தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 22

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
தமிழ்க்கவிதைகளில் உவம மரபு
முன்னுரை
‘மரபுக் கவிதை’ என்னுந் தொடர் யாப்பை மட்டும் உணர்த்துவதாகக் கொண்டு மயங்குவர் பலர். அவர் ஒரு பாட்டைத் திறனாய்வு செய்யத் தொடங்கியவுடனேயே ‘காய் காய் மா மா’ என்று கவிதையைக் கொத்துக் கறியாக்கிவிடுவர். வேட்டியும் புடவையும் எப்படி மரபு சார்ந்ததோ அதுபோலவே கவிதையின் புறக்கட்டுமானமும் மரபு சார்ந்ததே! இதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் வேட்டியும் புடவையும் மட்டுமே ஒருவனை மனிதனாக்கிவிடுகிறது என்னும் நிலைப்பாட்டை அன்னார் எடுக்கிறபோதுதான் நமக்கு மடையளவு தண்ணீர் அணையளவு பெருகுகிறது. உள்ளடக்கத்தின் பரிமாணம், உத்தியின் புதுமைகள், உவமத்தின் பன்முகப் பரிமாணம் மற்றும் பயன்பாடு, வடிவக் கட்டுமானம் இவை அத்தனையும் கலந்த கலவைதான் மரபு என்பது. பரத்தையரைப் பற்றியும் பத்தினியைப் பற்றியும் பாடுவது நம் தமிழ் மரபு. நூன்மரபில் தொடங்கி மரபியலில் தமது நூலை முடித்துக் காட்டியிருக்கும் தொல்காப்பியம் சொல்ல வருவது அதுதான். ‘வாழையடி வாழையென வந்த தமிழ் மரபு’ அது. அந்த மரபு ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கியங்களில் உவமத்திலும் உத்தியிலும் குடிகொண்டிருப்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.
தழுவும் தோளும் நழுவும் உள்ளமும்
நாலடியாரில் நல்ல நூலுக்கு ஒரு உவமத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அந்த உவமம் கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலையில் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
“பெறுவது கொள்பவர் தோள்போல் நெறிபட்டுக்
கற்பவர்க் கெல்லாம் எளிய, நூல்., மற்றும்
முறிபுரை மேனியர் உள்ளம் போன்று யார்க்கும்
அறிதற்கு அரிய பொருள்”
என்பது அந்தப் பாட்டு. ஒரு நூல் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிச் சொல்லவரும் பாடல் இது. நூல் மொழியால் எளிமையாகவும் கருத்துக்களால் அரியதாகவும் இருக்க வேண்டும் என்பதைச் சொல்ல வருகிறது. இதற்கு இந்தப் பாட்டில் விலைமகளிரின் இரண்டு உறுப்புக்கள் உவமங்கள் ஆக்கப்படுகின்றன. ஒன்று அவளுடைய தோள். மற்றொன்று அவளுடைய மனம். முன்னது காணக்கூடியது. பின்னது காட்டலாகாதது. பெறுவது கொள்பவர் என்றதனால் தான் பெற வேண்டியதை மிகச் சரியாகப் பெறும் இயல்புடையவர் என்பது பெறப்படும். பொருளை அவள் பெற்றுக் கொண்டதனால் அவளுடைய தோள் தழுவதற்கு எளிதாகி விடுகிறது. இனி அந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் பொருள் அரிதாக இருத்தல் வேண்டும். ‘அரிது’ என்றால் இதுவரை யாரும் சொல்லாதது. இதுகாறும் அறிந்து கொள்ள இயலாதது. அறிந்து கொள்ளுமாறு அமையாதது. பெறுதற்கு அரிய பொருள். இந்த அருமை எதனைப் போல் அமைதல் வேண்டுமென்றால் தோள் எளிய விலைமாதரின் உள்ளம் போல் இருத்தல் வேண்டும். ஒரு நூல் கற்பவருக்கு எளிதாக இருக்க வேண்டும். எது போல என்றால் விலை மாதர் தோள்போல. அதே நூற்பொருள் உணர்வதற்கு அரியதாக இருத்தல் வேண்டும் எது போல என்றால் விலைமாதர் உள்ளம் போல். இதனால் பொருட்பெண்டிர் உள்ளம் பொருட்கொடுப்பவனிடம் சிக்காமல் நழுவுவதை உணரமுடியும். புறத்தில் எளிமை, அகத்தில் ஆழம் என்பதைச் சில எடுத்துக்காட்டுக்களால் விளக்கலாம்.
