Author: admin

  • பெண் குழந்தையைப் பேணுவோம்

     
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

    சின்னஞ் சிறிய செல்லக் கிளியே
    உணர்ந்து கொள்ளம்மா – உலகை
    உணர்ந்து கொள்ளம்மா!

    அன்னை தந்தை வாரி அணைத்தால்
    அமைதி அடையுமே – உள்ளம்
    அமைதி அடையுமே! – ஓர் அன்னியன் அப்படிச் செய்தல் தவறென
    உணர்வு சொல்லுமே – உன்
    உணர்வு சொல்லுமே!

    கொடிய நோக்கம் கொண்டோன் என்றால்
    சொல்லி விடம்மா – தாயிடம்
    சொல்லி விடம்மா! – உடனே
    அவனை விட்டு தூர விலகி
    ஓடி விடம்மா – நீ
    ஓடி விடம்மா!

    உரிய பருவம் அடையும் போது
    மாற்றம் நிகழுமே – உடலில்
    மாற்றம் நிகழுமே! – இது
    இயற்கை அளிக்கும் இனிய பரிசு
    அஞ்சி விடாதே – நீயும்
    அஞ்சி விடாதே!

    உன்னத உடலை மறைத்துக் கொள்ளவே
    ஆடை அணிகலன் – உனக்கு
    ஆடை அணிகலன்! – அதை
    உணர மறந்து கவர்ச்சிப் பொருளாய்
    ஆகி விடாதே – நீ
    ஆகி விடாதே!

    கொடிய உலகின் தன்மையைப் புரிந்து
    நடந்து கொள்ளம்மா – நீயும்
    நடந்து கொள்ளம்மா!
    கடிய பாதை அனைத்தையும் கடந்து
    வெற்றி கொள்ளம்மா – உலகை
    வெற்றி கொள்ளம்மா!

    – ஆ. செந்தில் குமார்.

    Share
  • உறவாகிய யோகமும் போகமும் உயிராளீ

    -முனைவர் இரா. மதன் குமார் 

    முன்னுரை

    உயிர்கள், சார்ந்ததன் வண்ணமாய் விளங்கவல்லவை. அவை, மும்மலங்களின் தொடர்பால், நிலையில்லாத உடம்பே, தாம் என மயங்குகின்றன; உடம்பின் வழியே  பெண்ணின்பமே பெரிதென அழிகின்றன. உயிர்கள் இவ் அறியாமை நீங்கி, கண்டு, கேட்டு, உண்டு, உய்த்து, உற்று அறிதலாகிய பேரறிவு ஐந்தாலும்,   தலைவனாகிய இறைவனை உணர்ந்து, ‘திருவடி இன்பமே பேரின்பம்’ என்னும் ஞானநிலையினை எய்தவேண்டும். அதற்கு, ‘உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம்’ என்னும் பெருநிலையில், புலன்இன்பங்களைப் பேரின்ப நெறிக்குரியதாகப் பண்படுத்திக் கொள்ளவேண்டும். அளவுகடந்த புலனின்ப நாட்டத்தை, இறைவன்பால் மடைமாற்றம் செய்கின்ற முயற்சியாகவே, சமயக்குரவர், சந்தானக் குரவர் முதலான அருளாளர்கள், தமது திருப்பதிகங்களில் அகத்துறையினையும் பாடுபொருளாகக் கொண்டு பாடியுள்ளனர்.  அவ்வகையில், ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்களுள் ஒருவராகிய திருமாளிகைத் தேவரது, ‘உறவாகிய யோகமும்’ என்ற திருப்பதிகம் பேரின்பப் பெருநெறி காட்டுகின்ற திறத்தை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

    அருள்துறையுள் அகத்துறை

    திருமாளிகைத்தேவர்தம் அருளியல் வாழ்வானது, தில்லைத்திருத்தலத்துடன் மிகநெருங்கிய தொடர்புடையது. அவர் அருளியதாக உள்ள நான்கு திருப்பதிகங்களும், தில்லைத் திருத்தலத்திற்கு உரியவையாக விளங்குகின்றன.  அவற்றுள் மூன்றாவது திருப்பதிகம், அகத்துறைப் பொருண்மையில் அமைந்துள்ளது. இத்திருப்பதிகத்தில், ‘காமப்பகுதி கடவுளும் வரையார்’ என்கின்ற நோக்கில்,  இறைவனுக்கான அருள்துறையினைப் பாடுவதற்கு அகத்துறையும் பாடுபொருளாக அமைந்துள்ளது. அகத்துறை வழியே அருள்துறையைப் பாடுங்கால், சிற்றின்பநிலைப் பொருண்மைகள், திருவருள் தொடர்புடைய தத்துவநிலைகளாக, உள்ளுறைப் பொருள் தருவனவாக அமைகின்றன.

    இத்திருப்பதிகத்துள், தலைவனாக,  பரம்பொருளாகிய சிவபெருமானும், தலைவியாக,  பக்குவ ஆன்மாவும் வைத்து உணரப்பெறுகின்றனர். பதிகப் பொருண்மை அளவில், மணிவாசகப்பெருமானால் தில்லையில் அருளிச்செய்யபட்டதாகிய, ‘கீர்த்தித் திருஅகவல் மற்றும் போற்றித் திருஅகவல்’ முதலான திருப்பதிகப் பொருண்மைகள், சிவனார் பெருந்திறமாக விரித்துரைக்கப்பெற்றுள்ளன.

    நாதாந்தத்துக் குணக்குன்று

    பெருமானே, அண்டத்திலும், பிண்டத்திலும் நாதாந்தக் கூத்தாடி அனைத்தையும் இயக்குகின்றான். அத்துடன், தத்துவங்களின் முடிவாகிய நாததத்துவத்தையும் கடந்த பரத்துவம் கொண்டும் விளங்குகின்றான்.  “நாதாந்த நாடகத்தை நன்றாய் அருள்செய்தீர்” (உண்மை விளக்கம்: பாடல்:39) எனப் பெருமானின் தத்துவாதீதப் பரத்துவம் போற்றப்பெறும். ஓயாத அவனது அருள்கூத்தினாலேயே, அண்டம், பிண்டம் ஆகியவை இயங்குகின்றன. ஞானாகாசப் பெருவெளியில் அணுவுக்கும் அணுவாக இருந்து ஆடி ஆட்டுவிக்கின்ற பெருமான், அனைத்துயிர்களிலும் உயிர்ப்பாக இருந்து அவற்றையும் ஆட்டுவிக்கின்றான்.

          “தில்லை மூதூர் ஆடிய திருவடி
           பல்லுயிர் எல்லாம் பயின்றனவாகி
           எண்ணில் பெருங்குணம் எழில்பெற விளங்கி…” (திருவாசகம்: கீர்த்தித் திருஅகவல்: அடிகள்: 1-3) என்பது, மணிவாசகரின் அருள்வாக்கு.   இவ்வாறு, அருமையாம் பெருந்திறமும், எளிமையாம் கருணைத்திறமும் ஒருங்கே விளங்குகின்ற பெருமானை மேலும் போற்றுபவராக மணிவாசகர்,
    “அருமையில் எளிய அழகே போற்றி”   (திருவாசகம்: போற்றித் திருஅகவல்: அடி: 126) எனக் குறித்தருளியுள்ளார்.

    குணமும் குறியும் கடந்த பெருமான், தன்னை உயிரறிவுக்கு உணர்த்தி அருளவேண்டி, குறித்த குணமும், குணப்பொருளாகவும் எழுந்தருள்கின்றான். எனவே திருமாளிகைத்தேவர், பெருமானை இத்திருப்பதிகத்தின், அனைத்துத் திருப்பாடல்களிலும் ‘குணக்குன்றே’ என விளித்து மகிழ்ந்துள்ளார். அத்துடன், பெருமானின் அருமை, எளிமை ஆகிய இருவேறு பெருங்குணங்களையும் நமக்கு உணர்த்தத் திருஉள்ளம் கொண்டுள்ளார். அத்திருக்குறிப்புடன், ‘கயிலை மலைப்பெருமானே, தில்லையில் அருள்கூத்தனாக விளங்குகின்றான்’ என்று அருளிச்செய்துள்ளார். மேலும், கயிலை மலையில், பெருமான்,  உமையம்மைக்கு, ஆகமப் பொருளை உபதேசித்தருளிய பாங்கினையும், காடுறை வேடனென உமையோடும் கானகத்தில் நடந்தருளிய அருங்கருணையையும், சங்காரகாரணனாகிய பெருமானின் பரத்துவத்தை விளக்குகின்ற திருநீற்றுப்பொலிவழகையும் இப்பதிகத்துள் எடுத்தாண்டுள்ளார்.

    உறவாகிய யோகமும் போகமுமாய் உயிராளீ

    இத்திருப்பதிகமானது, ‘உறவாகிய யோகமும்’ எனத் தொடங்குகிறது. ‘ உறவு – யோகம் – போகம் – உயிராளீ’ என்பது பதிகத்தின் முதற்தொடராகும். உறவாவது, உயிர், ஞானநெறி வழியே இறைவனுடன் கொள்கின்ற பிரிவறியாத திருவருளுறவாகும்; திருவருளுறவின் வழியே இறைவன் மீதான பற்று நீங்காது, அவனுடன் ஒன்றியிருத்தலே யோகமாகும்; போகமாவது, இன்பம் நுகர்தல். அந்நிலையானது,

                “வாக்கிறந்த அமுதம் மயிர்க்கால் தோறும்
                தேக்கிடச் செய்தனன்…
                அற்புதமான அமுத தாரைகள்
                ஏற்புத் துளைதொறும் ஏற்றினன்” (கீர்த்தித் திரு அகவல்: அடிகள்170-171, 175-176) என்றமைகின்ற பேரின்ப அனுபவமாகும். இவ்வாறு, உயிர்களின் உறவாகவும், யோகமாகவும், போகமாகவும் இருந்து,  உயிர்களை ஆள்கின்ற பசுபதியாக பெருமானைப் போற்றித் திருமாளிகைத்தேவர்,  இப்பதிகத்தைத் தொடங்கியுள்ளார்.

    புரம் செற்ற சிலைகொண்ட வில்லாளி
    தனது மகளது நிலைக்கு இரங்குகின்ற செவிலித்தாயின் கூற்றுகளாக அமைந்துள்ள இப்பாடல்களில், அருச்சுனருக்குப் பாசுபதப் படைக்கலம் அருளவேண்டி, வேடுவக்கோலம் ஏற்றுவந்து, பெருமான் புரிந்த திருவிளையாடல் போற்றியுரைக்கப்பெற்றுள்ளது. இவ்வரலாற்றினைக் குறிக்கின்ற முதலாவது திருப்பாடலில், பெருமான், முப்புரத்தை எரிஅம்பு செலுத்தி அழித்தொழித்த வில்லுடன், கானகத்தில் பன்றியை வீழ்த்தத் துரத்தி நடந்ததாகக் குறிக்கப்பெற்றுள்ளது.

                 “சிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச்
                  சிலைகொண்டு பன்றிப்பின் சென்றுநின்ற
                 மறவா”  (உறவாகிய யோகமும்: பாடல்: 1)

    என்றமைந்த தொடர்களில்,  ‘முப்புர அழிப்புக்காக, பெருமான் கைக்கொண்ட வில்லுடன், அருச்சுனருக்கும் அருளவந்ததன் காரணத்தைத் திருமாளிகைத்தேவர் உள்ளுறைப் பொருளாக விளக்கியுள்ளார். “முப்புராதியர்கள், பெறுதற்கு அரிய பேற்றினைப்பெற்ற ஆணவத்தால் பெருமானை மறந்து, மண்ணுயிர்களுக்குத் தீமையினை மட்டுமே செய்து துன்புறுத்திவந்தனர். பெருமான் அவர்களது அறியாமையினை அகற்றி அருளவேண்டி, எரியம்பினை எய்து முப்புரங்களை அழித்தொழித்தார். அது பெருமானது மறக்கருணைக்குச் சான்றெனலாம். முப்புராதியர்கள் தாம்பெற்ற உயர்ப்பேற்றினை மறந்ததும் அன்றி, தமக்கு அவ் உயர்ப்பேற்றினைத் தந்தருளிய பெருமானையும் மறந்து மயங்கினர்.

    பேறு தந்தருளிய பெருமானை மேன்மேலும் மறவாது வழுத்துதல், நம்மைக் குறையாத திருவுடையாராக விளங்கச்செய்யும். ஆனால், மலமறைப்பாகிய அறியாமையில் ஆழ்ந்த முப்புராதியரிடத்தில், ‘தாம் பெற்ற பேற்றிலும் இனிப் பெறத்தக்க பேறு எவையும் இல்லை’ என்று மயங்குகின்ற அறியாமையே விளைந்தது. அதனால் அவர்கள், ‘சிறவாதவர்’ என்று ஆசிரியரால் இகழ்ச்சிப்பொருளில் சுட்டப்பட்டுள்ளனர்.  அத்தகைய இகழ்ச்சிச் சுட்டு, மனித உயிர்களாகிய நமக்கும் பொருந்துவதாகும். காரணம், நமக்குப் பெருமானால் அருளப்பெற்ற பிறப்பின் பெரும்பயனை நாம் உணராமல், வாழ்நாளை வீணே கழிக்கின்றோம். அத்தகைய அறியாமையினை உணர்த்தி, பெருமானைப் பற்றி உய்ய, அருச்சுனனின் பக்தித்திறத்தையும், பெருமான் அவர்க்கு இரங்கியருளிய திறத்தையும் பதிகப்பொருண்மையாக, திருமாளிகைத்தேவர் எடுத்தாண்டுள்ளார்.

    நெடும்பகல் நடந்த வேடர்

    அடியவர்’ என்பதை மறந்தவர்களுக்காக நிகழ்த்திய முப்புர எரிப்பில், பெருமானின் அளப்பரும் வீரத்தின் வெளிப்பாடாகிய மறக்கருணை வெளிப்பட்டது எனலாம். ஆனால், அருச்சுனரோ, பக்குவநிலை கொண்ட அடியவராகப் பெருமானை நோக்கித் தவமியற்றினார். அதனால், அருச்சுனருக்கு அருளவேண்டிப் பெருமான், காடுறை வேடனென வந்தருளினார். அந்நிலையில், அவர்தம் தாயின் நேர் தயாகுணமும், தாம் புண்சுமந்தேனும் அடியவர்க்கு அருள்கின்ற அருட்கருணையும் விளங்கக்காணலாம்.

    “முகாசுரன் என்னும் அசுரன் அருச்சுனரைக் கொல்லவந்த வேளையில், அவ்அசுரனிடமிருந்து அருச்சுனனைக் காப்பதற்கு பெருமானே, வேடுவக் கோலம் தாங்கினார். அவர் வேடுவக்கோலம் தாங்கி, தாம் மட்டும் தனியே நடவாமல், வேடுவச்சியாக அம்மையையும் உடன்அழைத்துவந்து, திருவடிகள் நிலந்தோயும் வண்ணம், நெடும்பகல் நடந்தார்” எனத் திருமாளிகைத்தேவர் பெருமானின் வேடுவத் திருவிளையாடலைக் குறித்தருளியுள்ளார்.

                “வண்டார் குழல்உமை நங்கை முன்னே
                  மகேந்திரச் சாரல்  வராகத் தின்பின்
                 கண்டார் கவலவில் லாடி வேடர்
                  கடிநா யுடன்கை வளைந்தாய்”   (உறவாகிய யோகமும்: பாடல்:6)

    காடாடு பல்கணம் சூழக் கேழற்
                  கடும்பின் நெடும்பகல் கான்நடந்த
                  வேடா”         (உறவாகிய யோகமும்: பாடல்:2)

    கானகத்தில் நெடும் பகல்பொழுது முழுவதும் கழிய நடந்தநிலையில், பெருமானின் எளிவந்த கருணை விளங்குகிறது.

    அருச்சுனருக்கு அருளவேண்டி, அன்று கானகத்தில் திருவடிதோய நடந்த பெருமான், இன்று தனக்கு அருளவேண்டிப்  பலகாலும் வருந்தி அழைத்தும் வாரமையைக் கண்டு, தலைவி ஆற்ற இயலாமல் புலம்புவதாகப் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

              “சேவேந்து வெல்கொடியானே என்னும்
                   சிவனே என் சேமத் துணையே என்னும்
              மாவேந்து சாரல் மகேந்திரத்தின்
                   வளர்நாய காஇங்கே வாராய் என்னும்”                 (உறவாகிய யோகமும்: பாடல்: 8)

    நாதாந்த பதம் நல்கும் தனிநாயகன்

         பெருமானது வேடுவக் கோலப்பொலிவழகு, திருமாளிகைத் தேவரின் சொல்லோவியமாக, வேடன் ஒருவனையே நமது கண்முன்னர் கொண்டுவந்து நிறுத்துகின்ற சிறப்புடையது. ‘சுடுகாட்டின் பல்பூதங்களும், வேற்றுருக் கொண்டுப் பெருமானைப் பின்தொடர்ந்தன;  வேடுவனாகிய பெருமான், விரைந்து பறை ஒலிக்கவும், அம்பினை விரைந்து செலுத்தவல்ல வலிய வில்லையும், அம்பையும்  கையில் ஏந்தியதுடன், குறுவாளும் உடன்இருக்க, கல்லைச் செலுத்தப் பயன்படுவதாகிய கவண்கருவி ஆகியவற்றுடன்,  வெற்றிக்குரிய ஆரவாரம் சிறிதும் குறையாமல், சீழ்க்கை ஒலி எழுப்பிப் பன்றியின் பின்னால் விரைந்து நடந்தார். அவர், இடுப்பில் புலித்தோலாடையினைப் புனைந்தும், திருவடியில் தோல் செருப்பினை அணிந்தும் வந்தார்’ என்று பெருமானின் வேடுவக்கோலப் பொலிவழகு, திருப்பதிகத்தின் ஏழாம் திருப்பாடலில் சிறப்புறச் சுட்டப்பெற்றுள்ளது.

    நாததத்துவத்தையும் கடந்த அரும்பொருளாகிய பெருமான், தன் அடியவருக்கும் அத்தகைய பெருநிலையினை அருளவல்லவர். வேண்டுவார் வேண்டுவதை ஈவதையே இயல்பெனக் கொண்ட பெருமானிடத்தில், நாதாந்த பெரும்பேற்றினை விழைந்தவர், திருமாளிகைத்தேவர். அன்று அருச்சுனருக்கு எளிவந்த கருணையுடன் நாடிவந்து அருளியவகையில், தமக்கும் நாதாந்த பெரும்பதத்தை அருள, பெருமான் இரங்கியருளவேண்டும் என்ற வேண்டுதலே,

               “கடுப்பாய்ப் பறைகறங் கக்கடுவெஞ்
    சிலையும் கணையும் கவணும் கைக்கொண்
      டுடுப்பாய தோல் செருப் புச்சுரிகை
    வராகம்முன் ஓடு விளிஉளைப்ப
                              நடப்பாய் மகேந்திர நாத நாதாந்தத்
    தரையாஎன் பார்க்குநா தாந்தபதம்
                              கொடுப்பாய் என் னும் குணக் குன்றே என்னும்
    குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே”                (உறவாகிய யோகமும்: பாடல்: 7) என்னும் திருப்பாடலாக அமைந்துள்ளது.

    குருவாக வந்தருளாயோ

    நாதாந்தப் பெரும்பேற்றினை அருளவேண்டிய திருமாளிகைத்தேவர், ‘குருவே சிவம் எனக் கூறினன் நந்தி’ என்னும் பெருமொழிகளை நினைகின்றார். கயிலையில்,  மலைமகளுக்குக் குருவாகி, ஆகமப்பொருளை அன்று விரித்துரைத்த பெருமான், திருமால் முதலான தேவர்களுக்கும் குருவாக விளங்கியவர்.

                 “மகேந்திரப் பொன்மலையில் மலைமகளுக்கருளும் குரு” (உறவாகிய யோகமும்: பாடல்: 10)

                 “சுடர்நீள் முடிமால் அயன் இந்திரன் முதல் தேவர்க்கெல்லாம் குரவா”                                                     (உறவாகிய யோகமும்: பாடல்: 9) என்று பெருமானின் ஞானாசிரியநிலையைப் போற்றுகின்றவேளையில், அவரே  தனக்கும் குருவாக எழுந்தருளுதற்குப் பேராவல் கொள்கின்றார். ‘பசுபதியாகிய பெருமானைப் பற்றுதற்கு பசுநூல் ஓதுவிக்கும் அறியாமை மிக்க குருவால், உயிரறிவு எள்முனை அளவும்கூட விளக்கம்பெறாது’ என்பது அவர்தம் ஞானத்தெளிவு. அத்தகைய கீழோரைக் கண்ணால் காண்பதையும், அவருடன் உரையாடுவதையும் தாம் புரியேன்’ என்பதனைத் திருமாளிகைத்தேவர்,

     “கயவரைப் பசுநூல் கற்கும்
     பிச்சரைக் காணா கண்வாய்
           பேசாதப் பேய்க ளோடே”                             (இணங்கிலா ஈசன்: பாடல்: 9)

    என உறுதிபடச் சாற்றியுள்ளார்.  பற்றாகவும், பற்றப்படுகின்ற பொருளாகவும், அதனைப் பற்றுதற்குரிய வழியாகவும், வழித்துணையாகவும், பெருமானே விளங்குகின்ற நிலையினைத் திருமந்திரம், ‘காண வல்லார்க்குக் கண்ணின் மணி’ (திருமந்திரம்: 2823) என உணர்த்துகிறது. அவ்வகையில், பெருமானே தமக்குக் குருவாக இரங்கியருளவேண்டும் என்பதனைத் திருமாளிகைத்தேவர்,

               “நெறியே என்னும் நெறிநின்றவர்கள்
                           நினைக்கின்ற நீதிவே தாந்தநிலைக்
                       குறியே”     (உறவாகிய யோகமும்: பாடல்: 4)                          என்றும் குறித்தருளியுள்ளார்.

    உமையம்மைக்கும், தேவர்களுக்கும், சனகாதி முனிவர்களுக்கும் அமைந்த அருள்பக்குவநிலையால், அவர்கள் பெருமானையே குருவாகப் பெற்றுய்ந்தனர்; அத்தகைய பக்குவநிலையில், பெருமானையே நினைந்துருகி, அவனது பெரும்பெயராம் திருவைந்தெழுத்தை ஓதிக் கரைந்து, குறையாத பேரன்பில் பெருகி, பிறவிப்பிணி தீர்க்கின்ற திருநீற்றுப் பொலிவுடன் திகழ்வதாகிய தம் பக்குவநிலையினைத் திருமாளிகைத்தேவர் அகத்துறைப் பதிகத்தில் உள்ளுறைப்பொருளாகக் குறித்தருளியுள்ளார்.

                    “உற்றாய் என் னும் உன்னை யன்றி மற்றொன்
                 றுணரேன் என் னும் உணர் வுள்கலக்கப்            பெற்றாய ஐந்தெழு த்தும்பிதற்றிப்
                             பிணிதீர் வெண் ணீறிடப் பெற்றேன் என்னும்
                சுற்றாய சோதி மகேந்திரம் சூழ
                    மனத்திருள் வாங்கிச்சூ ழாத நெஞ்சில்
                குற்றாய் என் னும் குணக் குன்றே என்னும்
                    குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே”                 (உறவாகிய யோகமும்: பாடல்:11)
    என்றமைந்த திருப்பாடல், பேரருள் விழைவில் தன்வயமிழந்த தலைவியின் நிலையாக, திருமாளிகைத்தேவரின் அருள்பக்குவநிலைக்குச் சான்றாகிறது.

    பேரருள் திளைப்பில் சீவன்முத்தநிலை

     ‘சிவமே பெரும்பொருள்’ என்றும், ‘திருவருளே பெரும்பொருள்’ என்றும் தெளிந்தவராகிய திருமாளிகைத்தேவர், திருவருள் நிலைப்புக்குக் காரணமாகிய அடியார் இணக்கத்தையே விழைகின்றார். அதனால், ‘பூசுவதும் திருநீறு, பேசுவதும் பெருமானின் திருப்புகழாம்’ என்று விளங்குகின்ற உயர்அடியார் உடனான இணக்கத்தையே நாடுபராக,  ‘திருநீறிடா உருத்தீண்டேன்’ என்று குறித்தமைகின்றார்.

    அடியார்களுடனான இணக்கம், தம்மைச் சிறுபொருளாகக் கருதி, தான் என்கின்ற ஆணவச் செயல்பாட்டை மறக்கச்செய்யும்; தம்மை மறந்து, பெருமானையே பெரும்பாருளாகக் கருதி அவரைப் பற்றுகின்றநிலையில் பித்தேறி, உயிர் தனது சுற்றுப்புறத்தை முற்றிலும் மறக்கும். தானும் சிவமும் ஒன்றாக, ஏகபோகமாகக் கலந்த பேரின்பநிலையாக அது விளங்கும். அப் பெருநிலையில், பெருமான் உவப்பவையே தனக்கும் உவப்பாகக்கொண்டு, காண்பன யாவற்றையும் சிவமாகக் கண்டும், பூண்பன யாவற்றையும் சிவமாம் தன்மைக்குரியதாகப் பூண்டும், தன்னைச் சிவமாகவே உணர்கின்ற பேறும் உயிர்க்கு வாய்க்கும். அத்தகைய பெருநிலை கைவரப்பெற்றவராகத் திருமாளிகைத்தேவரும் விளங்கினார். அவர்தம் அருளனுபவப் பேறு,

                “திருநீறிடா உருத் தீண்டேன்”    உறவாகிய யோகமும்: பாடல்: 10) என்ற உறுதிமொழியாக, அடியார் கூட்டத்துடனான அரும்பேற்றுக்கு வழிகாட்டுகிறது.

