உளவியல் வாசிப்பு நோக்கில் ஜெயந்தி சங்கரின் திரிந்தலையும் திணைகள்

0

முனைவர் சு. செல்வகுமாரன்
இணைப்பேராசிரியர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
E. mail- mugadu.kumaran@gmail.com
Cell – 9442365680

ஜெயந்திசங்கர் தமிழகத்தில் மதுரையில் பிறந்து தந்தையின் பணி காரணமாக இந்தியாவின் பல பகுதிகளில் வாழ்ந்து இன்று சிங்கப்பூரில் வசித்து வருபவர். நாவல், சிறுகதை, கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என ஏராளமான படைப்புகளை தமிழுலகிற்கு தந்தவர். இவரின் படைப்புகளைப் போலவே சீனத்து இலக்கிய மொழிபெயர்ப்பான மிதந்திடும் சுய பிரதிமைகள் என்னைக் கவர்ந்த ஒரு அற்புதமான நூலாகும்.  இவரின் ஐந்தாவது நாவலான திரிந்தலையும் திணைகள் ஒரு சமூகத்திற்குள்ளாக அல்லது ஒரு குடும்பத்திற்குள்ளாக, தனிமனிதன் ஒருவன் திருமணம், பாலியல், வேலை, பண்பாடு, அயலகக் குடிபெயர்வு, காதல், மொழி, உறவு, நட்பு, ஆண், பெண், குழந்தை, முதுமை, இளமை, எனும் வேறுபாடுகளின் அடிப்படையில் சந்திக்கும் அடுக்கடுக்கான நெருக்கடிகளை எடுத்துரைக்கின்றன.

பத்மா, பத்மாவின் அப்பா, கதிர், சரவணன், சரவணனின் தந்தை சுப்பையா, ரேணு, ரேணுவின் முதல் கணவன் ரவி, இரண்டாவது கணவன் மாதவன், ரேணுவின் மகன் நவீன், ரேவதி, ரேவதியின் அம்மா, அப்பா, செந்தில், கவிதா, கதிரின் மனைவி மீனா, மீனாவின் காதலன், கவிதா, கவிதாவின் கணவன், பாலா, கவிதாவின் அம்மா, அருள், டேவிட், அமட், அர்ச்சனா, லீலிங், தர்ஷினி, உள்ளிட்ட பாத்திரங்களின் மூலம் பிரச்சனைகளை அவர் மிக நுட்பமாக வெளிப்படுத்து கின்றார். இயல்பான கதாபாத்திரங்கள் என்பன இதில் ஒன்றிரண்டேயாகும். மற்றபடி யாவும் ஜெயந்திசங்கர் அவர்களால் தீவிரமான மனநலம் (உளவியல்) பிரச்சனைக்குரிய பாத்திரங்களாகவே திட்டமிட்டு தேர்வுசெய்து படைக்கப் பட்டிருப்பதை உணரமுடிகிறது. இது ஒருவகையில் எல்லா மனிதனும் ஏதோ ஒரு நிலையில் மனச்சிக்கலுக்கு உள்ளாகக் கூடியவன்தான் என்பதை குறிப்பாக உணர்த்துவதாகக் கூட இருக்கலாம்.

தமிழில் தொடர்ச்சியாக குறிப்பாக ஈழத்து, புலம்பெயர் நாவல்களை அதிகம் வாசித்து வருபவன் என்ற நிலையில் ஒப்பிட்டு நோக்கும் போது, அவைகளில் கூட ஒரே நாவலில் இத்தகைய தனிநபர் மனநெருக்கடிசார் பாத்திரங்களை யாரும் படைத்த்தாகத் தெரியவில்லை. ஆக அந்த வகையில் இது உளவியல் நோக்கில் முற்றிலும் பிற நாவல்களில் இருந்து வேறுபட்ட ஒரு நாவல் என்பதை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.

