திருச்சி புலவர் இராமமூர்த்தி

வரலாறு

அவர்கள் விரைந்து நடந்தபோது பற்பல வளங்களையும் அலைகளில் திரட்டி ஓடும் பொன்முகலி ஆற்றங்கரையை அடைந்தனர்.அங்கே உயர்ந்த மரத்தினடியில் வேட்டையாடிய பன்றியை காடன் என்பவனை,  தீக்கடைக்  கோலால் நெருப்பை  உருவாக்கச் சொல்லிவிட்டு, நாணனும்  திண்ணனாரும் மலைமேல் ஏறத்தொடங்கினர்!  தெளிந்த சிந்தையுடன் திண்ணனார் பொன்முகலி நதியில் முதலில் நீராடினார்; நதியின்  கரையேறினார். மலைச் சாரலை அடைந்தார். (முறைப்படி நீராடி உடல் தூய்மை பேணி, பிறவிக்கடலின் கரையேறியதை இந்நிகழ்ச்சி குறிக்கிறது!)

அப்போது மலையுச்சியிலிருந்து பெருமுழக்கம் திண்ணனாருக்குக் கேட்டது!

(இது அவருக்கு மட்டும் கேட்ட தேவ துந்துபி ஓசை! வேதம் நான்கும் விஞ்சையர் வீணையிசையும் ஐவகை ஓசைகள்) ஈதென்ன ஓசை? என்று கேட்ட திண்ணனாரிடம் நாணன், ‘’மலையருவியில் தேன்கூட்டினைச்  சுற்றும் வண்டோசை  போலிருக்கிறது’’ என்றான் . அப்பொழுது,திண்ணனார்  முன்பு செய்த தவத்தால்  முடிவற்ற இன்பம் தரும் அன்பீனும் ஆர்வம் பொங்கியது! அவருடைய எலும்புகள் கட்டுவிட்டு உருகின; வேட்கை மிகுந்தது. இப்போது சேக்கிழார் பாடுகிறார்,

பாடல்

நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏறத் தாமும்
பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி,
ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல, ஐயர்
நீள் நிலை மலையை ஏறி, நேர் படச் செல்லும் போதில்.

பொருள்

நாணனும் அன்பும் தமக்குமுன்னே குளிர்ந்த மலையை ஏறிச்செல்ல;  திண்ணனார்தாமும்;  பேணுகின்ற தத்துவங்கள் என்கிற பெருகும் படிகளையேறிச் சத்தியே வடிவமாகிய சிவத்தைச்சார அணைபவர்களாகிய சிவயோகிகள்போல ஐயரது நீண்ட நிலைமையுடைய மலையைஏறிநேர்படப் போகும்போதில்,

ஆர்வம்  காதல்  வேட்கை  என ஒன்றினொன்று மிக்க மூன்றுநிலையில் வெளிப்பட்டது. இவை இச்சா சத்தியின்றொழில். அது. (இச்சை) முன்னர்ச்சென்றது. பேணுதத்துவங்கள்.- பேணுதல் – போஷித்தல் -வளர்த்தல். கண்ணுக்கு விளக்குப்போலத்தத்துவங்கள் ஆன்மாவுக்குச்சகலநிலையில் அறிவு இச்சை செயல்களின் வளர்ச்சிக்குக்கருவியாய் அவற்றைவளர்த்தலின் பேணுதத்துவங்கள் என்றார். “வருமிவள் நம்மைப் பேணு மம்மைகாண்” என்ற காரைக்காலம்மையார் புராணங் காண்க. பேணுதல் – வழிபாடு செய்தல் என்றலுமாம். “கொன்றையா னடியலாற் பேணா எம்பிரான் சம்பந்தன்” என்ற திருத்தொண்டத்தொகை காண்க. தத்துவங்களை வழிபாடுசெய்தல் சிவபூசையில் பதுமாசன பூசையிலும், நிர்வாணதீட்சையில் அத்துவ சோதனையிலும் நமாந்தமாகத் தத்துவங்களை வழிபடுதல். இம்முறைகள் ஆகமங்களில் விதிக்கப்பட்டன.