பாரதி பாடல்களில் மரபு
இதனை வேறுவகையாகவும் விளக்க முடியும். நூலின் சொல்லமைதி எளிதாக இருக்கலாம். அது உரைக்கும் பொருளமைதி அரிதாக இருத்தல் வேண்டும். பாரதிக்கு இது கைவந்த கலை. பாரதியின் கவிதைகள் மொழியால் எளிமை வாய்ந்தவை. பொருளால் மிகவும் அரிதானவை.
“தேம்பி அழுங்குழந்தை நொண்டி’’
என்னும் ஒரு வரி போதும். ‘தேம்புதல்’ தெரியும். ‘அழுவது’ தெரியும். ‘குழந்தையும்’ தெரியும். ‘நொண்டியும்’ தெரியும். தேம்பியழுபவனைக் கோழை என்றால் கூட ஏற்கலாம். ஆனால் நொண்டி என்கிறார் பாரதி. கால் இல்லாதவனே நொண்டி என்பதுதான் உலகம் அறிந்தது. பாரதி இதனை எளிய தமிழ் கொண்டு மாற்றிக் காட்டுகிறான். ‘அழுகின்ற குழந்தை நொண்டி’ ஆனது. எப்படி? ‘தன்னால் முடியும்’ என்ற நம்பிக்கை குறைந்து ‘முடியாமல் போய்விடுமோ’ என்னும் கையற்ற நிலையில் அழுகிற கோழைத்தனம் மனத்துக்குள் வந்து விடுமோ?’ என்னும் அச்சத்தில் ‘அழுகின்ற குழந்தையை நொண்டி’ என்கிறான். மொழிநடை விலைமாதர் தோள் போல் எளிமையாகியிருப்பதையும் பொருள் அவர் உள்ளம் போல் அறிதற்கு அரிதாக இருப்பதையும் காணலாம்.
துரியோதணன் அவையில் அனைவரும் சபதம் ஏற்கிறார்கள். அர்ச்சுனன் ஏற்கும் சபதத்தில் ஒரு குறிப்பு வருகிறது. அது என்ன குறிப்பு?
“தீர்த்தன் பெரும்புகழ் விஷ்ணு எங்கள்
சீரிய நண்பன் கண்ணன் கழலாணை
கார்த்தடங் கண்ணி எந்தேவி அவள்
கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை!”
இறைவன் மீதும் வில்லின் மீதும் விஜயன் சபதம் ஏற்றது சரி. ஆனால் பாஞ்சாலியின் கண்ணின்மீது சபதம் ஏற்கிறான். அதுவும் எப்படி வண்ணனை செய்து சபதம் ஏற்கிறான் என்றால் ‘கார்த் தடம் கண்ணி’ என்று அடைகொடுத்துப் பாராட்டிய கண்ணின் மீது சபதம் ஏற்கிறான். இதனைப் படிக்கிறவர்கள் சாதாரணமாகக் கடந்து போய்விடுவார்கள். ஆனால் பாரதியை முழுமையாக உள்வாங்கியவர்கள் ‘புதுமைப்பெண்’ பற்றி முன்னாலே அவன் சொல்லியிருப்பதைக் கவனிப்பார்கள்.
‘காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம் காதல்
பெண்களின் கடைக்கண் பணியிலே“
என்று பெண்ணின் கண்ணசைவு ஆணிடம் உண்டாக்கும் பேராற்றலை உணர்ந்து கொள்ள முடியும். கடைக்கண் என்பது ஒரு வினைவேக மாற்றி. கடைக்கண் பார்வைக்கே இந்த வலிமை என்றால் கார்த்தடங்கண்ணியின் முழுப்பார்வைக்கு எவ்வளவு வலிமை இருந்திருக்கும்? இந்த மரபுத் தாக்கத்தினால்தான் பின்னாலே வந்த பாவேந்தர்,
“கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர்கடுகாம்’
என்றும் பாடமுடிகிறது. இத்தகைய மரபு உவமத்திலும் இழைகிறது என்பதுதான் இந்தக் கட்டுரையின் சாரம்.
களிறுகளோடு சாயும் கொடிகள்
களப்போரில் ஈடுபடும் யானைகள் தங்களுடைய அடையாளப் படைக்கொடியைச் சுமந்து கொண்டு செல்லும். களிறு களத்தில் பட்டொழிந்தால் அதன் பருத்துக் கருத்த மேனியில் அந்தக் கொடியும் விழுந்து போர்த்திக் கொள்ளும். பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும் காட்சி இது. அப்படியொரு காட்சியைக் கலிங்கத்துப் பரணி காட்டுகிறது,
“சாய்ந்துவிழும் கடகளிற்றின் உடனே சாய்ந்து
தடங்குருதி மிசைப்படியும் கொடிகள் தாங்கள்
காந்தருடன் கனல் அமளி அதன்மேல் வைகும்
கற்புடை மாதரை ஒத்தல் காண்மின் காண்மின்!”
என்பது அந்தக் காட்சியைச் சித்திரிக்கும் கலிங்கத்துப் பரணி பாடல். இரத்த வெள்ளத்தில் களிறு சாய, அந்தக் களிற்றின் குருதியிலேயே இந்தக் கொடிகளும் சாய்கின்றன. அது எதுபோல் இருக்கிறது என்றால் உடன்கட்டை ஏறும் பத்தினிப் பெண்டிர் தீயில் மூழ்குவதுபோல் இருக்கிறதாம். ‘கனல் அமளி’ என்பதனால் ‘தீயெரி’ என்பது பெறப்படும். களிற்றின் மேல் விழுந்து உயிரைப் போக்கிக் கொள்ளும் ‘அஃறிணைக் கொடிகளுக்குக் கணவனோடு தமது உயிரைப் போக்கிக் கொள்ளும் ‘உயர்திணைப் பெண்கள்’ உவமமாக வந்திருப்பதைக் காணலாம்.
வாரணத்தைப் பிரியும் வண்டுகள்
மேலே களத்தில் களிற்றோடு சாய்ந்துவிழும் கொடிகள் கணவனோடு உடனேகும் பத்தினிப்பெண்டிரை நினைவுபடுத்தின என்றால் மதநீர் ஒழுகும் வரை அதனைக் குடித்து மயங்கி யானையோடு உறவாடிய வண்டுகள். மதநீர் நின்றவுடன் யானையை விட்டுப் பிரிந்த நிலையைப் பரத்தையரோடு ஒப்பிடும் பாடலும் கலிங்கத்துப் பரணியில் உண்டு.
“மாமழைபோல் பொழிகின்ற தான வாரி
மறித்துவிழும் கடகளிற்றை வெறுத்து வானோர்
பூமழைபோல் பாய்ந்தெழுந்து நிரந்த வண்டு
பொருட்பெண்டிர் போன்றவையும் காண்மின்! காண்மின்!”
என்பது அந்தப் பாடல். யானை ஒன்று அதனோடு பறந்த கொடி அதனோடு சாய்ந்து விடுகிறது. யானையிடமிருந்து ஒழுகிய மதநீரைப் பருகித் திரிந்த வண்டுகள் அது அற்று நின்றவுடன் அதனைப் பிரிகிறது. அதனால் அவை பொருள் குறைந்தவுடன் விலகும் விலைமாதராயின. வண்டுகளுக்கு விலைமாதர் உவமமாய் வந்த பாடல் இது. நாலடியாரில் ஒரே நூலின் இருவேறு தன்மைகளுக்கு ஒரே உவமத்தின் இருவேறு பண்புகள் உவமமாக்கப்பட்டன. கலிங்கத்துப் பரணியில் இருவேறு தனித்தனிக் காட்சிகளில் இருவேறு பண்புடையவர்கள் உவமமாக்கப்பட்டனர். இனி வரும் பாடலில் ஒரே பொருளின் இருவேறு பண்புகளுக்கு இருவேறு உவமங்கள் பயன்படுத்தியிருக்கும் பாங்கினை ஆராயலாம்.
