குறளின் கதிர்களாய்…(357)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(357)

பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்.

– திருக்குறள் – 505 (தெரிந்து தெளிதல்)

புதுக் கவிதையில்...

கல்வி, அறிவு, ஒழுக்கம்
குடிப்பிறப்பு போன்றவற்றில்
மக்களின்
நற்குணத்தால் வரும் பெருமைக்கும்,
குற்றங்களால் வரும் சிறுமைக்கும்
அளவு அறிந்திட,
அவரவர்
ஆற்றிடும் செயல்களே
உரைகல்லாய் ஆகின்றன…!

குறும்பாவில்...

மக்களின் உயர்ந்த குணத்தையும்
சிறுமைக் குணத்தையும் உரசிக் கண்டறிந்திடும்
உரைகல் அவரவர் செயல்களே…!

மரபுக் கவிதையில்...

பொன்னின் மாற்றை யறிந்திடவே
போட்டே உரசிப் பார்க்கையிலே
தன்மை காட்டும் உரைகல்லே,
தரணி வாழ்வில் மாந்தரிலே
என்றும் நல்ல குணந்தருநல்
ஏற்றம் மற்றும் குற்றங்கள்
தன்னால் சிறுமை யறிந்திடவே
தகுந்த உரைகல் லவர்செயலே…!

லிமரைக்கூ...

தரங்காட்டும் உரைகல் பொன்னை,
செயலதே கல்லதாய்க் காட்டிடும் மாந்தரின்
சிறுமையுடன் பெருமை தன்னை…!

கிராமிய பாணியில்...

ஒரசிப்பாக்கணும் ஒரசிப்பாக்கணும்
பொன்னோட மாத்து பாக்க
ஒரகல்லுல ஒரசிப்பாக்கணும்..

அப்புடித்தான் மனுசன் கதயும்,
அவனுக்கு
நல்ல கொணத்தால வரும்
பெருமைக்கும்,
குத்தங்களால வரும்
சிறுமைக்கும்
அளவு பாக்கிற ஒரகல்லு
வேற எதுவுமில்ல-
அவனோட செயல்பாடுதான்..

தெரிஞ்சிக்கோ
ஒரசிப்பாக்கணும் ஒரசிப்பாக்கணும்
பொன்னோட மாத்து பாக்க
ஒரகல்லுல ஒரசிப்பாக்கணும்…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க