Author: admin

  • கதையும் மொழிதலும் – 4: கு. அழகிரிசாமியின் ‘காற்று’

    கதையும் மொழிதலும் – 4: கு. அழகிரிசாமியின் ‘காற்று’

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
    ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
    ramachandran78.blogspot.com
    9360623276

    கரிசல்காட்டு வாழ்க்கையை இலக்கியமாக்கியதில் குறிப்பிடத்தக்கவர் கு.அழகிரிசாமி. இவர் 1940 க்கும் 1970 க்கும் இடைப்பட்ட கரிசல்காட்டு வாழ்க்கையைச் சிறுகதைகளில் காத்திரமாகப் பதிவு செய்திருக்கிறார். இவரின் ‘அன்பளிப்பு’ சிறுகதைத் தொகுப்பு சாகித்திய அகாதமி விருது பெற்றது. தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் க.நா.சு. மதிப்பீடு செய்த சிறுகதை எழுத்தாளர்களில் கு.அழகிரிசாமியும் ஒருவர். தனது சிறுகதைகள் உருவாகிய விதம் குறித்தும் அதன் அமைப்பு குறித்தும் அக்கதைகள் எழுதப்பட்ட பின்புலம் குறித்தும் இவரே கட்டுரைகள் எழுதியுள்ளார். அக்கட்டுரைகள் இவரின் சிறுகதைகளை மூன்று விதங்களில் புரிந்துகொள்ள உதவுகின்றன. நிகழ்ச்சிகளின் தொகுப்பாக எழுதப்பட்ட கதைகள், கதைகளாக எழுதப்பட்டுக் கருவாக உருமாறிய கதைகள், கருவை மையமாக வைத்துப் புனையப்பட்ட கதைகள் என்று தனது கதைகள் உருவான விதங்கள் பற்றி அவரே கூறியிருக்கிறார். இவரது கதைகள் பெரும்பாலும் வரது குடும்பப் பின்னணியைச் சார்ந்தவையாகவும் அவர் வாழ்ந்த இடைசெவல் கிராமம் சார்ந்த பின்புலத்தைக் கொண்டவையாகவும் உருவாக்கப்பட்டிருப்பதைச் சிறுகதைகளின் ஊடாக நம்மால் அறிந்துகொள்ள முடியும். பிறகு தான் வாழ்ந்த சென்னை நகர வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டு சில கதைகளை எழுதியிருக்கிறார். அப்படி எழுதப்பட்ட கதைகளில் மிகவும் முக்கியமான கதையாக விளங்குவது ‘காற்று’ சிறுகதை.

    கிராமச் சமுதாயம் படிப்படியாக வளர்ந்து நகரச் சமுதாயமாக மாறி வருகின்ற முக்கியமான காலக்கட்டம் 1970. இக்காலக்கட்டத்தில் விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் ஒவ்வொரு கிராமத்தையும் ஒவ்வொரு நகரத்தையும் மிகப்பெரிய பாதிப்புக்கும் மாற்றத்திற்கும் உட்படுத்தின. அத்தகைய மாற்றத்தில் பாதிக்கப்பட்டது வேதகிரி குடும்பம். கிராமத்தில் இருந்து நீங்கி, நகரத்தை நோக்கிப் பயணித்து, ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்கிறார் வேதகிரி. திருமண வாழ்க்கைக்குப் பிறகு நான்கு குழந்தைகள் பிறந்தாலும் மிஞ்சி இருப்பவர்கள் இரண்டு குழந்தைகளே.

    திண்ணைகள், மனித வாழ்க்கையில் மிக முக்கியமான சிந்தனைப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒவ்வொரு வீடும் திண்ணைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். வழிப்போக்கர்கள் அமர்வதற்கும், காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் ஆசுவாசத்தோடு கதைபேசி உறவுகளோடு உரையாடுவதற்கும், இயற்கையோடு இன்பமாகக் களிப்பதற்கும் முக்கிய இடமாக விளங்கி வந்தவை திண்ணைகள். பிறகு குழந்தைகளின் விளையாட்டு இடமாக மாறிப் போயின. வீட்டைவிட்டுத் தெருவிற்கு வந்தால் குழந்தைகள் கூடுகின்ற இடமாகத் திண்ணைகள் விளங்கின. குழந்தைகளின் அட்டூழியங்களைக் கண்டு வீட்டுக்காரர்களும் இரும்புக் கம்பிகளால் வளையம் போட்டுவிட்டார்கள். குழந்தைகளின் மிகப் பெரிய கொண்டாட்டம் தடுக்கப்பட்டதால் குழந்தைகள் அனாதைகள் ஆனார்கள். அவர்களின் கொண்டாட்டத்தைத் தேடி அலைந்ததில் கற்பகத்திற்கு வாய்த்தது ஒரு திண்ணை. கற்பகத்தைப் போல அந்தத் தெருவில் இருக்கின்ற குழந்தைகள் பலருக்கும் கொண்டாட்டத்தின் இடமாக அந்தத் திண்ணை மாறியது. அதே நேரத்தில் அந்த வீட்டிற்கு வாடகைக்காரராக வந்திருக்கக்கூடியவருக்கு மிகப்பெரிய அளவில் நெருக்கடியாகக் குழந்தைகளின் கொண்டாட்டம் மாறிவிட்டது. குழந்தைகளின் கும்மாளமும் விளையாட்டும் அவருக்குத் தொந்தரவாக மாறின.

    குழந்தைகளுக்கு எதிரியாக மாறி, கற்பகத்தையும் மற்றொரு குழந்தையையும் அடித்து நொறுக்கி விடுகிறார். கன்னம் வீங்கி, கண்கள் சிவக்க அடிவாங்கிய கற்பகம், வீட்டிற்கு வந்தபோது அம்மாவின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக, அப்பாவின் கரிசனமான வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்தவற்றைக் கூறுகிறாள். என்ன செய்ய முடியும்? ‘அவர்கள் வீட்டுத் திண்ணையில் நீங்கள் போய் விளையாடினால், அவர்கள் அடிக்கத்தான் செய்வார்கள்’ என்று பெற்றோரின் வார்த்தைகளைக் கேட்டு மௌனமானாள் கற்பகம்.

    அன்றுமுதல் வீட்டை விட்டு வெளியே செல்வதற்குத் தடைகள் பல. இந்த ஒண்டுக் குடித்தன வாழ்வு என்பது, கற்பகத்துக்குச் சவாலான ஒன்றாக மாறிப்போனது. அம்மாவின் அடுப்படியில் இருந்து எப்பொழுதும் புகைமூட்டம் வந்துகொண்டே இருக்கிறது. மூச்சு விடுவதற்குக்கூட சிரம்மப்பட வேண்டியநிலை. வெளி உலகமும் சுதந்திரக் காற்றும் கற்பகத்தைச் சுண்டி இழுத்தன. என்றாலும் அம்மாவின் கோபத்திற்கும் அப்பாவின் அன்புக்கும் கட்டுப்பட்டு வீட்டிலேயே இருக்கத் தொடங்கினாள். அந்தத் திண்ணை வீட்டுக்காரரின் அடி, இன்னும் அவளது மனத்தில் நீங்காத வடுவாக இருந்து வந்தது. மற்ற குழந்தைகள் எல்லாம் சகஜமாக மீண்டும் அதே திண்ணையில் விளையாடியபோதும் அவளுக்குத் தைரியம் வரவில்லை.

    நாட்கள் செல்லச் செல்ல, கற்பகத்தின் எண்ணம் உடலை நலிவடையச் செய்தது . குழந்தையின் மன மாற்றத்தையும் உடல் மாற்றத்தையும் வியப்போடு கண்டுகொண்டிருந்த வேதகிரிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. கற்பகம், அப்பாவிடம் நமது வீட்டிலும் திண்ணை கட்டினால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தாள். அவளின் கோரிக்கையைக் கேட்டுப் புன்னகைத்துவிட்டு கடந்து சென்றுவிட்டார் வேதகிரி. நாம் வாங்குகின்ற 40 ரூபாய் சம்பளத்தில் 10 ரூபாய் வீட்டு வாடகைக்குச் சென்று விடுகிறது. நகர வளர்ச்சியின் அசுர வேகத்தில் தனது வாழ்க்கை தாக்குப் பிடிக்க முடியாமல் திணறுவதை ஒவ்வொரு நாளும் கவனித்து வருகிறார். அதே நேரத்தில் குழந்தைகளும் வளர்ந்து வருகின்றன.

    கற்பகத்தைப் பள்ளியில் சேர்த்துவிட்டால் அவளது மனச் சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்று எண்ணுகிறார் வேதகிரி. அருகில் இருக்கக்கூடிய பள்ளிக்கூடத்தில் கற்பகத்தைச் சேர்த்து விடுகின்றார். கற்பகத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சி. அந்தச் சிறிய வீட்டில் மனச் சிக்கலோடு புறவுலகின் பரந்த வெளியை நினைத்து ஏங்கிய அவளுக்குப் பள்ளிக்கூடம் மிகப்பெரிய விடுதலையைத் தந்தது. மிக மகிழ்ச்சியோடு பள்ளிக்கூடம் சென்று வந்தாள். புற உலகத்தைச் சுற்றிப் பார்ப்பதும் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதும் மற்ற மனிதர்களின் வாழ்வியல் செயல்பாடுகளை உற்றுநோக்குவதும் அவளுக்குப் பிடித்த செயல்களாக மாறின. ஒருநாள் கற்பகத்திற்கு அப்பா அழைத்துச்சென்ற கடற்கரையைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பள்ளிவிட்ட பிறகு கடற்கரை ஓரமாகச் சென்று வரலாம் என்று எண்ணினாள். பரந்த மணல் பரப்பும் சுதந்திரச் செயல்பாடுகளும் விளையாட்டின் உச்சமும் அவளைச் சாந்தோம் கடற்கரையை நோக்கி நடக்கத் தூண்டின. பள்ளிவிட்ட பிறகு பொடிநடையாகக் கடற்கரையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

    பாதையில் ஓடுகின்ற வாகனங்களையும் உயர்ந்து நிற்கின்ற கட்டடங்களையும் வியப்போடு பார்த்துக்கொண்டே நடந்தாள். எதிரில் வருகின்ற மாட்டையும் கன்றுக்குட்டியையும் கவனிக்காமல் திடுக்கிட்டு நின்றுவிட்டாள். பிறகு சுதாரித்துக்கொண்டு மாட்டிற்கு வழிவிட்டு நடக்கத் தொடங்கினாள். வியப்பின் உச்சத்தில் மனித நாகரிகத்தின் முழு ஆற்றலையும் உள்வாங்கிக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள். அவளின் சுதந்திர வேட்கையும் புறவுலகின் பிரம்மாண்டமும் அவளைக் களத்தில் உந்தித் தள்ளின. மகிழ்ச்சி வேகத்தில் சாலைகளைக் கவனமாகக் கடக்கத் தவறிய அவள் எதிரே வருகின்ற லாரியில் அடிபட்டுச் சுக்கு நூறாகி மரணித்துக் கிடந்ததோடு கதை முடிவடைகிறது. காற்று மட்டுமல்ல அவளது உயிரும் சுதந்திரமாக உலாவித் திரியத் தொடங்கின.

    இந்தக் கதையின் ஆசிரியர், கற்பகத்தைக் கொலை செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக, வாசகனின் மனத்தைத் துன்பப்படுத்துகிறது. அவளைச் சாந்தோம் கடற்கரை ஓரமாக விளையாட விட்டிருக்கலாம்.  ஆனந்தப் பெருவெளியை அவள் மூலமாகக் கட்டி அமைத்திருக்கலாம். ஆனால் கு.அழகிரிசாமியால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அவரது காலத்தில் கதைக் கட்டமைப்பு என்பது இப்படித்தான் முடிந்திருக்க வேண்டும். இத்தகைய முடிவைத்தான் அவர்கள் விரும்புவார்கள் என்ற மனப்போக்கு அவருக்கு இருந்திருக்க வேண்டும். ஆனால் வாசகனுக்கு அந்த முடிவு, ஒரு செயற்கையான செயல்பாட்டை மனத்தில் ஏற்படுத்தி விடுகின்றது.

    கதையில் அழகிரிசாமியின் கிராமத்து இயக்கங்கள், கற்பகத்தின் வாயிலாக வெளிப்பட்டு நிற்கின்றன. திண்ணைகள், கிராமப்புற வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தைப் பெறுபவை. குழந்தைகளின் சுதந்திரமும் விளையாட்டுக் குதூகலமும் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் ஏதோ ஒரு சூழலில் ஏங்கித் தவித்த நிகழ்வை மறு சிந்தனைக்கு உட்படுத்தாமல் இருப்பதில்லை. அதேபோல திண்ணை வீட்டுக் குடித்தனக்காரர் குழந்தைகளை விரட்டுவதற்குச் செய்கின்ற பிரயத்தனங்களும் பேசுகின்ற சொற்களும் இறுதியில் குழந்தைகளை அடிக்கின்றதும் நாம் ஏதோ ஒரு சூழலில் அனுபவித்ததாக, நேரில் பார்த்ததாக, கேள்விப்பட்டதாக இருக்கின்றன.

    மனிதனின் மகிழ்ச்சியானது இன்னொரு மனிதனுக்கு மிகப் பெரிய உளவியல் சிக்கலை ஏற்படுத்துவதை இக்கதையில் காண முடிகிறது. குழந்தைகளின் கொண்டாட்டத்தைக் குடித்தனக்காரரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவரது மனம், கொடூர எண்ணங்களால் கொல்லப்படுகிறது. இதன் வெளிப்பாடாகக் கற்பகத்தை அடிக்கும் அவர் மனத்தளவில் சமாதானம் அடைவதும் நிம்மதி அடைவதும் அவரின் உளவியல் சிக்கலை எடுத்துக் கூறுகின்றன. அதே நேரத்தில் வறுமையில் வாழ்பவர்கள் எதையும் எதிர்த்துக் கேட்க முடியாத, முழுமனத்தோடு ஏற்றுக்கொள்கின்ற ஒரு வாழ்வியல் சிக்கலை இங்கேயும் நாம் காணலாம்.

    வாழ்க்கைப் போராட்டம், இருப்பதைத் தக்க வைத்துக்கொள்வதற்கும் சுற்றுச் சூழலோடு முரண்படாமல் வாழ்வதற்கும் எதையும் தனது குற்றமாக எண்ணிக்கொள்வதற்குமான ஒரு சிந்தனை முறை வேதகிரியால் கட்டமைக்கப்படுகிறது. ஒரு சமூகம் இத்தகைய மனிதர்களைத் தனது பொருளாதார, அரசியல் சூழலில் கட்டமைக்கிறது என்பதற்கு வேதகிரியின் வாழ்க்கையும் கற்பகத்தின் மரணமும் சான்றுகளாக அமைகின்றன. அனைத்தையும் பார்த்துக்கொண்டு எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இந்தச் சமூகம் சென்றுகொண்டிருக்கிறது. வேதகிரியின் மனைவி, இக்கதையில் பல இடங்களில் கற்பகத்தை இறந்து விடுவதாக அல்லது கற்பகத்தைக் கொன்று விடுவதாகக் கூறுகிறாள்.

    கதை ஆசிரியர், கற்பகத்தின் அம்மா மூலமாகக் கற்பகம் இறந்துவிடுவாளோ என்ற ஓர் உணர்வை உருவாக்கி விடுகிறார். சுதந்திரத்தை விரும்புபவர்கள் கொண்டாட்டங்களை நோக்கிப் பயணிக்கக் கூடியவர்கள், சுயமாகச் சிந்திப்பவர்கள் இறுதியில் மரணத்தை அடைவார்கள் என்ற ஒரு தவறான புரிதலை இக்கதையில் கட்டமைத்து விடுகிறார் அழகிரிசாமி. கற்பகத்தின் மரணம் என்பது வறுமையில் வாழ்கின்ற, சுதந்திரத்தை விரும்புகின்ற, புற உலகைத் தன்வயப்படுத்த எண்ணுகின்ற ஒரு மனிதனது வலிமைக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளியாக இருப்பதைக் காண முடிகிறது.

    இக்கதையில் வேதகிரி, அவருடைய மனைவி, கற்பகம், கற்பகத்தின் தம்பி தற்சார்புடைய குற்ற உணர்ச்சிக்கு உட்பட கூடியவர்களாக இருக்கிறார்கள். சிக்கலான வாழ்க்கைச் சூழலுக்கும் அடிமைத்தனத்திற்கும் இறுதியில் கற்பகத்திற்கு ஏற்படுகின்ற மரணத்திற்கும் சமூகச் சூழலே காரணம் என்பதை உணர்த்தத் தவறி விடுகிறதும், அதற்கு மாற்றாகச் சுய கழிவிரக்க உணர்ச்சியும் எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டுமென்ற போராட்டமும் மேலும் இக்காலக்கட்டத்தின் சமூக நோய்க்கூறை வெளிப்படுத்தியும் இருக்கிறது கதை.

    ஒரு சமூகத்தில் மனிதர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள், அவர்களின் வாழ்க்கைச் சூழல் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது, இந்த வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்துவிட்டு செல்வதற்காகப் போராடும் மனிதர்களின் வாழ்க்கை எந்தச் சமூகத்திற்கும் ஏற்றதாகவும் சமூகச் சார்பற்றதாகவும் தனித்து விடப்பட்ட பலூனைப் போல அனாதையாகச் சுற்றி திரிவதைக் காணமுடிகிறது. ஒவ்வொரு மனிதனும் இந்தச் சமுதாயத்தின் பிரதிபலிப்பு, இந்தச் சமுதாயத்தின் ஒரு கண்ணி, இந்தச் சமுதாயத்தின் முக்கியமான இடம் என்பதை உணராமல் அல்லது உணர்த்தப்படாமல் அனைத்திற்கும் தானே காரணம் என்ற பயிற்றுவிப்பு இங்கே வாசகனை ஆழ்ந்த கழிவிரக்கம், கடுமையான கோபம், சமூகத்தின் மேல் பல கேள்விகளுக்கும் ஆட்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் இந்தச் சமுதாயத்தின் இயங்குதளத்தில் முக்கிய கண்ணியாக இருந்தபோதிலும் அது அவனுக்கு உணர்த்தப்படாமலேயே இந்தச் சமூகம் அவனைச் சுரண்டிப் பிழைப்பதை வேதகிரி வாழ்க்கை எடுத்துக் காட்டுகிறது.

    ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கைச் சிக்கலுக்குத் தான் மட்டுமே காரணம் என்ற பயிற்றுவிப்பும் உலகின் சுரண்டலைப் பற்றிய அக்கறையும் இக்கதையில் கூடுதல் கவனத்தைப் பெறுகின்றது. கற்பகம் இறுதியில் இறந்து விடுவது என்பது எந்த ஒரு மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாத சமூகத் தற்கொலையாகும்.

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 22

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 22

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தமிழ்க்கவிதைகளில் உவம மரபு

    முன்னுரை

    ‘மரபுக் கவிதை’ என்னுந் தொடர் யாப்பை மட்டும் உணர்த்துவதாகக் கொண்டு மயங்குவர் பலர். அவர் ஒரு பாட்டைத் திறனாய்வு செய்யத் தொடங்கியவுடனேயே ‘காய் காய் மா மா’ என்று கவிதையைக் கொத்துக் கறியாக்கிவிடுவர். வேட்டியும் புடவையும் எப்படி மரபு சார்ந்ததோ அதுபோலவே  கவிதையின் புறக்கட்டுமானமும் மரபு சார்ந்ததே! இதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் வேட்டியும் புடவையும் மட்டுமே ஒருவனை மனிதனாக்கிவிடுகிறது என்னும் நிலைப்பாட்டை அன்னார் எடுக்கிறபோதுதான் நமக்கு மடையளவு தண்ணீர் அணையளவு பெருகுகிறது. உள்ளடக்கத்தின் பரிமாணம், உத்தியின் புதுமைகள், உவமத்தின் பன்முகப் பரிமாணம் மற்றும் பயன்பாடு, வடிவக் கட்டுமானம் இவை அத்தனையும் கலந்த கலவைதான் மரபு என்பது.  பரத்தையரைப் பற்றியும் பத்தினியைப் பற்றியும் பாடுவது நம் தமிழ் மரபு.  நூன்மரபில் தொடங்கி மரபியலில் தமது நூலை முடித்துக் காட்டியிருக்கும் தொல்காப்பியம் சொல்ல வருவது அதுதான். ‘வாழையடி வாழையென வந்த தமிழ் மரபு’ அது. அந்த மரபு ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கியங்களில் உவமத்திலும் உத்தியிலும் குடிகொண்டிருப்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.

    தழுவும் தோளும் நழுவும் உள்ளமும்

    நாலடியாரில் நல்ல நூலுக்கு ஒரு உவமத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அந்த உவமம் கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலையில் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

    பெறுவது கொள்பவர் தோள்போல் நெறிபட்டுக்
    கற்பவர்க் கெல்லாம் எளிய, நூல்., மற்றும்
    முறிபுரை மேனியர் உள்ளம் போன்று யார்க்கும்
    அறிதற்கு அரிய பொருள்

    என்பது அந்தப் பாட்டு. ஒரு நூல் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிச் சொல்லவரும் பாடல் இது. நூல் மொழியால் எளிமையாகவும் கருத்துக்களால் அரியதாகவும் இருக்க வேண்டும் என்பதைச் சொல்ல வருகிறது. இதற்கு இந்தப் பாட்டில் விலைமகளிரின் இரண்டு உறுப்புக்கள் உவமங்கள் ஆக்கப்படுகின்றன. ஒன்று அவளுடைய தோள். மற்றொன்று அவளுடைய மனம். முன்னது காணக்கூடியது. பின்னது காட்டலாகாதது. பெறுவது கொள்பவர் என்றதனால் தான் பெற வேண்டியதை மிகச் சரியாகப் பெறும் இயல்புடையவர் என்பது பெறப்படும். பொருளை அவள் பெற்றுக் கொண்டதனால் அவளுடைய தோள் தழுவதற்கு எளிதாகி விடுகிறது. இனி அந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் பொருள் அரிதாக இருத்தல் வேண்டும். ‘அரிது’ என்றால் இதுவரை யாரும் சொல்லாதது. இதுகாறும் அறிந்து கொள்ள இயலாதது. அறிந்து கொள்ளுமாறு அமையாதது.  பெறுதற்கு அரிய பொருள். இந்த அருமை எதனைப் போல் அமைதல் வேண்டுமென்றால் தோள் எளிய விலைமாதரின் உள்ளம் போல் இருத்தல் வேண்டும். ஒரு நூல் கற்பவருக்கு எளிதாக இருக்க வேண்டும். எது போல என்றால் விலை மாதர் தோள்போல. அதே நூற்பொருள் உணர்வதற்கு  அரியதாக  இருத்தல் வேண்டும் எது போல என்றால் விலைமாதர் உள்ளம் போல். இதனால் பொருட்பெண்டிர் உள்ளம் பொருட்கொடுப்பவனிடம் சிக்காமல் நழுவுவதை உணரமுடியும். புறத்தில் எளிமை, அகத்தில் ஆழம் என்பதைச் சில எடுத்துக்காட்டுக்களால் விளக்கலாம்.

    பாரதி பாடல்களில் மரபு

    இதனை வேறுவகையாகவும் விளக்க முடியும். நூலின் சொல்லமைதி  எளிதாக இருக்கலாம். அது உரைக்கும் பொருளமைதி அரிதாக இருத்தல் வேண்டும். பாரதிக்கு இது கைவந்த கலை. பாரதியின் கவிதைகள் மொழியால் எளிமை வாய்ந்தவை. பொருளால் மிகவும் அரிதானவை.

    தேம்பி அழுங்குழந்தை நொண்டி’’

    என்னும் ஒரு வரி போதும். ‘தேம்புதல்’ தெரியும். ‘அழுவது’ தெரியும். ‘குழந்தையும்’ தெரியும். ‘நொண்டியும்’ தெரியும். தேம்பியழுபவனைக் கோழை என்றால் கூட ஏற்கலாம். ஆனால் நொண்டி என்கிறார் பாரதி. கால் இல்லாதவனே நொண்டி  என்பதுதான் உலகம் அறிந்தது. பாரதி இதனை எளிய தமிழ் கொண்டு மாற்றிக் காட்டுகிறான். ‘அழுகின்ற குழந்தை நொண்டி’ ஆனது. எப்படி? ‘தன்னால் முடியும்’ என்ற நம்பிக்கை குறைந்து ‘முடியாமல் போய்விடுமோ’ என்னும் கையற்ற நிலையில் அழுகிற கோழைத்தனம் மனத்துக்குள் வந்து விடுமோ?’ என்னும் அச்சத்தில் ‘அழுகின்ற குழந்தையை நொண்டி’ என்கிறான். மொழிநடை விலைமாதர் தோள் போல் எளிமையாகியிருப்பதையும் பொருள் அவர் உள்ளம் போல் அறிதற்கு அரிதாக இருப்பதையும் காணலாம்.

    துரியோதணன் அவையில் அனைவரும் சபதம் ஏற்கிறார்கள். அர்ச்சுனன் ஏற்கும் சபதத்தில் ஒரு குறிப்பு வருகிறது. அது என்ன குறிப்பு?

    தீர்த்தன் பெரும்புகழ் விஷ்ணு எங்கள்
    சீரிய நண்பன் கண்ணன் கழலாணை
    கார்த்தடங் கண்ணி எந்தேவி அவள்
    கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை!”

    இறைவன் மீதும் வில்லின் மீதும் விஜயன் சபதம் ஏற்றது சரி. ஆனால் பாஞ்சாலியின் கண்ணின்மீது சபதம் ஏற்கிறான். அதுவும் எப்படி வண்ணனை செய்து சபதம் ஏற்கிறான் என்றால் ‘கார்த் தடம் கண்ணி’ என்று அடைகொடுத்துப் பாராட்டிய கண்ணின் மீது சபதம் ஏற்கிறான். இதனைப் படிக்கிறவர்கள் சாதாரணமாகக் கடந்து போய்விடுவார்கள். ஆனால் பாரதியை முழுமையாக உள்வாங்கியவர்கள் ‘புதுமைப்பெண்’ பற்றி முன்னாலே அவன் சொல்லியிருப்பதைக் கவனிப்பார்கள்.

    காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம் காதல்
    பெண்களின் கடைக்கண் பணியிலே

    என்று பெண்ணின் கண்ணசைவு ஆணிடம் உண்டாக்கும் பேராற்றலை உணர்ந்து கொள்ள முடியும். கடைக்கண் என்பது ஒரு வினைவேக மாற்றி. கடைக்கண் பார்வைக்கே இந்த வலிமை என்றால் கார்த்தடங்கண்ணியின் முழுப்பார்வைக்கு எவ்வளவு வலிமை இருந்திருக்கும்? இந்த மரபுத் தாக்கத்தினால்தான் பின்னாலே வந்த பாவேந்தர்,

    கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
    மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர்கடுகாம்

    என்றும் பாடமுடிகிறது. இத்தகைய மரபு உவமத்திலும் இழைகிறது என்பதுதான் இந்தக் கட்டுரையின்  சாரம்.

    களிறுகளோடு சாயும் கொடிகள்

    களப்போரில் ஈடுபடும் யானைகள் தங்களுடைய அடையாளப் படைக்கொடியைச் சுமந்து கொண்டு செல்லும். களிறு களத்தில் பட்டொழிந்தால் அதன் பருத்துக் கருத்த மேனியில் அந்தக் கொடியும் விழுந்து போர்த்திக் கொள்ளும். பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும் காட்சி இது. அப்படியொரு காட்சியைக் கலிங்கத்துப் பரணி காட்டுகிறது,

    சாய்ந்துவிழும் கடகளிற்றின் உடனே சாய்ந்து
    தடங்குருதி மிசைப்படியும் கொடிகள் தாங்கள்
    காந்தருடன் கனல் அமளி அதன்மேல் வைகும்
    கற்புடை மாதரை ஒத்தல் காண்மின் காண்மின்!”

    என்பது அந்தக் காட்சியைச் சித்திரிக்கும் கலிங்கத்துப் பரணி பாடல். இரத்த வெள்ளத்தில் களிறு சாய, அந்தக் களிற்றின் குருதியிலேயே இந்தக் கொடிகளும் சாய்கின்றன. அது எதுபோல் இருக்கிறது என்றால் உடன்கட்டை ஏறும் பத்தினிப் பெண்டிர் தீயில் மூழ்குவதுபோல் இருக்கிறதாம். ‘கனல் அமளி’ என்பதனால் ‘தீயெரி’ என்பது பெறப்படும். களிற்றின் மேல் விழுந்து உயிரைப் போக்கிக் கொள்ளும் ‘அஃறிணைக் கொடிகளுக்குக் கணவனோடு தமது உயிரைப் போக்கிக் கொள்ளும் ‘உயர்திணைப் பெண்கள்’ உவமமாக வந்திருப்பதைக் காணலாம்.