புதினத்தின் கதைக்களம் சிங்கப்பூர், புனே, மும்பை, சென்னை, தில்லி என பல பெருநகரங்களை மையமிட்டு விரிகிறது. சில கதாபாத்திரங்களின் மூலம் வாழ்வியலின் பல நெருக்கடியான புள்ளிகளைத் தொட்டுச் செல்லும் நாவலின் இறுதிப்பகுதியில் கவிதா ஏற்படுத்திய சலனத்தினால் தூண்டப்பட்ட சரவணனின் நினைவுகள், அவனிடையேயும் ஒரு பேராசைவை ஏற்படுத்தி விடுகின்றது. நாவலின் இறுதிப்பகுதியில் சரவணன் தன் மாமி மகளான கவிதா வீட்டிற்கு செல்கிறான். கவிதாவோ தன் திருமணத்திற்கு புகைப்படம் எடுத்த புகைப்படக் கலைஞன் அவனுக்கு நிகழ்ந்த ஒரு பயண விபத்தில் கேமராவை உடைத்துவிட்டதின் காரணமாக திருமண புகைப்படங்களை பார்க்க முடியாத நிலையில் அதனால் மனப் பிறழ்வுக்கு உள்ளானவள். வீட்டிற்கு சென்ற சரவணனிடம் கவிதா ஓடி வந்து,

“பினாங் போனப்ப நாம ரெண்டு பேரு மட்டும் எடுத்துக்கிட்ட அந்தப்படம் உன்கிட்ட இருக்கா சரவணா” (திரிந்தலையும் திணைகள், ப – 269)

என அவள் எழுப்பும் ஒரு கேள்வி அவளது மன எண்ணங்களை எவ்வளவு குழந்தமைத் தன்மைக்கு கொண்டு போய் உள்ளது என்பதை எண்ணி சரவணனை பெரிதும் வருத்தமடையச் செய்கிறது. அத்தருணத்திலேயே கவிதாவின் கணவன் பாலா, சரவணனிடம் அவளது மகள் அர்ச்சனாவை மூன்று நான்கு முறை ஒரு பையனோடு நெருக்கமாக கை கோர்த்துக் கொண்டு போனதைப் பார்த்தேன் என்று சொல்கிறான். ஆனால் தன் ஒரே மகளின் செயல் கூட அவனை பெரிதாக பாதிக்கவில்லை. காரணம் கவிதாவை அவர்கள் வீட்டு பிள்ளைகளில் ஒருவராக ஒரு காலத்தில் அவர்கள் பார்த்திருந்ததும், மட்டு மல்லாது கவிதாவைப் போலவே சரவணனும் தன் பாலிய கால நினைவுக்குள் மூழ்கிப் போவதும் இங்கு கவனப்படுத்தப்படுகிறது.

“கவிதா வீட்டில் செலவிட்ட அந்த ஓரிரு மணி நேர ஞாபகங்கள் வேலை நேரத்திற்கிடையிலும் சரவணனுக்குள் அடிக்கடி வந்தபடியிருந்தன. பாலா அர்ச்சனாவைக் குறித்து சொன்னதெல்லாம் பொருளற்றுப் போனது போல, கவிதாவின் நிலை குறித்து வருத்தங்களே முக்கியத்துடன் மேலே வந்தன. மலேசியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றது உள்ளிட்ட சிறுவயது நினைவுகள் என்றைக்கும் இல்லாமல் மிகுந்தபடியிருந்தன.

தனக்குப் பிறக்காத பெண்குழந்தையாகத்தான் அப்பா அவளை நினைத்திருந்தார். தொடர்ந்து அப்பாவின் நினைவுகளும் அதையடுத்து வழக்கம் போலவே முருகன் கோவில் பற்றிய எண்ணங்களுமாக மனம் கண்டபடி அலைந்தது”  (திரிந்தலையும் திணைகள், ப – 272)

