கதையும் மொழிதலும் – 3 புதுமைப்பித்தனின் ‘கயிற்றரவு’
முனைவர் ம. இராமச்சந்திரன்
உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
ramachandran78.blogspot.com
9360623276
“காலம் ஒருவனை உயிர்ப்பிக்கிறது புகழ்விக்கிறது உச்சாணிக் கொம்பில் நிலைநிறுத்துகிறது. அதே காலம் அவனைக் குப்பைத்தொட்டியில் வீசி எறிகிறது, காய்ந்த சருகென அனாதையாக்குகிறது “
மனித வரலாற்றில் அனைத்துச் சிந்தனையாளர்களையும் கவர்ந்த புதிர், காலம். காலக் கோட்பாடு மிகவும் முக்கிய இயங்கு தளமாக எல்லா நிலைகளிலும் இருந்து வந்துள்ளது. இடம், பொருள், காலம் என்ற சிந்தனை பகுத்தறிவின், அறிவியலின் முக்கியப் புள்ளியாக வினையாற்றியுள்ளது. வாழ்க்கை, காலச் சக்கரத்தில் சிக்கி, மனிதர்களை எவ்வாறு பந்தாடுகிறது என்பதை இலக்கியப் படைப்புகள் வெளிப்படுத்துகின்றன. காலப் பிரக்ஞை மனிதனுக்கு இருக்கிறதா இல்லையா என்ற வினா, விடையில்லாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்து சென்ற வாழ்வியல் நிகழ்வுகளின் தொகுப்பாக இலக்கியங்கள் படைக்கப்படும்போது நிகழ்வுகளை இடம், காலம் பற்றிச் சிந்திக்கும் போக்கு இயல்பாக அமைந்துவிடுகிறது. இடத்தைப் பற்றிய நுண்ணுணர்வும் காலத்தைப் பற்றிய அக்கறையும் இலகுவாக வாசகனுக்கு வசப்பட்டுவிடுகின்றன. ஆனால் வாழ்ந்து முடித்த கதைமாந்தர்களுக்கும் அப்படிப்பட்ட ஒன்றாகவே இருந்து வருவதை எண்ணும்போது, காலச் சிந்தனை மற்றும் புரிதலில் பெரும் மாற்றத்தை விளைவிப்பதைத் தொடர்ந்து கவனித்துவர முடிகிறது.
காலம் என்ற தத்துவத்தைப் புதுமைப்பித்தன் பரமசிவம் பிள்ளையின் மூலம் விவாதத்திற்கு உட்படுத்த முயலும் கதையாக ‘கயிற்றரவு’ அமைந்துள்ளது. கயிறு+அரவு என்ற இரு பெயர்கள் கொண்ட சொல்லாக இது உள்ளது. மனதின் இயக்கமாகக் கயிறு அரவாகவும் அரவு கயிறாகவும் மனம் காட்டும் இந்தத் தத்துவ மரபின் போக்குகளை விவாதித்துச் செல்கிறார். உலகம், உயிர்கள், இறைவன் என்ற முப்பொருள் உண்மையில் இறைவன் தவிர்த்து உலகமும் உயிர்களும் காலப் பிரக்ஞை அற்று இயங்கிக்கொண்டு இருப்பதும் அவ்வியக்கத்தைக் கயிறால் கட்டியிழுக்க மனிதன் மேற்கொண்ட கணக்கே காலம். காலத்தின் பார்வையில் உலகப் பொருட்களைத் தனது சிந்தனைக்கும் அறிவுக்கும் உட்பட்ட செயல்களாகக் கட்டியெழுப்ப எண்ணுகிறான். ஆனால் அனைத்தும் தனது கருவூரை நோக்கியே பயணப்படுகின்ற வாழ்வியல் நிலையைச் சற்று உரத்துக் கூறுவதாகப் பரமசிவம் பிள்ளை படைக்கப்பட்டுள்ளார்.
ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பரமசிவம் பிள்ளை பனை மரநிழலில் வெளிக்குப் போய்கொண்டு இருக்கிறார். சுதந்திரச் சுற்றுப்புற வெளி தத்துவார்த்தச் சிந்தனைக்கு அவரைக் கொண்டு செல்கிறது. ஒவ்வொரு பொருளும் எப்படி இருப்பதும் இல்லாமல் போவதுமான செயல்பாடுகளை எண்ணும்போது விசாரணை, தன்னை நோக்கித் திரும்புகிறது. தனது வாழ்க்கை நோக்கி பயணப்பட்டு நிலையாமையின் பெரும் தத்துவமாக வளர்ந்து நிற்கிறார். நொடிகள், நிமிடங்கள், மணிகள், நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள், யுகங்கள் என்று காலத்தின் கருவறைக்குப் பயணப்பட்டுத் தனது வாழ்க்கையில் முடிக்கிறார்.
வெயில் தாளாமல் அருகில் இருக்கும் விடலிப் பனை நிழலில் போய்க் குந்துகிறார். சற்றுச் செளகரியமாக உணர்கிறார். மனதில் ஒரு நிம்மதி ஏற்படுகிறது. இது உயரம் குறைந்த விடலிப்பனை நல்ல நிழல். இதோ அந்த இடத்தில் மூத்த பனை இருந்தது. போன ஆடிக் காற்றில் சாய்ந்துவிட்டது. இப்போது அது இருந்ததற்கான இடம் தென்படவே இல்லை. காலம் அனைத்தையும் தன்னுள் கரைத்துக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. விழுந்த பனை விட்டமாக, விறகாக மாறி இறுதியில் வந்த இடத்திலேயே மீண்டும் ஐக்கியமாகி விடுகிறது.
ஆற்றங்கரைப் படிக்கட்டு அழகாக அடுக்கப்பட்டுக் கட்டப்பட்டுள்ளது. அழகியநம்பியா பிள்ளை காலையில் வந்து துணி துவைத்துக் குளித்துத் திருநீறு அணிந்துகொண்டு வீடு திரும்பும் அதே இடம், இன்று தூர்ந்துபோய் உள்ளது. காலமாற்றத்தில் இதன் தேவை இல்லாமல் போனது. காற்று அடிக்கிறது, மழை பெய்கிறது, ஆற்றில் வெள்ளம் வருகிறது ஆனால் அன்றைய வளமைகள் இன்று இல்லாமல் போய்விட்டன. அணுக்கூட்டத்தின் தொகுப்பில் ஓரணு வீரியம் பெற்று உந்தித் தள்ளி தன் முனைப்பில் ஆற்றல் கொண்டு கருவூர் அடைந்து உயிர் பெற்றது என்று தனது பிறப்பைக் கூறுகிறார். இங்குப் புதுமைப்பித்தனின் தத்துவ விசாரணை, மேன்மை கொள்கிறது. உயிர்களின் தோற்றமும் வாழ்வியல் கற்றலும் மனிதனுக்கு வாழச் சொல்லிக் கொடுக்கின்றன. தானும் அப்படியே வளர்ந்து நிற்பதாக நினைவுகூர்கிறார்.
கற்றலின் கற்பித்தலின் ஊற்றாகப் பெருவெள்ளத்தை அழகியநம்பியா பிள்ளையின் உணர்ச்சிப்பெருக்கில் சொல்லிச் செய்கிறார். நம்பியா பிள்ளை தனது மகனுக்குப் பெயரைச் சொல்லிக் கொடுக்கிறார். தனது பெயர் நம்பியா பிள்ளை என்றும் உனது பெயர் பரமசிவம் என்றும். ஆனால் குழந்தையைக் கைகளில் தூக்கிக்கொண்டு நம்பியா பிள்ளை யாரு? என்று கேட்கும்போது குழந்தை தன் மேல் கை வைத்தது. உடனே ‘முட்டாப்பயலே’ என்று கூறி அதுதான் என்றும் உனது அப்பா என்றும் புரிய வைக்கிறார். பிறகு மீண்டும் கேட்கும்போது குழந்தை சரியாகச் சொல்கிறது. நம்பியா பிள்ளை மகிழ்ச்சியில் திளைக்கிறார். வாழ்க்கை, உறவுகள், தொழில் என்று கற்றுத் தரப்படும் வாழ்க்கையின் நாத தாளங்கள், நெளிவு சுழிவுகளை வியக்கிறார்.
