– ம.பிரபாகரன்

தொல்காப்பியச் செய்யுளியலையும் (கி.பி 2) இலக்கணவிளக்கச் செய்யுளியலையும் (கி.பி 17) ஒப்பிட்டு இலக்கணவிளக்கத்தினுடைய செய்யுளியல் வழியை (Root) அடையாளப்படுத்துவதை, இக்கட்டுரை தன்  நோக்கமாகக் கொள்கிறது. அங்ஙனம் அடையாளப்படுத்துவதன் வழி இடைக்கால யாப்பிலக்கண வரலாற்றிற்குப் பயன்படும் செய்திகளைத் தரவல்லதாக இக்கட்டுரை அமையும்.

தொல்காப்பியத்தையும் இலக்கணவிளக்கத்தையும் ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்கையில் அதற்கு இடைப்பட்ட நூல்களை விட்டுவிட்டு ஒப்பீடு செய்யமுடியாது. இடைப்பட்ட நூல்களைக் கணக்கில் கொண்டாலே இலக்கணவிளக்கத்தின் வழியை (Root) கண்டறிய முடியும். அவ்வகையில் தொல்காப்பியத்திற்குப் பின்னும் இலக்கணவிளக்கத்திற்கு முன்னும் உள்ள யாப்புச் சிந்தனைப்பள்ளிகளான யாப்பருங்கல மரபும், வீரசோழிய மரபும் இங்குக் கணக்கில் கொள்ளப்படுகின்றன. இலக்கண விளக்கம், யாப்பருங்கலக்காரிகையைப் பின்பற்றுகிறது என்று யாப்பிலக்கண வரலாற்று நிலையில் செய்யப்பட்ட  முன்னைய ஆய்வுகள் பொதுவாகக்  கூறினாலும், இலக்கண விளக்கத்தை மூலத்தையும் உரையையும் இணைத்து நோக்கி அதன் வழியை முந்தைய ஆய்வுகள் சுட்டவில்லை என்றே கூறலாம். எனவே இக்கட்டுரை இலக்கண விளக்கத்தை மையப்படுத்தியதாக அமைகிறது.

தொல்காப்பியம் செய்யுள் உறுப்புக்கள் 34 என்று கூறுகிறது. பின்னர் வந்த யாப்பருங்கல மரபு 6 என்று கூறுகிறது. வீரசோழியம் செய்யுள் உறுப்புக்கள் இத்தனை என்று வரையறுத்துக் கூறவில்லை. இது இலக்கண விளக்கத்திற்கு முன்னால் உள்ள நிலையாகும். இலக்கணவிளக்கத்தைப் பொறுத்தவரை யாப்பு உறுப்புகளைத் தொகுத்துக் கூறும் முறையில் இரண்டு நிலைகள் உள்ளன.

(I) சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட நிலை

(ii) உரையை அடிப்படையாகக் கொண்ட நிலை

இவற்றுள் சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட நிலையே முதன்மைத் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது என்று கூறவேண்டும். இலக்கணவிளக்கத்திற்கு மூலநூலாசிரியரான வைத்தியநாத தேசிகரே உரையாசிரியராகவும் உள்ளார். எனவே அவர் தன் கருத்தில் முதன்மையானவற்றைச் சூத்திரத்திலும், இரண்டாம் தன்மையானவற்றை உரையிலும் கூறுகிறார் என்று கொள்ள வேண்டும். இதை மூலத்தையும் உரையையும் படிக்கும்பொழுது தெரிந்துகொள்ள முடிகிறது.

உறுப்புகளைத் தொகுத்துக்கூறும் முறையில் இலக்கணவிளக்கம் யாப்பருங்கல மரபோடு ஒன்றுபடுகிறது. தொல்காப்பியத்தோடு வேறுபடுகிறது. இதைப் பின்வரும்  தொல்காப்பிய, யாப்பருங்கலக்காரிகை, இலக்கணவிளக்கச் சூத்திரங்கள் காட்டும்:

தொல் :

மாத்திரை…………….
யாப்பியல் வகைப்பட்ட அந்நால் ஐந்தும்
அம்மை…………..
பொருந்தக் கூறிய எட்டொடும் ( தொல். செய்.1)

யா.கா :

………………………………… எழுத்தசைச்சீர்
பந்தம் அடிதொடை பாஇனம் கூறுவனம்

இ.வி:

செய்யுள் என்பது தெரிவுறக் கிளப்பின்
முன்னர்க் கூறிய முறைமைத்து ஆகி
எழுத்து அசை சீர்தளை அடிதொடை என்ற
மூஇரண்டு உறுப்பும் மேவரச் சிவணிப் (710) 

மேற்காட்டிய சூத்திரங்களைக் கவனிக்கையில் இலக்கணவிளக்கம் தொல்காப்பிய மரபிலிருந்து விலகித் தனக்கான மரபு யாப்பருங்கல மரபு என்று காட்டிக் கொள்வதைக் காணமுடிகிறது. அடுத்தநிலை, உரையை அடிப்படையாகக் கொண்டது. தொல்காப்பியம் செய்யுள் உறுப்புகள் 34 என்று கூறியது முன்னர் எடுத்துக்காட்டப்பெற்றது. இ.வி உரை, செய்யுள் உறுப்புகள் 22 என்ற ஓர் அடிப்படையை வகுக்கிறது. மூலத்தையும் சேர்த்தால் மொத்தம் 28 உறுப்புகள். இது பிற்கால யாப்புமரபுகளில் காணப்பட்டதாகத் தெரியவில்லை. இது போன்ற ஒரு பகுப்பு வீரசோழியப் பொருட்படலத்தில் காணமுடிகிறது எனினும் அப்பகுப்பு வீரசோழியத்தைப் பொறுத்தவரைச் செய்யுள் உறுப்புகளாக இனம் காட்டப்படவில்லை. இலக்கணவிளக்க உரையில் உறுப்புக்கள் குறித்து வரும் பகுதியாவது:

மூவிரண்டுறுப்புமேவரச்சிவணி எனவே மேவரச்சிவணாதனவும் உளவென்பதூஉம் பெற்றாம். அவை எழுத்தோத்தினுட் கூறிய மாத்திரைவகையும் அகத்தோத்தினுட் கூறிய திணை முதலிய பன்னிருவகையும் இவ்வோத்துட் கூறப்படும் வண்ணமும் அம்மை முதலிய வனப்பெட்டும் அவைபோல்வன பிறவுமாமென்றுணர்க (பக்.714, சி.வை.தா பதிப்பு, இலக்கண விளக்கம்: 1889   )

மேலே இலக்கண விளக்க உரையில் எடுத்துக்காட்டப்பட்ட உறுப்புகளில், தொல்காப்பியர் கூறிய உறுப்புக்களிலிருந்து,  நோக்கு , பா, அளவியல், மாட்டு ஆகியவை விடப்பட்டுள்ளன. தொல்காப்பியர் கூறிய 34 உறுப்புகளில் இலக்கணவிளக்கம் 28 உறுப்புக்களைக் கூறினாலும், அவை தொல்காப்பியச் செய்யுள் உறுப்புக்கோட்பாட்டோடு பொருந்தாமலேயே உள்ளன. தொல்காப்பியச் செய்யுளியல் கோட்பாடு உருவம், உள்ளடக்கம் சார்ந்தது. 28 உறுப்புக்களைக் கூறினாலும் இலக்கணவிளக்கம் யாப்பருங்கல மரபைப் போல உருவம் மட்டுமே சார்ந்தது. இந்த 28  என்ற உறுப்பு எண்ணிக்கையை இலக்கணவிளக்கம் எதற்குக் கைகொண்டது என்னும் வினா முக்கியமானது. இது யாப்பருங்கல மரபோடு தொல்காப்பிய மரபையும் சேர்த்து ஒரு புதிய செய்யுள் உறுப்பு மரபை உண்டாக்கும் முயற்சிபோலத் தெரிகிறது. திணை முதலியவற்றைப் பற்றி யாப்புப்படலத்தில் சிறிதும் பேசாமல் பொருட்படலத்தில் ஒதுக்கிவிட்ட வீரசோழிய மரபிற்கு அல்லது அது போன்ற ஒரு சிந்தனைப் பள்ளிக்கு எதிராக இலக்கணவிளக்கம் இந்த 28 உறுப்பைக் கட்டமைத்ததா? என்ற கேள்வியை மட்டும் இங்கு எழுப்பி மேற்செல்லலாம்.

பின்வரும் அட்டவணை வீரசோழியம் (பொருட்படலம்), இலக்கணவிளக்கம் சுட்டும் உறுப்புகளைப் பட்டியலிடுகிறது:

வீரசோழியம் (பொருட்படலம்)        இலக்கண விளக்கம்

1.சட்டகம்

  1. திணை
  2. கைகோள்
  3. நடை
  4. சுட்டு
  5. இடம்
  6. கிளவி
  7. கேள்வி
  8. மொழி
  9. கோள்
  10. உட்பெறு புள்ளி
  11. சொற்பொருள்
  12. எச்சம்
  13. இறைச்சி
  14. பயன்
  15. குறிப்பு
  16. மெய்ப்பாடு
  17. காரணம்
  18. காலம்
  19. கருத்து
  20. இயல்பு
  21. விளைவு
  22. உவமம்
  23. இலக்கணம்
  24. புடையுரை
  25. மொழிசேர் தன்மை

27.பொருளடைவு   செய்யுள் உறுப்புக்கள் -6

7.திணை
8. கைகோள்

9.கூற்று

10.கேட்போர்

11.இடன்

12.காலம்

  1. பயன்
  2. முன்னம்

15.மெய்ப்பாடு

16.எச்சம்

17.பொருள்

18.துறை

19.வண்ணம்

வனப்பு-8

இலக்கணவிளக்கம் தொல்காப்பியச் செய்யுளியல் உறுப்புக்களை என்னதான் வலிந்து சேர்த்துக்கொண்டாலும் அவ்வுறுப்புகள் இலக்கண விளக்கச் செய்யுளியல் கோட்பாட்டோடு ஒட்டாமல் தனியே துருத்திக்கொண்டு நிற்கின்றன எனலாம். பின்வரும் அட்டவணை தொல்காப்பியம், யாப்பருங்கலக் காரிகை, இலக்கண விளக்கம் ஆகியவை கூறும் செய்யுள் உறுப்புக்களைப் பட்டியலிடுகிறது.

அட்டவணை 2

தொல்காப்பியம்    யாப்பருங்கலக்காரிகை  இலக்கணவிளக்கம்

1.மாத்திரை

2.எழுத்து

3.அசை

4.சீர்

5.அடி

6.யாப்பு

7.மரபு

8.தூக்கு

9.தொடை

10.நோக்கு

11.பா

12.அளவியல்

13.திணை

14.கைகோள்

15.கூற்று

16.கேட்போர்

17.களன்

18.காலவகை

19.பயன்

20.மெய்ப்பாடு

21.எச்சவகை

22.முன்னம்

23.பொருள்

24.துறைவகை

25.மாட்டு

26.வண்ணம்

வனப்பு-8       1.எழுத்து

2.அசை

3.சீர்

4.தளை

5.அடி

6.தொடை     சூத்திரம்- 6 உறுப்புகள்
1.எழுத்து

2.அசை

3.சீர்

4.தளை

5.அடி

6.தொடை

உரை

7.மாத்திரை

8.திணை

9.கைகோள்

10.கேட்போர்

11.இடன்

12.காலம்

13.பயன்

14.முன்னம்

15மெய்ப்பாடு

16.எச்சம்

17.பொருள்

18.வண்ணம்-8

அசை, சீர் ஆகியவற்றைப் பொறுத்தவரையிலும் இலக்கணவிளக்கம் யாப்பருங்கல மரபையே பின்பற்றுகிறது. பின்வரும் அட்டவணைகள் தொல்காப்பியம், யாப்பருங்கல மரபு, வீரசோழியம், இலக்கணவிளக்கம் சுட்டும் அசை, சீர்களைப் பட்டியலிடுகின்றன. 