    மேலும், ‘உற்றாய் என்னும்’ என்ற பதினொன்றாம் திருப்பாடலில், ‘செம்மை மனத்துத் திருஅடியார்’ எனத் தலைவி விளங்குவதன் அடையாளமாக அவள், ‘திருநீற்றுக் கவசம் புனைந்துள்ளாள்’ எனச் சுட்டப்பெற்றுள்ளது. அத்துடன், திருநீறு புனையாதவரைப் பாவி எனக் கருதுகின்ற குறிப்பும் அமைந்துள்ளது. திருமாளிகைத்தேவர், ‘பெருமானின் திருமேனி, திருநீறால் பொலிந்திலங்குகின்ற பேரழகைத் தம் அகக்கண்ணால் கண்டின்புற்றவர்’  எனலாம். அவ்அருளனுபவப் பதிவே, அவர் பெருமானை, ‘நீறணி பவளக்குன்றமே’ (ஒளிவளர் விளக்கே:பாடல்: 6) என்று போற்றிப்பாடியுள்ள நிலையாகும். பெருமானிடத்தில் பொலிகின்ற திருநீறு முதலான சிவச்சின்னங்கள்  மக்கள்தம் அறியாமைநோய்க்கு மருந்தாகின்ற திறத்தை, திருஞானசம்பந்தர் முதலானோர் திறம்பட உணர்த்தியுள்ளனர். அந்நெறிவழியே திருமாளிகைத் தேவரும், ‘அரனடியார்கள், உலகின் தீமைகளை நசித்து ஒழிக்கவேண்டித் திருநீறு தரிக்கின்றார்கள்’ என ஏற்றிப் போற்றியுள்ளார்.

                      “தீய நசிக்க வெண்ணீறதாடும் நமர்கள்”                              (இணங்கிலா ஈசன், பாடல்: 5)

    அரனடியார்களது பெருநோக்கத்தை உணராத மக்கள், திருநீறு முதலான சிவச் சின்னங்களையும் தரிக்க வாய்ப்பற்று, பெருமானை உணர்கின்ற பெருநெறிக்குத் தலைப்படுவதும் அரிதாகும். அவர்கள் திருநீறு பொலிகின்ற அரனடியார்களை, அரனாகவே கண்டு வழிபடுகின்ற பக்குவநிலைக்கும் தலைப்படார். மக்கள், அடியார் கூட்டத்துடனான இருப்பினாலும்,  திருநீறு முதலான, சிவவேடப் பொலிவினாலும், பக்திநெறியில் மேம்பட்டுய்ய வேண்டும். இவ்அருநெறியினை உணர்த்தவே தலைவி, திருநீறு தரியாதவரைத் தான் ஒருபோதும் நாடேன்’ என்று உறுதிபடக் கூறுவதாகத் திருமாளிகைத் தேவரால் விளக்கப்பட்டுள்ளது.  

    முடிவுரை
    ‘உறவாகிய யோகமும்’ என்று தொடங்குகின்ற இத்திருப்பதிகமானது, ஐந்து பேரறிவும் பேரின்ப நெறியில் செல்ல வழிகாட்டுவதாகும். அனைத்து திருப்பாடல்களும் தில்லை அம்பலவனுக்காகத் தலைவி இரங்குகின்ற நிலையினைக் குறிப்பதாக அமைந்துள்ளன. பசுக்களாகிய ஆருயிர்கள், பதியாகிய பெருமானை அடைவதற்குக் கொள்கின்ற பேரின்பஆவலை இத்திருப்பாடல்கள், பேரின்பப் பொருள்கொண்டு விளக்குகின்றன.

    தில்லை அம்பலவன், ஆருயிர்க்கு நாதாந்தப் பெரும்பேறு நல்கவல்ல நாதாந்தக் கூத்தினை ஆடியருள்கின்றான். பெருமானின் பெருங்கருணைத் திறமே, அவனது கூத்தாக அமைகிறது எனத் திருமந்திரம், பெருமானது திருக்கூத்துக்கான தத்துவத்தை விளக்கியருளும். அத்தகைய தத்துவத்தை மேலும் எளிமையுற விளக்கவேண்டியே திருமாளிகைத்தேவர், அம்பலத்துக் கூத்தனாகிய பெருமான், அருச்சுனருக்கு அருளவேண்டி, வேடுவக்கோலம் தாங்கி வந்ததாக  இப்பதிகத்தில் எடுத்தாண்டுள்ளார். அத்திருப்பாடல்களின் வழியே புலனாகவல்ல பெருமானின் வேடுவக்கோலம், உள்ளக்கிழியில் அவன் உருவைப் பலகாலும் எழுதிப்பார்த்து, பெருமானே, ‘புவன போகமும், யோக வெள்ளமும்’ என உணரச்செய்யும்; அவ் அன்பின் விரிவு,  அண்டத்திலும், பிண்டத்திலும் பெருமான் இருந்தாடுகின்ற பெருங்கூத்தினை, அகக்கண் கொண்டு தொழுதுய்ய வகைசெய்யும்.

    ஆய்வுக்குத் துணைநின்ற நூல்கள்:

    1. ஒன்பதாம் திருமுறை, டாக்டர் இராச. வசந்தகுமார் (ப.ஆ), பன்னிரு திருமுறை ஆய்வுமையம்,

    கற்பகம் உயர்கல்விக் கலைக்கழகம், கோயம்புத்தூர் -21. முதல் பதிப்பு: ஏப்ரல்: 2016.

    1. திருவாசகம், சைவசித்தாந்தப் பெருமன்றம், சென்னை. நான்காம் பதிப்பு: 1999.
    2. திருமந்திரம், சிவ ஆ.பக்தவச்சலம் (ப.ஆ), “தமிழ் வேதம்” மாத இதழ், குடியாத்தம்.        வெளியீடு: 2007.

    *****

    கட்டுரையாளர்,
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    கற்பகம் உயர்கல்விக் கலைக்கழகம்,
    கோயம்புத்தூர் – 21.

     

    Share
  • சிதறும் சிறகுகள்

     

    அன்பு செலுத்துவதை
    வினோத குற்றமாய்
    நீ கருதுகிறாய்..!
    நீ வினோதமானவளென்பதாலே
    உன் மீது அன்பு செலுத்த நேர்கிறது.
    ——-
    தண்டனையாக
    இரண்டு நாட்கள் பேசாமலிரு என்கிறாய்.
    ம்ம்ம்
    இரண்டு நாட்கள் உயிரை விட்டுவிடென
    நீ சொல்லி இருக்கலாம்..!
    ———
    கடந்தக்கால ரணங்களை
    மறக்க
    நீ நடத்தும் நிகழ்கால செய்கைகள்
    எதிர்கால ஆபத்து என்கிறேன்.
    என் தோள் சாய்ந்து
    உனை காப்பாத்து என்கிறேன்.
    நீயென் அறிவுரையை
    காதலென திட்டுகிறாய்.
    காதலென்றாலும் அது தீட்டில்லையடி..!

    ஒன்று மட்டும் மறவாதே
    மறுமணத்தை வலியுறுத்திய
    பெரியாரின் பேரன் நான்,,!

    ——
    உன் விருப்பம் வேண்டாமா என்கிறாய்.
    நிச்சயமாக
    விருப்பமற்று விளைச்சல் ஏதுமில்லை.
    காத்திருக்கிறேன்
    எப்போது விருப்பம் கொள்வாய்…
    என் மீது…
    என் மீது மட்டும்..?
    அப்போது சொல்….

    மின் மயான
    தகன மேடையில்
    எரிந்துச் சாம்பலாகுமே
    அப்போதும் கூட
    நீ விரும்பினால் போதும்
    எரியும் என்னுடல்
    கொஞ்சம் குளிரும்..


    பெண்ணுரிமை ஆராதனைச் செய்பவன்
    ஒரு போதும்
    என்னுரிமை
    உன்னுரிமையில் தலையிடாது,

    —-
    சரி விலகி போ என்கிறாயா..?
    விலகி போகிறேன்.
    ஆனால்
    உன் நினைவுகளை
    நான் என்ன செய்ய…?

    —-
    முதலில் நீ சாதிக்க வழி தேடு என்கிறாய்.

    என் சாதனையே நீதானம்மா…!


    ம்ம்ம் உன்னிடமிருந்து விலகுவதுதான்
    உன் அடியாழ விருப்பமெனில்…
    இதோ விலகுகிறேன்

    உன்னிடமிருந்து

    விழி ஒளியில்
    கத்தி செய்துக்கொடு..
    இருதயத்தை வெட்டிக்
    கொடுத்து போகிறேன்.


    உன்னை அடைந்தே தீருவேனென
    நான் அடம்பிடிக்கவில்லை.
    உன்னை அடைவதில் தான்
    நான் தீருவேன்…!

    ”நான் இப்படித்தான்
    பிடித்தால் பழகு
    பிடிக்கலானா விலகு”
    என்கிறாய்…

    உன்னிடம் பிடித்ததே
    இந்த திமிர் தான் தேவதையே!

    -இரா.சந்தோஷ் குமார்

    Share
  • புறநானூற்றில் தமிழர் பண்பாடு   

    -வி.நாகலெட்சுமி

    முன்னுரை:

    சங்க இலக்கியம் தமிழர் வாழ்ந்த வாழ்வின் வெளிப்பாடு ஆகும். இவற்றுள் அகம்-புறம் என்னும் பகுப்பு முறை தமிழர்களின் செம்மையான வாழ்வியலை எடுத்துக் காட்டுகின்றன. அகவாழ்வைக் காட்டிலும் புறவாழ்வு தமிழுக்கென்ற தனித்துவத்தைப் பறைசாற்றி நிற்கின்றது. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறு பண்டைத்தமிழரின் பண்பாட்டுக் களஞ்சியமாகத் திகழ்கின்றது. மேலும் தமிழ் மன்னர்களின் சீர்சால் பண்புகளாம் ஒழுக்கமும், புலவர்களின் பண்பாடுகளாம் தன்மான உணர்வும், பண்டைத்தமிழ் மக்களின் வாழ்வியல் ஒழுங்குகளும், பண்பாடுகளும் பதிவு செய்யப்பெற்று பண்டைத் தமிழரின் பெருமையைப் புறநானூறு மற்ற இனத்தாரும் பிறநாட்டாரும் வியப்புறும் வண்ணம் வெளிப்படுத்துகிறது. புறநானூற்றுப் பண்பாட்டுப் பதிவுகளை தொகுத்துக் காட்டுவது இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

    பண்பாடு – விளக்கம்:

    பண்பாடு என்பது ‘பண்படுதல்’ எனும் சொல்லின் வினையடியாகப் பிறந்தது. பண்படுதல், ஒன்றுபடுதல், இசைவு பெறுதல், இசைந்து ஒழுகுதல் போன்ற பொருளைக் குறிக்கிறது. அதாவது பண்படுதலே பண்பாடாகும். “ஒரு முறையான நடத்தை முறைக்கு மக்கள் ஏற்படுத்திக்கொள்ளும் ஓர் அமைப்பு அல்லது மன அளவிலான விதி” எனக் கருத்தியலாளர்கள் பண்பாட்டிற்கு ஒரு பொது விளக்கம் தருகின்றனர்.

    பண்டை மறம்:

    பண்டைத்தமிழர்கள் பகைவர் நாட்டின் மீது படையெடுக்கப் புறப்படும் முன் தாங்கள் வருவதை முன்கூட்டியே அறிவித்தலும் உண்டு. அவ்வாறு அறிவிக்கும் பொழுது தங்கள் படையெடுப்பால் சாதாரண பொதுமக்கள் உள்ளிட்டோர் துன்பப்படக்கூடாது என்ற உயர்ந்த பண்பாட்டைக் கொண்டிருந்தனர். இதனை,

    ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
    பெண்டிரும்
    பிணியுடை யீரும் பேணித்
    தென்புல
    வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
    பொன்போற்
    புதல்வர்ப் பெறாஅ தீரும்
    எம்
    அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்”      (புறம் – 9)

    என்ற புறநானூற்றுப் பாடல்வழி அறியலாம். மேலும் போர் நெறியிலும் அறநெறியைக் கடைப்பிடித்துப் பசு, பெண்டிர், பார்ப்பனர், பிணியுடையோர், இறந்தவர்க்குச் செய்யவேண்டிய கடன்களைச் செய்தற்குரிய பிள்ளைகளைப் பெறாதவர் ஆகியோரை பாதுகாப்பான இடத்தை அடைவீராக என்று மக்களை எச்சரிக்கும் நோக்கில் மன்னனது பேணும் இயல்பும், கருணை இயல்பும் வெளிப்படுகின்றன.

    நீர்வளம்:   

    நாட்டுவளத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ள நீர்வளத்தின் இன்றியமையாமையைத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அறிவுறுத்தும் குடபுலவியனார்,

    உணவுஎனப் படுவது நிலத்தோடு நீரே
    நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
    உடம்பும்
    உயிரும் படைத்திசி னோரே”   (புறம் – 18)

    என்ற பாடல் வழி நீர்நிலைகளைப் பெருக்கி நாட்டை வளப்படுத்துவது அரசியலில் அரசனின் தலையாயக் கடமை என்றும், அத்தகைய அரசனே நிலைபெற்ற புகழ்பெற முடியும் என்றும் அறிவுறுத்தியமை புலனாகிறது.

    ஒற்றுமை உணர்வு:

    ‘ஒற்றுமையாக இருப்பதே பலம்’ என்பதைப் புலவர், இருவேறு அரசர்கள் ஒருசேர இருந்தமையை நோக்கி இந்த ஒற்றுமை நீடிக்க வேண்டும் என வாழ்த்தியமையை,

    இருவீரும்
    உடன்நிலை திரியீர் ஆயின் இமிழ்திரைப்
    பௌவம்
    உறுத்தஇப் பயம்கெழு மாநிலம்
    கையகப் படுவது பொய் ஆகாதே”   (புறம் – 58)

    என்ற பாடல்வழி அறியலாம். தமிழக மூவேந்தர்கள் ஒருவருக்கொருவர் பகை கொண்டு போரிட்டால் வேற்றுப்புலத்து அரசர்களுக்குத் தமிழகம் ஆளும் இடமாகும் என்பதும் ஒற்றுமையினால் உலகம் வசப்படும் என்பதும் புலனாகின்றது.

    பகுத்துண்ணும் பண்பு:

    பழந்தமிழர்  பகுத்துண்ணும் பண்பினைப் பெரிதாகப் போற்றினர். கிடைத்தற்கரிய அமிழ்தம் கிடைத்தாலும் தான் மட்டும் உண்ணாமல் அனைவரோடும் பகுத்துண்டார்கள் என்பதை,

    இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும்
    இனிதெனத்
    தமியர் உண்டலும் இலரே” (புறம் – 182)

    எனப் புறநானூறு காட்டும். ஔவையார் அதியமானின் வீரத்தைப் பாராட்டுவதுடன், அவன் எல்லாருக்கும் பகுதுக்கொடுத்து உண்ணும் இயல்பினான் என்பதைச் சுட்டுகின்றார்.

    உண்டாயின் பதம் கொடுத்து
    இல்லாயின்
    உடன் உண்ணும்
    இல்லோர்
    ஒக்கல் தலைவன்”   (புறம் – 95)

    என்ற பாடல்வழி அதியமானின் உயரிய பண்பை ஔவையார் வெளிப்படுத்துகின்றார்.

    கல்வியின் பெருமை:

    மனிதனை மேம்படுத்தவும் நன்னெறியில் செல்ல வைப்பதற்கும் சிறந்த செல்வமாகத் திகழ்வது கல்விச் செல்வமாகும். ‘கல்வி சிறந்த தமிழ்நாடு’ எனப் பெயர் பெற்ற உயர்நிலைக்குத் தமிழகம் அக்காலத்து மேம்பட்டு விளங்கியது. ஆசிரியருக்குத் துன்பம் வந்தபோது உதவியும், வேண்டிய பொருள் கொடுத்தும், வழிபாட்டு நிலையை வெறுக்காது கற்பது நன்று எனக்கூறும் பாண்டியன் ஆரியப்படைக்கடந்த நெடுஞ்செழியன்,

    ஒருகுடிப்  பிறந்த  பல்லோ  ருள்ளும்
    மூத்தோன்  
    வருக  என்னாது அவருள்
    அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
    வேற்றுமை
    தெரிந்த  நற்பா  லுள்ளும்
    கீழ்ப்பால்  
    ஒருவன்  கற்பின்
    மேற்பால்  
    ஒருவனும்  அவன்கண்  படுமே”   (புறம் – 183)

    என்று உலகியலில் கல்வியின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றான். கல்வி உயர்வு தாழ்வினை நீக்குகிறது. அரசனும் கற்றவன் அறிவுரைப்படியே ஒழுகுவான். தன் வயிற்றில் பிறந்த உடன்பிறப்பு கொண்ட பலரில் கற்றவனையே தாயின் மனம் மிகவும் விரும்பும் என்பதை அறியமுடிகிறது.

    வரி வாங்கும் முறை:

    அரசன் தன் நாட்டு வருவாய்க்காக, மக்களிடம் வரிவாங்குதல் முறையேயாயினும், ஒரு சமயத்தில் மக்கள் துன்புறுமாறு வாங்கும் வரிப்பணத்தினால் அரசனுக்குக் கேடு வரும்; மக்களுக்குத் துன்பம் வரும். இதனை அரசன் உணர வேண்டும்.

    பரிவுதப எடுக்கும் பிண்டம்  நச்சின்
    யானை
    புக்க புலம் போலத்
    தானும்
    உண்ணான் உலகமும் கெடுமே”   (புறம் – 184)

    என்று பாண்டியன் அறிவுடை நம்பிக்குப் பிசிராந்தையார் அறிவுறுத்துகின்றார்.

    செல்வத்துப் பயனே ஈதல்:

    செல்வம் என்பது சிந்தையின் நிறைவாகும். பிறருக்குக் கொடுத்து மகிழும் வாழ்வே சிறப்புடையது. உண்பது நாழி; உடுப்பவை இரண்டே எனக் கூறி,

    செல்வத்துப் பயனே ஈதல்
    துய்ப்பேம்
    எனினே தப்புந பலவே”    (புறம் – 189)

    என்று நக்கீரனார் பொதுவாக அறிவுறுத்துகின்றார். அறவழியில் பொருளீட்டித் தானும் இன்புற்றுப் பிறர்க்கும் கொடுத்து அவர்களையும் இன்புற்று வாழவகை செய்வதன் மூலம் சங்ககாலத் தமிழர்களின் வாழ்க்கை நிலைகள் மேம்பட்ட தன்மைகளாக விளங்கியமை புலனாகின்றது.

    மனிதநேயம்:

    பழந்தமிழர் பண்பாடு மிக உயர்ந்தது. உலகமெல்லாம் பாராட்டிப் பின்பற்றக்கூடியது. தமிழ் மக்கள் உலகத்தை ஒன்றென்று கருதினர். உலகமக்களை ஒரே குலத்தவராக எண்ணினர். மனிதநேயமே இவ்வுலகிற்கு அவசியம். ஒருமைப்பாடே ஊக்கம் என்பதைக் கணியன் பூங்குன்றனார் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே,

    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும்
    நன்றும் பிறர்தர வாரா
    ————————————————–
    பெரியோரை வியத்தலும் இலமே
    சிறியோரை
    இகழ்தல் அதனினும் இலமே”   (புறம் – 192)

    என்று ஒற்றுமையுணர்வையும், மனிதநேயத்தையும், நன்மையும் தீமையும் நமக்கு நம்மால்தான் வருகிறது என்பதையும் பறைசாற்றுகிறார். இப்பாடல் தமிழர்களின் தனித்த பண்பாட்டை விளக்குவதாக அமைகின்றது.

    முடிவுரை:

    எட்டுத்தொகை நூல்களில் புறநானூறு பண்டையத் தமிழரின் வாழ்வியல் பண்பாட்டை மெய்மையுற விளக்கும் கலங்கரை விளக்கமாகும். மறத்தில் அறமும், நீர்வளம் குறித்த சிந்தனையும், பகுத்துண்ணும் பண்பும், ஒற்றுமை உணர்வும், ஏற்றத்தாழ்வை நீக்கும் கல்வியும், மக்களைத் துன்புறுத்தாது வரிவாங்கும் முறையும், அனைவரையும் ஒன்றாக எண்ணும் மனிதநேயமும் பண்டையத் தமிழரிடையே நிலவியமை புலனாகின்றது. இன்றைய நாகரிக உலகில் சிலர் பண்பாட்டை மறந்தும், இழந்தும் வரும் வேளையில் அவற்றை நினைவுகூர்வது சாலப் பொருந்தும்.

    துணை நின்ற நூல் ஆதாரங்கள்:

    1. புறநானூறு மூலமும் உரையும் – ஒளவை துரைசாமிப்பிள்ளை.
    2. பண்பாட்டு மானுடவியல் – பக்தவத்சல பாரதி.
    3. தமிழர் நாகரிகமும் பண்பாடும் – அ. தட்சிணாமூர்த்தி.

    *****
    உதவிப்பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை
    அ.வ.அ கல்லூரி (தன்னாட்சி)
    மன்னன்பந்தல்

     

     

     

     

    Share
  • மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ‘ பாரதி விழா ’

    ஸ்டாலின் குணசேகரன்

    *************************************************************************************************************************

    மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ‘ பாரதி விழா ’

    *************************************************************************************************************************

    001

    மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ஈரோடு நகரில் ஆண்டுதோறும் பாரதி பிறந்தநாளாகிய டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி மாநிலம் தழுவிய முறையில் ‘ பாரதி விழா ’ நடத்தப்பட்டு வருகிறது.

    002 (1)

    003

    இந்த ஆண்டின் ‘ பாரதி விழா ’ 11.12.2017 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு ஈரோடு – கொங்கு கலையரங்கில் நடைபெற்றது. பேரவை

    நடத்துகிற பாரதி விழாவில் ஆண்டுதோறும் மூன்று முக்கிய அம்சங்கள் இடம் பெறுகின்றன :

    004

    005

    1) பாரதி 1921 ஆம் ஆண்டு இறுதியாக உரை நிகழ்த்திய ஈரோடு – கருங்கல்பாளையம் நூலகத்திலிருந்து பாரதி விழா நடைபெறும் அரங்கம் வரை, பாரதியின் ஈரோடு வருகையை நினைவுகூரும் பொருட்டும் அவ்வருகையின் போது அவர் நிகழ்த்திய ’மனிதருக்கு மரணமில்லை,  ‘இந்தியாவின் எதிர்கால நிலை ‘ என்ற தலைப்புகளிலான  இறுதிப் பேருரைகளை நினைவுகூரும் விதத்திலும்  ’ பாரதி ஜோதி ‘ ஏந்திய வண்ணம் பேரவையின் தன்னார்வலர்களாக விளங்கும் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அணிவகுப்பு…

    006

    007

    2) தமிழகத்தின் தலைசிறந்த ஆளுமை ஒருவருக்கு ‘ பாரதி விருது ’  வழங்குதல்…

    3) காலமாகிவிட்ட நாட்டுக்குழைத்த நல்லோர் ஒருவரின் திருவுருவப்படத் திறப்பு…

    மாலை 4.30 மணிக்கு ‘ பாரதி ஜோதி ‘ கருங்கல்பாளையம் நூலகத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் வி.ஜீவகுமாரன் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. இவரின் உரைக்குப் பின்பு அணிவகுப்பு தொடங்கியது.

    008

    009

    இந்த ஆண்டின் ‘ பாரதி விருது ‘ தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் அவர்களுக்கு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர், கல்வியாளர் – சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்களால் விழாமேடையில் வழங்கப்பட்டது.

    010

    011

    கவிஞர் தமிழ்ஒளியின் திருவுருவப்படத்தை பொதுவுடைமை இயக்கத் தலைவர் திரு ஆர் நல்லகண்ணு அவர்கள் திறந்து வைத்தார்.

    முன்னதாக மக்கள் சிந்தனைப்  பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் விழா அறிமுகவுரை நிகழ்த்தினார்.

    012

    013

    இந்நிகழ்ச்சிக்கு தேசிய நலவிழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ எஸ்கேஎம். மயிலானந்தன் அவர்கள் தலைமையேற்றார்

    பேரவையின் செயலாளர் ந.அன்பரசு வரவேற்புரையாற்றினார். நிறைவாக பொருளாளர் க.அழகன் நன்றியுரையாற்றினார்.

    014

    015

    இந்நிகழ்வில் பல கல்வி நிலையங்களைச் சார்ந்த, மக்கள் சிந்தனைப் பேரவையின் உறுப்பினர்களாகத் திகழும் மாணவ – மாணவியர் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

    ஊர்ப் பிரமுகர்கள், கல்வியாளர்கள் பல்வேறு பொதுநல அமைப்புகளின் பொறுப்பாளர்கள், பெண்கள் என பொதுமக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

    016

    சிறப்பு விருந்தினர்களின் உரைகள், எழுச்சியுடன் பங்கேற்ற பார்வையாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக அமைந்தது.

    மிகச்சரியாக மாலை 6 மணிக்குத் தொடங்கிய கூட்டம், முன் கூட்டியே அறிவித்திருந்தவாறு இரவு 8.30 மணிக்கு நிறைவு பெற்றது.

    விழா அரங்கில், பேரவையின் சார்பில் ‘ பாரதி விழா சிறப்பு நூலரங்கம் ’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கவிஞர் தமிழ்ஒளி, சிலம்பொலி சு.செல்லப்பன், பொற்கோ, ஆர்.நல்லகண்ணு ஆகியோரின் நூல்களோடு மொழி, இலக்கியம், கவிதை மற்றும் தமிழாய்வு சார்ந்த ஏராளமான நூல்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.

