மறப்போரிலும் அறம்

முனைவர் வி. அன்னபாக்கியம்,
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,
தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி(தன்னாட்சி),
சிவகாசி – 626 123.

முன்னுரை

சங்ககாலப் போர் முறைகளை அறிய உதவும் தொகை நூல்களில் புறநூல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அகநூல்களில் உவமையாக வரும் செய்திகளிலும் நீதி நூல்கள் சிலவற்றிலும் இப்போர் முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பண்டைக்காலப் போர்களின் துவக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் புவியாண்ட மன்னர்களின் பல்வேறு ஆசைகள் காரணமாக இருந்திருக்கின்றன. அவற்றின் காரணமாகச் செய்யப்பட்ட போர்களில் சில அறங்களையும் வியத்தகு மரபுகளையும் கையாண்டுள்ளனர். தமிழர்கள் போரின் போது கையாண்ட அறச் செயல்களை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

போர்அறிமுகம்

‘போர்’    என்னும் சொல் பொரு அல்லது பொருவுதல், ஒப்புதல் அல்லது ஒத்திருத்தல் எனப் பொருள்படும். அகராதிகள் போர் என்ற சொல்லுக்குச் சண்டை, யுத்தம் என்ற பொதுவான பொருளை நமக்குத் தந்துள்ளன. நாடுகளுக்கிடையே ஏற்படும் மோதலே போர் என்று களஞ்சியம் கழறுகின்றது. போர் பற்றிய பல்வேறு வளர்ச்சிப் படிநிலைகளைப் பற்றிப் பேசும் தொல்காப்பியர் “போர்“ என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.

போர்உலக இயற்கை

போர் இவ்வுலகத்திற்குப் புதியது அன்று. எல்லாக் காலங்களிலும் உலகில் எங்கோ ஒரு மூலையில் போர் நிகழ்ந்து கொண்டுதான் இருந்திருக்கின்றது. போரில்லாத உலகமே இல்லை எனலாம். இவ்வுலகில் பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் உலக நியதி என்றாற்போல போர் புரிவது உலக இயற்கை என சங்கப் புலவர்கள் கருதியதை,

            “ ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்றுஇவ் வுலகத்து இயற்கை ”                                             (புறம். 76)

என்ற இடைக்குன்றூர் கிழாரின் பாடல் மெய்ப்பிக்கின்றது.

தனக்குரிய பொருளைப் பிறர் பறிக்க நினைக்கும் பொழுது போர் தோன்றி இருக்கலாம். இயற்கையாகவே வலிமை உடைய ஒருவன், வலிமை குறைந்த மற்றொருவனை அடக்கி ஆள நினைத்தப்பொழுதும் போர் தொடங்கி இருக்கலாம். இவை போன்ற இன்னும் பல காரணங்களால் சங்கப்போர்கள் நடைபெற்றுள்ளன. இவ்வாறு காரணங்கள் பலவாக இருந்தாலும் செய்யப்பட்ட போரில் அறம் பின்பற்றப்பட்டுள்ளது என்பது போற்றுவதற்குரிய ஒன்றாகும்.

அறப்போர்

போர் மிகமிகக் கொடியது என்பதால் தமிழர்களின் முன்னோர்கள் அதற்குச் சில கட்டுப்பாடுகளை விதித்தனர். அக்கட்டுப்பாட்டோடு நடத்தும்போர் அறப்போர் எனப்பட்டது. போரில் ஈடுபடும் இருதிறத்து வீரர்களும் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அவ்விடத்தில் நேருக்கு நேர் நின்று போரிடுவர். இக்காலத்தில் நடைபெறுவது போன்று திடீரென்று தாக்கும் போர்முறை அக்காலத்தில் இல்லை. பலர் அறிய வஞ்சினம் கூறி, பொது இடத்தில் தம்மோடு ஒப்பாரிடம் மட்டுமே போரிடும் அறப்பண்பு வாய்ந்தவர்களாகப் பழந்தமிழ் வீரர் விளங்கினர்.

“சிறப்புக் கொள்கை கொண்ட அறம் கூறும் அவை”1 முன்பு இருந்ததாக மதுரைக்காஞ்சி கூறுகின்றது. புறநானூற்றில் அவ்வவை,

             “அறம் அறக் கண்ட நெறிமான் அவை”                                     (புறம்.224:4)

எனக் குறிக்கப்படுகிறது. அவ்வவையில் சட்டம் ஒழுங்குகளைக் காக்கும் காவிதி மக்களாகிய அமைச்சர்கள் இருந்தமையை,

            “ நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்து
பழிஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும் ”                             (மதுரைக்.496-499)

என மதுரைக்காஞ்சி எடுத்துரைக்கிறது. இவர்கள் மன்னனுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கி, அவனை நல்வழிப்படுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் மன்னன் நீதிநெறி தவறாத செங்கோல் ஆட்சி செலுத்தியுள்ளான்.

