தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 16
புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
இலக்கண உரைகளில் உவமங்கள்- 2
முன்னுரை
இலக்கியத்தின் அனைத்து வடிவங்களிலும் பொருள் புலப்பாட்டுக் கருவியாக விளங்கும் உவமம், பல நேர்வுகளில் இலக்கண விளக்கத்திற்கும் பயன்பட்டுள்ளது. இலக்கியத்தின் அழகியல் கூறாக விளங்கும் உவமம், இலக்கணத்துள்ளும் இலக்கண உரைகளுக்குள்ளும் இலக்கணத் தெளிவுக்கான கருவியாக அமைந்திருக்கிறது. உவமத்தின் தலையாய பணி, பொருள் புலப்பாடே. அப்புலப்பாட்டுப்பணி இலக்கியத்திலும் இலக்கணத்திலும் முறையே அழகியல் உணர்வு, அறிவுத் தெளிவு என்னும் இருவேறு நோக்கங்களை நிறைவு செய்வதாக அமைந்திருக்கிறது. படைப்பின் பெருமையை அளந்துப் புலப்படுத்தும் கருவி உவமமே. இத்தகைய சிறப்பினைக் கொண்ட உவமம் மேற்கூறிய வண்ணம் இலக்கியத்தின் அழகியல் பகுதியை நிறைவு செய்வதோடு அதன் நிலைப்பேற்றுக்கும் பெருங்காரணமாக அமைகிறது. ஆனால் இலக்கணத்துள் அதன் பணி வேறாக அமைகிறது. இலக்கண நுட்பங்களை விளக்கிக் காட்டுவதற்கும் அளவையியல் அடிப்படையில் இலக்கண உரை அமைவதற்கும் பெருந்துணையாக அமைந்திருக்கின்றது. இந்த அடிப்படையில் நன்னூல் உரையாசிரியர் சங்கரநமச்சிவாயரின் உவமங்கள் இலக்கண விளக்கத்தின் மேல் செலுத்தும் ஆளுமையை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.
உறவுகளும் உவமமாகலாம்.
நூலின் வகைகளைக் கூறவந்த பவணந்தியார் ‘மும்மையின் ஒன்றாய்’ என அடையாளப்படுத்துகிறார். முதல் நூல், வழிநூல், சார்பு நூல் என்பன நூலின் மூன்று வகையாகும். அவற்றுள் ஒன்றின் திறன் மற்றொன்றில் காண்பது அரிது. ஒரு நூல் தனக்கு வழிநூலை நோக்கி முதனூலாகவும் முதனூலை நோக்க வழி நூலாகவும் அயல்நூலை நோக்க சார்பு நூலாகவும் அமையும். தொல்காப்பியத்திற்கு நன்னூல் வழிநூல். தொல்காப்பியத்திற்கு வழிநூலான நன்னூல் அகத்தியத்தை நோக்கச் சார்புநூலாம் என்க. எனவே இவை ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை என்பது பெறப்படும். “முதல் நூல் வழிநூல் என்னும் இருதிறத்து நூல்களுக்கும் பொருள்முடிபு ஒருபுடைத்து ஒத்து, ஒழிந்தன எல்லாம் ஒவ்வாமையை உடையது சார்பு நூலாகும்” என்னும் சங்கர நமச்சிவாயரின் விளக்கம் இதனை உறுதி செய்யும். சார்பு நூல் என்பது தொல்காப்பியக் கொள்கைக்கு மாறுபட்டதாயினும் நன்னூலார் காட்டும் உவமத்திற்காக ஈண்டுச் சுட்டப்படுகிறது.
“முதல்நூற்கு, வழிநூலும் சார்புநூலும் ஒருவற்கு மைந்தனும் மருமானும் போலும் என்க.”