    Share
  • உனக்கு மட்டும்

     

     

    முதல் கோணல்     

    முற்றிலும் கோணல்

    உன் வரவில்…..

    உற்று நோக்கல் தவறா?

    உற்று நோக்கியது தவறா?

    வினாக்கள் தொடுத்து

    இன்றுவரை

    விடைகளைப் பெற முடியவில்லை

    என்னால்…..

    காரணம் கேட்க எந்தவித

    பதிலும் வரவில்லை

    உன்பார்வையின் தோற்றம்

    இதுவரை வேண்டாதவனாய்

    பார்ப்பவர்க்கு மட்டும் அது.

    என்னைப் பொறுத்தவரை

    வேண்டப்பட்டவராய்

    மட்டுமே உன் வரவு…

    ஊடல்களுக்கு நடுவில்

    சில முரண்பாடுகளின்

    விளக்கம் உன் வார்த்தையில்

    தெளிவுபெறும் போது

    சமாதனம் பெறுவது

    மனம் மட்டுமல்ல…..

    ஊடல்களைத் தீர்க்க

    எந்த உறவுகளுக்கும்

    தெரியாது மனம் செய்யும்

    ஆறுதல் மொழி

    உனக்கு மட்டுமே புரியும்

    விளக்கம் இன்று வரைத் தேடலே…….

    மூச்சுக் காற்றின்

    வெம்மையும் இன்று

    அனலாகத் தான்

    வெளிப்படுகிறது….

    நாள்தோறும் உன்னைத் தேடும் கண்களுக்கு

    ஆறுதல் கூறுவது இனி

    எப்படி என்பது தேடுதலாக அமைகிறது…..?

    ஏக்கம் கொள்ளும்

    மனதிற்குப் புரியுமா

    இது இன்னொருவரின்

    பொருள் என்று….

    சொந்தம் கொண்டாட

    உரிமையில்லை என்று

    விளக்கும் பக்குவம்

    மனதிற்கோ அறிவிற்கோ

    எட்டாது கோபம்

    இடைமறிக்கிறது….

    விட்டுச் சென்று

    வீரநடைப் போட்டு

    வாழ்வைத் தொடங்க

    மனம் செயல்பட

    நினைக்கும் போதெல்லாம்

    பார்வையின் பரிசம்

    கண்முன் காட்சியாய்

    தோன்ற கோபமும்

    கானல் நீராய்

    காணமல் போவது

    வேடிக்கையாகத்தான்

    இருக்கிறது………

    கோபங்களைத் தாண்டி

    மனம் உறுதியாக எடுக்கும்

    முடிவினையும் உன் வார்த்தைகள்

    பிளவுபடுத்துகிறது…..

    நீ விருப்பம் போல செயல்பட

    என் வெறுப்புகளை உன் மீது

    வேண்டா வெறுப்பாய்

    மட்டுமே திணிக்கிறேன்

    நீ வேண்டாம் என்பதற்காக

    அல்ல…… நீ விலகிச்

    செல்வாய் என்பதற்காக…!

    கிட்ட இருந்து

    வேதனைப் படுவதைக் காண மனம்

    இயங்காத போது

    எட்ட இருந்து உன்

    சந்தோசத்தை நிலைக்கச்

    செய்ய முடியும் என்ற

    நம்பிக்கையால் மட்டுமே…..

    மழையைக் கூட

    ரசிக்க மனம் ஒன்றவில்லை

    மழையும் உன்னை

    நினைவுபடுத்துகின்றது

    பிரிந்து செல்ல மனம்

    ஏதுவாக இல்லைதான்

    இருப்பினும் என் பிரிவால்

    உன்னை நீ பெறுவாய்

    என்பதால் மட்டுமே

    உனக்குரிய பொருள்

    உனக்காக இருக்க

    இடையே வந்தது

    இடம் தெரியாமல்

    போக மனம் ஒன்றாத போதிலும்

    விலகிப் போக முடிவு

    செய்த போதிலும் நடக்குமா

    என்பது கேள்விக் குறியே…….!

     

     

    சிந்து.மூ, உதவிப்பேராசியர்,தமிழ்த்துறை,கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்,ஈச்சநாரி.

    Share
  • மெய்ப்பாட்டியல் முதலாமவத்தையில் உரையாசிரியா்களின் அகநானூற்றுத் திறன்

    -பீ.பெரியசாமி

    1.முன்னுரை

    முதலில் எண்வகை மெய்ப்பாடுகளை உணா்த்தி அதன் பின் அகத்திற்கும் புறத்திற்குமான முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளை எடுத்தோதிய தொல்காப்பியா், (நு-3-12). அதன்பின்னே அன்பின் ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகளை எடுத்தோதியுள்ளார். அவற்றை உரையாசிரியா்கள் அவத்தைகள் எனக் கொள்வா். (நூ 13-18) அவத்தைகள் ஆறு. அவற்றுள் முதலாமவத்தையும் அதன் விரிகளையும் தொல்காப்பியா் விரித்தோதியுள்ளார். அவற்றுக்கு உரைவகுத்துள்ள உரையாசிரியா்கள் தங்கள் உரைகளில் அகநானூற்றுப் பாடல்களை எவ்வாறு எடுத்தாண்டுள்ளனா் என்பதனை இக்கட்டுரை ஆராய்கிறது.

    1.1   முதலாமவத்தையும் அதன் விரிகளும்:
    முதலாமவத்தையின் விரிகளைத் தொல்காப்பியா்,

    “புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியா்த்தல்
    நகுநயம் மறைத்தல் சிதைவுபிறா்க் கின்மையொடு
    தகுமுறை நான்கே ஒன்றென மொழிப“ (நூ.13)
    எனும் நூற்பாவில் கூறியுள்ளார். 

    1.2   உரையாசிரியா்கள் பார்வையில் முதலாமவத்தை:

    உரையாசிரியா்கள் (இளம்பூரணர், பேராசிரியா், ச.சோ.பாரதி) ஒருவனும் ஒருத்தியும் எதிர்பட்டவழிக் கரந்தொழுகும் உள்ள நிகழ்ச்சி பெண்பாலதாகலாற் பெரும்பான்மையும் அவள் கண்ணே ஈண்டுக் கூறுகின்ற மெய்ப்பாடு சிறந்ததென்பது எனக் கூறுகின்றனா்.

    1.2.1 பொறிநுதல் வியர்த்தல்

    பொறிநுதல் வியா்த்தலென்பது அவ்வழி முகம்புக்கு அவனைப் பொருந்திய தலைமகள் உட்கும் நாணும்  வந்துழி வரும் நுதல்வியா்ப்பு என இளம்பூரணரும் (இள.மெய்.நூ-3) தலைமகன் தன்னை நோக்கியவழி உட்கும் நாணும் ஒருங்கு வந்தடைதலின் வியா்பொறித்த நுதலளாதலும், இம்மெய்ப்பாடு தலைமகற்குரித்தன்று; உட்கும் நாணும் அவற்கின்மையின் எனப் பேராசிரியரும் (பேரா.மெய்.நூ-13) நோக்கெதிர்ந்து தலைவன் காதற்குறிகண்டு மகிழுந் தலைவிக்கு உள்ளுணா்வு பொங்கப் பொள்ளெனப் புறம்வியா்த்தல் இயல்பாதலின் மறையா அவள் சிறுநுதலின் குறுவோ்வை தோன்றும் என ச.சோ.பாரதியும் (ச.சோ.பா.மெய்.நூ-13) உரை கொள்வா். இவற்றின் வழித் தலைமகன் தலைமகளை நோக்கியவழி தலைமகளிடையே அச்சமும் நாணமும் தோன்ற நுதல் வியா்தல், பொறிநுதல் வியா்த்தல் எனப்படும் என்பது அறியப்படுகிறது. இதனை விளக்கப் பேராசிரியரும் ச.சோ.பாரதியும்,

    “பெரும்புழுக் குற்றநின் பிறைநுதா் பொறிவியா்
    உறுவளி யாற்றச் சிறுவரை திறவென“ (அகம்-136)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனா். இப்பாடலில் படுக்கையில் என் உயிருக்கு உடம்பாக வந்த தலைவி உடம்பு முழுவதையும், புத்துடையால் போர்த்திக் கிடந்தாள். நான் அவளை நெருங்கி அவள் முகத்தைக் காண விரும்பி மிக்க புழுக்கத்தால் உனது நெற்றியில் அரும்பிய வியா்வையைக் காற்று நீக்குமாறு சிறிது திற என்று கூறி அன்பின் மிகுதியால் போர்வையை நீக்கினேன் என்பதில் பொறிநுதல் வியா்த்தலெனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளமையை அறிய முடிகிறது.

    1.2.2 நகுநயம் மறைத்தல்

    நகுநயம் மறைத்தலென்பது தலைமகன் கூறுவனகேட்டு நகை வந்துழி நயத்தலாகிய விருப்பத்தினைப் புலனாகாமை மறைத்தல் என இளம்பூரணரும்; தலைமகன்கட்டோன்றிய குறிப்புகளான் அதற்கேதுவாகிய நயனுடைமை மனத்திற் பிறந்த வழியும் நகாது நிற்றலும் எனப் பேராசிரியரும்; முதற்காட்சியில் தலைவன் நோக்கெதிர்ந்து அவன் காதற் குறிப்பறிந்து தலைவி மகிழ்வான் முகிழ்க்குந் தன் முறுவலை “பிணையோ; மடநோக்கும் நாணுமுடையள் ஆதலின் மறைக்குமவள் முயற்சியைக் குறிப்பதாகும். மேல் மூன்றாஞ் செய்யுளில், “நாணினளிறைஞ்சி மிகை வெளிப்படாது நகைமுகங்கரந்த நன்னுதல் அரிவை“ என வருதல் காண்க என ச.சோ.பாரதியும் பொருள் கொள்வா். இதன் வழி நகுநய மறைத்தலென்பது தலைவன் தலைவியை நோக்கிச் செய்யும் செயலினால் தலைவிக்கு நகை தோன்றியவழி அதனைத் தலைவனுக்கும் புலனாகாமல் மறைத்தலே நகுநய மறைத்தல் என்பது அறியப்படுகிறது. இம்மெய்ப்பாட்டினை விளக்கப் பேராசிரியா். குறுந்.169, குறள்.1274 ஆகிய பாடல்களையும், ச.சோ.பாரதி, குறள்.1098, 1271, 1274 ஆகிய குறட்பாக்களையும் எடுத்தாண்டுள்ளனா்.

    1.2.3 சிதைவு பிறர்க்கின்மை

    சிதைவு பிறா்க்கின்மையென்பது தன்மனனழிவு பிறா்க்குப் புலனாகாமை நிற்றல். ஒடு எண்ணின்கண் வந்தது என இளம்பூரணரும்; நகுநய மறைத்த வழியும் உள்ளம் சிதைந்து நிறையழியுமாகலின் அச்சிதைவு (தலைவிக்கன்றிப்) புறத்தார்க்குப் புலனாகாமை நெஞ்சினை நிறுத்தலும் எனப் பேராசிரியரும்; நாணிறந்து பெருகுங் காதலால் உருகுந் தலைவி தன்நிறையழிவு பிறரறியாவாறு மறைக்கு முயற்சி என ச.சோ.பாரதியும் உரை கொள்வா். இவற்றின் வழி நகுநய மறைத்தும் தலைவன் மீதான அளவுக்கடந்த காதலால் மனன் சிதைந்தவழி அதனை புறத்தார்க்குப் புலப்படாது காத்தல் (சிதைவு பிறர்க்கின்மை) என்பது அறியப்படுகிறது. இதனை விளக்க பேராசிரியா் தொல். பொருள்.98 ஆம் நூற்பாவில் ச.சோ.பாரதி குறள்.1253, சீவக 710-712 ஆகியவற்றினையும் எடுத்தாண்டுள்ளனா;. மேலும் பேராசிரியா்,

    “அகமலி யுவகைய ளாகி முகனிகுந்து
    ஒய்யென இறைஞ்சி யோளே“ (அகம்.86)

    எனும் பாடலை எடுத்தாண்டுள்ளார். இப்பாடலில் அகத்தே பொலிந்த மகிழ்ச்சியளாய் நாணினால் முகத்தை வளைத்து விரைவு வணங்கினாள் தாழ்ந்தாள் என்றவழிச் சிதைவு பிறா்க்கின்மை எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டமையை அறிய இயலுகிறது.

    1.2.4 புகுமுகம் புரிதல்

    புகுமுகம் புரிதலென்பது தலைமகன் புணா்ச்சிக் குறிப்பினனாய்ப் புகுது முகத்தினை மாறுபடாது பொருந்துதல் என இளம்பூரணரும்; ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவழித் தன்மை அவன் நோக்குதற்கண் விரும்பும் உள்ள நிகழ்ச்சி; புகுதலென்பது தலைமகன் நோக்கிய நோக்கெதிர் தான் சென்று புகுதல்; முகமென்பது அங்ஙனந் தான் புகுதற்கிடமாகிய நோக்கு; நோக்கெதிர் நோக்குதலை முகநோக்குதல் என்பவாகலின் இந்நோக்கினை முகமென்றானென்பது. புரிதலென்பது, மேவுதல் என்றவாறு; அஃதாவது, தலைமகன் காண்டலைத் தலைமகள் வேட்டல் என்றவாளாம்; மற்றது தலைமகற்கு உரித்தன்றோவெனின் அவன்தான் காண்பினல்லது தற்காண்டலை நயவான், அது தலைமையன்றாகலி னென்பது அது எனப் பேராசிரியரும்; “புகுமுகம்“ என்பதை “முன்றில்“, “தொழுதெழும்“, “வணங்கி வீழ்ந்தான்“ என்பன போலச் சொன்மாற்றிப் பொருள் கொள்க. புரிதல், விருப்பங் குறிக்கும் என ச.சோ.பாரதி உரைகொள்வா். இவற்றின் வழி புகுமுகம் புரிதலென்பது தலைவனும் தலைவியும் முதற்முதலாய் எதிர்ப்பட்ட வழி தலைமகன் தலைமகளை நோக்கிக் காமக் குறிப்பினனாய் அவள் முகத்தை நோக்குதல் என்பது அறியப்படுகிறது. இம்மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணர் குறள்-1085 ஐயும். பேராசிரியா் குறள்-1094ஐயும்; ச.சோ.பாரதி குறள்.1082 ஆகியவற்றையும் எடுத்தாண்டுள்ளனா்.

    1.3   முடிவுரை

    முதலாமவத்தையினை விளக்க இளம்பூரணர்; ஒரு திருக்குறளையும் பேராசிரியா் இரண்டு திருக்குறள், இரண்டு அகநானூற்றுப்பாடல், ஒரு குறுந்தொகைப் பாடல், ஒரு தொல்காப்பிய நூற்பா என ஆறு எடுத்துக்காட்டுகளையும்; ச.சோ.பாரதி ஆறு திருக்குறள்களையும், அகநானூற்றுப் பாடல் ஒன்றையும், சீவகசிந்தாமணிப் பாடலடி ஒன்றையும் என எட்டு எடுத்துக்காட்டுகளையும் எடுத்தாண்டுள்ளனா். இவற்றின் வழி உரையாசிரியா்கள் திருக்குறள் (1085, 1094, 1274, 1082, 102, 1098, 1271) ஏழும், அகநானூறு (136, 86) இரண்டும், குறுந்தொகை (169) ஒன்றும், தொல்காப்பிய நூற்பா (தொ.பொ.98) ஒன்றும் எனப் பதினொரு எடுத்துக்காட்டுகளை எடுத்தாண்டுள்ளனா். இதில் அதிகமாகத் திருக்குறளும் அடுத்தப்படியாக அகநானூற்றுப் பாடலும் எடுத்தாளப்பட்டுள்ளது என்பது முடிவு.

    *****

    கட்டுரையாசிரியர்
    தமிழ்த்துறைத்தலைவர்
    டி.எல்.ஆர். கலைமற்றும் அறிவியல் கல்லூரி
    விளாப்பாக்கம்

    Share
  • புறநானூறு காட்டும் போர் நிர்வாகமும் மேலாண்மையும்

    முனைவர். ஹெப்சி ரோஸ் மேரி.அ

    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

    கேரளப் பல்கலைக்கழகம்

    திருவனந்தபுரம்.

    வீரத்தையும்  காதலையும் சங்ககால மக்கள் தம் இரு கண்களாகக் கொண்டனர். எனவேதான் சங்க இலக்கியங்கள் காதலையும் வீரத்தையும் பாடுபொருளாகக் கொண்டன.  காதலை அகநூல்களும் வீரத்தைப் புறநூல்களும் எடுத்தியம்பின.  எனினும் அகநூல்களில் புறச்செய்திகளும் புறநூல்களில் அகச்செய்திகளும் இடம் பெறுவதைக் காணலாம்.  புறநானூறு என்றதுமே சங்ககால மக்கள் நடத்திய போர்களும் அவர்களது வீரச்செயல்களுமே நமது நினைவுக்கு வரும்.  ஆனால் போரினால் விளையும் துன்பங்களை எடுத்துக்கூறி போர்களைத் தடுப்பதற்குரிய வழிமுறைகளையும் கட்டாயமாகப் போர்செய்ய வேண்டிய சூழல்களில் பொது மக்களுக்குத் துன்பம் ஏற்படாதவாறு அவர்களைப் பாதுகாத்த சங்ககால மக்களின் நிர்வாகத் திறனையும் புறநானூறு பதிவாக்கியுள்ளன.  இக்கட்டுரை        புறநானூறு காட்டும் அக்கால மன்னர்களின் போர் நிர்வாகத்தையும் போரிடர் மேலாண்மை திறத்தையும் எடுத்துரைக்க முயல்கிறது.

     

    போரும் காரணங்களும்

         போர் என்றவுடனே நமது நினைவுக்கு வருவது போரின் அழிவும் துன்பமும் தான்.  மனிதகுலம் தோன்றிய காலம் முதல் இன்றுவரை போராட்ட உணர்வு மேலோங்கியே வந்திருக்கின்றது.  நமது நாட்டில் நிகழ்ந்ததாகக் கருதப்படும் போர்களால் மக்கள் மிகுந்த துன்பத்தையே அனுபவித்தனர்.  அறிவிலும் ஆற்றலிலும் வளர்ந்து கூடிவாழ முற்பட்ட பின்னரும் தொடக்ககால போர் வெறி குறைந்தபாடில்லை.  போர் முறையில் ஈட்டியும், வாளும் துப்பாக்கியும் செயலிழக்க புதிய போர்க்கருவிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.  ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டிலும் இராணுவத் தளவாடங்களுக்காக ஒதுக்கப்படும் தொகையும் பெருகிக்கொண்டே இருக்கிறது.  வல்லாண்மை மிக்க நாடுகள் இந்த உலகத்தைப் போல பதினைந்து உலகங்களை அழிக்கின்ற அளவிற்கு அணு ஆயுதப் போர்க்கருவிகளைக் குவித்துக் கொண்டிருக்கின்றன.  இத்தகைய அணு ஆயுதங்களைப் பெருக்குவதற்குக் காரணமாக அமைந்த போருக்குரிய சில காரணங்களைக் காண்போம்.

         ’இந்தியாவில் போர்’ என்னும் நூலில் போருக்குரிய காரணங்களாகக் கீழ்வருவனவற்றை இராமசந்திர தீட்சிதர் சுட்டுகிறார்.  மறவனின் போர் விருப்பமும் உடல்தினவும் வழிவழியாகப் போர் செய்யத் தூண்டுவனவாக அமைந்தன என்று குறிப்பிடுகிறார்.  போரையே தொழிலாகவும் போர்க்கள சாவையே புகழுக்குரியதாகவும் தமிழர் விரும்பினர். சங்ககால வீரத்தாயும் தன்மகன் போர் செய்வதையே பெருமையாகக் கருதினாள்.  சான்றாக,

               ’புலிசேர்ந்து போகிய கல்லளை போல

               ஈன்ற வயிறோ விதுவே

    தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே’     – புறம் 86

    என ஒரு தாயிடம் நின் மகன் எங்கு உள்ளான்? என்று வினவியவர்க்கு அவன் போர்களத்து இருப்பான். அவனைப் பெற்ற வயிறு புலி இருந்து சென்ற கன்முழை போன்று இங்கு உளது என்று கூறுவதாக அமைகின்றது.

     மேலும்  பண்டைய தமிழர் போர் வீரர்களாக இருப்பதையும் போரில் களிறுகளை வீழ்த்துவதைப் பெருமைக்குரிய செயல்களாகவும் கருதியுள்ளனர்.  இத்தகைய வீரச் செயல்களைப் புலவர்கள் புகழ்ந்து பாடுதல் வேண்டும் என்று புலவர்களுக்குப் பொருள் கொடுத்து ஆதரித்தனர்.

    ‘ வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்

    இன்று உளன் ஆயின் நன்றுமன் என்ற நின்

    ஆடுகொள் வரிசைக்கு ஒப்ப                 – புறம் :53

    கபிலர் இல்லையே என்று வருந்திய மாந்தரஞ்சேரலிரும் பொறையிடத்து இளங்கீரனார் ‘ நின் புகழ் முற்றுப் பெற்று விடவில்லை அதனைப் பாடி முடிதல் எம்மனோர்க்கு இயலா. கபிலர் இருந்தால் சிறப்புற நின்னை பாடுவான். ஆயினும் என்னால் இயன்றவரைப் பாடுவேன் பாடாதிருந்தால் அரிது என விளக்கினார்.

    இத்தகைய எண்ணம் உலகம் முழுமையும் இருந்ததை சி.எம். பெளராவின் வீரயுலகப் பாடல் என்னும் நூல்வழி அறியமுடிகிறது.  ஆக போர் என்பது மனிதனின் மனப் போக்கினால் உருவானது மட்டுமன்று உலகத்தின் இயல்பும் கூட எனப் புறநானூறு கூறுகின்றது.

    ‘ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

    புதுவதன்று இவ்வுலகத் தியற்கை                 –     புறம் – 76

    என்ற அடிகள் சுட்டுகின்றன.  எனவே போர் பலவழிகளில் நிகழ்ந்துள்ளன.  மன்னர்கள் தன் எல்லைகளைப் பரப்புவதற்காகவும்  தன் புகழை நிலை நாட்டுவதற்காகவும் போர் செய்தனர். சான்றாக,

               முழங்கு முந்நீர் முழுவது வளைஇப்

               பரந்துபட்ட வியன் ஞாலம்

               தானிற் தந்து தம்புகழ் நிறீஇ      புறம் 18

    கடலால் சூழப்பட்ட இவ்வகன்ற உலகத்தை மன்னன் தன் முயற்சியால்  கொண்டு தன் புகழை நிலை நாட்டியதை இவ்வரிகள் சுட்டுகின்றன.

    மேலும்  தன்மானம் காரணமாகவும் ( புறம் 75)  புலவர்கள் தம் வீரச் செயல்களைப் புகழ்வதற்காகவும், போர் நிகழ்த்தினர் என்ற செய்தியையும் புறநானூறு வாயிலாக அறிகின்றோம்.

    மகளிர் காரணமாகப் போர் நிகழ்ந்ததைப் புறநானூறு பதிவாக்கியுள்ளது. அதாவது மகட்கொடை மறுப்பு காரணமாகப் போர் நிகழ்ந்ததைப்  புறம் 116, 337, 342 போன்ற பாடல்கள் எடுத்தியம்புகின்றன.

    போரால் ஏற்படும் துன்பம்

    போரால் மக்கள் பல துன்பத்திற்கு ஆளானதைச் சங்க இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. போர்களத்தில் பிணங்கள் எங்கும் கிடக்கும் தோற்றம் தச்சனின் உலைக்களத்தில் கிடக்கும் கருவிகளைப் போன்றிருந்தது என்றும் ( களவழி 15) வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் அவர்கள் உடலிலிருந்து சொட்டுச் சொட்டாகக் குருதி ஒழுகும் காட்சி கார்த்திகை விழாவில் வரிசையாக வைக்கப்பட்டுள்ள கார்த்திகை விளக்கு போன்று  ( களவழி 21) இருந்தது என்றும் யானைகள் போர்க்களத்தில் கிடக்கும் காட்சி குன்றுகளைப் போலிருந்தது என்றும் ( களவ 21) களவழி நாற்பது போர்க்களக் காட்சியை எடுத்தியம்புகிறது.  புறநானூற்றில் ஒரு பெண் தன்கணவன் போரிடச் சென்று திரும்பி வராதது கண்டு போர்களம் நோக்கிப் புறப்பட்டாள் . அங்கே அவளது கணவன்

    ‘ எடுப்ப எழாஅய் மார்பம் மண்புல்ல

    இடைச் சுரத்து இறுத்த மள்ள          ( புறம்254)

    எழுப்ப எழாதவனாய் மார்பில் புண்பட்டு சுரத்திடை வீழ்ந்து கிடக்கின்றான் என்பதை இவ்வரிகள் உணர்த்துகின்றன.

    …………….யானும்

    மண்ணுறு மழித் தலைத் தென் நீர்வார

    தொன்று தாம் உடுத்த அம்பகைத் தெரியற்

    சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்

    கழிகல மகளிர் போல

    வழி நினைத்திருத்தல் அதனினும் அரிதே          –     புறம் 288

    இவ்வரிகள் போர்களத்தில் தன் கணவன் இறந்த  செய்தியைக் கேட்ட பெண்ணின் மன நிலையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. முடிகளைந்து தலையைக் கழுவுதலும் அல்லி அரிசியை உண்டு அணிகலன்களைக் களைந்து கைம்பெண் போல கணவன் இறந்த பின்பு வாழ்தல் அரிது என்று ஒரு பெண் புலம்புவதாக அமைகிறது.  இதிலிருந்து போர்த்துன்பத்தால் வீரர்கள் இறந்து படுவதும் அவ்வீரர்களின் மனைவியர் பெரும் துன்பத்திற்கு ஆளானதையும் புறநானூறு வழி அறிந்து கொள்ள முடிகிறது.

    போர் நிர்வாகம்

           நாட்டை ஆளும் மன்னனுக்குத் துணையாக அமையக் கூடியவற்றுள் மிகமுக்கியத்துவம் வாய்ந்தது படை ஆகும்.  இதனைத் திருவள்ளுவர்,

               ’படைகுடி கூழமைச்சு நட்புஅரண் ஆறும்

               உடையான் அரசருள் ஏறு         – திரு 381

    என்று படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறங்கங்களைக் உடையவன் அரசருள் ஏறு போன்றவன் என்று எடுத்துரைக்கின்றார்.  இவ்வாறனுள் முதலிடம் பெறுவது படை ஆகும்.  இப்படையை நிர்வகித்தல் அரசனின் தலையாய கடமையாகும்.

    சங்ககால மன்னனுக்கு எனத் தனியான ஒரு நிலையான படை இல்லை என்பதை சங்க இலக்கியம் வழி அறிய முடிகிறது.  போர்க்காலத்தில் திரட்டப்படுவனவே படைகளாக அமைந்துள்ளன. அப்படைகள் போர் புரிந்து பல வெற்றிகளையும் பெற்ற செய்தியையும் அறிய முடிகிறது. சிறு குழந்தைகள் வரையிலும் போரில் ஈடுபட்ட செய்திகள்   புறநானூறில் பதிவாகியுள்ளன.   புறநானூற்றின் வாயிலாக அக்காலத்தில் யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ,தேர்ப்படை  என்ற நாற்படை பற்றிய குறிப்புகள் காணக்கிடக்கின்றன.  எனினும் அதனை மன்னன் எவ்வாறு நிர்வகித்தான் என்பதற்கான அகச் சான்றுகள் மிகக் குறைவாகவே காணக்கிடக்கின்றன.

         தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் தன் சிறுவயதிலேயே போர்த்தொழிலை மேற்கொண்டவன்.  அவனைப் புகழும் இடைக்குன்றூர் கிழார்,

    ’ கிண்கிணி களைந்தகா லொண்கழ றொட்டுக்

    நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன்

    யார்கொல் வாழ்கவன் கண்ணி தாட் பூண்டு

    தாலி களைந்தன்று மிலனே பால்விட்

    டயினியு மின்றயின்றனனே       –     புறம் -77

    இப்பாடல் வரிகளில் காலிலே வீரக் கழலை அணிந்த ஐம்படைத் தாலிகழற்றாத இவன் பால் பருகுதலை விட்டு இன்று உணவு உண்டனன் என்று குறிப்பிடுகிறார்.  அதாவது போர்த்தொழில் செய்ய விரும்புவோர் உடல்வாகை ஊக்குவிக்கும் சத்தானஉணவு வகைகளை உண்டான் என்ற செய்தி இலைமறை காயாக இப்பாடலில் இருப்பதைக் காணலாம்.  போர் வீரர்கள் பல உணவு வகைகளை உண்டு தம் உடல் வலிமையைப் பெருக்கினர் என்பதையும் அறியமுடிகிறது.  பாரதப்போரில் பெருஞ்சோறிட்ட உதியன் சேரலை இங்கு நினைவு கூறத் தக்கது.

    போர் செய்யும் முறை

    அக்காலத்தில் நிகழ்ந்த போர் முறைகளைத் தொல்காப்பியம் எடுத்தியம்புகின்றது.  பழங்காலத்தில் ஐந்து நிலைகளில் போர் நிகழ்ந்ததைத் தொல்காப்பியம் சுட்டுகிறது.  இவ்வைந்து நிலைகளுக்கும் ஐவகையான பூக்களை அணிந்தனர்.  இது இக்காலத்து சீருடைகள் அணிவதற்கு இணையானது என்ற பூரணசந்திரன் அவர்களின் கருத்து இங்கு ஒத்து நோக்கத்தக்கது.  தொல்காப்பியர் கருத்துப்படி ஆ நிரைகளைக் கவர்தலே  போரின் தொடக்கமாகும் இதற்கு வீரர்கள் வெட்சிப்பூச் சூடுவர்.  ஆ நிரைகளை மீட்க வருவோர் கரந்தைப் பூச்சூடுவர்.   கோட்டையில் நின்று போர் செய்வோர் உழிஞைப்பூச் சூடுவர்.  கோட்டையை முற்றுகை இடுதலைத் தவிர்ப்பதற்கு நொச்சிப்பூ சூடுவர்.  மட்டுமல்லாது இரு பெரும் வேந்தர்களும் ஒருகுறிப்பிட்ட இடத்தில் நின்று போர் செய்வதற்குத் தும்பைப்பூ சூடுவர். இப்போரில் நால்வகைப் படைகளையும் பயன்படுத்துவர்.  புறநானூறில்   நால் வகைப் படைகளையும் பயன்படுத்துவதால் பெரும்பான்மையும் தும்பைப் போரைப் பற்றியே அதிகமாகப் பேசுகிறது எனலாம்.

    மேலும் அக்காலத்தில் போருக்கென சில விதிமுறைகள் இருந்தன.  அன்று நேருக்கு நேர் வாள், வில், ஈட்டி போன்றவை கொண்டு போரிடும் முறைகள் காணப்பட்டன.

    ’உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை

    வியந்தன்று மிழிந்தன்று மிலனெ யவரை

    அழுந்தப் பற்றி யகல் விசும்பார்ப்பெழக்

    கவிழ்ந்து நிலஞ்சேர வட்டதை’         புறம் – 77

    என்ற வரிகளில் தன் எதிரில் வந்து நின்ற பகைவர்களை இறுகப் பிடித்து ஆகாயத்தில் ஒலியெழ உடல் நிலத்தில் விழவீழ்த்தியதை எடுத்தியம்புகிறது. எனவே அக்காலத்தில் நேருக்கு நேர் எதிர்த்து போரிட்டனர் என்பதை அரியலாம். புறமுதுகிட்டு ஓடும் எதிரியையும் ஆய்தம் இன்றி நிர்கதியாய் நின்றோரையும் தாக்குதல்கூடாது என்பது அக்கால மரபு.

    போரிடர் மேலாண்மை

    போர்த்துன்பத்தால் ஏற்படும் அபாய நிலைகளைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளைப் போரிடர் மேலாண்மை எனலாம்.  அழிவு ஏற்பட இருக்கும் பகுதியை அவசரமாகக் காலி செய்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும் உறையுளும் வழங்குதல், வந்த போரை எதிர்கொள்ள படை பலத்தைப் பெருக்குதல் போன்றனவும் இவற்றுள் அடங்கும்.

         போரிடரால் மக்களுக்குப் பேரழிவு ஏற்படாதவாறு போர் நிகழ இருக்கும் இடத்தின் அருகிலுள்ள மக்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு பறை அடித்து அறிவிக்கும் நிகழ்ச்சி புறனானூற்றில் இடம் பெற்றுள்ளது.

    ’ஆவும் ஆன் இயற்பார்பன மாக்களும்

    பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்

    தென்புல வாழ்நர்க்கு அருங் கடன் இருக்கும்

    பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும்

    எம் அம்பு கடிவிடுதும்  நும் அரண் சேர்மின்       புறம்-  9

    பசுவும் பசுவினியல்பை ஒத்த பார்ப்பனரும் பெண்களும் நோயுற்றவரும் இறந்து தென்திசையில் வாழும் முன்னோருக்குச் செய்யும்  அரிய சடங்குகளை மதித்துச் செய்யும் புதல்வர்களைப் பெறாதவர் எனப்பலரும் கேட்பீராக யாம் எம் அம்புகளை விரைவுபட செலுத்திப் போரிட உள்ளோம் யாவரும் பாதுகாப்பான இடத்தை அடையுங்கள் என்று ஆபத்தான இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு மக்களை இடம்பெயரச் செய்யும் உயரிய பண்பு அன்றைய மக்களிடையே நிலவியிருந்தது.  இது இன்றைய போர் முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்பது நினைவு கூறத்தக்கது.

         போர்க்களத்தில் படையை அழித்தல், மன்னர்களைக் கொல்லுதல், பகை மன்னர்களின் முரசு, காவல்மரம் இவைககளைக் கவர்ந்து கொள்ளுதல் கடிமரத்தை அழித்தல்,  ஊரை எரிப்பதுடன் நீர் நிலைகளை உடைத்தல் விளைந்த வயல்களில் தீமூட்டுதல் எனப் பல்வேறு இழிச் செயல்களையும் செய்தனர்.  இதனை மனதில் கொண்ட புலவர்கள் போரைத் தூண்டாமல்  போர் நடக்காமலிருக்க என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அத்தகைய முயற்சிகளைச் செய்துள்ளனர்.

    சோழர் குடியில் பிறந்த நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் போர் செய்வதற்குத் தயாராக இருந்தனர்.  அப்போது கோவூர்க்கிழார் என்னும் புலவர் உங்கள் இருவர் மாலையும் ஆத்திப்பூவால் ஆனது.  போரில் இருவரும் வெற்றியடைதல் இயலாதது. ஒருவர் வென்று மற்றவர் தோற்பர்.  உங்களில் யார் தோற்பினும் உங்கள் குடியின் தோல்வியையே அது உணர்த்தும் .  உங்களை ஒத்த சேரர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இத்தோல்வி பெரும் மகிழ்ச்சியைத் தரும் எனவே போர் செய்வதை நிறுத்துங்கள் என்று கூறுகின்றார்.  இதனைப் பின்வரும் புறநானூற்றுப் பாடல் எடுத்தியம்புகிறது

    ‘ நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே நின்னொடு

    பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றே

    ஒருவீர் தோற்பினும் தோற்பதும் குடியே

    இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால்

    குடிப்பொருள்  நன்று நும் செய்தி கொடித்தேர்

               நும்மோர் அன்ன வேந்தர்க்கு

    மெய்ம்மலி உவகை செய்யும் இவ் இகலே         புறம் – 45

    மேலும் தந்தை மகனுக்கு இடையே நடந்த போரைத் தவிர்த்தலையும்  புறம் 213 ஆம் பாடலால் அறிகிறோம். போரால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறி போரைத் தடுத்தலையும் ( புறம் 77) புற நானூறு சுட்டுகிறது.

         சங்ககால மன்னர்கள் போர்த்தொழிலில் மட்டுமன்று படையின் வலிமையறிந்து படையை நிர்வகிக்கும் திறனையும் பெற்றிருந்தனர். போரினால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து போரிடருக்குரிய மேலாண்மைத் திறனை பெற்ற செய்தியையும் புறநானூறு வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.

    பயன்பட்ட நூல்கள்

    • சாமிநாத ஐயர் உ. வே (ப.ஆ)புற நானூறு , தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1988
    • தமிழ் வேலு- சு – களவழி களமும் காலமும், தென்பெண்ணைப் பதிப்பகம், தென்னார்க்காடு,1997
    • பரிமேலழகர் திருக்குறள், பூம்புகார் பதிப்பகம், சென்னை 1986
    Share
  • அப்துல் ரகுமான் கவிதைகளில் படிமமும் குறியீடும்

    -முனைவர் இரா. தேவேந்திரன்

    முன்னுரை:

    தமிழ் இலக்கியத்துறையில் திறனாய்வு இன்று குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது. இலக்கிய வடிவம், இலக்கியப் பொருள், பொருளை வடிவ மாக்குவதில் படைப்பாளன் பயன்படுத்தும் இலக்கிய உத்திகள், இலக்கியப் பொருளில் அமைந்துள்ள அணுகுமுறை போன்றவை திறனாய்வுத் துறையில் அதிகம் பேசப்படுகின்றன. படைப்பாளன் பயன்படுத்தும் இலக்கிய உத்தி அழகூட்டுவதற்காகவும் பொருள் புலப்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தகைய உத்திகளுள் குறியீடும் படிமமும் குறிப்பிடத்தக்கதாகும்,

    தமிழில் படிமமும் குறியீடும்:

    இமேஜ்(image) என்னும் ஆங்கிலமொழிச் சொல்லிற்கு இணையாகத் தமிழில் இன்று வழங்கப்பெற்று வரும் ஒரு கலைச்சொல்லே படிமம் என்பதாகும். படிமம் என்பதற்கு உருக்காட்சி, உருவம், உருமாதிரி, ஒத்தவடிவம், கருத்துரு, கண்ணாடியில் தோன்றும் பிம்பம் போன்ற பொருள்களில் கையாளப்படுகின்றது. அறிவு நிலையிலும் உணர்வு நிலையிலும் எளிதில் விளக்க இயலாதவற்றை நொடியில் தெளிவாக்கி நம்முன் நிறுத்த வல்லதே படிமம் என்று எஸ்ராபவுண்ட் விளக்குவார். மேலும், குறிப்பிடுகின்றபோது ஏராளமான கவிதைகளைப் படைப்பதைவிடச் சிறந்தது தன் வாழ்நாளில் ஒரே ஒரு படிமத்தைப் படைப்பதாகும் என்று படிமத்தின் சிறப்பினை குறிப்பிடுவார். படிமம் என்பது உணர்வும் அறிவுச் சேமிப்பும் இணைந்து உருவாக்கும் மனக்காட்சியாகும். இதில் மனக்காட்சியின் விரிவு குறிப்பிடத்தக்கது.  படைப்போன் படிப்போன் திறனுக்கேற்பப் படிமம் பல படிநிலைகளைக் கொண்டது.

         குறியீடு என்பது சின்னம், அடையாளம் என்ற பொருட்களில் தமிழில் வழங்கப்பட்டு வருகின்றது. மனித வாழ்வில் இணைந்து கிடக்கும் கணக்கற்ற குறிகள்(Signs) பற்றிச் சமூகவியலார் இன்று மிகவிரிவாகப் பேசி வருகின்றனர். மனிதரின் தோற்ற ஒப்பனையில் பல அடையாளக் குறிகள் சாதி, சமயம், பண்பாட்டின் பல படிநிலைகள், சமூக அமைப்பின் பல நிலைகள் எனப் பல்வேறு அர்த்தங்களை இனம் காட்டும் ஆயிரமாயிரம் குறிகள் வாழ்வில் கலந்திருக்கின்றன. “குறிகள் பலவகைப்பட்டதாகத் தோன்றினும் அவற்றின் சிறப்பியல்புகளைக் கொண்டு, அமெரிக்கத் தத்துவ அறிஞர் சார்லஸ் சாண்டர்பீர்ஸ் அவற்றை மூன்று வகைகளாக அடக்குதலை ந. ம. வீ. ரவி குறிப்பிடுகின்றார். அவை, 1. உருவக்குறி(iconic signs), 2. சுட்டுக்குறி (indexical signs), 3. குறியீடு (symbolic signs) என்பனவாகும்” (குறியியலும் அரங்கக் குறியியலும், 1992, ப. 12) இம்மூவகைகளுள் ஒன்றே இலக்கியத்துறை தொடர்பான குறியீட்டையும் குறிப்பிடுகின்றது.

        குறியீடு என்பது ஒரு பொருளுக்குப் பதிலாக மற்றொரு பொருளைப் பதிலியாகக் காட்டுவதாகும். படிமத்தைப் போலவே குறியீட்டையும் ஓர் இலக்கியமாக மேலை நாடுகளில் பின்பற்றினர். மேலை நாட்டாரின் திறனாய்வுக் கொள்கைகள் தமிழறிஞர்களுக்கு அறிமுகமானபின், Symbolism, Imagism என்று அவர்கள் குறித்த கலைச்சொற்களுக்கு இணையாகக் குறியீட்டியல், படிமவியல் என்னும் சொற்கள் தமிழில் வழங்கப்பட்டு வருகின்றன.

    தமிழிலக்கிய வரலாற்றில் படிமமும், குறியீடும் சங்க காலத்திலேயே மேலோங்கி விளங்கின. சங்க இலக்கியத்தில் காணப்படும் உள்ளுறை, இறைச்சி என்னும் குறிப்புப்பொருள் அடங்கிய இலக்கிய நயங்கள் இன்றைய படிமம் குறியீடு இவற்றின் முன்னோடியாகக் காணப்படுகின்றது.  சங்க காலத்திற்குப் பின் தற்காலத்தில் இவை பெரிதும் பேசப்படும் இலக்கிய உத்தியாக படைப்பாளர்களால் போற்றப்படுகிறது. இதனை அப்துல்ரகுமான் “சங்க காலத்திலும், சித்தர்கள் காலத்திலும் இலக்கிய உத்தியாகப் பயன்பட்ட குறியீடு மீண்டும் புதுக்கவிதைக் காலத்தில் தான் இலக்கிய உத்தியாகப் பயன்படுகின்றது. புதுக்கவிதையில் அது வெறும் உத்தியாக மட்டுமின்றி அதன் சிறப்பு பண்பாகவே மாறிவிட்டது என்று குறிப்பிடுகின்றார்.”(புதுக்கவிதையில் குறியீடு, 1990, ப. 183) புதுக்கவிதைகளில் பலவகையான உத்திகள் காணப்படுகின்றன. அவை, படிமம் (image), குறியீடு (symbol), அங்கதம் (satire), முரண் (parody), இருண்மை (obscurity), தொன்மம் (myth) போன்றவைகளாகும். இவ்வுத்திகளில் படிமம், குறியீடுகளைக் கவிக்கோ அப்துல் ரகுமான் தம் படைப்புகளில் பதிவு செய்துள்ளப் பாங்கினை இக்கட்டுரை ஆராய்கிறது.

    படிமம்:

    உணர்ச்சியுடைய சொற்சித்திரமாய் காணப்படும் படிமத்தைக் கவிக்கோ அப்துல்ரகுமான் சிறப்பாகக் கையாண்டுள்ளார். “தேவையற்ற எந்த ஒரு சொல்லையும் நீக்கிவிடுதல் என்னும் படிமவியலார் கொள்கைக்கு மிகப் பொருத்தமான கவிதைகளை எழுதுபவர் கவிக்கோ அப்துல்ரகுமான் என்பர்.” (க. இராமச்சந்திரன், புதுக்கவிதைகளில் பன்முகப் பார்வை, ப. 82) அவரது ‘பால்வீதி’ என்கிற கவிதைத் தொகுப்பு படிமக் கவிதைகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    “இரவெல்லாம் / உன் நினைவுகள் / கொசுக்கள்”  (பால்வீதி)

    என்னும் கவிதையில் நினைவுகள் கொசுக்களாகப் படிமமாக்கப் பட்டுள்ளன. நினைவுக் கொசுக்களின் தொல்லையினால் இரவெல்லாம் தூக்கமின்றி வேதனைப்படும் மனிதனை நம்கண்முன்னே நிறுத்துகின்றார். அறிவு நிலையிலும் உணர்வு நிலையிலும் எளிதில் விடுவிக்க இயலாத மனவேதனையை இப்படிமக் கவிதைத் தருகின்றது.

    “என் ஆறாவது விரல்வழியே
         சிலுவையிலிருந்து
    வடிகிறது ரத்தம் – ஆம்
         என் மாம்சம்
         வார்த்தை ஆகிறது”

    என்னும் பால்வீதியில் அமைந்த இக்கவிதை ஆதியிலே தேவனிடத்திலிருந்து வார்த்தை மாம்சமாகி இயேசு வடிவில் வந்ததாகவும் பின்னர் இயேசு சிலுவையில் அறையப்பட்டதாகவும் கூறும் விவிலியத்தின் கருத்தினை கவிக்கோ படிமமாக்கியுள்ளார். அப்துல் ரகுமான் ‘வியட்நாம்’ என்ற தலைப்பில் எழுதிய  கவிதையில்,

    “அக்கம் பக்கம் / வசந்தமில்லை
          சோகத்தோடு / அமர்ந்திருக்கிறது
          சவத்தின் மீதொரு / வண்ணத்துப் பூச்சி” (வானம்பாடி – 9) எனப் போரின் உச்சத்தைப் படிமத்தின் வாயிலாகப் பதிவு செய்கின்றார்.

         “வான உற்சவத்தின் / வாண வேடிக்கை
          முகிற்புற்று கக்கும் / நெருப்பு பாம்புகள்
          கருப்பு உதட்டின் / வெளிச்ச உதறல்
          இடிச்சொற்பொழிவின் / சுருக்கெழுத்து”  (பால்வீதி)

    என்ற இக்கவிதையில் வானத்தைக் கீறிப்பாய்கிற ராக்கெட்டுகளாக மின்னலையும், மேகத்திலிருந்து வெளிவருகின்ற நெருப்பினை புற்றிலிருந்து சாட்டையாக வெளிவருகின்ற பாம்பாகவும் நீண்ட இடியோசைக்கு மத்தியில் சட்டெனத் தோன்றி மறைவதால் அதனைச் சுருக்கெழுத்தாகவும் காட்சிப்படுத்துகின்றார்.

        ”பாரதம் என்றால் பதவிச் சண்டைதானே! இந்த
          நாட்டுக்குப் பொருத்தமாகத் தான் பெயர்
          சூட்டியிருக்கிறார்கள்
          அந்தப் பாரதத்தில் நான் செய்த வேலையை
          இந்தப் பாரதத்தில்  நீங்கள் செய்கிறீர்கள்”  (சுட்டு விரல்)

    புதிய பாரதம் என்ற இக்கவிதையில் சகுனியின் கூற்றாக அரசியலில் சூதாட்டத்தை முதலில் அறிமுகப்படுத்தியவன் நான்தான் ஆனால் நீங்களோ அரசியலையே சூதாட்டமாக மாற்றி விட்டீர்களே! நான் அன்று பகடைக் காய்களைத்தான் உருட்டினேன் நீங்களோ மக்களையே உருட்டுகிறீர்கள் என்றவாறு தற்கால நிகழ்வை பாரத காலத்தோடு படிமமாக்குகிறார்.

    அப்துல் ரகுமான் வாழ்வின் பயணத்தைப் பறவையின் பாதையோடு ஒப்பிட்டு,

         “நதியின் பாதையைப் போல்
          உங்கள் பாதை
          உங்கள் பயணத்தால்
          உண்டாகட்டும்
          பறவையின் பாதையைப்போல்
          உங்கள் பாதை
          சுவடற்றதாக இருக்கட்டும்” (பித்தன், ப. 46)

    என்ற கவிதையில் குறிப்பிடுகின்றார். நதியின் நீரோட்டம் திட்டமிட்டு அமைவதில்லை. தான் விரும்பியவாறு செல்லும். பறவையின் பாதை சுவடற்றதாக அமைந்து காணப்படும். இவை இரண்டையும் மனித வாழ்வோடு படிமமாக்கி முன்னேற்றத்தின் வழியைக் காட்டுகின்றார்.

    குறியீடு:

    படிமத்தைப் போன்று குறியீட்டையும் தற்காலப் படைப்பாளர்கள் சிறப்பாக கையாண்டுள்ளனர். குறி என்பது ஒரு பொருளைச் சுட்டிக் காட்டுகின்றது. குறியீடோ ஒரு பொருளுக்காகத் தானே அதனிடத்தில் நிற்பது என்ற குறியீட்டாளர்களின் சிந்தனைக்கு ஏற்பக் கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புக்களும் காணப்படுகின்றது.

               “புறத்திணைச் சுயம் வரமண்டபத்தில்
                போலி நளன்களின் கூட்டம்
                கையில் மாலையுடன்
                குருட்டுத் தமயந்தி”    – பால்வீதி

    ‘ஐந்தாண்டாக்கு ஒருமுறை’ என்னும் இக்கவிதை தேர்தலை விமர்சிக்கின்றது. இதில் வேட்பாளர்கள் போலி நளன்களாகவும், மாலை வாக்குச் சிட்டாகவும், குருட்டுத் தமயந்தி அறியாமை என்னும் இருளில் கிடக்கும் வாக்காளனாகவும, சுயம்வரம் ஒரு தேர்தல் திருவிழாவாகவும் புலப்படுத்திக் கவிஞரின் எண்ணத்தை வெளிப்படுத்துகின்றன. சுயம்வரக்காட்சியும், தேர்தல் காட்சியும் சேர்ந்து குறியீட்டுத் தன்மையை புராணக் கதையிலிருந்து  உணர்த்துகின்றது.

               “விற்க எதுவும் இல்லாததால்
                கண்ணகிகளைப் பேரம்பேசும்
                கோவலர்கள்” (பால்வீதி)

           “உதயகுமாரர்களுக்குத்
                தங்கள் உடல்களையே
                அட்சய பாத்திரமாக்கித்
                தம் வயிற்றுப் பசியைத்
                தணித்துக் கொள்ளும்
                மணிமேகலைகள்”

    என்பதான கவிதைகளில் இன்றைய சமூக அவலங்களைச் சுட்டுகின்றார். கண்ணகி, கோவலன், உதயகுமாரன், மணிமேகலை போன்ற பழங்கதை மாந்தர் இன்றைய நடைமுறை மாந்தர்களுக்கு குறியீடுகளாக காட்டப்படுகின்றனர்.

    அப்துல் ரகுமானின் ‘மூடிய இமை’ என்கிற கவிதையில் குறியீடுகள் முரணாக வந்து கருத்தை வெளிப்படுத்துக்கின்றன.

         “என்னைக் கண்டதும்
          கவிழும் உன் இமைகள்
          கொசுவலையா?
          மீன் வலையா?  (பால்வீதி)

    கவிஞர் இக்கவிதையில் ஒரு பெண்ணின் பார்வையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் தவிப்பை இரண்டு விதங்களில் வெளிப்படுத்துகின்றார். வலைக்குள் கொசு வரக்கூடாது என்று தடுப்பதற்காக விரிப்பது கொசுவலை. வலைக்குள் மீன் விழவேண்டும்; வீழ்ந்த மீன் வெளியே தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக விரிப்பது மீன்வலை ஒன்று புறக்கணிப்பு மற்றொன்று எதிர்ப்பார்ப்பு. இது முரணாகும். இந்த முரணின் வாயிலாக ஒரு காதலனின் காதலுணர்ச்சியைக் குறியீடாகக் குறிப்பிடுதலைக் காணமுடிகின்றது.

               “உன் தராசுத் தட்டுகளைக்
                கொஞ்சம் கண்திறந்து பார்
                அங்கே
                புறாவின் மாமிசத்தை
                சிபிகள் உண்ண ஆரம்பித்து விட்டார்கள்”  (பால்வீதி)

    என்ற தொன்மைச் சான்றினை தற்கால நிகழ்வோடு குறிப்பிட்டு கவிஞர் குறியீடாக்கியுள்ளதைக் காணலாம்.

               “உங்கள் பாரம் / உங்களைவிட
                மதிப்புடையதாகட்டும்
                திரி சுமக்கும் சுடரைப்போல்”

    என்ற கவிதையில் திரிசுமக்கும் சுடரும் மனிதன் சுமக்கும் பாரத்தையும்  குறியீடுகளால் ஒப்பிட்டு கவிஞர் வாழ்வின் சுமைகளை சுகமாக்குகின்றார்.

    முடிவுரை:

     அப்துல்ரகுமான் கவிதைகளில் நட்சத்திரம், நெற்றிக்கண், இமை, சிலுவை ஆகியவை குறியீடுகளாக மீண்டும் மீண்டும் வருகின்றன. கோடி சூரியர்களைப் பிழிந்து நட்சத்திரங்கள் செய்தேன் என்ற இடத்தில் செறிவு என்ற பொருளிலும் ஒரு சங்காரத்தால் இந்த பூமி பண்படுத்தப் பட்டபின் நட்சத்திரங்களைத் தூவுவோம் இங்கே என்ற இடத்தில் ‘உயர்ந்தது’ என்ற பொருளிலும் நட்சத்திர வேஷம் அணிந்த எழுத்துக்கள் என்ற இடத்தில் ‘விளக்கம்’ என்ற பொருளிலும், இளவேனில் இரவு ‘பூ’ என்ற பொருளிலும் மூச்சுக்கயிறறுந்த மணியின் நாவிலிருந்து நட்சத்திரங்கள் மௌனமாக உதிரும் என்ற இடத்தில் ‘ஆன்மா’ என்ற பொருளிலும் நட்சத்திரம் பால்வீதியில் குறியீடுகளாக மின்னுதலைக் காணமுடிகின்றது. சங்க இலக்கிய உத்திகளில் காணப்படும் அழகியல் மற்றும் பொருண்மைத் தன்மையை அறிந்து கொள்ளுதல் போன்று புதுக்கவிதைகளில் காணப்படும் படிமம் மற்றும் குறியீடுகளில் அத்தகைய தன்மையைக் காணலாம். இதில் கவிக்கோ அப்துல் ரகுமான் முதன்மை பெறுதலை இக்கட்டுரையின் வழி அறிந்துகொள்ளமுடிகின்றது.

    *****

    கட்டுரையாளர்
    உதவிப்பேராசிரியர்
    தமிழாய்வுத்துறை
    ஏ. வி. சி. கல்லூரி(தன்னாட்சி)
    மன்னன்பந்தல், மயிலாடுதுறை.

     

     

     

    Share
  • லீலாதிலகத்தில் தொல்காப்பியத்தின் தாக்கம்

    -முனைவர். ஹெப்ஸி ரோஸ் மேரி. அ

    தொல்காப்பியம் என்னும் பேரிலக்கணம் தமிழ்மொழியில் காணப்படும் நூல்களில் முதல் நூலாக விளங்குகிறது. இது முந்து நூல் கண்டு இலக்கணம் அமைத்ததோடு வழக்குமொழிக்கும் செய்யுள் மொழிக்கும் சேர்த்து இலக்கணம் அமைத்ததை அதன் சிறப்புப் பாயிரம் உணர்த்துகிறது.  தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய இலக்கண நூல்கள் தொல்காப்பிய மரபைப் பின்பற்றியும் மொழி வளர்ச்சிக்கேற்பப் புதிய மாற்றங்களையும் புதுமையான கருத்துக்களையும் சேர்த்துக் கூறின. அவ்வகையில் தமிழ்மொழியில் தொல்காப்பியத்திற்குப் பின்தோன்றிய இலக்கண நூல்களில் தொல்காப்பிய மரபு நிரம்ப இருப்பதைக் காணலாம்.  அவ்வண்ணமே தமிழுடன் நெருங்கியத் தொடர்பு கொண்ட திராவிட மொழியாகிய மலையாள மொழியின் முதல்  இலக்கண நூலாகிய லீலாதிலகத்தில் தொல்காப்பியத்தின் தாக்கம் மிகுந்து காணப்படுகிறது. அவற்றை இனங்கண்டு விளக்க முயல்கிறது  இக்கட்டுரை.

    மலையாள இலக்கண மரபு

    மலையாளத்தில் கி.பி 14 ஆம் நூற்றாண்டில்  தோன்றிய லீலாதிலகம் கி.பி.1851 – ல் குண்டர்ட் எழுதிய  மலையாள மொழி இலக்கணம், கி.பி.1895 – ல்   ஏ. ஆர். இராஜராஜ வர்மா எழுதிய கேரளபாணினீயம் போன்றவற்றை மலையாள மொழியின் முக்கியமான மூன்று பேரிலக்கண நூல்கள் எனக் குறிப்பிடலாம். அவற்றுள் லீலாதிலகம் தான் மலையாளத்தின்  முதல் இலக்கண நூல். எனினும்  இன்று கேரளத்தில்  பள்ளிப்படிப்பு முதல் பட்டப்படிப்புவரை மிகுந்த பயிற்சி பெற்று விளங்குவது கேரளபாணினீயமே.  தமிழ் மலையாள இலக்கணங்களை ஒப்பிட்டுப்பார்க்கும்போது கால வேறுபாடு ஒருபுறம் இருந்தாலும் மலையாள இலக்கண நூல்கள்  வடமொழி தமிழ் நூல்களின் சார்பு அல்லது வழி நூல்களாக உள்ளன.  அதாவது அவற்றுள் சில வடமொழி நூல்களை மொழிபெயர்த்தனவாகவும் தமிழ் நூல்களைப் பின்பற்றுவனவாகவும்  தழுவல்களாகவும் காணப்படுகின்றன.

    மலையாள இலக்கண நூல்களில் பழமையான லீலாதிலகம் வடமொழியில் எழுதப்பட்டுள்ளது.   பின்புதான் மலையாள மொழியில் நூல்கள் எழலாயின.  பிற திராவிட மொழிகளிலும் முதல் இலக்கண நூல்கள் வடமொழியில்தான் தோன்றியதாகப்   பேரா. கி. நாச்சிமுத்து குறிப்பிடுகிறார். ஆனால் தமிழில், தமிழ் தவிர்த்த பிறமொழிகளில்  போலப் பழைய தமிழ் இலக்கணங்கள் வடமொழியில்  எழவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.  அதுபோலவே தமிழுக்கு உரிய கலைச் சொற்களையும் இவற்றில் காணலாம்.  இவை தமிழில் தமிழ் வழியான தனி இலக்கண மரபு ஓன்று வளமாக இருந்ததையே காட்டுகின்றன. தமிழில்  ஐந்திலக்கண மரபு உள்ளதைப் போன்று லீலாதிலகத்தில் மூன்று இலக்கண மரபு அமைந்துள்ளது.  லீலாதிலகம்  அணி நூலாயினும் ஏனைய இலக்கணங்களைப் பற்றியும்  கூறிச் செல்வது தமிழ் மரபை ஒட்டி உள்ளது.  எனினும் இந்நூலின் போக்கு வடமொழியை ஒட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

    லீலாதிலக எழுத்திலக்கணத்தில் தொல்காப்பியம்

    எழுத்துக்கள் தம்முள் புணர்வதைத் தமிழில் புணர்ச்சி என்றும் வடமொழியில்   ‘ சந்தி’ என்றும் அழைப்பர். தொல்காப்பியர் சந்தியை ஐந்து இயல்களில் விரித்துக் கூறுகிறார்.  லீலாதிலகம் புணர்ச்சி விதிகளை விரிவாகவும் விளாக்கமாகவும் கூறாமல் ஒரே இயலில் விளக்கியுள்ளது.  இது தமிழ்ப்புணர்ச்சி விதிகளையே பின்பற்றியுள்ளதாகக் கே.என். எழுத்தச்சன் குறிப்பிடுகிறார்.  லீலாதிலகம் வெளிப்படையாகப் தமிழ் விதிகளைக் கையாண்டுள்ளது.  அன்றைய கால மொழியானது தமிழ் மலையாள மொழிகளின் கலப்பு மொழி (proto Tamil Malayalam)என்பது அக்காலத்தெழுந்த இராமசரிதம் போன்ற நூல்கள் வாயிலாக அறியலாம்.  லீலாதிலக காலத்தைய  பழைய மலையாளத்துக்கும் அன்றைய தமிழ்மொழிக்குமிடையே இடைவெளி அதிகம் இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.   எனவே தொல்காப்பியர் கூறும் சந்தி விதிகள் பல லீலாதிலகத்தில் கூறப்பட்டிருப்பது இருமொழிகளின் ஒன்றுபட்ட தன்மையினால்தான் என்று முடிவு செய்யலாம். லீலாதிலகம் புணர்ச்சிக்கு 28 விதிகள்தாம் கூறியுள்ளது. அவர் கூறும் விதிகளை உயிர் முன் உயிர், உயிர் முன் மெய், மெய் முன் மெய், மெய் முன் உயிர்  என்ற அமைப்பில் பிரிக்கலாம். தொல்கப்பியமும் மலையாள இலக்கண நூல்களும் கூறும்  புணர்ச்சி விதிகளில் சிலவற்றைக் காண்போம்.

    தொல்காப்பியர் ,

    சுட்டின் முன்னர் ஞ, ந, மத் தோன்றின்
    ஒட்டிய
    ஒற்றிடை மிகுதல் வேண்டும்  ( தொல். எழு.206)

    இந்நூற்பாவைப் பின்பற்றியே லீலாதிலகம் செல்வதைக் காணலாம். அது வினாப்பொருளில் வருகின்ற ‘எ’கரத்தின் முன்னும் தனிக் குறிலாகிய அ,இ, ஆகியவற்றின் முன் வரும் ஞ, ந, ம, வ, க, ச, த, ப ஆகியவை வந்தால் இரட்டும் .

    எ.டு

    எ+ஞாண் = எஞ்ஞாண், எந்நூல், எம்மரம், எக்காலம்

    அ+ஞாண்= அஞ்ஞாண், அந்நூல், அம்மரம், அக்காலம், இ+ நூல்= இந்நூல், இக்காலம்

    சில இடங்களில் அ,ஆ,இ, ஊ ஆகியவற்றின் முன் க, ச, த ப வரின் இடையில் அவற்றின் மெல்லினம் தோன்றும் .

    எ.டு

    முளெ + கொம்பு =முளெங்கொம்பு, அமெ+கொம்பு=அமெங்கொம்பு

    இவ்வாறு லீலாதிலக ஆசிரியர் கூறுவது ‘யாமரக் கிளவி………..மெல்லெழுத்துமுடிமே             ( தொல் . எழு.230) என்ற தொல்காப்பிய நூற்பாவைப் பின்பற்றியே ஆகும்.

    ணகரத்தின் முன் வரும் தகரம் ‘ட’கரமாகும், ணகரத்தின் முன் வரும் ‘ ந’ கரம் ‘ண ‘ கரமாகும்; ளகரத்தின் முன் வரும்  நகரம் ‘ன’கரமாகும். என்று லீலாதிலகம் கூறுவது தொல்காப்பிய நூற்பாக்களைப் பின்பற்றியே ஆகும். (தொல்.எழு.303,156,398)

     

    எ.டு

    மண் + தீது= மண்டீது த>ட, முண்+ நன்று=முண்ணன்று  ந>ண, முள்+நன்று =முள்ளன்று  ந > ள

    நகரம் மட்டுமன்றி ‘ள’ கரத்தின் முன் மகரம் வரினும் ளகரமானது நகரமாய்  உறழும் என்று லீலாதிலகம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியர் பொதுவாக ளகர ஈற்றுச் சொற்களின் புணர்ச்சியினைக் கூறும்போது மெல்லெழுத்து இயைபின் ’ன’ கரமாகும் என்று கூறுகிறார். (தொல் . எழு.398).

    எ.டு

    வாள்+ மேல் = வான்மேல், தோள் + மேல் = தோண்மேல்

    உடம்படுமெய்

    நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உயிரெழுத்துக்கள் வரின் அவ்விடத்து விட்டிசைத்தலைத் தடுக்க யகரம், வகரம் ஆகிய மெய்கள் உடம்படுமெய்யாக வரும்.’தொல்காப்பியர் ‘உடம்படுமெய்யின் உருபுகொளல் வரையார் (தொல். எழு 144) எனப்பொதுவாக் கூறுகிறாரே ஒழிய இன்ன இன்ன மெய்கள் உடம்படுமெய்களாக வரும் என்றும் இன்ன உயிர்முன் இன்ன உயிர்வரும் என்றும் குறிப்பிடவில்லை ( தொ.எழு 141).  சுட்டுகளைத் தொடர்ந்து உயிர்கள் வரும்போது ’வ’கரவுடம்படுமெய் வருமென்பதை (தொ.எழு 238,255) ஆகிய சூத்திரங்களிலிருந்தும் அறிய முடிகிறது. லீலாதிலகம் இரண்டு உயிர்களுக்கு இடையில் ‘ய’கரம் தோன்றும் என்றும் தனித்து நிற்கும் அ, இ ஆகிய உயிர்களின் முன் உயிர் வரின் ‘வ’கரம் தோன்றும்  என்றும் (லீ.தி38) குறிப்பிடுகிறது.

    எ.டு

    மல+அது=மலயது, ஆன+அது=ஆனயது,
    அ+அழகு=அவழகு, இ+அழகு=இவழகு

    பழைய மலையாளத்தில் வகரம் இரட்டிக்காமல் வழங்கியது. பொதுவாக இருமொழிகளிலும்  வகரம் அடிப்படை உயிரின் பின்னர்த் தோன்றுகிறது. லீலாதிலகம் ஒகரம் வருமொழியாக வருவதனை நோக்க அது தமிழில் உகரமாக உள்ளது .  ஆனால் பேச்சுத்தமிழில் ஒகரமாகவே வழங்குகின்றது.

    எ.டு

    உரல் – ஒரல்,உலக்க-ஒலக்க, உண்டு –ஒண்டு

    மலையாளச் சொல்லிலக்கண மரபும் தொல்காப்பியமும்

    மொழிக்கு இன்றியமையானது சொற்கள். சொற்கள் பல சேர்ந்து மொழிகளின் உட்கூறும் அமைகின்றன.  அவ்வாறு அமையும்போது அச்சொற்கள் ஒரு மொழிக்கு மட்டுமே உரியதாக இருப்பதில்லை.  பல சொற்கள் பிறமொழிகளின் சேர்க்கையால் புகுந்தனவாக அமைகின்றன. தொல்காப்பியர் கூறியிருக்கும் இயற்சொல் திரிசொல் எனும் இருவகைச் சொற்களை நாட்டுமொழிச்சொல் எனும்பிரிவில் கூறி இவ்வகை நாட்டுமொழிச் சொற்கள் இடுகுறிச் சொற்களாகும் என்று லீலாதிலக ஆசிரியர் காட்டியிருக்கிறார்.  (லீ.லா13).

    பால்காட்டும் விகுதிகள்

    தமிழ்மொழியில் திணையின் உட்பிரிவாகவே பால் அமைந்துள்ளது. இதனை, சேனாவரையர்’திணை உணராக்கால் அதன் உட்பகுதியாகிய பால் உணர்தல் ஆகாமையின் (கிளவி 11) எனவும் தெய்வச்சிலையார் ‘பால் எனவே திணையும் அடங்கும் ‘ என்றும் உரை எழுதியுள்ளனர்.  தொல்காப்பியர் இருதிணை ஐம்பால்களைக் கிளவியாக்கம், பெயரியல், வினையியல் ஆகிய மூன்று இயல்களில் விளக்கிச் செல்கிறார் . லீலாதிலக ஆசிரியர் ஆண்பால் பெண்பால், ஆண் பெண் அற்றது எனப்பால் மூன்றுவகைப்படும் என்று கூறுகின்றார். தமிழில் உயர்திணையில் மூன்று பால்களும் அஃறிணையில் இரண்டு பால்களும், ஆக ஐந்துவகைப் பால்கள் இடம்பெற்றுள்ளன. தொல்காப்பியர் ஆடூஉ அறிசொல், மகடூ அறிசொல், பல்லோர் அறியும் சொல் என்று மூன்று பால்களைக் ( தொல் சொ.2,3) கூறுகின்றார்.. லீலாதிலகம் ஆண்பால் , பெண் பாலைக் குறிப்பிடுகின்றது.  ஆனால் பலர் பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய மூன்றையும் ஆண், பெண் அற்றன என்னும் ஒரே வகையினுள் அடக்கி மூன்று பால்களாக வகைசெய்துள்ளது. மேலும் ஜாதி ஆணோடுள்ள உறவுச்சொற்கள் விகுதியாக ‘ இ’யைக் குறிப்பிடுகிறார்.

    எ.டு     கேசவன் வந்நான், நாராயணி வந்நாள், செட்டிச்சி, குறத்தி

    லீலாதிலகம் மட்டுமே இந்த விகுதிகளைக்குறிப்பிடுகிறது. ஏனைய மலையாள இலக்கண நூல்கள் இதனைக் குறிப்பிடவில்லை.  தமிழ் இலக்கண நூலார் வினையினைக் கூறும் முகத்தான் வினை விகுதிகளை அமைக்கும்போது அதனுள் பால் விகுதிகளையும் பாகுபாடு செய்து அமைக்கின்றனர்.  லீலாதிலகம் பெயரில் வரும் வேற்றுமை உருபுகளைக் கூறிவிட்டு அடுத்துப் பால் விகுதிகளைத் தருகின்றது.  தமிழில் உயர்திணை அஃறிணை அடிப்படையில் பால்களைக் கூறுவது போன்று லீலாதிலகம் திணையின் அடிப்படையில் பாலைக் கூறவில்லை.

    லீலாதிலக வேற்றுமையில் தொல்காப்பியம்

    தொல்காப்பியர் மூன்று இயல்களில் வேற்றுமைகளை முழுமையாக எடுத்தியம்புவதோடு  எழுத்ததிகாரத்தில்  புணரியல் (112 -116), வினையியல் (781), இடையியல் (735) எச்சவியல் (895,896) ஆகிய இயல்களிலும் வேற்றுமைகளைக் கூறிச் செல்கிறார்.  தொல்காப்பியர் வேற்றுமை பற்றிய  செய்திகளை ஒரே இயலில் குறிப்பிடாமல் வெவ்வேறு இயல்களில் கூற லீலாதிலகம் இரண்டாம் சிற்பத்தின் ஒரு பகுதியாக வேற்றுமையைக் குறிப்பிடுகின்றது.  வேற்றுமையை மூன்று இயல்களில் விளக்கமாகக் கூறும் தொல்காப்பியர் வேற்றுமையின் இலக்கணம் கூறவில்லை. பொருள்களை வேற்றுமை செய்வன வேற்றுமை
    (தொல் .546) என இளம்பூரணர் வேற்றுமைக்கு உரையெழுதியுள்ளார்.

    லீலாதிலகம் ”அர்த்தவிசேஷ அஸ்யா பரபாகசுவிசேஷ”   என்று வேற்றுமைக்கு இலக்கணம் கூறுகிறது.   அதாவது  வேற்றுமை உருபுகளும் பால் விகுதிகளும் பொருள்களை வேற்றுமை செய்வதற்கென்றே நாட்டுமொழியில் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். வேற்றுமையை லீலாதிலகம் துதியை, திருதியை  (லீ. தி.21) என்று பெயரிட்டுள்ளது.

    தமிழிலும் மலையாளத்திலும் முதல் வேற்றுமைக்கு உருபுகள் இல்லை. ‘எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே’ ( தொ. சொ.65) என்று தொல்காப்பியர் நூற்பா அமைக்கிறார். லீலாதிலகம் இதற்குப் ‘பேர்’ என்று பெயரிட்டு ’ கண்டன் (தலைவன்) ,ஆன(யானை),  மரம்  என்பனவற்றை எடுத்துக்காட்டாகத்  தந்துள்ளது.

    தமிழில்  இரண்டாம் வேற்றுமை உருபாக ‘ ஐ ‘ என்பதனையே எல்லா இலக்கண நூல்களும் கூறியுள்ளன. மலையாளத்தில் ‘ எ ‘ என்பதும் பழைய மலையாளத்தில்  ‘ அ ‘ என்பதும் உருபாக இருந்துள்ளது.  இது செயப்படுபொருள் வேற்றுமையாக அமையும் இதனை மலையாளத்தில் கர்மம் என்று கூறுகின்றனர்.

    எ.டு     மாணவியைப் பார்த்தேன் (த),    அவனே கண்டு (ம)

    காவலோனக் களிறு அஞ்சும்மே’ என்னும் சங்க இலக்கியத் தொடரில் ‘ அ ‘ இரண்டாம் வேற்றுமை உருபாக வந்துள்ளது. இத்தன்மையே பழைய மலையாளத்தில் வந்துள்ளது..’13 ஆம் நூற்றாண்டு வரை கேரளமொழியில் இரண்டாம் வேற்றுமைக்குப் பெரும்பாலும் ‘ ஐ’ உருபு பயன்படுத்தப்பட்டது. லீலாதிலக காலத்திலும் ‘ஐ’ உருபு பயன்படுத்தப்பட்டது. பின்னர் ஒரு நூற்றாண்டு கழிந்து (1500 ல்) ஐ உருபு கைவிடப்பட்டது ‘ என்ற இளங்குளத்தின் கருத்து இங்கு ஒப்பிடத்தக்கது.( லீ. தி பக் 65).

    தொல்காப்பியர் மூன்றாம் வேற்றுமையின் உருபாக ‘ ஒடு’ என்பதனைக் காட்டுகிறார்.    ( தொ. சொ.73). . லீலாதிலகம் ஆல், கொண்டு  என்னும் இரண்டு உருபுகளையும் குறிப்பிடுகிறது. இவ்வாறு இவர் கொண்டது தொல்காப்பிய மரபை பின்பற்றியே ஆகும் .  தமிழிலும் கொண்டு , உடன் என்பன சொல்லுருபுகளாக உள்ளன.

    எ.டு     அவனால் வஞ்சிக்கப் பெட்டு ,  கத்தி கொண்டு வெட்டி.(ம)

    தொல்காப்பியர் ’ கு ‘ என்னும் உருபை நான்காம் வேற்றுமையின் உருபாகக் கொள்கிறார்.  லீலாதிலகம் ’க்கு’,’ அன்னு’, ’இன்னு’ ஆகிய மூன்று  உருபுகளையும் நான்காம் வேற்றுமையின் உருபுகாளாகக் கொண்டுள்ளது.

    எ.டு     அவள்க்குப் புத்ரன் உண்டாயி – க்கு –  ( ம் )

    அவனு பேனா கொடுத்து   – அன்னு- (ம)

    தொல்கப்பியர் ஐந்தாம் வேற்றுமையின் உருபாக ‘ இன்’ என்னும் உருபைச் சுட்டுகிறார்.தொ.சொ.77). லீலாதிலகம்  நின்று, மேல்நின்று, பக்கல்நின்று போன்ற உருபுகளைக் கொள்கின்றது. மேலும் ஒப்பு, உறழ்பொருள்  ஆகியவற்றை உணர்த்தும்போது ‘ காட்டில் ‘ என்பது உருபாய் வரும் என்றும் குறிப்பிடுகிறது.

    எ.டு   பஸ்ஸீந்நு இரங்ஙி –  ந்நு – நீக்கல்,            திருவனந்தபுரத்தினு கிழக்கோட்டு – ன்னு – எல்லை

    அவனேக்கால் சுந்தரனானோ – கால் – ஒப்பு, என்னேக்காட்டிலும் வலுதாணோ – காட்டிலும் –ஒப்பு

    ஆறாம் வேற்றுமையின் உருபு ‘அது’ ஆகும். அது தற்கிழமை, பிறிதின் கிழமை என இருவகைப் பொருளுடையது எனத் தொல்காப்பியர் (தொ.சொ.79) கூறியுள்ளார்.  இவ்வேற்றுமைக்கு ‘ அ’உருபும் உண்டு என உரையாசிரியர்கள் உரைக்கின்றனர். ஒருமைக்கு ‘அது’வும் பன்மைக்கு ‘அ’ வும் உருபுகள் என்பது அவர்கள் கருத்து. மலையாளத்திலும் இவ்வேற்றுமை உடைமைப் பொருளில் வருகிறது. லீலாதிலகம் ’ன்னு, க்கு, இடெ, எடெ, றெ ஆகியவைகள் ‘கொடையெதிர் கிளவி அப்பொருள் ஆறற்கும் உரித்தாகும் ( தொல். சொல்95), அதுவென் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின் அது என் உருபு கெடக் குகர வருமே (தொ.சொ.90) எனத் தொல்காப்பியர் தொக்கு நிற்கும் என்ற குகரத்தை லீலாதிலகம் விரித்துக் கூறிற்று.

    எ.டு. எனது மகன் ( த),         ஜானகியுடெ புஸ்தகம் (ம),           அவன்றெ புஸ்தகம் (ம)

    ஏழாம் வேற்றுமையில் இடப்பொருளை உணர்த்தும் உருபுகள் ‘இல், கண்’ என்பன. தொல்காப்பியர் கூறிய கண் முதலிய 19 சொற்களைச் சேனாவரையர் சொல்லுருபு எனக் கூறியுள்ளார்.  லீலாதிலகம் இல், இலெ, மேல், கல், பக்கல் என்னும் ஐந்து உருபுகளைக் கூறுகிறது. லீலாதிலகம் கூறும் பக்கல் இன்றும் மலையாளத்தில் வழக்கில் பயின்று வருகிறது.

    எ.டு     திருவனந்தபுரத்தில் இருந்தான் (த),    என்றபக்கல் உண்டு (ம)

    முடிவுரை

    லீலாதிலகத்தில் தொல்காப்பியத்தின் தாக்கம் தவிர்க்க முடியாத ஒன்றே. எனினும் தொல்காப்பியத்தில் காணப்படுவது போன்ற நுட்பமான உச்சரிப்பொலியியல் லீலாதிலகத்தில் காணப்படவில்லை. சந்தி இலக்கணத்தில் தொல்காப்பியர் கைக்கொண்ட அல்வழி வேற்றுமை என்ற தொடரியல் அணுகுமுறை மலையாள இலக்கணங்களில் இல்லை.  லீலாதிலகம் கூறும்   பெரும்பான்மையான விதிகள் தொல்காப்பியத்தை அடியொற்றி அமைந்துள்ளன. தொல்காப்பியர் கூறும் பலவிதிகள் இன்றைய மலையாள வழக்கில் பயின்றுவர இலக்கண நூல்கள் இதைப் பற்றி கூறாதது வியப்பே. வேற்றுமை உருபுகளைப் பார்க்கும்போது இருமொழிகளிலும் வேறுபாடுகள் பெரிய அளவில் இல்லை என்றே   கூறலாம். லீலாதிலகம் கூறும் வேற்றுமை உருபுகள் பெரும்பான்மையானவைத் தமிழ் உருபுகளாகவும் அதன் திரிந்த வடிவங்களாகவுமே உள்ளன. இவ்வொற்றுமை மொழிகளின் அமைப்பில் காணப்படும் பொதுத்தன்மையே எனலாம்.

    *****

    பயன்பட்ட நூல்கள்:

    இளம்பூரணர் – தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தென்னிந்திய சைவசிதாந்த நூற்பதிப்புக் கழகம், நெல்லை, 1988

    இளையபெருமாள்.மா – லீலாதிலகம் (மொ.பெ), தமிழ்ப்புத்தக நிலையம், சென்னை 1971

    கால்டுவெல் – திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம், முல்லை நிலையம் , சென்னை,2004

    நாச்சிமுத்து.கி – இலக்கண ஆராய்ச்சி கட்டுரைகள்,கி. நா. மொழிப் பண்பாட்டு மையம், கோவை2007

    Tolkappiyam  – A Proto Tamil Malayalam Grammar (Article)

    Ezhuthachan.K.N – The History of the Grammatical Theories in Malayalam, DLA, Trivandrum

    *****

    கட்டுரையாளர்
    உதவிப் பேராசிரியர்
    கேரளப் பல்கலைக்கழகம்
    திருவனந்தபுரம்

     

    Share
  • தூது இலக்கியங்களில் அமைந்துள்ள பாவகைகள்

    பவளராணி.ப

    ஆய்வாளர்

    தமிழ்த்துறை

    கேரளப்பல்கலைக்கழகம்

    காரியவட்ட வளாகம்

    திருவனந்தபுரம்

    இலக்கியத்தில் அமைந்துள்ள மொழி நடையை அறிய துணை செய்யும் கருவியே யாப்பு ஆகும். யாப்பு வகைகளில் ஒன்றுதான் பா. இப்பா நான்கு வகைப்படும் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா. பா செய்யுளின் ஓசை இனிமையை அடிப்படையாகக் கொண்டுள்ளது.  இப்பாக்களின் அமைப்பு நிலையும், ஓசை நிலையும் யாப்பு நெறிக்கு இன்றியமையாத ஒன்றாக விளங்குகின்றது. தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியரும், “பா என்பது சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சொல்லுந் தெரியாமற் பாட மோதுங்கால் அவன் செய்யுளை விகற்பத்து இன்ன செய்யுளென்று உணர்தற்கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை” (தொ:பே:ப:114-115) என்று பாவிற்கு ஓசை இன்றியமையாதது என்பதைத் தெளிவாக விளக்குவதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.

    தமிழ் தூது இலக்கியங்களில் யாப்பு

    தமிழ் இலக்கிய வகைகள் காலச்சூழலுக்கும் கருத்து விளக்கத்திற்கும், பாடுபொருளுக்கும் ஏற்ப சில மாற்றங்கள் அடைந்துள்ளன. கலிவெண்பா ஒன்றே தூது இலக்கியங்களில் மிகப் பழங்காலம் தொட்டு கலிவெண்பா புலப்பட்டு வருகின்றது. எனினும் பிற்காலத்தில் நிலைமண்டில ஆசிரியம், ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கட்டளைக்கலித் துறை, கொச்சகக்கலி, போன்ற பிற வகைகளிலும் தூது இலக்கியங்கள் தோன்றத் தொடங்கிவிட்டன என்றே கூறலாம். இவை தூது இலக்கியத்தின் வளர்சியைக் காண்பிக்கின்றன. தொல்காப்பியர் 26 நூற்பாக்களில் கலிப்பா பற்றியும் அதன் வகைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் கலிப்பாவை ஒத்தாலிசைக் கலி, கலிவெண்பாட்டு, கொச்சகம், உறழ் கலி என்று 4 வகைகளாகப் பாகுபாடு செய்துள்ளார்.

     

     

    பாட்டியல் நூல்களில் கலிவெண்பா

         பாட்டியல் என்பது இயல்பைக் கூறும் நூலாகும். பாட்டியல் செய்யுளியலிலிருந்து மாறுபட்டு அமைவதாகும். பொதுவாக எல்லாப் பாட்டியல் நூல்களும் சிற்றிலக்கியம், காப்பியம், தொகைகள் போன்ற இலக்கியங்களுக்கு இலக்கணம் வகுத்துக் கூறுகின்றன. அங்ஙனம் வகுத்துக் கூறப்பட்ட பிரபந்த மரபியலில்

    “இருதிணையுடன் அமை அயலை உரைத்துத்

    தூது செல விடுவது தூது, இவை“கலிவெண்

    பாவினால் விரித்து பகர்வது மரபே”          (பி.ம-15)

    என்றும் அடையாளப் படுத்துகின்றனர்.

    இலக்கண விளக்கம்

    “பயில் தரும் கலிவெண் பாவினாலே

    உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும்

    சந்தியின் விடுத்தல் முந்தூது எனப்

    பாட்டியல் புலவர் நாட்டினர் தெளிந்தே” (874)

    முத்து வீரியம்

    “கலிவெண் பாவால் அமைவது தூது” (126)

    போன்ற நூல்களும் இவ்விலக்கணத்தையே கூறுகின்றன.

    கலிவெண்பா

         தூது இலக்கியங்கள் அனைத்தும் கலிவெண்பா என்னும் யாப்பு வகையிலேயே அமைதல் வேண்டும் என்பது பாட்டியல் நூல்கள் கூறும் இலக்கணமாகும். தலைவன் அல்லது தலைவியின் மன உணர்வுகளை முறையாக வெளிப்படுத்துவதற்குப் பிற பாக்களை விடக் கலி வெண்பாவே  ஏற்றது என இலக்கிய ஆசிரியர்கள் கருதியிருக்கலாம். தொல்காப்பியத்தில் கலிப்பா வகைகளுள் ஒன்றாகக் கலி வெண்பாவைச் சுட்டுகிறார். இதை

                “ஒத்தாழிசைக் கலி கலிவெண் பாட்டே

                            கொச்சகம் உறழொடு கலிநால் வகைத்தே (தொல்.பொரு.நூ.435)

     

    என்ற நூற்பா உணத்துகிறது. தொல்காப்பியர் கலிவெண்பாவை வெள்ளடியியலால் திரிபின்றி முடிய வேண்டும் என வரையறைச் செய்கிறார்.

    தூது இலக்கியங்களில் பயின்று வரும் கலிவெண்பாவின் இரண்டாமடியின் இறுதியில் அமையும் சொல், தனிசொல் பெற்று வரும்.

                            “சீரில்நிலை நில்லாது திண்டாடும் பல்கருவி

                வாரில் அகப்பட்டு மயங்கினேன் – தேருங்கால்”  (நெஞ் – 46)

     

     

    “வந்து நெருங்க மணவைநகர் வேங்கடமால்

                சிந்தை மகிழ்ந் தஞ்சாந் திருநாளில் – தந்ததோர்”  (மே – 121)

                “பஞ்சிபடாநூலே பலர் நெருடாப் பாவே கீண்டு

                எஞ்சி அழுக்கு ஏறா இயல் கலையே – விஞ்சுநிறம்”  (தமி – 17)

    மேல் கொடுத்துள்ள மூன்று நூற்பாக்களும் இவ்வமைப்பை பெற்றுவந்துள்ளன. முதலடியின் முதல் சீருக்கு ஏற்பத் தனிசொல்லில் விகற்பம் அமைந்துள்ளது. ஈரடிதோறும் எதுகை ஒத்தமைந்துள்ளது. இம்முறையில் ஈரடிதோறும் எதுகை ஒத்தமைவதால் ஈரடிகளும் “கண்ணி” என்னும் பெயரால் வழங்கப்படுகின்றன. இத்தகைய அமைப்பு முறை தூது இலக்கியங்களில் பயின்று வரும் கலிவெண்பாவிற்கு உரிய அமைப்பாகிறது. தூது இலக்கியங்கள் முழுமையும் இத்தகைய கலிவெண்பா அமைப்புடையனவாகவே உள்ளன. இக்கலி வெண்பாவை பின் தோன்றிய யாப்பருங்கலம், மூன்று வகையாக்கி அவற்றுள் ஒன்றை வெண்கலிப்பா என்ற பெயரால் கலிவெண்பாவைக் கூறுகின்றது.

                “ஒத்தாழிசைக் கலி வெண்கலிப் பாவே

                கொச்சகக் கலியோடு கலிமூன் றாகும்” (யா.க.நூ. 79)

     

    கலிவெண்பாட்டு என்ற பெயரினை நோக்குகையில், இவை கலிப்பாவிற்கும் வெண்பாவிற்கும் உரியவை என்று எண்ணத்தோன்றும். எனினும் தொல்காப்பியர் இதனைக் கலிப்பாவின் ஒருவகையாகவே குறிப்பிட்டுள்ளார். இதன் பாடல் வரி வருமாறு

    “ஒருபொருள் நுதலிய வெள்ளடி இயலால்

                திரிபின்றி முடிவது கலிவெண்பாட்டே”  (தொ.பொ.நூ.147)

    கலிவெண்பாட்டு முடியும் வரை ஒரு பொருள் பற்றியே வருதல் வேண்டும், வெள்ளடி இயலான் வருதல் வேண்டும், திரிபின்றி முடிதல் வேண்டும் என்ற மூன்று கருத்துக்களை வலியுறுத்துகிறது.

             இளம்பூரணர் 147வது நூற்பாவில் கலிவெண்பாட்டினை இருவகையாகப் பாகுபடுத்தியுள்ளார். தளை அமைப்பை ஒட்டியே கலிவெண்பா, வெண்டளையினால் வந்து ஈற்றடி முச்சீரினால் வருவன ஒருவகை, அயல் தளைகளும் விரவி வந்து ஈற்றடி வெண்பாவைப்போல முச்சீரினால் முடிவன மற்றொரு வகை மேற் குறிப்பிட்ட “வெள்ளடி இயலான்” என்ற வரியினால் இவ்வாறு இருவகையாக கலிவெண்பாட்டினை பாகுபடுத்திக் காட்டியுள்ளார். மேலும் கலிவெண்பாட்டு, வெண்கலிப்பாட்டும் ஒன்றாகும் என்று இயம்பியுள்ளார்.

        காரிகை உரையாசிரியர்  ஈற்றடி அமைப்பு முறை மட்டுமின்றி இலக்கண வகையாலும் இப்பாவகைகளிடையே வேறுபாடு உண்டு என்பர். வெண்கலிப்பா என்பது கலித்தளையும் கலியிடையும் தழுவி ஈற்றடி முச்சீராக வருவன என்றும், வெண்டளை பெற்று வெள்ளோசை தழுவி ஈற்றடி முச்சீராக வருவது கலிவெண்பா என்றும் காரிகை உரையாசிரியர் கூறுவார்.

    நூலின் தொடக்கம்

        நூலின் தொடக்கத்தில் முதற் செய்யுளில் அமையும் முதல் மொழி மங்கலச் சொல்லாக இருக்க வேண்டும் என்றும், அத்தகையச் சொற்கள் முப்பத்தொன்பது என்றும் பாட்டியல் நூல்கள் பட்டியல் இடுகின்றன. முதன் முதலில் மங்கலம் பற்றி கூறிய நூல் பன்னிருபாட்டியல் என்று கூறப்படுகிறது.( யாப்பியல் – அன்னி தாமசு). வாழ்க்கையில் மங்களத்தை எதிர்பார்த்த, வரவேற்ற மனிதமனம், பேச்சு வழக்கிலும் கூட மங்களத்தைப் புகுத்தியது. லெக்சிகனில் மங்கலச் சொல் என்பது செய்யுளின் முதலில் வரக்கூடிய நன் மொழி என விளக்கப்படுகின்றது. பாப்பா பாட்டியலில் மங்கலச் சொற்களாக  சீர், எழுத்து, பொன், பூ, திரு, திங்கள், மணி, நீர், சொல், கங்கை, ஆரணம், குஞ்சரம், உலகு, பார், தேர், முந்நீர், கடல், கார், நேமி, ஆழி, வேலை, அணி, சுதை, பூவை, அமுதம், திகிரி, மதி, தரு, பிறை, பங்கசை, பதுமை போன்றவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் அடிப்ப்படையில் தூது இலக்கியங்களில் முதல் இலக்கியமான நெஞ்சுவிடு தூதில் “பூ மேவும்” என்ற மங்கல மொழி அமைந்துள்ளது. மேகம் விடு தூதில் “பொன்” என்ற மங்கல சொல்லும், தமிழ் விடு தூதில் “சீர்” என்ற சொல்லும் இடம் பெற்றுள்ளது. பூ மேவும், பொன், சீர் போன்ற சொற்கள் எல்லாம் மங்கலச் சொற்கள் என பாட்டியல் நூல் சுட்டுகின்றது.

    நூலின் இறுதி  

     

        வெள்ளடியினால் திரிபின்றி முடிவது கலிவெண்பாட்டின் இலக்கணம், எனவே நூலின் இறுதி முச்சீராய் நாள், மலர், காசு, பிறப்பு, என்னும் வாய்ப்பாட்டின் அடிப்படையில் முடிதல் வேண்டும் என்பதாகும். கலிவெண்பா யாப்பில் அமைந்த முன்று தூது நூல்களில் இரண்டு தூது நூற்களின் இறுதி “மறவாதே தூது சொல்லி வா” (தமிழ் விடு தூது), “மாலைதர நீவாங்கி வா“ (மேகம்விடு தூது,) என்று நாள் (வா,வா) என்னும் வாய்ப்பாட்டைக் கொண்டு முடிகின்றது. நெஞ்சுவிடு தூது “பிறப்பு” (நினைந்து) என்னும் யாப்பைக் கொண்டு முடிகின்றது.

    கட்டளைக் கலித்துறையில் தோன்றிய நூல்கள்

         கட்டளைக் கலித்துறையில் தோன்றிய முதல் இலக்கணம் யாப்பருங்கலக்காரிகை. பின்னர் தமிழ் இலக்கியத்தில் மிகுதியும் பழக்கம் பெற்ற கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பு வகை தூது இலக்கியம் உருவாக ஒரு கருவியாக அமைந்தது. தொடக்ககால தூது இலக்கியங்கள் அதிகமும் கலிவெண்பாவால் தோன்றியவையாகும். இவை 19-20 ஆம் நூற்றாண்டுகளில் சில மாற்றங்கள் அடைகின்றன. அல்லி மரைக்காயர் எழுதிய வண்டுவிடு தூது, அன்னம் விடு தூது, மாரிவாயில் ஆகியவை கட்டளைக் கலித்துறை  யாப்பில் அமைந்த தூது நூற்களாகும். கட்டளை என்பது எழுத்து எண்ணும் மரபைச் சுட்டுவது. இதனை தொல்காப்பியர் நாற்சீர் கொண்ட செய்யுளடிகளில் பயின்று வரும் என்கிறார். சான்றாக

               சீர்திகழ் மாரி வாயிலாமிதனைச்

                      செந்தமிழ்த் தாய்நுதற் கணிந்தோன்

                நேர்மைசே ருண்மை விழைவழக் கறிஞர்

                      நிறைதமிழ் ஆங்கில முணர்ந்தே

    ………………………………………………………………………….(மாரி)

     இது போன்று பழனியாண்டவர் நெஞ்சுவிடு தூது – கீர்த்தனை என்ற இசைப்பாவாலும், தத்தைவிடு தூது – அம்மானை அமைப்பாலும் அமைந்துள்ளது என ந.வீ. செயராமன் அவர்கள் தூது இலக்கியம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளது இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    முடிவுரை

          இலக்கணங்கள் இலக்கியங்களை அடிப்படையாக்கி எழுந்தவையாகையால் காலந்தோறுமுள்ள இலக்கிய மாற்றம் இலக்கணங்களிலும் பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் சில தூது இலக்கியங்கள் மாற்றம் அடைந்துள்ளமையை இங்கு அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு காலத்திலும் புதிய புதிய இலக்கியங்கள் தோன்றுகின்றன. அதன் அடிப்படையில் இலக்கணங்களும் வளர்ந்து வருகின்றன. பாட்டியல் நூல்கள் கூற்றுப்படி தூது இலக்கியங்கள் தொடக்கக் காலங்களில் கலிவெண்பாவினால் தோற்றம் பெற்றுள்ளன. இதுவே பிற்காலத்தில்  கட்டளைக் கலித்துறை, அம்மானை முறை, கீர்த்தனப் பாடல் என வேறுபட்ட யாப்பு அமைப்பில் வளர்ந்துள்ளது என்பது இக்கட்டுரை வாயிலாக அறியப்படுகிறது.

    துணைநூற் பட்டியல்

     

    தூது இலக்கியங்கள்   – ந.வீ. செயராமன்

    தமிழ் தூது இலக்கியங்கள் – ஈஸ்வரன்

    தமிழ் தூது இலக்கியத்தின் தோற்றம் – அ. நடராசன்

    நெஞ்சு விடு தூது – உமாபதிசிவாச்சாரியர்

    மணவை திருவேங்கடமுடையான் மேக விடு தூது

    மாரிவாயில்                     – சோமசுந்தர பாரதியார்

    வண்டுவிடு தூது,

    அன்னம் விடு தூது,             – அல்லி மரைக்காயர்

    மதுரை சொக்கநாதர் தமிழ் விடு தூது

    சங்க இலக்கிய யாப்பு            – பிச்சை.அ

    யாப்பியல்                       – அன்னி தோமஸ்

    புறநானூற்றில் யாப்பு             – அ. சதீஷ்

    Share
  • தமிழ் மலையாள ஆக்கப்பெயர்கள்

    முனைவர் ஹெப்சி ரோஸ் மேரி.

    உதவிப்பேராசிரியர்

    கேரளப்பல்கலைக்கழகம், காரியவட்டம்

    திருவனந்தபுரம்

     

                    பெயர் அல்லது வினைச்சொற்களுடன் விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச்சொற்கள் ஆக்கப் பெயர்கள் எனப்படும்.  தமிழ் மொழியில் ஏராளமான புதிய சொற்கள் இவ்வாறே ஆக்கிக் கொள்ளப்படுகின்றன. பழந்தமிழ் இலக்கண நூல்கள் வெளிப்படையாக ஆக்கப்பெயர்களை உருவாக்கும் முறையைக் கூறவில்லை.  எனினும் 11 ஆம் நூற்றாண்டில் தோன்றிய வீரசோழியம் பெயராக்க விகுதிகளை எடுத்தியம்புகின்றன.  இக்கட்டுரை தமிழ் இலக்கண நூல்கள் கூறும் ஆக்கப்பெயர்களை மலையாள இலக்கண நூலான கேரள பாணினீயத்துடன் ஒப்பிட்டு நோக்குகின்றது.

    ஆக்கப்பெயர் – விளக்கம்

     

                    பொதுவாக பெயர் அல்லது வினைச்சொற்களுடன் விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச்சொற்கள் ஆக்கப் பெயர்கள் (Derivative) எனப்படும். தொல்காப்பியத்தில் ஆக்கப்பெயர்கள் பற்றிய விளக்கம் காணப்படவில்லை. எனினும் வடமொழிமரபைப் பின்பற்றி இடைக்காலத்தில் தோன்றிய வீரசோழியமும் பிரயோகவிவேகமும் ஆக்கப்பெயர்களை விளக்குகின்றன.  இவ்விலக்கண நூல்கள் இதனைத் தத்திதன் என்று அழைக்கின்றன. தத்திதம் என்ற சொல்லுக்கு மலையாளம் ஆங்கில மொழியகராதி Derivative,  Nominal Derivative ஆகிய பொருள்களைச் சுட்டுகின்றது

    தத்திதன் என்பது வடமொழி வழக்கு. வீரசோழியமும் கேரள பாணினீயமும்  தத்திதாந்த பதத்திற்கு (ஆக்கப்பெயர்களுக்கு) இலக்கணம் கூறவில்லை. பிரயோகவிவேகம் இதற்கு,

    துன்னும் தொடர்மொழி எல்லாம் ஒழித்து முன்சொல்தனைப் போய்

    மன்னும் பிரத்திய்யமே தத்திதாந்தம் – (பிவி.29)”

    என்று இலக்கணம் கூறுகின்றது. அதாவது முன்சொல் தன்னைத் தொடர்ந்து வரும் ஏனைய சொற்களை நீக்கி விகுதிபெற்றுத் அத்தொடர்மொழியின் பொருளை உணர்த்தும் சொல்லே தத்திதாந்தம் அல்லது ஆக்கப்பெயராகும்.

    எ.டு

                    வலையால் முயன்று உண்பவன் -> வலையன்

    இத்தொடரில் ’வலை’ என்னும் சொல் நிற்க ‘ஆல் முயன்று உண்ணும்’ என்ற தொடர்மொழி கெட்டு வலை + அன்  எனச்சேர்ந்து வலையன் என்று ஆகிறது.

    பெயராக்கவிகுதிகள் / ஆக்கப்பெயர் விகுதிகள்

                    வீரசோழியர் ஆக்கப்பெயருக்குரிய பொதுவான விகுதிகளாக அன் முதலான பதினேழு விகுதிகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்(வீ.சோ.52). பிரயோக விவேகமும் கேரள பாணினீயமும் ஆக்கப்பெயர்களின் வகைகளைக் கூறி அவற்றின் கீழ் பெயராக்க விகுதிகளைச் சுட்டுகின்றன.

    ஆக்கப்பெயர் – வகைகள்

    ஆக்கப்பெயர்களின்  வகைகளை வீரசோழியம் கூறவில்லை.  ஆனால் விகுதிகளை ஆண்பாற் பெயரில் வரும் விகுதி, பெண்பாற் பெயரில் வரும் விகுதி, பொருளை விளக்கும் விகுதி என மூன்றாகப் பாகுபடுத்தியுள்ளது. பிரயோகவிவேகம் தத்திதனை (ஆக்கப்பெயர்களை) மூன்றாக வகைப்படுத்தியுள்ளது. வீரசோழிய ஆசிரியர் பொதுப்படையாக விளக்கிச் சென்ற  காரிகைகளிலே கேரள பாணினீய ஆசிரியர் விளக்கும் தத்திதன் வகைகள் இடம்பெற்றுள்ளன.  கேரள பாணினீயம் வடமொழியின் அடிப்படையில் பெயர், பண்பு, சுட்டு முதலான சொற்களை அடியாகக் கொண்டு பிறக்கும் சொற்களைத் ’தத்திதம்’ என்றும் வினைச் சொற்களினின்று தோன்றும் பெயர்ச் சொற்களைக் ’கிருத்து ’என்றும் குறிப்பிடுகிறது. (கே.பா பக் 195).