சரவணனின் தந்தை சுப்பையா வாயெடுத்தால் அப்பனே முருகா என்று அழைப்பவர். முருகனின் கோயிலே பழியென்று கிடப்பவர். ஆனால் மகன் சரவணனோ தன் தந்தையின் இறப்பிற்கு பிறகு முருகன் கோயிலுக்கு பெரிதும் செல்லாமலே இருந்துவிடுகிறான். அங்கு சென்றால் தந்தை மீதான எண்ணம் அவனை வந்து அலைக்கழிப்பதை அவன் உணர்ந்திருக்கிறான். ஆனால் கவிதாவின் இந்த கேள்விக்குப் பிறகு இன்று அவன் மனம் மீள கோயிலுக்குச் செல்ல தூண்டப்படுகின்றது. மனைவி பத்மாவிடம் இன்று தாமதமாக அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புவதாக தொலைபேசியில் அழைத்து பேசிவிட்டு யீஷீன் இண்டஸ்ட்ரியல் பார்க் அருகே புதிதாக கட்டப்பட்டிருந்த முருகன் கோவிலுக்குச் செல்வதற்கு ஏதுவாக அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்குகிறான். அங்கு அவன் பார்க்கும் காட்சியினை கோயில், திருமணமண்டபம், உயரே செம்பவாங் நோக்கிப் பயணிக்கும் விரைவு ரயில், ஹீவாட் லீ ஈடிங்ஹெனஸ், டொஸ் ஸியேன் வெஜிடேரியன்ஃபுட், தொழிற்பேட்டையிலிருந்து வேலை முடிந்து நடந்தும், பைக், கார்களிலும் போவோர்கள், கோவில் அமைப்பு என்பதாக ஜெயந்திசங்கர் அருமையாக காட்சிப்படுத்துகிறார்.

“யீஷீன் சென்ட்ரலில் ஏராளமான பேருந்துகள் போவதும் வருவதுமாக இருக்க, சாலை விளக்கருகில் பச்சை விளக்குக்குக் காத்து நின்றிருந்த பாதசாரிகளின் கூட்டம் முன்பைவிட அதிகரித்திருந்தது. எல்லா வயதினரும் எல்லோரும் எங்கேதான் போவார்களோ ரயிலில் இறங்கி வீடுகளுக்குப் போவோரும், பேருந்தைப் பிடிக்கவென்று விரைவோரும் இருப்பார்கள். ஆனால் மனதிற்கு விருப்பமானவரைப் பார்க்கவும், சந்திக்கவும், பேசவும்தான் இளையோர் எல்லோரிலும் பரபரப்பு தொற்றியுள்ளது. நள்ளிரவுக்கு முன்னால் கூடடைவதே பெருந்தவறென்று கருதும் உல்லாசப் பறவைகள், போக்குவரத்து வசதிகள் மேம்பட்ட வாழ்வில் நிலப்பரப்புகளின் எல்லைகள் கலந்து மங்கி மறந்து விட்டதில், “ஒவ்வொரு தனிமனிதனும் தனியொரு திணையாகித் திரிவதைப் போல” உணர்ந்தான். சதா மாற்றங்கள் கண்டபடியிருந்த மனிதனுக்குள் விரிந்த அந்தப் பரப்பின் விரிவை அளந்தறிவது தான் எப்படி?” (திரிந்தலையும் திணைகள், ப– 276)

என்பதாக மனித மனங்களின் ஆழ அகலங்கள் சார்ந்ததான ஒரு கேள்வியை முன்வைப்பதோடு, ஊடாக புதினத்தின் தலைப்பான திரிந்தலையும் திணகள் என்பதற்கான விளக்கத்தையும் தந்து விடுகின்றார்.

மேலும் சிங்கப்பூர் வெளியுலக மக்களால் நிறைந்து காணப்படுவதையும் இது புலப்படுத்துகிறது. புதினத்தில் பல்வேறு மனச்சிக்கல் சார் பாத்திரங்களை உலவவிட்ட ஜெயந்திசங்கர் புதினம் நிறைவடையும் சூழலில் அர்ச்சனாவை மைய களத்திற்குள் கொண்டு வந்து அவள் ஒரு பையனோடு சுற்றுவதாக பாலா மூலம் சரவணனிடம் தெரிவிக்கும் அவர், அதனை ஒரு பிரச்சனையாக கருதி விரிவாக ஆராயமல், அவை தொடர்பான ஆரோக்யமான சில கருத்துக்களை மட்டும் சரணவன் மூலம் அசை போட வைப்பதோடு நிறுத்திவிடுகிறார். இது தேவையற்ற நிலையில் அர்ச்சனாவை மன உழைச்சலுக்கு உள்ளாக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் அமைகிறது. இதுவே புதினத்தின் வெற்றியாகவும், நோக்கமாகவும் பார்க்கத்தக்கதாகிறது.