    வாரணத்தைப் பிரியும் வண்டுகள்

    மேலே களத்தில் களிற்றோடு சாய்ந்துவிழும் கொடிகள் கணவனோடு உடனேகும் பத்தினிப்பெண்டிரை நினைவுபடுத்தின என்றால் மதநீர் ஒழுகும் வரை அதனைக் குடித்து மயங்கி யானையோடு உறவாடிய வண்டுகள். மதநீர் நின்றவுடன் யானையை விட்டுப் பிரிந்த நிலையைப் பரத்தையரோடு ஒப்பிடும் பாடலும் கலிங்கத்துப் பரணியில் உண்டு.

    மாமழைபோல் பொழிகின்ற தான வாரி
    மறித்துவிழும் கடகளிற்றை வெறுத்து வானோர்
    பூமழைபோல் பாய்ந்தெழுந்து நிரந்த வண்டு
    பொருட்பெண்டிர் போன்றவையும் காண்மின்! காண்மின்!”

    என்பது அந்தப் பாடல். யானை ஒன்று அதனோடு பறந்த கொடி அதனோடு சாய்ந்து விடுகிறது. யானையிடமிருந்து ஒழுகிய மதநீரைப் பருகித் திரிந்த வண்டுகள் அது அற்று நின்றவுடன் அதனைப் பிரிகிறது. அதனால் அவை பொருள் குறைந்தவுடன் விலகும் விலைமாதராயின. வண்டுகளுக்கு விலைமாதர் உவமமாய் வந்த பாடல் இது. நாலடியாரில் ஒரே நூலின் இருவேறு தன்மைகளுக்கு ஒரே உவமத்தின் இருவேறு பண்புகள் உவமமாக்கப்பட்டன. கலிங்கத்துப் பரணியில் இருவேறு தனித்தனிக் காட்சிகளில் இருவேறு பண்புடையவர்கள் உவமமாக்கப்பட்டனர். இனி வரும் பாடலில் ஒரே பொருளின் இருவேறு பண்புகளுக்கு இருவேறு உவமங்கள் பயன்படுத்தியிருக்கும் பாங்கினை ஆராயலாம்.

    தேவரின் சிந்தாமணியின் எளிமையும் அருமையும்

    தமிழிலக்கியத்தில் தேவரின் சிந்தாமணி பகலில் தோன்றும் நிலவு!. கண் பார்வைக்கு மறைந்த அழகு!. திரை மூடிய சிலை!. சிறையில் மலர்ந்த மலர்! “சிந்தாமணியை ஆராய்வதற்கு என்பால் ஓரளவு தகுதி உண்டு” என்று சொன்னவர் சாதாரண நபர் அல்லர். உ.வே.சா.! அதன் புறமொழி எளிமை. ஆனால் அகக்கட்டுமானம் மிகக் கடுமை. எனவே அதன் நிலைப்பாடு தெய்வத் தன்மை பொருந்தியது என்பது கருத்து. இவற்றையெல்லாம் உள்வாங்கிய கவிஞர் ஒருவர் எழுதுகிறார்.

    கலைதேர்ந்த விலைமாதர்  தொடுதோள் போன்று
                   கற்பார்க் கெல்லாம் மிக்க எளிதாய், அந்த
    விலைமாதர் உள்ளம்போல் திட்ப நுட்ப
                   விளக்கமெலாம் அறிதற்கே அரிதாய் நல்ல
    நிலைமாதர் கற்பனவே சிறந்ததோர் நூல்” 

    சொல்லளவில் எளிமையாயும் பொருளளவில் ஆழ்ந்தும் நுண்ணிதாகவும் இருத்தல் ஒரு நல்ல நூலின் இலக்கணமாம். சொல்லெளிமையும் பொருளருமையும் ஒரு நூலைச் சிறக்கச் செய்யும். பரத்தையரையும் பத்தினிமாரையும் துணிந்து உவமிக்கும் மரபாற்றல் சுரதாவுக்கு இருந்திருக்கிறது.

    நூலின் சிறப்புக்குப் பத்தினிப் பெண்டிரின் கற்பை உவமித்திருக்கும் கவிஞர் எளிமைக்கும் அருமைக்கும் விலைமாதரின் தோளையும் உள்ளத்தையும் உவமித்திருப்பது சிந்தனைக்குரியது. பொருட்பெண்டிராகிய விலைமாதர் எல்லாருக்கும் எளியர். எல்லாவற்றிலும் எளியர். அதனால் நூலின் புற அமைப்புக்கும் பொருண்மைக்கும் விலைமாதர் உவமமாயினர். பிறர் நெஞ்சுபுகாமையே கற்பாதலாலும்,  பிறப்பால் பெண்டிராயினும் கற்பால் உயர் நிலை என்பது பத்தினிப் பெண்டிருக்கே உரியதென்பதால் நூலின் நிலைபேற்றுச் சிறப்புக்குப் பத்தினிப் பெண்டிரின் கற்பும்  உவமமானது.

    நிறைவுரை

    மேலே காட்டப்பட்டிருக்கும் இலக்கிய எடுத்துக்காட்டுக்களை அதாவது உவமப் பகுதிகளை ‘தமிழ்க்கவிதை உவமக்கோட்பாடுகள்’ என்ற அடிப்படையில் ஆராய்ந்தால் அவற்றின் வளர்ச்சிநிலை புரியக்கூடும். ஒருமை மகளிரையும் வரைவின் மகளிரையும் நீதி நூல்கள் பாடிய நிலை மாறி, உவமங்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். உடன்பாட்டையும் எதிர்மறையையும் உவம வழியாகவும் உணர்த்தியிருக்கிறார்கள் எனக் கருதலாம். நூலுக்கு உவமமான பொருட்பெண்டிர் வண்டுகளுக்கு உவமமாக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக பொருட்பெண்டிரின் புறப்பகட்டு நூலின் புறக்கட்டுமானத்திற்கும் பத்தினியரின் கற்பு நெறி நூலின் நிலைபேற்றுக்கும் ஒப்பீட்டு உவமங்களாக வந்துள்ளன. உவமங்களில் மரபும் பின்பற்றப்படுகிறது. வாழ்க்கை நெறியும் கற்பிக்கப்பட்டுள்ளது.

    (தொடரும்…)

    Share
  • கதையும் மொழிதலும் – 3 புதுமைப்பித்தனின் ‘கயிற்றரவு’

    கதையும் மொழிதலும் – 3 புதுமைப்பித்தனின் ‘கயிற்றரவு’

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
    ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
    ramachandran78.blogspot.com
    9360623276

    “காலம் ஒருவனை உயிர்ப்பிக்கிறது புகழ்விக்கிறது உச்சாணிக் கொம்பில் நிலைநிறுத்துகிறது. அதே காலம் அவனைக் குப்பைத்தொட்டியில் வீசி எறிகிறது, காய்ந்த சருகென அனாதையாக்குகிறது “

    மனித வரலாற்றில் அனைத்துச் சிந்தனையாளர்களையும் கவர்ந்த புதிர், காலம். காலக் கோட்பாடு மிகவும் முக்கிய இயங்கு தளமாக எல்லா நிலைகளிலும் இருந்து வந்துள்ளது. இடம், பொருள், காலம் என்ற சிந்தனை பகுத்தறிவின், அறிவியலின் முக்கியப் புள்ளியாக வினையாற்றியுள்ளது. வாழ்க்கை, காலச் சக்கரத்தில் சிக்கி, மனிதர்களை எவ்வாறு பந்தாடுகிறது என்பதை இலக்கியப் படைப்புகள் வெளிப்படுத்துகின்றன. காலப் பிரக்ஞை மனிதனுக்கு இருக்கிறதா இல்லையா என்ற வினா, விடையில்லாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்து சென்ற வாழ்வியல் நிகழ்வுகளின் தொகுப்பாக இலக்கியங்கள் படைக்கப்படும்போது நிகழ்வுகளை இடம், காலம் பற்றிச் சிந்திக்கும் போக்கு இயல்பாக அமைந்துவிடுகிறது. இடத்தைப் பற்றிய நுண்ணுணர்வும் காலத்தைப் பற்றிய அக்கறையும் இலகுவாக வாசகனுக்கு வசப்பட்டுவிடுகின்றன. ஆனால் வாழ்ந்து முடித்த கதைமாந்தர்களுக்கும் அப்படிப்பட்ட ஒன்றாகவே இருந்து வருவதை எண்ணும்போது, காலச் சிந்தனை மற்றும் புரிதலில் பெரும் மாற்றத்தை விளைவிப்பதைத் தொடர்ந்து கவனித்துவர முடிகிறது.

    காலம் என்ற தத்துவத்தைப் புதுமைப்பித்தன் பரமசிவம் பிள்ளையின் மூலம் விவாதத்திற்கு உட்படுத்த முயலும் கதையாக ‘கயிற்றரவு’ அமைந்துள்ளது. கயிறு+அரவு என்ற இரு பெயர்கள் கொண்ட சொல்லாக இது உள்ளது. மனதின் இயக்கமாகக் கயிறு அரவாகவும் அரவு கயிறாகவும் மனம் காட்டும் இந்தத் தத்துவ மரபின் போக்குகளை விவாதித்துச் செல்கிறார். உலகம், உயிர்கள், இறைவன் என்ற முப்பொருள் உண்மையில் இறைவன் தவிர்த்து உலகமும் உயிர்களும் காலப் பிரக்ஞை அற்று இயங்கிக்கொண்டு இருப்பதும் அவ்வியக்கத்தைக் கயிறால் கட்டியிழுக்க மனிதன் மேற்கொண்ட கணக்கே காலம். காலத்தின் பார்வையில் உலகப் பொருட்களைத் தனது சிந்தனைக்கும் அறிவுக்கும் உட்பட்ட செயல்களாகக் கட்டியெழுப்ப எண்ணுகிறான். ஆனால் அனைத்தும் தனது கருவூரை நோக்கியே பயணப்படுகின்ற வாழ்வியல் நிலையைச் சற்று உரத்துக் கூறுவதாகப் பரமசிவம் பிள்ளை படைக்கப்பட்டுள்ளார்.

    ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பரமசிவம் பிள்ளை பனை மரநிழலில் வெளிக்குப் போய்கொண்டு இருக்கிறார். சுதந்திரச் சுற்றுப்புற வெளி தத்துவார்த்தச் சிந்தனைக்கு அவரைக் கொண்டு செல்கிறது. ஒவ்வொரு பொருளும் எப்படி இருப்பதும் இல்லாமல் போவதுமான செயல்பாடுகளை எண்ணும்போது விசாரணை, தன்னை நோக்கித் திரும்புகிறது. தனது வாழ்க்கை நோக்கி பயணப்பட்டு நிலையாமையின் பெரும் தத்துவமாக வளர்ந்து நிற்கிறார். நொடிகள், நிமிடங்கள், மணிகள், நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள், யுகங்கள் என்று காலத்தின் கருவறைக்குப் பயணப்பட்டுத் தனது வாழ்க்கையில் முடிக்கிறார்.

    வெயில் தாளாமல் அருகில் இருக்கும் விடலிப் பனை நிழலில் போய்க் குந்துகிறார். சற்றுச் செளகரியமாக உணர்கிறார். மனதில் ஒரு நிம்மதி ஏற்படுகிறது. இது உயரம் குறைந்த விடலிப்பனை நல்ல நிழல். இதோ அந்த இடத்தில் மூத்த பனை இருந்தது. போன ஆடிக் காற்றில் சாய்ந்துவிட்டது. இப்போது அது இருந்ததற்கான இடம் தென்படவே இல்லை. காலம் அனைத்தையும் தன்னுள் கரைத்துக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. விழுந்த பனை  விட்டமாக, விறகாக மாறி இறுதியில் வந்த இடத்திலேயே மீண்டும் ஐக்கியமாகி விடுகிறது.

    ஆற்றங்கரைப் படிக்கட்டு அழகாக அடுக்கப்பட்டுக் கட்டப்பட்டுள்ளது. அழகியநம்பியா பிள்ளை காலையில் வந்து துணி துவைத்துக் குளித்துத் திருநீறு அணிந்துகொண்டு வீடு திரும்பும் அதே இடம், இன்று தூர்ந்துபோய் உள்ளது. காலமாற்றத்தில் இதன் தேவை இல்லாமல் போனது. காற்று அடிக்கிறது, மழை பெய்கிறது, ஆற்றில் வெள்ளம் வருகிறது ஆனால் அன்றைய வளமைகள் இன்று இல்லாமல் போய்விட்டன. அணுக்கூட்டத்தின் தொகுப்பில் ஓரணு வீரியம் பெற்று உந்தித் தள்ளி தன் முனைப்பில் ஆற்றல் கொண்டு கருவூர் அடைந்து உயிர் பெற்றது என்று தனது பிறப்பைக் கூறுகிறார். இங்குப் புதுமைப்பித்தனின் தத்துவ விசாரணை, மேன்மை கொள்கிறது. உயிர்களின் தோற்றமும் வாழ்வியல் கற்றலும் மனிதனுக்கு வாழச் சொல்லிக் கொடுக்கின்றன. தானும் அப்படியே வளர்ந்து நிற்பதாக நினைவுகூர்கிறார்.

    கற்றலின் கற்பித்தலின் ஊற்றாகப் பெருவெள்ளத்தை அழகியநம்பியா பிள்ளையின் உணர்ச்சிப்பெருக்கில் சொல்லிச் செய்கிறார். நம்பியா பிள்ளை தனது மகனுக்குப் பெயரைச் சொல்லிக் கொடுக்கிறார். தனது பெயர் நம்பியா பிள்ளை என்றும் உனது பெயர் பரமசிவம் என்றும். ஆனால் குழந்தையைக் கைகளில் தூக்கிக்கொண்டு நம்பியா பிள்ளை யாரு? என்று கேட்கும்போது குழந்தை தன் மேல் கை வைத்தது. உடனே ‘முட்டாப்பயலே’ என்று கூறி அதுதான் என்றும் உனது அப்பா என்றும் புரிய வைக்கிறார். பிறகு மீண்டும் கேட்கும்போது குழந்தை சரியாகச் சொல்கிறது. நம்பியா பிள்ளை மகிழ்ச்சியில் திளைக்கிறார். வாழ்க்கை, உறவுகள், தொழில் என்று கற்றுத் தரப்படும் வாழ்க்கையின் நாத தாளங்கள், நெளிவு சுழிவுகளை வியக்கிறார்.

    இவ்வாறு கற்றுக்கொண்ட பாடத்தின் மூலமாகத் தானும் இன்று ஐம்பதைக் கடந்து வாழ்ந்து வருவதை எண்ணுகிறார். காலம் போடும் கோட்டில் யாரும் தப்பிக்க முடியாது. உலகம் கோடானு கோடி ஆண்டுகள்  இயங்கிக்கொண்டே இருக்கிறது. இருக்கும். பரமசிவம் பிள்ளையின் உடல் தளர்ந்துவிட்டது. வாழ்ந்த வீடும் தன்னிலை இழந்து இயற்கைக்குத் திரும்பிக்கொண்டு இருக்கிறது. விட்டம் விட்டால் பரவெளி தான் உயிர் நீங்கினால் உடல் ஒன்றுமில்லை என்று பரமசிவம் பிள்ளையின் சொற்களாகப் புதுமைப்பித்தன் முன்வைக்கும் கிழக்கத்திய தத்துவ மரபு பெரும் விசாரம் கொண்டது.

    காலத்தின் வெள்ளத்தில் நீந்திக்கொண்டு இருந்த பரமசிவம் பிள்ளைக்கு நிகழ்காலப் பிரக்ஞை இல்லாமல் போய்விட்டது. விடலிப்பனையின் நிழலில் குந்தியிருந்த அவரை அருகில் வந்த பாம்பு தீண்ட, மயங்கி விழுந்தார். அவரது மனம் பாம்பா,கயிறா என்ற வியப்பிலிருந்து விடுபடவில்லை. பாம்பின் விஷம் ஏறி உடல் நோவுற்றுப் படுக்கையானார் பரமசிவம் பிள்ளை. வீட்டில் தேவாரம் பாடத் தொடங்கிவிட்டார்கள். காலின் கட்டைவிரல் தொலைதூரத்திற்குப் பயணம் செய்தது. நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக விட்டு விடுதலை ஆகின. உடல் தனது நீண்ட பற்றைவிட்டு நீங்கியது. உயிர் வந்த இடத்திற்கே சென்று சேர்ந்தது.பரமசிவம் பிள்ளை எங்கிருந்து வந்தாரோ அங்கேயே ஒடுங்கிவிட்டார்.

    புதுமைப்பித்தன், பரமசிவம் பிள்ளையின் மூலமாக உணர்த்த விரும்புவது அவரது வாழ்க்கையில் அனுபவித்த அனைத்துத் துன்பங்களும் துயரங்களும் அவத்தைகளும் இந்த உடம்பும் உயிரும் இருக்கும் காலம் வரைதான். உயிர் சென்றுவிட்டால் உடம்பிற்கு ஏற்படும் அனைத்தும் வெறுமையானது என்ற மரபான தத்துவப் பார்வையும் காலத்தின் வெளியில் மனிதர்கள் சருகுகளாக மக்கிப்போகும் யதார்த்த வாழ்க்கைச் சூழலும் பரமசிவம் பிள்ளையைப் படைக்கத் தூண்டின.  இயற்கையிலிருந்து மனிதன் எத்தகைய மாற்றங்களைச் செய்தாலும் அப்பொருள் மீண்டும் இயற்கையை நோக்கிப் பயணிக்கும் போக்கைக் கதையின் வழியாக வலுவான கதைக் கட்டமைப்பில் கச்சிதமான மொழி ஆளுமையில் கிண்டலும் கேலியும் கலந்து புனைந்துள்ளார்.

    நவீன கதை வடிவில் மரபான வாழ்வியல் தத்துவ விசாரணையை உட்பொதித்துக் கலையாக்கி, சாகசம் செய்து காட்டியுள்ளார் புதுமைப்பித்தன். கதை கூறும் முறையில் ஒரு வேகத்தைக் கட்டி எழுப்புகிறார். தத்துவத்தின் சாறு மிகைப்படாமல் கதை மொழியில் வாசகனை உலவச் செய்துவிடுகிறார். பரமசிவம் பிள்ளையும் அழகிய நம்பியா பிள்ளையும் பனைமரங்களைப் பார்க்கும் போதும் ஆற்றுப் படித்துறையைப் பார்க்கும் போதும் காலப் படிமமாக வந்து போகின்றனர். ஒவ்வொரு வாசகனையும் அகவயமாகத் திரும்பிப் பார்க்கத் தூண்டும் அற்புதக் கதை இது. இக்கதை மணிக்கொடியில் 1938ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 21

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 21

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தமிழ்க்கவிதை உவமங்களில் வாழ்வியல்

    முன்னுரை

    வினை, பயன், மெய், உரு என்னும் நான்கின் அடிப்படையில் உவமம் அமையலாம் என்பது பழந்தமிழ் நெறி. இந்த நெறி அப்படியே தேக்கமடைந்துவிடாமல் தொடர்ந்து பரிணாமம் பெற்றுவருகிறது என்பதுதான் இங்கே சொல்ல வரும் சேதி.  ‘தாமரைபோன்ற முகம்’ என்பது முகத்திற்குச் சொல்லப்பட்ட உவமம். ‘முகம் போன்ற தாமரை’ என்பது தாமரைக்குச் சொல்லப்பட்ட உவமம். பொருளும் உவமமும் தமக்குள் மாறுபடும் நிலை இது. முன்னது காதலியின் முகத்தைப் பார்த்த காதலன் வாய்மொழி!, பின்னது இயற்கையோடு இயைந்த கவிஞன் தாமரையோடு பேசிய மொழி! ‘பொருளே உவமம் செய்தனர் ஆயினும் மருளறு சிறப்பின் அஃதுவமம் ஆகும்’ எனத் தொல்காப்பியம் விதி செய்கிற அளவுக்கு இது சென்றிருக்கிறது. தமிழ் எல்லா நிலைகளிலும் வளர்ச்சி நோக்கியது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.  இந்தப் பின்புலத்தில் ஒரே நிகழ்வுக்கு மாறுபட்ட உவமங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாங்கினை இப்பகுதி ஆராய்கிறது.

    வாழ்வியலும் ஓர் அழகியலே!

    வாழ்க்கையின் மெய்ம்மைகளை உவமமாக்குவதாலோ கருத்துக்கு மற்றொரு கருத்தையே உவமமாக்குவதாலோ தமிழ்க்கவிதைகளில் பயன்படுத்தப்படும் உவமங்களில் அழகியல் குறைந்துவிட்டதாகக் கருதிவிட முடியாது. மாறாக உவமங்களை அழகியல் சார்ந்ததாகப் படைப்பதில் சங்க இலக்கிய மரபு தற்காலம்வரை உள்ளம் கவரும் வகையில் தொடர்ந்து வருகிறது என்பதைச் சில எடுத்துக்காட்டுக்களால் உறுதி செய்ய முடியும். ஒரே தன்மையான நிகழ்வுகளுக்குப் பட்டறிவின் அடிப்படையிலும் வாழ்வியல் அடிப்படையிலும் உவமங்களை அமைத்துக்காட்டும் திறனைத் தமிழ்க்கவிதைகளில் காணமுடியும்.

    பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல

    சமுதாயத்தின் பங்காளி படைப்பாளியாக மாறினால் படைப்பில் உயிர் இருக்கும். கரையில் இருந்து கொண்டு கால் நனையாமல் கடலைப் பாடுகிறவன் பாட்டில் ஈரம் இருக்காது. இளவரசன் நகருலா வருகிறான். அவனைக் காண்பதற்காகக் காதல் மேலிட, தன் வீட்டுக் கதவைத் திறப்பதற்காகச் செல்கிறாள் தலைவி, திறந்த கதவைத் தாழிட்டு வருகிறாள். மீண்டும் திறக்கிறாள். மீண்டும் தாழிடுகிறாள். இந்த நிகழ்வைச் சித்திரிக்கும் பாட்டு முத்தொள்ளாயிரத்தில் இருக்கிறது. ‘தலைவனைக் காண்பதற்காக ஆர்வத்துடன் செல்வதும், நாணத்தினால் கதவடைத்துத் திரும்புவதுமாகிய அவள் நெஞ்சத்து ஊசலாட்டத்தை,

    “ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
    காணிய சென்று கதவடைத்தேன் – நாணிப்
    பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்நதார் போல
    வரும்., செல்லும்., பேரும் என் நெஞ்சு”

    என்னும் பாடல் காட்சிப்படுத்துகிறது. செல்வர்கள் வீட்டு வாயிற்படியில் இரப்பதற்காகச் செல்லும் இரவலனுடைய நெஞ்சம், ‘செல்லலாமா? கூடாதா? என்றலையும் ஊசலாட்டத்தோடு தலைவியின் நாணத்தால் வந்த ஊசலாட்டம் ஒப்பிட்டுக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.  பாட்டில் ‘காணிய’ (காண்பதற்காக) என்னும் ‘செய’வென் எச்சம் ‘அடைந்தேன்’ என்னும் தன்வினை கொண்டது. ‘அடைத்தேன்’ என நின்றது வலித்தல் விகாரம். பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் செல்வது என்னும் சிந்தனை திருவள்ளுவருக்கும் வந்திருக்கிறது.  கற்றலின் சிறப்புக் கூற வந்த அவர், ‘உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்க’ வேண்டும்’ என்று சொல்வார். புறம் சார்ந்த கருத்து விளக்கத்திற்குத் திருவள்ளுவரால் கையாளப்பட்ட இந்த உவமத்தை மிகச் சாதுரியமாக அகப்பொருளுக்கு அதுவும் பெண்ணொருத்தியின் மன ஊசலாட்டத்திற்கும் தயக்கத்திற்கும் உவமமாக்கியிருப்பது தமிழ்க்கவிதை உவமக் கோட்பாடுகளில் ஒன்றினை எதிரொளிப்பதாகும்.

    தயிர்கடையும் ஆச்சியின் கை

    தலைவியின் ஊசலாடும் நெஞ்சிற்கு முத்தொள்ளாயிரம் காட்டியிருக்கும் உவமம் வாழ்வியலைச் சார்ந்ததாகக் கொண்டால், நளவெண்பா காட்டியிருப்பது வாழ்வியலோடு அழகியல் சாந்ததாகக் கருத முடியும். ஊழ்வினை காரணமாகக் கானகத்தில் ஒற்றையாடையில் நளனும் தமயந்தியும் தனித்திருக்கின்றனர். கலிபகவான் அவர்களைப் பிரிக்கும் நோக்குடன் அவர் அருகே கத்தியாகக் கிடக்கிறார். கிடக்கும் கத்தியை எடுத்து ஒற்றையாடையை இருகூறாக்கி நளன் எழுந்து நடக்கிறான். நடந்து சென்றானா? என்றால் அதுதான் இல்லை. ‘ஒற்றைத் துகிலும் உயிரும் இரண்டாகப்’ பற்றியறுத்த நளன், துயில் கொள்ளும் தன் மனைவியாகிய தமயந்தியைக் கண்டு அவளருகே செல்வதும், மீள்வதுமாகத் தடுமாறுகிறான். இந்த நிலையைப் புகழேந்திப் புலவர் பாடுகிறார். பெருமாளைப் பாடிய வைணவராதலின், இடையர் வீட்டு நிகழ்ச்சியை உவமமாக்கி நளனின் நிலையைத் தெளிவுபடுத்துவதை அறியமுடிகிறது.

    “போயொருகால் மீளும் புகுந்தொருகால் மீண்டேகும்
    ஆயர் கொணர்ந்த அடுபாலின் – தோயல்
    கடைவார்தம் கைபோல ஆயிற்றே காலன்
    வடிவாய வேலான் மனம்”

    ‘உட்கார்ந்து பால்கறக்க முக்காலி பொன்னாலே. அணைஞ்சிருந்து பால்கறக்க அணைகயிறும் பொன்னாலே’ என்பது நாட்டுப்புற வழக்கு. இன்றைய மகளிர் சமுதாயம் மீளவும் பெறமுடியாத பேரிழப்பு உரியும் மத்தும். ஆய்ச்சியர் தயிரைக் கடைகிறபொழுது அவர்தம் கைகள் முன்னும் பின்னுமாகச் செல்லுவதை உற்றுநோக்கிய புகழேந்தி தாம் எழுதிய காப்பியத்தின் இன்றியமையாக் கட்டத்தில் அதனை உவமமாக்கிய திறன் பெரிதும் சிந்தனைக்குரியது.

    ஊசலான பாசம்

    தலைவியின் தடுமாறும் நெஞ்சிற்குப் பெருஞ்செல்வர் இல்லத்துக்குச் செல்லும் நல்கூர்ந்தார் உவமமானதைப்போல், மனைவியைப் பிரிந்த கணவன் தடுமாற்றத்திற்குத் தயிர் கடையும் இடைச்சியர் கை உவமமானதைப்போல், பாசமிக்கத் தாயொருத்தி தன் வீட்டுக்கும் கர்ப்பிணியான தன் மகள் வீட்டுக்கும் போவதும் வருவதுமாய் உள்ளாள் என்பதற்குத் தமிழ்க்கவிதை ஒன்றில் காட்டப்பட்டிருக்கும் உவமை காலத்தோடு ஒட்டியதாக உள்ளது. பாவேந்தரின்  அடையாளம் காட்டும் பனுவல்களில் குடும்ப விளக்கு தலைசிறந்தது. அதில் வரும் ஒரு காட்சியில் கர்ப்பிணியாக இருக்கும் தன் மகளை அதே பகுதியில் அவளுக்கு அருகில் குடியிருக்கும் அவள் தாய் கவனத்துடன் பராமரிப்பதைப் பாவேந்தர்,

    “நீடு மணிப்பொறி ஆடுங் காய்போல்
    தங்கம் தன்வீடு தன்மகள் வீடு
    நாடுவாள் மீள்வாள் மணிக்கு நாற்பது முறை”

    சுவர்க் கடியாரத்தின் ஊசல் (pendulum) இருமுனைக்கும் இங்குமங்குமாக அசைந்து அலைவதைப் போலக் ‘குடும்பவிளக்கு’ நாயகி தங்கம், தன் வீட்டிற்கும் தன் மகள் நகைமுத்து வீட்டுக்குமாய் நடந்ததாகப் பாவேந்தர் கவிதையோவியம் தீட்டியிருப்பதைக் காணமுடிகிறது.

    நாணத்தினால் வந்த முத்தொள்ளாயிரத் தலைவியின் தயக்கத்திற்குப் பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தாரும், தமயந்தியைப் பிரிந்த நளனின் பிரிவாற்றாமைக்கு ஆய்ச்சியரின் கைகளும், கருவுற்ற மகளைக் காணச் செல்லும் தாய்க்கு மணிப்பொறியின் ஊசலும் உவமங்களாய் வந்துள்ளமை நோக்கத்தக்கது. தயங்கும் தலைவி, ஆற்றாத கணவன், துடிக்கின்ற தாய் என்னுமாறு அமைந்த பாத்திரங்களின் வினைபாடுகளுக்கேற்ப நல்கூர்ந்தார், கைகள், ஊசல் என வேறுபடும் வினைகளைக் கொண்ட அழகியல் சார்ந்த உவமங்கள் அமைந்துள்ள பாங்கு சிந்திக்கத்தக்கது.

    நிறைவுரை

    ‘தமிழில் உவமக் கோட்பாடுகள்’ என்னும் ஆய்வுக்களத்தில் சமுதாயத்தை விட்டு உவமங்களைத் தேடும் அவலத்தைப் பெரும்பாலும் காண முடியாது. பழந்தமிழ் இலக்கியங்களில் உயர்வு நவிற்சி, இல்பொருள் உவமம்,  வெறுங்கற்பனை முதலியவை அந்நியப்பட்டே நிற்கின்றன. பாரதத்தின் கிளைக்கதையைப் படைப்பிலக்கியமாகச் செய்த புகழேந்தி ஆய்ச்சியர் இல்லத்தை எண்ணுவதும், அகத்திணை மரபினைக் கவிதைக் காட்சியாக்கும் முத்தொள்ளாயிர ஆசிரியர் நல்கூர்ந்தாரை நினைவில் கொள்வதும், நொடிக்கு ஒரு தடவை மகளைக் காணவரும் தாயைச் சித்திரிக்கும் பாவேந்தர் கடிகாரத்தின் ஊசலைக் கருத்திற் கொள்வதும் இலக்கியத்தில் சமுதாயப் பார்வைகளே  உவமங்களாக அமைகின்றன என்பதைக் ஓரளவு காட்டக் கூடும். ‘வருவதும் போவதுமான’ ஒரே செயலுக்குக் காலமிடையிட்ட கவிஞர் பெருமக்கள் காட்டுகிற உவமங்களில்தாம் எத்தனை வகை!

    (தொடரும்…)

    Share
  • கதையும் மொழிதலும் – 2 மெளனியின் ‘பிரபஞ்ச கானம்’

    கதையும் மொழிதலும் – 2 மெளனியின் ‘பிரபஞ்ச கானம்’

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
    ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
    ramachandran78.blogspot.com
    9360623276

    நான் சாதாரணமாக நல்ல சிறுகதைகள் எழுதியவர்கள் என்று ஒரு எட்டு, ஒன்பது பேரைக் குறிப்பிட்டுச் சொல்வது வழக்கம். என்னளவில் என் இலக்கிய ரசனைக்கு எட்டுகிற அளவில், இந்த ஒன்பது பேரில் ( பெயர் வேண்டுமா, புதுமைப்பித்தன், மெளனி, கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி, தி. ஜானகிராமன், லா.ச.ராமாமிருதம், கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி) ஒரு இரண்டு மூன்று பெயர்களை விமரிசகனாக நான் அடிக்கத் துணியாவிட்டாலும் நிர்த்தாட்சண்யமான காலம் அடித்துவிடும். இந்த மூன்று பெயர்களில் மெளனியின் பெயர் இராது என்கிற ஒரு நிச்சயத்தைத் தவிர இந்தப் பட்டியலில் எனக்கு நிச்சயமான விஷயம் – விமரிசகனாக – மெளனியின் நண்பனாக அல்ல – வேறு ஒன்றுமில்லை என்று ஒவ்வொரு தடவையும் மெளனியைப் படிக்கும்போதும் எனக்குத் திடம் ஏற்படுகிறது. – க.நா.சுப்ரமண்யம்

    எனக்கு மிகவும் பிடித்த கதைகள் என்று ‘அழியாச்சுடர்’, ‘பிரபஞ்ச கானம்’ இரண்டையும் சொல்வேன். ஆனால் மெளனியினுடைய எல்லாக் கதைகளிலுமே சிறுகதை அமைதி பிரமாதமாக அமைந்திருக்கிறது என்று  க.நா.சுப்ரமண்யம் கூறியுள்ளார். ‘தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்’ என்ற வாசகம் மெளனியைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற உந்துதலை 1996ஆம் ஆண்டு இளங்கலை ஆங்கிலம் படிக்கும்போது ஏற்படுத்தியது. பிறகு தேடி அலைந்ததில் மெளனி என்ற பெயர், ஒரு மாயாஜால ஈர்ப்பைத் தந்தது. அன்று முதல் இன்று வரை மெளனியின் கதைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அது மட்டுமல்லாமல் இவரின் தோற்றத்தில் ஒருவகை மயக்கம் ஏற்பட்டது. குறிப்பாக இவரின் வெண்மையான தலைமுடி வசீகரப்படுத்தியது. இவரின் சிறுகதைகள் மற்றவர் கதைகளைவிட வேறுபட்டு நிற்பதை வாசிப்பின் ஊடாக அறியமுடிந்தது. அத்தகைய அனுபவத்தைப் பிரபஞ்ச கானமும் தந்தது.

    கதையின் போக்கு, இயற்கை வருணனை, அவன் அவள் காதல், இசையும் அவளும், மரணத்தின் வாசனை என்று கட்டமைக்கப்பட்டுள்ளது. இவற்றை மனத்துள் எண்ணும்போது தஞ்சை வட்டார எழுத்தாளர்கள் பெரும்பாலும் இத்தகைய பின்புலத்தைக் கையாண்டிருக்கிறார்கள். ஆனால் மெளனி இப்போக்குகளுக்கு இடையே வைத்துச் செல்லும் மெளனம், வாசகனைச் சற்றுச் சிந்திக்கத் தூண்டுகிற அதே நேரத்தில், கதையின் கயிற்றிலிருந்து விடுவித்தும்விடுவதும் இல்லை. இங்கே மெளனியின் சிறுகதை ஆளுமை, மலர்ந்து பரப்பும் வாசனையாகவும் வண்டாகிய வாசகனைச் சிந்தனைத் தேனுண்ணவும் செய்துவிடுகிறது. இதிலிருந்து விடுபட முடியாமல் மயங்கி, கதையினை மீண்டும் மீண்டும் படித்து இன்புற்று மெளனித்துவிடும் நிலையிலிருந்து க.நா.சுவும் தப்பவில்லை.

    அவளது பார்வைக்கும் இசைக்கும் தன்னை இழந்து தவித்து வருகிறான். அவளைத் திருமணம் செய்துகொள்ளத் துணிவில்லை. அவளின் காத்திருப்பும் உடல்நலக்கேட்டில் இதயம் பாதிக்கப்பட்டுப் பாடவேண்டாம் என்ற மருத்துவரின் ஆலோசனையையும் மீறி இவனுக்காகப் பாடுகிறாள். இவன் குளிப்பதற்குக்  குளத்தங்கரை செல்வதும் அங்கே அவள் இருப்பதும் அருகில் பெண்ணொருத்தி வரட்டிகளைத் தட்டுவதும். அவளுக்குத் திருமணம். மூன்றாம் நாள் விசேஷத்தில் அவளைப் பாடச் சொல்கிறார்கள் மறுத்த நிலையில் அவனைப் பார்க்கிறாள். அவன் திரும்பிக்கொள்கிறான். அவள் பாடத் தொடங்கி மரணித்துச் சாய்கிறாள் என்று கதை முடிகிறது.

    இந்தப் பின்புலத்தில் கதைக்கு உயிர் கொடுக்க மெளனி மேற்கொள்ளும் மெளனங்களே மெளனிக்கு உயிர் கொடுத்துள்ளன. அவனுக்கும் அவளுக்கும் நீண்ட காதல். அவளின் உயிர் உண்ணும் நோக்குக்குத் தன்னையே அவளாக்குகிறான். இந்தக் காதல் எப்படிப்பட்டது என்பதை முழுமைப்படுத்தாமல் வாசகச் சிந்தனைக்கு விட்டுவிடுகிறார். இங்கே வாசகனுக்கு ஒரு காதல் தேடல் பிறந்துவிடுகிறது. அவன் தனது பாதையில் பயணிக்கத் தொடங்குகிறான். இத்தகைய வாசகச் சாத்தியப்பாட்டைக் கதை முழுவதும் விதைத்துச் செல்லும்போது வாசகன் தனது ஒவ்வொரு வாசிப்பிலும் பழைய சிந்தனைகளைக் கலைத்துப்போடும் ரசவாதம் நிகழ்ந்து மீண்டும் மீண்டும் வாசிப்பின் தேவையை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது கதை.

    இன்னொரு இடத்தில் இதே அனுபவம் நிகழ்வதை உணரலாம். குளக்கரைக்குக் குளிக்கச் செல்லும் அவன், அங்கே அவளைப் பார்க்கிறான். அவள் துணி துவைத்துக் கொண்டிருக்கிறாள். இங்கே அவர்களுக்குள் ஒரு உரையாடலை மெளனி உருவாக்கியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. மெளனமும் காத்திருப்பும் இங்கே மீண்டும் வாசகனைத் துன்புறுத்துகின்றன.  வாசகனின் எதிர்பார்ப்புகள் இங்கே கவனமாகக் கைவிடப்படுகின்றன. அதற்கு ஈடாக மேலும் ஒரு புதிரை இங்குக் கட்டமைக்கிறார் கதையாசிரியர். அருகில் வேறொரு பெண் சாணியை உருட்டி வரட்டித் தட்டிக்கொண்டு இருக்கிறாள். கிராமம் சார்ந்த வாழ்க்கையில் நதியும் குளமும் வாழ்வுக்கும் மரணத்திற்குமான இடமாக இருந்து வருகின்றன. இங்கே அவள் வாழ்வாகவும் வரட்டிகள் மரணமாகவும் இருமைகளைப் பின்னிச் செல்கிறார். மரணத்தின் வரவை வாசகனுக்குத் தந்துவிட்டாலும் அது நிகழப்போகும் தருணங்களைக் காதலால் உன்னதப்படுத்த எண்ணுகிறார். இதற்குத் திருமணமாகி மூன்றாவது நாளைத் தேர்ந்தெடுக்கிறார். அவளின் பார்வையும் கானமும் நம்மைத் தூங்கவிடாமல் செய்துவிடுகின்றன. இவர்களின் காதலுக்குத் தடையாக இருப்பது எது என்ற எதிர்ப்பாத்திரத்தை உருவாக்காமல் காலத்தை நகர்த்திச் சென்றுவிடுகின்ற உத்தி, கதைக்கு வலுச் சேர்க்கிறது.

    அவளுக்குத் திருமணம் முடிந்துவிடுகிறது. இரவின் வருகையில் அவளும் கணவனும் தங்கியிருக்கும் அறையின் ஜன்னல் இடுக்கிலிருந்து ஒளியின் பிரவேசம் தெருவைக் கோடிட்டிருக்கிறது. எதிர் வீட்டின் சுவரோரத்தில் இருட்டின் மறைவில் அவனும் அவனது காதலும் தனிமையில் நிற்கின்றன. ஒளியோடு பேசிக்கொள்ளும் அவனது காதலும் காமமும் கடந்து செல்லமுடியாத கையறுநிலைப் படலம். இங்கே வாசகனுக்குத் தோன்றுவது அவளின் காதல் நோய். இவனை மறந்து கணவனோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும். அவளின் இசையாகிப்போன அவனை மறக்க முடியுமா என்ற ஏக்கத்தை உள்ளுணர்வை வாசகனுக்குத் தந்துகொண்டே இருக்கிறது. மதிக்கப்பட வேண்டிய இருவரின் காமமும் இரவின் குரலாய் அவளின் மரணத்திற்கு அப்பாலும் வாசகருக்குக் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.

    அவனை ஒரு கலாரசிகனாக உருவாக்கும் மெளனி, இயற்கைக்குத் திரும்புகிறார். இயற்கையின் ஓசைகளைக் கேட்கும் அவனுக்கு முழுமையில்லாத உணர்வு ஏற்படுகிறது. அந்த விடுபட்ட முழுமையின் பகுதியாக இவள் இசை பிரபஞ்ச கானமாக இருப்பதுபோல எண்ணுகிறான். அவளின் மரணம் இயற்கையோடு இணைவதும் இயற்கையை முழுமைப்படுத்துவதுமாகக் கூறும் நிலையில் வாசகனுக்கு அவர்களை வாழவைத்து இசை கேட்க ஆவல் மேலோங்குகிறது. வாசகனின் பார்வை, இயற்கையைத் தாண்டி சமூக மதிப்பீடுகளில் முரண்பாடுகளில் வினையாற்றத் தொடங்குகிறது. இவ்வாறு கதையின் மூலமாக விரிந்த சமூக யதார்த்தத்தை வாசக மனவெளியில் ஓவியமாக அவனைக் கொண்டே தீட்டும், காலத்தைக் கடந்த ஆளுமையாக மெளனி வலம் வருகிறார்.

    “ஒரு நல்ல எழுத்தை நாம் கட்டி இழுத்துக்கொண்டு வர வேண்டும் என்கிற அவசியமில்லை. அதற்குரிய இடத்தை அது தானாகவே வந்து சேர்ந்துவிடும்” என்பதன் அடையாளமாக மெளனியின் கதைகள் இலக்கியக் காழ்ப்புணர்ச்சியின் உச்சத்தையும் இலக்கியக் குழுக்களின் ஒவ்வாமையையும் மீறி காலத்தின் கைகளில் சுவடென நிலைத்து நிற்கும் உள்ளீட்டைக் கொண்டுள்ளன. இதில் அதி கவனம் பெறுவது பிரபஞ்ச கானம்.

    Share
  • மறப்போரிலும் அறம்

    மறப்போரிலும் அறம்

    முனைவர் வி. அன்னபாக்கியம்,
    தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,
    தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி(தன்னாட்சி),
    சிவகாசி – 626 123.

    முன்னுரை

    சங்ககாலப் போர் முறைகளை அறிய உதவும் தொகை நூல்களில் புறநூல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அகநூல்களில் உவமையாக வரும் செய்திகளிலும் நீதி நூல்கள் சிலவற்றிலும் இப்போர் முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பண்டைக்காலப் போர்களின் துவக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் புவியாண்ட மன்னர்களின் பல்வேறு ஆசைகள் காரணமாக இருந்திருக்கின்றன. அவற்றின் காரணமாகச் செய்யப்பட்ட போர்களில் சில அறங்களையும் வியத்தகு மரபுகளையும் கையாண்டுள்ளனர். தமிழர்கள் போரின் போது கையாண்ட அறச் செயல்களை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

    போர்அறிமுகம்

    ‘போர்’    என்னும் சொல் பொரு அல்லது பொருவுதல், ஒப்புதல் அல்லது ஒத்திருத்தல் எனப் பொருள்படும். அகராதிகள் போர் என்ற சொல்லுக்குச் சண்டை, யுத்தம் என்ற பொதுவான பொருளை நமக்குத் தந்துள்ளன. நாடுகளுக்கிடையே ஏற்படும் மோதலே போர் என்று களஞ்சியம் கழறுகின்றது. போர் பற்றிய பல்வேறு வளர்ச்சிப் படிநிலைகளைப் பற்றிப் பேசும் தொல்காப்பியர் “போர்“ என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.

    போர்உலக இயற்கை

    போர் இவ்வுலகத்திற்குப் புதியது அன்று. எல்லாக் காலங்களிலும் உலகில் எங்கோ ஒரு மூலையில் போர் நிகழ்ந்து கொண்டுதான் இருந்திருக்கின்றது. போரில்லாத உலகமே இல்லை எனலாம். இவ்வுலகில் பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் உலக நியதி என்றாற்போல போர் புரிவது உலக இயற்கை என சங்கப் புலவர்கள் கருதியதை,

                “ ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
    புதுவது அன்றுஇவ் வுலகத்து இயற்கை ”                                             (புறம். 76)

    என்ற இடைக்குன்றூர் கிழாரின் பாடல் மெய்ப்பிக்கின்றது.

    தனக்குரிய பொருளைப் பிறர் பறிக்க நினைக்கும் பொழுது போர் தோன்றி இருக்கலாம். இயற்கையாகவே வலிமை உடைய ஒருவன், வலிமை குறைந்த மற்றொருவனை அடக்கி ஆள நினைத்தப்பொழுதும் போர் தொடங்கி இருக்கலாம். இவை போன்ற இன்னும் பல காரணங்களால் சங்கப்போர்கள் நடைபெற்றுள்ளன. இவ்வாறு காரணங்கள் பலவாக இருந்தாலும் செய்யப்பட்ட போரில் அறம் பின்பற்றப்பட்டுள்ளது என்பது போற்றுவதற்குரிய ஒன்றாகும்.

    அறப்போர்

    போர் மிகமிகக் கொடியது என்பதால் தமிழர்களின் முன்னோர்கள் அதற்குச் சில கட்டுப்பாடுகளை விதித்தனர். அக்கட்டுப்பாட்டோடு நடத்தும்போர் அறப்போர் எனப்பட்டது. போரில் ஈடுபடும் இருதிறத்து வீரர்களும் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அவ்விடத்தில் நேருக்கு நேர் நின்று போரிடுவர். இக்காலத்தில் நடைபெறுவது போன்று திடீரென்று தாக்கும் போர்முறை அக்காலத்தில் இல்லை. பலர் அறிய வஞ்சினம் கூறி, பொது இடத்தில் தம்மோடு ஒப்பாரிடம் மட்டுமே போரிடும் அறப்பண்பு வாய்ந்தவர்களாகப் பழந்தமிழ் வீரர் விளங்கினர்.

    “சிறப்புக் கொள்கை கொண்ட அறம் கூறும் அவை”1 முன்பு இருந்ததாக மதுரைக்காஞ்சி கூறுகின்றது. புறநானூற்றில் அவ்வவை,

                 “அறம் அறக் கண்ட நெறிமான் அவை”                                     (புறம்.224:4)

    எனக் குறிக்கப்படுகிறது. அவ்வவையில் சட்டம் ஒழுங்குகளைக் காக்கும் காவிதி மக்களாகிய அமைச்சர்கள் இருந்தமையை,

                “ நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி
    அன்பும் அறனும் ஒழியாது காத்து
    பழிஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த
    செம்மை சான்ற காவிதி மாக்களும் ”                             (மதுரைக்.496-499)

    என மதுரைக்காஞ்சி எடுத்துரைக்கிறது. இவர்கள் மன்னனுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கி, அவனை நல்வழிப்படுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் மன்னன் நீதிநெறி தவறாத செங்கோல் ஆட்சி செலுத்தியுள்ளான்.

    மேலும் இலக்கியங்கள் இயம்பக் கூடிய போர்கள் அனைத்தும் பெரும்பாலும் “நல்லமர்”2 என்றே குறிக்கப்படுகின்றன. இப்போர்கள், “அறத்தின் மண்டிய மறப்போர்” (புறம்.62:7) என்றும் “மறம் கந்தாக நல்லமர் ” (புறம்.93:8) என்றும் சுட்டப்படுகின்றன.

    போர்க்களத்தில் புறமுதுகிடாமையும், புறமுதுகிடுவாருடன் போர் செய்யாமையையும் போர் அறமாக மதித்தவர் பண்டைத்தமிழர் என்பதை, “ நற்போர் ஓடா வல்வில் ” (முல்லைப்.38-39) எனவரும் முல்லைப்பாட்டு தொடர் உணர்த்துகின்றது. இங்கு ‘ நற்போர்; ’  என்பதற்கு அறத்தால் பொருகின்ற போர் என நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார். இதன்மூலம் மன்னர்கள் எவ்வளவுதான் வெறியோடு போர் செய்தாலும் அவை அறத்தின் அடிப்படையிலேயே நிகழ்ந்துள்ளதை அறிய முடிகின்றது. இதனால் “ போர் நெறியெல்லாம் கொலை வெறியேயாம் என்று பேசுதல் சங்ககால தமிழர் பண்பாட்டிற்கு ஒவ்வாததாகும் ” 3  என்பார் மா.ரா.போ.குருசாமி அவர்கள்.

    மன்னர்கள் மற்றும் மறவர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் போராக சங்ககாலப் போர் இருந்தாலும் அவற்றிலும் அறம் பின்பற்றப்பட்டு அறப்போராகவே திகழ்ந்துள்ளன என்றால் மிகையாகாது.

    பகலில் மட்டும் போர்

    பழந்தமிழ்ப் போர்கள் அனைத்தும் பகல்பொழுதில் மட்டுமே நடைபெற்றிருக்கின்றன. இப்போர்கள் அனைத்தும் மாதக்கணக்கில் நடைபெற்றுவதால் காலையில் முரசறைந்து ஆரம்பமாகும் போர் மாலையில் முரசு அறைந்து நிறுத்தப்பட்டுள்ளன. பகலில் மட்டும் போரிட்டு இரவில் போரிடாமையைப் பண்டைத்தமிழர் போர் அறமாகப் போற்றியதால் பகலவன் மறையும் மாலை நேரத்தில் போரை நிறுத்திவிட்டு இரவுப்பொழுதில் பாசறை எனப்படும் கட்டூரின்கண் வீரர்கள் ஓய்வெடுத்துள்ளனர்.

                “ வெம்போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்த
    வம்ப மள்ளரோ பலரே
    எஞ்சுவர் கொல்லோ, பகல்தவச் சிறிதே? ”                               (புறம். 79)

    என்ற புறநானூற்றுப் பாடலில் பகலில் மட்டுமே வீரர்கள் போரிட்டு உள்ள குறிப்பு காணப்படுகின்றது.

    பகலில் மட்டும் போரிட்டதற்கான காரணம், பகைவர்களைத் தெளிவாக அடையாளம் பார்த்துப் பகலில் மட்டுமே முடியும். சூரியன் மறைந்த இரவுப்பொழுதில் தமர் யார், பகைவர் யார் என்று அடையாளம் காண்பது கடினம். மேலும் பகல் முழுவதும் சளைக்காமல் போரிடும் வீரர்களுக்கு சிறிது நேரமாவது ஓய்வு தேவைப்பட்டது. இத்தகைய காரணங்களால் பகலில் மட்டுமே போரிட்டுள்ளனர். இரவுப்பொழுதில் பாசறையில் தங்கியிருக்கும் காயமுற்ற வீரர்களுக்கு ஆறுதல் சொல்லும் அரசனின் செயல்(நெடுநல்வாடை) அறமாகக் கருதப்படுகின்றது. அரசனின் இச்செயலை ஆராயும் பொழுது பகலில் போரிடுவதும் இரவில் போர் நிறுத்தப்படுவதும் போரின் அறச்செயலாகவே உணரமுடிகின்றது. பகை கொண்ட அரசனிடத்தும் அவனைச் சார்ந்து போர் செய்யும் வீரர்களிடத்தும் சினத்தைக் காட்டும் மன்னன் தன் வீரர்களிடம் அன்பு காட்டுவது மறத்திடையே தோன்றிய அறமாகும்.

    பகலில் போர் செய்ததற்கான குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை என்றே கூறலாம். ஆனால் வெட்சிப்போர் பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பிய நூற்பாவிற்கு உரையெழுதும் உரையாசிரியர்கள், போரின் முதல் நிலையாகிய ஆநிரை கவர்தல் என்பது இரவில் சமயம் பார்த்து கவர்ந்து வருவதாகும் என்று உரை விளக்கம் தந்துள்னர் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

    களம் நிறுவிப் போர் 

    பழந்தமிழர்கள் பகைவரை மறைந்திருந்து தாக்குதல் மற்றும் எதிர்பாராமல் தாக்குதல் ஆகிய மடைமையின்றி களம் ஒன்றை நியமித்தே போர் செய்துள்ளனர். அவை இலக்கியங்களில் களம், முதுநிலம், பறந்தலை என்றெல்லாம் கூறப்பட்டுள்ளன. களரும் மணலும் பரந்த வெளிகளான பறந்தலை எனப்படும் இடங்களையே வேந்தர்கள் போர்க்களமாக அமைத்துக்கொண்டனர் என்பதை வாகைப்பறந்தலை, வெண்ணிப்பறந்தலை, தலையாலங்கானம் ஆகிய இலக்கியச் சான்றுகளால் அறியமுடிகின்றது.

    போர் செய்ய கருதிய மன்னன் தனக்குச் சாதகமான இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது போர் முன்னேற்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுமாயினும் பகைவனுக்குச் சாதகமான போர்க்களத்தில் அவனோடு போரிட்டு வெற்றிபெறுவதே உண்மையான வெற்றி என்று கருதப்பட்டுள்ளது. அதனையே மன்னனும் மறவர்களும் பெரிதும் விரும்பியுள்ளனர்.

    களம் நிறுவிப் போரிட்டதால் போர் காரணமாக போர்க்களத்தில் உள்ளவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். போரிலிருந்து விலக்குப் பெற்றவர்கள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டனர். இதனால் சங்ககாலப் போர் அறப்போராக கருதப்படுகின்றது. ஆனால் இன்று போர் என்ற பெயரில் தரைவழித்தாக்குதல், வான்வழித்தாக்குதல், நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் கடல்வழித்தாக்குதல், ஏவுகணை மூலம் குண்டுமழை பொழிதல் போன்றவற்றைக் காண முடிகின்றது. இதனால் போருக்குச் சற்றும் தொடர்பில்லாத அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இவை அரக்கத்தனமான செயலாகும். எனவே இன்றைய காலப் போரோடு அன்றைய போரை ஒப்பிடும்போது அன்றைய போர் அறப்போரே என்பதில் சிறிதும் ஐயமில்;லை.

    மறத்திலும் அறம்

    போரின்போது பகைவர் நாட்டிலுள்ள மக்கள் யாவரையும் அழிக்க வேண்டும் என்பது போர் மேற்கொள்ளும் மன்னனின் நோக்கம் அன்று. எனவே, போர் தொடங்குவதற்கு முன்னால் போர்ச் செய்தியினை முரசறைந்து தெரிவிப்பது மரபாகும். அப்போது போரில் கலந்து கொள்ளாதவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் சென்று தங்குவதற்கு எச்சரிக்கை விடுப்பதும் உண்டு.

                “ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
    பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
    தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
    பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
    எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின் என
    அறத்தாறு நுவலும் பூட்கை”                                                      (புறம்.9:1-6)

    என்ற பாடல் அவ்வெச்சரிக்கைளை எடுத்துரைக்கின்றது. இவை போருக்கு முன் செய்யப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாகும். இவ்வெச்சரிக்கை பசுக்களுக்கு விடுத்ததாகக் கொள்ளாமல் அவற்றை உடையார்க்கும் பிறருக்கும் விடுத்ததாகக் கொள்வதே முறை. போரில் அப்பாவி மக்கள் அழிந்து விடக்கூடாது என்பதற்காக மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றிடுமாறு செய்யப்பட்ட இவ்வெச்சரிக்கையால் பண்;டைத்தமிழரின் அறவுணர்வு புலப்படுகின்றது.

    தொல்காப்பியப் பொருளதிகார நூற்பா ஒன்றிற்கு உரை எழுதும் நச்சினார்க்கினியர்,

    “கோழைகள் மயிர்குலைந்தோர் பெண்பெயர் கொண்டோர் படைக்கருவிகளை நழுவவிட்டோர் ஒத்த படை எடாதோர் என்பவர்களும் ” 4   போர்க்கொடுமையினின்றும் விலக்கப்பட வேண்டியவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.  இதன்மூலம் தமிழர்தம் போர்முறையில் கடைப்பிடித்த சில அறச்செயல்களை  நாம் அறியமுடிகின்றது.

    போரில் நல்லவர்கள் அழியக்கூடாது என்பதற்காக, கடுஞ்சினம் கொண்டு மதுரையைச் சீறியழித்த கண்ணகியும் தீக்கடவைள ஏவும்போது,

                            “ பார்ப்பார் அறவோர் பசுபத் தினிப்பெண்டிர்
    மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
    தீத்திறத்தோர் பக்கமே சேர்க ”                            (சிலம்பு.26:225-230)

    என்று பணித்ததாக அடிகள் கூறுவார்.

    போர்க்களத் தாக்குதலிலிருந்து காக்கப்பட வேண்டியவர்களாக,

                “ உடையிட்டார் புன்மேய்வார் ஓடுநீர் புக்கார்
    படையிட்டார் பற்றேதும் இன்றி – நடையிட்டார்
    இவ்வகை ஐவரையும் என்றும் அணுகாரே
    செவ்வகைச் சேவகர் சென்று ”                             (சிறுபஞ்ச.41)

    என சிறுபஞ்சமூலம் கூறுகின்றது. அஃதாவது ஆடை களைந்தோரும், புல்மேய்வோர் போல் வீழ்ந்து கிடப்போரும், நீரில் இறங்கிவிட்டவர்களும் படையைக் கீழே எறிந்து விட்டவர்களும், ஆதரவின்றி நிற்பவர்களும் ஆகிய இவர்கள் போர்க்களத் தாக்குதலிலிருந்து காக்கப்பட வேண்டியவர்கள் ஆவர்.

    தமிழ்வேந்தர் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படாத தன்மையினர் என்பதைப் புறநானூறு குறிப்பிடுகின்றது. “வீரரல்லாதோர், புறமுதுகிட்டோடுவோர், போரில் புண்பட்டோர், வயோதிகர், மிக்கிளையோர் என்பவர் மீது போர் தொடுத்தல் படைமடம்” 5  எனப்படும்.

    போரின் போது பகைவர் அஞ்சிப் பின்வாங்குவார்களேயானால் அவர்களைக் கொல்லாமல் விடும் பண்பையும் சங்ககால வீரர் பெற்றிருந்தனர்.

                            “புல்லென் கண்ணர் புறத்தில் பெயர
    ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான் ஆண்டுஅவர் ”                     (புறம.78:8-9)

    என்று புறமுதுகு காட்டி ஓடும் பகைவர்களைக் கொல்லாமல் விட்டுவிடும் பண்புள்ளவர்களாக இருந்துள்ளனர்.

    “போர்க்களத்தில் வெற்றி காணும் நம்பிக்கை குறைந்துபோயின் வீரர்கள் தங்கள் தோல்விக்கு அறிகுறியாய் படைக்கலன்களைக் கீழே போட்டு விடுதலும் மரபாக”6 இருந்ததாக ஆ.இராமகிருட்டிணன் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு “ ஆயுதம் இல்லாத நிலையில் எதிரி நிலை குலையும் போது அதை ஒரு வாய்ப்பாகக் கருதித் தாக்குவதைக் கோழைத்தனமாகக் கொண்டனர்”7  என்பார் வே.தி.செல்லம்.

    இவ்வாறாக போருக்கு அஞ்சிப் புறமுதுகு காட்டி ஓடும் பகைவரைத் தாக்கும் மரபும், நிராயுதபாணியைத் துன்புறுத்தும் மரபும் பண்டைத்தமிழரிடம் இருந்ததில்லை. எனவே போர்க்களத்தில் தமக்குச் சமமான வலிமையில்லாதவரோடு போரிடுவது அறமாகப் போற்றப்படவில்லை என்பது புலனாகிறது.

    முடிவுரை

    போர் என்றாலே அது மறத்தைக் குறிக்கும். அதாவது வீரத்தைக் குறிக்கும். அங்கே அறம் எப்படி நிலைபெறும் என்ற வினாக்கள் நமக்கு எழலாம். இதற்கு விடையாக பல சான்றுப் பாடல்கள் கொடிய போர்க்களத்திலும் அறச்செயல்கள் பல நிகழ்ந்துள்ளதை எடுத்துக்காட்டுகின்றன. போரினால் ஏற்படும் விளைவுகளைக் குறிப்பாக அவலங்களை அக்கால மன்னர்கள் உணர்ந்திருந்தனர். கல்லுக்குள் ஈரம் என்பது போல் தமிழ் மன்னர்கள் வீரம் மிக்கவர்களாக இருந்தாலும் அவர்கள் உள்ளத்தில் ஈரம் உடையவர்களாக, இரக்கம் உடையவர்களாக விளங்கினர் என்பதை அவர்கள் செய்த போரின் போது பின்பற்றிய நெறிமுறைகளை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம். இன்றைய போரிலும் அத்தகைய நெறிமுறைகளைப் பின்பற்றினால் நாடு அமைதிப் பூங்காவாகத் திகழும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

    அடிக்குறிப்புகள் 

    1. மதுரைக்காஞ்சி : 492

    2. புறம்.16:18, 93:9, 125:15, அகம்.67:8, 77:9, பதிற்று.42:9, 52:10

    3. மா.ரா.போ.குருசாமி, சங்ககாலம், ப.67

    4. தொல்.பொருள். 57 (நச்சினார்க்கினியர் உரை)

    5. புறம். 142 உரை

    6. ஆ. இராமகிருட்டிணன், தமிழக வரலாறும் பண்பாடும், ப. 113.

    7. வே.தி. செல்லம், தமிழக வரலாறும் பண்பாடும், ப. 114-115.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

    “மறப்போரிலும் அறம்’ என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறைகள் பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் பரிந்துரை!

    1. ஆய்வுக்கட்டுரைக்கான புறக்கட்டுமான நெறி பின்பற்றப்படாததால் பொதுக்கட்டுரையாகவே கருத வேண்டியிருக்கிறது.

    2. மறத்திலும் இழைந்த அறத்தை உறுதிசெய்ய கட்டுரையாசிரியர் பழந்தமிழ் இலக்கிய இலக்கண நூல்களிலிருந்து எடுத்துக்காட்டுகளையும் சான்றுகளையும் தொகுத்துக் கூறியிருப்பது பாராட்டுக்குரியது.

    3. களம், கானம், பறந்தலை என்னும் களப்பகுப்புக்கு ஆசிரியர் காட்டியிருக்கும் எடுத்துக்காட்டுகள் சிறப்பாக உள்ளன.

    4. ‘பகலில் மட்டும் போர்’ ‘படையிழந்தவரிடமும் ‘புறமுதுகு காட்டியவரோடும் போரில்லை என்பதைச் சிறப்பாகச் சுட்டிக் காட்டியிருக்கும் ஆசிரியர் ‘தழிஞ்சி’ என்னும் துறையை விளக்கியிருந்தால் கட்டுரை இன்னும் முழுமை பெற்றிருக்கும்.

    5. இதுபோன்ற கட்டுரைப் பொருண்மைகளில் அவ்வக்கால மக்கட்தொகையும் அறிவியல் வளர்ச்சியும் கருததிற் கொள்ளப்படல். வேண்டும். கொள்ளப்பட்டிருந்தால் தற்காலத்தோடு ஒப்பிடுவதன் பொருத்தமின்மை புலப்பட்டிருக்கக் கூடும்.

    6.  வெட்சித் திணையிலிருந்தே பழந்தமிழர் போரறம் தொடங்கிவிடுவதால் போர்க்களத்தில் ‘தும்பை’ என்பது இறுதி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    7.  ‘துவக்கம்’ என்ற சொல் இலக்கியப் பயன்பாடு இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

    8.  ‘நினைத்தப் பொழுது’ என்னுமிடத்தில் வலி மிகாது. ‘வீரர்களுக்கு சிறிது’ என்னுமிடத்தில் ஒற்று மிகும்.

    9. தமிழ் மன்னர்களின் உள்ளத்தைக் கல் என்பதாகவும் அவர்கள் போரக்களத்தில் காட்டிய  அறவுணர்வை ஈரம் என்பதாகவும் கட்டுரையாசிரியர் கூறுவதற்கு எள்ளின் முனையளவும் தொகையிலக்கியங்களில் சான்று கிடையாது. ‘கொடைமடம்’ என்பதே உயிரிரக்கத்தின் புறவெளிப்பாடு. மயிலின் நாட்டியத்தையும் காற்றில் கொடி அசைவதையும் அவற்றின் நடுக்கமாகக் கருதியவர்கள். அவர்களுக்கு ஈரம் இதயத்தோடு ஊறி வருவது.

    ஆய்வுக் கட்டுரைக்கான  புறக்கட்டுமான நெறி பின்பற்றப்படாததால்  இலக்கியக் கட்டுரைகள்  பகுதியில் வெளியிடுகிறோம்.

     

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 20

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 20

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கணக் குறியீடுகளும் உவமங்களும்

    முன்னுரை

    இலக்கண நூல்களில் அவற்றின் ஆசிரியர்கள் பொருள் புலப்பாட்டுக்காகப் பயன்படுத்தும் உவமங்கள், இலக்கண உரையாசிரியர்கள் நூற்பாக்கள் விளக்கம் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் உவமங்கள் என்னும் இவற்றைக் கடந்து இலக்கணக் குறியீடுகளையே இலக்கிய விளக்கத்திற்காகப் பயன்படுத்தும் ஒரு இலக்கியச் சூழலைக் காணமுடிகிறது. உயிர், மெய், குற்றியலுகரம், ஆய்தம், உடம்படுமெய், தழாஅத்தொடர் என்னும் இத்தகைய குறியீடுகளைப் பொருத்தமான உவமங்களாகக் கையாள்வதன் வழிக் கற்பனையைச் செழுமை செய்து கொள்ளும் முயற்சியைக் காணலாம். அன்புக்குரியவர்கள் தங்களை உயிரும் மெய்யுமாகக் கருதிக் கொள்வதும் எழுதுவதும் பேசுவதும் பெருவழக்கு. தாய் தன் குழந்தையை இவ்வாறு கொஞ்சி மகிழ்வதைத் தவிர மற்றவையெல்லாம் அவ்வளவு உயிர்ப்புடையன அல்ல என்பது வேறு. மேற்சொன்ன இலக்கணக் குறியீடுகளை இலக்கியச் சித்திரிப்பில் உவமங்களாகக் கையாள்வதற்கு விரிந்து பரந்த புலமையும் ஆழ்ந்த நுண்ணுணர்வும் தேவை. எனவேதான் இத்தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டிருந்தவர் எண்ணிக்கையும் வெற்றி பெற்றவர் எண்ணிக்கையும் எதிர்விகிதத்தில்  அமைந்துபோயிருக்கிறது.

    இதுதான் ‘உடம்படுமெய்’ இலக்கணம்

    எழுத்துக்களில் மெய்யும் உயிரும் கலக்கும். ஆனால் உயிரும் உயிரும் கலப்பதில்லை. மானுட உறவுகளில் உடல் கலப்பு இல்லாமல் உயிர்க்கலப்பு அரிது. இரண்டு உயிர் கலக்குமா எனின் கலக்காது. ‘உடல் கலக்குமா?’ எனின் கலக்கும். எழுத்துக்களில் மிக அரிதான நிலையில் நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் உயிராகவே நிற்கக் கலக்க வேண்டிய நிலை வரும். அப்போது அவ்விரு உயிர்களும் புணர்வதற்கு மெய்யின் துணை தேவைப்படும். அந்த மெய்க்கு ‘உடம்படுமெய்’ என்று பெயர். (இதனை மெத்த கற்ற மேதைகள் சிலர் உடன்படுமெய் என்று எழுதுவர்) ஒற்றுமைப்படாத இரண்டு உயிர்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு மெய்யின் உதவி தேவை என்பதையே இது காட்டுகிறது. தொல்காப்பியம் இதனை,

    “எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
    உடம்படுமெய்யின் உருவுகொளல் வரையார்”

    என்று இலக்கணம் செய்திருக்கிறது. மெய்யுறு புணர்ச்சியைக் காட்சிப்படுத்துங்கால் மிகவும் எச்சரிக்கையாகச் சித்திரிக்க வேண்டிய பொறுப்பு கவிஞர்களுக்கு உண்டு. வள்ளற்பெருமான் தாம் எழுதிய இங்கிதமாலையில் இதனை வெளிப்படுத்தியிருப்பார். கலவியின்பத்தை மொழியில் காட்சிப்படுத்துவது அரிய கவிதைத் தொழில் நுட்பம்!

    “சொல்லரிதாய் மிக இனிதாய் நாழி கைபோம்!
    சுடர்விழிகள் ஈரிரண்டு நான்கு பூக்கள்
    புல்லிதழில் போய்ஒடுங்கும் தமைம றந்து
    பூரிப்பார் நலம்பாடி இரவு செல்லும்”

    என்பார் பாவேந்தர். பாவேந்தருக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிலம்பாசிரியர் இளங்கோ கண்ணகியும் கோவலனும் துய்த்த புணர்ச்சி இன்பத்துக்குத் ‘தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என’ப் பாம்பின் புணர்ச்சியை உவமமாக்கி உணரவைத்தார். பாவேந்தருடைய நேரடி மாணாக்கர்களில் ஒருவரான சுரதா இதனை இன்னும் கூடுதல் இலக்கண நயத்தோடு பாடியிருக்கிறார். ‘பொருத்தம் உடலிலும் வேண்டும்’ என்பதை மறக்காத கவிஞர், தலைவனும் தலைவியும் கூடி மகிழ்ந்து அனுபவித்த இன்பதைக் காட்சிப்படுத்துகிறபோது,

    “நாவில் நீ! நெஞ்சில் நீ! அஞ்சன் ஆட்சி
    நல்லதமிழ்ப் பாடல் நீ அன்றோ?” என்றான்.
    ஓவம்மாள் ஈன்ற மகள் சிரிப்பை ஈன்றாள்
    உடம்படுமெய் இலக்கணத்தை இரவில் கண்டார்!

    எந்த உடல் முதலில் கலந்தது என்பது இருட்டுக்கும் தெரியாத புதிர். பாவேந்தர் இளங்கோவை மறக்கவில்லை. சுரதா பாவேந்தரை மறக்கவில்லை. இக்கவிஞர் யாரும் தமிழ்ப் பண்பாட்டையும் மரபையும் மறக்கவில்லை! இதுதான் தமிழினப் பண்பாட்டுக் கூறு! கவிதை என்பது ஒன்றினை உணர்த்துவது! விவரிப்பது அல்ல!

    தோன்றா எழுவாய்

    ‘படித்தாயா?’ என்னும் வினா இருக்கிறது. ‘நீ’ என்னும் எழுவாய் இல்லை. ‘படித்தானா?’ என்னும் வினா இருக்கிறது ‘அவன்’ என்னும் எழுவாய் இல்லை. ‘படித்தார்களா?’ என்னும் வினா இருக்கிறது. ‘அவர்கள்’ என்னும் எழுவாய் இல்லை. எழுவாய் இல்லை என்றாலும் அவ்வினாச் சொற்கள் இடத்தை உணர்த்தி வினாப்பொருளையும் உணர்த்துகின்றன. இவ்வாறு எழுவாய்த் தொடர் ஒன்றில் வெளிப்பட நிற்காது மறைந்து நிற்கும் எழுவாய்க்குத் ‘தோன்றா எழுவாய்’ என்று பெயர். தோன்றா எழுவாயின் மறைந்து நிற்கும் இந்தத் தன்மையைக் கவிஞர் ஒருவர் உவமமாக்குகிறார். எப்படி? இப்படி!. ‘வன்னிய வீரன்’ என்பது கவிஞர் சுரதா எழுதிய குறுங்காப்பியம். அந்தக் காப்பிய நாயகனான காத்தவராயனைப் பகைவன் கொல்ல முடியாமல் தவிக்கிறான். வெல்ல முடியாமல் விழிக்கிறான். பரத்தை ஒருத்தியைக் கொண்டு சூழ்ச்சியால் வன்னிய வீரனை வெல்ல திட்டமிடுகிறான். பரத்தை குப்பாச்சியிடம் மயங்கிக் கிடக்கும் வன்னியவீரனுக்குப் பாலில் நஞ்சு கலந்து கொடுக்கிறாள் குப்பாச்சி. குவளை தெரிகிறது. குவளையில் பால் தெரிகிறது. ஆனால் பாலுக்குள் கிடக்கின்ற நஞ்சு தெரியவில்லை. சுரதா,

    “ஆதிப்பொதுமகள் அளித்த சாறதனில்
    தோன்றா எழுவாய் போல் தோன்றாது இருந்த
    புதுவிடம் அன்னவன் உடலுட் புகுந்ததால்
    முத்தம் கொடுத்து முடித்தோன் முடிவில்
    சத்தம் கொடுத்தபடி சாய்ந்தனன் மெத்தையில்”

    என்று எழுதுகிறார். ‘தோன்றா எழுவாய் போல் இருந்த புதுவிடம்’ என்னும் இலக்கண உவமத்தால் மறைந்திருந்த நஞ்சினைக் காட்சிப்படுத்துகிறார். இலக்கணப் புலமை பெற்ற இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் சிலருள் ஒருவரான சுரதாவே உவமைக் கவிஞர் என்னும் சிறப்புக்குரியவரானார்!.

    இடைநிலையும் வெண்டளையும்

    கடையெழு வள்ளல்களில் ஏனைய ஐந்து வள்ளல்களிலும் பாரியும் பேகனும் தனிச்சிறப்புக்கு உரியவர். இதனை ‘முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை அளித்தாரைக் கேட்டறிதும்’ என்னும் வெண்பாமாலையால் அறியலாம். இவருள் பேகன் குளிரினால் நடுங்கிய மயிலுக்குப் போர்வை தந்ததாகக் கூறப்படுகிறது. இவனைப் பரணர், வன்பரணர், கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்க்கிழார் முதலிய சான்றோர்கள் பாடியிருக்கிறார்கள். மனைவியிடமிருந்து பிரிந்து வேறொருத்தியுடன் வாழும் பேகனுக்கு அறிவூட்டி மீண்டும் இல்லறத்தில் ஈடுபட வைக்க அனைவரும் முயன்றனர். மன்னரில்லாப் புலவர் அவையில் புலவர் பலரும் வீற்றிருக்கப் பரணர் பேகன் புகழ் பாடுகிறார். பரணரின் புகழ்ப்பரணியைக் கேட்டவுடன் சினங்கொண்ட பெரும்பூதனார் எழுந்து பரணரை வினவுவதாக ஒரு கற்பனையைத் தற்காலக் கவிஞர் செய்திருக்கிறார். தமது இலக்கணப் புலமையைப் பயன்படுத்திப் பேகனைப் பாரட்டிய பரணரைக் கடிந்து கொள்கிறார்.

    நாட்டியத்து மயிலா? நடுங்குகின்ற மயிலா?

    தொன்மம் மற்றும் வரலாறு ஆகியவற்றில் காணும் நிகழ்ச்சிகளைத் தம் கற்பனையோடு இணைத்துப் புதியன படைப்பது தமிழுக்குப் புதியதன்று. இந்த நிரலில் பெரும்பூதனார் அறிவுரையும் அமைந்துள்ளது. பூதனார் என்ன வினவுகிறார்? “அவன் மயிலுக்குப் போர்வை தந்ததே அறியாமையின் விளைவு!. மயில் நடுங்கிறதா? கார்மேகம் கண்டு நாட்டியமாடுகிறதா? என்பது கூட அவனுக்குத் தெரியவில்லை!. அத்தகையவன் மனைவியின் வேதனையை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? வருகின்ற பேரொலியெல்லாம் வேட்டுச் சத்தமாகத்தான் இருக்கவேண்டுமா? தும்மலாகவும் இருக்கலாம் அல்லவா?” என்று வினவும் பூதனார் “இடைநிலைகள் காலம் காட்டும்! சரி. அதற்காகக் காலம் காட்டுபவையெல்லாம் இடைநிலைகளாகிவிடுமா? வெண்பாவில் வெண்டளைகள் விரவும். சரி. அதற்காக வெண்டளைகள் விரவுகிற பாட்டெல்லாம் வெண்பாவாகிவிடுமா? மயில் தோகை விரித்தது உண்மை. மழைக்கு மயில் நடுங்கித்தான் தோகைவிரிக்குமா? அது மேகங்கண்டு நாட்டியமாடக் கூடாது என்று விதி உண்டா? கண்ணகியின் கண்ணீரைத் துடைத்தெறிய ஆவன செய்வீர்! என்று பரணரை நோக்கிக் கூறுகிறார். அந்தப் பாடல் இப்படி அமைந்திருக்கிறது!.

    “நாட்டியத்து மயிலுக்கும் குளிரி னாலே
    நடுங்குகின்ற மயிலுக்கும் வேறு பாடு
    காட்டுக்குள் அறியாத வேந்தன் நாட்டுக்
    கடமைகளை எவ்வாறு புரிந்து கொள்வான்?
    வேட்டுக்கும் தும்மலுக்கும் வேறு பாடு
    விளங்காதா? வெண்டளைகள் விரவு கின்ற
    பாட்டெல்லாம் வெண்பாவா? காலம் காட்டு
    பவையெல்லாம் இடைநிலையா? பாட்டுவேந்தே!

    “கார்போன்ற கருங்கூந்தல் நடுங்க ஏக்கக்
    கண்ணிரண்டும் புண்ணாகி நடுங்க வில்லின்
    கூர்போன்ற உதட்டுமுனை நடுங்க செங்கை
    குலைக்காந்தள் போல்நடுங்க உருட்டி விட்ட
    தேர்போலக் கிடக்கின்றாள் மனைவி! அந்தத்
    தென்பொதினிப் பொன்மயிலை மூடுதற்குப்
    போர்வைகொண்டு போகட்டும் பேகன்! என்று
    பூதனங்கு முழக்கமிட்டான்! பரணர் போனார்!”

    இலக்கணச்சுவை

    இந்தக் கவிதையில் பொருத்தமான இடத்தில் பொருத்தமான இலக்கணக் குறிப்புக்களை உவமமாக்கியிருக்கிறார். வினைச்சொல்லில் பெரும்பாலும் இடைநிலை காலம் காட்டும். சிறுபான்மை விகுதி காலம் காட்டும். பகுதி காலம் காட்டாதெனினும் பகுதி ஒற்று இரட்டித்துச் சிறுபான்மை இறந்த காலம் காட்டும். எனவே இடைநிலைதான் காலம் காட்டும் என்பதில்லை. வெண்பாவுக்குரிய தளை வெண்டளை. அதனால் அதில் அது வரவேண்டும் என்பதன்றி அதில் மட்டுந்தான் வரவேண்டும் என்பதில்லை. இந்த இலக்கணச் சிந்தனைகளை மயிலின் அசைவு பற்றிய சித்திரிப்புக்கு உட்படுத்தி, உவமமாக்கிக் கவிதை நயத்தை உயர்த்தியிருக்கிறார் கவிஞர் முருகுசுந்தரம்.

    தழுவு தொடரும் தழாஅத் தொடரும்

    வேற்றுமை, அல்வழி ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் ‘தழுவுதொடர்’ என்றும் ‘தழாஅத்தொடர்’ என்றும் இரண்டு உண்டு. ‘சங்கர் நூலைப் படித்தான்’ என்ற தொடரில் ‘நூலை’ என்னும் சொல் இயையாமல் விடுபட்டு நின்றாலும் பொருள்தொடர்பு அறாது. அதாவது ‘சங்கர்’ என்பது நிலைமொழி. ‘படித்தான்’ என்பது வருமொழி. இடையில் வந்திருக்கும் ‘நூலை’ என்னும் சொல் இரண்டனையும் பிரித்தாலும் சங்கர் படித்தான் என்னும் அவ்விரண்டுக்குமான பொருள் தொடர்பு அறுந்துவிடவில்லை என்பதைக் காணலாம். நிலைமொழி வருமொழிகள் அல்வழி, வேற்றுமைப் பொருள் புலப்பட ஒருங்கியைந்து நில்லாது இடையே பிற சொற்கள் வரச், சேய்மைப்பட நிற்கும் தொடர்மொழிக்கே தழாஅத் தொடர் என்று பெயர். அடுத்த சொல்லைத் தழுவாவிடினும் தொடர்ப் பொருள் சிதையவில்லை என்பதையே ‘தழாஅத் தொடர்’ என்பது உணர்த்துகிறது.  இதனை இன்னும் எளிமையாகப் புரியவைக்க முடியும். ‘நீர் குடித்தான்’ என்பது வேற்றுமைத் தொடர். ‘நீரைக் குடித்தான்’ என்பது வேற்றுமை வரி. இவ்விரண்டு தொடர்களிலும் நீர் என்பதும் குடித்தான் என்பதும் தழுவியே நிற்கின்றன என்பதை அறியலாம். ஆனால் நீர்க்குடம் என்று ஒரு தொடரை எடுத்துக் கொள்ளலாம். இது ‘நீரை உடைய குடம்’ என விரியும். ‘நீர்க்குடம்’ என்பதில் நீரும் குடமும் ஒன்றையொன்று தழுவி நிற்கிறது. ஆனால் ‘நீரை உடைய குடம்’ என்பதில் ‘நீரை’ என்ற சொல்லையும் ‘குடம்’ என்ற சொல்லையும் தழுவவிடாமல் ‘உடைய’ என்னும் சொல் தடுக்கிறது. (அதனால் நீர்க்குடம் என்பதை வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை என்பர்) நீரை உடைய குடம் என்பதைத்தான் தழாஅத்தொடர் என்கிறோம். இந்தத் தழாஅத்தொடர் என்னும் புணர்ச்சியிலக்கணக் குறியீட்டைக் கவிஞர் ஒருவர் பொருத்தமான இடத்தில் உவமமாகக் கொள்கிறார்.

    தலைவன் தழுவாத தலைவி

    தினைப்புனம் காக்கிறாள் தலைவி. அவள் நோக்கம் அங்குவரும் தலைவனைக் கண்டு மகிழ்வதே!. ஆனால் செவிலி அங்கு வந்து அவளை அழைத்துச் செல்கிறாள். தன்னோடு அண்மையாக வேண்டிய தலைவனைச் சேயனாக்கிச் செவிலியோடு இணைந்து இல்லம் திரும்பும் நிலையைக் கூறித் தலைவி தோழிக்கு அறத்தோடு நிற்பதை,

    “விழாத்தொறும் நூல்வெளியாக்கி என்றென்றும் விரிவுரைசெய்
    குழாத்தொடு தொண்டு செய்து ஓங்கும்கரந்தை குளிர்புனம் விட்டு
    அழாத்துயரோடு எமர் ஆணையிற்சோலை “அன்பர் வரின்
    தழாத் தொடர் ஆயினம்” என்று உரை சாற்றுவீர் எம் தத்தையரே”

    (கரந்தைக் கோவை)

    என்று பாடுகிறார் கவிஞர். ‘தன்னைத் தேடிவரும் தலைவரோடு தழாஅத் தொடர் ஆயினம்’ என்னும் தொடரில் தலைவனைத் தழுவாத, (தழுவ இயலாத) தன்னிலையைத் தழாஅத்தொடரோடு ஒப்பிடும் அருமை அறிக. நீரையும் குடத்தையும் ‘உடைய’ என்னும் சொல் தழுவவிடாமல் தடுக்கிறதாம்.  தலைவனையும் தன்னையும் செவிலி தழுவவிடாமல் தடுக்கிறாளாம். எனவே தழுவு தொடராயிருக்க வேண்டிய அவள் தழாஅத்தொடர் ஆனாளாம். இலக்கணத்தை இனிக்க வைக்க இப்படியும் ஒரு முயற்சி!

    மெல்லினம் விகாரமான கதை

    இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிஞர்களில் தமது சிந்தனையால் தனித்து விளங்குபவர் கவிஞர் அப்துல் ரகுமான். தனித்தன்மை மிக்க கருத்துக்கள், அளவையியல் சார்ந்து, அழகியல் குறையாமல் வெளிப்பட்டு நிற்கும் பாங்கை அவர்தம் கவிதைகளில் காணலாம். அகல்விளக்குகளாக இருக்க வேண்டிய பெண்களை ‘ஆண்கள் அடிமைப்படுத்தினார்கள்’ என்ற ஒரே ஒரு முழக்கத்தை முன்னிலைப்படுத்தித் தெருவிளக்குகளாக மாற்றி வைத்திருக்கும் கொடுமையை இன்றையச் சமுதாயம் செய்து கொண்டிருக்கிறது. அதற்குப் ‘பெண்ணுரிமை என்றும் பெயர் கொடுத்துத் தன் பெருமையை இழந்து கொண்டிருக்கிறது. பெண்மையின் அடர்த்தியைப் புரிந்து ஆற்றலைத் தெளிந்து, அதனை வணங்குவது வேறு. உரிமையளிப்பதாகச் சொல்லி அவர்களைத் தந்திரமாக அலுவலகத்துக்கு அனுப்பி உழைக்கச் செய்து அவர்தம் உழைப்பைச் சுரண்டுவது என்பது வேறு. இது தனித்த ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உரியது. ஆனால் இதுபற்றிய அப்துல் ரகுமான் கருத்து மிகவும் ஆற்றல் வாய்ந்தது. அக்கருத்தை அவர் உவமை வழியாக வெளிப்படுத்தும் பாங்கும் அளவையியல் நெறியும் மிகுந்த கவனத்திற்குரியதாகிறது.

    “பெண்ணே!
    உன் தளைகளை அகற்றும்
    ஆவேசத்தில்
    வாழ்க்கைக்கு ஆதாரமான
    பந்தங்களையும் அல்லவா வெட்டிவிட்டாய்!
    முன்பு
    புறம் உனக்கு
    மறுக்கப்பட்டது.
    இப்பொழுது
    அகத்தை நீ
    மறுதலிக்கிறாய்.
    மெல்லினமே!
    வல்லினமாகும் முயற்சியில்
    விகாரமாகி விட்டாயே”

    மேற்கண்ட கவிதை வரிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு சொல்லும் மிகவும் ஆழமான சிந்தனைக்குப் பிறகு செய்யப்பட்ட பதிவுகளாகும். தளையும் பந்தமும் ஒரு பொருள் குறித்த இருசொல்லாயினும் இருவேறு நிலைப்பாடுகளைக் குறிக்கும். தளை பந்தமாகிறபோது பாட்டு இனிமையாகிறது. பந்தம் தளையாகிறபோது பாட்டு கசக்கிறது. தளை இலக்கண நெறி. பந்தம் இலக்கண உறவு. மறுக்கப்பட்ட புறத்தைப் பெறவேண்டிய பெண், மயக்கத்தால் தனக்குரிய அகத்தை மறுதலிப்பதையும், மெல்லினமாக இறைவனால் படைக்கப்பட்ட பெண், ஆணைப் போல் வல்லினமாக வேண்டும் என எண்ணியதன் விளைவாக இறுதியில் விகாரமாகி நிற்கின்றாள் என்ற உண்மையையும் இலக்கணக் குறியீடுகளால் சுட்டிக்காட்டும் உவமத்திறன் பெரிதும் சுவைத்தற்குரியது.

    நிறைவுரை

    மேற்சொல்லப்பட்ட இலக்கணக் குறியீடுகளை உவமமாகப் பயன்படுத்துவதில் கவிஞர் பலரும் ஈடுபட்டு வந்திருந்தாலும் எண்ணிக்கையில் மிகக்குறைந்த விழுக்காட்டினரே இதில் வெற்றி பெற்றுள்ளனர். ஆழ்ந்த இலக்கணப்புலமையும் இலக்கணக் குறியீடுகளுக்கான ஆழ்பொருளை நன்கு உள்வாங்குதலும் அவற்றை மறித்து நோக்கும் பேராற்றலும் பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்தலும் பொருளுக்கான பொருத்தத்தை நன்கு சிந்தித்து அமைத்தலுமாகிய ஆற்றல் எல்லாருக்கும் அமைந்துவிடுவதில்லை.  கவிப்பேரரசர் பலரும் வெல்ல முடியாத இந்தக் கவிதைத் தொழில் நுட்பம் அறிவும் உணர்வும் உணர்ச்சியும் கலந்த கலவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

    (தொடரும்…)

    Share
  • கதையும் மொழிதலும் – 1  கி.ராவின் ‘பலம்’

    கதையும் மொழிதலும் – 1 கி.ராவின் ‘பலம்’

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
    ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
    ramachandran.ta@gmail.com
    9360623276

    கி.ரா. அறிமுகமாகி முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. திருநெல்வேலி (கரிசல் வாழ்க்கை) வாழ்வின் வளமைகள் துல்லியமாகத் துலங்கும் கதைகள் இவருடையவை. கல்லூரிக் காலங்களில் கதவு சிறுகதையைப் படித்துவிட்டு மயங்கித் திரிந்த நாட்கள் உண்டு. இன்றும் பழைமையான வீடுகளைக் கடந்து செல்லும் போது கி.ராவும் உடன் கடக்கிறார். சமீபத்தில் இவரின் பலம் சிறுகதையைப் படித்துவிட்டு என் தந்தையின் நினைவுகளுடன் பல நாட்கள் கடந்து சென்றன. இந்தக் கதை, அலையோசையில் 1980இல் வெளிவந்துள்ளது.

    ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மனநிலையில் அவனது பலம் ஏதோ ஒன்றில் ஈர்க்கப்பட்டுவிடுகிறது. பணப்புழக்கம் பரவலாக்கப்பட்ட சூழ்நிலையில் அதன் ஆளுமை பலரைக் கவர்ந்திழுந்தது. நிலத்தின் மேல் கொண்ட மதிப்பு, பண மதிப்பாக மாற்றப்பட்ட காலம். கிராமத்தில் நிலபுலம் எவ்வளவு இருந்தாலும் கையில் காசு இல்லையென்றால் ஏற்படும் மன அவலம் இக்கதையின் மையப் பொருளாகும்.

    செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாதபோதும் கையில் இருக்கும் பணம் ஏற்படுத்தும் அதீத மன தைரியமும் சமூகத்தை எதிர்கொள்ளும் தன்மையும் அலாதியானது. இருக்கும்போது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தாத பணம், கையில் இல்லையென்றால் வீட்டைவிட்டு வெளியில் செல்ல மனம் விரும்புவதில்லை. இயற்கையைச் சார்ந்து அறிவின் துணையில் கைவீசி வாழ்ந்த மனித வாழ்க்கை சட்டைப்பைக்குள் மடித்து வைக்கப்பட்ட பணக் காகிதத்தில் முடங்கிப்போன அவலத்தையும் மாற்றத்தையும் இக்கதையில் போகிறபோக்கில் சொல்லிச்செல்லும் இவரின் ஆற்றல் வியக்கத்தக்கது.

    தென் மாவட்டங்களில் இத்தகைய மனநிலையைப் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்ததுண்டு. சொந்த வீடு, விவசாயம், சுயதொழில், தற்சார்பு என்று வாழும் மக்களின் மனநிலை சட்டைப் பையில், டிரவுசர் பையில் இருக்கும் பத்து ரூபாய் நோட்டுதான் திருப்தி அளிக்கிறது. வெறும் கை என்பது அவமானத்தின் அத்தாட்சி, வாழத் தெரியாதவனின், வாழ்ந்து கெட்டவனின் இருத்தல் ஆகையால் எப்போதும் கையில் பணம் இருக்க வேண்டும். இந்த மனநிலையே இவர்களின் வாழ்க்கைச் சூழலை நகர்த்திச் செல்கிறது.

    சென்று வருவதற்கு நூறு ரூபாய் போதும் என்றாலும் ஆயிரம் ரூபாய் கையில் இருந்தால் மட்டுமே செயலில் தன்னம்பிக்கையும் உள்ளத்தில் இறுமாப்பும் உறுதிப்படுகிறது. அவ்வாறு இல்லையென்றால் வராத விருந்தாளி வருவதாகவும் உதவி கேட்டு உறவுக்காரன் வந்துவிட்டால் என்ன செய்வது என்பதுமான எண்ண ஓட்டத்தின் பதற்ற நிலையையும் அவர்களால் தவிர்க்கவே முடியாது. அத்தகைய பதற்ற மனநிலையே இக்கதை. கழுத்து நிறைய நகை போட்டு வருகின்ற மனைவியைக் கண்டாலும் கையில் பணம் இல்லாத நிலையும் அதனை வெளிப்படுத்தத் தயங்கும் வறட்டு மரியாதையும் மனைவியின் தாராள மனநிலையும் குடும்ப வாழ்க்கையின் யதார்த்த போக்கும் கதையில் இயல்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

    மன அவத்தையில் வெளியில் கிளம்ப உந்தித் தள்ளும் மன இறுக்கமும் பணம் இல்லாமல் தடுத்து நிறுத்தப்படும் எண்ண ஓட்டமும் கெளரவம் என்ற பண்பாட்டின் செயல்பாடுகள் தகர்ந்துவிடுமோ என்ற சூழலும் காசு இருக்கும்போது ஒருவரும் உதவி கேட்பதில்லை பணம் இல்லாதபோது கேட்டு வரும் நிதி வசூல் செய்பவர்களையும் நினைத்துப் பார்க்கும் கையறுநிலை ஒவ்வொரு மனிதனின் மனப்போக்கையும் எளிதில் சொல்லிவிடும் அல்லது பிரதிபலித்துவிடும் தன்மை கொண்டது. குடும்ப உறவில் வாழ்ந்தாலும் கணவன் வரவு செலவு என்றும் மனைவி வரவு செலவு என்றும் வருமானத்தின் போக்குகளைப் பதிவு செய்யும்போது ஒவ்வொருவரின் சொந்த இருப்புக்கான வாழ்வியல் களங்கள் உருவாக்கப்படுவதும் அதில் ஒருவருக்கொருவர் கண்ணியத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்ற எழுதப்படாத அறநெறியையும் இங்கே காண முடிகிறது. வீட்டில் மாடு, பால், தயிர் மூலம் வருகின்ற பணம் மனைவியின் இருப்பில் இருப்பதும் இவற்றை எதிர்பார்க்கக் கூடாது என்ற தற்கெளரவமும் கணவனின் நிலை உணர்ந்து இருபது ரூபாய் நோட்டை நீட்டும் மனைவியின் இணைச்செயலும் இருவருக்குமான வாழ்வியல் பிணைப்பை உறுதி செய்கின்றன.

    அவர் நடந்து செல்லும் கம்பீரமும் தன்னம்பிக்கையும் அவர் சட்டைப் பையில் திணிக்கப்பட்ட இருபது ரூபாயில் இருந்து உயிர் பெற்றது. மனிதனுக்கு என்ன தான் சொத்துடைமை இருந்தாலும் காசில்லாமல் ஊர் சுற்றுவது, மனநிலை ரீதியில் முடியாத செயலாக இருக்கிறது. உடலில் உயிர் இருப்பது போல மனித இயக்கத்தில் பணம் உயிர்நாடியாக மாறிப்போன பணப் பண்பாட்டைப் பதிவு செய்கிறது பலம் சிறுகதை. உடல் வலிமை தாண்டி பணமே உளவலிமை என்றான காலத்தைப் பிரதியிலிக்கும் அற்புதக் கதை இது.

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 19

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 19

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள் – 5

    முன்னுரை

    உரையாசிரியர்களில் நச்சினார்க்கினியரே இலக்கியம், இலக்கணம் என்னும் இரண்டனுக்கும் உரைகண்ட சான்றோர். பரிமேலழகரின் திருக்குறள் இலக்கிய உரையை அறிஞருலகம் இலக்கண உரை என்றே பெருமைப்படுத்தும். அச்சிறப்பு நச்சினார்க்கினியருக்கும் பொருந்தக்கூடும். இவருடைய இலக்கண உரைகளில் இலக்கிய மணம் வீசும். இலக்கிய உரைகளில் இலக்கணத் தெளிவு மேலோங்கி நிற்கும். தொல்காப்பியம், பத்துப்பாட்டு, சிந்தாமணி முதலிய நூலுரைகளைக் கற்பார் இதனை அறியலாம். ஆழ்ந்த தமிழ்ப்புலமை, பல்லாயிரம் வரிகளை மனத்துக்குள் இருத்திக்கொள்ளும் பேராற்றல், ஆராய்ச்சி அறிவு, பல்துறை அறிமுகம், மக்களின் நடப்பியல் வாழ்வியல் நெறிகள் பற்றிய நோக்கு, வடமொழிப் புலமை என்னும் இவற்றின் பரிமாணமாக விளங்கும் நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய உரைப்பகுதிகளில் காணப்படும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது.

    இலக்கியத்துள் காணும் இலக்கண நுட்பம்  

    நச்சினார்க்கினியர் உரைக்கருத்துக்களில் மட்டும் பிற உரையாசிரியர்களிடமிருந்து வேறுபடுபவரல்லர். அவருடைய பரந்துபட்ட இலக்கியப் புலமை இலக்கண உரைக்குப் பயன்படுவதைப் போலவே ஆழமான இலக்கணப் புலமை  இலக்கிய உரைகளுக்குப் பயன்படுகிறது. எனவே இருவகை உரைகளிலும் அவ்விருவகை உரையாசிரியர்களிடமிருந்து நோக்கு, உத்தி முதலிய எல்லாவற்றிலும் மாறுபடுகிறார். இலக்கியங்களை எடுத்துக்காட்டி இலக்கண விளக்கம் தரும் நச்சினார்க்கினியர்  இலக்கிய வரிகளையே உவமமாக்கி விளக்கம் தருவதும் உண்டு. ஏனைய உரையாசிரியர்களும் இவ்வாறு உரைவிளக்கம் செய்தாலும் இவருடைய இலக்கியப் புலமை தனித்தன்மை மிக்கதாய் விளங்குகிறது.

    விளியேற்பதில் உயிரீறும் மெய்யீறும்

    பெயர்ச்சொற்கள் இயல்பாக நின்றும் விளியாகும். சில மாற்றங்களைக் கொண்டும் விளியாகும். அத்தகைய மாற்றங்களுள் அஃறிணைப் பெயர்களும் அடங்கும். அவ்வஃறிணைப் பெயர்கள் விளியேற்குங்கால் இறுதி பற்றி மாறுபடும்.  புள்ளியீற்று அஃறிணைப் பெயர்களும் உயிரீற்று அஃறிணைப் பெயர்களும் விளியேற்குங்கால் ஏகாரம் பெறும் என்பது விதி.

    புள்ளியும் உயிரும் இறுதி யாகிய
    அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும்
    விளிநிலை பெறூஉம் காலந்தோன்றின்
    தெளிநிலை உடைய ஏகாரம் வரலே”151

    என்னும் நூற்பாவில் இந்தக் கருத்து பெறப்படுகிறது. மரம், ‘மரமே!’ என்றும் அணில் ‘அணிலே!’ என்றும் நாய் ‘நாயே!’ என்றும் புலி ‘புலியே!’ என்றும் விளிக்கப்படும்.   இவ்வாறின்றி ஏகாரம் பெறாமலும் விளியேற்கும் நிகழ்வுகளை இலக்கியங்கள் காட்சிப்படுத்துகின்றன. அஃறிணை நோக்கிப் புலம்பும் தலைமக்கள் கூற்று அவ்வாறு அமைந்திருக்கின்றன. அத்தகைய பயன்பாடு முழுவதையும் தொகுத்துத் தர எண்ணும் நச்சினார்க்கினியர் சிலவற்றை மட்டும் உவமமாகக் காட்டி விளக்குவதைக் காணமுடிகிறது.

    “வருந்தினை வாழி என் நெஞ்சம்!’ (அகம் -19:2)

     ‘கருங்கால் வெண்குருகு! ஒன்று கேண்மதி.’ (நற். 54)

    என்றாற் போலப் “பிறவாற்றான் விளி ஏற்பனவும் கொள்க”. மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் ‘நெஞ்சம்’ என்னும் மகர ஈறு ‘நெஞ்சம்’ என்றும், குருகு என்னும் உகர ஈறு ‘குருகு’ என்றும் விளிகொள்வதைக் காணலாம். சேனாவரையர் இத்தகைய எடுத்துக்காட்டுக்களைத் தந்து ‘தொடக்கத்தன’ என அமைதி கொள்கிறார். நச்சினார்க்கினியர் இவற்றை உவமமாக்கி, இவைபோல விதிக்கு வேறுபட்டும் வேறு சில நெறிகளிலும் விளியேற்பன உளவென விளக்குவதைக் காணலாம். அஃறிணைப் பெயர்களில் மகர ஈறும் உயிரீறும் வேறுவகையாக விளிகொள்ளும் பாங்கு இலக்கியங்களில் செறிந்து கிடக்கும் அளவையும் நுட்பத்தையும் நோக்கி அவற்றுள் சிலவற்றை உவமமாக்கிக் கூறும் நச்சினார்க்கினியரின் உவமத்திறன் போற்றத்தக்கதாய் உள்ளது.

    எழுத்தும் இறைவனும்

    அகர முதல் னகர இறுவாய் முப்பது எழுத்துக்களும் முதல் எழுத்துக்கள் எனத் தொகுத்துச் சொன்ன தொல்காப்பியம் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டு, மெய்யெழுத்துக்கள் பதினெட்டு என்பதைப்பின்னாலே விவரிக்கிறது.  அவற்றுள் உயிரெழுத்துக்களைக் கூறும் நூற்பா,

    ஔகார இறுவாய்ப்
    பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப” 8

    என்றவாறு அமைகிறது. இந்த நூற்பாவின் விளக்கத்தில் நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் உவமத்தின் கொடுமுடியையும் அவருடைய ஆழமான பக்தியையும் சித்தாந்தப் பார்வையையும் ஒருங்கே காட்டுகிறது எனலாம். உயிரெழுத்துக்கள் மெய்களை இயக்குவதால் தனியாக அவை உயிரெனப்படுமா என்னும் ஐய வினாவை அவராகவே எழுப்பிக் கொண்டு அதற்கான விளக்கத்தையும் பின்வருமாறு பதிவு செய்கிறார்.

    மெய் பதினெட்டினையும் இயக்கித் தான் அருவாய் வரிவடிவின்றி நிற்றலின் உயிராயிற்று. இவை மெய்க்கு உயிராய் நின்று மெய்களை இயக்குமேல் உயிரென வேறோர் எழுத்தின்றாம் பிறவெனின், “மெய்யில் நிற்கும் உயிரும் தனியே நிற்கும் உயிரும் வேறென்க.! என்னை? ‘அகர முதல’ (குறள் – 1) என்றுழி அகரம் தனியுயிருமாய்க் ககரவொற்று முதலியவற்றிற்கு உயிருமாய் வேறு நிற்றலின். அவ்வகரம் தனியே நிற்றலானும் பல மெய்க்கண் நின்று அம்மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்டதாதலின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதொரு தன்மையையுடைத்தென்பது கோடும்,. “இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையும் பல்லுயிர்க்கும் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல

    உவமத்தை உவமத்திற்காகவே சொல்லுவது வேறு. இலக்கியத்தின் பயன்நோக்கிக் கையாள்வது என்பது வேறு. ‘அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயன்’ என்னும் தமிழிலக்கியப் பயன் கோட்பாடு காணப்படுவது இலக்கணத்திலேயே என்பதை நன்குணர்ந்த நச்சினார்க்கினியர் இலக்கண விளக்கத்திற்காகக் கையாளப்படும் உவமமும் கற்பாருக்கு நாற்பொருளையும் பயத்தல் வேண்டும் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் உவமம் கூறுவதைக் காணமுடிகிறது. முதற் குறட்பாவில் கடவுளின் உண்மையை, அதாவது கடவுள் இருக்கிறார் என்னும் அவரது இருப்பைக் கூறிய திருவள்ளுவரை நினைவுபடுத்தி மொழியிலக்கணம் கற்கின்ற மாணவருக்கும் அவ்வுண்மையை உணர்த்த வேண்டும் என்னும் கடமை உணர்வோடு சிந்திக்கத்தக்கதோர் உவமத்தை நச்சினார்க்கினியர் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை அறியலாம். அதாவது உயிரின்றேல் மெய்யின் இயக்கம் இல்லை. இறைவன் இன்றேல் உலக இயக்கம் இல்லை என்பதாம்.

    உயிருக்குள் அகரமுண்டா?

    மெய்கள் இயங்குதற்கு அகர உயிர் காரணமென்பதைத் தொல்காப்பியம்,

    ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ 46

    என்னும் நூற்பாவில் விளக்குகிறது. தனிமெய்களினது நடப்பு அகரத்தொடு பொருந்தி நடக்கும் என்பது இதன் பொருள். நடப்பு என்பது ஒலிவடிவையும் வரிவடிவையும் குறிக்கும் அகரம் தவிர்த்த ஏனைய உயிர்கள் இயங்குவதற்கு அகரம் காரணமாவது யாங்ஙனம்? இதுபற்றித் தொல்காப்பியம் கூறியிருக்கிறதா என்னும் வினாவை உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தாமே எழுப்பிக் கொண்டு அதற்கான விடைகாண முயல்கிறார். சென்ற பத்தியில் விளக்கிய அவ்வுவமத்தின் பேராற்றலை முற்றும் உணர்ந்தவராய் எழுதுகிறார்.

    இங்ஙனம் மெய்க்கண் அகரம் கலந்து நிற்குமாறு கூறினாற்போல பதினோருயிர்க்கண்ணும் அகரம் கலந்து நிற்கும் என ஆசிரியர் கூறாராயினார், அந்நிலைமை தமக்கே புலப்படுதலானும் பிறர்க்கு இவ்வாறு என்று உணர்த்துதல் அரிதாகலானுமென்று உணர்க

    இறைவன் இயங்குதிணைக்கண்ணும் நிலைத்திணைக்கண்ணும்  பிறவற்றின்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையேயாய் நிற்குமென்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது’.

    அகரமுதலஎன்னும் குறளான் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்கள் எல்லாம், அதுபோல இறைவனாகிய முதலையுடைத்து உலகமென வள்ளுவனார் உவமை கூறியவாற்றாலும், கண்ணன்எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானேஎனக் கூறியவாற்றானும் பிற நூல்களாலும் உணர்க

    என்பது நச்சினார்க்கினியரின் உவம விளக்கம். உயிர் மற்றும் மெய் ஆகியவற்றின் இயக்கத்திற்கு அகரமே காரணமாகி நிற்கும் நுண்ணியத்தை   இறைத்தன்மையை  உவமமாக்கி விளக்கும் நச்சினார்க்கினியர், வள்ளுவர் கூறிய உவமத்தையும் வழிமொழிவதைக் காணமுடிகிறது.

    நிலத்தது அகலம் போல

    குற்றியலுரகத்தை நெடில், உயிர், வன்மை, மென்மை, இடைமை, ஆய்தம் என்னும் ஆறுவகையாகப் பாகுபடுத்தினர் இலக்கண ஆசிரியர்கள். தொல்காப்பியம் இதனை,

    நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும்
    குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே” 36

    என்னும் நூற்பாவில் சிந்திக்கிறது. “வல்லெழுத்துக்கள் ஆறினையும் ஊர்ந்து நெட்டெழுத்தின்பின்னும் ஐவகைத் தொடர்மொழியின் இறுதியிலும் நிற்றல் வேண்டும்” என இதற்கு நச்சினார்க்கினியர் பதசாரம் தருகிறார். குற்றியலுகரத்தின் முன்னெழுத்து கொண்டு பெயர் பெறுவது ஆறுவகைக்கும் பொதுவாக இருந்தாலும் தொல்காப்பியம் நெடில் தொடரைத் தனித்து ‘நெட்டெழுத்து இம்பரும்’ எனப் பிரித்தாளுகிறது. இது பற்றிச் சிந்திக்கும் நச்சினார்க்கினியர், உண்மையில் இது பிரிப்பன்று. ஈரெழுத்தில் அமையும் நெடில் தொடரும் தொடர் மொழியில் அமையும் ஏனைய ஐவகைக் குற்றியலுகரமும் ஈறுபற்றியதே. எனவே இதனைத் தனியாகக் கருதுதல் வேண்டாம்.

    நெட்டெழுத்தினது பின், தொடர்மொழி ஈறு என்பன நிலத்தது   
    அகலம் போல ஒன்றியற் கிழமைப்பட்டு நின்றன.”

    என்பது நச்சினார்க்கினியரின் உவம விளக்கம். இந்த விளக்கத்தால் நெடில் தொடர்க் குற்றியலுகரம் தனியாகாது, ஏனைய ஐந்துடன் ஒன்றி, ஆறே என்பதைப் பெறவைக்கிறார். வைத்து, தமது அளப்பரிய நினைவாற்றலுடன் “தொடர் மொழியீற்று” (36) வருமென்று ஆண்டுக் கூறியதனை ஐந்து வகைப்படுத்தி, அதனோடு நெட்டெழுத்து இம்பரும் என்றது ஒன்றேயாதலின் அதனையும் கூட்டி அறுவகைத்தென்றார்” (406) என்று நினைவூட்டுகிறார். நிலத்தது அகலம் என்னும் உவமம் குற்றியலுகரம் ஆறே என்பதை உறுதி செய்கிறது எனலாம்.

    நிறைவுரை

    இலக்கியத்திற்கு உரை எழுதுங்கால் இலக்கணத்தை மறக்காமலும் இலக்கணத்திற்கு உரைகாணுங்கால் இலக்கிய உணர்வோடும் எழுதுவது நச்சினார்க்கினியருக்கே உரிய சிறப்பு. இலக்கியப் பகுதிகளையே இலக்கண விளக்கத்திற்கு உவமமாக்கும் அவர், தமிழ்மொழியின் ஏனைய எழுத்துக்களில் அகரத்தின் ஆதிக்கத்தை இறைவனோடு பொருத்தி நோக்கிப் பொருத்தம் காட்டுகிறார். திருக்குறளின் உவமக் கோட்பாட்டில் ஈடுபாடு காட்டுகிறார். தலையின்றிக் கூந்தல் இல்லையாதல்போல நெடில்தொடர் இன்றிக் குற்றியலுகரம் நிறைவு பெறாது என்பதை ‘நிலத்தது அகலம்’ என்னும் உவமம் கொண்டு விளக்குகிறார். பானைச் சோற்றுக்குப் பதசோறாக அமைந்த இந்தக் கட்டுரை நச்சினார்க்கினியரின் ஏனைய இலக்கண, இலக்கிய உவமங்களைக் கண்டறிந்து துய்ப்பதற்கு ஏதுவாகலாம்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 18

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 18

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள்- 4

    முன்னுரை

    ஒரு நூல் எழுதி உலகப்புகழ் பெறுவது தமிழ்ப்புலவர் பெருமக்களுக்கு வெகு இயல்பு. திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய படைப்பிலக்கியங்களைப் போலவே உரையிலக்கியத்திலும்; இந்தப் போக்கு காணப்படுகிறது. தொல்காப்பியத்திற்கு மட்டும் உரையெழுதிப் பெருமையுற்றவர் இளம்பூரணர் என்றால் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரையெழுதித் தனது பெயரை நிலைநிறுத்தியவர் சேனாவரையர். மக்கள் சமுதாயமே மொழியியலின் தாயகம் என்பதை உணர்ந்த தொல்காப்பிய நெறியில் தோய்ந்த அன்னார் தமது உரைகளில் வழக்குப் பற்றிய பலவற்றை இலக்கண விளக்கத்திற்காக உவமங்களாகப் பயன்படுத்தியிருக்கிறார். உலக வழக்கில் உள்ளனவற்றை உவமமாக்குதல், ஓர் உவமைக்குப் பல விளக்கங்கள் தருதல், ஓர் இலக்கண விளக்கத்திற்குப் பல இலக்கியங்களிலிருந்து உவமம் காட்டுதல், இலக்கணத்திற்கு மற்றொரு இலக்கணத்தையே உவமமாகக் கொள்ளுதல், பிறதுறை பயிற்சியினால் உவமங்களைக் கையாளுதல் எனப் பன்முகமாக அமைந்த சேனாவரையர் சொல்லதிகார உரையில் காணப்படும் உவமங்கள் சிலவற்றின் சிறப்பினை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

    சொற்களை அமைத்தலா? ஆக்குதலா?

    ‘கிளவியாக்கம்’ என்னும் தலைப்பில் அமைந்த சொல்லதிகாரத்தின் முதலியல் தமிழின் சொல்வழக்கில் உள்ள வழுக்களைச் சுட்டுதல், வழுவகற்றி அவற்றை வழங்க வேண்டுதல், சில காரணம் பற்றி அவ்வழுக்களை அமைத்துக் கொள்ளுதல் என்னும் முப்பெரும் கூறுகளை ஆராய்வதாக அமைந்திருக்கிறது. இம்மூன்று கூறுகளும் மொழிக்கட்டமைப்பைக் காக்கும் தலையாய நோக்கத்துடன் பெரிதும் தொடர்புடையன. சேனாவரையர் இவ்வதிகார நூற்பாக்களைப் பன்முறை நோக்கி, அவற்றின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு ‘கிளவியாக்கம்’ என்னும் இயல் தலைப்பின் பெயர் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். வழு சுட்டுதல், வழுவற்க எனல், வழுவமைத்துக் கொள்ளுதல் என்னும் மூன்றும் சொற்களை ஆக்கிக் கொள்ளும் நெறிமுறைகளே எனக் கருதுகிறார். எனவே ‘சொற்களை ஆக்கிக் கொள்ளுதல்’ அதாவது ‘கிளவிகளை ஆக்கிக் கொள்ளுதல்’ என்பதை உணர்த்தும் பகுதிக்குக் ‘கிளவியாக்கம்’ என்னும் பெயர் பொருத்தமே என்னும் முடிவுக்கு வருகிறார்.

    “வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையான் இவ்வோத்துக் கிளவியாக்கமாயிற்று. ஆக்கம் அமைத்துக் கோடல். நொய்யும் நுறுங்கும் களைந்து அரிசி அமைத்தாரை அரிசி ஆக்கினார் என்பவாகலின். சொற்கள் பொருள்கள் மேல் ஆமாறு உணர்த்தினமையால் கிளவியாக்கமாயிற்று எனினும் அமையும்”

    மேற்கண்ட பகுதியிலிருந்து ‘மொழிசார்ந்த இலக்கணமேயானாலும் அவர் மக்கள் சமுதாயத்திலிருந்தே அவ்விலக்கணத்தை நோக்கியிருக்கிறார் என்பது புலனாகும். ‘அமைத்ததை’ ‘ஆக்கியது’ எனத் தொல்காப்பியர் கூறியிருப்பதற்குத் தொல்காப்பியர் கால வழக்கே காரணம் என்பது சேனாவரையர் உள்ளக்கிடக்கை. ‘கிளவியாக்கம்’ என்னும் தொடருக்குப் பொருள்கொள்வதில் தெய்வச்சிலையாரைத் தவிர ஏனைய உரையாசிரியர்கள் பெரும்பாலும் ஒத்த கருத்தினை உடையவர்கள் என்பதை அவரவர் உரைகளால் அறிய முடிகிறது. இருப்பினும் ஏற்ற சொற்களை அமைத்துக் கொள்ளுதலுக்குச் சேனாவரையர் கூறிய உவமத்தின் பொருள்புலப்பாட்டுத்திறன், ‘கிளவியாக்கம்’ என்னும் சொல்லுக்கு உரையாசிரியர்கள் பிறர் சொன்ன கருத்துக்களை நோக்கினால் நன்கு புலப்படும். ‘நொய்யும் நுறுங்கும்’ என்பது வழுக்களைக் குறித்தன. அவை களையப்பட்ட அரிசி உணவுக்காவது போல வழுக்களைந்த சொற்களே மொழிக்கு ஆக்கமாகும் என்பது உவமத்தாற் பெறப்படும் கருத்தாகும். உரையாசிரியர்களில் சேனாவரையர் மட்டுமே இந்த உவமத்தைக் கையாண்டு பொருள் விளக்கம் தந்திருக்கிறார். அவ்வுவமையால் கிளவியாக்கம் என்னும் முதல் இயலின் உள்ளடக்கம் முழுமையும் தெளிவாகி விடுவதைக்  காணலாம்.

    இரட்டைக் கிளவி ஒரு சொல்லா? பல சொற்களா?

    தமிழில் ஓர் எழுத்து தனித்து நின்று பொருளுணர்த்தும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் இணைந்து ஒரு சொல்லாக நின்றும் பொருளுணர்த்தும். ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இணைந்து நின்று தொடராகப் பொருளுணர்த்தும். இவற்றோடு ஒரே சொல் இரட்டித்து நின்றும் பொருளுணர்த்தும். அவ்வாறு அது பொருளுணர்த்துங்கால் குறிப்புப் பொருளாகவே வெளிப்படும். சான்றாக ஒருவன் பற்களைக் கடித்துத் தன் உணர்ச்சியை வெளிப்படுத்துவதை வழக்கில் மக்கள் ‘அவன் பற்களை நறநறவென்று கடித்தான்’ என வழங்குவர். ‘நறவு’ என்னும் தமிழ்ச்சொல்லுக்குத் ‘தேன்’ என்று பொருள். இங்கே தேனுக்கும் இதற்கும் தொடர்பேயில்லை. ‘நற’ என்னும் சொல் இரண்டுமுறை அடுக்கிவந்து பற்களைக் கடித்தவன் பாங்கினைக் குறிப்பாகப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. இவ்வாறு ஒரே சொல் இரட்டித்து நின்று குறிப்புப் பொருளைச் சுட்டுவதை ‘இரட்டைக் கிளவி’ என்பது தமிழிலக்கண வழக்கு. இந்தக் குறிப்புப் பொருள் இசை, பண்பு, வினை என்னும் மூன்றினையும் சார்ந்து வரும். இவ்வாறு அமையும் இரட்டைக் கிளவிக்குள் இரண்டு சொற்கள் இருந்தாலும் அது ஒருசொல்லாகவே கருதப்படும் என்பது சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகியோர் கருத்து. ‘ஒரு சொல்லாய் நின்று அப்பொருள் உணர்த்திற்று’ என்பது சேனாவரையர் உரைப்பகுதி. இரண்டு சொற்களை ஒரே சொல்லாகக் கருதமுடியுமா என்பதற்கான விடையை விளக்குவதற்காகச் சேனாவரையர் காட்டுகிற உவமம் மக்கள் வழக்குச் சார்ந்ததாக அமைந்திருக்கிறது.

    “ஈண்டு இரட்டைக் கிளவி என்றது, மக்களிரட்டை விலங்கிரட்டைபோல வேற்றுமையுடையனவற்றையன்றி, இலையிரட்டையும் பூவிரட்டையும் போல ஒற்றுமையும் வேற்றுமையும் உடையனவற்றை”

    என்பது இரட்டைக்கிளவியின் அமைப்பை விளக்குதற்குச் சேனாவரையர் காட்டும் உவமம்.  மக்களிலோ விலங்குகளிலோ இரட்டை என்றால் அவை ஒரே தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் அவை தனித்தனியானவை. இரட்டைக்கிளவி அவை போன்றதன்று. இலைகளிலோ பூக்களிலோ இரட்டை என்றால் ஒன்றாகவும் இருக்கும் இரண்டாகவும் அமையும். ‘இரட்டைக்கிளவி’ என்பதும் இது போன்றதுதான் என்பதே சேனாவரையர் விளக்கம். இரட்டைக்கிளவியில் அமைந்திருக்கும் இரு சொற்களில் முன்னது குறைசொல்லாகவும் பின்னது முழுச்சொல்லாகவும் (குறுகுறுத்தான், கடுகடுத்தான், விறுவிறுப்பு — இவற்றுள் முன்னவை குறைசொல்லாகவும் பின்னவை முழுச்சொல்லாகவும் இருப்பதை நோக்கினால் சேனாவரையர் காட்டும் உவமம், இலக்கணப் பொருள் புலப்பாட்டுக்குச் செய்யும் பேருதவியைப் புரிந்து கொள்ள முடியும். ‘வில்வமரத்து இலைகள் புறத்தோற்றத்தில் மூன்றாகத் தோன்றினாலும் உண்மையில் அது ஓரிலையே’ என்பதாக விளக்கும் அறிஞர் சுந்தரமூர்த்தியின் கருத்து விளக்கமும் இங்கே சுட்டத்தகுந்ததாம். ‘இரட்டை’ என்னும் பன்மையும் ‘கிளவி’ என்னும் ஒருமையும் இணைந்தமைந்த ஒரு சொல்லாட்சியின் அடிப்படையை விளக்கப் பழந்தமிழ் உரையாசியர்கள் தொடங்கித் தற்கால இலக்கண அறிஞர்கள் முடியச் செய்திருக்கும் ஆய்வுகள் சிந்தனைக்கு விருந்தாக உள்ளன.

    ஆ தீண்டு குற்றியும் அந்தநாள் வழக்கும்

    சொல்லளவில் ஒன்றாக இருப்பது பொருள்நிலையில் மாறுபடும். இதற்குப் பலபொருள் ஒரு சொல் என்று பெயர். இது  பலபொருளைக் குறிப்பது வினை, இனம், சார்பு என்னும் முத்திறத்தால் அமையும். இம்முத்திறத்தாலும் அமையும் அல்லது பொருளுணர்த்தும் பலபொருள் ஒருசொல்லை வினையால் மட்டுமே வேறுபடும் எனத் தொல்காப்பியம் கூறியிருப்பதற்குச் சேனாவரையர் வழக்குச் சார்ந்த உவமத்தைப் பயன்படுத்தி விளக்கமளிக்கிறார். பழங்காலத்தில் பசுக்கள் உடல் தினவு எடுத்தால் உராய்வதற்கு ஏதுவாக ஆங்காங்கே மரக்கட்டைகளை நட்டிருப்பர். பசுக்களேயன்றி ஏனைய விலங்குகளும் தங்கள் உடல் தினவுகளைத் தீர்த்துக் கொள்ளும் அந்தக் கட்டையை மக்கள் வழக்கில் ‘ஆ தீண்டு குற்றி’ என்றே வழங்குவர். தினவு தீர்த்துக்கொள்ளும் விலங்குகளில் பசுக்கள் சிறப்புடைமையின் அதனை முன்னிறுத்தி ‘ஆ தீண்டு குற்றி’ என்றேயழைத்தனர். அந்த வழக்கியல் நிகழ்வை உவமமாக்கிக் கொள்கிறார் சேனாவரையர். ‘பல விலங்குகளும் பயன்படுத்திக் கொள்ளும் குற்றியை ‘ஆ தீண்டு குற்றி’ எனப் பசுவை மட்டும் விதந்து கூறுவதுபோலப், பலபொருள் ஒருசொல்லைப் பொருள் வேறுபடுத்தும் கூறுகள் இனம், சார்பென இருப்பினும் வினையின் சிறப்பு நோக்கி ‘வினைவேறுபடூஉம் பலபொருள் ஒருசொல்’ என்றார் என விளக்கமளிக்கிறார்.

    மா பூத்தது என்பது ஒரு தொடர். மாவும் மருதும் வளர்ந்தன என்பது ஒரு தொடர். கவசம் பூட்டிய வீரன் மாவைக் கொணர்க என்பது ஒரு தொடர். இம்மூன்று தொடர்களிலும் மா என்னும் ஒரு சொல் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கிறது. முதல் தொடரில் ‘பூத்தது’ என்ற வினையால் அது ‘மரம்’ என்பது பெறப்படும். இரண்டாவது தொடரில் ‘மருது’ என்னும் இனத்தால் ‘மா’ என்பது மரம் என்பது பெறப்படும். மூன்றாவது தொடரில் மருதமாகிய சார்புநிலையால் ‘மா’ என்பது குதிரை என்பது பெறப்படும். இம்மூன்றனுள்ளும் வினையால் வேறுபடுவதே பெரும்பான்மை என்பது அறிக.

    “இனமும் சார்பும் உளவேனும் வேறுபடுத்தற்கண் வினை சிறப்புடைமையின், அதனாற் பெயர் கொடுத்தார், ஆதீண்டு குற்றி என்பதுபோல”

    என்பது சேனாவரையர் தரும் உவம விளக்கம். பலபொருள் ஒருசொல்லின் பொருள் வேறுபாடு ‘வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் தேறத்தோன்றும்’ எனப் பின்னால் தொல்காப்பியம் கூறியிருந்தாலும், அது பற்றிய அறிமுக நூற்பாவில் இரண்டினை ஒழித்து, வினையை மட்டும் முன்னிறுத்தியமைக்கான காரணம் சேனாவரையரின் இந்த உவம விளக்கத்தால் அறியப்படுவதோடு, பழங்காலச் சமுதாய வழக்கங்களில் ஒன்றினையும் அறிந்து கொள்ள முடிகிறது.

    நிலவு கருப்பென்பாரும் உளர்

    பால் வெண்மை என்பதே சரி. பால் வெண்மையானது என்பது தவறு. காரணம் பாலுக்கு வெண்மை இயல்பு. இயல்பான நிறத்தை அப்படியே சொல்லவேண்டுமேயன்றி ஆனது என ஆக்கம் வரவழைத்தல் கூடாது. ‘தனது இயல்பில் திரியாது நின்ற பொருளை அதனது இயல்பு கூறுங்கால் ஆக்கமும் காரணமும் கொடாது இத்தன்மைத்து’ எனச் சுட்ட வேண்டும் என்பது தொல்காப்பிய விதி. அதாவது நீருக்குக் குளிர்ச்சியும் நெருப்புக்கு வெம்மையும் காற்றுக்குத் திரிதலும் நிலத்துக்கு உறுதியும் இயல்பானது. தண்ணீர் குளிர்ச்சி ஆனது என்பது பிழை வழக்கு. அந்தந்தப் பொருளுக்கான மேற்கண்ட தன்மையைக் குறிக்குமிடத்து நீர் தண்ணிது, தீ வெய்யது, காற்று உளரும், நிலம் வலிது எனக் கூறல் வேண்டுமேயன்றி நீர் தண்ணிது ஆயிற்று, தீ வெம்மை ஆயிற்று, காற்று உளர்தல் ஆயிற்று, நிலம் வலிதாயிற்று என ஆக்கச்சொல் வருவித்து உரைத்தல் மரபு வழுவாகும். இம்மரபினை,

    “இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்”

    என்னும் நூற்பாவில் தொல்காப்பியம் சுட்டுகிறது. சிலர் ‘நிலம் வலிதாயிற்று’ என இயற்கைப் பொருளை ஆக்கத்தோடு கூறுவது பற்றிச் சேனாவரையர் சிந்தித்து எழுதுகிறார்.

    முதற்கண் எந்தெந்த இடத்தில் இயற்கைப் பொருளை ஆக்கத்தோடு கூறுவதை அமைத்துக் கொள்ளலாம் என்பதனை விளக்கிக் காட்டுகிறார். இயற்கையான நிலத்தில் கருங்கல், செங்கல் ஆகியவற்றையெல்லாம் இட்டு வன்னிலமாக மாற்றியதொன்றை நிலம் வலிதாயிற்று என்றால் சொல்பவன் நிற்கும் இடம் இயற்கை நிலமன்று. ஆதலின் அது பிழையன்று.

    சேற்று நிலத்தில் நின்ற ஒருவன் பின் இயற்கையான நிலத்தில் நிற்பானாயின் பின்னது முன்னதின் வலிமையுடைத்து என்பதனால் அதுவும் பிழையன்று.

    மேற்கண்ட இரண்டு இடங்களிலும் ‘நிலம் வலிதாயிற்று’ என்பது ஒப்பீட்டுத் தன்மை கொண்டது. ஆனால் இத்தகைய சூழல்கள் ஏதுமின்றி ‘இயற்கை நிலத்தில் நின்று கொண்டே ‘நிலம் வலிதாயிற்று’ என ஒருவன் கூறினால் அது மரபுவழுவாம். இவ்வாறு ஒருவன் கூறுவது ‘நிலவு கரிய நிறம் உடையது’ என்று கூறுவதுபோல் என விளக்கமளிக்கிறார்  சேனாவரையர்.

    “நிலம் வலிதாயிற்று’ என இயற்கைப் பொருள் ஆக்கம் பெற்று வருமால் எனின்…. கல்லும் இட்டிகையும் பெய்து குற்றுச் செய்யப்பட்ட நிலத்தை வலிதாயிற்றெனின் அது செயற்கைப் பொருளேயாம். நீர் நிலமும் சேற்று நிலமும் மிதித்துச் சென்று வன்னிலம் மிதித்தான் ‘நிலம் வலிதாயிற்று’ என்றவழி மெலிதாயது வலிதாய் வேறுபட்டதென ஆக்கம் ‘வேறுபாடு’ குறித்து நிற்றலின் இயற்கைப் பொருள் ஆக்கமொடு வந்ததன்றாம். அல்லது ‘நிலத்திற்கு வன்மை விகாரமென்று’ ஓர்ந்து ‘நிலம் வலிதாயிற்று’ என்னுமாயின் ‘திங்கள் கரிது’ என்பது போலப் பிறழ உணர்ந்தார் வழக்காய் ஆராயப்படாதென்க”

    திங்கள் வெண்மை என்பது உண்மை. வெண்மையைக் கருப்பென்று வழங்குவது  அஞ்ஞானம். மெய்ஞ்ஞானிக்கு விளக்கம் தேவையில்லை. ஞான சூன்யங்களுக்குச் சொன்னால் புரிந்து கொள்ள இயலும். ஆனால் அஞ்ஞானிக்கு அவன் சொல்வதே வேதம். கடுமையான அணுகுமுறையைப் பெரும்பாலும் கைக்கொள்ளாத சேனாவரையர் உலக வழக்குச் சார்ந்த  கடுமையான வெளிப்பாடொன்றை  உவமமாகக் கூறியதன் மூலம் மரபு காப்பதில் தனக்குள்ள உறுதியை வெளிப்படுத்தியுள்ளார் எனக் கருதலாம்.

    நிறைவுரை

    ‘ஆற்றூர் சேனாவரையர்’ என வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்படும் சேனாவரையர் நெல்லை மாவட்டத்தில் தாமிரவருணிக்கு அருகில் உள்ள ஆற்றூரைச் சேர்ந்தவர். படைத்தலைவர்களின் வழித்தோன்றலாக இருந்திருக்கக் கூடும் என நம்பப்படும் இவரது உரையின் பன்முகச் சிறப்புக்களில் மக்கள் வழக்குகளை இலக்கண விளக்கத்திற்காக உவமங்களாக்கியனவே பெருமை எனக் கருதப்படுகிறது. சமுதாய வாழ்வியல் நெறிகளையும் நிகழ்வுகளையும் இலக்கண விளக்கத்தில் எடுத்துக்காட்டியவர் வேறு எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. பெரியபுராணச் சேக்கிழாரை இவரோடு ஒப்பிட இயலும். எதனையும் பரபரக்காது வரவரக் கண்டாய்வதே அறிவுடைமையாம் என்னும் கொள்கையுடையவர் சேனாவரையர். சொல்லதிகாரத்திற்கு இவர் எழுதியிருக்கும் உரையைக் கல்லாதவருக்குப் புலவர் உலகம் ஏற்பளிப்பதில்லை.

    (தொடரும்…)

    Share
  • The Swan Sculpture of Lake Mirror

    The Swan Sculpture of Lake Mirror

    -Niveditha Raman

          Lakeland is one of the cities of Florida and is famous for numerous lakes and museums, which are provided as spectacular tourist attractions for people to visit. Of those lakes, Lake Mirror is most recognized for its various sculptures that portray different themes of art. The beautiful swan sculpture, shown in this article, is a representation of the state of Florida, which is indeed home to thousands of swans. Sculptors generally intend to incorporate certain human aspects within their designs, and the formation of the swan in this region focuses on values of nature that humans need to understand. I believe that people neglect the sculpture’s beauty as details are incorporated. This piece of art symbolizes a source of purity, gracefulness, elegance, and good luck. In addition, the artworks painted on the swan’s front side show the cityscape of downtown Lakeland along with multiple colors used for the wings. Consequently, human purposes are being considered as a “role of art” with the presence of this sculpture.

    I believe that this swan sculpture is located in the category of creativity along with other forms of visual arts, explained clearly in art textbooks. Typically, the creativity factor is inspired by observing natural phenomena or man-made architecture. Within this artwork, the sculptor had been inspired to produce a depiction of a real-life swan to entertain people and convey the accuracy within the shape of the wings, head, and body. One notable element of the sculpture is the upward position of its wings as if taking flight from the ground. The assorted pigmentations utilized to make new designs that are exhibited in specific portions of the sculpture give it a more unique appearance.

    Even though the sculptor of this artistic creation is unknown, it is a fact that the city of Lakeland had been awarded several swan sculptures by the Queen of England in 1957.  After it had been offered to the area as a gift, city officials decided to place one of the sculptures on a platform at Lake Mirror. Since this era, thousands of renovations have occurred to maintain the physical presence of the swan including original styles, new construction, and appealing features. On a day-to-day basis, hundreds of people come to view this masterpiece, demonstrating the audience that is being entertained. Americans from all over the county typically come to this particular location due to the number of modern art themes that are revealed within the sculptures, paintings, and crafts.

    Furthermore, the theme of art that is applicable to the swan sculpture is “The Natural World” because the artwork is definitely depicting an organism that is found in the environment. In my perspective, the sculptor may have deeply observed and interpreted the subject matter of an actual swan to organize lots of sketches in order to build a realistic statue based on specific characteristics. When artists pursue this theme within their creations, they illustrate creatures, landscapes, and plant life to educate people about the importance of the Earth and the necessity of protecting wildlife. Similar to The Oxbow painting, the swan shows that nature could be appreciated by analyzing each component such as the bright sky, lush trees, and lovely river down below. In this circumstance, imagination also plays a key role in the process of sculpting.

     

    Share
  • காப்புரிமைத் தகவலியல் (Patinformatics)

    காப்புரிமைத் தகவலியல் (Patinformatics)

    நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்

    கடந்த முப்பது வருடங்களாக மென்பொருள் தொழில், மிகவும் வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறையாகும். இந்திய தொழில்நுட்பத் துறையில் ஐந்து தகவல் கூறுகள் உள்ளன.

    1. மென்பொருள் தயாரிப்புகள்
    2. தகவல்நுட்பச் சேவைகள்
    3. பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சேவைகள்
    4. தகவல் நுட்பம் இயக்கப்பட்ட சேவைகள் அதாவது வணிகச் செயல்முறை அவுட்சோர்சிங்
    5. வன்பொருள் ஏற்றுமதி வருவாய்

    மென்பொருள் என்பது இயந்திர வழிமுறைகளின் பட்டியலைக் குறிக்கின்றது. மென்பொருள் பொறியியல் என்பது மென்பொருள் அமைப்பு உருவாக்கும் போது நேர்த்தியான, ஒழுக்கமான அணுகுமுறைகள் மற்றும் சட்டவிதிகளை பயன்படுத்துவதாகும்.

    காப்புரிமைத் தகவலியல் என்பது காப்புரிமைத் தகவல் மற்றும் பகுப்பாய்வு தொடர்பான சிக்கல்களுக்குத்  தீர்வை வழங்கவதற்கான தகவல் முறைகளின் பயன்பாடு ஆகும்.  மேலும், இது வளர்ந்து வரும் தரவு அறிவியலின் ஒழுக்கமாகும்.

    இந்தியாவில் பல பல்கலைக்கழகங்களில்  மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் (Master of Computer Application)  முதுகலை பட்டப் படிப்பு  1980களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் நோக்கம், தொழில்நுடபம் மற்றும் மேலாண்மைத் துறைகளின் ஒருங்கிணைந்த கல்வியைப் போதிப்பதாகும்.

    மென்பொருள் என்பது, இரு வகை. ஒன்று லாஜிக்வேர். மற்றொன்று டேட்டாவேர்.

    லாஜிக்வேர் என்பது தர்க்கத்தை அடிப்படையாக வைத்து எழுதும் கூறுகளாகும்.

    டேட்டாவேர் என்பது தரவுகளின் மென்பொருளை அடிப்படையாக வைத்து எழுதும் கூறுகளாகும்.

    காப்புரிமை என்பது புதிய கண்டுபிடிப்புகளுக்கு அல்லது படைப்புகளுக்கு  ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (இந்தியாவில் 20 ஆண்டுகள்) அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு பிரத்தியேக,  ஏகபோக உரிமையாகும்.

    நாட்டின் காப்புரிமைச் சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட படிவங்களில், காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்துக் காப்புரிமையைப் பெறலாம்.

    காப்புரிமைகள் ஒரு சமூக ஒப்பந்தம் என்று பேராசிரியர் ராஜ் ஹிர்வானி கூறுகிறார். (Unit for Research and Development, (URDIP-CSIR), Pune.

    வழங்கப்பட்ட காப்புரிமைகளின் தொழில்நுட்பமானது, பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். உதாரணம் (ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் ,  R, Python).

    வழங்கப்பட்ட காப்புரிமைகளைப் பயன்படுத்தவதற்குக் காப்புரிமைதாரரிடமிருந்து அனுமதி பெற வேண்டும். காப்புரிமைதாரர் கேட்கும் தொகையையும் பயன்படுத்துபவர் கொடுக்க வேண்டும். (உதாரணம் மைக்ரோசாப்ட், அடோப்).

    கண்டுபிடிப்பு தொடர்பான தகவல்கள் பகிரங்கமாக வெளியிடப்பட வேண்டும்.

    காலாவதியான காப்புரிமையை எந்த ஒரு பயன்பாட்டிற்கும் பொதுமக்கள் பயன்படுத்திக்  கொள்ளலாம்.

    கண்டுபிடிப்பாளர் தனது கண்டுபிடிப்பு, தயாரிப்பு மீதான காப்புரிமைகளைப் பெறாவிட்டால் அவரது கண்டுபிடிப்பு நகலெடுக்கப்பட்டு,  வணிகரீதியாகச்  சுரண்டப்படும்.

    Patinformatics (காப்புரிமைத் தகவலியல்) என்ற சொற்றொடர் ஜே டிரிப்பியால் 2002ஆம் ஆண்டு எழுதப்பட்டது.

    காப்புரிமைத் தகவலியல் என்பது அறிவியலின் தொழில்நுட்பத்தின் மூலம் காப்புரிமை ஆவணங்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தகவல்களுக்குள் இருக்கும் தொடர்புகளை அலசி பகுப்பாய்வு செய்யும் அறிவியலாகும்.

    Patinformatics ஐ ஒரு மேக்ரோ-லெவல் அறிவியல் என்றும் கருதலாம்.

    அதாவது அதிக அளவு காப்புரிமைத் தகவல்களை அறிவியலின் தொழில்நுட்பம் மூலம் பகுப்பாய்வு செய்வது.

    காப்புரிமைத் தகவலியல் ஆராய்ச்சி நிர்வாகத்தின் பயன்பாடு மற்றும் மேம்பாட்டை நிர்வாகிப்பதில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது.

    போட்டியாளர்களின் கண்காணிப்பு, தொழில்நுட்ப மதிப்பீடு, புதிய தொழில் மதிப்பீடு, உரிம உத்திக்கான உள்ளீடு, மனித இணைப்புகள், கையகப்படுத்தல்களை மறுசீரமைப்பு செய்யும் மேலாண்மைக் கருவியாகவும் காப்புரிமைத் தகவலியல் திகழ்கின்றது.

    பேராசிரியர் கௌரி கார்கேட் ,  RGIP, IIT Kharagpur கருத்தாக்கத் தகவலியலை மூன்று வகையாகப் பிரிக்கின்றார்.

    1. காப்புரிமைத் தேடல் மற்றும் பகுப்பாய்வு
    2. காப்புரிமை வரைவு மற்றும் வழக்கு
    3. காப்புரிமை வழக்கு

    காப்புரிமைத் தேடல் மற்றும் பகுப்பாய்வு என்பது காப்புரிமை ஆய்வாளர்கள் அதிக எண்ணிக்கையிலான காப்புரிமை ஆவணங்களிலிருந்து தொடர்புடைய காப்புரிமைகளைத் தோண்டி எடுத்து, அதன் செயல்பாட்டின் நோக்கத்தின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்கிறார்கள். காப்புரிமை வரைவு மற்றும் வழக்குக் காப்புரிமை வரைவு மற்றும் வழக்கு விசாரணை என்பது காப்புரிமை வழக்கறிஞர் அல்லது காப்புரிமை முகவர், காப்புரிமை ஆவணத்தை வரைவு செய்வதோடு வழக்கு தொடரப்படுவதையும் கவனித்துக்கொள்வதாகும்.

    எனவே வழக்கு தொடுப்பது வரையறைக்கு உட்பட்ட நேரத்தில், அதாவது குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் இருக்கும்.

    காப்புரிமை வழக்கு

    காப்புரிமை முகவர்கள் மற்றும் வக்கீல்கள், காப்புரிமை வழக்கின் பல்வேறு கட்டங்களில் காப்புரிமை வழக்குகளில் தொடர்புகொள்கிறார்கள் .

    இதில் முதலில் விண்ணப்பம் செய்தது அல்லது காப்புரிமை தாக்கல், பின்னர் முதல் தேர்வு அறிக்கை,  விசாரணை போன்றவற்றுக்குப் பதிலளிப்பது.

    காப்புரிமை வழக்கு என்பது பரந்த  பகுதி. வழக்கறிஞர்கள்,  காப்புரிமை உரிமையாளர்களுக்கு உரிமைகளைப் பெற அல்லது அவர்களின் உரிமைகளைச் செயல்படுத்த உதவுகிறார்கள்.

    காப்புரிமைத் தேடல் மற்றும் பகுப்பாய்வு எவ்வாறு செயல்படுகிறது என்பதை இப்போது நாம் காணலாம். காப்புரிமைத் தேடல் மற்றும் பகுப்பாய்வு என்பது நம்பகத்தன்மை மிகுந்த மிகவும் திறமையான பணியாகும். மிகவும் பொருத்தமான காப்புரிமை ஆவணங்களைத் தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வேலை, வைக்கோல் போரில் ஓர் ஊசியைத் தேடுவது போன்றது என்று பேராசிரியர் கெளரி கார்கேட், RGIP law, IIT Kharagpur கூறுகிறார். இது மிகையாகாது. காப்புரிமைப் பகுப்பாய்வு ஒரே ஒரு காப்புரிமையாகவும் இருக்கலாம் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட காப்புரிமையின் தொகுப்பு 3000 ஆகவும் இருக்கலாம். இது, செயல்பாட்டின் நோக்கத்தைப் பொறுத்து அமையும். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் பார்ப்பது போல நோக்கத்திற்கு ஒரே ஒரு பொருத்தமான காப்புரிமையைத் தேர்ந்து எடுத்து பரிசீலனையில் உள்ள காப்புரிமையைச் செல்லாததாக ஆக்கிவிடலாம். பகுப்பாய்வு வரைபடம், தொழில்நுட்ப வரைபடம், அவுர்கா மேப்பிங் தொழில்நுட்பப் போக்கு ஆகியவற்றின் வடிவத்தில் இருக்கலாம். எந்தவொரு விஷயமும் நீங்கள் பயன்படுத்தும் காப்புரிமைத் தரவுத் தளத்தைப் பொறுத்தது அல்லது நீங்கள் அறிக்கையைக் கைமுறையாக உருவாக்கியதைப் பொறுத்து அமையும்.

    காப்புரிமைத் தேடல் மற்றும் பகுப்பாய்வு உங்களிடம்  சேமித்து வைத்த காப்புரிமை எக்செல் தரவுத் தாளோ அல்லது தரவுகள் எந்த வடிவத்திலோ அதாவது சி.எஸ்.வி. தரவுத்தளங்கள், உங்களிடம் இருக்குமானால்  பகுப்பாய்வுச் செயல்முறையைத் தொடங்கலாம். பகுப்பாய்வை யார்? ஏன்? எவ்வாறு? எங்கே?  எப்பொழுது என்ற கேள்விகளுக்கு விடையைக் காணலாம். காப்புரிமை ஆவணத்தில் கண்டுபிடிப்பாளரின் பெயர்கள், முகவரிகள், மேற்கோள் காட்டும் ஆவணங்களைப் பற்றிய விவரங்களை அறியலாம். காப்புரிமை ஆவணத்தில் யார் உங்களுக்கு உதவுவார்கள். இந்தத் தகவல், மனிதவளப் பார்வையில் பயனுள்ளதாக இருக்கும். இது கூட்டு அல்லது தொழில்நுட்பப் பரிமாற்றச் செயல்பாட்டைத் தீர்மானிக்கப் பயனுள்ளதாக இருக்கும். எப்பொழுது ?

    (குறிப்பிட்ட விஷயம் நிகழும்போது) காப்புரிமை ஆவணத்தில் உள்ள தகவல்கள் கண்டுபிடிப்பு போக்குகள், ஒருங்கிணைப்பு,  வரலாறு போன்றவற்றை அறியப் பயன்படுத்தலாம். ஏதேனும் தகராறு இருந்தால், வெளியீடு தொடர்பான தகவல்களைப் பின்பற்றுவது, தொடர்பான காலவரிசை நடவடிக்கைகள், ஆராய்ச்சி தொடர்பான உருவாக்கத்தை ஆராய்வது. எங்கே, காப்புரிமை பெற்றவரின் இருப்பிடம் மற்றும் (அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற புவியியல் பகுதி) கண்டுபிடிப்பாளரின், இது குறிப்பிட்ட தொழில்நுட்பத்தைப் பொறுத்து புவியியல் அல்லது பிராந்திய விரிவாக்கத்தைப் பற்றிய தகவல்களை அறியலாம். நிறுவனங்கள், மேற்சொன்ன தகவல்களைச் சரியான தருணத்தில் சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஜியோ மேப்பிங் மூலமும் செய்யலாம்.  எப்படி?

    குறிப்பிட்ட சோதனைகளில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு அணுகுமுறைகள் அல்லது வழிகள். அந்த அணுகுமுறையின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்று பார்க்க வேண்டும். சிக்கலைத் தீர்ப்பதற்கான நமது அணுகுமுறையைத் தீர்மானிக்க இந்தத் தகவல் உதவக்கூடும். ஏன்? காப்புரிமைத் தேடலும் பகுப்பாய்வும் தொழில்நுட்பத்திற்கான பல்வேறு பயன்பாடுகளை ஆராய்வதற்கு ஊக்கமளிக்க நமக்கு உதவக்கூடும். ஆராய்ச்சி முடிவுகளை மேம்படுத்த இது நமக்கு உதவக்கூடும். காப்புரிமை ஆவணத்தில் உள்ள விவரங்களையும் புதிய வாய்ப்புகளையும் அறிந்துகொள்வதன் மூலம் நமது சிந்தனை விரிவடையக்கூடும், ஆராய்வதற்கு இது முன்மாதிரியாக இருக்கும். காப்புரிமைத் தேடல் மற்றும் பகுப்பாய்வின் தகவல்கள் பயனுள்ள முடிவை எடுக்க  நமக்கு உதவக்கூடும்.

    மென்பொருள் காப்புரிமைகளின் முன்-கலை-தேடல்  (Shahib Ahmed Shaik, Alok Khode, Nishad Despande, Prior Art Searchcers in software patents –IssuesFaced, Journal of Intellectual Property Rights, Vol.3, November 2018, pp 243-249) முன்-கலை-தேடல் என்பது அறிவுசார் சொத்து நிபுணர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு முக்கியமான செயலாகும். இது சொல்லப்பட்ட கண்டுபிடிப்பில் புதுமையை அறிய, பொதுவாக அறியப்பட்ட இலக்கிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது. காப்புரிமையை செல்லாததாக்குவதற்கும், காப்புரிமையின் நிலையை அறிந்து கொள்வதற்கும் முன்-கலை-தேடல் மேற்கொள்ளப்படுகிறது.   முன் கலைத் தேடல், வேதியியல், மெக்கானிக்கல் போன்ற பல தொழில்நுட்பக் களங்களில் ஒப்பிடப்படுவது போல் மென்பொருள்  களங்களிலும் ஒப்பிடப்படுகிறது. மென்பொருள் களத்தில், காப்புரிமை ஆவணங்களை விட காப்புரிமை இல்லாத ஆவணங்களிலும் முன் கலைத் தேடல் செயல்பட்டு வருகிறது.

    காப்புரிமைக்கான அடிப்படைத் தேவைகளில் புதுமையும் ஒன்றாகும். எனவே காப்புரிமை வழக்கு விசாரணையின் போது தொடர்புடைய முன் கலையைக் கண்டுபிடிப்பது முக்கியமான கட்டமாகும். (Bekkers R.N.Geneva, 2016],(Gaff B.M.,2014). முன்கூட்டிய கலைக்கான தகவலின் முக்கிய ஆதாரம் என்னவென்றால் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இலக்கியங்களுடன் காப்புரிமை அலுவலகங்களிலிருந்து ஆன்லைன் தரவுத்தளங்கள், முந்தைய கலைக்கான தகவல்களின் முக்கிய மூலத்திலிருந்து வெளியிடப்பட்ட ஆவணங்கள் மற்றும் கட்டுரைகள்.

    கலைத் தேடலின் நிலைபொது மதிப்பாய்வின் நோக்கத்திற்காக காப்புரிமையை அடையாளம் காணுதல். புதுமை ஒரு யோசனை / கண்டுபிடிப்பின் காப்புரிமையைப் பாதிக்கக்கூடிய காப்புரிமைகள் மற்றும் காப்புரிமையற்றவர்களை அடையாளம் காணுதல். (காப்புரிமை விண்ணப்பத்தை எழுதுவதற்கு முன்பு நிகழ்த்தப்பட்டது). காப்புரிமை வழங்கப்பட்டால், புதுமையை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.   மீறல் முன்மொழியப்பட்ட தயாரிப்புகள் அல்லது செயல்முறையை உள்ளடக்கும் அமல்படுத்தக்கூடிய காப்புரிமையை அடையாளம் காணுதல். எதிர்ப்பு வழங்கப்பட்ட காப்புரிமை  அல்லது கண்டுபிடிப்பு நிகழ்வுகளில்  புதுமை இல்லை என்று தெரிந்தால் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தல். விடாமுயற்சி அறிவுசார் சொத்துரிமைகளின் பலங்கள், பலவீனம் மற்றும் நோக்கம் ஆகியவற்றை விடாமுயற்சியுடன் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

    மென்பொருளுக்கான முந்தைய கலைத் தேடல்களில் முக்கியமானது காப்புரிமை ஆவணத்திற்குப் பதிலாக, பெரும்பாலும் காப்புரிமை இல்லாத ஆவணங்களில் தேடுவது. மென்பொருள் காப்புரிமைகளின் உள்ளார்ந்த பண்புகள் மற்றும் அவை உள்ளடக்கிய தொழில்நுட்பங்கள், காப்புரிமை நிபுணர்களை முழுமையான தேடல்களை நடத்தக் கட்டுப்படுத்துகின்றன.

    மென்பொருள் காப்புரிமைகள் வெவ்வேறு அதிகார வரம்புகளில் வெவ்வேறு விதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. இது அந்த வகை மென்பொருளில் தெளிவற்ற தன்மைக்கு வழிவகுக்கிறது. மென்பொருளுக்கான முந்தைய கலைத் தேடல்கள், குறுகிய கால அளவு, தேடல்களுக்கு கிடைக்கக்கூடிய ஆதாரங்கள் மற்றும் முதலில் காப்புரிமை தாக்கல் செய்தல் ஆகியவற்றை பொறுத்தது. மேலும் சிறப்புத் தரவுத்தளங்கள் மற்றும் கருவிகள் கிடைக்காதது தேடல்களின் முயற்சியை மேலும் கட்டுப்படுத்துகிறது. எனவே, அதிநவீன மென்பொருள் டொமைன் குறிப்பிட்ட தரவுத் தளங்கள் / டூல்ஸ்கள் மற்றும் / அல்லது மென்பொருள் காப்புரிமை வரைவுக்கான தரம், உருவாகி வரும் வரை மனித தலையீடு மற்றும் நிபுணத்துவத்தின் சார்பின் பங்களிப்பும் முக்கியமானதாகும்.  Patents applications field in Indian Patents offices for the year 1989 to 2014 [IP, Intellectual Property of India, Annual Reports, 2018,2017,2016,2015 O/O CGPDTM]

    Sl. Year No. of  Indian No. of  Foreign Total % of  Indian % of Foreign
    No. Patens field Patents field Patents field Patents filed
    1 1989-1990 1039 2622 3661 28.38022398 71.61977602
    2 1990-1991 1080 2584 3664 29.475983 70.52401747
    3 1991-1992 1293 2259 3552 36.40202703 63.59797297
    4 1992-1993 1228 2239 3467 35.419671 64.58032881
    5 1993-1994 1266 2603 3869 32.721633 67.2783665
    6 1994-1995 1741 3589 5330 32.664165 67.3358349
    7 1995-1996 1606 5430 7036 22.825469 77.17453098
    8 1996-1997 1661 6901 8562 19.399673 80.60032703
    9 1997-1998 1926 8229 10155 18.966027 81.03397341
    10 1998-1999 2247 6707 8954 25.094930 74.905070
    11 1999-2000 2206 2618 4824 45.729685 54.270315
    12 2000-2001 2179 6324 8503 25.626250 74.373750
    13 2001-2002 2371 8221 10592 22.384819 77.615181
    14 2002-2003 2693 8773 11466 23.486831 76.513169
    15 2003-2004 3218 9395 12613 25.513359 74.486641
    16 2004-2005 3630 13836 17466 20.783236 79.216764
    17 2005-2006 4521 19984 24505 18.449296 81.550704
    18 2006-2007 5314 24430 29744 17.865788 82.134212
    19 2007-2008 6040 29178 35218 17.150321 82.849679
    20 2008-2009 6161 30651 36812 16.736390 83.263610
    21 2009-2010 7044 27243 34287 20.544230 79.455770
    22 2010-2011 8312 31088 39400 21.096447 78.903553
    23 2011-2012 8921 34276 43197 20.651897 79.348103
    24 2012-2013 9911 33763 43674 22.693136 77.306864
    25 2013-2014 10941 32010 42951 25.473214 74.526786
    26 2014-2015 12701 30692 42763 29.700910 71.772327
    27 2015-2016 13066 33838 46904 27.856899 72.143101
    28 2016-2017 13219 32225 45444 29.088549 70.911451
    29 2017-2018 15550 32304 47854 32.494671 67.505329
    Total 153085 484012 636467 24.052308 76.046676

    மேலே உள்ள விளக்கப்படம், இந்திய காப்புரிமை அலுவலகங்களில் வெளிநாட்டு விண்ணப்பங்கள்,  இந்தியா காப்புரிமைக்கான தாக்கல் செய்த விண்ணப்பங்களின் சதவிகிதத்தைக் காட்டுகிறது.

    இந்தியக் காப்புரிமை அலுவலகத்தில் 1999-2000ஆம் வருடம் 45 சதவிகித காப்புரிமை விண்ணப்பங்களை விண்ணப்பித்திருந்தது. ஏனைய வருடங்களில் வெளிநாட்டினர் தான் அதிக அளவில் காப்புரிமை கோரி விண்ணப்பித்திருக்கிறார்கள்.

    இந்திய மற்றும் வெளிநாட்டுக் காப்புரிமை விண்ணப்பங்களுக்கு இடையிலான விகிதம் 24.052308: 76.046676.

    1999-2000ஆம் ஆண்டில் Y2k சிக்கல்கள் நிகழ்ந்தன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது ஆண்டிற்கான இலக்கம் இரண்டு தான். உதாரணம் 31.12.99.  இரண்டாயிரமாம் ஆண்டின் தொடக்கத்தில்  தான் ஆண்டிற்கான இலக்கம் நான்காக நடைமுறைக்கு  வந்தது. 01.01.2000.

    ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தின்படி, உலகில் தற்போது 100 மில்லியனுக்கும் அதிகமான காப்புரிமைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் ஒவ்வொரு நாளும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. (Shabib Ahamed Shaik and others, 2018). மற்ற தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும்போது மென்பொருள் காப்புரிமை தாக்கல் செய்வது அதிகமாக உள்ளது.

    பொதுவாக, காப்புரிமை விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே வெளியிடப்படாது. மேலும் 18 மாதங்களுக்குப் பிறகு வெளியிடப்படலாம்.

    அமெரிக்காவில் காப்புரிமை விண்ணப்ப விதிவிலக்கு விதிகள் (WIPO, மே 2018) அமெரிக்கா தகவல் தொழில்நுட்பத்தின் பிறப்பிடமாக இருப்பதால் கணினி மற்றும் மென்பொருள் காப்புரிமைகளுக்கும் முன்னிலையில் உள்ளது.  உலகில் இருந்து பெரும்பாலான நிறுவனங்கள் முதலில் அமெரிக்காவில் உள்ள காப்புரிமை அலுவலகத்தில் தான் மென்பொருளுக்கான காப்புரிமையைத் தாக்கல் செய்கின்றன. அமெரிக்காவின் மொத்தக் காப்புரிமை விண்ணப்பங்களில் 30% க்கும் அதிகமானவை மென்பொருள் காப்புரிமைகளுக்கானவை என்பதைக் காட்டுகிறது. யுஎஸ்பிடிஓ (USPTO) காப்புரிமைத் தரவு மென்பொருள் காப்புரிமைகளுக்கான தரவுகளின் முக்கிய ஆதாரமாக இருப்பதால், நம்பத் தகுந்தவகையில் இருப்பதால் , இணையத்தில் மென்பொருள் காப்புரிமைத் தகவல்களைத் தேடும் போது  USPTO  URL (https://www.uspto.gov/)  இல் தான் தேடுகின்றார்கள்.

    Reference: 

    1) Patinformatics – An Emerging Data Science Discipline,  NIC Webinar, August 2020, Scientist E/Technical Director, National Informatics Centre, Tamil Nadu State Centre , Chennai, Government of India, Ministry of  Electronics and Informatics Technology

    2) Prof. Gouri Gargate, NPTEL, Rajiv Gandhi School of Intellectual Property Law, IIT Karagpur (2020)

    3) Shabib Ahamed Shaiak, Alok Khode, Nishad Despande, Prior Art Searches in software patents – Issues faced, Journal of Intellectual Property Rights, Vol3., November 2018, pp 243-249

    4) URL : http://www.ipindia.gov.in, Annual Reports  of the Controller and General of Patents, Designs, Trade Marks and Geographical for the year 2011-2018, Government of India, Ministry of Commerce and Industry, Department of Industrial Policy and promotion, 2011-2018

    5)  https://www.uspto.gov/

    6) https://patentscope.wipo.int/search/en/search.jsf

    7) https://www.wipo.int/portal/en/index.html

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 17

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 17

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள் – 3

    முன்னுரை

    கவிச்சக்கரவர்த்திகள் என்னும் பெருமைக்குரியவர் மூவராயினும் கம்பனைத் தனித்துச் சுட்டுவது போலப், ‘பாரதி’ என்பார் பலராயினும் சுப்பிரமணியபாரதியையே சுட்டுமாறு போல இலக்கண இலக்கிய உரையாசிரியர் பலராயினும் அச்சொல் ஒருவரையே சுட்டுமாறு அமைந்திருக்கிறது. அந்தச் சிறப்பினைப் பெற்றவர் ஆசிரியர் இளம்பூரணர். தொல்காப்பிய அடவிக்குள் செல்லத் தடம் காட்டிய தண்டமிழ்ச் சான்றோர். கரையில்லாத் தமது தமிழ்ப்புலமையைக் கறையில்லா உரைசெய்து காலத்தால் அழிக்க முடியாத பெரும்புகழ் கொண்டவர். சேனாவரையம், நச்சினார்க்கினியம் மற்றும் பேராசிரியம் ஆகியவை தனித்தன்மை மிக்க உரைகளாகக் கருதப்படினும் அவற்றின் தனித்தன்மைக்கு மூலமாக இருந்தது இளம்பூரணரின் உரையே என்பதைக் கற்றார் அறிவர். ‘இளம்பூரண அடிகள்’ என அடியார்க்கு நல்லாரால் போற்றப்படும் அன்னார் எழுதிய தொல்காப்பியம் முழுமைக்குமான உரையில் ஆங்காங்கே இலக்கண விளக்கத்திற்காக அவர் பயன்படுத்தியிருக்கும் உவமங்களைப் பற்றிய சுருக்க ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.

    குலமகளும் கோபுரமும்

    அனைத்துவகைச் சிறப்புக்களை உடையதாயிருப்பினும் ஒரு நூலுக்குப் பாயிரம் என்பது இன்றியமையா ஒன்று. அது அறிமுகம். தோரணவாயில். முகவுரை, பதிகம், அணிந்துரை, நூன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை என்றெல்லாம் ஆயிரம் திருநாமங்களைக் கொண்டு அது அமையும். பொதுப்பாயிரம் எனவும் சிறப்புப் பாயிரம் எனவும் அது பகுக்கப்படுவதும் உண்டு. தொல்காப்பியத்திற்கும் அந்தப் பாயிரம் உண்டு. அதனை எழுதியவர் பனம்பாரனார் என்னும் சான்றோர். அந்தப் பாயிரம் தொல்காப்பியத்திற்கு அமைந்துள்ள பாங்கினை இளம்பூரணர் உவமம் கூறி விளக்குகிறார். ‘புகழ் புரிந்த இல் இல்லோரக்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடுநடை’ என்னும் குறட்பாவால் ‘கணவனுக்கு மனைவியே அணிந்துரை’ என்பதைக் குறிப்பிடுவார் திருவள்ளுவர். சிலப்பதிகாரக் காப்பியத்தில் தலைமகள் கண்ணகியைக் கோவலனினும் முற்படுத்தி அறிமுகம் செய்ததும் இது பற்றி என்க. இந்தக் கருத்தினை உள்வாங்கிய அல்லது மனத்தில் எண்ணிய இளம்பூரணர்,

    “பாயிரம் என்பது புறவுரை. அது நூற்குப் புறவுரையேல் அதுகேட்டு என்னை பயனெனின், கற்றுவல்ல கணவற்குக் கற்புடையாள்போல  இன்றியமையாச் சிறப்பிற்று”

    என்று எழுதுகிறார். எண்ணிப்பார்க்க இயலாத உவமங்களைக் கவிதைகளில் பிணைத்துக் காட்டியவர் சுரதா. அவருக்கு இளம்பூரணர் வழிகாட்டியாக இருக்கலாம். பாயிரத்தை நோக்கினால் நூலின் தகுதி தெரிந்துவிடும். மனைவியின் பெருமை நோக்கினால் கணவனின் பெருமை புலப்பட்டுவிடும் என்பது கருத்து. இங்கே ஒரு நுட்பத்தை இளம்பூரணர் பதிவு செய்கிறார்.  மனைவியில்லையேல் கணவன் இல்லையென்பதை ‘இன்றியமையாச் சிறப்பிற்று’ என்னும் தொடரால் புலப்படுத்துகிறார்.

    கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

    அக்காலத்தில் நகரங்கள் ஆலயங்களுக்குள் வடிவமைக்கப்பட்டன. மதுரை, திருவானைக்காவல், திருவரங்கம் முதலிய நகரங்கள் ஆலயத்திற்குள் அடக்கம். விமானம் என்பது கருவறைக்கு மேல் நிற்பது. கோபுரம் என்பது கோயிலுக்கு நுழைவாயிலாக அமைவது. நகரம் கோயிலுக்குள் அமைந்ததால் கோயிலுக்குக் கோபுரம் என்பதும் நகரத்திற்கு நுழைவாயிலாக அமைந்தது. இதனைச் சிந்திக்கும் இளம்பூரணர், ஒரு நூலுக்கும் அதன் பாயிரத்திற்குமான தொடர்பைத்,

    “திருவமைந்த மாநகரத்திற்கு உருவமைந்த வாயில் மாடம் போல அலங்காரமாதற் சிறப்பிற்றாயும் வருதலான்”

    என்று எழுதுகிறார். மனைவி இன்றிக் கணவன் அமையமாட்டான் என்பதை முன்னுவமத்தால் பெறவைத்த இளம்பூரணர், இந்த உவமத்தால் அத்தகைய அறிவுடைய மனைவி அழகுபொலி நங்கையாகவும் இருக்க வேண்டும் என்பதை ‘அலங்காரமாதற் சிறப்பு’ என்னும் தொடரால் பெறவைக்கிறார்.

    இருட்டறையில் கருப்புப் பூனையைத் தேடும் குருடன்

    ‘பார்த்து நடந்தால் பாதை தெரியும்’ என்பார் கண்ணதாசன். பார்த்து நடப்பதற்குக் கைகாட்டி இன்றியமையாதது. அந்த கைகாட்டித்தான் பாயிரம். இப்பாயிரம் அமையாத அல்லது படிக்காத நிலையில் நேரடியாக நூலுக்குள் நுழைந்தால் என்ன ஆகும்? என்பது பற்றி அடிகள் சிந்திக்கிறார். அதற்கு ஓர் உவமத்தைப் பயன்படுத்துகிறார்.

    “பாயிரம் கேளாதே நூல் கேட்குமேயெனின் குறிச்சி புக்க மான்போல மாணாக்கன் இடர்ப்படுமாகலானும்”

    என்று எழுதுகிறார். உள்ளடக்கத்தின் அறிமுகம் பாயிரம். தடங்காட்டி  வழிநடத்தும் பொறுப்பு அதற்குண்டு. அப்பாயிரம் இன்றேல் உள்ளடக்கத்தை அறியா மாணவன் தடமறியாக் காட்டுக்குள் சென்ற மானாக இடர்ப்படுவான் என்னும் உவமத்தை இளம்பூரணர் எடுத்துக்காட்டுகிறார்.

    நாலுழக்கு கொண்டதே நாழி

    ‘நாழி’ என்றால் ‘படி’ என்பது பலருக்கும் தெரியும். ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ என்பது சங்க இலக்கியம். ‘ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி’ என்பது மூதுரை. ஆனால் ‘நாழி’ என்னும் அளவு எப்படி வந்தது என்பது பெரும்பாலோருக்குத் தெரியாது. நுட்பமான இந்த அளவைக்கு மூலம் கிடையாது என்பதுதான் கருத்து. இதனை இளம்பூரணர் தக்க இடத்தில் உவமமாக்குகிறார். எழுத்துக்களை உச்சரிப்பதற்குரிய கால அளவுக்கு மாத்திரை என்று பெயர். அம்மாத்திரை அளவை எப்படி நிர்ணயிப்பது என்று,

    “கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை
    நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே”

    என்ற நூற்பாவில் தொல்காப்பியம் சிந்தித்திருக்கிறது. இந்த நூற்பாவில் கண்ணிமையின் அசைவும், கைந்நொடியின் ஒலியளவும் ஒரு மாத்திரைக்கான கால அளவு என்பதை உணர்த்தியிருக்கிறார். இளம்பூரணருக்கு என்ன ஐயம் வந்தது? இதனை ஒரு மாத்திரை என்று கொள்வது எப்படி? என்பதுதான். அதற்கு அவர் எழுதுகிறார்,

    “நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறு என்றதனான், நாலுழக்கு கொண்டது நாழி என்றாற்போல அவ்வளவைக்கு அளவை பெறாமை அறிக”

    அடிகள் உவமத்தால், நாழி என்பது எல்லாருக்கும் தெரியும். அது நாலுழக்கு கொண்டது என்பது பலருக்கும் தெரியாது. நுண்ணறிவு கொண்டார்க்கே அது புலனாம். அதுபோலக் கண்ணிமையும் நொடியும் மாத்திரை என்பது நுண்ணுணர்வுடையோர்க்கே புலனாம் என்று உவமம் கொண்டு விளக்குகிறார்.

    சந்தனக்கோல் குறுகினும் பிரப்பங்கோல் ஆகாது

    முதலெழுத்து, சார்பெழுத்து என்னும் பகுப்பில் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் மூன்றும் இடம்பெறுவது தொல்காப்பிய வழக்கு.

    “குற்றியலிகரம் குற்றியலுகரம்
    ஆய்தம் என்ற
    முப்பாற்புள்ளியும் எழுத்தோரன்ன”

    என்பது தொல்காப்பியம். முதல் எழுத்துக்களை முன்னர்ச் சுட்டி சார்பெழுத்துக்களை இந்த நூற்பாவில் சுட்டுகிறார் தொல்காப்பியர். முதலெழுத்தும் சார்பெழுத்தும் தனித்தனியாக விதந்தோதப்படுதலின் பின்னவை எழுத்தாகுமோ என்னும் ஐயத்தைக் களைய வேண்டிய கடப்பாடு உரையாசிரியருக்கு வருகிறது. இளம்பூரணர் இந்த ஐயத்தை ஓர் உவமத்தால் களைகிறார்.

    “சந்தனக்கோல் குறுகினவிடத்துப் பிரப்பங்கோல் ஆகாது அதுபோல இகர உகரங்கள் குறுகினவிடத்தும் அவை உயிர் ஆகற்பாலன”

    என்று எழுதிக் காட்டுகிறார். காட்டி, சார்ந்துவரல் மரபின் மூன்றெழுத்துக்களைத் தனியாக ஓதியது என்னையோவெனின் அவை பொருள் வேற்றுமையும் புணர்ச்சி வேற்றுமையும் கருதி வேறொரு தனியெழுத்தாகக் கூறினார் என்றும் காரணம் கூறுகிறார்.

    உயிர்மெய்யில் முன்னிற்பது எது? உயிரா? மெய்யா?

    அங்காந்த வாயினின்றும் வரும் ஆதியொலி அகரமெனின், உயிர்மெய்யை உச்சரிப்பது எவ்வாறு? அவ்வாறு உச்சரிக்குங்கால் முதலில் வருவது உயிரா மெய்யா? என்னும் அறிவுப்பூர்வமான ஐயம் வருவது இயல்பே. எழுத்துக்களின் தோற்றங்களை நிரலாகக் கூறிவரும் தொல்காப்பியம்,

    “மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே”

    என்னும் நூற்பாவில் உயிர்மெய்யின் தோற்றத்தைப் பற்றி ஆராய்கிறது. முன்னர்க் கூறியவண்ணம் உயிர்மெய்யில் முதலில் தோன்றும் ஒலி உயிரா மெய்யா என்னும் ஐயத்தைத் தொல்காப்பியம் இந்த நூற்பாவால் களைகிறது. ‘உயிர்மெய்யுள் உயிரும் மெய்யும் நிற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று எனப் பதசாரம் எழுதிய இளம்பூரணர்,

    “மெய்யும் உயிரும் முன்னும் பின்னும் பெற நிற்கும் என்றமையான் அக்கூட்டம் பாலும் நீரும் போல  உடன்கலந்ததன்றி விரல் நுனிகள்  தலைப்பெய்தாற்போல வேறு நின்று கலந்தனவல்ல என்பது பெறுதும்”

    என்னும் இரண்டு உவமங்களால் விளக்குகிறார். இப்படி இருக்கிறது என்பதற்கோர் உவமமும் இவ்வாறு நிற்பதாகக் கருதிவிடக்கூடாது என்பதற்கு மற்றொரு உவமத்தையும் பதிவு செய்து உயிர்மெய்யுள் எது முன்னது என்று தெரியாத வண்ணம் ஒலி வெளிப்படும் என்னும் நுட்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    கலத்தலும் மயங்குதலும்

    ‘மயக்கமா? கலக்கமா?’ எனத் தொடங்கும் கண்ணதாசன் எழுதிய திரையிசைப் பாடல் பெருவழக்கு. ‘கலங்கி நிற்றல்’ என்பது வேறு. ‘கலந்து நிற்றல்’ என்பது வேறு. கண்ணதாசன் இப்படி எழுதுவதற்கு முன்னால் தொல்காப்பியர் கலத்தலா? மயங்குதலா? என்பது பற்றிச் சிந்தித்திருக்கிறார். தமிழில் சில சொற்கள் ஒரே பொருளைத் தருவதாகத் தோன்றினாலும் அவற்றிடையே நுட்பமான வேற்றுமை நிலவுவதை உரையாசியர்களின் துணைகொண்டு அறிந்து கொள்ள முடிகிறது. சான்றாகக் கலத்தல், மயங்குதல் என்பன ஒரே பொருள்  தருவது போலத் தோன்றும் இரு சொற்கள். இவ்விரண்டு சொற்களையும் பிணைத்து,

    “நிலம்தீ நீர்வளி விசும்பொடு ஐந்தும்
    கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”

    என்பது தொல்காப்பிய மரபியலில் காணப்படும் நூற்பா பகுதியாகும். ‘கலந்த மயக்கம்’ என்னும் தொடரில் ஒரே பொருளைத் தரும் இரண்டு சொற்களை  நோக்கிய இளம்பூரணர் அவற்றுக்கிடையே நிலவும் பொருள் வேறுபாட்டை நேரடியாக விளக்குவதைவிட உவமையால் விளக்குவதே ஏற்றது எனக் கருதியவராய்க்,

    “கலத்தலாவது முத்தும் பவளமும் நீலமும் மாணிக்கமும் விரவினாற் போறல். மயக்கமாவது பொன்னும் வெள்ளியும் செப்பும் உருக்கி ஒன்றாதல் போறல். ‘உலகம்’ என்றது உலகினையும் உலகினுட் பொருளையும். ‘உலகம்’ என்றது முத்தும் மணியும் கலந்தாற்போல நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என விரவி நிற்கும். ‘உலகினுட் பொருள்’ பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றானாற்போல வேற்றுமைப்படாது நிற்கும். அவ்விரண்டையும் உலகம் உடைத்தாதலின் ‘கலந்த மயக்கம்’ என்றார்”

    என விளக்கியிருப்பதை அறியமுடிகிறது. இவ்வுவமைகளால் தன்னிலை மாறாமல் இணைவது ‘கலத்தல்’ எனவும், தன்னிலை இழந்து இணைவது ‘மயங்குதல்’ எனவும் அவற்றின் பொருள் விளக்கமாவதைத் தெளியலாம்.

    நிறைவுரை

    ‘இலக்கண விளக்கத்திற்கும் உவமப்பயன்பாடு ஏற்றதே’ என்னும் கொள்கையில் உறுதியாயிருக்கும் இளம்பூரணர் உரையில், பாலும் நீரும் என்னும் உலகியல், ‘எல்லா விரலும் ஒன்றல்ல’ என்னும் வழக்கியல், தோற்றம் இயல்பைக் குறைக்காது என்பது பட நின்ற ‘சந்தனக்கோல் குறுகினும் பிரப்பங்கோல் ஆகாது’ என்னும் தத்துவம் முதலியன உவமங்களாக வந்துள்ளன. கோபுரமும் குறிச்சியும் உவமமாக வந்துள்ளன. ‘கலத்தல், மயங்குதல்’ என்னும் சொற்பொருள் விளக்கத்திற்கும் உவமங்கள் பயன்பட்டுள்ளன. எடுத்துக்காட்டப்படும் இவை மட்டுமே இளம்பூரணரின் உவமங்கள் அல்ல இன்னும் இருக்கின்றன என ஆற்றுப்படுத்துகிறது இக்கட்டுரை.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 16

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 16

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள்- 2

    முன்னுரை

    இலக்கியத்தின் அனைத்து வடிவங்களிலும் பொருள் புலப்பாட்டுக் கருவியாக விளங்கும் உவமம், பல நேர்வுகளில் இலக்கண விளக்கத்திற்கும் பயன்பட்டுள்ளது. இலக்கியத்தின் அழகியல் கூறாக விளங்கும் உவமம், இலக்கணத்துள்ளும் இலக்கண உரைகளுக்குள்ளும் இலக்கணத் தெளிவுக்கான கருவியாக அமைந்திருக்கிறது. உவமத்தின் தலையாய பணி, பொருள் புலப்பாடே. அப்புலப்பாட்டுப்பணி இலக்கியத்திலும் இலக்கணத்திலும் முறையே அழகியல் உணர்வு, அறிவுத் தெளிவு என்னும் இருவேறு நோக்கங்களை நிறைவு செய்வதாக அமைந்திருக்கிறது. படைப்பின் பெருமையை அளந்துப் புலப்படுத்தும் கருவி உவமமே. இத்தகைய சிறப்பினைக் கொண்ட உவமம் மேற்கூறிய வண்ணம் இலக்கியத்தின் அழகியல் பகுதியை நிறைவு செய்வதோடு அதன் நிலைப்பேற்றுக்கும் பெருங்காரணமாக அமைகிறது. ஆனால் இலக்கணத்துள் அதன் பணி வேறாக அமைகிறது. இலக்கண நுட்பங்களை விளக்கிக் காட்டுவதற்கும் அளவையியல் அடிப்படையில் இலக்கண உரை அமைவதற்கும் பெருந்துணையாக அமைந்திருக்கின்றது. இந்த அடிப்படையில் நன்னூல் உரையாசிரியர் சங்கரநமச்சிவாயரின் உவமங்கள் இலக்கண விளக்கத்தின் மேல் செலுத்தும் ஆளுமையை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

    உறவுகளும் உவமமாகலாம்.

    நூலின் வகைகளைக் கூறவந்த பவணந்தியார் ‘மும்மையின் ஒன்றாய்’ என அடையாளப்படுத்துகிறார். முதல் நூல், வழிநூல், சார்பு நூல் என்பன நூலின் மூன்று வகையாகும். அவற்றுள் ஒன்றின் திறன் மற்றொன்றில் காண்பது அரிது. ஒரு நூல் தனக்கு வழிநூலை நோக்கி முதனூலாகவும் முதனூலை நோக்க வழி நூலாகவும் அயல்நூலை நோக்க சார்பு நூலாகவும் அமையும். தொல்காப்பியத்திற்கு நன்னூல் வழிநூல். தொல்காப்பியத்திற்கு வழிநூலான நன்னூல் அகத்தியத்தை நோக்கச் சார்புநூலாம் என்க. எனவே இவை ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை என்பது பெறப்படும். “முதல் நூல் வழிநூல் என்னும் இருதிறத்து நூல்களுக்கும் பொருள்முடிபு ஒருபுடைத்து ஒத்து, ஒழிந்தன எல்லாம் ஒவ்வாமையை உடையது சார்பு நூலாகும்” என்னும் சங்கர நமச்சிவாயரின் விளக்கம் இதனை உறுதி செய்யும். சார்பு நூல் என்பது தொல்காப்பியக் கொள்கைக்கு மாறுபட்டதாயினும் நன்னூலார் காட்டும் உவமத்திற்காக ஈண்டுச் சுட்டப்படுகிறது.

    “முதல்நூற்கு, வழிநூலும் சார்புநூலும் ஒருவற்கு மைந்தனும் மருமானும் போலும் என்க.”

    என்று எழுதுகிறார். தந்தைக்கும் மகனுக்கும் தொடர்பு உண்டு. ஆனால் தந்தைக்கும் மருமகனுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை. இருப்பினும் அவனும் ஓர் உறவே. இலக்கண நூற்பாவிற்கு விளக்கம் கூறும்போது உவமத்தைக் கையாண்டு விளக்கம் கூறுவதும் அவ்வுவமங்களும் மானுட உறவுகளைப் பெருமைப்படுத்துவதுபோல் அமைந்திருப்பதும் தமிழியலின் உவமக்கோட்பாட்டைத் தெளிவாக வரையறுத்துக் காட்டுகின்றன எனலாம். ‘தந்தையை நோக்க மகன்’ என்னும் உவமத்தால் முதுனூலின் சாரம் வழிநூலில் அமைந்திருப்பது தவிர்க்க இயலாதது என்பது பெறப்படும்.

    சிந்தை கவரும் ‘சினை உவமங்கள்’

    வழிநூலின் வகைகளைக் கூறும் நன்னூலார் ‘தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்ப்பு எனத்தகு நூல்யாப்பு ஈரிரண்டென்ப” (51) என்னும் நு{ற்பாவில் நான்காகப் பகுத்துரைக்கின்றார். ‘தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழியெர்த்து அதர்ப்பட யாத்தலோடு அனைமரபினவே’ என்று தொல்காப்பியம் கூறும். நன்னூல் சிறப்புப்பாயிரத்துள் இது பற்றி ஆராயும் சங்கர நமச்சிவாயர், ‘தொகைவிரி யாப்பு’ என ஒன்றிருக்க, தொகை, வகை, விரி எனப் பிரித்தோதுவது ஏன்? என்னும் வினாவை எழுப்பிக்கொண்டு அதற்கு விடை காண்கிறார்.

    “வழியின் வகையாகிய யாப்பினுள் ‘தொகைவிரி’ என ஒன்று போந்ததன்றித் தொகை, வகை, விரி எனப் போந்தது இல்லையாலோ எனின் நடுநின்ற வகை பின் நின்ற விரியை நோக்கின் தொகையாகவும் முன் நின்ற தொகையை நோக்கின் விரியாகவும் அடங்குதலின் இது தொகைவிரி யாப்பு என்றதன்பாற்படும் என்க. எனவே தொகை, விரி என இரண்டாய் வரினும் மரத்தினது பராரையினின்றும் கவடு, கோடு, கொம்பு, வளார் பலவாய ஒன்றோடொன்று தொடர்பட்டு எழுந்து நிற்றல்போல் தொகையினின்றும் ஒன்றோடு ஒன்று தொடர்படப் பகுக்கப்பட்டுப் பலவாய் வரினும் தொகைவிரி யாப்பேயாம் என்க” (சிறப்புப்பாயிரம்)

    என்று விளக்கமளிக்கிறார். இந்த விளக்கத்திற்கு மரத்தின் பராரை முதலிய பகுதிகள் உவமமாக்கப்பட்டுப் பொருள் புலப்பாட்டுக்கு உதவுவதைக் காணலாம்.

    வினைச்சொல்லில் பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்னும் ஆறுறுப்புக்களும் அடங்கும். எனினும் பகுதி, விகுதி என்பவையே கண்ணுக்குப் புலப்படுமாறு அமையும். ஏனைய நுண்ணிய பார்வைக்கும் புலமைக்கும் உரியவை.  பவணந்தியார் இந்தப் பார்வையை,

    “இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலிற்
    பகுதி விகுதி பகுத்திடை நின்றதை”

    எனக் கூறுவதன் மூலம் அவ்விரண்டையுமே விதந்தோதுகிறார். தொடர்ந்து இடைநிலையைக் கூறும் அவர் ஏனைய உறுப்புக்களைக் கூறாது விடுகிறார். இதற்கான காரணத்தை ஆராய்ந்த சங்கர நமச்சிவாயர், இன்றியமையாதவற்றை முதலில் கூறி மற்றவற்றைப் பின்னர் கூறுவதாகத் தாம் எண்ணியதை ஓர் உவமத்தின் வழி விளக்குகிறார்.

    “மா பலா முதலியன பராரை முதலிய சினையோடு நின்றன எனக் கண்டது கூறுவார் போல”ப்  (146)  பகுபதம் பகுதி முதலிய உறுப்போடு நின்றது எனக் கண்டது கூறி, அப்பதம் தந்த தோலா நாவின் மேலோர் ஆணையின் நிற்றலின் ‘கண்டதற்கு’ என்றும் கூறினார்”

    என உவம விளக்கம் தருவதைக் காண முடிகிறது. கண்ணில் படுவதை முன்னர்க்கூறிப் பிறவற்றைப் பின்னர்க் கூறுவதற்கு உரையாசிரியர் மரங்களையும் அவற்றின் சினைப்பகுதியையும் உவமமாக்கியிருப்பது நோக்கத்தக்கது.

    கமுகந்தோட்டம் என்றாற்போல

    நன்னூலில் மூன்றாவது இயலாக அமைந்திருப்பது உயிரீற்றுப் புணரியல். பல்வகைப் புணர்ச்சிகளும் இவ்வியலுள் ஆராயப்பட்டுள்ளன. பல்வகைப் புணர்ச்சிகளும் ஆராயப்பட்டிருக்கும் ஓர் இயலுக்குக் குறிப்பிட்டதோர் புணர்ச்சியை மட்டும் பெயராக்கியதற்கு ஓர் உவமம் கூறி விளக்குகிறார் சங்கர நமச்சிவாயர். கமுகு என்றால் பாக்கு. கமுகந்தோட்டம் என்றால் பாக்குத் தோப்பு என்பதாகும். அதனுள் தென்னை, பலா, தேக்கு, மா எனப் பல்வகை மரங்களும் வளர்ந்து நிற்கும். எனினும் பெரும்பான்மை பற்றி அதற்குக் ‘கமுகந்தோட்டம்’ என்பது வழக்கு. அதுபோலப் பல்வகைப் புணர்ச்சிகளும் ஆராயப்படினும் பெரும்பான்மை உயிரீறு பற்றிய புணர்ச்சியே ஆதலின் இவ்வியலுக்கு இப்பெயர் அமைந்ததாக உவம விளக்கம் செய்கிறார் உரையாசிரியர்.

    முடவன் கோலூன்றி வந்தாற்போல

    ஙகர மெய் (ங்) அகர உயிர் ஒன்றுடன் கூடியே சொல்லுக்கு முதலில் வரும் அவ்வாறு சொல்லுக்கு முதலாகும் போதும், அ, இ, உ என்னும் சுட்டுக்களையும், எ, யா என்னும் வினாக்களையும் முதலாகக் கொண்டு வரும். தனித்து வராது. இதனைச்,

    “சுட்டு யா எகர வினாவழி அவ்வை
    ஒட்டி ஙவ்வும் முதலா கும்மே” (106)

    என்னும் நூற்பாவில் இலக்கணம் கூறுகிறார். இதற்கு உரைவிளக்கம் கண்ட சங்கர நமச்சிவாயர்,

    “ஙனம் என்பது இடத்தினையும் தன்மையினையும் உணர்த்தும் பலபொருள் ஒரு சொல்லாய் வரினும் தனித்து வரும் தன்மையதன்றி முடவன் கோலூன்றி வந்தாற்போலச் சுட்டு, வினாவாகிய இடைச்சொற்களை முன்னிட்டு வருதலான்”

    என்றெழுதுகிறார். இலக்கணத்திற்கு உரையெழுதும் உரையாசிரியர் பார்வையில் சுட்டும் வினாவும் முடவனாகிய ஙகரத்திற்கு உதவும் கோலாகத் தோன்றியிருக்கின்றன என்பதே இவ்வுவமப்பார்வையின் சிறப்பாகலாம்.

    நச்சினார்க்கினியரை வழிமொழியும் நமச்சிவாயர்

    உயிரும் மெய்யும் கலந்து வரும் எழுத்து உயிர்மெய் எழுத்து. ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ என்பதால் மெய்க்கும் மூலம் அகரம் என்பது பெறப்படும். அதாவது மெய்களின் இயக்கமும் அகரமின்றி அமையாது. இறைவன் எல்லா உயிர்களோடும் கலந்து நிற்பதை உவமமாக்கி நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் (தொல். மொழிமரபு. 46) உரைவிளக்க உச்சம். எனினும் ‘உயிர்மெய்’ என்றவிடத்து முதலில் பிறக்கும் ஒலி மெய்யா உயிரா என்பது பற்றி ஆழமான சிந்தனை உரையாசியர்களிடம் இருந்து வந்திருக்கிறது. ‘நெடுநல்வாடை’ இலக்கியத் தலைப்பில் நச்சினார்க்கினியர் காட்டிய பேரார்வம் ‘உயிர்மெய்’ என்னும் சொல்லாட்சி பற்றிய ஆய்விலும் நிகழ்ந்திருக்கிறது என்பதை,

    “மெய் முன்னர் நிற்ப உயிர் பின்வந்து ஏறுமென்றார். அம்முறையே  ஓசையும் பிறக்கும் என்றார். இதனானே மாத்திரை கொள்ளுங்கால் ‘உப்பும் நீரும் போல்’ ஒன்றேயாய் நிற்றலும், வேறுபடுத்திக் காணுங்கால் விரலும் விரலும் சேர நின்றாற்போல’ வேறாய் நிற்றலும் பெற்றாம். நீர் உப்பின் குணமே ஆயவாறுபோல உயிரும் மெய்யின் குணமேயாய் வன்மை மென்மை இடைமை எய்தி நிற்றல் கொள்க” (தொல். நூ.ம.18 உரை)

    என்னும் அவருடைய விளக்கத்தால் அறிய முடியும். இந்தக் கருத்தினை உள்வாங்கிய நமச்சிவாயர் ‘நின்ற நெறியே உயிர்மெய் முதல் ஈறே’ (நன்.109) என்னும் நூற்பாவின் விளக்கத்தில்,

    “எண்ணதிகாரத்துள் உயிர்மெய்யை ஓர் எழுத்தாக (நன்.60)  எண்ணினார் ஈண்டு இரண்டாக வைத்து இலக்கணம் கூறுவது என்னை எனின் “அப்பொடு பெய்த உப்பே போல’ உயிரொடு புணர்த்திய மெய் தன் அளவு தோன்றாது ஒன்றாய் நிற்றலின் ஒன்றுமாய், ஒற்று முன்னும் உயிர் பின்னுமாய் ஒலித்து நின்ற நெறியான் இரண்டுமாய் நிற்றலின் என்று உணர்க’

    என்று எழுதுகிறார். இதனால் இலக்கணக் கருத்துக்களை வழிமொழியும் வழி நூலில் அந்நூலின் உரையாசிரியர் முதனூலின் உரைப்பகுதியையும் வழிமொழிவதை அறிய முடிகிறது.

    நிறைவுரை

    ஒரு நூலுக்குப் பலர் உரைகாணும் உரை மரபு தமிழுக்குப் புதியதன்று, முதனூல் நூற்பாக்களை ஆசிரிய வசனங்களாக வழிநூலாசிரியர் பயன்படுத்தியிருப்பது போலவே முதனூல் உரையாசிரியர்களின் உவமங்களையும் வழிநூல் உரையாசிரியர்கள் வழிமொழிந்திருக்கிறார்கள் அல்லது மறுத்திருக்கிறார்கள். மானுட உறவுகளும், மாற்றுத் திறனாளிகளும் இடம்பெறும் இந்த உரைகளில் இயற்கையைப் பற்றிய விரிந்த பார்வையும் அறிவும் தொட்ட இடமெல்லாம் தட்டுப்படுகின்றன. சமுதாய விஞ்ஞானிகளாகவும் இயற்கையின் ரசிகர்களாகவும் அவர்கள் விளங்கியிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 15

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 15

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள்- 1

    முன்னுரை

    ‘இலக்கியத்தில் உவமம்’ என்பது அனைவரும் அறிந்த உண்மை. இலக்கிய உரைகளில் உவமம் என்பதும் அத்தகையதே. இலக்கண விளக்கத்தில் உவமம் என்பது சிலரால் அறியப்பட்ட உண்மை. இலக்கண உரைகளில் உவமம் என்பது அச்சிலருள்ளும் சிலரால் அறியப்பட்ட உண்மையாகும். கணிதத்தையொத்த இலக்கணத்தில் உவமப் பயன்பாடு பற்றிய சிந்தனையோ எதிர்பார்ப்போ அவ்வளவாக எழாது. அதற்கான சூழல் அங்கே இல்லை. ஆனால் தமிழிலக்கண உரைகள் இந்தக் கருத்தியலைப் புறந்தள்ளியிருக்கிறது. கல்வி அறிவு நோக்கியது. அதனால் அறிவு தெளிவு நோக்கியது என்பது பெறப்படும். ‘தெளிவு பெற்ற மதியினாய்’ என்பது பாரதி கருத்து. இந்த அடிப்படையில் யாப்பருங்கலக்காரிகை என்னும் செய்யுளிலக்கண நூலுக்குக் குணசாகரர் எழுதிய உரையில் வரும் ஓர் உவமம் பற்றிய ஆய்வாய் இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

    வெண்பாக்களுள் நேரிசை வெண்பா

    பாக்கள் தனி. அவற்றின் கிளைகளான வகைகள் தனி. ஒவ்வொரு பாவாற்றுக்கான கால்வாய்கள் தனி. அவை இனம் என அழைக்கப்படும். சான்றாக வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பது நால்வகைப் பாக்களாகும். மருட்பா பொருட்பற்றிய பிரிவாதலின் யாப்புப் பற்றிய பாகுபாடுடைய முன்னவற்றோடு இயையாது. இணையாது. நான்கென்றலே மரபு. வெண்பாவில் குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா என ஆறு வகைகள் உண்டு. ஆனால் இந்த ஆறுவகைகளும் புறக்கட்டுமானத்தில் கவிஞர் ஏற்படுத்திக் கொள்ளும் சில மாற்றங்களால் உண்டாகும் பெயர் மாற்றங்களே தவிர குறள் வெண்பாவைப்போலத் தனித்தன்மை உடையன அல்ல. அதாவது வெண்பாவின் வகைகள் ஆறாகக் கருதப்படினும் அவ்வளவும் குறள் வெண்பாவின் நீட்டியாகவே கருதப்படும் அளவிற்கே அமைந்துள்ளது. குறள் வெண்பாவின் அடுத்த நிலை நேரிசை வெண்பா. அது பற்றிய விளக்கத்தை அடுத்த பத்தி ஆராய்கிறது.

    இரு குறள் வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பா

    ‘ஈரடி வெண்பா குறள்’ என்பதற்குக் குறள் வெண்பா ஈரடியால் அமையும் என்பது பொருள். அத்தகைய குறள் வெண்பாக்கள் சில மாற்றங்களைப் பெற்று இணைய நான்கடியாய் உருமாற்றம் அடைந்தால் அது நேரிசை வெண்பா எனப்படும். தனித்தன்மையுடைய இரண்டு குறள்வெண்பாக்களே செயற்கையான நேரிசை வெண்பாவை உருவாக்கும் காரணிகளாக அமைகின்றன. காரிகை இலக்கணம் அப்படித்தான் சொல்கிறது. அது மட்டுமன்று வெண்பாக்களை அது அடிகளால்தான் அடையாளப்படுத்துகிறது. வெண்பாக்களினிடையில் படைப்பாளரால் கொண்டுவரப்படும் புறமாற்றங்களும் பெயர் வேற்றுமைக்குக் காரணமாகின்றன. இரண்டடியால் அமைவது குறள் வெண்பா. நான்கடியால் அமைவது நேரிசை வெண்பா. மூன்றடியால் அமைவது சிந்தியல் வெண்பா. பல அடிகளால் அமைவது பஃறொடை வெண்பா. மூன்றடியால் அமைகிற சிந்தியல் வெண்பா தனிச்சொல் பெற்றுவந்தால் அது நேரிசைச் சிந்தியல் வெண்பா. தனிச்சொல்லின்றி மூன்றடியால் வந்தால் அது இன்னிசைச் சிந்தியல் வெண்பா.  எனவே வெண்பாவின வகைகள் என்பன பொருட்பாகுபாட்டைச் சுட்டுவதன்று. வடிவ மாற்றத்தை மட்டுமே அதுவும் பெரும்பாலும் அடிகளால் உண்டாகும் மாற்றத்தையே சுட்டும் என்பது பெறப்படும்.

    பொற்கொல்லரும் பொடியும்

    ‘பொற்றுகள், மண்துகள், பற்பொடி, மிளகாய்த்தூள் என்னும் வழக்குகளைக் கேட்டிருக்கலாம். இவற்றுள் ‘பொற்றுகள்’ என்பது பொன்னின் தூளைப் பொதுவாகக் குறித்தாலும் அணிசெய்யும் பொற்கொல்லரின் இணைப்புத் தொழிலுக்குப் பயன்படும் ஓர் கருவிப் பொருளாகும். ஒரே தரமுடைய இரண்டு பொற்கம்பிகளை இணைக்க வேண்டுமாயின் அதே தரமுடைய கம்பியைக் கொண்டு இணைக்க இயலாது. பொற்கொல்லரின் ஆற்றலுக்குத் தங்கம் உருகாது. அதனால் சற்றுத் தரம் குறைந்த பொன்னைத் தூளாக்கி அதனை அவற்றிடை வைத்து ஊதினால் அது உருகித் தரமுடைய இரண்டு கம்பிகளையும் இணைக்கும். இவ்வாறு ஊதுவதற்குப் ‘பொடிவைத்து ஊதுதல்’ என்று பெயர். ஒரு நகையின் தரம் இத்தகைய பொடியின் அளவுக்குக் கூடவோ குறையவோ செய்யும்.  நுட்பமான வேலைப்பாடுடைய நகைகளைப் பொடிவைத்த நகைகள் என்று அழைக்கிற வழக்கும் உண்டு. இங்கு இது பற்றிய ஆய்வைவிட ஒற்றுமைப்படாத உலோகங்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான பொற்கொல்லரின் செயலும் அதற்கு அவருக்குப் பயன்படும் பொடியுமே கருத்திருத்த வேண்டியது ஆகும்.

    நேரிசை வெண்பா உருவான கதை 

    யாப்பருங்கலக்காரிகைக்கு முன்னும் பின்னும் நேரிசை வெண்பா ஓரலகாகப் படைக்கப்பட்ட வரலாறு உண்மை என்பதைப் பல்வேறு நேரிசை வெண்பாக்களால் அறிந்து கொள்ள இயலும். ஆனால் காரிகைக் காலத்தில் இரண்டு குறள்வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பாவாகத் தோற்றம் பெற்றிருக்கிறது.

    “உன்நலத்தை நாடாதே! ஊர்நலத்தை நாடுகநீ!
    பன்னலமும் வந்தெய்தும் பார்”

    என்பது ஒரு குறள் வெண்பா.

    “தேக்கம் உணர்ந்திடுக! தேயா வளர்பிறையாய்
    ஊக்கம் பெறுவாய் உணர்ந்து”

    என்பது மற்றொரு குறள் வெண்பா. இந்தத் தனித்தனிக் குறள் வெண்பாக்களைக் கவிஞர் சில மாற்றங்களால் ஒரு நேரிசை வெண்பாவாக மாற்றிவிடுகிறார்.

    “உன்நலத்தை நாடாதே! ஊர்நலத்தை நாடுகநீ!
    பன்னலமும் வந்தெய்தும் பார்போற்றும் – இன்றுள்ள
    தேக்கம் உணர்ந்திடுக! தேயா வளர்பிறையாய்
    ஊக்கம் பெறுவாய் உணர்ந்து”

    செய்திருக்கும் மாற்றங்கள்:

    1. முதல் குறட்பாவில் நேரசையில் முடிந்திருக்கும் ஈற்றுச்சீரைத் தளைதட்டாது மூவசைச் சீராக்கியிருக்கிறார்.
    2. முதலடியின் முதற்சீருக்கு ஏற்ப இரண்டாம் அடியின் இறுதியில் அதாவது நான்காவது சீரை ஏழாவது சீருக்கும் எட்டாவது தனிச்சீருக்கும் தளைதட்டாத வகையில் தனிச்சொல்லை அமைத்திருக்கிறார்.

    இந்த மாற்றங்களைத்தான் ‘பாட்டில் ஒட்டுவேலை’ என்கிறோம் நாம். இந்த ஒட்டுவேலையைப் பொற்கொல்லரின் பொடிவைத்து ஊதும் வேலைக்கு ஒப்பிட்டு காரிகைக்கு உரையெழுதுகிறார் குணசாகரர். எப்படி? இப்படி,

    “‘சீரியவான் தனிச் சொல் அடி மூய்’ என்று சிறப்பித்த அதனால் முதற் குறட்பாவினோடு தனிச்சொல் இடைவேறுபட்டு விட்டிசைப்பின் ஒற்றுமைப்படாத உலோகங்களை, ஒற்றுமைப்படப் பற்றாசிட்டு விளக்கினாற்போல முதற் குறட்பாவின் இறுதிக்கண் ஒன்றும், இரண்டும் அசைகூட்டி உச்சரிக்கப்பட்டு இரண்டு விகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் வருவனவுமுள. அவை ஒருசார் ஆசிடை நேரிசை வெண்பா எனக் கொள்க.”

    குணசாகரரின் இந்த உரையால் நேரிசை வெண்பாவைப் பற்றிய பல உண்மைகள் வெளிப்படுகின்றன. காரிகையில் பயின்றுவரும் அடைச்சொற்களைக் கொண்டு இவற்றை அவர் தருகிறார்.

    1. நேரிசை வெண்பா என்பது தனியான ஓர் அலகன்று.
    2. இரண்டு குறள் வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பா ஆகும்.
    3. முதல் குறள் வெண்பாவில் ஈற்றுப் பகுதியில் செய்யப்படும் மாற்றங்களே நேரிசை வெண்பாவிற்கான வடிவமாற்றமாகக் கருதப்படுகிறது.
    4. இந்த மாற்றத்தினை இரண்டு உலோகங்களை இணைப்பதற்குப் பொடி வைத்து ஊதும் பொற்கொல்லரின் செயலை உவமமாக்கிப் ‘பற்றாசிட்டு விளக்கினாற்போல’’ என விளக்கியிருக்கிறார்.

    நேரிசை வெண்பா –  வடிவப் பயன்பாடு

    ஆராய்ந்து நோக்கினால் இரண்டு குறள் வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பா என்பது நடப்பியலுக்கு முரணாகவும் படைப்பாளர்தம் சிந்தனை வெளிப்பாட்டுக்குப் பொருந்தாத எதிராகவுமே அமைந்துள்ளதாகத் தெரிகிறது. கவிதை என்பது கருத்தியலின் உணர்ச்சி வெளிப்பாடாதலின் அங்கே வடிவக்கட்டுமானத்தைத் திட்டமிடுவதற்கு நேரமிருக்காது. இருந்தால் அது கவிதையாக பரிணமிக்காது. யாப்பென்னும் கலத்துள் கவிதை நிரம்ப வேண்டும் என்பதுதான் தமிழ் மரபுக் கவிதைகளின் வடிவக் கோட்பாடு. காரிகைக்கு முன்னவையான சிலப்பதிகாரத்திலும் பத்துப்பாட்டிலும் உள்ள நேரிசை வெண்பாக்கள் தனித்தன்மையான ஒரே அலகுகளாகவே அமைந்துள்ளன. காரிகைக்குப்பின் வந்த சோமேசர் முதுமொழி வெண்பா, மணிமேகலை வேண்பா, பாரத வெண்பா, பாரதியின் பல வெண்பாக்கள், வைரமுத்து, கடவூர் மணிமாறன், கரூவூர் கவிஞர் குழந்தை முதலியோர்தம் வெண்பாக்கள் எல்லாம் தனித்தனி அலகுகளாகவே அமைந்திருக்கின்றன. இரண்டு குறள் வெண்பாக்களின் கூட்டணியாக அவை இல்லை. இது வளர்சிந்தனைக்குரிய யாப்பியல் கருத்தாகக் கருதப்படலாம்.

    நிறைவுரை

    எதனையும் உவமம் காட்டி விளக்குவதும் உரைநெறியே என்பதைக் குணசாகரர் உணர்ந்து உரையெழுதியிருக்கிறார். இலக்கண விளக்கங்களுக்காக உவமங்கள் பயன்படுத்தப்படுவது கோட்பாடு எனின், உலகியல் சார்ந்த ஒரு தொழில் நிகழ்வை உவமமாக்குவதைப் பயன்பாடு என்று கருதலாம். ‘பொன்னார் மேனியனே’ என்பது தேவாரம். ‘பொன்மேனி’ என்று உவமம் கண்ட தமிழ்க்கவிதை உலகில், ‘பொற்பொடி’ பற்றிய இந்த உவமம் உவமப்பயன்பாட்டில் தனியிடம் பெறுகிறது.

    (தொடரும்…)

    Share