தத்துவங்கள் என்னும் பெருகுசோபானம்  என்ற தொடர் ,  இங்குத் தத்துவமென்றது சுத்தம் அசுத்தம் என்ற இருவகை மாயைனின்றுந் தோன்றிய நிலமுதல் சிவமீறாக உள்ள முப்பத்தாறினையுமாம். இவைகளைத் தத்துவம் என்றது எல்லாஉயிர்களுக்கும் போகத்தைக் கொடுப்பனவாய்ப் பிரளயம்வரை உள்ளன என்னும் பொருள் பற்றியாம். நிலம்முதலாக ஒவ்வொன்றினையும் ஏறி அனைத்தையுங் கடந்து பரம் பொருளை அணைதற்குப் படிகள் போல இவை அமைதலின் தத்துவப்படி – தத்துவ சோபானம் என்பர்.

முதலாவதாகிய நிலம் நூறுகோடி 1யோசனைப்பரப்புடையது. நிலத்துக்குப் பத்துமடங்கு விரிந்தது அப்புதத்துவம். இவ்வாறே அப்பு முதல் குணதத்துவம்வரை ஒன்றுக்கொன்று பத்துமடங்கு விரிவுள்ளன; அதன் மேற் பிரகிருதிமுதல் அசுத்தமாயாதத்துவம் வரை ஒன்றுக்கொன்று நூறுமடங்கு விரிவும், சுத்தவித்தைமுதல் சதாசிவதத்துவம் வரை ஒன்றுக்கொன்று ஆயிரமடங்கு விரிவுமுடையன. அதன்மேற் சத்திதத்துவம் இலக்கம்மடங்கு விரிவுடையது. அதன்மேற் சிவதத்துவம் எல்லைகடந்தது. இவ்வாறு இவை ஒன்றினொன்று மேல்விரிந்து செல்லுதலின் பெருகு சோபானம் என்றார்.

ஆணையாம்சிவம் – புறப்பொருளை நோக்காது பேரறிவுமாத்திரமாய் நிற்கின்ற சைதன்னியமே சிவம். அச்சிவம் உயிர்களுக்குப் பசுத்துவத்தைநீக்கிச் சிவத்துவத்தை விளக்குதலில் உள்ளதாகிய இரக்கமே அருள். ஆதலின் ஆணையாம் சிவம் என்றார். அருள் – சத்தி – ஆணைஎன்பன ஒருபொருட்சொற்கள்.

“ஆணையின் நீக்க மின்றி நிற்குமன்றே” என்பது சிவஞானபோதம்.

இனி, அச் சிவமென்னும்பொருள் உயிர்கட்கு அருளும்பொருட்டுத் தோன்றுங்கால் அருளாகிய ஆணையினிடமாகத் தோன்றுதலின் ஆணைஆம் என்றார் என்றுரைத்தலுமாம். இப்பொருட்கு ஆணை – ஆணையினிடத்து, ஆம் – தோன்றும் என வுரைத்துக் கொள்க.

“முன்னருட் சத்திதன்பால் முகிழ்க்குந்தான் முளையான்”

என்ற சிவஞானசித்தியாரும், அதற்கு “அவன் யாண்டுஞ் சத்தியினிடமாகவே தோன்றுவானன்றித் தானாக வேறு தோன்றான்” என்னும் பொழிப்புரையுங் காண்க. இதற்குத் தனக்குமேற்பட்ட ஆணையில்லாத சிவம் என்றுரைப்பாருமுண்டு.

சார – முன்சார்ந்துநின்ற பாசச்சார்பைவிட்டுச் சிவத்தைச்சார, ஆணவத்தொ டத்துவிதமாதலை விட்டு, மெய்ஞானத் தாணுவினோ டத்துவிதமாய்ச் சார என்க. சார்பு – “சார்புணர்ந்து” என்ற திருக்குறளுங்காண்க.

அணைபவர்போல – அணைபவர் – சிவயோகிகள். இவர்கள் நிலமுதற் சிவமீறாகிய 36 தத்துவங்களையும் படிமுறையானே ஏறி நீக்கிச் சிவத்தை அணைந்து சார்வர்.

“பூதமுங் கரணம் பொறிக ளைம்புலனும் பொருந்திய குணங்களோர் மூன்றும், நாதமுங்கடந்த வெளியிலே நீயு நானுமாய் நிற்குநா ளுளதோ?”

என்றபட்டினத்தடிகள் திருப்பாட்டும்,

“ஆறா றையுநீத் ததன்மே னிலையைப்,
பேறாவடியேன் பெறுமாறுளதோ?”

என்ற கந்தரனுபூதியுங்காண்க.

ஐயர் – பெருமையுடையவர். ஐம்புலன்களையும் வென்றமுனிவர். ஐயர்மலை – ஐயர்கள் வாழ்கின்றமலை என்பதாம்.

