தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 19

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  [email protected]

இலக்கண உரைகளில் உவமங்கள் – 5

முன்னுரை

உரையாசிரியர்களில் நச்சினார்க்கினியரே இலக்கியம், இலக்கணம் என்னும் இரண்டனுக்கும் உரைகண்ட சான்றோர். பரிமேலழகரின் திருக்குறள் இலக்கிய உரையை அறிஞருலகம் இலக்கண உரை என்றே பெருமைப்படுத்தும். அச்சிறப்பு நச்சினார்க்கினியருக்கும் பொருந்தக்கூடும். இவருடைய இலக்கண உரைகளில் இலக்கிய மணம் வீசும். இலக்கிய உரைகளில் இலக்கணத் தெளிவு மேலோங்கி நிற்கும். தொல்காப்பியம், பத்துப்பாட்டு, சிந்தாமணி முதலிய நூலுரைகளைக் கற்பார் இதனை அறியலாம். ஆழ்ந்த தமிழ்ப்புலமை, பல்லாயிரம் வரிகளை மனத்துக்குள் இருத்திக்கொள்ளும் பேராற்றல், ஆராய்ச்சி அறிவு, பல்துறை அறிமுகம், மக்களின் நடப்பியல் வாழ்வியல் நெறிகள் பற்றிய நோக்கு, வடமொழிப் புலமை என்னும் இவற்றின் பரிமாணமாக விளங்கும் நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய உரைப்பகுதிகளில் காணப்படும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது.

இலக்கியத்துள் காணும் இலக்கண நுட்பம்  

நச்சினார்க்கினியர் உரைக்கருத்துக்களில் மட்டும் பிற உரையாசிரியர்களிடமிருந்து வேறுபடுபவரல்லர். அவருடைய பரந்துபட்ட இலக்கியப் புலமை இலக்கண உரைக்குப் பயன்படுவதைப் போலவே ஆழமான இலக்கணப் புலமை  இலக்கிய உரைகளுக்குப் பயன்படுகிறது. எனவே இருவகை உரைகளிலும் அவ்விருவகை உரையாசிரியர்களிடமிருந்து நோக்கு, உத்தி முதலிய எல்லாவற்றிலும் மாறுபடுகிறார். இலக்கியங்களை எடுத்துக்காட்டி இலக்கண விளக்கம் தரும் நச்சினார்க்கினியர்  இலக்கிய வரிகளையே உவமமாக்கி விளக்கம் தருவதும் உண்டு. ஏனைய உரையாசிரியர்களும் இவ்வாறு உரைவிளக்கம் செய்தாலும் இவருடைய இலக்கியப் புலமை தனித்தன்மை மிக்கதாய் விளங்குகிறது.

விளியேற்பதில் உயிரீறும் மெய்யீறும்

பெயர்ச்சொற்கள் இயல்பாக நின்றும் விளியாகும். சில மாற்றங்களைக் கொண்டும் விளியாகும். அத்தகைய மாற்றங்களுள் அஃறிணைப் பெயர்களும் அடங்கும். அவ்வஃறிணைப் பெயர்கள் விளியேற்குங்கால் இறுதி பற்றி மாறுபடும்.  புள்ளியீற்று அஃறிணைப் பெயர்களும் உயிரீற்று அஃறிணைப் பெயர்களும் விளியேற்குங்கால் ஏகாரம் பெறும் என்பது விதி.

புள்ளியும் உயிரும் இறுதி யாகிய
அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும்
விளிநிலை பெறூஉம் காலந்தோன்றின்
தெளிநிலை உடைய ஏகாரம் வரலே”151

என்னும் நூற்பாவில் இந்தக் கருத்து பெறப்படுகிறது. மரம், ‘மரமே!’ என்றும் அணில் ‘அணிலே!’ என்றும் நாய் ‘நாயே!’ என்றும் புலி ‘புலியே!’ என்றும் விளிக்கப்படும்.   இவ்வாறின்றி ஏகாரம் பெறாமலும் விளியேற்கும் நிகழ்வுகளை இலக்கியங்கள் காட்சிப்படுத்துகின்றன. அஃறிணை நோக்கிப் புலம்பும் தலைமக்கள் கூற்று அவ்வாறு அமைந்திருக்கின்றன. அத்தகைய பயன்பாடு முழுவதையும் தொகுத்துத் தர எண்ணும் நச்சினார்க்கினியர் சிலவற்றை மட்டும் உவமமாகக் காட்டி விளக்குவதைக் காணமுடிகிறது.

“வருந்தினை வாழி என் நெஞ்சம்!’ (அகம் -19:2)

 ‘கருங்கால் வெண்குருகு! ஒன்று கேண்மதி.’ (நற். 54)

என்றாற் போலப் “பிறவாற்றான் விளி ஏற்பனவும் கொள்க”. மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் ‘நெஞ்சம்’ என்னும் மகர ஈறு ‘நெஞ்சம்’ என்றும், குருகு என்னும் உகர ஈறு ‘குருகு’ என்றும் விளிகொள்வதைக் காணலாம். சேனாவரையர் இத்தகைய எடுத்துக்காட்டுக்களைத் தந்து ‘தொடக்கத்தன’ என அமைதி கொள்கிறார். நச்சினார்க்கினியர் இவற்றை உவமமாக்கி, இவைபோல விதிக்கு வேறுபட்டும் வேறு சில நெறிகளிலும் விளியேற்பன உளவென விளக்குவதைக் காணலாம். அஃறிணைப் பெயர்களில் மகர ஈறும் உயிரீறும் வேறுவகையாக விளிகொள்ளும் பாங்கு இலக்கியங்களில் செறிந்து கிடக்கும் அளவையும் நுட்பத்தையும் நோக்கி அவற்றுள் சிலவற்றை உவமமாக்கிக் கூறும் நச்சினார்க்கினியரின் உவமத்திறன் போற்றத்தக்கதாய் உள்ளது.

எழுத்தும் இறைவனும்

அகர முதல் னகர இறுவாய் முப்பது எழுத்துக்களும் முதல் எழுத்துக்கள் எனத் தொகுத்துச் சொன்ன தொல்காப்பியம் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டு, மெய்யெழுத்துக்கள் பதினெட்டு என்பதைப்பின்னாலே விவரிக்கிறது.  அவற்றுள் உயிரெழுத்துக்களைக் கூறும் நூற்பா,

ஔகார இறுவாய்ப்
பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப” 8

என்றவாறு அமைகிறது. இந்த நூற்பாவின் விளக்கத்தில் நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் உவமத்தின் கொடுமுடியையும் அவருடைய ஆழமான பக்தியையும் சித்தாந்தப் பார்வையையும் ஒருங்கே காட்டுகிறது எனலாம். உயிரெழுத்துக்கள் மெய்களை இயக்குவதால் தனியாக அவை உயிரெனப்படுமா என்னும் ஐய வினாவை அவராகவே எழுப்பிக் கொண்டு அதற்கான விளக்கத்தையும் பின்வருமாறு பதிவு செய்கிறார்.

மெய் பதினெட்டினையும் இயக்கித் தான் அருவாய் வரிவடிவின்றி நிற்றலின் உயிராயிற்று. இவை மெய்க்கு உயிராய் நின்று மெய்களை இயக்குமேல் உயிரென வேறோர் எழுத்தின்றாம் பிறவெனின், “மெய்யில் நிற்கும் உயிரும் தனியே நிற்கும் உயிரும் வேறென்க.! என்னை? ‘அகர முதல’ (குறள் – 1) என்றுழி அகரம் தனியுயிருமாய்க் ககரவொற்று முதலியவற்றிற்கு உயிருமாய் வேறு நிற்றலின். அவ்வகரம் தனியே நிற்றலானும் பல மெய்க்கண் நின்று அம்மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்டதாதலின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதொரு தன்மையையுடைத்தென்பது கோடும்,. “இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையும் பல்லுயிர்க்கும் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல

உவமத்தை உவமத்திற்காகவே சொல்லுவது வேறு. இலக்கியத்தின் பயன்நோக்கிக் கையாள்வது என்பது வேறு. ‘அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயன்’ என்னும் தமிழிலக்கியப் பயன் கோட்பாடு காணப்படுவது இலக்கணத்திலேயே என்பதை நன்குணர்ந்த நச்சினார்க்கினியர் இலக்கண விளக்கத்திற்காகக் கையாளப்படும் உவமமும் கற்பாருக்கு நாற்பொருளையும் பயத்தல் வேண்டும் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் உவமம் கூறுவதைக் காணமுடிகிறது. முதற் குறட்பாவில் கடவுளின் உண்மையை, அதாவது கடவுள் இருக்கிறார் என்னும் அவரது இருப்பைக் கூறிய திருவள்ளுவரை நினைவுபடுத்தி மொழியிலக்கணம் கற்கின்ற மாணவருக்கும் அவ்வுண்மையை உணர்த்த வேண்டும் என்னும் கடமை உணர்வோடு சிந்திக்கத்தக்கதோர் உவமத்தை நச்சினார்க்கினியர் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை அறியலாம். அதாவது உயிரின்றேல் மெய்யின் இயக்கம் இல்லை. இறைவன் இன்றேல் உலக இயக்கம் இல்லை என்பதாம்.

உயிருக்குள் அகரமுண்டா?

மெய்கள் இயங்குதற்கு அகர உயிர் காரணமென்பதைத் தொல்காப்பியம்,

‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ 46

என்னும் நூற்பாவில் விளக்குகிறது. தனிமெய்களினது நடப்பு அகரத்தொடு பொருந்தி நடக்கும் என்பது இதன் பொருள். நடப்பு என்பது ஒலிவடிவையும் வரிவடிவையும் குறிக்கும் அகரம் தவிர்த்த ஏனைய உயிர்கள் இயங்குவதற்கு அகரம் காரணமாவது யாங்ஙனம்? இதுபற்றித் தொல்காப்பியம் கூறியிருக்கிறதா என்னும் வினாவை உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தாமே எழுப்பிக் கொண்டு அதற்கான விடைகாண முயல்கிறார். சென்ற பத்தியில் விளக்கிய அவ்வுவமத்தின் பேராற்றலை முற்றும் உணர்ந்தவராய் எழுதுகிறார்.

இங்ஙனம் மெய்க்கண் அகரம் கலந்து நிற்குமாறு கூறினாற்போல பதினோருயிர்க்கண்ணும் அகரம் கலந்து நிற்கும் என ஆசிரியர் கூறாராயினார், அந்நிலைமை தமக்கே புலப்படுதலானும் பிறர்க்கு இவ்வாறு என்று உணர்த்துதல் அரிதாகலானுமென்று உணர்க

இறைவன் இயங்குதிணைக்கண்ணும் நிலைத்திணைக்கண்ணும்  பிறவற்றின்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையேயாய் நிற்குமென்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது’.

அகரமுதலஎன்னும் குறளான் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்கள் எல்லாம், அதுபோல இறைவனாகிய முதலையுடைத்து உலகமென வள்ளுவனார் உவமை கூறியவாற்றாலும், கண்ணன்எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானேஎனக் கூறியவாற்றானும் பிற நூல்களாலும் உணர்க

என்பது நச்சினார்க்கினியரின் உவம விளக்கம். உயிர் மற்றும் மெய் ஆகியவற்றின் இயக்கத்திற்கு அகரமே காரணமாகி நிற்கும் நுண்ணியத்தை   இறைத்தன்மையை  உவமமாக்கி விளக்கும் நச்சினார்க்கினியர், வள்ளுவர் கூறிய உவமத்தையும் வழிமொழிவதைக் காணமுடிகிறது.

நிலத்தது அகலம் போல

குற்றியலுரகத்தை நெடில், உயிர், வன்மை, மென்மை, இடைமை, ஆய்தம் என்னும் ஆறுவகையாகப் பாகுபடுத்தினர் இலக்கண ஆசிரியர்கள். தொல்காப்பியம் இதனை,

நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும்
குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே” 36

என்னும் நூற்பாவில் சிந்திக்கிறது. “வல்லெழுத்துக்கள் ஆறினையும் ஊர்ந்து நெட்டெழுத்தின்பின்னும் ஐவகைத் தொடர்மொழியின் இறுதியிலும் நிற்றல் வேண்டும்” என இதற்கு நச்சினார்க்கினியர் பதசாரம் தருகிறார். குற்றியலுகரத்தின் முன்னெழுத்து கொண்டு பெயர் பெறுவது ஆறுவகைக்கும் பொதுவாக இருந்தாலும் தொல்காப்பியம் நெடில் தொடரைத் தனித்து ‘நெட்டெழுத்து இம்பரும்’ எனப் பிரித்தாளுகிறது. இது பற்றிச் சிந்திக்கும் நச்சினார்க்கினியர், உண்மையில் இது பிரிப்பன்று. ஈரெழுத்தில் அமையும் நெடில் தொடரும் தொடர் மொழியில் அமையும் ஏனைய ஐவகைக் குற்றியலுகரமும் ஈறுபற்றியதே. எனவே இதனைத் தனியாகக் கருதுதல் வேண்டாம்.

நெட்டெழுத்தினது பின், தொடர்மொழி ஈறு என்பன நிலத்தது   
அகலம் போல ஒன்றியற் கிழமைப்பட்டு நின்றன.”

என்பது நச்சினார்க்கினியரின் உவம விளக்கம். இந்த விளக்கத்தால் நெடில் தொடர்க் குற்றியலுகரம் தனியாகாது, ஏனைய ஐந்துடன் ஒன்றி, ஆறே என்பதைப் பெறவைக்கிறார். வைத்து, தமது அளப்பரிய நினைவாற்றலுடன் “தொடர் மொழியீற்று” (36) வருமென்று ஆண்டுக் கூறியதனை ஐந்து வகைப்படுத்தி, அதனோடு நெட்டெழுத்து இம்பரும் என்றது ஒன்றேயாதலின் அதனையும் கூட்டி அறுவகைத்தென்றார்” (406) என்று நினைவூட்டுகிறார். நிலத்தது அகலம் என்னும் உவமம் குற்றியலுகரம் ஆறே என்பதை உறுதி செய்கிறது எனலாம்.

நிறைவுரை

இலக்கியத்திற்கு உரை எழுதுங்கால் இலக்கணத்தை மறக்காமலும் இலக்கணத்திற்கு உரைகாணுங்கால் இலக்கிய உணர்வோடும் எழுதுவது நச்சினார்க்கினியருக்கே உரிய சிறப்பு. இலக்கியப் பகுதிகளையே இலக்கண விளக்கத்திற்கு உவமமாக்கும் அவர், தமிழ்மொழியின் ஏனைய எழுத்துக்களில் அகரத்தின் ஆதிக்கத்தை இறைவனோடு பொருத்தி நோக்கிப் பொருத்தம் காட்டுகிறார். திருக்குறளின் உவமக் கோட்பாட்டில் ஈடுபாடு காட்டுகிறார். தலையின்றிக் கூந்தல் இல்லையாதல்போல நெடில்தொடர் இன்றிக் குற்றியலுகரம் நிறைவு பெறாது என்பதை ‘நிலத்தது அகலம்’ என்னும் உவமம் கொண்டு விளக்குகிறார். பானைச் சோற்றுக்குப் பதசோறாக அமைந்த இந்தக் கட்டுரை நச்சினார்க்கினியரின் ஏனைய இலக்கண, இலக்கிய உவமங்களைக் கண்டறிந்து துய்ப்பதற்கு ஏதுவாகலாம்.

(தொடரும்…)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க