அட்டவணை:3

அசை:

தொல்காப்பியம்    யாப்பருங்கல மரபு            வீரசோழியம்          இலக்கணவிளக்கம்

நேர்

நிரை

நேர்பு

நிரைபு           நேர்

நிரை  நேர்

நிரை  நேர்

நிரை

அட்டவணை 4

சீர்:

தொல்காப்பியம்    யாப்பருங்கல மரபு            வீரசோழியம்          இலக்கணவிளக்கம்

ஈரசைச்சீர்

இயற்சீர்-10

உரிச்சீர்-6

மூவசைச்சீர்

வெண்பா உரிச்சீர்-4

வஞ்சி உரிச்சீர்-60   இயற்சீர்-4

உரிச்சீர்

வெண்பா உரிச்சீர்-4

வஞ்சி உரிச்சீர்-4

பொதுச்சீர்

நாலசைச்சீர்-16

ஓரசைச்சீர்-2      இயற்சீர்-4

உரிச்சீர்

வெண்பா உரிச்சீர்-4

வஞ்சி உரிச்சீர்-4

பொதுச்சீர்

நாலசைச்சீர்-16

ஓரசைச்சீர்-2            இயற்சீர்-4

உரிச்சீர்

வெண்பா உரிச்சீர்-4

வஞ்சி உரிச்சீர்-4

பொதுச்சீர்

நாலசைச்சீர்-16

ஓரசைச்சீர்-2

தளையும் அடியும்:

அடுத்து விவாதத்திற்குள்ளாவது தளையும் அடியும் ஆகும். தொல்காப்பியம் தளையை ஓர் உறுப்பாகக் கூறவில்லை; வீரசோழியமும் (மூலம்) தளை பற்றிப் பேசவில்லை. ஆனால்  வீரசோழிய உரை தளைக்கு எதிராக தன் வாதத்தை முன் வைக்கிறது:

‘அன்றியும் தேமா முதலாகிய உதாரணங்களால் ஓசையூட்டில் அவ்வோசை வெண்பாவின் ஓசையன்று, அஃது உதாரணத்தின் ஓசை என்று கொள்க. ‘ வெண்பாவின் ஓசையும் உண்டே? எனில், ‘ இரண்டு ஓசை ஓரிடத்து நில்லா என்க. வெண்பாவின் ஓசை அங்கு (உதாரணத்தில்) இருப்பதாகில், வெண்பா, தன்கண் ஓசையின்றி இருக்கும். அப்பாலது வெண்பாவின்கண்ணும் கண்டோம். ஆதலால், உதாரணத்தால் ஓசையூட்டும்பொழுது உதாரணத்தின் ஓசை என்று கொள்க.(பக்.461;2005:வீரசோழியம், தி.வே.கோபாலையர் பதிப்பு).

வீரசோழியத்திற்கு முன்னர் எழுந்த யாப்பருங்கல மரபு, தளையை உறுப்பாகக் கொண்டு தளை அடிப்படையிலேயே ஓசையும் கொள்ளும். இந்தப் பின்புலத்தின் அடிப்படையில்தான் இலக்கணவிளக்கம் தளைபற்றிக் கூறுவனவற்றை ஆராயவேண்டும். தொல்காப்பியம் எழுத்தெண்ணிக்கை அடிப்படையில் நாற்சீரடியைக் குறளடி(4-6 எழுத்துக்கள்) , சிந்தடி (7-9 எழுத்துக்கள்) அளவடி (10-14 எழுத்துக்கள்)நெடிலடி(15-17 எழுத்துக்கள்) கழிநெடிலடிகள்(18-20 எழுத்துக்கள் )என்று பகுக்கும். தொல்காப்பியத்திற்குப் பின்வந்த யாப்பருங்கல மரபு  சீரடிப்படையில் அடிகளுக்குப் பெயர் சூட்டும். அதாவது இரண்டு சீரைக் கொண்டது குறளடி, மூன்று சீரைக் கொண்டது சிந்தடி, நான்கு சீரைக்கொண்டது அளவடி, ஐந்தடியைக் கொண்டது நெடிலடி, ஆறடியும் அதற்கு மேற்பட்ட அடிகளும் கழிநெடிலடி என்று விளக்கும். யாப்பருங்கல மரபைப் பின்பற்றும் இலக்கண விளக்கம் அடியைப் பொறுத்தவரை யாப்பருங்கல மரபிலிருந்து வேறுபட்டு தளை அடிப்படையில் அடிகளை வகுக்கிறது.இது குறித்த இலக்கண விளக்கப் பகுதியாவது:

குறளொரு பந்த மிருதளை சிந்தா
முத்தளை யளவடி நாற்றளை நெடிலடி
யைந்தளை முதலா வெழுதளை காறும்
வந்தவும் பிறவுங் கழிநெடி லென்ப  இது முற்கூறிய அடிகளாமாறு கூறுகின்றது.

இ-ள் ஒரு தளையான் வந்த அடியினைக் குறளடியென்றும், இருதளையான்வந்த அடியினைச் சிந்தடியென்றும், முத்தளையான் வந்த அடியினை அளவடியென்றும், நாற்றளையான் வந்த அடியினை நெடிலடி யென்றும், ஐந்தடியான் வந்த அடியினையும் அறுதளையான் வந்த அடியினையும்   எழுதளையான் வந்த அடியினையும் இவற்றின் மிக்கதளையான் வந்த சிறப்பிலடியினையுங் கழிநெடிலடியென்றுங் கூறுவர் ஆசிரியர் எ-று.(பக்.722,மு.சு.நூ)

மேலும் இவ்வடிகளுக்கு உதாரணங்கள் கொடுக்கும் போது ஆசிரியர் எண்டளை, மற்றும் ஒன்பது தளையான் வந்த பாடல்களுக்கும்  உதாரணம் கூறுகிறார். இதன் மூலம் ஒருதளை முதல் ஒன்பது தளை வரை அமையும் அடிகள் பற்றி  இலக்கண விளக்கத்தார் வெளிப்படையாகப் பேசுகிறார் எனக் கொள்ளவேண்டும். எனினும் அவரின் உரைப்பகுதியிருந்து தெரியவரும் முக்கியமான கருத்து ஏழுதளையான் மிக்கு வந்த அடிகள் சிறப்பில்லை என்பதாகும். ஒன்பது தளை அடிகளுக்கும் இலக்கண விளக்கத்தார் காட்டியுள்ள பாடல்கள் அனைத்தும் யாப்பருங்கல விருத்தியிலும், யாப்பருங்கலக் காரிகையிலும் சீரடிப்படையிலான அடிகளுக்கு காட்டப்பட்ட உதாரணங்கள் ஆகும்.  அது குறித்து ஓர் உதாரணத்தைக் கீழே காணலாம்:

யாப்பருங்கல விருத்தி:

” திரைத்த சாலிகை
…………………… ”

இது குறளடியான் வந்த செய்யுள் (பக்.107:1973, இரா.இளங்குமரன் பதிப்பு,கழகம்)

யாப்பருங்கலக் காரிகை:

திரைத்த இருது குறள் சிந்து:
திரைத்த சாலிகை
……………………..

இது குறளடியான் வந்த செய்யுள்.(பக்.88.1993 EFEO பாண்டிச்சேரி, உல்ரிகே நிகோலஸ் மொழிபெயர்ப்பு)

இலக்கண விளக்கம்:

குறளடியான் வந்தச் செய்யுள்;

” திரைத்த சாலிகை
……………………..” (மு.சு.நூ:பக்.722)

இவ்விடத்தில் இன்னொன்றும் சுட்டிக்காட்டத் தகுந்தது. இலக்கண விளக்கம், ஏழுதளை வரும் அடிகளே சிறப்பானவை என்றும் அவற்றின் மிக்க தளைகளான் வந்த அடிகள் சிறப்பில என்று காட்டுவதற்கு, யாப்பருங்கல விருத்தியும், யாப்பருங்கலக் காரிகையும்,  சீர்வகை அடிகளில் எட்டு சீரடிகளால் வருவன சிறப்புடையவை, அதற்கு மேற்பட்ட சீர் வகை அடிகளால் வருபவை சிறப்பற்றவை என்பதை நிறுவுவதற்கு மேற்கோளாக எடுத்துக்காட்டிய காக்கைபாடினியாரின் சூத்திரத்தை எடுத்துக்காட்டுகிறது. இங்ஙனம் இலக்கண விளக்கம் எதனால்  தளை வகை அடிகளை விளக்கச் சீர்வகை அடிகளுக்கான காக்கைபாடினியார் சூத்திரத்தை எடுத்துக் காட்டுகிறது? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. காக்கைப்பாடினியாரின் சூத்திரம் குறித்த யாப்பருங்கல விருத்தி, யாப்பருங்கலக் காரிகை, இலக்கண விளக்கம் ஆகிய நூல்களின் பகுதியைக் இவ்விடத்தில் காண வேண்டியது அவசியமாகும்:

யாப்பருங்கல விருத்தி

அதனால், எண்சீரின் மிக்கு வந்த செய்யுள்கள் சிறப்பில எனக் கொள்க.

இரண்டு முதலா எட்டீ  றாகத்
திரண்ட சீரான் அடிமுடி வுடைய
இறந்தன வந்து நிறைந்தடி முடியினும்
சிறந்த அல்ல செய்யு ளுள்ளே (காக்கைபாடினியார்) (மு.சு.நூ: பக் 108)

யாப்பருங்கலக் காரிகை

விரிக்கும் நெடிலடி என்று சிறப்பித்தவதனால், எண்சீரின் மிக்க சீரான் வரும் அடிகள் சிறப்பில எனக் கொள்க. என்னை,

இரண்டு முதலா வெட்டீ றாகத்
திரண்ட சீரா னடிமுடி வுடைய
இறந்து வரினு மடிமுடி வுடைய
சிறந்த வல்ல செய்யு ளுள்ளே

என்றார் காக்கைபாடினியார்.(மு.சு.நூ: பக். 92)

இலக்கணவிளக்கம்

இரண்டு முதலா வெட்டீ றாகத்
திரண்ட சீரா னடிமுடி வுடைய
விறந்தன வந்து நிறைந்தடி முடியினுஞ்
சிறந்த வல்ல செய்யு ளுள்ளே என்றார் பிறருமெனக் கொள்க..(மு.சு.நூ: பக்.722)

மேற்கண்ட உரைப்பகுதியில் காக்கைபாடினியாரின் சூத்திரத்தின் மூன்றாம் அடி (இறந்து வரினு மடிமுடி வுடைய) யாப்பருங்கல விருத்தியிலும், இலக்கணவிளக்கத்திலும் ஒத்து அமைவதைக் கண்டுக் கொள்க. யாப்பருங்கலக் காரிகையில் அந்த மூன்றாமடி சற்று வேறுபட்டு அமைவதைக் காண்க. வே.பால்ராஜ் தன் யாப்பருங்கலக்காரிகைப் பதிப்பிலும்  மேற்கண்ட  யாப்பருங்கலக்காரிகைப் பகுதியில் காணப்படுவது போலவே பாடம் கொண்டுள்ளார்.

இலக்கண விளக்கத்தார் சீரடிப்படையில், யாப்பருங்கல மரபு காட்டிய உதாரணங்களை ஏன் தளை அடிப்படையிலான அடிகளுக்குக் காட்ட வேண்டும்?. நிற்க. இவ்விடத்தில் இன்னொரு முக்கியமான செய்தியையும் சுட்டிக்காட்டவேண்டும்.

[தொடரும்]

*****

கட்டுரையாசிரியர்
ஆய்வாளர்
பிரெஞ்ச் ஆசியவியல் பள்ளி (EFEO)
புதுச்சேரி

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.