“ஐந்துமா றடக்கி யுள்ளா ரரும்பெருஞ் சோதி யாலும்” என்றுபின்னர்க் கூறுவதனால் இம்மலையில் முனிவர்கள் தவஞ்செய்து வாழ்தல் பெறப்படும்.

இனி, ஐயர் – இறைவன் என்று கொண்டு, அவர் எழுந்தருளிய மலை என்றலுமாம்.

நீள்நிலை – நீள் – நெடுந்தூரம் வடிவத்தாலும் நீளுவது. நீள்நிலை – முக்காலத்திலும் ஒப்ப நீளும் தன்மையுடையது. இத்தலம் ஐந்துயோசனை அகலமும் பத்துயோசனை நீளமும் உடையது என்பது திருக்காளத்திப்புராணம் சூதசங்கிதை முதலியவற்றா னறியப்படும். இதுகயிலையேயாதலின் என்றும் அழியாது நிலைத்த தன்மையுடையது என்க.

நேர்பட – எதிர்ப்பட. எந்தப்பேற்றினைப் பெறுதற்கு அவதரித்தனரோ அதனைப் பெற. எதிர்ப்படுதல் என்பதுணர்ந்தும் நேர்படுதல் என்னும் சொல் ஈண்டு நேர்ப்பட்ட வழிப் பெறும் பயனைப்பெற என்ற பொருளில் வந்தது.

“கீழ்ச் செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டு” என்ற திருவாசகத்தின் சொல்லும் பொருளும் இங்குவைத்துக் காண்க.

அணையும் போதில் அங்கணர் அருட்டிரு நோக்கமெய்த என்று வரும்பாட்டுடன் கூட்டி முடிக்க. 103

  1. யோசனையாவது 24 அங்குலம்கொண்ட முழத்தினாலே 16000 கொண்டது ஒரு குரோசமாக, நான்கு குரோசங்கள் கொண்டது ஒருயோசனையாம். எனவே 64000 முழம் ஒரு யோசனை எனப்படும். இதுபற்றி “சாளரத்திற்றோன்றும் ஞாயிற்றின் கதிரின் அதி நுட்பமாய்த் தோன்றும் நுண்ணிய துகள் அணுவெனப்படும் அஃதெண்மடங்கு கொண்டது திரிசர அணு. அஃதெண்மடங்குகொண்டது கசாக்கிரம். அஃதெண்மடங்கு கொண்டது இலீக்கை. அஃதெண்மடங்கு கொண்டது யூகை. அஃதெண்மடங்கு கொண்டது இயவைநெல்லு. இயவை நெல்லகலம் எட்டுக்கொண்டது ஓர் அங்குலம். அங்குலம் இருபத்துநான்கு கொண்டது ஒருமுழம். முழம் நான்குகொண்டது ஒருவில். வில்லிரண்டுகொண்டது. ஒரு தண்டம். தண்டம் இரண்டாயிரங்கொண்டது ஒரு குரோசம். குரோசம் நான்குகொண்டது ஒரு யோசனை; ஆகலான் இந்த அளவையாற் சாதராண புடவிதத்துவமாகிய அண்டம் நூறுகோடியோசனை ஆழ வகல நீளங்களையுடையது” என்று சிவஞானபாடியம் 2, 3-ல் “அரவுதன்” என்ற வெண்பாவின்கீழ் உரைத்தவைகாண்க. வில் ஒரு அளவு என்பது “பட்டிகை யெட்டா தங்கு நூறு விற்கிடக்கை முன்னே போனது” (திருஞான – புரா – 815) என்றதனாலும் அறிக.

இத்திருப்பாடலால் முதலில், திண்ணன்  திண்ணனார் என்னும் சிவனடியாராகும் உயர்நிலை  படிப்படியாக உரைக்கப் பெறுகிறது.பின்னர் அடியார்  முதலில் நீராடி உடல் தூய்மை பெறுதலும், அடுத்து பிறவிக்கடலின்  கரையேறலும், அடுத்து  ஆர்வம் , காதல், வேட்கை ஆகிய மூன்று  தத்துவப் படிகளில் அடியார் மேலேறி ஆணையாம்  சிவத்தைச் சார்தல் கூறப்படுகிறது. பின்னர் உயிர் பசுத்துவத்தை விட்டு மேலேறி பதித்தத்துவத்தை அறிந்து காதலும் வேட்கையும் கொண்டு,   மேலேறி நேர்படச்  செல்லும் அருமை முறையாக விளக்கப் பெறுகிறது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *