தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 21

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  [email protected]

தமிழ்க்கவிதை உவமங்களில் வாழ்வியல்

முன்னுரை

வினை, பயன், மெய், உரு என்னும் நான்கின் அடிப்படையில் உவமம் அமையலாம் என்பது பழந்தமிழ் நெறி. இந்த நெறி அப்படியே தேக்கமடைந்துவிடாமல் தொடர்ந்து பரிணாமம் பெற்றுவருகிறது என்பதுதான் இங்கே சொல்ல வரும் சேதி.  ‘தாமரைபோன்ற முகம்’ என்பது முகத்திற்குச் சொல்லப்பட்ட உவமம். ‘முகம் போன்ற தாமரை’ என்பது தாமரைக்குச் சொல்லப்பட்ட உவமம். பொருளும் உவமமும் தமக்குள் மாறுபடும் நிலை இது. முன்னது காதலியின் முகத்தைப் பார்த்த காதலன் வாய்மொழி!, பின்னது இயற்கையோடு இயைந்த கவிஞன் தாமரையோடு பேசிய மொழி! ‘பொருளே உவமம் செய்தனர் ஆயினும் மருளறு சிறப்பின் அஃதுவமம் ஆகும்’ எனத் தொல்காப்பியம் விதி செய்கிற அளவுக்கு இது சென்றிருக்கிறது. தமிழ் எல்லா நிலைகளிலும் வளர்ச்சி நோக்கியது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.  இந்தப் பின்புலத்தில் ஒரே நிகழ்வுக்கு மாறுபட்ட உவமங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாங்கினை இப்பகுதி ஆராய்கிறது.

வாழ்வியலும் ஓர் அழகியலே!

வாழ்க்கையின் மெய்ம்மைகளை உவமமாக்குவதாலோ கருத்துக்கு மற்றொரு கருத்தையே உவமமாக்குவதாலோ தமிழ்க்கவிதைகளில் பயன்படுத்தப்படும் உவமங்களில் அழகியல் குறைந்துவிட்டதாகக் கருதிவிட முடியாது. மாறாக உவமங்களை அழகியல் சார்ந்ததாகப் படைப்பதில் சங்க இலக்கிய மரபு தற்காலம்வரை உள்ளம் கவரும் வகையில் தொடர்ந்து வருகிறது என்பதைச் சில எடுத்துக்காட்டுக்களால் உறுதி செய்ய முடியும். ஒரே தன்மையான நிகழ்வுகளுக்குப் பட்டறிவின் அடிப்படையிலும் வாழ்வியல் அடிப்படையிலும் உவமங்களை அமைத்துக்காட்டும் திறனைத் தமிழ்க்கவிதைகளில் காணமுடியும்.

பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல

சமுதாயத்தின் பங்காளி படைப்பாளியாக மாறினால் படைப்பில் உயிர் இருக்கும். கரையில் இருந்து கொண்டு கால் நனையாமல் கடலைப் பாடுகிறவன் பாட்டில் ஈரம் இருக்காது. இளவரசன் நகருலா வருகிறான். அவனைக் காண்பதற்காகக் காதல் மேலிட, தன் வீட்டுக் கதவைத் திறப்பதற்காகச் செல்கிறாள் தலைவி, திறந்த கதவைத் தாழிட்டு வருகிறாள். மீண்டும் திறக்கிறாள். மீண்டும் தாழிடுகிறாள். இந்த நிகழ்வைச் சித்திரிக்கும் பாட்டு முத்தொள்ளாயிரத்தில் இருக்கிறது. ‘தலைவனைக் காண்பதற்காக ஆர்வத்துடன் செல்வதும், நாணத்தினால் கதவடைத்துத் திரும்புவதுமாகிய அவள் நெஞ்சத்து ஊசலாட்டத்தை,

“ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைத்தேன் – நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்நதார் போல
வரும்., செல்லும்., பேரும் என் நெஞ்சு”

என்னும் பாடல் காட்சிப்படுத்துகிறது. செல்வர்கள் வீட்டு வாயிற்படியில் இரப்பதற்காகச் செல்லும் இரவலனுடைய நெஞ்சம், ‘செல்லலாமா? கூடாதா? என்றலையும் ஊசலாட்டத்தோடு தலைவியின் நாணத்தால் வந்த ஊசலாட்டம் ஒப்பிட்டுக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.  பாட்டில் ‘காணிய’ (காண்பதற்காக) என்னும் ‘செய’வென் எச்சம் ‘அடைந்தேன்’ என்னும் தன்வினை கொண்டது. ‘அடைத்தேன்’ என நின்றது வலித்தல் விகாரம். பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் செல்வது என்னும் சிந்தனை திருவள்ளுவருக்கும் வந்திருக்கிறது.  கற்றலின் சிறப்புக் கூற வந்த அவர், ‘உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்க’ வேண்டும்’ என்று சொல்வார். புறம் சார்ந்த கருத்து விளக்கத்திற்குத் திருவள்ளுவரால் கையாளப்பட்ட இந்த உவமத்தை மிகச் சாதுரியமாக அகப்பொருளுக்கு அதுவும் பெண்ணொருத்தியின் மன ஊசலாட்டத்திற்கும் தயக்கத்திற்கும் உவமமாக்கியிருப்பது தமிழ்க்கவிதை உவமக் கோட்பாடுகளில் ஒன்றினை எதிரொளிப்பதாகும்.

தயிர்கடையும் ஆச்சியின் கை

தலைவியின் ஊசலாடும் நெஞ்சிற்கு முத்தொள்ளாயிரம் காட்டியிருக்கும் உவமம் வாழ்வியலைச் சார்ந்ததாகக் கொண்டால், நளவெண்பா காட்டியிருப்பது வாழ்வியலோடு அழகியல் சாந்ததாகக் கருத முடியும். ஊழ்வினை காரணமாகக் கானகத்தில் ஒற்றையாடையில் நளனும் தமயந்தியும் தனித்திருக்கின்றனர். கலிபகவான் அவர்களைப் பிரிக்கும் நோக்குடன் அவர் அருகே கத்தியாகக் கிடக்கிறார். கிடக்கும் கத்தியை எடுத்து ஒற்றையாடையை இருகூறாக்கி நளன் எழுந்து நடக்கிறான். நடந்து சென்றானா? என்றால் அதுதான் இல்லை. ‘ஒற்றைத் துகிலும் உயிரும் இரண்டாகப்’ பற்றியறுத்த நளன், துயில் கொள்ளும் தன் மனைவியாகிய தமயந்தியைக் கண்டு அவளருகே செல்வதும், மீள்வதுமாகத் தடுமாறுகிறான். இந்த நிலையைப் புகழேந்திப் புலவர் பாடுகிறார். பெருமாளைப் பாடிய வைணவராதலின், இடையர் வீட்டு நிகழ்ச்சியை உவமமாக்கி நளனின் நிலையைத் தெளிவுபடுத்துவதை அறியமுடிகிறது.

“போயொருகால் மீளும் புகுந்தொருகால் மீண்டேகும்
ஆயர் கொணர்ந்த அடுபாலின் – தோயல்
கடைவார்தம் கைபோல ஆயிற்றே காலன்
வடிவாய வேலான் மனம்”

‘உட்கார்ந்து பால்கறக்க முக்காலி பொன்னாலே. அணைஞ்சிருந்து பால்கறக்க அணைகயிறும் பொன்னாலே’ என்பது நாட்டுப்புற வழக்கு. இன்றைய மகளிர் சமுதாயம் மீளவும் பெறமுடியாத பேரிழப்பு உரியும் மத்தும். ஆய்ச்சியர் தயிரைக் கடைகிறபொழுது அவர்தம் கைகள் முன்னும் பின்னுமாகச் செல்லுவதை உற்றுநோக்கிய புகழேந்தி தாம் எழுதிய காப்பியத்தின் இன்றியமையாக் கட்டத்தில் அதனை உவமமாக்கிய திறன் பெரிதும் சிந்தனைக்குரியது.

ஊசலான பாசம்

தலைவியின் தடுமாறும் நெஞ்சிற்குப் பெருஞ்செல்வர் இல்லத்துக்குச் செல்லும் நல்கூர்ந்தார் உவமமானதைப்போல், மனைவியைப் பிரிந்த கணவன் தடுமாற்றத்திற்குத் தயிர் கடையும் இடைச்சியர் கை உவமமானதைப்போல், பாசமிக்கத் தாயொருத்தி தன் வீட்டுக்கும் கர்ப்பிணியான தன் மகள் வீட்டுக்கும் போவதும் வருவதுமாய் உள்ளாள் என்பதற்குத் தமிழ்க்கவிதை ஒன்றில் காட்டப்பட்டிருக்கும் உவமை காலத்தோடு ஒட்டியதாக உள்ளது. பாவேந்தரின்  அடையாளம் காட்டும் பனுவல்களில் குடும்ப விளக்கு தலைசிறந்தது. அதில் வரும் ஒரு காட்சியில் கர்ப்பிணியாக இருக்கும் தன் மகளை அதே பகுதியில் அவளுக்கு அருகில் குடியிருக்கும் அவள் தாய் கவனத்துடன் பராமரிப்பதைப் பாவேந்தர்,

“நீடு மணிப்பொறி ஆடுங் காய்போல்
தங்கம் தன்வீடு தன்மகள் வீடு
நாடுவாள் மீள்வாள் மணிக்கு நாற்பது முறை”

சுவர்க் கடியாரத்தின் ஊசல் (pendulum) இருமுனைக்கும் இங்குமங்குமாக அசைந்து அலைவதைப் போலக் ‘குடும்பவிளக்கு’ நாயகி தங்கம், தன் வீட்டிற்கும் தன் மகள் நகைமுத்து வீட்டுக்குமாய் நடந்ததாகப் பாவேந்தர் கவிதையோவியம் தீட்டியிருப்பதைக் காணமுடிகிறது.

நாணத்தினால் வந்த முத்தொள்ளாயிரத் தலைவியின் தயக்கத்திற்குப் பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தாரும், தமயந்தியைப் பிரிந்த நளனின் பிரிவாற்றாமைக்கு ஆய்ச்சியரின் கைகளும், கருவுற்ற மகளைக் காணச் செல்லும் தாய்க்கு மணிப்பொறியின் ஊசலும் உவமங்களாய் வந்துள்ளமை நோக்கத்தக்கது. தயங்கும் தலைவி, ஆற்றாத கணவன், துடிக்கின்ற தாய் என்னுமாறு அமைந்த பாத்திரங்களின் வினைபாடுகளுக்கேற்ப நல்கூர்ந்தார், கைகள், ஊசல் என வேறுபடும் வினைகளைக் கொண்ட அழகியல் சார்ந்த உவமங்கள் அமைந்துள்ள பாங்கு சிந்திக்கத்தக்கது.

நிறைவுரை

‘தமிழில் உவமக் கோட்பாடுகள்’ என்னும் ஆய்வுக்களத்தில் சமுதாயத்தை விட்டு உவமங்களைத் தேடும் அவலத்தைப் பெரும்பாலும் காண முடியாது. பழந்தமிழ் இலக்கியங்களில் உயர்வு நவிற்சி, இல்பொருள் உவமம்,  வெறுங்கற்பனை முதலியவை அந்நியப்பட்டே நிற்கின்றன. பாரதத்தின் கிளைக்கதையைப் படைப்பிலக்கியமாகச் செய்த புகழேந்தி ஆய்ச்சியர் இல்லத்தை எண்ணுவதும், அகத்திணை மரபினைக் கவிதைக் காட்சியாக்கும் முத்தொள்ளாயிர ஆசிரியர் நல்கூர்ந்தாரை நினைவில் கொள்வதும், நொடிக்கு ஒரு தடவை மகளைக் காணவரும் தாயைச் சித்திரிக்கும் பாவேந்தர் கடிகாரத்தின் ஊசலைக் கருத்திற் கொள்வதும் இலக்கியத்தில் சமுதாயப் பார்வைகளே  உவமங்களாக அமைகின்றன என்பதைக் ஓரளவு காட்டக் கூடும். ‘வருவதும் போவதுமான’ ஒரே செயலுக்குக் காலமிடையிட்ட கவிஞர் பெருமக்கள் காட்டுகிற உவமங்களில்தாம் எத்தனை வகை!

(தொடரும்…)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க