    எ.டு

    தத்திதங்கள்

    புத்தியுள்ளவன்                                                        புத்திமான்

    வ்யாகரணமறியுந்நவன்                  வையாகரணன்

     

    கிருத்துகள்

    தர்சிக்குந்நவன்                      த்ருஷ்டாவு

    தர்சிக்குந்ந க்ரிய                   த்ருஷ்டி

                    வடமொழியிலுள்ள தத்திதன், கிருத்து ஆகியவை மலையாள மொழியில் காணப்படவில்லை. இருப்பினும் மலையாள மொழியில் காணப்படும் இத்தகைய ஆக்கப்பெயர்களை நான்காக வகைப்படுத்தி,  ஆக்கப்பெயர்களின் உருவாக்கத்திற்குப் பெயர், வினை, பண்பு, எண், சுட்டுப்பெயர் முதலானவற்றிற்குச் சேர்க்கப்பட வேண்டிய விகுதிகளை விளக்கிக் கூறுகிறர் ஏ.ஆர். ராஜராஜவர்மா. அடிப்படைத் தமிழிலக்கணம் என்னும் நூலில் எம்.ஏ. நூஃமான் ”பெரும்பாலான ஆக்கப் பெயர்கள் பெயர் அல்லது வினைச்சொற்களில் இருந்தே ஆக்கப்படுகின்றன” என்று குறிப்பிடுகிறார். எனினும் அவர் தரும் எடுத்துக்காட்டுகளுள் பெரும்பாலானவை பெயர், பண்பு, வினை போன்ற சொற்களில் இருந்து ஆக்கப்படுவதைக் காணலாம். கீழ்க்காணும் அட்டவணை பிரயோகவிவேகமும் கேரளபாணினீயமும் கூறும் பெயராக்க விகுதிகளின் வகைகளைச் சுட்டுகின்றது.

    வரி.எண் பிரயோகவிவேகம் கேரளபாணினீயம்
    1. சாமானிய தத்திதன் நாமநிர்ம்மாயித தத்திதம்
    2. அவ்விய தத்திதன் பூரணிதத்திதம்
    3. பாவ தத்தித்டன் தன்மாத்திரத் தத்திதம்
    4. தத்துவதத்திதம்

     

     

    சாமானிய தத்திதன் / நாமநிர்ம்மாயித தத்திதம்

     

                     பொதுப்பெயரை அடுத்து வரும் விகுதிகளைக் குறிப்பதே இத்தத்திதம். இதனைப் பிரயோகவிவேகம் சாமானிய தத்திதம் என்றும் கேரளபாணினீயம் தன்மாத்திரத் தத்திதம் என்றும் அழைக்கின்றன. வீரசோழியம் இவ்வாறு பெயரிட்டு வகைப்படுத்தவில்லையாயினும் சில பொதுவான விகுதிகளைச் சுட்டுகின்றன.

    எ.டு

    அன் – கெளரவன் – குமரமரபினன்

    இயன் – ஆதித்தியன் – அதிதிமகன்

    ஈனன் -குலீன்ன் – குலத்தினுள் விழுமியோன்

    இகன்–தெளவாரிகன் – துவாரத்தில் நிற்பான்

    ஏயன் – காங்கேயன் – கங்கையின் மகன்

    வான் – குணவான் – குணத்தை நன்றாக உடையவன்

    வதி – குணவதி – குணத்தை நன்றாக உடையவள்

     

     

    அவ்விய தத்திதன் / பூரணிதத்திதம்

                    விகுதி பெற்று வரும் இடைச் சொற்களையே அவ்வியதத்திதன் என்கிறது பிரயோகவிவேகம்.  அதாவது சுட்டுப்பெயருள் பிளந்து நில்லாத இடப்பெயர்களும், எண் முதலியவை ஏழாம் வேற்றுமைப் பொருளோடு நின்றனவும் ஆகிய ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்தும் இடைச்சொற்களை அவ்விய தத்திதன் என்கிறது.

    எ.டு

    ஒருவயின், இருவயின் –எண்

    அவ்வயின், எவ்வயின் – சுட்டுப்பெயர் பிளந்து நில்லாத இடப்பெயர்

     வீரசோழியம் எண்ணுப்பெயருடன் வரும் தத்திதனை விளக்கவில்லை.  எண்ணுப்பெயருடன் ’ஆம்’ என்னும் விகுதி இணைந்த வடிவம் தமிழ் மொழியில் சங்கமருவிய காலத்திலிருந்தே காணப்படுகிறது (இரண்டாம் சந்தி  – மணிமே 30 -150) . மேலும்’’ஆவது’ என்ற விகுதி சேர்ந்த எண்ணுப்பெயர் வடிவம் (இரண்டாவது, மூன்றாவது) இன்றைய தமிழில் பயின்று வருகின்றன. கேரள பாணினீய ஆசிரியர் பூரணித் தத்திதத்தை,

                                                    ஸங்க்யா நாமத்தில்ல மென்னு

                                                    வரும் பூரணிதத்திதம் (கே.பா .94)

    என்ற நூற்பாவில் குறிப்பிடுகிறார்.   அதாவது, எண்ணுப் பெயர்களுடன் ‘ ஆம்’  என்னும் விகுதி சேரும்போது உருவாகும் பெயர்ச் சொற்களே பூரணித் தத்திதம் என்று அழைக்கப்படுகிறது.

    எ.டு

                                    ஒன்னு + ஆம் – ஒன்னாம்,

    ரண்டு + ஆம் – ரண்டாம்,

    நூறு + ஆம் – நூறாம்

     

    பாவ தத்திதன் / தன்மாத்திரத் தத்திதம்

     

    இது பண்புப்பெயர்கள் ஏற்கும் விகுதிகளைப் பற்றியதாகும்.  வலி, நெடு என்னும் குணத்தின் பின் மை, அம், பு, து, வு, கம் வல், அளவு, அதி என்னும் விகுதிகள் வரும் என்று  வீரசோழியம் கூறியுள்ளது (வீ.சோ.55). இக்காரிகைக்கு உரையெழுதும் பெருந்தேவனார் குணமாவது நெடு, முறு, கரு, பசு, வெளு, கெடு, இள, தண், வெம், அரி, எளி, பெரு, செறு, பரு, நேர்.மலி,  என இவை முதலாக வரும் என்று உரையெழுதியுள்ளார். பண்பின் முதல் நிலையோடும் ஆண், பெண் முதலாகிய பெயரோடும் மகர, ஐகாரமும் சிறுபான்மை உகரமும் பொருந்திவருவது பாவதத்திதன் என்று பிரயோகவிவேகம் கூறுகிறது. கேரள பாணினீயம் பல பண்புகளின் இருப்பிடமாகிய ஒரு பொருளின் ஒரு தனிப்பண்பை மட்டும் சிறப்பித்துக் கூறுவது தன்மாத்திரத் தத்திதம் என விளக்குகிறது.

    எ.டு

    செம்மை, சிறுமை, கறுமை,செறும, வெண்ம, புதும

     

    தத்துவத் தத்திதம்

          வீரசோழியம் தத்துவத் தத்திதனைத் தனியாகப் பெயரிட்டு விளக்கவில்லை எனினும்  தத்திதன்கள் பயின்று வரும் பதினாறு இடங்களை 53, 54 அம் காரிகைகளில் விளக்கிக் கூறுகின்றது. அவையாவன,  உண்ணும் இதனால் (வலையன்), உரைக்கும் இதனை (வேதியன் – வேதத்தினை உரைப்பவன்), உடையான் இது ( கொந்தத்தை உடையான் –கொந்தவன்), பண்ணும் இதனை (மருந்தைப் பண்ணுவான் – மருத்துவன்), பயிலும் இதனை (கூத்தன்), பயன் கொள்ளுமிதில் (வில்லி), எண்ணும் இதனை (சோதிடன்), இதனுக்கு நாயகன் (சிலம்பன்) ஈங்கு இருக்கும் (பட்டினவன்), நண்ணும் இதனை (பாண்டியன்), இதை ஒக்கும் (பொன்னன்), இங்குளன் (அகத்தன்), மகன் இவனுக்கு (ஆதித்யன்), மகன் இவளுக்கு (காங்கேயன்) இந்த வர்க்கத்தினன் (செம்பியன்), இவனைத் தெய்வமாகக் கொண்டவன் (பெளத்தன்). இன்னும் இவைபோன்ற பிறபொருளிலும் வரும் என்றும் வீரசோழியம் குறிப்பிடுகின்றது. பிரயோகவிவேகம் சாமானிய தத்திதன் வகைகளுள் இதனை அடக்கிக் கூறுகிறது.  கேரள பாணீனியம்       அது உள்ளது, அதனில் உள்ளது, அங்கிருந்து வருவது, அங்குத்தோன்றியது முதலான பொருளைக் குறிக்கும் பெயர்ச் சொற்களைத் தத்துவத் தத்திதம் என்று குறிப்பிடுகின்றது.  இத்தகைய பெயர்ச் சொற்களின்  உருவாக்கத்திற்கு அடிச் சொற்களுடன் ‘அன்’ விகுதியைச் சேர்க்க  வேண்டும் என்றும் விளக்குகிறது (கே.பா. 92). இத் தத்துவத் தத்திதன் வீரசோழியம் கூறும் வகைகள் சிலவற்றை ஒத்ததாகும்.

    எ.டு

     

     

     

    வீ.சோ/பி.வி கே.பா
    அது உள்ளது கள்ளன் கள்ளத்தனத்தை உடையவன் மூப்பன் மூப்பை உடையவன்
    அதனின் உள்ளது பாண்டியன் பாண்டிய நாட்டில் உறைபவன் ஆலங்ஙாடன் சர்க்கர
    அங்கிருந்து வருவது           – கிழக்கன் காற்று

     

    ஆக்கப்பெயர்களை வடமொழியில் தத்திதன் என்பர். வடமொழிமரபைப் பின்பற்றி தமிழில் தோன்றிய வீரசோழியமும் ஆக்கப்பெயர் விகுதிகளைப் பட்டியலிட பிரயோகவிவேகமும் கேரளபாணினீயமும் ஆக்கப்பெயர்களின் வகைகளைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றன. தமிழில் பிற்காலத்தில் தோன்றிய அடிப்படைத் தமிழிலக்கணம் ஆக்கப்பெயர்களை வகைப்படுத்தவில்லை. எனினும் ஆக்கப்பெயர்கள் உருவாக்கும் முறையை விளக்குகின்றது. பயன்பாட்டியல் நோக்கிலே இவ்வாக்கப்பெயர்கள் இடைக்காலத்தில் தோற்றம் கண்டன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தமிழில் ஏராளமான புதிய சொற்கள் இவ்வாறே ஆக்கிக் கொள்ளப்படுகின்றன.

    பயன்பட்ட நூல்கள்

    • இளயபெருமாள்.மா –      கேரள பாணினீயம்(மொ.பெ),தமிழ்த்துறை, கேரளப் பல்கலைகழகம்,1977.
    • கோபாலையர். தி.வே – பிரயோகவிவேகம், தஞ்சை சரஸ்வதிமகால், தஞ்சை, 1973.
    • கோபாலையர். தி.வே – வீரசோழியமும் பெருந்தேவனார் இயற்றிய உரையும்,  நாச்சியார் அச்சகம், , திருச்சி,2005.
    • ராஜராஜவர்மா. ஏ. ஆர் – கேரளபாணினீயம், டிசி. புக், திருவனந்தபுரம், 2000.
    • மீனாட்சி சுந்தரம்.தெ.பொ –               Foreign Models in Tamil Grammar, Kerala University Co – operative store press, Trivandrum,1974.
    • வேலுப்பிள்ளை –      தமிழ் வரலாற்று இலக்கணம், குமரன் புத்தக இல்லம் , சென்னை, 2002.
    • ஹெப்சி ரோஸ் மேரி.அ –      வீரசோழியம் நேமிநாதம் ஓர் ஒப்பாய்வு அச்சிடப்படாத ஆய்வேடு, கேரளப்பல்கலைக்கழகம், திருவன்ந்தபுரம் – 2006

     

    Share
  • கல்லா நீள் மொழிக் கதநாய்

                                முனைவர்.முத்துலட்சுமி.சு

                  விரிவுரையாளர்

                             கேரளப் பல்கலைக் கழகம்

                 காரியவட்டம்

       கல்லா நீள் மொழிக் கதநாய்

                  வடுகர்

    முன்னுரை

            வடுகர் எனும் சொல் சங்கப் பாடல்களில் பரவலாக புலவர்களால் கையாளப்பட்டுள்ள சொல் ஆகும். தமிழ்ப் புலவர்கள் பெரும்பாலும் வடுகர்களை ஒரு வெறுப்புக் கண்ணோட்டத்தோடுதான் எதிர் கொண்டுள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வடுகர் என்ற சொல் மொழியில் செல்வாக்குடன் தான் வழக்கில் இருந்துள்ளது. மிகவும் பிற்காலத்திலும் சங்ககாலக் கவிஞர்கள் கொண்டிருந்த வெறுப்பு தொடர்ந்துள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில்  வடுகர் எனும் சொல் வழக்கில் இருந்து முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் அரசியல் சூழல் இதற்குக் காரணமாகலாம். எனினும் சங்கப்பாடல்களில் வடுகர் எனும் சொல் பெற்றிருந்த முக்கியத்துவத்தை இக்கட்டுரை மூலம் ஆராயப்  படுகிறது.

    வடுகர்

          வடுகர் எனும் சொல் தமிழரல்லாத  வேற்று மொழியில் பேசும் ஒரு மக்கள் இனத்தைக் குறிக்கிறது. தமிழர்கள் இவர்களையே தங்கள் பகை இனமாகக் கொண்டிருந்தனர் எனக் கொள்ள இடமுள்ளது. ஆனால் தமிழர், வடவர் பகையே மிகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்களுக்கும், வடவர்களுக்கும் இடையிலான போர்களைக்குறித்து சங்கப் பாடல்களில் மிகக் குறைவானச் செய்திகளே உள்ளன. அதே சமயம் அகத்தினைப் பாடல்களில்  தமிழர்களுக்கும், வடவர்களுக்கும் இடையே நிகழ்ந்த பல போர்க் களங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

      ‘திராவிட அரசியல் சூழலில் எழுந்த சங்க வாசிப்பில் வடுகர்களுடான தமிழர்களின் போர்க்களங்கள் மறைக்கவும்பட்டன.

    [வேதசகாய குமார் ,இன்றைய கேரளமும் அன்றைய சேர நாடும் ஒரு விசாரணை, சித்தூர்  அரசினர் கல்லூரி , ஆய்வரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை, 2015]

          சில ஆய்வாளர்கள் இந்த விடுபடல் அரசியல் காரணமாக நிகழ்த்தப்பட்டது என்கின்றனர். இதை முற்றிலும் மறுக்கவும் முடியாது.

    வடுகர்கள் தமிழ் நாட்டின் வடப்பகுதியில் வாழ்ந்தவர்கள். தமிழ் நாட்டில் சேர, சோழ, பாண்டிய பேரரசுகள் விளங்கியபோது இப்பகுதியில் சாதவாகன பேரரசு விளங்கியது. சாதவாகன பேரரசின் வட எல்லை கங்கை சமவெளியாக இருந்தது. தற்போது ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைக் குறிப்பிடலாம். தமிழ் நாட்டில் ஆட்சியை நிலை நாட்டிய களப்பிரர்களையும் பல்லவர்களையும் வடுகர்களாகவே குறிப்பிட வேண்டும். சாதவாகன பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்  தோற்றங் கொண்டன. சாளுக்கியர்களும் வடுகர்களே. பிற்கால சோழப் பேரரசு இவர்களோடும் மோதியது. சாளுக்கியப் பேரரசின் வீழ்ச்சியில் இருந்து ‘ஹொய்சாளர்கள்’ அதிகாரத்தைக் கைக் கொண்டிருந்தனர். பிற்கால பாண்டியப் பேரரசின் வீழ்ச்சிக்கு இவர்கள் காரணமாயினர். விஜய நகர பேரரசையும் வடுகர்களாகவே கருத வேண்டும். இயேசு சபை பாதிரியாரான புனித சவேரியார் கடிதங்களில் விஜயநகர பேரரசுப் பணிகள் கடலோர மக்களைத் தாக்கிய நிகழ்வை வடுகப் படையெடுப்பு எனறே சவேரியார் குறிப்பிட்டுள்ளார். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அரசியல் கட்டளைகளில் வடுகர் எனும் சொல் கையாளப்பட்டுள்ளது. திராவிடர் எனும் சொல் வடுகர் தமிழர் இணைந்த கூட்டு சமூகத்தையே குறிக்கின்றது. வடுகர் எனும் வழக்கிலிருந்து விலக இது காரணமாகிறது.

    கதநாய வடுகர்

          அகநானூறு 107  வது பாடல் வடுகரை கல்லா நீள மொழி கதநா வடுகர் என்கிறது. (அகநானூறு 107  காவிரிப் பூம்பட்டினத்து காரிக்கண்ணனார். வரி -11) கதநாய வடுகர் என்பது சினம் மிகுந்து மொழியையும் சினமிக்க நாயையும், உடைய வடுகர் என பொருளுரைக்கப்படுகிறது. ஆனால் சினமிகுந்த மொழியை உடைய சினமிகுந்த நாயைப் போன்ற வடுகர் என்று பொருள் கொள்ளவும் இடமுள்ளது. தமிழ் கவிஞன் வடுகர் மீது கொண்டிருந்த வெறுப்பை இவ்வரிகள் சரியாகவே உணர்த்துகின்றன.

    வடுகரும்,மோரியரும்

            தமிழ் கவிஞர்கள்  வடுகர் மீது கொண்டிருந்த வெறுப்பிற்கான காரணங்களையும், சங்கப்பாடல்களில் இருந்து உணர்ந்து கொள்ள முடிகின்றது. அகம் 281 வது பாடல் இதற்கான காரணத்தை விளக்குகின்றது.

             ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி

             வான் போழ் வல் வில் சுற்றி , நோன் சிலை

             அவ்வார் விளிம்பிற்கு   அமைந்த நொவ்வு இயல்

             கனை குரல் இசைக்கும் விரை செலல் கடுங் கணை

             முரண் மிகு வடுகர் முன்னுற , மோரியர்

             தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு

                                            [அகம் 281]

      மாமூலனாரின் இப்பாடல் மோரியபடை எடுப்பைத்தான்  குறிக்கின்றது. ஆனால் பாடல் வரிகள் வடுகர்களின் கருணையற்ற செயலைக் குறிப்பிடுகின்றது. வடுகர்கள் மயிலின் தோகையை அம்பில் வைத்துக் கட்டி வில்லில் பூட்டி ஒலி எழுப்பி விரைந்து செல்லும் கொடிய அம்புகளைத் தொடுத்தனர். இது மக்களை அச்சமடையச் செய்து விரட்டி ஓட்டுவதற்கு கையாளப்பட்ட உத்தி ஆகும். மாமூலனார் முரண்மிகு வடுகர் என்கிறார். பகை உணர்வு மிக்க வடுகர்கள் என்பது இதன் பொருள். தமிழர்கள் மீது வடுகர் கொண்ட பகையையே இது குறிக்கின்றது. இப்பகை உணர்வு காரணமாகவே மோரியருக்கு வழிகாட்டியாக, துணையாக வடுகர்கள் படையெடுத்து வந்துள்ளனர். பிற்காலத்தில் மாலிக்கபூர் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்த போது வடுகப்படையே துணையாக வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மோரியர் படையெடுத்து வந்தாலும் தமிழர்கள் வடுகர்களையே தங்கள் பகைவர்களாகக் கொண்டிருந்தனர்.

    வடுகர் மீதான தமிழரின் வெறுப்பு

             அகம்  375   வது பாடல் மற்றும் ஒரு தமிழர்களுக்கும் வடுகர்களுக்கும் இடையே நிகழ்ந்த ஒரு போர்க் களத்தைக் சித்தரிக்கின்றது.

          குடிக்கடன் ஆகலின்,குறைவினை முடிமார்

          செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி,

          வம்ப வடுகர் பைந் தலை சவிட்டி

                                                  [அகம் 375]

            சோழன் குடிமக்கள் மீது கொண்டிருந்த கடமையினை நிறைவு செய்ய பாழி போர்க்களத்தில் ‘வம்ப வடுகர் பைந் தலைகளை’ச் சவிட்டிக் கொன்ற யானை … இதில் போர்க்களத்தில் யானை வடுகர்களின் தலையைச் சவிட்டி அவர்களைக் கொன்றுள்ளது. தண்டனை கொடுமையாக இருந்தாலும் வடுகர்களிடமிருந்து தமிழ் நாட்டைக் காப்பது சோழனின் குடிக்கடன் ஆகிறது. இப்பாழி போர்க்களத்தையே அகம் 44 பாடலும் கூறுகின்றது.

     

    முடிவுரை

              சங்கப்பாடல்கள் குறிப்பாக அகத்திணைப் பாடல்கள் தமிழர்களுக்கும் வடுகர்களுக்கும் இடையிலான பகையை விரிவாகவே சித்தரிப்பதை இதன் மூலம் அறிய முடிகின்றது. ஆனால் இப்பாடல்கள் அரசியல்  காரணங்களால் சமகாலத்தில் மறைக்கப்பட்டுள்ளன என்பதை உணரலாம். ஆனால் இன்று தமிழ் வலைதளத்தை அடைந்துள்ளதன் காரணமாக இவ்வரிகள் இளம் வாசகர்களிடம் சென்று சேரும் என்பதில் ஐயமில்லை.

     

    துணை நூற்பட்டியல்

    1.   செயபால். இரா. அகநானுறு , நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் [பி] லிட்          சென்னை,
    2. வேதசகாய குமார். எம். பாலைத் தமிழ் ஆய்விதழ், இதழ் 1, சித்தூர் அரசினர் கல்லூரி, கேரளா
    3. சேவியர் கடிதங்கள், நாட்டார் வழக்காற்றியல் மன்றம்,புனித சவேரியார் தன்னாட்சிக்கல்லூரி, திருநெல்வேலிa
    Share
  • கணந்துள்–ஆள்காட்டி (Lapwing)

    சற்குணா பாக்கியராஜ்

    தமிழ் நாட்டில், இன்று கணந்துள் பறவையை எங்கே காணலாம்? என்று கேட்டால் என்ன பதில் வருமோ தெரியாது. ஆனால், “ஆள்காட்டிப் பறவை”  என்றால், பறவையைக் காட்டிக் கொடுக்கப் பெரும்பான்மையோர் முன் வரக்கூடும்.  ஏனென்றால்,  இந்தப் பறவைகளின் குரல், ஆளைக் காட்டிக் கொடுக்கும் இயல்புடையது. ஆள்காட்டிப் பறவைகள், இனப்பெருக்கக் காலத்தில், எதிரிகள் இரண்டு, மூன்று பர்லாங் தூரத்திலே வரும்போது இனம் கண்டு கொண்டு, கூட்டையும் குஞ்சுகளையும் காப்பதற்காக கடுங்குரல் எழுப்புகின்றன. இவைகளின் அபயக் குரலைக் கேட்டு அருகிலிருக்கும் பிற பறவைகளும் விலங்குகளும் அந்த இடத்திலிருந்து விலகி விடுகின்றன. இதனால், வேட்டையாடுபவர்களும் புகைப்படம் எடுக்க விரும்புவர்களும் இந்தப் பறவைகளை விரும்புவதில்லை.

    சங்க இலக்கியத்தில், கணந்துள் பறவையைப் பற்றிய வர்ணனைகள்,  முக்கியமாகப் பறவையின் கால்கள், குரலின் தன்மைப் பற்றி இரண்டு பாடல்களில் காணலாம். இந்தக் கணந்துள் பறவைதான், “ஆள்காட்டிப் பறவை” என்று P. L. சாமி, எழுதியுள்ள “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” (p.147-157) என்ற நூலில், பறவையியலின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்குகிறார்.

    இந்த இரண்டு சங்கப் பாடல்களிலும் கணந்துளின் நீண்ட கால்களை  “நெடுங் காற் கணந்துள்”, என்று புலவர்கள் குறிப்பிடுகின்றனர். பறவையியலில் ஆள்காட்டியின் கால்கள் நீண்டவையென்று விளக்கப்பட்டுள்ளது.

    IMG_9415 (2)

    மேலும் “கணந்துள் பறவை எதுவென்று அறியச் செய்யுளிலேயே “அகச்சான்று” (internal evidence) உள்ளதென்று கீழ்கண்டவாறு எடுத்துக்காட்டியுள்ளார்.

    “ஆற்று அயல் இருந்த இருங் கோட்டு அம் சிறை

    நெடுங் காற் கணந்துள் ஆள் அறிவுறீஇ,

    ஆறு செல் வம்பலர் படைதலை பெயர்க்கும்”

                                                    குருந்தொகை 350: 4-6, ஆலந்தூர் கிழார்

    விளக்கம்: “வழியின் அருகே செல்லும் வழிப்போக்கர்களுடைய கூட்டத்தை, அழகிய சிறகுகளையும், நீண்ட கால்களையும் உடைய கணந்துள் பறவை, அங்கே செல்லுபவரின் வருகையை அறிவித்து, அந்த இடத்தினின்று நீங்கச் செய்யும்”

    இந்தப் பாடலில், கணந்துள்ளின், ஆள் அறிவித்துக் காட்டும் குரலை,

    ஆள் அறிவுறீஇ” என்று  சங்கப் புலவர் குறிப்பிடுகிறார். “ஆள் இருப்பதை அறிவுறுத்துவதால்” கணந்துள் பறவை ஆள்காட்டிப் பறவைதான் என்பதற்கு, இது செய்யுளிலிலேயே உள்ள “அகச்சான்று” என்று, P. L. சாமி விவரிக்கிறார்.

    “பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,
    நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தெள் விளி
    சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்”

                               நற்றிணை 212: 1-3,  குடவாயிற் கீரத்தனார்

    விளக்கம்: “பறவைகளைப் பிடிக்கக் கருதிப், பார்வைப்புள்ளை(decoy) வைத்து, அமைத்த வலையைக் கண்டதும் நெடிய கால்களையுடைய கணந்துள் பறவை அச்சம் கொண்டு, தெளிவான குரலில் புலம்பும் குரல் காட்டின் வழியாகச் செல்லும் இசைக்கருவி முழங்குபவர் தம் வருத்தம் நீங்க இசைக்கும் யாழின் இசை போன்று ஒலிக்கும்”.

    .Redwattled Lapwing-1448 (2)

     இந்தப் பறவையின் குரலை, நற்றிணை 212-இல், புலவர், “புலம்பு கொள்” என்கிறார். பறவையியலாளர்கள் ஆள்காட்டியின் குரலை, ”loud and penetrating” என்று குறிப்பிடுகின்றனர். பறவைகளின் தந்தை என்று போற்றப்படும் முனைவர் சலீம் அலி, இந்தப் பறவைகளின் குரலை வர்ணிக்கும் போது,  “மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, இரட்டை அசையில்,

     “twit, twit” என்று இரண்டு வினாடிக்கொரு தடவையும், இடைஇடையே, மிகவும் உயர்ந்தகுரலில்                                                                                                                                                                             “twit-twit-twit-twit”,  என்று இரக்கமான குரலும் கொடுக்கும், சிவப்பு மூக்கு ஆள்காட்டி, சூழ்நிலைக்கேற்றவாறு, குரலை உயர்த்தியோ, தாழ்த்தியோ, “Did-he-do-it?” என்று வருத்தம் தோய்ந்த குரல் கொடுக்கும்” என்கிறார் (The Book of Indian Birds, Salim Ali.  p.139-140).

    1. L. சாமி, “கணந்துள் என்ற பெயர் ஆள்காட்டியின் அபாய அறிவிப்பு ஓசையின் காரணமாக வந்திருக்கலாம், “கணகணத்தல்” என்ற சொல் விட்டு விட்டு ஒலித்தலைக் குறிக்கும், இதனால் ஓசையின் அடிப்படையில், “கணந்துள்” என்ற பெயர் தோன்றியிருக்கலாம் என்றும் இந்தப் பறவை உள்ளானைப் போன்றிருப்பதால், கணந்துள் என்ற பெயரிலுள்ள “உள்” உள்ளானைக் குறிக்கலாம்”. ஆகவே “கணந்துள்” என்று சங்ககாலப் புலவர்கள் பாடியுள்ள பறவை, ஆள்காட்டிப் பறவைதான் என்று நம்முன் எடுத்துக்காட்டுகளோடு தன் கருத்தை விளக்குகிறார்.

     உலகத்தில், இருபத்திநான்கு வகை லேப்விங் பறவைகள் உள்ளன.  தமிழகத்தில் மூன்று வகையான லேப்விங் பறவைகள் காணப்படுகின்றன. இவை: சிவப்பு மூக்கு ஆள்காட்டி அல்லது செம்மீசை ஆள்காட்டி(Red Wattled Lapwing-Vanellus indicus), மஞ்சள் மூக்கு ஆள்காட்டி அல்லது மஞ்சள்மீசை ஆள்காட்டி ( Yellow Wattle Lapwing)- Vanellus malabaricus. சாம்பல் தலை ஆள்காட்டி (Grey Headed Lapwing -Vanellus cinerea)

     சிவப்பு மூக்கு ஆள்காட்டியும், மஞ்சள் மூக்கு ஆள்காட்டியும் தமிழகத்தில் எப்போதும் காணப்படும் பறவைகள். சாம்பல் தலை ஆள்காட்டி, குளிர் காலத்தில், தமிழகத்திற்கு வலசை வரும் பறவைகளில் ஒன்று. மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் வருகிறது { Wetland birds of Tamil Nadu. P. 91-92, Grubh, R. 2012).

    ஆள்காட்டிப் பறவைகள், ப்ளோவர் (Plover) குடும்பத்தைச் சார்ந்தவை. இந்தப் பறவைகளுக்குக் கால்கள் நீண்டதாய், பொய்க்கால்கள்(stilt) வைத்து நடப்பதுபோல் காணப்படும்.  இவை நீர்க் கரையோரம் காணப்படும் பறவைகள் என்று கருதப்பட்டாலும், மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, நீர் வறண்ட பகுதிகளில்தான் அதிகமாகக் காணப்படுகிறது.  சிவப்பு மூக்கு ஆள்காட்டியை நீர்க்கரையோரங்களில் காணலாம். சிறு புழுப்பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன. இந்தப் பறவைகள், தனித்தோ, இணையாகவோ அல்லது சிறு கூட்டமாகவோ காணப்படுகின்றன. இவை வலசை போவதில்லை.

    தோற்றம்:

    ஆண், பெண் ஆள்காட்டிப் பறவைகள், தோற்றத்தில் ஒன்று போல் காணப்படுகின்றன. சிவப்பு மூக்கு ஆள்காட்டியின் தலை, கழுத்து, மார்பகம் கருமையாகவும், முதுகு, சிறகுகள் செம்பழுப்பு நிறத்திலும் வயிற்றுப் பகுதி வெண்மையாகவும் காணப்படும். இதன் கண் பகுதியிலிருந்து மூக்குவரை சிவப்பு நிற சவ்வு வளர்ச்சி தோன்றி, மீசை போல் தோற்றமளிக்கிறது.

    சிவப்பு மூக்கு ஆள்காட்டி

     

    மஞ்சள் மூக்கு ஆள்காட்டியின் கண்ணிற்கும் மூக்கிற்கும் இடைப்பகுதியில், மஞ்சள் நிறத்தோல் வளர்ச்சி மீசை போல் தொங்கியுள்ளது. இரண்டு பறவைகளின் கால்களும் நீண்டு, மஞ்சள் நிறத்திலிருக்கின்றன.

    மஞ்சள் மூக்கு ஆள்காட்டி

    இந்தப் பறவைகள் இணை பிரியாதவை. இனப்பெருக்கக் காலத்தில், திறந்த வெளியில், ஆழமற்ற சிறு பள்ளம் தோண்டி, இலைகள், சிறு கற்கள், உலர்ந்த சாணத்துண்டுகள் கொண்டு நிரப்பி, மூன்று அல்லது நான்கு முட்டைகள் இடுகின்றன. (சிறு கற்கள், சாணத்துண்டுகள், முட்டைகள் இடம் பெயராமலிருக்க உதவுகின்றன). முட்டை ஓடுகளில் காணப்படும் தவிட்டு நிறப் புள்ளிகள், சுற்றுச் சூழலை ஒத்திருப்பதால் எதிரிகளால் முட்டைகளை எளிதில் கண்டு கொள்வது கடினம்.

    இரண்டு பறவைகளும், மாற்றி மாற்றி அடை காக்கின்றன. முட்டைகளை அடைகாக்கும் சமயத்திலோ அல்லது குஞ்சுகள் பொரித்திருக்கும் சமயத்திலோ, எதிரிகள் அருகில் வர நேர்ந்தால், மிகுந்த ஆரவாரத்தோடு அபயக் குரல் எழுப்பி, வட்டமிட்டுப் பறந்து எதிரிகளின் கவனத்தை வேறு பக்கம் திருப்பி அங்கிருந்து அகலச் செய்துவிடுகின்றன. தமிழகத்திலும், இலங்கையிலும், ஆள்காட்டிப் பறவையின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றி, மாடு ஓட்டும் சிறுவர் பாடியதாக ஒரு அழகிய நாட்டுப் பாடலை P.L. சாமி சுட்டிக் காட்டுகிறார். இந்தப் பாடலில், மஞசள் மூக்கு ஆள்காட்டிப் பறவையைப்பற்றி சில உண்மைகளும்,  பல கற்பனைகளும் கலந்து காணப்படுகின்றன.

    untitled-9889

    “ஆக்காட்டி, ஆக்காட்டி, ஆவாரம்பூ ஆக்காட்டி

    எங்கே எங்கே முட்டையிட்டாய்

    கல்லு துளைத்து கடலோரம் முட்டையிட்டேன்

    இட்டது நாலு முட்டை பொரித்தது மூன்றுகுஞ்சு

    மூத்த குஞ்சுக் கிரைதேடி மூணுமலை சுற்றி வந்தேன்

    இளைய குஞ்சுக் கிரைதேடி ஏழுமலை சுற்றி வந்தேன்

    பார்த்திருந்த குஞ்சுக்குப் பவளமலை சுற்றி வந்தேன்

    புல்லறுத்தான் புலவிற்குக் காய்தின்னப் போகயிலே

    மாயக் குறத்திமகன் வழிமறித்துக் கண்ணி வைத்தான்

    காலிரண்டும் கண்ணியிலே சிறகிரண்டும் மாரடிக்க

    நானழுத கண்ணீரும் என்குஞ்சழுத கண்ணீரும்

    வாய்க்கால் நிறைந்து வழிப்போக்கர் கால்கழுவிக்

    குண்டு நிறைந்து குதிரைக் குளிப்பாட்டி

    இஞ்சிக்குப் பாய்ஞ்சு இலாமிச்சுக்கு வேரூண்டி

    மஞ்சளுக்குப் பாய்ஞ்சு மறித்ததாம் கண்ணீரே”

          “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்”, p.153

                                     ஆவாரம் பூ

                            மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, கன்யாகுமரி, 2017

    இந்தப் பாடலில், மஞ்சள்  ஆள்காட்டிப் பறவையின் கண்ணருகில் காணப்படும் மஞ்சள் நிறத் தோல், ஆவாரம் பூவின் இதழ்கள் போலவும், நான்கு முட்டைகள் இடுவதும், கல்லின் இடையில் முட்டை இடுவதால், கல்லைத் துளைத்து முட்டையிடுவதாகவும், முட்டைகள், சுற்றுச் சூழலை ஒத்திருப்பதால் இவைகளைக் கண்டு கொள்ள முடியாத நிலையில், சிறுவர், எங்கே முட்டையிட்டாய்? என்று பறவையைக் கேட்பதாகவும் காணலாம். பாடலிலுள்ள மேற்கண்ட தகவல்கள், பறவையியலோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், நாட்டு மக்களின் இயற்கையறிவு குறையற்றதாக இருப்பதைக் காணலாம்.

    மேலும், “குறத்திமகன் வழிமறித்துக் கண்ணி வைத்தான்” என்ற செய்தி,

    நற்றிணை, 212 -இல் காணப்படும் “பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,” என்ற அடியை ஒத்துள்ளது.

    ஆனால் மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, வறண்ட நிலத்தில் முட்டையிடுகிறது. அடைகாக்கும் நேரத்திலும், குஞ்சுகள் பொரித்தப் பின்பும் இரை தேட அதிகதூரம் செல்வதில்லை. குஞ்சுகள், பொரித்த உடனேயே தானாக பெற்றோருடன் சேர்ந்து இரை தேடிக் கொள்கின்றன (precocial). ஆள்காட்டிப் பறவை, குஞ்சுகளைப் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாய் இருப்பதைத்தான் அதன் அழுகையும் கண்ணீரும் என்று கற்பனையாகப் பாடலில் கூறப்பட்டுள்ளதென P.L. சாமி கருதுகிறார்.

     

    வட இந்தியாவில், ஆள்காட்டிப் பறவைகளைக் கவனித்து ஆராய்ச்சிகள் செய்து கொடுத்திருக்கும் தகவல்கள் நிறையக் காணலாம். முக்கியமாக, சிவப்பு மூக்கு ஆள்காட்டிகள், மொட்டை மாடிகளில், கான்கீரிட்டில் சிறு பள்ளம் தோண்டி, முட்டையிட்டு அடை காப்பதை பல ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர் (Mundkur, Taej 1985, Muralidhar, A., Barve, S., 2013).

    கி. பி பத்தொன்பதாம் நூற்றாண்டில், இந்தியாவில் பிறந்து வளர்ந்து, கல்லூரியில் பட்டம் பெற்ற பின் அரசாங்க ஊழியராகப் பணிபுரிந்த ஆங்கிலேயர் திரு. ஏட்கின்ஸ் (E. H. Atkins), தன்னுடைய The Common Birds of Bombay” (p.160-163) என்ற புத்தகத்தில், சிவப்பு மூக்கு ஆள்காட்டிப் பறவையைப் பற்றி கீழ் கண்டவாறு நகைச்சுவையோடு வர்ணிக்கிறார். “எதற்கு நான் லேப்விங் பறவையைப் பற்றி விவரிக்க வேண்டும்? அதற்கு அறிமுகமோ அல்லது வர்ணனையோ தேவையில்லை, அதுவே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும். உங்களை ஈர்த்துக்கொள்ளும். அதன் குரல் உங்கள் மனதிலிருந்து அகலாதபடி திரும்பத் திரும்ப அழுத்தமாகக் குரல் கொடுக்கும். திடீரென, துணை பறவையும்,  எங்கிருந்தோ வந்து, வட்டமடித்து, சுற்றி சுற்றிப்                பறந்து, மேலும் கீழும் பாய்ந்து அருகே வருவது போலவும் தூரமாகப் போவது போலவும் போக்குக் காட்டி, அந்த இடத்தை விட்டு நகராமல், மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இரங்கல் குரலில் குற்றம் கூறுவது போல் “Did you do it? Did you do it?  Pity to do it” என்று குரல் கொடுக்கும். எதற்காக இந்தப் பறவை இப்படி நடந்து கொள்கிறது? நான் ஒரு தவறும் செய்யவில்லையே? என்னுடைய சந்தேகம் என்னவென்றால், இதனுடைய முட்டைகள் இங்கு எங்கேயோ இருக்கின்றன. நான் அதைத் தேடுவதினால் பயனில்லை. ஏனெனில், இந்த லேப்விங், ஒரு திறமைவாய்ந்த பொய்யன். ஒரு ஆங்கிலேயப் புலவர்  சொன்னபடி,

                         The Lapwing lies,

            Says here when it is there’

    மொத்தத்தில் இது ஒரு அதிசயப் பறவை” யென்று வியக்கிறார்.

    இந்த வர்ணனை, எத்தனை உண்மை என்பது  ஆள்காட்டிப் பறவையைப் பார்த்தவர்களின் அனுபவத்தில்தான் தெரியும். அடுத்த முறை, இந்த அழகிய பறவைகளைப் பார்க்கவும், குரலைக் கேட்கவும் நேர்ந்தால், Hope you can say, “ No my friend, l didn’t” if you protect nature.

    வட இந்தியாவில் ஆள்காட்டிப் பறவையைப் பற்றியுள்ள சிலதகவல்கள்:

    ராஜஸ்தானில் ஆள்காட்டிப் பறவைகள் முட்டையிடும் காலம் மழை வருவதைக் குறிக்கிறதென்று நம்புகின்றனர்.

    சில கிராமங்களில், ஆள்காட்டியின் குரல் அபசகுணமாகக் கருதப்படுகிறது..

    “வானத்திலிருந்து ஏதாவது விழுந்து முட்டைகளுக்கோ, குஞ்சுகளுக்கோ ஆபத்து நேரிடாதபடி, பிடித்துக்கொள்ள, இரவில் படுக்கும்போது,  இவைகளின் கால்கள், வானத்தை நோக்கியிருக்கும்”. இந்தி மொழியில், இதை, “Tithiri se Asian thama jayega” (“can the pee-wit support the heavens?”) என்கின்றனர்.

    ஆள் காட்டியின் முட்டைகளுக்கு தூக்கத்தைத் தடுக்கும் சக்தி உண்டு என்று நம்புவதால், இரவு வாகனம் ஓட்டுபவர்களுக்காக முட்டைகள் வேட்டையாடப்படுகின்றன (Chan Kumar, 2015).

    References:

     Aitken, Edward Hamilton, 1851-1909. The common birds of Bombay

    Charn Kumar, (2015). First record of a regularly occupied nesting ground of Yellow-wattled Lapwing, Vanellus malabaricus (Boddaert) in agricultural environs of Punjab with notes on its biology . Journal of entomology and Zoology Studies, JEZS 2015: 3 (1): 129-134

    Grubh, R, (2012).  The wetland Birds of Tamil Naddu

     Mundkur, Taej (1985). “Observations on the roof-nesting habit of the Redwattled Lapwing (Vanellus indicus) in Poona, Maharashtra”. Journal of the Bombay Natural History Society. 82 (1): 194–196.

    Mundkur, Taej (1985). Barve, S., 2013. Peculiar choice of nesting of Red-wattled Lapwing Vanellus indicus in an urban area in Mumbai, Maharashtra. Indian BIRDS 8 (1): 6–9

    Muralidhar, A., Barve, S., 2013. Peculiar choice of nesting of Red-wattled Lapwing Vanellus indicus in an urban area in Mumbai, Maharashtra. Indian BIRDS 8 (1): 6–9

    Naik, RM; George, PV; Dixit, Dhruv B (1961). “Some observations on the behaviour of the incubating Redwattled Lapwing, Vanellus indicus indicus (Bodd.)”Journal of the Bombay Natural History Society58 (1): 223–230.

    Share
  • வ.சுப. மாணிக்கனார் பார்வையில் வினைத்தொகை

    -முனைவர் த. சரவணன்

    தமிழுக்கே உரிய சிறப்புக் கூறுகளாக எ, ஒ, ழ, ற, ன ஆகிய ஐந்து எழுத்துக்களைக் கூறுவர். அதேபோன்று சொல்லாக்க முறைகளில் வினைத்தொகை என்னும் தொகைச்சொல் வடிவமும் தமிழுக்கே உரியது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வினைத்தொகைபற்றி இலக்கணிகள் குறிப்பிடுவது பற்றியும் வ.சுப. மாணிக்கனார் அவற்றில் இருந்து வேறுபடுவது பற்றியும் இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

    வினைத்தொகை

    வினைத்தொகையானது இரண்டு சொற்கூறுகளைக் கொண்டது. அதன் முதற்கூறு வினையடியாகவும் இரண்டாவதுகூறு பெயராகவும் காணப்பெறும். சான்றாகக் கொல்களிறு என்ற சொல்லில் உள்ள கொல் என்பது வினையாகவும் களிறு என்பது பெயராகவும் காணப்படுகிறது.

    வினைத்தொகையைப் பற்றித் தொல்காப்பியர்

    வினையின் தொகுதி காலத் தியலும்” (தொல். எச்சவியல். 19) என்கிறார். இதில் வினைத்தொகை என்பதை வினையின் தொகுதி என வழங்குகிறார் அவர். வினைத்தொகையானது கால இடைநிலை தொக்குப் பொருள் தரும் என்பது இந்நூற்பாவால் பெறப்படுகிறது.

         நன்னூலார் வினைத்தொகையை,

         “காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை” (நன்னூல். 364)

    என்கிறார். வினைத்தொகையை விரித்துப் பொருள் கொள்ளும்பொழுது எச்சமாக மாற்றியே பொருள்உரைக்க முடிகிறது. சான்றாகக் கொல்களிறு என்பதைக் கொன்ற களிறு என்னும்போது இறந்தகாலப் பெயரச்சமும், கொல்கின்ற களிறு என்னும் போது நிகழ்காலப் பெயரெச்சமும் கொல்லும் களிறு என்னும் போது எதிர்காலப் பெயரெச்சமும் இடம்பெறுகிறுகிறது. எனவே இப்பெயரெச்சங்களைத் தொகையாக்கிக் கூறும்போது வினைத்தொகை உண்டாகிறது என்பது பொதுவான கருத்து.

    வினைத்தொகை என்னும் சொற்கூட்டின் முதற்கூறு வினையும் வினைப்பெயரும் தோன்றுவதற்குரிய வேர்ச்சொல்லாக அமைந்து இருக்கின்றது. வினை என்பது காலம் காட்டும் தன்மை உடையது ஆகும். ஆகவே வினைத்தொகையும் காலமொடு வருகிறது. வினைத்தன்மையே அச்சொற்கூட்டில் இருப்பதால் வினைத்தொகை என்று பெயர்கொடுக்கப்பெற்றுள்ளது. எனவே வினைத்தொகை என்பதற்கு  வினைத்தன்மை அதாவது காலம்காட்டும் நிலை தொக்கது என்று விளக்கம் அளிக்கலாம்.

    வ.சுப.மாணிக்கனார் பார்வையில் வினைத்தொகை

    வ.சுப. மாணிக்கம் அவர்கள் A Study of Tamil verbs என்னும் நூலில் வினை வடிவங்களை அடையாளம் காண்பதில் உதவும் காரணியாக வினைத்தொகையைக் காண்கிறார்.

     “வினைத்தொகையைக் கட்டமைக்கும் அச்சொற்கூட்டின் முதல் பகுதியானது எந்த ஒரு வினையின் மூலவடிவத்தையும் உறுதிசெய்வதற்குத் தவிர்க்க இயலாக் காரணியாக விளங்குகிறது. சான்றாக ஆகூழ், ஆகாறு, ஆகிடன், அளவாகு மொழிமுதல் ஆகிய சொற்களில் ஆகு என்னும் தூய வினைவடிவத்தை நாம் காணமுடியும்” (A Study of Tamil verbs, ப.37)

    ஏவல் வடிவங்கள் வினையின் உண்மையான வடிவத்தைக் காட்டுவதில் தோல்வி அடையும்போது வினைத்தொகை வடிவங்களே நம்மைக் காப்பாற்றுவதாகவும் வ. சுப. மாணிக்கனார் குறிப்பிடுகிறார். மேலும் சிக்கலுக்குரிய வினைவடிவமாகிய வா, தா என்பவற்றின் வினையடியாக வரு, தரு என்பதையே கொள்ளலாம் என்பதைப் பின்வரும் கூற்றின் மூலம் விளக்குகிறார்.

    “ஐயத்திற்குரிய எந்த ஒரு வினைவடிவத்தின் உண்மையான மூலத்தையும் அடையாளம்காண நமக்கு உதவுவது வினைத்தொகையின் முதற்கூறான வினையடியே. பின்வரும் சான்றுகளில் வரு, தரு என்னும் சொற்கள் வினைத்தொகையில் அதன் தூய வடிவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. வரு    விசிப்புனல் (தொல்.1008) வரு விருந்து (குறள்.83) புனல்தரு பசுங்காய் (குறுந்தொகை. 292)” (A Study of Tamil verbs, ப.44)

    வினைத்தொகை பற்றிப் பிற்கால இலக்கணிகள் கொண்டிருந்த கருத்துக்கு மாற்றாகத் தொல்காப்பியரைப் பின்பற்றி, வினைத்தொகையில் இறந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் மட்டுமே  உணரமுடியும் என்பதைப் பின்வருமாறு வலியுறுத்துகிறார்.

    “இறந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் குறிப்பிடும் இரண்டு பெயரெச்சங்களை மட்டுமே      தொல்காப்பியர் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.

    அவ்வறு பொருட்குமார் அன்ன உரிமைய
    செய்யும் செய்த என்னும் சொல்லே (தொல். 718)

    கொல் களிறு போன்ற சொற்களில் நிகழ்காலத்தையும் இறந்தகாலத்தையும் மட்டுமே விளங்கிக்கொள்ள முடிவதாகஅவர் எண்ணுகிறார். இதற்குச் சான்றாகப் பின்வரும் நூற்பாவைக் குறிப்பிடலாம்.

    செய்யும் செய்த என்னும் கிளவியின்
    மெய்யொருங்கு இயலும் தொழில்தொகு மொழியும்” (தொல். 482)”                                                                                  (A Study of Tamil verbs, ப.102)

    மேற்கண்ட கூற்றில் தொழில்தொகு மொழியாகிய வினைத்தொகையில் செய்யும் செய்த என்னும் இரண்டு காலமே அதன் விரியில் வருவதை எடுத்துக்காட்டி இடைக்கால இலக்கணிகள் குறிப்பிடும் முக்காலமும் காட்டும் என்பதனை வ.சுப. மாணிக்கனார் மறுப்பதை அறியமுடிகிறது.

    “உம் ஈறு நிகழ்காலத்துக் குரியது எதிர்காலத்துக்குரியதாவது எதனாற் பெறுதும்? என்பது வினா. பெயரெச்ச விகுதிகளுள் அகரம் இறப்பு நிகழ்வுக் காலங்கட்குரியது. உம் நிகழ்வுக்குரியது. எதிர்வுக்குப் பெயரெச்ச விகுதி இல்லையாதலின் உம் விகுதியைக் கொள்ளவேண்டும்.” (தொல்காப்பியம் உரைவளம் சொல்லதிகாரம் – எச்சவியல், பக்.132) என்று ஆ. சிவலிங்கனார் குறிப்பிடுவதையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. எதிர்வுக்குப் பெயரெச்ச விகுதி இல்லாமையாலேயே இரண்டு பெயரெச்சங்களே வினைத்தொகையில் காணப்படுகின்றன என்று வ.சுப. மாணிக்கனார் முடிவு செய்கிறார். தொல்காப்பியர் வினைத்தொகையைப் பற்றிக் குறிப்பிடும் நூற்பாவில் காலத்தியலும் என்று பொதுப்படையாகக் கூறி இன்ன காலம் என்று குறிப்பிடாமல் சென்றுள்ளதும் இதற்குக் காரணமாகும்.

    இறுதியாக, வினைத்தொகை என்பதில் கடந்த கால, நிகழ்காலப் பெயரெச்சங்களே தொக்கி நிற்கின்றன என்பதும் வினையடியின் தூய வடிவைக் கண்டறிவதில் வினைத்தொகையின் முதற்கூறு உதவுகிறது என்பதும் வ.சுப. மாணிக்கனாரின் இலக்கணப் பார்வையின் மூலம் அறிய முடிகிறது.

    ******

    துணைநின்ற நூல்கள்:

    Manickam,V.Sp. 1972. A Study of Tamil Verbs. Annamalai Nagar: Annamalai University.

    சிவலிங்கனார், ஆ. 1998. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் (உரைவளம்) எச்சவியல்.  சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

    ******

    கட்டுரையாசிரியர்
    இளநிலை ஆராய்ச்சி அலுவலர்
    இலக்கியத்துறை
    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
    #40, ஐ.ஆர்.டி வளாகம், நூறடிச்சாலை,
    தரமணி, சென்னை – 113.

     

     

     

    Share