மேலும் இலக்கியங்கள் இயம்பக் கூடிய போர்கள் அனைத்தும் பெரும்பாலும் “நல்லமர்”2 என்றே குறிக்கப்படுகின்றன. இப்போர்கள், “அறத்தின் மண்டிய மறப்போர்” (புறம்.62:7) என்றும் “மறம் கந்தாக நல்லமர் ” (புறம்.93:8) என்றும் சுட்டப்படுகின்றன.

போர்க்களத்தில் புறமுதுகிடாமையும், புறமுதுகிடுவாருடன் போர் செய்யாமையையும் போர் அறமாக மதித்தவர் பண்டைத்தமிழர் என்பதை, “ நற்போர் ஓடா வல்வில் ” (முல்லைப்.38-39) எனவரும் முல்லைப்பாட்டு தொடர் உணர்த்துகின்றது. இங்கு ‘ நற்போர்; ’  என்பதற்கு அறத்தால் பொருகின்ற போர் என நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார். இதன்மூலம் மன்னர்கள் எவ்வளவுதான் வெறியோடு போர் செய்தாலும் அவை அறத்தின் அடிப்படையிலேயே நிகழ்ந்துள்ளதை அறிய முடிகின்றது. இதனால் “ போர் நெறியெல்லாம் கொலை வெறியேயாம் என்று பேசுதல் சங்ககால தமிழர் பண்பாட்டிற்கு ஒவ்வாததாகும் ” 3  என்பார் மா.ரா.போ.குருசாமி அவர்கள்.

மன்னர்கள் மற்றும் மறவர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் போராக சங்ககாலப் போர் இருந்தாலும் அவற்றிலும் அறம் பின்பற்றப்பட்டு அறப்போராகவே திகழ்ந்துள்ளன என்றால் மிகையாகாது.

பகலில் மட்டும் போர்

பழந்தமிழ்ப் போர்கள் அனைத்தும் பகல்பொழுதில் மட்டுமே நடைபெற்றிருக்கின்றன. இப்போர்கள் அனைத்தும் மாதக்கணக்கில் நடைபெற்றுவதால் காலையில் முரசறைந்து ஆரம்பமாகும் போர் மாலையில் முரசு அறைந்து நிறுத்தப்பட்டுள்ளன. பகலில் மட்டும் போரிட்டு இரவில் போரிடாமையைப் பண்டைத்தமிழர் போர் அறமாகப் போற்றியதால் பகலவன் மறையும் மாலை நேரத்தில் போரை நிறுத்திவிட்டு இரவுப்பொழுதில் பாசறை எனப்படும் கட்டூரின்கண் வீரர்கள் ஓய்வெடுத்துள்ளனர்.

            “ வெம்போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே
எஞ்சுவர் கொல்லோ, பகல்தவச் சிறிதே? ”                               (புறம். 79)

என்ற புறநானூற்றுப் பாடலில் பகலில் மட்டுமே வீரர்கள் போரிட்டு உள்ள குறிப்பு காணப்படுகின்றது.

பகலில் மட்டும் போரிட்டதற்கான காரணம், பகைவர்களைத் தெளிவாக அடையாளம் பார்த்துப் பகலில் மட்டுமே முடியும். சூரியன் மறைந்த இரவுப்பொழுதில் தமர் யார், பகைவர் யார் என்று அடையாளம் காண்பது கடினம். மேலும் பகல் முழுவதும் சளைக்காமல் போரிடும் வீரர்களுக்கு சிறிது நேரமாவது ஓய்வு தேவைப்பட்டது. இத்தகைய காரணங்களால் பகலில் மட்டுமே போரிட்டுள்ளனர். இரவுப்பொழுதில் பாசறையில் தங்கியிருக்கும் காயமுற்ற வீரர்களுக்கு ஆறுதல் சொல்லும் அரசனின் செயல்(நெடுநல்வாடை) அறமாகக் கருதப்படுகின்றது. அரசனின் இச்செயலை ஆராயும் பொழுது பகலில் போரிடுவதும் இரவில் போர் நிறுத்தப்படுவதும் போரின் அறச்செயலாகவே உணரமுடிகின்றது. பகை கொண்ட அரசனிடத்தும் அவனைச் சார்ந்து போர் செய்யும் வீரர்களிடத்தும் சினத்தைக் காட்டும் மன்னன் தன் வீரர்களிடம் அன்பு காட்டுவது மறத்திடையே தோன்றிய அறமாகும்.

பகலில் போர் செய்ததற்கான குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை என்றே கூறலாம். ஆனால் வெட்சிப்போர் பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பிய நூற்பாவிற்கு உரையெழுதும் உரையாசிரியர்கள், போரின் முதல் நிலையாகிய ஆநிரை கவர்தல் என்பது இரவில் சமயம் பார்த்து கவர்ந்து வருவதாகும் என்று உரை விளக்கம் தந்துள்னர் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

களம் நிறுவிப் போர் 

பழந்தமிழர்கள் பகைவரை மறைந்திருந்து தாக்குதல் மற்றும் எதிர்பாராமல் தாக்குதல் ஆகிய மடைமையின்றி களம் ஒன்றை நியமித்தே போர் செய்துள்ளனர். அவை இலக்கியங்களில் களம், முதுநிலம், பறந்தலை என்றெல்லாம் கூறப்பட்டுள்ளன. களரும் மணலும் பரந்த வெளிகளான பறந்தலை எனப்படும் இடங்களையே வேந்தர்கள் போர்க்களமாக அமைத்துக்கொண்டனர் என்பதை வாகைப்பறந்தலை, வெண்ணிப்பறந்தலை, தலையாலங்கானம் ஆகிய இலக்கியச் சான்றுகளால் அறியமுடிகின்றது.

போர் செய்ய கருதிய மன்னன் தனக்குச் சாதகமான இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது போர் முன்னேற்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுமாயினும் பகைவனுக்குச் சாதகமான போர்க்களத்தில் அவனோடு போரிட்டு வெற்றிபெறுவதே உண்மையான வெற்றி என்று கருதப்பட்டுள்ளது. அதனையே மன்னனும் மறவர்களும் பெரிதும் விரும்பியுள்ளனர்.

களம் நிறுவிப் போரிட்டதால் போர் காரணமாக போர்க்களத்தில் உள்ளவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். போரிலிருந்து விலக்குப் பெற்றவர்கள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டனர். இதனால் சங்ககாலப் போர் அறப்போராக கருதப்படுகின்றது. ஆனால் இன்று போர் என்ற பெயரில் தரைவழித்தாக்குதல், வான்வழித்தாக்குதல், நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் கடல்வழித்தாக்குதல், ஏவுகணை மூலம் குண்டுமழை பொழிதல் போன்றவற்றைக் காண முடிகின்றது. இதனால் போருக்குச் சற்றும் தொடர்பில்லாத அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இவை அரக்கத்தனமான செயலாகும். எனவே இன்றைய காலப் போரோடு அன்றைய போரை ஒப்பிடும்போது அன்றைய போர் அறப்போரே என்பதில் சிறிதும் ஐயமில்;லை.

மறத்திலும் அறம்

போரின்போது பகைவர் நாட்டிலுள்ள மக்கள் யாவரையும் அழிக்க வேண்டும் என்பது போர் மேற்கொள்ளும் மன்னனின் நோக்கம் அன்று. எனவே, போர் தொடங்குவதற்கு முன்னால் போர்ச் செய்தியினை முரசறைந்து தெரிவிப்பது மரபாகும். அப்போது போரில் கலந்து கொள்ளாதவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் சென்று தங்குவதற்கு எச்சரிக்கை விடுப்பதும் உண்டு.

            “ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின் என
அறத்தாறு நுவலும் பூட்கை”                                                      (புறம்.9:1-6)

என்ற பாடல் அவ்வெச்சரிக்கைளை எடுத்துரைக்கின்றது. இவை போருக்கு முன் செய்யப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாகும். இவ்வெச்சரிக்கை பசுக்களுக்கு விடுத்ததாகக் கொள்ளாமல் அவற்றை உடையார்க்கும் பிறருக்கும் விடுத்ததாகக் கொள்வதே முறை. போரில் அப்பாவி மக்கள் அழிந்து விடக்கூடாது என்பதற்காக மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றிடுமாறு செய்யப்பட்ட இவ்வெச்சரிக்கையால் பண்;டைத்தமிழரின் அறவுணர்வு புலப்படுகின்றது.

தொல்காப்பியப் பொருளதிகார நூற்பா ஒன்றிற்கு உரை எழுதும் நச்சினார்க்கினியர்,

“கோழைகள் மயிர்குலைந்தோர் பெண்பெயர் கொண்டோர் படைக்கருவிகளை நழுவவிட்டோர் ஒத்த படை எடாதோர் என்பவர்களும் ” 4   போர்க்கொடுமையினின்றும் விலக்கப்பட வேண்டியவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.  இதன்மூலம் தமிழர்தம் போர்முறையில் கடைப்பிடித்த சில அறச்செயல்களை  நாம் அறியமுடிகின்றது.

போரில் நல்லவர்கள் அழியக்கூடாது என்பதற்காக, கடுஞ்சினம் கொண்டு மதுரையைச் சீறியழித்த கண்ணகியும் தீக்கடவைள ஏவும்போது,

                        “ பார்ப்பார் அறவோர் பசுபத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தோர் பக்கமே சேர்க ”                            (சிலம்பு.26:225-230)

என்று பணித்ததாக அடிகள் கூறுவார்.

போர்க்களத் தாக்குதலிலிருந்து காக்கப்பட வேண்டியவர்களாக,

            “ உடையிட்டார் புன்மேய்வார் ஓடுநீர் புக்கார்
படையிட்டார் பற்றேதும் இன்றி – நடையிட்டார்
இவ்வகை ஐவரையும் என்றும் அணுகாரே
செவ்வகைச் சேவகர் சென்று ”                             (சிறுபஞ்ச.41)

என சிறுபஞ்சமூலம் கூறுகின்றது. அஃதாவது ஆடை களைந்தோரும், புல்மேய்வோர் போல் வீழ்ந்து கிடப்போரும், நீரில் இறங்கிவிட்டவர்களும் படையைக் கீழே எறிந்து விட்டவர்களும், ஆதரவின்றி நிற்பவர்களும் ஆகிய இவர்கள் போர்க்களத் தாக்குதலிலிருந்து காக்கப்பட வேண்டியவர்கள் ஆவர்.

தமிழ்வேந்தர் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படாத தன்மையினர் என்பதைப் புறநானூறு குறிப்பிடுகின்றது. “வீரரல்லாதோர், புறமுதுகிட்டோடுவோர், போரில் புண்பட்டோர், வயோதிகர், மிக்கிளையோர் என்பவர் மீது போர் தொடுத்தல் படைமடம்” 5  எனப்படும்.

போரின் போது பகைவர் அஞ்சிப் பின்வாங்குவார்களேயானால் அவர்களைக் கொல்லாமல் விடும் பண்பையும் சங்ககால வீரர் பெற்றிருந்தனர்.

                        “புல்லென் கண்ணர் புறத்தில் பெயர
ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான் ஆண்டுஅவர் ”                     (புறம.78:8-9)

என்று புறமுதுகு காட்டி ஓடும் பகைவர்களைக் கொல்லாமல் விட்டுவிடும் பண்புள்ளவர்களாக இருந்துள்ளனர்.

“போர்க்களத்தில் வெற்றி காணும் நம்பிக்கை குறைந்துபோயின் வீரர்கள் தங்கள் தோல்விக்கு அறிகுறியாய் படைக்கலன்களைக் கீழே போட்டு விடுதலும் மரபாக”6 இருந்ததாக ஆ.இராமகிருட்டிணன் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு “ ஆயுதம் இல்லாத நிலையில் எதிரி நிலை குலையும் போது அதை ஒரு வாய்ப்பாகக் கருதித் தாக்குவதைக் கோழைத்தனமாகக் கொண்டனர்”7  என்பார் வே.தி.செல்லம்.

இவ்வாறாக போருக்கு அஞ்சிப் புறமுதுகு காட்டி ஓடும் பகைவரைத் தாக்கும் மரபும், நிராயுதபாணியைத் துன்புறுத்தும் மரபும் பண்டைத்தமிழரிடம் இருந்ததில்லை. எனவே போர்க்களத்தில் தமக்குச் சமமான வலிமையில்லாதவரோடு போரிடுவது அறமாகப் போற்றப்படவில்லை என்பது புலனாகிறது.