என்று எழுதுகிறார். தந்தைக்கும் மகனுக்கும் தொடர்பு உண்டு. ஆனால் தந்தைக்கும் மருமகனுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை. இருப்பினும் அவனும் ஓர் உறவே. இலக்கண நூற்பாவிற்கு விளக்கம் கூறும்போது உவமத்தைக் கையாண்டு விளக்கம் கூறுவதும் அவ்வுவமங்களும் மானுட உறவுகளைப் பெருமைப்படுத்துவதுபோல் அமைந்திருப்பதும் தமிழியலின் உவமக்கோட்பாட்டைத் தெளிவாக வரையறுத்துக் காட்டுகின்றன எனலாம். ‘தந்தையை நோக்க மகன்’ என்னும் உவமத்தால் முதுனூலின் சாரம் வழிநூலில் அமைந்திருப்பது தவிர்க்க இயலாதது என்பது பெறப்படும்.
சிந்தை கவரும் ‘சினை உவமங்கள்’
வழிநூலின் வகைகளைக் கூறும் நன்னூலார் ‘தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்ப்பு எனத்தகு நூல்யாப்பு ஈரிரண்டென்ப” (51) என்னும் நு{ற்பாவில் நான்காகப் பகுத்துரைக்கின்றார். ‘தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழியெர்த்து அதர்ப்பட யாத்தலோடு அனைமரபினவே’ என்று தொல்காப்பியம் கூறும். நன்னூல் சிறப்புப்பாயிரத்துள் இது பற்றி ஆராயும் சங்கர நமச்சிவாயர், ‘தொகைவிரி யாப்பு’ என ஒன்றிருக்க, தொகை, வகை, விரி எனப் பிரித்தோதுவது ஏன்? என்னும் வினாவை எழுப்பிக்கொண்டு அதற்கு விடை காண்கிறார்.
“வழியின் வகையாகிய யாப்பினுள் ‘தொகைவிரி’ என ஒன்று போந்ததன்றித் தொகை, வகை, விரி எனப் போந்தது இல்லையாலோ எனின் நடுநின்ற வகை பின் நின்ற விரியை நோக்கின் தொகையாகவும் முன் நின்ற தொகையை நோக்கின் விரியாகவும் அடங்குதலின் இது தொகைவிரி யாப்பு என்றதன்பாற்படும் என்க. எனவே தொகை, விரி என இரண்டாய் வரினும் மரத்தினது பராரையினின்றும் கவடு, கோடு, கொம்பு, வளார் பலவாய ஒன்றோடொன்று தொடர்பட்டு எழுந்து நிற்றல்போல் தொகையினின்றும் ஒன்றோடு ஒன்று தொடர்படப் பகுக்கப்பட்டுப் பலவாய் வரினும் தொகைவிரி யாப்பேயாம் என்க” (சிறப்புப்பாயிரம்)
என்று விளக்கமளிக்கிறார். இந்த விளக்கத்திற்கு மரத்தின் பராரை முதலிய பகுதிகள் உவமமாக்கப்பட்டுப் பொருள் புலப்பாட்டுக்கு உதவுவதைக் காணலாம்.
வினைச்சொல்லில் பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்னும் ஆறுறுப்புக்களும் அடங்கும். எனினும் பகுதி, விகுதி என்பவையே கண்ணுக்குப் புலப்படுமாறு அமையும். ஏனைய நுண்ணிய பார்வைக்கும் புலமைக்கும் உரியவை. பவணந்தியார் இந்தப் பார்வையை,
“இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலிற்
பகுதி விகுதி பகுத்திடை நின்றதை”
எனக் கூறுவதன் மூலம் அவ்விரண்டையுமே விதந்தோதுகிறார். தொடர்ந்து இடைநிலையைக் கூறும் அவர் ஏனைய உறுப்புக்களைக் கூறாது விடுகிறார். இதற்கான காரணத்தை ஆராய்ந்த சங்கர நமச்சிவாயர், இன்றியமையாதவற்றை முதலில் கூறி மற்றவற்றைப் பின்னர் கூறுவதாகத் தாம் எண்ணியதை ஓர் உவமத்தின் வழி விளக்குகிறார்.