தேவரின் சிந்தாமணியின் எளிமையும் அருமையும்
தமிழிலக்கியத்தில் தேவரின் சிந்தாமணி பகலில் தோன்றும் நிலவு!. கண் பார்வைக்கு மறைந்த அழகு!. திரை மூடிய சிலை!. சிறையில் மலர்ந்த மலர்! “சிந்தாமணியை ஆராய்வதற்கு என்பால் ஓரளவு தகுதி உண்டு” என்று சொன்னவர் சாதாரண நபர் அல்லர். உ.வே.சா.! அதன் புறமொழி எளிமை. ஆனால் அகக்கட்டுமானம் மிகக் கடுமை. எனவே அதன் நிலைப்பாடு தெய்வத் தன்மை பொருந்தியது என்பது கருத்து. இவற்றையெல்லாம் உள்வாங்கிய கவிஞர் ஒருவர் எழுதுகிறார்.
“கலைதேர்ந்த விலைமாதர் தொடுதோள் போன்று
கற்பார்க் கெல்லாம் மிக்க எளிதாய், அந்த
விலைமாதர் உள்ளம்போல் திட்ப நுட்ப
விளக்கமெலாம் அறிதற்கே அரிதாய் நல்ல
நிலைமாதர் கற்பனவே சிறந்ததோர் நூல்”
சொல்லளவில் எளிமையாயும் பொருளளவில் ஆழ்ந்தும் நுண்ணிதாகவும் இருத்தல் ஒரு நல்ல நூலின் இலக்கணமாம். சொல்லெளிமையும் பொருளருமையும் ஒரு நூலைச் சிறக்கச் செய்யும். பரத்தையரையும் பத்தினிமாரையும் துணிந்து உவமிக்கும் மரபாற்றல் சுரதாவுக்கு இருந்திருக்கிறது.
நூலின் சிறப்புக்குப் பத்தினிப் பெண்டிரின் கற்பை உவமித்திருக்கும் கவிஞர் எளிமைக்கும் அருமைக்கும் விலைமாதரின் தோளையும் உள்ளத்தையும் உவமித்திருப்பது சிந்தனைக்குரியது. பொருட்பெண்டிராகிய விலைமாதர் எல்லாருக்கும் எளியர். எல்லாவற்றிலும் எளியர். அதனால் நூலின் புற அமைப்புக்கும் பொருண்மைக்கும் விலைமாதர் உவமமாயினர். பிறர் நெஞ்சுபுகாமையே கற்பாதலாலும், பிறப்பால் பெண்டிராயினும் கற்பால் உயர் நிலை என்பது பத்தினிப் பெண்டிருக்கே உரியதென்பதால் நூலின் நிலைபேற்றுச் சிறப்புக்குப் பத்தினிப் பெண்டிரின் கற்பும் உவமமானது.
நிறைவுரை
மேலே காட்டப்பட்டிருக்கும் இலக்கிய எடுத்துக்காட்டுக்களை அதாவது உவமப் பகுதிகளை ‘தமிழ்க்கவிதை உவமக்கோட்பாடுகள்’ என்ற அடிப்படையில் ஆராய்ந்தால் அவற்றின் வளர்ச்சிநிலை புரியக்கூடும். ஒருமை மகளிரையும் வரைவின் மகளிரையும் நீதி நூல்கள் பாடிய நிலை மாறி, உவமங்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். உடன்பாட்டையும் எதிர்மறையையும் உவம வழியாகவும் உணர்த்தியிருக்கிறார்கள் எனக் கருதலாம். நூலுக்கு உவமமான பொருட்பெண்டிர் வண்டுகளுக்கு உவமமாக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக பொருட்பெண்டிரின் புறப்பகட்டு நூலின் புறக்கட்டுமானத்திற்கும் பத்தினியரின் கற்பு நெறி நூலின் நிலைபேற்றுக்கும் ஒப்பீட்டு உவமங்களாக வந்துள்ளன. உவமங்களில் மரபும் பின்பற்றப்படுகிறது. வாழ்க்கை நெறியும் கற்பிக்கப்பட்டுள்ளது.
(தொடரும்…)