முடிவுரை

போர் என்றாலே அது மறத்தைக் குறிக்கும். அதாவது வீரத்தைக் குறிக்கும். அங்கே அறம் எப்படி நிலைபெறும் என்ற வினாக்கள் நமக்கு எழலாம். இதற்கு விடையாக பல சான்றுப் பாடல்கள் கொடிய போர்க்களத்திலும் அறச்செயல்கள் பல நிகழ்ந்துள்ளதை எடுத்துக்காட்டுகின்றன. போரினால் ஏற்படும் விளைவுகளைக் குறிப்பாக அவலங்களை அக்கால மன்னர்கள் உணர்ந்திருந்தனர். கல்லுக்குள் ஈரம் என்பது போல் தமிழ் மன்னர்கள் வீரம் மிக்கவர்களாக இருந்தாலும் அவர்கள் உள்ளத்தில் ஈரம் உடையவர்களாக, இரக்கம் உடையவர்களாக விளங்கினர் என்பதை அவர்கள் செய்த போரின் போது பின்பற்றிய நெறிமுறைகளை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம். இன்றைய போரிலும் அத்தகைய நெறிமுறைகளைப் பின்பற்றினால் நாடு அமைதிப் பூங்காவாகத் திகழும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அடிக்குறிப்புகள் 

1. மதுரைக்காஞ்சி : 492

2. புறம்.16:18, 93:9, 125:15, அகம்.67:8, 77:9, பதிற்று.42:9, 52:10

3. மா.ரா.போ.குருசாமி, சங்ககாலம், ப.67

4. தொல்.பொருள். 57 (நச்சினார்க்கினியர் உரை)

5. புறம். 142 உரை

6. ஆ. இராமகிருட்டிணன், தமிழக வரலாறும் பண்பாடும், ப. 113.

7. வே.தி. செல்லம், தமிழக வரலாறும் பண்பாடும், ப. 114-115.


ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

“மறப்போரிலும் அறம்’ என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறைகள் பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் பரிந்துரை!

1. ஆய்வுக்கட்டுரைக்கான புறக்கட்டுமான நெறி பின்பற்றப்படாததால் பொதுக்கட்டுரையாகவே கருத வேண்டியிருக்கிறது.

2. மறத்திலும் இழைந்த அறத்தை உறுதிசெய்ய கட்டுரையாசிரியர் பழந்தமிழ் இலக்கிய இலக்கண நூல்களிலிருந்து எடுத்துக்காட்டுகளையும் சான்றுகளையும் தொகுத்துக் கூறியிருப்பது பாராட்டுக்குரியது.

3. களம், கானம், பறந்தலை என்னும் களப்பகுப்புக்கு ஆசிரியர் காட்டியிருக்கும் எடுத்துக்காட்டுகள் சிறப்பாக உள்ளன.

4. ‘பகலில் மட்டும் போர்’ ‘படையிழந்தவரிடமும் ‘புறமுதுகு காட்டியவரோடும் போரில்லை என்பதைச் சிறப்பாகச் சுட்டிக் காட்டியிருக்கும் ஆசிரியர் ‘தழிஞ்சி’ என்னும் துறையை விளக்கியிருந்தால் கட்டுரை இன்னும் முழுமை பெற்றிருக்கும்.

5. இதுபோன்ற கட்டுரைப் பொருண்மைகளில் அவ்வக்கால மக்கட்தொகையும் அறிவியல் வளர்ச்சியும் கருததிற் கொள்ளப்படல். வேண்டும். கொள்ளப்பட்டிருந்தால் தற்காலத்தோடு ஒப்பிடுவதன் பொருத்தமின்மை புலப்பட்டிருக்கக் கூடும்.

6.  வெட்சித் திணையிலிருந்தே பழந்தமிழர் போரறம் தொடங்கிவிடுவதால் போர்க்களத்தில் ‘தும்பை’ என்பது இறுதி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

7.  ‘துவக்கம்’ என்ற சொல் இலக்கியப் பயன்பாடு இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

8.  ‘நினைத்தப் பொழுது’ என்னுமிடத்தில் வலி மிகாது. ‘வீரர்களுக்கு சிறிது’ என்னுமிடத்தில் ஒற்று மிகும்.

9. தமிழ் மன்னர்களின் உள்ளத்தைக் கல் என்பதாகவும் அவர்கள் போரக்களத்தில் காட்டிய  அறவுணர்வை ஈரம் என்பதாகவும் கட்டுரையாசிரியர் கூறுவதற்கு எள்ளின் முனையளவும் தொகையிலக்கியங்களில் சான்று கிடையாது. ‘கொடைமடம்’ என்பதே உயிரிரக்கத்தின் புறவெளிப்பாடு. மயிலின் நாட்டியத்தையும் காற்றில் கொடி அசைவதையும் அவற்றின் நடுக்கமாகக் கருதியவர்கள். அவர்களுக்கு ஈரம் இதயத்தோடு ஊறி வருவது.

ஆய்வுக் கட்டுரைக்கான  புறக்கட்டுமான நெறி பின்பற்றப்படாததால்  இலக்கியக் கட்டுரைகள்  பகுதியில் வெளியிடுகிறோம்.

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க