இவ்வாறு கற்றுக்கொண்ட பாடத்தின் மூலமாகத் தானும் இன்று ஐம்பதைக் கடந்து வாழ்ந்து வருவதை எண்ணுகிறார். காலம் போடும் கோட்டில் யாரும் தப்பிக்க முடியாது. உலகம் கோடானு கோடி ஆண்டுகள் இயங்கிக்கொண்டே இருக்கிறது. இருக்கும். பரமசிவம் பிள்ளையின் உடல் தளர்ந்துவிட்டது. வாழ்ந்த வீடும் தன்னிலை இழந்து இயற்கைக்குத் திரும்பிக்கொண்டு இருக்கிறது. விட்டம் விட்டால் பரவெளி தான் உயிர் நீங்கினால் உடல் ஒன்றுமில்லை என்று பரமசிவம் பிள்ளையின் சொற்களாகப் புதுமைப்பித்தன் முன்வைக்கும் கிழக்கத்திய தத்துவ மரபு பெரும் விசாரம் கொண்டது.
காலத்தின் வெள்ளத்தில் நீந்திக்கொண்டு இருந்த பரமசிவம் பிள்ளைக்கு நிகழ்காலப் பிரக்ஞை இல்லாமல் போய்விட்டது. விடலிப்பனையின் நிழலில் குந்தியிருந்த அவரை அருகில் வந்த பாம்பு தீண்ட, மயங்கி விழுந்தார். அவரது மனம் பாம்பா,கயிறா என்ற வியப்பிலிருந்து விடுபடவில்லை. பாம்பின் விஷம் ஏறி உடல் நோவுற்றுப் படுக்கையானார் பரமசிவம் பிள்ளை. வீட்டில் தேவாரம் பாடத் தொடங்கிவிட்டார்கள். காலின் கட்டைவிரல் தொலைதூரத்திற்குப் பயணம் செய்தது. நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக விட்டு விடுதலை ஆகின. உடல் தனது நீண்ட பற்றைவிட்டு நீங்கியது. உயிர் வந்த இடத்திற்கே சென்று சேர்ந்தது.பரமசிவம் பிள்ளை எங்கிருந்து வந்தாரோ அங்கேயே ஒடுங்கிவிட்டார்.
புதுமைப்பித்தன், பரமசிவம் பிள்ளையின் மூலமாக உணர்த்த விரும்புவது அவரது வாழ்க்கையில் அனுபவித்த அனைத்துத் துன்பங்களும் துயரங்களும் அவத்தைகளும் இந்த உடம்பும் உயிரும் இருக்கும் காலம் வரைதான். உயிர் சென்றுவிட்டால் உடம்பிற்கு ஏற்படும் அனைத்தும் வெறுமையானது என்ற மரபான தத்துவப் பார்வையும் காலத்தின் வெளியில் மனிதர்கள் சருகுகளாக மக்கிப்போகும் யதார்த்த வாழ்க்கைச் சூழலும் பரமசிவம் பிள்ளையைப் படைக்கத் தூண்டின. இயற்கையிலிருந்து மனிதன் எத்தகைய மாற்றங்களைச் செய்தாலும் அப்பொருள் மீண்டும் இயற்கையை நோக்கிப் பயணிக்கும் போக்கைக் கதையின் வழியாக வலுவான கதைக் கட்டமைப்பில் கச்சிதமான மொழி ஆளுமையில் கிண்டலும் கேலியும் கலந்து புனைந்துள்ளார்.
நவீன கதை வடிவில் மரபான வாழ்வியல் தத்துவ விசாரணையை உட்பொதித்துக் கலையாக்கி, சாகசம் செய்து காட்டியுள்ளார் புதுமைப்பித்தன். கதை கூறும் முறையில் ஒரு வேகத்தைக் கட்டி எழுப்புகிறார். தத்துவத்தின் சாறு மிகைப்படாமல் கதை மொழியில் வாசகனை உலவச் செய்துவிடுகிறார். பரமசிவம் பிள்ளையும் அழகிய நம்பியா பிள்ளையும் பனைமரங்களைப் பார்க்கும் போதும் ஆற்றுப் படித்துறையைப் பார்க்கும் போதும் காலப் படிமமாக வந்து போகின்றனர். ஒவ்வொரு வாசகனையும் அகவயமாகத் திரும்பிப் பார்க்கத் தூண்டும் அற்புதக் கதை இது. இக்கதை மணிக்கொடியில் 1938ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.