தொடர்ந்து மனநலப் பிரச்சனைசார் விசயங்களை பேசும் இந்த புதினத்தின் இன்னொரு முக்கியமான அம்சம் சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்று தொழில் சார்ந்து மக்கள் அதிகம் குடியேறும் நாடுகளில் தொழில் நிமித்தமாக மகனோ, மகளோ, முதலில் குடியேற பின்னர் அவர்களைச் சார்ந்து குழந்தைகளை பராமரிக்க தாய், தந்தை, மாமனார், மாமியார் போன்ற முதியவர்களை ஊரிலிருந்து அழைத்து உடன் வைத்துக் கொள்ள முதியவர்களின் குடியேற்றங்கள் நிகழ்கிறது. இந்த முதியவர்கள் தம் சொந்த ஊர்களில் பட்டாம்பூச்சிகளாக எங்கும் உலாவி திரிகிறவர்கள். ஆனால் மாறாக அயலக மண்ணிற்கு தம் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை பராமரிக்க வந்திருக்கும் இவ்முதியவர்களுக்கு வெளிஉலக உலாவுதல் என்பது பெரிதும் தடைபட்டுப் போகின்றன. அதுவே சிங்கப்பூரிலும் நிகழ்கின்றன. ஆக அந்த முதியவர்களின் மனங்கள் வந்த இடத்தில் தரிக்க முடியாமலும் தாயகத்தில் வேர்களை படரவிட இயலாமலும் பெரும் சலனத்துக்கு உள்ளாகின்றனர். இதனை ஒரு படைப்பாளி என்ற நிலையில் ஜெயந்தி சங்கர் அவர்கள் கண்டடைந்து ஒரிடத்தில் சரவணனின் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.

“வயதானவர்களில் பெரும்பாலோர் கோவிலுக்குள் இருக்கும் இயல்போடு வெளியில் இல்லாதது போலப்பட்டது.  அவனுக்கு எல்லா இனத்தவரும் ஏறியிருக்கும் பேருந்துக்குள் நுழைந்ததுமே நுண்மையாகக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே உணரக்கூடிய லேசான அசௌகரியம். அவர்களில் குறிப்பாக முதியவர்களின் முக பாவனையிலும், அணுகு முறையிலும், மெய்ப்பாடுகளிலும் பார்வையிலும், ஏன் இதற்கென்ன காரணம் எத்தனையோ தடவை யோசித்தாகி விட்டது.

பெரும்பாலான பொழுதை வீட்டின் நான்கு சுவர்களுக்குள் கடத்துவது, கோவில்களுக்கு அல்லது சிரெஸ்டன் வட்டாரத்துக்குச் செல்வது. அதிகம் போனால் தமிழர்களின் விழாக்கூட்டம் மற்றும் திருமண மையங்களுக்கு மட்டுமே சென்று பழக்கப்பட்டு வாழ்க்கையை ஓட்டி விடுவார்களோ என்றெண்ணத் தோன்றியது. ஆழ அடி மனதில் இருக்கக் கூடிய ஏதோவொன்று என்னதான் அது, இத்தனைக்கும் இந்தியாவிற்கோ வேறு நாட்டிற்கோ போயிருக்கக் கூடிய சாத்தியங்களே இல்லாத எம்மக்கள் தாம் இவர்கள். சிங்கப்பூரார்கள், கல்வியும் அதுக்கடுத்த ஓரளவு நல்ல வேலையும் தனக்கு அமைந்ததென்பதை தவிர அவர்களுக்கும் தனக்கும் யாதொரு வேறுபாடும் இல்லையே என்று சிந்தித்தான். ஒவ்வொரு முறை யோசிக்கும் போதும் அந்தக் கேள்விக்குச் சரியான விடை மட்டும் கிடைக்காமலே இருந்தது” (திரிந்தலையும் திணைகள், ப – 275)

