குறளின் கதிர்களாய்…(356)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(356)
கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்
றிரப்பவர் மேற்கொள் வது.
– திருக்குறள் – 1055 (இரவு)
புதுக் கவிதையில்...
தம்மிடம் இருப்பதை
மறைக்காமல் ஈவோர்
தரணியில் இருப்பதால்தான்,
வறுமைப்பட்டவர்
வந்து நின்று
வாயால் கேட்காமல்
கண்ணால் கேட்பதிலேயே
பெற்றுக் கொள்கின்றனர்…!
குறும்பாவில்...
இருப்பவர் முன்நின்று கேட்காமலே
இரப்போர் பெற்றுக்கொள்வது, இருப்பதை மறைக்காமல்
ஈவோர் இவ்வுலகில் இருப்பதால்தான்…!
மரபுக் கவிதையில்...
இருப்பவர் தமது கண்முன்னே
ஏது மில்லா வறுமையிலே
இரப்போர் வந்து நின்றேதான்
இதழ்கள் திறந்து கேட்காமல்
இரக்கும் கண்கள் பார்வையிலே
எல்லாம் நிறைவாய்ப் பெறுவதெல்லாம்,
இருப்ப தெதையும் மறைக்காமல்
ஈவோ ருலகில் உளதாலே…!
லிமரைக்கூ...
வாயால் கேட்டே இரவாதே
வறியோர் பெறுவதெல்லாம், உளதால் உலகில்
கொடுப்போர் எதையும் கரவாதே…!
கிராமிய பாணியில்...
வாயத்தொறந்து கேக்காமலே
வந்து நின்னு
பாக்கும் பார்வயிலயே
எரப்பவங்களுக்கு
எல்லாம் கெடைக்குதுண்ணா
அதுக்கு ஒரே காரணந்தான்..
கையில இருக்கிறது
எதயுமே மறைக்காம,
இல்லண்ணு எரப்பவங்களுக்கு
இல்லண்ணு சொல்லாமக்
குடுக்கிறவங்க
ஓலகத்தில இருக்கிறதினாலத்தான்…!