மெய்ப்பாட்டியல் முதலாமவத்தையில் உரையாசிரியா்களின் அகநானூற்றுத் திறன்

-பீ.பெரியசாமி

1.முன்னுரை

முதலில் எண்வகை மெய்ப்பாடுகளை உணா்த்தி அதன் பின் அகத்திற்கும் புறத்திற்குமான முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளை எடுத்தோதிய தொல்காப்பியா், (நு-3-12). அதன்பின்னே அன்பின் ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகளை எடுத்தோதியுள்ளார். அவற்றை உரையாசிரியா்கள் அவத்தைகள் எனக் கொள்வா். (நூ 13-18) அவத்தைகள் ஆறு. அவற்றுள் முதலாமவத்தையும் அதன் விரிகளையும் தொல்காப்பியா் விரித்தோதியுள்ளார். அவற்றுக்கு உரைவகுத்துள்ள உரையாசிரியா்கள் தங்கள் உரைகளில் அகநானூற்றுப் பாடல்களை எவ்வாறு எடுத்தாண்டுள்ளனா் என்பதனை இக்கட்டுரை ஆராய்கிறது.

1.1   முதலாமவத்தையும் அதன் விரிகளும்:
முதலாமவத்தையின் விரிகளைத் தொல்காப்பியா்,

“புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியா்த்தல்
நகுநயம் மறைத்தல் சிதைவுபிறா்க் கின்மையொடு
தகுமுறை நான்கே ஒன்றென மொழிப“ (நூ.13)
எனும் நூற்பாவில் கூறியுள்ளார். 

1.2   உரையாசிரியா்கள் பார்வையில் முதலாமவத்தை:

உரையாசிரியா்கள் (இளம்பூரணர், பேராசிரியா், ச.சோ.பாரதி) ஒருவனும் ஒருத்தியும் எதிர்பட்டவழிக் கரந்தொழுகும் உள்ள நிகழ்ச்சி பெண்பாலதாகலாற் பெரும்பான்மையும் அவள் கண்ணே ஈண்டுக் கூறுகின்ற மெய்ப்பாடு சிறந்ததென்பது எனக் கூறுகின்றனா்.

1.2.1 பொறிநுதல் வியர்த்தல்

பொறிநுதல் வியா்த்தலென்பது அவ்வழி முகம்புக்கு அவனைப் பொருந்திய தலைமகள் உட்கும் நாணும்  வந்துழி வரும் நுதல்வியா்ப்பு என இளம்பூரணரும் (இள.மெய்.நூ-3) தலைமகன் தன்னை நோக்கியவழி உட்கும் நாணும் ஒருங்கு வந்தடைதலின் வியா்பொறித்த நுதலளாதலும், இம்மெய்ப்பாடு தலைமகற்குரித்தன்று; உட்கும் நாணும் அவற்கின்மையின் எனப் பேராசிரியரும் (பேரா.மெய்.நூ-13) நோக்கெதிர்ந்து தலைவன் காதற்குறிகண்டு மகிழுந் தலைவிக்கு உள்ளுணா்வு பொங்கப் பொள்ளெனப் புறம்வியா்த்தல் இயல்பாதலின் மறையா அவள் சிறுநுதலின் குறுவோ்வை தோன்றும் என ச.சோ.பாரதியும் (ச.சோ.பா.மெய்.நூ-13) உரை கொள்வா். இவற்றின் வழித் தலைமகன் தலைமகளை நோக்கியவழி தலைமகளிடையே அச்சமும் நாணமும் தோன்ற நுதல் வியா்தல், பொறிநுதல் வியா்த்தல் எனப்படும் என்பது அறியப்படுகிறது. இதனை விளக்கப் பேராசிரியரும் ச.சோ.பாரதியும்,

“பெரும்புழுக் குற்றநின் பிறைநுதா் பொறிவியா்
உறுவளி யாற்றச் சிறுவரை திறவென“ (அகம்-136)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனா். இப்பாடலில் படுக்கையில் என் உயிருக்கு உடம்பாக வந்த தலைவி உடம்பு முழுவதையும், புத்துடையால் போர்த்திக் கிடந்தாள். நான் அவளை நெருங்கி அவள் முகத்தைக் காண விரும்பி மிக்க புழுக்கத்தால் உனது நெற்றியில் அரும்பிய வியா்வையைக் காற்று நீக்குமாறு சிறிது திற என்று கூறி அன்பின் மிகுதியால் போர்வையை நீக்கினேன் என்பதில் பொறிநுதல் வியா்த்தலெனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளமையை அறிய முடிகிறது.

