திருப்பூர் கிருஷ்ணன் மகன் அரவிந்த் கிருஷ்ணன் மறைவு
அண்ணாகண்ணன்
அரவிந்தத் தத்துவத்தில் தோய்ந்து, அரவிந்த அமுதம் என்ற நூலை எழுதிய திருப்பூர் கிருஷ்ணன், தன் ஒரே மகனுக்கு அரவிந்தன் என்று பெயர் சூட்டினார். நா.பார்த்தசாரதியின் புனைபெயர்களுள் ஒன்று, அரவிந்தன். நா.பா.வின் குறிஞ்சி மலர் புதினத்தின் நாயகன் பெயரும் அரவிந்தன். நா.பா.வின் சீடரான திருப்பூர் கிருஷ்ணன். அந்த வகையிலும் தன் மகனுக்கு இப்பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்தார்.
சமூக சேவையில் (MSW – Master of Social Work) முதுகலைப் பட்டம் பெற்ற அரவிந்த் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகத்தில் பதிப்பாசிரியராகப் பணியாற்றி வந்தார். ஏராளமான இலக்கிய நிகழ்ச்சிகளுக்குத் தம் தந்தையாருடன் கூடவே வந்து, அவருக்கு உதவியாக இருந்தார். எப்போதும் சிரித்த முகத்துடன் நட்பும் பணிவும் உதவும் குணமும் ஒருசேர அமைந்தவர். திருப்பூர் கிருஷ்ணன், எப்போதும் நண்பராகவே பழகுபவர். என்னிடமும் தோளில் கைபோட்டு, காதைத் திருகி அன்பு பாராட்டுபவர். மகனை எப்படிச் சீராட்டி, பாராட்டுவார் எனச் சொல்லவே வேண்டாம்.
அரவிந்த் கிருஷ்ணன் பெருந்தொற்றால் மறைந்தார் என்ற செய்தி, அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் திருப்பூர் கிருஷ்ணன் – ஜானகி தம்பதியருக்கு ஆழ்ந்த இரங்கல். காலம்தான் இந்தத் துயரத்தை ஆற்ற வேண்டும்.
(இந்தப் படம், 1998இல் சென்னை மயிலையில் ஓர் இலக்கிய நிகழ்வில் எடுத்தது. உடன் நண்பர் ஹாஜா கனி)