“மா பலா முதலியன பராரை முதலிய சினையோடு நின்றன எனக் கண்டது கூறுவார் போல”ப் (146) பகுபதம் பகுதி முதலிய உறுப்போடு நின்றது எனக் கண்டது கூறி, அப்பதம் தந்த தோலா நாவின் மேலோர் ஆணையின் நிற்றலின் ‘கண்டதற்கு’ என்றும் கூறினார்”
என உவம விளக்கம் தருவதைக் காண முடிகிறது. கண்ணில் படுவதை முன்னர்க்கூறிப் பிறவற்றைப் பின்னர்க் கூறுவதற்கு உரையாசிரியர் மரங்களையும் அவற்றின் சினைப்பகுதியையும் உவமமாக்கியிருப்பது நோக்கத்தக்கது.
கமுகந்தோட்டம் என்றாற்போல
நன்னூலில் மூன்றாவது இயலாக அமைந்திருப்பது உயிரீற்றுப் புணரியல். பல்வகைப் புணர்ச்சிகளும் இவ்வியலுள் ஆராயப்பட்டுள்ளன. பல்வகைப் புணர்ச்சிகளும் ஆராயப்பட்டிருக்கும் ஓர் இயலுக்குக் குறிப்பிட்டதோர் புணர்ச்சியை மட்டும் பெயராக்கியதற்கு ஓர் உவமம் கூறி விளக்குகிறார் சங்கர நமச்சிவாயர். கமுகு என்றால் பாக்கு. கமுகந்தோட்டம் என்றால் பாக்குத் தோப்பு என்பதாகும். அதனுள் தென்னை, பலா, தேக்கு, மா எனப் பல்வகை மரங்களும் வளர்ந்து நிற்கும். எனினும் பெரும்பான்மை பற்றி அதற்குக் ‘கமுகந்தோட்டம்’ என்பது வழக்கு. அதுபோலப் பல்வகைப் புணர்ச்சிகளும் ஆராயப்படினும் பெரும்பான்மை உயிரீறு பற்றிய புணர்ச்சியே ஆதலின் இவ்வியலுக்கு இப்பெயர் அமைந்ததாக உவம விளக்கம் செய்கிறார் உரையாசிரியர்.
முடவன் கோலூன்றி வந்தாற்போல
ஙகர மெய் (ங்) அகர உயிர் ஒன்றுடன் கூடியே சொல்லுக்கு முதலில் வரும் அவ்வாறு சொல்லுக்கு முதலாகும் போதும், அ, இ, உ என்னும் சுட்டுக்களையும், எ, யா என்னும் வினாக்களையும் முதலாகக் கொண்டு வரும். தனித்து வராது. இதனைச்,
“சுட்டு யா எகர வினாவழி அவ்வை
ஒட்டி ஙவ்வும் முதலா கும்மே” (106)
என்னும் நூற்பாவில் இலக்கணம் கூறுகிறார். இதற்கு உரைவிளக்கம் கண்ட சங்கர நமச்சிவாயர்,
“ஙனம் என்பது இடத்தினையும் தன்மையினையும் உணர்த்தும் பலபொருள் ஒரு சொல்லாய் வரினும் தனித்து வரும் தன்மையதன்றி முடவன் கோலூன்றி வந்தாற்போலச் சுட்டு, வினாவாகிய இடைச்சொற்களை முன்னிட்டு வருதலான்”
என்றெழுதுகிறார். இலக்கணத்திற்கு உரையெழுதும் உரையாசிரியர் பார்வையில் சுட்டும் வினாவும் முடவனாகிய ஙகரத்திற்கு உதவும் கோலாகத் தோன்றியிருக்கின்றன என்பதே இவ்வுவமப்பார்வையின் சிறப்பாகலாம்.