புதினத்தில் இடம்பெற்றுள்ள பாத்திரங்களில் பத்மா, பத்மாவின் அப்பா, சரவணனின் அப்பா, பாலா, அருள் ஆகியோர் சிறந்த குணாதிசயங்களைக் கொண்டவர்களாக மனச்சிக்கல் அற்றவர்களாக உலாவுகின்றனர். நேர்மாறாக கவிதாவின் அம்மா, அர்ச்சனாவின் வகுப்புத் தோழன் ஸீஹாவின் அம்மா பாத்திரங்கள் எப்போதும் அடுத்தவர்களை தவறாக பார்ப்பவர்களாக, அடுத்தவர்களின் மனவலியை கண்டு கொள்ளாது அவர்களுக்கு உபத்திரவம் செய்பவர்களான குணாதிசயம் கொண்டவர்களாக படைக்கப்பட்டுள்ளனர்.

ரவியைப் பொறுத்தமட்டில் சிறு வயது முதலே மனநலம் பாதிக்கப் பட்டவனாக இருக்கின்றான். இது அவனுக்கு மனைவியாக வருகின்ற ரேணுவின் வாழ்வை பெரிதும் பாதிப்பதோடு அவளுக்குப் பிறக்கின்ற மகன் நவீனையும் பெரிதும் பாதிப்பதாக அமைகின்றது. கவிதாவோ தனது திருமணப் புகைப்படங்கள் கிடைக்காத நிலையில் கண்முன் இருக்கின்ற நிஜவாழ்வை ரசிக்கத் தெரியாது, முரணாக காட்சிசார் நினைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதையே எண்ணி மனப் பிறழ்வுக்குள்ளாகி வாழ்வைத் தொலைத்தலை பார்க்க முடிகிறது. மேலும் புதினத்தில் பாலாவால் தனக்கு துணையாக வந்த கவிதாவால் வாழ்வை முழுமையாக ரசிக்க முடியாமல் போய்விடுகிறான். இன்னொருவனை காதலித்து வந்த மீனா பெற்றோரின் அடக்கு முறைகளால் மனம் அமுக்கப்பட்டு கதிரை திருமணம் செய்வதும் ஆனால் திருமணம் முடிந்த நிலையில் முந்தைய காதலனால் அவள் நெருக்குதலுக்குள்ளாகி மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இங்கு கதிரின் வாழ்வும் சமூகத்தில் கேள்விக்குரியதாகின்றது. ஒருவரின் சிக்கல்கள் இன்னொருவரை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இந்த சிக்கல்கள் நிகழாதிருக்க நாம் பிறரை சரியாகப் புரிந்துகொள்வதும், பிரச்சனைகள் வருகின்ற போது பிறரோடு திறந்த மனதோடு பேசி யாருக்கும் அஞ்சாமல், அடிபணியாமல் தெளிவான முடிவுகள் எடுக்க வேண்டிய அவசியத்தையும் இந்த நாவல் வலியுறுத்துகிறது என்றால் மிகையல்ல.

படைப்புகளைப் பொறுத்தமட்டில் பாத்திரங்களின் உளவியலை ஆராய வேண்டியுள்ளது. அதாவது பாத்திரங்களின் பேச்சு மற்றும் செயல் போல படைப்பில் காட்சிப்படுத்தப்படும் பாத்திரங்களின் குணாதிசயங்களுக்கும் படைப்பாளிக்கும் நேரடியான தொடர்பிருப்பதாக உளவியலாளர்கள் கருதுகின்றனர். இலக்கியமும் உளப்பகுப்பாய்வும் பற்றி பேசும் பேரா. அரங்க நலங்கிள்ளி அவர்களின் கூற்று இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