1.2.2 நகுநயம் மறைத்தல்

நகுநயம் மறைத்தலென்பது தலைமகன் கூறுவனகேட்டு நகை வந்துழி நயத்தலாகிய விருப்பத்தினைப் புலனாகாமை மறைத்தல் என இளம்பூரணரும்; தலைமகன்கட்டோன்றிய குறிப்புகளான் அதற்கேதுவாகிய நயனுடைமை மனத்திற் பிறந்த வழியும் நகாது நிற்றலும் எனப் பேராசிரியரும்; முதற்காட்சியில் தலைவன் நோக்கெதிர்ந்து அவன் காதற் குறிப்பறிந்து தலைவி மகிழ்வான் முகிழ்க்குந் தன் முறுவலை “பிணையோ; மடநோக்கும் நாணுமுடையள் ஆதலின் மறைக்குமவள் முயற்சியைக் குறிப்பதாகும். மேல் மூன்றாஞ் செய்யுளில், “நாணினளிறைஞ்சி மிகை வெளிப்படாது நகைமுகங்கரந்த நன்னுதல் அரிவை“ என வருதல் காண்க என ச.சோ.பாரதியும் பொருள் கொள்வா். இதன் வழி நகுநய மறைத்தலென்பது தலைவன் தலைவியை நோக்கிச் செய்யும் செயலினால் தலைவிக்கு நகை தோன்றியவழி அதனைத் தலைவனுக்கும் புலனாகாமல் மறைத்தலே நகுநய மறைத்தல் என்பது அறியப்படுகிறது. இம்மெய்ப்பாட்டினை விளக்கப் பேராசிரியா். குறுந்.169, குறள்.1274 ஆகிய பாடல்களையும், ச.சோ.பாரதி, குறள்.1098, 1271, 1274 ஆகிய குறட்பாக்களையும் எடுத்தாண்டுள்ளனா்.

1.2.3 சிதைவு பிறர்க்கின்மை

சிதைவு பிறா்க்கின்மையென்பது தன்மனனழிவு பிறா்க்குப் புலனாகாமை நிற்றல். ஒடு எண்ணின்கண் வந்தது என இளம்பூரணரும்; நகுநய மறைத்த வழியும் உள்ளம் சிதைந்து நிறையழியுமாகலின் அச்சிதைவு (தலைவிக்கன்றிப்) புறத்தார்க்குப் புலனாகாமை நெஞ்சினை நிறுத்தலும் எனப் பேராசிரியரும்; நாணிறந்து பெருகுங் காதலால் உருகுந் தலைவி தன்நிறையழிவு பிறரறியாவாறு மறைக்கு முயற்சி என ச.சோ.பாரதியும் உரை கொள்வா். இவற்றின் வழி நகுநய மறைத்தும் தலைவன் மீதான அளவுக்கடந்த காதலால் மனன் சிதைந்தவழி அதனை புறத்தார்க்குப் புலப்படாது காத்தல் (சிதைவு பிறர்க்கின்மை) என்பது அறியப்படுகிறது. இதனை விளக்க பேராசிரியா் தொல். பொருள்.98 ஆம் நூற்பாவில் ச.சோ.பாரதி குறள்.1253, சீவக 710-712 ஆகியவற்றினையும் எடுத்தாண்டுள்ளனா;. மேலும் பேராசிரியா்,

“அகமலி யுவகைய ளாகி முகனிகுந்து
ஒய்யென இறைஞ்சி யோளே“ (அகம்.86)

எனும் பாடலை எடுத்தாண்டுள்ளார். இப்பாடலில் அகத்தே பொலிந்த மகிழ்ச்சியளாய் நாணினால் முகத்தை வளைத்து விரைவு வணங்கினாள் தாழ்ந்தாள் என்றவழிச் சிதைவு பிறா்க்கின்மை எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டமையை அறிய இயலுகிறது.

