கும் பாம்பு” என்னும் திருச்சிற்றம்பலக் கோவை வரி பாம்பு யானையை அணங்கும் என்பதைக் காட்டுகிறது.
ஒரு நான்கு வரிப் பாடலில் ;காணப்படும் இந்த உவமச் செறிவு என்பது தற்கால மரபுக்கவிதை எழுதுகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்களின கவனத்தை ஈர்க்குமா?
நிறைவுரை
அகவுணர்வுகளை வெளிப்படுத்துகிறபோது குறிப்பாகவே வெளிப்படுத்த வேண்டும் என்பது தமிழ் அகத்திணை மரபு. இந்த மரபை நூறு விழுக்காடு பின்பற்றி அமைந்திருப்பது சங்க இலக்கியம். ஆழமும் நுட்பமும் உடைய அகமனத்து அதிர்வுகளை இயற்கை சார்ந்த உவமங்களாலும் உலகியல் சார்ந்த உவமங்களாலும் உள்ளங்கவர் முறையில் விளக்கிக் காட்டுவது அதன் தனிச்சிறப்பு. மக்கள் நாளும் பயன்படுத்தும் ஊருணிக்கரையும் அதன் கரைவளர் மரமும் கூட உவமமாகியிருக்கிறது. திருவள்ளுவர் பேரறிவாளன் திருவிற்கு ஊருணியை உவமமாக்கினார். சத்திநாதனார் அதன் பயன்பாட்டைத் தலைவியின் பசலை நோய்க்கு உவமமாக்கினார். குறைந்த சொற்கள்! எளிய கட்டுமானம்! அழகிய உவமம்! ஆழமான பொருள்! இவற்றின் வேதியல் கலவைதான் சங்க இலக்கியம்!
(தொடரும்…)