நச்சினார்க்கினியரை வழிமொழியும் நமச்சிவாயர்
உயிரும் மெய்யும் கலந்து வரும் எழுத்து உயிர்மெய் எழுத்து. ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ என்பதால் மெய்க்கும் மூலம் அகரம் என்பது பெறப்படும். அதாவது மெய்களின் இயக்கமும் அகரமின்றி அமையாது. இறைவன் எல்லா உயிர்களோடும் கலந்து நிற்பதை உவமமாக்கி நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் (தொல். மொழிமரபு. 46) உரைவிளக்க உச்சம். எனினும் ‘உயிர்மெய்’ என்றவிடத்து முதலில் பிறக்கும் ஒலி மெய்யா உயிரா என்பது பற்றி ஆழமான சிந்தனை உரையாசியர்களிடம் இருந்து வந்திருக்கிறது. ‘நெடுநல்வாடை’ இலக்கியத் தலைப்பில் நச்சினார்க்கினியர் காட்டிய பேரார்வம் ‘உயிர்மெய்’ என்னும் சொல்லாட்சி பற்றிய ஆய்விலும் நிகழ்ந்திருக்கிறது என்பதை,
“மெய் முன்னர் நிற்ப உயிர் பின்வந்து ஏறுமென்றார். அம்முறையே ஓசையும் பிறக்கும் என்றார். இதனானே மாத்திரை கொள்ளுங்கால் ‘உப்பும் நீரும் போல்’ ஒன்றேயாய் நிற்றலும், வேறுபடுத்திக் காணுங்கால் விரலும் விரலும் சேர நின்றாற்போல’ வேறாய் நிற்றலும் பெற்றாம். நீர் உப்பின் குணமே ஆயவாறுபோல உயிரும் மெய்யின் குணமேயாய் வன்மை மென்மை இடைமை எய்தி நிற்றல் கொள்க” (தொல். நூ.ம.18 உரை)
என்னும் அவருடைய விளக்கத்தால் அறிய முடியும். இந்தக் கருத்தினை உள்வாங்கிய நமச்சிவாயர் ‘நின்ற நெறியே உயிர்மெய் முதல் ஈறே’ (நன்.109) என்னும் நூற்பாவின் விளக்கத்தில்,
“எண்ணதிகாரத்துள் உயிர்மெய்யை ஓர் எழுத்தாக (நன்.60) எண்ணினார் ஈண்டு இரண்டாக வைத்து இலக்கணம் கூறுவது என்னை எனின் “அப்பொடு பெய்த உப்பே போல’ உயிரொடு புணர்த்திய மெய் தன் அளவு தோன்றாது ஒன்றாய் நிற்றலின் ஒன்றுமாய், ஒற்று முன்னும் உயிர் பின்னுமாய் ஒலித்து நின்ற நெறியான் இரண்டுமாய் நிற்றலின் என்று உணர்க’
என்று எழுதுகிறார். இதனால் இலக்கணக் கருத்துக்களை வழிமொழியும் வழி நூலில் அந்நூலின் உரையாசிரியர் முதனூலின் உரைப்பகுதியையும் வழிமொழிவதை அறிய முடிகிறது.
நிறைவுரை
ஒரு நூலுக்குப் பலர் உரைகாணும் உரை மரபு தமிழுக்குப் புதியதன்று, முதனூல் நூற்பாக்களை ஆசிரிய வசனங்களாக வழிநூலாசிரியர் பயன்படுத்தியிருப்பது போலவே முதனூல் உரையாசிரியர்களின் உவமங்களையும் வழிநூல் உரையாசிரியர்கள் வழிமொழிந்திருக்கிறார்கள் அல்லது மறுத்திருக்கிறார்கள். மானுட உறவுகளும், மாற்றுத் திறனாளிகளும் இடம்பெறும் இந்த உரைகளில் இயற்கையைப் பற்றிய விரிந்த பார்வையும் அறிவும் தொட்ட இடமெல்லாம் தட்டுப்படுகின்றன. சமுதாய விஞ்ஞானிகளாகவும் இயற்கையின் ரசிகர்களாகவும் அவர்கள் விளங்கியிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
(தொடரும்…)