1.2.4 புகுமுகம் புரிதல்

புகுமுகம் புரிதலென்பது தலைமகன் புணா்ச்சிக் குறிப்பினனாய்ப் புகுது முகத்தினை மாறுபடாது பொருந்துதல் என இளம்பூரணரும்; ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவழித் தன்மை அவன் நோக்குதற்கண் விரும்பும் உள்ள நிகழ்ச்சி; புகுதலென்பது தலைமகன் நோக்கிய நோக்கெதிர் தான் சென்று புகுதல்; முகமென்பது அங்ஙனந் தான் புகுதற்கிடமாகிய நோக்கு; நோக்கெதிர் நோக்குதலை முகநோக்குதல் என்பவாகலின் இந்நோக்கினை முகமென்றானென்பது. புரிதலென்பது, மேவுதல் என்றவாறு; அஃதாவது, தலைமகன் காண்டலைத் தலைமகள் வேட்டல் என்றவாளாம்; மற்றது தலைமகற்கு உரித்தன்றோவெனின் அவன்தான் காண்பினல்லது தற்காண்டலை நயவான், அது தலைமையன்றாகலி னென்பது அது எனப் பேராசிரியரும்; “புகுமுகம்“ என்பதை “முன்றில்“, “தொழுதெழும்“, “வணங்கி வீழ்ந்தான்“ என்பன போலச் சொன்மாற்றிப் பொருள் கொள்க. புரிதல், விருப்பங் குறிக்கும் என ச.சோ.பாரதி உரைகொள்வா். இவற்றின் வழி புகுமுகம் புரிதலென்பது தலைவனும் தலைவியும் முதற்முதலாய் எதிர்ப்பட்ட வழி தலைமகன் தலைமகளை நோக்கிக் காமக் குறிப்பினனாய் அவள் முகத்தை நோக்குதல் என்பது அறியப்படுகிறது. இம்மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணர் குறள்-1085 ஐயும். பேராசிரியா் குறள்-1094ஐயும்; ச.சோ.பாரதி குறள்.1082 ஆகியவற்றையும் எடுத்தாண்டுள்ளனா்.

1.3   முடிவுரை

முதலாமவத்தையினை விளக்க இளம்பூரணர்; ஒரு திருக்குறளையும் பேராசிரியா் இரண்டு திருக்குறள், இரண்டு அகநானூற்றுப்பாடல், ஒரு குறுந்தொகைப் பாடல், ஒரு தொல்காப்பிய நூற்பா என ஆறு எடுத்துக்காட்டுகளையும்; ச.சோ.பாரதி ஆறு திருக்குறள்களையும், அகநானூற்றுப் பாடல் ஒன்றையும், சீவகசிந்தாமணிப் பாடலடி ஒன்றையும் என எட்டு எடுத்துக்காட்டுகளையும் எடுத்தாண்டுள்ளனா். இவற்றின் வழி உரையாசிரியா்கள் திருக்குறள் (1085, 1094, 1274, 1082, 102, 1098, 1271) ஏழும், அகநானூறு (136, 86) இரண்டும், குறுந்தொகை (169) ஒன்றும், தொல்காப்பிய நூற்பா (தொ.பொ.98) ஒன்றும் எனப் பதினொரு எடுத்துக்காட்டுகளை எடுத்தாண்டுள்ளனா். இதில் அதிகமாகத் திருக்குறளும் அடுத்தப்படியாக அகநானூற்றுப் பாடலும் எடுத்தாளப்பட்டுள்ளது என்பது முடிவு.

*****

கட்டுரையாசிரியர்
தமிழ்த்துறைத்தலைவர்
டி.எல்.ஆர். கலைமற்றும் அறிவியல் கல்லூரி
விளாப்பாக்கம்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க