“உளப்பகுப்பாய்வு நெறிமுறைகளைப் படைப்பாக்கத்திற்குப் பயன்படுத்தும் போது படைப்பாக்கத்தில் நமக்கு ஆய்வு மூலங்களாக விளங்குபவை பாத்திரத்தின் பேச்சு, படைப்பாளியின் பேச்சு (படைப்பிற்குள்) கதை சார்ந்த சூழல், படைப்பில் வெளிப்படும் படிமங்கள் படைப்பிற்கு அப்பாலுள்ள படைப்பாளியின் வாக்கு மூலங்கள், வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு இன்ன பிற. இதன்வழி படைப்பின் மறைபொருளைத் துப்பறியலாம். படைப்பாக்க உளவியலைக் கணடறிதலின் பயனை இரு நிலைகளில் காட்டுவார் லைனல் டிரில்லிஸ். அவை ஆழ்பொருளைக் கண்டு விளக்குதல், படைப்பாளன் ஒரு மனிதன் என்ற நிலையில் அவனது உண்மைத்துவத்தை (Reality) விளக்குதல்” (1972,ப-284) இதிலிருந்து படைப்பாளன் படைப்பிலக்கியத்தில் இருந்து எந்நிலையிலும் தனியனாகி விடமுடியாது என்கின்ற உண்மை புரிகிறது. படைப்பின் மறைபொருள் என்பது படைப்பாளனின் நனவிலி மனவேட்கையே இந்த நனவிலி மனவேட்கையே உண்மைப் பொருள் (Reality) இவ்வகையில் படைப்பின் உண்மைப் பொருளை உளப்பகுப்பாய்வு நெறிமுறைகளைப் (Psycho anlitical methods) பின்பற்றி வெளிக்கொணர முடியும்” (இலக்கியமும் உளப்பகுப்பாய்வும், பக் 11, 12) என்கிறார்.

மேலும் இந்த அமுக்க மனநிலையே படைப்பில் வெளிப்படுகிறது என்பதை ஃபிராய்டு சுட்டும் வேளையில், அவர் வழி வந்த லக்கான் படைப்பு வழியான உரையாடலும் மீண்டும் அமுக்கப்படுவதால் உரையாடலாக விடுபடல் தன்மை கொண்டதாகவே அமைகிறது என்பதும் நாம் எண்ணிப் பார்க்கத்தக்கதாகிறது. இந்த ஃபிராய்டிய லக்கானிய சிந்தனைகளை திரிந்தலையும் திணை புதினத்தில் பொருத்தி பார்ப்போமாயின் ஜெயந்தி சங்கர் அவர்களின் மனதின் பிரதியே இந்த படைப்பு என்பதாக அர்த்தம் கொள்ளலாம். அதுவும் கூட லக்கானின் கூற்றுப்படி முழுமையான பிரதி இதுவெனக் கொள்ள முடியாது போகிறது. ஏனெனில் இந்த கதை சொல்லலிலும் அமுக்கம் நிகழ்ந்திருப்பதாக கொள்ள வேண்டியுள்ளது என்கிறார்.  இங்கு இத்தகையதான ஓர் உளவியல் ஆய்வை மேற்கொள்கிற போது ஒரு படைப்பின் அனைத்து பாத்திரங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் படைப்பாளிக்கும் நேரடியான தொடர்பு இருப்பதாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது. படைப்பாளியின் வாழ்வோடு நேரடியாக பாதிப்படைவது போக அவர் கண்டு, கேட்டு, வாசித்த, பார்த்த நிகழ்வுகளின் பாதிப்பு நினைவுகளின் வழியாகவும் படைப்பாளி ஒரு புனைவை உருவாக்கி விட முடியும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். ஆக இப்போக்கு பல படைப்புகளுக்கும் பொருந்துவதாயினும், திரிந்தலையும் திணை அடிப்படையிலேயே உளவியல் கட்டுமானத்தைக் கொண்டு கட்டப்பட்டுள்ளதால் அதற்கு முற்றிலும் ஏற்புடையதாக அமைகிறது. ஆக புதினத்தை உளவியல் நோக்கில் வாசிப்புக்கு உட்படுத்துகிற போது பாத்திரங்களின் வழி மானுடத்தின் மனச்சிக்கல்களை அறிந்து கொள்ளவும், அதனை நம் வாழ்விலும், சமூகத்திலும் நிவர்த்தி செய்யவும் திரிந்தலையும் திணை உதவியாக அமைகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *